திங்கள், 10 ஆகஸ்ட், 2020

'திங்க'க்கிழமை : ப்ரெட் லோஃப் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி 

நிறைய செய்முறைகள் என் பெண் பண்ணினா. அதையெல்லாம் படங்கள் எடுத்து வச்சிருக்கேன். அவள்ட இதை எ.பிக்கு அனுப்பப் போகிறேன் என்றேன். ஆனால் ஒன்றையும் இதுவரை எ.பிக்காக எழுதவே இல்லை. ஒவ்வொரு தடவையும், இதையே முதல் செய்முறையா எழுதிவிடுகிறேன் என்பேன்.  

தொடர்ந்து எனக்கு எடை அதிகமாகிக்கொண்டே இருந்ததால், இன்று ஜி.எம். டயட் ஆரம்பிக்கணும் என்று நினைத்து காலயிலிருந்து ஆரம்பித்தேன். மதியம் 2 மணி வரை ஒழுங்காகப் போயிட்டிருந்தது. 

அப்போதான் கிச்சனிலிருந்து எண்ணெயில் பொரிக்கும் வாசனை வந்தது. இது என்னடா இந்த நெல்லைக்கு வந்த சோதனை என்று போய்ப்பார்த்தால், என் மனைவி பால் போளி செய்துகொண்டிருந்தாள். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.  நான் ஜி.எம். டயட் ஆரம்பித்த அன்றுதானா பால்போளி செய்யணும்?  நாளைக்குக்கூட ஜி.எம். டயட் ஆரம்பிக்கலாம். ஆனால் நாளை பால்போளி செய்வாளா என்று என் மனது என்னைக் கேட்டது. அவ்ளோதான்.. பண்ணின பால் போளில ஐந்தை எடுத்து ஒரு தட்டில் போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டேன்..   

அப்போதான் என் பெண், அவனில் தான் வைத்திருந்த ப்ரெட் லோஃபைக் காண்பித்தாள். நான் எல்லோரையும் என்கரேஜ் பண்ணுவதில் ரொம்ப எக்ஸ்பர்ட் (ஹா ஹா) என்பதால், அவளிடம், ப்ரெட்டை எதுக்கு கஷ்டப்பட்டு பண்ணற.. பேசாமல் இரண்டு ப்ரெட்டுக்கு 70 ரூபாய் கொடுத்தால் கடைக்காரன் கதறிக்கொண்டு நம்மிடம் பிரெட்டைக் கொடுப்பான் என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

கொஞ்ச நேரத்தில் அவனிலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைத்துவிட்டு என்னைக் கூப்பிட்டாள். பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.  கட் பண்ணி ஒரு ஸ்லைஸ் தந்தாள். கட் பண்ணும்போதே எனக்கு நல்ல குவாலிட்டில ப்ரெட் வந்திருக்கு என்று தெரிந்துவிட்டது. 

அவ்வளவு சுவையாக மெத் மெத் என்று இருந்தது.  படங்கள் ஏதேனும் எடுத்திருக்கிறாயா என்றேன். கொஞ்சம் எடுத்திருக்கிறேன் என்றாள். (ஆனா நான் ஒழுங்கா அவள் செய்யும் ஒவ்வொன்றையும் இந்த மாதிரி எழுதியிருந்தேன் என்றால் எல்லா ஸ்டெப்ஸுக்கும் படங்கள் எடுத்திருப்பாள்).  அவள் செய்த ப்ரெட்டில் நான் ரொம்பவே இம்ப்ரெஸ் ஆகிவிட்டேன்.  சரி.. இப்போவே எ.பிக்கு செய்முறை எழுதிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு உடனே எழுத ஆரம்பித்தேன்.

தேவையானவை
5 அல்லது 5 1/2 கப் மைதா மாவு.
1 1/2 தேக்கரண்டி உப்பு
1/3 கப் ஜீனி
2 கப் தண்ணீர்
4 மேசைக்கரண்டி எண்ணெய்
1 1/4 மேசைக்கரண்டி  Instant Yeast  

செய்முறை

1. தண்ணீரை கொஞ்சம் சூடாக்கி (above warm) அதில் ஜீனியைச் சேர்க்கவும். ஓரளவு கரைந்துவிடும். இப்போ தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும். அப்படீன்னா விரலை ஒரு நிமிடம் தண்ணீரில் வைத்துக்கொண்டிருந்தாலும் சூடு பொறுக்கும்படி இருக்கணும் (சூடா இருக்காது. சூடான தண்ணீரில் ஈஸ்ட் சேர்த்தால் அது வேலைக்காகாது).

2. அதில் ஈஸ்ட் சேர்த்து கலக்கணும். ஒரு நிமிடத்தில் லைட்டாக நுரை நுரையாக வரும்.

3. மைதா மாவும்  உப்பு சேர்ந்த கலவையில்,  4 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து, அதனுடன் இந்த ஈஸ்ட் சேர்த்த தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும்.

4. முதல்ல கொஞ்சம் ஒட்டுவது போல இருக்கும். 15 நிமிடம் நல்லா கலக்கினால் சப்பாத்தி மாவை விட சாஃப்டா வரும்.

5. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி, மாவை வைத்துவிட்டு, பாத்திரத்தின் மேல் ஈரத் துணியோ அல்லது க்ளிங் ஃபில்மோ போட்டு 20-25 நிமிடங்கள் வைத்துவிடவும்.

6. பிறகு அந்தப் பாத்திரத்தைப் பார்த்தால், மாவு உப்பி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு பெரிதாகியிருக்கும்.

7. அதை திரும்பவும் பிசைந்தால் முன்பு இருந்த அளவுக்கு வந்துவிடும்.
8. இதனை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளவும்.

9. ஒரு பகுதியை, செவ்வகம் மாதிரி பரத்தி, அதன் ஒரு நீள் பகுதியை  மடித்து, இரண்டாவது நீள் பகுதியை அதன் மேல் வைக்கவும். அதாவது மூன்றில் ஒரு பகுதி கீழேவும், அதன் மேல் வலதுபக்கத்திலிருந்து வந்த பகுதியும் அதன் மீது இடது பக்கத்திலிருந்து வந்த பகுதியையும் வைக்கவும். இப்போ மீண்டும் செவ்வக வடிவத்தில் இருக்கும். வலது புற ஓரத்தை மெதுவாக அழுத்திவிடவும் (பிரியாமல் இருக்க). பிறகு இதனை கீழ்ப்பகுதி மேல் புறமாக வருமாறு பாத்திரத்தின் ஒரு பகுதில் வைக்கவும்.  (அதாவது ஸ்மூத் பகுதி மேல் புறமும், ஒட்டிய பகுதி கீழ்ப்புறமும் இருக்கும்). இதேபோல இன்னொரு பகுதியையும் செய்யவும். Actually நாம இரண்டு ப்ரெட் லோஃப் தயார் செய்கிறோம்.  இரண்டையும் வைத்த பிறகு,அந்தப் பாத்திரத்தை துணி அல்லது க்ளிங் ஃபிலிம் போட்டு மூடிவிடவும்.  

10. சுமார் நாற்பது நிமிடங்கள் கழித்து இரண்டும் பெரிதாகும்.

11. பிறகு அதை அவனில் வைக்கவும். இப்போது அதன் மீது என்ன டாப்பிங் வேண்டுமோ அதனைச் சேர்த்துக்கொள்ளலாம்.  என் பெண், ஒன்றை நார்மலாகவும், இன்னொன்றின் மீது வெள்ளை எள்ளைத் தூவியும் வைத்தாள்.

12. நாற்பது அல்லது ஐம்பது  நிமிடங்கள் அது bake ஆகணும்.

நல்லா bake ஆகிவிட்டால் ப்ரெட் லோஃப் ரெடி.







ப்ரெட் லோஃப்லாம் கடைகள்லயே வாங்கிடலாம். நல்ல ப்ராண்டட் கடைகளாக இருந்தால் (இந்த ஊர்ல இருக்கும் கேக் வாலா என்பது போன்ற) லோஃப் செய்வதற்கு உபயோகிக்கும் பொருட்கள் தரமானதாக இருக்கும்.  நான் ஒரு தடவை லால்பாக் (Lalbaugh) பூங்காவில் நடைப்பயிற்சி போயிருந்தபோது அதற்கு எதிரே ஒரு பேக்கரி வேன் வந்து எல்லாப் பொருட்களையும் விற்றுக்கொண்டிருந்தார்கள் (properஆ pack செய்தது). ஊரடங்கு சமயத்தில் நல்ல சாண்ட்விச் ப்ரெட் கிடைக்காததால், அங்கு இந்த வேனைப் பார்த்ததும் பெரிய முக்கோண வடிவில் இருந்த சாண்ட்விச் ப்ரெட் 60 ரூபாய்க்கு வாங்கினேன்.  

பசங்க அதை வைத்து சாண்ட்விச்லாம் பண்ணிச் சாப்பிட்டாங்க. இன்னொரு சமயத்தில் பெங்களூர் ஐயங்கார் பேக்கரியில் அதே போன்ற சாண்ட்விச் ப்ரெட் (லோஃப்) வாங்கினேன். ஆனா அதில் ஏதோ ஸ்மெல் வருதுன்னு பசங்க சொன்னாங்க. அவ்வளவா விரும்பலை.  அதுனால ingredients qualityயா இல்லைனா நல்லா இருக்காது. வீட்டில் ப்ரெட் செய்யும்போது எல்லாமே நல்ல பொருட்களைச் சேர்ப்பதாலும் சுத்தமாக இருப்பதாலும், ப்ரெட் சூப்பராக இருக்கும்.

வாய்ப்பு கிடைத்தால் செய்துபாருங்கள்.

அன்புடன்

நெல்லைத்தமிழன்.

================

துரை செல்வராஜூ ஸார்  இன்று மதியம் எனக்கு அனுப்பி வைத்து பதிவில் சேர்க்கச் சொல்லியுள்ள படங்கள்.   இன்று அவர் அலுவலக கிச்சனில் தயாரானதாம் இது.  -  ஸ்ரீராம் 




மிச்ச விவரங்களை துரை செல்வராஜூ சாரே சொல்வார்!

=========================================================================================================




================


102 கருத்துகள்:

  1. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. இந்த பிரட் லோஃப் தான் இங்கே சமூன் என்று மிக அதிகமாகத் தயாரிக்கப்படுவது..

    இதனை பக்கவாட்டில் அறுத்து பலவிதமான உள்ளீடுகளை வைத்துத் தின்று தீர்ப்பார்கள்..

    அரபு உணவு கலாசாரத்தில் வெள்ளை எள் என்பது தவிர்க்க இயலாதது..

    அரபு சமூன் வகையறாக்களில் முட்டையும் பால் பவுடரும் கண்டிப்பாக இடம் பெறுபவை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்...

      //தின்று தீர்ப்பார்கள்// - ஹா ஹா.

      நீக்கு
  3. பொதுவாக இது உடலுக்கு நல்லது என்கிறார்கள்.. மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கும் கொடுக்கிறார்கள்..

    90 ℅ வெள்ளை மாவு தான் இதன் அடிப்படை..
    வெள்ளை மாவு எந்த அளவுக்கு உடல் நலம் காக்கும் என்று தெரியவில்லை..

    ஏதாவது விஷயம் இருக்கும்..
    நாம என்னத்தைக் கண்டோம்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஞ்ஞானம் என்றாலே வளர்ச்சிதானே. Stagnant கிடையாதே. விஷமுறிவுக்கு வாழைத்தண்டு பட்டைச் சாறு, இந்தப் பிரச்சனைக்கு இஞ்சிச் சாறு...இது மாதிரி நம்ம பாரம்பர்ய விஷயங்கள்தான் stagnant. அதுதான் ஆயிரம் ஆயிரம் காலத்தில் யோசித்து, உபயோகித்து கண்டுபிடிச்சிருக்காங்களே.

      நான் சின்ன வயசுல உடம்பு சரியில்லாமல் ஹாஸ்பிடலுக்கு எங்கப்பா அழைத்துச்சென்றால், ஒரு பன் வாங்கித்தருவார் (அதற்காகவே அவ்வப்போது உடம்பு சரியில்லாமல் போகாதா என்று எண்ணுவேன்). இப்போ சொல்றாங்க.. பேக்கரி பொருட்களே உடம்புக்கு நல்லதில்லையாம். மைதா நல்லதில்லையாம். (அப்புறம் ஏண்டா..அப்போ உடம்புக்கு நல்லதுன்னீங்கன்னு யாரைப் போய்க் கேட்பது?)

      அது சரி...இயற்கைப் பொருட்களையே சாப்பிட்ட நம் முன்னோர்கள் என்ன ஆயிரம் ஆண்டுகளா இருந்தார்கள்? 40-60லேயே போய்விட்டார்கள். அப்புறம் ஏன் நாம் ரொம்ப இதைப்பற்றிக் கவலைப்படணும்?

      நீக்கு
  4. அன்பின் துரை இனிய காலை வணக்கம்.
    அகம் செம்மையாக அமைந்த நட்புகள்
    நமக்கு அமைய இறைவனை வேண்டுவோம்.

    அன்பு ஸ்ரீராம், கௌதமன் ஜி,கீதாமா,கமலாமா
    அனைவருக்கும் இன்னாள் நன்னாளாக
    அமைய வாழ்த்துகள்.

    நெல்லைத்தமிழனின் ப்ரெட் லோஃப்
    செய்முறை மிக அருமை.
    விளக்கமான படங்கள் .அடுத்தடுத்து எடுத்திருக்கும் படங்கள்
    எல்லாமே அழகு.

    இங்கே முன்புபோல நல்ல ரொட்டி கிடைப்பதில்லை.
    மைதா வாங்குவதில்லை.
    இத்தனை சிறப்பான ரொட்டி பார்த்ததில்லை.
    மகளுக்கும், தந்தைக்கும் அன்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  நலம்தானே?

      நீக்கு
    2. நலம் தான் ஸ்ரீராம். எல்லோரும் நலமாக இருங்கள்.

      நீக்கு
    3. நீங்கள் நலமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி சகோதரி.. உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் என் பணிவான நன்றிகள்.

      நீக்கு
    4. வாங்க வல்லிம்மா... பஹ்ரைன்ல அவ்வளவு அட்டஹாசமான விதவிதமான ப்ரெட் லோஃப்கள் கிடைக்கும். ரொம்ப சுத்தமாகவும் இருக்கும்.

      இந்த ஊரடங்கு பிஸினஸ் ஆரம்பிச்சபிறகு உருப்படியா எதுவுமே கிடைக்கறதில்லை. எதை நம்பியும் வெளிய போக முடியறதில்லை.

      உங்கள் கருத்திற்கு நன்றி. எனக்கு பெங்களூர் குளிர் கொஞ்சம் ஒத்துக்கொள்ளவில்லை. இரண்டு நாட்களாக காய்ச்சல். இன்றைக்கு இந்த இடுகை வெளியானபிறகுதான் பெண் செய்த ப்ரெட் நினைவுக்கு வந்தது. அவள்ட சொல்லியிருக்கேன்..எனக்கு மட்டும் இன்று இது செய்துதரச் சொல்லி. பார்க்கலாம் அவளுக்கு நேரம் இருக்கா என்று.

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நோய்த்தொற்றை விட வேகமாகப் பரவும் வதந்திகள் கட்டுக்குள் வரவும், நோய்த் தொற்றின் வீச்சு கட்டுப்படவும் பிரார்த்தனைகள். நேற்று மாலை வேல் வழிபாட்டில் எங்க வீட்டில் தனியாக விளக்கு ஏற்றி வைத்தோம். வேல் ஸ்வாமி அலமாரியில் இருப்பதால் தனியாக எடுக்கவில்லை. மனதில் வேலை நினைத்துத் தனியாக மனதில் பிரார்த்தித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  6. நெல்லைத்தமிழனின் திறமையான பெண் செய்திருக்கும் ரொட்டி நன்றாக வந்துள்ளது. பொறுமையாகவும், நிதானமாகவும் செய்நேர்த்தியுடனும் அவர் செய்யும் உணவு வகைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அவர் பேக்கரி வகைத் தின்பண்டங்களே செய்கிறார். அது தான் பிடிக்குமோ? இந்த ரொட்டி (ப்ரெட்) கோதுமை மாவிலும் செய்யலாம். நாங்க கடைகளில் வாங்குவது கூட ப்ரவுன் ப்ரெட் எனப்படும் கோதுமை மாவினால் செய்த ரொட்டி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்....இப்போ நான் சமையலறையில் ஏதாவது செய்வோம் என்று நினைத்துச் செய்யும்போது அனேகமா எனக்குப் பிடித்தவைகளை மட்டும்தான் செய்வேன். அவள் பீட்சா, மசாலா பன், வித வித கேக்-ஐஸிங்லாம் இல்லாம, நார்த் இண்டியன் சைட் டிஷ், என்னன்னென்னவோ செய்வாள். பாதிக்குமேல் நான் சாப்பிடமாட்டேன். இரண்டு நாட்கள் முன்பு பீட்ஸா மாதிரி ஆனால் ரொம்ப தடியா வேற ஏதோ ஒன்று செய்திருந்தாள். நான் சிறிதளவே சாப்பிட்டேன். ரொம்ப ருசியாக இருந்தது. ஊரிலிருந்து நாங்கள் திரும்பிய அன்று அவள்தான் வத்தக்குழம்பு, உருளை ரோஸ்ட் செய்தாள், ஆனால் அது அபூர்வம். ஹா ஹா.

      நீக்கு
    2. நேற்று அவளே குஞ்சாலாடு செய்தாள் (முதல் முறையாக). நான் ரொம்ப நாளா லட்டு சாப்பிடணும்னு ஆசை. இந்த ஊரடங்கு காலத்தில் எங்கயும் வாங்கிச் சாப்பிட பயம். நேற்று செய்த குஞ்சாலாடு ரொம்ப நல்லா வந்திருந்தது. ஆனால் அவள் ரெஃபர் பண்ணின வீடியோல கொஞ்சம் அதிகமா சர்க்கரை போடச் சொல்லியிருந்தார்கள் போலிருக்கு. End product Super, ஆனால் ஜீனிப் பொடி அதிகம்.

      அது இருக்கட்டும்..Brown bread, White breadபோல ருசியாக இல்லை. கவனித்தீர்களா?

      நீக்கு
    3. இப்போ எந்தத் தித்திப்புமே பண்ண முடியலை! :( உங்க மகள் சமையல் கலையில் ஆர்வமாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது. மனதாரப் பாராட்டுங்கள் குழந்தையை. ப்ரவுன் ப்ரெட் எங்களுக்குப் பிடிக்கும். அநேகமாய் மாடர்ன் ப்ரெடில் தான் ப்ரவுன் ப்ரெட் இங்கே/இந்தியாவில் வாங்குவோம். அம்பேரிக்காவில் வித விதமாய் ப்ரவுன் ப்ரெட் வாங்குவர்கள். குழந்தைக்குக் கூட ப்ரவுன் ப்ரெட் தான்.

      நீக்கு
    4. //எந்தத் தித்திப்புமே பண்ண முடியலை// - அட... ஆமாம்ல. வீட்டில் உள்ள மற்ற யாருக்குமே கத்தரிக்காய் பிடிக்காவிட்டால், கத்தரிக்காய் சாப்பிடுவதே விட்டுவிடுவதைப்போல.....

      நீக்கு
    5. இப்போவும் அப்படித்தான் நெல்லை. கத்திரிக்காய் இப்போவெல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிட்டார். ஆனால் என்னன்னா 2 நாளைக்கு ஒரு தரம் கத்திரிக்காய்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதே போல் இட்லிக்கு எனக்கு சாம்பார் பிடிக்கும்னால் அவருக்குச் சட்னி தான். சாம்பார் வைத்தால் நான் மட்டும் சாப்பிட்டால் மிஞ்சிடும்னு பண்ணுவதே இல்லை. :)))))))) எல்லாம் நான் கிழக்குன்னா அவர் மேற்கு. அவர் கிழக்குன்னா நான் மேற்கு!

      நீக்கு
    6. //க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்,// - என் மனைவியும் எழுதினா இப்படித்தான் எழுதுவாள் என நினைக்கிறேன். எனக்குன்னு ஸ்டாண்டர்ட் மெனுதான் வைத்திருப்பேன். வேற எதையும் நான் ட்ரை பண்ணமாட்டேன். அதுனால நான் மெனு சொன்னா ஏகப்பட்ட ஐட்டம் வராது. வெண்டைக்காய் புளிக்கூட்டு, பீட்ரூட் கூட்டு, தக்காளி பாசிப்பருப்பு கூட்டு இன்னும் ஏகப்பட்ட ஐட்டம்-அவளுக்குப் பிடிக்கும் என்பதே எனக்கு இப்போ சமீபமாகத்தான் தெரியும், அப்படி இருந்தாலும், நான் சாப்பிடுவதில்லை. (ஆண்களால பெண்களுக்குக் கஷ்டமா இல்லை பெண்களால ஆண்களுக்குக் கஷ்டமா என்று யோசிக்க வேண்டியதுதான்)

      நீக்கு
  7. அவன் இல்லாமல் திருமதி ஆதி வெங்கட் அவர்கள் குக்கரில் உப்புப் போட்டு இதே ப்ரெட் செய்திருந்தார். அதுவும் நன்றாக இருந்தது. கிட்டத்தட்ட இதே செய்முறை தான் என நினைக்கிறேன். நான் அவன் இருந்தப்போ எல்லாம் பண்ணி இருக்கேன். பன் செய்ய இட்லித்தட்டில் கலந்த மாவை ஊற்றி அவனில் வைத்துப் பண்ணிப் பின்னர் அதில் கார உருளைக்கிழங்குக் கறியை உள்ளே வைத்து ஸ்டஃப் செய்து "ஹாட் டாக்" எனப்படும் தின்பண்டம் குழந்தைகளுக்குப் பண்ணித் தந்திருக்கேன். பிட்சாவும் செய்து பார்த்திருக்கேன். இப்போ இங்கே ஓடாது. நான் தான் ஓடணும். :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Same . Same.:) Oven days were special. Electricity Bill was also special:)

      நீக்கு
    2. உண்மையைச் சொன்னா இந்த அவன், என் மனைவி, திருமணம் ஆகும்போது அவள் உபயோகித்ததைக் கொண்டுவந்தது. அவளுக்கு அப்போல்லாம் குக்கீஸ், பிஸ்கட்ஸ் போன்றவைகளை இந்த அவனை உபயோகித்துச் செய்வாளாம். புதிய அவன் வாங்கிக்கோ என்று என் பெண்ணிடம் 3 வருடமா சொல்லிட்டேன். இந்த ஊரடங்கு முடிந்ததும் புதிய அவன் வாங்கித்தரப்போகிறேன்.. ஆனால் Electricity bill ஜாஸ்தியாத்தான் ஆகும்.

      நீக்கு
    3. மைக்ரோவேவிலேயே க்ரில்லிங்குடன் வாங்கி இருக்கணும். அப்போ என்னமோ தெரியலை, வேண்டாம்னு சொல்லிட்டேன். இப்போத் தோணுது தப்புப் பண்ணிட்டோம்னு. :))) ஆனால் நான் கல்யாணம் ஆனப்போ இருந்து இந்தக் குக்கீஸ்/பிஸ்கட்டுகள் எல்லாம் பண்ணி இரும்புச் சட்டியில் மணல் போட்டுச் சூடு பண்ணி அதில் வைத்து எடுத்துவிடுவேன். குழந்தைகள் சின்னவங்களா இருக்கையில் அவங்களுக்கு இப்படிப் பண்ணிக் கொடுப்பேன். அவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் அப்போ!

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. ப்ரட் லோஃப் அழகாக வந்து இருக்கிறது.
    சுவை எப்படி என்று ருசித்தவர்கள் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி. நான் அவ்வளவு impress ஆகலைனா இந்தச் செய்முறையை அன்றே எழுதியிருக்க மாட்டேன். ரொம்ப சாஃப்டா வந்திருந்தது.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க வளமுடன் கோமதி அரசு மேடம். நேற்று ஒரு காணொளியில் பேராசிரியர் ஒருவர் இந்த மாதிரி 'வாழ்க வளமுடன்' என்று எல்லோரும் சொல்லும்போது அது எத்தகைய பாசிடிவ் எனெர்ஜி தரும் என்றெல்லாம் விளக்கமாகச் சொன்னார். அப்போது உங்கள் நினைவுதான் வந்தது.

      நீக்கு
    2. என் நினைவு வந்தது மகிழ்ச்சி . "வாழ்த்தும் பயனும்" என்று மனவளக்கலையில் பாடம் இருக்கிறது. பாசிடிவ் எனெர்ஜி தரும் தான். வாழ்த்தியவருக்கும் வாழ்த்தப்பட்டவர்குக்கும் ஒரு சேர நன்மைகள் கிடைக்கும்.

      நீக்கு
  11. ப்ரட் லோஃப் பார்க்கவே அழகு.
    படங்கள் எல்லாம் அழகு.
    சுவையும் நன்றாக இருந்தது என்று சொல்லி விட்டீர்கள்.
    உங்கள் மகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    என் மருமகளும் செய்வாள்.

    //வீட்டில் ப்ரெட் செய்யும்போது எல்லாமே நல்ல பொருட்களைச் சேர்ப்பதாலும் சுத்தமாக இருப்பதாலும், ப்ரெட் சூப்பராக இருக்கும்.//

    இந்த் சமயத்தில் வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லதுதான்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    அழகான படங்கள்.. நல்ல செய்முறை விளக்கங்களுடன் பிரெட் லோஃப் நன்றாக உள்ளது. முன்பு எப்போதோ பேக்கரியில் வாங்கும் போது கட் செய்து இந்த மாதிரி வாங்கியுள்ளோம். வீட்டில் இதுவரை முயற்சி செய்ததில்லை. எங்களுக்கு (எனக்கும், என் கணவருக்கும்) அப்போது இந்த பிரெட் உணவு அவ்வளவாக பிடித்ததில்லை. இப்போது குழந்தைகளுக்காக வீட்டில் கோதுமை பிரெட்தான் அடிக்கடி வாங்குகிறார்கள்.

    நீங்கள் படிப்படியாக விளக்கம் தந்து படங்களையும் அதன் துணையாக பார்வையாக்கி இருப்பது மிக அழகாக உள்ளது. ஒவ்வொன்றையும் திறம்படச் செய்யும் தங்கள் மகளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவியுங்கள்.

    அப்படியே ஒன்றிற்கு ஒன்று துணையாக உங்கள் வைராக்கியத்தை கலைத்த பால் போளியைப் பற்றி ஒரு சிறு குறிப்பு, படத்துடன் தந்திருக்கலாம்.ஹா ஹா. ஒரு வேளை அது தனியாக சில சிறப்புகளுடன் இடம் பெறுமோ..! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்..

      என்ன..ப்ரெட் அவ்வளவாகப் பிடித்ததில்லைனு சொல்லிட்டீங்க? எனக்கு அந்த ப்ரெட் வாசனையே பிடிக்கும். எங்க கம்பெனி சூப்பர்மார்க்கெட்ல (ஒவ்வொரு சூப்பர் மார்கெட்லயும்) பேக்கரி செக்‌ஷன் இருக்கும். 10 மணிக்கு சுடச் சுட ப்ரெட் தயாராகும். நான் அதனை கட் பண்ணுவதற்கு முன்பு இரண்டு வாங்கிக்கொள்வேன். சூடாக அவ்வளவு சுவையாக இருக்கும்.

      பால்போளி - அதற்கு அப்புறம் இன்னொரு தடவை செய்துவிட்டாள். எழுதச் சோம்பேறித்தனம்தான். எனக்கு பால்போளி ரொம்பவே பிடித்திருந்தது.

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

      நீக்கு

  13. நெல்லைதமிழன் ப்ரட் லோஃப் அழகாக வந்து இருக்கிறது. பேசாமல் நெல்லைத்தமிழன் பேக்கரி ஆரம்பித்துவிடலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... நிஜமாகவே பெண்களுக்கு நிறைய திறமைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவங்க திறமைகள் ஒவ்வொண்ணுத்துக்கும் நாம இன்வெஸ்ட் பண்ணி கடையை ஆரம்பிக்கணும்னா, அதுக்கு ஏதாவது பேங்க்கைக் கொள்ளையடித்தால்தான் சாத்தியம். ஹா ஹா.

      நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  14. நெல்லை சூப்பரோ சூப்பர்! ரொம்ப நல்லா வந்திருக்கு. மகளுக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க பாராட்டுகளையும் சொல்லிடுங்க.

    நீங்க சொல்லிருப்பது போல பேக்கிங்கிற்கு மிகத் த்ரமான பொருட்கள் வேண்டும். ஈஸ்ட் எல்லாம் நல்ல தரமானதாக ட்ரை ஈஸ்டாக இருந்தாலும் நாட்பட்டதாக இருக்கக் கூடாது. கூடவே டெம்ப்ரேச்சர் செட்டிங்க் ப்ளஸ் அதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். கருகாமல் கூடுதல் பேக் ஆகாமல் என்று.

    ரொம்ப நல்லா வந்திருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா ரங்கன். Bakingகிற்கு தரமான பொருட்கள் வேணும் என்பது உண்மை. பஹ்ரைன்ல எங்க கம்பெனி அப்புறம் கொரியன் பேக்கரி இந்த இரண்டும்தான் ஒரிஜினல் தரமான பொருட்கள் உபயோகிப்பாங்க, காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டாங்க. லுலு போன்றவற்றில் சுமாராகத்தான் இருக்கும்.

      இங்கயே லால்பாக் எதிரே ஒரு வேனில் கொண்டுவந்த டிரையாங்குலர் சாண்ட்விச் பிரெட் ருசி மாதிரி, ஐயங்கார் பேக்கரி டிரையாங்குலர் சாண்ட்விச் ப்ரெட் இல்லை என்று பசங்க சொன்னாங்க. ஏதோ வாசனைன்ன்னாங்க.

      நீக்கு
  15. நான் மில்க் பௌடர் சேர்ப்பதுண்டு மில்க் ப்ரெட் என்று செய்யும் போது கொஞ்சம் கூடுதல் சேர்த்தாலும் ஸால்ட் ப்ரெட்டிலும் கொஞ்சம் சேர்ப்பதுண்டு.

    பங்களூர் பேக்கரிகள் நிறைந்த ஊர் என்பதால் இங்கு நான் வந்ததும் முதலில் தெரிந்து கொண்டது வீட்டருகில் எங்கு பேக்கிங்க் சாமான்கள் கிடைக்கும் என்று. ஹெப்பாலில் பேக்வாலா கடை இருப்பதைத் தெரிந்து கொண்டேன். தரமான பொருட்கள் ஹோல்சேல் ரேட்டில். கிடைக்கிறது. அதிகமாக வாங்கினால் இன்னும் குறைத்துக் கொடுக்கிறார்கள். அங்கிருந்து ஹோம் ரன் பேக்கரி made to order பிஸினஸ் நடத்தும் பெண்கள் வாங்கிச் செல்வதைக் கண்டேன். பேக்வாலா ஆன்லைனிலும் பொருட்கள் விற்கிறார்கள்.

    https://www.bakewala.com/

    கீதா

    bakewala.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊரடங்கு ஆரம்பத்தில் (அதாவது ஓரிரு நாட்களுக்குள்), இவள் கேட்டாள் என்பதற்காக ஈஸ்டைத் தேடி அலைந்தால், எல்லாக் கடைகளிலும் அவுட் ஆஃப் ஸ்டாக் என்று சொல்லிட்டாங்க. அப்போ நிறைய வீடுகளில் bake பண்ணுகிறார்களோ என்று நினைத்தேன்.

      பேக்வாலா.காம் - நன்றி... ஆனா விலையைப் பார்த்துட்டு, யோசித்து அப்புறம்தான் மகள்ட பகிர்ந்துக்கணும். ஹா ஹா

      நீக்கு
  16. ப்ரெட் அருமையாக வந்திருக்கிறது. கடையில் வாங்கியதை புகைப்படம் எடுத்து போட்டு விட்டீர்களோ என்று நினைக்கும் அளவிற்கு பக்கா professional ஆக வந்திருக்கிறது. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானுமதி வெங்கடேச்வரன் மேடம். அவ்ளோவ் சாஃப்டாக வந்திருந்தது. She (like all girls) has artistic talents. ஆனா பாருங்க..ஆண்கள்ட அந்த ஆர்டிஸ்டிக் திறமை கிடையாது. ஆண்கள்ட அந்தத் திறமை இருக்கறவங்க, automaticஆ, பிஸினெஸ் ஆரம்பித்து பெரியாளாயிடறாங்க.

      நீக்கு
  17. பேக்கரி ஐட்டம்கள் செய்வதற்கு அளவுகள் முக்கியம். கண் திட்டம், கை திட்டமெல்லாம் உதவாது. ஏதாவது சொதப்பினால் திப்பிசம் செய்ய முடியாது. இந்த காரணங்களினால் நான் அந்தப் பக்கம் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க முயற்சிக்கலை. அவ்ளோதான். ஃபார்முலாவை அப்படியே ஃபாலோ செய்தால் போதாதா? மற்றதெல்லாம் அவன் அல்லவோ பார்த்துப்பான் (ஹாஹா). நம்ம ஸ்வீட் மாதிரி, செய்பவர்கள் திறமைதான் outputக்குக் காரணம் என்பதுபோல் baked productsல கிடையாது (except artistic cakes) என்பது என் unpopular opinion.

      நீக்கு
  18. பதில்கள்
    1. மிக்க நன்றி தில்லி வெங்கட். விரைவில் உங்கள் மகளும் இதில் இறங்குவார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  19. எப்போது வேண்டுமென்றாலும் டயட் ஆரம்பிக்கலாம், பால்போளி கிடைத்த போது ரசித்து ருசித்து சாப்பிட்டது மகிழ்ச்சி.




    பதிலளிநீக்கு
  20. பதில்கள்
    1. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் சார். உங்கள் தளத்தை ரெகுலராக படிக்கிறேன். தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகள்

      நீக்கு
  21. ப்ரெட் லோஃப் அழகாக செய்து உள்ளார்கள்... மகளுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி திண்டுக்கல் தனபாலன். இன்று கேட்டிருக்கிறேன். வருமா (அதாவது செய்யும் மூடு அவளுக்கு வருமா) என்று தெரியலை.

      நீக்கு

  22. //Your connection is not private
    Attackers might be trying to steal your information from docdro.id (for example, passwords, messages, or credit cards). Learn more
    NET::ERR_CERT_DATE_INVALID

    Help improve Chrome security by sending URLs of some pages you visit, limited system// மின் நிலா பார்க்கச் சுட்டியைக் க்ளிக் செய்தால் இப்படித் தான் வருது. கடந்த இரு வாரங்களாகவே பார்க்கவில்லை. :( சொல்ல நினைத்து மறந்து விடுகிறேன். :(

    பதிலளிநீக்கு
  23. நெல்லை தமிழன் சார், இவ்வளவு லகுவான பிரெட்டை நாம் காசு கொடுத்து ஃப்ரென்ச் லோஃப் என்ற பேக்கரியில் விடாமல் வாங்குவோம். நாங்கள் மைதா உபயோகிப்பது இல்லை. எனவே ஹோல் வீட் பிரெட்தான்.
    இந்த லொக் டௌனில் ஒரு முறை இதை செய்து விட போகிறேன். நமக்கென்ன வந்தது. செய்வதுதான் நாம். அவதியுறுவது குடும்பம்தானே. அதுவும் எங்களுடன் மாட்டிக் கொண்ட என் இரண்டாவது மகள் பாடும் என் கணவர் பாடும் திண்டாட்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமா ஸ்ரீநிவாசன். எப்போதிலிருந்து மைதா உபயோகிப்பதில்லை?

      ஹோல்வீட் ப்ரெட்டும் மகள் செய்வாள். ஆனா பொதுவா மைதாவின் சாஃப்ட்னெஸ் அதில் இருப்பதில்லை. என் பையனும் ப்ரெளன் ப்ரெட்டைவிட நார்மல் ப்ரெட் தேவலை என்பான்.

      //செய்வதுதான் நாம். அவதியுறுவது// - ஹாஹா. என் பெண்ணும் இனிப்பு சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. நேற்று அவள் பண்ணின குஞ்சாலாடு (அதாவது லட்டு பிடிக்காமல் இருந்துவிடுவது) நானும் மனைவியும்தான் சாப்பிட்டோம். வெயிட் போட்டால் பிரச்சனை எங்களுக்குத்தானே.

      நீக்கு
  24. ஸ்ரீராம் அவர்களுக்கு மிக்க நன்றி ...

    இன்றைய பதிவில் சொல்லப்பட்டிருக்கும்
    பிரட் லோஃப் (சமூன்)..

    என்ன ஒரு வித்தியாசம்!..

    இதில் பால் பவுடருடன் உயிரில்லா முட்டை சேர்க்கப்பட்டுள்ளது...

    மற்றபடி திரு. நெல்லைத் தமிழன் அவர்களது அன்பு மகள் செய்தளித்திருப்பதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை...

    இன்று காலை - பேக்கரியில் இதைச் செய்வதைக் கண்டதும் எபி க்காக சுட்டு விட வேண்டும் என்று நினைத்தேன்...

    சுட்டு விட்டேன்... உடனே வாட்ஸப் வழியாக
    ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி வைத்து இன்றைய பதிவை சிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டேன்...

    மீண்டும் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    கு.கு: பிரட் லோஃப் செய்தவர் Mohammed எனும் எகிப்தியர்.. Display - அடியேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் அழகா இருக்கு செல்வராஜு சார். முட்டைக்கு உயிர் இருக்கா இல்லையா என்ற ஆராய்ச்சிக்கே நான் போவதில்லை. முட்டை சேர்த்திருந்தால் அதன் பக்கமே போவதில்லை.

      நீக்கு
    2. ப்ரெட் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன துரை. மிக நன்றாகவே டிஸ்ப்ளே செய்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    3. அன்பின் நெல்லை அவர்களுக்கும்
      கீதாக்கா அவர்களுக்கும் நன்றி...

      நீக்கு
  25. வாவ் !!!  அந்த தயாரான ப்ரெட் சூப்பரா இருக்கு நெல்லைத்தமிழன் .ப்ரெட் செய்ய நம்மூர் மைதா தான் பெஸ்ட் இங்கே ஸ்ட்ரோங் மாவுனு விக்கிறாங்க allisons மாவு அது கடாமுடான்னு வரும் .மகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அன்ட் பிளெஸ்ஸிங்ஸ் ..பொறுமையா செய்யலேன்னா இவ்வளவு பதமா  பக்குவமா வர சான்ஸே இல்லை .நானே சில டைம் ஈஸ்ட்டை சரியா கரைக்காம பிளாட் ஆக்கி வச்சிருக்கேன் ..சின்ன பிள்ளை என்னமா செஞ்சிருக்கா !!! எல்லாம் அம்மாவின் அருமையான ட்ரெயின் என்று நினைக்கிறேன் :) 
    நெக்ஸ்ட் டைம் இதே போல் எள்ளுடன் கொஞ்சம் அல்சி / flax seeds / sunflower சீட்ஸ் அப்புறம் rolled ஓட்ஸ் இதெல்லாம் சேர்த்து மல்டி க்ரெயின் ப்ரெட் செய்ய சொல்லுங்க . இதே ப்ரெட்டில் உங்களுக்கு விருப்பமான filling வைத்தும் செய்யலாம் நான் சீஸ் டொமெட்டோ பேசில் மிக்ஸ் பண்ணி செய்வேன் .அபார  திறமை மகளுக்கு இன்னும் இதோ போல் நிறைய  விதவிதமா செய்ய வாழ்த்துகிறேன் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் அம்மாவின் அருமையான TRAINING என்று நினைக்கிறேன் :)

      நீக்கு
    2. வாங்க ஏஞ்சலின். அதிசய வருகை மாதிரி தெரியுது.

      பஹ்ரைன்ல ஆல் பர்ப்பஸ் மாவுன்னு விப்பாங்க. எனக்கென்னவோ பெங்களூரில் கிடைக்கும் மைதா மாவில் திருப்தியில்லை. Bakingக்கு நல்லா இருக்காம். ஆனால் நான் எப்பவாவது கரைத்த மா தோசைக்கு உபயோகப்படுத்தினால் பிடிப்பதில்லை.

      மல்டிக்ரெயின் ப்ரெட்டும் செய்திருந்தாள். இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்னமே அவளிடம், உனக்கு இந்த கிச்சனில் சின்ன கப்போர்டு மட்டும்தான் என்று ஒதுக்கித் தந்திருக்கிறேன் (எப்படிப்பட்ட என்கரேஜிங் அப்பா ஹாஹா). அவள் ஒரு மாதத்திலேயே அந்த இடம் முழுவதும் ஓரெகானோ, அந்த சாஸ், இந்த சீட்ஸ் என்று ரொப்பிவிட்டாள், நான் அதிகமான இடம் தரலை என்றும் குறைப்பட்டுக்கொண்டு இருக்கிறாள்) ஆனால் அவள் கேட்டால் (ஈஸ்ட் வேணும், மைதா ஸ்டாக் இல்லை என்று எது சொன்னாலும் உடனே வாங்கிக்கொடுத்துடுவேன்)

      To be fair, என் மகள் செய்யறது அனேகமா எல்லாமே, அவளுடைய own முயற்சி. அது என்ன சப்ஜெக்ட் படிக்கணும், என்ன என்ன செய்யணும் என்பதிலாகட்டும், எல்லா ஆர்ட்-Baking, drawing உட்பட, எல்லாமே அவளுடைய own learning. என் மனைவி ரொம்ப என்கரேஜிங். நான் - ஹாஹாஹா

      நீக்கு
  26. இந்த மாதிரி பிரெஷ் பிரெட்டுடன் தயிர் வெள்ளரி தக்காளி ஒரு பிக்கில்ட் மிளகாய் சேர்த்து  சாண்ட்விச்சா சாப்பிட சூப்பரா இருக்கும் .மாங்கா  தொக்கும் பட்டருடன் தடவி சாப்பிடலாம் .வெறுமனே பிச்சி காரக்குழம்புடன் தொட்டு சாப்பிடலாம் ..அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம், ஆலிவ், ஹெலெபினோ (பிக்கில்ட்) இதெல்லாம் வேணும்னு அவ நேற்று லிஸ்ட் கொடுத்திட்டா.

      எனக்கு ப்ரெட்டுக்கு கார எலுமிச்சை ஊறுகாய் பிடிக்கும். டூர் போகும்போது எலுமி ஊறுகாய் பாட்டில் மட்டும் எடுத்திட்டுப் போவேன். எந்த ஊர்லயும் இங்க்லீஷ் ப்ரெட் நிச்சயம் கிடைக்கும் என்பதால் (முட்டைலாம் சேர்க்காத). ப்ரெட்டுடன் பூரி மசாலும் வித்தியாசமான டேஸ்ட்தான்.

      நீக்கு
    2. //மாங்கா தொக்கும் பட்டருடன் தடவி சாப்பிடலாம்//ஆஹா அது சூப்பர் காம்பினேஷன் ஆச்சே. எங்கள் வீட்டில் மாங்காய் தொக்கு கிளறியவுடன் என் மகன் ப்ரெட் வாங்கிக் கொண்டு வந்து விடுவான்.

      நீக்கு
  27. நீங்க பெங்களூர் அய்யங்கார் பேக்கரினதும் ஒன்று நினைவிற்கு வருது அங்கே இந்த ரொட்டி ஸ்லைஸை லேசா எண்ணையில் வறுத்து அதில் தக்காளிவெங்காயாம் சட்னி மிக்சிங்கை தடவி விற்பாங்க கொஞ்சம் காரமாதான் இருக்கும் ஆனா டோஸ்ட் செம ருசி .கீதாக்கா செஞ்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் நானா சொல்ற தக்காளி வெங்காய ப்ரெட் டோஸ்ட் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு மசாலா ப்ரெட் என்று பேர். சில வருடங்களுக்கு முன்னால் சாப்பிட்டிருக்கோம். பிறகு, மனசுல ஹைஜீன் என்ற விஷயம் பெரிதாகத் தோன்ற ஆரம்பித்த பிறகு அதையெல்லாம் பசங்க கேட்பதில்லை. ஆனா அட்டஹாசமாத்தான் இருக்கும்.

      நீக்கு
    2. அங்கே அவர்களின் வருக்கி என்றும் ஒன்று மொறுமொறுன்னு ஸ்லைட்டா பட்டர் சுவையுடன் இருக்கும் BOW வடிவில் அதுவும் சுவையா இருக்கும் 

      நீக்கு
    3. ஊட்டியில் வர்க்கியும் சாக்லேட்டும் நன்றாக இருக்கும். அதே கொடைக்கானலில் சுமார் என்பதோடு நிறைய ஏமாற்று.

      நீக்கு
    4. //கீதாக்கா செஞ்சிருக்காங்கன்னு நினைக்கிறேன் நானா சொல்ற தக்காளி வெங்காய ப்ரெட் டோஸ்ட் ..// யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு

      நீக்கு
  28. //Your connection is not private
    Attackers might be trying to steal your information from docdro.id (for example, passwords, messages, or credit cards). Learn more
    NET::ERR_CERT_DATE_INVALID

    Help improve Chrome security by sending URLs of some pages you visit, limited system information, and some page content to Google. Privacy policy// இப்போவும் இப்படித் தான் வருது. மின் நிலா முகநூலில் மட்டும் திறக்கிறது. பார்த்தேன். முந்தைய இரண்டு நிலாக்களைப் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
  29. ///நான் எல்லோரையும் என்கரேஜ் பண்ணுவதில் ரொம்ப எக்ஸ்பர்ட் (ஹா ஹா) என்பதால்,//
    ஹாஹாஹா உண்மையை நேர்மையா ஒத்துக்கறதும் நல்ல குணம்தான் :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சலின். உண்மையைச் சொல்லும்போதும்/எழுதும்போதும் மனதுக்கு எப்போதுமே நிறைவா இருக்கு. தவறை, தவறு என்று உணர்ந்து எழுதும்போது அதைத் திருப்பிச் செய்யும் வாய்ப்பு குறைவு. ஆமாம் 'அவருக்கு' என்னாச்சு?

      நீக்கு
    2. அவர் :) நலமாகவே இருக்கிறார் பில்லா பதிவுக்கு வந்திருந்தாரே இப்போ நான் வலுக்கட்டாயமா ஓரிரண்டு நாளாச்சும் வலைப்பக்கம் வரணும்னு DETERMINED ஆக இருக்கிறேன் .அவரும் வருவார் விரைவில் 

      நீக்கு
    3. இவ்வளவு பிஸியாக ஆயிட்டாரே. அப்படி என்னதான் வேலை என்று நான் யோசிக்கிறேன். அல்லது புதிதாக சமைத்தது எதுவும் சரியா வரலையா? தெரியலையே

      நீக்கு
    4. அல்லோ இங்கின என்ன நடக்குதூஊஊஊஊஊஊஊ:)) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... அஞ்சுவும் என் வால்ல நைலோன் கயிறுகூடக் கட்டி இழுத்துப் பார்த்தா என்னை வரச்சொல்லி:)).. அது என்னமோ சூனியம் வச்ச நிலைமைபோலாச்சு எனக்கு, நம்ப மாட்டீங்கள் புளொக்கை திறந்துகூடப் பார்க்கவில்லை.. விருப்பமே இல்லாததுபோல இருந்தது.. இன்றுகூட அஞ்சு மிரட்டோ மிரட்டென மிரட்டியதால களம் குதிச்சேன்.. இனி எப்படியும் தொடர்ந்து வரவேண்டும்...

      நீக்கு
    5. ரொம்ப வருஷம் கழித்து உங்களை இங்கு பார்க்கிறேன்.

      நீங்க எழுதியிருப்பது சரிதான். சில சமயம் விட்டுப் போச்சுன்னா, திரும்ப அந்த இண்டெரெஸ்ட் வருவதற்கு கொஞ்சம் மெனெக்கிடணும். இந்த கோபு சாரும் இதே கதைதான். அவர் பின்னூட்டங்களுக்கு மறுமொழி எழுதாம இருந்ததில்லை. ஆனா பாருங்க...கடைசி இடுகையை அந்தரத்துல வச்சிருக்கார்.

      கொஞ்சம் மெனெக்கெட்டு ஏதாவது இடுகை போட்டாலும், மற்ற தளங்களில் பின்னூட்டம் போட்டாலும், நமக்கு நண்பர்களைச் சந்தித்தது போல ஆகிடும். அதுக்காகவாவது நீங்க தொடர்ந்து எழுதணும்.

      நீக்கு
    6. நன்றி நெல்லைத்தமிழன், நீங்கள் சொல்வது உண்மைதான் தொடரோணும்... இப்போ எங்களுக்கு ஸ்கூலும் தொடங்கி விட்டது.. உங்களுக்குத் தெரியும்தானே, என் கொள்கை “செய் அல்லது செத்துப்போ”.. அதாவது எதுவாயினும், இருந்தா ஒழுங்கா இருக்கோணும், பெயருக்காக இருப்பதை நான் விரும்புவதில்லை.. அப்படித்தான் புளொக் பக்கம் வந்தால், எல்லா இடமும் போய் ஒழுங்காக கொமெண்ட்ஸ் போட்டு, நன்றாக இருக்கோணும், சாட்டுக்கழிப்பதுபோல சும்மா சும்மா உள்ளேன் ஐயா சொல்லி ஓடுவதை விரும்பாமலேயே வராமல் இருந்திட்டேன்.. இப்பகூட வரும் ஐடியா இருக்கவில்லை, அஞ்சு தான் ஒரேபிடியாக அழைத்து வந்தா ஹா ஹா ஹா..

      நீக்கு
  30. பிரட் ம், அதன் செய்முறை விளக்கமும் சாட்சி சொல்லும் புகைப்படங்களும் அருமை. இங்கே பெரும்பாலும் தரமான தயாரிப்புகள் எல்லா கடைகளிலும் கிடைக்கும், 365(6) நாட்களும் இந்த ரொட்டிகளோடு வாழ்க்கை என்பதால் வீட்டில் செய்வது அடிக்கடி நிகழாத ஒன்று, எனினும் வீட்டில் நாமே செய்து சாப்பிடுவது ஒரு அலாதி இன்பம்தான். தங்களின் மகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோயில்பிள்ளை. நீங்க சொல்வது உண்மைதான். பஹ்ரைன்ல எங்க பார்த்தாலும் கோல்ட் ஸ்டோர்கள்ல விதவித ப்ரெட் கிடைக்கும். காணக்கொறைக்கு ஏகப்பட்ட பேக்கரிகள். அதுனால அப்போ வீட்டில் செய்ததில்லை. இங்க பெங்களூர்ல லாக்டவுன் பிரச்சனைகள் அவ்வளவாக இல்லை என்றாலும், டயம் பாஸுக்காகவும், விதவிதமா செய்துபார்க்கவும் பெண் முயற்சிக்கிறாள். நான் மட்டும்தான் பங்குக்கு வரமாட்டேன்.

      நீக்கு
  31. //எதுக்கு கஷ்டப்பட்டு பண்ணற.. பேசாமல் இரண்டு ப்ரெட்டுக்கு 70 ரூபாய் கொடுத்தால் கடைக்காரன் கதறிக்கொண்டு நம்மிடம் பிரெட்டைக் கொடுப்பான் என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை.//

    கர்ர்ர்ர்ர்ர்ர் 123578798909-00 டைம்ஸ் :)இதேபோல்தான் நான் வளர்த்த மணத்தக்காளி கீரைகளுக்கும் சொன்னீங்க :)
    ஒரு கசப்பான உண்மையை சொல்கிறேன் பாராட்டுக்களுக்கு ஏங்குவது மனித இயல்பு .நான் அதில் அனுபவப்பட்டிருக்கிறேன் .சின்னவயசில் ஸ்கூல் படிக்கும்போது நிறைய க்ராப்ட்ஸ் செய்வேன் அமீபா போன்ற சின்ன உயிர்களின் படங்களை கூட சயன்ஸ் எக்சிபிஷனுக்கு நூல் குப்பை கூளம்லாம் வைத்து செய்திருக்கிறேன் .மருந்துக்கடைகளில் கிடைக்கும் பீர்க்கை நாரில் எம்ப்ராய்டரி வேலை செய்வேன் ஆனா அப்பாவோ எதுக்கு டைம் வேஸ்ட்   UPSC க்கு படி காம்பெடிஷன் சக்ஸஸ் படி என்பார் :) பொதுவா ஆண்கள்  அப்படித்தானா தெரில எங்க மகள் வளர்ந்து வரும் சமயத்தில் ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன் இவரிடம் எல்லாம் அவளின் விருப்பப்படிதான் நடக்கணும்னு :) . அதோட எப்பவும் என்கரேஜ் செய்யணும்னு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாராட்டுக்களுக்கு ஏங்குவது மனித இயல்பு// - ரொம்ப guiltyயா என்னை feel பண்ண வைக்காதீங்க. இது என் இயல்பாகவே இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு மாற்ற எப்போதும் முயல்கிறேன் (கடந்த 7-8 வருடங்களாக). Confessionஆச் சொல்லணும்னா, நான் 10% கூட அந்த உயரத்தை அடையவில்லை, இயல்பு அப்படி என்பதால். ஹாஹா. (லேம்ப் ஷேட் இவளே நூல்லாம் வைத்துச் செய்திருந்தாள்-செம டெக்னிக், இங்க என் டேபிள் பக்கத்தில் இருக்கும் கண்ணாடி சன்னலை திறந்துவைத்தால், காற்றின் வேகத்தில் மூடிக்கொள்ளும், அதற்கு இவள் அருமையான ஒன்று அட்டைகளை ஒட்டிச் செய்துதந்தால்-சிம்ப்ளி ப்ரில்லியண்ட், வெறும் வெள்ளை அட்டைகளை வைத்து அவள் படுக்கையின் மேல் ஒரு டிசைன் செய்து ஒட்டியிருக்காள்-ரொம்ப அழகா எனக்குத் தெரிந்தது, முடிந்தால் இங்கு பகிர்கிறேன்.

      பொதுவா நான் சிறு வயதிலிருந்தே கற்றுக்கொண்டது (பெரியவங்களைப் பார்த்து), நம்ம பசங்களை நாம் நேருக்கு நேர் அதிகம் புகழக்கூடாது என்றுதான். இதுதான் my school of learning. ஆனால் constant encouragementதான் நல்லது என்று பிற்காலத்தில்தான் தெரிந்துகொண்டேன்.

      நீக்கு
    2. ஹாஹ்ஹா இந்த பாராட்டும் சரியான நேரத்தில் சரியானோரிடம் சொல்லணும் இன்னொரு சம்பவம் முந்தி ப்லாகில் பகிர்ந்தேன் .பக்கத்துவீட்டு சாம்பாரை புகழ்ந்த கணவன் கதைபோல் ஒருமுறை மகள் செய்த கார்டை என் கணவர் தெரியாம மகள்கிட்டயே அம்மா எவ்ளோ அழகா செஞ்சிருக்காங்க னு சொல்லிட்டார் :) ஹாஹாஹா அவ்ளோதான் மகளுக்கு மூக்குமேல் கோபம் அதோடா கிராப்ட் செயறதை நிப்பட்டிட்டா .அவளுடைய ஆர்ட் வொர்க் 11 ஆம் வகுப்பில் செய்தது இன்னமும் ஸ்கூல் லைப்ரரி டிஸ்பிளேயில் இருக்காம் ..அதைக்கூட அவர்கிட்ட சொல்லலை அவ்ளோ கோபம் :))

      நீக்கு
    3. நீங்க எழுதின நேரம்.. எனக்கு ஒரு சம்பவம் சில நாட்கள் முன்பு நடந்தது. இப்போ புதிதா, பால்கனில தொட்டில செடிகள்லாம் வளர்க்க ஆரம்பித்திருக்கோம் (துளசி, ரோஜா, கற்பூரவல்லி, பீன்ஸ், வெண்டை, ஆனியன், கொஞ்சம் க்ரோடன்ஸ் என்பது போல). மகள் இதுல கொஞ்சம் ஆர்வமா இருக்கா. மனைவி, மகள் சொன்னதுனால, இங்கேயே வளாகத்துல வெட்டி வச்சிருந்த சிறு சிறு மூங்கில் குச்சிகளை, கொடிகளுக்கு ஆதரவாக இருக்க எடுத்துவந்தேன். அதை மகள் பால்கனில குச்சிகளையெல்லாம் செதுக்க ஆரம்பித்தா. அப்போ மகனும் அங்க போனான். என் பெண், போனில் அவள் ஃப்ரெண்டிடம் பேசிக்கொண்டே இருந்ததால், ஹாலில் இருந்த நான், மகன் நிறைய மூங்கில் குச்சிகளை வெட்டினான், மகள் ஓரிரண்டுதான் செஞ்சிருப்பாள் என நினைத்துக்கொண்டேன். மறுநாள், அவள்ட, மூங்கில் கம்பை அவன் நல்லா கட் பண்ணியிருக்கான் இல்லையா என்று கேட்டேன். அவளுக்கு கோபமான கோபம். அன்னைக்கு ஃபுல்லா எங்கிட்ட இந்த சப்ஜெக்ட் பேசவே இல்லை. அப்புறம் மனைவி சொன்னா, ஒரு குச்சியைத் தவிர மத்த எல்லாத்தையும் அவள்தான் கைவலியோட செதுக்கினா. அதை போன் பேசிக்கிட்டே செஞ்சா. நீங்க, பையன்'தான் எல்லாத்தையும் வெட்டி வச்ச மாதிரி சொல்லவும் அவளுக்கு வருத்தமாயிடுச்சு என்று சொன்னாள்.

      அதுனால, பாராட்டினாலும் கொஞ்சம் யோசிச்சுத்தான் பாராட்டணும் போலிருக்கு. ஹா ஹா.

      நீக்கு
    4. //அதுனால, பாராட்டினாலும் கொஞ்சம் யோசிச்சுத்தான் பாராட்டணும் போலிருக்கு. ஹா ஹா.//

      அல்லோ நெல்லைத்தமிழன், இப்பகூட நீங்க மகனையும் பாராட்டவில்லைப்பாருங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. மகனைப் பாராட்டுவதெனில் மகனுக்கும் கேட்கும்படி அல்லது அவரும் இருக்கும் நேரம் சொன்னால்தானே அவருக்கும் மகிழ்ச்சி... இது மகள் சொல்லாவிட்டால் மகனுக்கு தெரிய வாய்ப்பில்லை.. அதுவும் போக, நீங்கள் சொன்னது பாராட்டு என்பதைக்காட்டிலும் ஒப்பிடுதல் போலவும் பொருள் வந்திடும் ஹா ஹா ஹா...

      நீக்கு
  32. நீங்க பெரியவாள்ளாம் ஏதோ ருசி.. ருசியா பேசிண்டிருக்கேள். எனக்கு இதையெல்லாம் திங்கமட்டுந்தான் தெரியும்.ஜொள்ளிண்டு இருக்கறது ஒண்ணுதான் இப்ப எனக்கு சாத்தியம்....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாரதி. முன்னொரு காலத்தில் நானும் அப்படி நினைத்துக்கொண்டிருந்தேன். அப்புறம் ஆர்வத்தில் கத்துக்கிட்டேன்.

      துபாய் போன புதிதில் (பேச்சலர்), பாஸ்தா செய்யும் மேக்ரோனிகளை, பப்படம் என்று நினைத்து - நம்ம ஊரில் குழல் சைஸுக்கு பெரிதாகப் பொரியும், அடுப்பில் எண்ணெய் காயவைத்து இதனைப் போட்டால், பொரியவே இல்லை, நானும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து, அப்புறம் இது அது அல்ல என்று தெரிந்துகொண்டு, முழு பாக்கெட்டையும் தூரப்போட்டேன்.

      எதுக்கும் ஒரு ஆரம்பம் மட்டும்தான் வேண்டும்.

      நீக்கு
  33. நெல்லைத் தமிழன், நீங்க சொல்றதும் சரிதான்...!! நான் இப்பத்தான் தண்ணியில கால் வச்சிருக்கேன். நீந்தறதுக்கு கொஞ்ச காலம் பிடிக்கும்...!! நன்றி...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா. நிஜமாவே தண்ணில கால் வச்சா நீச்சல் பிடிபடாது. தண்ணிக்குள்ள யாராவது தள்ளிவிட்டாத்தான் பிடிபடும். நான் விளையாட்டுக்குச் சொல்லலை.

      ஏழு வருடங்களுக்கு முன்பு வரை நான் கிச்சனில் எப்போதாவது சிம்பிளாக சாதம் வடிப்பது ஓரிரு இனிப்பு செய்வது என்றுதான் இருந்தேன். பிறகு என் செளகரியத்துக்காக நான் எனக்குச் செய்ய ஆரம்பித்தது, பிறகு வெள்ளிக்கிழமை வீட்டைச் சரி செய்ய வரும் பையனுக்கு லஞ்ச் செய்ய ஆரம்பித்தது என்று தொடர்ந்து மெதுமெதுவாக எனக்குப் பிடிபட்டுவிட்டது.

      நீங்க அடக்கமாகச் சொல்லியிருக்கலாம். இருந்தாலும் சித்திரமும் கைப்பழக்கம் சமையலும் கைப்பழக்கம்தான்.

      நீக்கு
  34. நன்றாக வந்திருக்கிறது மகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  35. நீங்கள் சொல்வது மாதிரி பிரெட் வீட்டிலேயே செய்வதுதான் சாலச் சிறந்தது . செய்முறை விளக்கம் சூப்பர் . நன்றாகவே வந்திருக்கிறது கடையில் வாங்கியது மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அபயாஅருணா. வீட்டில் செய்தால் நிச்சயம் கடையைவிட குவாலிட்டியாக இருக்கும், செயற்கையாக ருசிக்கு எதுவும் சேர்க்க மாட்டோம்.

      நீக்கு
  36. எங்கள் புளொக்கில் பதவி உயர்வு பெற்று 2ம் ஆசியரான.. பழைய மூன்றாம் ஆசிரியர் நலம்தானே:))..

    நெல்லைத்தமிழன் நீங்கள் நலமாக குண்டாக குளிர்மையாக இருக்கிறீங்கள் எனப் போஸ்ட் பார்த்துத் தெரிஞ்சு கொண்டேன்...
    ஜிஎம் டயட்டை விட இப்போ நான் கண்டுகொண்ட இன்னொரு வழிமுறை... இதில நான் இந்த லொக்டவுனில நிறைய வெயிட் குறைத்து விட்டேன்.. என்ன தெரியுமோ..

    சாப்பிடவே கூடாது... தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு இருங்கோ.. அதை மனதில விரதமாக நினையுங்கோ... சாகவெல்லாம் மாட்டோம்... இப்படி இருந்து .. ஒரு நாளோ 2 நாளோ 3 நாட்களோ முடிஞ்சவரை இருங்கோ..வெயிட்டைக் குறைத்தபின், ஆசைக்கு ஒரு நாள் சாப்பிட்டால் மீண்டும் அடுத்தநாள் இப்படி உண்ணா நோன்பிருந்து உடம்பை பழைய வெயிட்டுக்கு கொண்டு வந்திடோணும்... இது பல நோய்களுக்கும் நல்லதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாங்க அதிரா... அட..இப்போ புதுசா 'பிஞ்சு அப்பாவி' டைட்டிலா? அப்போ 'முத்தின அப்பாவி'ன்னு லண்டனைச் சொல்றீங்களா அல்லது வேற யாரையாவதா? எனக்கு மட்டும் சொல்லுங்க.

      //சாப்பிடவே கூடாது... தண்ணியைக் குடிச்சுக் குடிச்சு// - என் மகள், இரு மாதங்களுக்கு முன்பு, தினமும் வெயிட் பார்க்க ஆரம்பித்தாள். நீங்க சொல்ற மாதிரிதான்.. ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவைகள்கூட வெயிட் பார்த்து, அதுக்கு ஏத்தபடிதான் சாப்பிடுவா. சாதம், மிக மிகக் குறைவு. காய்கறிகள்தான். சில நாட்களில், ஆசைக்கு கொஞ்சம் அதிகமாக தயிர்சாதமோ இல்லை ஏதேனும் சாப்பிட்டுவிட்டால், பழைய எடை வரும்வரை பட்டினிதான். ஸ்வீட் பக்கமே போகமாட்டா. எப்பவாச்சும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டால்.. தீவிரமா வேற எதையும் சாப்பிடாம பழைய வெயிட்டுக்கு கொண்டுவர முயல்வா. ஹா ஹா.

      ஆனா பாருங்க..முந்தி மாதிரி எனக்கு வைராக்யம் இல்லை. அதனால ஆமை வேகத்துலதான் வெயிட் குறைகிற மாதிரி தெரியுது.

      நீக்கு
    2. இப்போ இன்னொரு ஐடியா எனக்கு வந்திருக்கு. நான் போய் சமையல் செய்தால், பெரும்பாலும் எனக்கு சாப்பிடத் தோணாது (...இதானே வேணாங்கறது. சுவையில் பிரச்சனை இல்லை. ஆனா நானே பண்ணும்போது எனக்கு சாப்பிடும் ஆர்வம் குறைந்துவிடும்). இன்று காலை உணவு நான் செய்தேன். மாலை டிஃபன் கொத்தமல்லி கொழுக்கட்டை செய்திருக்கிறேன். ஆனா நான் சாப்பிடலை.

      நீக்கு
  37. மகள் அழகாக பிரெட் செய்திருக்கிறா... இன்னும் நிறைய ரெசிப்பி மகளிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்...

    நான் பிரெட் இன்னும்[லொக்டவுன் காலத்தில்.. முன்பு செய்திருக்கிறேன்] செய்யவில்லை, ஆனா அடிக்கடி இதே முறையில் கறிபன் செய்கிறேன், நேற்றும் செய்தேன்.. இதே மாவினுள் குட்டிக் குட்டி உருண்டைகளாக்கி உள்ளே கறி வச்சு, பேக் பண்ணி எடுப்பதுதானே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகள் நிறைய bake பண்ணும் ஐட்டங்கள் செய்கிறாள். முன்ன மாதிரி உட்கார்ந்து அதையெல்லாம் எழுதி அனுப்பும் ஆர்வம் குறைகிறது. நிறைய பெண்டிங்ல இருக்கு. நேற்றுகூட எனக்கு மிக அழகான பர்கர் பண்ணித்தந்தாள். (ஆனா பொதுவா பசங்களை பாராட்டுவது எனக்குப் பிடிக்காது. மத்தவங்கள்டயும் பெருமையா எழுதும்போது மனசுல, அது தவறு என்றே படும். அவள் வரைந்த ஓவியங்களை நான் அடுத்த இடுகையில் ஷேர் செய்கிறேன். பொதுவா பெண்களே கலை அழகு மிக்கவர்கள். Art workல ஆண்களைவிட வல்லவர்கள்)

      நீக்கு
    2. விரைவில் எழுத ஆரம்பிங்க. அவ்வப்போது முடிந்தவரை பின்னூட்டம் போடுங்க.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!