27.7.26

"திங்க"க்கிழமை  "  - பனீர் புலவ் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

சென்ற வாரம் ஸ்ராத்தத்தின் போது வாங்கி வந்த காய்கள் நேற்று வரை வந்து விட்டன! இன்னிக்குக் காய் இல்லை.  கொஞ்சம் போல் காரட்டுகளும் ஒரு கைப்பிடி அவரைக்காயும் தான் இருந்தது. நம்மவருக்கு உடனே குஷி வந்துடுமே. நான் போய்க் காய்களெல்லாம் வாங்கிண்டு அப்படியே மத்தியானத்துக்குக் குழம்பு, ரசம், கறி, கூட்டும் வாங்கிடறேன். நீ சாதம் மட்டும் வை! நேத்திக்கே கை வலினு சொன்னியே! இன்னிக்குச் சமைக்க வேண்டாம்னு சொல்ல எனக்குள் உத்வேகம். பின்னே? நான் சமைக்கிறேன். நீங்க ஒண்ணும் போய் அலைய வேண்டாம் என்று பெரிய முட்டுக்கட்டையாய்ப் போட்டேன். இன்னிக்கே சந்தைக்குக் காய்கள் எல்லாம் வந்திருக்காது. நாளையிலிருந்து தான் வழக்கமான முறையில் இருக்கும்னு சொன்னேன். ஆனால் அவர் கிளம்பிட்டார்.

நான் தீர்மானமாக நீங்க காய் வாங்கி வந்தாலும் நான் பனீர் புலவ் தான் இன்னிக்குப் பண்ணப் போறேன் என்று சொல்லி விட்டேன். சரி, ஆனால் கொஞ்சம் ரசம் வேண்டும் எனக்கு என்றார். தொட்டுக்க அப்பளம் வாட்டிக்கலாம், இல்லாட்டியும் வாழைக்காய் வறுவல் இருக்குனு நானும் சரினு சொல்லிட்டேன். ஆனால் அவரால் சந்தைக்கே போக முடியாமல் வண்டி படுத்தி எடுத்துக் கடைசியில் வீட்டுக்கு வந்துட்டார். இஃகி,இஃகி,இஃகி!


நான் திட்டம் போட்ட படி பனீர் புலவ் செய்தேன். அதுக்குக் காய்கள் வேண்டும்னு எல்லாம் இல்லை. வெங்காயம் இருந்தாலே போதும். ஆனால் காரட் வாங்கிப் பல நாட்கள் ஆகி விட்டதால் அதைத் தீர்க்கணும்னு காரட்டுகளை எடுத்துக் கொண்டேன். பச்சைப் பட்டாணி இல்லை; அதனால் என்ன? காய்ந்த பட்டாணியை நேற்றே எதுக்கும் இருக்கட்டும்னு ஊற வைச்சிருந்தேன். அதை நன்கு கழுவிக் கொண்டு சிறிது உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைத்தேன். இல்லைனால் பட்டாணிக் கல்லைப் போல் உட்கார்ந்திருக்கு! 


அதற்குள்ளாகப் பனீரை எடுத்து அலம்பித் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் மஞ்சள் பொடி, கொஞ்சமாக மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, (தேவையானால் கரம் மசாலாப் பொடி) ஜீரகப் பொடி, உப்பு ஆகியன சேர்த்து நன்கு கலந்து வைத்தேன். வீட்டில் அதிர்ஷ்டவசமாக பாஸ்மதி அரிசி இருந்தது. அதை ஒரு சின்னக் கிண்ணம் எடுத்து நன்கு கழுவி விட்டுப் பின்னர் நீரை வடிகட்டிக் கொண்டு இரண்டு தேக்கரண்டி நெய்யை விட்டு அரிசியை வறுத்துவிட்டு அரிசி எடுத்த கிண்ணத்தாலேயே ஒன்றேகால் கிண்ணம் நீரை அதில் விட்டு அரிசியை ஊற வைத்தேன்.

இதெல்லாம் ஆவதற்குள்ளாகப் பட்டாணி வெந்து விட்டதைக் குக்கர் அறிவிக்க, ரசத்துக்கும், மோருக்கும் வெறும் சாதம் அரை ஆழாக்கு வைத்துவிட்டு ஈயச் செம்பில் ரசத்தையும் வைத்தேன். பின்னர் வந்து 2 பெரிய வெங்காயம், காரட் ஒன்று பொடியாக நீளவாட்டில் நறுக்கிக் கொண்டேன். தக்காளி சேர்க்கலை. வீட்டில் தக்காளியும் இல்லை. கொத்துமல்லி, புதினா எதுவும் இல்லை. நல்லவேளையாகப் பச்சை மிளகாயும், இஞ்சியும் இருந்தன. அதைப் பொடியாக நறுக்கிக் கொண்டேன். பச்சை மிளகாய் இரண்டைப் பிளந்து வைத்துக் கொண்டேன்.

படங்களுக்கு நன்றி கூகிளார்

அடுப்பில் குக்கரை வைத்துக்கொஞ்சம் எண்ணெய்/வெண்ணெய் சேர்த்துக் காய வைத்துக் கொண்டேன். ஜீரகம், சோம்பு, முழு மிளகு வகைக்கு ஒரு தேக்கரண்டி போட்டுத் தாளித்து லவங்கப்பட்டை ஒரு துண்டு பச்சை ஏலக்காய் 2, ஒரு கிராம்பு போட்டுக் கொண்டேன்.  பச்சை மிளகாய், இஞ்சியைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டு அது வதங்க ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டேன். வெங்காயம் வதங்கியதும் காரட்டைப் போட்டு வதக்கினேன். காரட் கொஞ்சம் வதங்கியதும் அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடி, கால் தேக்கரண்டி மிளகாய்ப் பொடி(காரம் அதிகம்) ஒரு தேக்கரண்டி தனியாப் பொடி, கால் தேக்கரண்டி கரம் மசாலாப் பொடி போட்டுக் காய்களோடு நன்கு கலக்கும்படி வதக்கிக் கொண்டேன். எல்லாம் நன்கு கலந்ததும் நீரோடு  ஊற வைத்திருக்கும் அரிசியை அப்படியே அதில் சேர்த்தேன். மேற்கொண்டு நீர் வேண்டாம். பாஸ்மதி அரிசி அதிகம் நீர் தாங்காது. தேவையான உப்பைச் சேர்த்தேன். ஏனெனில் பட்டாணியில் கொஞ்சம் உப்புப் போட்டிருக்கோம். பனீருக்கும் கொஞ்சம் உப்புச் சேர்த்திருக்கோம். ஆகவே குறைவான உப்பே போதும்.

கொத்துமல்லித் தழை, புதினா இருந்தால் காரட், வெங்காயம் வதக்கையில் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கலாம். அல்லது பச்சையாகக் கடைசியில் மேலே தூவலாம். இரண்டுமே இல்லை. குக்கரை மூடித் தணித்தே அடுப்பை எரிய விட்டு நன்கு மேலே ஆவி வந்ததும் வெயிட்டைப் போட்டேன். சிறிது நேரத்தில் ஒரு விசில் வர அடுப்பை உடனே அணைத்து விட்டேன். இதற்கு நடுவில் ஒரு வாணலியில் அல்லது பிடித்தமானால் நான் ஸ்டிக் தோசைக்கல்லில் நெய்யை விட்டுக் கொண்டு மசாலா சேர்த்து ஊற வைத்திருக்கும் பனீர் துண்டுகளை நன்கு ப்ரவுன் நிறம் வரும் வரை பிரட்டிக் கொள்ள வேண்டும். அதிகம் பிரட்ட வேண்டாம். ரப்பர் மாதிரி ஆயிடும். இங்கே குக்கர் திறந்ததும் வறுத்த பனீர்த் துண்டுகளை அதில் சேர்த்துக் கொத்துமல்லி, புதினா போடுவதானால் போட்டுவிட்டு மெதுவாகக் கிளறணும். அரிசி உடையாமல் கிளறிக் கொடுக்கணும். 

இதை வெங்காயப் பச்சடி, காரட் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, தக்காளிப் பச்சடி ஆகியவற்றோடு சாப்பிடலாம். பண்ணும்போதோ, சாப்பிடும்போதோ இதைப் பதிவாகப் போடும் எண்ணமே இல்லை. ஆனால் சாயந்திரம் திடீர்னு தோன்றிய ஓர் உந்துதலில் மிச்சம் இருக்கும் புலவைப் படம் எடுத்துக் கொண்டேன். மற்றப் படங்கள் வழக்கம் போல் எடுக்கலை. ஹிஹிஹிஹி. கீழே மிச்சம் இருக்கும் பனீர் புலவ். பனீர் எங்கேனு கேட்காதீங்க! பொறுக்கிச் சாப்பிட்டுட்டேன்! :)))))

                                                      இன்று செய்த பனீர் புலவ் படம்

எல்லாப்படங்களையும் ஒழுங்கா எடுத்திருந்தால் எ.பி.க்குத் திங்கக்கிழமைப் பதிவுக்கு அனுப்பி இருப்பேன். இதையே "எண்ணங்கள்" வலைப்பக்கம் போட நினைச்சு அப்புறமா இங்கேயே போடலாம்னு போட்டுட்டேன். யாருக்கெல்லாம் முடியுதோ வந்து சாப்பிடுங்கப்பா!

=====================================================================================



========================================================================================

மனோதத்துவம்..
<> அர்த்தமில்லாத விஷயத்துக்குக் கூட அடக்க முடியாமல் சிரிக்கும் ஒருவன் மனதில் ஆழ்மனச் சோகம் உண்டாம்!
<> ரொம்பத் தூங்கும் ஒருவன் தனிமையை நிறைய உணர்பவனாக இருக்கலாமாம்.
<> ரொம்பப் பேசாதவன், அதே சமயம் பேச ஆரம்பித்தால் வேகமாகப் பேசுபவன் நிச்சயம் வெளிப்படுத்தா உள்ளே ரகசியங்களைக் கொண்டிருக்கிறானாம்.
<> அழமுடியாதவன் பலவீனமானவனாம்.
<> அசாதாரணமான முறையில் பதட்டமாக சாப்பிடுபவன் டென்ஷன் அதிகமுள்ளவனாம்.
<> நேரமில்லா நிலையிலும் வேலையில்லா வேளையிலும் உன்னைப் பற்றி விசாரிக்கும் நபர் உங்களை விரும்புகிறாராம்.
[ SMS மருத்துவம்! ]

17 கருத்துகள்:

  1. பனீர் புலாவ்... ஆஹா... சாப்பிட்டு எவ்வளவோ மாதங்களாகிவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... மருமகள் கைவண்ணத்தில் நான் சமீபத்தில் கூட சாப்பிட்டேனே..!!

      நீக்கு
  2. நல்ல வேளை... பசி மயக்கத்துல கேரட்டையும் ஒண்ணொண்ணாச் சாப்பிட்டுவிட்டேன்... வெறும் புலாவ்தான் இருக்குன்னு சொல்லலை.

    இன்று செய்த என்பது இப்கோதா அல்லது பதிவு எழுதினபோதா,

    பதிலளிநீக்கு
  3. மிக்ப் பழைய நடிகர் காக்கா ராதாகிருஷ்ணனை, தேவர் மகன் மற்றும் வடிவேலுடன் கூடிய காமெடி ஆகியவற்றை வைத்துத்தான் சட் என நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் தேவர் மகன்தான் நினைவுக்கு வந்தது. உத்தமபுத்திரன், மனோகரா பாட்னரா படங்களிலும் காமெடி ரோல் செய்திருக்கிறார். அந்தக் காலத்தில் இவருக்கும் குலதெய்வம் ராஜகோபாலுக்கும் கொஞ்சம் குழம்பும் - எனக்கு!

      அதேபோல காக்கா ராதாகிருஷ்ணைப் பார்த்தல் எனக்கு சமீபத்தில் மறைந்த என் மாமா ஞாபகம் வரும்.

      நீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட். வணக்கம். நல்லதே நாடுவோம்.

      நீக்கு
  5. பனீர் புலவ் விவரங்கள் நன்று. தில்லியில் இருந்த வரை விதம் விதமாக ருசித்தாயிற்று. இப்போது வட இந்திய உணவு வகைகள் சாப்பிடத் தோன்றுவது இல்லை. குறிப்பாக பாஸ்மதி அரிசி கொண்டு சமைக்கப்படும் உணவுகள்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏனோ எனக்கும் பாஸ்மதி பிடிப்பதில்லை!

      நீக்கு
  6. காக்கா ராதாகிருஷ்ணன் - முந்தைய படங்கள் பார்த்தது இல்லை. வடிவேலுவும் அவரும் இருந்த சில காமெடி காட்சிகள், தேவர் மகன் படம் என ஒரு சில படங்களே நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கால படங்களில் காமெடி ரோல் நிறைய செய்திருக்கிறார்.

      நீக்கு
  7. மனோதத்துவங்கள் நன்று. குறிப்பாக அழமுடியாதவன் பலவீனமானவன் என்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தூக்கத்துக்கு பார்த்துக் கொண்டேன்.

      நீக்கு
  8. சில வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுது அதிலிருந்து விலகல் கொண்டோர்க்கு 'உவ்வே'யும் முகச்சுளிப்ப ஏற்படுவது சகஜம் தான்.
    இப்பொழுது விஷயத்திற்கு
    வருவோம்.
    'புலவ்' என்ற வார்த்தை எப்படி, எதனால் வந்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரோ ஒரு "புலவ"ர் வார்தையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்! வாங்க ஜீவி ஸார்!

      நீக்கு
  9. ​புலாவ் பிரியாணி ஒற்றுமை வேற்றுமைகள்?
    புலாவ் என்பது சைவம், பிரியாணி அசைவம்?

    Jayakumar​

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!