சனி, 13 ஜூன், 2020

வேண்டாம் போதை...  போவோம் இனி நல்ல பாதை...1)  நன்றி ஐயா ஆனால் உங்களிடம் கொடுப்பதற்கு என்னிடம் பணம் ஏதும் இல்லை என்கிறார் பயணி.நீங்கள் கொடுத்தாலும் நான் பணம் வாங்குவதில்லை இந்த கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளிகளுக்கு என்னால் முடிந்தது எல்லாம் இந்த சுமையை இலவசமாக சுமப்பதுதான் என்றவர் பயணியின் சுமையைத் துாக்கிக் கொண்டு ரயில் நிலைய வாசலை நோக்கி நடக்கிறார்.யார் இவர்.


பெயர் முஜிபுல் ரஹமான் எண்பது வயதாகிறது கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இதே ரயில் நிலையத்தில் போர்ட்டராக வேலை செய்கிறார் உழைத்துதான் சாப்பிடவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
2)  இதுவும் ஒரு பெருமைதான்....  நாம் சென்ற வாரம் பார்த்த செய்தியின் தொடர்ச்சி...    பிரதமர் மோடி, 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பாராட்டிய, மதுரை சலுான் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா, 14, என்பவரை, ஏழைகளுக்கான நல்லெண்ண துாதராக, ஐ.நா., சபை அறிவித்துஉள்ளது.


3)  விருதுநகர் அருகே நாராயணபுரத்தில் மழை நீரை சேமித்து அதன் மூலம் நிலத்தடி நீராதாரம் பெற்று வருகின்றனர் கிராம மக்கள் .இதனால் இங்கு குடிநீர் தட்டுப்பாடானது இல்லாமல் உள்ளது.
4)  "...... கொரோனா அது இதுன்னு சொல்றாங்க. கடையை திறந்து வியாபாரம் பார்க்கக் கூடாதுன்னு சொன்னாங்க. அவங்களுக்காக கடையை அடைச்சா, என்னை நம்பி வரும் ஏழை விவசாயிகளுக்கு யாரு சாப்பாடு போடுவாங்க என நினைத்து, இட்லி அவித்து கொடுக்கிறேன்.

இந்த காலத்திலும், 1 ரூபாய்க்கு, ஒரு இட்லி போடுறேன்னு தெரிந்து, பலர் பல வித உதவிகளை செய்து வருகின்றனர்....."  -  ஒரு ரூபாய்க்கு இட்லி, சட்னி, சாம்பார் வழங்கும், கோவை மாவட்டம், வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, 85 வயது கமலாத்தாள்.
5)  பட்டுக்கோட்டையில், 91 வயதாகும் டாக்டர் கனகரத்தினம், தனக்கு சொந்தமான கட்டடத்தில், கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகளிடம், மூன்று மாத வாடகை பணம், 4.20 லட்சம் ரூபாய் வேண்டாம் என்று கூறி, மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளார்.  இவர் ஏற்கெனவே கன்சல்டிங் பீஸாக பத்து ரூபாய்தான் வாங்குகிறார் என்று மக்களால் புகழப்பட்டவர்.  நம் செய்திகளிலும் இடம்பெற்றவர்.6)  கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நன்மை.  இப்படி போதையிலிருந்து விடுபட்டவர்களும் இருக்கிறார்கள்.  


===================================================================

மதராஸ் பிறந்த கதை
ரமா ஸ்ரீநிவாசன் 

நாம் வாழும் இம்மாநகர் மதராஸ் அல்லது இன்றைய சென்னை
என்பது எப்போது, எப்படி, எவரால் பிறந்தது அல்லது பிறப்பிக்கப் பட்டது
என்று பல முறைகள் நான் யோசித்திருக்கின்றேன். அரசுப் பணி,
திருமணம், கணவன், அவரது பெரியவர்கள், பிறகு பிள்ளைகள், அவர்களின் வளர்ப்பு, பெரியவர்களின் முதுமை என்று காலம் சுழன்று கொண்டே ஓடி விட்டது. இப்போது, இரு பெண்களும் வளர்ந்து தங்கள் படிப்பிற்காக வேறு நாடு, வேறு ஊர் என்று சென்ற பின்னர், நானும் என் கணவரும் பணி ஓய்வை நெருங்கியபின்னரும்தான் என்னால் ஆற அமர உட்கார்ந்து என்னாசையை நிறைவேற்றும் வேலையைப் பிடிவாதமாகத் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தது.   

பழைய நாளிதழ்கள், பழைய புத்தகங்கள் யாவையையும் எடுத்துப் புரட்டி, இன்டெர்நெட்டையும் விடாமல் பார்த்து நம் மதராஸ் என்பது ஓர் அபூர்வமான ஊர் என்பதை புரிந்துகொண்டதிலிருந்து என் நண்பர்களான உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இக்கட்டுரையை வரைகின்றேன்.

மதராஸ் ஜனித்த கதை ஓர் மாபெரும் ஆச்சரியம் மற்றும்
அதிசயமான நிகழ்வு என்றால் அது பொய்யல்ல.  முதலில் ஃப்ரென்ச்
ஆட்சியிலிருந்து டட்ச் ஆட்சிக்கும் பிறகு போர்ச்சுகீஸ் ஆட்சியிலிருந்து
பிரிட்டிஷ் ஆட்சிக்கும் மாறி மாறி உட்பட்டதால், அவர்கள்
ஒவ்வொருவரும் தங்கள் வழிப்படி நம் மதராஸை வளர்த்தார்கள்.

இந்திய நாட்டின் மிக முக்கியமான முதல் ஆங்கிலேயக் குடியிருப்பு
மதராஸில் உள்ள ஜார்ஜ்டௌனில்தான் துவங்கியது. முதலில் இவ்விடம்
ப்ளாக் டௌன்என்றே அழைக்கப் பட்டது. இதுதான் மதராஸ்
நகரிலேயே மிக நெரிசலான மனிதர்கள் மிக்க இடமாக இருந்தது, இன்றும்
இருக்கின்றது.  முற்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி இந்த ஜார்ஜ்
டௌனுக்கு மதராஸ் சரித்திரத்தில் ஓர் மறுக்க முடியாத, மறக்க முடியாத
இடம் செதுக்கப் பட்டுள்ளது.ஆயின் இதன் பெயரும் சூழலும் எவ்வாறுப்ளாக் டௌன்னிலிருந்து
ஜார்ஜ் டௌன்னாக மாறி மருவியது என்பது ஒரு சுவையான
நாடகமிக்கக் கதை. அதை இப்போது பார்ப்போம்.

ஃப்ரான்சிஸ் டே, ஆன்ரு கோகன் என்னும் இரு ஆங்கிலேயர் ஈஸ்ட்
இந்தியா கம்பெனியின் பிரதிநிதிகளாக மதராஸ் வந்தடைந்தனர்.
அவர்களின் முதலாயக் கடமை கம்பெனியின் விற்றல் வாங்கலுக்கான ஒரு தொழிற்சாலை மற்றும் ஒரு கிடங்கு கட்டுவதற்கான இடத்தை
தேர்ந்தெடுப்பதுதான். ஆகஸ்ட் 22ஆம் தேதி 1639ல் இந்தியாவால்
கடற்கரையோரத்தில் ஓர் சிறிய இடம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே
அவர்களுக்காக ஒதுக்கப் பட்டது.

ஆங்கிலேயர்களின் வணிகப் பரிமாற்றம் வசதியாக நடக்க 1653ல்
அவ்விடத்தில் ஓர் கோட்டை அவர்களால் அமைக்கப் பட்டது. அதற்கு
இங்கிலாந்தின் உயர் புரவலர் துறவி ஜார்ஜ் (Patron Saint George) அவர்களின்
பெயரையொட்டிஃபோர்ட் ஸெயின்ட் ஜார்ஜ்என்ற பெயரிடப்பட்டது.
அக்கோட்டையில் வேலை செய்ய தமிழ் மக்கள் பல பேரை ஆங்கிலேயர் அமர்த்தினர். ஆகவே, நம் மக்களின் தன்னிறைவான வாழ்வாதாரத்திற்கும் இது உதவியாக திகழ்ந்தது. மதராஸ் வளர வளர, இந்நகரம் இந்தியாவிற்கும் யூரோப்பிற்குமிடையே ஓர் மிக முக்கியமான வணிகவியல் இடமாக மாறியது.

ஐந்தாம் மன்னர் ஜார்ஜ் 1911ல் இந்தியாவிற்கு வந்து சென்றதன் நினைவாக அவ்விடத்தின் பெயரே ஜார்ஜ் டௌன் என்று மாற்றப் பட்டது.


ஜார்ஜ் டௌனின் சில தெருக்களும் அவைகளின் சுவையான கதைகளும் இதோ கீழே :

செவென் வெல்ஸ் தெரு : மதராஸின் முதல் முதல் திட்டமிட்ட நீர் வாரியத் துறையின் திட்டம் இந்த செவென் வெல்ஸ் நீர்திட்டத்திலிருந்துதான் தொடங்கியது. இங்கு குடி நீருக்காக பத்து கிணறுகள் தோண்டப் பட்டன. அதில் மூன்று கிணறுகள் மிகச் சிறிதளவே நீர் ஈன்றன. எனவே, ஏழு கிணறுகள் மட்டுமே நீர் கொடுக்க முடிந்ததால் அத்தெருவின் பெயர்ஏழு கிணறுகள் தெருஅல்லதுஸெவென் வெல்ஸ் ஸ்டிரீட்என்றானது.

பர்மா பஜார் : பல இந்தியாவைச் சேர்ந்த பர்மியர்கள் பர்மாவிலிருந்து குடி பெயர்ந்து இந்தியாவிற்கு திரும்பினர். மதராஸின் பீச் ரயில் நிலையத்தையடைந்தவுடன் அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த பல வாரியான பொருட்களை விற்று, தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி
செய்தனர். இவ்வாறுதான் பர்மா பஜார் உருவானது. இன்றும் இந்த
மார்க்கெட் விலையுயர்ந்த இறக்குமதி செய்யப் பட்ட வெளி நாட்டுப்
பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து கொண்டிருக்கின்றது.  இதுவேபர்மா பஜார்சைனா பஜார் (இப்போதைய பிரசித்திப் பெற்ற என்.எஸ்.சி. போஸ்
ரோட்):  பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் முதல் முதலாக
இவ்விடத்தில்தான் டிராம்கள் உருவாக்கப் பட்டு ஓட்டப் பட்டன.

கொத்தவால் சாவடி : ஆசியக் கண்டத்தின் மாபெரும் சாவடிகளுள்
ஒன்றாக உருவாகி பல வருடங்கள் காய் கனிகளை நமக்கு அளித்த
ஒன்று.வண்ணாரப்பேட்டை : இந்த பாதை முழுக்க வண்ணான்கள் ஈஸ்ட்
இந்தியா கம்பெனி ஆங்கிலேயர்களின் துணிகளை துவைத்து காய வைத்து இஸ்திரி செய்து கொடுக்க வேலை செய்து கொண்டிருந்ததால் இவ்விடம் வண்ணாரப்பேட்டை என்று பெயரேற்றது.மின்ட் தெரு (தங்க சாலை): ஈஸ்ட் இந்தியா கம்பெனி இங்கு ஓர்
தங்கசாலையை நிறுவி நாணயங்கள் உற்பத்தி செய்ய வழி வகுத்தது.
இந் நாணயங்கள் பொருட்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும்
உபயோகிப்பதற்காக உற்பத்தி செய்யப் பட்டன. ஆகவே இவ்விடம்
தங்கசாலை அல்லது மின்ட் தெருவாக பெயர் பெற்றது.

ஆர்மேனியன் தெரு : இது மதராஸிலேயே புராதனப் புகழ் வாய்ந்த ஓர்
தெருவாகும். இங்குதான் ஆர்மேனியர்கள் தங்கள் நாட்டிலிருந்து 1750களில் இடம் பெயர்ந்து வந்து குடியேறினார்கள். இங்குதான் புகழ் பெற்ற ஆர்மேனியன் மாதா கோவிலும் ஸெயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக் கட்டிடங்களும் உள்ளன. எனவேதான் இதன் பெயர் ஆர்மேனியர் தெருவானது.ஸௌகார்பேட்டை : இவ்விடம் குஜராத் மற்றும் ராஜஸ்தானிலிருந்து
வந்த மார்வாடிகளால் ஆக்கிரமிக்கப் பட்டது. “ஸௌகார்என்றால்
இந்தியில் மார்வாடி என்று பொருள். இதன் அப்பட்டமான மொழி பெயர்ப்புபணக்காரர்களின் இடம்என்பதாகும். ஆதலால் ஸௌகார்பேட்டையானது.காரல் மெர்ச்சன்ட் தெரு அல்லது பவளக்காரன் தெரு : ஆங்கிலேயருடன்
பவள வியாபாரம் செய்யும் வணிகர் இத்தெருவில் ஒன்று கூடி
வாழ்ந்ததால், இதன் பெயர் காரல் மெர்ச்சன்ட் தெரு என்று வழங்கியது.மஸ்கான்சாவடி : ஆற்காட் நவாப்பின் மகனான மஹ்ஃபூஜ் கானின்
இல்லத்தைச் சுற்றி ஓர் அழகிய தோட்டம் அந் நாட்களில் அமைந்திருந்தது. அங்கு வாழ் மக்கள் அத்தோட்டத்தைதிவாடி” என்றழைத்தனர். நாட்பட அப்பெயர் மருவிமஸ்கான்சாவடியாகி விட்டது.

பாரீஸ் கார்னர் : தாமஸ் பாரி என்னும் வேல்ஸ் நாட்டு வணிகர் ஒருவர்
1768ல் இந்தியா வந்ததை நினைவு கூர்ந்து இப்பெயர் சூட்டப் பட்டது.
அத்தெருவின் கோடியில் அமைந்திருந்த ஓர்பாரிஎன்னும் கட்டிடம்
அவ்வணிகத்திற்கு தலைமைச் செயலகமாக செயல் பட்டது.   கோடியிலிருந்ததால்பாரீஸ் கார்னர்ஆகி விட்டது.

முடிவாக, மதராஸ் என்னும் ஊர் ஜார்ஜ் டௌனிலிருந்து பிள்ளையார் சுழி
போட்டு தொடங்கியது. அதனால்தான் இன்றும் ஜார்ஜ் டௌனின் அஞ்சல்
குறியீடுமதராஸ் 600 001” என்பது.

நாட்கள் மாதங்களாகவும் வருடங்களாகவும் உருண்டோடி விட்டன.  மதராஸ் என்பது இப்போது சென்னை மாநகரம் என்ற பெயரை ஏற்று பீடு நடை போட்டு வருகின்றது. இங்குதான் எத்தனை மாற்றங்கள், எத்தனை முன்னேற்றங்கள், எத்தனை இயற்கை ஆக்கிரமிப்புகள், எத்தனை பெருமை மிக்க வளர்ச்சிகள்!!!!!!எங்கிருந்து எங்கு வந்திருக்கின்றோம் என்பதை அசை போட்டால்
பிரமிப்பாகவும் அதே நேரம் பெருமையாகவும் இருக்கின்றது. அதுவும் நாம் தமிழ் நாட்டின் தலை நகரமான சென்னை மாநகரவாசிகள் என்று
எண்ணும்போது சிறிது கர்வமும் கூட ஒட்டிக் கொள்கிறது. ஏனென்றால்
எந்த ஊர் என்றாலுமே அது மதராஸைப் போலாகுமா?” அதே போல்
எந்நாடு என்றாலுமே அது நம் நாட்டுக்கீடாகுமா?”
==============

91 கருத்துகள்:

 1. புறந்தூய்மை நீரல் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்..

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறளில் எழுத்துப் பிழையாகி விட்டது...
   மன்னிக்கவும்...

   நீக்கு
  2. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
   வாய்மையால் காணப் படும்
   (அதிகாரம்:வாய்மை குறள் எண்:298)

   பொழிப்பு (மு வரதராசன்): புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.

   நீக்கு
  3. இப்போல்லாம் அகந்தூய்மை மாஸ்க்கால் காணப்படும் என்ற நிலையாகிவிட்டது

   வாய்மை என்றாலே பலர் லிப்ஸ்டிக் என்று புரிந்துகொண்டதால் இருக்குமோ?

   நீக்கு
 2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இதோ நற்செய்திகளை படித்து மீண்டும் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வெங்கட்...   காலை வணக்கம்.

   நீக்கு
  2. நன்றி, மீண்டும் வருக! மீண்டும் மீண்டும் வருக!

   நீக்கு
 4. இன்றைய பாசிட்டிவ் செய்திகளில் சில முன்னரே படித்திருக்கிறேன். அனைத்துமே சிறப்பான செய்திகள். நல்லுள்ளங்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  சென்னை பற்றிய வரலாறு சிறப்பு. ஒன்றிரண்டு புத்தகங்கள் கூட விரிவான தகவல்களுடன் வந்தன. ஒரு புத்தகம் என்னிடமும் இருப்பதாக நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம். டாக்டர் கனக ரத்தினம் சிறப்புடன் இருக்க வேண்டும். இதுதான் காலத்திற்கேற்ற உதவி.

   எல்லாவற்றையும் ஆகச் சிறந்தது முஜிபுல் ரஹ்மான் அவர்களின் தொண்டு. எண்பது வயது
   பெரியவரின் உயரிய கோட்பாடு மனம் முழுவதும் மகிழ்ச்சி.
   குடிப்பதை நிறுத்திய லாரி ஓட்டுனர்களின் அற்புதமே உயர்வு.
   குடிப்பதை நிறுத்துவது சுலபம் இல்லை.

   இவர்கள் நிறுத்தியதும் அல்லாமல் அதனால்
   இத்தனை பணம் சேர்த்து மனைவி மக்களின் மன நலத்தை மீட்டிருக்கிறார்கள்.
   இனி டாஸ்மாக் திறக்காமல் இருக்கட்டும்.
   நல்ல செய்திகளுக்கு மிக மிய நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. இந்த வாரம் ரமா ஸ்ரீயின் ஆக்கம் மனசுக்கு மிக நிறைவு கொடுப்பது.

   பலவிவரங்கள் நாம் மதராஸ் வீக் வரும்போது அறியப் பெற்றாலும்
   இவ்வளவு விவரங்கள் , ப்ராட்வே ,பாரீஸ்,ஆர்மேனியன் ஸ்ட்ரீட்

   சௌகார்பெட் என்று விரியும் தகவல்கள் மிக அருமை.
   நன்றி ரமா. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.
   எனக்கு மிகப் பிடித்த நகரம்.
   கொரோனா பிடியிலிருந்து விடுபட்டு நலம் பெறட்டும்.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா...    இனிய வணக்கம்.  நல்ல செயல்கள் பெருகட்டும்.  நாடும் ஊரும் நலம் பெறட்டும்.

   நீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள், அனைவரும் வீட்டிலேயே கூடியவரை இருந்து நோய்த்தொற்றுப் பரவாமல் பத்திரமாக இருக்க வேண்டிப் பிரார்த்திக்கிறேன். நாளுக்கு நாள் நிலைமை மோசமாக ஆகிக் கொண்டிருக்கிறதே தவிர்த்து முன்னேற்றம் என்பதைப் பார்க்கமுடியவில்லை/பார்ப்போமா என்றும் கவலையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...   வணக்கம், நல்வரவு.  அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம்.

   நீக்கு
  2. உலக அளவில் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் பதினேழுக்குப் பிறகு, குறைந்து வருகிறது.
   இந்தியாவில் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் உள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையில், மகாராஷ்டிரா குஜராத், டெல்லி இறப்புகள் மட்டுமே அறுபது சதவிகிதம்.
   இப்பொழுதிலிருந்து இந்தியாவின் கொ இ எண்ணிக்கை குறைய ஆரம்பிக்க தொடங்கினால் நல்லது. நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

   நீக்கு
 6. அந்தக் காலத்திலேயே
  சென்னையைப் பற்றிய பல குறுஞ்செய்திகள் தமிழ்வாணனின் கல்கண்டு இதழில் வந்து கொண்டிருக்கும்...

  இருப்பினும் அவற்றை ஒரே தொகுப்பாகப் படிப்பதும் ரசனை தான்....

  பதிலளிநீக்கு
 7. மதரஸப்பட்டினம்+சென்னப்பட்டினம் இணைந்ததே இப்போதைய சென்னை மாநகரம். தமர்லா சென்னப்ப முதிரஸ நாயக்கரின் பெயரால் "சென்னப்பட்டினம்" என அழைக்கப்பட்டது. இவர்களைப் பற்றி டச்சுக்காரர்களும், கிழக்கிந்தியக் கம்பெனியும் அதன் ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர். நாயக்கரின் பெயரால் உருவான இந்த இருகிராமங்களும் இணைந்தே "சென்னை" "முதராஸ்" பின்னாட்களில் "மதராஸ்" என ஆனது. இந்தச் சென்னை அல்லது மதராஸுடன் தங்களை இணைத்துக் கொண்டவையே மயிலாப்பூர், திருவான்மியூர், திருவொற்றியூர், ஆகிய நாயன்மாரால் பாடப்பட்ட ஸ்தலங்களும், திரு அல்லிக்கேணி என்னும் திவ்யதேசமும் ஆகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்னை என்பது தெருங்கு மொழின்னு (சென்ன) வந்ததுன்னு குறிப்பிடலையே கீசா மேடம்

   நீக்கு
  2. பார்த்தீர்களா, என்னை விட நிறைய தகவல்கள் கீதாவிற்கு தெரிந்திருக்கின்றது. நன்றி கீதா

   நீக்கு
  3. நாயக்கர்னு வந்திருப்பதிலேயே தெரிந்திருக்க வேண்டாமா நெல்லையாரே?

   @ரமா ஸ்ரீநிவாசன், சென்னை பற்றிய பதிவு ஒன்று போட்டிருக்கேன். அதிலே நந்தனம் பெயர்க்காரணம், "நந்தன" வருடம் ஆரம்பித்ததால், சைதாப்பேட்டை பெயர்க்காரணம்/ஆற்காடு நவாப் வைத்த சைதாபாத் தான் சைதாப்பேட்டை ஆனது எனப் பல விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தேன். பதிவைத் தேடணும். :))))) சென்னையின் பிறந்த நாளில் வெளிவந்த பதிவுனு நினைக்கிறேன்.மாவிலம் அல்லது மாவில்வம் என்னும் பெயரே திரிந்து மாம்பலம் என ஆனது என்பார்கள். மயிலைக்கு மேற்கே இருப்பதால் மயிலை மேல் அம்பலம் என்னும் பெயர் மாம்பலம் ஆனதாகச் சொல்பவர்களும் உண்டு. சர் தியாகராயர் வாழ்ந்த பகுதி அவர் பெயரிலே தி.நகராகவும், சின்னத்தறிப்பேட்டை என்பது சிந்தாதிரிப்பேட்டையாகவும், குயவர்கள் வாழ்ந்த இடம் கொசப்பேட்டை எனவும். மண்பானைகள் செய்ய சேற்றைக் குழைத்துச் செய்த இடம் சேத்துப்பட்டு எனவும் தேவதாசிப் பெண்களான கோட்டாளப் பெண்கள் வாழ்ந்த இடம் கிண்டி எனவும் அழைக்கப்படுகிறது. சென்னையின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது.

   நீக்கு
  4. ஆனால் சென்னை என்னை எப்போவுமே கவர்ந்ததில்லை. அப்பாடானு இருக்கும், சென்னையிலிருந்து நகர்ந்தால்! வெளி மாநிலங்களில் வாழ்ந்து பின்னர் சென்னைக்கு நிரந்தரமாக வந்தப்போ மனதில் ஓர் வெறுமை. அப்படியும் பதினைந்து/பதினாறு வருடங்கள் சொந்த வீடு என்பதால் அங்கே இருந்தோம்!

   நீக்கு
  5. மிக நன்றி கீதாமா. இவை எல்லாம் புது செய்திகள்.
   எனக்கும் மிகப் பிடித்த இடம் பாரீஸ் கார்னர், அங்கே இராஜா
   அண்ணாமலி ஹாலில் எத்தனை கச்சேரிகள், நாடகங்கள்!!!
   புரசை மரங்கள் அதிகம் இருந்ததால் புரசவாக்கம் வந்ததாம்.

   நீக்கு
 8. நல்ல செய்திகளில் பலவும் முன்னரே படித்தது. அனைவருக்கும் வாழ்த்துகள். வாடகை வேண்டாம் எனச் சொன்ன மருத்துவர் பற்றிப் பல செய்திகளிலும் பார்த்தேன்.

  சென்னை வரலாறு எனக்கு ஆறாம் வகுப்பில் துணைப்பாடமாக வந்தது. அந்தப் புத்தகத்தைப் பல ஆண்டுகள் பத்திரமாக வைத்திருந்தேன். பின்னர் தூள் தூளாகிவிட்டது. என்றாலும் நினைவில் உள்ளவைகளைப் பகிர்ந்து கொண்டேன். இம்மாதிரியே சிந்தாதிரிப்பேட்டையில் ஓடிய தறிகளும், கோடம்பாக்கத்தில் இருந்த குதிரைகள் லாயமும் என ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகலாம். அர்மெனியன் தெருவில் உள்ள சர்ச்சுக்குப் பெரியப்பா அழைத்துக் கொண்டு போய்ப் போயிருக்கேன். அதே போல் செயின்ட் தாமஸ் சர்ச்சுக்கும் போய் அங்கே சுவற்றில் வரையப்பட்டிருந்த ஓவியங்களை/அல்லது செதுக்கி இருந்தார்களா? பல ஆண்டுகள் ஆனதால் நினைவில் இல்லை. பார்த்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 9. இணையம் மறுபடி மறுபடி படுத்தல். கருத்துக் கொடுத்தால் போகாமல் அழிச்சாட்டியம். கணினி காரணமோ என நினைக்கிறேன். ஏனெனில் ஐ பாடில், மொபைலில் இணையம் நன்றாக வருது. நல்லவேளையாகக் கொடுக்கும் கருத்துக்களைக் காப்பி, செய்து வைத்துக் கொள்வதால் மறுபடி கொடுக்க முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...   படுத்துவது இணையமா?  கணினியா?  சமயங்களில் இந்தஓப் பிரச்னை கணினியில் கூட இருக்கலாம்.

   நீக்கு
  2. என் மடிக்கணினியும் ஏனோ இணையத்தில் இணையவில்லை. பல முறை முயன்று வெறுத்து இப்போது கை பேசியில் பதிலளிக்கிறேன்.

   நீக்கு
  3. They says the problem in the net connection to those who are using windows 10. Mine is windows 10.

   நீக்கு
 10. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...   நல்வரவும், வணக்கமும்.  இனிய பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 11. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 12. சென்னையில் சேரிகளும் சாதா தெருக்களும் அடுத்தடுத்து இருந்தன நான்சின்ன வயசில் பைக்ராஃப்ட்ஸ் ரோட் க்ராஸ் அருகே தெருவை ஒட்டியே சேரியுமிருந்ததை பார்த்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. I have no idea!  நான் தொண்ணூறுகளுக்குப் பின்னர்தான் சென்னை!

   என் அண்ணன் படத்தில் எம் ஜி ஆர் வண்டி ஓட்டிக்கொண்டே பாடும் பாடலில் கிட்டத்தட்ட இது மாதிரி வரி வரும்.  

   "அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி பொன்னான நகரென்று பெயருமிட்டால்..."

   நீக்கு
  2. ஸ்ரீராம், பாட்டுடன் கூடிய பதில். பேஷ், பேஷ்.

   நீக்கு
 13. அவரவர் தகுதிக்கு முடிந்த உதவியை செய்துள்ளார்கள்.

  டாக்டரின் வாடகை தள்ளுபடி
  முஜிபுல் ரஹ்மானின் இலவசவேலை.

  சென்னையின் வரலாறு பிரமிப்பான தகவல்கள் நன்றி மேடம்.

  பதிலளிநீக்கு
 14. இன்றைய பாசிடிவ் செய்திகள் நன்று

  சென்னை பற்றிய தகவல்கள் ஏற்கனவே படித்தவை. 67களில் அடையாறு காடு. அழகான வடிவமைக்கப்பட்ட நகரமாக ராஜாராம் முயற்சியால் கேகே நகர் அசோக் நகர் உருவாக்கப்பட்டன. ஆனால் பின்பு அனைவரும் ஆச்சர்யப்படும்படி அடையாறு நிலமதிப்பு ரொம்ப அதிகமானது என ராஜாராம்-முன்னாள் அமைச்சர் எழுதியிருக்கிறார்

  அது சரி.. சென்னையின் பூர்வகுடிகளுக்கு சென்னையில் இடமில்லையே. நாலில் ஒருவர் வெளிமாவட்டத்திலிருந்து குடியேறியவர்கள்

  பதிலளிநீக்கு
 15. சனிக்கிழமை என்றாலே ரமாஸ்ரீ என்ன எழுதியிருப்பார் என்று எதிர்பார்க்கிற மாதிரி
  எழுது பொருளை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார் அவர்.

  ஒவ்வொரு வாரமும் இந்த வாரம் என்ன எழுத வேண்டும் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுப்பதில் ஆரம்பிக்கிறது அவரது பணி. தொடர்ந்து அந்த தலைப்பு சார்ந்த விஷயங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து .... இதெல்லாம் சரி.. எல்லோருக்கும் தெரிந்தது தான். அதற்குப் பிறகு தான் ஆரம்பிக்கிறது அவரது தனிப்பட்ட திறமை.. தான் தேர்ந்தெடுத்து தொகுத்த விஷயங்களை பிறர் வாசிப்புக்கு உகந்ததாக, வாசிப்பவருக்கு வெகு சுலபமாக புரிகிற மாதிரி, எழுத்து வடிவம் கொடுத்து சமர்ப்பிக்கிறாரே.. அங்கு தான் எழுது கலையின் அர்ப்பணிப்பு ஜொலிக்கிறது. ஒவ்வொரு வாரமும் புதுமை படைப்பதற்கு சகோதரிக்கு வாழ்த்துக்கள்..
  சென்னைப் பட்டினம் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் அவருக்கு கிளர்ந்ததில் ஆச்சரியப்பட்டுப் போனேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி சார். மெய் சிலிர்க்கிறது. உங்கள் வாயால் பாராட்டுக்கள். ஆங்கிலத்தில் ஓர் முடியாதக் காரியத்தை உழைத்து முடித்து விட்டப் பின் பெருமையுடன் "yes, I have arrived" என்று கூறுவோம். அதே உணர்ச்சி இப்போது எனக்கெழுகிறது. மிக்க மிக்க நன்றி சார்.

   நீக்கு
  2. அதுவும் ஜீவி சார், நான் ஆந்திர மஹில சபா மருத்துவமனையில் 1960ல் பிறந்தவள். இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து, இங்கேயே மணந்து, இங்கேயே பணி புரிந்து, இங்கேயே ஓய்வும் பெற போகிறேன். என்னை அடை காத்து, வளர்த்து, நிமிர்ந்து நிற்க செய்த என் சென்னைக்கு நான் என் நன்றியை வெளிக் கொணர வேண்டாமா? அதன் பிரதிபலிப்புதான் இந்த கட்டுரை.

   நீக்கு
 16. கமலாத்தாள் அவர்களின் சேவையே சிறப்பு...

  சென்னை பற்றிய தகவல்கள் அருமை... Helo-வில் காணொளியாக வந்தது...

  பதிலளிநீக்கு
 17. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 18. முடிவாக, முஜிபுல் ரஹ்மான், நேத்ரா, கோவை கமலாம்மாள், டாக்டர் கனகரத்தினம் ஆகிய யாவரும் கோவிட் வாரியர்கள். சத்தமிடாமல் தங்களால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறார்கள். நாராயணீயபுரம் மக்கள் தங்கள் செயலால் அரசையே தலை குனிய வைத்து விட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 19. டாக்டர்,முஜிபுர் ரகுமான் அவர்களுடைய நல்ல உள்ளங்கள் வாழ்க .

  மெட்ராஸ் பற்றிய கட்டுரை நன்று.

  பதிலளிநீக்கு
 20. என் இளம் வயதிலேயே மெட்ராஸ் என்ற பெயர் என்னை ஆகர்ஷித்த ஒன்று. எனது 14 வயதிலேயே என்னில் பற்றிக் கொண்ட ஆவல் இது. மதராஸ் பற்றி எது ஒன்று படித்தாலும் மனசில் குறித்துக் கொள்ளும் அளவுக்கு இந்தப் பெயருடன் எனக்கு ஒரு பந்தம் ஏற்பட்டது.. காரணம் ஏறத்தாழ அத்தனை பத்திரிகை அலுவலகங்களும் மெட்ராஸிலேயே இருந்தன. பத்திரிகைகளுக்கு கதை எழுதி அனுப்பும் ஆர்வம் அந்த வயதிலேயே ஏற்பட்டு விட்டதால் பத்திரிகை அலுவலகங்களின் முகவரிகள் ஏறத்தாழ மனனம் ஆன ஒன்று. கலைமகள் என்றால் மைலாப்பூர், ஆ.வி. என்றால் மவுண்ட் ரோடு, குமுதம் என்றால் கீழ்ப்பாக்கம், கல்கி என்றால் சேத்துப்பட்டு, அமுதசுரபி என்றால் ஜார்ஜ் டவுன் என்றெல்லாம் இடங்களை மனசிலேயே குறித்துக் கொண்டிருப்பேன். ஆனந்தவிகடனில் தேவனின் 'ஸி.ஐ.டி. சந்துரு' வெளி வந்த காலத்து என் மெட்ராஸ் பற்றிய கனவுகளுக்கு சரியான வடிகாலாயிற்று அந்தத் தொடர். கதை நிகழும் இடம் மெட்ராஸ்.. ஒவ்வொரு பேட்டையும் அந்நாளைய பெயர்களில் சென்னை பற்றிய கனவுகளுக்குத் தீனி போட்டது. கனவுகள் கனவுகளாக இருக்கும் வரை தான் சுவாரஸ்யம் போலும். 1993-ல் சென்னை வந்து நிரந்தரமாக குடியேறிய பொழுது நனவுகள், கனவுகளைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த மாதிரி நினைவுகளை ரமா ஸ்ரீநிவாசன் கட்டுரை தூண்டி விட்டிருப்பது சிறப்பு.  சுவாரஸ்யமாக இருந்தது.

   நீக்கு
 21. பங்களா தேஷின் உருவாக்கத்திற்கு கடைக்காலிட்ட விடுதலை வீரர் ஷேக் முஜூபர் ரஹ்மான் அவர்களின் பெயர் உலக வரலாற்றில் இடம் பெற்ற பெருமை கொண்டது.

  தனது 80 வயது முதுமையிலும் உடலுழைப்பாய் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்த முஜிபுல் ரஹமான் நாம் எல்லோருக்கும் வழிகாட்டியாகிறார். அவரது ஆதர்சம் நம்மில் படிந்தால் போலும். அதுவே இறைப்பணி ஆகும்.

  பதிலளிநீக்கு
 22. ..ஏழைகளுக்கான நல்லெண்ண துாதராக, ஐ.நா., சபை அறிவித்துஉள்ளது.//

  ஐ.நா. சபை (United Nations (UN) ஒன்றும் இதை அறிவிக்கவில்லை! ஐ.நா. ஒருவரை ‘தூதராக’ அறிவிப்பது என்பது வேறு-அதன் பரிமாணமே அலாதி. (அப்படி அறிவித்தால் அதற்கான சன்மானம் அச்சுபிச்சுவென ’ரூ.’ 1 லட்சமாக மட்டும் இருக்காது).

  UNADAP (வளர்ச்சி, அமைதிக்கான ஐக்கியநாடுகள் அஸோசியேஷன்) என்று ஒரு அஸோசியேஷன் இருக்கிறது. ‘ஐக்கியநாடுகள்’ என்கிற வார்த்தை சேர்ப்புதான் இங்கே கவர்ச்சி! இதனை நடத்துவது(பவர்கள்) சில நாடுகளின் ‘முன்னாள்’ மந்திரிகள், டிப்ளோமாட்கள், அரசு உயர்அதிகாரிகள், நிபுணர்கள் என சிலர் அடங்கிய குழு). இது ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற சில பகுதிகளில் கல்வி, சமூக வளர்ச்சிப்பணிகள் சிலவற்றை மேற்கொண்டிருக்கிறது அல்லது ஊக்குவிக்கிறது எனத் தெரிகிறது. இதன் தலைமையகம் டெல்லியாக இருக்கலாம். இந்த ’அஸோசியேஷன்’, ஐ.நா.வுடன் ஒரு ’ஆலோசனைக் குழு’போன்று இணைக்கப்பட்டுள்ளது (accredited with consultative status). அவ்வளவுதான்.. அல்லது அவ்வளவு! இந்த ’அஸோசியேஷன்’தான் ரூ.1 லட்சம் (ஸ்காலர்ஷிப்)- ஆக நேத்ராவுக்கு அறிவித்திருக்கிறது + ‘ஏழைக்களுக்கான தூதர்’ என டைட்டில். நல்ல செயல்தான். இதன் ’UN consultative status' காரணமாக நேத்ராவுக்கு, ஜெனீவா அல்லது நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தொடர்பான நிகழ்வொன்றில் ‘ஏழைகள் முன்னேற்றத்திற்கான நாடுகளின் பங்களிப்பு’ போன்று ஒரு தலைப்பின்கீழ் பேச அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (Formalities are to be confirmed etc..)
  மேற்சொன்னது - ‘தூதராக’ அறிவிக்கப்பட்டது ’UN’-இனால் அல்ல; UN-தொடர்பு ‘அஸோசியேஷன்’ ஒன்றினால்தான் என்கிற தெளிவிற்காக மட்டுமே.

  மற்றபடி, இந்த’உயர் அங்கீகரிப்பை’க் குறைத்து சொல்வதற்காக இல்லை. தமிழ் மாணவி நேத்ரா பாராட்டுக்குரியவர். அவரது எதிர்காலம் மேன்மையடைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.சொல்ல நினைச்சு முழுங்கினேன். :)

   நீக்கு
  2. நன்றி ஏகாந்தன் ஸார்..   நல்ல தகவல்கள்.  நான் செய்தித்தாளில் படித்ததைப் பகிர்கிறேன்.  நான் அறியாத தகவல்களை சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 23. முஜிபுல் ரஹமான் அவர்களை போற்ற வேண்டும், பணம் இல்லாதவருக்கு இலவசமாக சுமையை தூக்கி உதவி செய்தமைக்கு.
  மற்ற அனைத்து பாஸிடிவ் செய்திகளும் படித்தது. நல்ல மனிதர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. மதராஸ் பிறந்த கதை விவரங்கள், படங்களுடன் கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு
 25. குடியை விட்டதால் குடும்பத்தினர் அன்பு, அக்கம் பக்கம் மரியாதை, கையில் பணம் இருப்பு எல்லாம் கிடைத்து இருக்கிறது.
  நலமோடு வாழ வேண்டும். வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 26. முஜிபுல் ரஹ்மான் அவர்கள் செய்யும் சேவையும், கமலாத்தாள் செய்யும் சேவையும், பற்றி படித்த பொழுது காஞ்சிப் பெரியவர் ஒருமுறை சமூக சேவை என்றால் பெரிய அளவில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. தெருவில் கிடக்கும் ஒரு முள்ளை எடுத்து ஓரமாக போட்டால், அது கூட சேவைதான்" என்று சொல்லியிருப்பது நினைவுக்கு வந்தது. செவை செய்யத் தேவையானது மனதுதான். மாயவரம் மருத்துவரையும் வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 27. ரமாஜியின் கட்டுரைகள் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே வருகின்றன. பெண்களுக்கு பிறந்த வீட்டுப் பெருமை பேசுவதில் ஒரு அலாதி சந்தோஷம். நான் திருச்சியைப் பற்றி எழுதினால்தான் அந்த சந்தோஷம் வரும்.
  மதராஸ் பற்றிய தகவல்கள் அல்லாமே பட்சிருந்தாலும் சுகுருதான்!

  பதிலளிநீக்கு
 28. மதராஸ், கூவம்,அடையாறு என்னும் இரு நதிகளுக்கிடையே அமைந்திருக்கும் தீவு என்பதையும், தாஜ் மகால் கட்டப்பட்ட அதே சமயத்தில்தான் செயின்ட் ஜார்ஜ் ஃபோர்ட்டும் கட்டப்பட்டது"என்பதையும் குறிப்பிட்டிருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 29. அனைத்து பாசிட்டிவ் செய்திகளும் வழக்கம்போல் அருமை. ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தவை.

  சென்னை வரலாறு பற்றி அறியாத பல தகவல்கள் அறிய முடிந்தது. சகோதரி ரமா ஸ்‌ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 30. 80 வயதுக்கு மேலுள்ள முஜிபுர், கமலாத்தாள் போன்றவர்கள் இன்னும் விடாது சமூக சேவையில் இருக்கின்றனர். நல்ல திடகாத்திரமாய் இருக்கும் பலர் சினிமா நடிகர்களுக்கு பாலாபிஷேகம், கட் அவுட் வைப்பு, கோவில்கட்டுவது போன்ற திருப்பணிகளில் ஈடுபட்டும் அல்லது க்வார்ட்டர், ஊறுகாய் சுகங்களில் லயித்தும், மனிதர்களாய்ப் பிறந்த மாண்பினை தீராது அனுபவித்துவருகின்றனர்.
  எல்லாம் நமது தமிழ்நாட்டின் கதைகள்தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரிதான மனிதர்களாய் இருப்பதாலேயே செய்திகளில் இடம் பெறுகின்றனர்!

   நீக்கு
 31. 6 கிலோமீட்டர் நடந்தே வந்து ப்ளாட்ஃபாரத்தில் வந்து இறங்குபவர்களுக்கு சுமை தூக்கி வழி காட்டி உதவும் 80 வயது முஜிபுர் ரஹ்மான் வாவ்! போட வைக்கிறார். அவரை வாழ்த்துவோம். அசந்துவிட்டேன். அவரது எண்ணங்கள் மிகவும் சிறப்பானவை.

  நேத்ரா செய்தி அறிந்தது. வாழ்த்துகள் அவருக்கு!

  நாராயணபுரம் மக்க்களுக்குப் பாராட்டுகள்

  வடிவேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, 85 வயது கமலாத்தாள் வியக்க வைக்கிறார். பாட்டியை பாராட்டுவோம் வாழ்த்துவோம்...

  பட்டுக்கோட்டையில், 91 வயதாகும் டாக்டர் கனகரத்தினம் நினைவிருக்கு 10 ரூபாய் டாக்டர்....

  பாருங்க முஜிபுர் ரஹ்மான், கமலாத்தம்மாள், டாக்டர் கனகரத்தினம் எல்லோருமே அதி சீனியர் சிட்டிசன்கள் எப்படி முன்னுதாரணமாக இருக்காங்க!! வயதானோர் பலரும் நல்ல நல்ல செயல்கள் புரிந்து வருவது மகிழ்வான விஷயம். உதாரணங்களும் கூட!

  ஊரடங்கு சமயம் தளர்த்தப்பட்ட போது கும்பலில் விழுந்தடிச்சு சண்டை போட்டு ஆண்களும் பெண்களும் கூட சரக்கு வாங்க நின்றதை நினைத்து வருந்தும் வேளையில் இப்படி ஒருவர் சரக்கடிப்பதை விட்டிருப்பது எத்தனை சந்தோஷமான விஷயம். அவர் குடும்பமே மிகவும் சந்தோஷப்பட்டிருக்கும் . அவர் குடும்பம் இனியேனும் நல்லப்டியாய் வாழ வாழ்த்திடுவோம்

  கீதா

  பதிலளிநீக்கு
 32. ரமா உங்கள் கட்டுரை அட்டகாசம். ஏற்கனவே அறிந்திருந்தவை என்றாலும் கூட மீண்டும் வாசித்துக் கொண்டேன்.

  கூவம், அடையார் பற்றி சொல்லவே இல்லையே அவைதானே ஒருகாலத்தில் பல போக்குவரத்திற்கு குறிப்பாக பக்கிங்க்ஹாம் கனால் இருந்தது. இன்றைய நிலை நினைத்தால் மனம் வேதனைப்படும் எனக்கு.

  குறிப்பிடப்பட்டிருக்கும் அழகான கட்டிடங்கள் தெருக்கள் எல்லாம் இப்ப பெரிய பெரிய கவர்ச்சிகரமான மால்கள் கட்டிடங்கள் எழும்பியதில் ஒளியிழந்து போயின. வெளியில் தெரிவதே இல்லை இப்படிக் கட்டுரையில்தான் எல்லாரும் தெரிந்துகொள்ள வேண்டும் போல. எத்தனை மால்கள் வந்தாலும் என்னவோ தெரியவில்லை பாரிஸ் கார்னர் தெருக்கள் பஜார்கள் தான் என் விருப்பம்.

  கீதா  பதிலளிநீக்கு
 33. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. வயது முதிர்ந்தாலும், ஈகை உள்ளத்துடன், கருணை நிறைந்த நெஞ்சங்களோடு, பணி புரியும், உதவி செய்யும் நல்ல மனிதர்களுக்கு என் பணிவான வணக்கங்களுடன் அனைவருக்கும் வாழ்த்துகள். இப்படிபட்ட மனிதர்களால்தான் உலகம் இன்னமும் முறையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

  சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் மதராஸ் பட்டினம் கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. அவருடைய அருமையான எழுத்துக்களில் விளைந்த கட்டுரையில் பல தெரியாதவற்றை படித்தறிந்து தெரிந்து கொண்டேன். கட்டுரையை அழகான முறையில் எழுதிய சகோதரிக்கு மிக்க நன்றி பகிர்ந்த தங்களுக்கும் மிக்க நன்றி.

  இப்போதுதான் என்னால் வர முடிந்தது. தாமதத்திற்கு மன்னிக்கவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 34. //“ஸௌகார்” என்றால் இந்தியில் மார்வாடி என்று பொருள். இதன் அப்பட்டமான மொழி பெயர்ப்பு “பணக்காரர்களின் இடம்” என்பதாகும். ஆதலால் ஸௌகார்பேட்டையானது.//ஸௌகார் என்பது பொதுவாக வங்கி நடத்துபவரைக் குறித்தாலும் வட மாநிலங்களில் அடகு பிடித்துப் பணம் கொடுப்பவரை அல்லது வட்டிக்குப் பணம் கொடுப்பவரைத் தான் குறிக்கும். ஸௌகார் என்றால் மார்வாடி எனப் பொருள் இல்லை. நாம் வடமாநிலத்தவர் அனைவரையும் பொதுவான மார்வாடி என்னும் வார்த்தையால் குறிப்பிடுகிறோம், அவங்க தென்னாட்டினர் அனைவரையும் மதராஸி என்பதைப் போல். உண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தின் தென் பகுதி மேவாட்/மேவார் என அழைக்கப்படும். பக்த மீரா மேவாட் ராஜ்யத்தின் ராணி ஆவாள். வட பகுதி மார்வாட்/மார்வார் எனப்படும். அங்கெல்லாம் மார்வாடில் இருந்து வருபவர்களை மட்டுமே மார்வாரிகள் என்பார்கள். இரண்டு பகுதியுமே ராஜஸ்தான் என்றாலும் சில சின்னச் சின்ன வேறுபாடுகள், பழக்க வழக்கங்கள், உணவு முறையில் மாறுபாடுகள் எல்லாம் உண்டு. ஸௌகார்ப்பேட்டை அந்த நாட்களில் பணம் வட்டிக்குக் கொடுப்பவர்களால் நிறைந்திருந்து இருக்கலாம். பின்னர் வணிக மையமாக மாறி இருக்கலாம். ஆனால் வட இந்தியர் நிறைந்த பகுதி என்பதால் ஸௌகார்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

  பதிலளிநீக்கு
 35. நல்ல செய்திகளின் தொகுப்பு. போதையை மக்கள் விட்டொழித்தால் எத்தனை குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும் எனும் ஆதங்கம் எழுகிறது.

  சென்னை பற்றிய தகவல்கள், இடங்களின் பெயர்க் காரணங்கள் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!