காலை 6 ¼ மணிக்கே திருவிடவெந்தையை அடைந்துவிட்டோம். கோவில் கதவுகள் திறந்திருந்தாலும் இன்னும் விஸ்வரூபம் நடக்கவில்லை. 6 ½ - 7 மணி ஆகும் என்றார்கள். நாங்கள் கோவிலின் பிராகாரத்தைப் பிரதட்சிணம் வந்துகொண்டிருந்தோம். அர்ச்சகர் மற்றும் காவலர்கள் வந்து காலையில் செய்யவேண்டிய பணிகளைச் செய்துகொண்டிருந்தார்கள்.
ஒவ்வொரு சன்னிதியாக (தாயார் மற்றும் ரங்கநாதர்…) திறந்து காலை ஆரத்தி முடிந்த பிறகு, கம்பிவலைக் கதவைப் போட்டுவிட்டு, பிறகு கோவில் மூலவர் சன்னிதியைத் திறந்தார்கள். திருவிடவெந்தை விஸ்வரூப தரிசனம் மிகவும் திருப்தியாக இருந்த து. பொதுவாக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எந்தக் கோவிலிலும் விஸ்வரூப தரிசனத்திற்குச் செல்வேன். மற்ற எல்லா தரிசன நேரங்களிலும் நாம் இறைவனை தரிசிப்பதாகவும், விஸ்வரூப தரிசனத்தின்போது அவன், பக்தர்களைப் பார்ப்பதாகவும் ஐதீகம்.
வெளிப்புறச் சுவற்றில் நிறைய கல்வெட்டுகள், இந்தக் கோவிலின் பழைமையைப் பறைசாற்றுகின்றன.
சுற்றுமண்டபமும், அங்கு இருந்த தாழியும் (எதற்காக உபயோகிப்பார்கள்?)
மூலவர் நித்யகல்யாணப் பெருமாள். முன்மண்டபத் தூணில் சிற்பமாகவும் பார்த்தேன். (இது ஒரு வகையில் நல்லது. மூலவர் எப்படி இருப்பார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்)
கோவிலின் மூலவர் திருநாமம், நித்யகல்யாணப் பெருமாள். திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் நடக்க இந்தக் கோயிலில் வேண்டிக்கொள்கிறார்கள்.
த்வஜஸ்தம்பத்திற்கு வலதுபுறம் உள்ள மண்டபத்தில் இரண்டு சன்னிதிகள் உள்ளன. அவற்றில் நேராக உள்ள ரங்கநாதர் சன்னிதி. பொதுவாக நான் திவ்யதேசங்கள் பலவற்றில் ரங்கநாதர், வரதராஜர் சன்னிதிகள் மற்றும் நரசிம்ஹர் சன்னிதிகளைப் பார்த்திருக்கிறேன். (திருப்பதியிலும் நீங்கள் கண்டிருக்கலாம்). முன் காலகட்ட த்தில், அந்த அந்தக் கோவில்களுக்கு கைங்கர்யம் செய்ய, வைணவத்தின் முக்கியக் கோவில்களான ஸ்ரீரங்கம், காஞ்சி போன்ற இடங்களிலிருந்து சென்றவர்கள், தங்கள் சொந்த ஊரை நினைவுகூறும் விதமாக இத்தகைய சன்னிதிகளை அமைத்திருக்கலாம்.
திருவிடவெந்தை என்று இருப்பதுபோல திருவலவெந்தை என்று ஒரு கோவில் இருக்கவேண்டும் என்று என் மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள். அதற்கு ஏற்றார்ப்போல் திருவிடவெந்தைக் கோவிலில் தாயாரை வலப்புறம் வைத்திருப்பதுபோல ஒரு சிற்பத்தைப் பார்த்தேன் (மூலவர், தாயாரை இடப்புறம் வைத்திருப்பார்)
கோவிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியில் வந்தோம்.
வெளியே இருந்த மண்டபத் தூண்களில் இருந்த சிற்பங்களைப் படம் பிடித்துக்கொண்டேன்.
கோவிலின் வெளியே அமைந்துள்ள மண்டபம். உற்சவ காலங்களில் உபயோகிப்பார்கள் என்று நினைக்கிறேன். அந்த மண்டபத்துத் தூண்களில் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.
பெண்களும் போர்ப்பயிற்சி உடையவராக இருந்தனர் என்பதைக் குறிக்கும் சிற்பம். பிறகு யோசித்திருப்பார்கள், விட்டால் நம்மை மிஞ்சிவிடுவார்கள் என்று. அதனால் அவர்களை சமையலறைக்குள் முடக்கிவிட்டார்களோ?
கோவிலில் விஸ்வரூபதரிசனத்திற்காகச் சிறிது நேரம் காத்திருந்ததில், அரை மணிக்கும் மேலேயே கோவிலில் செலவழித்திருப்போம். மிகவும் திருப்தியான தரிசனம். இதற்கு முன்பு ஒரு தடவை இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தபோது, பாலாலயத்தில் இருந்த தால், மூலவரைச் சேவிக்க முடியவில்லை. உற்சவரைத்தான் சேவிக்க முடிந்தது. அப்போது கோவிலில் மிக அதிகமான கூட்டம். ஆனால் இந்தத் தடவை அதிகாலையிலேயே சென்றுவிட்டதால் (ஞாயிறு), சன்னிதிகளையும் சேவிக்க முடிந்தது, கூட்டமும் இல்லை.
இதற்கு முன்பு சென்றிருந்தபோது கோவிலுக்கு வெளியில் உள்ள மண்டபத்தில் சில குறி சொல்லும் குறத்திகளைப் பார்த்தேன். அதில் வயதான ஒருவர், சாப்பாட்டுக்கே வழி இல்லை என்று சொன்னதால் பாவப்பட்டு கையைக் காண்பித்தேன். ஆனால் அவரிடம் 100 ரூபாய்தான் தருவேன் என்று சொன்னேன். அவரோ நரிப்பல் என்று ஒன்றை எடுத்து என்னிடம் தர எத்தனித்தார். அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னதும் கையைப் பார்த்ததற்கு 400 ரூபாய் தரணும் என்றார். அடடா… பரிதாபப்பட்டது தவறாகிப்போனதே என்று நினைத்தேன்.
கோவில் தரிசனம் முடிந்த பிறகு அங்கிருந்து மஹாபலிபுரம் நோக்கிச் சென்றோம். பதினைந்து நிமிடங்களில் மஹாபலிபுரம் அடைந்துவிட்டோம். முதலில் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலுக்குச் சென்றோம்.
ஸ்தலசயனப் பெருமாள் கோவில்
நான் 35 வருடங்களுக்கு முன்பு பார்த்த கோவிலுக்கும் இப்போது இருந்த நிலைமைக்கும் மிகுந்த வித்தியாசம் இருந்தது. கோவில் புதுப் பொலிவு பெற்றிருந்தது.
இந்தக் கோவிலில் பெருமாள், சயனத் திருக்கோலத்தில் இருக்கிறார். இது முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரின் அவதாரத் தலம்.
மாமல்லபுரம் ஒரு காலத்தில் ஏழு கோயில் நகரம் என்ற பெயர் பெற்றிருந்த து. கடல் சீற்றத்தால் அனைத்துக் கோயில்களும் அழிக்கப்பட்டுவிட்டனவாம். அதன் பிறகு பல்லவ மன்னன் ராஜசிம்ஹன் மூன்று கோயில்கள் கட்டினானாம். அதில் இரண்டு கோயில்கள் கடலால் கொள்ளப்பட்டுவிட்டன. மிஞ்சின கோயில் கடற்கரை ஓரம் இருக்கிறது. அதுவும் அவ்வப்போது கடல் அலைகளால் சீற்றத்திற்கு உள்ளாகி வருவதால், 14ம் நூற்றாண்டில் தற்போதுள்ள ஸ்தல சயனப் பெருமாள் கோவில், பராங்குச மன்னரால் கட்டப்பட்டதாம்.
இந்தக் கோவிலில் மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி இல்லாமல், சயனித்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயனப் பெருமாள் காட்சியளிக்கிறார்.
கோவிலுக்கு முன் உள்ள அரைகுறையாக உள்ள ராஜகோபுரத்தின் கீழ்ப்பகுதி. ஒருவேளை கட்டிமுடிக்கப்படாமல் இருந்திருக்கலாம் (பல்வேறு காரணங்கள்). அல்லது கட்டிய கோபுரம் இடிந்திருக்கலாம். (கீழப்பழையாறில் உள்ள கோவிலிலும் ராஜகோபுரம் பாதியில் இருக்கிறது, தாராபுரம் கோவிலின் எதிரேயும் அப்படித்தான்)
ஒருவேளை மிகுந்த பொருட்செலவு காரணமாக கைவிடப்பட்டிருக்குமோ?
முன்மண்டபத்தின் மேல், மூலவரின் தோற்றம் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கிறது.
கடல்களால் கொள்ளப்படாத கோயில்களில் எவ்வளவு, விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களாக இருந்ததோ என்று யோசித்தேன். இந்தக் கோயில் மூலவரும், ஆழ்வார் பாடிய கோயிலிலிருந்து இங்கு கொண்டுவந்து வைத்திருப்பார்களோ? இப்படித்தான் எனக்கு காஞ்சீபுரத்தில் பல கோயில்களைப் பார்த்ததும் தோன்றியது. நதிப்பெருக்கோ இல்லை மாற்றுமதத்தினரின் படையெடுப்போ பல கோயில்களை உருத்தெரியாமல் அழித்திருந்திருக்கவேண்டும். மூலவரை மட்டும் முடிந்த அளவு காப்பாற்றி வேறு கோயில்களில் வைத்திருந்திருக்கலாம். உற்சவர்களை கிணற்றிலோ இல்லை மண்ணின் ஆழத்திலோ புதைத்துக் காப்பாற்றியிருக்கலாம். காலம் செல்லச் செல்ல, அதைப்பற்றித் தெரிந்தவர்கள் உலகத்திலிருந்து நீங்கியிருக்கலாம். பிறகு புதிதாக உற்சவர்களைச் செய்து வைத்திருக்கலாம், அல்லது உற்சவர்கள் இல்லாமலேயே இருந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. இதற்கு வரலாறுகளும் இருக்கின்றன. அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தால் பெரிய கட்டுரையாக நீண்டுவிடும்.
கோயிலுக்குள் செல்லும் நேரமாகிவிட்டது. அதனை அடுத்த
வாரம் காண்போமா?
(தொடரும்)
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் அனைவருக்கும்.
நீக்குஅந்த இரண்டு சன்னதிகளின் ஒன்று சேர்ந்த படம் அபாரம். அதே மாதிரி சயனத் திருக்கோல பெருமாளின் படமும் தீர்க்கமாக அழகாக இருந்தது. ஆக, திருவிடவெந்தை தான் மருவி திருவிடந்தை ஆகியிருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க ஜீவி சார். பெயர் மருவின இடங்கள் மிக அனேகம். எந்த ஊர் பெயரை எடுத்துக்கொண்டாலும் பெயர் மருவியிருக்கும். திரிசிரபுரம் என்றுதான் திருச்சிராப்பள்ளியை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு அழைத்துவந்தார்கள். இதுபோலவே, சென்னப் பட்டினம் என்றே எழுதப்பட்டது,
நீக்குஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில். இந்தக் கோயில் என்ன, மாமல்ல புரத்திலேயா? நுழை வாயிலிருந்து வரும் நடைவழி, ராஜ கோபுரம் படம் மற்றும் எல்லா படங்களுமே மிக அழகு. நன்றி.
பதிலளிநீக்குஆமாம் ஜீவி சார். மாமல்லபுரத்தில் 1800 கள் வரை இரண்டு விஷ்ணு கோயில்கள் (சரியாகச் ஒல்வதானால் மூன்று) உண்டு. கடற்கரைக் கோயிலாக ஜலசயனப் பெருமாளும்கரையிலிருந்து சிறிது தூரத்தில் குன்றுகளின் அருகே தலச
நீக்குனப் பெருமாள் கோவிலும் உண்டு.
தொகுப்பு நன்றாக உள்ளது. தொடருங்கள்.
பதிலளிநீக்குபரத நாட்டியத்தின் இடையே சிலர் குறவன் குறத்தி நாட்டியத்தையும் ஆடுவார்கள். அது போல் குறவனிடம் குறி கேட்ட கதை பொங்கலில் வந்த மிளகாய் ரசிக்க வைக்கிறது.
Jayakumar
வாங்க ஜெயகுமார் சார்.. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு அனுபவம்.
நீக்குகோயிலில் பெருமாளுக்குக் கைங்கர்யம் செய்துகொண்ட அர்ச்சகர், நாங்கள் திரும்பும் வழியில் சாப்பிட நுழைந்த சங்கீதா ஹோட்டலுக்கைக் குடும்ப சகிதம் வந்து அங்கு சாப்பிட்டதும் அப்போது மனதை நெருடியது.
எங்கள் வீடுகளில் சிறு வயதில் வெளியில் சாப்பிடவே அனுமதியில்லை. மாமனார் வீட்டிலோ, நாங்கள் வெளியே ஹோட்டலில் சாப்பிட்டால், திரும்பவும் குளிக்காமல் அவர்கள் வீட்டுச் சமையலறைக்குச் செல்ல முடியாது. காலம் மாற மாற பழக்கவழக்கங்களும் நெறிகளும் மாறுகின்றன
இந்தத் தீபாவளி நேரத்தில் பிரியாணிக் கடையிலும்
நீக்குகார
இனிப்பு வகைகள் விற்கப்பட்டிருக்கின்றது...
நாய் விற்ற காசு குரைக்குமா துரை செல்வராஜு சார்?
நீக்குமுருகன் திருவருள் முன் நின்று காக்க..
பதிலளிநீக்குகந்தன் நம் எல்லோரையும் காக்கட்டும்
நீக்குஅழகிய படங்களோடு சொல்லி வந்த விளக்கம் அருமை தமிழரே...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி. நலமா இருக்கீங்களா?
நீக்குவரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலைப் பற்றி அருமையான பதிவு..
பதிலளிநீக்குஅழகான படங்கள்..
எபிக்கு வேறென்ன வேண்டும்?..
வாங்க துரை செல்வராஜ் சார்... இன்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்கள் சிற்பங்கள் தொடர்கின்றன.
நீக்குவாளொடு தோன்றிய மூத்தகுடியினர் நாட்டில் ...
பதிலளிநீக்குவாளொடு வந்த கொள்ளையர்களால் அழிக்கப்பட்ட ஆலயங்கள் ஏராளம்...
இன்றைக்கு
நம்மை நாமே மெச்சிக் கொள்ள வேண்டியது தான்..
நீங்க எழுதியிருக்கும் கருத்து சரிதான். இருந்தாலும் உட்பகையினால் சோழர் சாம்ராஜ்யத்தை அழித்தவர்கள் பாண்டியர்களல்லவா? அவர்களுக்குள்ளேயே அரசுரிமைக்காக முஸ்லீம் படைத்தளபதியை வரவழைத்து தங்களின் அழிவுக்கு வழிகோலியவர்கள் பாண்டியர்கள் அல்லவா?
நீக்குநீங்கள் சொல்வதை மறுக்க வில்லை...
நீக்குஆனால் அதற்கு முன்பே இங்கு காலூன்றி விட்டார்களே..
ஆமாம். அதற்கும் ஒரு காரணம், நாம் நெறிமுறைகளோடு போரிடுவதும், அவர்கள் மூர்க்கத்துடன் போரிடுவதும்தான். முதலில் வந்தவர்கள் இங்குள்ள செல்வத்தைக் கொள்ளையடித்துத் தன் ஊருக்குக் கொண்டுசென்றார்கள். பிற்பாடு வந்தவர்கள் இங்கேயே காலூன்றிவிட்டார்கள்.
நீக்குபடங்களும் விவரங்களும் சூப்பர், நெல்லை
பதிலளிநீக்குகீதா
வாங்க கீதா ரங்கன்(க்கா). நன்றி
நீக்குஇப்படிக் கோபுரங்கள் கட்டப்படாமல் பாதியில் இருப்பவை இருக்கும் கோயில்கள் ஒரு சில பார்த்ததுண்டு. வாலீஸ்வரர் கோயில் மற்றும் இங்கு நீங்க சொல்லியிருக்கும் கோயில் உட்பட.
பதிலளிநீக்குசிற்பங்கள் படங்களெல்லாம் சூப்பர், நெல்லை
கீதா
நிறைய கோவில்களில் கோபுரங்கள் பாதியோடு இருக்கின்றன. இதைப்பற்றிப் படித்தபோது, உதாரணமா, ராஜராஜேஸ்வரத்தில் இரண்டடுக்கு கூடுடன் கோபுரம் இருப்பதால் அழிவுபடவில்லை என்றும், கீழைப்பழையாறை கோவிலில், செங்கலால் கட்டப்பட்ட கோபுரம் என்பதால் பழுதுபட்டு பாதி கோபுரம் அழிந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.
நீக்குஆமா எதுக்குக் குறி கேட்க கையை நீட்டணுமாக்கும்!!!! ஹிஹிஹி
பதிலளிநீக்குஇரக்கம் தோன்றினால், சாப்பாடு வாங்கித் தரட்டான்னு கேட்டுவிட்டு அந்த மனிதர் பைசா கேட்டா அப்படியே நகர்ந்திருக்கலாமே நெல்லை. இரக்கம் நல்லதுதான் ஆனால் அதுவும் கூட நாம் பார்த்துதான் செய்யணுமா இருக்கு இப்ப உள்ள நிலை. இதில் என்ன சங்கடம்னா உண்மையானவையும் இதில் சேர்ந்துவிடும்.
கீதா
அவங்க ஒரு கோல் வச்சிருக்காங்க. அதால நம் உள்ளங்கையில் தடவிக் கண்டுபிடிக்கறாங்களாம்.
நீக்குநீங்க சொன்ன ஒரு பாயிண்ட் உண்மைதான் கீதா ரங்கன். சட்னு நினைவுக்கு வரலை எந்த இடம் என்று. சமீபத்தைய கயா யாத்திரையின்போது ஒரு பையன், தன் அப்பா (இப்போ நினைவுக்கு வந்துவிட்டது. ததீசி குண்டம், நைமிசாரண்யம்) மனநிலை சரியில்லாதவர் என்றும் படிப்புக்குப் பணம் கேட்டான் (இரவு 6 1/2 மணி). நோட்டு வாங்கித்தாங்க, கடைக்குக் கூட்டிட்டுப் போகிறேன் என்றான். எனக்கென்னவோ கொடுக்கத் தோன்றவில்லை (நாம் வாங்கிக்கொடுக்கும் நோட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொள்வானோ என்று). ஆனால் நான் நினைத்தது நியாயமல்ல என்று பிறகு எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது.
நெல்லை, காசி கயா பகுதிகளில் இப்படி நிறைய பார்க்கலாம் என்று நம் வீட்டில் அனுபவப்பட்டவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
நீக்குமனதில் செய்ய நினைத்தால் செய்துவிட வேண்டும். தோன்றவில்லை என்றாலும் தப்பில்லை நெல்லை. நம் மனசில் டக்கென்று தோன்றுவதுதான். கொடுத்தாலும் சரி, கொடுக்கலைனாலும் சரி அதைப் பற்றி பின்னர் யோசிக்கக் கூடாது என்று எனக்குத் தோன்றும். பின்னால் உங்களுக்குத் தோன்றியதை ஈடுகட்டலாம் வேறொரு தருணத்தில்.
கீதா
எனக்கு ஒரு இடத்திற்குச் சென்றால் என்ன என்ன புகைப்படங்கள் எடுக்கணும், என்ன செய்யணும் என்று திட்டமிட்டுக்கொள்வேன். யாத்திரைக்கு வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்துவிட்டால் புகைப்படங்கள் எடுப்பது கடினம். அதனால் நான் இத்தகைய இடையூறுகளைத் தவிர்த்துவிடுவேன். பிறகு தோன்றும், உதவியிருக்கலாமே என்று.
நீக்குபடங்களும் தகவல்களும் நன்று. குறி சொல்பவர்கள் - உங்கள் அனுபவங்களை இங்கே சொன்னது நன்று. பல இடங்களில் இது போன்றவர்கள் இருக்கிறார்கள். நான் பொதுவாக இந்த விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை.
பதிலளிநீக்குவாங்க தில்லி வெங்கட். சமீபத்தில் வட நாட்டிலும் சில இடங்களில் நரிப்பல் போன்று விற்பதைப் பார்த்தேன். சில சமயங்களில் இரக்கம் காட்டுவதே வம்பாகிவிடுகிறது.
நீக்குதிருவிடவெந்தை தரிசித்தோம். கோவில் சிற்பங்கள் அனைத்தும்அழகாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஅரசர்கள் ஆண்ட காலத்தில் பெண்களும் வீரதீரச்செயல்களில் வாள்பயிற்சி, போரில் ஈடுபட்ட வரலாறுகளும் இருந்தவைதாமே அதை நினைவுறுத்துவதான சிலைகள் இருப்பது வரலாறுகளை எடுத்துக் கூறுவதாக இருக்கலாம்.
பல தகவல்களுடன் சிறப்பான கோவிலை கண்டு வணங்கினோம். நன்றி.
வாங்க மாதேவி அவர்கள். கருத்துக்கு நன்றி. தென்னிந்தியப் பெண்கள் இவ்வாறாக வாட்பயிற்சி போர்ப்பயிற்சி பரவலாகப் பெற்றதுபோலப் படித்ததில்லை. இருந்தாலும் வரலாற்றில் வீரமங்கைகள் பலர் இருந்திருக்கின்றனர்.
நீக்குஅடடா நெ தமிழன்.. இது எப்போ தொடக்கமாக்கும்???? ஹா ஹா ஹா தற்செயலாகத்தான் கண்ணில் பட்டது, தொடராகப் போடுறீங்கள் போலும், இனி வர முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குவாங்க அதிரா... ஆனால் உங்கள் பட்டமான "தலைமறைவான" என்பதுதான் யோசிக்க வைக்குது. அது சரி... பசங்க வளர்ந்துட்டாங்கன்னா, நேரம் அதிகம் கிடைக்கும். ஆனால் உங்க மற்றும் ஏஞ்சலின் விஷயத்தில் இது தலகீழாக அல்லவா இருக்கு?
நீக்குஹா ஹா ஹா பெயர் விரைவில மாற்றிடுவேன் நெ த..:).
நீக்குபிள்ளைகள் வளரும் வரை கூடவே இருந்து பொத்திப் பொத்தி வளர்த்தாச்சு:), 18 வயதானதும் அவர்களுக்கும் அப்பப்ப தனிய இருக்க விருப்பமாக இருக்குது, அதனால எங்களுக்கு அதிக நேரம் கிடைக்குது, கிடைக்கும் நேரத்திலதானே சுற்றுலாப் பண்றோம்... உண்மையில் இப்போ வீட்டில் இருக்கும் காலம் குறைவாக இருக்குது:))
சுற்றுலா போனீங்கன்னா, பதிவு போட்டால் படிக்க முடியும் காணொளியில் விளக்கமாக இருக்காதல்லோ?
நீக்குஎங்களுக்கும் (எனக்கும்) சட் என்று ஒரு வெறுமை வருகிறது. பசங்க இரண்டு பேரும் வீட்டில் இல்லை. வெறும்ன பயணம் போவதிலும் ரொம்ப ஆசை வருவதில்லை (காரணம் பயணத்தில் தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது, யோகா செய்வது, உணவுக் கட்டுப்பாடு போன்றவை மிகக் கடினம்). பையன் சொல்கிறான், ஓவியத்தில் ஈடுபாடு காட்டி, அதனை முழுமையாகப் பயிலுங்கள், அம்மா கர்நாடிக் பாடல்கள் கற்றுக்கொள்ளட்டும் என்று. என்ன செய்யலாம் என்று ஒரே யோசனையாக இருக்கிறது.
கோயில்கள் என்று சொன்னால், நாம் சாகும் வரை பார்த்தாலும் முடியாது, அவ்வளவு தொகைக் கோயில்கள் இருக்கு, ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகைச் சுமந்து நிற்கிறது, நானும் பல கோயில்கள் முக்கியமாக .. 9 நவக்கிரகத்துக்குரிய கோயில்களும் போனோம், வீடியோ இன்னும் எடிட் பண்ணி முடிக்க வில்லை. நீங்கள் போய் விட்டீங்களோ நெ தமிழன் அங்கெல்லாம்???...
பதிலளிநீக்குதஞ்சாவூரில ஆரம்பித்து... சிதம்பரம் வரை இருக்கிறது 9 கோயில்களும் என நினைக்கிறேன்.
நான் அந்தக் கோயில்களுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். ஒரு முறை (2004?) அப்படி எல்லாக் கோயில்களுக்கும் சென்று படங்கள் எடுத்து அவற்றை தனியான ஹார்ட் டிஸ்கில் ஏற்றி, அதனையும் லேப்டாப்பையும் என் மற்ற உடமைகளோடு, பாதைகாப்பான இடம் என்று நினைத்து சன்னலுக்குக் கீழ் வைத்திருந்தேன். மறுநாள் குக்கே சுப்ரமண்யா கோவிலுக்கு எல்லோரும் போய்விட்டு வந்தபின், என் பையன் ரொம்ப சந்தோஷமாக, அப்பா... லேப்டாப் பேக் திருடு போயாச்சு, சன்னலைத் திறந்து திருடன் எடுத்துண்டு போய்ட்டான், பாஸ்போர்ட்டை சன்னலுக்கு வெளியே வீசியிருக்கிறான் என்று சொன்னான். (பெங்களூரில்). அதனால் அந்தப் பயணத்தின் படங்கள் எதுவுமே என்னிடம் இல்லை.
நீக்குஇப்போ உங்கட போஸ்ட்டுக்கு வருகிறேன், மகாபலிபுர பெருமாள் கோயில்ப் பெயர் வாயில் நுழையுதில்லை ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குநாம் படத்தில் பார்ப்பதை விட நேரில் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும், பிரமிக்க வைக்கும், ஆனால் அதை படமாகவோ வீடியோவாகவோ போடும் போது, அதைப் பார்ப்போருக்கு அந்தளவு தூரம் மெய் சிலிர்க்காது அதுதான் உண்மை.
ரசிச்சு ரசிச்சுப் படங்கள் எடுத்துப் போட்டிருக்கிறீங்கள், நன்றாக இருக்குது. தனியப்போகப் பயத்தில இப்போ அண்ணியையும் கூட்டிப் போறீங்கள் போலும் ஹா ஹா ஹா... உண்மையில் தனியப் போனால் அதிகம் ரசிக்க முடியாது.
ஸ்தல சயனப் பெருமாள். தலம் -இடம். சயனம் - படுத்திருக்கும் கோலம். தலசயனப் பெருமாள். சிமியோன் டீச்சர் இல்லாத்தால் நான் பாடம் எடுக்க வேண்டியிருக்கு.
நீக்குநாம் நேரில் பார்ப்பதைப் போல, படிக்கும்போது உணர்வு உண்டாகாது. தஞ்சைப் பெரிய கோயிலை, அதன் கல்வெட்டுக்களை முதன் முதலில் நான் பார்த்தபோது உடம்பு சிலிர்த்தது. அந்த மன உணர்வை எழுத்தில் கொண்டுவர இயலாது.
நீக்குபயணங்களில் சில நேரம் தங்குமிடம் சௌகரியமாக அமையாது. அலைச்சல் அதிகமாக இருக்கும். அதனால் பொதுவாக ஒருமுறை தரிசித்துவிட்டால் மீண்டும் அதே யாத்திரைக்கு வர அவள் தயங்குவாள்.
எனக்கும் போன இடத்துக்குத் திரும்பப்போகும் ஆர்வம் இருப்பது குறைவு, ஆனா வேறு ஆட்களோடு சேரும்போது போக வேண்டி வந்திடும். அப்படித்தான் தாஜ்மஹாலுக்கு 2 வது முறையும் போய் விட்டோம்....
நீக்குஇப்போ இந்த 9 நவக்கிரக கோயில்களுக்கும் வருடா வருடம் முடிஞ்சால் போகோணும் எனும் ஆசை இருக்குது.. பார்க்கலாம் அனுக்கிரகம் இருப்பின் அவர்களே நம்மை அழைப்பார்கள்.
ஓ பிரிச்சுச் சொன்னதும் புரிய ஈசியாக இருக்குது பெயர்...
நீக்கு//இந்த 9 நவக்கிரக கோயில்களுக்கும்// - நம்ம ஜாதகத்தில் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நவக்ரஹ கோயிலுக்குச் சென்றால் அதனால் விளையும் கெடுதி நீங்கும் என்று சொல்வார்கள். டீச்சர் கண்ணில் படவில்லை என்றால் நாம் செய்யும் தவறுகளையோ இல்லை நாம் சரியாகப் படிக்காததையோ நினைத்துத் திட்டும் சந்தர்ப்பம் ஏற்படாது. ஆனால் நாம் நவக்ரஹ கோயிலுக்குச் சென்று அவர்களைத் தரிசித்தால் அவர்களுக்கு நினைவு வந்துவிடாதோ... அடடா அதிராவுக்கு இந்த வருடம் கெடுதல் செய்யணுமே... செய்ய மறந்துவிட்டோமே என்று?
நீக்குஇன்னொன்று, கோயில் பெயரையும் அது இருக்கும் ஊர்ப் பெயரையும் தலைப்பில் சேர்த்தால், இன்னும் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநல்ல யோசனைதான் அதிரா... ஆனால்ஒரு பகுதியிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட கோயில்கள் வரும் வாய்ப்பிருக்கிறது.
நீக்குஅது சரி, ஓசனை, ரீச்சர் என்றெல்லாம் தமிழைச் சரியாக எழுதாத்தால் நான் எழுதுவதெல்லாம் உங்களுக்குப் புரியுமோ என்ற சந்தேகம் வருது.
எனக்கு டமிலை எப்பூடி எழுதினாலும் புய்யுமாக்கும் பிக்கோஸ்ஸ்ஸ்ஸ் நேக்கு டமில்ல டி எல்லோ.. ஹா ஹா ஹா மீ ஓடிடுறேன்ன்ன்ன்:)
நீக்குடி-டிஸ்டிங்க்ஷன் என்று தெளிவாக எழுதிவிடுங்கள். இங்கெல்லாம் A+ - Super A-First Class, B-Second class, C-Third Class, D-Fail ஹா ஹா ஹா
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கோவில் பதிவு நன்றாக உள்ளது.
/மற்ற எல்லா தரிசன நேரங்களிலும் நாம் இறைவனை தரிசிப்பதாகவும், விஸ்வரூப தரிசனத்தின்போது அவன், பக்தர்களைப் பார்ப்பதாகவும் ஐதீகம்./
நானும் கேள்விபட்டுள்ளேன். ஆனால் அந்தப் பொழுதில் இறைவனை தரிசிக்கும் வாய்ப்பு எப்போதும் கிடைத்தால் நல்லதல்லவா? முன்பு குருவாயூர் செல்லும் போது நிர்மால்ய தரிசனம் கிடைத்துள்ளது. மற்ற கோவில்களுக்கு இது போல் காலை நேர தரிசனம் கிடைக்க நாம் விரைவாக செல்ல வேண்டுமென்பது உண்மை.
இன்று உங்கள் பதிவின் மூலமாக மூலவரின் தரிசனம் கிடைக்கப் பெற்றேன்.
கோவில் தூண்களின் சிற்பங்கள் அனைத்தும் அருமை. பெண்கள் போர் பயிற்சிகள் பெற்றிருப்பதால் வியப்பல்லையே....! எத்தனை வீரம் மிகுந்த ராணிகளை பற்றி படித்திருக்கிறோம் . அவர்களுக்கு உதவியாளராக பல பெண்களும் போர் பயிற்சிகளை பெற்றிருப்பார்கள். அவை அந்த காலகட்டங்களில் செதுக்கிய சிற்பங்களாக இருக்கக் கூடும்.
அனந்த சயன பெருமாள் தரிசனம் கண்டு கொண்டேன்.
மாமல்லபுரம் கோவில்கள் விபரங்கள் படித்து தெரிந்து கொண்டேன். ஸ்தலசயன பெருமாள் தரிசனமும் பெற்றுக் கொண்டேன். ராஜ கோபுரம் ஸ்ரீ ரங்கம் முன்பிருந்த மொட்டை கோபுரத்தை நினைவுபடுத்துகிறது. கோவிலின் அழகான தோற்ற படங்கள், மேல் விதான படங்கள் அனைத்தையும் கண்டு ரசித்தேன். கோவிலைப்பற்றிய தங்களது ஆராய்ச்சியும் சிறப்பானதாக உள்ளது. பதிவுடன் நானும் தொடர்கிறேன். உங்களின் இன்றைய சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நேற்று குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டோம். அதனால் பதிவுக்கு வர தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... எங்கெல்லாம் சென்றிருந்தீர்கள் என்ற விளக்கத்துடன் பதிவு வருமா?
நீக்கு/காலை நேர தரிசனம் கிடைக்க நாம் விரைவாக செல்ல வேண்டுமென்பது // - பல கோவில்களில் விஸ்வரூப தரிசனம் 6 1/2 அல்லது 7 மணிக்கு மேல்தான் நடைபெறுகிறது. மிகப் பெரிய கோவிலான குடந்தை சார்ங்கபாணி கோவிலிலும் அப்படித்தான். இருந்தாலும் நாம் சரியான நேரத்துக்குச் சென்றால்தான் எப்படி விஸ்வரூப சேவை நடைபெறும் என்று பார்க்கலாம். (பசு, யானை போன்றவை சில பல கோவில்களில் விஸ்வரூப சேவைக்கு வரும்)
பதிவைப்பற்றிய உங்கள் விளக்கமான கருத்துக்கு நன்றி