செவ்வாய், 2 ஜூன், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை : வெண்ணையும் சுண்ணாம்பும் - பரிவை சே. குமார்


வெண்ணையும் சுண்ணாம்பும்
பரிவை சே. குமார்  


சேரில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார் கந்தசாமி.  இன்று பத்திரம் போட இருக்கும் இடத்துக்காக மூத்தவன் முருகேசன் அனுப்பிய பெரும் தொகை அது என்பதால் திரும்பத் திரும்ப எண்ணிக் கொண்டிருந்தவரிடம் "எத்தனை தடவை எண்ணினாலும் அவன் எவ்வளவு அனுப்பினானோ அதுதானே இருக்கும்?" என்றபடி  அருகில் வந்தாள் வத்சலா.

"ஆமா...  இருந்தாலும் ஒரு தடவைக்கு நாலு தடவை எண்ணிப் பாக்குறது தப்பில்லையில்ல..."

"தப்பில்லைதான்... பேங்க்காரன் எண்ணாமலா கொடுத்தான்...?"

"நக்கலு...  சரி... சரி...  சாமிக்கு பூவெல்லாம் போட்டு தீபம் பத்த வச்சிட்டியா...  சாமி கும்பிட்டு...  சாப்பிட்டுக் கிளம்புறேன்... உன் தம்பி ரங்குவ வரச்சொன்னேன்..."

"ம்... எல்லாம் பண்ணிட்டேன்...  போயி தீபம் பார்த்து சாமி கும்பிட்டு வாங்க சாப்பிட...  இட்லி ரெடியா இருக்கு..."

"ரங்கு இங்க வாறேன்னானா... சாப்பிட வருவானா..?"

"வர்றேன்னான்... சாப்பிட்டு வர்றானா... இல்லையான்னு தெரியாது..."  இட்லியில் கொஞ்சம் பிய்த்துக் காரச்சட்டினியில் மூழ்கடித்து வாயில் வைத்த கந்தசாமியிடம் "ஏங்க... இப்ப இடம்
வாங்குறப்போ அவங்ககிட்ட ரோட்டோரமா எதுனாச்சும் இடங்கிடந்தா சொல்லச் சொல்லுங்க..."

ஏறிட்டுப் பார்த்தவர், "எதுக்கு..?  கடைகிடை வைக்கப் போறியா..?" எனக் கேட்டு விட்டுச் சிரித்தார்.

"இல்ல... முருகேசன் நாலஞ்சி இடம் வாங்கிப் போட்டுட்டான்...  வீடு கட்டிட்டான்... பாவம் பரமு... இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கான்...  பெருசா எதுவும் சம்பாத்தியம் இல்லை... ரெண்டு பொட்டப்புள்ளயள வேற வச்சிருக்கான்..."

"அதுக்கு..?"

"நாம கையில இருக்கதைப் போட்டாச்சும் அவனுக்கு ஒரு இடம் வாங்கிப் போட்டு வைக்கலாம்ங்க..."

"நல்லாயிருக்கு கதை... முருகேசன் நல்லாப் படிச்சி நல்ல வேலையில இருக்கான்... இவுகதான் படிக்கலையே...  படிச்சிருந்தாத்தான் பெரியவனாட்டம் வசதி வாய்ப்போட இருந்திருக்கலாமே... இனி அவனுக்கு இடம் வாங்கணும்ன்னு எம்முன்னால சொல்லிக்கிட்டு நிக்காதே... பார்த்துக்க...." கோபமானார்.

"இல்லங்க... அது... வந்து..." மெல்ல இழுத்தாள்.

"சின்னவன் விஷயமா எங்கிட்ட ஒண்ணும் பேசாதே... படிச்சித்தான் தொலையலைன்னாலும் பணங்காசு இருக்கவன் வீட்டுல பொண்ணெடுப்போம் அந்த வகையிலயாச்சும் நல்லா இருக்கட்டும்ன்னு பார்த்தா, இவரு அங்கயும் வில்லங்கம்தான் பேசுனாரு... சுந்தரவல்லி அத்தை யாருமில்லாம நாலு பொண்ணுகளை வச்சிக்கிட்டு சிரமப்பட்டுக்கிட்டு இருக்கு... அங்கதான் கட்டுவேன்னு என்னைய எதுத்துக்கிட்டு நின்னு ஒண்ணுமில்லாதவ வீட்டுல இருந்து ஒரு ஏப்புராசியக் கட்டிக்கிட்டு வந்துச்சு...  எங்கூடப் பொறந்தவ மேல எனக்கில்லாத அக்கறை இவனுக்கென்ன வந்துச்சு... அந்த வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை இவுக... இவுக போயித்தான் மூணு பொட்டச்சிகளக் கரையேத்தியிருக்காக... இவுகளால எனக்கென்ன ஆச்சு... இப்ப எம்புட்டுக் கடன் வாங்கி வச்சிருக்காகன்னு தெரியலை... அதான் சனியன் தொலையட்டும்ன்னு அந்த வீட்டுக்கே புள்ளயா விட்டுட்டேனே...  இனி அவுகளுக்குச் சொத்துச் சேர்த்து நானென்ன பண்ணப் போறேன்..." தட்டில் கை கழுவினார்.

"அவன எங்கயும் புள்ள விடலங்க... நல்லது கெட்டது எல்லாத்துக்கும் அவன் இங்கதான் வந்து நிக்கிறான்...  நம்மளை விட்டுத் தள்ளிப் போகவும் இல்லை... நம்மளைத் தள்ளி வைக்கவும் இல்லை... நல்லா யோசிச்சிப் பேசுங்க... மூணு பொட்டப்புள்ளய கரையேத்தியிருக்கான்னு சொன்னீங்களே... அது மூணு இல்லங்க அஞ்சு..."

"ஆமா அஞ்சு பொட்டப்புள்ளங்களைக் கரையேத்தியிருக்கான்... அவனால எனக்கென்ன ஆச்சுன்னு கேட்டீங்களே...  நம்ம வீட்டு ரெண்டு  பொட்டைக்கும் யார் செலவு பண்ணுனா...  பெரியவன் படிச்சிக்கிட்டு இருந்தான்...  உங்களுக்கும் சரியான வேலையில்லை... அப்ப இவன்தானே வெளிநாட்டுல போயி வேலை பாத்துக் கரையேத்துனான்... அவ்வளவு ஏன்... பெரியவன் படிச்சிருக்கான்... சம்பாதிக்கிறான்னு சொன்னீங்களே...  அவன் படிச்சதுக்கு செலவு பண்ணுனது யாருங்க... நீங்க மட்டும்தானா...  சொல்லுங்க பார்ப்போம்... இப்பவும் பெரியவன் அவனோட வாழ்க்கைக்கு எது தேவையோ அதுக்காக மட்டும்தான் உங்ககிட்ட வந்து நிக்கிறான்...  வேற என்ன பெரிசா நமக்கோ இல்ல கூடப்பொறந்ததுகளுக்கோ செஞ்சிட்டான்னு சொல்லுங்க பார்ப்போம்... சின்னவன் கல்யாணத்துக்கு முன்னால கஷ்டப்பட்டு சம்பாதிச்சதையெல்லாம் எங்கே... யாருக்காகச் செலவு பண்ணுனான்..?  கூடப் பொறந்ததுகளுக்காக இங்கதானே எல்லாத்தையும் போட்டான்... இப்பவும் கூடப் பொறந்ததுக வீட்டுல நல்லது கெட்டதுன்னா அவன்தானே முன்னாடி நிக்கிறான்...  பெரியவன் இல்லையே... இன்னைக்கி நெலமைக்கு பணங்காசு இல்லைன்னாலும் அவன்தாங்க பெரிய மனுசன்..." கண் கலங்கினாள்.

"இந்தா நல்ல காரியத்துக்குப் போகும் போது கண்ணக் கசக்கிக்கிட்டு...  அவனே பெரிய மனுசனா இருந்துட்டுப் போவட்டும்... சல்லிக்காசு அவனுக்காக செலவு பண்ண முடியாது... அம்புட்டுத்தான்..." 

"என்ன மச்சான்.... என்ன காலையிலயே சண்டை...?" என்றபடி உள்ளே வந்தார் ரங்கசாமி.

"வா ரங்கு... உம்பெரிய மாப்பிள்ளைக்கு இடம் வாங்கப் போறோம்ன்னதும் உங்கக்காவுக்குச் சின்னவுகளுக்கும் ஒரு இடம் வாங்கணும்ன்னு ஆசை வந்தாச்சு.... அதான் கண்ணக் கசக்குறாக..."

"அதெப்படிக்கா... முருகேசன் அவன் சம்பாத்தியத்துல வாங்குறான்...  இம்புட்டுப் பணம் போட்டு வாங்குற நிலமையிலயா பரமசிவம் இருக்கான்...?"

"நீயும் பணத்துப் பக்கம்தான் பார்க்கிறே...  முருகேசன் படிக்க யார் காரணம்...?  பரமு பாசக்காரன்டா...  அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க...?"

"அதுக்கு நம்ம கைல இருக்கிறதோட காடு கரையை வித்தாச்சும் இடம் வாங்கணும்ன்னு நிக்கிறாடா உங்கக்கா..."

"புரியாமப் பேசாதக்கா...  சொத்துப்பத்தெல்லாம் ரெண்டு பேருக்கும் பொதுதான்... அதுல கை வைக்க முடியாது...  சின்ன மாப்ளயால பணம் புரட்ட முடிஞ்சா வேலப்பனோட கொல்லையை வாங்கலாம்... அவன் கொடுக்குறதாச் சொல்லிக்கிட்டு இருக்கான்.... முருகேசனுக்கிட்டதான் கேட்கச் சொல்றான்... அதான் தீபாவளிக்கு குடும்பத்தோட வர்றாப்லயில்ல அப்பக் கேட்டுப் பார்க்கிறேன்னு சொல்லியிருக்கேன்... அதை வேணுமின்னா பரமுக்கு கேட்கலாம்...  கொஞ்சம் அடிச்சிப் பேசி வாங்க முடியும்..."

"ம்... எம்மனசுல தோணுச்சு... சொன்னேன்... ஒரே குதியாக் குதிக்கிறாக...  நாளக்கி இவருக்கு முன்னால நாம்பொயிட்டாலும் யாரு இவரைப் பார்க்கிறாங்கிறதை நீயும் ஊரும் பாக்கத்தானே போறீங்க... அன்னைக்கி பரமுதான் பார்ப்பான்... ஏன்னா அவன்தான் காசு பணம்ன்னு அலையாத பாசக்காரன்... அதெல்லாம் உங்களுக்குப் புரியாது... நீங்கள்லாம் பணத்துக்குப் பின்னால போறவங்க... சரி.... சரி... சாப்பிட வா..."

"சாப்பிட்டுத்தான் வந்தேங்கா..."

"அட ரெண்டு இட்லி சாப்பிடு... வா..."

"ஏய்... தீபாவளிக்கு முருகேசன் குடும்பம் வருது... எல்லாச் சாமானும் வாங்கணுமில்ல.... உன் தம்பிக்கு இட்லி வச்சிக்கிட்டே என்னென்ன வேணுமின்னு சொல்லு எழுதிக்கிறேன்... சுப்பையாண்ணே கடையில சொல்லிட்டா அட்டப்பெட்டியில அழகாக் கட்டிக் கொடுத்திருவாங்க...  எதுக்கும் ரெண்டு கட்டப்பையை எடுத்துக் கொடு...  வேறெதுவும் வாங்கினா வச்சிக்கலாம்ல்ல..."

ஐப்பசி மாசத்து மாலை மேக மூட்டமாய் இருந்தது.

"ஒரு வழியாப் பெரியவனுக்கு இடத்தை முடிச்சாச்சு... வேலப்பனோட கொல்லை விபரத்தையும் மத்தியானம் பேசும் போது அவனுக்கிட்ட போன்ல சொன்னேன்... தீபாவளிக்கு வரும்போது பேசலாம்ன்னு சொல்லிட்டான்..."

காபியை உறிஞ்சியபடி கணக்கு எழுதிக் கொண்டே பேசினார் கந்தசாமி.

மளிகைச் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்த வத்சலா "ஏங்க ரங்கு அதைப் பரமுக்குப் பேசலாம்ன்னு சொன்னானுல்ல... அதுக்குள்ள எதுக்கு அவசரமா முருகேசனுக்குச் சொன்னீங்க...?" என்றாள்.

"அட யாருடி இவ... அம்புட்டுக்காசு அவனுக்கிட்ட ஏது..? நல்ல கொல்லை வேற எவனும் வாங்குறதுக்குள்ள முருகேசன் பேசிட்டான்னா... பின்னால அதுல என்ன வேணுமின்னாலும் செய்யலாம்... இன்னைக்கு பள்ளிக்கூடம், காலேசுன்னு பொட்டக்காட்டுல எல்லாம் கட்டிப்போட்டு கோடி கோடியாச் சம்பாதிக்கிறானுங்க...  அப்படி ஒரு தொழிலை ஆரம்பிச்சிட்டு இங்கிட்டு வந்து அவன் செட்டிலாகலாமுல்ல...  அவனும் எம்புட்டுக் காலத்துக்குத்தான் சிங்கப்பூர்லயே கிடக்குறது?"

"எல்லாஞ் சரிதாங்க... ஆனா முருகேசனைப் பத்தி யோசிக்கிற நீங்க... பரமுவைப் பற்றிக் கவலையே படலையே  அது ஏங்க... முருகேசுக்குப் புள்ளைகளைப் படிக்க வைக்க, நல்ல வாழ்க்கை அமைச்சிக் கொடுக்கச் சொத்துச் சுகம் இருக்கு... ஆனா பரமுக்கு ரெண்டு பொட்டப்புள்ளையும் படிக்க வச்சி, கட்டிக் கொடுக்கிற அளவுக்கு வசதி வாய்ப்பு 
இல்லையேங்க....  நாம கை தூக்கி விடலைன்னா யார் அவனுகு உதவுவா... எல்லாருக்கும் செஞ்சுதானிருக்கானே தவிர யார்க்கிட்டயும் இதுவரைக்கும் அவன் கைநீட்டி நின்னதில்லைங்க... அப்படியே எம்மாமனார் மாதிரிங்க அவன்... ஆனா நீங்க..."

"மறுபடிக்கும் அவன் புராணம் பேசாதே... ஆளை விடு... அவனவன் தலையில விதிச்சதுதான் நடக்கும்.... மாத்தவா முடியும்... இன்னும் மூணு நாள்ல மூத்தவன் வர்றான்... ஏர்போர்ட் போகணும்... பேரப்புள்ளையளுக்கு வேணுங்கிறதெல்லாம் வாங்கியாந்து வைக்கணும்... அதுக முன்னாடி பட்டிக்காடு மாதிரி நடந்துக்காம டீசண்டா நடந்துக்கப் பாரு... இதே பரமு புராணத்தை அவங்க முன்னாடியும் பாடிக்கிட்டு நிக்காதே... புரியுதா...?" கோபமாக
பேசியபடி காப்பி டம்ளரை டக்கென வைத்தார்.

"அப்பா... நாளைக்கு ஏர்போர்ட்டுக்கு மாமா காரெடுத்துக்கிட்டு வர்றேன்னு  சொல்லிட்டாங்க... உங்களத்தான் வரச்சொல்லியிருக்கேன்னு சொன்னேன்...  அவுக நான் வாறேன்னு சொல்றாங்க.... மறுக்க முடியலை... அப்புறம் அங்க அத்தையும் மாமாவும்தானே இருக்காக... அதான் இந்தத் தீபாவளி எங்க கூடத்தான்னு தீர்மானமாச் சொல்லிட்டாங்க... அவங்க ஆசைப்படும் போது இல்லைன்னு சொல்ல முடியலை... அதனால நாங்க அங்க போயிட்டு தீபாவளி கொண்டாடிட்டு... தீபாவளிக்கு அடுத்தநாள் அங்க வாறோம்... நாம அந்தக் கொல்ல விஷயமா வேலப்ப மாமாவைப் பார்த்துப் பேசுவோம்... சரியாப்பா...?" போனில் கேட்டான் முருகேசன்.

"என்னப்பா நீ... இங்க வருவீங்கன்னு எல்லாம் வாங்கி வச்சிருக்கேன்... அங்க போறேன்னு சொல்றே... இங்க வந்துட்டு அப்புறம் போலாமே..."

"அப்பா... மகா மட்டுந்தானே அங்க... அவங்களுக்கும் மக நம்ம வீட்டுல தீபாவளி கொண்டாடனும்ன்னு ஆசை இருக்காதா... அதுவும் ரொம்ப வருசம் கழிச்சி எல்லாரும் வந்திருக்கோம்... நம்ம வீட்டுலதான் அக்கா, தம்பியின்னு எல்லாரும் வருவாங்கதானே... அது போக பசங்க ஏசி, வெஸ்டர்ன் டாய்லெட்டுன்னு பழகிட்டாங்கப்பா...  அதெல்லாம் அங்க இல்லையில்ல... அதாம்ப்பா... அடுத்த நாள் வரப் போறோம்.... பின்ன என்னப்பா..."

"ம்... சரிப்பா... உன்னிஷ்டம்..." என்றபடி போனை வைத்துவிட்டு மோட்டு வளையைப் பார்த்துப் பெருமூச்சொன்றை விட்டார்.

"சொல்லு பரமு..." என்றபடி அடுப்படியில் இருந்து போன் பேசியபடி வெளியே வந்த வத்சலா வியர்வையைத் துடைத்தபடி அவருக்கு எதிரே அமர்ந்தாள்.

"ம்...தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடியே வாரீங்களா... மளிகைச் சாமானா... அதெல்லாம் அண்ணன் வர்றான்னு அப்பா நிறையவே வாங்கி வச்சிட்டாரு... என்ன புதுடிரஸ்ஸா... எங்களுக்கு எதுக்குப்பா அதெல்லாம்....  உங்களுக்கு நல்லதா வாங்கிக்கங்கப்பா... ஆமா... அக்கா வீடுலாம் வர்றேன்னுதான் சொல்லியிருக்காக...

அண்ணனா... அதான் சொன்னேனே... வர்றேன்னுதான் சொல்லியிருக்கான்... அப்பாவத்தான் ஏர்போர்ட்டுக்கு வரச் சொல்லியிருக்கான்... சுப்ரமணியோட காரத்தான் சொல்லணும்ன்னு சொன்னாங்க.... ஆமா உங்கிட்ட பேசினானா... இல்லையா.... சரி சரி...  நிறைய எதுவும் வாங்கித் தூக்கிட்டு வராதே... என்னது... ஆமா சின்னப்பத்தாதானே... கெடக்கு....  தீபாவளியைத் தாண்டிரும்...  ரொம்ப மோசமாயில்லப்பா... அதுக்கு ஒரு சேலையா... எதுக்குப்பா... அது கட்டவா போகுது... ம்... சரி... சரி... ஆசைப்படுறே.... வாங்கிட்டு வா.... நூல் சேலையாப் பார்த்து வாங்கு... அது கட்டலைன்னாலும் உங்க சின்னத்தா கட்டிப்பாதானே.... சரிப்பா....  கேக்கணும்ன்னே நினைச்சேன் மறந்துட்டு என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கேன் பாரு... ஆமா என்ன கொணகொணன்னு பேசுறே.... ஊசி போடு... ஊரெல்லாம் காய்ச்சலா இருக்கு... ம்.... சரிப்பா... அப்பாவா.... 
வேலையா இருக்காருப்பா..." என்றபடி போனை வைத்து விட்டு “பெரியவனுக்கிட்ட பேசுனீங்களே... என்ன சொன்னான்...?  எத்தனை மணிக்கு ஏர்போர்ட் வரச் சொன்னான்..?”  எனக் கேட்டாள் வத்சலா.

அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் "என்ன பரமு எப்ப வர்றானாம்..?" என அவளிடம் கேள்வி கேட்டார்.

“கேட்டதுக்குப் பதிலைக் காணோம்... ம்... எப்பவும் மொதநாள்தான் இழுத்து வந்து சேருவான்... இந்தத் தடவை ரெண்டு நாள் முன்னாடி வர்றானாம்...” முகமெல்லாம் சிரிப்போடு சொன்னாள்.

“பேரப்புள்ளயளுக்கு எந்த வருசமும் டிரஸ் எடுத்துக் கொடுத்ததில்லை...  நாளைக்கு கடைக்குப் போயி அதுகளுக்கு நல்லதா டிரஸ் வாங்கிட்டு வருவோம்... சரியா...” என்றவரைப் புரியாமல் பார்த்தாள் வத்சலா.

43 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆ...   பார்றா...   முதல் கமெண்ட் சுவிஸ்ஸிலிருந்து!

      நீக்கு
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராமுக்கு விடியற்காலையில ஏதோ சுவிஸ் கனவு வந்திருக்கும்போல கீசாக்கா... ச்ச்ச்ச்ச்சும்மா சீண்டிப்பார்க்கிறார்:))

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆஆஆ சைன் பண்ணிட்டேன்ன்ன்ன் மிகுதிக்கு நாளைதான் வருவேன்:)... எல்லோருக்கும் நன்னாளாய் அமைய வாழ்த்துகிறேன்....

      நீக்கு
    2. தூங்குங்க... மெதுவா வாங்க...    குட்நைட்!

      நீக்கு
    3. இனிய காலை வணக்கம்.
      ஸ்ரீராம். அதிரா ஸ்விஸ்ஸா. ஸ்காட்லாண்ட் இல்ல?

      பரிவை குமார் கனியக் கனிய அழகான மகனின்
      கதையை எழுதி இருக்கிறார்.
      சுண்ணாம்பு வெண்ணெயாக மாறியதே அதிசயம்.

      எத்தனை அப்பாக்கள் இப்படி இருப்பார்களோ.

      மீண்டும் வருகிறேன். அன்பு வாழ்த்துகள் குமார்.
      அருமையான நடை. எழுத்தாளருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன.

      நீக்கு
    4. அதானே வல்லிம்மா நல்லாக் கேளுங்கோ:)).. என் பற:)ம்பறை:) யையே மாத்திப்போட்டார்ர் அதுவும் ஜாமத்தில கர்:)).. என்ன நினைச்சுக்கொண்டிருக்கிறீங்க எல்லோரும்:) அதிராவைப்பற்றிச் சொன்னால் கேள்வி கேட்க நிறையப்பேர் இங்கின இருக்கினமாக்கும்:)) ம்ஹூம்ம்.. ஹா ஹா ஹா.. நான் நைட் ஜம்பானது வேறு ஒரு கதை:)) சரி அதை பின்னொருக்கால் ஜொள்றேஎன்ன்ன்..

      அஞ்சு இங்கின என்னைத்தேடியோ ஜாமத்தில வந்திருக்கிறா நில்லுங்கோ வாறேன்:))...

      நீக்கு
    5. Haahaahaa. Athira dear, I was afraid my memory is slipping.thank you for the clarification.

      நீக்கு
    6. Haa haa don’t worry Vallimma you have a very good memory 😻😻😻😻

      நீக்கு
  3. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். உலகெங்கும் சாந்தி நிலவ வேண்டும் எனப் பிரார்த்திப்போம். எல்லாவிதமான பிரச்னைகளும் தீரவேண்டும் எனப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை/அல்ல நிகழ்வு. நடப்பதை அப்படியே எழுதி உள்ளார் குமார். வாழ்த்துகள். இப்போதும் எங்கும் நடப்பது தான். கடைசியிலாவது மனசு மாறினாரே தந்தை! அதுவே பெரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    குமாரின் கதைகள் எப்போதும் மனதை தொட்டுவிடும்.
    அன்பு பாசம், நேசத்தை சொல்லும்.
    உண்மையான உறவுகள் தான் முக்கியம், பணம்பெரிது அல்ல என்று சொல்லும் அருமையான கதை.
    தாயின் புரிதல் அருமை. தந்தையின் மனம் மாறியது மகிழ்ச்சி.

    வாழ்த்துக்கள் குமார். அடிக்கடி கதை எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. பணம்தான் வாழ்க்கை என்பதை மூத்தவன் உணர்த்தி விட்டான் அப்பாவுக்கு...

    சிறு குழப்பம் பெரியவனுக்கு இடம் வாங்கியதில் பத்திரம் போட்டது யாருடைய பெயரில் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ஹூம்ம்.. நாட்டுக்கு ரொம்ம்ம்ம்ப முக்கியம் கர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

      நீக்கு
  9. கதை அல்ல நிஜம்... சுயத்தை வெகு நேரம் சிந்திக்க வைத்து விட்டது...

    பதிலளிநீக்கு
  10. இனிய காலை வணக்கம்.
    //கதை அல்ல நிஜம்... சுயத்தை வெகு நேரம் சிந்திக்க வைத்து விட்டது...// டி.டி. நறுக்கு தெறித்தார்போல் கூற்யுள்ளார். என்றுமே, மின்னுவதெல்லாம் பொன்னல்ல. அது சொந்த மகனாகவேயிருந்தாலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு சொந்தக்கதை... சோகக்கதையை மாற்றின சந்தோசக்கதை...!

      ஒரு தகவலுக்காக :-

      தற்சமயம் அபுதாபியில் உள்ள நண்பர் குமார் அவர்கள், அனைவருக்கும் மறுமொழி இட முடியுமோ என்று தெரியவில்லை... சமீபத்தில் வெளிநாட்டில் உள்ளவர்கள், இங்கு வலைப்பூக்களுக்கு கருத்துரை வழங்க முடியவில்லை... அவர்களில் கலிபோர்னியாவை சேர்ந்த விசு அவர்கள், சுவிஸ்யை சேர்த்த நிஷா அவர்கள் உட்பட பலரும்...!

      சிலருக்கு தனது தளத்திலே அவர்களால் மறுமொழி இட முடியவில்லை... அவர்களில் தளத்தை ஆய்வு செய்தும், அனைத்தும் சரியாகவே உள்ளது...!

      முயற்சி செய்வோம்... செயல்பட வைப்போம்...!

      நீக்கு
  11. சரி, யார் யார் "Try the new blogger" சொடுக்கி பழகிக் கொண்டிருக்கிறீர்கள்...? இந்த மாத இறுதிக்குள் வலைப்பூவின் dashboard மாறி விடும் அல்லவா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த try new blogger அடிக்கடி காட்டுகிறது ..இது என்ன ? கொஞ்சம் விளக்கமா சொல்றிங்களா 

      நீக்கு
    2. என்dashboard மாறி 15 நாட்களுக்கு மேல் ஆச்சு.
      முகநூலும் மாறி விட்டது எனக்கு.

      நீக்கு
    3. பேஸ்புக் தேவையானால் மறுபடி அப்பழைய வடிவத்துக்கு கொண்டுவந்து விடலாம்.  

      நீக்கு
    4. Blogger Dashboard தோற்றம் மாற்றப்பட்டுள்ளது...அவ்வளவே... கிட்டத்தட்ட அனைத்தும் Icons...

      நீக்கு
  12. புரியவில்லை...
    ஒன்றும் புரியவில்லை...

    இப்படியெல்லம் திரு.குமார் அவர்கள் போட்டுத் தாக்குவது எப்படி என்று புரியவில்லை...

    பதிலளிநீக்கு
  13. ஒருவனுக்கு பணம்தான் வாழ்க்கை.ஒருவனுக்கு உறவினர்களும் அன்பும்தான் என்பதை சொல்லும் கதை நன்றாக சொல்லியுள்ளார் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. குமார் சகோதரரின்  கதையில்  ஒரு கிராமிய மணம் பாசம் எல்லாம் வீசும் அது இக்கதையிலும்  உண்டு . பண்பான அன்பான மகனை இப்போதாகிலும் புரிந்துகொண்டாரே தந்தை 

    பதிலளிநீக்கு
  15. அட! நம்ம குமார் கதையா?.. படிச்சேன். நல்லா வந்திருக்கு.

    குடும்பப் பாச சிக்கலுக்குள் அருமையா சிடுக்கு எடுத்திருக்கிறார்.

    ஒரே நேரத்லே ரெண்டு போன் கால்லே கதையை தலைகுப்புற அடிச்சு கதையின்
    போக்கையே மாத்திட்டாரே! அதையும் ரொம்ப சிம்பிளா மாறுபட்ட கோணத்லே
    கையாண்டிருக்கிறார். அதுக்காகவே பாராட்டணும். வாழ்த்துக்கள், பரிவை!

    பதிலளிநீக்கு
  16. //அப்படியே எம்மாமனார் மாதிரிங்க அவன்... ஆனா நீங்க..." //

    இதையே நான் மாற்றி நினைச்சேன் குமார். எல்லாம் ஜீன்களின் ஆட்டபாட்டம் தான். அந்த கந்தசாமிக்கு அவங்க அப்பா குணம் தான் அப்படியே வந்து வாச்சிருக்குன்னு நினைச்சேன். கந்தசாமிக்கு அக்கா- தங்கைகள் இருந்திருக்க மாட்டார்கள் போலிருக்கு. பெண் பிள்ளைகள் இல்லாத குடும்பங்கள் இப்படித் தான் இருக்கும். தன் அப்பா குணம் தான் முருகேசனுக்கும் தொடருகிறது என்று நினைச்சேன்.

    அதே மாதிரி தன்னோட அம்மா குணம் பரமுவுக்கு வாச்சிருக்குன்னு நினைச்சேன்.
    பரமுவின் அம்மா வத்சலா பெண் பிள்ளைகள் நிறைந்த குடும்பச் சூழலிலிருந்து வந்திருப்பார் போலிருக்கு. பெண்கள் நிறைந்த குடும்பங்கள் இந்த மாதிரி பாசக்கார சூழலிருந்து விடுபடவே முடியாது. வழிவழியாய் பெண்கள் வழியாய் தான் நம் குடும்ப பாசங்களே வேர் விட்டு வளருகிறது. பரமுவின் பாசம் அவன் பெண் குழந்தைகள் வழி தொடர்ந்து இருக்கும்.

    நல்ல கதையைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள், குமார்.

    பதிலளிநீக்கு
  17. பல குடும்பங்களில் நடக்கும் விஷயம்தான். இறுதியில் சுண்ணாம்பு வெண்ணையானதில் சந்தோஷம். பெரும்பாலும் உரையாடல்களிலேயே கதையை நகர்த்தி, பாத்திரங்களின் தன்மையை உணர வைத்திருப்பது சிறப்பு. 

    பதிலளிநீக்கு
  18. இப்பொழுதுதான் கதை படிக்க முடிந்தது.. மொத்தக் கதையையும் தாண்டி, பேசும் பேச்சுக்கள், சம்பாசனைகள் ரசிக்க வைக்கின்றன.. கிராமத்துக்கே அழைத்துச் செல்கின்றன.

    பதிலளிநீக்கு
  19. குமார் கதை மிக மிக நன்றாக இருக்கிறது.

    உண்மை உண்மை உண்மை! இது யதார்த்தம். பணத்தை வைத்து எடை போடும் குணத்தில் நீங்கள் சொல்லியிருப்பது அப்பா.

    நான் அம்மாக்களையும் கண்டிருக்கிறேன் குமார்.

    அப்பா கடைசியில் அன்பான மகனைப் புரிந்து கொண்டு விட்டாரே. ஹப்பா.

    பாராட்டுகள் வாழ்த்துக்ள் குமார்

    கீதா

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஸ்ரீராம் அண்ணா...
    நலம். நலமே ஆகுக.
    இன்று எனது கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
    திண்டுக்கல் தனபாலன் அண்ணன் சொன்னது போல் கருத்திட முடிவதில்லை... அவரும் முயற்சித்தார்... இருந்தும் ஏனோ சரியாகவில்லை.

    எனது கதையை தங்கள் கருத்துக்களால் அலங்கரித்த அனைவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல ஆசைதான்... முடியாத சூழல் என்பதால் ஒரே பதிவில் சொல்லிவிடுகிறேன்.

    கில்லர்ஜி அண்ணன் பத்திரம் குறித்துக் கேட்டிருக்கிறார்.... கிராமங்களில் பத்திரம் போடுவது என்பது ரெண்டு சாட்சிகளை வைத்து மொத்தத் தொகையில் பாதிக்கு மேல் கொடுத்து கிரயம் பண்ணிக் கொள்வார்கள்... அதாவது எழுதி வாங்கிக் கொள்வார்கள். யார் பேருக்குப் பத்திரமோ அதை அவர் வந்த பின் மீதத்தொகையைக் கொடுத்து பத்திரம் போட்டுக் கொள்வார்கள்... கிரயம் பண்ணிக்கிற நாள் என்பதைச் சொல்வதை விட பத்திரம் போடும் நாள் என்றால் புரியம் என்றுதான் பத்திரம் போட்டேன்.

    செல்வராஜ் ஐயா புரியவில்லை ஒன்றும் புரியவில்லை என்றதும் அய்யய்யோ கதை சரியில்லையோன்னு பார்த்த பின்னால் வந்த கருத்தில் நல்லாயிருக்குன்னு சொல்லியிருப்பது மகிழ்ச்சி.

    ஜீவி ஐயாவின் வாழ்த்துகள் எல்லாம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஊரில் மாமனாரை மாதிரி எனச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்... அதை வைத்துத்தான் எழுதினேன்... இப்போ என் பையனின் சேட்டைகளை வைத்து ஊரில் அவங்க ரெண்டாவது பெரியப்பன் மாதிரியே சேட்டை செய்கிறான் பாருன்னு சொல்வாங்க... ஏன்னா குமாரு ஊருக்குள்ள அமைதியான பையன்... விஷால் ஆர்ப்பாட்டமான பையன்... :)

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்கள்... நன்றி.

    நான் மற்றவர்களின் தளத்தில் சென்று கருத்துச் சொல்ல முடியாத நிலை என்பதால்தான் தங்கள் பதிவுக்கெல்லாம் கருத்திடுவதில்லை... மற்றபடி வாசிப்பேன்... அதுவும் கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் பதிவுகள் எல்லாமே அருமை... வாசிப்பதுடன் சரி....

    எங்கள் பிளாக்குக்கு என்றால் இப்படியான கதைகளைத் தேடி அனுப்ப வேண்டியிருப்பதாலேயே எப்பவாச்சும் ஒரு கதை என அனுப்புகிறேன்... கோமதி அம்மா அடிக்கடி எழுதச் சொல்லியிருக்காங்க... பார்க்கலாம்... அடுத்து ஒரு கதை அனுப்பலாம்....

    இப்போ ஒரு நாவலுக்கான முயற்சியில் இருக்கிறேன்... அதனால் வேறு கதைகள் எழுதவில்லை... விரைவில் எழுதி அனுப்புகிறேன்.

    தங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி.

    அன்புடன்.

    'பரிவை' சே.குமார்.
    அபுதாபி

    பதிலளிநீக்கு
  21. கதை அருமையாக வந்திருக்கிறது. நடைமுறையில் நடப்பதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள்.

    எப்படியோ தந்தை தன் மகனின் அன்பைக் கடைசியில் புரிந்து கொண்டாரே.
    மிக அழகாகச் சொல்லிச் சென்ற விதத்திற்குப் பாராட்டுகள், வாழ்த்துகள் குமார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  22. கதை சிறப்பாக வந்திருக்கிறது. பாராட்டுகள் குமார்.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    கதை மிகவும் அருமையாக இருக்கிறது. இப்படியும் ஒரு பக்கம் மட்டுமே அன்பை காட்டும்/எதிர்பார்க்கும் தந்தைமார்கள்... கடைசியில் மூத்த மகனின் மனது புரிந்ததும் கண் திறக்கிறார். தாயின் அன்பு பொதுவானதுதான்.. ஆனால் முதலில் இருந்தே தாய் சொல்லும் போது அவர் சற்றும் அசையாமல் இருந்ததும் நன்மைக்கே.! மூத்தவரின் சுயநல மனதை புரிந்து கொள்ள ஏதுவாகிறது. பரமுவின் நல்ல மனது இனியாவது போற்றப்படட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. சில் நேரங்களில் ஒரே தாய்தந்தைக்கு பிறந்தாலும் இப்படி அமைவதுண்டு

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!