பேபி பேபி என்று ஒரு படம்.ஜீ 5 தொலைக்காட்சியில் பார்த்தேன். ஏர்போர்ட்டில் யோகி பாபுவின் மச்சானும் ஜெய்யின் மச்சினிச்சியும் ஒருவரை ஒருவர் ஜொள்ளு விடும் ப்ராசஸில் இருவர் கையிலிருக்கும் ஜெய், யோகிபாபுவின் குழந்தைகளும் இடம்மாறி விடுகின்றன.
பிரச்னை என்னவென்றால் இருவரும் காதல்மணம் புரிந்து வீட்டை விட்டு ஓடிப்போன ஜோடி. ஜெய்யின் அப்பா சத்யராஜுக்கு அவர் நம்பிக்கைக்கு ஆண் குழந்தை வேண்டும். யோகி பாபு அப்பா இளவரசுவின் ஜாதக பலனுக்கு அவர் மகனுக்கு பெண்குழந்தை வேண்டும். இரு மகன்களுக்கும் அப்படி பிறந்து விட்டதால் மறுபடி சேர அழைக்கும் நிலையில் குழந்தைகள் மாறி விடுகின்றன.
ஆனந்தராஜ், ஸ்ரீமன் ஆகியோர் செமி வில்லனாக வருகின்றனர். தத்தம் அப்பாக்களுக்குத் தெரியாமல் குழந்தைகளை மாற்ற நினைக்கும் வேளையில் நடக்கும் குழப்பங்கள்தான் கதை. முன்பும் இதே மாதிரி கதையை வைத்து படங்கள் வந்திருக்கின்றன. கிரேசி மோகன் வசனம் என்று நினைவு. கடைசி வரை காமெடி இருக்கும்.
இதைநகைச்சுவைக் கதை என்று சொன்னாலும் புன்னகைக்கலாம். அவ்வளவுதான். நடுவில் ஒரு பாடலில் -அது கொஞ்சம் கேட்கும்படி கூட இருக்கிறது - இலேசாக கண்கலங்க வைக்கிறார்கள்.
இன்னொரு படம் ஹிரண்யா. கன்னடப் படம் என்றாலும் தமிழ்ப்படம் போல புரிந்தது. இதுவும் குழந்தைப் படம்தான். அதாவது படத்தில் முக்கிய கேரக்டர் ஒரு குழந்தை. சற்றே சுவாரஸ்யமான மர்மக்கதை. ஆனால் எளிதில் யூகிக்க முடிகிற கதை.
இரக்கம், கருணை இல்லாத கொலைகாரன் ஹீரோ ராணா - ராஜவர்மன். அவனுக்கு அடுத்து கொடுக்கப்படும் அசைன்மென்ட் ஒரு குழந்தையைக் கொல்வது. குழந்தையின் அப்பா ஒரு சாலை விபத்தில் இறந்திருப்பார்.
இரக்கமில்லாத அந்த கொலைகாரனுக்கு வழியில் ஒரு கர்ப்பிணிக்கு தவிர்க்க முடியாமல் உதவ நேரிடுகிறது. அதிலிருந்து ஒரு மனமாற்றம் வருகிறது அவனிடம்.
கொல்ல எடுத்துப் போன குழந்தையைக் கொல்லாமல் காப்பாற்றுகிறான். ஆனால் குழந்தைக்கு ஏகப்பட்ட எதிரிகள்! ஏன் அப்படி என்பதும் யார் வில்லன் என்பதுதான் கதை. வில்லன் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நான் இவன்தான் வில்லன் என்று சொல்லி விட்டேன்!
டிராகன் பார்க்கும் மனசே வரவில்லை. கண்ணில் பட்ட அந்தப் படத்தின் காட்சிகள் எரிச்சல் தருகிறது. குடும்பஸ்தனும் ஏனோ பார்க்கத்தோன்றவில்லை!
விடாமுயற்சி பார்க்க ஆரம்பித்த உடனேயே இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோமே என்கிற தேஜாவு உணர்வு! விடாமுயற்சி வெளியாவதற்கு சில மாதங்களுக்குமுன் இந்தப் படத்தின் ஆங்கிலப்படத்தை (Breakdown - 1997ல் வெளியான படம்) பார்த்திருந்தேன். அப்படியே அந்தப் படம். அந்த சாலைக் காட்சிகளும், அந்த மாதிரி ஆங்கிலபாணி சாலையோரக் கடைகளும் வர வேண்டும் என்பதற்காகவே அஜர்பைஜான் சென்று எடுத்திருக்கிறார்கள் போல... ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்து க்ளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் பார்த்தேன்.
=======================================================================================================
நியூஸ் ரூம்
- திருச்சி மாவட்டம், திண்ணக்குளம் கிராமத்தில் உள்ள திருநெற்குன்றநாதர் கோவிலை, முற்கால சோழர்கள் துவங்கி, பிற்கால சோழர்கள் வரை, 300 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாக பராமரிக்கப்பட்ட தகவல், கல்வெட்டுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதில், முற்கால சோழ மன்னர்களின் மூன்றாவது மன்னரான முதலாம் பராந்தகன் காலத்தில் இருந்து, இரண்டாம் ராஜராஜன் வரையிலான அனைத்து மன்னர்களும் இக்கோவிலை பராமரிக்க, தானங்கள் அளித்தது குறித்த கல்வெட்டுகள் உள்ளன.
- ராம்நகர்: அங்கன்வாடியில், இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு சூடு வைத்ததுடன், டயாபரில் மிளகாய் துாள் போட்டு சித்ரவதை செய்த பெண் உதவியாளர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை, பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை வரும் டிசம்பரில் துவங்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ஊர் எல்லைக்கு வந்து ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு, யாருக்கும், எவ்வித தொல்லையும் கொடுக்காமல், கட்டுப்பாட்டுடன் யானைகள் வனத்துக்குள் திரும்பும் நடைமுறையால், கேரள மாநிலம் ஆனக் குளம் கிராமம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
- திருச்சி : மொபைல் போனில் படம் பார்த்தபடி, அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
- திண்டுக்கல்:' திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் முன் பிரேக் பிடிக்காமல் ஓடிய அரசு பஸ்சை கல்லை போட்டு நடத்துனர் நிறுத்தினர்.
- புதுடில்லி: இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவுக்கு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய, வளைகுடா நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
- பெங்களூரு: மோகன்லால் நடித்த எம்புரான் படத்தின் முதல் காட்சிக்காக பெங்களுருவில் ஒரு கல்லூரி விடுமுறை அறிவித்துள்ளது.
- புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சேசு கலை அறிவியல் கல்லுாரி பஸ்சை, அக்கல்லுாரி 3ம் ஆண்டு மாணவர்கள் இருவர் மது போதையில் பஸ்சை அறந்தாங்கி வரை ஓட்டி வந்துள்ளனர்.
- சென்னை; சென்னையில், சவுக்கு சங்கர் வீட்டை சூறையாடிய கும்பல், வீடு முழுதும் கழிவுநீரையும், மலத்தையும் கொட்டி அசிங்கப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு கிளம்பிய விமானம் நடுவானில் பறந்த போது, பாஸ்போர்ட் கொண்டு வரமறந்தது விமானிக்கு நினைவுக்கு வந்தது. இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் அமெரிக்காவிலேயே தரையிறக்கப்பட்டது.
===================================================================================================
'எழுதியது இப்படிதான்' என்று எழுத்தாளர்களின் பழக்கவழக்கங்கள் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய பதிவு இரண்டு பாகம் ஏற்கெனவே பகிர்ந்து விட்டேனா என்று நினைவில்லை. ஓம்சக்தி 2024 தீபாவளி மலரில் இடம்பெற்றது.
============================================================================
திருப்பூர் கிருஷ்ணன் பி எஸ் ராமையா
பி.எஸ். ராமையா பிறந்த நாள்: மார்ச் 24
.........................
*மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ். ராமையா!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.........................
*நான் திருப்பூரிலிருந்து சென்னைக்கு வந்து சென்னையில் வாழ்க்கை நடத்தத் தொடங்கியிருந்தேன். 1982ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி பரிசு பி.எஸ். ராமையாவுக்கு என அறிவிப்பு வந்தது. அதன்பொருட்டான ஒரு பாராட்டு விழா சென்னை தக்கர்பாபா வித்யாலயத்தில் நடைபெற்றது.
நான் பி.எஸ். ராமையாவை அதுவரை நேரில் பார்த்ததில்லை. அவரை நேரில் பார்க்கும் ஆவலில் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். பலர் அவரைப் புகழ்ந்து மேடையில் பேசினார்கள். பலர் அவர் கழுத்தில் மாலை அணிவித்து மகிழ்ந்தார்கள். கழுத்தில் மாலைகளோடு ஏற்புரை சொல்ல ஒலிபெருக்கி முன் வந்தார் ராமையா. அவர் கண்களில் கண்ணீர் தளும்பியது.
`வாழ்க்கையில் பொருளீட்டுவதற்குரிய தொழிலாக நான் எழுத்தைத் தேர்ந்தெடுத்து விட்டேன். எத்தனையோ பொருளாதாரச் சங்கடங்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால் இப்போது சாகித்ய அகாதமி பரிசுபெறும் இந்தச் சந்தர்ப்பத்தில் என் மனம் நிறைவில் ஆழ்ந்திருக்கிறது. இந்த மனநிறைவு போதும் எனக்கு. இனிமேல் நான் மேடையேற மாட்டேன்!` என உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அன்று அவர் சொன்னது உண்மையே ஆயிற்று. அதன் பின்னர் அவர் மேடையேறவில்லை. குறுகிய காலத்திலேயே காலமாகிவிட்டார். ....
*பி.எஸ். ராமையாமேல் பெருமதிப்பும் பேரன்பும் கொண்டிருந்தவர் எழுத்தாளர் சி.சு. செல்லப்பா. பின்னாளில் `பி. எஸ். ராமையாவின் சிறுகதைப் பாணி` என்ற தலைப்பில் செல்லப்பா ஒரு நூலே எழுதினார்.
ராமையாவின் மரணம் செல்லப்பாவைப் பெரிதும் பாதித்தது. மெல்ல மெல்லத்தான் அந்தத் துயரிலிருந்து அவர் மீண்டார். ராமையாவின் எழுத்தை யாராவது ஒரு வார்த்தை குறைத்துச் சொன்னால் கூட அவருக்குப் பொறுக்காது.
ராமையா சிறந்த எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லைதான். அவரின் மணிமணியான சிறுகதைகள், `தேரோட்டி மகன்` என்ற கர்ணனைப் பற்றிய வரலாற்று நாடகம் இவையெல்லாம் தற்கால இலக்கியத்தில் தடம் பதித்த படைப்புகள்.
ஆனால் இப்படியெல்லாம் எழுதிய ராமையாவே பத்திரிகைத் தேவைக்காகவும் நிறைய எழுதியிருக்கிறார்.
சி.சு. செல்லப்பாவோடு நெருங்கிப் பழகியவன் நான். செல்லப்பாவின் பேரன்பைப் பெற்ற பாக்கியசாலியும் கூட.
ஒருமுறை நான் செல்லப்பாவைச் சந்திக்கப் போனபோது எங்கள் பேச்சு தற்செயலாக ராமையா இலக்கியத்தைப் பற்றித் திரும்பியது. ராமையாவின் எல்லாப் படைப்புக்களையும் தொகுத்து முழுமையான நூலாக வெளியிட வேண்டும் என்றார் செல்லப்பா.
ராமையாவுக்குப் பெருமை சேர்க்காதவையும், பத்திரிகைத் தேவைக்காக அவர் எழுதியவையுமான படைப்புக்களை நீக்கிவிட்டு மற்றவற்றை மட்டுமே தொகுக்க வேண்டும் என்பது என் கட்சி.
என் கருத்தைக் கேட்ட செல்லப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் சுவரைப் பார்க்கத் திரும்பி உட்கார்ந்துவிட்டார்!
`ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?` எனச் சிரித்தவாறே கேட்டேன். `ராமையா படைப்புகளைப் பற்றிக் குறை சொல்பவர்களிடம் எனக்குப் பேச்சுவார்த்தை கிடையாது!` என்றார்.
சற்றுநேரம் கழித்து மறுபடி என் பக்கம் திரும்பி உட்கார்ந்து பேசத் தொடங்கினார். `என்ன இப்போது பேசத் தொடங்கி விட்டீர்கள்?` என்றேன். `என்னால் உன்னோடு பேசாமல் இருக்க முடியாதே!` என்றார் தழதழப்புடன்.
செல்லப்பாவைப் போன்ற அன்பு மயமான மனிதர்கள் அபூர்வம். ராமையா மேல் கொண்ட அவரின் அன்பு ராமையாவைக் குறைசொல்வதை அனுமதிக்கவில்லை. அதேநேரம் என்மேல் அவர் கொண்ட அன்பு அவரின் கோபத்தை அனுமதிக்கவில்லை. ....
*ராமையாவின் முக அமைப்பு வித்தியாசமானது. கன்னங்கள் ஒட்டியும் முகம் சற்று நீண்டும் இருக்கும். கண்களில் ஒரு தனித்த கவர்ச்சியும் பார்வையில் ஒளியும் இருக்கும்.
அவரைப் பார்த்தால் அவர் தோற்றமே இவர் ஏதோ பெருமைக்குரிய ஒரு மனிதர்தான் என்று எண்ண வைக்கும்.
சி.சு. செல்லப்பா பிறந்த அதே வத்தலக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்தான் ராமையாவும். இளமைக் காலத்திலேயே வறுமை அவருடன் கைகோத்துக் கொண்டுவிட்டது.
அந்தக் காலத்தில் நிலவிய வாரச் சாப்பாட்டு முறைப்படி வாரச் சாப்பாடு சாப்பிட்டும் உபகாரச் சம்பளம் பெற்றும்தான் பள்ளிப் படிப்பை முடித்தார் ராமையா.
பின்னர் திருச்சியில் புடவைக் கடை ஒன்றில் எடுபிடி வேலைகள் செய்தார். கடலூரிலும் அதுபோல் சிலபல பணிகள். சென்னைக்கு வந்து ஆர்ய பவன் போன்ற உணவகங்களில் உணவு பரிமாறும் பணி புரிந்தார்.
இவற்றின் காரணமாக அவர் வாழ்க்கை பலவித அனுபவங்கள் நிறைந்ததாக மாறியது.
மகாத்மாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் தமிழில் பலர். அவர்களில் ராமையாவும் ஒருவர். தனிநபர் சத்தியாக்கிரகத்தில் பங்குகொண்டு சிறை சென்றார்.
சிறையில் அவருக்கு ஏ.என். சிவராமன், வ.ரா., சங்கு சுப்பிரமணியன் போன்ற இலக்கிய உலகப் பிரமுகர்களின் நட்பு கிடைத்தது.
சிறையிலிருந்து விடுதலை ஆனபின் காந்தியின் நிர்மாணத் திட்டங்களில் சேர்ந்து கதர் விற்கத் தொடங்கினார். தூத்துக்குடி, ராஜபாளையம், திருநெல்வேலி போன்ற பல ஊர்களில் தொண்டர்படை முகாம்கள் அமைத்தார்.
மெல்ல மெல்ல அவரது எழுத்தார்வம் அதிகமாயிற்று. ஆனந்த விகடன் சிறுகதைப் போட்டிக்கு அவர் அனுப்பிய `மலரும் மணமும்` என்ற சிறுகதை ஊக்கப் பரிசு பெற்றது.
பிறகு மணிக்கொடி இதழில் தொடர்ந்து எழுதலானார். மணிக்கொடி காலம் என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல்தான் இவருக்கு சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்தது.
மணிக்கொடி எழுத்தாளரே மணிக்கொடி பற்றி எழுதிய அற்புதமான இலக்கிய வரலாற்று நூல் அது. 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் என இவரின் இலக்கியப் பங்களிப்பு கணிசமானது.
திரைத்துறையில் ஆர்வம் ஏற்படவே அதிலும் கவனம் செலுத்தலானார். `குபேர குசேலா` என்ற திரைப்படத்தை ஆர்.எஸ். மணியுடன் இணைந்து தயாரித்தார். பற்பல திரைப்படங்களில் கதை வசனப் பணிகளில் பங்கேற்றார்.
`மணிமேகலை, மதனகாமராஜன், பக்த நாரதர், மகாத்மா உதங்கர், மல்லியம் மங்களம்` என அடுத்தடுத்து அவர் பங்களிப்பாற்றிய திரைப்படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பையும் பெற்றன.
அதே காலகட்டத்திலேயே ஆனந்தவிகடன், நான் பணிபுரிந்த தினமணிகதிர், குமுதம் போன்ற இதழ்களிலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதினார்.
இவர் எழுதிய `பிரசிடெண்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன மகள்` ஆகிய இரண்டு படைப்புக்களும் நாடகங்களாகவும் திரைப்படங்களாகவும் பெருவெற்றி பெற்றன. நிறையத் திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதினார்.
எழுபத்தெட்டு ஆண்டுகளே வாழ்ந்த அவர் இறுதியில் தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு மரணமடைந்தார்.
ராமையா நல்லவற்றையே எழுதினார். நல்லவர்களோடு மட்டுமே அணிசேர்ந்தார். சமூகத்தையோ தனிமனிதனையோ கெடுக்கக் கூடிய சிந்தனைகளை அவர் எழுத்தில் பார்க்கவே முடியாது.
அவர் எழுத்து குறித்த தன் கோட்பாடு என்ன என்பதை `எழுத்து` என்ற இலக்கிய இதழுக்கு வழங்கிய பேட்டியில் பின்வருமாறு கூறுகிறார்:
`எழுத்தாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான். வாழ்க்கையில் துன்பம் இருக்கிறது. துயரம் இருக்கிறது. அதேபோல் தீமை, புன்மை, கயமை ஆகிய தன்மைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் அழகு இருப்பதாக எழுதிவிட முடியும் திறமையுள்ள ஓர் எழுத்தாளனால்.
ஆனால் தீமையும் புன்னைமயும் கயமையும் எவ்வளவு அழகு படுத்தப்பட்டாலும் இலக்கியச் சரக்கு ஆகாது. அந்தத் தன்மைகளைச் சிறப்புப் படுத்திக் காட்டும் எழுத்து அப்போதைக்கு இலக்கியத்தரம் உள்ளதான ஒரு மயக்கத்தை எழுப்புமேயன்றி நிலைத்து நிற்கவே நிற்காது.
இது நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள எந்த நாட்டிலும் நூற்றாண்டுகளைத் தாண்டி நிற்கும் இலக்கியங்களைப் பார்ததால் விளங்கிவிடும்.
அசிங்கத்தை அழகுபடுத்திக் காட்டுவது ஒரு அரிய திறமைதான். ஆனால் அறிவாளிகள் அதை மதிப்பதில்லை. வருங்காலத் தலைமுறைகள் அதை மதிக்கவே மதிக்காது. இதை நினைவில் வைத்துக் கொண்டு எழுதவேண்டும் என்பது நான் சொல்ல விரும்பும் செய்தி.
வாசகர்களுக்கு: சாப்பிடுகிறவன் சுவைத் தகுதி அளவுக்குத் தான் சமையல் அமையும் என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. உங்களுக்குக் கிடைக்கும் இலக்கியத்தின் தரம் உங்கள் சுவைத்தகுதி அளவுக்குத்தான் இருக்கும். `....
பி.எஸ். ராமையாமேல் சி.சு.செல்லப்பா போலவே தீபம் நா. பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், சிட்டி, சிவபாதசுந்தரம், தி. ஜானகிராமன் போன்றோரெல்லாம் கூட அளவற்ற மதிப்பும் அன்பும் வைத்திருந்தார்கள்.
உன்னதமான பல எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி பரிசு கிட்டாமலேயே போய்விடுகிறது. ஆனால் பி.எஸ். ராமையா என்ற உயர்ந்த படைப்பாளிக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்ததற்கு, அந்தக் காலகட்டத்தில் பரிசைத் தீர்மானிக்கும் உயர்நிலைக் குழுவில் தீபம் நா.பார்த்தசாரதி இருந்தார் என்பதும் ஒரு காரணம்.
பரிசுகளும் விருதுகளும் ஓர் எழுத்தாளருக்குப் பெருமை சேர்க்கலாம். சிறந்த எழுத்தாளருக்குப் பரிசுகள் தரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அத்தகைய பரிசுகள் அவர் தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுக்கக் கூடும். பொதுமக்களின் கவனம் சமகாலத்தில் அந்த எழுத்தாளரின் எழுத்துக்கள் மேல் திரும்புவதற்கு அவர் பெறும் விருதுகள் காரணமாக அமையக் கூடும்.
ஆனால் ஓர் எழுத்து காலத்தை வென்று நிற்பதென்பது அதன் தரத்தினால் தானே அன்றி அந்த எழுத்தாளர் பெற்ற விருதுகளால் அல்ல.
பி.எஸ். ராமையாவின் பற்பல சிறுகதைகளும் நாடகங்களும் கட்டாயம் காலத்தை வென்று நிற்கும். இதைவிட பி.எஸ். ராமையாவுக்குப் பெரிய பெருமை வேறில்லை.
(அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள பி.எஸ். ராமையாவின் சந்தைப் பேட்டை நாவலுக்கு எழுதிய அணிந்துரை. மீள் பதிவு.)
........................
==========================================================================================
பழங்கணக்கு...
வரவு செலவு எழுதிக்கொண்டிருந்த நேரம்... 98-99 ம் வருட மளிகை விலை நிலவரமும் வீட்டின் உத்தேச தேவைப்பட்டியலும்.
எங்கள் வீட்டில் இன்றளவும் இதே அளவில்தான் சாம்பார்ப்பொடி அரைக்கிறோம். வெள்ளம் சேர்த்தி கிடையாது. அதை இதனுடன் சேர்த்து அரைப்பேன் என்று நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்! பொருள்கள் வாங்கி அரைக்கும்போது முன்னர் எப்போது அரைத்தோம் என்பதும் குறிப்பது வழக்கம்!
பெரியவனின் பள்ளிக்கட்டணமும், பள்ளியில் அவனை ஸ்பெஷலாகப் பார்த்துக்கொள்ளும் ஆயாவுக்கு ஃபீஸும்! மீனா என்பது பாத்திரங்கள் தேய்க்கும் பெண்மணி. இன்றளவிலும் குடும்ப நண்பர். வெண்ணெய் அரை கிலோ 75.00 அந்த வருடம் யாருக்கு சஷ்டியப்த பூர்த்தி வந்தது என்று நினைவில்லை. ஏன் பெயரில்லாமல் குறித்திருக்க்கிறேன் என்றும் தெரியவில்லை. சாதாரணமாக பெயரையும் சேர்த்தே எழுதுவது வழக்கம்.==================================================================================
FaceBook ல் 'ரெற்றோ கவிதைகள்' என்ற பக்கத்துக்காக நான் எழுதியது...
===================================================================================
பொக்கிஷம் :
சினிமா கட்டுரை பற்றி ஒன்றும் சொல்ல முடியவில்லை.
பதிலளிநீக்குநியூஸ் ரூம் செய்திகள் பலவும் வாசித்திராதது. ஆனால் பாஸ்போர்ட் எடுக்காம வந்ததால் விமானத்தை திருப்பியது சரியில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் எப்படி முதலில் விமான நிலையத்தில் நுழைந்தார் என்ற தகவல் இல்லை. ஆகவே இச்செய்தி நம்பகத்தன்மை குறைகிறது.
திருப்பூர் கிருஷ்ணனின் ராமையா பற்றிய கட்டுரை நன்று.
மறந்தும் மளிகைப்பட்டியலை நிர்மலா அம்மையாருக்கு அனுப்பிவிடாதீர்கள். GST போட ஏதாவது ஐட்டம் கண்டு பிடித்து விடுவார்.
இது போன்ற வரவு செலவு பட்டியல்கள் அன்றைய வாழ்க்கை முறை, முக்கிய செலவு என்று கருதியது, விலை ஏற்றம் ஒவ்வொரு பொருளுக்கும் வித்தியாசமாக அமைந்தது, போன்ற பல விவரங்களை தருகிறது. கொடுத்துள்ள பட்டியல் பா ஜ க வாஜ்பயி பிரதமராக இருந்த காலம். இன்றைய பிரதமர்?
உப்புமா குறும்கதை நன்று.
சிறிய வயதில் பாடும் ஒரு வெண்பா. கடைசி வரிகள் மறந்து விட்டன.
உப்புமா டீ காபி உண்ண உண்ணவே யுடம்பு
உப்புமா உப்பாதா ஓதுவீர்
ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்குகள் அருமை. அதிலும் அந்த பேத்தல் கடிதங்கள் ... நான் ஆடிக்கு போன பாஸுக்கு எழுதிய கடிதங்களை நினைவூட்டியது.
Jayakumar
பாஸ்போர்ட் அந்த ஊரில் என்ன நடைமுறையோ... செய்தி என்று கொடுத்திருந்தார்கள். நானும் பகிர்ந்துவிட்டேன்!
நீக்குசினிமா கட்டுரை ஒன்றிரண்டு பேர்களுக்கு ஒத்துவரும்!
நியூஸ்ரூம் செய்திகள் பலவும் வாசித்திராதது என்கிற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.
மளிகைப் பட்டியல் பழசு. நிர்மலா ஜி இதைப் பார்க்காமலேயே நிறைய திட்டங்கள் வைத்திருப்பார்!
உப்புமா கூறும் கதை? குறுங்கதை? குறுங்கவிதை?
!!!!
அந்தக் காலத்து ஆனந்த விகடனுக்கு தனி மதிப்பு இருந்தது.
நன்றி JKC ஸார்.
என்னிடம் எழுபத்தி ஒன்றாம் ஆண்டிலிருந்து மளிகைப்பட்டியல், பால் கணக்கு, அரிசி, எண்ணெய் வாங்கியதுனு வைச்சிருக்கேன். ஒரு நான்கு ரூல் போட்ட காப்பி நோட்டில் எழுதினது. இன்னமும் இருக்கு. 3 ரூபாய்க்கெல்லாம் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் வாங்கி இருக்கேன். 5ரூபாய்க்குத் தே. எண்ணெய் வாங்கி இருக்கேன். வெண்ணெயெல்லாம் எப்போவுமே வீட்டுத் தயாரிப்புத் தான். பால் படி ஒன்றரை ரூபாய்க்கு வாங்கி இருக்கோம்.
நீக்குஇதிலே பாத்திரம் தேய்க்கும் சபீனாவெல்லாம் போட்டிருக்கு. நாங்க அதை எல்லாம் 90களுக்குப் பின்னரே வாங்க ஆரம்பித்தோம். ராணுவ கான்டீனில் இருந்து விம் பவுடர் ஒரு பாக்கெட் வாங்கி வருவார். அடுப்புச் சாம்பலைச் சலித்து இந்த விம் பவுடரோடு அப்போதைய சர்ஃப் பவுடர் கலந்து ஒரு பெரிய ப்ளாஸ்டிக் டப்பாவில் போட்டு நிரப்பி வைத்திருப்பேன். வேலை செய்யும் அம்மா தானாக எல்லாம் எடுத்துப் போட்டுக்க முடியாது. தினம் நான் தான் போடுவேன். விம் பவுடர் மீதம் தனியாக இருப்பது குக்கருக்கு மட்டும். குக்கரை எல்லாம் வேலை செய்யும் பெண்ணிடம் போட்டதே இல்லை. பல வருடங்களுக்கு. நானே தான் தேய்ச்சு வைப்பேன்.
நீக்கு// எழுபத்தி ஒன்றாம் ஆண்டிலிருந்து மளிகைப்பட்டியல், பால் கணக்கு, அரிசி, எண்ணெய் வாங்கியதுனு வைச்சிருக்கேன் //
நீக்குஅம்மாடி... வாங்க கீதா அக்கா... சூப்பர். சீனியர்னா சீனியர்தான்! அப்போ கேஸ் சிலிண்டர் விலை 35 ரூபாய், நாற்பது ரூபாய் இல்லை?
// அடுப்புச் சாம்பலைச் சலித்து இந்த விம் பவுடரோடு அப்போதைய சர்ஃப் பவுடர் கலந்து //
நீக்குஓ.. அந்த விஞ்ஞானமெல்லாம் நாங்கள் செய்ததில்லை. இந்த வாணலியை கருப்படிக்காமல் பாதுகாப்பபது என்பதே பெரிய தொல்லையாக இருக்கும்.
//அப்போ கேஸ் சிலிண்டர் விலை 35 ரூபாய், நாற்பது ரூபாய் இல்லை?// இல்லையே, 71 நவம்பரில் தீபாவளிப் பரிசாக மாமா வாங்கினார். எனக்குப் ப.பு. எடுக்கலை. மாமனாரும் ஒண்ணும் தரலை. ஆகவே நான் வேலைக்குப் போயிண்டிருந்ததால் அலுவலகத்தில் தரும் விழாக்கால முன்பணம் மூலம் 200 ரூ. பெற்றுக் கொண்டு அதில் புடைவை வாங்கிக் கொண்டேன். தலை தீபாவளிக்கு நாங்க போயிட்டுத் திரும்பினதும் இரண்டே நாளில் எரிவாயு அடுப்பு வந்தது. அப்போ மண்ணெண்ணெயும் மிகக் கடுமையான ரேஷன். அடுப்பு, எரிவாயு, சிலிண்டர், டெலிவரி சார்ஜஸ் எல்லாம் சேர்த்து மொத்தம் 215 ரூ தான் ஆச்சு. இதில் சிலிண்டர் டெபாசிட் 100 ரூ, அடுப்பு ப்ளூ ஃப்ளேம் 75 ரூபாயோ என்னமோ ஆச்சு. சிலிண்டரின் உள்ளே எரிவாயுவின் விலை இஃகி,இஃகி,இஃகி வெறும் பதினாறே ரூபாய்கள் தான். பொறாமையாய் இருந்தாலும் ஒண்ணும் செய்யறதுக்கில்லை. அப்புறமா ஜனவரி 72 ஆம் ஆண்டில் சிலிண்டரின் உள்ளே உள்ள எரிவாயுவுக்கு 19 ரூ சொச்சம்(20 ரூபாய்) ஏற்றினாங்க. 74 ஆம் ஆண்டில் நாங்க ராஜஸ்தான் போறச்சே கொடுத்தது 25 ரூபாயோ என்னமோ. இந்தியா/பாகிஸ்தான் வங்க தேசச் சண்டைக்குப் பின்னர் எல்லாமே விலை ஏற்றம் தான்.
நீக்குமொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தப்போ நிதி மந்திரியாக இருந்த எச்.எம்.படேல் குஜராத்தி என்பதோடு சிவில் சர்வீஸில் இருந்தவர் என்பதால் நடுத்தர மக்களின் தேவை/அவங்களோட பணச் செலவு பற்றி முழுதாகப் புரிந்து கொண்டு பட்ஜெட் தயாரித்தார். ஒரு குமாஸ்தாவின் பட்ஜெட் எனப் பத்திரிகைகளால் விமரிசனம் செய்யப்பட்ட அந்தப் பட்ஜெட்/மொரார்ஜியின் பதவிக்காலம் வரை விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டது. அதே போல் அப்போதைய ர்யில்வே மந்திரி யஷ்வந்த் சிந்ஹாவால் தயாரிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் தான் நடுத்தரமக்களுக்கும் ரயில் பயணங்களில் சௌகரியங்கள் பல செய்து கொடுக்கப்பட்டது. (முன்னெல்லாம் ரயில்வே பட்ஜெட் தனியாக பொது பட்ஜெட்டுக்கு முன்னால் வரும். சமீப காலங்களில் தான் அதை மாற்றிப் பொது பட்ஜெட்டோடு இணைத்திருக்கின்றனர்.
நீக்குபடின்னா சின்னப்படி எல்லாம் இல்லை, பட்டணம் படி. எட்டு ஆழாக்கு. 74க்குப் பின்னரே லிட்டர் அளவில் வாங்க ஆரம்பிச்சேன். அப்போக் கூட புக்ககமான கருவிலியில் எல்லாம் சேர் கணக்குத்தான்.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம், மற்றும் நன்றி.
நீக்குபுதிய படமோ? பெயரே கேள்விப்படவில்லையே. ஒரு வேளை இந்த OTT யில் வருபவை வெளியில் அதிகம் தெரியாது போலும்
பதிலளிநீக்குஇந்த ஆள்மாறாட்டம், குழந்தைகள் மாறாட்டம் எல்லாம் கிரேசி ஏரியா.!!!! பின்னி பெடலெடுப்பார்! அவர் இல்லாமல் போனது பெரிய குறைதான்....வயிறு குலுங்க சிரிக்கலாம் ஆனால் வரிக்கு வரி இருக்கும் என்பதால் டக்கென்று ஒன்று முடிந்து அடுத்து வரும் முன் நாம் சிரித்து முடித்திருக்க வேண்டும் இல்லைனா அடுத்தது காதில் விழாது...எனக்குக் குறிப்பாக.!!
கீதா
இல்லை கீதா... திரைக்கு வந்துதான் OTT க்கு வந்தன! கிரேசி அளவு யாருமே இப்போது கிடையாது.
நீக்குசினிமாவெல்லாம் பார்த்தே 2,3 வருடங்கள் ஆகி விட்டனனு நினைக்கிறேன். வீட்டிலே டிவியும் இல்லை. என்னமோ சினிமா பார்க்கத் தோன்றுவதே இல்லை. :)
நீக்குடிவி ஏதோ ரிப்பேர் என்று சொன்ன ஞாபகம். எப்படி பொழுது போகிறது? ஏதாவது ஒரு அவசர ஆத்திரத்துக்கு நியூஸ் பார்க்கவாவது டிவி வேண்டாமோ!
நீக்குடிவி ரிபேரெல்லாம் இல்லை. மாமா ஆஸ்பத்திரியில் படுத்த பின்னர் நான் வீட்டில் தொ.கா.பெட்டியைத் தொடவே இல்லை. அது கொலாப்ஸ் ஆகிவிட்டது. ஆகவே தூக்கி அம்பேரிக்காவில் எல்லாம் வைக்கிறாப்போல் வீட்டுக்கு வெளியில் வைச்சுட்டோம். வேலை செய்யும் பெண்ணின் கணவர் எடுத்துப் போய் ஐசி மாற்றி அவருடைய மைத்துனனுக்குக் கொடுத்திருக்கார். நல்லாவே வேலை செய்யுதாம்.
நீக்குபள்ளிச் செய்தி நெகிழ்ச்சி! இதுவும் ஒரு மகிழ்வான அனுபவம் தான்
பதிலளிநீக்குகீதா
பள்ளிசெய்தியா... இருங்கள்... என்னவென்று பார்க்கிறேன்.
நீக்குநமக்கு முந்தைய காலத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய எழுத்துத் திறமைகளில் இரண்டை இங்குக் குறிப்பிடத் தோன்றுகிறது.
பதிலளிநீக்கு1. தனது சொந்த அனுபவங்களை எழுத்தாக்கும் பொழுது யாரோ அன்னிய மூன்றாவது நபரின் அனுபவங்கள் மாதிரி பெயர் கொடுத்து எழுதுவது.
2. தான் படித்த அல்லது தனக்குத் தெரிய வந்த யாருக்கோ ஏற்பட்ட அனுபவ நிகழ்வுகளை எழுத்தாக்கும் பொழுது கொஞ்சம் கற்பனை கலந்து தனக்கு நேர்ந்த அனுபவங்கள் மாதிரியே விவரித்து நிஜ நபரை மறக்கடித்து வாசகரை மயக்குவது..
இந்த இரண்டு திறமைகளும் நல்ல எழுத்தாக்கங்களுக்குக் கைகொடுக்கும். முயற்சித்துப் பாருங்கள்.
நன்றி ஜீவி ஸார்... முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
நீக்குபி.எஸ்.ராமையா அம்மாவுக்குப் பிடித்த எழுத்தாளர். இவர் நாவல்கள், ஆர்வியுடைய நாவல்களெல்லாம் அம்மா தேடிப் பிடித்துப் படிப்பார். எனக்கு இவர்களெல்லாம் அறிமுகம் ஆனதே அம்மாவால் தான் குமுதத்தில் அந்தக்காலத்தில் தொடர்ச்சியாக எழுதிய பி.எம்.கண்ணன், துமிலனை எல்லாம் எனக்கு அம்மா மூலம் தான் அறிமுகம்.
நீக்குஅப்பா புத்தகங்கள் சேர்த்து வைத்திருப்பார். அப்பாவைப் பெற்ற பாட்டியும் புத்தகங்கள் சேர்த்திருந்தார். நாங்கள் எடுத்து படித்தால் ஒன்றும் சொன்னதில்லை. மற்றபடி அவர் யாரைப் படிப்பார் என்று கூட தெரியாது. எல்லோருடைய படைப்புகளும் பைண்ட் செய்து இருக்கும்.
நீக்குகாக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
பல படங்களின் விமர்சனங்களை படித்தேன். நீங்கள் சொன்ன படங்களை பார்த்ததில்லை. விடாமுயற்சி வீட்டில் பார்த்த போது, கடைசியில் இணைந்து கொண்டேன். ஒரே அடிதடி. முன்பு எப்போதோ பார்த்த ஒரு மலையாள படத்தை நினைவூட்டியது.
பி. எஸ் ராமையா பற்றிய செய்திகள் அருமை. படித்து தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய உப்புமா கவிதை அருமை. உமாவை விட உப்புமா சிறந்ததுதான். உலகை உணர்த்திய உப்புமாவுக்கும், உலகை புரிந்து கொண்ட உலகநாதனுக்கும் பாராட்டுக்கள். கவிதை பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. ரெற்றோ கவிதைகள் என்பது ஏடாகூடமாக எழுதும் பக்கம். கேஜிஜி கூட அங்கு கவிதை எழுதி இருக்கிறார்!
நீக்கு:)))))
நீக்குதிருநெற்குன்றநாதர் கோவில் விஷயம் சுவாரசியத்தை தூண்டுகிறது. நெல்லையின் பதிவில் வருமாக இருக்கும்.
பதிலளிநீக்குராம்நகர் அங்கன்வாடி - அடச்சீ இப்படியுமா மனிதர்கள்? அந்தப் பெண்கணிய கொஞ்ச நாள் உள்ள தள்ளணும்...
கோலிசோடாவை ட்ரம்ப் அனுமதிப்பாரா?!! ஹிஹிஹி
எம்புரான் - கல்லூரி யோசிச்சிருக்கும்...பசங்க எப்படியும் வரப் போறதில்லை அதுக்கு ஒழுங்கு மரியாதையா லீவு கொடுத்திடுவோம்னு நினைச்சிருப்பாங்க போல....ஆனால் இது டூஊஊஊஊஊஊஊஉமச்.
கீதா
பள்ளிச்செய்தி... ஆம். நெகிழ்ச்சி.
நீக்குசெய்திகளையும் படித்ததற்கு நன்றி கீதா.
சின்னக்குழந்தையைக் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றிக் கொடுமைப்படுத்திய பெண்ணுக்கு அதே தண்டனையைக் கொடுக்கணும்.
நீக்குஅந்த மாடு மேய்க்கும் கண்ணனை ஏற்கெனவே 2,3 இடங்களில் பார்த்துட்டேன்.
நீக்கு// அந்த மாடு மேய்க்கும் கண்ணனை //
நீக்குஇங்கு செய்தி மட்டும்தான். காணொளி இல்லை!
// சின்னக்குழந்தையைக் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி //
நீக்குநேற்று பாலாஜி அண்ணன் ஒரு காணொளி பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.
இரண்டு பெண்கள் ஒரு கைக்குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு உருட்டி விளையாடுவதும் அதை தூக்கிப் போடுவது போல இங்கும் அங்கும் ஆட்டுவதும்... அதை வேறு வீடியோ எடுத்து போட்டிருந்திருக்கிறார்கள்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபழங்கணக்கு நன்றாக உள்ளது. எங்கள் வீட்டிலும் இந்த பொக்கிஷங்கள் உள்ளன. வேறு எதையாவது தேடும் போது, இது முன்னால் வந்து நின்று முகம் காட்டி சிரித்துப் போகும். உடன் மலரும் நினைவுகளில் மூழ்கி நமக்கு அந்த தேடும் பொருளும் மறந்தும் போகும்.
அன்றைய சாமான்களின் விலைப்பட்டியல்கள், செலவழித்த விபரங்கள் இப்போது பிரமிக்க வைக்கின்றன.
இப்போது நாள் ஒன்றுக்கே விபரம் இல்லாத அநாவசிய செலவுகள் வந்து, அன்று செலவழித்த அந்த பணத்தை கொள்ளை கொண்டு போகின்றன.
செய்திகள் நன்றாக உள்ளது. பள்ளி மலரும் நினைவுகளும், கலியுக கிருஷ்ணன் பற்றிய முதல் இரண்டும் மனதை நெகிழ்விக்கின்றன.
மற்றதில் போதையில் மாறிய பாதைகள் மனம் கணக்கச் செய்தது. எல்லாவற்றையும் படித்தறிந்து கொண்டேன்.
பொக்கிஷ பகிர்வில் அத்தனை ஜோக்குகளும் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என் அப்பாவின் வரவு செலவுக்கணக்குகளையே பத்திரமாக வைத்திருந்தேன். இப்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. அப்பா கற்றுக் கொடுத்த வழக்கம்தான்.
நீக்குஇன்றைய வி(நி)லையில் அவற்றைப் படிப்பது சுவாரஸ்யம்தான்.
"பசித்தவர் பழங்கணக்கு பார்ப்பார்." என்றொரு சொல்வழக்கு உண்டு. ஆனால், யதேச்சையாக பழங்கணக்கு பார்க்க ஆரம்பித்தால், பசியே மறந்து விடும். (இது என் அனுபவத்தில்.) உங்களுக்கு எப்படியோ.?
பதிலளிநீக்குஆமாம். எனக்கும் நேரம் போவதே தெரியாது!
நீக்குசிசு செல்லப்பா, ராமையா பற்றிய பகுதியை ரசித்து வாசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
__/\__
நீக்கு'எழுதியது இப்படிதான்' என்று எழுத்தாளர்களின் பழக்கவழக்கங்கள் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய பதிவு இரண்டு பாகம் ஏற்கெனவே பகிர்ந்து விட்டேனா என்று நினைவில்லை. ஓம்சக்தி 2024 தீபாவளி மலரில் இடம்பெற்றது.//
பதிலளிநீக்குஇரண்டுமே வந்த நினைவு ஸ்ரீராம் அதில் திஜா, சுஜாதா, கல்கி வெங்கட்ராம் எல்லாரும் வருவாங்க.
ஸோ இதில் எது முதல் பகுதி இரண்டாம் பகுதி என்பது மட்டும் நினைவுக்கு வர மாட்டேங்குது
கூடவே ஏதாவது பழக்கவழக்கங்கள் என்று இருந்ததா என்றும் பிடிகிட்டவில்லை.
கீதா
சரிதான். பகிராதது நல்லதாய் போச்சு. விட்டு விடுகிறேன்.
நீக்குஸ்ரீராம், நீங்க இங்க கொடுத்ததை சும்மானாலும் கூகுளில் தட்டிப் பார்த்தேன். அது திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் டைம்லைன் போச்சு. அது வித்தியாசமாக இருக்கிறதே.
நீக்குநீங்கள் முன்ன பகிர்ந்தது, ஒவ்வொரு எழுத்தாளரும் எப்படிக் கதை எழுதுவாங்க என்பது பற்றி அதாவது சிலர் எழுதி ஒரு வாராம் அப்படியே போடுவாங்க, சிலர் எழுதியதை ஜஸ்ட் கரெக்ஷன்ஸ் மட்டும் பார்ப்பாங்க...
அதில் நாபா பற்றியும் வந்த நினைவு. அவர் பெரும்பாலும் தப்பே இல்லாமல் எழுதுவார் என்பதும் வாசித்த நினைவு.
இதைத்தான் நீங்க குறிப்பிட்டிருக்கீங்களா? என்பதுதான் இப்ப குயப்பம்..
கீதா
ஆம். அதைதான். நான் உங்களுக்கு ,அனுப்புகிறேன். பாருங்கள்.
நீக்குமளிகைப் பட்டியலில் கடைசில மார்ட்டின்? அது அப்படித்தான் என் புரிதல் அதைப் பார்த்ததும் இங்க எங்க மார்ட்டின் சைக்கிள் மார்ட் வந்துச்சுன்னு!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
ஹா.. ஹா.. ஹா... என்னை விட அதிகமா ஞாபகம் வச்சிருக்கீங்க! இது கோஸுவர்த்திச்சுருள்! கொசு அங்க ஆளையே தூக்கிடும்!
நீக்குசாம்பார் பொடில மஞ்சள் 300? - 15 ரூபாய் அப்போது விலை..
பதிலளிநீக்குஎல்லாப் பொருட்களின் விலையும் இப்ப கன்னாபின்னான்னு இருக்கு, இது அந்த மளிகைப்பட்டியலுக்கான கருத்தும்
பார்த்து பார்த்து என்னத்த வாங்கறது? திங்காம இருக்க முடியுமா!
கீதா
எவ்வளவு விலையானாலும் வாங்கித்தானே ஆகவேண்டும்! 'எல்லாமே வயித்துக்குதாண்டா' எனும் பாடல் நினைவுக்கு வருகிறது.
நீக்குநாங்களும் மஞ்சள் நிறையப் போடுவோம். காரம் குறையும். பழம் புளியாக இருந்தாலும் குழம்பு, சாம்பாருக்கு நிறம் கொடுக்கும். பொதுவாக நான் சாம்பார், கூட்டு போன்றவற்றிற்குப் பருப்பு வேகப் போட்டாலே மஞ்சள் பொடியும், நல்லெண்ணெயும் சேர்த்துடுவேன்.
நீக்குஆம். புளிக்காய்ச்சல் காய்ச்சும்போதும் மஞ்சள்பொடி சேர்ப்போம்.
நீக்குஉப்புமா - உமா ஹையோ ரசித்துச் சிரித்தேன் ஸ்ரீராம்
பதிலளிநீக்குஉப்புமாவை
'உப்பு' மாவாக கொடுத்தால்
உள்ளம் தருவதெப்படி?
பிபி தானே கூடும்.
பிபி என்றால்
என் கோபத்தைச் சொன்னேன்
உமா!
'உப்பு' இல்லா மாவானாலும்
'உப்பு' மாவானாலும்
'ப்பு' போகட்டும்
'உமா' நீதான் எனக்கு.
கீதா
உங்கள் கவிதையும் அருமை. இக்கவிதை பல விதங்களில் கவிதைகளை உருவாக்கும்.
நீக்குஉமாவிடம் இருப்பது
நீக்குஉப்புமா
அட,
உப்புமாவிலும்
உமா இருக்கிறதே....
அக்கா உங்க போல எல்லாம் எனக்கு வராது....சும்மா ஒரு முயற்சி..
நீக்குஸ்ரீராம் ...இதுக்கும் சிரித்துவிட்டேன்
கீதா
அந்த அந்த உப்புமாவுக்குப் போடும் சாமான்களைச் சரியாகப் போட்டு எண்ணெய் தகுந்ததைச் சேர்த்துக் கிளறினால் உப்புமாவை விட ஒரு அருமையான டிஃபன் இல்லை. ரவை உப்புமா எனில் நல்லெண்ணெய் சேர்த்துத் தாளித்துக் கொண்டு ரவையைப் போட்டு வறுத்து உப்புச் சேர்த்து கொதிக்கும் வெந்நீர் கொஞ்சம் ஊற்றி மிகுதிக்குப் புளிப்பான கெட்டியான மோர் சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கிப் பச்சை நல்லெண்ணெயும் ஒரு ஸ்பூன் நெய்யும் விட்டுக் கலந்து சூடாகச் சாப்பிட்டால் ஆகா, ஓகோ, பேஷ், பேஷ் தான் ரவா கிச்சடின்னால் அதிலே வெங்காயம் சேர்க்கக் கூடாது. மு.கோ. பீன்ஸ், காரட், பட்டாணி, தக்காளி, குடைமிளகாய் போன்றவை இருக்கலாம். வெங்காயம் போட்டு ரவா உப்புமா எனில் சி.வெ. உரிச்சு நறுக்கி தாளிப்பில் வெங்காயம் மட்டும் சேர்த்து வதக்கிக் கொண்டு ரவையைப் போட்டுவறுத்து உப்புச் சேர்த்து வெந்நீரைக் கொதிக்க விட்டுக் கிளறினால் மணம், சுவை மிக்க வெங்காய ரவா உப்புமா தயார். வத்தக்குழம்பு தொட்டுக்கலாம். அப்படியேவும் சாப்பிடலாம்.
நீக்குஅரிசி உப்புமான்னா தே.எண்ணெய் தான், சேமியா, அவல் உப்புமா போன்றவைக்குக் க.எ. பரவாயில்லை ரகம். சேமியா உப்புமாவில் தக்காளி சேர்க்கலாம். அவல் உப்புமாவில் வெங்காயம், உ.கி. துருவல் அல்லது பொடியாக நறுக்கினது போட்டுத் தாளிப்புல் பச்சை வேர்க்கடலை சேர்த்துப் போட்டுக் கிளறிக் கீழே இறக்கி எலுமிச்சம்பழச் சாறு சேர்த்துப் பச்சைக் கொ.ம. போட்டுக் கிளறிச் சூடாகச் சாப்பிடால். சுகம்.
நீக்குஒரு சிரிப்புக் கவிதைக்கு சீரியஸான நீங்கள் நிறைய விளக்கம் கொடுத்திருந்தாலும், செய்யும் முறைப்படி செய்தால் ரவா உப்புமா தேவாம்ருதம் என்பது தெரியும். வயது மாற மாற உணவுச் சுவைகளும் மாறுகின்றன. நானும் புளிப்பு மோர் சேர்த்து செய்திருக்கிறேன். அதைச் சுவைத்த அப்பா பாராட்டினார்.
நீக்குதண்ணீர் குடித்துக் கொண்டே பொக்கிஷ ஜோக்ஸை வாசிச்சது தப்பு!
பதிலளிநீக்குகீதா
ஹா ஹா ஹா. மேலிருந்து அந்த ஐந்தாவது ஜோக்கில் பொறை ஏறி விட்டதா சகோதரி. ஹா ஹா.
நீக்குசும்மா ஒரு ஜோக்குக்காக கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். அந்த காலத்தின் வழக்கப்படி நாமெல்லாம் க. பி. கா (கல்யாணத்திற்கு பின் கணவரை காதலித்தவர்கள் ஆயிற்றே..)
நீக்குஹா.. ஹா.. ஹா...
நீக்குஹா.. ஹா.. ஹா...
ஹா.. ஹா.. ஹா...
கமலாக்கா.....ஆமாம்...கொஞ்சம் கொஞ்சமாகச் சிரிக்கத் தொடங்கி....தண்ணீர் கணினியில் எல்லாம் தெரித்து....அதை துடைக்கணுமே இல்லைனா ஏற்கனவே ஜம்ப் ஆகும் கீஸ் எல்லாம் உக்காந்துரும்!
நீக்கு//சும்மா ஒரு ஜோக்குக்காக கேட்டேன். தவறாக நினைக்க வேண்டாம். //
கமலாக்கா உங்க கூட நான் 'கா' !!!!!!
பின்ன? இப்படி எல்லாம் சொல்லக் கூடாதுன்னு உங்களை அன்போடு மிரட்டியிருந்தேனே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கீதா
ஓகே. ஓகே. "நினைக்க வேண்டாம்" என்றுதானே சொன்னேன். பழமாகவே இருந்து விடுவோம். ஹா ஹா ஹா.
நீக்கு:-))
நீக்குநியூஸ்ரைம் பலவித செய்திகளை அறியத் தந்தது. கவிதை ...உப்புமாவும் கடைசியில் பிடித்துவிட்டது :)
பதிலளிநீக்குதினசரி கடிதம், ஞாபக மறதி, ரசனை.
நல்லகாலம்பிறக்குது...ஹா...ஹா......சிரித்து முடியலை.
ஆஹா... இன்று சிரிக்க வைத்திருக்கின்றன ஆ வி அட்டைப்படங்கள்...
நீக்குநன்றி மாதேவி.
ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் செய்து க்ளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் பார்த்தேன்.//
பதிலளிநீக்குஇப்படி வீட்டில் இருந்து படம் பார்த்தால் பிடித்த காட்சியை திரும்ப பார்க்கலாம், பிடிக்காத காட்சியை ஓட்டி விடலாம்.
நீங்கள் பார்த்த படங்கள் கதை எல்லாம் முன்பே பார்த்த சில படங்களை நினைவு படுத்துவது உண்மை.
நன்றாக இருந்தால் பார்ப்போம், இல்லையென்றால் அரைத்த மாவை அரைக்கிறார்கள் என்று விமர்சனம் செய்வோம் , இல்லையா?
ஆமாம் கோமதி அக்கா.. பாட்டுக்கு காட்சிகளையும் சண்டைக்காட்சிகளை தள்ளி விட்டு விடுவேன்! இது ஒரு வசதிதான். சிலசமயம் தியேட்டரில் பார்க்கும்போது கைகள் ரிமோட்டைத் தேடும்!!!
நீக்குராம்நகர்: அங்கன்வாடியில், இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு நடந்தது கொடுமை, இப்படியும் இரக்கம் இல்லாத பெண்கள் இருப்பார்களா?
பதிலளிநீக்குஇன்னொரு காணொளி, பாமரன் பாலாஜி அண்ணன் ஷேர் செய்து X தளத்தில் பார்த்தேன். பெண்களா அவர்கள்...
நீக்குஇப்போதுதான் மதுரா ஜன்மஸ்தான் தரிசனம் செய்தேன். அங்கு நாற்பது நிமிடங்கள் துரத்தாமல் எங்களிருவரையும் அனுமதித்தது எங்கள் கொடுப்பினை.
பதிலளிநீக்குபழங்கணக்கு என்னுடைய கணக்கு நோட்டை நினைவுபடுத்தியது. மனைவிக்கு இதில் ஆர்வமில்லை (discipline ஆ குறிக்கும் வழக்கம்). அதனால் ஓரிரு வருடங்களுக்குப் பிறகு நிறுத்திவிட்டேன். அதை ஈடுகட்டும் விதமாக முதலில் பணத்தை சேமிப்பது, வீட்டுச் செலவுக்கு மிகச் சிறிய பகுதியை எடுத்துவைப்பது என்ற பழக்கத்தை வைத்துக்கொண்டேன் ஒருநாள் இங்கு எழுதுகிறேன்
மதுரா ஜன்மஸ்தான் தரிசனம் நல்லபடியாக கிடைத்தது மகிழ்ச்சி.
நீக்குவாங்க நெல்லை... மதுரா ஜன்மஸ்தான்... மோடி மஸ்தான் என்பது போல இருக்கிறது! ஹிஹிஹி....
நீக்குபணத்தை எடுத்து இதிது இததற்கு என்று கட்டி வைக்கும் பழக்கம் எங்களிடம் இருந்தது. பேபப்ரில் காரணம் எழுதி அதற்குள் பணத்தை வைத்து சுருட்டி ரப்பர் பேண்ட் போட்டு விடுவோம்.
ஜனம்ஸ்தானில் பொதுவாக உட்கார விடுவார்கள். என்ன ஒரு பிரச்னைன்னா. கிருஷ்ணனாட்டமாவே தவழ்ந்து வந்து தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு பார்க்கச் சொல்லுவாங்க. எனக்கோ அவருக்கோ அப்படி எல்லாம் முழங்காலை மடித்துக் கொண்டு தவழ்ந்து போக முடியாது. தொட்டிலை மட்டும் ஆட்டினோம்.
நீக்கு//இந்த மனநிறைவு போதும் எனக்கு. இனிமேல் நான் மேடையேற மாட்டேன்!` என உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அன்று அவர் சொன்னது உண்மையே ஆயிற்று//
பதிலளிநீக்குசில நேரங்களில் வார்த்தைகள் பலித்து விடும்.
ஆம். கே வி ராமசாமி சிறந்த உதாரணம்.
நீக்குஎன் கணவர் அவர்களும் கணக்கு எழுதி கொண்டு இருந்தார்கள் அப்போது எனக்கு பிடிக்கவில்லை, எங்கள் வீட்டில் இப்படி கணக்கு எழுதும் பழக்கம் இல்லை என்றேன். நிறித்தி விட்டது மற்றும் அல்லாமல் கணக்கு நோட்டுகளை கிழித்து போட்டு விட்டார்கள் . இருந்து இருந்தால் காலத்தின் விலை வித்தியாசங்களை அறிந்து கொண்டு இருக்கலாம்.
பதிலளிநீக்குகோமதி அரசு மேடம்.. கணக்கு எழுதுவது மிக நல்ல பழக்கம். வாரம் ஒரு தடவை இருப்பைச் சரி பார்ப்பது, ஏன் இந்த வாரம் அதிகம் செலவழிந்திருக்கிறது என்றெல்லாம் அறிந்துகொண்டு corrective measures எடுக்க உதவும். கணக்கு எழுதாவிட்டால் வீட்டில் தொலைந்தது வெளியில் தொலைந்தது என்று எந்தப் பிரச்சனையும் நம் கவனத்துக்கு வராமலே போய்விடும்
நீக்குஇதன் downside, எதையாவது எழுத மறந்து ஏன் இந்த இருப்பு வித்தியாசம் என டென்ஷனாகி மனது அதிலேயே மூழ்கி இருப்பது.
எங்கப்பா ஒருமுறை பதினைந்து ரூபாய் கணக்கு வராததற்கு என்னிடம் கன்னாபின்னாவெனக் கோபம் கொண்டதும் (நம்மால் நாம் லவட்டவில்லை என நிரூபிக்க முடியாது) பிறகு சில நாட்கள் கழித்து அவரே எழுத மறந்ததைக் கண்டுபிடித்ததும் நடந்திருக்கிறது
நீக்குகோமதி அக்கா... அப்பா கணக்கு கேட்கும்போது எங்களுக்கும் கோபமும் எரிச்சலுமாய் இருக்கும். ஆனால் அது மிக நல்ல பழக்கம் என்பதை நான் எழுதியபோது கண்டேன். வேறு சில மனக்காரணங்களால் எந்நாளும் தொடர முடியாமல் போனது.
நீக்கு// வாரம் ஒரு தடவை இருப்பைச் சரி பார்ப்பது, ஏன் இந்த வாரம் அதிகம் செலவழிந்திருக்கிறது என்றெல்லாம் அறிந்துகொண்டு //
நீக்குநெல்லை.. என்னிடம் அந்தப் பழக்கம் இருந்தது.
அலுவலகத்தில் வேலைபார்த்து இருப்பு சரிபார்த்து வைத்து வைத்து, வீட்டில் செலவுக் கணக்கிலும், வரவை எழுதி, அன்றாட செலவுகளைக் கூட்டி அதில் அன்றாடம் கழித்துக் கொண்டே வந்து,
மீதி சரியாய் இருக்கிறதா என்று பார்ப்பேன். ஒரு பார்வை பார்க்கும்போது என்னென்ன வீண் செலவுகள்ஸ் செய்தோம் என்று புரியும். சம்பளம் கம்மியாய் வந்த நாட்கள் அவை.
20 தேதிக்குமேல் கையில் பணமிருக்காது!
// (நம்மால் நாம் லவட்டவில்லை என நிரூபிக்க முடியாது) //
நீக்குபயங்கரமாய் சிரித்து விட்டேன். ரொம்ப கஷ்டமான நிலைமை! ஆண்டவனே பின்னர் சரி செய்து கொடுத்தால்தான் உண்டு!
நீங்கள் சொல்வது போல் கணக்கு எழுதுவது நல்ல விஷ்யம் தான். இப்போது நான் கணக்கு எழுதுகிறேன். என் கணவர் "என்னை எழுத வேண்டாம் என்றாய் நீ எழுது கிறாய் "என்று நினைவில் கேட்கிறார்கள்.
நீக்குபல விஷயங்களிலும் நெல்லையின் அப்பா எங்க அப்பா மாதிரியே கண்டிப்பும் கறாருமாகவே இருந்திருக்கார். ஒரு பைசா எங்க அப்பாவிடமிருந்து எடுத்துட முடியாது, இன்னும் சொன்னால் சிரிப்பீர்கள். கடையில் தேங்காய்ச் சில் வாங்கப் போனால் செட்டியாரிடம் கேட்டு ஓசிப் பொரிகடலை வாங்கித் தின்போம். அதையும் அப்பா ஒரு நாள் பார்த்துட்டு அந்தப் பொரிகடலையைத் தின்னாமல் வீட்டுக்குக் கொண்டு வரணும்னு கண்டிப்பான கட்டளை போட்டு விட்டார். :(
நீக்குஉப்புமா கவிதை படித்தவுடன் சிரிப்பு வந்து விட்டது.
பதிலளிநீக்குபொக்கிஷ பகிர்வுகள் சிரிக்க வைத்தன.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஉப்புமா கவிதை ஆகா..
பதிலளிநீக்குசிறப்பு
நன்றி செல்வாண்ணா...
நீக்குபொக்கிஷம் பொக்கிஷம் தான்...
பதிலளிநீக்குநலம் வாழ்க...
நன்றி செல்வாண்ணா...
நீக்குஇரண்டரை வயது குழந்தைக்கு நடந்தது கொடுமை,
பதிலளிநீக்குஇப்படியான காட்சிகளை தொகை நிகழ்ச்சிகளில்
பார்த்து விட்டாலே மனம் கலங்கி கண்ணீர் வடித்து விடுவேன்...
இரக்கம் இல்லாத அரக்கி..
இன்னொரு சம்பவம் ஏற்கெனவே மேலே சொல்லி இருக்கிறேன், அவர்களை எல்லாம் என்ன செய்வது? டிக்டாக் ரீல்ஸ் படுத்தும் பாடு.
நீக்கு/// வெள்ளம் சேர்த்தி கிடையாது. ///
பதிலளிநீக்குநல்லது...
நாங்களும் வெள்ளத்தை வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ள மாட்டோம்...
ஹா.. ஹா... ஹா... இன்னமும் சரி செய்யவில்லை செல்வாண்ணா... செய்கிறேன்.
நீக்கு/// அசிங்கத்தை அழகுபடுத்திக் காட்டுவது ஒரு அரிய திறமைதான். ஆனால் அறிவாளிகள் அதை மதிப்பதில்லை. வருங்காலத் தலைமுறைகள் அதை மதிக்கவே மதிக்காது. ///
பதிலளிநீக்குஸ்ரீ ராமையா அவர்களது பொன்னெழுத்துகளை இன்று தான் வாசிக்கின்றேன்...
வர இருக்கின்ற தலைமுறையை விடுங்கள்...
என் மகளும் மகனும் மதிக்க வேண்டுமே!..
உண்மை. உண்மை. இங்கும் அதே நிலைதான்.
நீக்கு//ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக்குகள் அருமை. அதிலும் அந்த பேத்தல் கடிதங்கள் ... நான் ஆடிக்கு போன பாஸுக்கு எழுதிய கடிதங்களை நினைவூட்டியது.// ஹாஹா! ஜெய்குமார் சாரின் பின்னூட்டம் சுவாரஸ்யம்!
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா.
நீக்குவியாழன் கதம்பம் சிறப்பு! உப்புமா, உமா கவிதை உப்புமா கவிதையாக இல்லாமல் ரசனைக்குரியதாக இருக்கிறது. ஆ.வி. அட்டைப்பட ஜோக்குகள் பலமுறை பகிரப்பட்டிருந்தாலும் சிரிக்க முடிவதுதான் அவற்றின் சிறப்பு என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஆஹா... மறுப்படி உங்களிடமிருந்து பாராட்டு. நன்றி பானு அக்கா. அந்தக் கால ஆ வி ஸ்பெஷல்தான். இப்போ அப்படி இலை!
நீக்குசிலருக்கு நல்ல நேரம் பணம் புகழைக் கொட்டும் பெரிய திறமையில்லாமல். யோகிபாபு அப்படிப்பட்ட ஒருவர். இன்னொருவர் to some extent பரோட்டா சூரி. துபாய் போய் திரும்பியவராக வடிவேல் (பார்த்திபனுடன்) நடித்த படத்தில் செருப்பால அடிப்பேன் என்று சொன்னதும் கன்னாபின்னாவென கோபப்படும் நடிகர் பெயர் நினைவில்லை ஆனால் மிகப் படித்தவர் திறமைசாலி ரொம்ப புகழ் பெறலை.
பதிலளிநீக்குயோகிபாபுவை ஏனோ என்னால் ரசிக்க முடிகிறது! கோலமாவு கோகிலா, இன்னொரு சி கா படத்தில் எல்லாம் அவரை ரசித்திருக்கிறேன். அதே போல மண்டேலா, இன்னொரு படம் அவர் ஒரு பணக்காரரின் மகன் என்று வரும்... ஆனால் பரோட்டா சூரியை ரசிக்க முடியவில்லை. யோகி இருந்தால் படத்தை கொஞ்சம் நம்பி பார்ப்பேன்.
நீக்குநீங்கள் சொல்லும் வடிவேலு காமெடி வெற்றிக்கொடி கட்டு படத்தில். அதில் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வந்து கோபப்படுவாரே அவரைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆமாம் அந்த சைக்கிள்காரர்தான்
நீக்குயோகிபாபு விஜய் சேதுபதியுடன் லண்டன் போவதாக வரும் படம், கோலமாவு போன்ற படங்களில் நானும் ரசித்திருக்கிறேன். சட்னி சாம்பார் சீரியலிலும்
நல்ல ஆசிரியர்கள் நம்மைக் கடுமையாக நடத்தியிருந்தாலும் அவர்களை நாம் மறக்க முடியாது எப்போது பார்த்தாலும் மரியாதை செய்யத் தவறமாடாடோம்
பதிலளிநீக்குநிஜம்தான். என்னையும் நெகிழ வைத்த செய்தி அது. அப்படி ஒரு காலம், காட்சி வர கொடுத்து .வைத்திருக்க வேண்டும்.
நீக்கு