30.8.25

வகுப்புகளை புறக்கணித்து வரும் நான்காம் வகுப்பு மாணவி மற்றும் நான் படிச்ச கதை

மைதானம் கேட்டு வகுப்பை புறக்கணித்து வரும் 4ம் வகுப்பு மாணவியுடன் நீதிபதி பேச்சு

துமகூரு: அரசு பள்ளியில் மதில் சுவர், மைதானம் இல்லை என்பதற்காக, வகுப்புகளை புறக்கணித்து வரும் நான்காம் வகுப்பு மாணவி யை, மூத்த சிவில் நீதிபதி சந்தித்தார். கர்நாடகாவின் துமகூரு தாலுகா, பெலதாரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, சிம்ரா சனோபர்.  மதில் சுவர் தான் படிக்கும் பள்ளியில் விளையாட்டு மைதானம், மதில் சுவர் கட்டி தரக்கோரி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடந்த 3ம் தேதி, மாணவி கடிதம் எழுதியிருந்தார்.  'சுற்றுச்சுவர் கட்டித் தரும் வரை பள்ளிக்குச் செல்ல மாட்டேன்' என, மாணவி சிம்ரா சனோபர் கூறியிருந்தார். அதுபோல, 15 நாட்களுக்கும் மேலாக மாணவி, பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளார்.  இந்நிலையில், துமகூரு மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலரும், மூத்த சிவில் நீதிபதியுமான நுாருன்னிசா, பெலதாரா அரசு பள்ளியில் ஆய்வு செய்வதற்காக சென்றார். பள்ளி கட்டடத்தின் நிலைமை, தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார். அப்போது, மாணவி சிம்ரா பல நாட்களாக பள்ளிக்கு வராமல் இருப்பதை அறிந்தார்.  இதையடுத்து, மாணவியின் வீட்டுக்கு நீதிபதி நுாருன்னிசா சென்றார். மாணவியுடன் பேசினார்.  மாணவி கூறுகையில், “பள்ளியில் மதில் சுவர் இல்லாததால், அருகிலுள்ள திருமண மண்டபத்திற்கு வருவோர், தங்கள் பள்ளியில் வாகனங் களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.  விளையாட்டு மைதானம் ''பலரும் பள்ளி வளாகத்திற்குள் புகை பிடிக்கின்றனர், சிறுநீர் கழிக்கின்றனர். இதனால், பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது,” என்றார். இதை கேட்ட நீதிபதி நுாருன்னிசா, மாணவியின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, வட்டார கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.  இருப்பினும், “சுற்றுச் சுவர், விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரும் வரை பள்ளிக்கு வர மாட்டேன்,” என, மாணவி சிம்ரா பிடிவாதமாக கூறிவிட்டார்.

=============================================================================================


சென்னை: காய்ச்சலுக்கு காரணமான, பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறனை அறிய, சென்னை ஐ.ஐ.டி., புதிய 'சிப்' உருவாக்கி உள்ளது.  சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள், பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறன் குறித்து ஆராய, 'மைக்ரோ ப்ளூய்டிக் சிப்' ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., ரசாயன இன்ஜினியரிங் ஆராய்ச்சி துறை பேராசிரியர் புஷ்பவனம் கூறியதாவது:  மனிதர்களுக்கு பாக்டீரியா தாக்கத்தால் காய்ச்சல் ஏற்படும்போது, மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை பரிந்துரை செய்வர்.  அவற்றை நோயாளிகள், இரண்டு நாட்களிலேயே நிறுத்திக் கொள்வதால், அந்த பாக்டீரியாவுக்கு, அந்த மருந்துக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அடுத்த இரண்டு நாட்களில், அதே பாக்டீரியாவால் காய்ச்சல் ஏற்படும்போது, அதே மருந்தை எடுத்துக் கொண்டா ல், காய்ச்சல் குணமாகாது. அதன்பின், மிகவும் வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதற்கு, அந்த பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு தன் மையை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு, 'கல்ச்சர் டெஸ்ட்' முடிவுகள் வெளிவர, மூன்று நாட்களாகும். இதை கருத்தில் வைத் து, பாக்டீரியாவின் நோய் எதிர்ப்பு திறனை விரைவாக கண்டறிய, 'மைக்ரோ ப்ளூய்டிக் சிப்' ஒன்றை உருவாக்கி உள்ளோம்.  இதில், சிறுநீரை செலுத்தும்போது, அதில் உள்ள எ லக்ட்ரோடில் இருந்து வெளியேறும் மின்சாரம் காரணமாக, பாக்டீரியாக் கள் தனியே பிரியும். அவை வளர, தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவோம்.  மேலும், நோய் எதிர்ப்பு திறன் மருந்தையும் வழங்குவோம். மருந்தின் நோய் எதிர்ப்பு திறன் வேலை செய்தால், பாக்டீரியா அழிந்துவிடும், வேலை செய்யவில்லை எனில், பாக்டீரியா வளர்ச்சி அடையும். இதை புதிய சிப் வழியே, மூன்று மணி நேரத்தில் கண்டு பிடித்து விடலாம்.  மருத்துவர்களும், சரியான சிகிச்சையை பரிந்துரைக்க முடியும். காப்புரிமை கிடைத்த தும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்துடன் இணைந்து, விலை குறைவான புதிய 'சிப்'பை வணிகமயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
===========================================================================================

 

நான் படிச்ச கதை (JKC)

காதல் வளர்த்தேன்

கதையாசிரியர்: சரஸ்வதி ராஜேந்திரன்

புனை பெயர்: மன்னை சதிரா

ஊர்: மன்னார்குடி

======>இந்த வலைப்பூவில்<===== எனது சின்ன சிறுகதைகள் வலம் வரப்போகிறது. நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம்  அந்த காப்பியின் தரத்திற்காக. காப்பியின் மணம் மனதை மகிழ்விக்கும், சுவை நாக்கில் நிற்கும்,  அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்ன சிறுகதைகளில் தரம்,  மணம்,  சுவை இருக்கிறதா என சொல்லப் போகிறவர்கள் நீங்கள்.

இந்தக் கதைகளில் சரசம் இருக்காது,  விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட “ரியலிசம்” என்பதே பொருத்தமாகும். படியுங்கள். விமர்சியுங்கள். 

உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு விமர்சகியாக உள்ளே நுழைந்த நான் இன்று கிட்டத்தட்ட முந்நூறு கதைகள் பலதரப்பட்ட வார மாத இதழ்களிலும் (கலைமகள்,  கல்கி, சாவி,  இதயம்,  விகடன்,  குமுதம், ஜெமினி சினிமா,  அமுதசுரபி, மின்மினி,  குங்குமம்,  வாரமலர்,  பெண்கள்மலர்,  தேவதை,  தேவதையின் கொலுசு,  பாக்யா,  இனிய உதயம் இப்படி பல).

இதைதவிர காரைக்குடி பொன்முடி பதிப்பகத்தில் வெளியான மனக்கணக்கு, சிறுவர்களுக்கான சிறப்பு சிறுகதைகள், மாணவர்களுக்கான நீதி நூல்கள் என மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன

என் கதைகள் இணைய தளத்திலும்,  முகநூலிலும் பலரால் படிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டுள்ளன.

நன்றி
சரஸ்வதி ராஜேந்திரன்

51, வடக்கு ரத வீதி மன்னார்குடி

cell:+(91) 9445789388

வலைத்தளம்: http://ilatchaambugal.blogspot.com

காதல் வளர்த்தேன்

கதையாசிரியர்: சரஸ்வதி ராஜேந்திரன்

தின/வார இதழ்: தேவி

பி..ஏ .படித்து பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் சொந்தமாக ஒரு எஸ் டி  டி பூத்தும்,  ஜெராக்ஸ் மிஷினும் வாங்கிகொடுத்தார் அப்பா. நானும், நல்ல பிள்ளையாகத்தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடந்த ஒரு மாதமாக டெலிபோன் தேவதையொன்று என் செல்லுக்கு போன் பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணுகிறது. மனம் கலகலத்து போனேன் நான்.

பி..ஏ .படித்து பல இடங்களில் வேலை தேடியும் வேலை கிடைக்காததால் சொந்தமாக ஒரு எஸ் டி  டி பூத்தும்,  ஜெராக்ஸ் மிஷினும் வாங்கிகொடுத்தார் அப்பா. நானும், நல்ல பிள்ளையாகத்தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன். யார் கண் பட்டதோ தெரியவில்லை. கடந்த ஒரு மாதமாக டெலிபோன் தேவதையொன்று என் செல்லுக்கு போன் பண்ணி என்னை டிஸ்டர்ப் பண்ணுகிறது. மனம் கலகலத்து போனேன் நான்.

இந்த விஷயத்தை என் நண்பர்களிடம் சொன்னபோது அது யார்னு கண்டு பிடிக்கிறோம் என்றார்கள். சொன்னதோடு அல்லாமல் கண்டுபிடித்தார்கள். எதிரே உள்ள மளிகை கடையிலிருந்து தான் அந்த போன் வருகிறது என்று. அந்த கடையில் வேலை பார்க்கும் பெண்தான் அவள்.  முதலாளி காலையில் கடைக்கு வருவதற்குள் கடை போனிலிருந்து என் செல்லுக்கு போன் பண்ணி இனிக்க இனிக்க பேசுகிறாள் என அறிந்தேன்.

, இதுதான் காதல் போலிருக்கிறது.  எங்கள் காதலுக்கு போன் தான் தூது.  இருப்பினும் எனக்கு ஒரு குடைச்சல். என் செல் நம்பர் அவளுக்கு எப்படி தெரிந்தது என்று அவளிடமே கேட்டுவிட்டேன் .

‘ஒருநாள் உங்க எஸ் .டி .டி பூத்துக்கு போன் பண்ண வந்தேன் அப்பொழுது மேசையில் இருந்த நோட்டில் உங்கள் பெயரும்
செல் நம்பரும் இருந்தது குறித்துக்கொண்டேன்’ சொல்லி சிரித்தாள் போனில்தான். 

“கில்லாடிதான் நீ “ என்றேன் பெருமிதமாக .

“பின் காதலிக்கிறதுன்னா சும்மாவா? சரி சரி எருமை வந்துடுச்சு, நாளைக்கு பேசுறேன் “ என்று போனை வைத்து விட்டாள்.

அவள் அப்படி சொன்னது கடை முதலாளி மாணிக்கத்தைத் தான். இந்த டெலிபோன் நாடகம் இரண்டு மாதமாக தொடர்ந்தது. நானும் அவளை காதலிக்க ஆரம்பித்தேன். காதல் பேச்சு நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது .

மளிகைக்  கடைக்கு போன் பில் வந்தது மூவாயிரம் ரூபாய்க்கு. முதலாளி மாணிக்கம் காண்டானார். மண்டையை உடைத்துக்கொண்டார். எப்படி என்று அவளை கூப்பிட்டு கேட்டார்.

”என்னது மூவாயிரம் ரூபாய்க்கு பில் வந்துருக்கு கடையிலே வேறு யாராவது போன் யூஸ் பண்றாங்களா? என்ன அக்கிரமமாக இருக்கிறது?” என்று சப்தமிட்டார் .

“தெரியலே சார் நானிருக்கும் வரை யாரும் பேசுவதில்லையே“ என்று ஒன்றும் தெரியாதது மாதிரி பேசினாள்  கடைப் பையனைப் பார்த்தபடி.

அடுத்த நாள் வெகு நேரமாகியும் அந்தப்பெண் ஜெயந்தி வேலைக்கு வரவில்லை நேற்று நாம சப்தம் போட்டதால் அவள் வேலைக்குவரவில்லையோ, உள்ளுக்குள்ளேயே நொந்து கொண்டார் மாணிக்கம் .

“ஏம்ப்பா, அந்த பொண்ணு வரலையே, ஏதாவது சொல்லிட்டு போனதா?” கடைப்  பையனிடம் கேட்டார்.

“இல்லை முதலாளி ….ஆனால் ஒரு விஷயம் ……முதலாளி ”

“என்னடா இழுக்கிறே ….சொல்லித் தொலையேன்?”

“எத்ர்த்தாப்பிலே இருக்கிற எஸ் டி டி பூத்திலே இருக்கிற பையன் கிட்டே நம்ம கடை போன் மூலமா தினமும் அக்கா பேசும் முதலாளி “என்று கொளுத்திப் போட்டான்.

“என்னடா சொல்றே? நேற்று கேட்டப்ப ஊமையன் மாதிரி நின்னையேடா பாவி ”

“இதை முதலாளிகிட்டே சொன்னே உன் வேலைக்கு உலை வைச்சடுவேன்னு மிரட்டுச்சே, முதலாளி நீங்களும் தான் அந்த அக்காவுக்கு முக்கியத்துவம் கொடுத்து கடைச் சாவியையே கொடுத்து வைச்சீங்களே அதனாலே அந்த மிரட்டலுக்கு பயந்துதான் சொல்லலே ”
“பாவி, பாவி சரிடா எதிர்த்த எஸ் .டி.டி யும் பூட்டிஇருக்கே ஏன் ?”

“தெரியலே முதலாளி” என்று கடை பையன் சொல்லிக்கொண்டிருக்கவும், ஜெயந்தியோட அப்பா முருகேசன் வந்தார்.

“என்ன சார் பண்டிகை வருதேன்னு கடை பூட்டாம வியாபாரமா? நம்ம பாப்பா இரவு வீட்டுக்கே வரலேன்னதும், உங்க வீட்ல தான் தங்கியிருக்கும்னு எனக்கு தெரியும். ஆனால் என் பொஞ்சாதிதான் போய் பார்த்துட்டு வாங்கன்னு ஒரே அலட்டல். எங்கே என் மகள்”.

“என்ன விளையாடுறீங்களா? நேற்று ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிட்டு. உங்க மகள் இன்னைக்கு இங்கே வரலேன்னதும். நான் நேற்று கோவிச்சு கிட்டதாலே வரலையோன்னு நினைச்சேன், ஆனால் இப்பத்தான் தெரியுது உங்க பெண் எங்கே போயிருப்பான்னு ”.

“எங்கே போயிருக்கா ?’

“இதோ பார் முருகேசன், உன் பெண்ணுக்கும் எதிரிலே இருக்கிற கடை பையனுக்கும் என்ன தொடர்புன்னு தெரியலே, என் கடை போனிலிருந்து தினமும் போன் பண்ணி பேசுவாளாம். என்ன கன்றாவியோ அவங்க காதலை வளர்க்க எனக்கு மூவாயிரம் ரூபாயிக்கு பில் வந்திருக்கு என்ன கொடுமை பாருங்க? நீங்க முதலில் அந்த பையனை பிடிங்க விஷயம் தெரியும்“ மாணிக்கம் சொன்னதும் முருகேசன் போலிசுக்கு போனார்.

போலிஸ் வந்தது. மாணிக்கத்தை விசாரித்தது. பின் என் வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை தர தரவென இழுத்துபோய் ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்து உட்கார வைத்தார்கள் .

“உண்மையை சொன்னீன்னா விட்டுடுவோம், இல்லே போலிஸ்காரன் வேலையை காண்பிப்போம், நகத்திலே ஊசி எத்தித்தான் பதிலை வரவழைக்கணும் என்ன சொல்றே ?’

“நான் சாமி சத்தியமா சொல்றேன், எங்கம்மா மேல ஆணையா சொல்றேன், என்னை நம்புங்க, அந்த ஜெயந்தி என் கிட்டே
தினமும் ஆசை ஆசையா பேசுவாள்.  நானும் அவள் என்னை காதலிக்கிறான்னு நினைச்சு வழிய வழிய பேசினேன். அதைத்
தவிர வேறொன்றும் எங்களிடையே கிடையாது நீங்க சொல்லித்தான் அவளை காணோம்னு எனக்கு தெரியும். இது தான் சார் உண்மை “அழுதேன்

“இவனை உள்ளே உட்காரவை இதோ வரேன் “என்று இன்ஸ்பெக்டர் வெளியேறினார் .

மாலை ஆறு மணி .

‘டூ நாட் செவென் அந்த பையனை இங்கே அனுப்பு’ என்றார் நான் கூனி குறுகி இன்னும் என்ன மாதிரி அடி விழப்போகிறதோ என்ற கலக்கத்தில் வர

‘சாரி தம்பி, அந்த பெண் உன்கிட்டே நடிச்சுட்டு கடைக்கு பக்கத்து வீட்டு பையனோடு ஓடிப் போயிருக்காள். உன்கிட்டே தினமும் பேசியதாலே நீதான் கடத்திட்டேன்னு நினைச்சுட்டோம். நீ வீட்டுக்கு போகலாம். இந்தா உன் டிரஸ். இனி மேலாவது ஜாக்கிரதையா இரு’ சர்வ சாதாரணமாக சொன்னார் இன்ஸ்பெக்டர்

அடப் பாவி என் மனசையும் கெடுத்து என் மானம் மரியாதையும் வாங்கிட்டியே. உன் காதலை வளர்க்கவும் என்னை ஏமாற்றி இன்னொருவனுடன் ஓடவுமா நடித்தாய் பாவி. பாவி நான் எப்படி இனி வெளியிலே தலை காட்டுவேன்? என் சபலத்துக்கு இது வேண்டியதுதான். உள்ளுக்குள்ளேயே புழுங்கினேன்.

“சாரி தம்பி நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன். அந்த நாய் தன் காதலை வளர்க்க எனக்கு மூவாயிரம் தண்டம் வைச்ச கோபத்துலே உன்னை தப்பா நினைச்சுட்டேன். நீயாவது அவள் எப்படின்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? பாவம் சின்ன பையன் உங்களுக்கும் சபலம் தம்பி இனிமேலாவது ஜாக்கிரதியா இருங்க ” மாணிக்கம் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அவர்களுக்கென்ன சுலபமா மன்னிப்பு கேட்டுவிட்டார்கள். மானம் மரியாதை போய் அடியும் இல்ல நான் வாங்கினேன்.

வாங்கிய அடியில் உடல் ரணமாக, முனகிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். வீடும் என்னை விளாசி வெறுத்தது. சபலத்துக்கு இத்தனை விலையா?

– 30-9-2009

என்னுரை

சிறுகதை என்பது பார்த்த, படித்த, கேட்ட, செய்திகள்/சம்பவங்களின் அடிப்படையில் தான் மிக்கவாறும் அமையும் என்று சுஜாதா கூறியிருக்கிறார். ஆனாலும் நிகழ்ச்சி என்பது மட்டும் ஆர்வத்தை தூண்டுவதில்லை. சிறிது கற்பனையும் சேர்ந்தால் தான் சிறுகதை முழு வடிவம் பெறும் என்றும் சேர்க்கிறார். 

அந்த வகையில் இக்கதை கதையாசிரியர் முன்னுரையில் கூறியபடி “ரியலிசம்” இருக்கும் கதை தான். ஆனால் ஜெயந்தி ஓடிப்போனாள் என்ற ரியலிசம் மட்டும் கதை ஆகாதல்லவா? அதற்கு கற்பனை தேவை. அது தான் மளிகைக்கடையில் வேலை போன்ற சங்கதிகள். மாலில் வேண்டுமானால் பெண்கள் பணி புரியலாம். ஆனால் சின்ன மளிகைக்கடைகளில் பெண்கள் பணி  புரிவது அபூர்வம். அதே போல் ஜெயந்தி மூன்றாவது மனிதனை காதலிப்பதாக ஏன் பாவலா காட்டவேண்டும். உண்மையான காதலனுடன் போன்  மூலம் பேசலாமே? இப்படி பல முரண்பாடுகள், சந்தேகங்கள் எழுகின்றன.

சுருக்கத்தில்: ஜெயந்தி என்ற பெண் பக்கத்து வீட்டு பையனுடன் ஓடிப்போனது நிஜம். ஜெயந்தி யார், அவளுடைய வேலை, அவளுக்கும் கதை  எழுதியவருக்கும் என்ன சம்பந்தம், போன் பில், போன்றவை கற்பனை. 

கற்பனையையும், நிகழ்ச்சியையும் கலந்து ஒரு “சிறு” கதை எழுதிய ஆசிரியருக்கு ஒரு “சிறு” பாராட்டு.

13 கருத்துகள்:

  1. சுற்றுச் சுவருக்காக பள்ளிக்கு வரவில்லையா? இது பாசிடிவ் செய்தியா? Awareness என்ற முறையில் ஓகே ஆனாலும் நெருடுகிறது

    சனிக்கிழமை டல் தினம். வருபவர்களும் குறைவு. வெளியிடுபவர்களும் வரமாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதன் முக்கியத்துவம் சொல்லி மெல்ல விஷயங்களுக்காக  போராட வேண்டும் என்று தோன்றி இருக்கிறதே...  ஒருவேளை விளம்பரத்துக்காக இருந்தாலும், போராட்ட குணம் இளமையிலேயே வருவது சந்தோஷம்,

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம், பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் நன்றாக உள்ளது. போராட்டம் வெற்றி பெற்று அப்பெண் படிப்பைத் தொடர வாழ்த்துகள். மருத்துவம் குறித்த செய்தியும் நன்று. அனைவரும் இறைவன் துணையில் நலமுடன் வாழ வேண்டும்.

    இன்றைய கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது. செய்யாத குற்றத்திற்கு தண்டனை. இது மனதில் ஏற்படும் சபலத்திற்கான தண்டனை என முடித்திருப்பது நன்று. இதைத்தான்" பழி ஓரிடம். பாவம் ஓரிடம்" என்பார்கள். முன்னுரை என்னுரை அனைத்துமே நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. நம்ம ஊரில் எல்லாமே போராடித்தான் வாங்க வேண்டும் போல. அந்தச் சிறு மாணவி, பெரியவர்களின் உந்துதலால் செய்கிறாளா இல்லை தன்னிச்சையாகச் செய்கிறாளா என்று தெரியவில்லை. இந்த குணம் நல்ல குணம் தான். நியாயமாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகும் போது போராடிப் பெறும் குணம். இல்லை என்றால் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. அதுவும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வேண்டும். நியாயமான கோரிக்கை.

    போராடியதால் கவனம் பெறப் பட்டுள்ளது.

    கூடவே வேறொன்று உளவியல் ரீதியாக, அக்குழந்தை இக்காரணத்தால் மட்டும்தான் பள்ளி செல்லவில்லையா இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா என்றும் பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. சிப் தகவல் நல்ல விஷயம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. கதை ஸோ ஸோ தான். இன்னும் சரியாக எழுதியிருக்கலாம்.

    முதலில் கதைநாயகன் சொல்வது போல் தன்னிலையில் தொடங்கும் கதை இடையில் மூன்றாவது நபரின் பார்வையில் படர்க்கையில் போவது போல் உள்ளது.

    //நேற்று நாம சப்தம் போட்டதால் அவள் வேலைக்குவரவில்லையோ, உள்ளுக்குள்ளேயே நொந்து கொண்டார் மாணிக்கம் .//

    சரியாக லிங்க் ஆகவில்லை. நான் என்று தன்னிலையில் எழுதும் போது இது எப்படித் தெரியும்?

    //போலிஸ் வந்தது. மாணிக்கத்தை விசாரித்தது. பின் என் வீட்டுக்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த என்னை தர தரவென இழுத்துபோய் ஸ்டேஷனில் வைத்து அடித்து துவைத்து உட்கார வைத்தார்கள் .//

    தூங்கிக் கொண்டிருந்தவனுக்கு மாணிக்கத்தை விசாரித்தது எப்படித் தெரியவரும்?

    நான் என்று எழுதும் போது ரொம்பக் கவனமாக எழுத வேண்டும் சில இடங்களில்.

    எபியில் வரும் கதைகள் இதைவிட பெட்டர் என்று எனக்குத் தோன்றியது என் தனிப்பட்டக் கருத்து.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஜெ கெ அண்ணா, சுஜாதா சொன்னது சரிதான். ஒரு சம்பவத்தை வைத்து இக்கதையைக் கற்பனை கலந்து எழுதியிருக்காங்க என்று சொல்லியிருக்கீங்க. அது ஓகே ஆனால் அந்தக் கற்பனையை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக மெச்சூர்டாக ஹாண்டில் செய்திருக்கலாம் என்பதும் என் தனிப்பட்டக் கருத்து. சாதாரணக் கதைதான் இது.

    நான் மெச்சூர்ட் என்று சொல்வது எழுத்து நடை, கற்பனை.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. பெரிய எழுத்தாளர் என்று தெரிகிறது பல பத்திரிகைகளில் எழுதியிருக்காங்க. 300 கதைகள் எழுதியிருக்காங்க. பெரிய எழுத்தாளர்களின் எல்லாக் கதைகளும் ஆஹா ஓஹோ என்று இருக்காதுதான் எ என் அபிமான சுஜாதா உட்பட. இருந்தாலும் அதில் ஒரு தரம் இருக்கும் பெரிய நல்ல எழுத்தாளர் என்பதற்கான அடையாளம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பாசிடிவ் செய்திகளில் சிறுமியின் போராட்டம் வெற்றிப்பெற்று அவள் பள்ளிக்கு சென்று படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும்.

    வைரஸ் காய்ச்சலை கண்டுபிடிக்கும் மைக்ரோ ப்ளூய்டிக் சிப் காப்புரிமை பெற்றால் நல்லது.

    பதிலளிநீக்கு
  10. கதை ஜெயந்தி ஏன் இப்படி ஏமாற்றினாள் என்று தெரியவில்லை. அவன் மேல் பழி விழுவது போல செய்து விட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டது ஏன் என்று தெரியவில்லை.
    "பழி ஓரிடம் பாவம் வேறிடம்" எனும் பழமொழிக்கு எழுதபட்ட கதையோ?

    பதிலளிநீக்கு
  11. பள்ளிக்கு வர மறுக்கும் பெண் - நல்ல விஷயம் என்றாலும் சில நெருடல்கள் உண்டு. அவள் கேட்கும் தீர்வு உடனடியாகக் கிடைக்கக்கூடியதல்ல. படிப்பு வீணாகுமே......

    சிப் - நல்ல கண்டுபிடிப்பு. நல்லதே நடக்கட்டும்.

    கதை - ஓகே. சில குறைகள் இருப்பதை ஏற்கனவே நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!