செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம் - பரிவை சே. குமார்




மஞ்சநெத்தி பூ வாசம்

பரிவை சே. குமார்




"ன்ன பெரியய்யா எப்பப் பார்த்தாலும் உங்கப்பத்தாவைக் காதலிச்சித்தான் கல்யாணம் பண்ணினேன்னு சொல்றீங்க... சும்மா கதை விடாதீங்க... அந்தக் காலத்துல சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிருப்பாங்க... அப்புறம் எப்படி காதல்...? நான் காதலிச்சேன்... நான் காதலிச்சேன்னு சும்மா உதார் விட்டுக்கிட்டு...” இடுப்பளவு தண்ணியில் நின்று கொண்டு பக்கத்தில் துண்டை வைத்து முதுகில் வரட்... வரட்... என்று இழுத்து அழுக்குத் தேய்த்துக் கொண்டிருந்த வீராசாமியிடம் சிரித்தபடியே கேட்டான் கண்ணன்.

"அடேய் ஒங்கப்பத்தாவ நா விரும்பித்தான் கட்டிக்கிட்டேன்... இத ஒனக்கிட்ட பல தடவ சொல்லிட்டேன்... எங்க கத ஊருக்கே தெரியும்... இப்ப எதுக்கு அத இழுக்கிற..."

"அது உண்மையான்னு எனக்கு டவுட்டா இருக்கு... அதான்..."

"ஒங்கப்பத்தா இருந்தா உண்மயா இல்லியான்னு அவகிட்ட கேட்டுக்கன்னு சொல்லுவேன்... மவராசி அவ போயிச் சேந்துட்டா... நா அவள விரும்புனதுக்கு இந்தாக் கம்மாய்க்குள்ள நிக்கிறாரே இந்த முனியய்யாதான் சாச்சி..." என்றபடி தண்ணிக்குள் மூழ்கினார். மீண்டும் எழுந்து மீண்டும் மூழ்கி என நாலைந்து தடவை மூழ்கி எழுந்து துண்டை அவிழ்த்து அலசி பிழிந்து தலையைத் துவட்டினார்.

"நீ கரயேரலயா...? தண்ணிக்குள்ளயே கெடக்குறே... ஏம் பேத்தியாளுக எவளும் வாரேன்னு சொன்னாளுகளா...?"

"ம்... என்ன உங்களைக் கேலி பண்றேன்னு என்னைய திருப்பி அடிக்கிறீங்களா..?" என்றபடி அவனும் கரையேறினான்.

"உங்க காதல் கதையைச் சொல்லுங்க பெரியய்யா..." என்றபடி அவரோடு நடந்தான்.

"இப்ப எதுக்கு அதயே திருப்பித் திருப்பிக் கேக்குற..? ஒனக்கு அது மாரிக்க எதுவும் இருக்கா... இல்ல ஆச வந்திருச்சா..."

"ஆமா... என்னைய லவ் பண்றேன்னு வரிசையில நிக்கிறாளுங்க... அறுபது வருசத்துக்கு முன்னால இந்தக் கிராமத்தில ஒரு காதல் கதை நடந்திருக்கு... வயக்காடு, கம்மாய், கோயில்லுன்னு வித்தியாசமான காதலா இருந்திருக்குமே... எப்பப் பாத்தாலும் விரும்பிக் கட்டுனேன்... விரும்பிக் கட்டுனேன்னு சொல்றீங்க... முழுக்கதையும் சொல்ல மாட்டேங்கிறீங்க... நாளைக்கே படக்குன்னு பொயிட்டா.... உங்க கதை எங்க தலைமுறைக்குத் தெரியாமப் போயிடும்ல்ல... அதான் கேக்குறேன்...."

"அடப்பாவி என்னய கதயச் சொல்லிட்டு சீக்கிரம் போய்ச் சேருடான்னு சொல்றியா...?"

"எப்ப இருந்தாலும் சாகத்தானே தாத்தா போறோம்... நீங்க முன்னாடியா... நா முன்னாடியான்னு யாருக்குத் தெரியும்..."

"அடேய் நா ஆண்டனுபவிச்ச கட்ட... நீ இன்னும்  அனுபவிக்க வேண்டியது நெறய்ய இருக்கு... வாழ  வேண்டிய புள்ள நீ... சாவப் பத்தி எதுக்குப் பேசுற... எங்கத ஒனக்குத் தெரியணும்... அம்புட்டுத்தானே.... அதெல்லாம் போகுற போக்குல சொல்லிட்டுப் போற கதயில்ல... பெரிய கத... ஒரெடத்துல ஒக்காந்து பேசணும்... பொழுசாய வா அம்மங்கோவில்ல ஒக்காந்து பேசுவோம்... நீ கேக்கணுமின்னு தலயில எழுதியிருந்தா இன்னக்கி கேட்டுப்பே..."

"உண்மையாத்தானே சொல்றீங்க... அப்பச் சாயந்தரம் எங்கிட்டும் போமாட்டேன்.... சொல்றேன்னு சொல்லிட்டு கடைசியில ஏமாத்திடமாட்டீங்களே..."

"சொல்றேன்னு சொல்லிட்டேனுல்ல... கண்டிப்பாச் சொல்லுவேன்... வாக்குத் தவறமாட்டேன்..."

"ஓகே..."

வீராசாமிக்கு இப்போது வயது தொன்னூறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊரில் இருக்கும் மரியாதைக்குரிய பெரிசுகளில் இவரும் ஒருவர். சொல்லப் போனால் அந்த ஊரில் வயது அதிகமான மனிதர் இவர்தான்... இன்னமும் சைக்கிள் ஒட்டுவார்... இந்த வயதிலும் எங்கு வேண்டுமானாலும் நடந்து சென்று வருவார்... வயல் வேலைகளைக்கூட முடிந்தளவு செய்து வந்தார்... கண்ணில் இன்று வரை எந்தக் குறையுமில்லை...  இப்பக்கூட யாராவது இளவட்டக் கல்லைத் தூக்குறேன்னு மல்லுக்கட்டுக்கிட்டுக் கிடந்தா, ‘என்னால இன்னக்கும் தோளுக்கு மேல தூக்கிப் போட முடியும்... இப்பத்தான் எளவட்டப் பயலுக முக்கிக்கிட்டு நிக்கிறானுங்க’ அப்படின்னு கெத்தாச் சொல்லுவாரு...

எல்லாருக்கும் மரியாதை கொடுக்கத் தெரிந்த நபர். யாரையும் படக்கென்று பேசாதவர் என்பதால் எல்லாருக்கும் பிடிக்கும்... மூத்தவன் விவசாயம் பார்க்க  மற்ற மகன்களை படித்த படிப்பு வெளிநாட்டுப் பக்கம் அனுப்பிவிட்டது. மூத்த மருமகள் குணவதி பெயருக்கு ஏற்றார் போல் குணவதிதான். மாமனார் மாமியாரைப் பெற்றவர்களாகப் பாவித்ததால் பிரச்சினைகள் அந்த வீட்டுக்குள் வரவேயில்லை.

மனைவி சௌந்தரம் இறந்து பத்துப் பதினைந்து வருசமாச்சு.  மனைவி இறப்போடு அசைவச் சாப்பாட்டையும் விட்டுவிட்டார். மனைவி இருக்கும் வரை எல்லா நிகழ்வுகளுக்கும் போய் வந்தவர், அவள் இறப்புக்குப் பின் விசேசங்களுக்குச் செல்வதைச் சுத்தமாகக் குறைத்துக் கொண்டார். உறவோ பழக்கமோ யாரேனும் இறந்தால் மட்டும் நல்லதுக்கு போறோமோ இல்லையோ கெட்டதுக்கு போகனுமப்பான்னு யார் வண்டியிலாச்சும் ஏறிப் போயிட்டு வந்துடுவார். தன் பிள்ளைகளை எந்த இடத்திலும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுத்துப் பேசமாட்டார்.

துண்டை விரித்து கையைத் தலைக்கு வைத்துப் படுத்துக்கிடந்தவரிடம் "சொல்லுங்க பெரியய்யா... உங்க காதல் கதையை..." என்றான் அருகில் அமர்ந்திருந்த கண்ணன். அப்போது அந்த வழியாகப் போன ராஜாத்தி "என்ன ஐயாவும் பேரனும் எந்தக் கோட்டயப் பிடிக்கப் போறீக...?" என்றாள் கிண்டலாக.

"எந்தக் கோட்டயப் பிடிக்கப் போறோம்... உம் பேராண்டிக்கு எங்கத தெரியணுமாம்... நமுத்தெடுக்கிறான்... அதான் சொல்லப் போறேன்..." எனச் சிரிக்க, "ரொம்ப முக்கியமான கத... பேராண்டிக்கும் சொல்லிக் கொடுங்க... அவனும் நாளக்கி எவளயாச்சும் இழுத்துக்கிட்டு ஓடட்டும்..." என்றாள்.

 ‘பேராண்டி வேற எவளயும் இழுத்துக்கிட்டு போவாத... இந்தச் சிறுக்கியவே இழுத்துக்கிட்டுப் போ... நல்லாப் பாத்துப்பா’ என்று சிரித்தார்.

‘நக்கலா...? ஏ அழகுக்கென்ன கொறச்ச...’ என்றபடி ராஜாத்தி நகர, மெல்லக் கதையை ஆரம்பித்தார் வீராசாமி.

"வெவசாய வேல பாக்குற மனுசனுங்க... பகலெல்லாம் வயல்ல கெடந்து ஒழச்சிட்டு வந்து ராத்திரியில அந்த வலி தெரியாம இருக்க பொண்டாட்டிய அணைக்க வருசத்துக்கு ஒண்ணுன்னு வூட்டுக்கு வூடு புள்ளகுட்டி நிறஞ்சி கெடந்துச்சு... எங்க வூட்டுலயும் பதிமூணு பேரு... ஒங்கய்யந்தான் எல்லாத்துக்கும் எளயவன்... ஒங்க மூத்தாயா கல்யாணத்தப்போ ஒங்கய்யன் எங்காத்தா வயித்துல... எங்கக்காவுக்கு பதினாறு வயசுல கலியாணம்... எங்க எல்லாருக்கும் ஒண்ணு ரெண்டு வயசு வித்தியாசமிருந்தாலும் எல்லாரும் ஒண்ணா மண்ணாக் கெடந்தோம்... இன்னிக்கு அந்த சொகம் கூட ஒங்களுக்கெல்லாம் கெடக்கலயில்ல...”

“ம்... காதல் கதையக் கேட்ட பிறந்த கதை சொல்றீங்க...”

“இருடா... குறுக்க பேசாம... பதிமூணுல இதுவரக்கிக் ஏழு போயிருச்சின்னாலும் இப்ப இருக்கதுக கூட இன்னமும் அந்த பாசத்தை விட்டு வெலகல... ஒங்கய்யன் இன்னக்கிம் என்னயப் பாத்தா எந்திரிச்சி நிப்பான்... இந்த மருவாதயெல்லாம் இப்ப எங்க இருக்கு... ஒங்கப்பனுக்கு முன்னால நீ கால்மேல கால் போட்டு சேருல ஒக்காந்திருக்கேதானே... ஒங்கப்பன் ஒங்கய்யனயோ என்னயோ பாத்தா ஒக்காந்திருக்க சேரக் கொடுத்துட்டு தரயில ஒக்காருறான்... அதெல்லாம் இப்ப எதிர் பாக்க முடியாதுல்ல...”

“நம்மளையே தாக்குறீங்களே... கதை கேட்டதுக்கா” சிரித்தான்.

“நடப்பத்தானே சொல்றேன்... மறுக்க முடியாமா... சரி கதக்கி வா... இன்னக்கி ஒண்ணு பெத்துக்கிறதே பெரிசா இருக்கு... அதுக்கு பால் கொடுத்தா அழகு போயிரும்ன்னு பாக்கெட் பாலக் கொடுத்து வளக்குதுக... நானெல்லாம் எங்காத்தாக்கிட்ட எனக்கு அடுத்து ஒங்க சிவச்சாமியய்யா இருக்கானுல்ல அவன் பொறக்கும் வரக்கிம் பால் குடிச்சேன்னா பாத்துக்க... ஒங்கய்யனுக்கு  அடுத்து பொறப்பு இல்லயில்ல அதனால மூணு வருசங் குடிச்சிருக்கான்....' என்றவர் பேச்சை நிறுத்தி ஆயாசமாய் மூச்சை விட்டார்.

"மூணு வருசமா... பாட்டி என்ன பால் பண்ணையா வச்சிருந்துச்சு... சரி நீங்க அப்பத்தாவுக்கு வாங்க..."

"இரு வாறேன்... நாங்க எப்படி வாந்தோமுன்னு இந்த தல மொறக்கித் தெரியணுமில்ல... இன்னக்கி பாசமே இல்லாம போச்சுல்ல... அண்ணன் தம்பி ஒறவு கூட கலியாணத்தோட முடிஞ்சி போகுதுல்ல... ஒங்கப்பனும் சித்தப்பனும் எங்கயாச்சும் பாத்தாத்தானே பேசிக்கிறாக... ஒங்க வூட்டுக்கு அவனோ... அவமூட்டுக்கு ஒங்கப்பனோ போக வர இருக்கானுவளா... இல்லயில்ல.. அதவுடு நீங்களாச்சும் சித்தப்பன் பெரியப்பன்னு போறியளா... எல்லாம் போச்சுல்ல... ஒறவு மொற போச்சில்ல..."

"ம்... எங்க சித்தப்பா மகன் முத்து எங்கூட பேசி பல வருசமிருக்கும்... பாக்கும் போது என்னன்ணே அப்படின்னு பேசுறதோட சரி... உங்க காலம் மாதிரி இப்ப இல்லை பெரியய்யா..." உண்மையான வருத்தமுடன் சொன்னான்.

"ம்.... அப்பல்லாம் பதினாறு பதினேழு வயசில கலியாணம் பண்ணி வச்சிருவாங்க... எனக்கு படிப்பு அவ்வளவா வரல... கையெழுத்துப் போடுவேன்... வாசிப்பேன் அம்புட்டுத்தான்.... அப்ப முன்னூறு செம்பிரி ஆடு வச்சிருந்தோம்... அத எங்க ஐயாதான் பாத்தாரு... அவரு கூட ஆடு மேக்க போவேன்... ஆடு மாடு கோழியின்னுதான் திரிவேன்... என்னமோ எனக்கு எப்பவும் அதுக மேல ஒரு பிரியம்...”

“ம்...”

“பதினேழு வயசில எங்கப்பாரு எங்கயித்த மவளக் கட்டிக்கச் சொல்லி நின்னாரு.. அவனுக்கு ஆடு, மாடு, வெவசாயம்ன்னு மட்டுமே வாழத் தெரியும்... ஒருத்திய கட்டிக்கிட்டு எப்படி குடும்பப் பொறுப்பச் சொமப்பான்னு எங்கய்யா சத்தம்போட்டு கொஞ்ச நாளாவட்டுமின்னு சொல்லி என்னய செட்டிய வூட்டுல வேலக்கி சேத்து விட்டாரு... காலயில பத்து மணிக்கி பொயிட்டு ராத்திரி எட்டு மணிக்கி வருவேன்... வெவசாய டயத்துல பத்துமணிக்குள்ள வய வேல பாத்துட்டுப் போவேன்... நடவு, கதிரறுப்புன்னா செட்டியாருக்கிட்ட லீவு சொல்லிட்டு வந்துருவேன்...”

“ம்...”

“செட்டியவூட்டு வேலய விட எனக்கு வெவசாயந்தான் பிடிச்சிருந்துச்சி.... என்ன செய்ய... வானம் பாத்த பூமி... ஒரு போகம் வெளயிறதே பெரிய வெசயம்... இதுல மூணு போகமா வெளயும்... ஆடுகளப் பாக்க முடியாத்தால எங்கய்யா முத்தய்யான்னு ஒருத்தருக்கிட்ட பாத்துக்கச் சொல்லி வுட்டுட்டாரு... அப்ப நம்மூருக்கு சரியான ரோடு இல்ல... அவரஞ்ச்செடிக்குள்ள ஒத்தயடிப் பாத்தான்... செட்டியவூட்டுக்குப் பொயிட்டு சைக்கிலுலதான் வருவேன்... இருட்டு ஏமம்ன்னு எந்தப் பயமும் இல்ல... எங்க பள்ளமிருக்கும்  எங்க ரோடு வளஞ்சி போகும்ன்னு சரியாத் தெரியும்.... காலு மிதிக்க கையி சைக்கிள லாவகமாத் திருப்ப வீடு வந்து சேருவேன்... எனக்கு மட்டுமில்ல பொட்டச்சிக்கூட இருட்டுப் பயமில்லாம நடந்து வருவாளுக... இன்னக்கி ஏழு மணிக்கு வண்டியில வரயிலயே வேர்த்து விறுவிறுத்து வாரீக..." சிரித்தார்.

"அப்பத்தா கதைக்கி வாங்கன்னா... ஆவரஞ்செடிக்குள்ள சைக்கிள் ஒட்டுனத சொல்லிக்கிட்டு இருக்கீக...  நேரமாச்சு வீட்டுக்குப் போறேன்னு கதையைச் சொல்லாம எந்திரிச்சிப் போகப் போறீங்கன்னு நினைக்கிறேன்..."

"என்னய யாரு தேடப் போற... ஒம் பெரியாத்தா பெரியக்கா வூட்டுக்குப் போயிருக்கு... இனிமேத்தான் வரும்... மாடுகளுக்கு தண்ணி காட்டி கட்ட வேண்டிய எடத்துல கட்டிட்டேன்... ஒம் பெரியப்பன் வய வேல பாத்துட்டு இப்பத்தான் வந்து படுத்திருக்கான்...  ம்... ஒம் பெரியப்பத்தா சவுந்தரத்துக்கு இந்த ஊருதேன்... மேலத்தெரு வெள்ளச்சாமி வீட்டுல பொறந்தவ... கருப்புன்னாலும் அவ வயசு காலத்துல அவ்வளவு அழகி..." சொல்லும் போதே அவர் முகம் பிரகாசமானது... மனைவி நினைவில் கண்ணில் துளிர்த்த நீர் மெல்லக் கன்னத்தில் இறங்க, நிலவை மேகம் மறைத்தது போல் முகம் மாறியது.

"என்ன பெரியய்யா.... கண்ணு கலங்குறீங்க... ஆம்பளை அழக்கூடாதுன்னு சொல்லுவீங்க... நீங்களே அழறீங்க... நீங்க சொல்ல வேண்டாம் பெரியய்யா... " என எழுந்தான்.

"யேய் இருடா....” என அவனை இழுத்து அமர வைத்தவர் தொடர்ந்து பேசினார்.

“அவளோட பத்தொம்போது வயசுல கை பிடிச்சி... எழுபது வயசுல சாகுற வரக்கிம் எங்கூட இருந்திருக்கா... எதுக்கும் கோபப்படமாட்டா... என்ன சொன்னாலும் அவுக சொன்னா செரியா இருக்கும்ன்னு எம் பின்னால நிப்பா.... என்னயிருந்தாலும் அவ எனக்கு தாயாயிருந்தவ இல்லயா... அதான் பாழாப் போன மனசு அவ பேரச் சொன்னாலே கலங்கிருது.... சரி விடு.." என எழுந்து துண்டை எடுத்து உதறி கண்ணைத் துடைத்துக் கொண்டு மூக்குப் பொடியை எடுத்து ஒரு இழு இழுத்துக் கொண்டார்.

"அவ சின்ன வயசுல இருந்து பாத்து வளந்தவதான்னாலும் பதினாறு வயசுலதான் எனக்கு அழகியாத் தெரிஞ்சா... அப்ப எனக்கு பதினெட்டு வயசு... என்னக் கட்டிக்கச் சொன்ன அத்த மவள எங்க பெரியப்பாரு மகன் கட்டிக்கிட்டான்... சித்திரயில கருப்பர் கோவில் கெடா வெட்டு... ஊரே கூடியிருக்கு.... அப்பத்தான் அவள மொத மொதலா பாவட தாவணியில பாக்குறேன்... என்ன அழகு தெரியுமா..? பெரிய ஜிமிக்கி போட்டு... பெரிய பொட்டு வச்சி... ரெட்டச் சடயில... அவ பவுர்ணமியாட்டம் இருந்தா... எனக்குள்ள ஒரு மின்னலு... சனி மூலயில மின்னுமே அப்புடி... பளிச்சின்னு... என்னமோ தெரியல அவளயே பாத்துக்கிட்டு இருக்கச் சொன்னுச்சு... கருப்பர விட்டுட்டு கருப்பிய பாத்துக்கிட்டு இருந்தேன்னா பாத்துக்க...”

“ம்... அப்புறம்...?”

“அப்புறமென்ன... அவள பாக்குறதுக்காகவே வெள்ளச்சாமிப் பய அப்பனப் பாக்குற மாரிக்கி அவ வூட்டுக்கு அடிக்கடி போக ஆரம்பிச்சேன்... அவகிட்ட நா பேசுறது யாருக்கும் தப்பாத் தெரியல... ஒருநா கம்மாயில குளிச்சிக்கிட்டு இருக்கேன்... தனியா தண்ணி எடுக்க வந்தா.... என்னப் பாத்ததும் எப்பவும் போல கிண்டலாப் பேசிக்கிட்டே பாவடய மொழங்காலளவுக்கு தூக்கிக்கிட்டு கொடத்தோட வாயில துண்ட வச்சி தூசி போகாம தண்ணியெடுத்தா... அப்ப அவ பாவட தண்ணியில நனஞ்சிச்சி... ஏ கழுத பாவட நனயிது பாருன்னு சொன்னதும்... யாரு கழுத எம்பேரு சவுந்தரமாக்கும்ன்னு சொன்னா.... நா சிரிக்கிட்டே ஆருமில்லங்கிற தைரியத்துல அவ அருக போயி...  ஒங்க பேரு தெரியாதாக்கும்.. ஊருக்குப் புதுசாக் கட்டிக் கூட்டியாந்திருக்காக பாருங்க... பேரச்சொல்லிக் குடுக்குறவா... அப்படின்னு கேலியாச் சொல்லிக்கின்னே என்னயக் கட்டிக்கிறியா கழுதன்னு படக்குன்னு கேட்டுப்புட்டேன்... அவ படக்குன்னு என்னத் திரும்பி பாத்துட்டு வேகவேகமாத் தண்ணியத் தூக்கிக்கிட்டுப் பொயிட்டா..." என்றவர் நினைவில் கண்மாய்க் கரைக்குப் போய்விட்டார்.

"ஐய்யோ அப்புறம்..."

"விடுவேனா.... அவ எங்க போனாலும் அவ பின்னாலயே போயி நா விரும்புறேன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்... எறும்பு ஊர கல்லுக் கரயிமின்னு சொல்லுவகதானே... ஒரு நா அவ வூட்டுக்குப் போனேன்... யாருமில்ல அவ மட்டுந்தான் இருந்தா... எங்கிட்ட பேசமா திண்ணையில இருந்த தூணுக்குப் பின்னால மறஞ்சி நின்னா... எனக்கு நீ என்ன விரும்புறியா இல்லயான்னு தெரியணும்ன்னு சொல்லி அவ கைய படக்குன்னு பிடிச்சிட்டேன்... அவ மறுகுறது கண்ணுல தெரிய... ஒதடு படபடக்குது... விடுங்க யாராச்சும் பாத்தா தப்பாப் பேசுவாக அப்படின்னு சொல்லி கையப் பறிக்கப் பாத்தா... நா விடல... வெவசாயம் பாக்குற கையிக்குள்ள மாட்டுன அவளால கையைப் பறிக்க முடியல... எங்க போராட்டம் நடக்கயில...” நிறுத்தி மீண்டும் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

“நடக்கையில... அட அப்ப அப்ப சஸ்பென்ஸ் வச்சிக்கிட்டு... சொல்லுங்கய்யா...”

“அவ ஆத்தா தயிர் ஊத்திட்டு வந்துட்டா... சத்தம் கேட்டு அவள விட்டுட்டு படக்குன்னு வெலகிட்டேன்... அவ கைய ஒதறிக்கிட்டு நின்னா... என்னப்பு பொம்பளப் புள்ளக்கிட்ட அப்புடி என்ன ரகசியம் பேசிக்கிட்டு இருக்கிய... மூத்தவன பாக்க வந்தியளாக்கும்... ஏட்டி ஒங்கண்ண எங்க பொயிட்டான்னு கேட்டபடி அது பாட்டுக்கு வூட்டுக்குள்ள போயி ஒக்காந்திருச்சு... இனி இங்க இருக்கது நல்லதில்லன்னு  நாங்கெளம்புறப்போ, எம்பின்னே வாசவரக்கிம்  வந்து எனக்கும் உங்க மேல ஆசதான்னு மெதுவாத்தான் சொல்லிட்டு படக்குன்னு பொயிட்டா... அதக்கேட்டு எம் மனசு பாப்பாத்தியாட்டம் பறந்துச்சு..."

"ஆஹா... பட்டாம்பூச்சி பறந்துச்சா நெஞ்சுக்குள்ளே... காதல் மன்னந்தான் நீங்க..."

"பின்ன ஆசப்பட்டு ஒருத்திய விடாம வெரட்டி அவ வாயல பிடிச்சிருக்குன்னு சொன்னா பாப்பாத்தி பறக்காம அரிபூச்சியா ஊரும்..." என்று சிரித்தவர் "அப்புறமென்ன வீட்டுக்குத் தெரியாம அவளுக்கு வளவி, தலக்கி வக்கிற சிட்டி, பூவுன்னு வாங்கிக் கொடுத்தேன்... தளக்காவூரு கூத்துப் பாக்கப் பொயிட்டு அவளுக்கு பாவட கூட வாங்கிட்டு வந்து குடுத்திருக்கேன்... வயக்காட்டுலயும் கம்மாக்கரையிலயும் அவ வூட்டுலயும் யாருக்கும் தெரியாம மணிக்  கணக்குல பேசுவோம்...  அப்புடியே மூணு வருசம் ஓடுச்சு...”

“வில்லன் வந்திருக்கணுமே...”

“ம்... அவளுக்கு அவ அத்தமகனப் பேச ஆரம்பிச்சாக, நா அப்பத்தான் வூட்ல அவளக் கட்டிக்க நெனக்கிறேன்னு சொன்னேன்... நா சொன்னதும் அவ அயித்த மகனுக்குன்னு வச்சிருக்காகன்னு எங்கப்பாரு சத்தம் போட்டாரு.... நா அவளத்தான் கட்டுவேன் ஒத்தக்கால்ல நிக்க... எங்காத்தாதான் போயி பேசிப் பாப்போம்ன்னு சொல்லி பேசி, பெரிய பெரச்சென வந்து பின்னால அது சரியாயி கட்டி வச்சானுங்க... எங்க வூட்டுல எனக்கு மட்டுந்தான் இருபத்தோரு வயசுல கலியாணம் ஆச்சு... மத்தவுக எல்லாருக்கும் சீக்கிரமே நடந்திருச்சி... எனக்கும் ஒங்க நாச்சியாயாவுக்கும் ஒரே நாளுல கலியாணம்...”

“சுபம் போட்டுட்டானுங்க... வில்லனுக்கு வேலையில்லாம போச்சா... சை...” எனச் சிரித்தான் கண்ணன்.

“இன்னக்கி காதல் கலியாணமெல்லாம் எவ்வளவு பெரச்செனய சந்திக்குதுன்னு பாத்தியா... ஏன்  கொல வரக்கிம் போறத நாம நீசுலயும் நேர்லயும் பாக்கலயா... அன்னக்கி விரும்புனவளக் கட்டி வச்சாங்க... ம்.... அப்புறம் என்ன எங்க காதல் வாழ்க்க அவ போறது வரக்கிம் அம்புட்டுச் சந்தோசமாப் போச்சு..."

"ப்பூ இம்புட்டுத்தானா... உங்க காதல்ல ஒரு திரில் இல்ல தாத்தா.... இதைத் சொல்லத்தான் இம்புட்டு பில்டப்பா..." என வேண்டுமென்றே சீண்டினான்.

"இதுல திரிலு இல்லாம இருக்கலாம்... ஆனா இன்னக்கி எத்தன காதல் வாழுதுன்னு சொல்லு... ஒனக்கொன்னு தெரியுமா... ஒங்க பெரியப்பத்தா வீடு இந்த ஊருல இருந்தாலும் அவ சாகுற வரக்கிம் நா அவளத் திட்டுன... அடிச்சேன்னு ஒரு நா... ஒரு பொழுது அவங்க வூட்டு வாசல்ல போயி கண்ணக் கசக்கிக்கிட்டு நின்னதில்ல... தெரியுமா... அவ வூட்டு ஆளுகளும் பஞ்சாயத்து அது இதுன்னு நம்ம வூட்டுப்படி ஏறுனதில்ல... அவுக வீட்டுல எந்த முக்கிய முடிவுன்னாலும் நாந்தேன் எடுப்பேன்... இன்னக்கி விழுந்து விழுந்து காதலிச்சி கலியாணம் பண்ணினாலும் ஒரு வருசம் ஒங்களால சந்தோஷமா வாழ முடியுமா...?" என்றபடி எழுந்து துண்டை உதறினார்.

‘அவரின் கேள்வி சரிதானே இங்கே காதல் திருமணங்கள் கூட விவாகரத்து வரைக்கும் போய் நிற்கின்றனவே...’ என்ற நினைப்போடு எழுந்த கண்ணன் "உங்க காதல் தெய்வீக காதல் பெரியய்யா... நா சும்மா சீண்டினேன்..." என்றபடி எழுந்து கைலியை அவிழ்த்து உதறிக் கட்டிக் கொண்டான்.

'சவுந்தரம்... பாவாட தாவணியில எப்படியிருப்பா தெரியுமா... இன்னக்கி பாவட தாவணியே இல்லாமப் போச்சு... " என்றபடி நடந்தார் வீராசாமி.

-‘பரிவை’ சே.குமார்.

48 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, கீதாக்கா பானுக்க்கா வெங்கட்ஜி எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங் கீதாக்கா... மெதுவா வாங்க...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா அதுக்குள்ள கீதாக்கா கமென்ட்....எனக்குத்தான் லேட்டா வருது போல...ஹும்....குமாரின் கதை..ஆஹா நிதானமாக வந்து படிக்கிறேன்...கடமைகள்....அழைக்குது

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அடடே... குட்மார்னிங் வெங்கட். வாங்க.. வாங்க...

    பதிலளிநீக்கு
  5. குட்மார்னிங் கீதா.. ஆமாம்.. கீதாக்கா முதல்!

    பதிலளிநீக்கு
  6. வெங்கட்.. மெதுவா வந்து படிங்க.. ஆனால் நடை பிரிஸ்க் வாக் பண்ணுங்க!

    பதிலளிநீக்கு
  7. வாழ்க வளமுடன்...

    மண் மணக்கும் கதை... கிராமியச் சூழலை கண் முன்னே நிறுத்துகிறார் - அன்பின் குமார் அவர்கள்...

    அருமை... அருமை...

    பதிலளிநீக்கு
  8. வாங்க துரை செல்வராஜூ சார்.. இப்போதான் பச்சைக்காளி, பவளக்காளி தரிசனம் முடித்து வந்தேன். காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  9. இன்று பிறந்தநாள் காணும் காமாட்சி அம்மாவுக்கு எங்கள் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வணங்குகிறோம் அம்மா.

    பதிலளிநீக்கு
  10. விடாம காதலித்துக் கைபிடித்த பெரியய்யாவின் மனத் திண்மை
    மிகவும் அருமை. அப்பாடி எவ்வளவு குழந்தைகள் பிறந்திருக்கு. சந்தோஷமான கதை.

    பெயர்களில் குழம்பிப் போகும் அளவுக்கு
    குடும்பம் பெரிசு.
    பரிவை குமாரின் கைவண்ணத்திற்கு மனம் நிறை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  12. காமாக்ஷி அம்மாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    நிறைந்த ஆரோக்யத்தை ஆண்டவன் அருளட்டும் என்றும்.

    பதிலளிநீக்கு
  13. கதை நல்லா இருந்தது. ஒன்றிப் படிக்க முடிந்தது. பரிவைக்கு பாராட்டுகள்.

    எங்கப்பாரு, எங்கய்யா என்று வரும் இடங்களில் உறவுமுறை குழம்புகிறது.

    பதிலளிநீக்கு
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காமாட்சி அம்மா. நல்ல உடல் நலத்தையும் நிறைந்த மகிழ்ச்சியையும் அந்த ஹிருதயாலீஸ்வர்ர் வழங்கட்டும்.

    பதிலளிநீக்கு
  15. காமாக்ஷி அம்மாவுக்கு எங்கள் இருவரின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இறைவன் நல்ல தேக ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் நல்கிட பிரார்த்தனைகளும்

    பதிலளிநீக்கு
  16. //எங்கப்பாரு, எங்கய்யா// நெ.த. தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் முக்கியமாய்ச் செட்டி நாட்டில் தாத்தாவை "ஐயா" என அழைப்பார்கள். அப்பாவைப் பெற்ற அம்மாவை அப்பத்தா, அம்மாவைப் பெற்ற அம்மா அம்மாச்சி! நெல்லை மாவட்டங்களில் தந்தையைப் பெற்ற அம்மாவை "ஆச்சி" என்பார்கள். பெரியய்யா எனில் ஐயாவை விடப் பெரிய அவரது அண்ணாவாக இருக்கலாம். இன்னும் கதையைப் படிக்கலை. அதுக்குள்ளே உங்க கருத்தைப்படித்தேன். சும்மாவானும் ஊதற சங்கை ஊதிடலாமேனு! :))))))

    பதிலளிநீக்கு
  17. அட!! காமாட்சி அம்மாவின் பிறந்தநாளா? மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள், நமஸ்காரங்கள் அம்மா! உங்கள் உடல் நலம் பூரண ஆரோக்கியத்தோடு உங்கள் வேலைகளை நீங்களே எப்போதும் செய்து கொள்ளும்படி வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  18. கிராமிய காதல் கதை நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  19. மண் வாசனையுடன் கூடைய குமாரின் அக்மார்க் கதை! காதல் கல்யாணம் அதுவும் கிராமத்தில் அப்போது எல்லாம் கூட நடந்திருக்குது. நல்ல கதை குமார் வாழ்த்துகள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  20. கீதக்கா நான் நெல்லைக்குப் பதில் சொல்ல நினைத்து வந்தேன்..அதற்குள் நீங்களே உறவு முறைகள் சொல்லிட்டீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. கிராமிய நடையில் கதை எழுதுவதில் தேர்ந்தவர் குமார் காதல் கதைகள் என்னையும் என் நினைவுகளோடு இழுத்துப்போகிறது இன்றுவரை தொடரும்காதலுக்கு மரியாதையாகப் பல பதிவுகள் எழுதி உள்ளேன் பாராட்டுகள் குமார்

    பதிலளிநீக்கு
  22. அழகிய காதல் கதை.. வாழ்த்துக்கள் குமார். இப்படி நிறையப் பெரியவர்களுக்கும் தம் காதல் கதைகளை பேரன் பேத்தியிடம் சொல்லிப் பகிர்வதில் ஒரு ஆனந்தம்.

    //செம்பிரி ஆடு // ஹா ஹா ஹா கிராமத்து மொழியோ? :)

    பதிலளிநீக்கு
  23. என்னாது காமாட்ஷி அம்மாவுக்குப் பிறந்தநாளோ? எல்லோரும் மேக்கப் பண்ணிக்கொண்டு ஓடிவாங்கோ கேட் வெட்டிக் கொண்டாடுவோம்....

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் காமாட்ஷி அம்மா.. இன்றுபோல் என்றும் கலகலப்பாகவும், நலமோடும் நீடூழி வாழோணும் என ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. கீசாக்கா ... போஸ்ட் இன்று கரீட்டாஆஆஆஆஆ ஆறுக்குத்தேன் வந்திருக்கு... “பூஜை ஆகமுன்னம் சன்னதம் கொள்ளக்கூடா”:) என ஒரு பழமொழி இருக்குது தெரியுமோ?:) அப்பூடித் துள்ளக்கூடா.. உங்கட வீட்டு ரைமை மாத்துங்கோ, அதுதான் மூணு நிமிடம் ஸ்பீட்டூஊஊஊஊஊ கீசாக்காவைப்போலவேதேஎன் அவட மணிக்கூடும் கர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  25. @ நெல்லைத் தமிழன் அண்ணாச்சி....

    எங்க பக்கம் அப்பாவின் அப்பா, அம்மா - ஐயா, அப்பத்தா
    அம்மாவின் அப்பா,அம்மா - ஐயா, அப்பத்தா.

    இது பெரும்பாலும் எல்லா ஜாதியிலும் இருப்பது. தேவர்கள் அப்பாவை ஐயா என்பார்கள்.

    அய்யாவின் அண்ணன் பெரியய்யா, தம்பி சின்னையா
    அப்பத்தாவின் அக்கா பெரியப்பத்தா, தங்கை சின்னப்பத்தா
    ஆயாவின் அக்கா பெரியாயா, தங்கை சின்னாயா.

    செட்டிநாடு தவிர்த்து வேறு பக்கமிருந்து வந்தவர்கள் 'ஆயா'வை அம்மச்சி, அப்பத்தாவை 'அப்பச்சி' என்று இப்போது அழைக்கிறார்கள்.

    ஐயாவும் இப்போ தாத்தா ஆயிருக்கிறார்.

    எங்க வழக்கம் ஐயா, ஆயா, அப்பத்தாதான்....

    பதிலளிநீக்கு
  26. அதிரடி, புகை கண்ணு, மூக்கு, காது வழியா வருதோ? ஹெஹெஹெஹெஹெ, ரெண்டு நாளா மீ த ஃபர்ஷ்ட்ட்டாக்கும்! :))))))

    பதிலளிநீக்கு
  27. நெ.த. பாட்டியை "ஆயா" என்றும் அழைப்பார்கள். சில குறிப்பிட்ட இனங்களிலே "ஆயா" என்பது உண்டு.

    பதிலளிநீக்கு
  28. @ வள்ளி சிம்ஹன் அம்மா...
    பெயர்கள் எல்லாம் அவர் கதை சொல்லும் போது வருபவைதான்... அதிகம்தான் என்றாலும் கதைக்கான தேவையாய்.... கதையின் பாத்திரங்கள் சிலவே.

    பதிலளிநீக்கு
  29. பரிவையின் கதைகள் எப்போதும் கிராமிய மணம் சூழ்ந்தே காணப்படும். இதிலும் அதுக்குக் குறைவில்லை. வட்டார வழக்கையும் விட மாட்டார். இயல்பாகப் பொருந்தும் வண்ணம் கொடுத்திருக்கார். அருமையான கதை! என்ன! கொஞ்சம் த்ரில் இருக்குமோ என நினைச்சு ஏமாந்தேன். :)

    பதிலளிநீக்கு
  30. கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  31. வழக்கம்போல குமார் அசத்திவிட்டார். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. “அவளோட பத்தொம்போது வயசுல கை பிடிச்சி... எழுபது வயசுல சாகுற வரக்கிம் எங்கூட இருந்திருக்கா... எதுக்கும் கோபப்படமாட்டா... என்ன சொன்னாலும் அவுக சொன்னா செரியா இருக்கும்ன்னு எம் பின்னால நிப்பா.... என்னயிருந்தாலும் அவ எனக்கு தாயாயிருந்தவ இல்லயா... அதான் பாழாப் போன மனசு அவ பேரச் சொன்னாலே கலங்கிருது....//

    இந்த அன்பும், பாசமும் தான் குமார் கதையில் இளையோடும்.

    மண்வாசனையுடன் பழைய காலத்து காதல் கதை அருமை.

    வாழ்த்துக்கள் குமார்.

    பதிலளிநீக்கு
  33. காமாட்சி அம்மாவிற்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    இறைவன் அருளால் உடல்நலத்தோடு 100 ஆண்டு வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. காமாட்சி அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளுடன் என் வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  35. வட்டார வழக்கில் பரிவை சே.குமாரின் படைப்பு அருமை!

    பதிலளிநீக்கு
  36. பிறந்த நாள் காணும் காமாக்ஷி அம்மாவிற்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  37. ..'சவுந்தரம்... பாவாட தாவணியில எப்படியிருப்பா தெரியுமா... இன்னக்கி பாவட தாவணியே இல்லாமப் போச்சு... " என்றபடி நடந்தார் வீராசாமி.//

    என்னயப் பொறுத்தவரை கதையில் உயிர் தட்டினது இங்கினதான்..

    பதிலளிநீக்கு
  38. அருமை
    நண்பர் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  39. வணக்கம் சகோதரரே

    நல்ல கிராமிய நடையுடன் கதை மிகவும் அருமை. படிக்க தொய்வில்லாமல் இனிதாக சென்றது. கதை எழுதிய சகோதரர் பரிவை.சே.குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
    நேற்று என்னால் வலை உலா வர இயலவில்லை. அதனால் இன்று வந்து படித்து கருத்திடுகிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  40. கருத்துச் சொன்ன... வாழ்த்திய... பாராட்டிய... அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன். அலுவலகத்தில் வேலை அதிகம் என்பதால் இங்கிருந்தும் கருத்திட முடியாது... :) அதனால் இங்கு கருத்துச் சொன்ன... வாழ்த்திய... பாராட்டிய அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்.

    கதை குறித்தான கருத்துக்களில் சொன்னவை அடுத்த கதை எழுதும் போது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்... நன்றி.

    பிரதிபிலி போட்டியான மாயாவில் இருக்கும் எனது கதை, திகில் கதையா... பேய்க்கதையா... பயக்கதையா.. இதென்னய்யா கதையின்னு கேட்டாலும் பரவாயில்லை... திட்டினாலும் பரவாயில்லை ஒரு முறை வாசியுங்கள்... வாசிப்பவர்களே வெற்றியை நிச்சயிக்கிறார்கள்.... :)

    https://tamil.pratilipi.com/story/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-vR0VWNFzpEna

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!