11.10.25

சபாஷ் ஜோதி பாஸ்கர்! + நான் படிச்ச கதை.

 



= = = = = = =


= = = = = = = = = =

பயத்தில் இருக்காமல் துணிஞ்சு வாங்க, வாய்ப்பு கொட்டிக் கிடக்கு: அமெரிக்க இந்தியர்களுக்கு நம்பிக்கையூட்டும் ‛ஸோகோ' (ZOHO) ஸ்ரீதர் வேம்பு



புதுடில்லி: எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது பெரும் பிரச்னையாகியுள்ள நிலையில், ‛‛தாயகம் திரும்புங்கள். பயத்தில் வாழாமல் துணிந்து முடிவு எடுங்கள், இன்றைய இந்தியா திறமைசாலிகளுக்கு ஏராளமான வாய்ப்பு வழங்குகிறது'' என ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு தொழில் துறை வல்லுநரை, அமெரிக்க நிறுவனம் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றால், அவருக்காக அந்த நிறுவனம் ஒரு லட்சம் டாலர் அரசுக்கு செலுத்த வேண்டும் என்பது இந்த விதிமுறை. இது, அமெரிக்காவில் பணியாற்றிவரும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பால் மற்ற நாடுகளில் உள்ள ஊழியர்களை மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் செப்டம்பர் 21க்குள் (இன்று) அமெரிக்காவுக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளன. இதுப்பற்றி ‛ஸோகோ' நிறுவனரான ஸ்ரீதர் வேம்புவும் இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கியுள்ளார்

அவர் தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‛‛என் சிந்தி நண்பர்கள், தங்கள் குடும்பங்கள் எவ்வாறு எல்லாவற்றையும் இழந்து இந்தியாவுக்கு வந்து மீண்டும் வாழ்க்கையை கட்டியெழுப்பினர் என்று சொல்வார்கள். இன்றும் அதே நிலை எச்1பி விசாவில் இருக்கும் இந்தியர்களுக்கு நேர்ந்துள்ளது. இந்தியர்களே நீங்கள் தாயகம் திரும்புங்கள். உங்களின் வாழ்க்கையை மீண்டும் அமைக்க 5 ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அது உங்களை வலிமையாக்கும். பயத்தில் வாழாதீர்கள். துணிச்சலாக முடிவு எடுங்கள். உங்களுக்கு நன்மை கிட்டும். இன்றைய இந்தியா திறமைசாலிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.
= = = = = = = = = = =

தயாரிப்பு அம்சங்கள், மேம்பாடுகளால் ஈர்க்கப்படும் அட்டகாச 'அரட்டை' செயலி.



மெசேஜிங் செயலிகளில் முன்னணியில் இருப்பது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் தான். இந்தியாவிலும் பரவலாக இந்த செயலிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அப்படியிருக்கையில், சாப்ட்வேர் நிறுவனமான ஸோகோ, மெசேஜிங் செயலி ஒன்றை உருவாக்கியது.

'அரட்டை' என பெயரிடப்பட்டுள்ள இச்செயலி, 2021ல் அறிமுகமானாலும், ஆரம்பத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 300 டவுன்லோடு மட்டுமே ஆனது. தற்போது இச்செயலி பற்றி பலருக்கும் தெரியவந்த நிலையில், திடீரென பயனர்களின் எண்ணிக்கை விர்ரென உயர்ந்தது. மத்திய அமைச்சர்களின் பரிந்துரை மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது போன்ற காரணங்களால் தற்போது 1 மில்லியன் டவுன்லோடுகளை தாண்டி, இந்தியாவில் 'டாப் ரேங்க்'ல் உள்ள செயலிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளை முந்தி, ஆப்பிளின் ஆப் ஸ்டோர், ஆண்ட்ராய்டின் ஆப் ஸ்டோர்களில் முன்னணி இடங்களை பிடித்துள்ளது.

இந்த அரட்டை செயலி உருவாக்கத் தலைமை பொறுப்பாளரான ஜெரி ஜான், 'அரட்டை' குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அரட்டை உருவானது எப்படி?

2006ல் எங்களின் பிஸ்னஸ் வசதிகளுக்காக 'ஸோகோ சாட் (Zoho Chat - பின்னர் Zoho Cliq) உருவாக்கப்பட்டது. அதிலிருந்து பெற்றுள்ள அனுபவத்தை வைத்து 2021ல் பயனர்களுக்கான செயலியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதற்கான தொழில்நுட்ப சவால்கள், பிஸ்னஸ் மற்றும் பயனர்களுக்கான வித்தியாசங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து 'ஸோகோ' ஸ்டைலில் ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரட்டை உருவானது.

2021ல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை என்னென்ன மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

தொடக்கத்தில் இது ஒரு அடிப்படை செயலி ஆக இருந்தது. பின்னர் சிறுசிறு பயனர் அனுபவங்களை (UX) மாற்றியது முதல் நுணுக்கமான மேம்பாடுகளையும் சரி செய்தோம். தற்போது வலை செயலியும் (web app) வந்துள்ளது. சேனல்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரட்டை செயலியில் பணிபுரியும் குழுவின் அளவு என்ன? பயனாளர் அதிகரிப்பை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

குழுவின் எண்ணிக்கை பொதுவாக மாறும் தன்மை கொண்டது. கடந்த 4 ஆண்டுகளாக தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மட்டத்தில் முடிந்தவரை தேவையை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறோம். தலைமை அதிகாரி, தரநிலை குழுக்கள், டெவலப்பர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் கையாள்கிறோம். தகவல் தொழில்நுட்ப வசதிகளும் விரிவாக்கப்பட்டுள்ளன.

இந்த செயலி முழுமையாக என்க்ரிப்ட் (end-to-end encrypt) செய்யப்பட்டதா?

எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது, ஒரு செய்தியை அனுப்புபவர் முதல் பெறுநர் வரை யாரும் படிக்க முடியாதபடி பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு முறையாகும். தற்போது இந்த விஷயத்தில் தான் முழுமையாக பணியாற்றி வருகிறோம். பயனர்களின் தனித்தகவல்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். ஏற்கனவே ஆடியோ மற்றும் வீடியோ கால்களில் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டுவிட்டது. மற்ற பிரிவுகளுக்கும் இந்த வசதிகளை விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அதேபோல், வாக்கெடுப்பு (Poll) மற்றும் யுபிஐ போன்றவற்றை கொண்டு வரவும் பணியாற்றி வருகிறோம்.

ஏ.ஐ மற்றும் Zia LLM போன்ற அம்சங்கள் அரட்டையில் வருமா?

Zia LLM என்பது எங்கள் பிஸ்னஸ் பயன்பாடுகளுக்கே உருவாக்கப்பட்டது. எனவே அதனை உடனடியாக இந்த பயனர் செயலில் கொண்டுவரும் திட்டம் இல்லை. இருப்பினும், ஏ.ஐ மூலம் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல முயற்சிகள் செய்யப்படும்.

இந்தியாவில் வாட்ஸ்அப்.,க்கு மாற்றாக அரட்டை வெற்றிபெறும் என நினைக்கிறீர்களா?

ஒரு தயாரிப்பு வாடிக்கையாளருக்கு மதிப்புமிக்கதாக இருந்தால், பயனர்கள் எப்போதும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்கள் உலகத் தரத்துக்கேற்ப செயலியை உருவாக்க முயல்கிறோம். போட்டி எப்போதும் வளர்ச்சிக்கான மற்றும் புதுமைகளை உருவாக்க ஊக்கமாக இருக்கும்.

'அரட்டை'யின் எதிர்கால திட்டங்கள் என்ன? 'அரட்டை' என்ற பெயரை மாற்றுவீர்களா?

பயனாளர் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். பெயரை மாற்றும் திட்டமில்லை. உலகின் பல பிராண்டுகளும் பல்வேறு மொழிகளில் உள்ள பெயர்களில் தான் பிரபலமாகியுள்ளன. அதேபோல், அரட்டை என்ற பெயரும் பிரபலமாகும் என நம்புகிறோம். 'சிற்றுரையாடல்' (chit-chat) என்ற அர்த்தம் உள்ள 'அரட்டை' சிறந்த பெயர்தான்.

தகவல் பாதுகாப்பு மற்றும் அரசு அனுமதிக்கான பேக்-டோர் அம்சங்கள் குறித்து உங்கள் நிலை என்ன?

பயனரின் தரவுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். அரசின் ஐ.டி விதிமுறைகளை மதிக்கிறோம். ஆனால், பயனரின் தரவுகளை எப்போதும் மூன்றாம் தரப்பினருடன் பகிர மாட்டோம். விளம்பர ஆதாரமான வருவாய் முறைமையையும் பின்பற்ற மாட்டோம். ஒரு தேசபக்தி கொண்ட நிறுவனமாக இருப்பது மட்டுமல்லாமல், எங்கள் தயாரிப்பு திறன்கள் மற்றும் எங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) மையமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவை எங்கள் அடையாளமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.இவ்வாறு ஜெரிஜான் கூறியுள்ளார்.

= = = = = 

சிம்மபுரியின் சிறப்பு! 
மத்தியப் பிரதேசத்தின் சிம்மபுரி (சிம்ஹாபூர்)  கிராமத்தில், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆசிரியர் இருக்கிறார்!  

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்ற கூற்று, அந்தக் கிராமம் அதிக அளவிலான கல்வியாளர்களைக் கொண்டுள்ளது என்று விவரிக்கும் ஒரு உருவகமாகும்.
       
மத்தியப் பிரதேசத்தின் நாசிங்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் சிம்ஹாபுரி. சுமார் 5,000 மக்கள்தொகை கொண்ட இங்கு, குடியிருப்பவர்களில் 500 பேர் ஆசிரியர்களாக உள்ளனர். இக்கிராமம் ஆசிரியர் தொழிலை பெருமை மிக்க மரபாகப் பார்க்கிறது. இந்த தனித்துவமான கிராமத்தில் கற்பித்தலுக்காக ஜனாதிபதி விருது பெற்றவர்கள் 5 பேர் இருக்கிறார்கள். சிம்ஹாப்பூரில், கற்பித்தல் மிகவும் விரும்பப்படும் தொழிலாக இருப்பதோடு, கல்வியாளர்கள் முன்மாதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். நாட்டில் பல பகுதிகளிலும் பொதுவாக மருத்துவப் படிப்பிற்கும் பொறியியல் படிப்பிற்கும் அளிக்கும் விருப்பங்களுக்கு மாறாக இக்கிராமம் ஆசிரியர் தொழிலுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

(நன்றி : இந்தியா டுடே)

= = = = = = = =
நடமாடும் ஆய்வகம். 

பஞ்சாப் ஆசிரியரின் Lab on Wheels' மக்களிடையே அறிவியல் மற்றும் கணிதத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டுகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த 58 வயதான இயற்பியல் ஆசிரியர் ஜஸ்விந்தர் சிங், அறிவியல் மற்றும் கணிதத்தை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். தெருக்களில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கிடையே எளிமையான மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எளிய பரிசோதனைகளை நடத்திக் காட்ட தனது காரை ஒரு நடமாடும் ஆய்வகமாக, Lab on Wheels' என்று மாற்றியுள்ளார். 


2012 இல் தனது பணியைத் தொடங்கியதிலிருந்து, அவர் இந்தியா முழுவதும் 13 மாநிலங்களுக்குப் பயணம் செய்துள்ளார். மாணவர்களின் அறிவியல் ஆர்வம் குறைந்து வருவதைக் கவனித்த அவருக்கு இதைத் தொடங்கும் உத்வேகம் பிறந்திருக்கிறது.  "நான் என் குழந்தைகளை ஒரு பரிசோதனையைச் செய்யச் சொன்னபோது, அவர்கள் அதில் அப்படியே ஆழ்ந்துவிடுவதைக் கண்டேன்" என்று அவர் கூறுகிறார். நடைமுறையில் அறிவியல் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதைக் காட்டும் நோக்கமாகக் கொண்ட அவரது முயற்சிகள், அவருக்கு இந்திய ஜனாதிபதியிடமிருந்து தேசிய விருது உட்பட பல பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளன. 

= = = = = = = = = = =

நான் படிச்ச கதை (JKC)

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு

கதையாசிரியர்: ஷாராஜ்

இவரைப்பற்றிய விவரங்களுக்கு

ஷாராஜ் 

முன்னுரை

ஷாராஜ் என்ற இவரின் 117 கதைகள் sirukathaikal.com தளத்தில் உள்ளதாக காட்டியது. என்ன என்று எட்டிப் பார்த்தபோது இக்கதை முதலில் கண்ணில் பட்டது. விருது பெற்ற இக்கதையை கொஞ்சம் எடிட் செய்து இங்கே தருகிறேன். கதை பாலக்காடு தமிழில் அன்று நிலவிய பழக்க வழக்கங்களுடன் எழுதப்பட்டது,  

சுதந்திரத்திற்கு முன் மன்னர் ஆண்ட காலத்தில் நிலப்பிரபுத்துவம் (ஜமீன்தார் முறை) நிலவில் இருந்தது, அதன் பிரகாரம் பிரபுக்கள் சில கிராமங்களை ஆட்சிசெய்து கொண்டிருந்தனர். இப்பிரபுக்கள் இருந்த வீடுகள் தரவாடு, இல்லம், போன்ற அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டு மருமக்கள் தாயம் வழி உரிமை பகிரப்பட்டு நின்றன. ஆண்களுக்கும் சொத்தில் பங்குண்டு என்றான பிறகு  தரவாடை சேர்ந்தவர்கள் ஒரே கூட்டுக் குடும்பமாய் அவ்வீட்டில் வாழ்ந்து வந்தனர். அத்தகைய தரவாடு ஒன்றின் கதையே இது.

வடக்கந்தற (வடக்கு தரை) தரவாட்டின் தற்போதைய காரணவர் (தலைவர்) சாமிநாதன். அவருடைய அம்மா (பாட்டி) தரவாட்டின் மூத்த நபர். அவருக்கு ஒரு சகோதரர் கிருஷ்ணன்குட்டி, இரண்டு தங்கைகள், இரண்டு மகன்கள் உண்டு. கதை சொல்பவர், சாமிநாதன் மற்றும் கிருஷ்ணன் குட்டி ஆகியோரின் தங்கை மகன். கதை சொல்பவருக்கு இரண்டு உடன்பிறப்புகள். சக்தி (அண்ணன்), மஞ்சு (தங்கை).

கதை நவீனத்துவ முறை சார்ந்தது. கதை சொல்லல் முறை கோணங்கியின் மதினிமார்கள் கதையின்கதை சொல்லல் முறையைப் பின்பற்றுகிறது எனலாம். நீண்ட நாட்களுக்குப்பின் சொந்த ஊர் திரும்பும் செண்பகம் தகர டப்பா பஸ் பயணத்தின்போது நினைத்து பார்க்கும் இளம் பருவத்து நினைவுகளே மதினிமார்கள் கதை. அவனிடம் அன்பு செலுத்தி கொஞ்சிய மதனிமார்கள், அவர்களின் குணங்கள் என்று கதை விரியும். நிகழ் காலத்தில் நடக்கும் சம்பவங்களின் இடையே அழியாக்கோலங்களாய்  நினைவில் நிற்கும் பழைய நிகழ்வுகள் பலவற்றை பின்னி வைத்து கதை சொல்வது என்ற முறையை ஒட்டியது தான் இந்தக் கதையின் சொல் முறையும்.

கதையை என்னதான் குறைக்க சிரமித்தாலும் முடியவில்லை.  நீளம் அதிகம். பொறுமை தேவை. கதையின் ஒன் லைன் உறவுகள் விலக ஒரு சிறு சங்கதி போதும். பகை நிரந்தரம். காரணம் ஈகோ’  

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு

சாமிநாதன் மாமா எழுதியிருந்தார். பாட்டிக்கு உடம்பு ரொம்பவும் முடியாமலிருக்கிறதாம். அம்மாவையும் அப்பாவையும் குழந்தைகளையும் பார்க்க விரும்புகிறாளாம். குறிப்பாக என்னைப் பற்றியும் சொல்லியிருந்தாள் பாட்டி. ‘அவனது வைராக்கியத்தை விட்டு ஒரு தடவை வந்து பார்த்துவிட்டுப் போகட்டும். சாகும் முன்பு எனது ஆசை எல்லோரையும் ஒன்றாகப் பார்த்துவிடவேண்டும் என்பதுதான்.’

கெழவிக்கு இது வேண்டாத ஆசை!” நான் சொன்னேன்.

அப்படிச் சொல்லாதடா! பாவம் அது! கண்ணு நல்லாத் தெரியறதா இருந்தா தள்ளாடிட்டாவது இங்க வரும். ஆட்டோ இருக்கற ஊரானாலும் பரவால்ல. இந்தப் பட்டிக்காட்டுல ஒண்ணுக்கும் வழியில்ல.”

அம்மா சொல்வது போல, மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு பாட்டி வந்தபோதே கண் மங்கத் துவங்கிவிட்டது. “முன்னப் போல அல்ல மக்களே. கண்ணும் காதும் கெட்டுப் போயாச்சு. நடக்கவும் பாடு. வயசாச்சில்லையா?” என்றிருந்தாள் அவளே.

அதற்காக நான் அங்கே போவதா?

நீங்க போங்க. அதப் பத்தி எனக்கு ஏதொரு ஆட்சேபணையுமில்ல. ஆனா, என்னைக் கூப்பிடக் கூடாது. அந்த வீட்டு வாசப்படிய ஒருநாளும் நான் மிதிக்கப் போறதில்ல.”

அம்மா மேற்கொண்டு பேசவில்லை. கடிதத்தை அப்பாவின் சானேஸ்வரக் கண்ணாடியில் தொடர்ந்து படிக்கலானாள் அவள்.

அங்கிருந்து நான் விலகினேன்.

கிழவிக்கு இந்த மாதிரி ஆசைகள் ஏன் வருகின்றன? அதையும் பெரிதாக எடுத்துக்கொண்டு அம்மா ஏதாவது நிர்பந்தித்தாலோஅப்போதல்லவா இருக்கிறது! மரியாதை கெட்ட அந்த வீட்டுக்குள் இந்த ஜென்மத்தில் காலடி வைப்பேனென்று அம்மா கருத வேண்டாம். உங்களைப் போல நான் பழசை மறந்துவிடவில்லை. எத்தனை ஆனாலும் மறக்காது அது.


நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, சக்தியண்ணன், தாத்தா வீட்டில் தங்கி சாமிநாதன் மாமாவோடு வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். அவனுக்குத் தச்சு வேலை கற்றுக் கொடுத்தது மாமாக்கள் இருவரும்தான். க்ருஷ்ணன்குட்டி மாமா இறந்த பிறகு அண்ணனும் கங்காதரன் மச்சானும் கலாதரனும் சாமிநாதன் மாமாவின் கீழ் வேலை செய்து வந்தார்கள்.

சக்தியண்ணனும் கங்காதரன் மச்சானும் மாமன் மகன், அத்தை மகன் உறவில் மட்டுமல்லாமல் சேர்ந்து பல காரியங்களும் செய்கிற நண்பர்கள். குடி, சீட்டாட்டம். பெண்கள் என்று எல்லா சகவாசமும்.

ஒரு பெண்ணின் காரணம், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கங்காதரன் மச்சான் அதை வேறு விதத்தில் வஞ்சம் தீர்க்க நினைத்துவிட்டான். அவனது போக்கு எப்போதும் சரியில்லாதது. அச்சமயம் அவனுக்கு எதிரான அங்குள்ள ஒரு சிலர் அவனை இரவில் மறைவிடமாக அடித்துக் காயப்படுத்திவிட்டனர். அதை சக்தியண்ணன் ஆள் வைத்து அடிக்கச் செய்ததாகப் பழி சுமத்தினான் கங்காதரன் மச்சான். சக்தியண்ணனின் நண்பர்கள், இனி இங்கிருந்தால் ஆபத்தென்று அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

இதை முன்னிட்டு சாமிநாதன் மாமாவும் பெரிய  அத்தையும் கலாதரனும் எங்கள் விட்டுக்கு வந்து சண்டையிட்டுப் போனார்கள். பிறகு எங்கள் வீட்டிலிருந்து அப்பா, அம்மா, கோவிந்தண்ணன், குடும்ப நண்பர்கள் இருவர் எனச் சிலர் அங்கேயும். அப்போது எங்கள் குடும்பம் கடுமையான ஏச்சுக்கு ஆளாகியது. கலாதரன் பேசத் தகாதவற்றைப் பேசி அவமதித்தும்விட்டான்.

அதனால் உறவு துண்டுபட்டது.

பிற்பாடு சாமிநாதன் மாமாவுக்கு கங்காதரன் மச்சானின் பித்தலாட்டம் தெரியவே செய்தது. தாத்தா பாட்டிக்கும்தான். அதை எண்ணி அவர்கள் வருந்தினார்கள். சாமிநாதன் மாமாவும் பாட்டியும் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வருவதாயிற்று. க்ருஷ்ணன்குட்டி மாமா குடும்பத்தாரோடு மனஸ்தாபம் தீரவில்லை. பின்பு பரஸ்பரம் குடும்ப விசேஷங்களுக்கு சம்பிரதாயத்துக்காக அழைப்பதும் அதே விதமாக பங்கேற்பதுமாய் மாறிவிட்ட நிலைமை. எனினும் எங்கள் வீட்டிலிருந்து மற்றவர்கள்தான் அங்கே போவார்கள். பட்ட அவமானம் என் மனதில் ஆறாமல் தகிப்பதுண்டு. அதனால் நான் போவதில்லை.


மாமாவின் கடிதத்தை முழுதும் வாசித்த பிறகு அம்மா கலங்கினாள். ”இனி அது எவ்வளவு நாளைக்கு இருக்கும்னு தெரியாது. உயிரோட உள்ளபோதே ஒரு தடவை பாத்துட்டு வந்தா, போற உயிருக்கும் நிம்மதி. நமக்கும் ஆறுதலா இருக்கும்…”

பாட்டிக்கு உடம்பு சுகமில்லை என அறிந்ததும் எங்கள் வீட்டினர் ஏற்கெனவே போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். கோவிந்தண்ணனும் சக்தியண்ணனும் உட்பட. நான் மட்டும் போகவில்லை.

ஷீஜாக்கா, விலாஸினியக்கா கல்யாணங்களுக்கும், தாத்தாவின் இறப்புக்கும் நான் போயிருக்கவில்லை. என்னைத் தவிர எல்லோரும் போனபோது நான் பெரியப்பா வீட்டில் போய்த் தங்கியிருந்தேன். அது என் விடலைக் காலங்களில் நிகழ்ந்தது. இப்போது தோன்றுகிறது, சுக காரியங்களில் பங்கேற்காவிட்டாலும் துக்க காரியங்களில் பங்கேற்க வேண்டும் என்று. தாத்தாவின் இறப்புக்குப் போகாததாவது பரவாயில்லை. இப்போது பாட்டி ஆசைப்பட்டு, பார்க்க முடியாமல் சாக நான் காரணமாகக் கூடாது.

அந்த எண்ணத்தாலும் அம்மாவின் வற்புறுத்தலாலும் பாட்டியைப் பார்க்கச் செல்வதற்கு நான் முன்வந்தேன். ஆனால் ஒரு விஷயம். அந்த வீட்டுப் படியை மிதிக்க மாட்டேன். ஹரியின் வீட்டில் இருந்துகொண்டு, பாட்டியை அங்கே அழைத்துவந்தால் பார்க்கலாம். எனது நிபந்தனை ஒப்புக் கொள்ளப்பட்டது.


அப்பாவும் அம்மாவும் நானும் மஞ்சுவுமாகப் புறப்பட்டோம்.

பஸ்ஸில் போகும்போது, நான் வடக்கந்தறய்க்குப் போய் பதினொரு வருடங்கள் ஆயிற்று என்பதைக் கணக்கிட்டுக்கொண்டேன்.

என் இள வயதில் வருஷத்துக்கொருதரம், கோடை விடுமுறையில், நிச்சயமாக நானும் மஞ்சுவும் மாமா வீட்டுக்குப் போய்விடுவோம். அம்மாதான் அழைத்துப் போவது.

பாலக்காடு வந்துவிட்டதற்கு திப்பு சுல்தான் கோட்டை அடையாளம். அதைக் கண்டதுமே ஊரை நெருங்கிவிட்ட குதூகலம். பஸ் ஸ்டாண்டில் இறங்கியதும் அம்மா தின்பண்டம் வாங்குவாள். என் ஞாபகத்தில் அவள் எப்போதும் வாங்கியது ஊட்டி ரெஸ்க்கும், நேந்தர சிப்ஸும்தான்.

ஆட்டோ பிடித்து வடக்கந்தற போவோம். ஆட்டோவில் போகும்போது என் ஓயாத பேச்சு ஓய்ந்திருக்கும். மாமா வீட்டில் ஷீஜாக்கா, விலாஸினியக்கா, கலாதரன், குட்டன், த்ரிவேணி, எதிர்வீட்டு ரமா, ப்ரீதி, அண்டை வீட்டு ஹரி இவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பேன். அவர்களைப் பார்க்கப் போகிற களிப்பின் படபடப்பு, வீடு நெருங்க நெருங்க அதிகரிக்கும். வீட்டுக்குச் சற்று தூரத்தில் நியூ வாட்டர் டேங்க். அதன் அருகாமையிலிருக்கிற சத்தார் கடை தெரிந்ததுமே இறங்கி இவர்களுக்கும் முன்பாக ஓடிப் போய்விடத் தோன்றும்.

வீட்டுக்கு முன்பாக ஆட்டோ நின்றதும் நானும் மஞ்சுவும் போட்டியாக ஓடுவோம்.

பரம்பரை வீடு அது. ஒலவக்கோட்டுச் சுருள் ஓடுகள் வேய்ந்தது. சின்னச் சின்னதாக நிறைய அறைகள். நீண்ட எடங்ஙாழியில் சுவர் ஓரம் உரலின் குழி போல குழியிட்டிருக்கும். வீட்டுக்குள்ளேயே தானியங்களைக் குத்த முன்பு உபயோகித்திருக்கலாம். எங்களுக்கு கோலி உருட்டி விளையாடப் பயன்பட்டது அது.  திண்ணை உயரமானது. அகலமும் கூடுதல். தாத்தா பெரும்பாலும் அதில்தான் வெற்றிலை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பார்.

நாங்கள் போவதைப் பார்த்ததும், “அடே…! இது யாரு வர்றாங்கன்னு பாரு…!” என்று பொதுவாக வீட்டுக்குள் எட்டிப் பார்த்து சொல்வார்.

ஓடுகிற எங்களில் யாரேனும் ஒருவரை அவர் பிடித்துக்கொள்ள, மற்றவர் வீட்டுக்குள் போவோம். அல்லது அத்தைகளோ மாமாக்களோ பாட்டியோ குழந்தைகளோ வெளியே இருந்தால் அவர்களிடம்.

அங்கே போனதிலிருந்து ஒரே உற்சாகம்தான். ஒரு வருடம் பார்க்காததில் பேச நிறைய விஷயங்கள் இருக்கும். பின்னே, விளையாட்டுகளும் பாட்டும் கூத்தும். கங்காதரன் மச்சான் தினமும் கல்பாத்தி ஆற்றுக்கு குளிக்க அழைத்துச் செல்வான். வெள்ளிக் கிழமைகளில் ஷீஜாக்கா கண்ணகி அம்மன் கோவிலுக்கு அழைத்துப் போவாள்.

க்ருஷ்ணன்குட்டி மாமாவுக்குக் குழந்தைகளிடம் பிரியம் அதிகம். அவரது முறுக்கு மீசையும் பிராந்திச் சிவப்புக் கண்களும் எனக்கு பயம். குடித்துவிட்டு வந்து என்னோடு வம்பளப்பார்.

டே, மாப்பிள்ளே…! உனக்கு என்னோட எந்தப் பொண்ணு வேணும்? சொல்லு. கட்டித் தர்றேன்.”

அப்போது அவருக்கு ஷீஜாக்கா, விலாஸினியக்கா, த்ரிவேணி, அஜிதா, ஸ்வப்னா என ஐந்து பெண் மக்கள். ஸ்வப்னா கைக் குழந்தை.

நான் சொல்வேன். “எனக்கு ஷீஜாக்காதான் வேணும்.”

மாமா ஹோவென்று சிரிப்பார். ஷீஜாக்காவும் இருந்தால் இதைக் கேட்டு சிரிப்பாள். ஏனென்று புரியாவிட்டாலும் மற்ற குழந்தைகளும் சிரிக்கும். நான் சங்கடத்துடன் நெளிவேன்.

…! அவளையே கட்டிக்கோ. அவ உனக்கு சம்பாதிச்சுத் தருவா. சோறாக்கிப் போடுவா. எங்கயாச்சும் போகணும்னா இடுப்புல தூக்கி வெச்சுட்டும் போவா…!”

மற்றவை எனக்கு சம்மதம். அவளொன்றும் என்னை இடுப்பில் தூக்கிப் போக வேண்டாம். நானென்ன சின்னக் குழந்தையா?

எனக்கு வருகிற சிரிப்பை மறைக்க ஜன்னலுக்கு வெளியே திரும்பிக்கொள்கிறேன். பஸ்ஸின் வேகத்தில் புறக் காட்சிகள் பின்னோடிக்கொண்டிருக்கின்றன.


ஆட்டோ சத்தார் கடை முக்குத் திரும்பி, வீட்டின் முன்பு நின்றது. அப்பா சார்ஜ் கொடுத்தார்.

தாத்தா வீட்டை ரோட்டில் நின்று பார்த்தேன். மூங்கில் விளாறுகளில் கட்டப்பட்ட வேலிக்கப்பால் அது மாற்றங்களோடு இருந்தது. வீட்டின் இடதுபுறம் சாரமிறக்கி, புதிய அறை. அம்மா சொல்லியிருந்ததில் அது சாமிநாதன் மாமா குடும்பத்து சமையலறை என்பது தெரியவந்தது. வேலியோரம் வாசலில் பூச்செடிகள். தனியே நீள் வட்டமாகத் திட்டு கட்டி அதிலிருந்த க்ரோட்டன்ஸ்களைக் காணோம். கல்வாழைகள் பூந்தொட்டியில் அகல இலைகளோடு நின்றன. தென்னையை அடுத்து நெல்லி மரம் பெரிதாகியிருந்தது.

திண்ணையில் குழந்தைகள், நாலைந்து வயதுகளில். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன். பெண்ணா பையனா தெரியாமல் ஜட்டி மட்டும் அணிந்த ஒரு தவழும் குழந்தை. இதில் இரண்டு ஷீஜாக்காவின் குழந்தைகளாயிருக்கும். அவள் இங்கேதான் இருக்கிறாளா? மற்றவை விலாஸினியக்காவுடையதோ?

ஆட்டோ வந்துபோன சத்தத்தில் ஒரு பெண் வீட்டுக்குள்ளிருந்து வந்து கதவோரம் எட்டிப் பார்த்தாள். ஷீஜாக்கா என்று கொஞ்சம் தாமதமாய்ப் புலப்பட்டது. அவள் கவனித்துவிட்டு வேகமாக உள்ளே போனாள். திரும்ப வரும்போது பெரிய அத்தையும் அவளோடு.

அப்பாவும் தங்கையும் அங்கே போனார்கள். நான் அம்மாவுடன் ஹரி வீட்டுக்குப் போனேன்.

ஹரி வீட்டில் அவனில்லை. அவனது அம்மாவும் வாழாவெட்டி அக்காவும் இருந்தனர். அவர்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அம்மா சொன்னாள். விஷயங்களையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டுத் தன் பிறந்த வீட்டுக்குப் போனாள். ஹரியம்மாவின் விசாரிப்புகளுக்கு பதிலளித்துவிட்டு, மாமாக்களின் குடும்பங்களைப் பற்றிய அவளுடைய ஆவலாதிகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். குமாரி அக்கா சாயா கொண்டுவந்து கொடுத்தாள்.


அம்மாவும் மஞ்சுவும் பாட்டியைக் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தனர். பாட்டியை என்னருகில் அமர்த்திக்கொண்டேன்.

பாட்டி என்னை உற்றுப் பார்த்தாள். சுருக்கம் விழுந்து, ஓடுங்கிய பாத்திரம் போல உருவிழந்த முகம். பச்சை படர்ந்து வெளுத்த கண்களில் ஈரம் துளிர்த்தது. அவள் நடுங்கும் கைகளில் என் தோளைப் பற்றினாள். தளர்ந்த எலும்பு விரல்களில் எனது தலையை வருடினாள்.

அல்ல, மகனே…! நீ ஒரேயடியா இந்தக் குடும்பத்தையே வெறுத்திட்ட, இல்லையா…?”

பின்னே, உன்னோட பேரனுக செஞ்ச காரியத்துக்கு வேற என்ன செய்ய முடியும்? சின்ன மாமாகூட, அவனுக சொல்றதுதான் பெருசுன்னு வீடேறி நியாயம் கேக்க அங்க வந்தாரே…! என்ன, ஏதுன்னு விசாரிக்க இங்க வந்தப்போ, கேவலப்படுத்தி எறக்கிவிட்டீங்களே எல்லாரும். மறக்க முடியுமா?”

கூடாதாயிருந்தது. இருந்தாலும், அதெல்லாம் நடந்து முடிஞ்சு இவ்வளவு தூரம் ஆன நிலைக்கு…”

அவள் அதைப் பூர்த்தியாக்கவில்லை.

இடைவெளிக்குப் பிறகு, “உனக்கு வைராக்கியம் அதிகம்தான் மகனேஎன்று சொன்னாள்.

பாட்டிக்கு முன்பைவிட பார்வை மங்கல் கூடியிருப்பது அவள் உற்று உற்றுப் பார்ப்பதில் தெரிந்தது.

அம்மாவும் ஹரியின் அம்மாவும் அந்தப் பழங்கதை பற்றிப் பேசத் துவங்கினார்கள்.

பாட்டி குறுக்கிட்டாள். “போகட்டும்! முடிஞ்சுபோனதப் பேசி என்னாகப் போகுது? போனது திரும்பி வருமா; இல்ல,… நடந்ததை மாத்தி நடத்தி வெக்கத்தாள் முடியுமா?”

அது யாரால் இயலும் என்று நான் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே பாட்டி வேறு விஷயத்துக்குப் போய்விட்டாள்.

ஒழுங்கா இருந்திருந்தா ஷீஜாவைக் கொடுத்த மாதிரி மத்த பொண்ணுகள்ல ரெண்டோ மூணோ, சொந்தத்துலயே கழிஞ்சிருக்கும். விலாஸினியக் கூட வெளிய கொடுத்திருக்க வேண்டாம்.”.

அதை எண்ணிக்கொண்டிருக்கும்போதே பாட்டி மறுபடியும் வேறு விஷயத்திற்குத் தாவி விட்டாள்.

பின்னே,… மகன் இப்ப எங்கயாக்கும் வேலைக்குப் போறது?”

கோயம்பத்தூருக்கு.’

சக்தியும் கோவிந்தனுமோ?”

அவங்க ரெண்டு பேருக்கும் கொழிஞ்ஞாம்பாறயில வேலை.”

…! எப்படியோ எம் மக்களுக்கு ஒரு கொறையும் இல்லாமக் கழிஞ்சா சரி! எனக்கினி அவ்வளவுதான்! மகனையும் புருசனையும் சாகக் கொடுத்துட்டு, இப்ப நான் படற வேதனை போதும். இப்பப் பின்ன குடும்பம் பிரிஞ்சுமாச்சு. அவன் இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா? ம்…? எந்த நேரமும் ஒரே சச்சரவுதான், சச்சரவுதான். எப்படி இருந்த வீடு. இப்ப நிம்மதியே இல்ல…!”


ஷீஜாக்காவின் கல்யாணத்தை சாமிநாதன் மாமா முன்னின்று நடத்தினார். பெரிய மாமாவின் பையன்களில் கங்காதரன் மச்சானும் கலாதரனும் சம்பாதிக்கிறவர்களாயிருந்தும், குடும்பத் தலைவர் ஸ்தானம் சாமிநாதன் மாமாவுக்காயிருந்தது. கடன் வாங்கி தனது சக்திக்கு மீறி செய்தார்.

வாங்கிய கடனை அடைக்கும்  போது பெரிய மாமா பிள்ளைகள் அதில் எங்களுக்கு சம்பந்தமே இல்லை என்றுவிட்டனர். சித்தப்பா எங்களைக் கேட்டுச் செய்யவில்லையே என்ற அவர்களுக்குச் சொல்ல சாமிநாதன் மாமாவிடம் பதில் இல்லை.

வீட்டை அடகு வைத்து வாங்கிய கடன் அது. முப்பதாயிரம். அதற்கு ஐந்து வட்டி. அதை அடைக்க அவரால் முடியாமல் ஆனபோது வீடு ஜப்திக்கு வரும் என்றும், மாமா ஜெயிலில் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என்றும் நெருக்கடி. அப்போதும் அண்ணன் மகன்கள் உதவவில்லை. எங்கள் வீட்டுக்கு வந்து அழுதார். இயன்ற தொகையைக் கொடுத்தோம். மேலும் தேவைப்பட்டதற்கு பணம் புரட்டி, படாத பாடுபட்டு சமாளித்துவிட்டார்.

இந்தப் பிரச்சினையில் மாமாக்களின் குடும்பங்கள் பிரிந்தன. வீட்டில் அறைகள் பகுக்கப்பட்டன. அடிக்கடி சாடைப் பேச்சுகளும் சண்டையும். மாமா இவற்றால் பாதிக்கப்பட்டு மனம் வெறுமையானார். பிரமை பிடித்தவராகச் சாப்பிடாமல், தூங்காமல் நாள் முழுக்க யோசனை. வேலைக்கும் சரிவரப் போவதில்லை. சின்ன அத்தை கோவில்களுக்கும் மாந்த்ரீகர்களிடத்தும் கணவனோடு நடந்தாள். பிறகு எப்படியோ அது குணமாயிற்று. ஆனாலும் சண்டை சச்சரவுகள் தீரவில்லை.


பாட்டி மிகவும் நொந்திருந்தாள். சொல்லித் தீராத தன் சங்கடங்களைச் சொல்லிவிட்டு, “தெய்வம் ஒண்ணு சீக்கிரம் சகாயம் பண்ணனும்என்று சொன்னாள்.

முதுமையில் அனேகருக்கும் இது எவ்விதத்திலாவது நேர்வதுதான். மரணத்தைக் காத்திருப்பதும், விரைவில் வராதா என எதிர்பார்ப்பதும். பாட்டிக்கு அது தள்ளாமையினாலோ சுகமின்மையாலோ உண்டாகவில்லை. சந்ததிகளின் நடத்தையால்.

முடிவாக அவள் சொன்னாள். “இப்பவாவது பாட்டியைப் பாக்கணும்னு தோணி வந்தயே மகனேதிருப்தி ஆச்சு!”

ஒருபுறம் மகளும், மறுபுறம் மகளின் மகளும் தாங்கலாகப் பிடித்துக்கொள்ள அவள் அந்தப் பரம்பரை வீட்டுக்குள் போகிறாள்.

நான் கடைப் பக்கம் கிளம்பினேன்.


சத்தார் கடையில் சிகரெட் வாங்கினேன்.

இனி என்றென்றும் நான் வடக்கந்தறய்க்கு வர வேண்டியிருக்காது. பாட்டியின் மரணத்துக்குக்கூட. அவளின் ஆசைக்கு இப்போது வந்தாயிற்று. இனி எதற்கு? வடக்கந்தறய்க்கு இன்றோடு ஒரு தலை முழுகல். அவள் இறந்துவிட்டால் அதுவும் போய்விடும்.

எண்ணமிடலில் சிகரெட் புகைக்கிற உணர்வே இன்றி புகைத்துக்கொண்டிருந்தேன்.

சிகரெட் அனேகமாக முடிகிற நேரம். இடுப்பில் குழந்தையுள்ள ஒரு பெண் என்னைக் கடந்தாள். அவளும் திரும்பவே அந்த முகம் பழக்கமுள்ளதாகப் பட்டது. அவள் போவதையே பார்த்துக்கொண்டு யோசித்தேன். சத்தார் கடையில் நின்று ஏதோ வாங்கினாள். மறுபடியும் கடைக்குப் போய் ஏதாவது வாங்குகிற சாக்கில் அவளைப் பார்க்கலாமா? வேண்டாம்! எதற்கு வீணாக?

அவள் திரும்பி அதே வழியில் வந்ததும் கவனித்தேன். என் அருகில் நின்றாள். ஒரு இயல்பான புன்னகை அவளிடமிருந்து.

ஷாராஜேட்டனுக்கு என்னை மனசிலாகலையா?”

தாடையில் வலதுபுறம் அந்த சிறு வெட்டுத் தழும்பு ஆளைக் காட்டிக் கொடுத்துவிட்டது. “த்ரிவேணியல்லவா? போகும்போதே யோசிச்சேன். சின்ன வயசுல பாத்ததல்லவா இப்ப பின்ன…” மேற்கொண்டு எனக்குத் தோன்றியதை சொல்லவில்லை.

வெளிர் சந்தன முண்டு உடுத்தியிருந்தாள். ப்ரௌன் நிறத்தில் அகலக் கரை, அதே ப்ரௌனில் ஜாக்கெட்டும். கொஞ்சம் தடியாகவே இருந்தாள். குங்குமப் பொட்டு இருந்தாலும் அதோடு கீழிருந்த சந்தனக் கீற்று அவளின் சிவந்த முகத்துக்கு எடுப்புண்டாக்கியது.

நீங்க பேசுவீங்கன்னு எதிர்பார்த்தேன். பேசாததால அப்படியே போயிட்டேன். அண்ணன்க மேல உள்ள கோபம் இன்னும் தீரல இல்லையா. வருஷங்கள் கொஞ்சம் கழிஞ்சும். அதனாலதான் என்னோட பேசலைன்னு நெனைச்சேன்.”

ஹேஅப்படியொண்ணும் இல்ல. அவங்க மேல சங்கடம்னா உங்கூட பேசறதுக்கென்ன?”

பின்ன ஏன் வீட்டுக்கு வரல?”

அதுஅதாவது…”

ஏட்டன் ஒண்ணும் சொல்ல வேண்டாம். எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க ஒரேடியா எங்களையெல்லாம் மறந்தது போல நான் மறக்கல கேட்டீங்களா? சில சமயங்கள்ல நெனைச்சுக்கறதுண்டு, சின்ன வயசில ஒண்ணா வெளையாடினத. ஏட்டனுக்கு ஞாபகம் இருக்கா, ஒரு தடவை கொல்லையில கல்யாணம் கட்டி வெளையாடிவீட்டில எல்லாரும் பாத்து கேலி பண்ணினது…?”

அவள் ஒரு முறை தலை குனிந்துவிட்டு சிரித்தாள்.

இன்னும் இவற்றை நினைவில் வைத்திருக்கிறாளா இவள்? நான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்து வைத்தேன்.

இது யாரோட கொழந்தை?”

விலாஸியக்காவோடது.”

தொடர்ந்து ஒரு நீண்ட மௌனம். இனி என்ன பேசுவதென்று யோசிக்கிறாளோ? எனக்கு அவ்வித யோசனை ஏதுமில்லை.

மௌனத்தை அவளே தகர்த்தாள். “இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராததுனால எங்க பாக்கவே முடியாதோன்னு நெனச்சேன். பொரிக்கறதுக்கு அப்பளமில்லன்னு வாங்க வந்தேன். அதனால பாக்க முடிஞ்சுது. அப்போ,… நான் வரட்டுமா?”

பேசுவதற்கு அவ்வளவுதானா விஷயங்கள்? இல்லை,… பின் வேறு எதைத்தான் பேச முடியும்?

கண்களின் ஊடே அவள் பார்த்த அந்தப் பார்வை ஜீவிதத்தில் மறக்க முடியாததாக இருந்தது.

அவள் போகிறவாக்கில் திரும்பிப் பார்ப்பாளென்று கூடுதல் எதிர்பார்த்தேன். அப்படிப் பார்க்காமல் போனதில் ஏதோ இழந்த உணர்வு. அவள் பேசியவை யாவும் எனக்குள் திடீரென ஏதேதோ கற்பனைகளையும் உருவாக்கியது. பத்து நிமிட இடைவெளிக்கு மறுபடி ஒரு சிகரெட் அபூர்வமாகத் தேவைப்பட்டது எனக்கு.


திரும்பி வந்தபோது, எதற்காகவோ வெளியே வந்த சின்ன அத்தை என்னைக் கண்டு தெருவிற்கு வந்தாள். என்னோடு பேசவும் செய்தாள். கங்காதரனும் கலாதரனும் தூரமாக வேலைக்குப் போவதால் மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவதில்லை என்பதை அவளின் மூலமாக அறிய வேண்டியதானது.

மேலும், அவர்களுக்காக அந்த வீட்டிற்கே நான் போகாதிருப்பது முறையல்ல என்றும் சொன்னாள் அவள்.

பிறகு அவளின் குடும்ப நிலவரங்கள். மாமாவின் வேலை. நான்கு பெண் மக்களும் கடைசியாகப் பிறந்த பையனும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது. பையனுக்குப் படிப்பு வரவில்லை என்கிற கவலை.

ஹரி வீட்டுக்கு நகரும்போது பாட்டி வீட்டுத் திண்ணையில் நின்று பராக்குப் பார்க்கிற சிறுமி தட்டுப்பட்டாள். மன வளர்ச்சியற்றவர்களுக்கான தோற்றத்தில் அவளை அறிவது எளிதாகியது. ஸ்வப்னா. அவள் க்ருஷ்ணன்குட்டி மாமாவின் கடைசிக் குழந்தை, அவளுக்கு மாறுகண்ணாயிருந்தது. முதுகில் கையகலமுள்ள மச்சமும். அதனால் இது அதிர்ஷ்டமுள்ள குழந்தை என்பார் மாமா. அந்த அதிர்ஷ்டமோ என்னவோ, அவளின் இரண்டாவது வயதிலேயே அவர் நெஞ்சுவலியால் இறந்துபோனார். இல்லாதிருந்தால் அந்த மகளின் அவலங்களைச் சகிக்க வேண்டியுள்ள துயரத்துக்கு ஆளாகியிருக்க வேண்டும்.

ஆனால், க்ருஷ்ணன்குட்டி மாமா இருந்திருந்தால் இங்கே இந்தப் பிரச்சினைகள் எதுவும் நடந்திருக்காது.


மதியம் சாப்பிடுவதற்காக உள்ளூர் வேலையிலிருந்து வந்த சாமிநாதன் மாமா, ஹரி வீட்டில் என்னைச் சந்தித்தார். நான் வீட்டுக்கு வராமல் அடுத்தவர் வீட்டில் வந்து இருந்துவிட்டுப் போவது பற்றிய வருத்தம் அவரிடத்தில். அவர் சாப்பிட்டுப் போகச் சொல்லியும், என் பொருட்டு அப்பாவும் அம்மாவும் மறுத்து வந்துவிட்டனர். மஞ்சு மட்டும் வற்புறுத்தலில் கொஞ்சம் சாப்பிட்டதாகச் சொன்னாள்.

புறப்படும்போது சின்னத்தையும் அவர்களின் மகள்களில் இருவரும் வழியனுப்பும் விதமாக வந்தனர். பெரியத்தையின் குடும்பத்துப் பெண் முகங்கள் அந்த வீட்டுக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தன. அப்பா போய் ஆட்டோ பிடித்து வந்தார்.

பஸ் ஸ்டாண்டுக்கு வந்து ஹோட்டலில் சாப்பிட்டோம்.

எனது மனசின் போக்கு த்ரிவேணியைக் குறிப்பதாக இருந்தது. அவள் சொன்ன கல்யாண விளையாட்டு நினைவுகள் எனக்குள்ளும் இருந்தாலும் அது பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. அவள் நினைவுகூர்ந்ததும், ‘பாக்கவே முடியாதோன்னு நெனைச்சேன்என்றதும், ஜீவிதத்தில் மறக்க முடியாத அந்தப் பார்வையும்

சாப்பிட்டுவிட்டு பஸ் ஸ்டான்டுக்குள் வந்தோம். காத்து நிற்கையில் புகைக்க மறைவிடத்துக்குப் போகிற வரைக்கும் எனக்கு த்ரிவேணி யோசனை இருந்தது.


பஸ்ஸில் மஞ்சு அப்பாவோடு உட்கார்ந்தாள். நான் அம்மாவுடன்.

பெரிய மாமா வீட்ல எல்லாரும் வீட்டை பாகம் பிரிக்கச் சொல்றாங்களாம், வித்துடலாம்னு. பாட்டி உயிரோட இருக்கற வரைக்கும் வீட்டை விக்க விடமாட்டான்னு காத்திருக்கறாங்க.” அம்மா சொன்னாள்.

என்ன ஜென்மங்கள் அவர்கள்! அற்பம் காசுக்காக ஒரு மனுஷியின் மரணத்தைக் காத்துக் கொண்டிருக்கிறார்களே…!

எனக்கு பாட்டியினுடைய அந்தத் தளர்ந்த எலும்பு விரல்களின் வாஞ்சையான ஸ்பரிஸம் மனதில் நெருடியது.

த்ரிவேணி கல்யாணம் வரைக்கும் பாட்டி இருக்கும்னுதான் தோணுது எனக்கு.”

அம்மாவை ஏறிட்டுப் பார்த்தேன். ”த்ரிவேணிக்குக் கல்யாணமா? எப்போ?”

அடுத்த வாரம் நிச்சயம். இந்த மாசத்திலயே கல்யாணத்த முடிச்சறலாம்னு இருக்கறாங்க.”

இதை ஏன் த்ரிவேணி என்னிடம் சொல்லவில்லை? அத்தனை பேசிஇல்லை, அவள் இயல்பாகப் பேசியதை வேறு விதமாக எடுத்துக்கொண்ட தவறுக்கு அவள் என்ன செய்வாள், பாவம்! மேலும், தனது திருமண விஷயத்தைத் தானே சொல்ல அவள் கூச்சப்பட்டிருக்கலாம். எங்களின் குழந்தைக் கால கல்யாண விளையாட்டை ஞாபகப் படுத்தியதுகூட இது தொடர்பானதாக இருக்கக் கூடும்.

எனக்குள் கற்பனைகள் உருவான அந்த நிமிடங்களைச் சபித்தேன். த்ரிவேணியின் கல்யாணம் வரைக்கும் பாட்டி தாக்குப்பிடிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

பஸ் புறப்பட்டது. கண்டக்டர் ஏறி டிக்கெட் கொடுத்தார். அப்பாவே டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, எங்களிடம் திரும்பி, என்னை வாங்க வேண்டாமென்றார். நான் இருக்கையில் சாய்ந்துகொண்டேன்.

வீடு பாகம் பிரிக்கும்போது நாலாப் பங்கணும்னு நான் சாமிநாதன்கிட்ட சொல்லியிருக்கறேன். பத்தோ ஆயிரமோ கையில கொடுத்து சகோதரிகளோட கணக்கத் தீக்கலாம்னு அவங்க நெனைச்சிறக் கூடாதில்லையா? பெரியம்மாவுக்கும் இதப் பத்தி எழுதணும்…” அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் திகைத்தேன். ‘நீயும் அப்படித்தானாம்மா? கேவலம் பணத்துக்காக…’

இப்போது நான் அம்மாவின் முகத்தைப் பார்க்க விரும்பவில்லை.

உடனே எழுந்து, அருகில் நின்றுகொண்டிருந்த பெண்மணிக்கு இடம் கொடுத்துவிட்டு தள்ளி நின்றுகொண்டேன். அந்தப் பரம்பரை வீடு, பாட்டி, மாமாக்கள், அவர்களின் குடும்பங்கள், த்ரிவேணி, அம்மாஎல்லாமாக எனக்குள் குழப்பம் உண்டானது.

ஏன்டா?” நான் எழுந்துவிட்டதற்கு அம்மா காரணம் கேட்டாள்.

ஒண்ணுமில்லம்மாஎன்றேன், எல்லாவற்றுக்குமாக.

புதிய பார்வை, 1-15 ஜூன் 1994.

குறிப்பு: இக் கதை மாதாந்திர இலக்கியச் சிந்தனை விருது பெற்றது. 

= = = = = = = =

18 கருத்துகள்:

  1. இன்றைய பாசிடிவ் செய்திகள் அனைத்தும் வித்தியாசமானவை, முதல் செய்தியைத் தவிர.

    இந்தியத் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகும். நம் நாட்டு மக்கள் நம் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தினால் நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கு நல்லது. எதற்காக இன்னொரு நாட்டின் முன்னேற்றத்துக்கு நாம் உழைக்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. அதிசயமாக சனிக்கிழமை கருத்துக்கு மறுமொழி வந்திருக்கிறது. ஏற்கனவே இங்கு இன்று மழை பெய்ய 20சதம் வாய்ப்பு என்று போட்டிருக்கிறது. அது 50 சதம் ஆனால் ஆச்சர்யப்படுவதற்கில்லை

      நீக்கு
    3. நெல்லை சனிக்கிழமைகளில் ஸ்ரீராம் கொடுப்பதுண்டே. கூடவே கதைகள் பற்றியும் கூடக் கருத்து கொடுப்பதுண்டே. அதாவது கருத்து கொடுக்கும்படியான கதைகள் என்றால் அது பற்றியும் சொல்லுவதுண்டே நெல்லை.

      கொடுக்க முடியாத சூழலில் மட்டும்தான் வராது.

      நீங்கள் எதற்கான மறுமொழி என்று சொல்லியிருந்தால் நல்லது.

      கீதா

      நீக்கு
  2. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று,

    ஸ்ரீதர் வேம்பு அவர்கள் கிட்டத்தட்ட காந்தியின் பொருளாதாரத்தைப் பின்பற்றுகிறாரோ? அவரைப் பற்றியும் அவருடைய விஷன் பற்றியும் நிறைய தெரிந்து கொண்டேன் கடந்த சில வருடங்களில். 9-10 வருடங்கள் முன்பே அவர் தென்காசியில் தொடங்கிவிட்டாரே!!!.

    தற்போது தஞ்சாவூரில் கிராமம் பெயர் சொன்னாரே டக்கென்று நினைவுக்கு வர மாட்டேங்குது. அங்கு தொடங்குவதற்காகக் கவனம் செலுத்துகிறார்.
    நல்ல முயற்சி. இப்படி ஒவ்வொரு கிராமம் சார்ந்தும் வளர்ந்தால் வெற்றி பெற்றால் நாம் தன்னிறைவு பெற்ற நாடாக வளர வாய்ப்புகள் அதிகம்தான்.

    அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீதர் வேம்பு அவர்களைப் பற்றிய மேற் சொன்ன கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மத்திய பிரதேச கிராம செய்தியும், அதற்கு அடுத்தாப்ல அந்த பஞ்சாப் இயற்பியல் ஆசிரியர் செய்தியும் உள்ளன.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கதை நன்றாக இருக்கிறது. சொந்த அனுபவம் அல்லது குடும்பத்தில் நிகழ்பெற்றது போன்று உள்ளது.

    இப்படியானவை பல குடும்பங்களிலும் நடப்பதுண்டு.

    முடிவு இப்படி முடித்தால்தான் இலக்கிய சிந்தனை போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. என் மாப்பிள்ளை இந்தியாவில் இருந்தபொழுது Zoho வில்தான் பணிபுரிந்து கொண்டிருந்தார். 'அரட்டை'யை டவுன்லோடு செய்து தெரிந்தவர்களுக்கு நமஸ்காரம் என்று குருஞ்செய்தி அனுப்பினேன். யாரிடமிருந்தும் ப்தில் இல்லை. கீதா ரெங்கனுக்கு செய்தி அனுப்ப முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ நானும் அரட்டை ஆப் வைத்துள்ளேன்.

      நீக்கு
  6. மிக நல்ல கதை! JKC சாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. ​வீரப்பன் இல்லாததால் யானைகள் அதிகரித்து விட்டன.

    அரட்டை பயன்பாடு அதிகரித்தல் ஆச்சர்யம். ட்விட்டர் போனது ஒரு இழப்பே. கூ வெற்றி பெறவில்லை.

    வீட்டுக்கு ஆசிரியர் போல் இங்கு கேரளத்தில் வீட்டுக்கு வீடு ஒருவர் gulf இல் வேலை.
    .
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. கௌ அண்ணா அன்று அரட்டை அனுப்பியிருந்ததால் டவுன்லோட் ஆகிவிட்டது. இன்ஸ்டால் செய்துவிட்டேன். ஆனால் அரட்டை இனக் வாட்ஸ்அப் வெப் போன்று வரவில்லை. அரட்டையில் மெசேஜ அக்கா முடியலையே.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. தவிரவும் பயனுள்ளவை. இன்றைய கதை பகிர்வும் நன்றாக உள்ளது. நான்கு சகோதர, சகோதரி உறவுகளுடன் இருக்கும் குடும்பங்களில், இது போல் சண்டைகளும், பிரிவுகளும் நிகழ்வது சாதாரணமாயினும், அதை நன்றாக உணரும் வண்ணம் சொல்லியிருக்கிறார். கதாசிரியர். அவர்களை பெற்றத்
    தாய்க்குத்தான் மனது மிகவும் கஸ்டப்படும். இறுதியில் பணம் என்பது அனைவரது தேவைகள்தான் என முடித்தது வாழ்வின் நிதர்சனம். சண்டைகளின் காரணமாக வெறுப்பின் எல்லைக்கு அப்பால் சென்ற மகன் பணத்தைப் பொருட்படுத்தாது ஒதுங்குவது கதையின் சிறப்பு. நல்ல கதையை தேர்ந்தெடுத்து தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!