4.5.26

"திங்க"க்கிழமை :: கேழ்வரகு சேமியா / சேவை இட்லி - கீதா ரெங்கன் ரெஸிப்பி

 

 கேழ்வரகு சேமியா / சேவை இட்லி


பெங்களூருக்கு வந்த புதிதில் இருந்த வீட்டிலும், கொரோனா சமயத்தில் இருந்த வேறொரு வீட்டிலும் தனிவீடுகள் என்பதால் மொட்டை மாடி வசதி உண்டு. எனவே வற்றல், வடாம், மரச்சீனி அப்பளம், ஊறுகாய் என்று மகனுக்கு அனுப்ப முடிந்தது. கூடவே ரெடி மேட் சாமான்கள் வீட்டிலேயே தயாரித்து அனுப்ப முடிந்தது.

அவனுக்கு சேவை ரொம்பப் பிடிக்கும். எனவே புழுங்கலரிசி ஊற வைத்து அரைத்து கிளறி வேக வைத்து (வற்றல் வடாமுக்குச் செய்வோமே அப்படி), சேவைநாழியில் பிழிந்து, நீட்டமாகவோ வட்டமாகவோ பிழிந்து வெயிலில் நன்றாகக் காய வைத்து, அவனுக்கு instant சேவையாக / இடியாப்பமாக அவன் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று அனுப்பியதுண்டு. அதிலும் இப்படி இட்லி செய்திருக்கிறேன்.

இப்போது அவனும் என்னைப் போல் இனியவன் என்பதால், வற்றல் வடாம், ஊறுகாய், அரிசி எதுவும் பயன்படுத்துவதில்லை. சரி, கேழ்வரகு, கம்பு, சோள மாவில் சேவை / இடியாப்பம் செய்கிறோமே அப்படி செய்து காய வைத்து அவனுக்கு அனுப்பினாலோ என்று கேழ்வரகு மாவில் முதலில் செய்து பார்த்தேன். மாவை கொஞ்சம் வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் எந்த அளவு மாவு எடுக்கிறோமோ அந்த அளவு அல்லது ஒரு அரை கப் கூடுதலாக, கொதிக்கும் நீரில் போட்டு நன்றாக வேகும் அளவு கிளற வேண்டும். மாவு தளர இருக்கக் கூடாது. பின்னர் (சேவை / இடியாப்பம்) அச்சில் பிழிந்து நன்றாகக் காய வைத்து ஒரு பரிசோதனை செய்தேன். கொஞ்சமாகத்தான். சரியாக வந்தது.

நீங்கள் கடையில் வாங்கும் கேழ்வரகு சேவை என்றால் அதைப் பயன்படுத்தலாம். கேழ்வரகு சேவை பாக்கெட்தான் என்றில்லை, அரிசி சேவை, எந்த சேவையாக இருந்தாலும் பயன்படுத்தலாம். நான் இரண்டும் பயன்படுத்தியிருக்கிறேன். 

ஒரு கப் காய வைக்கப்பட்ட ரெடி சேவை எடுத்துக் கொண்டால், அதற்கு 1/4 - 1/3 கப் தயிர். தேவையான உப்பு போட்டுக் கலந்துக்கோங்க.
உப்பிட்ட தயிரை இந்த சேவையோடு கொஞ்சம் கொஞ்சமாக விட்டு நன்றாக விரவி வைச்சுக்கோங்க. தயிர் ரொம்பக் கூடிவிடக் கூடாது. அதோடு உங்களுக்கு விருப்பமான காய்களையும் துருவியோ சிறிதாக நறுக்கியோ சேர்த்துக் கொள்ளலாம். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை என்று மானே தேனே என்று எல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். நான் கோஸ், காரட், குடைமிளகாய் சேர்த்துக் கொண்டேன். வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம். அன்று வெங்காயம் சேர்க்கவில்லை. 
நல்லெண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொஞ்சம் பெருங்காயம் சேர்த்துத் தாளித்துக் கொண்டு கலந்து, இரண்டு மேசைக்கரண்டி நல்லெண்ணையும் கலந்து 10-15 நிமிடம் வைத்துவிடுங்கள்.

அடுத்து, இட்லி தட்டில் சிறிது எண்ணை தடவி தயாராக வைத்துக் கொண்டு, இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதித்ததும், இட்லி தட்டில் இந்தச் சேவை கலவையை ஒவ்வொரு தட்டிலும் ஊற்றி, ஊற்றி அல்ல, கரண்டியால் எடுத்தால் அப்படியே வரும் அல்லது கையால் கூட எடுத்துக் குழியில் வைத்து, 10 நிமிடம் ஆவியில் வைத்து எடுத்தால் இட்லி தயார்! தொடுக் கொள்ள சட்னி எல்லாம் உங்கள் விருப்பம்.

அவ்வளவுதான்.

கரன்ட் இல்லை. நம்ம சமையலறையில் கரன்ட் இல்லை என்றால் வெளிச்சம் பத்தாது. அப்படி எடுத்ததால் படங்கள் சுமாரோ சுமார்!!! 

கரன்ட் இல்லாததால் கோஸை மெலிதாக நறுக்க முடியவில்லை,  கேரட்டைத் துருவிக் (சீவிக் கொள்ள - இது எங்கூட்டு பாஷை) கொள்ள முடிந்தது. கோஸை துருவ முடியவில்லை அன்று. எனவே பெரிதாக நறுக்கிவிட்டேன், அலுப்பில்.

நெல்லை இங்கேயே சொல்லிவிடுகிறேன். இந்த ரெடி சேவை, முன்பு சேவை நாழியில் பிழிந்து காயவைத்து கொண்டதில் செய்தது. சமீபத்திய மெஷின் அல்ல கேட்டோ! ஆனால் அதில்தான் இப்ப செய்ய நினைத்திருக்கிறேன். ஆனால் மழை பெய்யத் தொடங்கிவிட்ட்தே!

 ============================================================================================

பாரதி - காந்தி சந்திப்பில் நிகழும் குழப்பங்கள் பற்றி...

காந்தி, இந்தியா திரும்பி தேசவிடுதலைக்குத் திசைகாட்டி, முன்நின்ற காலத்தில், தமிழ்நாட்டிற்கு அவர் ஒருமுறை வருகை தந்தபோது -நிகழ்ந்ததெனக் குறிக்கப்பட்டிருக்கும் பாரதி காந்தி சந்திப்பு -எவ்வாறோ ஒரு கோமாளித்தனமான, நிகழ்வுபோலச் சித்திரிக்கப்பட்டு, ஆதாரமற்ற கதை ஒன்றல்லவா இன்றும் நடமாட்டத்திலுள்ளது. வரலாற்றுச் சிறப்புக்குரிய அவ்விருவர் சந்திப்பை காந்தியுடன் பாரதி அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொண்டதுபோல - ஆதாரமின்றி, அறியாமை கவ்வப் பலரும் செம்மறியாட்டுத்தனமாக, உலவ விட்டிருக்கும் 'சந்திப்புக் கதை' தரும் வேதனையை என்னென்பது?

இதோ இது அக்கதை. நிகழ்வில் இருந்ததாகச் சொல்லிக்கொள்ளும் வ.ரா. எழுதியது (மகாகவி பாரதியார், வ.ரா., பக் 137 - 140).
"அட்சரலட்சம் கொடுக்கும்படியான ஐந்து பாட்டுகளைப் பாரதியார் மகாத்மா காந்தியின் பேரில் பாடியிருக்கிறாரே, அவ்விருவரும் சந்தித்து உறவாடியதாக இதுவரையிலும் தெரியவில்லையே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். பாரதியாரும் மகாத்மாவும் சந்தித்தார்கள்; பேசினார்கள்; ஒரே தடவையில், ஒருவரையொருவர் நன்றாகத் தெரிந்துகொண்டார்கள்.

1919 ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் காந்தி சென்னைக்கு வந்தார். ரௌலட் சட்டம் என்ற அநியாயச் சட்டத்தை ரத்து செய்வதற்காகக் கிளர்ச்சி செய்ய வேண்டும் என்றும், அதற்குத் தலைமை வகித்து அதைக் காந்தி நடத்த வேண்டும் என்றும் இந்தியாவில் இருந்த பிரமுகர்களில் பலர் காந்தியை வேண்டிக்கொண்டார்கள். காந்தி இசைந்தார்.

அதற்காகத்தான், காந்தி முதன்முதலில் சென்னைக்கு விஜயம் செய்தார். சத்தியாக்கிரக இயக்கத்தை ஆரம்பிக்குமுன் அணை கோலுவதைப் போலிருந்தது இந்த விஜயம்.

அப்பொழுது ராஜாஜி, கத்தீட்ரல் ரோடு, இரண்டாம் நெம்பர் பங்களாவில் குடியிருந்தார்; அந்தப் பங்களாவில்தான் காந்தி வந்து தங்கினது. நாலைந்து நாள்கள் தங்கியிருந்தார்.

ஒரு நாள் மத்தியானம் சுமார் இரண்டு மணி இருக்கும். காந்தி வழக்கம்போலத் திண்டு மெத்தையில் சாய்ந்துகொண்டு வீற்றிருந்தார். அவர் சொல்லிக் கொண்டிருப்பதைப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மகாதேவ தேசாய் எழுதிக்கொண்டிருந்தார்.

காலஞ்சென்ற சேலம் பாரிஸ்டர் ஆதிநாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப் பழங்களை உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக ரசம் தயார் பண்ணிக்கொண்டிருந்தார். ஒரு பக்கத்துச் சுவரில் ஏ. ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்துநின்று கொண்டிருந்தார்கள். அந்தச் சுவருக்கு எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்துகொண்டு நின்றிருந்தார்கள்.

நான் வாயில் காப்போன். 'யாரையும் உள்ளேவிடக் கூடாது' என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு. நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்துச் சிரிக்காதீர்கள்.

அறைக்குள்ளே பேச்சு நடந்துகொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; "என்ன ஓய்!' என்று சொல்லிக்கொண்டே, அறைக்குள்ளே நுழைந்துவிட்டார்.

என் காவல் கட்டுகுலைந்து போய்விட்டது.  உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் உள்ளே போனேன்.

பாரதியார் காந்தியை வணங்கிவிட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது:

பாரதியார்: "மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா? "

காந்தி: "மகாதேவ பாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?"

மகாதேவ்: "இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்."

காந்தி: 'அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?"

பாரதியார்: 'முடியாது. நான் போய் வருகிறேன், மிஸ்டர் காந்தி!தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்."

பாரதியார் போய்விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன்.

பாரதியார் வெளியே போனதும், 'இவர் யார்? என்று காந்தி கேட்டார்.

தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்துசொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை.
காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை.

ராஜாஜிதான் "அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி" என்றார்.

அதைக் கேட்டதும், "இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.
இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?" என்றார் காந்தி.
எல்லோரும் மௌனமாக இருந்துவிட்டார்கள்.

இந்தச் சம்பவத்தைச் சற்றுக் கவனித்துப் பாருங்கள். மகாத்மா காந்தியிடம் பாரதியார் இம்மாதிரி நடந்து கொண்டிருக்கப்படாது என்று சிலர் எண்ணலாம்.
நாற்காலி இல்லாத இடத்தில் பாரதியார் நின்றுகொண்டு விண்ணப்பம் செய்துகொள்கிறதா?

ராஜாஜி போன்றவர்கள் பாரதியார் வந்ததும், அவரை அழகாக, காந்திக்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டுமல்லவா? அவர்களுடைய மௌனத்திலிருந்தும், அநாயாசமாகப் பாரதியார் உள்ளே நுழைந்ததிலிருந்தும் காந்தி கூடுமானவரையில் சரியாகப் பாரதியாரை மதிப்பிட்டு விட்டார்...."

இது சம்பவம் / சந்திப்பு நிகழ்ந்த இடத்தில் தானும் இருந்ததாக, வாயிற்காத்து நின்றதாக ஏற்கெனவே புதுச்சேரியிலேயே பாரதிக்கு நன்கு அறிமுகமாகியிருந்த -வ.ரா. வழங்கியுள்ள நேரடி வர்ணனை!

சீனி விசுவநாதனும், வ.ரா வர்ணித்த அதே மாதிரியான ஒரு மின்னல் சந்திப்பைத்தான் குறிப்பிடுகிறார் (மகாகவி பாரதி வரலாறு, பக் 500-501). 

ஆனால் வ.ரா. கதைத்துள்ளதுபோல, பாரதி தடாலடியாக அறைக்குள் நுழைந்து, காந்தி அமர்ந்திருந்த படுக்கையில் அமர்ந்து காந்தியை "மிஸ்டர் காந்தி" என்று அழைத்ததாகச் சொல்லவில்லை. ஆனால், அவரும் பாரதி விடைபெற்றுச் சென்ற பின்னர்தான் வந்தவர் பாரதி என்பதைக் காந்தியடிகள் தெரிந்துகொண்டார் என்கிறார். யார்மூலம்? எப்படி? தெரிந்து கொண்டார் என்றெல்லாம் விவரம் தரவில்லை."

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு 1919 மார்ச் மாதவாக்கில் காந்தி சென்னைக்கு வருகை புரிந்தார் என்று சொல்கிறார்.(பக்கம் 500) அவரும் பாரதி காந்தி சந்திப்பு தேதிகளைக் குறிப்பிடவில்லை.

முதலில், மேற்கண்ட வ.ரா. வின் வர்ணனையிலுள்ள ஓட்டை உடைசல்களைப் பார்ப்போம்.

1. வ.ரா., காந்தியடிகள் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்ததாகச் சொல்கிறார். பிப்ரவரி மாதம் எந்த நாள் காந்தி வருகை என்பதை அவர் குறிப்பிடவில்லை.

2. "வாழ்க நீ எம்மான்" என்று காந்தியடிகளைக் காணாமலே வாழ்த்திப் போற்றிப் பாடிய பாரதி, காந்தியடிகளைத் துடுக்காக,"மிஸ்டர் காந்தி" என்று அழைத்திருப்பாரா என்பதை யூகம்கூடச் செய்ய முடியவில்லை.

3. வ.ரா.வால் விவரிக்கப்பட்டுள்ள இந்த பாரதி காந்தி சந்திப்பு, தேதி விவரமில்லாதது மட்டுமல்ல; தான் மிக மதித்துப் போற்றிவரும் காந்தியடிகளிடம் பாரதி, காரணம் ஏதுமில்லாமல் துடுக்குத்தனமும் அலட்சியமும் காட்டி, பொன்னான சந்திப்பை அரை நிமிடத்திலேயே கத்தரித்துக்கொண்டு, சரேலென்று காற்றாய் வெளியேறியதுபோல உருவாகியுள்ளது.

4. தான் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் பத்திரிகையின் உரிமையாளர் ரங்கசாமி அய்யங்கார், கடலூர் சிறையிலிருந்து தான் விரைந்து விடுதலையாக உதவியதாக அறியப்படும் சத்தியமூர்த்தி, மற்றும் ராஜாஜி போன்றவர்கள் முன்னிலையில் வ.ரா. குறிப்பிட்டிருப்பதுபோலப் பாரதி இங்கிதமில்லாமல் நடந்திருப்பாரா?

இதில் சிக்கல் யாதெனில், பாரதி - காந்தி சந்திப்பு குறித்துப் பலரும் வ.ரா.வின் வர்ணனையைத்தான் கூட்டியோ குறைத்தோ, தாமே அங்கிருந்த பாவனையில், கிளிப்பிள்ளைகள்போலத் தற்போது வரை எழுதிவைத்துள்ளார்கள்; எழுதி வருகிறார்கள்

இதை விடுத்து, காந்தியின் தமிழக வருகைகள் குறித்த உண்மை விவரங்கள் அறிவோம், வாங்க. 

''தமிழ்நாட்டில் காந்தி" (1969) என்ற நூல் ஒன்றை அ. ராமசாமி வெளியிட்டுள்ளார். அந்த நூலில், காந்தி முதன் முதலாகத் தமிழகத்திற்கு வந்தது (1896) முதல், கடைசி முறையாகத் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தது (1946) வரை, எந்தெந்த ஆண்டுகளில் அவர் இங்கு வந்தார்; அவர் சென்ற ஊர்கள், நகரங்கள் யாவை; அங்கு நிகழ்த்திய சொற்பொழிவுகளில் கூறியதென்ன என்பனவற்றையெல்லாம் மிகத் தெளிவாக, தேதிக் குறிப்புகளுடன் விவரமாகக் கொடுத்துள்ளார். மிகப் பெரும்பாலும் ஒவ்வொரு தேதியிலும் எந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியில் அவர் பங்குகொண்டார் என்ற குறிப்புகளையும் அளித்துள்ளார்.

அவரது நூலில் உள்ள துல்லியக் குறிப்புகளின்படி, வ.ரா. சொல்வது போலப் பிப்ரவரியில் காந்தி சென்னை வரவில்லை. காந்தி 18-3-1919 தான் சென்னை வந்து 23-3-1919 மாலைவரை தங்கியுள்ளார்.

23-3-1919 இரவு தஞ்சாவூருக்குக் கூட்டம் பேச ரயிலேறிச் சென்றுவிடுகிறார்.
ஐயகோ, தமிழகத்தில் காந்தியின் பெரும்பாலான நிகழ்வுகளைத் துல்லியமாக தேதி, நேர விவரங்களோடு அளித்திருக்கும் அவரும் பாரதி -காந்தி சந்திப்பு நிகழ்ந்த தேதியைக் குறிப்பிடவில்லையே. "காந்திஜியின் இந்த விஜயத்தின்போது பாரதியும் அவரும் சந்தித்தார்களென வ.ராமசாமி (வ.ரா.) கூறுகிறார். ராஜாஜியும் இதை ஊர்ஜிதம் செய்கிறார்" என்று அச் சந்திப்பு பற்றித் தான் எதுவும் குறிப்பிடாமல், வ.ரா கூறியுள்ளதாக மட்டுமே அ.ராமசாமி குறிப்பிட்டுள்ளார் (''தமிழ்நாட்டில் காந்தி" பக். 248).

வ.ரா.வின் கூற்றுப்படி, மற்றவர்களெல்லாம் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கையில் பாரதி திடீரென நுழைந்து அண்ணலுக்குச் சரிசமமாய்ப் படுக்கையில் அமர்ந்தது அங்கிருந்த பலருக்குத் திகைப்பை அளித்திருக்கக் கூடும். மேலும், காந்திஜியை "மிஸ்டர் காந்தி" என விளித்து அவருடைய ஒத்துழையாமை இயக்கத்துக்கு பாரதி ஆசீர்வாதம் செய்ததும் அங்குள்ளோருக்கு விசித்திரமாகப்பட்டிருக்கலாம். காந்தி அதனைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் 'யாரிந்த மின்னல்?' என்பதுபோல அங்கிருந்தவர்களைக் கேட்டது காந்தியும் அவ்வருகையால் திகைப்படைந்தார் என்பதை நாம் யூகிக்க முடிகிறது.

இந்நிகழ்வு, "காந்தி - பாரதி சந்திப்பின்போது "பாலபாரதா' ஆசிரியர் என்பது நினைவுகூரப்பட்டு, அறிந்துதான் காந்தி மதித்து உரையாடினார் எனவும் கருதலாம்" என ய.மணிகண்டன் குறிப்பிடுவதை (தினமணி, 11 டிசம்பர் 2024) கேள்விக்கு உட்படுத்துகிறதல்லவா?

இவைபோக, இன்னொரு பக்கம், பாரதியார் காந்தியடிகளை அவரது 1919 வருகையின்போது சந்தித்திருக்க வாய்ப்பே இல்லை என்று வாலாசா வல்லவன் மறுத்து நிற்கிறார் (திராவிட இயக்கப் பார்வையில் பாரதி).
காந்தி சென்னைக்குப் பிப்ரவரியில் அல்லது மார்ச்சில் வந்திருந்தால்கூட
பாரதி அவரைச் சந்தித்திருக்கவே முடியாது எனும் அவரது வாதத்திற்கு,பேராசிரியர் கோ. கேசவன் அவர்களது முனைவர் பட்ட ஆய்வு நூலில் (பாரதியும் அரசியலும், பக்கம் 214) கண்டுள்ள ஆதாரமுள்ள முடிவைச் சான்றாகக் காட்டுகிறார்.

"கடலூர் சிறையில் இருந்து, அரசு விதித்த கடுமையான நிபந்தனைகளை 1918 டிசம்பர் 14 இல் விடுதலை பெறும்போது பாரதியார் ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டுக் கொடுத்த ஒப்பந்தப்படி பாரதி அரசியல் ஈடுபாடுகளை அறவே கைவிட்டுக் கடையத்தில் வாழ்ந்து வந்தார். 1919 மே மாதத்தில்தான் பாரதிக்கு அரசிடமிருந்து நிபந்தனை தளர்வு கிடைத்தது. அதற்குப் பின் தான் பாரதி சென்னை சென்றிருக்க முடியும்" என்பது கோ. கேசவனின் ஆய்வுத் தரவு. 

ஆக, வாலாசா வல்லவனின் தரப்பு, பாரதி தொலைவில் கடையத்தில் வாழ்ந்து வந்ததால் அந்த சமயத்தில் - 1919 பிப்ரவரி அல்லது மார்ச்சில் காந்தியைச் சந்திக்க வாய்ப்பு இருந்திருக்காது என்பது.

பாரதி காந்தி சந்திப்பு நிகழ்ந்ததா? எந்த ஆண்டு, மாதம், நாள்? ஆதாரமென்ன? பாரதி காந்தி சந்திப்பு, நேரிலிருந்ததாகச் சொல்லும் வ.ரா. வர்ணித்துள்ளவாறுதான் நடந்ததா?

காந்தியோ, பாரதியோ தமது எழுத்தில் எங்கும் அவர்களது சந்திப்பு பற்றிக் குறிப்பிடவில்லை என்பதும் நெருடலாக உள்ளது.

நமக்கு இதில் உண்மை தெரிந்தாகனும், பாரதியை நாம் நன்கறிய.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்!

இராஜ முத்திருளாண்டி - தினமணி 

22 கருத்துகள்:

  1. கேழ்வரகு ரெடிமேட் சேவை இட்லி.... இதை நான் எதிர்பார்க்கலை. ரொம்ப நன்றாக வந்துள்ளது.

    என் வீட்டில் அணில் சேமியா இருக்கு. அதை வைத்து இப்படி இட்லி பண்ணிப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி நெல்லை. அணில் சேமியாலயும் செய்யலாம். நான் அப்படி கடையில் வாங்கும் இன்ஸ்டன்ட் சேமியா / சேவையிலும் செய்திருக்கிறேன்.

      அப்படி ரெடிமேட் ரவை சேவை பாக்கெட் வருது தெரியுமோ. ஆனால் நான் ஏற்கனவே அதுவும் வீட்டிலேயே சிரோட்டி ரவையில் கிளறி செய்துவிட்டேன் கோவிட் சமயத்தில். அப்ப சேவை நாழியில். இப்பமெஷினில்.

      கீதா

      நீக்கு
    2. சிரோட்டி ரவைல சேவையா? சேவை நாழியின் துளைகளின் வெளியே எது வந்தாலும் அதை வைத்து சேவை செஞ்சிடுவீங்க போலிருக்கே

      நீக்கு
  2. இன்று வித்தியாசமான செய்முறை.

    நீங்க அந்த மெஷின் உபயோகித்து சேவை செய்வதையும் பதிவாக்கியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரும் நெல்லை. எங்கள் வீட்டு தங்கைகள், மகனுக்காக எடுத்ததில் நான் பேசியபடி நானும் தெரிவேனே....அதனால் இப்ப நானே நான் தெரியாமல் எடுக்க முயற்சி செய்து ஒன்று எடுத்திருக்கிறேன். பார்ப்போம் காணொளி எப்படி வந்திருக்கு என்று தெரியவில்லை. இனிதான் ஓட்டிப் பார்க்கணும். எனக்குப் படங்கள் எடுப்பது ஈசி ஒரு கையில் வைத்துக் கொண்டு வலக்கையால் செய்வதை. காணொளிகள் எடுப்பதற்குச் சிலதிற்கு கூட ஒருவர் வேண்டும். அது பல சமயங்களில் முடியாது. நானே ஒரு கையில் வைத்துக் கொண்டு எடுத்திருக்கிறேன் ஆனால் இரு கையால் செய்ய வேண்டியதை எடுப்பது சிரமமாக இருந்தது. ஓட்டிப் பார்த்து எவ்வளவு தூரம் சரியாக வந்திருக்கு என்று எடிட் பண்ணி, கோர்த்து.....பார்க்கிறேன் நெல்லை.

      கீதா

      நீக்கு
    2. காணொளில நீங்க இருந்தாத்தான், நிஜமாகவே இவங்க செஞ்சு பார்த்திருக்காங்க, மண்டபத்துல யாரோ கொடுத்ததை வைத்து பதிவு எழுதலைனு தெரியும். சரிதானா?

      நீக்கு
  3. எனக்கு சின்ன வயதிலிருந்தே சேவையில் மிக விருப்பம்.

    இப்போல்லாம் (கடந்த நாலு வருடங்கள்) கடையில் வாங்குகிறேன். இடையில் எப்போதாவது மனைவி செய்வாள். ஆனால் அது கஷ்டமான வேலை என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹைஃபைவ் நெல்லை. எனக்கும் சேவை என்றால் போதும் ஒரு நாளை ஓட்டிவிடுவேன். சிறுவயதிலிருந்தே. வீட்டில் சேவை என்றால் நிறைய பிழிய வேண்டுமே. அதைப் பற்றி பதிவு கூட எழுதியிருந்தேன் எங்கள் தளத்தில்.

      இல்லை நெல்லை, எளிதுதான். அவங்க செய்யும் போது உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது. சேவை நாழியில் செய்தப்ப கூட நான் அடிக்கடிச் செய்துவிடுவேன். ஆவியில் வேக வைப்பது என்பதால் வயிற்றிற்கு எதுவும் பண்ணாது என்று.

      என்ன, சேவை நாழியை ஊறப்போட்டு கழுவணுமே அது ஒன்றுதான். ஊரில் இருந்தவரை கிணற்றடியில் உள்ள தொட்டியில் நீர் இரைத்து விட்டுப் போட்டுவிடுவோம். இப்போதைய வாழ்க்கை முறையில் தேய்க்கும் இடத்தில் அதைப் போட்டு ஊற வைத்துப் பைப்படியில் கழுவுவது கொஞ்சம் சிரமம் அது நாம் இருக்கும் வீட்டில் இருக்கும் பைப்பும் தொட்டியும் பொருத்து.

      ஆனால் இந்த மெஷின் ரொம்ப வசதியாக இருக்கு. சுத்தம் செய்வது உட்பட.

      கீதா

      நீக்கு
    2. மாவு தயார் பண்ணணும், கிளரணும், கொழுக்கட்டை பிடித்து ஆவியில் வேக வைக்கணும், பிழியணும், பிறகு சேவை நாழியை அலம்பணும். இதில் கடைசிதான் பெரிய வேலை.

      ஆனால் உங்க மெஷின் சூப்பர்.

      நீக்கு
  4. உங்க மெஷினில் வேலை சுலபம். இருந்தாலும் கார்போ அதிகம் என்பதால் நான் சேவை வாங்குவதோடு சரி. சாப்பிடுவது அபூர்வம்.

    உங்களுக்கு நல்ல ஆர்வம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் செய்யும் சேவையில் carb, gluten இல்லாமல்தானே பெரும்பாலும். எப்போதாவதுதான் அரிசியில்.

      நன்றி நெல்லை.

      கீதா

      நீக்கு
  5. நானும் சென்ற சனியன்று ஒரு பரீட்சார்த்தமாக ஞாயிறன்று சேவை இட்லி செய்யலாம் என்று மனைவியிடம் கூறி செய்யச் சொல்லியிருந்தேன். வழக்கம்போல கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் அல்லாமல் வெயிலுக்கு பழைய சோறு மோர் வெங்காயம் ப மிளகாய் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள் என்று பழைய சோறு தான் கிடைத்தது.

    ராகி சேமியா அணில் பிராண்ட் கிடைக்கிறது. சேவை செய்ய கஷ்டம் இல்லை.

    கோஸ் போட்டது சரியில்லை. அது கடுக்கும். காரட் பீன்ஸ் கேப்ஸிகம் மல்லி இவற்றை அரிந்து இட்லி தட்டில் முதலில் கொஞ்சம் பரத்தி அதன் மேல் சேவை பரத்தி மீண்டும் கொஞ்சம் சேவை பரத்தி (புட்டு செய்வது போல்) வேவித்து எடுக்க பார்க்க அழகாக இருக்கும்.

    சோதனை செய்தீர்கள். சாப்பிட்ட எலி ஏதாவது கூறியதா?

    சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவனந்தபுரத்தில் வெளியே கிடைக்காத சேவையா? அணில் சேமியா எதற்கு?

      நீக்கு
    2. திருவனந்தபுரத்துக்காரர்கள் இடியப்பம் தான் சாப்பிடுவார்கள். சேவை என்றால் சமூக சேவை, ஆசிரம சேவை பார்ட்டி சேவை என்பவை தான், பிரபந்த சேவை கூட கிடையாது.

      நீக்கு
    3. வெயிலுக்கு பழைய சோறு மோர் வெங்காயம் ப மிளகாய் போட்டு பிசைந்து சாப்பிடுங்கள் என்று பழைய சோறு தான் கிடைத்தது.//

      ஜெ கே அண்ணா இங்கும் காலையில் வாரத்தில் ஒரிரும்முறைகள் இருந்துவிடும்.

      ஜெ கே அண்ணா, திருவனந்தபுரத்தில் கோட்டைக்குள் போனால் அதுவும் பத்மநாபர் கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் மாமிகள் செய்து கொடுக்கிறார்கள் இப்போது அதிகமாக இருக்கின்றன. என் தங்கை அங்குதான் வாங்கிக் கொள்கிறாள். ஆனால் உங்கள் பகுதியில் கிடைக்காது சேவை.

      கோஸ் துருவிப் போட்டால் தெரியாது. நானும் கேப்ஸிகம் சேர்த்திருக்கிறேன், பீன்ஸ் மட்டும் சேர்க்கவில்லை அன்று இல்லாததால். அப்புறம் பீன்ஸ் போட்டால் அதைத் தனியயக வேக வைத்துப் போட வேண்டும் இல்லைனா வேகாது சில சமயம்.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    4. இட்லி தட்டில் முதலில் கொஞ்சம் பரத்தி அதன் மேல் சேவை பரத்தி மீண்டும் கொஞ்சம் சேவை பரத்தி (புட்டு செய்வது போல்) வேவித்து எடுக்க பார்க்க அழகாக இருக்கும்.//

      அண்ணா செய்திருக்கிறேனே புட்டுக் குழலிலேயே. படம் எடுக்கலை. அடுத்த முறை செய்யும் போது படம் எடுத்துப் போடுகிறேன். இட்லி தட்டில் ரொம்ப அடுக்க முடியாது அண்ணா. புட்டுக் குழல் இல்லைனா பெரிய வட்ட பாத்திரத்தில் அப்படிப் பரப்பி அடுக்கி ஆவியில் வைத்து எடுத்தால் கேக் போன்று. அதுவும் செய்திருக்கிறேன்.

      சோதனை செய்தீர்கள். சாப்பிட்ட எலி ஏதாவது கூறியதா?//

      ஹாஹாஹா....பிடித்திருந்தது. சோதனை எலிகளுக்கும். எங்க வீட்டில் புதுமையை புது ருசியை ரசிப்பவர்கள் என்பதால் எனக்கு முழு சுதந்திரம் அதில். புகுந்து விளையாட! ஹிஹிஹி நான் செய்வதுதான் குறைவாகிவிட்டது.

      நன்றி ஜெ கே அண்ணா

      கீதா

      நீக்கு
    5. //திருவனந்தபுரத்துக்காரர்கள் இடியப்பம் தான் சாப்பிடுவார்கள்.// ஜெயகுமார் சார்... நான் திருவனந்தபுரத்துக்காரன். கோவில் பக்கத்துல பல கடைகள்ல சேவை, மோர்குழம்பு கிடைக்கும். அதுவும் தவிர வீடுகளில். (பிராமணர்கள்). மற்றபடி கேரள இடியாப்பம் பஹ்ரைனில் கிடைக்கும் (50 ஃபில்ஸ் 1 இடியாப்பம்). என் குழந்தைகளுக்குப் பிடிக்கும், எனக்குப் பிடிக்காது. கொஞ்சம் ஒல்லியாக இருப்பதால். திருவனந்தபுரத்துக்கு வந்தால் சேவை மோர்குழம்பு கிடைத்தால் வாங்குவேன்.

      நீக்கு
  6. சரித்திரம் என்பது எழுதுபவரின் கண்ணோட்டம். அது எப்போதும் மாறுபடும். முகலாயர் நோட்டத்தில் எழுதிய சரித்திரமும் வெள்ளைக்காரன் எழுதிய சரித்திரத்தின் சாரமும் வித்தியாசமாக இருக்கும். அவ்வகையில் இன்றைய 'பாரதி காந்தி சந்திப்பு' பற்றிய செய்தியில் கட்டுரை ஆசிரியர் மாறுபட்ட கோணத்திலெழுதியிருக்கிறார். அது அவருடைய உரிமை.
    சரி விசயத்திற்கு வருவோம். இச்சந்திப்பினால் என்ன பயன் ஏற்பட்டது என்பதேமுக்கியம். அது தெரிவிக்கப்படவில்லை.

    பதிலளிநீக்கு
  7. கேழ்வரகு சேமியா/சேவை இட்லி ரொம்பவும் நன்றாக வந்திருக்கிறது கீதா! இப்போது தான் எல்லா சிறுதானிய வகைகளிலும் சேமியா வந்திருக்கிறதே! செய்து பார்த்து விடலாம்! தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னியா?
    சேவை என்றாலும் இடியாப்பம் என்றாலும் சந்தகை என்றாலும் எல்லாம் ஒன்று தானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா. எல்லாத்திலும் செய்யலாம். மிக்க நன்றி மனோ அக்கா.

      தேங்காய்சட்னி நன்றாக இருக்கும். கடலைச் சட்னியும் நன்றாக இருக்கும்

      அக்கா, சேவை இடியாபம் சந்தகை எலலம் ஒன்றுதான் என்று சொல்லப்பட்டாலும்...

      பொதுவாகச் சேவை என்பது புழுங்கலரிசியில் செய்வது ஊற் வைத்து அரைத்து, வாணலியில் விட்டுக் கிளறி, கொழுக்கட்டை போல உருட்டி ஆவியில் வேக வைத்துச் சேவை நாழியில் பிழிவது. இதில் கொழுக்கட்டை செய்யாமல் அப்படியே மாவை இட்லி தட்டில் ஊற்றி இட்லியாகவும் செய்து பிழிவதும் உண்டு.

      எங்கள் ஊர்ப்பக்கம் இதற்கு திருநெல்வேலி மோர்க்குழம்பு, பப்படம் அல்லது வற்றல் வைத்துக் கொண்டு சாப்பிடும் வழக்கம். இல்லை என்றால் கலந்த சேவை.

      இடியாப்பம் என்பது பச்சரிசி மாவில் செய்வது. பச்சரிசி ஊற வைத்து களைந்து உலர்த்தி ஈரம் இருக்கும் போதே அதை மாவாகத் திரித்து சலித்து, அதை ஆவியில் வேட்டில் வைத்தோ அல்லது மணல் போன்ற பக்குவம் வரும் வரை வருத்தோ வைத்துக் கொண்டு இடியாப்பம் செய்யும் போது, பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு மாவில் கொதிக்கும் நீர் விட்டுக் கொண்டு (ஒரு கப் மாவிற்கு ஒரு கப் தண்ணீர்) கிளறி கொஞ்சம் மூடி வைத்து அப்புறம் அதை நன்றாகக் கையால் பிசைந்து ரொம்ப சூடு ஆறிவிடும் முன் இடியாப்ப அச்சில், இடியாப்பத் தட்டிலோ இட்லி தட்டிலோ பிழிந்து ஆவியில் வைத்து எடுப்பது. இடியாப்பம் என்றால் எங்கள் வீட்டில் வெல்லம் போட்ட தேங்காய்ப்பால் அலல்து சிலோன் சொதி.

      கீதா

      நீக்கு
  8. சிறுதானிய வகைகளில்
    உணவு முறை....

    சிறப்பு...
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!