24.10.25

செங்கயல் வண்டு கலிங் கலிங் என்று ஜெயம் ஜெயம் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்போடு தண்டை கலந்தாட

 

ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைககள் இருக்கலாம்.  ஒரு குழந்தைக்கு இரண்டு தாய்கள் இருக்க முடியுமா?

இது மாதிரி சிக்கலான விஷயங்களை K. பாலச்சந்தர் படம் எடுக்காமல் வேறு யார் எடுப்பார்கள்?  1972 ல் வெளிவந்த 'கண்ணா நலமா' என்னும் படம்.  பின்னாட்களில் இந்தக் கதையைத் தழுவி கார்த்திக், சுஹாசினியை வைத்து 'சின்னக் கண்ணம்மா' என்று கூட ஒரு படம் வந்தது.  

நீண்ட காலமாய் பிள்ளை வரம் இல்லாமல் இருந்த ஜெமினி ஜெயந்தி ஜோடிக்கு, அந்த பாக்யம் வாய்க்கும் நேரத்தில் ஒரு நிலநடுக்கத்தில் மருத்துவமனையில்  குழந்தை மாறி விடுகிறது.  மாறுவது அவர் முதலாளி குழந்தையுடன்.  சில வருடங்கள் கழித்து சுந்தரராஜன் - முதலாளி - இந்த நிகழ்வை கண்டுபிடிக்க, 'என் குழந்தையைத் தாருங்கள்' என்று வருகிறார்.  

குழந்தையை மாற்றிக் கொள்வதிலேயே சங்கடம்.  என்னதான் தன் பிள்ளை இல்லை என்றாலும், தன் பிள்ளையாய் நினைத்து வளர்த்தபின் எப்படிப் பிரிவது?  மனதைத் தேற்றிக் கொண்டு நீதிக்கு பயந்து அங்கு சென்றால் இன்னொரு அதிர்ச்சி.  இவர்களின் பிள்ளை கால் ஊனமுற்றவனாக இருக்கிறான்.   

அதிர்ச்சி.  எனினும் ஏற்றுக் கொள்கிறார்கள்.  ஆனால்...?

குழந்தையை மாற்றிக் கொள்ளவேண்டும் என்று அறிய வரும்போது எழும் மனப்போராட்டங்களை விளக்க ரேடியோவில் ஒலிப்பதாய் வரும் பாடல் இந்த 'பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்' என்னும் கண்ணதாசன் பாடல்.   எம் எஸ் விஸ்வநாதன் இசை.  

சற்றே நீளமான பாடல் என்றாலும் ரசிக்கலாம்.  அந்நாட்களில் பாடலில் வரும் உணர்வுபூர்வமான வரிகளுக்காகவே கேட்டிருக்கிறேன்.

சமீபத்தில் பார்த்த ரீல்ஸில் எம் எஸ் விஸ்வநாதன் கண்ணதாசன் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தபோது நடந்ததை குரல் கம்ம, கண்கள் கலங்கச் சொன்னார்.  ஒருமுறை அவர் நேரில் வந்து பார்த்து கண்ணதாசனுடன் பேசினால் சரியாகும் என்று சொன்னார்களாம்.  அது முடியாததால் இவர் டியூன் சொல்லி, தத்தகாரம் சொல்லி கண்னதாசனிடம் எப்போதும் கேட்பது போல பாடல் வரிகள் கேட்பது போலவும் பேசி கேசெட்டில் பேசி பதிவு செய்து அமெரிக்காவுக்கு அனுப்...

...ப்புவதற்குள் கண்ணதாசன் மறைந்த செய்தி வந்து விட்டதாம்.  இதைச் சொல்லும்போது அத்தனை வருடங்கள் கழித்தும் எம் எஸ் வி யால் பேசவே முடியவில்லை.  அவர் வாழ்வில் அவர் வாய்விட்டு அழுதது மூன்று பேர் மறைவுக்குதான், ஒன்று எம் எஸ் வியின் தாய், அடுத்து கண்ணதாசன், மூன்றாவது MGR என்றார்.



பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம்
ரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில்
ஒரு விசித்திரமான வழக்கு வந்தது
ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள்
இரண்டு பேரும் அது தன்னுடைய பிள்ளை என்கிறார்கள்

பிள்ளைக்கோ தன் தாய் யாரென்று
சொல்லத் தெரியவில்லை
மன்னன் சாலமன் யோசித்தான்

ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ…….நகல் யாரோ

அசல் யாரோ…….நகல் யாரோ

அறியேனென்று அதிசயித்த மன்னன்
சொன்னான் முடிவில் ஒன்று முடிவில் ஒன்று

இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால்
யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை
ஆகவே காவலா இந்தப் பிள்ளையை ஆளுக்குப்
பாதியாகக் கொடு என்றான்..

காவலன் சென்றான்
இடை வாளை எடுத்தான்
அந்த மகனை இழுத்தான்
வாளை ஓங்கினான்
வாளை ஓங்கினான்
மன்னா மன்னா ஆ….ஆ….

மன்னா ,மன்னா

அம்மா என்றொரு குரலில்
ஒரு பெண் கண்ணீர் வடிக்கின்றாள்
இன்னொரு பெண்ணோ வாளைக் கண்டும்
புன்னகை புரிகின்றாள் புன்னகை புரிகின்றாள்

பாதி கொடுங்கள் என்றே அவளோ
மன்னனைக் கேட்கின்றாள்
மன்னா வேண்டாம் என்றே இவளோ
மன்னனைத் தடுக்கின்றாள்

இந்தா என்றவன் அந்தப் பெண்ணிடம்
மகனைத் தருகின்றான்
இவள் தான் உண்மைத் தாயென
மன்னன் சாலமன் முடிக்கின்றான்
சாலமன் முடிக்கின்றான்

சாலமன் முடிக்கின்றான்

பெற்றெடுத்த உள்ளம்
என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை
என்றும் மௌனம் மௌனம்

ரத்தத்துடன் சேர்ந்தது அந்த பாசம் பாசம்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்
அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்

பெற்றெடுத்த உள்ளம்
என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை
என்றும் மௌனம் மௌனம்

சக்தி வடிவானவளே அன்னை அன்னை
சக்தி வடிவானவளே அன்னை அன்னை
அவள் தானறிவாள்தான்
வளர்த்த கண்ணை கண்ணை

சக்தி ஓம்…..சக்தி ஓம்………
சக்தி ஓம்…..சக்தி ஓம்…..

பக்தியிலும் அன்னைதான் முதலில் தெய்வம்
இந்தப் பார் முழுதும் அவள்
வளத்த செல்வம் செல்வம்

சக்தி ஓம்…..சக்தி ஓம்……
சக்தி ஓம்….சக்தி ஓம்

பதியம் வைத்த மரம் புதிய
தோட்டம்தனில் நின்று வாழ்வதுண்டு
புதியதாக வரும் உறவு யாவும்
அதன் சொந்தமாவதில்லை [2]

சக்தி ஓம்…..சக்தி ஓம்……
சக்தி ஓம்….சக்தி ஓம்

உதிரம் கொண்டு வரும் இதயம் போல
ஒரு உண்மை அன்பு இல்லை
உருகும் உள்ளமென தமிழ் கூறுவது
அன்னை என்ற சொல்லை

சக்தி ஓம்…..சக்தி ஓம்……
சக்தி ஓம்….சக்தி ஓம்

பூவும் மஞ்சளுடன் பொங்கும்
தேவி அவள் புவனேஸ்வரி

சக்தி ஓம்…..சக்தி ஓம்……

பூஜை செய்து வரும்
மாதர் காவல் தரும் ராஜேஸ்வரி

சக்தி ஓம்…..சக்தி ஓம்……

பாசம் பொங்கி வரும் தேவி
சக்தி அவள் ஜெகதீஸ்வரி
சக்தி ஓம்…..சக்தி ஓம்……

பார்வை தன்னில் உயர் நீதி
சொல்ல வரும் பரமேஸ்வரி [2]

சக்தி ஓம்…..சக்தி ஓம்……

புவனேஸ்வரி

சக்தி ஓம்…..சக்தி ஓம்……

பெற்றெடுத்த உள்ளம்
என்றும் தெய்வம் தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை
என்றும் மௌனம் மௌனம்

center;">

========================================================================================

சிவாஜி செய்த உதவிகள் இப்படித்தான்...

நம் மன்றத்தைச் சேர்ந்தவர்.தீவிர ரசிகர்.  இருதயநோயால் இளம் வயதில் இறந்துவிட்டார்.அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் .ஒரு ஆண் குழந்தை.அவருடைய குடும்பம் வருமானம் இன்றி வறுமையில் வாடியது.ரசிகர்மன்றத்தை சேர்ந்த சிலர் இளையதிலகத்தை வெளியூர் சூட்டிங்கில் நேரில்சந்தித்து அவருடைய இழப்பையும் அதனால் அந்த குடும்பத்தின் சிரமங்களையும் எடுத்துக் கூறிஉதவிசெய்யகோரினர்.

.இளையதிலகமும் அன்னை இல்லத்தில் வந்து சந்திக்குமாறு கூறியுள்ளார்.
அவர்களும் குறித்த தேதியில் அன்னை இல்லதிற்கு வந்தனர்.மூன்று குழந்தைகளுடன் தாயையும் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் அழைத்து வந்துள்ளார்.
இளையதிலகம் அவசர சூட்டிங் காரணமாக சென்றிருந்தார்.அவர் வந்து விடுவார் என்று தகவல் கூறி அவர்களை காத்திருக்குமாறு ஊழியர்கள் கூறினர்.

அந்த நேரம் வந்த நடிகர்திலகம் அவர்களை பார்த்து விவரம் கேட்க அவர்கள் இளையதிலகத்தை பார்க்க வந்திருப்பதாக கூறினர்.குழந்தைகளை பார்த்து புன்னகையுடன் பேசி நலம் விசாரிக்கையிலே அவர்களின் முகங்களை பார்க்கிறார்.இயல்பான சந்தோசம் அந்த முகங்களில் எதுவும் தெரியாததை அவர் உணர்ந்து கொண்டார்.மேலும் பேசி விஷயத்தை தெரிந்துகொண்டார்.

உதவியாளரை அழைத்து அவர்களின் பெயர், விலாசம் குறிக்கச் சொல்லிவிட்டு,
அவர்களிடம் பிரபு அவசரமாக சூட்டிங் போயிருக்கான் போல, வெயிட் பண்ணுங்க. "என்று சொல்லிவிட்டு பின் நடிகர்திலகம் சென்று விட்டார்.
இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.

மீண்டும் வருகிறார் நடிகர்திலகம்.கையில் ஏதோ பேப்பர்களை வைத்திருக்கிறார்.அவர்களை அழைக்கிறார்.

ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ரூபாய் ஐம்பதினாயிம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பத்திரங்களை ஒப்படைக்கிறார்.மொத்தம் ஒன்றரை லட்சம் . மாதந் தோறும் கிடைக்கும் வட்டியை வைத்து குடும்பம் நடத்துமாறும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்குமாறும் அறிவுரைகள் கூறினார்.மேஜர் ஆகும் வரை பணவட்டியிலேயே குடும்பத்தை நடத்துமாறும் அதற்குண்டான அவசியங்களையும் எடுத்துக் கூறினார்.
பின் அழைத்து வந்த மன்றத்தலைவர் குடும்பத்தினரை பார்த்து இந்த விஷயம் இந்த விஷயம் இந்த வீட்டு வாசலோடு மறந்து விடுங்கள்.ஊரில் போய் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்க கூடாது சிறிது கண்டிப்புடன் கூறி அனுப்பி வைத்தார்.
இச்சம்பம் நடந்தது 1995 களில். நண்பர் பகிர்ந்த விஷயம்.

- செந்தில்வேல் சிவராஜ் -

===========================================================================================

இன்றைய இரண்டாவது பாடல் 'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சொல்லடி அபிராமி' பாடல்.  

ஆதிபராசக்தி திரைப்படம் 1971 ல் வெளிவந்தது.  அதனுடன் வெளியான பாபு, நீரும் நெருப்பும் போன்ற சிவாஜி எம் ஜி ஆர் படங்களை விட மிக அதிக வசூல் செய்தது.

K S கோபாலகிருஷ்ணன் இயக்கம்.  கே வி மஹாதேவன் இசை.  கண்ணதாசன் பாடல்.

நம் அல்லது என் மனக்கோளாறு..  இந்த 'சொல்லடி அபிராமி' வரியையும், 'நில்லடி முன்னாலே' வரியையும் கேட்கும்போது வடிவேலுவின் 'அரசு' பட நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வந்து தொலைக்கிறது!  'மணியே' என்று தொடங்கும்போது 'உனக்கும் எனக்கும் Something something' விவேக்!

எஸ் வி சுப்பையா அபிராம பட்டராக நடித்திருப்பார்.

மணியே
மணியின் ஒளியே
ஒளிரும் அணிபுனைந்த
மணியே அணியும் அணிக்கழகே
அணுகாதவர்க்கு பிணியே
பிணிக்கு மருந்தே அமரர்
பெரும் விருந்தே பணியேன்
ஒருவரை நின் பத்ம பாதம்
பணிந்த பின்னே

சொல்லடி அபிராமி
சொல்லடி அபிராமி
{ வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில் சொல்லடி அபிராமி } (2)

நில்லடி முன்னாலே
நில்லடி முன்னாலே முழு
நிலவினை காட்டு உன்
கண்ணாலே சொல்லடி
அபிராமி

{ பல்லுயிரும்
படைத்த பரமனுக்கே
சக்தி படைத்ததெல்லாம்
உந்தன் செயல் அல்லவோ } (2)

நீ சொல்லுக்கெல்லாம்
சிறந்த சொல் அல்லவோ நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த
சொல் அல்லவோ இந்த
சோதனை எனக்கல்ல
உனக்கல்லவோ

சொல்லடி அபிராமி

{ வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
வாராயோ அருள் மழை
தாராயோ } (2)

வானம் இடிபடவும்
பூமி பொடிபடவும் நடுவில்
நின்றாடும் வடிவழகே கொடிகள்
ஆட முடிகள் ஆட குடிபடை 
எழுந்தாட வரும் கலை அழகே

பிள்ளை உள்ளம்
துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர
மத்தளமும் சத்தமிட

வாராயோ ஒரு
பதில் கூறாயோ நிலவென
வாராயோ அருள் மழை
தாராயோ

செங்கயல் வண்டு
கலிங் கலிங் என்று ஜெயம்
ஜெயம் என்றாட இடை சங்கதம்
என்று சிலம்பு புலம்போடு தண்டை
கலந்தாட இரு கொங்கை கொடும்
பகை என்றென்ன மென்று குழைந்து
குழைந்தாட

மலர் பங்கயமே
உன்னை பாடிய பிள்ளை
நிலாவும் எழுந்தாட விரைந்து
வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி
சூலி மதாங்கினி கண்களில்
தெரிகின்றாள் கண்கள்
சிவந்திடும் வண்ணம்
எழுந்தொரு காட்சியை
தருகின்றாள்

வாடிய மகன்
இவன் வாழிய என்று
ஒரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே
ஒரு வடிவாய் தெரிகின்றாள்
எழில் வடிவாய் தெரிகின்றாள்

அன்னை தெரிகின்றாள்
என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என்
அம்மை தெரிகின்றாள்

ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் ஓம்
சக்தி ஓம்

55 கருத்துகள்:

  1. நேற்று இரவு நாங்கள் எல்லோரும் ஆதிபராசக்தி படத்தை இந்தப் பாடல் மற்றும் தொடர்ந்த காட்சி முடியும்வரை பார்த்துக்கொண்டிருந்தோம். நல்ல காட்சியமைப்பு, பாடல் வரிகள், நடிப்பு என எங்களைக் கவர்ந்தது. அதில் வரும் அரசர் சரபோஜி மன்னர் எனக் கூறவும் ஆர்வம் இன்னும் அதிகமாகியது. எனக்குப் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  நேற்று இந்தப் படத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்பது ஆச்சர்யம்.  இன்று காலை நான் இந்தப் பாடலைப்  பகிர்ந்திருக்கிறேன்!  உங்களுக்கு ஆதிபராசக்தியின் அருள் பரிபூரணமாக இருக்கிறது.

      நீக்கு
  2. பெற்றெடுத்த உள்ளம் என்றும்... பாடல் வரிகள் படிக்கும்போதே பாடல் மனத்தில் ஓடியது. உண்மை வாழ்வில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்தால் எதிர்கொள்வது மிக்க் கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  நான் விளையாட்டாக என் பெரியவனிடம் சொல்வேன்.   'ஆஸ்பத்திரியில் மாறிப்போயிட்டியோ என்று சந்தேகமா இருக்குடா..  நானும் ஒழுங்கா படிக்க மாட்டேன், உன் அம்மாவும் ஒழுங்கா படிக்க மாட்டா...  நீ மட்டும் எப்படி?' என்று கேட்பேன்.  நீ எங்கள் ஜாடையாகவே இல்லையே என்பேன். கடுப்பாவான்.  அப்புறம் இந்த கிண்டலை நிறுத்தி விட்டேன்!

      நீக்கு
    2. விளையாட்டுக்குக் கூட அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டால் பின்னர் கஷ்டம். எங்க வீட்டில் நாங்க எல்லோருமே ஃபெயில் ஆகாமல் பாஸ் செய்துவிடுவோம் என்றாலும் தம்பி கணக்கில் புலி. நான் பூனை கூட இல்லை. ஆனால் மற்றப்பாடங்களில் அக்கவுன்டசி உள்படத் தட்டச்சிலும் சேர்த்து 80 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கிடுவேன். கணக்கு மட்டும் தத்தித் தத்தி 70/75 வந்தால் பெரிய விஷயம்.

      நீக்கு
    3. கல்யாணம் ஆகிக் குழந்தை பிறந்த புதிது. அயனாவரம் சயானி தியேட்டரில் இந்தப் படம் போட்டாங்க. பிள்ளை பெற்று 45 நாட்களுக்குள் வந்து விட்டதால் சின்னக் குழந்தையை எடுத்துக்கொண்டு சினிமா போகக் கூடாதுனு அம்மா சொன்னதால் குழந்தையை விட்டுவிட்டுப் போனோம். அதற்குப் பின்னர் வந்த படங்களில் பலவும் பொழுதுபோக்கு சபா மூலமாகப் பார்த்தது. அப்போ அம்மா மதுரையில். குழந்தைக்கு வேண்டியவை அனைத்தும் ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு சினிமாவுக்குப் போவோம். மாமாவின் பெரிய தம்பி அப்போ எங்களோடு இருந்ததால் அவரும் வருவார். ஒரே டிக்கெட் தான் என்றாலும் எங்கள் அருகே உட்கார மாட்டார். தள்ளிப் போய் உட்காருவார்.

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா. வணக்கம். பிரார்த்திப்போம்.

      நீக்கு
  4. பல நேரங்களில், நம் மனது நம்மைத் தூண்டுவதால் நாம் உதவி செய்கிறோம். பிறருக்குத் தெரியக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம், நம் அடக்கமா இல்லை தெரிந்துவிட்டால் தாளமுடியாத கூட்டம் உதவி என்று வந்துவிடுமே என்ற பயத்தாலா?

    எம்ஜிஆரிடம் தான் ஏழை என்று சொல்லி உதவிபெற வந்தவள் தன் நகையை எல்லாம் கழற்றி தன்னுடன் வந்தவளிடம் கொடுத்துவிட்டு எம்ஜிஆரை உதவிபெற அணுகிய சம்பவம் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இல்லை தெரிந்துவிட்டால் தாளமுடியாத கூட்டம் உதவி என்று வந்துவிடுமே என்ற பயத்தாலா? //

      ஹா..  ஹா..  ஹா...  எனக்கும் இப்படி தோன்றி இருக்கிறது.  ரொம்ப யோசிக்காமல் செய்தால்தான் உதவிகள் செய்ய முடியும்.  சந்தேகம் என்று நிறைய வந்து விட்டால் உதவி செய்வது குறைந்து விடும்.  பின்னாட்களில் அபடித்தான் சந்தேக யோசனைகள் வருகின்றன!!  அதற்கு காரணம் உதவி கேட்பவர் ஏமாற்றுவதால்தான் - எம் ஜி ஆரிடம் ஏமாற்றிய அந்தப் பெண்மணி போல...

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வில் இரண்டு பாடல்களுமே அடிக்கடி கேட்டுள்ளேன். முதல் பாடல் என்பழைய பதிவிலும் போட்டிருந்தேன். முதல் பாடல் இடம் பெற்ற படம் பார்த்துள்ளேனா என சரியாக நினைவில் இல்லை. ஆனால், இரண்டாவது படம் பல முறை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். படமும் அதில் இடம் பெற்றுள்ள பாடல்களும் பக்தியின் உணர்ச்சிபூர்வமாக நன்றாக இருக்கும்.

    சிவாஜி கணேசன் அவர்களின் நல்ல செயல் பற்றி தெரிந்து கொண்டேன். அவரின் தாராளமான மனதின் செய்கை, அக்குழந்தைகளை நன்றாக வாழ வைத்திருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா அக்கா.

      "வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் கொடுப்பவன் கர்ண வீரன்"

      நீக்கு
  6. பதில்கள்
    1. முருகா.. முருகா...

      வாங்க செல்வாண்ணா வணக்கம்.

      நீக்கு
  7. உதிக்கும் டா போடா...

    என்னே ஒரு நடிப்பு....

    இந்தக் காட்சியை பதிவில் ஏற்றி வைத்துள்ளேன்..
    கந்த சஷ்டிக்குப் பிறகு வெளியாகும்.

    பதிலளிநீக்கு
  8. கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தனது செலவில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவச் சிலையை நிறுவியவர் நடிகர் திலகம்..

    பதிலளிநீக்கு
  9. அவரோ இவரோ - அவரவரையும் அவரவர் தலையெழுத்து இயக்குகின்றது.. இயங்குகின்றனர்...

    வாழ்க நல்ல மனங்கள்

    பதிலளிநீக்கு
  10. முதல் பாடலின் அந்தக் கதை நல்ல கதைக் கரு. பாலச்சந்தரின் வித்தியாசமான படைப்பு. உண்மையிலேயே இப்படி நடப்பதை சில செய்திகளில் வாசித்தும் இருக்கிறேன்.

    சில தாய்மார்கள் தங்களின் முதல் ஆண் குழந்தையை தன் சகோதரிகளில் யாருக்கேனும் குழந்தை பிறக்காது என்று தெரிந்தால் தத்துக் கொடுத்துவிடுவதும் நடக்கும். அதில் எத்தனை உளவியல் சிக்கல்கள், குடும்பச் சிக்கல்கள் பின்னாளில் வரும் என்பதைக் கருத்தில் கொள்ளாமலேயே...

    சிலது எழுதி வைத்......

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா... இந்நாட்களில் தாய்மார்களே குழந்தையை...

      நீக்கு
  11. பாலச்சந்தரின் படம் இது என்றும் கதை இப்போதுதான் தெரிகிறது ஸ்ரீராம். ஆனால் நானெழுதி பாதியில்தானே இருக்கு...அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும்

    படம் பார்க்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது எப்படி இருக்கிறதே என்று பார்க்கலாமே...

      நீக்கு
  12. இந்தப் பாட்டு கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம். ஆனால் கதை அப்ப புரியவில்லை. ஏனென்றால் பாட்டின் வரிகளை விடப் பாட்டுக் கேட்டதோடு சரி வீட்டின் கெடுபிடியால்!! ஹாஹாஹாஹா....மறைமுகமாகப் பயந்து பயந்து கேட்டவை எல்லாமே.

    சூப்பர் பாட்டு. வரிகள் அருமையான வரிகள். இப்பதான் வரிகளைப் பார்க்கிறேன் ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. இன்று பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் அருமை. அடிக்கடி கேட்ட பாடல்
    பாடல் காட்சியும் உடலை சிலிர்க்க வைக்கும்.
    பாடல், நடிப்பு படமாக்கிய விதம் எல்லாம் நன்றாக இருக்கும்.
    சிவாஜி அவர்களின் கொடை தன்மை படித்தேன். படிப்புக்கு உதவியது நல்ல குணம்.


    பதிலளிநீக்கு
  15. எம் எஸ் வி பற்றிய செய்தியும் கண்ணதாசன் எனம் எஸ் வி நட்பைன் ஆழத்தை சொல்கிறது.
    பழகி பிரிவது மனம் வேதனை தரும்.
    நேற்று கீழ் வீட்டு மாமி எப்போது என்ன உதவி என்றாலும் கேளுங்கள் என்று போனில் பேசுவார்கள், கேட்காமலே உதவி செய்வார்கள் நேற்று இரவு அழைத்து தீடிரென்று வீடு மாறி போக போகிறேன் என்றார்கள்.
    மனம் கவலையில் ஆழ்ந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா...  உங்கள் நல்ல மனதுக்கு வேறொருவர் அந்த இடத்தைக் கட்டாயம் பிடிப்பார்.

      நீக்கு
  16. செங்கையில் - அல்ல

    செங்கயல் மற்றும் வண்டுகளைப் போன்ற விழிகள் சுழன்றாடவும் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்

    இந்தப் பாட்டில் சிவந்த விழிகள் என்பது மறைபொருள்...

    குலைந்து (குழைந்து)
    என்பதையும் திருத்த வேண்டும்.. குலைந்து ஆடுதல் என்றால் தலைவிரி கோலம்..

    குழைந்து ஆடுதல் என்றால் அழகின் நடனம்..

    எழுத்துப் பிழைகள் நிறைய..

    பதிலளிநீக்கு
  17. குலைந்து - என்றால் தலைவிரி கோலம்..

    இன்றைய பெண்களின் நாகரிகம்..

    பதிலளிநீக்கு
  18. சிவாஜி செய்த உதவி நல்ல விஷயம். வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று மகாபெரியவர் சொல்லியதை வாசித்ததுண்டு. அப்படியானதாகத்தான் இருக்க வேண்டும்.

    கொடுப்பதையும் கூட எந்தப் பலனும் எதிர்பார்த்துக் கொடுக்கக் கூடாது கொடுத்துவிட்டோம் என்றால் அதன் பின் அவர்கள் அதைச் சரியாக யூஸ் பண்ணுவாங்களா, பொய்யா அதுவா இதுவான்னு இல்லையான்னு யோசிக்கக் கூடாது.

    ஆனா நாம மனுஷங்க!!!! ஹிஹிஹி...

    குண்டக்கா மண்டக்கான்னு போகும்.

    மற்றொரு வாசகம், "ஆத்துல (அகத்துல) போட்டாலும் அளந்து போடு"
    கவனம் தேவைன்னும் ஒன்று உண்டே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி நிறையவே தான தருமங்கள் செய்துள்ளார் என்று பல இடங்களில் படித்திருக்கிறேன்.  விளம்பரம் செய்து கொண்டதில்லை.

      நீக்கு
  19. சொல்லடி அபிராமி ராகமாலிகை - மாயாமாளவகௌளை, நாதநாமக்கிரியை , கேதார கௌளை, காம்போஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த படம். பிடித்த பாடல். இரண்டுமே சரியான தேர்வுகள்.

      நீக்கு
  20. பதில்கள்
    1. சொல்லடி அபிராமி என்று எனக்கும் நிறைய கேள்விகள் இருக்கு!!!!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    2. ஹிஹிஹி... எல்லோருக்கும் இருக்கும்!

      நீக்கு
  21. முதலாவது படம்பார்க்கவில்லை பாடல் கேட்டு இருக்கிறேன்.

    இரண்டாவது படம் பார்த்திருக்கிறேன். பாடலும் கேட்டு இருக்கிறேன். முன் நாளில் எங்கள்வீட்டிலும் கசெட் இல் அப்பா ஒலிக்க விடும் பாடல்களில் இதுவும் ஒன்று.

    அபிராமி அனைவருக்கும் நல்லருள் தர வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அப்படியே உல்ட்டா.  முதலாவது படம் பார்த்திருக்கிறேன்.  ஆதிபராசக்தி பார்க்கவில்லை!

      நன்றி மாதேவி.

      நீக்கு
  22. இரண்டாவது பாட்டு "சொல்லடி அபிராமி" என்பதைப் பார்த்ததுமே பாடல் டக்கென்று வந்துவிடும் அளவு இசையும் மெட்டும் பதிந்த ஒன்று. அதுவும் ஸ்பீக்கர்ல போட்டுருவாங்க ஊர்ல அப்படியும் பதிந்த ஒன்று. பிடித்த பாடல்.

    படம் தெரியாது பாடல் மட்டுமே கேட்டதுண்டு நிறைய.

    இரு பாடல்களுமே ரொம்பப் பிடித்த பாடல்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  சில பாடல்களுக்கு அப்படி ஒரு வரலாறு இருக்கும்.  ஸ்பீக்கரில் போடுவதைச் சொல்கிறேன்.  எல் ஆர் ஈஸ்வரி பாடல்களுக்கு அந்தப் பெருமை உண்டு.

      நீக்கு
    2. ஓ..  கீதா ரெங்கன் கமெண்ட்!  இப்போதுதான் உங்கள் தளத்தில் வந்திருந்த கமெண்ட்டையும் பார்த்தேன்!

      நீக்கு
  23. இங்கு இடம்பெற வேண்டிய பின்னூட்டம் என் தளத்தில் இடம் பெற்று விட்டது .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!