கீதா ரெங்கன்
"தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்......"
"முதல்ல அத...ஆஃப் பண்ணு..." - கணவனின் குரல். அணைத்தாள்.
காலையிலேயே தொடங்கிவிட்டான்.
"இந்த வாரக் கடைசில வீடு மாத்த வண்டிக்குச் சொல்லியாச்சு. நினைவிருக்குல்லியா?
நீ சேத்து வைச்சுருக்கற உருப்படாத உன் குப்பை மட்டுமே பொட்டியும் பையுமா பரண்லயும்
ரூம்ல தரையிலுமா 10 இருக்கு. கடாச வேண்டியத கடாசு. இல்லைனா......."
“அதோடு சேர்த்து உன்னையும் கடாசிடுவேன்னு அந்த எச்சரிக்கையையும். சொல்லி முடிச்சுடுங்களேன்”
சொல்லிவிட்டு மென்மையாகச் சிரித்தாள்.
வழக்கத்திற்கு மாறாக வீடு கொஞ்சம் அமைதியாக இருந்ததன் காரணம் புரிந்தது. சமீபகாலங்களில்
இவளும் எதிர்த்துப் பதிலோ கேள்வியோ வீசுவதால் இதைச் சொல்வதற்கு யோசித்தான் போலும்.
வீசப்பட்ட வார்த்தைகளை எதிர்கொள்ளும் அனல் வார்த்தைகளை எதிர்பார்த்தாள். வெம்மை
பழகிப் போனதால் இப்போதெல்லாம் கண்ணீர் கூட சூடாக இருப்பதில்லை. தெறித்துவரும் வார்த்தைகள்
கூட அருகில் வரும் போது குளிர்ந்துவிடுகின்றன.
“திமிர். இதுக்கொண்ணும் குறைச்சலில்லை”
சூடு குறைவாகத்தான் இருந்தது. ஒவ்வொரு வீடு மாற்றலின் போதும் நடப்பதுதான்.
அப்படிச் சொன்னாலும் அவனால் அவளைக் கடாச முடியாது என்பதுதான் நிதர்சனம். அவனுடைய கோபத்தை,
வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள ஒரு கருந்துளை வேண்டுமே. 25 வருட சக்திவாய்ந்த கருந்துளை!
இனியும் தாமதித்தால், 'உன் குப்பைகள்' என்று சொல்லப்பட்ட அவளுடைய பொக்கிஷங்கள்
தெருவுக்குப் போய்விடும் என்பது உறுதி. 'அவற்றைக் காப்பாற்ற வேண்டும்.'
கர்ப்பிணிப்பெண் போன்று பை நிறைய பிதுங்கிக் கொண்டிருக்கும், வாழ்க்கையை ஓட்டத்
தேவையில்லாதவை என்று சொல்லப்படும் அவளுடைய பரிசுச்சான்றிதழ்கள், வாசிக்கும் புத்தகங்கள்,
அவள் எழுதிக்'கிழித்தவை', டயரிகள், சேகரித்து வைத்த சமையல் குறிப்புகள், சங்கீதம் கற்றுக்
கொண்ட அடையாளங்கள், அவளுடைய கைவேலைகள் இவைதான் குப்பைகள் என்று சொல்லப்பட்டவை. உண்மைதானோ?
பரணில்தானே கிடக்கின்றன!
இத்தனை வருடங்கள், அறிவையும், திறமைகளையும் பின் தள்ளி சமாளித்துக் குப்பை
கொட்டி.... எல்லாம் பரணில்.
“ஆஃபீஸ் போறதுக்கு முன்ன கொஞ்சம் பெட்டிகள இறக்கிக் கொடுத்தீங்கனா....".
"எனக்கு நேரமில்லை, லீவும் போட முடியாது. நம்ம வழக்கமான கடை ஆளு முத்துவ
கூப்பிட்டுக்கோ.. 1000 ரூ கேப்பான். குப்பை சேர்த்தாலே தரித்திரம்தான்...."
“அதுல உங்க பெட்டிகளும் இருக்கு. உங்க பேச்சுலர் காலத்து எலக்ட்ரிசிட்டி பில்லருந்து,
ஒவ்வொரு வீட்டு அக்ரீமென்ட் காப்பிஸ், ஃபோன் வந்ததுல இருந்து ஃபோன் பில், அந்த பில்
இந்த பில்னு நீங்க சேர்த்து வைச்சது. எல்லாம் தொட்டாலே பொடியும். அதெல்லாமும் தரித்திரம்
இல்லையா? கடாசலாம்தானே?”
வேகமாகச் சாப்பிட்டு எழுந்து கை கழுவியவன், கதவை படாரென்று சாத்திக் கொண்டு
சென்றான். அவனைச் சொல்லிவிட்டாளாம்.
வீட்டில் எந்தப் பொருட்கள் வைத்துக் கொள்ள வேண்டும், கூடாது, வீடு சுத்தமாக
இருந்தால் நேர்மறை சக்தி என்று சொல்லும் 'ஃபெங் சுய்' பற்றி அவளும் வாசித்திருக்கிறாள்தான்.
அவள் பாட்டி சொன்னதில்லையா? வீடு சுத்தமாக இருந்தால்தான் லக்ஷ்மி குடியிருப்பாள் என்று.
இத்தனை 'குப்பைகள்' இருந்தாலும் வீட்டைச் சுத்தமாகத்தானே பராமரித்து வருகிறாள்!
'லக்ஷ்மிக்கு இதுக்கு மேல என்ன வேண்டும்? அவள் வந்து குடியிருக்க இடமா இல்லை?
என்ன தரித்திரம்? மூன்று வேளை சாப்பாடு, உடுத்த துணிமணி, இருப்பதற்கு ஒரு கூரை. எளிமையாக
முடிந்த மகளின் திருமணம். மகன் படித்து முடித்து வேலைக்கான பயிற்சியில். கடன் என்று
எதுவும் இல்லை. என்ன? ஒரு சொந்த வீடு வாங்க முடியவில்லை. அவ்வளவுதான். இது தரித்திரமா?'
'அவர் வருவதற்குள் முடித்துவிட வேண்டும். ரெண்டு பெட்டியாவது குறைக்க முடியுமா?'
கடாசும் வேலை பயமுறுத்தியது. 'எதைக் கடாசுவது?' மூடிய கண்களுக்குள் அவளது
பொக்கிஷங்கள் அந்தரத்தில் ஸ்லோ மோஷனில் அவளைச் சுற்றி வந்தன.
ஒவ்வொரு வீடு மாறும் போதும் இரண்டு பெட்டிகள் குறைந்தால், 4 கூடியிருக்கும்.
எல்லாம் அவள் வாசிப்பதால், எழுதுவதால் சேரும் புத்தகப் பொக்கிஷங்கள்தான். தவறு, 'குப்பை'
அண்ணாச்சி கடையின் நம்பரைத் தேடி முத்துவை அழைத்தாள். அவனுக்கு அன்று வேலை
அதிகமில்லை போலும் அடுத்த 10 நிமிடத்தில் வந்து நின்றான். இறக்கி வைக்கத் தொடங்கினான்.
“யக்கா இந்தப் பொட்டிக்கு வெளிய ஓட்டைக்கா. உள்ளார எலி குட்டி போட்டிருக்கு
போல......”
“கடவுளே! மெதுவா, அதுங்களுக்கு ஒண்ணும் ஆகாம, பத்திரமா பெட்டிய இறக்கிக் கீழ
வை. அந்த மூலைல இருக்கற பெட்டியயையும் இறக்கிடுப்பா”
“யக்கா அது ஈரிச்சுப் போயி கிடக்கு. நீங்களும் ஒரு கை கொடுங்க, இல்லேனா பிஞ்சுரும்.”
‘மழை நாளில் இந்த ஓரம் ஈரித்திருக்கிறது. வீட்டு ஓனர் எதையும் கண்டு கொள்வதில்லை.
புதுவீட்டு ஓனர் எப்படியோ தெரியவில்லை’
“அவ்வளவுதான்கா பொட்டி, பை எல்லாம். மொத்தம் 15. 1500 ரூ கொடுக்கா”
“என்ன முத்து? ஒரு சாமான் இறக்க 100 ரூபாயா? 'பை' க்குமா 100? 1000 தான் ஐயா
சொன்னாரு.”
தலையை சொறிந்தான். “யக்கா 1300 ஆச்சும் கொடுக்கா. பிள்ளைங்க படிக்குதுல்லா."
அவளிடம் என்ன சொன்னால் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்தவன். பிள்ளைகளின் படிப்பு
என்றதும் அவள் மனம் நெகிழ்ந்தது. அவனிடம் கொடுத்தால் பணம் எங்கு போகும் என்றும் தெரியும்.
"200 இப்ப வைச்சுக்க, மீதிய உன் வீட்டம்மாகிட்ட கொடுக்கறேன். கடைல கொஞ்சம்
பெரிய கார்ட்போர்ட் பாக்ஸ் இருந்தா 4, 5 கொண்டு வந்து கொடுக்கறியா? இதுல சிலது ரொம்ப
மோசமா இருக்கு”
அவளுக்குக் கவலை அந்த எலிக் குடும்பம். 'உள்ளே எதையெல்லாம் குதறி வைச்சிருக்கோ?'
ஐந்து பெட்டிகளைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனான். நல்ல தடியான பெரிய
அட்டைப் பெட்டிகள்.
வீட்டு வேலைகளை முடித்ததும் பெட்டிகளைப் பார்த்தவளுக்கு மயக்கமே வந்தது.
'இந்த முறையாவது கண்டிப்பா குறைக்கணும்.'
முத்து கொடுத்திருந்த 5 பெட்டிகளை வலப்பக்கம் வைத்துவிட்டு, இடப்பக்கம் ஒரு
பெரிய கித்தான் பையை முதலில் வைத்துக் கொண்டாள். காலியாகும் நைந்து போன பெட்டிகளையும்
குப்பைக்கு இடப்புறம் தள்ளிக் கொள்ளலாம்.
பெட்டிகளில் எதை முதலில் திறப்பது என்று யோசித்தவள் முதலில் எலிக்குஞ்சுகள்
இருந்த பெட்டியைத் திறந்ததும் பொடிப் பொடியாகக் குதறப்பட்டிருந்த காகிதத்துகள்கள் பறந்தன.
‘முருகா! என்ன பேப்பர்கள்? அவருடைய பேப்பர்களாக இருந்தால் அவ்வளவுதான்.' அவளுக்கு டென்ஷன்
எகிறியது. முருகனை அழைத்தாள்!
தூசி உரிமையோடு சுவாசக்காற்றில் கலந்து மூக்கைத் துளைத்தது. தும்மல் தொடங்கியது.
ஸ்கார்ஃப் ஒன்றை எடுத்து மூக்கில் கட்டிக் கொண்டாள். 'நல்ல காலம் அவரது முக்கியமான
பேப்பர்கள் இல்லை. தேவையற்ற பழைய பில்கள், இத்யாதிகள்தான்.'
தன் தலைமுறையைப் பத்திரமாகப் பெற்றெடுக்க எலிக்குத்தான் எவ்வளவு பொறுமை! காகிதங்களைப்
பொடிப்பொடியாகக் கத்தரித்துத் திரட்டி மெத்தை போன்றடுக்கி நடுவில் குஞ்சுகள்! என்ன
அழகு! சுண்டுவிரல் அளவு கூட இல்லை. எலிகளின் உச்சாவும், புழுக்கைகளின் நாத்தமும் மூக்கைத்
துளைத்தன.
ஒரு வேலை மிச்சம் அவள் கிழித்தால் குற்றம். இப்போது எலி குற்றவாளி! 'அவர்
என்ன சொல்ல முடியும்?' 'அம்மா எலி' வருவதற்குள், மீதமிருந்த காகிதங்களைப் பார்த்து
அகற்றிவிட்டு, மெதுவாகக் குட்டிகளுடன் பெட்டியைத் தனியாக ஓரமாக வைத்துவிட்டாள். 'நம்
கையால் அவற்றிற்குப் பரலோகம் வேண்டாம்'
'பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய்'...
அடுத்த பெட்டியைத் திறந்தால் பாச்சை உருண்டைக்கும், ஃப்ளவர் டஸ்ட்டுக்கும்
பெப்பே காட்டிக் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த கரப்பான்கள் தங்கள் குடும்பத்தையும்
துறந்து ஓடின! 'பாவம், எங்கு போகும்? ரொம்பக் கவலை'.
"எறும்பு, கொசு, பல்லி, கரப்பான் ஏன் மூட்டைப் பூச்சிக்குமே கூட ரொம்ப
விசனப்படுவாள் எங்க ராஜம்" என்று பாட்டியும் அத்தையும் சொன்னது நினைவில் வர புன்னகையை
அரும்பவிடாமல் ஸ்கார்ஃபையும் மீறி தொடர்தும்மல் தொடங்கியது. கண்களிலும் எரிச்சல். முகத்தைக்
கழுவிக் கொண்டு மீண்டும் மூக்கில் ஸ்கார்ஃபை கட்டிக் கொண்டு வந்தாள்.
அடுத்த பெட்டியிலிருந்த அந்தச் சின்னக் குடையையும் அதோடு இருந்த ஆல்பத்தையும்
பார்த்ததும் அவள் மனம் தன்னிச்சையாகப் பரவசத்துக்குச் சென்று மூக்கில் கட்டியிருந்த
ஸ்கார்ஃபிற்குள் புன்னகையாய் விரிந்தது. கண்கள் பனித்தன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் நடுவில் ஒருவர், தலையில் மாட்டிக்கொள்ளும்படியான
குடை அணிந்திருந்ததை டிவியில் பார்த்த பாட்டி, தெருவில் வெயிலில் அங்குமிங்கும் ஓடிக்
கொண்டிருந்த அவளின் மூன்று வயது மகனுக்கு,
"இந்தக் குடை இங்க கிடைக்கறதா பாத்து வாங்கிக் கொடு" என்று, அவளிடம்
100 ரூபாய் கொடுத்து வியக்க வைத்த அன்பான பாட்டி.
அதை வாங்கிக் கொடுத்ததும், அதைக் கொள்ளுப் பேரனுக்கு மாட்டி விட்டு, அழகுபார்த்து
மகிழ்ந்த பாட்டியும் பேரனுமாக இருந்த ஃபோட்டோ ஆல்பமும் அந்தக் குடையும்! கடாச முடியாத
பொக்கிஷம்! 'அதுவாக இத்துப் போகும் வரை இருக்கட்டும்.’ வலப்பக்கம் சென்றன.
ஒரு பெரிய பெட்டியில் குழந்தைகளின் ப்ராஜெக்ட் வொர்க்குகள், சில புத்தகங்கள்,
பேப்பர்கள்......கூடவே பெண்ணும் பிள்ளையும் விளையாடிய பொம்மைகள், அழகான சொப்புச்சாமான்கள்,
எல்லாம் இடப்பக்கமா, வலப்பக்கமா? கேட்க வேண்டும். பெண் தன்னை ஆசிரியையாகப் பாவித்தும்,
மகன் தன்னை ரயில்பைலட்டாகப் பாவித்தும் விளையாடிய நாட்கள் நிழலாடின.
அடுத்த பெட்டியில் முதலில் கண்ணில் பட்டது கல்யாண ஆல்பம். நடக்கக் கூடாத ஒன்று
நடந்தது போன்ற உணர்வு வந்தது அவளுக்கு.
மண்டப மேடையில் ஒரு ஓரத்தில், சித்திப்பாட்டி அவளுக்குத் தலை அலங்காரம் செய்த
ஃபோட்டோக்கள். பாட்டிகள், சித்திகள், சித்தப்பாக்கள், மாமாக்கள், அப்பா, அம்மா, உறவுகள்
எல்லோரும் இருந்த குடும்பப் ஃபோட்டோ. இங்கு உலகச்சுழலில் சிக்கித் தவித்தவர்கள் சிலர்
இப்போது மேலுலகில் விச்ராந்தியாக இருப்பார்களோ?
"சொர்க்கத்தில் நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல்
தாங்காது" என்று சுஜாதா எழுதியது நினைவுக்கு வந்ததும் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
அங்கும் எல்லோரும் பஜனைக்கு நடுவில் இக்கதைகளைப் பேசி அக்கப்போர் பஜனை செய்வார்களோ?
மீண்டும் சிரித்தாள். அப்பா வீட்டு அன்பான உறவினர்களின் நினைவில் மனம் அலைக்கழிந்தது.
'கற்பனையுயில் மிதந்தால் வேலை தடைபட்டுவிடும்.'
புரட்டிய போது சீர் வரிசை ஃபோட்டோ. சீர் வரிசையில் வெள்ளி மைச்சிமிழ் இல்லை என்று மாமியார் குறை சொன்னதும்,
அண்ணா உடனடியாக அடித்துப் பிடித்து கடைக்குச் சென்று வெள்ளி மைச்சிமிழ் வாங்கிவந்து
வைத்ததும், பட்டுப் புடவையில் ஜரிகை பார்டர் ரொம்பக் குறைவு என்றும், காதில் வைரத்தோடுதானா
என்று உற்றுப் பார்த்து புதிய உறவுகள் குறை சொன்னதெல்லாம்தான் நினைவுக்கு வந்தன. அதன்
பின் வாழ்க்கையின் எதிர்மறைகள் தொடர்ந்து சங்கிலியாக.......மனக் குப்பை. 'இதை எந்தப்
பெட்டியில் போடுவது?'
ரிசப்ஷன் போட்டோக்களில் பள்ளி பிரின்சிபல் சிஸ்டர் மேரி, கல்லூரி பிரின்சிபல்
சிஸ்டர் எஸ்தர் வந்திருந்த ஃபோட்டோ. வேறு எந்தக் கல்யாணத்திற்கும் போனதில்லை. அவளிடம்
தனிப்பாசம் வைத்திருந்தவர்கள். எதிர்காலத்தில் அப்படி இருப்பாள் இப்படி இருப்பாள் என்று
ஆரூடம் சொன்னவர்கள் அதை வழிமொழிந்த நட்புகளின் ஃபோட்டோக்கள்.
பலிக்காத ஆரூடம். விரக்தியாககச் சிரித்துக்கொண்டாள்.
அவள் மனதிற்கு நெருக்கமான அத்தையும், வீட்டாரும் மட்டும் ஆல்பத்தில் இல்லை.
கண்களின் நீர் எட்டிப் பார்த்தது. அம்மாவுக்கு அப்பா வீட்டினரைப் பிடிக்காது. அவளைப்
பொருத்தவரை சொத்துபத்தில்லாதவர்கள். அதிலும் அத்தையைக் கண்டாலே ஆகாது. எந்தக் குப்பையைக்
கிளறக் கூடாது என்று நினைத்தாளோ மனம் அதைக் கிளற யத்தனித்தது. மனக்குப்பை வேண்டாம்.
பெருமூச்சுடன் கட்டுப்படுத்தினாள். ஆல்பம் வலப்பக்கம் சென்றது.
எதிர்மறை உணர்வுக் குப்பைகள்தானே மூளையின் ஒவ்வொரு நியூரான்களிலும் படிந்து
விடுகின்றன!
ஆரம்பநாள் முதல் குப்பைகள் என்று பரணிலேயே முடங்கிக் கிடந்த அவள் வரைந்த ஓவியங்களிலும்,
எம்ப்ராய்டரியிலும் தவிர்க்கமுடியாமல் கொண்டுவந்த ஆங்கில 'வி' எழுத்துடன் கைவினைப்
பொருட்களும் அடங்கிய இரண்டு பெட்டிகள். அப்படியே சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
மனம் பாரமாகியது. சுமக்க முடியவில்லை.
எழுந்து சென்று தண்ணீர் குடித்து பாரத்தை எங்கு இறக்குவது என்று தெரியாமல்
தவித்து மனதிற்குள் அழுத்தினாள். அழுத்தட்டும். சாண் போனால் என்ன முழம் போனால் என்ன?
குப்பையோடு ஒதுக்கினாள்.
நேசித்து வாசித்த ஆத்மார்த்த எழுத்தாளர்களின் புத்தகங்கள். பலி கடாவை வெட்டும்முன்
பூசை செய்வது போல் நேசத்துடன் தடவிக் கொடுத்து இடப்பக்கம் ஒதுக்கினாள். இடப்பக்கம்
பார்த்தால் வலப்பக்கம் நகர்ந்துவிடும் அபாயம். பார்க்கவில்லை. தான் எழுதியவற்றை மகள்
கொடுத்த பழைய கணினியில் சேமித்துக் கொள்ளலாம். கொஞ்சம் ஆசுவாசம்! வலப்பக்கம் நகர்ந்தன.
அடுத்த பெட்டியில் அவளுடைய கல்விச் சான்றிதழ்கள். பரிசுச் சான்றிதழ்கள். என்ன
பயன்? பள்ளிக்கும் கல்லூரிக்கும் மனம் பறந்தது. 'கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பாமே!
ஆனால் இவளுடையவை முடங்கிக் கிடப்பதென்னவோ பரணில். இனியும் பரண்தான். மனச்சுமை இன்னும்
கூடியது.
எப்படியோ 6 பெட்டிகள் குறைந்தன. மணி 3 1/2 ஆகியிருந்தது. மனம் அழுத்தியதில்
அயற்சி. சூடாகக் காஃபி குடிக்க வேண்டும் போல் இருந்தது. எழுந்த போது காலில் இடறியது
அந்த டயரி.
என்றோ, தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்ள எழுதி வைத்திருந்த விவேகானந்தரின்
பொன்மொழிகளும் தத்துவங்களும். இருந்த இடமோ பரண்! வலப்பக்கமா இடப்பக்கமா என்று அவள்
சஞ்சலப்பட்டுக்கொண்டிருந்த போது, பிரிக்கப்பட்டு
மூடியிருந்த ஒரு போஸ்டல் கவர் துருத்திக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். ஆச்சரியம்! 'அப்பாவின் பெயருக்கு வந்திருந்த கடிதம் டயரிக்குள் எப்படி வந்தது? என்ன கடிதம்? அப்பா சாமான்களைப் பெட்டியில் கட்டிய போது கவனிக்கவில்லையோ? இத்தனை வருடங்கள் கண்ணில் படவே
இல்லையே.' அவளுக்கும் ஒரு கடிதம்
இருந்தது ஆச்சரியம்!
எழுத்துகளைப் பார்த்ததுமே அவளுக்குப் புரிந்தது. அத்தை மகன்
விக்னேஷின் கையெழுத்து. 'அவர்களைப் பற்றி ஏதேனும் தெரியவருமோ?' நிலைகொள்ளாமல்
தவிப்போடு பிரித்தாள்.
மத்திய அரசு வேலை கிடைத்துவிட்டது என்றும், தில்லிக்குப் போகும்
முன் அத்தை மாமாவுடன் அவள் வீட்டிற்கு வந்து அவளைத் தனக்கு மணம்முடிக்கப் பேசப்
போவதாகவும்.....
அதற்கு மேல் அவளால் வாசிக்க முடியவில்லை. நெஞ்சம் படபடத்தது.
அப்போதுதான் புரிந்தது, அவன் தன்னை எத்தனை பிரியப்பட்டிருக்கிறான் என்று.
அவளுக்குத் தெரியாமல் போய்விட்டதே. கடிதம் பற்றி அப்பா கூட இவளிடம் சொல்லவே
இல்லையே.
"நீ எவன் கூடவாவது ஓடித்தான் போகப் போற, உன் உடம்புல 'அவ'
சாக்கடை ரத்தம்தானே ஓடறது!"
என்று அம்மா அடிக்கடி, தனக்குப் பிடித்தவரை மணந்த அத்தையைக்
குத்திக்காட்டி, அவளோடு தன்னையும் இணைத்து வீசும் கொடூரமான வசவுகளுக்கும்
ப்ளாக்மெயிலிற்கும் இடையில், தான் விக்னேஷை விரும்பியதைச் சொல்ல முடியாமல்.....
இதுதான் காலத்தின் சூழ்ச்சியோ? கைகள் தன்னிச்சையாக இடப்பக்கம் சென்று 'வி'
எழுத்திட்ட எம்ப்ராய்டரியை நெஞ்சோடு
அணைத்துக் கொண்டன..
அன்றைய அம்மாவின் ஹிஸ்ட்டீரிக்கல் கத்தலும், ஆர்பாட்டமும்.....
அவளால் அதற்கு மேல் அழுகையைக் கட்டுப்படுத்த இயலவில்லை.
பணத்திற்கும் பகட்டிற்கும் மயங்கிய அம்மா தன் சொந்தத்தின் மகனுக்கு
இவளை அவசர அவசரமாகக் கட்டிவைத்து, ஒருசில வருடங்களில் எல்லாம் நொடிந்து, வாழ்க்கை
திசை மாறி இவள் குப்பை கொட்டி....
கடிதத்துடன் அப்பாவின் குறிப்பும் இருந்தது. தான் தைரியமில்லாமல்
அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து இவளிடம் சொல்லாமல் அம்மாவின் முடிவிற்கு
இசைந்ததற்கு மன்னிப்பு கேட்டிருந்த குறிப்பு. காலம் திரும்புமா?
அப்பா மனமொடிந்து இறந்ததும், அம்மா தன் கடைசிகாலத்தில் இவள் கையைப்
பிடித்துக் கொண்டு அழுததும்....மூளை நியூரான்களில் படிந்துகிடந்த குப்பைகள்
உடலுக்குள் வேதியியல் சமிக்ஞைகளைக் கடத்தின.
ஆல்பத்தைப் பார்த்த போது எதை நினைக்கக் கூடாது என்று அடக்கினாளோ,
அந்த மனக்குப்பையை கடிதம் கிளறியிருந்தது. உடம்பு நடுங்கியது. சுவரோடு சரிந்து
குலுங்கிக் குலுங்கி அழுதாள். குற்ற உணர்வு மனதை அழுத்தியது. அத்தையிடமும், அத்தை
மகனிடமும், அன்று அம்மா வீசிய கடுஞ்சொற்களுக்கு மன்னிப்பு கேட்கத் துடித்தாள்.
தொடர்பே விட்டுப் போன அத்தை வீட்டாரை எப்படிக் கண்டுபிடிப்பது? எங்கிருப்பார்கள்?
மனம் பரபரத்தது.
கடிதத்தைச் சுக்கு நூறாகக்கிழித்து இடப்பக்கத்தில் ஒதுக்கப்பட்டிருந்த குப்பைகளோடு
புதைத்தாள்.
வீட்டுக் குப்பைகள் குறைந்தன. மனக் குப்பைகள் ஏறின!
தத்துவமுத்துக்களைத் தாங்கிய டயரி இவளைப் பார்த்துச் சிரித்தது.
மனம் கெக்கலித்தது. '6 பெட்டி குப்பைகளை வெளிய தள்ளிட்ட. உன் மனதிற்குள் புதைந்து
கிடக்கும் குப்பையை எப்படி வெளியேற்றப் போற?'
'எப்படிச் செய்யப் போகிறேன்?' "மனதை அடக்க வழியொன்றும் அறிந்திலேன் நான்" கண்ணை மூடிக் கொண்டாள். "தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்...எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்....." கண்ணீருடன் ஸ்கந்தகுரு கவசம் மனதில் ஒலிக்கத் தொடங்கியது.





அன்பான நாரோயில் நாச்சியாரே, காலை வணக்கம்!
பதிலளிநீக்குஅடிப்பொலி! பின்னிட்டீங்க! தூள் கிளப்பிட்டீங்க! எண்ணங்களே மனம்; மனம்கறதே குப்பைதானே, குப்பையிலே என்ன நல்லதும் கெட்டதும்? தூக்கி கடாசிருவோம்!
Very engaging style and flow; Bravo!!
மதிய வணக்கத்தோடு வந்துவிட்டேன், இன்று மார்கழி தொடக்கம்ன்றதுனால இந்த நாரோயில்காரிய நாச்சியார்னு சொல்லிடீங்களே!!!!!!! திவமா அண்ணா! அந்த நாச்சியார் எங்கே நான் எங்கே!
நீக்குஉங்கள் கருத்து ரொம்ப ஊக்கம் கொடுக்கிறது. மிக்க மிக்க நன்றி, திவாமா அண்ணா!
அதானே மனம் ஒரு குப்பை.
//குப்பையிலே என்ன நல்லதும் கெட்டதும்?//
அதானே....தினமும் ஸ்கந்த குரு கவசம் கேட்டு கேட்டு ...கேட்டாலும்...
//தூக்கிக் கடாதிருவோம்//
ஹாஹாஹாஹா அது முடிந்தால்
இரண்டும் மறந்து அந்தச் சமநிலை அடைவதெல்லாம் எப்பேர்ப்பட்ட காரியம்.
//Very engaging style and flow; Bravo!!//
ஊக்கம் தரும் பாராடுகளுக்கு மிக்க மிக்க நன்றி, திவாமா அண்ணா.
கீதா
//முதல் பரிசு பெற்ற 10 பேர்களில் நானும் அடக்கம் // மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி!
நீக்குகீதா
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம்; வாங்க!
நீக்குவாங்க கமலாக்கா...நான் இப்பதான் வரேன்!
நீக்குகீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குசகோதரர் செல்லப்பா சார் அவர்கள்அவர் அன்னையின் நினைவாக நடத்திய இவ்வருட போட்டியில் முதல்பரிசு பெற்ற உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி. மென்மேலும் நீங்கள் இது போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி கமலாக்கா வாழ்த்துகளுக்கு.
நீக்குகீதா
சகோதரி கீதா ரங்கன் இந்த சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது இப்பொழுது தான் எனக்குத் தெரியும். வாழ்த்துக்கள், சகோ.
பதிலளிநீக்குஜீவி அண்ணா, குழுவில் செல்லப்பா சார் பகிர்ந்திருந்தாரே முழு பட்டியலும்.
நீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜீ வி அண்ணா.
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதிக்கா. இப்போதுதான் எனக்குவர முடிந்தது.
நீக்குகீதா
கீதா கதை மிக அருமை.
பதிலளிநீக்குநன்றாக இருக்கிறது.
நம் சேமிப்பு சிலருக்கு குப்பைதான்.
குப்பை சேமிப்பும் சிலருக்கு உதவும்.
நான் பழைய பதிவு ஒன்றில் கல்கி, கலைமகள் அட்டைப்படங்களை ஒரு பதிவு போட்டேன், ஒருவர் அதில் வந்த பரிசு பெற்ற சிறு கதைகளை டாக்டர் பட்டத்திற்கு ஆய்வுக்கு எடுத்து இருந்தாராம் அதை அனுப்பி தர முடியுமா என்று கேட்டார். ஒருவருக்கு உதவியது.
ஸ்ரீராம் பழைய புத்தக சேமிப்பு பதிவுக்கு உதவுகிறது.
மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குஎன்னிடம் இன்னும் பொக்கிஷங்கள் இருக்கின்றன. மகனின் பொக்கிஷங்களும்!!!
//குப்பை சேமிப்பும் சிலருக்கு உதவும்.
நான் பழைய பதிவு ஒன்றில் கல்கி, கலைமகள் அட்டைப்படங்களை ஒரு பதிவு போட்டேன், ஒருவர் அதில் வந்த பரிசு பெற்ற சிறு கதைகளை டாக்டர் பட்டத்திற்கு ஆய்வுக்கு எடுத்து இருந்தாராம் அதை அனுப்பி தர முடியுமா என்று கேட்டார். ஒருவருக்கு உதவியது.//
உண்மைதான். சிலதை தூர எறிந்துவிட்டு பின்னர் உபயோகப்பட்டிருக்குமே என்று நினைப்பதுண்டு. ஆனால் நம் வீட்டிலும் இடம் வேண்டுமே.
//ஸ்ரீராம் பழைய புத்தக சேமிப்பு பதிவுக்கு உதவுகிறது.//
ஆமாம் கோமதிக்கா. நானும் சிலது வைத்திருப்பதால் உதவுகிறது. முன்னர் பகிர்ந்திருக்கிறேன். இப்பதான் குறித்து வைத்தும் பதிவுகளே தாமதமாவதால் பகிர முடியாமல் இருக்கின்றன
நன்றி கோமதிக்கா
கீதா
பதிலளிநீக்குகதை கதையாகத் தோன்றவில்லை. நடந்த ஒன்றாகத் தோன்றுகிறது, கதையின் நடை சூடாமணியை நினைவு படுத்தியது. நடையில் தொய்வில்லை.
ஒருவரின் பொக்கிஷம் மற்றவர்க்கு குப்பையாகத் தோன்றலாம். அதே போல் குப்பை பொக்கிஷம் ஆகலாம். குப்பையை பொக்கிஷம் ஆக பார்ப்பதில் சிறந்தவர் ஸ்ரீராம்.
வாடகை வீடு மாறுபவர்களாவது சில வருடங்களுக்கு ஒருமுறை வேண்டாதவற்றை ஒழிப்பார்கள். சொந்த வீடு என்று வந்து விட்டால் குப்பை சேருமே ஒழிய தூக்கிப்போட மனசு வராது.
கதை முதல் பரிசு பெற்றதிற்கு வாழ்த்துக்கள்.
Jayakumar
கதை கதையாகத் தோன்றவில்லை. நடந்த ஒன்றாகத் தோன்றுகிறது,//
நீக்குஅப்ப கதைக்கு வெற்றி, ஜெ கே அண்ணா.
நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கோர்த்தால் கதை கிடைத்துவிடும். அதன் பின் அதை எழுதுவதிலும் இருக்கிறது. அந்தக் கோர்வை சரியாக அமைந்துவிட்டால்.
ஏன் இங்கு கருத்துகளில் ஒவ்வொருவர் சொல்லும் அனுபவங்களைத் திரட்டி, சரியான வார்த்தைகளில் கோர்த்தால் அதாவது அவங்க அனுபவங்கள் போல வெளியில் தெரியாமல் கோர்த்துவிட்டால் கதை கிடைத்துவிடும்.
தலைவர் சுஜாதா சொன்னதுதான், சுற்றிலும் நடபப்தைக் கூர்ந்து கவனித்தால் கதை கிடைக்கும் என்று....டயலாக் உட்பட.
குப்பையை பொக்கிஷம் ஆக பார்ப்பதில் சிறந்தவர் ஸ்ரீராம்.//
டிட்டோ! நானும் அங்கனமே!
என் வீட்டிலும் இப்படியான பொக்கிஷங்கள் உண்டு.
//வாடகை வீடு மாறுபவர்களாவது சில வருடங்களுக்கு ஒருமுறை வேண்டாதவற்றை ஒழிப்பார்கள். //
அதுவும் பல சமயங்களில் சாத்தியப்படுவதில்லை.
//சொந்த வீடு என்று வந்து விட்டால் குப்பை சேருமே ஒழிய தூக்கிப்போட மனசு வராது.//
டிட்டோ!
//கதையின் நடை சூடாமணியை நினைவு படுத்தியது. நடையில் தொய்வில்லை.கதை முதல் பரிசு பெற்றதிற்கு வாழ்த்துக்கள்.//
ஆஆஆ! சூடாமணி அவர்களா!!
மிக்க நன்றி ஜெ கே அண்ணா. வசிஷ்டர் வாய் பாராட்டு!!
கீதா
முதல் பரிசி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கீதா.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள் கதைகளை.
நிறைய எழுதி எழுதி வைத்து இருப்பதாய் சொன்னீர்கள் எழுதுங்கள்.
எழுத்து நடை நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி கோமதிக்கா.
நீக்குதொடர்ந்து எழுத நினைக்கிறேன் தான்.
//நிறைய எழுதி எழுதி வைத்து இருப்பதாய் சொன்னீர்கள் எழுதுங்கள்.//
ஆமாம் அதை ஏன் கேக்கறீங்க!! திருப்பதி அம்பட்டன் என்று ஒரு கதை சொல்வாங்களே அது போல எல்லாம் பிச்சுப் பிச்சுப் பாதியில் ஒரு சில, ஒரு சில பிள்ளையார்ச் சுழியுடன் இரு வரிகளுடன் குறிப்புகளுடன் என்று இருக்கின்றன. சமீப காலங்களில் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. முயற்சி செய்கிறேன் அக்கா. ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
//எழுத்து நடை நன்றாக இருக்கிறது//
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குதாங்கள் எழுதிய கதை அருமையாக உள்ளது.
/வீசப்பட்ட வார்த்தைகளை எதிர்கொள்ளும் அனல் வார்த்தைகளை எதிர்பார்த்தாள். வெம்மை பழகிப் போனதால் இப்போதெல்லாம் கண்ணீர் கூட சூடாக இருப்பதில்லை. தெறித்துவரும் வார்த்தைகள் கூட அருகில் வரும் போது குளிர்ந்துவிடுகின்றன.
“திமிர். இதுக்கொண்ணும் குறைச்சலில்லை”
சூடு குறைவாகத்தான் இருந்தது. ஒவ்வொரு வீடு மாற்றலின் போதும் நடப்பதுதான்./
கதையில் மனம் விரும்பிய வாழ்க்கை அமையாமல் போனதையும், அதனால்வேறு இடத்தில் திருமணம் முடிந்த பின் மனம் ஒத்து வாழ முடியாமல் வாழ்ந்தாலும், மன எண்ணங்களின் விளைவாக மனக்குப்பைகள் சேர்ந்து விடுவதையும் நன்றாக உணர்த்தியிருக்கிறீர்கள். க்ப்பை என்ற தலைப்பு மிகப் பிரமாதமாக அமைந்து விட்டது.
/தத்துவமுத்துக்களைத் தாங்கிய டயரி இவளைப் பார்த்துச் சிரித்தது.
மனம் கெக்கலித்தது. '6 பெட்டி குப்பைகளை வெளிய தள்ளிட்ட. உன் மனதிற்குள் புதைந்து கிடக்கும் குப்பையை எப்படி வெளியேற்றப் போற?'
'எப்படிச் செய்யப் போகிறேன்?' "மனதை அடக்க வழியொன்றும் அறிந்திலேன் நான்" கண்ணை மூடிக் கொண்டாள். "தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்...எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்....." கண்ணீருடன் ஸ்கந்தகுரு கவசம் மனதில் ஒலிக்கத் தொடங்கியது. /
அருமையான எழுத்து நடை. பாராட்டுக்கள் சகோதரி. கதையை மிகவும் ரசித்துப்படித்தேன். கந்தகுரு கவசமும், கதையும் போட்டி போட்டுக் கொண்டு கண் முன்னே ஓடுகின்றன. பரிசு பெற்றதற்கு மீண்டும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மன எண்ணங்களின் விளைவாக மனக்குப்பைகள் சேர்ந்து விடுவதையும் நன்றாக உணர்த்தியிருக்கிறீர்கள். க்ப்பை என்ற தலைப்பு மிகப் பிரமாதமாக அமைந்து விட்டது.//
நீக்குஅதுதான் என் மனதில். தினமும் ஸ்கந்த குரு கவசம் கேட்பதுண்டு. அதைக் கேட்கும் போதெல்லாம் மனிதர்கள் நம் மனதில் இருக்கும் விதம் விதமான குப்பைகள் நினைவுக்கு வரும்.
//அருமையான எழுத்து நடை. பாராட்டுக்கள் சகோதரி//
மிக்க நன்றி கமலாக்கா.
//கதையை மிகவும் ரசித்துப்படித்தேன். கந்தகுரு கவசமும், கதையும் போட்டி போட்டுக் கொண்டு கண் முன்னே ஓடுகின்றன. //
மிக்க நன்றி கமலாக்கா. வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்.
கீதா
கடைசி பாரா படித்ததும் மனம் நெகிழ்ந்து விட்டது.சில கடிதங்கள் மனதை கனக்க வைத்து விடும் உண்மைதான்.
பதிலளிநீக்குநினைவுகளை அழிக்க முடியாது. அதை குப்பை என்று ஒதுக்கவும் முடியாது
கோமதிக்கா நானும் சிலதை தூக்கிப் போட்டுவிட்டுப் பின்னர் வருந்தியதுண்டு. நினைவுகள்தானே நம்மை வாட்டி வதைக்கின்றன. ஆன்மீகவாதிகள் நல்லதையும் அல்லவா வைத்துக் கொள்ளக் கூடாதுன்றாங்க! ஆனால் நம்மால் முடியாத ஒன்றாச்சே!
நீக்குமிக்க நன்றி கோமதிக்கா
கீதா
படங்கள் அருமை. மன உணர்வுகளை அழகாய் காட்டுகிறது.
பதிலளிநீக்குநன்றி கோமதிக்கா
நீக்குகீதா
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க துரை அண்ணா.
நீக்குகீதா
நிறைய கடிதங்களை கிழித்து போட்டு விட்டு வருந்தி இருக்கிறேன் . எவ்வளவோ சேமிப்பு இருக்க கடிதங்களை கிழித்து போட்டு விட்டோமே என்று பல நாள் வருத்தப்பட்டு இருக்கிறேன்.
பதிலளிநீக்குபுரிந்து கொள்ள முடிகிறது கோமதிக்கா...அதேதான், நானும். ஆனால் சில கடிதங்கள் தொட்டாலே பொடியும்படி ஆகிவிட்டன. எனவே அப்படியானது. ஆனால் மனதில் இருக்கு அசை போட!
நீக்குநன்றி கோமதிக்கா
கீதா
முதல் பகுதி பிறந்த வீட்டுச் 'சீர்'பாத்திரங்கள் என்பது
பதிலளிநீக்குவரை சிரமத்துடன் படித்தேன்..
அதற்குப்பின் நெருக்கமான எழுத்துக்கள்... உண்மையில் இயல வில்லை...
மன்னிக்கவும்...
துரை அண்ணா, நீங்க முன்னர் சொன்னதால் வேர்டில் நான் 1.5 ஸ்பேஸ் கொடுத்து மாற்றி அதை ப்ளாகரில் போட்டு ஹெச்டிஎம்எல் அனுப்பினேன் ஸ்ரீராமிற்கு. அவரும் சொன்னார் வழக்கம் போல இல்லை இந்த முறை இன்னும் ஸ்பேஸ் கொடுத்திருக்கீங்க என்று.
நீக்குநானும் மொபைலில் பார்த்தேன். எல்லாம் ஒரே போன்று இருப்பது போல்தான் தோன்றியது, துரை அண்ணா.
பரவால்லை அண்ணா உங்கள் கண் முக்கியம். பார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி துரை அண்ணா.
கீதா
சிறுகதை அருமை. அழகிய கோலத்தை சுற்றி செம்மண் இட்டதைப்போல கதையின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஸ்கந்த குரு கவச வரிகள் கதையோடு இயைந்து இருப்பது உங்கள் திறமையின் சான்று.
பதிலளிநீக்குமிக்க நன்றி இணைய திண்ணை சகோ.
நீக்கு//ஸ்கந்த குரு கவச வரிகள் கதையோடு இயைந்து இருப்பது உங்கள் திறமையின் சான்று.//
பாராட்டிற்கு மீண்டும் நன்றி இணைய திண்ணை சகோ!
கீதா
கதையின் பெயர் குப்பை. ஆனால் கதை கோமேதகம்.
பதிலளிநீக்குsooper comment!
நீக்குஅட! கௌ அண்ணா வாங்க! ஆஹா! மிக்க நன்றி கௌ அண்ணா.
நீக்குகீதா
மிகவும் துல்லியமாக ஒரு பெண்ணின் மனவோட்டத்தை, அவள் விரக்தி மற்றும் வேதனையை இயல்பாக எழுதிவிட்டது மிகத் தேர்ந்த எழுத்தாற்றல். அவள் எண்ணங்களை வாசிக்க வாசிக்க நம் மனம் சோகத்தில் ஆழ்வதை தவிர்க்க முடியாது. - உமா சஷிகாந்த்.
பதிலளிநீக்குவாங்க உமா சஷிகாந் அக்கா, பானுக்காவின் தோழி, சரியா?
நீக்குஊக்கம் தரும் கருத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க மிக்க நன்றி.
கீதா
//காகிதங்களைப் பொடிப்பொடியாகக் கத்தரித்துத் திரட்டி மெத்தை போன்றடுக்கி நடுவில் குஞ்சுகள்! என்ன அழகு! //
பதிலளிநீக்குஆமாம், காகிதங்களை அவை கத்தரித்து குவித்து வைத்து இருப்பது ஒரு அழகு. அதைவிட ரோஸ் கலரில் இருக்கும் எலி குஞ்சு அழகாய் இருக்கும்.
கள்ளி பெட்டியை கூட எலி அரித்துவிடும்.
எங்கள் அப்பாவிற்கு மாற்றல் ஆகி வீடு மாறும் போது எல்லாம் என் அம்மா வேண்டாதவைகளை கழிப்பார்கள், ஆனால் எல்லாம் வேண்டியாதாக் இருக்கும் வெளியில் வைத்தது எல்லாம் மீண்டும் வண்டியில் ஏறி விடும்.
ஆமாம் கோமதிக்கா. ரொம்ப அழகா செஞ்சிருக்கும். ஆமா கள்ளிப் பெட்டியைக் கூட விடாது. நானும் வைத்திருந்தேன் கள்ளிபெட்டி அதில் கொலு பொம்மைகள் வைத்திருந்தேன் அதற்குள் எலிக் குஞ்சுகள் சுண்டுவிரல் அளவுதான் இருக்கும் ரோஸ் கலரில் அத்தனை அழகா இருக்கும்.
நீக்குநானும் வேண்டாம் என்பதை மீண்டும் சேர்த்திருக்கிறேன். இப்போதுதான் கொஞ்சம் தூரப் போடப் பழகியிருக்கிறேன்!!
நன்றி கோமதிக்கா
கீதா
பரிசு பெற்ற சகோதரி. கீதா ரங்கன் அவர்களுக்கு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
கே. சக்ரபாணி
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சக்ரபாணி சகோ
நீக்குகீதா
பல பெண்களின் மனோநிலை! இங்கே ஒரு நிகழ்வைக் கதையாக வடித்திருக்கும் உங்கள் திறமை பாராட்டுக்குரியது. உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொண்டு எழுதி இருக்கும் உங்கள் திறமை! ஒரு பெண்ணாகப் பெண்ணின் மன உணர்வுகளைச் சரியான கோணத்தில் காட்டி இருப்பது நன்று. கதைக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. மேன்மேலும் தொடர்ந்து பரிசுகள் பெறவும் வாழ்த்துகள். படிக்கையில் அநேகமாக எல்லோருக்குமே ஃப்ளாஷ் பேக் ஓடும்.
பதிலளிநீக்குபல பெண்களின் மனோநிலை! இங்கே ஒரு நிகழ்வைக் கதையாக வடித்திருக்கும் உங்கள் திறமை பாராட்டுக்குரியது. உணர்வுகளைச் சரியாகப் புரிந்து கொண்டு எழுதி இருக்கும் உங்கள் திறமை!//
நீக்குமிக்க நன்றி கீதாக்கா.
ஒரு பெண்ணாகப் பெண்ணின் மன உணர்வுகளைச் சரியான கோணத்தில் காட்டி இருப்பது நன்று.//
நன்றி கீதாக்கா.
கதைக்கு முதல் பரிசு கிடைத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. //
ஓ! மிக்க நன்றி, கீதாக்கா.
எனக்கு நிறைய தயக்கங்கள் இருந்தன.....இருக்கின்றன இப்ப ஓரளவு அவை நீங்கியிருந்தாலும், சில சமயம் தலை தூக்கும்! அதுவும் பொதுவெளியி என்று வரும் போது! ஹாஹாஹா...
//மேன்மேலும் தொடர்ந்து பரிசுகள் பெறவும் வாழ்த்துகள். படிக்கையில் அநேகமாக எல்லோருக்குமே ஃப்ளாஷ் பேக் ஓடும்.//
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
பிறந்த வீட்டுச் சீர்ப் பாத்திரங்கள்! நிறையப் பாத்திரங்களை இப்போ நானும் தூக்கிக் கொடுத்தேன். இப்போ நவம்பரில் ஸ்ரீரங்கம் போனப்போ விசேஷங்களுக்கு அந்தப் பாத்திரம் இல்லாமல் ரொம்ப சிரமப்பட்டேன். அப்போக் கொஞ்சத்தையானும் வைச்சுட்டிருக்கலாம் என்னும் எண்ணம் தோன்றியது. கோமதி அரசு சொல்வது போல் நானும் மனம் வருந்தினேன். இனி என்ன செய்ய முடியும்?
பதிலளிநீக்குபிறந்த வீட்டுச் சீர்ப்பார்த்திரங்கள் நிஜமாகவே ரொம்பவே அதுவும் பெரிய குடும்பம் என்று பெரிசு பெரிசாக வேற கொடுத்திருப்பாங்க அப்போ எல்லாம். தூக்கிப் போட்டுவிட்டு அப்புறம் ஏதாவது நிகழ்வு வரும் போது வேதனைப்படுவோம்.
நீக்குஎனக்கும் கோமதிக்கா நீங்க சொல்லியிருப்பது போல் அனுபவங்கள் உண்டு கீதாக்கா
நன்றி கீதாக்கா
கீதா
ஸ்கந்த குரு கவ்சம் படிக்கையில் நம்மையும் அறியாமல் கண்ணீர் பெருகும்.
பதிலளிநீக்குநான் கேட்டுக் கொண்டேதான் மூச்சுப்பயிற்சியும், யோகாவும் செய்வது ஆழ்ந்துவிடுவேன் கீதாக்கா. எனக்கு ரொம்பப் பிடிக்கும்...குறிப்பாக மூச்சுப்பயிற்சி செய்யும் போது!
நீக்குநன்றி கீதாக்கா
கீதா
மீண்டும் வாசிக்க முயற்சி செய்தேன்...
பதிலளிநீக்குஇயலவில்லை... நெருக்கமான எழுத்து உருவாக்கம்
சற்றே சிரமம் ஆகின்றது...
மீண்டும் முயற்சி செய்ததற்கு நன்றி துரை அண்ணா. துரை அண்ணா எனக்கு என்ன சொல்ல என்று தெய்யலை? எப்படிச் சரி செய்வது என்று தெரியவில்லையே.
நீக்குகீதா
பெருங்குப்பையினூடே ஒரு நெடியாய்க் கிளம்பிய, முட்டியும், முளைவிட முடியாமல் முடிந்துபோன காதல். ஒருவழியாக அது கவனம் பெறுகையில், காலவெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டுபோய்விட்டிருக்கிறது.
பதிலளிநீக்குஎன்ன செய்ய? வாழ்க்கையெனும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்...
வாங்க ஏகாந்தன் அண்ணா.
நீக்குஆமாம் எல்லோருக்குமே வாழ்க்கை நிறைய பாடங்களை வழங்குகின்றது.
நன்றி ஏகாந்தன் அண்ணா.
கீதா
சகோதரியின் பதிலினை வாசித்தேன்...
பதிலளிநீக்குநன்றி... இடையில் ரத்தினச் சுருக்கமாக ஒரு கருத்து
திரு கௌதம் ஜி அவர்களிடம் இருந்து...
கதையின் பெயர் குப்பை. ஆனால்
கதை கோமேதகம்... என்று...
அதனையே வழிமொழிகின்றேன்..
ஞான சரஸ்வதி நலம் அருள்வாளாக..
மிக்க நன்றி துரை அண்ணா.
நீக்கு//ஞான சரஸ்வதி நலம் அருள்வாளாக..//
நன்றி துரை அண்ணா. நெகிழ்ச்சியடைய வைத்த வரி.
துரை அண்ணா கதையில் முக்கிய அம்சம் வேறு ஒன்றும் பெரிதாக இல்லை....
கதாபாத்திரத்தின் வழி , நாம் வீட்டுக் குப்பைகளைக் களைய நினைக்கிறோம், ஆனால் அது சில சமயம் மனதில் குப்பைகளையும் ஏற்றுகிறது. சில சமயம் களைய நினைக்கும் குப்பைகளைக் களைய முடியாமல் மீண்டும் சேர்க்கிறோம் வீட்டிலும் சரி மனதிலும் சரி அதைக் கதாபாத்திரம் வழி, அவள் ...அதை அவள் மனம் கடைசியில் கேட்கிறது....அதை ஸ்கந்த குரு கவச வரிகளைச் சேர்த்துச் சொல்லியிருக்கிறேன் துரை அண்ணா அம்புட்டுத்தான்!
மிக்க நன்றி துரை அண்ணா.
கீதா
குப்பை....
பதிலளிநீக்குவாழ்க்கையைக் குப்பை என்கின்றனர் யோகியர்...
கோமேதகம் என்கின்றனர் போகியர்...
இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்றும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
பரிசுக்கு முற்றிலும் தகுதியான கதை.
பதிலளிநீக்கு