புதன், 13 நவம்பர், 2013

சினிமா பாட்டுப் புத்தகமும் சுராங்கனி பாடலும்



கடற்கரையில் கடலை வாங்கினால் கூட கடலையைச் சாப்பிட்டு விட்டு, அதன் சுருக்கங்களை நீவி அதில் உள்ளவற்றைப் படிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் நாம்.


ரோடில் நடக்கும்போது பளபளன்னு பிரிண்டட் பேப்பர் இருந்தாலே எடுத்துப் பார்க்கத் தோன்றும். வண்ணமயமாக ஒரு புத்தகமே கிடந்தால்? அப்படி நடந்து கொண்டிருக்கும்போது ரோடில் பளபளவென்று கிடந்தது அந்தப் புத்தகம்.

என்ன புத்தகம் என்று எடுத்துப் பார்த்தேன். தனுஷ் பாட்டுப் புத்தகம். கொஞ்ச தூரத்தில் இன்னொரு புத்தகம். சூர்யா பாட்டுப் புத்தகம்! ஸ்ரீ பூமகள் தனலட்சுமி புத்தக நிலைய அச்சகம். 76 பாடல்கள், 8 ரூபாயாம்!

என்னடா இது? ஒரு புத்தகம் வாங்கினால் நாமெல்லாம் எப்படி பாதுகாப்பா வச்சுப்போம்... அல்லது, பிடிக்கலைன்னா யாருக்காவது கொடுக்கவாவது செய்வோம்... இப்படித் தூக்கிப் போட்டுருக்காங்களே' என்று எண்ணி வீட்டுக்கு எடுத்து வந்தேன்!

பழைய நினைவு வந்தது. 

  

வசந்த மாளிகை, நீதி, என் அண்ணன், மாட்டுக்கார வேலன் என்று படங்கள் பார்த்து விட்டு வரும்போதே வழியில் பாட்டுப் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். 10 பைசா, அப்புறம் 15 பைசா! 

இப்போது மாதிரி பாட்டெல்லாம் சிடியிலும், இணையத்திலும் கேட்பது போல கேட்க முடிந்த காலமா அது? விவித் பாரதியில் போடும்போதுதான் கேட்க முடியும். அல்லது டீக்கடையில் பாட்டு போடறானா என்று மேனகா காபி பாருக்கு டீ குடிக்கச் செல்ல வேண்டும்!


"இளநீரைச் சுமந்துவரும் தென்னைமரம் அல்ல,
மழைமேகம் குடைபிடிக்கும் குளிர் நிலவும் அல்ல
இங்கும் அங்கும் மீன் பாயும்
நீரோடை அல்ல 
இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல..."

"மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே..."

"வானமழைத் துளி யாவும் முத்தாக மாறாது... வண்ணமிகு மலர் யாவும் உன் போலச் சிரிக்காது... தேடிவைத்த பொருள் யாவும் தேன் மழலை ஆகாது...திருவிளக்கின் ஒளியாவும் உன்னழகைக் காட்டாது..."

 

இப்படியெல்லாம் பாடல் வரிகளை ரசித்திருக்கிறோம். அப்போதெல்லாம் இசையை விட பாடலின் வரிகள்தான் மேலோங்கித் தெரியும்.

இப்போதோ?

என்ன பாடுகிறார்கள் என்றே தெரிவதில்லை. வரிகளே புரியாது. இசை என்னும் பெயரில் ஒரே இரைச்சல் வரிகளை மறைத்து விடும். அது நல்லதுக்குதான் என்று இந்தப் புத்தகத்தைப் புரட்டிய போது தெரிந்தது!

90 சதவிகிதம் உங்களுக்கும் இதன் டியூன் தெரிந்திருக்காது! சும்மா ஏதோ ஒரு ராகத்தில் இழுத்துப் பாருங்கள்!

"மகா மசாலாவை மிக்சியில் அறக்காம
அந்த அம்மியில் அறச்சுட்டு வாம்மா
முத்துன கொஞ்சம் தேங்காய உடச்சு துருவிட்டு வாங்களேன்..
ஏய் காய்கறியை நறுக்கிக் கழுவக் கூடாது கழுவி நறுக்கணும்"

 

"என்ன ஓக்கே வா ஏய் கையத் தொட்டு முத்தமிட்டா
முடிஞ்சி போகும் ரெண்டு பக்கக் காதலே அவ மேல பட்ட காத்திருக்கா அட ஏங்குமடா ஒன்சைட் காதலே..."

"நல்லா வாழப் போறேன்தான் டோரா டோரா டொய்யா
டென்னிஸ் மச்சான் பே பே ஏய் மூடா மூடா நானிருக்கேன்"

"ஆப்பிள் பழுத்து ஆடை கொடுக்க/ அருகில் வருவதேன் எனை விழுங்க/கொடு படு நடு படு கோ கோகம்/ இருவரும் இணைந்திட இணைந்திட அப்பாலும்/ தலைவலி வருகிற முப்பால்களும்/காமதேவனின் சாராயம் உப்பிலா உணவும் தப்பு/

"அடிடா அவள உதடா அவள வெட்டுறா அவள தேவயே இல்ல..."

"துரோகியோடு சண்ட வந்தா முதுகில மிதிடா/நீ பாமரன்கள் தப்பு செஞ்சா பாவம் பார்த்துவிடுடா/படிச்சவன் தப்பு செஞ்சா பாஞ்சி பாஞ்சி அடிடா/மாயாண்டி மலையாண்டி உதச்சாதானே/லைப்பையும் வைப்பையும் பூட்டிட முடியும் புரிஞ்சிக்கடா!"



ஏ அண்டர்வேரு கோடு தெரிய லுங்கி கட்டுவேன்
நான் நண்ட போல குழிய வெட்டி உள்ள பதுங்குவேன்

ஓ.... ரிங்கா ரிங்கா ஜம் மழைக்கால கேங்கா..
ஓ....பிங்கா பிங்கா ஹிட் பாப்புலர் சாங்கா...
-----------------------
-------------------------
ஊவென்ன ஊவென்ன ஒன்னானா
கூட்டமும் ஆட்டமும் இனிதானா

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
எனை ரம்மு
பீரு போடு
இனி காமினி காமினி காமினி
செம்மாங்கனி மாங்கனி மாங்கனி..
 
ராங்கனி ராங்கனி என்று படித்ததும் உடனே நினைவுக்கு வந்த அந்தக்கால சுராங்கனி பாடல்... அதில் வரும் இளமையான
மலேஷியா வாசு தேவனைப் பாருங்கள்!
  முகநூலில் இந்தப் பாடல் வரிகள் வெளியிட்டிருக்கும் பதிவு ஒன்றின் சுட்டியைத் தந்திருந்தார் ஹாரி.
அப்போதும் இதுமாதிரி சில அர்த்தமற்ற வரிகளைக் கொண்ட பாடல்கள் வந்ததுண்டு. ஆனால் அவை அளவில் ரொம்பக் கொஞ்சம்.

இப்போதும் நல்ல வரிகளைக் கொண்ட பாடல்கள் வருகின்றன. அவையும் அளவில் ரொம்ப ரொம்பக் கொஞ்சம்!

19 கருத்துகள்:

  1. சுராங்கனி இல்லாத ரிசப்ஷனே இருக்காது. நல்ல வேளை சில இடங்களில் இப்போது மாறி இருக்கிறது. பாட்டுப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் தெரியவில்லையே.
    நீங்க இன்னும் ப்ரே பண்றேன் பாட்டு கேக்கலையா)

    பதிலளிநீக்கு
  2. இப்போதும் சினிமா பாட்டுப்புத்தகம் கிடைக்கிறதா? என்னுடைய மாமா ஒருவர் ஒவ்வொரு சினிமாவின் பாட்டுப் புத்தகத்தையும் வாங்கி பைண்ட் செய்து வைத்திருப்பார். அதில் படக் கதை சுருக்கம் போட்டிருப்பார்கள். சுவாரசியாமாக சொல்லி மீதியை வெள்ளித்திரையில் காண்க என்று போட்டிருப்பார்கள்.அதை விரும்பிப் படிப்பேன். கால மாற்றம் இசையை முன்னிறுத்தி வார்த்தைகளை பின்னுக்கு தள்ளிவிட்டது. நல்ல பாடல்கள் அமைவதற்கான கதையும் சூழலும் தற்போதைய படங்களில் குறைவு. ஆங்கிலப் பாணியைப் பயன்படுத்தி பாடல்கள் இல்லா படங்கள் இனிமேல் அதிகமாகக் கூடும்

    பதிலளிநீக்கு
  3. @வல்லி, அது என்ன, ப்ரே பண்றேன் பாட்டு? எந்த சினிமா? நான் சினிமா விஷயத்தில் எளிதாக பூஜ்யம் வாங்குவேன். :)))


    பதிலளிநீக்கு
  4. பிடிச்ச பாட்டுன்னா எத்தனையோ இருக்கே!

    "சிட்டுக்குருவி பாடுது...

    தன் பெட்டைத் துணையைத் தேடுது."

    "தாழையாம் பூ முடிச்சு,
    தடம் பார்த்து நடை நடந்து"

    "செந்தமிழ்த் தேன்மொழியாள்
    நிலாவெனச் சிரிக்கும் மலர்க்கொடியாள்"

    "வாராய், நீ வாராய்

    போகுமிடம் வெகு தூரமில்லை"

    வாராய்!

    இப்படி எத்தனையோ இருக்கு

    பதிலளிநீக்கு
  5. ஆடல் காணீரோ பாடலும் பிடிக்கும்.

    வைஜயந்தி-பத்மினி போட்டிப் பாடலும் பிடிக்கும்.

    சாதுர்யம் பேசாதேடி, என் சலங்கைக்குப் பதில் சொல்லடி!

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் குறிப்பிட்டிருந்த இன்றைய சினிமாப்பாடல் வரிகளைப் படித்ததும் சிரிப்பு தாங்கவில்லை. நிறைய வரிகள் எனக்கும் புரிவதில்லை. என்ன இருந்தாலும் தமிழ் மணக்க மணக்க, பாடல் வரிகளும் ராகமும் குரல்களும் நடிப்பும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொன்டு சிறந்து விளங்கிய அந்தக்கால பாடல்களை நினைத்தால் பெருமூச்சு தான் வருகிறது! எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடலின் வரிகள்....

    ' தொட்டால் மணக்கும் ஜவ்வாது!
    சுவைத்தால் இனிக்கும் தேன்பாகு!
    எட்ட இருந்தே நினைத்தாலும்
    இனிக்கும் மணக்கும் உன் உருவம்!'

    பதிலளிநீக்கு
  7. ஓசில பாட்டு பொஸ்தவம் கிடைச்சா படிச்சு அனுபவிக்காம ஆராய கிளம்பீட்டிங்களே :-))

    இப்பவும் பாட்டு பொஸ்தவம் போடுறாங்க,ஆனால் தனி தனிப்படமா போடாமல் நீங்க கண்டெடுத்தா போல தொகுப்பா போடுறாங்க, 10-15 ரூ விலையில கிடைக்குது ,தில்லக்கேணி பைகிராப்ட்ஸ் ரோடு(பாரதி சாலை) கோஷா ஆஸ்பிட்டல் பஸ்டாப் பக்கமா இருக்க நடைப்பாதை பழைய புத்தக கடைகளில் புதுப்பட பாடல் புத்தகங்களும் கிடைக்கும்!

    மயிலாப்பூர் லஸ்கார்னர் பக்கம் பிளாட்பார்ம்ல இருக்க கடைகளில் கிடைக்கும், அப்புறம் ,சாந்தி - தேவி தியேட்டர் இடையே உள்ள நடைப்பாதைகடையிலும் கிடைக்கும்(அங்கே பாட்டு பொஸ்தகம் மட்டுமில்ல "மத்த" பொஸ்தவமும் இருக்கும் ஹி...ஹி)

    ஹி...ஹி நான் கூட பாட்டு பொஸ்தவம் மட்டும் வாங்கி இருக்கேன்!

    # பழைய படங்களில் இது போல டன்டன னக்கா டமுக்கு னக்கா பாடல்கள் உண்டு ,என்ன அதை டப்பாங்குத்து பாட்டுனு சொல்லிடுவாங்க, அப்படியான பாடல்களை பெரும்பாலும் ஏ.எல் ராகவன் பாடி இருப்பார் அவ்வ்!

    ஒரு சாம்பிள்...

    "வெள்ளைக்கார குட்டி

    என் விருந்துக்கேற்ற ரொட்டி

    காதல் சுட்டி

    பார்க்கும் லூட்டி

    பூனை கண்ணை சிமிட்டி"!!!

    பதிலளிநீக்கு
  8. //"வானமழைத் துளி யாவும் முத்தாக மாறாது... வண்ணமிகு மலர் யாவும் உன் போலச் சிரிக்காது... தேடிவைத்த பொருள் யாவும் தேன் மழலை ஆகாது...திருவிளக்கின் ஒளியாவும் உன்னழகைக் காட்டாது..." //

    தேக்கு மரம் உடலைத் தந்தது
    சின்ன யானை நடையைத் தந்தது!
    பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
    பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது!

    பதிலளிநீக்கு
  9. பழைய பாடலுக்கு இணையாக இந்தக் காலப் படாலில் ஒன்று கூட சொல்ல முடியாது. உங்கள் புதுப் பாடலின் வரிகள் நிஜமாகவே ஒன்றுமே புரியவில்லை.
    Always old is gold .

    பதிலளிநீக்கு
  10. 10, 15 பைசா பாட்டுப் புத்தகக் காலத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது பதிவு.

    /இப்படித் தூக்கிப் போட்டுருக்காங்களே/

    சரியானதான் செய்திருக்கிறார்கள்:)!

    பதிலளிநீக்கு
  11. சார், இப்பவும் நல்ல பாட்டுகளும் இருக்கே.. வெறுமெனே அழகு வார்த்தைகளா இல்லாம அறிவியல் பார்வையோடவும் இருக்கே..

    உ.ம் : செவ்வாயில் ஜீவராசி உண்டா என்று அந்த விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்து பார்க்கும். உன் செவ்வாயில் என் ஜீவன் உள்ளதென்று எந்த விஞ்ஞானம் கண்டறியும்?

    ;-)

    பதிலளிநீக்கு
  12. அருமையான இசை பதிவு... நினைவுகளை பின்னோக்கி செல்ல சொல்லுது இந்த பதிவு... இசைக்கும் மயங்காதோர் யாரும் உண்டோ.. :)

    பதிலளிநீக்கு
  13. அந்தநாள் (பாடல்கள்( ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பர்களே நண்பர்களே நண்பர்களே,
    இந்தநாற் (பாடல்கள்) அன்றுபோல் இல்லையே அது ஏன்? ஏன்? -நா.முத்துநிலவன், புதுக்கோட்டை
    (நான் பேசும் திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்றத்தில் பழைய பாடல்களைப் பாடும் வாயப்பு எனக்குத்தான் அதிகம் என்பதை அறிந்தவர் அறிவாராக!)

    பதிலளிநீக்கு
  14. எனது முந்திய பின்னூட்டத்தில் ஓர் எழுத்துப்பிழை நேரிட்டுவிட்டது. “இந்தநாள்” என்பதற்கு “இந்தநாற்”என வந்துவிட்டது.. மன்னிக்க (சொல்லில் பிழையிருந்தால் மன்னிக்கலாம், பொருள்பிழைதான் பெருந்தவறு - நக்கீரனாக வரும் ஏ.பி.நாகராஜன் சொன்னது -படம் திருவிளையாடல்) அன்புடன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை-http://valarumkavithai.blogspot.in/

    பதிலளிநீக்கு
  15. நான் இருபத்தி ஐந்து பைசாவிற்கும் ஐம்பது பைசாவிற்கும் சினிமா பாடல்கள் புத்தகம் வாங்கி இருக்கிறேன் ஒன்றிரண்டு படங்களுக்கு..... என்ன படம் என்பது இப்போது நினைவில்லை.....

    சுராங்கனி பாடல் அப்படி ஒரு ஹிட் அல்லவோ!

    பதிலளிநீக்கு
  16. 'ஓடிப் போன உறவு' கதைக்கான பின்னூட்டப் பெட்டியைத் திறக்க வேண்டுகிறேன்.

    சூரி சார் சொன்னதற்கு என் பதிலை சொல்ல வேண்டுமல்லவா?..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!