செவ்வாய், 30 ஜூன், 2015

தொந்த்ரீ !


வெள்ளிக்கிழமை.

பூங்கா .

காலை  வேளை.

சிறுவர் விளையாடுமிடத்தில், முழங்கால் உயரத் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்து, தலை நரைத்த எட்டு ஆண்கள் இந்தி, கன்னடம், ஆங்கிலம் எல்லா மொழிகளிலும் சுஷ்மா, வசுந்தரா, லலித் மோடி பற்றி எல்லாம் அரட்டையடித்து ஓய்ந்து ஏழு ஐம்பதுக்கு ஒருவருக்கொருவர் கை குலுக்கி, கட்டிப் பிடித்து, சிரிப்போடு அவரவர் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.

அலுவலகம் செல்வோர் எல்லோரும் ஏழு மணி முதல் எட்டு மணி ஆவதற்குள், பூங்காவில்  இருந்த நடைபாதையில்  வேகச் சுற்றுகள் சுற்றி, வாட்சைப் பார்த்தபடி வெளிநடப்பு செய்திருந்தனர்.

அருகில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிச் சீருடையணிந்த சிறுவர்கள் ஓடி ஆடி ஓய்ந்து, ஒன்பது மணி சுமாருக்கு வேலி தாண்டிக் குதித்து பள்ளிக்கூடம் சென்றனர்.

பூங்காவில் வெளியாட்கள் அநேகமாக யாரும் இல்லாத நேரம்.

பூங்கா பராமரிப்பு செய்கின்ற குடும்பத்து பெரியவர்கள் பராமரிப்புப் பணிகளில் ஆழ்ந்திருந்தனர். ஒரு நாலு வயதுப் பெண் குழந்தை மட்டும் சிறுவர்களின் விளையாட்டுக்காக   சறுக்குமரம், ஸீ - ஸா, ஊஞ்சல் உள்ள பகுதியில், தனித்து நின்று கொண்டிருந்தது. இங்கே அங்கே சும்மா பார்த்துக் கொண்டிருந்தது. கையில் இருந்த ஒரு கையில்லாத பொம்மையை, தூங்க வைப்பது போல கொஞ்சம் தட்டிக் கொடுத்தது.

அப்பொழுது பக்கத்துக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, வயதான ஒரு வேலைக்கார அம்மா, ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தார். அந்த அம்மா கழுத்தில், மஞ்சள் கயிறு மட்டுமே. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள். குழந்தை, ஷூ + குல்லாய், ஸ்வெட்டர், கொலுசு அணிந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை. அந்தக் குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மற்ற கையில் ஒரு பெரிய எவர்சில்வர் டபரா சகிதம் பூங்காவில் நுழைந்து, சிறுவர் விளையாடும் பகுதிக்கு வந்தார்கள்.

வேலைக்கார அம்மா அந்தக் குழந்தையை விளையாடுமிடத்தின் முழங்கால் உயர தடுப்புச் சுவற்றின் மீது அமர்த்தி, தன் கைப் பாத்திரத்தில் இருந்த உணவுப் பொருளை, சிறு உருண்டையாக உருட்டி,  அந்த இரண்டு வயதுக் குழந்தையின் வாயில் ஊட்டிவிட்டார். அருகில் மரக்கிளையில் வந்து அமர்ந்த காகம் ஒன்று "கா ..... கா" என்று கத்தியது.  அது, 'எனக்கு ஏதாவது கிடைக்குமா?' என்று கேட்டது போல இருந்தது.
 

அந்த அம்மா காகத்தை லட்சியம் செய்யவில்லை. இ. வ குழந்தைக்கு ஊட்டிவிடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி வந்தார்.

காகம் தொடர்ந்து கரைந்து கொண்டிருந்தது.

நான்கு வயதுக் குழந்தை இவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து நோட்டமிட்டது. பிறகு சற்று அருகே சென்று, நின்று, பார்த்தது. அதற்குப் பிறகு, அந்த உணவுப் பாத்திரத்திற்குப் பக்கத்தில் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்துகொண்டது.  தன்னுடைய பொம்மையை தடுப்புச் சுவற்றின் மீது படுக்க வைத்தது. அப்படியே அந்த அம்மாவையும், குழந்தையையும் பார்த்து, சிநேகமாக ஒரு புன்னகை செய்தது. அதனுடைய புன்னகைக்கு அவர்கள் இருவரும் பதில் புன்னகை செய்யவில்லை.
   

காகம் தொடர்ந்து, " கா ....   கா ....... கா...."

நா வ குழந்தை, உணவுப் பாத்திரத்துக்குள் என்ன இருக்கிறது என்று சற்று எட்டிப் பார்த்தது. இ வ குழந்தை சாப்பிடுவதை ஆவலோடு பார்த்தது. ஆனால் கையை நீட்டாமல் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தது.

வேலைக்கார அம்மா, கொஞ்ச நேரம் இந்த நா வ குழந்தையை யோசனையுடன் பார்த்துவிட்டு, கொஞ்சம் அதிகமாக அந்த உணவைக் கையில் எடுத்து, உருட்டி, நா வ குழந்தைப் பக்கம் கையை நீட்டினார்.

நா வ குழந்தை உடனே ஆவலோடு அந்த உருண்டையை தன் இடது கையில் வாங்கிக்கொண்டது.

அந்தக் கையை தன் கண்களுக்கு அருகே கொண்டுவந்து, அது என்ன என்று பார்த்தது. ஒருவேளை முகர்ந்து பார்த்திருக்குமோ?

மரத்திலிருந்து காகம், " கா .......   கா   .........  கா"

நா வ குழந்தை, தன் இடது உள்ளங்கையில் இருந்த உணவு  உருண்டையை, வலது கையால் எடுத்து, அந்தக் காகம் இருக்கும் திசையில் வீசியது. காகம் அதை காட்ச் பிடித்து, மீண்டும் மரக்கிளைக்கு சென்று அமர்ந்து கொண்டது.
 


நான்கு வயதுக் குழந்தை சந்தோஷமாக இரண்டு கைகளையும் தட்டிச் சிரித்தபடி, "தொந்த்ரீ .....   தொந்த்ரீ ..... " என்றது.
                     

திங்கள், 29 ஜூன், 2015

'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு




தலைப்பில் கொத்துமல்லி மட்டும் இருந்தாலும் இதில் புதினாவுக்கும் இடமுண்டு.


வீட்டில் என்றென்றும் இருப்பில் இருக்க வேண்டிய விஷயங்கள் பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், போன்றவற்றோடு கறிவேப்பிலை மற்றும் இந்தக் கொத்துமல்லிக்கு நிறைய இடம் உண்டு.


கொத்துமல்லி இல்லையேல் சாம்பார் இல்லை.  கொத்துமல்லி இல்லையேல் ரசம் இல்லை!  இட்லி, தோசைக்கு அரைக்கும் தேங்காய் சட்னியில் கொத்துமல்லி சேர்த்தால் தனிச் சுவை.  

கொத்துமல்லித் தழைகளை என் அப்பா சும்மாவே வாயில் போட்டு மெல்லுவார்!  சாம்பார், ரசத்தில் போடும்போது சற்றுப் பொடியாக நறுக்கிக் கூடப் போடுவோம்!

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.


இரண்டு கட்டு கொத்துமல்லி வாங்கிக் கொள்ளவும்.  (சென்னையிலும், மதுரையிலும் கட்டு 10 ரூபாய்!)  அப்புறம் ஒரு கட்டு புதினா வாங்கிக் கொள்ளவும்.  (இதுவும் கட்டு 10 ரூபாய்தான்).  சிலர் இரண்டு கட்டு கொத்துமல்லிக்கு இரண்டு கட்டு புதினா போடலாம் என்பார்கள்.  ஆனால் அப்படிப் போட்டால் தொக்கின் பெயரில் புதினாவுக்கும் இடம் கொடுக்க வேண்டி வரும்.  எனவே கொத்துமல்லி வாசனை தூக்கலாகத் தெரிய இந்த அளவிலேயே நாம் செய்வோம்!


அப்புறம் ஒரு சள்ளை பிடித்த வேலை.  இந்த கொத்துமல்லி, புதினாவை இலை, இலையாக ஆயவும்.  ஆயப்பட்ட ஈர்க்குகளில் இலை வீணாகாமல் பார்த்துக் கொள்ளவும்.  பின்னே?  கட்டு 10 ரூபாயாக்கும்!  இலைகள் போக மிச்ச மீதியைத் தூக்கித் தூர வைத்து விடவும்.




ஆய்ந்த இலைகளை சுத்தமான நீரினில் நன்கு அலசி, 


ஒரு செய்தித் தாளில் பரவலாக இட்டு, காய வைக்கவும்.  காய வைக்கவும் என்கிற வார்த்தையை விட 'உலர வைக்கவும்' என்கிற வார்த்தைப் பொருத்தமாக இருக்கும்.  எனவே சென்ற வரியை அழித்து விடவும்!


அப்புறம் கொஞ்சமாக உளுத்தம் பருப்பு, (உளுத்தம் பருப்பு நிறையச் சேர்த்தால் தொக்கின் சுவை கெட்டு விடும்.  அதனால் கொஞ்சமாக சேர்க்கவும்) காரத் தேவைக்கு ஏற்றாற்போல வரமிளகாய், கொஞ்சம் பெருங்காயம் எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து ஓரமாக வைக்கவும்.  அடுப்பை அணைத்து விட்டு அந்தச் சூடான வாணலியில் இந்த இலைகளைப் போட்டுப் புரட்டிக் கொள்ளவும்.


உளுத்தம்பருப்பு, இன்ன பிற சமாச்சாரங்களைத் தனியாக மிக்ஸியில் இட்டு கரகரவென அரைத்துக் கொள்ளவும்.  கரகரவென்று நான் சத்தத்தைச் சொல்லவில்லை.  ரொம்ப நைஸாக அரைக்க வேண்டாம் என்பதைச் சொன்னேன். 



பிறகு இலைகளைத் தனியாக மிக்ஸியிலிட்டு நான்கு ( 4 தான்) சுற்று சுற்றிக் கொள்ளவும்.


அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் இந்த இலைகளைக் கலந்து கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு பிசைந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.








இப்போது தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.  இல்லை, இட்லிதான் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.   அட, வேண்டாமப்பா, 'இன்று நான் மோர்சாதம்தான் சாப்பிடப் போகிறேன்' என்கிறீர்களா?  அதற்கெல்லாம் இது நல்லபடி துணை நின்று உள்ளே அனுப்பி வைக்கும்!

சனி, 27 ஜூன், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  கடந்த வாரம் பெங்களுரில் அடர்ந்த இரவில் சாலையின் நடுவில் நடந்து சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பசுமாட்டின் மீது கார் ஒன்று மோதி நிற்காது சென்று விட்டது.



அந்த வழியே சென்ற சிலர் அந்த வழியே சென்ற சிலர் தோல் கிழிந்த தொங்கிக் கொண்டிருந்த நிலையில் பரிதாபமாக நின்ற அந்த கர்ப்பிணிப் பசுவின் தோலை தைக்க உதவினர். கூட்டத்தில் இருந்த கால்நடை உதவி மருத்துவர் சையத் அப்பாஸ் அறுவை சிகிச்சை செய்து கிழிந்த தோலைத் தைத்து உதவினார்.




தெருவிளக்கு எதுவும் எரியாத நிலையில், இருட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் இந்த ஆபரேசனைச் செய்து முடித்தனர்.


மகத்தான மனிதாபிமானச் செயலை பாராட்டுவோம்... தினகரன்.


2)  "கூடலூர் தேசீகம் நண்பர்கள் குழு'வினர் சப்தமின்றி செய்து வரும் உதவி தன்னிகரற்றது.  குழுவில் கூடலூரைச் சேர்ந்த இளங்கோவன், கோபால், பாண்டிக்கண்ணன், சரவணன் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். மன நலம் பாதித்தவர்களுக்கு சேவை செய்வதுதான் இவர்களின் முக்கியமான தொண்டு. 




3)  உழைப்பே உயர்வு.  வனஜா.




4)  Sankara Eye Care -ன் சாதனைகள் பற்றி.  இலவசமாக பதிமூன்று லட்சம் கண் அறுவை சிகிச்சைகள்...




5)  தேனீ மாவட்டம் காக்கிவாடன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கணித ஆசிரியர் பால கிருஷ்ண குமாருக்கு, பூஜ்ஜியம் சதுர அடியில் பள்ளியில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்துள்ளமைக்குப் பாராட்டுகள்.





6)  பொழுதுபோக்காக  பொதுச்சேவை.  




7)  ஸாயிபா தாஜ்.  தனது ஒவ்வொரு நாளையும் இவர் கழிக்கும் விதம் அற்புதமானது.




8)  ஐந்து பெரியவர்களும், 40 இளைஞர்களும் ஏற்படுத்திய உணவு வங்கி.




9)  பஞ்சாப் வங்கியின் சேவை.




10)  பிரமிக்க வைக்கும் ரவீந்திரநாத்.  





11)  மேல் பெர்த்தில் இடும் கிடைத்தால் வரும் சிரமம் எல்லோரும் அறிந்ததே.  ரஞ்சனி மேடம்...  சரிதானே?  அதற்கு ஒரு தீர்வு வருகிறதாம்.  ஒத்து வருமா?  நடைமுறைக்கு வருமா?  பார்ப்போம்.




12)  பாராட்டுகள் அஞ்சும் அரா.  நாட்டிலேயே இப்போதுதான் இரண்டாவது இஸ்லாமியப் பெண்.  




13) உமா கண்ணன்.




14)  சீமா - ஒரு இன்ஸ்பிரேஷன்!





15) கிராமத்துக்கே வெளிச்சம் காட்டிய முன்னோடி லாலா தேஹ்ராஜி தாகோர் .


வெள்ளி, 26 ஜூன், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்

              

 

கொஞ்சம் டெக்னிகலாக எதையாவது சொல்லலாமே என்று இந்த வீடியோ.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் - பதில் சொல்கிறோம். 
  

புதன், 24 ஜூன், 2015

ஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்



இது நடந்தது 1950 களில்.

டிவி இல்லாத காலம்.  ரேடியோ கூட இருக்காது.  பார்க்குக்குச் செல்ல வேண்டும், ரேடியோ கேட்கக்கூட.

அலுவலகம் விட்டு தங்கியிருக்கும் இடத்துக்கு வந்தால் பொழுது போக வேண்டுமே...   திருமணமானவர்களும், ஆகாதவர்களும் கலந்து தங்கியிருந்த மேன்ஷன் போன்ற ஒரு இடம்.  ஆனால் பெரிய அறைகள்.
பார்க், சினிமா, கடைத்தெரு, லைப்ரரி போகாத ஒரு மாலை நேரம்.  நண்பர்கள் குழுமிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

                                                    Image result for five friends conversing clip art images

பாலு, கண்ணன், தேசிகன், வகாப், ஜான்சன், சந்துரு, முனியாண்டி என்று ஜமா சேர்ந்திருந்தது.

அப்போது அந்த ஊரில் புதுவகையான திருடர்கள் வந்திருந்தனர்.  ஊர் முழுவதும் அதைப் பற்றிப் பேச்சாக இருந்தது.

இரவு அனைவரும் தூங்கியவுடன் உள்ளே நுழையும் திருடர்கள் தூங்கிக் கொண்டிருப்போரின் தலை மாட்டில் இரும்பு உலக்கை, அல்லது மரக்கட்டையுடன் சத்தமின்றி நிற்பார்களாம்.  ஒருவன் அந்த இடத்தைத் தேட்டை போடுவானாம்.   நடுவில் யாராவது தூக்கத்தில் அசைவது போலவோ, எழுவது போலவோ தெரிந்தால் மண்டையில் ஒரு போடு போடுவார்களாம்.  கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வெளியேறி விடுவார்களாம்.

இதைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

"இவர்களை நாம் பிடித்துக் கொடுத்தால் என்ன?" என்றான் வகாப்.  எப்போதுமே துணிச்சலான ஆசாமி.

"மண்டை தெறிச்சுடும் தெரியுமில்ல.... பிடிச்சுக் கொடுக்கறாராம்..."  சந்துருவின் எகத்தாளம்.

இப்படியே பேச்சு போய்க்கொண்டிருக்க, தனியாக அறையில் தங்கியிருப்பவர்களின் ரெகுலர் சப்ஜெக்டான ஆவி சமாச்சாரத்தில் பேச்சு வந்து நின்றது. 

பாலுவுக்கு இதில் எல்லாம் நம்பிக்கைக் கிடையாது.  "எல்லாம் சுத்த ஹம்பக்!"

அவரவர்கள் ஆளுக்கு ஒரு அனுபவத்தைச் சொன்னார்கள்.

இந்நேரத்தில் நாகசாமி ஒரு போர்டுடன் அங்கு ஆஜரானான்.

"என்ன அது?"

"ஒய்ஜா போர்ட்"

"அப்படீன்னா?"


"ஆவிகளோட பேசலாம் தம்பிகளா...  நீங்க பேசிகிட்டிருந்தது அங்க வரைக்கும் கேட்டது.  அதான் இந்த போர்டை எடுத்து வந்தேன்"

"எப்படி நாகா? "

"உள்ள வாங்க... சொல்றேன்"

வராண்டாவை விட்டு எல்லோரும் உள்ளே சென்றனர்.

போர்டை மேஜை மேல் வைத்தான் நாகா.  



"இது எல்லோருக்கும் கைவராது.  நல்ல மீடியமா இருந்தால் அழகாக வரும்.."

"மீடியமா?  அப்படின்னா?"

"சில பேர்கள் ஆவிக்கு ரொம்ப நெருங்கியவர்களா இருப்பாங்க"

"அட, ஏம்ப்பா பயமுறுத்தறே?"

"விடு.. ரொம்ப விளக்கம் எல்லாம் கேட்டால் பதில் சொல்ல நேரம் இல்லை!"

என்ன செய்ய வேண்டும் என்று எல்லோருக்கும் சொன்னான்.


"ரூம்ல நடுல இந்த போர்டை வை.  லைட்டை அணைச்சுட்டு ஓரமா ஒரு மெழுகுவர்த்தி மட்டும் ஏத்தி வை.  யாரும் பேசக் கூடாது. எல்லோருக்கும் இதுல முழு நம்பிக்கை வரணும்...."

"ஓ... ஆவி வரல்லைன்னா ங்க யாருக்கோ நம்பிக்கை இல்லைன்னு சொல்லிடலாம் இல்லையா?"   சந்துரு மறுபடியும்!

"சும்மா இரு சந்துரு!   இதை சாதாரணமா வீட்டுல வச்சு ட்ரை பண்ண .மாட்டாங்க தெரியுமா..?  கெட்ட சக்தி வீட்டுக்குள்ள வந்துடும்னு.."



"ஏய் தம்பி..  அப்போ என் ரூம்ல வச்சு மட்டும் செய்யலாமா?  நாங்க எப்படி அப்புறம் இங்க இருக்கறது?"

"ஏய்.. பல பேர் இருக்கற ரூம்ல அப்படி நடக்காதுப்பா..."

என்ன நியாயமோ!  

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்த நாகா, பாலுவைத் தேர்ந்தெடுத்தான்.  விபூதிப் பட்டையும், சாந்தமான முகமும் பாலுவுக்கு.

"ம்ம்..  இதை இங்க வைக்கிறேன்.  இதுல விரலை வச்சுக்கோ.."

கேரம்போர்ட் காயின் போலவும், தாயக் கட்டை போலவும் இருந்த ஒன்றை போர்டில் வைத்தான்.  சந்திராவை எதிரில் அமரவைத்தான்.

"நான் எதுக்குடா இங்கே?" சந்திரா நடுங்கினான்.

"ஒன்றும் ஆகாது.. உட்கார்.  பாலு!  மனதை ஒருமுகப் படுத்திக்கோ.. எல்லோருமே மனதை ஒருமுகப் படுத்துங்கப்பா..."

என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமலே எல்லோரும் தியானம் செய்வது போல அமர்ந்திருந்தனர்.

கொஞ்ச நேரம் அமானுஷ்யமாகக் கழிந்தபின், சந்திராவிடம் நாகா "உங்கள் தாத்தாவை மனசார நினைத்துக் கொண்டு கொஞ்ச நேரம் இருங்க சந்திரா... மனசார அவரை இங்கே கூப்பிடுங்க... அவரை நீங்க நம்பறேன்னு உணர்த்துங்க..."

"என்னடா திடீர் மரியாதை!" சந்திரா.

"ஷ்... கொஞ்ச நேரம் மரியாதை இல்லாமப் பேசாம எல்லோரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தே பேசுங்க.. ." -  நாகா.

ரொம்ப பில்டப் கொடுக்கிறானோ என்று தோன்றினாலும் சொன்னதைச் செய்தார்கள்.

"இப்போ ஏதாவது கேள்வி கேளுங்க சந்திரா...  வந்திருக்கறது யாருன்னு கேளுங்க"

கேள்விகள் கேட்கப்பட, கேட்கப்பட அந்த காயின் நகர வேண்டும்.  ஆனால் நகரவில்லை.   கொஞ்ச நேர முயற்சிகளுக்குப் பின், நாகா சட்டென்று வெளியில் சென்று, கொஞ்ச நேரத்தில் சிவநேசனுடன் வந்தான்.  சிவநேசன் விபூதி குங்குமத்துடனும், வெறித்த பார்வையுடனும் எப்போதுமே கொஞ்சம் மனநிலை பாதித்தவன் போல இருப்பான்.

"இவர் நல்ல மீடியம்.  பாலு!  நீங்க நகருங்க... சிவா! அப்படியே டேக் ஓவர் பண்ணிக்குங்க"

இப்போது அந்தக் காயின் நகர்ந்து 'பதில்' சொல்லத் தொடங்கியது! 

சந்திராவின் தாத்தா பிரதோஷம் என்று 'சபைக்கு'ப் போயிருப்பதாகச் சொல்லி, அவரை அறிந்தவர் என்று வேறு ஒரு ஆவி வந்திருப்பதாய்த் தகவல் சொன்னது.

சிவநேசன் காயினை நகர்த்த, நகர்த்த அவற்றை அருகிலிருந்து நாகா ஒரு பேப்பரில் என்ன பதில் வருகிறது என்று எழுதிக் கொண்டே வந்தான்.

நடுவில் நாகா திணறுவதைப் பார்த்த வகாப் "சிவா.. கொஞ்சம் மெல்ல நகர்த்துங்க... எழுத முடியலை" என்றான்.

நாகா, "ஹலோ... அவரா நகர்த்த்தறார்? அவர் கையில இல்லை கண்ட்ரோல்!  நான் பார்த்துக்கறேன் விடுங்க" என்றான்.

கேள்விகளுக்கு பதில் பொருத்தமாகச் சில வந்தாலும், நிறைய சம்பந்தமில்லாமல் இருந்தன.

"எனக்கு இந்த வருடம் டிரான்ஸ்பர் வருமா?' - பாலு.

"ஆமாம்.. வரும்"

"எங்கே?"

"கும்பகோணம்!" -  சிவநேசன் அறிந்திருந்த ஒரே பெரிய ஊர் கும்பகோணம் என்பது இரண்டு மூன்று பேர்களுக்கு ஞாபகத்துக்கு வந்தது!

இப்படியே சில கேள்விகள் கடந்ததும் ஜான்சன், வகாப், சந்துரு ஆகியோர் எக்குதப்பாய்க் கேள்விகள் கேட்கத் தொடங்கினர்.

"வந்திருக்கறது ஆவின்னு எப்படி நம்பறது?" சந்துரு.

"உன்னை ஓங்கி ஒரு அறை விட்டா நம்புவியா?" என்றது போர்ட். 

"சரி.." என்ற சந்துரு கன்னங்களை மூட, சிவநேசனின் கைகளுக்கு எட்டாமல் நகர்ந்தான்.

சட்டென நாகா திரும்பி சந்துருவை அறைந்தான்!  கையோடு "ஸாரி ப்ரதர்..  நான் ஏன் அடிச்சேன்?" என்று தன்னைத்தானே கேட்டும் கொண்டான்!

கடுப்பான சந்துரு, "டேய்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நாடகமாடறாங்கடா..." என்றபடி பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

இரண்டு நிமிடத்தில் சந்துருவின் குரல் கேட்டது. "டேய்.. கதவை ஏண்டா தாழ்ப்பாள் போட்டீங்க.. திறங்கடா"

"கதவைத் திறக்காதே"  நாகா அலறினான்.

"ஏன் நாகா?"

"நான் சொல்லலை... போர்ட் சொல்லுது"

"அடப் போடா..."  கதவருகே நகர்ந்தான் ஜான்சன்.

"உங்களால இப்போ கதவைத் திறக்கவும் முடியாது... சந்துருவும் இப்போ உள்ளே வரவும் முடியாது"

"ஏன்?" வகாப், ஜான்சன், பாலு, தேசிகன் குரலுடன் பாத்ரூமுக்குள்ளிருந்து சந்துருவின் குரலும் சேர்ந்து கொண்டது.

"லைட்டைப் போடுறா..."

"லைட் எரியவில்லைடா..."  ஸ்விட்சைத் தட்டிய பாலு அலறினான்.

"ச்சீ... கத்தாதே.. கரண்ட் இல்லை அஞ்சு நிமிஷமா... நாம மணிக்கணக்கா இதுல உட்கார்ந்திருந்ததுல இதைக் கவனிக்கல"
மணியைப் பார்த்தால் சுத்தமாக மூன்று மணி நேரம் ஓடியிருந்தது தெரிந்தது.

"இன்னும் பத்து நிமிஷத்துக்கு அவனால் உள்ளே வர முடியாது.  அதுதான் நீங்கள் கேட்ட நிரூபணம்!"  சிவநேசன் கையை விட்டு காயின் தெறித்து விழுந்தது.

"அய்யய்யோ... நாம விடை கொடுக்காமலே ஆவி போய்விட்டது.  சொல்லிக்காமலேயே போய்விட்டது"  அலறினான் சிவநேசன்.


"போகட்டும். நல்லதாப் போச்சு"

"அப்படிப் போகக் கூடாதுடா...  அப்புறம் அது இங்க அடிக்கடி வர ஆரம்பிச்சுடும்.  அதைக் கோவப்படுத்திட்டீங்க" என்றான் நாகா.
"போடா... சந்துருவை இப்போ வெளியே வரவைக்கிறேன் பார்க்கறியா?"

கேட்டதோடு இல்லாமல் கதவைத் திறக்கவும் செய்தனர்.  கதவை உள்பக்கமாகத் தள்ளினர். உள்ளேயிருந்த சந்துருவும் கதவை இழுக்க, வகாப் கதவைத் தள்ளினான்.  முடியவில்லை.  ஜான்சனும் சேர்ந்து தள்ளினான்.  ஊ...ஹூம்!  மற்றவர்களும் இப்போது சேர்ந்து தள்ளினர். 

திறக்கவே இல்லை.  

நிமிடங்கள் கரைய கொஞ்சம் கொஞ்சமாக பீதி ஏறியது அவர்கள் முகத்தில்.

"சந்துரு... சந்துரு..." திடீர் சந்தேகம் ப்ளஸ் பயத்துடன் ஒருவன் குரல் கொடுத்தான்.

"ச்சே... இங்கதாண்டா இருக்கேன்.  கதவத் திறங்கடா.. தாழ்ப்பாளை எடுத்துட்டுத் திறங்கடா!" சந்துரு கூவினான்.

தாழ்ப்பாள் போடவே இல்லையே.. எங்கே திறக்க?

பத்து நிமிடம் கழிந்ததும் கதவு சட்டென விடுபட்டுத் திறந்தது.

"என்னடா இது?  எப்படிடா?"

"சில விஷயங்களை நம்பணும்.  சரி விடு.. இதுக்கு மேல இது பற்றியெல்லாம் பேச வேண்டாம்.. படுத்துக்கலாம்" என்றபடி போர்டை எடுத்துக் கொண்டு நாகா சிவநேசனுடன் வெளியேறினான்.


எல்லோரும் படுக்கச் சென்றனர், இந்தக் கதை இங்கு முடியவில்லை என்பதை அறியாமல்!





                                                                                                                                           ( தொடரும் )





படங்கள் : இணையம். 

திங்கள், 22 ஜூன், 2015

'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை

         
தேவையான பொருட்கள்: 
   

கடலை பருப்பு : கால் கிலோ . 
நெய் : நூறு மி லி 
அரிசி அரை கிலோ 
தேங்காய் ஒரு மூடி. 
சர்க்கரை : கால் கிலோ.
முந்திரி பருப்பு: ஐம்பது கிராம்.
பச்சைக் கற்பூரம் : சிறிதளவு.
            
கடலை பருப்பை சிறிதளவு நெய் விட்டு வறுத்து எடுத்துக்கொண்டு, தண்ணீரில் வேகவைக்கவும்.
            
கடலைப் பருப்பு வெந்ததும், அரிசியைக் கழுவிக் களைந்து போடவும். 
           
அரிசி முக்கால் அளவுக்கு வெந்ததும், தேங்காயைத் துருவி, சர்க்கரையுடன் கலந்து, கொட்டிக் கிளறவும். 
             
எல்லாம் நன்றாக வெந்ததும், லேசாக வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த் தூள், பச்சைக்கற்பூரம், நெய் சேர்த்து, நன்றாகக் கிளறி, இறக்கிவிடவும். 
              
நன்றாக ஆறியபின் எல்லோரும் பங்கு போட்டு சாப்பிடுங்கள். 
        கடலைப் பருப்பில் உள்ள சத்துக்கள் என்ன? இதோ பட்டியல்: 

பின் குறிப்பு: சர்க்கரை சிலருக்கு ஆகாது. அவர்கள் பொங்கடலை சாப்பிடக்கூடாது. 
     

ஞாயிறு, 21 ஜூன், 2015

ஞாயிறு 311 :: யோகா

               
      
இது என்ன யோகா? 
           
பொதுவாக யோகா பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? 
  
கமெண்ட்டுங்க! 
           

சனி, 20 ஜூன், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.




1) நம் நாடு, நம் சுத்தம் நம் கைகளில்.  நாமே தொடங்குவோம், அடுத்தவரை எதிர்பார்க்காமல்.  பெனடிக்ட் ஜெபக்குமார்.
 


2) அவர்களையும் சமூகத்தில் ஒரு அங்கமாகக ஒரு புதிய ஐடியா!
 


3)  இது போல ஆட்டோ ஓட்டுனர்கள் அடிக்கடி கண்ணில் தென்பட ஆரம்பித்திருப்பது சிறப்பு.  தயாசங்கர் யாதவ்.
 


4) ஓய்வு என்பது கிடையாது ஆசிரியர்களுக்கு.  சேவை உள்ளம் கொண்ட ஆசிரியர்களுக்கு!
 


5) 25 பேர்களை மரணத்திலிருந்து காப்பாற்றி விட்ட சத்பால் மகல்.  ஆனால்?
 


6) வாசீம் மேமோன்.  இவரின் வித்யாசமான முயற்சி என்ன?  அதுவும் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையைக் கூட விட்டு விட்டு?  பாருங்களேன்!


வெள்ளி, 19 ஜூன், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை?

                 

                         
ஏதோ சொல்ல நினைத்திருக்கின்றார்கள் .....   ஆனால்?
                 
சொன்ன கதை புரியவில்லை!
               

செவ்வாய், 16 ஜூன், 2015

நூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்!


எப்போதுமே பையில் பணம் கொஞ்சமிருக்கும்.  சுமாராக எவ்வளவு கைவசம் வைத்திருக்கிறோம் என்று ஒரு ஐடியாவும் இருக்கும்.



                               Image result for money in shirt pocket images            Image result for money in shirt pocket images


அதை நம்பி, சமீபத்தில் கடைத்தெருவில் வந்து பையில் கை விட்டுப் பார்த்தால் சில பத்து ரூபாய்கள் மட்டுமே இருந்தன.  அதிர்ச்சியாய் இருந்தது.  எங்காவது விழுந்திருக்குமா என்றும் யோசனை.  ஏ டி எம் கார்டும் கொண்டு வரவில்லை. 

 

வெட்டியாய்த் திரும்பி வீடு வந்தேன். ஏதோ, அதற்காவது பையில் காசு இருந்ததே என்ற நிம்மதியோடு!  கிளம்புமுன் பார்த்துக் கொண்டு கிளம்பியிருக்கலாம்தான்.  ஆனால் இதற்காக என்று கிளம்பவில்லையே... எங்கோ வந்து, கடைக்குச் சென்று...
 

வீட்டில் கேட்டால் முதலில் யாரும் எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டார்கள்.  ஆனால் அப்புறம் ஒவ்வொருவராக நான் ஒரே ஒரு தரம் மட்டும் ஐம்பது எடுத்தேன், நூறு எடுத்தேன், ஐநூறு எடுத்தேன் என்று சொல்ல, எரிச்சல்தான் வந்தது!
 

வீட்டில் இந்த விசாரணையின்போது கூட இருந்த விசுவேஸ்வரன் (மாமா) தனது அப்பா - என் தாத்தா  - பற்றி  இதே போன்றதொரு சம்பவத்தைச் சொன்னார்.


                                                                                     Image result for grand father clip art images


தாத்தாவுக்கு பஜ்ஜி, போண்டா போன்ற சிறு தீனிகள் மீது கொள்ளைப் பிரியம்!  போஜனப்பிரியர்.  ரசிகர்.  இவர் வேலை பார்க்கும் ஊருக்கு தாத்தா வந்திருந்த சமயம்...
 

"விசு... என்கிட்டே ஒரு நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்து வை.  நான் முடிந்தவரை அதைச் செலவு செய்யாமல் வைத்திருக்கிறேன்" என்றாராம்.
 

தாத்தாவின் பஜ்ஜி, போண்டா ஆசை தெரிந்திருந்த மாமா அவரிடம் நூறு ரூபாய்க் கொடுத்து வைத்திருக்கிறார்.
 

அப்புறம் அவ்வப்போது, அல்லது ஒவ்வொரு நாளும் தாத்தா வீட்டிலிருக்கும் குழந்தைகளை அழைப்பார். 
 

"டேய்... விசு சட்டைப்பையிலிருந்து காசு எடுத்துக் கொண்டுபோய் முனைக்கடைலேருந்து வடை வாங்கி வாடா..."


                Image result for bajji, bonda images            Image result for bajji, bonda vadai images


"டேய்... விசு சட்டைப் பையிலிருந்து காசு எடுத்துப்போய் பகோடாவும், அல்வாவும் 100 கிராம் வாங்கி வாடா..."
 

கடைசியில் விசுவிடம் சொல்வாராம், "பார்! நீ கொடுத்த 100 ரூபாயைச் செலவு செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறேன்"
 

எப்படிச் செலவாகும்? 
 

அதே கதைதான் எனக்கும் வீட்டில் நடந்திருந்திருக்கிறது!

 
தாத்தா பற்றி சொல்ல நிறையவே சுவாரஸ்யமான விஷயங்கள் உண்டு.  உதாரணத்துக்கு ஒன்று.


ஒரு சமயம் தாத்தாவிடம் என் நண்பர் கொடுத்த 'பிண்டத்தைலம்' என்ற ஒன்றைக் கொடுத்து கால், கை வலி இருந்தால் இந்த எண்ணெயை கொஞ்சம் கற்பூரம் கலந்து இலேசாக சூடு செய்து காலில் தடவி உருவி விடுங்கள்.  வலிக்குக் கேட்கும்" என்று சொல்லி விட்டு வந்தேன்.


                             Image result for pinda thailam images                           Image result for pinda thailam images


அடுத்த வாரம் சென்று பார்த்தபோது பாட்டிலில் பாதி காலியாயிருந்தது. 
 

"என்ன தாத்தா...  கால் வலி பரவாயில்லையா?"
 

"என்னடா இது! கால்வலி குறையவே இல்லை..  நானும் தினமும் நீ சொன்ன மாதிரி இந்த மருந்தை ஒரு மூடி குடிக்கிறேன்" என்றாரே பார்க்க வேண்டும்.
 

அதிர்ந்துபோய், 'கடவுளே.. நல்லவேளை வேறு ஒன்றும் விபரீதமாகவில்லை' என்று நினைத்து, அவரிடம் அதை உபயோகிக்கும் முறையை விளக்கினேன்.  அவருக்கே சிரிப்பு வந்து விட்டது.
 

எதற்கு வம்பு என்று தைலத்தை நான் தூக்கி வந்து விட்டேன்.