23.8.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - பிரம்மதேசம்-சோமஸ்கந்தர் கோயில் : நெல்லைத்தமிழன்

 

 பிரம்மதேசம்-சோமஸ்கந்தர் கோயில். 

சென்ற வாரம், சோழ பாண்டியர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். இவர்கள் ராஜேந்திர சோழன் வாரிசுகளே. அதனைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

எதற்காக இந்த வரலாற்றில் எனக்கு ஆர்வம் வந்தது? காரணம் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் பிரம்மதேசம் சோமஸ்கந்தர் கோயிலில் பல சிற்ப, மண்டப அமைப்புகள் சோழர்களின் கலையை ஒத்திருந்தது. குறிப்பாக மண்டபத்திற்கான படிகளின் இரு புறமும் யானை அலங்காரம் காணப்பட்டது. இதனை அனேகமாக சோழர் கால முக்கியக் கோயில்களில் காணலாம். இதனைப் பற்றிய செய்திகளை, வரலாறைத் தேடிக்கொண்டிருந்தபோது சோழ பாண்டியர்களைப் பற்றிய செய்திகளைப் படித்தேன். அதனை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே எழுத ஆரம்பித்தேன்.

முதலாம் ராஜேந்திரனுக்கு,  1. ராஜாதிராஜன்  2. ராஜேந்திரன் 3.  மகள் அம்மங்கை  4. இராஜ மகேந்திரன் 5. வீர ராஜேந்திரன், 6. மதுராந்தகன்  7. பராந்தகன், 8. மகள் அருமொழி நங்கை என்று எட்டு குழந்தைகள்.

ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்ததும் முதல் மகன் ராஜாதிராஜனை 1018ல் இளவரசனாக ஆக்குகிறான் (தான் பதவிக்கு வந்து நான்கு வருடங்களில்).  பாண்டிய நாடு தன்னுடைய அரசின் கீழ், நம்பிக்கையான ஒருவரால் ஆளப்பட வேண்டும் என்று கருதி, இரண்டாம் மகன் ராஜேந்திரனை, ஜடாவர்மன் சுந்தரச் சோழ பாண்டியன் என்ற பட்டப் பெயரில், பாண்டி நாட்டு அரசனாக ஆக்கினான். ஜடாவர்மன் சுந்தரச்சோழ பாண்டியன், கிபி 1022-23 லிருந்து கிபி 1052 வரை பாண்டிய நாட்டு அரசனாக ஆண்டான்.

அம்மங்கா தேவி, வேங்கி இளவரசனான ராஜராஜ நரேந்திரனை மணந்து, ராஜேந்திர சாளுக்கியனைப் பெற்றெடுக்கிறாள். இவனே பிற்காலத்தில் சோழ அரியணை உரிமை கிடைக்கப்பெற்று முதலாம் குலோத்துங்கச் சோழன் என்ற பெயரைப் பெற்றவன்.

1052ல் இரண்டாம் மகனை சோழ சாம்ராஜ்யத்துக்கு இளவரசனாக ஆக்கிவிட்டு, (இரண்டாம் ராஜேந்திர சோழன்) பாண்டிய நாட்டை அரசாள, தனது தம்பியான இராஜ மகேந்திரனை அனுப்புகிறான் ராஜாதிராஜன். ராஜ மகேந்திரன், மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன் என்ற பெயரில் பாண்டிய நாட்டு மன்னனாக முடிசூடுகிறான். 58-59லிருந்து 1063 வரை, இராஜ மகேந்திரன், சோழ இளவரசனாக ஆக்கப்படுகிறான்.

கிபி 1063ல் இராஜமகேந்திரன் மறைகிறான். அதன் பிறகு, அடுத்த தம்பியான வீர ராஜேந்திரன் சோழ இளவரசனாக ஆகிறான். (அதாவது சோழ சாம்ராஜ்ய அதிபதி). அவனுடைய மகன் அதே வருடம், கிபி 1063ல் பாண்டிய நாட்டுக்கு ‘ஜடாவர்மன் சோழ பாண்டியத் தேவன்’ என்ற பெயரில் அரசனாகிறான்.

கிபி 1068ல் அதிராஜேந்திரனை சோழப் பேரரசுக்கு இளவரசனாக ஆக்குகிறான் தந்தை வீர ராஜேந்திரச் சோழன்.  அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. 1070க்குப் பிறகு அவனது கல்வெட்டுகள் இல்லை என்பதாலும், முதலாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்பதாலும் அதிராஜேந்திரச் சோழன் கிபி 1070ல் மறைந்திருக்கவேண்டும்.

இப்படி ராஜேந்திரச் சோழனின் மகன்களே பாண்டிய நாட்டுக்கும் அரசராக இருந்திருக்கின்றனர், சுமார் 70 வருட காலம் வரை.

இதனால்தான் அவர்களின் கல்வெட்டுகள் நெல்லையில் பல கோயில்களிலும் காணக் கிடைக்கின்றன. 

இராஜேந்திர சோழனின் மற்ற இரு மகன்களான மதுராந்தகன் 1063லும், பராந்தகன் 1059லும் மறைந்துவிட்டனர்.

முதலாம் ராஜேந்திர சோழனின் மகன்கள், தங்கள் கல்வெட்டுகளில் சிறிய தந்தை (தாதை) கங்கைகொண்டான் என்று குறிப்பிடுகின்றனர்.

1052ல், தன்னுடைய அடுத்த தம்பியான இரண்டாம் ராஜேந்திரனை,  ராஜாதிராஜன் இளவரசனாக்குகிறான். பிறகு கொப்பம் (கிருஷ்ணா நதிக்கரை) என்ற இடத்தில் கல்யாணியைத் தலைநகரமாகக் கொண்டிருந்த சாளுக்கியர்களுடன் (இவர்களை கல்யாணி சாளுக்கியர்கள் என்பார்கள். அரசன் முதலாம் சோமேஸ்வரன்) ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரனுடன் சென்று போர் புரிந்தபோது, ஆரம்பத்தில் வெற்றி தேவதை சோழர்கள் பக்கம் இருந்தாலும், இடையில், யானை மீது இருந்து போர் புரிந்த சோழ அரசன் ராஜாதிராஜனை, சாளுக்கிய வில்லாளர்கள் அம்புகள் எய்தி படுகாயமடையச் செய்து உயிரிழக்கச் செய்தனர். மன்ன ன் உயிரிழந்த தால் சோழப் படை பின்வாங்கியபோது, இரண்டாம் ராஜேந்திரன், படைக்குத் தலைமையேற்று படைகளை ஒன்றுதிரட்டி போரைத் தொடர்ந்தார். சாளுக்கியப் படைகள் பெரும் இழப்பைச் சந்தித்து போரில் தோற்று ஓடினர். வெற்றி பெற்ற பிறகு இரண்டாம் ராஜேந்திர சோழன், போர்க்களத்திலேயே முடிசூட்டிக்கொண்டார். கொப்பம் போரில் வெற்றி பெற்றதன் நினைவாக அங்கு ஒரு வெற்றித் தூண் அமைக்கப்பட்டது.  இந்த கொப்பம் என்ற இடம், கோலாப்பூருக்கு அருகில் இருக்கிறது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

1063ல் இரண்டாம் ராஜேந்திர சோழன், தன் தம்பியான வீர ராஜேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். 1064ல் இரண்டாம் ராஜேந்திர சோழன் மறைந்ததும் வீர ராஜேந்திரன் சோழ அரசனானான்.

இப்போது நமக்கு இயல்பாகவே ஒரு சந்தேகம் எழ வேண்டும். அடுத்த தம்பியான இராஜமகேந்திரன் இருக்க, ஏன் வீர ராஜேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான்? இதைக் கண்டுபிடிக்கத் துணை வருவது மரங்கியூர் கல்வெட்டு. இது இராஜமகேந்திரனின் நான்காம் ஆண்டுக் கல்வெட்டு. இதில் உள்ள தேதி 27 ஜூலை 1062.  அதனால் இராஜமகேந்திரன் 1058-59களில் பட்டம் சூட்டப்பட்டான் என்று கொள்ளலாம்.  இரண்டாம் ராஜேந்திர சோழன், 1063 ஏப்ரலில் வீர ராஜேந்திரனுக்கு முடி சூட்டியதால், இராஜமகேந்திரன் அதற்கு முன்பு, அனேகமாக 1063 ஆரம்பத்தில் மறைந்திருக்கவேண்டும்.

இந்தப் பெயர்களைப் பார்க்கும்போது நமக்கு இன்னொரு சந்தேகமும் எழ வேண்டும். ராஜேந்திர சோழன் (முதலாம்) மகன்கள் என்று நாம் அறுவரைக் குறிப்பிட்டோம். அதில் இரண்டாவது மகனுக்கு ராஜேந்திரன் என்ற பெயர் என்றும் சொன்னோம். (அவனே இரண்டாம் ராஜேந்திர சோழன் என்ற பெயரில் அரசாண்டவன்). அப்பாவுக்கும் மகனுக்கும் எப்படி ஒரே பெயர் இருக்க முடியும்?

முதலாம் ராஜேந்திர சோழனின் இயற் பெயர் மதுராந்தகன். பட்டம் ஏற்கும்போது அபிஷேகப் பெயராக ராஜேந்திர சோழன் என்ற பெயர் அமைந்தது. அவனுக்குப் பின் மூத்த மகன் ராஜாதிராஜன் அரசாண்டான். அவனுடைய தம்பியின் இயற் பெயர் சுந்தரச் சோழன். (அதனால்தான் பாண்டிய நாட்டுக்கு அரசனாக அவன் சென்றபோது அபிஷேகப் பெயராக ஜடாவர்மன் சுந்தரச் சோழ பாண்டியன் என்ற பெயர் ஏற்பட்டது).  பிறகு சோழ நாட்டுக்கு இளவரசாக ஆக்கப்பட்டபோது அபிஷேகப் பெயராக ராஜேந்திர சோழன் என்ற பெயரை வைத்துக்கொண்டான் (மூன்றாம் தலைமுறை அரசன் என்பதால்). இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

சரி… இராஜமகேந்திரன் 1058-59களில் சோழ இளவரசனாகப் பட்டம் சூட்டப்பட்டான்.  (அதற்கு முன்பு மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன் என்ற பெயரில் பாண்டிய நாட்டிற்கு அரசனாக இருந்தவன் இவன்). இராஜமகேந்திரன் 1063 ஆரம்பத்தில் இறந்திருக்கவேண்டும், அதனால்தான் ஏப்ரலில் அடுத்த தம்பியாகிய வீர ராஜேந்திரன் பட்டம் பெற்றான் என்று பார்த்தோம். இந்த அனுமானம் சரிதானா என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

Brahmadesam Kailasanathar Temple, Ambasamudram


பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் — ௳ (முகப்பு)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

நல்ல பழமையான பிரம்மதேசம் கோயிலைக் கண்டீர்களா? என்னுடைய பகுதியான நெல்லையைச் சேர்ந்த கோயில் இது. அடுத்த வாரம் நான் தற்போது வசிக்கும் பகுதியில் உள்ள சோழர் காலக் கோயில் ஒன்றைப் பார்க்கலாம். தொடர்ந்து இணைந்திருங்கள்.

(தொடரும்) 

31 கருத்துகள்:

  1. படங்கள் பிரமாதம். இருட்டு கவிந்த இடங்களிலும் தடங்கலில்லாத ஒளிவித்தையாய் துல்லியமாகத் தெரியும் சிற்ப நேர்த்தி வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீவி சார்.. கோயில் என்னை மிகவும் கவர்ந்தது, ஆளரவமற்று இருந்தபோதும்.

      கும்பகோணம் பகுதியில் இருக்கும் வெள்ளைப் பிள்ளையார் கோயில் (அது சிவன் கோயில்) சிற்பங்களும், பழமையும் என்னை அசரடித்தன. எப்போது பகிரும் வாய்ப்பு வரும் எனத் தெரியவில்லை.

      நீக்கு
  2. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. சோழ வரலாறும் அவர்கள் வாரிசுகளை பற்றி விரிவான தகவல்.

    பிரம்மதேசம்-சோமஸ்கந்தர் கோயில் படங்கள் எல்லாம் அருமை.
    திருக்குள படங்கள், மற்றும் கோயில்மரக்கதவில் உள்ள அனைத்து சிற்ப்பங்களையும் நன்றாக படம் எடுத்து இருக்கிறீர்கள்.
    கோயில் பிரகாரம் தூண்கள், படிகளில் யானை , யாளி சிற்பங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் படங்களை ரசித்தமைக்கு நன்றி கோமதி அரசு மேடம்

      நீக்கு
  4. கோயில் திருப்பணிகள் நடக்கிறது போலவே, கோபுரத்தில் பச்சை தூனி கட்டப்பட்டு இருக்கிறது, சாரம் கட்டப்பட்டு இருக்கிறதே.
    மீண்டும் கோயில் சிறப்பாக எல்லா விழாக்களும் நடக்க இறைவ்ன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த முறை போகும்போது பார்க்கணும். செப்டம்பரில் போகணும் என்று நினைத்திருக்கிறேன்...இன்னும் பயணம் முடிவாகலை.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.... பல வாரங்களுக்குப் பிறகு உங்களைப் பார்க்கிறேன். நலமா இருக்கிறீங்களா? இன்று ஞாயிறு வெளியில் செல்லவில்லையா?

      நீக்கு
  6. இராஜ வம்சங்களில் பிறக்கும் வாரிசுகளின் பெயர்களைப் பார்த்தால் வழிவழி வந்த முன்னோர்களின் பெயர்களே சுற்றிச் சுற்றி வருவது நிறைய யோசனைகளக் கி. ளப்புகிறது. எதைத் தொட்டாலும் நம் கற்பனை நிறைய கதைகளைப் பின்னுவதற்கு வழி கோலுகிறது.
    உதாரணத்திற்கு முதலாம் இராஜேந்திரனின் ஒரு பிள்ளை பெயர் மதுராந்தகன். இந்தப் பெயரைப் பார்த்ததுமே கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தேன். பத்து நிமிஷ சிந்தனையில் சிக்கலில்லாத கற்பனையாய் புதுக்கதை ஒன்று மனசில் பூத்ததில் நிறைவாகவே சந்தோஷம். நாளையே எழுத உட்கார்ந்து விட வேண்டும் என்ற தீர்மானம் பிறந்திருக்கிறது.
    நெல்லைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கும் அப்படித்தானே ஜீவி சார்... அப்பாவோட அப்பா/அம்மா, அம்மாவோட அப்பா/அம்மா இப்படித்தானே பெயர்கள் பொதுவாகச் சுற்றி வரும்?

      இத்தனை நாட்கள் எழுதியபோதே நினைத்தேன்..நீங்கள் அதை ஒரு பொறியாகக் கொண்டு நாவலோ கதையோ எழுதலாமே என்று. விரைவில் கதையை பூவனத்திலோ எபியிலோ பார்க்கலாமா?

      நீக்கு
    2. இராஜராஜ சோழன் தன்னுடைய முதல் மகனுக்கு மதுராந்தகன் என்று உத்தமச் சோழனின் பிறப்புப் பெயரை வைத்திருப்பதை வைத்து உங்களுக்கு ஏதேனும் கதை தோன்றியிருக்க வேண்டுமே.... எல்லோரும் உத்தமச் சோழன் ஆசைப்பட்டதால் சிம்மாசனத்தை விட்டுத் தந்தான் இராஜராஜ சோழன் என்கிறார்கள், ஆனால் தன் முதல் மகனுக்கே அவருடைய பெயரை வைத்திருக்கிறானே.

      நீக்கு
    3. எல்லாம் சரிதான் நெல்லை. உண்மையான பாண்டிய வம்சம் பின்னர் எங்குமே இல்லாமல் போய்விட்டதா? இந்தச் சோழ/பாண்டியர்களின் ஆட்சி எப்போ முடிஞ்சது? அநேகமாகக் குலோத்துங்க சோழன் காலத்தில் (அவனும் கலப்புத் தானே) இருந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில் குலோத்துங்க சோழன் காலத்தில் தான் பெரிய புராண அரங்கேற்றம் சேக்கிழாரை வைச்சு நடந்திருக்கு.

      நீக்கு
    4. 60-70 வருடங்கள்தாம் இந்த சோழ பாண்டிய அரசர்கள் ஆண்டனர். அதற்குப் பிறகு சோழ தேசத்தை ஆளவே இளவரசர்கள் இல்லாததால் பாண்டிய நாட்டை ஆள தங்கள் உறவுப் பிரதிநிதியை அனுப்பவில்லை. அதுபோல முதலாம் குலோத்துங்கச் சோழனும், தேவையில்லாமல் படையெடுக்காமல் இருந்த நாட்டைச் சீராக வைத்துக்கொள்ளத் தலைப்பட்டான். அதனால் அவன் இலங்கையைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஓரளவு, பாண்டிய நாட்டைப் பற்றியும் கவலைப்படவில்லை. அதன் பிறகுதான் பாண்டிய வம்ச இளவரசர்கள் தலையெடுத்திருக்கவேண்டும்.

      நீக்கு
  7. சோழ வம்சத்தின் உடன்பிறப்புகளின் ஆட்சி அதிகார பங்கீடுகளை நேர்த்தியாக நீங்கள் சொல்லியிருக்கும் விதம் புன்னகை பூக்க வைத்தது.
    வரலாறுகள் தொடர்ந்து தம் தடங்களைப் பதிக்கும் சாகா வரம்பெற்றவை தாம். சந்தேகமேயில்லை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோழர்கள், ஆட்சி அதிகாரத்தை நன்றாக அடுத்த தலைமுறைக்கு அளித்திருக்கின்றனர். அதுபோலவே பரவலாக ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதும் ஆச்சர்யமே. அதனால்தான் சில நூற்றாண்டுகள் தொடர்ந்து அந்தப் பரம்பரை ஆண்டிருக்கிறது.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய கோவில் தரிசன பகிர்வு எப்போதும் போல அருமை. சோழ, பாண்டிய சரித்திர கால வரலாறு மிகவும் அருமையாக உள்ளது. சோழ, பாண்டியர்களின் வரலாறு எத்தனை முறை படித்தாலும் சுவாரஸ்யம் குன்றாதுதான்.. அவர்கள் உண்டாக்கிய கோவில்களும் எக்காலத்திலும் பெருமை பெற்றதுதான். நாம் கவனமாக பாதுகாத்தால், என்றென்றும் சிறந்து நிற்கும் உறுதியும், வலிமையும் கொண்டவை.

    பிரம்மதேசம் கோவில் மிக அருமையாக உள்ளது. சிற்ப படங்கள் ஒவ்வொன்றையும், மிக அருமையாக எடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    நாங்கள் இந்த ஊருக்கு முன்பு ஒரு முறை சென்றிருந்தாக நினைவு. எங்கள் ஒன்று விட்ட நாத்தனார் அவ்வூரில் வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்தார். அப்போது அவரையும், அவ்வீட்டையும் காண வரும்படி அவர் அழைத்திருந்ததால் , ஒருமுறை கல்லிடை சென்ற போது அங்கும் சென்று வந்தோம். (அப்போது எங்கள் குழந்தைகள் மிக சிறியவர்கள். அந்த பருவத்தில் நாங்கள் அனைவரும் சென்று வந்ததால் அவ்வளவாக இப்போது நினைவில் இல்லை.) அந்த பெரிய வீட்டையும், வீட்டின் அருகிலேயே உள்ள கோவிலின் பிரம்மாண்டத்தையும் பார்த்து வியந்துள்ளேன். கைலாச நாதர் கோவிலுக்கும் (இது அவ்வூரில் இருக்கும் மற்றொரு கோவிலோ.?) சென்று வந்தோம். உங்கள் படங்களை பார்க்கும் போது லேசாக கோவிலைப் பற்றி நினைவுக்கு வருகிறது.

    தாங்கள் பகிர்ந்த படங்கள் அனைத்தும் அட்டகாசமாக உள்ளது. சிற்பங்களை பார்த்து ரசித்தேன். மற்றோர் முறை இக்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இனியும் எப்போதோ.? உங்கள் படங்களின் வாயிலாக கோவிலையும், இறைவனையும் தரிசித்துக் கொண்டேன். 🙏. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோழர் சரித்திரம் எப்போதுமே மனதை மயக்கும். ஓரளவு விவரமாக அமைந்திருப்பதும் அவர்கள் செய்த பல்வேறு திருப்பணிகள் காரணமாகவும், தமிழகத்தின் பெருமையை பல்வேறு நாடுகளுக்கும் பரவச் செய்ததும் காரணமாக இருக்கும்.

      கைலாச நாதர் கோயில், நவ கைலாச கோயில்களில் கோடகநல்லூரில் அமைந்துள்ளது. அவ்வளவு தூரம் சென்றிருந்திருப்பீர்களா (ரொம்ப தூரம் இல்லை, கல்லிடையிலிருந்து போயிருப்பீங்களா என்பதால் கேட்டேன்)

      நிச்சயம் உங்களுக்கு தரிசனம் கிடைக்கும். கல்லிடைக் குறிச்சி நன்றாக நினைவில் இருக்கிறதா?

      நீக்கு
    2. பிரம்மதேசம் போயிட்டுத் தான் கல்லிடைக்குறிச்சி போனோம் என நினைக்கிறேன். பாபநாசத்தில் குருக்கள் அம்பாசமுத்திரத்தில் ஒரு பிராமணர்களின் ஓட்டல் இருப்பதாகவும், சாப்பாடு, டிஃபன் நன்றாக இருக்கும் என்றும் சொல்லி ஓட்டல்காரரின் பெயரையும் சொல்லிவிட்டுப் பாபநாசம் குருக்கள் அனுப்பினார்னும் சொல்லச் சொல்லி இருந்தார். கல்லிடைக்குறிச்சியில் அப்பளம், பக்ஷணம் வாங்க வேண்டி இருந்ததோடு அல்லாமல் தொந்தி விளாகம் தெருவில் நம்ம படைத்தளபதி திருவாளர் அம்பியின் வீடு இருந்தது. அம்பிக்கு அப்போத் தான் கல்யாணம் நிச்சயமாகி இருந்தது. இணையம் மூலம் காதல். அது வெற்றி பெற்றுக் கல்யாணம் ஆகும்வரை அம்பிக்கு ஒரே டென்ஷன். ஆகவே அதைத் தூண்டி அவரைச் சீண்டிப் பார்க்கவென்றே கல்லிடைக்குப் போனோம். அதை எல்லாம் பதிவாக எழுதியும் ஆச்சு. இப்போ அம்பி எப்போவானும் தான் தலை காட்டுகிறார். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட நல்லது கெட்டது பிரிச்சுப் பார்க்கத் தெரிந்த ஒரு நல்ல நரசிம்ம உபாசகர் ஆன அம்பி இணைய உலகை விட்டு விலகி இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் அவர் வாழ்க்கை அவர் வாழ்ந்தாகணும். அவர் தம்பி 20 வருஷங்களாக இங்கே தோஹாவில் தான் வாசம். குடும்பத்துடன் வந்துட்டுப் போனார். தொடர்பில் இருக்கார். கல்லிடையில் அவங்க அம்மா மட்டும் தனியாக இருக்கார். இதைச் சாக்கு வைச்சு ஸ்ரீரங்கத்தில் நானும் இருக்கலாம்னு நினைச்சால் பயங்கர எதிர்ப்பு. :( 2007னாம் வருஷம் ஜனவரி/பிப்ரவரியில் போனோம்னு நினைக்கிறேன். மாசம் சரியா நினைவில்லாட்டியும் வருஷம் அது தான். அப்பு மேயில் பிறந்தது. அதுக்காகத் தான் அம்பேரிக்கா போனோம். போகும் முன்னர் இங்கெல்லாம் ஒரு சுத்துச் சுத்தினோம்.

      நீக்கு
    3. அம்பாசமுத்திரத்தில் நீங்கள் சொல்லும் ஓட்டலில் சாப்பிட்ட நினைவு. எனக்குத் தோணுது, உங்களால ஸ்ரீரங்கத்தில் தனியாக இருக்க முடியாதுன்னு. உதவிக்கு அக்கம் பக்கம் நிறையப் பேர்கள் இருந்தால்தான் அது சாத்தியம். அவசரத்துக்கு ஆஸ்பத்திரி போவதும் சிரமம்.

      நீக்கு
  9. ​சனியன்று குரு பரம்பரை வரலாறு, ஞாயிறு சோழர் பரம்பரை வரலாறு, இடையில் சுற்றுலா வருணனைகள், கோயில்கள், சிற்பங்கள் என்று புகைப்பட தொகுப்பு ஆக எ பி யின் சாயலையே மாற்றி அமைத்துவிட்டீர்கள்.
    இத்தகைய பன்முகத்தன்மை ரா கி ர வை போல் உள்ளது. பாராட்டுக்கள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். நீங்கள் சனிக்கிழமை பதிவைத் தொடர்ந்து படிக்கிறீர்களா என்ற சந்தேகம் இருந்தது.

      எனக்கும் இதைச் சாக்கிட்டு பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எடுத்த படங்களையும் பகிர முடிகிறது. செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து தமிழகத்தில் முக்கியக் கோயில்களில் அலைபேசி கேமரா எடுத்துச் செல்ல இயலாது.

      நீக்கு
  10. கோயில் ஓரளவு சுத்தமாக இருந்தாலும் ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சம் பழமையான கட்டிடங்கள் விரைவில் சிதைந்து விடுமோ என்னும் கவலையும் வருது. கோயில் கதவுகளின் சிற்பங்கள் எல்லாமும் அருமை. ஒரு சிற்பத்தில் பெண்ணின் தலை வெட்டுண்டு இருக்கிறது என்பதைப் பார்க்க மனம் வருந்துகிறது. இது தற்செயலா அல்லது நம்ம மக்களின் கைங்கரியமானு புரியலை. எப்படியானாலும் பழமையைப் பாதுகாத்து வரும் தலைமுறைக்குக் கொடுக்கும் எண்ணம் நம்ம ஜனங்களுக்குக் கொஞ்சமும் இல்லை. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோயிலில் உழவாரப்பணி சிறப்பா நடைபெற்றால், நம் வரலாற்று உதாரணமான இந்த சிறப்பான கோயிலை வரும் தலைமுறைக்கும் கொடுக்கலாம். கோவில் திருக்குளமும் சுமாராகத்தான் இருக்கு. அந்தக் காலத்துல மிகச் சிறப்பா இருந்திருக்கும்.

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. அது சரி நெல்லை, வீர ராஜேந்திரன் தன் மகனான அதி ராஜேந்திரனை விட்டு விட்டுத் தன் சகோதரி மகனான ராஜேந்திர சளுக்கியனைத் தேர்ந்தெடுத்த காரணம் என்ன? குலோத்துங்க சோழன் என்னும் அபிஷேஹப் பெயர் கொண்ட இந்தச் சோழ சாளுக்கிய இளவரசன் தான் அதி ராஜேந்திரனைக் கொன்றான் என்னும் செய்தியும் உண்டல்லவா? நீங்க இங்கே அதை எல்லாம் குறிப்பிடவில்லை என்றாலும் படிச்சிருப்பீங்கனு நினைக்கிறேன். இவன் உண்மைப் பெயர் அநபாயன் அல்லவா? இவன் படைத்தலைவன் கருணாகர பல்லவனை வைத்துத் தான் சாண்டில்யன் ஒரு பெரிய நாவல் எழுதி இருக்கார். அநேகமாகக் கடல்புறாவோ? அதோடு பிரபலமான காந்தளூர்ச்சாலையும் அங்கே நடந்த போரும் குலோத்துங்கன் காலத்தில் தானே? சேர அரசன் ரவி மார்த்தாண்ட வருமனைப் பொன்னியின் செல்வன் ரவி தாசனோடு இணைத்துப் பேசிப் பலரும் சொல்லிக் கொண்டு இருக்காங்க. சிப்புச் சிப்பா வரும். :) கலிங்கத்துப் பரணி குலோத்துங்கன் காலத்தில் இரண்டாம் கலிங்கப்போர் சமயம் எழுதப்பட்டது அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீசா மேடம்.... நிறைய தகவல்கள். நிச்சயமாக இவற்றை ஆராய்கிறேன். வீர ராஜேந்திரன், ராஜேந்திர சாளுக்கியனைத் தேர்ந்தெடுக்கவில்லையே. தன் தம்பியைத்தானே தேர்ந்தெடுத்தான்.

      அதிராஜேந்திரனுக்கு குழந்தைகள் இல்லை. குலோத்துங்கச் சோழன் (என்ற பெயரில் முடிசூட்டிக்கொண்ட சாளுக்கிய இளவரசன்) பற்றி நல்லவிதமாகத்தான் வரலாறு சொல்கிறது

      நீக்கு
  13. முதல் குலோத்துங்கன் பேரனான இரண்டாம் குலோத்துங்கனுக்குத் தான் அநபாய சோழன் என்னும் பெயர் வருமோனு நினைக்கிறேன். இவன் காலத்தில் ஸ்ரீராமானுஜர் இருந்தாரா? இவன் தானா கிருமி கண்ட சோழன்? சேக்கிழாரின் பெரிய புராணம் இவன் காலத்தில் தான் அரங்கேற்றம் செய்திருப்பதாகப் படிச்சிருக்கேன். அதே போல் ஒட்டக் கூத்தரும் இவன் காலத்தில் இருந்திருக்கார். ஆனால் கம்பர் பற்றியோ கம்ப ராமாயணம் பற்றியோ எந்தவிதக் குறிப்புக்களும் காணப்படவில்லை. தில்லைக்கோயிலைச் சீரமைத்தது இரண்டாம் குலோத்துங்கன் என நினைக்கிறேன். அநேகமாகப் பரகாலரும் இவன் காலத்தவராக இருந்திருக்கலாம் இல்லையா? அதெல்லாம் பின்னர் வருமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருவருக்குமே அநபாய சோழன் என்ற பெயர் இருந்ததாகத்தான் நூல்கள் சொல்கின்றன. உங்க பாயிண்ட் சரி. என் அனுமானப்படி இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில்தான் இராமானுஜருக்கு அநீதி செய்ய முயன்றார்கள். இவன் கிருமிகண்ட சோழன். பலரும் முதலாம் குலோத்துங்கனைச் சொல்கிறார்கள், காரணம் இராமானுஜரின் காலம் இடிப்பதால். இதுபற்றி யோசித்துப் பிறகு எழுதுவேன், குரு பரம்பரையில்

      நீக்கு
    2. கம்பரின் காலம் நாதமுனிகள் காலத்தோடு சம்பந்தப்பட்டதாக எழுதியிருக்கிறார்கள். நாதமுனிகள்தாம், திருவரங்கத்தில் கம்பரை இராமாயணம் அரங்கேற்றச் சொன்னதாகவும், தற்போது மேட்டழகிய சிங்கர் சன்னிதியில் உள்ள வெள்ளைப் பளிங்கு சொல்வதுபோல ஆளவந்தார் காலத்தில் அல்ல என்று நேற்று தெரிந்துகொண்டேன். உங்களைப் போன்றவர்கள் பதிவைப் படித்து நிறைய சந்தேகங்கள் எழுப்புவது எனக்கு மிக மிக உபயோகம். மிக்க நன்றி கீதா சாம்பசிவம் மேடம்

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!