27.12.25

இஸ்ரோ சாதனை மற்றும் நான் படிச்ச கதை

2028க்குள் 'ஏர் டாக்சி' சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு



மும்பை: நம் நாட்டில் விரைவில், எலக்ட்ரிக் விமான டாக்ஸி சேவைகள் துவங்கவுள்ளன. அதற்கான கள சோதனைகள் நடந்து வருவதாக விண்வெளித் துறை சார்ந்த, 'ஸ்டார்ட்அப்' நிறுவனமான, 'சரளா ஏவியேஷன்' அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்களை போல, வருங்காலத்தில் வான் வழியே பயணிக்கும், 'ஏர் டாக்சி' சேவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில், சர்வதேச நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன.  அந்நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான, 'சரளா ஏவியேஷன்' 'எலக்ட்ரிக் ஏர் டாக்சி'களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.  வரும், 2028க்குள் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரியில், டில்லியில் நடந்த கண்காட்சியின் போது, 'சூன்யா' என்ற ஏர் டாக்ஸி மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது.  
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:  அடுத்த தலைமுறை விமான சேவைகளை மேம்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. பெங்களூருவில் உள்ள சோதனை மையத்தில், 'எலக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆப் - லேண்டிங்' எனப்படும், தரையில் இருந்தபடி அப்படியே மேலெழும்புவது, தரையிறங்குவதற்கான கள சோதனைகள் நடந்து வருகின்றன.  கடந்த ஒன்பது மாதத்தில் இத்திட்டம் மிக முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. பொறியியல் அளவு, செயல்படுத்தும் வேகம் ஆகிய சோதனைகள் திருப்திகரமாக அமைந்து இருக்கின்றன.   எஸ்.ஒய்.எல்.எக்ஸ்.,-1 என பெயரிடப்பட்ட இந்த தனியார் ஏர் டாக்ஸி அதிநவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தளம் அமைக்க அதானி திட்டம் :  மஹாராஷ்டிராவின் நவி மும்பையில், 'ஏர் டாக்சி'களுக்கான தளம் அமைக்க, 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தரும்படி நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகமான, 'சிட்கோ'விடம் அதானி குழுமம் அனுமதி கோரியுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏர் டாக்சிகள் மூலம் பயணியருக்கு சேவை அளிக்கும் வகையில், அந்த நிலத்தில் தளம் அமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. புனே மற்றும் மும்பையை இணைக்கும் வகையில், நவி மும்பை பகுதியை அதானி குழுமம் தேர்ந்தெடுத்துள்ளது.

============================================================================================



செய்தி படிக்க..


======================================================================================================================================================================================================================

விண்ணில் பாய்ந்தது அமெரிக்க செயற்கைக்கோள் 'புளூபேர்ட்'; இஸ்ரோ சாதனை


திட்டம் வெற்றி

இது குறித்து இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: இன்று நாங்கள் எல்விஎம்-3 எம்6 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளோம். இது அமெரிக்காவின் ப்ளூபேர்ட் பிளாக்-2 என்ற வணிகத் தொடர்பு செயற்கைக்கோளை, திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தியுள்ளது. இது எல்விஎம்-3 ராக்கெட்டின் ஒன்பதாவது வெற்றிகரமான ஏவுதலாகும். இந்த திட்டம் வெற்றி அடைந்ததன் வாயிலாக 100 சதவீதம் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எல்விஎம்-3 எம்6 ராக்கெட் வாயிலாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஏவுதல்களும் வெற்றிகரமாக அமைந்துள்ளன. இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே இதுதான் மிகவும் அதிக எடை ஆகும். நாங்கள் இந்த செயற்கைக்கோளை 1.5 கிலோமீட்டருக்கும் குறைவான துல்லியத்துடன் விண்ணில் செலுத்தியுள்ளோம். நாங்கள் இந்த ராக்கெட்டின் பேலோட் திறனை தோராயமாக 150 கிலோகிராம் மேம்படுத்தியுள்ளோம். இது இந்தியாவில் ககன்யான் திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய ராக்கெட் ஆகும். இவ்வாறு நாராயணன் கூறினார். அமெரிக்க செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியதை தினமலர் நேரலை ஒளிபரப்பு செய்தது


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நான் படிச்ச புத்தகம்

பானுமதி வெங்கடேஸ்வரன் 



நான் படித்த புத்தகம் - மத்யமர் கதைகள். ஆசிரியர் சுஜாதா


சுஜாதாவின் சிக்னேச்சர் இலக்கிய படைப்பு என்று 'மத்யமர்' கதைகளையும், 'ஸ்ரீரங்கத்து தேவதைகளையும்' கூறலாம். 

மத்யமர் என்பதற்கு பொருளாதார அடிப்படையை கருத்தில் கொள்ளாமல், அவர்கள் மனப்பான்மையை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கதைகள்.

"இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே உண்டு. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள். பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்கு தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.

பக்தி,காதல், பரிவு, பாசம்,தியாகம், நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும், அவசரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். சமூகம் வாசல் கதவை தட்டுவதை கேட்காதவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு, மத்யமர். என்று முன்னுரையில் கூறியிருப்பார். 

இதில் பெரும்பான்மையான கதைகளில் பெண்களின் பொறுமையும், தியாகமும், சுயநலமும் சுஜாதாவுக்கே உரிய நுணுக்கத்தோடு வெளிப்பட்டிருக்கின்றன.  
இவற்றில் எனக்கு பரிசு, அறிவுரை போன்ற கதைகளோடு 'தாய்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் இரண்டு கதைகளில் தாய்-2 என்னும் கதை பிடித்தது.  

முதல் கதையான 'ஒரு திருமண ஏற்பாடு' கதையில் அமெரிக்காவில் வசிக்கும் மகனுக்கு இந்தியாவில் வரன் தேடும் ஐயங்கார் பெற்றோர்கள்.   

ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, பதில் வந்தவற்றில் ஒன்றிர்க்கு பையன் ஓகே சொல்ல, பெண் பார்க்க கிளம்புகிறார்கள். அதை சுஜாதா எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்

'பல நாட்கள் கிளப்பாமல் ஷெட்டில் வைத்திருந்த காருக்கு கேனில் பெட்ரோல் வாங்கி ஊற்றி, கார்பரேட் துடைத்து மாட்டி, ஆடி ஆடி அடையாறிலிருந்து சென்றார்கள்:))

பெண்ணின் தாயார் தலைக்கு டை போட்டுக் கொண்டு, லாக்கரில் நகைகளை எடுத்து மாட்டிக் கொண்டாள்.

நரசிம்மன் புத்தக அலமாரியில் ஹெரால்ட் ராபின்சன்களை எடுத்து விட்டு ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்.'

பிள்ளையின் பெற்றோர்களான ராமநாராயணனும், கஸ்தூரியும் பெண் வீட்டிற்கு வந்ததும் அவர்களை குழைந்து வரவேற்கிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள். 

"ஏன் இவ்வளவு லேட்டாயிடுத்து? அட்ரஸ் கண்டுபிடிக்க முடியலையா?"
என்று நரசிம்மன் கேட்க, கஸ்தூரி,"இல்லை, வழியில் கார் நின்னு போயிடுத்து. இதை குடுத்துட்டு வேற புது கார் வாங்கணும்னு பாக்கறோம், அதுக்கு இன்னும் வேள வரல" என்கிறாள்.

புதுக்காரா? என்பது போல ராமநாராயணன் பார்க்க, அதை கவனிக்காமல் "ஷூவை அவிழ்த்துடுங்கோ" என்கிறாள். 

'அவர் ஷூவை அவிழ்த்து விட்டு சாக்ஸ் ஓட்டைகளோடு உள்ளே நுழைந்தார். அவருடைய சாக்ஸ் வாடைக்கு உள்ளே ஜுடி குலைத்தது' என்று அப்பட்டமான மிடில்க்ளாஸை நகைச்சுவையோடு அறிமுகப்படுத்துகிறார். 

கதையின் இறுதியில் இரண்டு குடும்பங்களுக்கும் பிடித்துப்போய், திருமணத்தை நிச்சயித்து விடுகிறார்கள். "சிம்பிள் மேரேஜ் போதும். எங்களுக்கு கும்பல் அதிகம் வராது, உட்லண்ட்ஸில் வைத்துக் கொள்ளலாம்" என்றெல்லாம் பேசி விட்டு, வீடு திரும்பும் பொழுது, ராமநாராயணன் மனைவியிடம்," அதை அவர்களிடம் சொல்ல வேண்டாமா" என்று கேட்கிறார்.
"எதை?" 
"அமெரிக்காவில் உன் பிள்ளை ஒரு நீக்ரோவை கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் கழித்து டைவர்ஸ் பண்ணியதை" 
"நீங்க பேசாம இருங்கோ, அது முடிஞ்சு போன கதை"

அதே சமயத்தில் பெண் வீட்டில் உரையாடல் இப்படி செல்வதாக கதையை முடித்திருப்பார்
 "இதை விட நல்ல சம்பந்தம் நமக்கு கிடைக்காது. நந்தினி ஒத்துப்பாளா?"
"அமெரிக்கானா ஒத்துப்பா"
" ஒம் பொண்ணு ஒரு பஞ்சாபி பையனோடு ஒருமாதம்.."
"நீங்க சும்மா இருங்கோ, அது முடிஞ்சு போன கதை"

பரிசு கதையில் பத்திரிகை ஒன்றில் ஸ்லோகன் எழுதியதற்காக டில்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கு விமானத்தில் பயணம், ஸ்டார் ஹோட்டல்களில் தங்குதல் போன்றவற்றை தம்பிக்கு கிடைத்திருக்கும் வேலைக்கு காஷன் டெபாஸிட் கட்டவும், அம்மாவின் அறுவை சிகிச்சைக்காகவும் துறந்து, அதற்கு பதிலாக பணமாக வாங்கி வந்து விட்டதாக கணவன் கூறியதை "அடுத்த முறை கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம்" என்று பூர்ணிமா ஏற்றுக் கொள்ளும்பொழுது நமக்கே மனது பாரமாகி விடுகிறது. டில்லி யாத்திரைக்கு அவள் தயாராவதை சாங்கோபாங்கமாக விவரித்திருப்பார்.

'அறிவுரை'யில் நியாயமாக இருந்து எதையும் சேர்க்க முடியாத அப்பா, அவரைப் போலவே நியாயமாக, லஞ்சம் வாங்காமல் இருப்பதால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மகன். ஒரு பெரிய தொகை லஞ்சமாக ஆசை காட்டப் படும் பொழுது, அதை பெற்றுக்கொள்ள வற்புறுத்தும் மனைவி, அவனுடைய சான்றான்மை இரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிப்புடன், தந்தையிடம் அறிவுரை கேட்க வருகிறான். 

வாழ்நாள் முழுவதும் ஒரு பைசா லஞ்சம் வாங்காத அப்பா, "லஞ்சம் வருதுன்னா வாங்கிடு" என்கிறார். 
"என்னப்பா சொல்றீங்க?" என்று மகன் அதிர்ச்சி அடைய,
"ஆமாண்டா, லஞ்சம் வாங்காமல் நான் என்னத்தை கண்டேன்? நகையை வித்து, பரம்பரை வீட்டை வித்து, புதுசா கட்டின வீட்டை முடிக்க முடியாம ஒழுகுது. ஒங்கம்மாவுக்கு வைத்தியம் பார்க்க முடியல.. இத்தனை பொண்ணுங்க, பசங்க இருந்தும் யாரும் சீந்தல.. நீயே கடைசியா என்ன எப்போ பாக்க வந்த? மூணு வருஷம்? நான் லஞ்சம் வாங்கி கையில் காசு வெச்சிருந்தா பசங்களும், பொண்ணுங்களும் இப்படி உதாசீனம் பண்ணுவாங்களா? என் நிலமை உனக்கு வராம இருக்கணும்னா உன் பொண்டாட்டி சொல்றது சரி. லஞ்சம் வாங்கிடு" சொல்லிவிட்டு கிழவர் திரும்பி படுத்துக் கொண்டார். என்று முடிகிறது.

லஞ்சம் வாங்கச் சொல்லும் சுஜாதாவின் கதை என்று வெளியான காலத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளான கதை. 

நீலப்புடவை ரோஜாப்பூ

இதே கருத்தில் அவர் ஏற்கனவே ஒரு கதை எழுதி, அதை ரேவதி, அமெரிக்காவை நிலைக்களனாக கொண்டு 'மித்ர my friend' என்று படமாக எடுத்திருந்தார்.  

திருமணமாகி பதினெட்டு வருடங்கள் கழிந்து, குழந்தைகளும் இல்லாத ஒரு தம்பதியரிடையே உரையாடல் வெகுவாக குறைந்து, ஒரு திரை விழுந்து விடுகிறது. அந்த வெறுமையை பேனா நட்பு மூலம் நிரப்பிக் கொள்ள முயற்சிக்கும் அவனை வினு என்ற பெயரில் கடிதம் போடும் பெண் கவர்கிறாள். நேரில் சந்திக்கக் கூடாது என்று எச்சரிக்கும் ஏஜென்சியை மீறி சந்திக்கச் செல்லும் அவனுக்கு கிடைப்பது எப்படிப்பட்ட அதிர்ச்சி!

சாட்சி என்னும் கதையில் அதிகாலையில் நூறு கிராம் கடுகு வாங்க பாய் கடைக்குச் செல்லும் சரளா, பக்கத்து பெட்டிக்கடையில் அமர்ந்திருக்கும் வாசுவை, பைக்கில் வந்த இரு இளைஞர்களில் ஒருவன் பிடித்துக் கொள்ள, மற்றவன் கத்தியால் சதக்கென்று விலாவில் குத்தி சாக அடிப்பதை பார்த்து பயந்து வீட்டிற்கு ஓடி வருகிறாள். 

கொலை செய்தவன் பெயர் கிருஷ்ணா என்பதும், அவன் பக்கத்து வீட்டிற்கு வருகிறவன், அரசியல் செல்வாக்குள்ள ரௌடி என்பதால் வீட்டு மனிதர்கள் எல்லோரும் சரளாவிடம் போலீஸ் கேட்டால், "எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடு" என்று படித்து படித்து சொல்லியும், போலீஸிடம் தான் பார்த்த அத்தனையையும் ஒரு வரி பிசகாமல் சொல்லி விடுகிறாள்.

'ஜாதி இரண்டொழிய' என்னும் கதையில் ரிசர்வேஷன் பொருளாதார அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார். 

தாய் - 2 
வயதான, மாதம் ரூ.600/- மட்டும் ஃபேமிலி பென்ஷன் வாங்கும் ஒரு விதவைத் தாயை யார் வைத்துக் கொள்வது? என்று போட்டி போடும் இரண்டு மருமகள்கள், அவர்களை சமாளிக்கத் திணறும் மகன்கள். 

பெரியவன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் அம்மாவை ஒன்றரை மாதங்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. வெளிநாட்டிற்கு டெபுடேஷன் என்று காரணம் காட்டுகிறான். 

இரண்டாவது மகனுக்கு அண்ணா செய்வது தவறுதான் என்றாலும், அதற்காக தாயை நடுத்தெருவில் நிறுத்தி விட முடியுமா என்று தோன்றுகிறது. ஆனால் மனைவி மசிய மறுக்கிறாள். 

எப்படியோ பேசிப் பார்த்தும் மனைவி வழிக்கு வராததால், அம்மா வழி உறவினரான வெங்கடேசன் மாமாவை பஞ்சாயத்துக்கு அழைக்கிறான். 

அவரை தனியாக வீட்டில் விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு கோவிலுக்குச் சென்று விட்டது இவனுக்கு கோபமூட்டுகிறது. 

"உள்ளே, ஃபிளாஸ்கில் உனக்கு காபி வைத்திருக்கிறாளாம்" என்றார் மாமா சகஜமாக.

கை,கால், முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு மாமாவிடம்,"சித்ரா ஏதாவது சொன்னாளா?" என்று கேட்க,

சொன்னாள், சுதாகர் லெட்டர் மேல லெட்டர், ஃபோன் மேல ஃபோன் போடறானாம் அம்மாவை அழைச்சிண்டு போக"

"ஆமாம் மாமா, இவ ஓத்துக்க மாட்டேங்கறா. எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னே தெரியல. எங்கம்மா பாவம் எங்க போவா? சுதாகர் பண்றதும் சரியில்ல, ஏதாவது சாக்கு சொல்லி அனுப்பிடறான். நான், குழந்தைகள், அம்மா எல்லாரையும் சமாளிக்க இவ திணற்ரா"

"தினா உன்னுடைய பிரச்சனை இப்போ இந்த தேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கு. இது ட்ரான்சிஷன் ப்ராப்ளம். கூட்டுக் குடும்பங்கள் சிதைஞ்சு போச்சு, வீடுகள் சின்னதாயுடுத்து, மனிதர்களுக்கு சுயநலம் அதிகமாகி விட்டது. பல காரணங்கள்" என்று சோஷியாலஜியை அலசி விட்டு, திவாகரின் அம்மாவுக்கு இத்தனை நாட்களாக லிட்டிகேஷனில் இருந்த பிறந்து வீட்டு சொத்தில் தீர்ப்பு வந்து விட்டது என்றும், அதன் மூலம் எட்டு லட்சம் கிடைக்கும், அதை வைத்துக் கொண்டு திருச்சியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, சமையலுக்கும், உதவிக்கும் ஆள் போட்டுக் கொண்டு தனியாக இருக்கலாம், சுதாகர் டெபுடேஷனில் வெளிநாடு செல்லலாம், திவாகர் நிம்மதியாக இருக்கலாம் என்கிறார்.

"இந்த விஷயம் சுதாகருக்குத் தெரியுமா?" என்று கேட்க,"நான் இன்னும் சுதாகருக்கு லெட்டர் போடல, நேத்திக்குதானே தீர்ப்பு வந்தது. ஒரு வேளை நரசு சொல்லியிருக்கலாம், அவன் டெல்லியில்தான் இருக்கான்" என்கிறார்.

"நான் நாளைக்கு சுதாகருக்கு விவரமா லெட்டர் போடறேன். நீங்க சொன்னது நல்ல ஐடியா" என்று திவாகர் கூற, இவர்கள் இருவரும் பேசுவதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த திவாகர் மனைவி சித்ரா,"என்ன நல்ல ஐடியா?" என்கிறாள்.

அன்று இரவே திவாகர் மவுண்ட்ரோடு தபாலாபீசுக்குச் சென்று அண்ணனுக்கு,

Starting by grand trunk express tomorrow to take mother Divakar 
என்று தந்தி கொடுத்துவிட்டு திரும்புகிறான். 

Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar

என்று அவனுக்கு வீட்டில் ஒரு தந்தி காத்திருக்கிறது. 

சுஜாதாவுக்கே உரிய நச் முடிவு!

இந்த கதைகளை மத்யமர் கதைகள் என்று பெயரிட்டிருந்தாலும், மேல்தட்டு, கீழ் தட்டிலும் இந்த குணங்கள் உண்டு.

33 கருத்துகள்:

  1. காலை வணக்கம்!
    தொழில் நுட்ப செய்தி சுருக்கங்கள் இரண்டும் அருமை! JKC சாரா?
    நூல் மதிப்புரை எழுதுவது கடினமான கலை; திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் திறம்பட செய்திருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க TVM. வணக்கம்.

      // தொழில் நுட்ப செய்தி சுருக்கங்கள் இரண்டும் அருமை! JKC சாரா? //

      இல்லை.. நான் தெரிவு செய்ததுதான்! :))

      நீக்கு
    2. நன்றி திருவாழ்மார்பன் சார்.

      நீக்கு
  2. ஏர் டாக்சிகள் ஆஹா....ஸ்ரீராம் உங்களுக்கு ஏதேனும் நினைவுக்கு வருதா? இரண்டு...ஒன்று எபியில் வேறொரு வடிவத்தில் வந்தது...மற்றொன்று வெளிவராத நிலையில்...ஒன்று சொல்லலாம் இன்னொன்று சொல்ல முடியாது!!!

    ஆனால் எனக்கு இந்தத் தொழில்நுட்பம் பெருகப் பெருக...பாருங்க இனி ஏர்டாக்சிகளுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது என்று பார்க்கும் போது, மக்கள் எங்கு குடியிருப்பாங்க? தோட்டம் வயல் எல்லாம் என்ன ஆகும்? என்ற கேள்விகளும் வருது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா....

      // ஆஹா....ஸ்ரீராம் உங்களுக்கு ஏதேனும் நினைவுக்கு வருதா? //

      ஓ.. ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... இரண்டாவதும் தாமரையாய் மலர வாழ்த்துகள்.

      நீக்கு
    2. தாமரையாய் மலருதா...இல்லை மொட்டாகவே இருந்திடுமா தெரியலை...பார்ப்போம்!! இல்லேனா நாம மலர வைச்சுட மாட்டோம்!!!!???

      பானுக்கா இந்த ஏர்டாக்சியைச் சொல்லியிருப்பார் ஒரு கதையில்.

      கீதா

      நீக்கு
    3. சுஜாதாவின் திம்மலாவிலும் வரும் ல?

      கீதா

      நீக்கு
    4. திம்மலா இல்லீங்... திமாலாங்...

      நீக்கு
    5. //பானுக்கா இந்த ஏர்டாக்சியைச் சொல்லியிருப்பார் ஒரு கதையில்.// நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  3. பூமி செவ்வாயாக மாறிவிடுமோ? அதனாலதான் செவ்வாயை பூமியாக்க முயற்சி செய்யறாங்களோ? டெராஃபார்மிங்னு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நெகிழ்ச்சியான செய்தி அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டுக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது..

    கீதா

    பதிலளிநீக்கு
  5. ப்ளூபேர்ட் செய்தி சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அவர்கள் மனப்பான்மையை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கதைகள்.//

    யெஸ். இப்ப இதே மத்யமர்கள் நிறைய இருக்காங்க. பாருங்க என்ன ஒரு thought process! இல்லையா இதுதான் அவருடைய வெற்றி...அதாவது வாசிப்போரின் மனதில் பதிந்ததன் காரணம்.

    //பக்தி,காதல், பரிவு, பாசம்,தியாகம், நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும், அவசரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். சமூகம் வாசல் கதவை தட்டுவதை கேட்காதவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு, மத்யமர். என்று முன்னுரையில் கூறியிருப்பார். //

    ஆப்ட் - நடைமுறை....என்ன ஒரு யதார்த்தமான வரிகள். நாம் அவ்வப்போது நினைப்பதை வரிக்கு வரி ...

    சூப்பர் பானுக்கா கதைகளைப் பற்றி சொல்லிய விதம்.

    நான் வாசித்ததில்லை மத்யமர் கதைகள் வாசிக்க வேண்டும் கண்டிபபக...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. 'அவர் ஷூவை அவிழ்த்து விட்டு சாக்ஸ் ஓட்டைகளோடு உள்ளே நுழைந்தார். அவருடைய சாக்ஸ் வாடைக்கு உள்ளே ஜுடி குலைத்தது' என்று அப்பட்டமான மிடில்க்ளாஸை நகைச்சுவையோடு அறிமுகப்படுத்துகிறார். //

    சிரித்துவிட்டேன்! இதுதான் சுஜாதா!!!!

    முடிவு இப்போது நடப்பதுதான் ஆனால் வெளியில் சொல்லிக் கொண்டுவிடுகிறார்கள் பெண்ணும் பிள்ளையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இப்ப ஒன்றே ஒன்று அமெரிக்காவில் இருக்கும் பையன் இந்தியப்பெண்ணைப் பார்க்க முடியாது ஹிஹிஹிஹி விசா ப்ராப்ளம்!

    எனக்குத் தெரிந்த உறவினர் ஒருவருக்கு இந்தப் பிரச்சனை வந்து பையனுக்கும் பெண்ணுக்கும் பிடிச்சாலும்... நிச்சயம் செய்யும் முன்னரே கான்சல் ஆகிவிட்டது!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. 'அறிவுரை' இக்கதை வாசித்த நினைவு. மத்யமர் கதைகள் தனித்தனியாகவும் இருக்குமோ?

    //Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar

    என்று அவனுக்கு வீட்டில் ஒரு தந்தி காத்திருக்கிறது.

    சுஜாதாவுக்கே உரிய நச் முடிவு!//

    ஹாஹாஹா....காரணம் பளிச். இந்தக்கதையும் வாசித்த நினைவு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாய் 2 கதையை பாரதி பாஸ்கர் ஒரு சொற்பொழிவில் கூறியிருந்தார். ஆனால் தந்தி என்பதி எஸ்.எம்.எஸ். என்று மாற்றி விட்டார். அது சரியா? என்று தெரியவில்லை. எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான், பாடினவன் பாட்டைக் கெடுத்தான் என்பது போல் பேசுகிறவர்கள் கதைகளை கெடுத்து விடுகிறார்கள்.

      நீக்கு
  10. பானுக்கா மேல்தட்டு கீழ்த்தட்டு சரிதான் என்றாலும் பெரும்பான்மையை மனதில் கொண்டு மத்யமர் எனலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  11. ​மத்யமர் கதைகள் அறிமுக சுருக்கங்கள் சிறப்பாக உள்ளன. சுஜாதா ஒரு சகாப்தம். அவருடைய கதைகளில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் எல்லோரும் மத்யமரே. சில கதைகள் முன்பே படித்து மனதில் நிற்கும் நினைவுகளை தூண்டியது.
    தொடரட்டும் புத்தக வாசிப்பு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. மத்யமர் கதைகள் புத்தக அறிமுகம் நன்று. பேனா நண்பி அவன் மனைவியோ?

    மத்யமர்கள் என்பதை பொதுவாக நான் பிராமணர்களின் குணம் என நினைப்பேன். ஐந்து பிராமணர்கள் கூடினால் ஆறு கட்சிகளை ஆதரித்து எதிர்த்துப் பேசுவார்கள், தேர்தல் நாளன்று, நாம வாக்களித்தா ஆட்சி மாறும்? என்று வீட்டில் இருந்துகொண்டு, மறுநாள் எக்சிட் போலைப் பற்றி விலாவாரியாக அரட்டையைத் தொடருவார்கள் என்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேனா நண்பி அவன் மனைவியோ?// சரியான யூகம்.

      நீக்கு
  13. முன்பு, அதாவது சில வருடங்களாக, இங்க பார்க்கும் பெண்ணுக்கு திருமணம் முடிந்ததும் அமெரிக்காவில் எம் எஸ் படிக்க பாதிச் செலவை ஏற்றுக்கொள்ளணும்னு கண்டிஷன் போட்டாங்க. இப்போ, அங்கே இருப்பவர்களில் ஒருவரை கப்சிப்னு எதையும் கேட்காமல் ஆள் கிடைத்தால் கோதும் (அதுவும் விசாவோடு) என்று நினைக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் எல்லோரும் இந்தியா வந்துவிடும் காலம் தூரமில்லை என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது இருக்கும் நிலையில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் அங்கேயே இருக்கும் இந்திய மணமகன்/மணமகளைத்தான் விரும்புகிறார்கள்.

      நீக்கு
  14. மத்யமர்களில் பலர் (பெற்றோர்கள்) யூரோப் டூர் போனேன் , ஸ்விட்சர்லாண்ட் நாலு தடவை போனேன், என்றெல்லாம் சொன்னால் பெரிதாகத் தோன்றாது. பீத்திக்கொண்டால் சிரிப்பாக வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். முதல் முறை பீத்திக்கொள்வார்கள், இரண்டாம் முறை போனோம் என்பார்கள், மூன்றாம் முறை இனிமேல் கூப்பிடாதே என்று சொல்லிவிட்டேன் என்பார்கள்.

      நீக்கு
  15. விஞ்ஞான கதைகளில் படித்த, படைத்த ஏர் டாக்ஸி நிஜத்தில் வரப்போகிறதா?
    அமெரிக்க ராக்கெட் இந்தியாவிலிருந்து ஏவப்பட்டதா?! பெருமை கொள்ளும் தருணம்தான்.
    மனநலம் குன்றிய மூதாட்டியை குடுமபத்தில் ஒப்படைத்த செய்தி நெகிழிச்சியூட்டுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!