நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
13.5.12
11.5.12
அலேக் அனுபவங்கள்::முன்னுரை
அசோக் லேலண்ட் என்னும் சமுத்திரத்தில் ஓர் ஓரத்தில் நின்று சுமார் முப்பத்தைந்து வருடங்கள் காக்காய் குளியல் செய்த என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல், இந்த ப்ளாக் ஆரம்பித்த நாள் முதல் எனக்கு இருந்து வந்தது.
இதை தொடர் போல எல்லாம் எழுதி, உங்கள் பொறுமையை சோதிக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. இந்தத் தலைப்பில், வாரம் ஒரு பதிவு போடலாம் என்ற எண்ணம மட்டும் இருக்கின்றது. ஒவ்வொரு பதிவும், ஒவ்வொரு தனி அங்கமாக இருக்கும் ( என்று நம்புகின்றேன்!)
முஸ்கி (அதாவது 'டிஸ்கி' க்கு ஆப்போசிட்!) இதில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே ....... இல்லை. சில இடங்களில் பெயர் குறிப்பிட்டிருப்பேன். சில இடங்களில் பெயர்கள் கற்பனையாக இருக்கக் கூடும். சில இடங்களில் பெயர் குறிப்பிடாமல் நழுவி விடுவேன். சில இடங்களில் பெயர்களை மாற்றிக் கொடுத்திருப்பேன். பெயர்களா முக்கியம்? (என்ன மோ சி பாலன்....? சரிதானா? )
முஸ்கி இரண்டு: இதில் காணப்படும் கருத்துகள், என்னுடைய பார்வை, என்னுடைய அனுபவம், என்னுடைய புரிதல். உடன் பணிபுரிந்தவர்கள் யாரையும் குறை காண்பதோ / குற்றம் சுமத்துவதோ என்னுடைய எண்ணமோ அல்லது விழைவோ இல்லை. அப்படி ஏதேனும் த்வனி தெரிந்தால், அவ்வப்போது அங்கங்கே கருத்துரைத்து உங்கள் ஐயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.
அன்புடன் (அம்புடன்)
கௌதமன்.
*****************************
கி பி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றாம் ஆண்டு வந்த சனிப் பெயர்ச்சி, மிகவும் முக்கியமானது (எனக்கு!). புலியூர் பாலுவோ அல்லது காழியூர் நாராயணனோ யாரோ ஒருவர் என்னுடைய தனுசு ராசிக்கு அந்த சனிப் பெயர்ச்சி பெரிய நன்மைகளைக் கொடுக்கும் என்று எழுதியிருந்தார்கள். அதைப் படித்து, என்னுடைய அப்பாவும் நானும் ரொம்ப அகமகிழ்ந்து போனோம்.
அந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள், அசோக் லேலண்டுக்கு அப்ரெண்டிஸ் ஆக சேருவதற்கு (ஹிந்து பேப்பர் விளம்பரம் பார்த்து) மனு செய்திருந்த எனக்கு, எழுத்துத் தேர்வு ஒன்றுக்காக சென்னை வந்து சேரும்படி அழைப்பு அனுப்பி இருந்தார்கள்.
உடனடியாக, சென்னை வருவதற்கு, ஒரு ரயில் டிக்கெட் பதிவு செய்தார், அப்பா. முதன் முறையாக, தனி ஆளாக அதிக தூரம் (நாகப்பட்டினத்திலிருந்து, சென்னை வரை)பயணம் செய்தது அப்பொழுதுதான் என்று நினைக்கின்றேன்.
அந்தப் பயணத்தின் போது ஒரு திடுக்கிடும் அனுபவம் ஏற்பட்டது.
மீதி அடுத்த பதிவில்...
9.5.12
எட்டெட்டு பகுதி 17:: பெரியவர் சென்றது எங்கே?
போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து முடித்ததும், கே வி அங்கிருந்து
கிளம்பத் தயாரானார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியவரிடம், 'நீங்க போகலாம்' என்று கூற, பெரியவரும் அங்கிருந்து கிளம்பினார். தானும் கே வி யுடன், 'வாடகை காரில் வரலாமா' என்று கேட்டார் ஹோட்டல் பெரியவர்.
"ஓ அதற்கென்ன? தாராளமாக வாருங்கள். இந்த ஊரில் எனக்கு எந்த வழியும் தெரியாது. நீங்கதான் காரோட்டிக்கு நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி சொல்ல வேண்டும்."
"எனக்கு இந்த இந்தூரில் எல்லா சந்து பொந்துகளும் தெரியும். நான் செல்ல வேண்டிய இடம் வந்ததும் காரை நிறுத்தி, இறங்கிக் கொள்கின்றேன்."
வாடகை காரில், பெரியவர் சொன்ன வழிகளில் காரோட்டி காரை ஓட்டி வந்தார்.
கே வி: "பிங்கி தற்கொலையா? எப்படி?"
பெரியவர்: "அதுதான் எனக்கும் புதிராக இருக்கின்றது. அந்தப் பொண்ணு எங்க ஹோட்டலுக்கே முதலாளியம்மா ஆகப போறாங்கன்னு நெனச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்படி ஆயிடுச்சு என்பது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கின்றது. "
அந்த நேரத்தில் எனக்கு (கே வி) என்ன தோன்றிற்று என்றால், 'தன்னிலை
அறியும்' மாத்திரையை கோக்க கோலா தம்ளரில் நான் போட்டதை ஓ ஏ
குடித்து, உடனே அவர் தன்னிலை அறிந்து, பிங்கியிடம் ஒட்டுதல் இல்லாமல் பேச ஆரம்பித்திருப்பார். அதனால் பிங்கி மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கக் கூடும் என்பதுதான்.
ஆனால் ஓ ஏ, பிங்கி விவகாரங்கள் எல்லாமே எனக்குத் தெரிவித்தது,
மாயாவின் ஆவி. இதை யாரிடமும் என்னால் சொல்ல முடியாது; சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். அதனால் அந்தப் பெரியவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து, பேசினேன்.
கே வி: "பெரியவரே நீங்க நேற்று மாலையிலிருந்து, இன்று காலை வரை, எங்கு சென்றிருந்தீர்கள், என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"
பெரியவர்: "நான் மன அமைதிக்காக ஒரு இடத்திற்குச் சென்று, அங்கு இரவும்,அதிகாலையும் தியானம் செய்து கொண்டிருந்துவிட்டு, பிறகு ஹோட்டலுக்குத் திரும்பினேன். ஹோட்டலுக்கு நான் திரும்ப வந்த போது, காலை ஒன்பது மணி ஆகிவிட்டது. ஹோட்டலே மிகவும் பரபரப்பாக இருந்தது. ஓ ஏ வின் பி ஏ தற்கொலை செய்துகொண்டு விட்டாள் என்பதுதான் பரபரப்புக்குக் காரணம்.காலு சிங் என்னிடம், நீங்கள் கொடுத்துச் சென்ற, என்னுடைய அறையின் சாவியைக் கொடுத்தான். அதற்குப் பிறகு போலீஸ் வந்து, என்னுடைய அறை, காலு சிங்கின் அறை எல்லாவற்றையும் சோதனை செய்தார்கள். எங்கள் இருவரையும் மத்தியானம், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
எங்கள் இருவரிடமும், நேற்று மாலை முதல், இன்று காலை வரை, நாங்கள் எங்கே இருந்தோம், என்ன செய்தோம் என்ற விவரங்களைக் கேட்டு, அதைப் பதிவு செய்து கொண்டார்கள்."
கே வி: "நேற்று நீங்க சென்ற இடம் எது? ஏதாவது கோவிலா?"
பெரியவர்: "இதோ நான் இறங்கவேண்டிய இடம் வந்துவிட்டது. இந்த
இடத்திற்குத்தான் நான் உங்களிடம் பெற்றுக் கொண்ட நூறு ரூபாயில் எண்பது
ரூபாய்க்கு பூ வாங்கிக் கொண்டு, மீதி இருபது ரூபாயில் ஆட்டோ பிடித்து
வந்து சேர்ந்தேன். இப்போ இங்கே சென்று சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு,
பிறகு ஹோட்டலுக்குப் போய்விடுவேன். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி
வரதராஜன் சார்!"
கே வி: "ஓஹோ - இந்த இடத்திற்குத்தான் வந்திருந்தீர்களா? நேற்று நான் தங்குவதற்கு நீங்கள்
செய்த உதவிக்கு மிகவும் நன்றி. உங்கள் அறையில் தங்கியதால்தான், என்னுடைய
அலுவலகப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைத்தது. உங்கள் பெயரைக் கூட
நான் இதுவரைக் கேட்கவில்லை. உங்கள் பெயர் என்ன பெரியவரே?"
பெரியவர்: "கோவிந்தராஜன்."
(தொடரும்)
8.5.12
என் கேள்விக்கென்ன பதில்! அஞ்சு சான்ஸ்
தொலைக்காட்சியில் வெண்ணிற ஆடை மூர்த்தி & வடிவேலு பங்கு பெறும் நகைச்சுவை காட்சி ஒன்று வந்துகொண்டிருந்தது. வெ ஆ மூ, வடிவேலு வாய் திறக்கும் பொழுதெல்லாம், அவர் பேசும் வார்த்தைகளைக் கொண்டே அவரிடம் கேள்வி கேட்டு மடக்கும் காட்சி. (டேபிளைக் கண்டுபிடித்தது யாரு, டேபிள் ஃபேன் கண்டுபிடித்தது யாரு') என்று கேட்டு கலாய்க்க, வடிவேலு, 'ஐயோ போதும்பா' என்று அலறிக் கொண்டு ஓடும் காட்சி. எல்லோரும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த அந்த வேளையில் ...
மாமா ஃபோன் செய்தார்.
"ஆதித்த கரிகாலன் தலைப்புல வந்த புத்தக அறிமுகம் எழுதி இருந்தது படித்தேன்... நன்றாக இருந்தது... மர்மங்கள் என்ன என்று சொல்லாமல் நிறுத்தியிருப்பது நல்ல காரியம்...."
"நீங்க படிச்சீங்களா மாமா..?" ஏனென்றால் அவர் இதெல்லாம் படிக்கும் பழக்கங்கள் இல்லாதவர்.
"இல்லை.... எனக்கு அபபடி ஃபோன் வந்தது... "
"யார் ஃபோன் செய்தது?"
"நீ கண்டுபிடி.."
"எனக்கு எப்படித் தெரியும்... நீங்களே சொல்லுங்க..."
"உங்கள் பையன், பொண்ணுன்னா படிக்க மாட்டாங்க.... மேலும் சொல்லணும்னா என் கிட்டயே சொல்லிடுவாங்க..."
"என்னைக் கேட்கறியா... இல்லை பதிலா"
"பிரகாஷ்.."
"இல்லை... ஒரு சான்ஸ் போச்சு... கேள்வி கேளேன்... கேள்வி கேட்டு கெஸ் பண்ணு"
"இந்த ஊரா... வெளியூரா..."
"இப்போ வெளியூர்..." அப்போ உள்ளூர்தான், இப்போ வெளியூர் போய் இருக்கார் என்று கொள்ள வேண்டுமா அல்லது வேறு அர்த்தமா... கேட்காமல் தொடர்ந்தேன்.
"என்னையும் தெரிஞ்சவங்க என் கிட்டயே பேசியிருப்பாங்க.... உங்களை நல்லாத் தெரிஞ்சு என்னை லேசாத் தெரிஞ்சிருந்தா உங்க கிட்ட சொல்லியிருப்பாங்க..."
"எதாவது சொல்றியா... நீயே பேசிக்கிறியா.. எப்படியும் ரெண்டாவது சான்சும் காலி"
"விடுங்க மாமா... யாரோ சொன்னாங்க... அவ்வளவுதானே... அந்த அளவு போதும்.."
"......... " மௌனம்.
"சந்திர சேகரா...." அது அவர் மச்சினர்.
"இல்லை... மூணாவது சான்சும் காலி"
"விடுங்க மாமா... நான்தான் யார்னு தெரிய வேணாம்கறேன் இல்ல..."
"அதென்ன.. காசா பணமா... இன்னும் ரெண்டு சான்சஸ்தானே... ட்ரை பண்ணு"
டக் டக்கென வேறு இரண்டு பெயர்கள் சொல்லி 'கிச்சானை'க் காலி செய்தேன்.
அப்புறமும் விடை சொல்லவில்லை. சொல்லமாட்டார்! அவர் கேள்வி மட்டும்தான் கேட்பார்!
"கேள்வி கேக்கறதுன்னா என்ன பயம் உனக்கு.... எப்படிக் கேள்வி கேட்டு பதிலை வாங்கறதுன்னு கத்துக்கணும்டா...".
வேறு ஏதோ பேசி விட்டு விஷயங்களை எங்கெங்கோ தொட்டுப் பேசிய போது வந்த ஒரு க்ளூவில் ஒரு பெயர் சொன்னேன்.
"தப்பாச் சொல்லும்போதெல்லாம் தப்பு, தப்புன்னு சொன்னேன்... சரியாச் சொல்லும்போது சரின்னு சொல்லிடறதுதானே நியாயம்..."
"உங்க விருப்பம் மாமா..." மேற்கொண்டு கேள்விகளில் மாட்டிக் கொள்ளாதிருக்க முடிந்தவரை ஜாக்கிரதையாக பதில் சொன்னேன்.
"ஓகே...கரெக்ட்..." அப்புறம் அவர் எதற்கு ஃபோன் செய்யும்போது இதைப் பற்றி என் பேச்சு வந்தது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த போது என்னை அறியாமல் மீண்டும் ஒரு கேள்வி வந்து விழுந்துவிட்டது!
"அவர் உங்களுக்கு என்ன வேண்டும்... எந்த ஊர்ல இருக்கார் இப்போ..?"
"உனக்கு அஞ்சு சான்ஸ்..."
"மதுரை.."
"இப்போதானே சொன்னேன்... எடுத்த உடனே விடையைச் சொல்லலேன்னா அடிக்கவா போறேன்.... கேள்வி கேட்டு கெஸ் பண்ணிச் சொல்லு..."
"அவர் எந்த ஊர்"
"உதைக்கப் போறேன்.."
"நம்ம ரிலேஷன்ஸ் யார் இருக்கா அந்த ஊர்ல.."
"அவர்தான்... அவர் நம்ம ரிலேஷன்தானே..."
"சரி... அந்த ஊர்ல என்ன ஸ்பெஷல்..."
"கேலண்டர்...."
"சிவகாசி.."
"ஓகே.... எப்படியோ உடனே சொல்லிட்டே...."
"மாமா... கேள்வியா கேக்காம பேசலாமா...?"
"நீ மட்டும் கேள்வி கேக்கலாமா?"
"நீங்க கேள்வி கேட்டுட்டு யாருக்குமே நீங்க பதிலே சொன்னதில்லையா மாமா..."
"ஏன் சொல்லணும்? பதிலை நீங்க தேடணும்... அப்போதான் அது மனசுல நிற்கும்..."
"உங்களுக்கு பதில் தெரியாதுன்னு வச்சிக்கலாமா...?"
"வச்சிக்கோ... நஷ்டம் எனக்கு இல்லை... உன் கேள்விக்கு ஒரு பதில் சொல்றேன். ஒருத்தருக்கு பதில் சொல்லியிருக்கேன். அதுவும் வேற வழியில்லாமன்னு வச்சிக்கலாம்.. ம்... சொல்லப் போனா ரெண்டு பேருக்குச் சொல்லியிருக்கேன்.."
"அட....! யார் அது?"
"ஐ... அதெப்படி நான் சொல்வேன்? உனக்கு அஞ்சு சான்ஸ்..."
"ஐயோ! நான் வரலை இந்த விளையாட்டுக்கு..."
7.5.12
உண்ணும் விழா...
நேற்று சித்ரா பௌர்ணமி அன்று மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கினார். டிவிக்களில் நேரடி ஒளிபரப்புகள் அமர்க்களப்பட்டன. இது நினைவுகளை கிளறிப் பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது!
இந்தப் பதிவில் அழகர் இல்லை (என்றால்) வல்லிம்மா மன்னிக்க!!
ஆற்றில் இறங்க அல்லது ஆற்றைக் கடக்க அழகர், அழகர் மலையிலிருந்து இறங்கி வரும் நாட்கள் மதுரையில் கோலாகலமானவை. அவர் வரும் வழியில் ரேஸ் கோர்ஸ் குடியிருப்பில் அப்போது ஜாகை. சுற்றிலும் நிறைய இடம் இருக்கும் அரசாங்கக் குடியிருப்பு. இந்த நாளில் கூடும் கூட்டம் பற்றிய நினைவுகளே இந்தப் பதிவு.
சில சமயங்களில் முதல் நாள் மாலையே மக்கள் வந்து 'இடம்' பார்த்துச் செல்வதுண்டு. ரிசர்வ் பண்ணியும் செல்வதுண்டு! மறுநாள் காலை பால் வாங்க 'பூத்'துக்குச் செல்லும்போதே நடமாட்டத்தை உணர ஆரம்பிக்க முடியும். காலை ஆறுமணி சுமாருக்கெல்லாம் ஐந்து பத்து என்று மக்கள் கூடத் தொடங்கி விடுவார்கள். மரத்தடிகள் முதல் குடியிருப்புகளின் வராண்டா வரை ஒவ்வொரு இடமாக ஆக்கிரமிக்கத் தொடங்குவார்கள்.
எட்டு மணி, ஒன்பது மணி ஆகும்போது நம் வீட்டில் நாம் சுதந்தரமாக இருக்க, நகர முடியாத சூழல்கள் உண்டாகும்! தெருக்களும், சாலைகளும் ஜன வெள்ளத்தில் மூச்சுத் திணறும். குடும்பம், குடும்பமாக வருவார்கள் மக்கள். பெரும்பாலானோருக்கு அழகர் குல தெய்வம். எல்லாக் குடும்பங்கள் கையிலும் பெரிய/சிறிய ரகவாரியாக எவர்சில்வர், பித்தளைத் தூக்குச் சட்டிகள் இருக்கும்.
வாகான இடம் பிடித்ததும் பாத்திரங்களைத் திறந்து, இலைகளை எடுத்து பரிமாறிக் கொண்டு சாப்பிடத் தொடங்குவார்கள். ஒவ்வொரு குடும்பமும் நட்பு, உறவுக் குடும்பங்களுடன் உணவுகளைப் பகிர்ந்து கொள்வதும் நடக்கும்.
ஐஸ் க்ரீம் முதல் வடை, போண்டா, புளியோதரை வரை ஏகப் பட்ட ஐட்டங்கள் சாலைகளில் விற்றுக் கொண்டு வருவார்கள். அவற்றையும் வாங்கி உண்ணுவார்கள். சிறிய குழந்தைகள் முதல் வயதான மனிதர்கள் வரை இங்குமங்கும் நடந்து நட்பு உறவுகளை விசாரித்தபடி, பொழுது போக்குவார்கள். இந்த நாட்களில் பல திருமணங்கள் கூடப் பேசி முடிவதுண்டாம்.
'வயசு'பையன்கள் ராமராஜ உடையணிந்து சாலைகளில் நண்பர்களுடன் உலா வந்து ஓரங்களில் தங்கி, உண்டு இளைப்பாறும் குழுக்களிலும், எதிர்ப்படும் குழுக்களிலும் ஜோடிகளைத் தேடுவார்கள்!
அழகர் கோவில் பேருந்துகள் புதூர் பேருந்துகள் என்று அந்த ரூட்டில் வரும் பேருந்துகள், சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக, அதிகமாக, ரேஸ் கோர்ஸ் காலனி வரை, பாண்டியன் ஹோட்டல் வரை, தல்லாக்குளம் வரை கோரிப்பாளையம் வரை என்று கட் சர்வீஸ் ஆகிக் கொண்டே இருக்கும்.
அழகர் அந்த ஏரியா வர மாலை ஆகலாம். அதுவரை இந்நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருக்கும். அழகர் வரும்போது 'சட்'டென மாவிளக்கு மாவில் கற்பூரம் ஏற்றி அழகருக்குக் காட்டி விட்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு வழியனுப்பி வைப்பார்கள். கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் கலையத் தொடங்கும். அப்புறமும் இரவு ஏழு மணி வரை கூட சிலபல குடும்பங்கள் அமர்ந்திருக்கும்.
மறுநாள் அந்த இடத்தை, அந்தத் தெருவை, அந்தச் சாலையைப் பார்க்கும்போது புயலடித்து ஓய்ந்த மாதிரி இருக்கும்! வீடுகளுக்கு முன்னாலும் தெருவிலும் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற, மறுநாள் பல மணி ஆகும்!
இவ்வளவு கூட்டம் வராவிட்டாலும் இதில் முக்கால் அழகர் மறுபடி மலைக்குத் திரும்பும் 'எதிர்சேவை'யிலும் நடக்கும்.
மிகச் சில சமயங்களில் மட்டுமே இந்த ஜன வெள்ளத்தில் நீந்தி அழகர் ஆற்றில் இறங்குவதைக் கண்டிருக்கிறேன். அப்புறம் வண்டியூர் வரை ஒரே கோலாகலமாயிருக்கும்.
சளைக்காமல் இந்நாட்களில் உண்ணும் மக்களைக் கண்டு மலைத்துப் போய் 'சித்திரைத் திருவிழா' என்று அழைக்கப்படும் இந்த மதுரைக் கோலாகலம் 'உண்ணும் விழா' வாகவே மனதில் நிற்கிறது!
திருவிழாவுக்கே உரிய ராட்டினங்கள், பலூன்கள், இன்ன பிற சமாச்சாரங்களும் உண்டு. அழகருக்கு பிரார்த்தனையாக வேண்டிக் கொண்டவர்கள் ஆஞ்சநேய வேடமிட்டு கையில் ஒரு பைப்புடன் மக்கள் மேல் நீர் பீய்ச்சிய படியே அவ்வப்போது கடந்து போவார்கள்.
நம் வீட்டு வராண்டாவில் இடம் பிடித்தவர்கள் பிரியா விடை பெற்று மாலை வீடு திரும்புவார்கள். சில வருடங்கள் பழக்கம் காரணமாக அதே குடும்பங்களே அடுத்த வருடமும் வந்து இடம் பிடித்ததுமுண்டு.
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமணத்துக்கு கோவிலுக்குள்ளே சென்று வியர்வை மழையில் நனைந்து, இரண்டு பட்டர்கள் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பாவனையில் முன்பின் நடந்துமாலை மாற்றும் வைபவம் கண்டு களித்து, பிரசாதமாகக் கிடைக்கும் தாலிக் கயிறுகளை வாங்கி தெரிந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்புவது உண்டு.
ஆனால் ஒன்று... இந்நாட்களில் மதுரை முழுவதும் சொந்த வீட்டு விசேஷம் போல திருவிழாக் கோலம் பூண்டிருப்பது இப்போது நினைத்தாலும் சந்தோஷமாக உணர முடிகிறது. நாங்கள் எல்லாம் ஆற்று க்கு இந்தப் பக்கம். அழகர் வருவதும், திரும்புவதும் எங்களுக்குப் பெரிய திருவிழா. ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருப்போருக்கு சித்திரைத் திருவிழாவுக்குக் கோவிலில் கொடி ஏற்றும் நாள் முதலே கோவிலில் திருவிழாத் தொடங்கி, நாளும் கோலாகலம்!
ம்...ஹூம்.... மதுரை மதுரைதான்.
6.5.12
5.5.12
ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்....
ஆதித்த கரிகாலன் கொலையில் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு துப்பு துலங்குகிறது!
பொன்னியின் செல்வன் அநேகமாக எல்லோருமே படித்திருப்போம். அப்புறம் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகியும் சிலர் படித்திருக்கலாம். இந்த இரண்டு கதைக் களமுமே ஒன்றுதான். பாலகுமாரன் எழுதிய உடையார் கூட இதே களம்தான் என்றாலும் நான் படித்ததில்லை ! (இரண்டு பாகம் படிப்பதற்குள் பொறுமை போய் விட்டது!)
கடைசிப் புத்தகக் கண்காட்சியில் முன்னுரையைப் படித்து விட்டு தியாகு இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டு என்னிடம் கொடுக்க, நானும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.
எந்தப் புத்தகம்?
முதலில் தியாகு, புத்தக அறிமுகம் அலைபேசியில் தந்து விட்டு புத்தகத்தைத் தர, ஆதித்த கரிகாலன் பற்றிய மர்மங்களை இந்தப் புத்தகத்தில் விடுவிப்பதாகப் படித்ததும் மிகுந்த சுவாரஸ்யம் ஏற்பட்டது.
(இதைப் படித்த எங்கள் ப்ளாக்கின் ஆசிரியர் ஒருவர் 'கடல் கொண்ட காதல்' என்ற புத்தகத்தையும் படிக்கச் சொல்லி சிபாரிசு செய்வதோடு அது பற்றித் தெரிந்தவர்கள் எந்த பதிப்பகம், எங்கு கிடைக்கும் என்று விவரம் சொல்ல வேண்டுகிறார்....முனைவர் தமிழரசி என்பவர் எழுதிய அந்தப் புத்தகத்தைத் தற்செயலாக ஒரு பயணத்தின்போது தான் படித்ததை நினைவு கூர்கிறார் அவர்)
இதன் ஆசிரியர் டி ஏ. நரசிம்மா, 'தி இந்து' பத்திரிக்கையின் தமிழ்நாட்டுப் பிரிவின் செய்தி ஆசிரியராகவும் சீனியர் அஸிஸ்டன்ட் எடிட்டராகவும் பணியாற்றி வருவதாக ஆசிரியர் அறிமுகம் சொல்கிறது. 91 க்கு முன் இந்தியன் எக்ஸ்பிரசிலும் அதற்கும் முன் ஒரு தமிழ் வார இதழிலும் பணியாற்றியுள்ள இவரின் கதைகள் பல வார இதழ்களில் வெளிவந்துள்ளதாகவும் சொல்கிறது. இவரது தந்தை 'சித்ராலயா' கோபு. தாய் நாவலாசிரியை கமலா சடகோபன்.
முன்னுரை ஆதித்த கரிகாலன் பேசுவதாக அமைந்துள்ள இந்தப் புத்தகத்தில் அந்த முன்னுரையே நமது ஆவலைத் தூண்டுவதற்குப் போதுமானது.
நான் பொன்னியின் செல்வன் மட்டுமே படித்திருக்கிறேன். நந்திபுரத்து நாயகி படிக்க வேண்டும்! அந்த ஆவல் இந்தப் புத்தகம் படித்த பிறகு தோன்றியது! அதில் (பொன்னியின் செல்வன்) ஆதித்த கரிகாலன் கொலையுண்ட விவரம் இருக்குமே தவிர, கொலை செய்தது யார் என்று குறிப்பிடப் பட்டிருக்காது. படிப்போர் ஒரு மாதிரி 'கொலை செய்தது பாண்டிய நாட்டு ஆபத்துதவிப் படைகள், ரவிதாஸன்' என்று யூகிக்கும் வண்ணம் கதைப் போக்கு அமைந்திருக்கும்.வரலாறும் அவ்வாறு அறியப் பட விரும்பியதாகவே அமைக்கப் பட்டிருப்பது போலத் தோன்றுவதைச் சில காரணங்கள், கல்வெட்டுகள், தர்க்கங்கள் கொண்டு மறுக்கிறார் சங்கதாரா ஆசிரியர் நரசிம்மா.
ரவிதாஸன் ஆதித்தகரிகாலனைக் கொன்றான் என்றால் அருண்மொழிக்கு முன்னால் ஆண்ட உத்தமச் சோழன் என்கிற மதுராந்தகன் ஆட்சியில் சோழ உயர் பதவி அவருக்கு ஏன் அளிக்கப் பட வேண்டும்? ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததும் ரவிதாஸன் சொத்துகளைப் பிடுங்கிக் கொண்டு ஏன் நாட்டை விட்டுத் துரத்த வேண்டும்?
அருண்மொழிக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்று குந்தவைக்குத் தெரியவில்லை. ராஜேந்திரச் சோழன் இதை பின்னால் புரச நாட்டுக் கல்வெட்டுகள் மூலம் (தற்போதைய மலேயா) அறிகிறார்.
குந்தவை என்ன நினைத்திருக்கிறாளோ அது தவறு என்பது வந்தியத் தேவருக்குத் தெரியும். ஆனால் அவர் அதைச் சொல்லவில்லை.
குந்தவையின் தோழி தெட்டக்கனி மட்டும் தான் சந்தேகப் பட்ட ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் வரலாறே வேறு மாதிரி ஆகியிருக்கலாம்.
பதினாறு வயதில் ஆதித்த கரிகாலன் கொல்லப் பட்டதாக வரலாற்றில் பதிவாகியுள்ள தகவலே தவறு என்றும் அவர் கொல்லப் பட்டது அவரின் இருபத்தாறாம் அகவையில் என்றும் சொல்லப் படுகிறது.
'அருண்மொழியைப் போலவே நானும் அழகானவன்தான். ஏனோ சரித்திர ஆசிரியர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போய் விட்டது' என்று ஆதித்த கரிகாலன் சொல்வதாக எழுதியிருக்கிறார் நரசிம்மா. அரசு கட்டில் ஏற முடியாத சோழர்குல வாரிசுகளை ஆதித்த கரிகாலன் என்ன செய்தான் என்று அறியும்போதும், ரவிதாஸன் யார், இந்தக் கொலையில் அவன் பங்கு என்ன என்று அறியும் போதும் அல்லது படிக்கும் போதும் ஆச்சர்யம். குறிப்பாக ரவிதாஸன் பற்றிய விவரங்களுக்கு ஆசிரியர் பல ஆதாரங்கள் அடுக்குகிறார்!
கல்கி இந்த விவகாரங்களைத் தொடாமல் அல்லது தொட விரும்பாமல் இந்தப் பகுதிகளை நாசூக்காக ஓரமாக மட்டும் தொட்டுச் சென்று விட்டார் என்கிறது இந்தப் புத்தகம்.
சங்கதாரா என்பது சோழ மன்னர்கள் பட்டாபிஷேகத்தில் நீர் வார்க்கப் பயன் பட்ட ஒரு பஞ்சசன்னிய சங்கு. அது இருக்குமிடம் சங்கதாரா. புரச இலையை சிரசில் வைத்து, கரத்தில் புரசக் குச்சியைத் தந்து இந்தச் சங்கால் நீர் வார்த்து பட்டாபிஷேகம் நடைபெறும் என்று கல்வெட்டுகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.
வீரபாண்டியன் தலையை வாங்கும்போது ஆதித்த கரிகாலன் வயது, குந்தவையின் வயது, நந்தினி என்று அழைக்கப் படும் நந்தா விளக்கு, உண்மையில் யார் மகள் நந்தினி, அருண்மொழி என்ற ராஜராஜ சோழன் உண்மையில் யார், வந்தியத் தேவன் நல்லவனா, கெட்டவனா....
நாம் படித்ததிலிருந்து ஏகப்பட்ட மாறுதல்களுடன் இந்த நாவல். ஆங்காங்கே வரலாற்று ஆதாரங்களையும் சொல்கிறார் என்றாலும் அது போதுமானதாக இருக்கின்றதா என்ற கேள்வியும் வருகிறது. குந்தவை, நந்தினி, வானதி, பழுவேட்டரையர்கள் இவர்களைப் பற்றிய எண்ணங்களும் கருத்துகளையும் கூட மாற்றுகிறது இந்த நாவல்.
ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்று அறியும்போது ஓரளவு எதிர்பார்க்கும் அளவில் வைத்தாலும், சுவாரஸ்யம் குன்றாமல் திடுக்கிட முடிகிறது. சின்னச் சின்ன ஆனால் முக்கியமான திருப்பங்கள், ஆங்காங்கே சஸ்பென்ஸ் குறையாமல் கொண்டு வந்து கடைசியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கும்போது நாம் எதிர்பார்த்த சில, எதிர்பார்க்காத சில என்று சுவாரஸ்யம் கூட்டுகிறது நாவல். ராஜ ராஜ சோழன் உண்மையில் யார் உண்மையில் ராஜராஜ சோழன் பிறந்த தினம் எது, என்று அறியும்போதும் உண்மையா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு வரலாற்று ஆதாரம் என்று சரியாகக் காட்டாமல் ஒரு துப்பறியும் நிபுணரின் திறமையோடு அவற்றை நிலை நிறுத்துகிறார் ஆசிரியர். சில புதிய கேரக்டர்கள் உண்டு.
மதுராந்தகன் என்ற உத்தமச் சோழனைப் பற்றிய குறிப்புகளில் மட்டும் ஒரு சிறு குழப்பம். தளிக்குளத்தார் கோவில் இருந்த இடத்தில்தான் அதை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு, பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப் பட்டது என்றும் அதற்கான காரணமும் மனித மனதின் அழுக்குகளைச் சொல்கிறது. அதை விளக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு ஆசிரியர் கொடுத்திருக்கும் தலைப்பு "பெரிய கோவில்; சிறிய புத்தி"
ஆங்கிலப் புத்தகங்களையே படித்துக் கொண்டிருந்த நரசிம்மா தன் மனைவி கொண்டு வந்த புத்தகக் களஞ்சியங்களில் பொன்னியின் செல்வன், கடல் புறா எல்லாம் கிடைக்க, படித்து மகிழ்ந்தாராம்.
"அமரர் கல்கி ஒரு காவியத்தைப் படைத்திருக்கிறார். ஆனால் தனது பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காக, சோழர் சரித்திரம் என்னும் பெருங்கடலில் இருந்த 'சுழல் பகுதிகளை' ஆபத்தானவை என யூகித்து தனது 'கற்பனை' எனும் பாயமரக்கப்பலை, ஆபத்தில்லாத பக்கமாகச் செலுத்தி, சுழல் பகுதிகளைத் தவிர்த்து, எச்சரிக்கையுடன் தனது கலத்தைச் செலுத்தியுள்ளார். மற்ற சரித்திர நாவலாசிரியர்களும் அவரைப் பின்பற்றி ஆபத்தான பகுதிகளைத் தவிர்த்து விட்டனர். எனக்கு எவ்விதக் கட்டாயமும் இல்லை.பெரிய நாவலாசிரியர் என்ற பெயர் வாங்குவதற்காக நான் எழுதவில்லை. எனது பத்திரிகைப் பணியின் பாரத்தைக் குறைக்கவும் உண்மைகளை அறியும் ஆர்வத்தினாலும்தான் எழுதுகிறேன்...." என்கிறார் ஆசிரியர் நரசிம்மா.
இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகு இவரது மற்ற இரண்டு படைப்புகளான 'காலச்சக்கரமும்', 'ரங்கராட்டினமு'ம் படிக்கும் ஆவல் உண்டாகிறது. "இந்த நாவலை எழுதியதற்காகவே உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்" என்று ஒரு மூதாட்டி திருவரங்கத்திலிருந்து கதறியபடி தொலைபேசியதாகச் சொல்கிறார் நரசிம்மா, தனது 'ரங்கராட்டினம்' நாவலைப் பற்றி.
பொன்னியின் செல்வனைக் கூட இப்போது ஒருமுறை எடுத்து மறுபடி ஒருமுறைப் படிக்க வேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்!
இந்தப் புத்தகம் சொல்லும், விளக்கும், விடுவிக்கும் பலப் பல மர்மங்களைச் சொல்வது நியாயமாகாது. சுவாரஸ்யத்துக்கு நான் கியாரண்டி! கண்டிப்பாகப் படிக்க வேண்டியப் புத்தகம்!
'சங்கதாரா'
ஆசிரியர் : 'காலச்சக்கரம்' நரசிம்மா.
வானதி பதிப்பகம்
450 பக்கங்கள்.
விலை : 150.00
பின் குறிப்பு: இந்தப் புத்தகத்தை ஆன்-லைனில் வாங்க, உடுமலை.காம் என்ற வெப்சைட்டில் பதிவு செய்து வாங்கலாம். இந்தியாவுக்குள் வாங்க முப்பது ரூபாய் தபால் செலவு சேர்த்து நூற்று எண்பது ரூபாய் ஆகும். பணத்தை, புத்தகம் கைக்கு வந்ததும் கொடுக்கலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















