வியாழன், 4 ஜூன், 2020

அஞ்சலி

எழுத்தாளர் கடுகு என்ற அகஸ்தியன் என்ற திரு.பி.எஸ்.ரங்கனாதன் அவர்கள் மறைவுக்கான இரங்கல்


நெல்லைத்தமிழன் 

இன்று காலைகடுகு தாளிப்பு  தளத்தில் (https://kadugu-agasthian.blogspot.com) இன்னும் புது இடுகை எதுவும் வரவில்லையே, கடுகு சார் உடல்நலம் முன்னேற்றமடைந்துவிட்டதா என்று கேட்டு அவர் தளத்தில் ஒரு பின்னூட்டம் இட்டேன்.. சில மணி நேரங்களில் எங்கள் பிளாக் ஸ்ரீராம்வாட்சப் குழுமத்தில்உடல் நிலை சரியில்லாமல் இருந்த திரு பி.எஸ்.ரங்கனாதன் (கடுகு சார்) அவர்கள் நேற்று இரவு இறைவனடி சேர்ந்தார் எனத் தெரிவித்திருந்தார்.  மனது 'அடடாஎன்று திடுக்கிட்டதுநமக்குத் தெரிந்த ஒருவரின் மறைவு ஏற்படுத்தும் வெறுமைதான் அது.

  
நான் நகைச்சுவைக் கதைகளை விரும்பிப் படிப்பேன்கல்கி தீபாவளி மலர் மற்றும் மேகசின்களில், 'கடுகுஎழுதிய கதை வந்திருந்தால், அதனையே முதலில் படிப்பேன்.  எப்படியோ அவர் இணையதளத்தைப் படிக்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்பு எனக்குக் கிடைத்ததுஅவருடைய அனுபவங்கள்,  நண்பர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் போன்றவற்றைப் படித்து, 'கடுகுஎன்ற எழுத்தாளருக்கு இப்படிப்பட்ட பலமான பின்னணி இருக்கா என்று வியப்பு ஏற்பட்டதுநான் அவருடைய நகைச்சுவை கதைகளின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். 'பாசுரங்களைப் பதம் பிரித்து வெளியிட்ட நாலாயிர திவ்யப் ப்ரபந்தம்என்ற வைணவ நூல் மூலம் அவருடனான என் கடித (மெயில்தொடர்பு தொடர்ந்தது.  

அவரது நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள், நாவல்கள் போன்றவை மட்டும் என்னைக் கவரவில்லை.  மேலும் மேலும் புத்தகங்களைத் தேடிப் படிக்கவேண்டும், படித்தவற்றுள் தான் ரசித்தவற்றை தமிழ் மொழியில் சரளமாக எழுதி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற அவரது தீராத வேட்கைதான் என்னைக் கவர்ந்தது. பழகுவதற்கு எளிமையானவர்.   பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள்,  டைரக்டர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு போன்றோரின் பால்யகால நண்பர், சோவின் தந்தை, கல்கி, குமுதம் எஸ்.ஏ.பி, கோபுலு போன்றோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர் என்பதே, அவர் அகால மரணமடையவில்லை என்பதைக் கூறும்.

அவரது படைப்புகளைப் பற்றியோ அல்லது அவரது பிராபல்யத்தைப் பற்றியோ  நான் எழுதப்போவதில்லை.  எழுத்தாளர்கள், நேரடியாக வாசகனுடன் பழகினால்தான், வாசகன் அவர்களை நினைவுகூர்வான் என்பதில்லை. எழுத்தாளன் அவனது படைப்புகளின் மூலமாக வாசகனுடன் நெருங்கிய உறவு கொண்டுவிடுகிறார்கள்.  அவர் இணையதளத்தில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறார். அதைப் படித்த வாசகனாக, எனக்கு அவரின் மறைவு மனதுக்கு நெருங்கிய ஒருவரின் மறைவாக மனவருத்தம் தருகிறது.

நான் அவருடைய ‘நாலாயிர திவ்யப் ப்ரபந்தம்’ வெளியீட்டை, பல தொகுதிகள் வாங்கியிருக்கிறேன். ஆனால், நாலாயிரம் புத்தகத்தில் அவர் கையெழுத்துடன் ஒன்று வாங்கிக்கொள்ளவேண்டும் என்று பிறகுதான் தோன்றியது. அவரிடம் எழுதிக் கேட்டதற்கு. அவர், அதனை அவருடைய அன்பளிப்பாகத்தான் தருவேன் என்று சொல்லியிருந்தார். விலையில்லாமல் வாங்கிக்கொள்ள என் மனம் இசையவில்லை.  அவர் நினைவாக அப்படி ஒன்று வாங்கிக்கொண்டிருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது.

நிறைய புத்தகங்களைத் தேடிச் சென்று படிப்பது, சிறுவர்களுக்காக ‘தாத்தா’ என்ற ஹோதாவில் குருகுலம் என்ற சிறு பத்திரிகை மின்னூலாக அனுப்புவதற்காக தயார் செய்வது, இணையத்தில் எழுதுவது என்று அவர் சமீபம் வரை சுறுசுறுப்பாக இருந்தார். அவர் வைணவ பக்தி நூலான நாலாயிர திவ்யப் பிரபந்தந்திற்கு அர்த்தம் எழுத முனைந்திருந்தார். கிட்டத்தட்ட நாலில் ஒரு பங்கு வேலையை முடித்திருந்தார். அதை அவர் முடித்திருந்தால், நல்ல ஒரு உரை, வைணவர்களுக்குக் கிட்டியிருக்கும். ஆனால் அதற்கான அவகாசமும், உடலுரமும் அவருக்குக் கிட்டவில்லை என்றே தோன்றுகிறது.

பி.எஸ்.ரங்கநாதன் என்ற கடுகு சாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்.  

அன்னாரின் மனைவி திருமதி கமலா ரங்கநாதன் அவர்களுக்கு இந்தச் சூழலைக் கடந்து செல்ல மன தைரியத்தைக் கொடுக்குமாறு ப்ரார்த்தித்துக்கொள்கிறேன்..  

=======================================================================================================


பேஸ்புக்கில் சேட்டைக்காரன் திரு வேணுகோபால் பதிவு...
======================================================================================================================


என் அத்திம்பேர் ‘தினமணி’யில் பணியாற்றி வந்தார். தினமணி, சினிமா எக்ஸ்பிரஸ், தினமணிக் கதிர், கதிர் வெளியீடாக வரும் நாவல்கள் அனைத்தும் அவர் வீட்டுக்கு வந்துவிடும். அத்தை வீட்டுக்குச் சென்றால் அவற்றை எடுத்துப் படிப்பதே என் வேலை. அப்படிப் படித்ததில் அறிமுகமானதுதான் கடுகு மற்றும் அகஸ்தியனின் எழுத்துக்கள். மிண்ட்டா ரோடு, சொல்லடி சிவசக்தி என்று கதிர் வெளியீடு நாவல்கள், தினமணி கதிரில் வந்து பெரியசாமி கதைத் தொடர் அனைத்தையும் அனுபவித்துப் படித்திருக்கிறேன். ரசித்துச் சிரித்திருக்கிறேன்.
பின்னொரு காலத்தில் எழுத்தாளர்(கள்) சுபா மூலம் கடுகு ஸாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு சிறு வேலை அவரிடமிருந்து பெறுவதற்காக நான் சென்று பார்த்ததில் நிகழ்ந்தது அந்த முதல் சந்திப்பு. அவரும் அவரது திருமதி கமலாம்மாவும் பல்லாண்டுகள் பழகியவர்கள் போன்று அன்பு காட்டியது மனதை நெகிழ்த்தியது. அவர் என் தந்தையைப் போன்றவர் என்று குறிப்பிட்டேன் அவரிடமே. மிக மகிழ்ந்தார்.
சென்னையம்பதியெங்கும் நான் நடந்தும், பேருந்து பிடித்தும் சென்று வந்ததைக் கவனித்த அவர், இருசக்கர வாகனம் வாங்கிக் கொள்ளப் பணித்தார். மிக ஏழ்மை நிலையிலிருந்த எனக்கு அதெல்லாம் கனவு என்றபொழுது தானே முழுமையாகப் பணம் செலுத்தி டிவிஎஸ் எக்ஸெல் வாங்கித் தந்தார். சிறுகச்சிறுக அந்தப் பணத்தைப் பல வருடங்களில் திரும்பத் தந்தேன் அவருக்கு. இன்றுவரை வாகனத்தை மாற்றுகிற சந்தர்ப்பங்கள் எத்தனையோ வந்தும் தவிர்த்தே வந்திருக்கிறேன். காரணம்... அது வெறும் வாகனம் அல்ல எனக்கு. கடுகு சாரின் அன்பின் ஸ்தூல வடிவம் அது. எழுத்துக்களில் என்றும் வாழ்வார்கள் எழுத்தாளர்கள். எனக்கு எழுத்துக்களோடு சேர்ந்து என் வாகனத்திலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பழைய புத்தகங்கள் பலவற்றை எனக்கு அன்பளித்து மகிழ்ந்தவர் அவர். அமெரிக்கா சென்று வரும் போதெல்லாம் எனக்காகத் தான் பார்த்த, படித்த சிறந்த புத்தகங்களை வாங்கி வருவார். இம்முறை அமெரிக்கா சென்றவர் சில ஆண்டுகளாகியும் திரும்பவில்லை. மெயிலில் கேட்கும் போதெல்லாம் விரைவில் வருகிறேன் என்பார். வராமலேயே விடைபெற்றுச் சென்றுவிட்டார். நீலாங்கரை வீட்டை நினைத்தாலே மனம் விம்முகிறது இப்போது.

========================================================================================

கடுகு ஸாரின் நண்பர் சித்ராலயா கோபு அவர்களின் மகன் பிரபல எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் பதிவு...=======================================================================

RV யின் சிலிகான் ஷெல்ஃப் பக்கத்தில் வெளியாகி இருக்கும் அஞ்சலிக்கட்டுரை...

"................................அகஸ்தியன் நான் படித்த செங்கல்பட்டு செயின்ட் ஜோசஃப் பள்ளியில் படித்தவர். எனக்கு ஒரு இருபத்தைந்து வருஷம் சீனியராக இருப்பார். அவருடன் கூடப் படித்தவர்கள் பிரபல இயக்குனர் ஸ்ரீதரும், சித்ராலயா கோபுவும். சில முறை இணையம் வழியாக பேசி இருக்கிறோம். பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், இனி மேல் முடியாது…
அவருடைய எண்பதாவது பிறந்த நாள் போது எழுதிய பதிவை அஞ்சலியாக மீள்பதிக்கிறேன்.............."

முழுவதும் படிக்க சுட்டியை க்ளிக் செய்து அங்கே செல்லவும்.


23 கருத்துகள்:

 1. என்னுடனும் மின்னஞ்சல் தொடர்பில் இருந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா வின் நகைச்சுவைப் புத்தகம் ஒன்றை அவர் PDF வடிவத்தில் வைத்திருப்பதாகவும், அதை உலக அளவில் கொண்டு சேர்க்க எப்படி இணையத்தில் ஏற்றுவது என்றும் கேட்டிருந்தார். அப்பொழுது எனக்கு இருந்த அரைகுறை knowledge வைத்துக்கொண்டு, அதை இணையத்தில் scribd தளத்தில் ஏற்றிக்கொடுத்தேன். எனக்குப் பரிசாக புத்தகங்களை அவருடைய கையெழுத்திட்டு அனுப்பினார். அவருடைய நகைச்சுவைக் கட்டுரைகள், கதைகள் எல்லாவற்றுக்கும் நான் பரம ரசிகன். நல்ல மனிதரும், நகைச்சுவையாளரும், நல்ல நண்பருமாகிய ஒருவரை இழந்துவிட்டோம். Sad.

  பதிலளிநீக்கு
 2. எனக்கு அவ்வளவு நெருங்கிய பழக்கம் இல்லை என்றாலும் எழுத்தாளர் -- ரசிகை என்னும் அளவிலேயே பழக்கம். அதுக்கே அவர் புத்தகத்தை எனக்கு விடாப்பிடியாக அனுப்பி வைத்தார். ஓர் புகழ் பெற்ற எழுத்தாளரிடம் இருந்து எனக்கு முதல் முதலாக வந்தது அது. பத்திரமாக வைத்திருப்பேன். மிக அருமையான நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் எழுத்துக்களின் மூலம் பல வாசகர்களைக் கவர்ந்தவர். இனி அவரது எழுத்தைப் பார்க்கவோ, படிக்கவோ முடியாது என்பது வருத்தத்தைத் தருகிறது. கமலாவும், தொச்சுவும், அங்கச்சியும் இனி கனவுகளிலே தான் காணலாம். மறக்க முடியாப் பாத்திரங்களைப் படைத்த மறக்க முடியாத மனிதர். அன்னாரின் ஆன்மாவுக்கு நற்கதி கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
 3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.
  மஹா பெரிய எழுத்தாளரை, நகைச்சுவை எழுத்தின்
  முடிசூடா மன்னரை, அகத்தியன், கடுகு
  என்று தன்னைச் சுருக்கி தன் கீர்த்தியைப் பெருக்கிக் கொண்டவரை

  வணக்கங்களுடன் நினைப்போம். இது போல அடக்கம் நிறைந்த
  ரசிகரை இனிமேல் பார்க்கமுடியுமா என்பதே பெரிய கேள்வி.

  பழைய நாள் தினமணிக்கதிர் ருசித்தது இவருடைய பகிர்வுகளால்.
  இன்னாளைய இணையமும் மகிழ வைத்தது
  அவரது பதிவுகளால்.

  கணேஷ் பாலாவின் அஞ்சலி நெகிழ வைத்தது.

  பதிலளிநீக்கு
 4. நம் நெல்லைத்தமிழனின் அஞ்சலி அளவுகடந்த அன்பைக் காட்டுகிறது. எத்தனை
  நபர்களை ரசிகர்களாக வாசகர்களாகப்
  பெற்றிருக்கிறார்.!!!!! என்றும் அவர் எழுத்து வாழும்.

  பதிலளிநீக்கு
 5. ஓர் மகத்தான மனிதருக்கு எமது அஞ்சலிகளும்...

  பதிலளிநீக்கு
 6. நேற்று முகநூலில் இச்செய்தியைக் கண்டதும் ஒன்றும் புரியவில்லை...

  யாரிடம் எதைக் கேட்பது.. அதற்கான சூழலும் இங்கில்லை...

  ஐயா அவர்களது ஆன்மா
  இறை நிழலில் நீங்காது இருக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  திரு அகஸ்தியன் அவர்களின் நகைச்சுவை கதைகள் நிறைய படித்திருக்கிறேன். அவர் இணையத்திலும் எழுதி வந்தார் என்பது இப்போதுதான் அறிந்து கொண்டேன். அவரின் மறைவு குறித்து செய்தியையும் அறிந்து வருத்தமுற்றேன். சிறப்பாக எழுத்துலகில் பவனி வந்த அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலிகள். அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான ஒரு எழுத்தாளரை இழந்திருக்கிறோம். அவர் மறைந்தாலும், அவரது எழுத்துகள் என்றும் நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கு இத்துயரத்தினை கடக்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.

  எனது அஞ்சலிகளும்.

  பதிலளிநீக்கு
 9. அதிர்ச்சியாக ஆரம்பித்திருக்கிறது வியாழன். பெரிய காரியங்களைச் செய்த சிறு கடுகு, திடீரென நழுவி எங்கோ உருண்டுபோய்விட்டது. இனி தென்படாது உருவமாக என்பது நமக்கான செய்தி.

  பார்த்திருக்கிறேன் ஒருமுறை. A fleeting glance.. எங்கே? புதுதில்லியில், பலவருஷங்களுக்கு முன், என் முதல் விசிட்டின்போது. ஒருநாள் டெல்லியின் மந்திர்மார்க் சாலையில் ‘சௌத் இண்டியா க்ளப்’ வாசலில் நான் நின்றுகொண்டிருந்தேன் என் அண்ணாவுடன். எதிரே போக்குவரத்து குறைந்ததான அந்நாளைய மந்திர் மார்கில், ஒரு லேம்ப்ரட்டா விர்ரென்று போனது. ‘கடுகுன்னு கேள்விப்பட்டிருக்கியாடா! அதோ போராறே அவர்தான் அது!’’ என்ற அண்ணாவின் குரல்கேட்டு, நான் சரியாகப் பார்ப்பதற்குள் ’கடுகு’ போய்விட்டது!

  நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். மிகக் கொஞ்சமாக, பெரும்பாலும் கல்கி, (அந்நாளைய) தினமணிகதிர் போன்ற பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன். நாலாயிரத் திவ்யபிரபந்தத்திற்கு உரை எழுதிக்கொண்டிருந்தார் என்பது நெல்லையின் எழுத்திலிருந்துதான் தெரிந்தது. அவரது கருணை குணம், நேசம்பற்றி நண்பர்கள் இங்கே பகிர்ந்திருப்பது அவர்மீது மதிப்பை மேலும் கூட்டுகிறது.

  அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். இறையருள் என்றும் இருக்குமாக.

  பதிலளிநீக்கு
 10. கடுகு என்னும் அகஸ்தியன் கதைகளை தினமணி கதிரில் நிறைய வாசித்து ரசித்திருக்கிறேன். சென்ற வருடம் கூட திணமணி கதிரில் அவர் தொடராக எழுதிய கேரக்டர் என்னும் தொடரை இணையத்தில் படித்தேன். அவருடைய வலைப்பூவில் எழுத்தாளர் சாவியின் வீட்டில் பகவான் சத்திய சாயி பாபா நிகழ்த்திய அற்புதம் ஒன்றை எழுதியிருந்தார். அதை எங்கள் குடும்ப வாட்ஸாப் குழுவில் பகிரலாமா? என்று கேட்டேன், "தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று அனுமதி தந்தார். நல்ல எழுத்தாளராக,மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் வாழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. அன்னாரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. எனக்கான அறிமுகம் எங்கள் ப்ளாக். இவர் பதிவுகள் படித்துள்ளேன்.நகைச்சுவை உணர்வு கைவரப் பெற்றவர் .

  அறிந்து அதிர்ச்சியுடன் மிகுந்த துயரம்.

  அவர் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 12. ஓ என்ன இன்று தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே, கடவுளே ஆருக்கும் எதுவும் ஆகிவிட்டதோ எனும் ஒருவித படபடப்போடு புளொக் திறந்தேன்.... துக்கமான செய்தி.

  நான் “கடுகு தாளிப்பு” எனும் புளொக் பெயர் பார்த்ததுண்டு ஆனால் ஒருநாள்கூட திறந்து படித்ததில்லை, நான் நினைத்தது, ஆரோ சமையல் புளொக் வச்சிருக்கினம் என்றுதான்.

  இப்படி அத்தளத்தின் உள்ளே, இவ்வளவு விசயம் எழுதியிருக்கிறார் என நெல்லைத்தமிழனின் எழுத்துப் படிச்சே தெரிஞ்சு கொண்டேன்.. இனிமேல் போய்ப் படிக்கலாம் என்றாலும்... மனம் இனி மிகவும் சங்கடப்படும்...

  அவரின் ஆத்மா சாந்திக்காக நானும் பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. ஓரிருமுறை அவர் தளம் சென்று வாசித்துள்ளேன் .பின்னூட்டமும் கொடுத்துள்ளேன் .ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் அஞ்சலிகள் அன்னாருக்கு 

  பதிலளிநீக்கு
 14. கடுகு சாரின் மறைவுக்கு இரங்கல்கள்.
  எனக்கு எங்கள்ப்ளாக் மூலமே அவர்கள் எழுத்துக்கள் பழக்கம்.
  நல்ல நகைச்சுவை எழுத்தாளர் என்று மட்டுமே தெரியும்.
  நெல்லைத்தமிழன், மற்றும் அனைவரின் அஞ்சலி பதிவுகளை படித்து கடுகு சாரைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.

  அவரது குடும்பத்தினர்களுக்கு இறைவன் மன ஆறுதலை தர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. இங்கு கடுகு அவர்களைப் பற்றி எப்போதோ சொல்லக் கண்டு அதிலிருந்து அங்கு சென்று வாசிக்கத் தொடங்கினேன். நெல்லை என்று நினைவு.

  கடுகு அவர்களின் எழுத்து மிக மிகப் பிடிக்கும். எழுத்துகள் மூலமே அறிவேன். எனக்கு நகைச்சுவை மிக மிக மிகப் பிடிக்கும். அவரது வலைத்தளம் தொடர்ந்து வாசித்து வந்தேன். அங்கு கருத்து இடவில்லை என்றாலும்.... கடைசியாக நான் வாசித்தது நீச்சலும் கூச்சலும்.

  கமலா தொச்சு, அங்கச்சி என்று கேரக்டர்கள் பப்ளி என்று செமையா இருக்கும். அது போல அவர் தளத்தில் வந்த கட்டுரைகளும் ரஸ்ஸல் பற்றி அவர் எழுதியதையும் வாசித்திருக்கிறேன்.

  என் மாமனார் கல்கியில் வந்த கதைகள், தொடர் தொகுத்து வைத்திருந்தார். அதில் ஒன்றில் கடுகு பதில்கள் என்று இருந்ததை 5 நாள் முன்பு வாசித்து ஸ்வாரஸ்யமானதைக் குறித்தும் வைத்திருக்கிறேன் பதிவில் பகிர. அந்தக் கடுகு அவர்கள்தான் தான் நாம் வலையில் வாசிக்கும் கடுகு அகஸ்தியன் அவர்களோ என்று எனக்கு சந்தேகம் இருந்தது. அதையும் ஆம் அவரேதான் என்று எபி வாட்சப்பில் நம் ரிஷபன் அண்ணா சொல்லியிருந்தார்.

  நகைச்சுவையாக எழுதுவது எல்லோருக்கும் கூடி வருவதில்லை. அப்ப்டியான ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டோம் என்றே சொல்லலாம்.

  அவருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 16. நெல்லை பாலகணேஷ் சேட்டைக்காரன், காலச்சக்கரா நரசிம்மா எல்லாரது அஞ்சலிகளும் உரைப்பது கடுகு அவர்கள் நல்ல மனிதர் என்பதை.

  கீதா

  பதிலளிநீக்கு
 17. //உரைப்பது கடுகு அவர்கள் நல்ல மனிதர் என்பதை. //

  இதைச் சொல்ல இத்தனை பேர்கள் வேண்டுமா?..

  ஆழ்ந்த இரங்கல்கள்.

  பதிலளிநீக்கு
 18. எங்கள் பிளாக்கில் கடுகு தாளிப்பு சுட்டி அப்படியே இருக்கட்டும்!

  வேண்டியவர்கள் வேண்டிய நேரத்து அமரர் பி.எஸ்.ஆர். பதிவுகளைப் படித்துக் கொள்ள வசதியான வாய்ப்பாக இருக்கும்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ..கடுகு தாளிப்பு சுட்டி அப்படியே.../

   இப்படி எனக்கும் தோன்றியது. நீங்கள் எழுதிவிட்டீர்கள்!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!