24.12.25

தமிழக இனிப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

 

எங்கள் கேள்விகள் :

1) யார் எழுதியது? கண்டுபிடியுங்கள்!

சிங்கத்துக்கும்
தொண்டைக் கட்டு உண்டு
குயிலுக்கும்
இருமல் உண்டு
ஆனால்
ஒரு பைசாகூட அவை
அந்த விஷயத்துக்கு
செலவழிப்பதில்லை
ஆண்டவன் குரல்
அட மனிதா!
பொறாமைப்பட உனக்கு
வேறு விஷயம்
கிடைக்கவில்லையா?
உன் பெரீய
சமூகத்தைப் பார்த்துப்
பொறாமைப்பட்டு
முடித்துவிட்டாயா?

2) இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்:

- - - - - - - - - - -

கேள்வி பதில்கள்:

நெல்லைத்தமிழன் :

1. ஏதோ ஒரு நாட்டில் இருப்பவர்களை விலைக்கு வாங்கி, தங்களுடைய குடிமகனாக ஆக்கி, ஒலிப்பிக் மற்றும் பல தேசப் போட்டிகளில் வெற்றி பெற்று மெடல் வாங்குவதற்கும், அடுத்தவர் குழந்தையைத் தன்னுடைய குழந்தை என்று பெருமை கொள்வதற்கும் என்ன வித்தியாசங்கள் உள்ளன?  

# இதை இரண்டு வகையாகப் பார்க்கலாம்.  ஒன்று தனது நாட்டுக்கு மெடல் எண்ணிக்கை அதிகம் இருந்தால் போதும் என்று ஆசை காரணமாக வெளிநாட்டு வீரரை தமது நாட்டு குடிமகன் ஆக்கி அவரை போட்டிகளில் ஈடுபடுத்துவது. இரண்டாவது ஒரு திறமைசாலியை தனது நாட்டு குடிமை தந்து தனது நாட்டிலே இளம் வீரர்களை பயிற்றுவிக்க பயன்படுத்திக் கொள்வது. முதலாவது செய்தால் அது ஒரு தவறான அடிப்படையில் செய்ததா. ஆனால் இரண்டாவது அப்படி அல்ல. 

அடுத்தவர் குழந்தையின் மேல் நிஜமான அன்பு காட்டி அந்த குழந்தையின் முன்னேற்றத்தில் பங்குபெறும் அதிர்ஷ்டம் யாருக்காவது இருக்குமானால் அது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது தான். அதேபோல ஒரு அனாதை குழந்தையை தத்தெடுத்து அதை முன்னுக்கு கொண்டு வந்தால் அது தரும் மகிழ்ச்சியும் விசேஷமானதுதான்.

2. ஒரு திரைப்படம் இந்த ஃபார்மட்டில்தான் இருக்கவேண்டும், நீதியைப் போதிக்கணும் என்று எதிர்பார்க்கலாமா? ஓவியம் என்றால் கடவுளை மாத்திரம்தான் வரையணும், பாடல் என்றால் பக்திப்பாடல்கள்தான் என்ற ரேஞ்சுக்கு நம் எதிர்பார்ப்பை இட்டுச்செல்லாதா?  

# உண்மையை சொல்லப்போனால் ஒரு நல்ல திரைப்படம் நாம் எதிர்பாராத திருப்பங்களுடனும் சுவாரசியங்களுடனும் கூடியதாக இருந்தால் தான் அது உண்மையான சிறந்த திரைப்படம். ஒரு எதிர்பார்ப்புடன் சென்று பார்க்கும் திரைப்படங்கள் அந்த எதிர்பார்த்த மகிழ்ச்சியை இப்போது பெரும்பாலும் அளிப்பதில்லை. அந்தக் காலத்தில் பல ஆங்கிலப் படங்கள் , சில இந்தியப் படங்கள் எதிர்பார்ப்புக்கு மேலாகவே மகிழ்ச்சி தந்தது உண்டு.

3.  தமிழக இனிப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது?  உடனே மண்ணுக்குச் சம்பந்தமில்லாத குலாப்ஜாமூன் என்று சொல்லிவிடாதீர்கள்.  

# நீங்கள் சொல்வதை பார்த்தால் வெள்ளை சர்க்கரை பயன்படுத்தி செய்த எந்த இனிப்பும் தமிழ்நாட்டை இனிப்பு இல்லை என்று சொல்லி விடுவீர்கள் போல் இருக்கிறது. எனக்கு பனைவெல்லத்தில் செய்த பலாப்பழ அல்வா மிகவும் பிடித்த ஸ்வீட் என்று சொன்னால் சண்டைக்கு வருவீர்கள் . சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட அதிரசம், வெல்லச் சீடை, கடலை உருண்டை, எள்ளுருண்டை, பயத்தம் லாடு எல்லாமே எனக்குப் பிடித்த ஸ்வீட்கள்தான்.

4.  பாவம் பார்ப்பது, பரிதாபப்படுவது போன்ற குணங்கள் நமக்குக் கெடுதல் விளைவித்ததைக் கண்டிருக்கிறீர்களா?  

# கெடுதல் விளைவித்ததில்லை.‌  ஆனால் பல சமயங்களில் ஏமாற்றம், சலிப்பு , அதிருப்தி போன்ற உணர்ச்சிகளை அளித்திருக்கிறது.

5. பாம்பைக் கண்டால் மாத்திரம் பொதுவா நமக்கு பயம் வருவதேன். மற்ற விலங்குகளைக் கண்டால் பயம் இல்லை என்று அர்த்தம் இல்லை, ஆனால் நமக்கு அதிக பயத்தை பாம்பு ஏற்படுத்துவதால் இந்தக் கேள்வி. 

# துஷ்ட மிருகங்கள், பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இவற்றைக் கண்டால் அச்சப்படுவது நமக்கு மரபணுக்கள் மூலமாக செலுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

= = = = = = = = =

படமும் பதமும்: 

நெல்லைத்தமிழன் : 


சமீபத்தில் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் சென்றிருந்தோம். அத்தி வரதரை குளத்தில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள். நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை அவரை குளத்திலிருந்து எடுத்து சில நாட்கள் பொதுமக்கள் முன்னிலையில் பூஜைகளெல்லாம் செய்து பிறகு மீண்டும் இந்தக் குளத்திலேயே அமிழ்த்திவிடுவார்கள். அந்த அனந்தசரஸ் என்னும் புஷ்கரணியின் படம். 


இது பற்றி காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் ஒரு நிகழ்வை எழுதியிருந்தார். இந்தக் குளத்தில் ஒரு படப்பிடிப்பு நடந்தது, அத்திவரதர் இருக்கும் மண்டபத்தில் நடிகை ஒருவர் நடமாடினார். அங்கிருந்த வயதானவர் அவர்களை எச்சரித்தார், அத்திவரதர் கோபத்துக்கு ஆளாகிவிடுவீர்கள் என்று. நடித்த பெண்ணின் வாழ்க்கையும் தொலைந்தது, படமெடுத்தவருடைய வாழ்க்கையும் போயிற்று என்று எழுதியிருந்தார்.

- - - - -


காஞ்சி தேவப்பெருமாள் கோயிலில் இருக்கும் இந்த மண்டபத்தின் சிற்பங்கள் மிகவும் புகழ் பெற்றவை. கூரை, கல்லால் ஆனது. மரத்தால் செய்ததைப்போன்று மிக்க அழகாக இருக்கும். தொங்கிக்கொண்டிருக்கும் சங்கிலி இரும்பு போலத் தோற்றமளித்தாலும், கல்லால் செய்யப்பட்ட சங்கிலி அது. 

- - - - - -


மிகப்பெரிய ஏரி போன்று தோற்றம் தரும் இது, காவிரி நதி. கொள்ளேகால் பகுதியில் சத்யாகாலம் என்ற இடத்தில் இருக்கிறது.  துலா மாத ஸ்நானத்திற்காகச் சென்றிருந்தபோது எடுத்த படம். துலா மாதத்தில் காவிரி நதியில் குளிப்பது புண்ணியம் என்ற நம்பிக்கையின்பாற்பட்டது. 

அங்கு பரிசலும், அதை ஓட்டுபவரும் இருந்தார். இதில் ஏறிச் செல்ல ஆசை. ஆனால் நடுவில் ஏதேனும் ஆகிவிட்டால் எப்படிப் பிழைப்பது? இதனால்தான் நான் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. நாகர்கோயில் அருகே உள்ள திற்பரப்பு நீர்வீழ்ச்சியின் மேலே ஒரு பெரிய ஏரிபோன்ற அமைப்பு உள்ளது. அதில் காலால் பெடல் செய்து பயணம் செய்யும் சிறிய படகுகள் உள்ளன (இருவர் பயணிப்பது). நான் என் மகளுடன் பயணித்திருக்கிறேன், பயந்து, கொஞ்ச தூரம் சென்றதும் திரும்பியிருக்கிறேன். ஏதேனும் ஆனால் அதோகதிதான். அந்தப் படம் ஒரு முறை பகிர்கிறேன். 

= = = = = = = = = = =

KGG பக்கம்: 

படி! 

இரண்டே எழுத்துகள்தான் !

ஆனால் அந்த இரண்டு எழுத்துகளில் எவ்வளவு ஆழமான அதிகப்படியான விஷயங்கள்! 

சிறு வயதில் நமக்கு எல்லோரும் வழங்கும் அறிவுரை: " நல்லா படி"

அதாவது பாடங்களை நன்றாகப் படித்து, வாழ்க்கையில் முன்னேறு. 

மாடிக்குப் போக பல படிகள் ஏறி செல்லவேண்டும். 

இங்கே ஒவ்வொரு படியும்  ஒரு நிலை என்று கொள்ளலாம்! 

தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்று சொல்வார்கள். தொடர்ந்து இரண்டாவது தோல்வி வந்தால், அது வெற்றிக்கு இரண்டாவது படியா? 
அப்படி இல்லை! தோல்வி வந்தால் அந்தத் தோல்விக்கான காரணங்களை நன்றாகப் படி - அதாவது ஆழ்ந்து கவனி. அதிலிருந்து பாடம் படித்து, வெற்றிக்கு வழி தேடு. 

A failure teaches us 2 things. 
One : It tells us what will not work. 
Two : It gives us an opportunity to think of alternatives to achieve our goal. 

பல வருடங்களுக்கு முன்பு கச்சேரி கேட்க சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றோம். தி நகரில் இறங்கி ரங்கநாதன் தெரு முனையில் பழ ரசக்கடையில் பழரசம் குடிக்க நின்றோம். கடை வாசலில் படி இல்லை. கடை உள்ளே கருணாநிதி படம் இருந்தது. 
சத்தியமூர்த்தி பவன் இசைக் கச்சேரி நடக்கும் அரங்கத்தின் வாயிலில் பல படிகள் ஏறவேண்டி இருந்தது. அங்கே சுவரில் காமராஜர் படம் பெரிய அளவில் மாட்டியிருந்தார்கள். 'ஆஹா என்ன பொருத்தம் - படி, படி என்று சொன்ன காமராஜருக்கு படிக்குப் பக்கத்தில் படம், படியில்லாமல் (பழரசம்) குடிக்கும் கடையில் குடி குடி என்று சொன்ன கருணாநிதிக்குப் படம்' என்று நினைத்தேன். 

என்னுடைய அம்மா அந்தக் காலத்தில் வாசலில் பால் விற்க வருபவரிடம் ஒவ்வொரு நாளும் தேவைக்கு ஏற்ப பால் வாங்குவார்கள். அந்தக் காலத்தில் லிட்டர், மில்லி லிட்டர் எல்லாம் கிடையாது. பால்காரருக்கு மாதக் கடைசியில் அந்த மாதத்திற்கு  பால் வாங்கிய பணம் கொடுக்கவேண்டும் என்று வரும்போது, எங்களிடம் குறிப்பாக என்னுடைய மூன்றாவது அண்ணனிடம் (நானும் எனது நான்காவது அண்ணனும் கணக்கில் 0!) படி கணக்கு சொல்லுவார்கள். 

கால்குலேட்டர், abacus எல்லாம் இல்லாத காலம்! அம்மாவின் ஞாபக சக்தி அளவிலாதது. 

கணக்கு போடுடா - 
தினமும் வழக்கமாக காலையில் ஒரு படி பால், சாயந்தரம் அரைப் படி பால். ஓ கே. பிரச்சினை இல்லை. 
இரு இரு - இந்த மாதம் பதினெட்டாம் தேதி அதிகப்படி பால் காலையில் ஒண்ணேகால் படி, சாயந்திரம் முக்கால் படி பால். ஆனால் பால்காரர் மூன்றாம் தேதியும், நான்காம் தேதி காலையிலும் வரவில்லை. 
கொஞ்சம் கஷ்டம் - சரி கூட்டிக்கழித்து பிடிப்போம். 
போன மாசம் முப்பத்திரெண்டு தேதியில் பாலுக்கு நாம கொடுக்கவேண்டிய பழைய பாக்கி, இரண்டே கால் ரூபாய். 
இரு இரு - படிக்கணக்கில் ஏன் பணக் கணக்கை நுழைக்கிறாய்? அதுக்கு முன்னாடி அது என்ன போன மாசம் முப்பத்திரெண்டு தேதியா? 
ஆமாண்டா - போன மாசம் ஆனி மாசம் - இந்த மாசம் ஆடி மாசம். ஐயகோ - படி + பணம் & ஆங்கில / தமிழ் மாதக் குழப்பம். 
இது எல்லாவற்றையும் கூட்டிக் கழித்து படி கணக்குப் பார்த்து, பணக்கணக்கு சேர்த்து பால்காரருக்குப் பணம் கொடுத்து அனுப்புவோம் ! 

ஏதேனும் ஒரு விஷயத்தை தவறாக செய்துவிட்டால், என்னுடைய அம்மா, 'இப்படி செய்யாதே என்று நான் படிச்சுப் படிச்சு சொன்னேனே' என்பார். 

சிறிய அண்ணனுக்கு எப்பவுமே தலை முடி படியாது. படியப் படிய சீப்பு கொண்டு வாரிவிட்டாலும் சிலிர்த்து நிற்கும்!  

ஒரு படி பால் என்ன விலை? ஒரு படி தயிர் என்ன விலை? ஒரு படி மாவடு என்ன விலை .. என்றெல்லாம் அந்தக் காலத்தில் எல்லாம் படிக்கணக்குதான். ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்றார் ஒருவர். சாதாரண படியா அல்லது பக்கா படியா என்று கேட்டனர் மக்கள். பெரிய படி என்னும் பக்கா (பட்டணம்) படி என்றார் பட்டணம் பொடி போட்டுக்கொண்டபடி அவர்! 

சரி! கொஞ்சம் படிக் கணக்கு பார்ப்போம்! 

படி என்றால் எத்தனை கிலோ ???

அரசாங்கமும், பயணப்படி, பஞ்சப்படி, என்றுதான் பயன்படுத்துகின்றனர்.

அந்தக் காலத்தில், வேலைக்குக் கூலியாக, பண்டமாற்று முறையில் ஒரு படி அரிசி, இரண்டு படி நெல் என்ற அளவில்தான் கொடுத்தனர்.

கடற்கரையோரம் அல்லது உப்பு விற்க வீதிகளில் வருவோர் படிக்கணக்கில்தான் அளந்து கொடுப்பார்கள்.

அவர்கள் அளக்கும் பொழுது எப்பொழுதுமே குவித்து வைத்துதான் அளப்பர். படியில் அளக்கும் பொழுது எப்பொழுதுமே குவிய குவியத்தான் அளப்பார்கள்.

ஆனால் எவ்வளவு குவிக்க வேண்டும் என்பது அவரவரின் விருப்பம் சார்ந்தது. எனவே, இதற்குச் சமமான கிலோ அளவு தெரியவில்லை.

நீர்மப் பொருளைக் குவியக் குவிய அளக்க முடியாது. ஆனால் நெல், கடலை போன்றவற்றை அப்படி அளக்க முடியும்.

மேலும், அரிசி என்பதன் பருமனும், வேர்க்கடலையின் பருமனும் ஒன்றாக இருக்காது.

அரிசி அதிக இடத்தினை அடைத்துக் கொள்ளும். அரிசியின் அடர்த்தியும், பருப்பின் அடர்த்தியும், அரிசி மாவின் அடர்த்தியும், வேர்க்கடலையின் அடரத்தியும் வெவ்வேறானவை.

மேலும், மாவினை அளக்கும்பொழுது இடையில் காற்று இடைவெளி அதிகம் இருக்காது, ஆனால் வேர்க்கடலையினை அளக்கும் பொழுது அதிக காற்று இடைவெளி இருக்கும்.

ஆகையால் முறையான கி.கி மாற்று இல்லை என்றே எண்ணுகிறேன். ....

இதற்குப் பதிலாக, ஒரு படியில் எத்தனை மிளகு, எத்தனை அரிசி, எத்தனை துவரை விதை, எத்தனை அவரை விதை, எத்தனை பயறு, எள்ளு என்று எண்ணிக் கூறியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.

ஆனால், இன்றைய நிலையில் அனைத்தினையும் நாம் மரபணுமாற்ற விதைகள் மூலமாக விளைவிக்கிறோம்.

ஆகையால், அவர்களது எண்ணிக்கைக்கும் நாம் இன்று பயன்படுத்தும் தானியங்களின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருக்கும்.

முகத்தல் அளவீடுகள்

செவிடு =360 நெல் 
ஆழாக்கு =5 செவிடு 1/20 படி
உழக்கு/சொம்பு = 2 ஆழாக்கு 1/4 படி
உரி = 2 உழக்கு ½ படி
படி = 2 உரி 
மரக்கால் = 8 படி 
நாழி = 4 உழக்கு 1 படி
குறுணி = 2 படி 
பதக்கு = 4 படி 
கலம் = 12 மரக்கால் 96 படி
பறை = 5 மரக்கால் 40 படி
கரிசை = 80 பறை 3200 படி
பொதி (மூட்டை) = 3 பறை 120 படி
கோட்டை = 21 மரக்கால் 168 படி
1 படி அவரை 1800 அவரை
1 படி மிளகு 12800 மிளகு
1 படி நெல் 14400 நெல்
1 படி பயறு 14800 பயறு
1 படி அரிசி 38000 அரிசி
1 படி எள் 115000 எள்..

கூகிள் கூற்றுப்படி, ஒரு அரிசியின் எடை = 0.02 to 0.03 கிராம். சராசரி 0.025 கிராம். அதன்படி, ஒரு படி அரிசி = 38000 அரிசி = 38000 X 0.025 = 950 கிராம் ! 

( யாரோ ஒரு பொழுது போகாத பொம்முதான் கடைசி ஆறு படிகளை எண்ணியிருக்கவேண்டும். நீங்கள் யாராவது இதை எண்ணி சரி பார்த்து சொல்லவும்!) 
= = = = = = = = = = = =
 

84 கருத்துகள்:

  1. படிக்கான விளக்கம் சுவாரசியம்.

    எங்க அப்பாவும் படிக்கணக்குதான் சொல்வார். ஃபர்லாங்கு, கஜம் என்றெல்லாம் உபயோகிப்பார். இப்போவும் அர்த்தம் தெரியாமல் கஜம் என்பதை புடவைக்கு உபயோகிப்பது, அப்போதைய பழக்கத்தின் மிச்சம்.

    ஏடுகளை (ஓலைச்சுவடி) படி என்ற அளவீடு கொண்டு அளப்பார்கள், இப்போது பக்கம் என்று சொல்வதுபோல். 32 எழுத்து ஒரு படி.ஒரு லட்சத்து இருபதினாயிரம் படிகள் கொண்ட நூல் இருந்திருக்கிறது. திருப்பாவைக்கு இப்போ மார்கழியில் பாசுர விளக்கம் சொல்லும் பலரும், ஆறாயிரப்படி என்ற நூலை ஒட்டித்தான் பொருள் விளக்கம் சொல்லுவர்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய பதில்கள் கேஜிஜியினுடையது இல்லையா?

    பதிலளிநீக்கு
  3. புதனுக்கு மதியத்துக்குமேல் கேஜிஜி எட்டிப் பார்க்காத்தன் காரணம் என்ன? எப்போதுமே இதனைப் பார்க்கிறேன். டிசம்பர் ஆன்லைன் கச்சேரியா இல்லை திரைப்படமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கச்சேரிகள் கேட்பது காதோடு போயாச்சு. படங்கள் பார்ப்பதும்
      ரொம்ப ரேர்.

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவு அருமை.

    பழுத்த இலைதானே என்ற
    இளப்பமான பார்வை வேண்டாம். நான்
    பழுப்பதற்கு என் அனுபவங்கள்
    பாடங்களாகி போன கதை
    மனப்பக்குவம் அடைந்தவர்களுக்கு
    மட்டுமே புரியும்.

    கவிதை என்றதும் முதலில் அதை மட்டுமே கவனித்து வந்து விட்டேன். மனதில் வந்ததை எழுதுவது தவறாக இருக்கலாம். சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் கவிதையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. மனிதர்களுக்கும் எங்களுக்கும்
    இதுதான் வித்தியாசம்
    வயது ஆக ஆக
    ஸ்டைலும் அழகும்
    குறைவதில்லை.
    முதுமையிலும் ஆழகு
    நாங்கள்.

    பதிலளிநீக்கு
  7. யார் எழுதியது?

    பார்த்தால் நம்ம ஸ்ரீராம் தான் என்று புத்தி சொல்லுது....ஹாஹாஹா
    அவருக்கு இருமல் படுத்திக் கொண்டிருக்கிறதே அவ்வப்போது!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மார்கழி ப்ரசாதம் எல்லாருக்கும்
    கிடைத்ததா!...

    பதிலளிநீக்கு
  9. வீட்டுக்குப் பக்கத்தில் பிள்ளையார்
    கோயிலில் கொழுக்கட்டை, பர்பி, 2 வகை பொங்கல், புளியோதரை
    ...

    ஆகா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரில் குளிர் அதிகம். சுடச்சுட வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல்.... ஆஹா ஓஹோ

      நீக்கு
    2. மயக்கும் மாலையில்
      மணக்கும் டீக்கு முன்
      வெங்காயம் மணக்க,
      ஆவி பறக்க
      மெதுவடை..

      நீக்கு
  10. அளவீட்டுக் கணக்குகள் அருமை...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்று உங்கள் பக்கத்தில் படி என்ற சொல்லுக்குரிய விளக்கமும், படிக்கணக்கும் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. எங்கள் பிறந்த வீட்டில் அம்மா, பாட்டியும் எப்போதும் படிக்கணக்கைத்தான் சொல்வார்கள். நீங்களும் நல்லத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள். உங்கள் பதிவின் மூலம் தெரியாதவற்றை "படி"த்து தெரிந்து கொண்டேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. ///ரூபாய்க்கு மூன்று படி அரிசி
    போடுவோம்....///

    இன்று வரை தொடர்ந்து
    போடுகின்றனர்...

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. தமிழக இனிப்புகளில் பிடித்தது
    அதிரசம், தஞ்சாவூர் அசோகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை (அசோகா அல்வா) நெய்யில் பொய்யில்லாமல் யார் செய்கிறார்கள் தஞ்சாவூரில்?

      நீக்கு
    2. அசோகர் பெயர் தமிழக இனிப்புக்கு எப்படி வந்தது?

      நீக்கு
  15. பழுத்த இலை என்று
    தள்ளிவிடாதீர்.
    என்னிடம் தெரியும் பச்சை
    என் அனுபவங்கள்!
    உங்களுக்குப்
    பாடமாய்!
    --------
    பழுத்த முதிய இலைகள்
    நாங்கள்
    மஞ்சளகிகள்!
    ------
    மனித சமூகத்தில்
    முதியோர் இல்லங்கள்
    எங்களுக்கும்
    சத்தும் தண்ணீரும்
    தரவில்லை என்றால்
    குப்பைக் கிடங்கில்

    கீதா
    தண்ணீரும்

    -------

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பச்சை போய் 
      பயனில்லாமல்
      பழுத்த இலையானதும் 
      பசையில்லை என்று 
      பற்றை அறுத்து விடுகிறேன் 
      நானாகவே
       
      விலக்க வேண்டாம் 
      விலகிப் பறந்து விடுவேன் 
      நொடியில் காற்றில் 

      நீக்கு
    2. சூப்பர் கற்பனைகள்! நன்றி.

      நீக்கு
  16. காஞ்சி வரதாரஜர் குளம், நடுவில் மண்டபம் அழகான படம் நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  17. தேவ்பபெருமால் கோவில் சிற்பங்கள் சூப்பர்.

    எப்பவோ பார்த்தது வருஷங்கள் ஆச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
  18. நெல்லை அந்த காவிரி மரம் ப்டம் செம ஆங்கிள். ரொம்ப அழகா இருக்கு

    நாம போன இடத்துக்குப் பக்கதுல போயிருக்கீங்க. காவிரி அங்கு ஸ்ப்ளிட் ஆகுதே....நாம் போன இட்ம கட்டேன்னு ஸ்ப்லிட் ஆகும் இடம்... இது இன்னும் கொஞ்சம் தள்ளி...

    படங்கள் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  19. திற்பரப்பு மேலே இருக்கும் தண்ணீர் சின்ன அணைக்கட்டு அது. அங்கு நாங்க இருக்கும் போது போட்டிங் எதுவும் கிடையாது அதெல்லாம் அப்புறம் வந்தவை. நான் அங்கு நடந்து எல்லாம் சுற்றியதுண்டு...அந்த அணைக்கட்டின் பகுதியிலிருந்துதானே இப்பக்கம் தண்ணீர் விழும் அங்கும் தண்ணீர் அதிகம் இல்லாதப்ப நடந்திருக்கேன் நடுவில்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. கௌ அண்ணா 'படி' ல ஏறி நிக்கறீங்க!! சூப்பரா எழுதியிருக்கீங்க.

    பிடிக்காமல் படித்ததிலும்
    படியில் ஏறமுடியவில்லை
    பிடித்துப் பிடிப்புடன் படித்ததிலும்
    படியில் ஏற முடியவில்லை
    எந்தப் படியில் நின்றால் என்ன
    படித்துக் கொண்டே இருக்கலாம்!
    முதல் படியிலேயே
    நின்றுகொள்கிறேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூப்பர் சகோதரி. உங்களோடு நானும்...!

      நீக்கு
    2. சூப்பர். 

      அட, முதல் படியில் ஏறத்தொடங்கி விட்டீர்களே...   ஆமாம், படிக்கட்டு எங்கிருக்கிறது..  தேடிக் கொண்டிருக்கிறேன் நான்!!

      நீக்கு
    3. பிடிக்காவிடின்
      படி என்ன செய்யும்
      படியில் ஏற
      பிடிப்பும் அவசியம்
      பிடிப்பின்மையேல்
      படிப்பும் தடுக்கும்.

      நீக்கு
    4. படிகள் எல்லாமே நன்று! நன்றி.

      நீக்கு
  21. ஊர்ல இருந்தவரை வீட்டிலும் சரி ஊரிலும் சரி பெரியவங்க படிக் கணக்குதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலமாவு எல்லாம் இப்போதும் படி கணக்குதான்!  கோகிலாவை கூட கேட்டுப் பாருங்க...!!

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய படமும், பதிவும் படங்கள் அனைத்தும் சூப்பராக இருக்கிறது. ஆனால், நிறைந்திருக்கும் நீர் நிலையை கண்டால் மனதுக்குள் ஒரு பயம் தற்செயலாக வருகிறது. நீர் நிலைகளின் ஆழத்தை பெண்களின் மன ஆழத்திற்கு ஏன் ஒப்பிடுகிறார்கள்.? ஆனால், பெண்களின் மனதில் ரகசியம் ஏதும் நிலைத்து நிற்காது என்பதும் அனைவரும் சொல்வதாயிற்றே..! ஆழமுள்ள இடத்தில் ரகசியம் புதைந்திருக்காதா.? ஆண்களின் மனதில் அந்தளவு ஆழங்கள் இருக்காதா? நான் புதன் கேள்விகள் ஏதும் இதுவரை கேட்டதில்லை. இன்று என்னவோ தோன்றியது. அதனால் கேட்டு விட்டேன்.

    அத்தி வரதரை 40 வருடங்களுக்கு ஒரு முறை நீர் நிலையிலிருந்து வெளியில் எடுத்து பூஜிக்கும் வழக்கம் எப்படி வந்ததோ? சென்ற முறைதான் நான் இந்த அதிசயத்தை கேள்விப்பட்டேன். அத்துடன் சரி.. அங்குச் செல்ல சமயம் வாய்க்கவில்லை. அடுத்த முறை அவரை காணும் அச்சந்தர்ப்பம் எனக்கில்லை என்பதையும் உணர்ந்தேன்./ இப்போதும் உணர்கிறேன். அந்த தகவல்களுக்கும் படங்களுக்கும் சகோதரர் நெல்லைத் தமிழருக்கு மிக்க நன்றி.

    படங்களை அருமையான கோணங்களில் எடுத்த சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை மிகத் தேர்ந்த ஃபோட்டோகிராஃபர். படங்கள் அனைத்தும் அருமை.

      நீக்கு
  23. நெல்லை பகிர்ந்துள்ள படங்கள் யாவும் அழகாக இருக்கின்றன.  அத்திவரதரையே தன்னுள் மறைத்து வைத்து, எவ்வளவு அமைதியாக இருக்கிறது அனந்தசரஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். அடுத்த முறை அத்திவரதரை சேவிக்கும் வாய்ப்பு கிடைக்குதோ என்னவோ.. போய் அனந்தசரஸையாவது சேவித்து வாருங்கள்

      நீக்கு
    2. நான் நினைக்கலாம்! நடக்கணுமே...

      நீக்கு
    3. அனந்த சரஸைப் பார்த்திருக்கேன். சென்னை/அம்பத்தூரில் இருந்திருந்தால் இந்தப் பதினைந்து வருடங்களில் காஞ்சிபுரத்துக்குக் குறைந்தது பத்து முறையாவது போயிருப்போம். கல்யாணம் ஆனதில் இருந்து காஞ்சிபுரம் அடிக்கடி போவோம்/போயிருக்கோம். நாங்கள் தனியாகவும் போயிருக்கோம். சுற்றுலாவாகவும் போயிருக்கோம்.

      நீக்கு
  24. ///நெய்யில் பொய்யில்லாமல் யார் செய்கிறார்கள்
    தஞ்சாவூரில்?...///

    நம் வீட்டில் நாமே செய்து கொள்ள வேண்டியது தான்..

    இந்தக்கால வியாபாரத்தில் தர்மம் இருக்கின்றதா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய நெய் வாங்கும். முன்னெல்லாம் தீபாவளிக்கு கோதுமை அல்வா செய்யாமல் சில சமயங்கள் இந்த அசோகா அல்வா பண்ணுவது உண்டு.

      நீக்கு
    2. சுவையான தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  25. முதலில் காட்டியுள்ள இலைக்கு நான் முன்பு எழுதியிருந்த ஒன்று இங்கே... மலர் என்று சொல்லி ஒன்று எழுதி இருந்தேன். மலரை இலையாக நினைத்துக் கொள்ளலாம். பல இடங்களில் அதைப் பகிர்ந்திருக்கிறேன்.. இங்கு மறுபடி..

    வாடியதால்
    வாசம் தொலைத்த
    மலரொன்று
    விழுந்து கிடக்கிறது
    வற்றிய குளத்தில்

    ஏற்கெனவே
    விழுந்து கிடந்த
    மஞ்சள் இலைகள்
    காற்றில் நகர்ந்து
    ஆதுரத்துடன்
    அணைத்து மூடுகின்றன
    மலரை

    பதிலளிநீக்கு
  26. படிக்கணக்கு அருமை. நான்காவது படிக்கும் வரை எட்டாழாக்கு ஒரு படி என்றே படித்து வந்தேன்./தோம். காலணா, ஓரணா, அரையணாக் கணக்குத் தான் போட்டிருக்கேன். அதே போல் வீசை, மணங்கு தான். நான்காம் வகுப்புப் படிக்கையில் தான் பைசாக்கணக்கு வந்தது. ஒரு ரூபாய்க்கு 100 பைசா என்னும் கணக்கு. அப்போவெல்லாம் இது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டதால் நயா பைசா என்றே தமிழிலும் சொல்லுவார்கள். வாய்ப்பாடில் எல்லாம் மாற்றங்கள் வந்தன. ஒரு ரூபாய் அப்போவெல்லாம் பத்து கிராம் வெள்ளிக்குச் சமமான எடை என்றிருந்த காலம். வெள்ளிப் பொருட்கள் வாங்கும்போதெல்லாம் ரூபாய் எடை வெள்ளி என்றே கணக்குப் போடுவார்கள். இன்னும் சொல்லப் போனால் என் மாமியாரெல்லாம் இந்தப் பழைய அளவைகளிலேயே பிரமாதமாக மனக்கணக்காய்ப் பால்க்கணக்கு, தயிர்க் கணக்கு, எண்ணெய்க் கணக்கெல்லாம் போடுவார்கள். ஒரு சேர் பால் என்பார்கள். அது கிட்டத்தட்ட 100 மில்லிக்கும் கொஞ்சம் குறைச்சு. கௌதமன் அவர்களே கணக்கில் 0 என்றால் நானெல்லாம் எந்த மூலை. கணக்கு எனக்கு எப்போவுமே பிணக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படித்ததும் அதே காலகட்டத்தில்தான். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  27. ​பழுத்த இலை
    ​விழுந்தது நீரில்
    இலையுதிர் காலம்.

    பதிலளிநீக்கு
  28. அசோகாவெல்லாம் குஜராத், மஹாராஷ்ட்ராவில் இருந்து வந்தது. தமிழ்நாட்டுப் பாரம்பரிய இனிப்புக்கள் அநேகமாக வெல்லம் சேர்த்துப் பண்ணியவை தான். முக்கியமாக அதிரசம், சிய்யம், அப்பம் போன்றவை. போளி கூட மஹாராஷ்ட்ரா, குஜராத் இறக்குமதி.அல்வா, ஜிலேபி பற்றிச் சொல்லவே வேண்டாம். மைசூர்ப்பாகு கதையே இருக்கு. என்னிடம் இது குறித்த ஒரு கட்டுரை இருந்தது. மின் தமிழில் வந்தது. தேடிப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  29. பச்சையம் இல்லை
    ஒளி சேர்க்கை இல்லை
    பழுத்தேன்
    விழுந்தேன்

    உடல் உழைப்பு இல்லை
    உணவுக்கு வழி இல்லை
    விழுந்தேன்
    பழுத்த இலை போல்
    பழுத்தால் எதுவும்
    விடை பெறத்தான் வேண்டும்
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை.  கடைசி இரண்டு வரிகளை,
       
      இயற்கை நிறம் போய்
      இளைத்துப் போனால் 
      இல்லாமல்தான் போகவேண்டும்

      என்றும் சொல்லலாமோ!

      நீக்கு
    2. எசப்பாட்டு நன்று என்றாலும் எது இயற்கை நிறம் என்பதில் குழப்பம். பழுத்தால் மஞ்சள் என்பதும் காய்ந்தால் சருகு என்பதும் இயற்கை தானே?

      நீக்கு
    3. கவிதை சூப்பர்.

      நீக்கு
  30. பாவம் பார்த்துப் பரிதாபப்பட்டதின் மூலம் நான் இழந்தது நிறையவே. :(

    அத்தி வரதரைத் தரிசித்ததில்லை. இத்தனைக்கும் இப்போ சமீபத்தில் அவர் வெளியே வந்தது எனக்குத் தெரிந்து இரண்டாவது முறை. கல்யாணம் ஆன புதுசில் ஒரு தரம் வெளியே வந்தார். நான் வேலை பார்த்த அலுவலகத்தில் பலர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். கூப்பிட்டாங்க. ஆனால் போக முடியலை. :(

    நெல்லை எழுதி இருக்கும் அந்த நடன நிகழ்வும் படமும் நடிகையும் உண்மைதான். கோழி கூவுது படத்தின் மூலம் பிரபலமான நடிகை விஜி தான் அவர். கால் சரியில்லாமல் போய்ப் பின்னர் என்ன காரணத்தாலோ தற்கொலை செய்து கொண்டார் எனப் படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடித்துப் பிடித்து பார்த்துவந்த விட்டார் பாஸ் அத்திவரதரை.  எனக்கு அந்த பாக்கியம் கிட்டவில்லை. 

      நீக்கு
    2. நானும் பார்த்தது இல்லை.

      நீக்கு
  31. நாங்க அம்பத்தூரில் இருந்தப்போவும் சரி, ராஜஸ்தான், குஜராத்தில் இருந்தப்போவும் சரி, ஊட்டியிலும் சரி. பாம்பெல்லாம் குழந்தைகள் போல. சர்வ சாதாரணமாக வரும், போகும். 2009 ஆம் ஆண்டில் எங்க பெண் தன் இரு குழந்தைகளுடன் விடுமுறைக்கு வந்திருந்தப்போ தினமும் குளியலறைக் குழாயில் போய் முறுக்கிக் கொண்டு விடும். அதைப் போக வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். ஜாம்நகரில் கிட்டே வந்து படுத்துக்காத குறை. நிலைப்படி முழுக்க அடைத்துக் கொண்டு படியைத் தாண்ட முடியாமல் குறுக்கே படுத்துக்கும். ராத்திரி கம்பைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் படுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கும்போதே பீதியாகிறது!  சுப்புகுட்டி!

      நீக்கு
    2. ஆமாம், சுப்புக்குட்டி என்போம். இப்போ அதைக் குறிப்பிட்டால் எல்லோருக்கும் நினைவிருக்குமோ/இருக்காதோ என நினைச்சேன். அதான் சொல்லலை.

      நீக்கு
    3. பயங்கர காலங்கள்.

      நீக்கு
  32. நீங்க பழராசம் குடிச்சது ரங்கநாதன் தெரு முனையில் இருந்த/அல்லது இருக்கும் அன்பழகன் பழக்கடை. பின்னாட்களில் பிரபலமான திமுக பிரமுகர் ஆனார். எங்க சித்தப்பா வீட்டுக்கு நன்கு தெரிந்தவர். சின்ன வயசில் பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அன்பழகன் பழக்கடை. //

      இன்னமும் இருக்கு.  நாலு நாட்களுக்கு முன்னால் கூடப் பார்த்தேன்.

      நீக்கு
    2. தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  33. அத்தி வரதரை நானும் தரிசித்தது ( பார்த்தது) இல்லை..

    அவர் நம்மைப் பார்த்தாலே போதும்!..

    பதிலளிநீக்கு
  34. கேள்வி பதில்கள் வித்தியாசமாக இருந்தது.

    காஞ்சி வரதராஜர் சென்றிருக்கிறேன். குளப்படம் நன்றாக இருக்கிறது.

    'படி" வார்த்தை பல சம்பவங்களை நினைவூட்டியது. பல தகவல்களையும் தந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!