28.8.25

திரும்பி வந்த திருப்பதி

தலைகுனிந்து மாற்றுவழி யோசித்துக் கொண்டிருந்தபோது போன் அடித்தது.  திருப்பதிதான்.

ஒரு பாட்டு இருக்கு தெரியுமா...

"திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர் திருப்பம் நேருமடா..."

இவர் மேப்பை தப்பாகப் பார்த்து எங்கேயோ திரும்பிப் போயிட்டார்.  திருப்பதி என்பதால் திருப்பம் நேர்ந்து (!) எங்கோ சென்றவர், அப்புறம் அதே பெயர் ராசிக்கேற்ப திரும்ப வந்திருக்கிறார்.  ஐந்து நிமிடத்தில் அங்கு இருப்பேன் என்று அவர் சொன்னபோது காலை மணி மூன்றேகால்.

நாங்கள் கிளம்பியபோது மணி மூன்றரை.  வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாலும் ஒரு சின்ன காஃபி போட்டுக் குடித்து விட்டுக் கிளம்பினோம்.

எந்த வழியாக செல்வது என்று பேசியபோது வேலூர், ஓசூர், பெங்களூர் என்று போனால் சுமார் 60 கிலோமீட்டர் அதிகம் காட்டியது.  எனவே நாங்கள் மாற்று வழியைத் தெரிவு செய்திருந்தோம்.

முன்னதாக இந்த ஒன் டிராப் டாக்சிக்கு போன் செய்தபோது போனை எடுத்த இந்த டிரைவர், அவர்கள் கட்டணத்தோடு உங்களுக்கு ஒத்துப்போகவில்லை என்றால் நானே என் வண்டியை எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி இருந்தார். அந்த நிறுவன கட்டணத்தைவிட குறைவாகத்தான் சொல்லி இருந்தார்.  நாங்கள் மேலும் குறைக்க முனைந்தபோது அழாக்குறையாக இதற்கு கீழே வரமுடியாது சார் என்று சொல்லி விட்டார்.  நாங்கள் அப்புறம் மறுபடி வேறொரு ஒன் டிராப் நம்பருக்கு பேசியபோது இவர் சொன்னதைவிட  உண்மையிலேயே அங்கு கட்டணம் அதிகம் என்று தெரிந்தது.

இவர் கிலோமீட்டருக்கு 15 ரூபாய் என்பதிலிருந்து 11 ரூபாய்க்கு வந்திருந்தார்.  டிசையர் - ஐந்து பேர் உட்காரும் வண்டி. டிரைவரைத்தவிர நாங்கள் மூன்று பேர்கள்தான் என்பதால் பெரிய சிரமம் எதுவுமில்லை.

காலை இரண்டு மணிக்கே எழுந்து விட்டதால் தூக்கம் வருமோ என்று நினைத்தேன்.  லேசாக ஆரம்பித்த தூக்கத்தையும் வழியில் சாலைக் காட்சிகள் கண்களை மூட விடவில்லை.

வழி என்பது வேலூர் தாண்டி ராணிப்பேட்டைக்கு சற்றுமுன் வலதுபுறம் திரும்பி பள்ளிகொண்டா, குடியாத்தம் வழியாக பெங்களுருவில் இந்தப் பக்கத்தை அடைவது!

தொடர்பயணம் என்பதால் திருப்பதியிடம் நன்றாக ஓய்வு எடுத்தாரா என்று கேட்டுக்கொண்டோம்.  இரண்டு நாள் முழு ஓய்வு அனுபவித்ததாக சொன்னாலும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருந்தேன்.  

"நீங்கள் எல்லாம் காஃபி குடித்து விட்டீர்களா? என்று பாவமாக அவர் கேட்டபோது மணி ஐந்தேகால்.  நாங்கள் ஒருவரை ஒருவர் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டே 'இல்லை' என்றோம்.

இதோ இப்போது வலது பக்கம் திரும்பி விடுவோம், அங்கே கடைகள் இருக்காது என்று சொல்லி ஒரு கடையில் டீ, காஃபி குடிக்க அவர் நிறுத்தியபோது மணி ஐந்தரை,  கழிவறை அவ்வளவு சுத்தம் இல்லாத காரணத்தால் பாஸ் மறுத்துவிட, நானும் சகோதரரும் மட்டும் இயற்கை உபாதையை முடித்து வந்தோம்.  திருப்பதி வெகு நேரம் எடுத்துக் கொண்டார்!   மிக மிகச் சுமாரான தேநீர் ஒன்று குடித்தோம்.

பதினைந்து நிமிடத்தில் கிளம்பியபோது போனில் ஒரு மெசேஜ் வந்தது.  நான் ஓய்வுபெற்ற அலுவலகத்தில் எனக்கு கீழ் பணிபுரிந்த நண்பர் ஒருவர் காலை ஐந்தரை மணிக்கு மரணமடைந்துவிட்டதாக தகவல் வந்த போது வருத்தமாக இருந்தது.  மிகவும் புத்திசாலி அவர்.  எங்கள் பணிக்குத் தேவையான அளவைவிட மிக அதிக அறிவு பெற்றிருந்தார்.  ஆனால் அத்தனையையும் குடியில் தொலைத்துக் கொண்டிருந்தார்.  மது, மாது இரண்டும் அவருடைய பலவீனமாக இருந்தன.   இதில் அவருக்கு இரண்டு மனைவிகள் வேறு.  தகவல் அனுப்பிய இன்னொரு நண்பருடனும், அப்புறம் அவர் மனைவியுடனும் பேசி ஆறுதல் சொன்னேன்.  சுமார் இருபது நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை முடிந்திருந்தது.  புதிய இதயம் உடலுடன் பழகிய உடன் சிறுநீரக மாற்று செய்வதாய் இருந்தார்கள்.  நுரையீரலும் கெட்டிருந்தது.  (பெரிய) ஒரு ரூபாய் செலவில் அனைத்தையும் சரி செய்து தருவதாக சொல்லி இருந்தது ஆஸ்பத்திரி.  ஒவ்வொரு கட்டமாக சரியாவதற்குள் புதிய பிரச்னையில் மறைந்து விட்டார்.  50 வயது. அவர் என்னிடம் சில குறும்புகள் செய்திருந்தாலும் அவர் உயரம் காரணமாகவும், அவர் புத்திசாலித்தனம் காரணமாகவும் எனக்கு அவரைப் பிடித்திருந்தது.

பயணத்தின் இனிமையை கொஞ்ச நேரம் மறக்க வைத்தது இந்த தகவல்.  பாஸ் பாதித் தூக்கத்தில் இருக்க, நானும் சகோதரரும் இயற்கையை ரசித்தபடி பயணப்பட்டுக் கொண்டிருந்தோம்.
======================================================================================

போகன் சங்கரின் முகநூல் பதிவு 

The night train at Shoranur.
"நான் இங்கே சற்று நேரம் அமர்ந்து கொள்ளலாமா?" அந்தப்பெண் என்னிடம் கேட்டாள்.ரயிலில் மிகவும் கூட்டமாக இருந்தது. விடுமுறைக் காலக் கூட்டம். "எனது டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை. டி டி ஆர் வேறு இடம் பார்த்து தருவதாக சொல்லி இருக்கிறார் "
நான் "சரி" என்றேன். கொஞ்சம் எரிச்சலுடன்தான்.நன்கு பருத்த உயரமான பெண். கண்ணாடி அணிந்திருந்தாள். சற்று மாறுகண்ணும் இருந்தது.வழமையாக பெண் என்று சொல்லும்போது தோன்றுகிற உருவமல்ல. ஆனாலும் அவள் முகத்தில் ஒரு குழந்தைத் தன்மை இருந்தது. எல்லோரையும் குழந்தை போல் சுற்றிசுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். எல்லோர் பேசுவதையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள்.நான் இப்போது கொஞ்சம் தளர்ந்து "நன்றாக உட்கார்ந்து கொள்ளுங்கள் "என்று சொன்னேன். தேங்க்ஸ் என்றாள் "ஏதோ ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள்."
"ஆமாம்"
" என்ன புத்தகம் என்று தெரிந்து கொள்ளலாமா?"
நான் மீண்டும் எரிச்சலுடன் சொன்னேன்"ரஸ்கின் பாண்ட் என்பவர் எழுதிய புத்தகம்" இந்த தடித்த விகாரமான பெண்ணுக்கு ரஸ்கின் பாண்ட் தெரிந்திருக்குமா!
"எனக்கு பிடித்த எழுத்தாளர்.The night train at Deoli "
நான் திகைப்படைந்தேன். எனக்கு அவள் மேல் இப்போது சற்று ஆர்வம் தோன்றியது. பிறகு நாங்கள் கொஞ்ச நேரம் ரஸ்கின் பாண்ட் புத்தகங்களை பற்றிப் பேசினோம். பிறகு அது இன்னும் பல புத்தகங்கள் பற்றி விரிந்தது. புத்தகங்கள் பற்றி பேச பேச அவள் இன்னும் அழகாகவும் இன்னும் பெண்ணாகவும் மாறிக்கொண்டே போனது போல் தோன்றியது.
அதற்குள் திருச்சூர் வந்துவிட்டது.
நான்" நீங்கள் சாப்பிட்டீர்களா!" என்று கேட்டேன். அவள் இல்லை என்று தயக்கத்துடன் சொன்னார். " "நான் நீண்ட காலமாக எதுவும் சாப்பிடவில்லை "
நான் உங்களுக்கும் எனக்கும் ஏதாவது சாப்பிட வாங்கி வருகிறேன் என்று அவசரமாக வண்டியை விட்டு இறங்கினேன். கல்லூரி மாணவன் போன்ற என்னுடைய உற்சாகம் எனக்கே வியப்பை அளித்தது.அப்பமும் முட்டைக் கறியும் கிடைத்தது. ஆனால் அந்தப் பெண் சைவமாக இருந்தாலோ?(" நான் நீண்ட காலமாக சாப்பிடவில்லை"?)நான் சப்பாத்தியும் குருமாவும் வாங்கிக் கொண்டேன். அசட்டுத்தனமாக ஒரு சாக்லேட் பாரும் வாங்கினேன். ஏறக்குறைய வண்டி கிளம்பி விட்ட பிறகு ஓடி வந்து ஏறினேன் .
என் இடத்துக்கு வந்த போது ஏமாற்றம். அவளைக் காணவில்லை. நான் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அவள் பாத்ரூம் ஏதாவது சென்றிருக்கலாம். ஆனால் அவள் வரவே இல்லை. என் எதிரில் இருந்தவர் "நீங்கள் சாப்பிடவில்லையா" என்று கேட்டார்.
நான் இல்லை என்று சொன்னேன் "இங்கு அமர்ந்திருந்த அந்தப் பெண் எங்கே? "என்று அவரிடம் கேட்டேன்.
அவர் என்னை வினோதமாக பார்த்தார். சற்று நேரத்தில் டிடிஆர் வந்தார். நான் அவரிடம் கேட்டேன். " "இங்கே இருந்த அந்தக் குண்டு பெண்ணுக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆகிவிட்டதா? " அவளை குண்டுப்பெண் என்று சொன்னது எனக்கே பிடிக்கவில்லை என்று உணர்ந்தேன். ஆனால் அடையாளமாக அதைத்தான் சொல்ல வேண்டி இருந்தது.
அவர் நிமிர்ந்து என்னை பார்த்தார். பிறகு பதில் சொல்லாமல் கடந்து போனார்.
என் எதிரே இருந்தவர் " எதற்கும் உங்களுடைய சாமான்களை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள் "என்றார். நான் அவரை எரித்து விடுவது போல் பார்த்தேன். முட்டாள்.
நான் மெதுவாக எழுந்து ஒவ்வொரு பெட்டியாக அவளைத் தேடிச்சென்றேன். கடைசிப் பெட்டியில் டிடிஆர் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று நின்றேன். அவர் என்னை எதிர்பார்த்திருந்தவர் போல அமருங்கள் என்று இடம் கொடுத்தார். பிறகு எழுதுவதை நிறுத்திவிட்டு என்னையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு தனது மொபைலில் ஒரு படத்தைக் காண்பித்தார். ஒரு மலையாள செய்தித்தாளின் ஒரு பக்கம்.
" இந்தப் பெண்ணா?"
"எனக்கு மலையாளம் தெரியாது"
அவர் எனக்கு வாசித்துக் காண்பித்தார்.
" திருச்சூரைச் சேர்ந்த ஆனி என்கிற 36 வயது பெண் நேற்று இரவு சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ஷோரனூரைக் கடக்கும் போது அதன் குறுக்கே விழுந்து இறந்து போனார். இவர் திருச்சூரில் பகுதி நேர நூலகராக வேலை பார்த்து வந்தார். செவித்திறன் அற்றவர் "
அவர் "இதே ரயிலில்தான் வருவாள்" என்றார்." இறப்பதற்கு ஆறுமாதம் முன்புதான் கல்யாணம் ஆகி இருந்தது."
நான் அவரைத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.
" நிச்சயமாக அது ஒரு விபத்து அல்ல."
அவர் சற்று நேரம் வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்.
"நிறைய புத்தகம் படிக்கக்கூடிய கனவு காணக்கூடிய பெண்." என்றவர்" நீங்கள் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்களா? " என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன்
உடைந்த குரலில். "விபத்து இல்லை என்றால் பிறகு அவளுக்கு என்ன ஆகி இருக்கும்?"என்றேன்.
"என்ன ஆகி இருக்கும்! என்று உங்களால் ஊகிக்க முடியாதா! கனவு காண்கிற பெண்கள் எல்லாருக்கும் என்ன ஆகுமோ அதுதான் ஆகி இருக்கும். அவள் நீண்ட நாட்களாக தனியாக இருந்தாள். அம்மா சின்ன வயதிலேயே இறந்து போனாள். அப்பா பெரிய குடிகாரர்.அவளுக்கு கல்யாணம் ஆன போது நாங்கள் எல்லாருமே மகிழ்ச்சி அடைந்தோம்" என்றவர் நீண்டதாக ஒரு பெருமூச்சு விட்டார் "சரி.நீங்கள் போய் சாப்பிட்டுவிட்டு உறங்குங்கள்" என்றார்." நான் அடுத்த மாதம் ரிட்டயர்ட். இதுபோன்று எவ்வளவோ பார்த்துவிட்டேன். பாதியில் முடிந்து விடுகிற பயணங்கள். படித்து முடிக்க முடியாத புத்தகங்கள் "
நான் "அவளுக்காக நாம் ஏதாவது செய்ய முடியாதா? "என்று கேட்டேன்.
அவர் சிரித்தார்" நாம் என்ன செய்ய முடியும்! என்றைக்காவது அவளைப் போன்ற கனவு காண்கிற குழந்தைத்தனமான பெண்களைப் பற்றி புத்தகங்களில் படிக்க நேர்ந்தால் ஒரு சொட்டு கண்ணீர் சிந்த முடியும்!"
நான் சோர்வுடன் என் இருக்கைக்குத் திரும்பினேன். எதிர் இருக்கைக்காரர் இப்போது என்னை ஒரு திருடனைப்போல் பார்க்கத் தொடங்கியிருந்தார்.
அதன் பிறகு அந்த இரவுப் பயணத்தில் என்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை.
அதன் பிறகு ரஸ்கின்பாண்டின் எந்த ஒரு புத்தகத்தையும் என்னால் படிக்கவும் முடியவில்லை.
நான் அவளுக்காக என்னுடைய கடைசி ரஸ்கின்பாண்ட் புத்தகத்தை அந்த ரயிலிலேயே விட்டுவிட்டு வந்து விட்டேன்.
'The night train at Deoli '

=============================================================================


ஒரு பைண்டிங் புத்தகத்தொடரில் பிலஹரியின் ஒரு கதை வீணாகி இருந்தது.  ஒரு பக்கம் மட்டுமே இருந்தது.  முதல் வாரத்தின் தொடரின் கடைசிப்பக்கத்தின் மறுபக்கம் கதை.  அஃதை தொடர முடியாமல் வெட்டுப்பட்டு அடுத்த வார பக்கங்கள்!  எனவே கிடைத்த அந்த ஒரு பக்கத்தை மட்டும் கொடுக்கிறேன்!!!  என்ன செய்யலாம்?

ஆராவமுதன் அழுதான்..  -  பிலஹரி 

ஆச்சு! நாளை ஒரு பொழுது கழிஞ்சுட்டா கழிஞ்சுட்டா, ஒரு வழியா உத்சவம் முடிஞ்சுடும்.  ஊரிலே டேரா போட்டிருக்கிற நாட்டுப்புறக் கும்பல், அதது ஊரைப் பார்க்கக் கிளம்பினா, கடையிலே வியாபாரமும் குறையும்..
பத்து நாளா ராப் பகலா படறபாடும் ஒழியும். அப்பப்பா! வருஷத்திலே இந்த மார்கழி மாதத்திலே உத்சவம் வந்தாலும் வர்றது, நம்ப பிராணனே போயிடறதே!..

இரும்புக் குண்டையொத்த உருண்டு நீண்டிருந்த கல்லை, பெரிய உரலில், மின் விசையால் இயக்கப் பெற்றவன்போல் படு வேகமாகச் சுழற்றிக் கொண்டிருந்த ஆராவமுதன் உள்ளத்தில், இப்படிப் பல்வேறு தோன்றுகின்றன.

எதை எண்ணினால் என்ன!

கைகள் தங்கள் பணியை வெகு லாகவமாக - அதே சமயம் வெகு வேகமாகவும் கவனித்துக் கொண்டிருக்கின்றன. இடதுகை அசைக்க, வலது கைதான் எத்தனை பொங்கியெழும் மாவை ஒழுங்கு செய்கிறது!

நடிப்பது, பாடுவது, ஆடுவது- எல்லாம் ஒரு 'கலை' என்றால், இந்த அரைக்கும் பணியும் ஒரு கலை என்றுதான் ஒப்புக் கொள்ள வேண்டும்.+

பேய் பிடித்து ஆட்டுவிப்பதுபோல், ஏதோ தன்னையும் அறியாத ஒரு சக்தியால் இயக்கப் பெற்று, இவ்வளவு பெரிய ஆட்டுரலில் மனிதன் பாடுபடுவது, அனுபவித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்:  கண்ணைத் திறந்து மூடும் நேரத்திற்குள், வெளியே வந்து பரவும் மாவை இடுக்கினுள் வலது கை தள்ளுகிறதே, அப்போது அணுப் பிரமாணம் தவறினாலும், விரல் உடம்புக்குச் சொந்தமில்லையே...!

உரலில் இருக்கும் மாவை வழித்தெடுக்கிறான் ஆராவமுதன்.  அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அண்டாவில் அள்ளி அள்ளிப் போடும்
போது, அவனுக்கே பிரமிப்புட ஏற்படுகிறது. ஆளுயரம் இருக்கும் அந்தப் பாத்திரத்தில் பாதிக்கு மேல் மாவு நிரம்பியிருக்கிறது.

'டே அப்பா.... இத்தனையும் நானா அரைச்சிருக்கேன்? எவ்வளவு மாவு? எவ்வளவு மாவு?

இந்தப் பத்து நாளும் தெனம் தெனம் இப்படித்தான் அரைச்சிருக்கேன்! ஒரு வழியா நாளை உத்சவம் முடிஞ்சு, வேலை சந்தடியும் ஓய்ஞ்ச பிறகு, ஒரு
மூணு நாளாவது லீவு போட்டுட்டு ஹாய்யா படுத்துத் தூங்கணும்! சாப்பாடு, தண்ணி கூட வேண்டாம்.... அடிச்சுப் போட்டாப் போல் ரெண்டு பகல்,
ரெண்டு ரெண்டு ராத்திரி கண்ணை மூடினால் தான் உடம்பு உடம்பா தேறும் அம்மாவை விட்டு இரண்டு தோள்பட்டையிலும் சுடச்சுட வெந்நீர் ஒத்தடம் கொடுக்கச் சொல்லணும் அம்மாவே வெண்ணீர் பாத்திரம் துண்டுமா பக்கத்திலேயே உட்கார்ந்து ஒத்தடம் கொடுப்பாளே. பாவம் அம்மா ஆராவமுதன் நினைவு தாய் பக்கம் திரும்புகிறது வயோதிகத்தாய் தொண்டுக்கிழம் என்று கூற முடியாவிட்டாலும் காய்ந்த உலர்ந்த சருகு தாய் மாத்திரமல்ல அவனே தான் அவள் தந்தை அவன் உற்றார் உறவினர் நண்பன் எல்லாமே அந்த கிழவி தான். இந்த பிரபஞ்சத்தில் அவனுடைய சொத்து என்று தனி உரிமை கொண்டாட கூடிய ஒரே ஜீவன் அவள் ஒருத்திதான்....

======================================================================================
திரு சுதாகர் கஸ்தூரியின் முகநூல் பதிவு :
எனது அமெரிக்க இந்திய நண்பர் ஒருவர் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டது " என் மகளுக்கு வரன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க இந்திய குடிமகனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு முறையும், இரண்டு மூன்று தொலைபேசி தொடர்புகளின் பின் அவ்ள் சொல்லுவாள் "எனக்கு ஒரு வைப் vibe, கனெக்ட் connect வரவில்லை". அல்லது அந்தப் பையன் இவ்வாறு சொல்லுவான். சில நேரம் முதல் தொடர்பிலேயே முற்றுப்புள்ளி.
இதனால் இந்தியக் குடிமகன்களை"யும்" பார்க்கத் தொடங்கினோம். அதில் இன்னும் மோசம். முதல் பேச்சிலேயே அவள் மறுத்து விடுகிறாள்."
அந்தப் பெண்ணுக்கு வயது 30க்கு மேல். அவளது 25ம் வயதில் பார்க்கத் தொடங்கினார்களாம்.
இது பையன்கள் வீடுகளிலும் காணப்படலாம். எனக்குத் தெரியவில்லை.
இந்த "கண்டதும் கவர்ச்சி" என்ற விஷம், அமெரிக்க கலாச்சாரம் தந்த கொடை - கோக்கோ கோலா, பெப்ஸி, KFC என்பது போல், ஒரு அமெரிக்க வியாதி.
வியாதி என்றே சொல்லவேண்டும். எனக்கு டெய்லர் ஸ்விஃட் கேட்கப் பிடிக்கும். உனக்கு மைக்கேல் ஜாக்ஸனா? நமக்கு ஒத்துவராது. நான் நாய்ப் பிரியன். நீ பூனை வளர்ப்பவளா? விட்டுறு. எனக்கு ஊர் சுத்தப் பிடிக்கும். உனக்கு mountain trailல் போகவேண்டுமா? ஸாரி.
இது போன்ற சொந்த விருப்பு வெறுப்புகள் தன் வருங்கால கணவன்/மனைவிக்கு இருக்க வேண்டும் அல்ல்து ஒத்துப் போக வேண்டும் என நினைப்பது அமெரிக்க " தனி மனித சுதந்திரம்" என்பதற்கு முரண். ஆக, இவர்கள் அங்கு படித்ததெல்லாம் " நான், எனக்கு, எனது" என்பது மட்டுமே. என் நண்பர் ஒருவர் சொல்லுவார். அமெரிக்காவில் ஆப்பிள் ஃபோன் பிரபலம் ஆனதற்கு காரணமே அது " ஐ " போன் என்பதால்தான் என்று. அந்த அளவு தன் நலம், சுய சுகம்.
இதைத் தாண்டி, பொறுமையாக தனது அடிப்படை மதிப்பு ( core value) என்ன? என்பதை அறிந்து , பொறுமையுடன் எதிரே இருப்பவரிடம் அது ஒத்துப் போகுமா? என்பதைப்பார்த்தால், அவரது நல்ல குணங்களை முதலில் பார்க்க முனைந்தால் , எதிரே இருப்பவரை மதிக்கத் தோன்றினால், தேர்வு மற்றும் பொருத்தம் பார்க்க மட்டுமே நமது இடையாடல்கள், விலக்குவதற்கு அல்ல ( process of selection than rejection) என்பதாக ஒரு புரிதல் இருந்தால்....
இவர்கள் என்றோ மண வாழ்வைத் தொடங்கி இன்றும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். ( வாழ்க்கைத் துணைத் தேர்வில் மூன்று நிலைகள் என்று கண்ட ஒரு ரீல் மிக நன்றாக இருந்தது. முதல் கமெண்ட்டில் தந்திருக்கிறேன். இந்தியில் இருந்தாலும் , அதிகம் ஆங்கிலம் கலந்ததால் எளிதில் புரியும்)
இது இங்கு இருக்கும் இளைஞர்/ யுவதிகளுக்கும் பொருந்தும்.
அவரிடம் இதனைச் சொன்னேன். " பல முறை சொல்லிவிட்டேன் சுதாகர். அவள் கேட்பதாக இல்லை. அவளது தேர்வு என்பதால், நாம் அதிகம் இடைபடவும் முடியாது"
இது அமெரிக்க வளர்ப்பின் தோல்வி. பிள்ளைகள் பெற்றோர் சொல்வதை மதிக்கக் கற்றுக்கொள்ளாமல், அவர்கள் சொல்லுவதில் உள்ள கருத்தை கவனியாமல், " நான் முடிவு எடுத்தாச்சு" என்று சொல்வதும், உடனே " அவ முடிவு எடுத்தாச்சு, ஸாரி" என்று இவர்கள் சொல்லுவதும், ஒரு ஆரோக்கியமற்ற குடும்ப வளர்ப்பின் அடையாளம்.
பொறுமையான விவாதங்கள், பிறர் சொல்வதைக் காது மடுத்தல், அதில் இருக்கும் யோசனைகளைச் செய்து பார்த்தல் என்பது குழந்தைகளுக்கு இல்லை. இவர்கள் அதனை வளர்க்கவும் இல்லை " அவ கலியாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா, செஞ்சு கொடுத்துடணும். இந்த ஊர்ல தனி மனித சுதந்திரம் அவ்வளவு வலிமையானது" என்று பெருமையாக என்னிடம் சொன்ன ஒரு பெண்ணைப் பார்த்து " அட எழவே" என்றுதான் தோன்றியது.
பின் ஏன் இந்த அமெரிக்க இந்தியர்கள், இந்திய வரன்களைப் பார்க்கிறார்கள்?
பெண்/ பையன் உள்ளூரில் தானே துணை தேடத் துப்பில்லாமை, அல்லது அதனை அங்கீகரிக்க இயலாத பெற்றோரின் வறட்டு கவுரவம் , ஜாதகத்தில் தோஷம், மோசமெனக் கருதப்படும் சில நட்சத்திரங்கள் என்று சில காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே " எங்களுக்கு நம்ம ஊர் கலாச்சாரம் வேணும்" என்று சொல்லியபடி இங்கு தேடுகிறார்கள்.
அந்தக் குழந்தைகளுக்கு இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் என்றால் , நாய்களுக்கு சற்று மேலே, மனிதர்களுக்கு சற்று கீழே என்ற நினைப்பு . FORB ( Fresh Off the Refugee Boat) என்று கிண்டலாக அழைக்கப்படும் இந்திய immigrantகளில் இருந்து வாழ்க்கைத் துணையா? " Vibe வரவில்லை, Connect இல்லை"

உருப்படும்.

இதற்கு நான் பதில் கொடுத்திருந்தேன்.

"என் அனுபவத்தில் இது அமெரிக்கக் வாழ் இந்தியர்களிடம் மட்டுமில்லை, இங்கேயே வசிப்பவர்களிடமும் இருக்கிறது. மேலும் திருமணத்துக்கு பேசும்போது பெண்ணின் பெற்றோர் - பெரும்பாலும் தாய் - பக்கமும் சில குறைபாடுகள் இருக்கின்றன. என் பெரிய மகனுக்கு திருமணம் செய்ய நாங்கள் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும். என் மகனும் இப்படி செலெக்டிவாகத்தான் இருந்தான். பின்னர் அவனே ஒரு பெண்ணைப் பேசி தெரிவு செய்தான். அரேஞ்சுடுதான், ஆனால் அவனே அரேஞ்ஜ் செய்து கொண்டது. மேட்ரிமோனியல் பக்கங்ககளில் இன்னமும் அப்போது நான் பார்த்த சில பெண்கள் இன்னமும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் என்பதை பார்க்கிறேன். அவர்கள் போட்டிருக்கும் நிபந்தனைகளும் மாறாதிருக்கின்றன. பெற்றோர் காரணமா, மணமகள் காரணமா தெரியவில்லை."

அவரும் பதில் சொல்லி இருந்தார்!

Sriram Balasubramaniam Sir, நாங்கள் இப்போ அந்த படாத பாடுதான் படுகிறோம்! என்னால் புரிந்து கொள்ள மட்டுமல்ல, உணரவும் முடிகிறது.


============================================================================

எஸ். ராமகிருஷ்ணன்
உயர்த்திப் பிடித்த வெளிச்சம்
ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத மனவலியோடு அவரது வீட்டு வாசலில் இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். சலனமற்ற நீண்ட இரவு. நினைவுகள் கொப்பளிக்கின்றன. ஜே.கே. வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மனம் அதில் ஒன்றமுடியாமல் தத்தளித்தது. இந்த இழப்பு எளிதானது அல்ல. எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன். அவர் எனது ஞானத்தந்தை. கண்ணீர் சிந்துவதற்கு மேலாக ஒன்றைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. என்ன செய்வது எனத்தான் தெரியவில்லை.
அந்த வீதியே ஜெயகாந்தனின் இருப்பால் அழகுடையதாக இருக்கும். சென்னைக்கு வந்த புதிதில் பல நாட்கள் அவரது வீட்டைக் காண்பதற்காகத் தயங்கித் தயங்கி அந்த வீதியில் நடந்திருக்கிறேன். கொட்டகை போட்ட மாடியில் இருந்து படி வழியாக ஜெயகாந்தன் கீழே இறங்கி வருவதை தெருவில் பராக்கு பார்ப்பதுபோல கண்டிருக்கிறேன். நெருங்கிப் போய் அறிமுகம் செய்துகொள்ளும் தைரியம் வர நீண்ட நாட்களானது.
மரணத்தைப் பற்றி அவருக்குப் பயமே இல்லை. அவருடன் பேசும்போது ஒருமுறை சொன்னார்…
‘வயதானால், சாவு நிச்சயம். அது வரும்போது வரட்டும். இருக்கிற வாழ்க்கையை இன்பமாக அனுபவிப்பதுதான் முக்கியம்’ எனச் சொல்லிவிட்டு, தனது மீசையைத் திருகியபடியே ‘இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. அது பொன்னால் கிடைப்பது இல்லை, புகழால் கிடைப்பது இல்லை, பெண்ணோ, பொருளோ தருவது இல்லை. தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள்… அந்த இன்பமே உயர்வானது. தன்னை அறிந்தவன் தவறுகளை மறைத்துக்கொள்ள மாட்டான். சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த விதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்குத் தவறு. மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது’ என்றார்.
எனது வீடே ஜெயகாந்தனின் ரசிகர்களாக இருந்தார்கள். விகடனிலும் தினமணி – கதிரிலும் வெளியான அவர் கதைகள், தொடர்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் வீட்டில் நடக்கும்.
ஓர் எழுத்தாளன் குறித்து இப்படி வியந்து வியந்து பேசுகிறார்களே என ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொண்டிருப்பேன். அப்படித்தான் ஜெயகாந்தன் கதைகளை ஆசையோடு வாசிக்கத் தொடங்கினேன்.
பள்ளி நாட்களில் எனது அண்ணனின் வகுப்பு ஆசிரியராக இருந்த எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி, ஜெயகாந்தனின் நண்பர். ஜெயகாந்தன் போலவே மீசையும் வைத்திருப்பார். பேசுவதும் அப்படியே இருக்கும். தமிழ் ஆசிரியராக இருந்த அவரது வீட்டில் ஜெயகாந்தனுடன் எடுத்த புகைப்படம் இருக்கும். ஜெயகாந்தனைப் பற்றி அவர் பேசத் தொடங்கினால், வியப்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கும். அதில் ஒன்று, மிக மோசமாக சினிமா பாடல் ஒன்றை எழுதிய கவிஞனை அடிப்பதற்காக பாண்டிபஜாரில் ஜே.கே. துரத்திக்கொண்டு ஓடினார் என்பது. அதைச் சொல்லும்போது தனுஷ்கோடி ராமசாமி நடித்தே காட்டுவார். ஒரு நாடகம் பார்ப்பதுபோலவே இருக்கும். அத்துடன் ஜெயகாந்தன் மிகுந்த கோபக்காரர். அரசியல் தலைவர்கள்கூட அவரைக் கண்டு பயப்படுவார்கள் எனச் சொல்லிச் சொல்லி, ‘ஜே.கே. என்றாலே கலகக்காரர்’ என்ற பிம்பம் மனதில் உருவாகியிருந்தது. நேரில் கண்டு பழகியபோது அவர் எத்தனை அன்பும் அக்கறையும்கொண்ட மகத்தான மனிதர் என உணர்ந்தேன்.
ஜெயகாந்தன் ஒரு ரசவாதி. வாசிக்கும் எவரையும் தன் எழுத்தின் வலிமையால் உருமாற்றிவிடுவார். ஜே.கே-யின் சிந்தனைகள், படிப்பவர் மனதில் ஆழமாக உறைந்துவிடக் கூடியவை. உரத்த சிந்தனையும் உணர்ச்சிபூர்வமான அனுபவங்களும் ஒன்றிணைந்த கதைகளை அவர் எழுதினார். சமூகத்தின் போலியான மதிப்பீடுகள், கற்பிதங்கள், வரம்புகளைக் கடுமையாக விமர்சனம் செய்த எழுத்து அவருடையது. சென்னைத் தமிழை இலக்கியமாக்கிய பெருமை அவரையே சாரும். பிளாட்பாரத்தில் வாழும் அடிநிலை மக்களின் வாழ்க்கையை, அதன் அவலங்களை உரக்கச் சொன்னவர் ஜெயகாந்தன்.
‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் வரும் ஹென்றிக்கு நிகரான ஒரு கதாபாத்திரம், இன்று வரை தமிழில் எழுதப்படவே இல்லை. ஜெயகாந்தன் எழுத்தின் உச்சம் இந்த நாவல்.
பேச்சிலும் ஜெயகாந்தன் நிகரற்றவர். அவரைப்போல மேடையில் கம்பீரமாக, உணர்ச்சிபூர்வமாகப் பேசக்கூடிய எழுத்தாளர் எவரும் இல்லை.
‘கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும் சர்வாதி காரத்தையும், நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும் சத்யாகிரகத்தாலும் சந்திக்கும்’ என ஜெயகாந்தன் பேசிய உரையே இதற்குச் சான்று. பாரதியைப் பற்றி ஜே.கே. பேசும்போது கூட்டம் கண்ணீர் சிந்தும் என்பார்கள்.
ஜே.கே. ஒரு பன்முகப்பட்ட கலைஞன் என தனுஷ்கோடி ராமசாமி வியந்து பேசும்போது, வாழ்வில் ஒருமுறையாவது ஜே.கே-யைச் சந்தித்துவிட முடியாதா என ஏங்கியிருக்கிறேன்.
80-களில் ஒருமுறை, மதுரையில் ஜெயகாந்தன் பேச இருக்கிறார் எனக் கேள்விப்பட்டுச் சென்றிருந்தேன். மேடையில் நின்று அவர் கைகளை வீசிப் பேசுகிற விதம், அனல் தெறிக்கும் சொற்கள், ஆவேசமூட்டும் குரல், வாதங்களை எடுத்துவைக்கும் ஞானம்… ஜெயகாந்தனின் அந்தப் பேச்சை என்னால் மறக்கவே முடியவில்லை. ஞானோபதேசம் போல கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஜெயகாந்தனைப் போல தன் வாழ்நாளிலே சகல விருதுகளும் அங்கீகாரங்களும் நண்பர்கள் பட்டாளமும் பெருமையும் புகழும் அடைந்த இன்னோர் எழுத்தாளன் இலக்கிய உலகில் கிடையாது. ஒரு கம்யூனிஸ்ட்டாகவே அவர் எப்போதும் இருந்தார். இடதுசாரிகளின் நிலைப்பாட்டை விமர்சனம் செய்திருக்கிறார். ஆனால், இடதுசாரிச் சிந்தனைகளை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததே இல்லை.
எழுத்தாளன் என்பவன் கதைகள், கட்டுரைகள் மட்டும் எழுதுகிறவன் அல்ல…அவன் ஒரு சிந்தனையாளன்; களப் போராளி; போராட்டக் குணமுள்ளவன் என அவனது சமூகக் கடமைகளை உணர்த்தியவர் ஜெயகாந்தன்.
ஒரு களப் போராளியாக அவர் எத்தனையோ போராட்டங்களில் நேரடியாக இறங்கிச் செயல்பட்டிருக்கிறார். பணத்தாலோ, அதிகாரத்தாலோ, எழுத்தை விலைக்கு வாங்க முடியாது. எழுத்தாளன் மிகுந்த சுயமரியாதைகொண்டவன். அவனது திமிர், ஞானத்தால் உருவானது. சுயசிந்தனையும் சுயமரியாதையும் கொண்டவன், எவனுக்கும் அடிபணிந்து போக மாட்டான் என, எழுத்தாளர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஜெயகாந்தனே அடையாளமாக இருந்தார். அவர் உருவாக்கித் தந்த அங்கீகாரமும் கௌரவமும்தான் இன்றும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டுதலாக உள்ளன.
தனது வலிகள், வேதனைகள், தோல்விகள் குறித்து ஜெயகாந்தன் ஒருபோதும் புலம்பியவர் அல்ல. மாறாக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு எழுத்து சாமுராய் போல அவர் ஆவேசத்துடன் பெருங்கோபமும் பேரன்பும்கொண்ட கலைஞனாகவே எப்போதும் நடந்துகொண்டார்.
ஜே.கே. ஓர் அழியாச்சுடர். அந்த வெளிச்சம்தான் என்னைப் போன்ற ஒருவனை ஏதோ ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் இருந்து எழுதுவதற்கு அழைத்து வந்தது.
எனது ‘உலக சினிமா’ நூல் வெளியீட்டு விழாவுக்கு ஃபிலிம் சேம்பரில் காரைவிட்டு இறங்கி உள்ளே வரும்போது ஜெயகாந்தன் எனது கைகளைப் பற்றிக்கொண்டு, ‘உலக சினிமா வேறு… சினிமா உலகம் வேறு. உலக சினிமாவைப் புரிந்துகொண்ட உனக்கு, சினிமா உலகை எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது’ என்றார். எவ்வளவு பெரிய உண்மை, எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டார்.
அன்று மேடையில் அவர் பேசிய உரை அற்புதமானது. அவரோடு ஒரே மேடையில் அமர்ந்திருக்கிறேன், பேசுகிறேன் என்பது, ஒரு கனவு நனவாகிவிட்டதைப்போல சந்தோஷமாக இருந்தது.
இன்னொரு நாள் மதியம் அவரைக் காணச் சென்றிருந்தேன். வீட்டின் மாடியில் இருந்த கொட்டகையில் யாரோ ஒரு பேராசிரியருடன் பேசிக்கொண்டிருந்தார். உரத்த குரலில் சண்டை போடுவதுபோலவே இருந்தது அந்தப் பேச்சு. கண்கள் சிவக்க, உதடு துடிக்க மீசையை முறுக்கியபடியே ஜெயகாந்தன் சொன்னார்… ‘தம் மொழி மீது அன்புகொண்டவர்களுக்குப் பிற மொழி மீது வெறுப்பு வராது. எனக்குத் தமிழ் மீது அபிமானம் உள்ளது; பற்று இல்லை. பற்றானது, விட்டுப்போவதாகும். ஆனால், அபிமானம் விட முடியாதது. தேசமே கடன் வாங்கும்போது, மொழி கடன் வாங்குவது சரியானதே!’
எதிரில் இருந்த பேராசிரியர் வாய் அடைத்துப்போய் உட்கார்ந்திருந்தார். அவரது சபை, படித்தவர்களின் சபையாக மட்டும் இருந்தது இல்லை. ரிக்ஷாக்காரர் தொடங்கி பேராசிரியர் வரை அத்தனை பேரும் சமமாக அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள். சாக்ரடீஸ் தனது சிந்தனைகளை மாணவர்களுடன் உரையாடுவார். அவர்கள் அது குறித்து விவாதிப்பார்கள் என வாசித்திருக்கிறேன். அதை ஜெயகாந்தன் வடிவில் நேரில் பார்த்திருக்கிறேன்.
எழுத்து, பேச்சு, செயல்பாடு… என தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக தன் மொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான கலைஞன் ஜெயகாந்தன்.
‘கடவுள் ரொம்பக் கேவலமான கொலைகாரன். ‘சாவு’னு ஒண்ணு இருக்கும்போது பாசம் என்ற ஒண்ணை உண்டாக்குவானா?’ என ஜெயகாந்தன் கதையில் ஒரு பெண் குருவி கேட்கும். ஜே.கே-யின் மறைவு உருவாக்கிய வலியில், அதே குருவியைப்போலவே நானும் தவித்துக் கொண்டிருக்கிறேன்!
– ஆனந்தவிகடன் இதழில் வெளியானது

===================================================================================








62 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Please வாங்க கமலா அக்கா,வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்

      நீக்கு
  2. அழகாகவும், இன்னும் பெண்ணாகவும் - இது பொருத்தமாக இல்லை. இன்னும் பெண்ணாகவும் என்றால் என்ன சொல்ல வருகிறார்? ஆனால் நல்ல விவரிப்புடன் கூடிய எழுத்து. நீண்ட காலமாக சாப்பிடவில்லை எனும்போதே அமானுஷ்ய கதை எனத் தெரிந்துவிடுகிறது

    பதிலளிநீக்கு
  3. உங்கள் நண்பரிடம் ரிப்பேர் ஆகாத பாகமே இல்லை போலிருக்கே. இரண்டு மனைவிகள்னா யாரிடம் துக்கம் விசாரித்தீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவர் உறுப்புகள் குடித்து குடித்து என்னை அழித்து விட்டாய் என்று பாடி இருக்கும்!

      நீக்கு
  4. ஒவ்வொரு பகுதியையும் படித்தேன்..
    களைத்து கனத்துப் போனது மனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ என்ன இப்படி சொல்லிட்டீங்க

      நீக்கு
  5. வெந்நீர் வெண்ணீர் - பிலஹரி பக்கத்தில். தட்டச்சுத் தவறா? அர்த்தம் வேறாகிவிடுகிறதே

    பதிலளிநீக்கு
  6. அமெரிக்க இந்திய நண்பரின் பகிர்வு.... என் அனுபவப்படி பெற்றோர்கள்தாம் ஒரு கலாச்சார எக்ஸ்போஷருக்குக் காரணம். அதற்கு பெற்றோரின் "தன் வாழ்க்கைத் தெரிவு"தான் காரணம். அதாவது, எனக்கு என் கிராமம் பிடிக்கலைப்பா, மெட்ராஸ்தான் சரி, தென்னிந்தியாவே பிடிக்கலை வடக்கு போல வராது, அல்லது தெரிவு செய்த வெளிநாடு. அது நமக்குத் தந்த நன்மைகளுடன் இத்தகைய பிரச்சனைகளையும் கொண்டுவரும்.

    இன்னொன்று முந்தைய தலைமுறை, பெற்றோர் உற்றோர் காட்டிய துணையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தது. நம் தலைமுறை நான் பேசிப்பார்க்கிறேன் என்று சொல்லி பெண் பார்க்கும் நிகழ்வின்போது தனியாக பத்து நிமிடங்கள் பேசியது, நமக்கு அடுத்த தலைமுறை அவங்களே பேசிப் பேசி புரிந்துகொண்டு ஒத்துவருமா என ஆராய்ந்து பிறகு சம்மதிக்கிறார்கள். நம் திருப்திக்காக பொருத்தம் உள்ள துணைகளின் நம்பரைப் பகிர்ந்து அவர்கள் பேசி முடிவெடுக்க வைக்கிறோம்

    கால மாற்றம். ஒன்றும் செய்ய இயலாது. குறைந்தபட்சம் நாம் குறை சொல்லவேண்டாம் காரணம் நாமும் நம் பெற்றோர் கருத்துக்கு மாற்றாகத்தான் இருந்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் என்றாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனம்

      நீக்கு
  7. நல்ல காலம் திருப்பதி லட்டு கொடுக்காமல் வந்தாரே!

    ஸ்ரீராம், உங்கள் நண்பரை நினைக்கறப்ப, மனிதனின் மூளையின் முக்கியத்துவம் புரியும். இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் அற்புதமான உறுப்பு. ஆனால் நம் எண்ணங்களால் மனதைப் பாழாக்கி மற்ற உறுப்புகளையும் கெடுத்துக் கொள்கிறோம்.

    பாருங்க புத்திசாலித்தனத்தை அவர் நல்லவிதத்தில் உபயோகிக்கவில்லை. ஒரு வேளை ரொம்ப புத்திசாலித்தனம் இருந்தாலும் மூளை கொஞ்சம் கஷ்டப்படும் போல!! இசகுபிசகாக!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதீத புத்திசாலிகள் வாழ்க்கையில் பெரும்பாலும் வெற்றிபெறுவதில்லை. ஸ்ரீராம் உடனே திரைப்படப் பாடலை நினைவுகூறப் போகிறார்

      நீக்கு
    2. நெல்லை சொல்லியிருப்பது போல அந்தப் பாடல் கீதாவின் பின்னூட்டத்திற்கு பொருத்தமான பாடல் தான். மூளை நமக்கு காட்டும் அல்ப ஆசைகளில் மனதைத் தொலைத்து வாழ்வை இழந்து விடுகிறோம்.

      நீக்கு
  8. அழகான ரூட், ஸ்ரீராம். நிறைய இயற்கைக் காட்சிகளைப் பார்த்திருப்பீங்க,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறு சதவிகிதம் உண்மை கீதா. மிகவும் ரசித்த பயணம்.

      நீக்கு
  9. ஜெயகாந்தன் பற்றி நல்லா எழுதியிருக்கிறார்.

    சாவு என ஒன்று இருக்கும்போது பாசம் என்ற ஒன்றை உண்டாக்குவது மனிதனின் சுயநலமா இல்லை கடவுளா?

    பதிலளிநீக்கு
  10. நகைச்சுவைகள் ஓரிரண்டு தவிர மற்றவை வசனங்களாக இருக்கின்றன.

    ஆமாம் தாவணி அணிந்த பெண்கள்லாம் இப்போ எங்கே போனார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கண்களில் இப்போதும் அவ்வப்போது சில இடங்களில் தென்படுகிறார்கள் நெல்லை.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பயண விபரங்கள் நன்று. திருப்பதி என்ற பெயர் விளக்கத்திற்கு நீங்கள் யோசித்து முறை அருமை.

    /நீங்கள் எல்லாம் காஃபி குடித்து விட்டீர்களா? என்று பாவமாக அவர் கேட்டபோது மணி ஐந்தேகால். நாங்கள் ஒருவரை ஒருவர் திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டே 'இல்லை' என்றோம்./

    ஹா ஹா ஹா. இன்னொரு காப்பி குடித்தால் நல்லது என்ற நம் மனதின் நப்பாசை அது. வழியெங்கும் இயற்கையை மற்றும் செயற்கையை பார்த்தபடி பயணிப்பது எனக்கும் மிகவும் பிடித்தமானது.

    அந்த நேரத்தில் தங்கள் நண்பரின் ம. செய்தி கொஞ்சம் மனக் கலக்கத்தை உண்டாக்கியிருக்கும்.என்ன செய்வது.? அனைவருமே ஒருநாள் விதியின் வழி பயணித்து தானே ஆக வேண்டும். ஆனால், எனக்கும் இங்கு இந்த பத்து நாட்களுக்குள் இரண்டு உறவுகளின் ம. செய்தி மனதை கலங்க வைத்து விட்டது.

    உங்களோடு இந்தப் பயணப்பதிவில், பெங்களூரையும் அடுத்து தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அவரை விட்டுவிட்டு முதல் காபி கொடுத்து விட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி தான் கமலா அக்கா .அந்த நாளில் விதியின் விளையாட்டு வேறு சில இடங்களிலும் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது.

      நீக்கு
  12. ​இந்த வியாழன் ஒரு சுறுசுறுப்பு இல்லாத ஒன்றாக தோன்றுகிறது. ஹரப்பனஹள்ளி பயணம் kgy யின் கீரிப்பாறை பயணத்தை நினைவூட்டியது.
    கண்டசாமி காணாத சாமி ஆகிவிட்டார். எஸ்ராவின் jk கட்டுரை விலாவாரியாக இருந்தாலும் மனதில் ஒட்டவில்லை.

    போகன் சங்கரின் முகநூல்பதிவு ஒரு கற்பனைக்கதையாகத்தான் தோன்றுகிறது. வாசகர்களின் கவனத்தை ஈர்த்து பச்சாதாபத்தை பரிசாக எதிர்பார்க்கும் கதை. பிடிக்கவில்லை.

    சமூகம் சுருங்கிக்கொண்டே வருகிறது. சமூகத்து மக்கள் பலப் பல பழக்க வழக்க வித்தியாசங்களை குற்றம் கூறித் தங்களுடைய நெருங்கிய சமூகத்தை ஒரு சிறிய சுற்று வட்டத்தில் கொண்டு வந்து விடுகிறார்கள். ஆகவே மாபிள்ளை பெண் தேர்ந்தெடுப்பதில் சிக்கல்கள் நேருகின்றன. இதை நானும் இரண்டாவது மகன் திரும்ணத்திற்காக பெண் பார்க்கும்போது அனுபவித்தேன். காலப்போக்கில் நாமும் ஓர் சீனா ஆகிவிடுவோம் என்று தோன்றுகிறது.
    ஜோக்குகள் நினைவில் நிற்கவில்லை

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜே கே சி சார்.... சமீப காலங்களில் வாசிப்பில் உங்களுக்கு ஒரு அலுப்பு தென்படுகிறது போல! சீக்கிரம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன்!!

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    போன் சங்கர் அவர்களின் முகநூல் பதிவு மனதை கலங்க வைத்தது. இது நிஜமாக நடந்ததா? இல்லை கற்பனை கலந்ததாக எனத் தெரியவில்லை. ஆனால், படித்தவுடன் மனம் கனத்துப் போய் விட்டது.

    இன்று கவிதையை காணவில்லை. நகைச்சுவை பகுதிகள் நன்றாக இருக்கின்றன. கண்களில் மண்ணைத்தூவிச் சென்றவர்கள் அந்தப் பெண்கள்தானோ ..? வரதராஜன் பெயரை நாங்களும் இப்படி விமர்சித்து இருக்கிறோம். அது நினைவுக்கு வந்தது. மற்ற பகுதிகளையும் படித்து விட்டு வருகிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகன் என்பதில்" க" விட்டுப் போய் விட்டது. மன்னிக்கவும்.

      நீக்கு
    2. போகன் சங்கர் எழுதியது கற்பனையாக தான் இருக்க முடியும் .இம்மாதிரி நிகழ்வுகள் இருக்க முடியுமா என்ன? அந்த அமானுஷ்யத்தின் பாதிப்பில் நான் எழுதிய கவிதை கூட காணாமல் போய்விட்டது போல.... ! கவிதை அங்கு இல்லையா?

      நீக்கு
    3. ஆகா... கவிதையையும், சேர்த்து களவாண்டு விட்ட காரிகையா. அது. :)) ?

      நீக்கு
  14. போகன் என்றாலே அமானுஷ்யம்தான் நினைவுக்கு வரும். அப்படி இதுவும் ஒரு அமானுஷ்யமாக. அவர் எழுத்து மிகவும் ரசனையான ஒன்று. எழுதிய விதம் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஒரு ஆளுக்கும் ஒரு ஒரு ரசனை! கருத்துகள் மாறுபடுகிறது பாருங்கள்.

      நீக்கு
  15. பிலஹரியின் கதை இப்படிப் பாதியில் எங்களை ஆர்வத்துடன் வரும வருமா என்று அந்தரத்தில் விடுதே! கொஞ்சம் லா ச ரா போன்ற எழுத்து இருப்பது போல் பட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதாவது வேறு ஏதாவது ஒரு பைண்டிங்கில் தென்பட்டால் இந்த கதையின் தொடர்ச்சி தென்பட்டால் அப்போது எடுத்து வெளியிடுகிறேன்!!

      நீக்கு
  16. இந்த "கண்டதும் கவர்ச்சி" என்ற விஷம், அமெரிக்க கலாச்சாரம் தந்த கொடை - கோக்கோ கோலா, பெப்ஸி, KFC என்பது போல், ஒரு அமெரிக்க வியாதி.//

    இதைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவையோ இல்லை ஏதேனும் மேலை நாட்டையோ குற்றம் சொல்லுதல். அதைச் சுட்டும் போது மூன்று விரல்கள் நம் நாட்டைச் சுட்டுகிறது என்பதையும் நோக்க வேண்டும்.

    கண்டதும் கவர்ச்சி என்பது என்னவோ நம்ம நாட்டிலு முந்தைய காலத்தில் இல்லாதது போல!!! ஆண் பெண் இருந்தால் அது எந்த பூமியாக இருந்தாலும், எக்காலமாக இருந்தாலும் இந்தக் கவர்ச்சி என்பது ஆங்காங்கே இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெக்னாலஜி ஊடகங்களின் முன்னேற்றம் காரணமாக இவை எல்லாம் நேரிடுகிறது என்று நினைக்கிறேன்

      நீக்கு
  17. இங்குமே இப்படித்தானே இருக்கு.

    இதைத் தாண்டி, பொறுமையாக தனது அடிப்படை மதிப்பு ( core value) என்ன? என்பதை அறிந்து , பொறுமையுடன் எதிரே இருப்பவரிடம் அது ஒத்துப் போகுமா? என்பதைப்பார்த்தால், அவரது நல்ல குணங்களை முதலில் பார்க்க முனைந்தால் , எதிரே இருப்பவரை மதிக்கத் தோன்றினால், தேர்வு மற்றும் பொருத்தம் பார்க்க மட்டுமே நமது இடையாடல்கள், விலக்குவதற்கு அல்ல ( process of selection than rejection) என்பதாக ஒரு புரிதல் இருந்தால்....//

    இங்குமே இல்லை. இப்போது என்றில்லை முன்னருமே. முன்னர் பெற்றோர் செலக்ட் செய்தது மட்டும் என்ன ஆனது? அவங்க என்ன குண நலன்களையா பார்த்தாங்க? ஏதோ குத்துமதிப்பா குடும்பம் நல்லாருக்கா சொத்து பத்து இருக்கா இதைத்தானே பார்த்தாங்க? ஆண் வீட்டிலும் சரி, பெண் வீட்டிலும் சரி.

    இதற்கு நான் பதில் கொடுத்திருந்தேன்.//

    இது சூப்பர்!!!!

    சூப்பர்னு சொன்ன பிறகுதான் அது நம்ம ஸ்ரீராம்னு தெரிந்தது!!!!!! ஹாஹாஹாஹா. ஆகையால் நான் என்ன சொல்லிக் கொள்கிறேன் என்றால் ஸ்ரீராம் என்பதால் அப்பதிலை சூப்பர்னு சொல்லலைன்னு சொல்றேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கருத்துதான் பெரும்பான்மை கருத்து என்பது சுதாகர் கஸ்தூரியும் ஒத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் இருவரும் கூட அங்கு அதற்கு லைக் கொடுத்திருந்தார்கள்!

      நீக்கு
  18. அம்மா அப்பா பார்த்து செய்வது சரியாக ஓரளவு வொர்க்கவுட் ஆகிவிட்டால் ஆஹா பாரு அம்மா அப்பா சரியாகத்தான் செலக்ட் செய்வாங்கன்னு சொல்லும் இந்த சமூகம்.

    ஒரு வேளை அந்த மண வாழ்வு சரியாக இல்லைனா? ஆண் சைடானாலும் சரி பெண் சைடானாலும் சரி, அப்ப யாரைச் சொல்லும் இந்த சமூகம்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமூகம் என்பது நாலு பேர் தானே! அது என்ன சொன்னால் என்ன? சம்பந்தப்பட்டவர்களின் கருத்து என்ன என்பதுதான் இங்கு முக்கியம் .அது எப்போதுமே 50 :50

      நீக்கு
  19. எஸ் ரா - ஜெயகாந்தன் பற்றி சொன்னது சுவாரசியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. துணுக்குகள் வரதராஜன் புன்னகைக்க வைத்தது. கண்ணில் தூசியும்.

    மேற்படி மேற்படியேதான் இதை வாசித்ததும், பதிவுகளில் கருத்துகள் சில (முன்பு) நினைவுக்கு வந்தது. ஸ்ரீராம் உங்களுக்குப் புரியும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு புரியவில்லையே கீதா! நான் ஒரு மரமண்டை!!

      நீக்கு
  23. போன பதிவில் திருப்பதி வந்தாரா என்ற கேள்விக்கு பதில் கிடைத்தது. உங்களுக்கு பயணத்தில் கிடைத்த அனுபவம்(துக்க செய்தி) போல எனக்கும் 12 ம் தேதி கொழுந்தனார், ஓர்படியுடன் கோவைக்கு பயணம் செய்யும் போது கிடைத்தது.

    என் தங்கையின் மகனும் அவன் நண்பரும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த போது காற்று, மழை காரணமாய் விபத்து ஏற்பட்டது. பின்னால் அமர்ந்து வந்த தங்கை மகன் சிறு காயங்களுடன் தப்பித்தான், ஓட்டி வந்த நண்பர் மரணம். பயணம் கிளம்பிய நேரத்திலிருந்து உறவுகளிடமிருந்து போன் வந்து கொண்டே இருந்தது.
    அந்த பையன் மருத்துவ படிப்பை முடித்து நல்ல வேலையை தேடி கொண்டு இருந்தவன்.அவனை நம்பி இருந்தது குடும்பம்.அது மனதை கனக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் மேலே சொல்லி இருந்தேன்.... அந்த நாள் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழும் நாள் போல....

      நீக்கு
  24. போகன் சங்கரின் முகநூல் பதிவு அருமை
    அவளுக்கு பிடித்த புத்தகத்தை படிக்க தாகத்தோடு வந்து விட்டாளா மீண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை அந்த ரயிலில் அந்த சமயத்துக்கு அவர் வருவாரா என்ன??!!

      நீக்கு
  25. ஆராவமுதன் அழுதான்.. - பிலஹரி ஒரு பக்க கதையே நிறைய பேசியது அருமை.
    தாய் மேல் பாசம் சொல்லும் கதை. உடல் அசதியில் தாயின் அரவணைப்பை தேடும் குழந்தையின் கதை பிடித்து இருக்கு எனக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பைண்டிங் என்பதால் ஒரு பக்கம் தான் கிடைத்தது. மீத கதை என்ன சொல்லி இருக்கும் என்ற கற்பனை அதிகமாக இருக்கிறது.

      நீக்கு
  26. திரு சுதாகர் கஸ்தூரியின் முகநூல் பதிவு பல சிந்தனைகளை கொடுத்தது . என் உறவினர் பெண் அமெரிக்காவில் பணி புரிகிறார் வயது 30 ஆகிறது. அவளுக்கும் 25 வயதிலிருந்து மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆண்மகன் அமெரிக்காவில் இருந்தால் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அமெரிக்காவில் பெண் வேலைப்பார்த்தால் பெண் வேலையை விட்டு வர வேண்டும் என்கிறார்கள்.

    பெண் வீட்டிலும் அமெரிக்காவில் பணிபுரியும் தன் இனத்தை சேர்ந்த மாப்பிள்ளை பையன் கிடைக்க வேண்டும் என்று தேடுகிறார்கள்.
    முடிவு இறைவன் கையில் என்று ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் முன்னேற்றத்தில் சேர்ப்பதா? பின்னேற்றம் என்று சொல்வதா என்று புரியவில்லை.

      நீக்கு
  27. பொக்கிஷ பகிர்வுகள் அருமை. ஆனந்தவிகடன் அட்டை அருமை.

    பதிலளிநீக்கு
  28. எஸ். ரா. ஜெயகாந்தன் பற்றி கூறியது அறிந்தோம்.

    காலத்தின் மாற்றத்தில் இளம் சமூகம் ஒத்து வருமா?. வராதா? என்று முன்பே திட்டம் போடுகிறார்கள். இதற்கு அப்புறமும் எத்தனை திருமணங்கள் நீடித்து வாழ்கிறது.

    கண்ணுக்குள் மண் :) படம் அருமை.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்வதில் ரொம்ப யோசனை இருக்கக் கூடாது. துணிந்து இறங்கி பின்னர் அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டும். நன்றி மாதேவி.

      நீக்கு
  29. பதிவின் பகுதிகள் அனைத்தும் நன்று. துணுக்குகளை அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!