
கபில்தேவ்
கபில் தேவ் நிகான்ச். ஐம்பத்தி ஒன்பதாம் ஆண்டு பிறந்த ஹரியானாப் புயல். இந்திய கிரிக்கெட் சரித்திரத்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் என்றுமே எடுபட்டதில்லை என்றிருந்த காலகட்டத்தில் புயலாக உள்ளே நுழைந்தவர். அந்த நேரத்தில் உலகில் நாலு ஆல் ரௌண்டர்கள். இங்கிலாந்தின் இயான் போத்தம், நியூ ஜிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ, பாகிஸ்தானின் இம்ரான்கான், நம்ம கபில்.
இதுவரை இந்தியா பெற்றுள்ள ஒரே உலகக் கோப்பையை பெற்றுத் தந்தவர். அந்த மேட்ச்சில் குறைந்த ரன்களைப் பெற்ற போதும் விளையாடிப் பார்க்கலாம் என்று சொல்லி விளையாடி வெற்றி பெற வைத்தவர். மேற்கிந்திய சிங்கம் விவியன் ரிச்சர்ட்ஸ் இருபத்தெட்டு ரன்களில் இருந்த போது பந்து செல்லும் திசையிலேயே ஓடி ஒரு அற்புதமான ரன்னிங் கேட்ச் மூலம் அவரை அவுட் ஆக்கியவர். (இப்போ எல்லாம் எவ்வளவு கேட்ச் நாங்க பார்த்துட்டோம் என்று படிக்கும் உங்கள் மனதில் தோன்றலாம்....குறைந்த இலக்கு நிர்ணயிக்கப் பட்ட ஒரு உலகக் கோப்பை இறுதிப் பந்தயத்தின் முக்கிய நேர நிகழ்வு அது...)
ஒருமுறை தென் ஆப்பிரிக்காவின் பீட்டர் கிறிஸ்டன் இவர் பந்து வீச வரும்போது முன்னாலேயே ஓடத் தொடங்கி ஸ்டார்ட் கொடுத்துக் கொண்டிருக்க, கபில் அவரை ஓரிரு முறை எச்சரித்துப் பார்த்தார். அவர் கேட்கவில்லை. அடுத்த முறை பந்து வீச ஓடி வந்த கபில் ஓடத் தொடங்கிய பீட்டர் க்றிஸ்டனை ரன் அவுட் செய்து விட்டார். (இந்த இடத்தில் வாசகர்களுக்கு Gentleman Walsh ஞாபகம் வரணுமே...)
ஒருமுறை நியூசிலாந்தும், இன்னொரு முறை, ஷார்ஜாவில் என்று நினைக்கிறேன், பாகிஸ்தானுடனும் விளையாடும்போது இந்தியா 120 ரன்களுக்கு ஆட்டமிழந்துவிட, நிச்சயம் தோல்விதான் என்று நினைத்தோம். இதில் ஷார்ஜாவில் ஆட்ட நேர இடைவெளியில் இம்ரானிடம் வர்ணனையாளர் பேட்டி வேறு! பந்தை எப்படி விரல்களுக்கிடையில் பிடித்து ஸ்விங் செய்து விக்கெட் எடுத்தார் என்று விளக்கிக் கொண்டிருந்தார். அவர்கள் பேட் செய்யும்போது ஸ்லிப்பில் வரிசையாக ஆட்களை நிறுத்தி அவுட் ஸ்விங் போட்டு அவர்களை 120 க்கு முன்பே ஆட்டமிழக்கச் செய்தார். பாகிஸ்தானை எண்பது ரன்களில் சுருட்டினார். அவுட் ஸ்விங் மன்னன் கபில்.
கவாஸ்கர் போன்ற சீனியர் வீரர்கள் இவரைக் குழந்தை போல மதிப்பார்களாம். அவருடன் டிஸ்கஸ் செய்ய வேண்டி அவருடன் ஸ்லிப்பில் பீல்டிங் நிற்பாராம் கபில்.
உலகக் கோப்பை போட்டியில் ஜிம்பாப்வேயுடன் விளையாடும்போது பதினேழு ரன்களுக்கு ஐந்து விக்கெட். அவ்வளவுதான் காலி என்று நினைத்தபோது கபில் வந்தார். ரன்மழைதான் அப்புறம்.கிர்மானியுடன் சேர்ந்து அவர் எடுத்த 175 Not Out ஒரு சாதனை.அந்த விளையாட்டைப் பார்க்க முடியாமல் செய்தது இங்கிலாந்து கேமிரா மேன்களின் வேலை நிறுத்தம். ஏழு விக்கெட் விழுந்தபின் உள்ளே வந்த கிர்மானி இருபத்துநாலு ரன்கள் எடுத்தார்.
மனதில்பட்டதை பேசத் தயங்காதவர் கபில். என்ன நினைத்தாலும் சரி என்று சொல்லி விடுவாராம். அவர் ஒரு பேட்டியில் சொல்லி உள்ள ஒரு சுவாரஸ்யத் தகவல்.... கவாஸ்கர் விளையாட இருக்கும்போது பேசவே மாட்டாராம். இறுக்கமாக அமர்ந்திருப்பாராம். ஸ்ரீக்காந்த் நேர் எதிர். பேசிக் கொண்டே இருப்பாராம். சீனியர் ஆட்டக்காரர்களைப் போல் மிமிக்ரி செய்வாராம்.ஆனால் வினோதம் என்னவென்றால் பேசவே பேசாத கவாஸ்கரும், பேசிக் கொண்டே இருக்கும் ஸ்ரீகாந்த் தும்தான் துவக்க ஆட்டக் காரர்கள். அதுதான் ஸ்ரீக்காந்த் விக்கெட்டுகளுக்கு நடுவே பேசிக் கொண்டே இருப்பார் போலும்.எல்லா டீமிலும் ஸ்ரீக்காந்த் போல ஒரு கலகலப்பான ஆள் வேண்டும் என்பது கபில் கருத்து.
89 என்று ஞாபகம். இங்கிலாந்துடன் டெஸ்ட் மேட்ச். Follow on தவிர்க்க 24 ரன்கள் தேவை. கபில் பிரவேசம். உடன் இருப்பவர் ஹிர்வானி.கடைசி விக்கெட். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை எப்படியோ சமாளித்து விட்டார் ஹிர்வானி. . அடுத்த ஓவரை வீச வந்தார் ஜான் எம்புரே. முதல் இரண்டு பந்துகளை தடுத்து ஆடிக் கொண்டார் கபில். அடுத்த நான்கு பந்துகள்..... அடுத்தடுத்து நான்கு சிக்ஸர்கள்.. 24 ரன் வந்து விட்டது. Follow on Avoided.அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஹிர்வானி அவுட்!! அடுத்த நாள் Hindu வில் மோகன் எழுதியது,, "How to avoid Follow On? 4 X 6 = 24..
Tied Chennai Test... மறக்க முடியுமா? ஆஸ்திரேலியாவின் ஜோன்ஸ் Dehydration இல் அவதிப்பட்டு செஞ்சுரி அடிக்க அந்த மேட்சிலும் Follow On தடுத்தது கபில்தான். அந்த மேட்ச்சில் கபில் ஒரு செஞ்சுரி அடித்ததாக நினைவு.
out swinger Specialist. சில சமயம் அழகான யார்க்கரில் இன் ஸ்விங்கரும் கூட. விக்கெட் எடுத்தும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வதோ, மண்ணை முத்தமிடுவதோ, ஓடி ஓடி உணர்ச்சி வசப்படும் வழக்கமோ கிடையாது. டெஸ்ட் மேட்ச்சில் 400 விக்கெட்கள் எடுத்தும் அதே அமைதி...
வெங்கட்ராகவன் நெஸ்கபே விளம்பரத்தில் நடித்த பிறகு இவர்தான் இன்னொரு பானத்திற்கு விளம்பரத்தில் நடித்தார் என்று ஞாபகம். Boost is the Secret of my energy முதலில் சொன்னவர்!