செவ்வாய், 25 ஜூலை, 2017

கேட்டு வாங்கிப்போடும் கதை :: ராமனை மன்னித்த சீதை - மஞ்சுசம்பத். - சீதை 14





     சீதா - ராமன் கதையில் இந்த வார்க்க கதை மஞ்சுபாஷிணி சம்பத்குமார் எழுதியது.




=========================================================




ராமனை மன்னித்த சீதை 
மஞ்சுசம்பத் 



”சீதா இன்னுமா தூக்கம் எந்திரி… எனக்கு சீக்கிரம் டிபன் செய்து கொடு, லஞ்சுக்கு என்ன செய்யப்போறே?” என்றுக்கேட்டுக்கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தான் ராமன் நம் கதையின் ஜீ(ஹீ)ரோ.


கண்ணுக்குள் கண்ணாடித்துகளை வைத்து தேய்த்தது போன்ற எரிச்சலுடன் கண் விழிக்கமுடியாமல் அவஸ்தையில் நெளிந்தாள் சீதா.


“இன்னும் எந்திரிக்காம படுத்துக்கிட்டு இருந்தா இன்னைக்கு எல்லா வேலையும் உருப்பட்ட மாதிரி தான்” என்று முணுமுணுத்துக்கொண்டே எழுந்தாள் சீதா.


”ம்க்கும் இவருக்கு மட்டும் வாரத்துல ரெண்டு நாள் லீவு. எனக்கு என்னடான்னா வாரமுச்சூடும் ஆபிசிலயும் மாங்கு மாங்குனு உழைச்சிட்டு பஸ்ஸுல அல்லாடிக்கிட்டு உட்கார இடம் கூட கிடைக்காம நின்னுக்கிட்டே வீடு வந்து சேர்ந்தா, கிச்சனே போர்க்களம் மாதிரி இருக்கும்.  பசியோட வர எனக்கு சாப்பிட ஒன்னும் இல்லன்னா கூட பரவாயில்ல, ஆனா ஒத்தாசையும் கிடையாது, உபத்திரவமும் அதிகம் தான் “


சீதாவின் முணுமுணுப்பு ஓயவில்லை.


வேகமாக சென்று வீட்டின் பின்புறம் தோட்டப்பக்கம் சென்று வாய் கொப்பளித்துவிட்டு இட்லி மாவை ஊற்றி இட்லி குக்கரில் வைத்துவிட்டு ஃப்ரிட்ஜ் திறந்து தேங்காயை தேடினால் கிடைக்கவில்லை. அப்போது தான் நினைவுக்கு வந்தது. “ ஐயோ நேத்தே பஸ் விட்டு இறங்கும்போது வாங்க நினைச்சேன் மறந்துட்டேன். இனி இவருக்கு மிளகாப்பொடி இறங்காது. ஹூம் வெங்காய சட்னி தான் செய்யனும் போல இருக்கு “ என்று வேலைகளுடன் சீதா ஒன்றி பரபரவென்று இயங்கினாள்.


புதுமாப்பிள்ளை போல் பர்ஃப்யூம் மணக்க ராமன் டிபன் சாப்பிட வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். சீதா வேர்க்க விறுவிறுக்க தட்டெடுத்து வைத்து இட்லியுடன் வெங்காய சட்னி வைத்ததும் ஆச்சர்யமாக நோக்கினான். “ எப்பவும் வெரைட்டியா செய்யச் சொன்னா சலிச்சுக்குவியே இப்ப எப்படி? “ என்பது போலிருந்தது அவன் பார்வை.


ராமனின் பார்வையில் இருந்த கேலியை உணர்ந்தும் அதற்கு பதில் தர அவகாசம் இல்லாமல் தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு தானும் தயாரானாள்


வேலைக்கு செல்ல. ராமன் கிளம்பிய அரை மணியில் தானும் சாப்பிட்டேன் என்று பெயருக்கு ரெண்டு விள்ளல் இட்லி விண்டு வாயில் போட்டு தொண்டை அடைக்காமல் இருக்க ஒரு கிளாஸ் நீரையும் முழுங்கி விட்டு ஓடினாள் பஸ் ஸ்டாண்டுக்கு.


அவள் ஏற வேண்டிய பஸ் எப்போதும் போல் நிறைமாத கர்ப்பிணி போல் வந்து பெருமூச்சுடன் நிற்பது போல் நின்றது.


உடனே கூட்டத்துடன் கூட்டமாக முண்டி ஏறி நின்று டிக்கெட் வாங்கிவிட்டு காற்றோட்டம் கிடைக்குமா என்று வெறித்து நோக்கினாள் வெளியே.



வைகுண்டத்தில்….

விஷ்ணுவின் ஏகாந்தத்தில் மயங்கி கால் பிடித்துக்கொண்டிருந்த லஷ்மி விஷ்ணுவின் உதடுகள் என்னவோ சொல்வதை கேட்டு கால் பிடிப்பதை நிறுத்திவிட்டு,


“ என்ன தனியா சிரிச்சிட்டு இருக்கீங்க?” என்று கேட்டதும் விஷ்ணு சிறு அதிர்ச்சியை முகத்தில் படரவிட்டு “ என்ன தேவி தூய தமிழல்லாது சென்னை தமிழில் பேச ஆரம்பித்துவிட்டாய்? “ என்றதும் லஷ்மி புன்முறுவலுடன் “கதைப்படிப்போருக்கு கொஞ்சம் ஈசியா இருக்கட்டுமேன்னு தான் ஸ்வாமி “ என்றதும்,


“ என்ன இப்போது ஆங்கிலமும் கலந்துவிட்டாயா?”


"வேற வழி? ஊரோடு ஒத்து வாழ வேண்டாமா?"


"என்ன தேவி ரொம்பவே சலிச்சுக்கிறே?"


”அப்படி வாங்க வழிக்கு.. நீங்களும் என்னைப்போலவே பேச ஆரம்பிச்சுட்டீங்கதானே?”


”வேற வழி ? ஊரோடு ஒத்து வாழ வேண்டாமா ”என்று சொல்லி விஷ்ணு சிரிக்க,


”என்னை கிண்டல் செய்து சிரிச்சது போதும்,  இப்ப என்னவோ உங்களுக்குள்ளயே பேசிக்கிட்டீங்களே என்னது அது?” என்று விடாமல் லஷ்மி கேட்க,


“ அதுவா ஒரு பெண் சீதான்னு வீட்டில் ரொம்ப உழைக்கிறா…  ஆபிசுலயும் உழைக்கிறா…  அவ புருஷன் ஒரு ஒத்தாசையும் கிடையாது பாவம். ரொம்ப அல்லாடுகிறாளே. ராமனுக்கு புரியவைப்போமா சீதா படும் அல்லல் என்று நினைத்தேன்.” என்று சொல்லி நிறுத்த,


“ அதானே பார்த்தேன், நான் சீதா வாக இருந்தப்ப, யாரோ என்னவோ சொன்னான்னு என்னை ஒதுக்கிவைத்த மனிதர் தானே நீங்க?


”பெண்கள் என்றாலே கிள்ளுக்கீரை தான் ஆண்களுக்கு ”என்று மூக்கு சிந்த ஆரம்பித்துவிட்ட லக்‌ஷ்மியை பார்த்துக்கொண்டே


“ நாராயண நாராயண என்ன இது எனக்கு வேலையே இல்லாம பண்ணிடுவீங்க போலிருக்கே ரெண்டு பேரும்? நியாயமா நான் தானே எல்லா வீட்டுலயும் கலகத்தை ஆரம்பித்து வைப்பேன். இப்ப என்ன புதுசா ரெண்டு பேரும் நீங்களே ஆரம்பிச்சுட்டீங்க “  என்று சிரித்துக்கொண்டே நாரதர் உள்நுழைய,


“ நீ மட்டும் தான் குறை… இதோ வந்துட்டியா இருக்கிற பிரச்சனை பத்தாதுன்னு ஊதி பெரிசாக்க?” என்று விஷ்ணு சொல்லி சிரித்தார்.


“ நீயோ சொல் நாரதா...  பெண்களை இந்த ஆண்கள் குறைவாய் நினைக்கிறார்களா இல்லையா? “


“ ஆம் தேவி…”


“ நாரதா… நீயா இப்படி சொல்கிறாய்? நீயும் ஆண் தான் நினைவில் வைத்துக்கொள்”


“ ஐயோ சாரி தேவி… நான் விஷ்ணுவின் கட்சி”


“ இது சரிப்படாது.. நான் சீதாவை வைத்தே ராமனை எப்படி வழிக்கு கொண்டு வருகிறேன்னு பாரு” என்று லஷ்மி கூக்குரலிட..


” நீ சபதம் போட்டால் நானும் பதில் சபதம் போடுவேன், உனக்கெதிரா மல்லுக் கட்டுவேன்னு மட்டும் நினைச்சுடாதே… இம்முறை நான் உன் பக்கம் தான் “ என்று விஷ்ணு சொல்ல,


லஷ்மி ஆச்சர்யத்துடன் நோக்கினார்.


“ என்ன ப்ரபு சொல்றீங்க?”


”ஆமாம் சீதாவின் அருமை அவள் கணவன் ராமனுக்கு தெரியவைப்போம்.”


“ நாராயண…. அப்ப எனக்கு வேலையே இல்ல இங்க.. சரி கைலாயம் போவோம், நாராயண….” நாரதர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்.


பூலோகில்.



சீதா அன்றும் என்றும் போல் உடல் மனம் தளர்ந்து வீட்டுள் நுழைய முற்படும்போது உள்ளே விளக்கெரியாதது கண்டு ஆச்சர்யத்துடன் லைட் ஆன் செய்து பார்த்தபோது ராமன் எங்கோ வெறித்து நோக்கியபடி உட்கார்ந்திருப்பதை பார்த்து ஆபிசில் ஏதோ நடந்திருக்கும் போலிருக்கும் என்று நினைத்து…


“ என்னங்க ஒருமாதிரி உட்கார்ந்திருக்கீங்க. உடம்பு முடியலையா? தலை வலிக்கிறதா? தைலம் தேய்த்துவிடட்டுமா? காபி கொடுக்கட்டுமா ? என்று கரிசனத்துடன் கேட்ட மனைவியை கண்ணீர் மல்க ஏறிட்டு பார்த்தான் ராம்.


“ சீதா, இன்று என்ன நடந்தது தெரியுமா ?” என்று கேட்க,


” தெரியலையேங்க. ஆனா நான் பஸ்ல வரும்போது அண்ணாசாலைப்பக்கம் போகவேண்டிய வண்டி எல்லாம் திருப்பி விட்டாங்க” என்னன்னு கேட்டதுக்கு திடிர்னு ரோடு பள்ளமாகி ஒரு காரும் ஒரு பஸ்ஸும் மாட்டிக்கிச்சாமே” என்று சொன்னாள் சீதா.


“ அந்த கார் என்னுடைய ஆபிசு கார் தான் சீதா. “ என்று ராம் சொன்னதும் அதிர்ச்சியாக நோக்கினாள்.


“ என்னங்க சொல்றீங்க? “


” ஆமாம் அதிர்ஷ்டவசமா நான் தப்பிச்சேன். இன்னைக்கு நான் போயிருந்திருக்கவேண்டிய காரில் திடிர்னு மானேஜருடைய மூட் மாறி எனக்கு பதிலாக ராஜேஷை போகச்சொன்னார். “


“ ஐயோ ராஜேஷுக்கும் டிரைவருக்கும் ஒன்னும் ஆகலையே “ என்று பதறிய சீதாவை நோக்கிய ராமன்,


“ நீ ரொம்ப நல்லவ சீதா… உன் மனசு எத்தனை மென்மை. யாருக்கும் தீங்கிழைக்காத நல்ல உள்ளம் உனக்கு. உன்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தி இருந்திருக்கேன். ஆனா எதையும் நீ மனசுல வெச்சுக்காம எனக்கு அன்பா பணிவிடை செய்திருக்கே. நான் உன்னை ஒரு மனுஷியா கூட நடத்தல. என்னடா இவன் திடிர்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி உளறுகிறானேன்னு பார்க்கிறியா? இந்த உடம்புல உயிர் இருக்குறவரைக்கும் தான் நம்ம ஆட்டமெல்லாம். உடலை விட்டு உயிர் போனப்பின்னாடி ஹும்ம் ”என்று நிறுத்தினான் ராம்.


“ உடல்ல உயிர் இருந்தா மட்டும் போறுமாங்க?  நம்ம உடல் ஆரோக்கியமா
தெம்பா இருக்கிறவரைக்கும் தான் இந்த திமிரும் அகம்பாவமும், பொறாமையும் பிடித்து அலைகிறோம். உடல் தளர்ந்து வயதாகி தனியா நிற்கும்போது துணை தேடும் மனசு… நாம் செய்ததெல்லாம் நினைத்து மறுகுவோம். நல்லவேளை நீங்க இப்பவாவது உணர்ந்தீங்களே அதுவே போதும் எனக்கு. இன்னைக்கு பால் பாயாசம்
வைக்கப்போறேன்” என்று சொல்லி சந்தோஷமாக திரும்பிய சீதாவின் கைகளைப்பிடித்துக்கொண்டு 



“ சீதா இத்தனை நாள் உன் அருமை தெரியாமல் உன்னை கஷ்டப்படுத்தினதுக்கு என்னை மன்னிப்பியா? “ என்று கெஞ்சிய ராமன் கைகளிலிருந்து தன் கைகளை விடுவித்துக்கொண்டு ஆதரவாய் ராமன் கைகளை பிடித்துக்கொண்டு கருணையோடு அவன் கண்களை உற்று நோக்கினாள் சீதா.



வைகுண்டம்



சீதாவின் மலர்ந்த முகமும் ராமனின் மன்னிப்பையும் மனம் நிறைவாய் கண்டு சந்தோஷித்தனர் வைகுண்டத்தில் விஷ்ணுவும் லக்‌ஷ்மியும். கதை எப்படி முடிக்கணுமோ அப்படியே முடிக்கட்டும்.. சீதா ராமனை மன்னிக்கட்டும். நாமும் இளைப்பாறுவோம் என்றனர் விஷ்ணுவும் லக்‌ஷ்மியும்…


பூலோகம்



சீதா ராமனை மன்னித்தாள்.




தமிழ்மணத்தில் இங்கே க்ளிக்கி வோட் பண்ணலாம்!

25 கருத்துகள்:

  1. ஆஹா! தவறைப் புரிந்து திருந்தியவரை மன்னித்துத் தானே ஆக வேண்டும். நல்ல கதைதான். :)

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமா எடுத்துட்டு போயிட்டு வேகமா முடிச்சிட்டீங்க?

    பதிலளிநீக்கு
  3. //இந்த உடம்புல உயிர் இருக்குறவரைக்கும் தான் நம்ம ஆட்டமெல்லாம். உடலை விட்டு உயிர் போனப்பின்னாடி // சூப்பர்! :-))

    பதிலளிநீக்கு
  4. ஆஹா மஞ்சு ஜி எழுதிய கதை. ரொம்ப நாளா ஆளையே காணோம்!

    கதை நன்று.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் மேடம் நலமா ?
    மாறுபட்ட கோணத்தில் கதை நகன்றது அருமையாக இருந்தது.

    இருந்தாலும் தொடக்கத்திலேயே ஹீரோவை ஜீரோ என்று காலை வாரிவிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    நாயகி பழைய மோடல் போல ஆகவே பால் பாயாசம் வைக்கிறாள் இன்றைய காலத்து பெண்கள் என்றால் பால் பாய்சன் வைத்து கொடுப்பார்கள்.

    மேடம் தொடர்ந்து எழுதுங்க.... உங்க கடைப்பக்கம் வந்தால் பூட்டியே இருக்கு - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  6. அருமையான கதை.
    லக்ஷ்மியும், விஷ்ணுவும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து ராமனை சீதையின் அருமையை உணர வைத்து விட்டார்கள்.
    வாழ்த்துக்கள் மஞ்சு.

    பதிலளிநீக்கு
  7. நல்ல காமெடியாகக் கொண்டு போய் சீதாவின் யதார்த்த வாழ்வின் கஷ்டத்தையும் சொல்லி. ராமன் தனக்கு ஏற்படவிருந்த விபத்தை எண்ணி நினைத்துத் திருந்துவதாகச் சொல்லி சீதா மன்னித்துவிட்டாள் என்று டக்னு முடித்ததும் நன்றாகத்தான் இருக்கிறது. சகோவுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்!

    கீதா: மஞ்சு!! நினைவிருக்கிறதா??!!! ரொம்ப நாளாச்சு!! நாம நேரில் சந்தித்திருக்கோம் புலவர் ஐயா வீட்டில்!!

    ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க!! ரொம்ப ரசித்து வாசித்தேன். அது சரி ராமனை எடுத்த எடுப்பிலேயே ஜீரோனு சொன்னதை நினைத்து சிரித்துவிட்டேன். அப்படிப் போடுங்க மஞ்சுனு வேற மனசுக்குள்ள சொல்லிக்கிட்டேன்!! ஹஹஹ்ஹ.. வித்தியாசமான கோணத்துல இடையில விஷ்ணு, லக்ஷ்மினு மேலோகம்எல்லாம் கூட்டிட்டுப் போயி..லஷ்மி விஷ்ணுவுக்குள்ள கூட நிறைய விஷயங்கள் இருக்கே...லஷ்மி விஷ்ணுவை மன்னிக்க...ஹஹஹ் .ரசித்தேன்....சிரித்தேன்....லஷ்மி கூட முக்கைச் சிந்தினாள்னு சொல்லிட்டு சீதா மூக்கைக் கூடச் சிந்தாமல் மன்னித்ததாக முடிச்சுட்டீங்க!!ஹ்ஹஹ இந்தவிதமான நகைச்சுவை இழையோட கதை சொல்லி மன்னித்தலும் கூட நல்லாத்தான் இருக்கு...வாழ்த்துகள் மஞ்சு!!!

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமான சிந்தனை....கதை அருமை....

    ஆனாலும் ராமன் மனம் திருந்திய காரணத்தையும்.... விபத்து நிகழ்வை இன்னும் சற்று விரிவாக எழுதி இருக்கலாமோ...என்ற எண்ணம் வருகிறது...

    பதிலளிநீக்கு
  9. முன்பே ஒரு முறை பின்னூட்டத்தில் கண்ட்ரைவ்ட் ஃபினிஷ் ஆனால் எங்கோ விடு பட்டது பொல் செயற்கையாக இருக்கும் சீதை ராமனை மன்னிக்கிறாளோ இல்லையோ நாம் மன்னிப்போம் ராமனையும்சீதையையும்

    பதிலளிநீக்கு
  10. கண்ணுக்குள் கண்ணாடித்துகள் வைத்து தேய்ப்பது போல எரிந்தது நல்ல உவமை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  11. சீதா கொஞ்சம் கண்ணீர் விட்டு மூக்கைச் சிந்தி ராமன் திருந்துவதை இன்னும் கொஞ்சம் ஒரு எமோஷனல் ட்ராமா போட்டுருக்கலாமோ ஹஹஹ்ஹ். ஏன்னா பொதுவாகவே எமோஷனல்னா மக்களும் மனம் நெகிழ்ந்து கனத்து என்று... சீரியல் எல்லாம் பாப்புலர் ஆகுதுனா அதுதானே காரணம்...ஹிஹிஹி...சென்ற வார தாட்சாயிணிக்கும் இதைச் சொல்ல நினைத்து விட்டுப் போனது...

    ஆனா ரசித்துப் படித்தேன் என்பது வேறு....அதுவும் சிரித்துக் கொண்டே...

    கீதா...

    பதிலளிநீக்கு
  12. ஆஹா.............. மஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ.............................

    நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் இங்கு தரிஸனம் செய்ததில் மகிழ்ச்சி.

    மஞ்சு, உன் கதை பஞ்சு மிட்டாய் போல இனிப்பாக உள்ளது. வாழ்க ! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  14. பெண்கள் என்றாலே கிள்ளுக்கீரைதான் மூக்கை சிந்த ஆரம்பித்துவிட்ட லக்ஷ்மி. ஓஹோ மேல்லோகத்திலும் இதே நிலைதானா.. ஆனால் உங்க சீதா கற்பனை அருமையாக இருக்கிறது மேல்லோகமும்,கீழ்லோகமும். பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது, மஞ்சு. உயிர் பயத்தினால் ராமன் திருந்திவிட்டானோ? அங்குதான் கொஞ்சம் இடிக்கிறது, கதை. வித்தியாசமாக ஏதோ வரப்போகிறது என்று நினைத்துக் கொண்டே படிதத்தால் கொஞ்சம் ஏமாற்றம்.

    பூலோகம், மேல் லோகம் எல்லாவற்றிலும் பெண்கள் மூக்கைச் சிந்துவார்கள் போல!
    பாராட்டுகள், மஞ்சு. நீண்ட நாட்களுக்குப் பின் உங்களை இங்கு பார்க்க நேர்ந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. //இன்றைய காலத்து பெண்கள் என்றால் பால் பாய்சன் வைத்து கொடுப்பார்கள்.

    :-)

    பதிலளிநீக்கு
  17. ஆக, ராமன் மன்னிக்கப்பட வேண்டியவன் என்பது ஏற்கப்பட்டு விட்டது. ஹ்ம்ம் என்ன குற்றம் செய்தானோ?

    பதிலளிநீக்கு
  18. ராமன் திருந்துவது, வைகுண்டத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வேலையா ?இப்படி நினைத்தால் எந்த ராமனும் திருந்த வாய்ப்பில்லை :)

    பதிலளிநீக்கு
  19. யதார்த்த டிராமா. விஷ்ணு, லக்ஷ்மி எல்லாம் வந்துவிட்டார்களே
    மஞ்சு மா. ஸ்ரீராமுக்கு ஒரு வேண்டுகோள். ராமனை விட்டு விடலாமா. பாவம் பா.
    அவன் பெயரில் மனிதர்கள் செய்யும் தப்புக்கு அவனை இழுப்பானேன்.
    மஞ்சுவைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  20. அழகு.. அழகு..
    அன்பின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  21. அன்பு வணக்கங்கள் அனைவருக்கும். எனக்கே கதை படிக்கும்போது அப்படி தான் இருந்தது. என் கதை மொக்கைன்னு எழுதி முடித்ததுமே தெரிந்தது, ஆனால் சமயம் இல்லை. வேலைப்பளு ஒரு பக்கம், யோசிக்கும் திறன் குறைந்து விட்டது. ஆனாலும் என்னை விட்டுக்கொடுக்காமல் அன்புள்ளங்கள் மஞ்சுக்கு அன்பை நிறைத்து கொடுத்ததை நன்றியுடன் நினைத்துக்கொள்வேன். கண்டிப்பாக எழுத ஆரம்பித்ததும் நல்ல கதையோடு வருவேன் என்ற உறுதியுடன் மனம் நிறைந்த அன்பு நன்றிகளுடன் கூடிய வணக்கங்கள்பா எல்லோருக்கும். எல்லோரையும் சந்தித்த சந்தோஷம் எனக்கு. நண்பர்கள் எல்லோரும் என்னை இன்னமும் நினைவில் வைத்திருப்பதை ஆசிர்வாதமாக நினைக்கிறேன். வாய்ப்பு கொடுத்த ஸ்ரீராமுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!