22.1.26

சந்திராஷ்டமம்

"சந்திராஷ்டமம் என்பது ஜோதிடப்படி, ஒருவருடைய ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமாகும் (சுமார் இரண்டரை நாட்கள்), அப்போது மனக் குழப்பங்கள், தேவையற்ற கோபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும், புதிய முயற்சிகளைத் தவிர்த்து, விநாயகர் வழிபாடு மற்றும் அமைதி காப்பது சிறந்த பரிகாரங்கள்."

காய்கறி 'நறுக்ஸி'ன்போது நான் பாட்டு போட்டுக் கொள்(ல்)வது வழக்கம்.  இளையராஜா பாடல்களோ, கிஷோர்குமார் பாடல்களோ, டி எம் எஸ் சுசீலா பாடல்களோ, SPB பழைய பாடல்களோ எதுவோ ஒன்று.  ஒரு பாட்டு போட்டாச்சுன்னா அதுவே அடுத்தடுத்து ஓடும்..  நேற்று அதில் ஒரு பாடலின் அடுத்து ஏ எம் ராஜாவின் 'முத்தாரமே' பாடல் வந்தது.  

அட..  கேட்டு நாளாச்சே... 

"நல்ல பாட்டு இல்லே?"

புளி கரைத்துக் கொண்டிருந்த (என் வயிற்றில் அல்ல, நிஜமாகவே)  பாஸைப் பார்த்தேன்.

"நான்தான் சொன்னேனே சித்தி.. காயெல்லாம் இவரை நறுக்கச் சொல்லிடுவேன்.." நான் பார்ப்பதைப் பார்த்தவர், "நல்ல அழகா நறுக்குவீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்" என்றார்.

குழந்தையும் குச்சி மிட்டாயும் என்று தலைப்பு ஞாபகம் வந்தாலும் அந்தப் பஞ்சாயத்தை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்று பாடல் விஷயத்தைத் தொடர்ந்தேன்.  எனக்கே பேசுவதற்கு கம்மியாகத்தான் சான்ஸ் கிடைக்கும்.  இதில் மௌனவிரதம் இருப்பது சிரமமா சொல்லுங்கள்!
"முத்தாரமே பாட்டு கேட்டு நாளாச்சு இல்லே?"

பாஸ் ஃபோன் கட் செய்த சோகத்தில் அசுவாரஸ்யமாக தலையை மட்டும் ஆட்டி ஆமோதித்தார்.

"அந்தப் படத்துல வர்ற இன்னொரு பாட்டு என்ன...  அதுவும் நல்லா இருக்கும்.."

"ரத்னமாலா" பாட்டை சொல்றீங்களா?"  புதுக்குரல் இடையே புகுந்தது.

அவர்கள் வீட்டில் செய்த பொங்கல் சாம்பிள் கொடுக்க வந்திருந்த ஜீவந்திகா ஆர்வம் பொங்க வேகமாக அருகே வந்தாள்.

"ரத்னமாலாவா?  ரத்னபாலான்னு ஒரு புத்தகம்தான் முன்னாடி வந்ததது.."

​"போங்க அங்கிள்...  முத்தாரமே பாட்டு பிடிக்குமா உங்களுக்கு.."  என் கேள்வியை புறக்கணித்து வியந்தாள் ஜீவா. 

"ஓ பிடிக்குமே...  ரொம்ப இனிமையா இருக்கும்.  உனக்கும் பிடிக்குமா?"

"அட.  நீங்க அந்தப் பாட்டை ரசிப்பீங்களா...?"  

"ஏன்..   கேட்பேனே..  பிடிக்குமே...  வேணா இவளைக் கேட்டுப்பார்..  ரொம்ப நாளா தெரியுமே.."

"ரொம்ப நாளாவா..   ஆண்ட்டி.  நீங்களும் கேட்பீர்களா?"

"தெரியும்.  ஆனால் முதல்ல எனக்கு அந்தப் பாட்டு சட்டென ஞாபகத்துக்கு வரல..  எனக்கு ஒரு முத்தாரத்தில் பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது..  எனக்கு அதுதான் பிடிக்கும்"

"ஒரு முத்தாரத்திலா..   நீங்க என்ன பாட்டு சொல்றீங்க?  அங்கிள் என்ன பாட்டு சொல்றாரு.."

"ரங்கராட்டினம் படத்துல ஏ எம் ராஜா பாடின முத்தாரமே உன் ஊடல் என்னவோ பாட்டுதான்...  ரொம்பப் பிடிக்கும்.."

"அட போங்கப்பா..  ஆண்ட்டி நீங்க சொன்ன பாட்டு?"

"ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து சேர்த்து வைத்திருந்தேன் பாட்டு..  ஏன்?  நீ எதைச் சொல்றே?"

அட கண்றாவியே..  விடுங்க ஆண்ட்டி..  நான் உங்க கிட்ட கேட்டது தப்பு..."

திரும்பி நடந்தாள்.

"இரும்மா...   இரு..  நாம பேசித் தீர்க்கலாம்!  'முத்தே என் முத்தாரமே ன்னு ரெண்டாவது லைன்ல ஒரு பாட்டுல வரும்...  அது..?"

லட்சியம் பண்ணாமல் வாசலை நோக்கி நடந்தாள்.

"முத்தாரம் இல்லன்னா ஒருவேளை நீ வித்தாரக்கள்ளி பாட்டைச் சொல்றியா?"

சட்டென திரும்பியவள், அதே வேகத்தில் மீண்டும் திரும்பி நடந்தாள்.  

"என்னம்மா...   இரு...  இங்கே வா."

 "வேணாம்..  நான் ஒண்ணு.சொல்வேன்,,  நீங்க  ஒண்ணு   சொல்வீங்க..."

"வந்து பேசினாதானே தெரியும்?"

"போங்க ஆண்ட்டி..  உங்களையெல்லாம் ட்ரம்ப் கிட்ட தான் புடிச்சு கொடுக்கணும்..."

போய்விட்டாள்!


பின்குறிப்பு 2 :

இதற்கு யோசித்த வேறு இரு தலைப்புகள் 'ஜாடிக்கேத்த மூடி', 'குழந்தையும் குச்சி மிட்டாயும்'!

===========================================================================================

சில நாட்கள், அல்லது மாதங்களுக்கு முன்னால் எலிக்குஞ்சுகளைப் பிடித்து ***றது பற்றியும், அதை FB யில் வெளியிட்டிருந்தேன் என்றும்,  கிடைக்கும்போது பகிர்கிறேன் என்றும் சொல்லி இருந்தேன்.  அதில் ஏஞ்சல் கமெண்ட்ஸ் பற்றியும் சொல்லி இருந்தேன்.  ஏஞ்சல் FB விட்டு சென்றுவிட்டதால் அவர் கமெண்ட்ஸ் காணாமல் போய்விட்டன.  எனினும் அந்தப் படமும், அங்கு அந்தப் படத்துக்கு வந்திருந்த மற்ற சுவாரஸ்யமான உரையாடல்...

- எங்கள் வீட்டில் பூனையும் கிடையாது - நான் 

- நான் வளர்க்கவெல்லாம் இல்லை! அதுவாகவே வளரத்தொடங்கியது. பழைய பேப்பர் போடும்போது அங்கு காணப்பட்டது!!  -  நான் 

- // எங்கள் வீட்டு எலிச் செல்லங்கள்! // not consistent with the symbol followed // 🙁 🙁 //  - மாதவன் 

- அது இடக்கரடக்கல் மாதவன்! 🙂 -  நான் 

- // இடக்கரடக்கல் // இது என்ன மொழி.. . என்ன அர்த்தம்.. ? ப்ளீஸ்.. சொல்லுங்க..(நெசமாவே தெரியல/புரியல..)  -  மாதவன் 

- நகைமுரண்! -  நான்  ;   முரண்தொடை ?  -  மாதவன்.

- என்னவோ ஒன்று, விடுங்க.... மறுநாள் தாய் எலி வந்து தேடிச் சென்றது. (Rat) cake கொடுத்து உபசரித்து அனுப்பினேன்! - நான் 

- I wonder, how a single rat gives birth to 6...oops  -  மாதவன் 

- ச்ச்சோ....ச்ச்வீட்டு ஸ்ரீ  -  செல்வி ஷங்கர் 

- இப்போதான் போட்டிருக்கும் புதுக்குட்டி எலிங்களா? கண்ணெல்லாம் திறந்துடுத்தா? பார்த்தால் இல்லை போலிருக்கே! 🙂  -  கீதா அக்கா.

- க்யூட்டா இருக்குப்பா பார்க்கவே.. அழகு...  -  - மஞ்சுபாஷிணி 

- அடேடே.... இந்த எலிக்குஞ்சுகளுக்குத் தேங்க்ஸ் சொல்லணும்... காணாமல் போன ஆட்களை எல்லாம் கொண்டு வருதே! Manju Bashini Sampathkumar!  -  நான் 

- எலிக் குஞ்சுகளுக்கு இருக்கும் ரசிகர்களைப் பார்த்தால் Sriram Balasubramaniam ஒரு எலிப் பண்ணை ஆரம்பிச்சிடலாம் போலிருக்கே......???  - சாமிநாத பாரதி.

- கீதா மேடம்... ஆமாம், புத்தம்புது ரிலீஸ்! ஆனா பா..........வம்... அப்புறம் கண்ணைத் திறந்ததான்னு தெரியாது.. நாங்கள்தான் அதை தூரத்தில் கொண்டு விட்டு விட்டோமே...  - நான்.

- அடப் பாவமே, யாருக்கு/எதுக்கு பக்ஷணம் ஆனதோ! 🙁  -  கீதா அக்கா.

ரசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்!!

=======================================================================================

நெல்லைத்தமிழன் சினிமா விமர்சனம் :

பனி :

திரிசூரில் வாழ்ந்துவரும் ரவுடிக்கூட்டங்களின் சாதாரண வாழ்வைப் புரட்டிப் போடும் புதிதாக உதித்த இரண்டு இளம் கொலையாளிகள் பற்றிய கதை.  திரிசூரில் புகழ் பெற்ற ‘மங்கலத்’ குடும்பத்தின் முக்கியஸ்தர் கிரி (இயக்குநர் ஜோஜு ஜார்ஜ்). ரியல் எஸ்டேட் மற்றும் மாஃபியா கேங் லீடர். மாஃபியா கேங்கில் அவருடன் படித்த மூவர், குடும்ப உறுப்பினராகவே ஆகி கூட்டாகச் செயல்படுகின்றனர். கல்லூரியிலேயே அடாவடியாகக் காதலித்து கைப்பிடித்த அழகிய மனைவி கிரிக்கு. (கௌரியாக  அபிநயா) 

இன்னொருபுறம் இரண்டு புதிய இளைஞர்கள் (ஜுனைஸ் விபி, சாகர் சூர்யா), கூலிக்காக முதல் முறை கொலை செய்து பத்து லட்சம் சம்பாதிக்கின்றனர். அந்த கெத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கிரியின் மனைவி கௌரியைச் சீண்டி அனைவர் முன்பும் கிரியால் அடி வாங்கிகின்றனர். இந்த சாதாரண சம்பவம்,  இந்த இரண்டு இளைஞர்களை எப்படி சைக்கோ வில்லன்களாக மாற்றியது, எப்படி திரிசூர் ரவுடிக்கூட்ட த்தைப் புரட்டிப் போட்டது, கிரியை பழி வாங்கினார்களா இல்லை கடைசியில் கிரியால் பழி வாங்கப்பட்டார்களா என்று சொல்லும் கேங்க்ஸ்டர் கதை.


மலையாளப் படங்களுக்கே உள்ள சிறப்பு, கதை என்ற ஒன்று இல்லாமல் அவர்கள் திரைப்படம் எடுக்கச் செல்வதில்லை. அதை விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜோஜு ஜார்ஜ். நல்ல கதை இருந்துவிட்டால், அதை விறுவிறுப்பாக்கும் திரைக்கதை இருந்துவிட்டால் படம் வெற்றி பெற,  பெரிய ஹீரோக்கள் தேவையில்லை என்று நிரூபிக்கும் படம். ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் சீமாவைத் திரையில் பார்க்கிறேன்.

கொஞ்சம் அதீத ரத்தம் இருந்தாலும், அருமையான படம். நான் ஸோனி லைவ் தளத்தில் பார்த்தேன். பார்க்கத் தவறாதீர்கள்.

=======================================================================================

தங்கள் முயற்சி, ஆரம்பம் பற்றி அல்லயன்ஸ் பதிப்பகத்தார் முன்னுரை :- 

எங்களது முயற்சி.

தற்போது ஹாஸ்யம் நிறைந்த, குடும்பச் சூழ்நிலையை வைத்து, கதைப்போக்கிலே உண்மைச் சம்பவத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுவது போன்ற எழுத்து மறைந்துவருவது குறித்து நாங்கள் மிகவும் மனம் வருத்தப்பட்டதுண்டு.

அந்தக் காலக் கட்டத்தில்தான், அதாவது 1984-85 வாக்கில், சிறந்த கதையம்சம், நிறைந்த ஹாஸ்யம், உயர்ந்த பண்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்ட எஸ்.வி.வி.யின் எழுத்துக்களை மெதுவாக வெளியிடத் தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு மேலேயே, வாசகர்களின் வரவேற்பு நன்றாக இருந்தது. பிறகு எஸ்.வி.வி.யின் பெரும்பாலான தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டோம். அப்போதுதான் எஸ்.வி.வி.யின் தொடராக முதலில் பிரசுரித்த ஆனந்த விகடன் அதிபர் திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களின் புதல்வன் திரு. எஸ். பாலசுப்பிரமணியன், எஸ்.வி.வி.யின் நூல்கள் மறுபடியும் வந்து விட்டது' என்ற சிறு வாசகம் ஒன்றை விகடனில் அறிவித்தார். அது ஒரு பெரிய விளம்பரமாக ஆகிவிட்டது. உடனே பல வாசகர்கள், "எஸ்.வி.வி.யின் நூல்களைப் போட்டது போல் ஏன் 'தேவன்' புத்தகங்களைப் போடக் கூடாது?" என்று கேட்ட வண்ணமாக இருந்தனர்.

வாசகர்களின் உந்துதலின் பேரிலும், அவர்கள் தந்த உற்சாகத்திலும் நாங்கள் தேவன் அறக்கட்டளையைச் சார்ந்த திரு. வேங்கடராமனை அணுகினோம். அவரும், 'முதலில் நீங்கள் எஸ்.வி.வி.யின் நூல்களை முடியுங்கள், பிறகு நான் ஏற்பாடு செய்கிறேன்' என்று கூறினார். ஆனால் அதற்குள் அவர் மறைந்து விட்டார். பிறகு நாங்கள் விடாப் பிடியாக, தேவன் அறக்கொடை மானேஜிங் டிரஸ்டியாக இருந்த திரு. சுந்தரம் அவர்களைச் சந்தித்தோம். அவரும் அவருடைய துணைவியாரும், எங்களுக்கு உற்சாகத்துடனே நம்பிக்கை தெரிவித்தார்கள். ஆனால் ஏனோ காலன் அவரையும் தன்னருகே அழைத்துக் கொண்டான்.

பிறகு திருமதி சுந்தரம் அவர்கள் எங்களைத் தற்போதைய டிரஸ்டிகளான திரு. லட்சுமணன் அவர்களையும் திரு. விசுவநாதன் அவர்களையும் சந்திக்குமாறு கூறினார்கள். நாங்களும் அவர்களுடன் தொடர்பு கொண்டோம். ஆனால் எவ்வளவோ இடையூறுகள் வந்த போதிலும் கடைசியில் 1991-வாக்கில், அதாவது ஆறு ஆண்டுகளின் முயற்சிக்குப் பிறகு, 'தேவ'னின் எழுத்தோவியங்கள் பல எங்கள் வெளியீடாக வருவதில் நாங்கள் மிக மிகப் பெருமை கொள்கிறோம்.

இந்த நூல்களினால் தேவன் அறக்கட்டளைக்கு வரும் வருவாய், எந்த ஒரு தனி மனிதருக்கும் சேராமல், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச் சாரியார் அவர்களின் அநுக்கிரஹத்துடன் பல நல்ல தர்ம காரியங்களுக்குச் செலவிடப் படுகிறது. வாசகர்கள் இந்த நூல்களைப் பெருமளவில் ஆதரித்து, தேவன் அறக் கட்டளையினரின் பணியினை ஊக்குவிப்பார்கள் என நம்புகிறோம்.


==========================================================================================

OTT யில் பார்த்த படம் - ஸ்ரீராம்!

The Great Flood 

நெட்ஃப்ளிக்சில் நான் பார்த்த தென் கொரியபடம்.   டிசம்பர் 19 ஆம் தேதிதான் நேரடியாக  நெட்ப்ளிக்சில் விளியாகி இருந்தது போலும்.  ட்ரெயிலர் பார்த்து, முதலில் நான் பயங்கரமான வெள்ளத்திலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதையாக இருக்கும் என்று நினைத்து இரண்டு முறை வெவ்வேறு படங்கள் பார்த்தேன்.  அப்புறம் பார்க்கும்போதுதான் தெரிந்தது, இது வேறுவகைப் படம் என்று.

ஒருநாள் காலை எழும்போது ஆனா பயங்கரமான வெள்ளத்தைச் சந்திக்கிறாள். அபார்ட்மென்ட்டில் மூன்றாவது மாடியில் வீட்டுக்குள் வந்திருக்கும் வெள்ளம்.  வெளியில் பார்த்தால் ஜன்னல் வழியே காணும் காட்சி மிரள வைக்கிறது.  நான் பழைய வீட்டில் சென்னை வெள்ளத்தின்போது கற்பனை செய்த காட்சி போல பயமுறுத்தியது!

அவள் மகன் தனது செல்லை அவள் பார்க்க வேண்டுகிறான்.  மறுக்கிறாள் ஆனா.  அவள் ஒரு AI எஞ்சினியர்.  U N அரசு அவளைக் காப்பாற்ற ஆளை அனுப்புகிறது.  South Pole ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆஸ்டராய்டு சோதனை காரணமாக உலகையே பெருவெள்ளம் சூழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.  மனித குலமே அழியும் நிலை.  

செயற்கை முறையில் உருவாக்கப்படும் மனித உருவங்களுக்கு உணர்வுகள் கொடுக்கும் தொழில்நுட்பத்தில் வேலை செய்பவள் ஆனா.  அவளைக் காத்து புதிய மனித செயற்கை உயிரினங்களை உருவாக்க நினைக்கிறது ஒரு அரசு சார்ந்த குழு.  இவள் மகனே செயற்கை முறையில் சோதனைக்காக உருவாக்கப்பட்டவன்தான்.  அவனை ஒருகட்டத்தில் இழக்க நேரிடும் என்று இவளுக்கும் தெரியும் என்றாலும் இப்போது அவளுக்குஅவனை விட மனமில்லை.    உயிரதப்பித் பிழைக்க இவள் மொட்டை மாடிக்கு ஓடும்போது ஒவ்வொரு நாடியாக வெள்ளை பரவுகிறது.  நடுவில் ஒரு மாடியில் கணவனுடன் உதவியற்ற நிலையில் அமர்ந்திருக்கும் ஒரு கர்ப்பிணிப்பெண் பிரசவ வேதனையில் உதவி கேட்கிறாள்.  இன்னொரு மாடியில் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட சிறுமி உதவி கேட்டு அழுகிறாள்.  முதல் முயற்சிகளில் முடியாததை அடுத்த முயற்சிகளில் அவர்களுக்கு உதவுகிறாள் ஆனா.  ஒரு கட்டத்தில் அவள் பல்வேறு கடினமான அனுபவங்களுக்குப் பின் காப்பாற்றப்பட்டு ஒரு பெரிய விண்கலத்தில் மற்ற விஞ்ஞானிகளுடன் பயணம் மேற்கொள்ளும்போது விண் குப்பையால் தாக்கப்பட்டு அந்த விண்கலம் வெடிக்க எல்லோரும் உயிரிழந்தாலும் இவள் மறுபடி புதிதாக தனது அபார்ட்மென்ட்டில் விழிக்கிறாள்.  மறுபடி அதே வெள்ளம், பையனின் கெஞ்சல், தப்பிக்கும் முயற்சிகள்..  இவை மீண்டும் மீண்டும் ஆயிரக்கணக்கான முறை நடக்கிறது.  இதையே அவள் தன் மகனின் செல்லில் அவன் காட்டிய ஓவியங்களைக் கொண்டுதான் அறிகிறாள்.  

அவன் கேட்கிறான் "நான் ஏன் ஆறு வயசிலேயே இருக்கிறேன்?" 

அவள் பனியனில் வரும் எண்ணைக்கொண்டு வெவ்வேறு முயற்சிகள் என்பதை யூகிக்க வைக்கிறார்கள்.  என்ன ஆகிறது என்பது கதை.  ஒன்றரை மணி நேரம்தான் படம்.  தமிழில் வசனங்கள் கேட்கலாம்.  பார்த்து விட்டு கதை புரியாவிட்டால் இங்கு செல்லலாம்!




=========================================================================================================================
தினசரி எனக்கு Good Morning மெஸேஜ் அனுப்பும் நண்பர்களில் வெங்கட்ராமன் என்ற நண்பர் நேற்று அனுப்பிய படம் என்னைக் கவர்ந்தது.  அதைச் சேமித்துக் கொண்டு அதற்கு எழுதியது கீழே...


எட்டிப் பார்க்கும் குதிரைக்கு ஒரு கவிதை

இன்றைய கோட்டாவுக்கு  ஒரு 
குட்டி விடுதலை கிடைக்குமா 
அல்லது 
சாப்பாடு கொண்டு வருகிறார்களா 
என்று 
எட்டிப் பார்க்கிறது உள்ளே 
கட்டிப் போடப்பட்டிருக்கும் 
குதிரை 

இது குறித்து கேட்டபோது 
குதிரை சொன்னது...!

குதித்து எப்பொழுதும் ஓடாமல் 
குறித்த நேரத்தில் மட்டும் ஓடுவது 
பழகிவிட்டது 
அடிமை வாழ்வில் 
அன்றாடம் உணவு கிடைக்கிறது தான் 
​ஆனால்
சுதந்திர வாழ்வில் 
எப்பொழுதும் கிடைப்பது சந்தோஷம் 
காடுகளில் ஓடிய நாங்கள் 
இப்போது காசுக்கு ஓடுகிறோம் 

===================================================================================

M S விஸ்வநாதன், S P பாலசுப்ரமணியம் 

1976 ல் ஜெய்சங்கரின் 150 வது படமாக வெளியானது டாக்சி டிரைவர்.  எனவே ஸ்பெஷலாக ஈஸ்ட்மென் காலரில் எடுத்திருக்கிறார்கள்.  ஸ்ரீதேவி அவருக்கு ஜோடி.  நான்கு வயதில் கந்தன் கருணை படத்தில் நடிக்க ஆரம்பித்த ஸ்ரீதேவி 13 வயதில் மூன்று முடிச்சு படத்தில் கதாநாயகியானார்.   அதே வருடமே இந்தப் படத்திலும் நடித்தார்.  20 வயதில் ஹிந்திக்குப் போய் நடித்தவர் அங்கே கொடிகட்டி பறந்தார்.  ஜெய்சங்கருடனேயே குழந்தை நட்சத்திரமாக கனிமுத்து பாப்பா படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீதேவி.  

"I lost out on going to school and college life, but I got into the film industry and worked without a gap – from child actor, I went straight to heroine. There was no time to think and I was grateful for it.

— Sridevi, The New Indian Express, 2013


எம் எஸ் விஸ்வநாதன் இசை;  பாடல் கவியரசர்.  இசை அமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனுடன் SPB சில பாடல்கள் இணைந்து பாடி இருக்கிறார்.  அதில் ஒன்று இது.  வேறு இரண்டு பாடல்கள் முன்னர் பகிர்ந்திருக்கிறேன் என்று நினைவு!

சமயங்களில் எம் எஸ் வி யை ஓவர்டேக் செய்வதுபோல SPB பாடும்போது MSV செல்லமாக கோபித்துக் கொள்வாராம்!  இந்தப் பாடலில் தலைவர் குரலை கேளுங்கள்.  ரேவதி ராகத்தில் அமைந்த பாடல் இது என்கிறது விக்கி!

நான் ரெகார்ட் செய்து வைத்திருந்த SPB கேசட்டில் A side ல் கடைசி பாடல் இது.  இரண்டாவது சரணமும் முடிந்து பல்லவி வரும் இடத்தில பாதியில் பொட்டென்று நின்று விடும் பாடல்!

SPB : இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
பொங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல

SPB : காற்றினில் வந்தது பூவின் வாசம்
காட்டுப்பூவென பிறந்தது நேசம்
காற்றினில் வந்தது பூவில் வாசம்
காட்டுப்பூவென பிறந்தது நேசம்
தேவன் மலரென தெரிந்தது இன்று
தேடிய கண்கள் செல்வது எங்கு

SPB : இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல

MSV : வைரம் அமர்வது தங்கத்தின் மீது
மாதவன் துணை தான் திருமகள் மாது
மங்கையின் அழகுக்கு இணை ஒன்று ஏது
மன்மதனே கண்டு மயங்கிடும் போது

SPB : மாணிக்க வீணையில் ஆயிரம் ராகம்
வாசிக்க போவது யாரோ எவரோ
காணிக்கை தந்தது ஏழையின் கரங்கள்
கடவுள் வகுத்தது அவரவர் இடங்கள்
MSV, SPB : பொங்கும் நிலவு பொதிகை தென்றல்

மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

MSV, SPB : இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல

MSV: கண்கள் இரண்டும் கரு வண்ணப்பூக்கள்
காவியம் பாடிடும் கார்முகில் கூந்தல்
பெண்மைலே ஒரு பேரின்ப நடனம்
பிறந்தால் அதுதான் ஜாதியின் ஜனனம்

SPB : களங்கமில்லா ஒரு சந்திரவதனி
கவிதையிலே ஒரு சௌந்தர்யலஹரி
தென்னம்பாளை செந்நிற வாழை
சிறியவன் சொன்னேன் சொன்னவன் ஏழை
குழு : பொங்கும் நிலவு பொதிகை தென்றல்
மங்கை பல்லாண்டு வாழ்க வாழ்க

MSV, SPB : இது ராஜகோபுர தீபம் அகல் விளக்கு அல்ல
மழை மூடும் ஐப்பசி மேகம் பனித் துளி அல்ல
=========================================================================================

இளையராஜா, S P பாலசுப்ரமணியம் 


SPB, MSV யுடன் சேர்ந்து பாடிய பாடல் கேட்டோம்...  கேட்டோம்தானே?!!  

அடுத்து SPB இளையராஜாவுடன் சேர்ந்து பாடிய ஒரே பாடல்!  எனக்குத் தெரிந்து இந்த ஒரே பாடல்தான் இளையராஜாவும், SPB யும் இணைந்து பாடி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். எவ்வளவு யோசித்தும் வேறு பாடல் நினைவுக்கு வரவில்லை.

புதுப்புது அர்த்தங்கள் என்கிற படம் K பாலச்சந்தர் இயக்கத்தில் 1989 ல் வெளியானது.  ரகுமான், கீதா, சித்தாரா நடித்திருந்த அந்தப் படத்துக்கு இசை இளையராஜா.  பாடல்கள் வாலி.

இந்தப் படத்தில் இளையராஜா இசைக்குழுவில் வயலின் வாசிப்பவராக ஜனகராஜ் நடித்திருப்பார்.  அவருக்கு திக்குவாய் பிரச்னை இருக்கும்.  அதை வைத்தே பாடலை அமைத்திருப்பார் இளையராஜா.  ஜனகராஜுக்கு இளையராஜாவும், ரகுமானுக்கு SPBயும் குரல் கொடுத்திருப்பார்கள்.

இளையராஜா : வாசிக்கறீங்ளா
ஆ ஆ வாசீங்கோ 
ஓ ஒன் டு கொடுக்கணுமா 
சரி ஒன் டு த்ரீ போர் 
அட ஏன் வாசிக்கல
ர் ர்.. ரிதம் என்னன்னு சொல்லணுமா
ஆங் ஜும் கு ஜூஜும்கு ஜும் கு
ஜூஜும்கு ஜும் வாசீங்கோ

இளையராஜா : அப்படி தான்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
எடுத்து நான் விடவா என் பாட்டைத் தோ
தோ தோ தோ 
குடிக்கதான் உடனே கொண்டா நீ சோ சோ சோ

SPB : என்னடா சொல்ல வர்றே

இளையராஜா : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோ தோ தோழா
SPB : ஆஹான்

இளையராஜா : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா
ஹே ஹே
SPB : ஓஹோ

இளையராஜா : எட்டுக்கட்டை நான் எட்டுவேன் 
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் 
ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்

இளையராஜா : எடுத்து நான் விடவா என் பாட்டை
தோ தோ
SPB : தோழா
இளையராஜா : குடிக்க தான் உடனே கொண்டா நீ
சோ சோ சோ
SPB : இந்தாடா சோடா

இளையராஜா : அய்யோ

சபாஷ் இந்தா

இளையராஜா : ஏ நான் பாட பிறந்திடும் ஷோ ஷோ ஷோ 
ஷோக்கு
ஆனாலும் தடுக்குது இளையராஜா : நா நா நாக்கு

என் பாடல் இனித்திடும் தேன் தேன்
தேன் அட தென்பாண்டி குயிலினம் நான் தான்

இளையராஜா : நீ பாட் போ போ பாடு
SPB : நான் பாடவே ஏழு சுரங்களும் தான் தாவிடும் நாவிடம்
இளையராஜா : ஓஹோ
SPB : ஊர் கூடியே மாலை அணிந்திட தான் ஆடிடும் ஆடிடும்
இளையராஜா : ஓஹோ

SPB : என் இசையை கேட்டாலே வெண்ணிலா வாராதா
இளையராஜா : அட டா டா டா
SPB : நள்ளிரவில் நான் கொஞ்ச தன்னையே தாராதோ
இளையராஜா : சு சு சு
இளையராஜா : என்ன உன் சங்கதி சொல்லம்மா
இளையராஜா : ஹான் ஹான்

இளையராஜா : எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோ
தோதோதோ
SPB : தோழாடா
இளையராஜா : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோ
SPB : வராத வாா்த்தையை வுட்டுடு

இளையராஜா : எட்டுக்கட்டை நான் எட்டுவேன்
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
SPB : ஜமாய்
இளையராஜா : இன்பவெள்ளமாய் கொட்டுவேன் 
ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்
எடுத்து நான் விடவா என் பாட்டை
SPB : தோழா தோழா

இளையராஜா : தா தா தா தா தா
SPB : தா தக்கிடதா
இளையராஜா : ஹே ஹே தேங்க் யூ
தி தி தி தி தி தி 
SPB : தீம் தகிட தீம்
இளையராஜா : சபாஷ்

இளையராஜா : தா தா 
SPB : தகிட
இளையராஜா : தீ தீ
SPB : திகிட
இளையராஜா : கி கி
SPB : கிடித
SPB : ரொம்ப திக்குதா
இளையராஜா : ஹா ஹா ஹா ஹா ஹா ஹே ஹே

SPB : பாடாக படுத்துது கா கா கா
இளையராஜா : காதல்
SPB : கூடாது நமக்குள்ளே மோ ஓஓ
இளையராஜா : ஹே ஹே மோதல்
SPB : பால் கூட கசக்குது ஏன் ஏன் ஏன்
இளையராஜா : ஏ....ன்
SPB : பட்டுப்பாய் கூட உறுத்திட பார்த்தேன்
இளையராஜா : என்ன ஓஓ…
SPB : டேய் சும்மா இருடா 

SPB : என் ஓவியம் நீல நயனங்களைக் காட்டுதே வாட்டுதே
பெண் ஞாபகம் பாதிஇரவுகளில் தோன்றுதே தூண்டுதே 
பத்து விரல் நான் தீண்ட 
சித்திரம் வாராதா
இளையராஜா : த்சு த்சு த்சு
SPB : பட்டு உடல் நான் வேண்ட சம்மதம் தாராதா 
இப்பவோ எப்பவோ சொல்லம்மா
இளையராஜா: ஹான் ஹான்

SPB : எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா
இளையராஜா : ஹான்
SPB : குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா
இளையராஜா : ஹ்ம்ம்

SPB : எட்டுக்கட்டை நான் எட்டுவேன் 
வர்ணமெட்டு தான் கட்டுவேன்
இன்ப வெள்ளமாய் கொட்டுவேன் 
ரசிகா் நெஞ்சிலே ஒட்டுவேன்
இளையராஜா : ஹான்
SPB, இளையராஜா : எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா 
குடிக்கத்தான் உடனே கொண்டா நீ சோ சோ சோடா 
எடுத்து நான் விடவா என் பாட்டை தோழா தோழா

===========================================================================================================


பல ஆண்டுகளுக்கு முன் ‘வசந்த்’ தொலைக்காட்சியின் ‘சந்திப்போமா’ நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட, நாடக, சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான நித்யாவின் பேட்டி ஒளிபரப்பானது. பேட்டி கண்டவர் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரமான ஐஸ்வர்யா. பேட்டியின்போது ‘நடிகர் திலகத்தை’ப் பற்றி நித்யா சொன்னது:

​“பாலாஜி சாருடைய ‘தீர்ப்பு’ படத்தில் சிவாஜி சாருடைய மகளாக நடித்திருந்தேன். சரத்பாபு, விஜயகுமார் இருவரும் என் அண்ணன்கள். படத்தில் நான் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோகும் காட்சி வரும். என் உடலை தகனம் செய்யும் காட்சி சத்யா ஸ்டுடியோவின் வெட்டவெளி பொட்டலில் நடந்தது. என்னைக் கற்பழித்தவனைக் கொன்றுவிட்டு சிறையில் இருக்கும் என் தந்தை சிவாஜி சார், பரோலில் வந்து என் சிதைக்கு தீ வைப்பதாக காட்சி.
​விறகுகளால் சிதை அமைத்து அதில் என்னைப் படுக்க வைத்து, உடல் முழுக்க வரட்டி அடுக்கி முகத்தை மட்டும் திறந்து வைத்து குளோசப் ஷாட்டுகளை எடுத்தனர். பின்னர் முகத்தையும் வரட்டியால் மூடி சிவாஜி அப்பா தீ வைப்பது போல காட்சி. அதை எடுத்து முடித்ததும் டைரக்டர் , சிவாஜி சாருடைய குளோசப் காட்சிகளை எடுத்து முடித்து அனுப்பி விடலாம் என்று மும்முரமானார்.

​அதைக் கவனித்த சிவாஜி சார் டைரக்டரிடம், ‘ஏப்பா, அந்தப் பொண்ணை என்ன மலர்ப்படுக்கையிலா படுக்க வைத்திருக்கிறீர்கள்? பாவம், சிதையில் படுத்திருக்குப்பா! முதல்ல அதோட ஷாட்டுகளை எடுத்து முடிச்சு குழந்தையை அங்கிருந்து கிளப்புங்கப்பா. அப்புறம் என்னோட ஷாட்டுகளை எடுத்துக்கலாம். அந்தப் பெண்ணோட சீன்கள் முடிய எவ்வளவு நேரமாகும்?’ என்று கேட்டார்.

​‘ஒரு மணி நேரம் ஆகும் அண்ணே’ என்று இயக்குனர் சொன்னதும், ‘இரண்டு மணி, மூன்று மணி நேரம் ஆனாலும் அப்பா நான் வெயிட் பண்றேன். முதல்ல அந்த குழந்தையோட சீன்களை முடிச்சு சிதையிலிருந்து எழுப்புங்க’ என்று சொன்னவர், அந்த வெட்டவெளியில் ஒரு குடையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.

​திரைப்படங்களில் இது போன்ற சாவுக்காட்சிகள் எடுத்தால் அது முடிந்ததும் அதில் நடித்தவருக்கு திருஷ்டி கழிப்பார்கள். என்னுடைய காட்சிகள் எடுத்து முடித்ததும் எழுந்து வந்த சிவாஜி சார், ‘குழந்தைக்கு நான் திருஷ்டி கழிக்கிறேன்’ என்று திருஷ்டி கழித்தவர், ‘உனக்கு சாவே வரக்கூடாதுன்னு ஆசிர்வதிக்கிறேன்மா’ என்று ஆசிர்வதித்தார்.”

​இந்த இடத்தில் நித்யாவின் கண்கள் பனித்தன. “அவரோடு ஒப்பிடும்போது நான் எல்லாம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களில் சின்னவங்க, பெரியவங்க என்ற வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் அவர் மதிப்பு கொடுப்பதில் எல்லோரும் அவர்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம்.”
அப்போது பேட்டி கண்ட ஐஸ்வர்யா சொன்னது: “அவரோட படங்களைப் பார்க்கும்போது சிவாஜி அங்கிள் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய கலைஞர், எவ்வளவு பெரிய சாதனையாளர் என்றுதான் தெரிந்து கொள்கிறோம். ஆனால் அவரோடு பழகிய உங்களைப் போன்றவர்கள் சொல்லும் இது போன்ற சம்பவங்கள் மூலம் தான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதும் நமக்குத் தெரிகிறது. இனி வரும் தலைமுறைகளும் அவரைப் பற்றி அறிந்து வியக்கத்தான் போகின்றன.”

=====================================================================================================================================




அரியாசனத்தை மட்டுமா கரையான் அரித்திருக்கிறது?!



ஆரம்ப எழுத்துகள் பைண்டிங் வேலையில் காணாமல் போயிருந்தாலும் புரிந்துகொள்ள முடியும்!

49 கருத்துகள்:

  1. சந்திராஷ்டமத்தில் புதிய நபர் நுழைந்தபோதே என்ன நடக்கப் போகிறது எனப் புரிந்துவிட்டது. புதுப்பாடல் என்னன்னு தெரியாது. இருந்தாலும் இதில் யார் பல்ப் வாங்கினதுன்னு யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  புதுப்பாடல் பராசக்தி பாடல்.  கேழே படம் கொடுத்திருக்கேனே!  

      நீக்கு
  2. பனி படத்தின் ஸ்டில்களை வெளியிடாத்தன் காரணம் என்ன? கதாநாயகியைப் பிடிக்கலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொன்றாய் முடித்துக் கொண்டு வரும்போது இணைக்க மறந்து விட்டது. இப்போது இணைத்து விட்டேன்.

      நீக்கு
  3. குறிப்பிட மறந்தது வேட்டையாடு விளையாடு வில்லன்களை நினைவுபடுத்தியது பற்றி... அந்த தீம்.

    பதிலளிநீக்கு
  4. சிவாஜிக்கு அரசியலில் ஈடுபடணும் என்ற எண்ணம் இல்லாத்தால் தன்னைப்பற்றி அவரும் விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை, பத்திரிகையாளர்களும் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்தப் பகுதி புதிது, ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி செய்த உதவிகளையும் அவர் விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை.  குறிப்பாக ராணுவத்துக்கு அவர் நிறைய நிதி கொடுத்திருக்கிறார்.

      நீக்கு
  5. தேனாம்பேட்டை...இறங்கு. (சிவகுமார் படம்).. அந்தப் பாட்டில் மலேஷியாவுடன். எஸ் பி பியுடன் வேறு பாடல் யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் முன்னரே யோசித்து மண்டை காய்ந்து போனேன்.  எனக்குத் தெரிந்து வேறு இல்லை!  நீங்கள் சொல்லி இருக்கும் 'என் கண்மணி' பாடலில் SPB மட்டுமே ஆண்குரல்.  அந்த வசனம் சிவகுமார் குரல்.  பெண்குரல் சுசீலாம்மா.

      நீக்கு
  6. தைரியமா great flood படம் பார்க்கலாமா? நேரம் வீணாகாதே. எனக்கு இல்லாத விஷயமாக வரும் சில sci-fi பிடிப்பதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வகை படங்கள் பிடிக்காது என்றால் நோ, பார்க்காதீர்கள்.  டைம் லூப் படம் போலவும் எடுத்துக் கொள்ளலாம்.  வேறு விளக்கங்களும் இருக்கலாம். ஆனால் ஜஸ்ட் ஒண்ணரை மணி நேரம்தான்!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. சந்திராஷ்டமம் பரிகாரம் நல்லதுதான்.
    அமைதியாக இருந்தாலும் வீடு தேடி வருகிறதே! பக்கத்து வீட்டு பெண் ரூபத்தில்

    புதுபாடலை சொல்லாமலே போய் விட்டாரே!

    புதுபாடல் நானும் கேட்கவில்லை இன்னும்.அதனால் எனக்கும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   சும்மா கற்பனை தான் அக்கா.   முத்தாரமே என்று பராசக்தி பாடல் வரி யு டியூபில் பார்த்ததும் தோன்றியது இது.  அவ்வளவுதான்.  ஏனெனில் எனக்கு முதலில் ஞாபகம் வந்தது ஏ எம் ராஜா பாடல்தான்.  புதிய பாடல் நானுமே கேட்கவில்லை.  இதைச் சொன்னால் மகன்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று கற்பனை செய்து ஒரு பெண் கற்பனைப் பாத்திரத்தைக் கொண்டு வந்தேன்!

      நீக்கு
  10. எலி குஞ்சுகளை பார்த்து நடந்த சுவாரஸ்யமான உரையாடல்களை ரசித்தேன்

    நெல்லைத்தமிழன் படம் விமர்சனம் நன்றாக இருக்கிறது. ஆனால் கொஞ்ச நாட்களாக அதீத ரத்தம் சிந்தும் காட்சிகளை பார்க்க மனம் துணிய மாட்டேன் என்கிறது.

    மாயவர்த்தில் நடந்த புத்தக கண்காட்சியில் அல்லயன்ஸ் பதிப்பகத்தார் புத்தகங்கள் தான் தேவன் கதைகள் வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. FB மெமரியில் உரையாடலின் சுஃவாரயத்தைப் பார்த்தே நானும் இங்கு ஷேர் செய்தேன்.  

      நான் சென்ற வருடம் அல்லயன்ஸில் சோ புத்தகங்கள் சில வாங்கினேன்.

      நீக்கு
  11. தென் கொரியபட விமர்சனம் குதிரையின் புலம்பல்கவிதை, சிவாஜி பற்றி நித்யா சொன்னது, மற்றும் பாடல்கள், நகைச்சுவை அனைத்தையும் ரசித்தேன்.
    வெள்ளி பாடல்களும் வியாழனில் வந்து விட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளி பாடல்கள் - சென்ற வாரமும் இப்படித்தானே அக்கா? 
      நன்றி உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும்.

      நீக்கு
  12. இது ராஜ கோபுர தீபம் அகல்விளக்கு அல்ல பாடல் கேட்டு பல வருடம் ஆச்சு.
    தொலைக்காட்சிகளிலும் பழைய பாடல் நிகழ்ச்சியில் வைக்கவே இல்லை. இன்று கேட்டேன் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தொலைக்காட்சியில் பாடல்கள் கேட்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன! எனவே விவரம் தெரியாது.

      நீக்கு
  13. டாக்சி டிரைவர் படம் பார்க்கவில்லை , பார்க்கவேண்டும் யூடியூப்பில் இருந்தால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிறிப் போயிருக்கிறது காட்சி.  படம் எப்படி தெரியுமோ... 

      ஒரு கொசுறு தகவல்.  டாக்சி டிரைவர் என்ற பெயரிலேயே 70 களில் ஒரு ஆங்கிலப் படமும், தேவ் ஆனந் நடிப்பில் ஒரு ஹிந்திப் படமும் வந்துள்ளன.  மூன்றுமே வெவ்வேறு கதைகள்.  தலைப்பு மட்டுமே ஒன்று!

      நீக்கு
  14. அமைதி காப்பது //

    ஸ்ரீரான், இது எப்பவுமே கை கொடுக்கும், இல்லையா! மனக்குழப்பங்கள், கோபம் எல்லாம் எல்லா நாளும் வரும் போது ......!!!!!

    நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
    கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

    -அருணகிரிநாதரின் கந்தரலங்காரம்

    வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
    ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே
    ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  

      உதாரணங்களுக்கு நன்றி.  மனக் குழப்பம் கிடையாது.  தெளிவாய் இருக்கேன்!  வியாழனுக்கு ஒரு பதிவு கொடுக்கணும்னு தெளிவா இருக்கேன்!!!

      நீக்கு
    2. பாடல் அருமை சகோதரி. நல்ல பொருள் கொண்ட பாடல்.

      /ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டுமுடனே /

      இங்கும் ( எபி) இவ்வார நாட்கள் அனைத்தும் இப்போதெல்லாம் "பிரண்டு உடனே" நினைவில் கொள்வதற்கு சிறிது குழப்பங்கள் வருகிறது. போகப் போக பழகிவிடுமென நம்புகிறேன்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா நாகேஷுக்கு சொல்லப்பட்ட ஜோசியம் போல பழகிவிடும்!

      நீக்கு
  15. "நான்தான் சொன்னேனே சித்தி.. காயெல்லாம் இவரை நறுக்கச் சொல்லிடுவேன்.." நான் பார்ப்பதைப் பார்த்தவர், "நல்ல அழகா நறுக்குவீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்" என்றார்.//

    சிரித்துவிட்டேன்!!

    //எனக்கே பேசுவதற்கு கம்மியாகத்தான் சான்ஸ் கிடைக்கும். இதில் மௌனவிரதம் இருப்பது சிரமமா சொல்லுங்கள்!//

    அப்படிப் போடுங்க!!!!! எனக்கு வீட்டில் பல சமயங்களில் இது உதவுகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் பேசும்போது என் குரல் எடுபடாமல் போகிறது.  அந்த சர்ஜரிக்கு அப்புறம் என் குரலை ஒடுக்கி விட்டார் போல ENT Dr சோமு 

      நீக்கு
  16. ஜஸ்ட் நேரெதிராக நம் வீட்டில். ஹிஹிஹிஹி....

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ஆ! //ஜீவந்திகா//

    ஆ! ஒரு ராகம் நான் எழுதி ......

    கீதா

    பதிலளிநீக்கு
  18. ஸ்ரீராம் ரொம்பப் பிடிச்ச பாடல் முத்தாரமே அருமையான இசை...

    முத்தாரமே உன் ஊடல் என்னவோ!!? படம் பெயர் தெரியாது...பாட்டு மட்டும் கேட்ட நினைவு உபயம் இலங்கை வானொலி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் ரங்கராட்டினம்...  அங்கேயே சொல்லி இருக்கேனே.. போதாதற்கு அந்தப் படத்தின் இந்தப் பாடலும், ஒரு தலைவர் பாடலும் share செய்திருந்த லிங்க்கும் கொடுத்திருக்கேனே...

      நீக்கு
    2. பார்த்துவிட்டேன் ஸ்ரீராம் படத்தின் பெயரை...அந்தப் பாட்டு உடனே பாடல் நினைவுக்கு வந்து மனசுல ஓடிச்சா....இதை விட்டுப்புட்டேன்!

      கீதா

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம். வழக்கமான வியாழனாக இல்லாமல் சந்திராஷ்டம வியாழன்! ஹஹஹ! (ஹா ஹா ஹா என்றால் வில்லன் சிரிப்பு போல் இருக்கிறது) அளவுக்கதிகமான சினிமா செய்திகள். அல்லயன்ஸ் தகவல் சிறப்பு. தேவன் புத்தகங்களின் ராயல்டி பணம் தர்ம காரியங்களுக்கு பயன்படுத்தப் படுகின்றது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...  இ வ்வளவுதான் அளவு என்று இருக்கிறதா என்ன!!!  வெள்ளியில் வெறும் சினிமா செய்திகள் மட்டும்தானே இடம்பெறும்!

      அல்லயன்ஸ் தகவல் ஒரு விஷயத்தில் அது பகிரப்பட்டதன் பலனை அடைந்து விட்டது பாருங்கள்!

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பகுதி நல்ல நகைச்சுவையாக உள்ளது. சந்திராஷ்டமம் பற்றிய தெளிவான கருத்து.

    /நான்தான் சொன்னேனே சித்தி.. காயெல்லாம் இவரை நறுக்கச் சொல்லிடுவேன்.." நான் பார்ப்பதைப் பார்த்தவர், "நல்ல அழகா நறுக்குவீங்கன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்" என்றார்./

    ஹா ஹா ஹா. நல்ல சமாளிப்பு . உங்கள் பாஸ் அழகாக சமாளித்திருக்கிறார்.

    " முத்தாரம்" பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசித்திருக்கிறேன். புதுப்பாட்டு கேட்டதில்லை. பழைய அந்தப்பாடலின் சிவாஜி கே. ஆர் விஜயாவின் நடிப்பு நன்றாக இருக்கும். நல்ல கற்பனை கலந்த உங்களின் உரையாடல்களை ரசித்துப்படித்தேன். பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "கற்பூர பொம்மை ஒன்று" பாடலும் அருமையாக இருக்கும்.அதில் எஸ்பிபி அவர்கள் நடித்தே இருப்பார். படம் பெயர் நினைவில் வரமாட்டங்கிறது.

      நீக்கு
    2. முத்தாரம் புதுப் பாடல் நானும் கேட்டதில்லை.. ஹிஹிஹி...

      கற்பூர பொம்மை ஒன்று பாடல் கேளடி கண்மணி படத்தில் இடம்பெற்ற பாடல்.

      நீக்கு
    3. கமலாக்கா கற்பூர முல்லை ஒன்று பாட்டு எஸ்பிபி? அது ஸ்ரீவித்யா அமலா எல்லாம் வரும் படமாச்சே....ஓ இப்ப நானும் ஜீவந்திகா ஆகிட்டேன்!!!

      நீங்க சொல்லியிருக்கும் பாட்டு படம் கேளடிகண்மனி என்று நினைக்கிறேன்

      கீதா

      நீக்கு
  21. "போங்க ஆண்ட்டி.. உங்களையெல்லாம் ட்ரம்ப் கிட்ட தான் புடிச்சு கொடுக்கணும்..."//

    சிரித்துவிட்டேன்! அவ்வளவு குழப்பிட்டீங்களா என்ன!!!? ஜீவா சின்னப் பெண்ணோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...  இன்னும் வயது யோசிக்கவில்லை.  காலேஜ் பொண்ணுன்னு வச்சுக்குவோமா?

      நீக்கு
  22. அடிமை வாழ்வில்
    அன்றாடம் உணவு கிடைக்கிறது தான்
    ஆனால்
    சுதந்திர வாழ்வில்
    எப்பொழுதும் கிடைப்பது சந்தோஷம்
    காடுகளில் ஓடிய நாங்கள்
    இப்போது காசுக்கு ஓடுகிறோம்

    ​இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் நிலையை சரியாக சொல்கிறீர்கள்.
    ஜோக்குகள் ஜோக்காக இல்லை.
    இவ்வளவு தான் இவ்வாறு பின்னூட்டம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வாறு---- இவ்வார என்று திருத்திக் கொள்ளவும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!