செவ்வாய், 24 நவம்பர், 2020

நெடுங்கதை :  ஜுல் - அப்பாதுரை 


    அப்பாதுரை 


    வீட்டுள் நுழைந்த கணமே தாவிக் குரைத்து ரகளை செய்யும் ஜூலின் அசாதாரண அமைதி திக்கென்றது. என் நம்பகமான கோல்ட் கமாண்டர் புள்ளி முப்பத்தெட்டு கைத்துப்பாக்கியைச் சட்டென்று உருவி நிமிர்த்தி அடி... மேல்... அடி வைத்தேன். எங்கே ஜூல்? உள்ளிருந்து ஈனக்குரல் கேட்க ஓடினேன். படுக்கையறைச் சுவரோர ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்தது. என் படுக்கையில் குப்பையும் மலமும் அப்பிக் கிடந்தன. அருகே தரையில் பின்கால்கள் கட்டப்பட்டு ஜூல் விழுந்து கிடந்தான். கழுத்தருகே ஒரு குண்டு பாய்ந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஜூல்! என் உயிரே! சடாரென்று தரையில் அமர்ந்து நாடி பார்த்தேன். சாகவில்லை. கடவுளே, நன்றி! காயத்தைச் சுற்றி ஒரு துணிக்கட்டு போட்டேன். அவசர உதவியை அழைத்தேன். பொறுமையிழந்தேன். கண்ணாடிச்சில் தொங்கிக் கொண்டிருந்த ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். எனக்கு செய்தி சொல்ல வேண்டுமென்றே நான் அருகே வரும் வரைக் காத்திருந்து ஜூலைக் கொல்லாமல் காயப்படுத்திக் குதித்து ஓடியிருக்கிறார்கள். எனக்குள் ஆத்திரம் பெருகி வெறியானது. யாராக இருக்குமென்று யூகிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நான் என்ன செய்ய வேண்டும் என்று புரிந்துவிட்டது. என் தோழன் வாயில்லா ஜூலைக் காயப்படுத்தியவர்களை அத்தனை மதக் கடவுளர்கள் சேர்ந்தாலும் இனிக் காப்பாற்ற முடியாது. நான் வீர சபதம் எடுத்து முடிப்பதற்குள் உதவிக்குழுவினர் ஒலியெழுப்பி வந்தனர்.

**
    யெசிஸ் நைட் கிளப். மாலை ஐந்து மணி இருக்கும். உள்ளே நுழைந்து மது சிகரெட் கஞ்சா எழுபது சென்ட் போலி ஷெனல் போலோ வியர்வை மணங்களில் நீந்தி, சமீபமாகப் பிரபலமாகிக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் உரத்த இசையை ஒதுக்கி, ரீனாவின் டேபிளைத் தேடிப் பிடித்தேன். ரீனாவுக்கும் எனக்கும் முன்னாள் பழக்கம். டேபிளில் எதிரே அமர்ந்து ரீனாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ரீனாவை அணைத்தபடி நெருக்கி நெருங்கி ஒட்டி உட்கார்ந்த குண்டச்சியும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். குண்டுப்பெண்ணை எனக்குப் பிடிக்கவில்லை என்பதை பார்வையில் தெரிவித்தேன். வேண்டுமென்றே என் பார்வையில் ரீனாவை வலுக்கட்டாயமாக இழுத்து முத்தமிட்டாள்.

எரிச்சலை அடக்கி, "எதற்காக என்னை வரச்சொன்னீர்கள்?" என்றேன். பதில் வராததால் மறுபடி கேட்டேன். மறுபடி பதில் வராததால், "நான் பரோலில் வெளி வந்து ஒரு வாரமே ஆகிறது. இந்த மாதிரி இடங்களில் புழங்குவது என் பரோல் ஆரோக்கியத்துக்குக் கேடு" என்று எழுந்தேன்.

"பொறு" என்று அதட்டினாள் சித்தானைக்குட்டி. "என் அனுமதி இல்லாமல் இன்னொரு முறை எழுந்தால் உன் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு" என்றாள். அமர்ந்தேன். அவள் ரீனாவை இன்னும் நெருக்கி “அவனிடம் விவரம் சொல்" என்றாள். விருப்பின்றி ரீனா நெளிந்தது நடிப்பா நிஜமா தெரியவில்லை. தயங்காமல் தெளிவாக ரீனா என்னிடம் விவரம் சொன்னதும் அவள் சொல்லாத விவரம் ஒன்றும் சட்டென்று புரிந்தது. அதைப்பற்றிப் பிறகு யோசிக்கப் போகிறேன்.

ரீனாவின் கூட்டாளியை இப்போது தெளிவாகப் பார்த்தேன், தயங்காமல் பேசினேன். "ஏய் குண்டு பாப்பா… நல்லா கேட்டுக்க.. இப்போ உன் அனுமதி இல்லாமல் எழுந்து போறேன். அனாவசியமா என்னை உரசிப் பார்த்தா.. உன் மார் காம்பு இருக்குல்ல.. இதோ இந்தப் பக்கமும் அந்த பக்கமும்..? ரெண்டையும் வெட்டி லேசா உப்பு தடவி என் நாய்க்கு சாப்பாட்டுல கலந்து போட்டுருவேன்". எழுந்து விரைந்தேன்.

விவகாரம் இத்தோடு முடியப்போவதில்லை என்று தோன்றியது. நடந்தேன். 230 லேக் வ்யூ ரோடில் இருக்கும் வாசலில் நந்தியாவட்டை பூச்செடி படர்ந்த என்னுடைய 970 சதுரடி வீட்டுக்கு ஐந்தே நிமிடத்தில் நடந்திருக்க வேண்டிய நான், காரணத்தோடு கொஞ்சம் காற்று வாங்கி அரை மணியில் வந்து சேர்ந்தேன். வழக்கமான உற்சாகத்துடன் ஜூல் என்னை வரவேற்ற விதம் சற்று ஏமாற்றமளித்தது. ரீனா என்னைத் தேடி வரவில்லை போல.

காரணத்தோடு வாசல் கதவைத் தாளிடாமல் உள்ளே சென்று ஜூலுடன் சற்று இளைப்பாறினேன். ஜூல் என் நண்பன். காவலன். குரு. ஏறக்குறைய மூன்றடி உயர ஜெர்மன் ஷெபர்ட்-டாபர்மன் கலப்பு. பனிரெண்டு வயது முதிய நாய் என்றாலும் எனக்கு இணையாக ஓடுவான். நீந்துவான். விளையாடுவான். என்னுடன் சில திருட்டுகளில் பங்கெடுத்திருக்கிறான். போலீஸ் குரல்வளையைப் பிடிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். அனுபவித்துப் பிடிப்பான். சமீப மரையா கேரியின் பாட்டுக்கு பின்புறத்தைக் குலுக்கி அவன் நடனமாடுவதைப் பார்க்க வேண்டும். என்னைப் போலவே பீர் குடித்து ஏப்பம் விடுவான்.. அவன் கிண்ணத்தில் பீர் ஊற்றி ஏதோ ஒலி கேட்கத் திரும்பினேன்.

வாசல் கதவைத் திறந்து நின்றாள் ரீனா. தொடை தெரிய சிவப்பில் வெறும் கவுன் அணிந்திருந்தாள். வெறும் கவுன் என்பது அவள் என்னை நோக்கி நடந்தபோது தெளிவாகத் தெரிந்தது அதாவது புரிந்தது. "அரை மணி முன்பே எதிர்பார்த்தேன்" என்றேன்.

விபரீத ஊளையோடு ஜுல் தாவியோடினான். ரீனா அவனை அடக்கிக் கட்டி விளையாடினாள். இந்தக் குலாவல் அடங்க இரண்டு நிமிடம் அமைதி காத்தேன். "ஜுல் இன்னும் என்னை மறக்கவில்லை" என்றாள். என்னருகே வந்து "நானும் உன்னை மறக்கவில்லை" என்று உரசினாள்.

"அதற்குத்தான் இந்தக் கொரில்லாவுடன் ஒடினாயா?" என்றேன்.

"யு மீன் நிவா? சேசே. நிவா என் காதலியில்லை. ஒரு கட்டாயத்தின் பேரில் கூட்டாளி, அவ்வளவுதான். நீ உதவினால் நிவாவின் பிடியில் இருந்து விடுபட்டு என் காதலியுடன் மறுபடி சேர்ந்திருக்க முடியும்"

“காதலியா? அந்தப்பக்கம் தாவிட்டியா?”

“ம்.. டென்சல் வாஷிங்கடனுக்கு இரண்டாவது அஸிஸ்டென்ட்.. டென்சல் படம் பார்த்திருக்கல்ல?”

"கேள்விப்பட்டதில்லை. புதுசா? சரி, நான் ஏன் உனக்கு உதவ வேண்டும்? அதைச் சொல்லு"

"மூன்று காரணங்கள்” என்றாள். “உன்னால் உதவ முடியும் என்பது முதல். உன்னால் மட்டுமே முடியும் என்பது இரண்டாவது"

"மூன்றாவது?"

"நீ உதவாவிடில் நிவா உன்னையும் என்னையும் என் காதலியையும் கொன்று விடுவாள்"

சிரித்தேன். "கேள்வியை நான் சரியா கேட்கலை போல. உனக்கு உதவுறதால எனக்கு என்ன லாபம்?"

தீவிரமானாள் ரீனா. "உனக்கு நிவாவைத் தெரியாது. அடியாள் பலம், போலீஸ் நெருக்கம், அரசியல் அண்மை.. எல்லாம் உண்மை. நினைத்தால் அரைக் கணத்தில் உன்னைக் கரப்பான் போல அடித்து நசுக்கித் தேய்த்து விடுவாள்"

அரை மாத்திரை சிரித்தேன். "கண்ணு.. அடியே என் முன்னாள் காதலி.. நான் என்ன சிப்ஸ் பேகெட் திருடி ஜெயிலுக்குப் போனதா நெனச்சியா? என்னைப் பத்தி சந்தைல என்ன சொல்றாங்க கேட்டிருக்கல்ல? பர்ஸ்ட் நேஷனல் பேங்க் , கோரி பேஸ் பால் ஸ்டேடியம், மெட்ரோ ஸ்டேஷன் மூணு இடத்திலயும் கொள்ளை.. அதுவும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பரமபிதா மாதிரி தோன்றி... சிஎன்என் நியூஸ்ல இன்னும் என்னென்ன சொல்லிக் கேட்டிருக்க நினைவிருக்கா? பதினொரு காவலர்களுக்கு கை கால் நொறுங்க அடி.. ஒரு எதிர்கட்சி வக்கீல் கொலை.. எதையும் நிரூபிக்க முடியாம கடைசில என்னை விசாரிக்க வந்த போலீஸ் விரலைக் கடிச்ச குற்றத்துக்காக ஒரு வருட ஜெயிலா? மூணே மாசத்துல பரோலா? இந்த டெமோகிரெட் கவர்னர் ஆட்சியில் நியாயம் செத்துடுச்சா? அப்டினு பலவிதமா பேசிக்கறாங்க இல்லியா? நீ எங்கிட்டயே புது காமெடி பண்றே.. உன் பூசணியம்மா அடியாள் பலம் அரசியல் அண்மை எல்லாம்.. இதோ பாத்தியா.. இதைக்கூடப் பிடுங்க முடியாது. வந்தியா.. பூச்சாண்டி காட்டிட்டு ஓடு”. கேலியாக நடுங்கினேன்.

ரீனா கெஞ்சினாள். அவள் கண்களின் செய்தியைப் புரிந்து கொள்ளுமுன் யாரோ வாசலைத் திறக்க, ஜூல் சடுதியில் ஓசையின்றி ஒதுங்கிப் பதுங்கியதைக் கவனித்தேன். உள்ளே நுழைந்த இருவரில் பருமனான ஒருவன் என்னை நோக்கித் துப்பாக்கியைச் சுட்டியபடி விரைந்து வந்தான். “அப்பவே சொன்னேன் இவன் ஒத்துழைக்க மாட்டான்னு..” என்றபடி என் முகத்தில் துப்பாக்கியை அழுத்த, ரீனா அவனைத் துரிதமாகத் தடுத்தாள். “சுட்டுராதே.. தயவு செஞ்சு பொறு.. நான் பேசிட்டு இருந்தேன்..” என்று எனக்காகக் கெஞ்சியது நகைச்சுவையாக இருந்தது. கண்ணால் அளந்தேன். 'பத்து நொடியா பனிரெண்டா இருவரையும் ஜூலுடன் சேர்ந்து துவம்சம் பண்ண?' என்று கணக்கிடுகையில் விட்டுப் பிடிக்கத் தீர்மானித்தேன். எங்கே போகிறது இது பார்ப்போமே? கைகளை உயர்த்தி “அமைதி தோழர்களே, அமைதி” என்றேன். “என்னை ஏன் இதில் இழுக்கிறீர்கள் தெரியவில்லையே? எனக்கு என்ன லாபம்? யாராவது விளக்குவீர்களா?”

“உன் கைகளை என் கண்ணெதிரே வை” என்ற துப்பாக்கித் தடியன் ரீனாவை சைகையால் ஒதுக்கினான். என்னைத் தள்ளாத குறையாக நெற்றியில் துப்பாக்கியை அழுத்தி “எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்தோம். சும்மா அலட்டாதே.. இதோ பார்.. நீ வங்கிக் கொள்ளையில் அனுபவமுள்ளவன். அதனால் உன்னைத் தேர்ந்தெடுத்தோம். நாளை மதியம் மிகப் பெரிய தொகை ஒன்று வங்கி வைப்பில் சேர்க்கப்படுகிறது. நீ வைப்பு அறைக்கதவை உடைத்து பெட்டிகளைத் திறந்து இருப்பை எங்களிடம் தர வேண்டும். தந்தால் உன்னை உயிரோடு விடுவோம். மறுத்தால் உன்னையும் இதோ உன் காதலி ரீனாவையும் இப்போதே கொல்வோம். போதுமா விளக்கம்?”

“போதும்” என்றேன். ஜூல் என் சைகைக்காகக் காத்திருந்ததை உணர்ந்தேன். கொடுத்தால் அரை நொடியில் தடியன் மேல் பாய்ந்து குரல் வளையைக் குதறி விடுவான். நான் மற்றவனைச் சுலபமாகக் கொன்றுவிடுவேன். கொஞ்சம் விளையாடத் தோன்றியது. “ஒரு நிபந்தனையுடன் சம்மதிக்கிறேன்” என்றேன். என்னைக் கேள்வியுடன் பார்த்த தடியனிடம் “ரீனாவை இப்போதே என் கண்ணெதிரில் நீ கொன்றால், கொள்ளையில் அரைப்பங்குக்கு சம்மதிக்கிறேன்” என்றேன். “முடியாதென்றால் உன் இஷ்டப்படி எங்களைக் கொல்” என்று வசதியாகச் சாய்ந்து கொண்டேன். “தாராளமாகச் சுடு”. சிரித்தேன்.

ரீனா பொறிந்தாள். இரண்டு முறை கனியிருப்பக் கன்னாபின்னா காய் கவர்ந்தாள். “உன்னைக் காப்பாற்ற நினைத்தேன் பார்” என்று என் மேல் துப்பினாள். என் முகத்தில் உதைத்தாள். “இவனைச் சுட்டுத்தள்ளு” என்றாள். தடியன் சிரித்தபடி “நான் சொல்லலே?” என்று ரீனாவை விலக்கி ஒதுக்கிய அந்த அரைக்கணம் சைகை தரப்போதுமானதாக இருந்தது. ஜூல் ஆறு அடி போல் தாவி தடியனைக் கீழே தள்ளி அவன் சுதாரிக்குமுன் கழுத்தருகே முன்பற்களைப் பதித்து உறுமினான். அதே கணத்தில் நான் தரையில் சக்கரம் போல சுற்றி எழும்பி மற்றவன் பிடறியில் உதைத்த வேகத்தில் வாய் குதறி பற்களைத் துப்பி விழுந்தான். அதே வேகத்தில் தரையிறங்கி தடியன் தொப்பையில் முழங்காலை ஊன்றி அழுத்தினேன். “செனப்பன்னி.. கொஞ்சம் கூட அசையாதே.. ஜூலுக்கு கழுத்தைக் குதறும் பழக்கம் உண்டு” என்றேன். சரேலென்று தடியனின் கார்டுராய் நிஜாரை உருவி அவன் கால்களைக் கட்டினேன். மெள்ள எழ முயற்சித்த மற்றவனை நெஞ்சில் உதைத்து அவனுடைய நிஜாரையும் உருவி அவன் கால்களைக் கட்டியபடி, இனம் புரியாமல் நடுங்கிய ரீனாவிடம் “சமர்த்தாக இரு, இல்லையேல் உன்னையும் காயப்படுத்துவேன்” என்றேன்.

இரண்டு பொறுக்கிகளையும் எழுப்பிக் கைகளைப் பின்புறம் கட்டினேன். “என்ன செய்யப் போகிறாய்?” என்றாள் ரீனா. ஜன்னலைத் திறந்து “கீழே தெரிகிறதே குப்பைத் தொட்டி... இருவரையும் ஜட்டியை உருவி அதில் உருட்டி விடப்போகிறேன். குப்பையோடு குப்பையாகக் கிடப்பார்கள். எலிகளும் காக்கைகளும் இவர்களின் கிழங்குகளைக் கவ்வுமுன் திறமையிருந்தால் பிழைத்துக் கொள்ளட்டும்” என்றேன்.

“பழிக்கு உன்னைத் தொங்கவிட்டு கிழங்குகளை வெட்டப் போகிறாள் நிவா” என்றாள் ரீனா.

“இந்த இருவரின் கை காலைக் கட்டிய நான் அவங்க வாயை ஏன் கட்டவில்லை தெரியுமா? அவர்கள் கத்திக் கதறுவது உன் நிவாவுக்குக் கேட்கட்டும் என்றுதான்”. அவளை நெருங்கினேன். வெறும் கவுனை சற்றே விலக்கித் தொட்டேன். “ரீனா, நான் உன்னை இன்னும் அடிக்கடி இரவில் நினைத்துக் கொள்கிறேன்”.

என்னை ஒதுக்குவது போல பாவனையில் விலகினாளா அல்லது வெறுப்பா என்று தெளிவு தேடுகையில் வாசல் கதவை உடைக்காத குறையாகத் தள்ளிப் பிளிறிக்கொண்டே உள்ளே வந்தாள் நிவா. அவளுடன் கைதி போல வந்த இன்னொரு பெண்ணை ரீனாவிடம் தள்ளினாள். அவள் பின்னே வந்த இன்னும் இரண்டு தடியர்கள் துப்பாக்கிகளுடன் எங்களைச் சூழ்ந்தனர். தாவ முயன்ற ஜூலை அடக்கி உட்கார்ந்தேன். “வேண்டாம், சாகாதே”.

“என்ன ஆச்சு இங்கே? எங்கே அவர்கள்?” என்று நிவா கேட்கும்போதே கீழே கூக்குரல் கேட்க, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். ஒரு நிமிடம் போலப் பார்த்துப் பொறுமையாகத் திரும்பி “நீயா இதைச் செய்தாய்? என் ஆட்கள் என்று தெரிந்துமா செய்தாய்?” என்றாள் என்னிடம். ஆமோதித்தேன். மறுபடி கீழே பார்த்தாள். ஏனோ காட்டுத்தனமாகச் சிரித்தாள். சூழலின் நகைச்சுவை புரியாவிட்டாலும் நானும் சேர்ந்து கொண்டேன். திடீரென்று அமைதியாகி “அப்போ நீ வங்கியைக் கொள்ளையடிக்க மறுக்கிறாய் போல” என்றாள். “அட, எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்று நக்கலடித்தேன்

என் பர்பர் கார்பெட் தரையில் சூயிங்கம் எச்சிலைக் காறித்துப்பிய நிவா, கை தட்டி அடியாட்களிடம் “இந்தப் பெண்களைச் சுட்டுக் தள்ளுங்க.. இவன் ரெண்டு காலையும் வெட்டி அதே குப்பைத் தொட்டில போட்டு, கைல கொலை பண்ணின துப்பாக்கியைத் திணிச்சு போலீஸைக் கூப்பிட்டு.. போலீஸ் வருமுன் குப்பைல கிடக்குற நம்ம முண்டக்கேனைகளை கூட்டிட்டு சட்டுனு வந்து சேருங்க” என்று ஆணைகளை அடுக்கியபடி வாசலை அணுகினாள்.

“பொறு” என்று அலறினேன். என் பொய்யையும் பாசாங்கையும் பிட்டு வைத்துவிட்டாள். இரண்டு டாலருக்கு ஆளைச்சுடும் ஜாதியா இவள்? ரேகன் ஆட்சியிலேயே இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டுவார்கள் என்று நினைத்தேனே? சொன்னதைச் செய்யும் அரசியல் தலைவர்கள் என்று வருவார்களோ இந்த நாட்டில்?! “தடிராணி, சரணாகதி!” என்றேன். “நான் வங்கிப் பெட்டிகளை எடுத்துத் தருகிறேன்.. என்னைக் காயப்படுத்தாதே.. இவர்களை என்ன வேணுமென்றாலும் செய்துகொள்..”

“உன் விருப்பம்” என்ற நிவா உடனே பெண்களைச் சுடுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. “வேண்டாம், சுடாதே” என்று நான் குறுக்கிடுவதற்குள் முதல் குண்டு எங்கேயோ பாய இரண்டாவது ரீனாவின் காதலி இடுப்பில் பாய்ந்தது. நான் ஜூல் மேல் விழுந்து அவனை மூடினேன். சட்டென்று சரிந்தாள் ரீனாவின் காதலி. ரீனாவும். நிவா அலட்சியமாக “செத்தால் உன் தலையில். பிழைத்தால் மருத்துவ மனையில். நாளை மதியம் பெட்டிகள் மட்டும் என் கையில். கவனமிருக்கட்டும்” என்று வசனம் பேசி வெளியேறினாள். அதே வேகத்தில் உளளே சடாரென்று எட்டிப் பார்த்து “ஏய்.. அந்த நாயைக் கவனமாகப் பார்த்துக்க.. உன் முட்டாள்தனத்தினால் அநாவசியமா செத்து வைக்கப்போகுது” என்று கண்சிமிட்டி மறைந்தாள்.

**
    ப்போது வேண்டுமானாலும் பனி விழத் தொடங்கும் போலிருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேல் வங்கி இருந்த இடத்தைச் சுற்றி வந்திருப்பேன். அங்குலம் அங்குலமாகக் கவனித்து விவரங்களை மனதுள் குறித்துக்கொண்டேன். எப்படி நுழைவது எங்கே குண்டுகளை வைப்பது எப்படி வெளியேறுவது என்று திட்டமிட்டு...என்னவோ ஒட்டவில்லையே...நான்கு அல்லது ஐந்தாவது சுற்றில் கவனித்தேன். சுமார் இருநூறு அடி தொலைவில் சற்றே உள்ளடங்கியிருந்த கட்டிடம். அருகில் சென்று நோட்டமிட்டேன். வாயிலில் விளம்பரக்கொடி, தட்டிகள். படித்தேன். புரிந்தது. ஆகா! இதான் விஷயமா?!

ஒயேசிஸில் ரீனா என்னிடம் சொல்லாமலே புரிந்த விவரம் நினைவுக்கு வர, தீவிரமாக அசை போட்டேன். என்ன செய்ய வேண்டும் என்று துரிதமாகத் திட்டமிட்டேன். எனக்குள் ஒரு புன்னகை வந்தது. காண்டாமிருகத்துக்குப் பொறந்த தடிச்சி.. வா வைக்கிறேண்டி ஆப்பு.

வங்கி ஓரமாக நிறுத்தி வைத்திருந்த எப்பொழுதோ திருடிய என் இந்தியன் வெலோ மோட்டார் பைக்கில் உதைத்தேறினேன். கொதிக்கும் சட்டியில் வழுகும் வெண்ணைக்கட்டி போல ஓடியது வண்டி. இனி செயலாக்க வேண்டிய திட்டங்களை வகுத்தபடி மருத்துவமனைக்குச் சென்றேன். ரீனாவைப் பார்த்தேன்.

ரீனா தன் காதலிக்கு “இடுப்பில் சரியான காயம் ..அதிக ரத்த இழப்பு.. பிழைத்தாலும் பக்கவாதம் வந்து நடமாட முடியாமல் போகும் என்கிறார்கள்.. இன்சூரன்ஸ் வேறே இல்லை..” என்று புலம்பினாள். நிறுத்தி வானத்தைப் பார்த்தபடி நிவாவைக் கொல்லப் போவதாகச் சொன்னாள். குரோதத்துடன் சிரித்தாள். திடீரென்று அழுது என் கைகளைப் பிடித்துக் கொண்டாள். என்னை உயிராகக் காதலிப்பதாகவும் நான் எங்கே போனாலும் என்னுடன் வருவதாகவும் சத்தியம் செய்தாள். நிச்சயம் கஞ்சா போதையில் மிதந்தாள் என்று புரிந்தது. அவள் இருந்த நிலையில் முழு விவரத்தையும் சொல்வதா வேண்டாமா என்று யோசித்து அவளை வெளியே இழுத்து வந்தேன். “இதோ பார் ரீனா.. இது நீயாக வரவழைத்துக் கொண்ட விவகாரம். என்னை எதற்காக வங்கியைக் கொள்ளை அடிக்கச் சொல்கிறீர்கள் என்று தெளிவாகத் தெரிந்து விட்டது.. என்னிடம் உண்மையை மறைக்காமல் சொல்” என்றேன். “இந்தப் பிசாத்து வங்கித் தொகைக்காக என்னை அழைத்த போதே நினைத்தேன்.. என்னை மாட்டி விட்டு நீங்கள் தப்பிக்கத்தானே? ஒரு திருப்பத்தை உண்டாக்க என்னைக் கருவியாகப் பயன்படுத்தத் திட்டம் போட்டிருக்கிறீர்கள்.. அதானே?”

மறுத்தாள் ரீனா. அவள் மறுப்பில் கலந்திருந்தது லேசான உண்மையா அல்லது அப்பட்டமான பொய்யா என்று தீர்மானிக்க முடியவில்லை. “சரி.. நீ சொல்வது உண்மையாக இருந்தால் உனக்கும் உன் கூட்டத்துக்கும் நல்லது. இல்லையென்றால் அத்தனை பேர் தோலையும் உரித்து விடுவேன்” என்றேன். "நான் ஒரு கூட்டத்திலும் இல்லை" என்று தலையாட்டியபடி தன் காதலியைப் பார்க்க மீண்டும் உளளே போனாள் ரீனா. நான் என் வீட்டுக்குக் கிளம்பினேன். பாவம் ஜூல். அவனுக்கு சாப்பாடு கூட தரவில்லை, பீர் கொடுத்ததோடு சரி. அதையும் குடிக்க விடாமல் ரீனாவும் குண்டர்களும் வந்து.. வண்டியை வேகமாகச் செலுத்தினேன்.

நிவாவின் இலக்கு வங்கியல்ல. நான் பார்த்த உள்ளடங்கியக் கட்டிடத்தில் நிகழ்ந்து வந்த வைரநகை உலகக் கண்காட்சி. விளம்பரத்தில் படித்த “நாளை கடைசி நாள்! மதியம் முதல் ஐந்து மணி வரை பத்து மிலியன் டாலர் அதிரடி விற்பனை!!” அறிவிப்பு என்னை இன்னும் இழுத்தது. நிவாவும் கூட்டமும் வைரங்களைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். எதிரே இருக்கும் பிசாத்து வங்கியில் பிசாத்து பணத்தை நான் கொள்ளை அடிக்கும் பொழுது போலீசை வரவழைத்து திசை திருப்பல் கலாட்டாவில் பழங்குற்றவாளி என்னைச் சிக்கவிட்டு இரண்டு கொள்ளையையும் என் தலை மேல் கட்டப் பார்க்கிறார்கள். இவர்களை எப்படித் தண்டித்தால் தகும்? நாய் குரைக்கும் ஓசை..

நாய் குரைக்கும் ஓசை தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் ஓசையில் என் கோப எண்ணங்கள் சட்டென்று களைய, வீட்டருகே வந்துவிட்டதையும் யாரோ என் வீட்டு ஜன்னலோரமாக ஓடுவதையும் கவனித்தேன்... வண்டியை அப்படியே கடாசி அவசரமாக வீட்டின் படியேறினேன்.

**
[ஒரு சுற்று சுற்றி தொடக்கத்துக்கே திரும்பிடுச்சே கதை? இது எப்படி முடியும் என்று யாருக்காவது ஏதாவது தோணுதா?  முடிக்காம விட்டாலும் கொரொனா கலவரத்துல யாரு கவனிக்கப் போறாங்க?]

<தொடரும்>

34 கருத்துகள்:

  1. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது..

    என்றென்றும் நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. துடிப்பான தொடக்கம்...

    இது மாதிரிக் கதைகளைப் படித்து வெகு நாட்கள் ஆகின்றன...

    பதிலளிநீக்கு
  3. வந்த செய்தி: நாளை மற்றும் ஓரிரண்டு நாட்களுக்கு கடுமையான மழை கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆராய்ந்த உண்மை - செய்திக்கும் அப்பாத்துரை சாரின் கதை ஆரம்பத்திற்கும் தொடர்பில்லை

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. கதை ரொம்ப விறுவிறுப்பாகப் போகிறது. அருமையான நடை. ஆங்கிலக் கதைகளின் சுறுசுறுப்பு.

    நீண்ட கதை என்று போட்டதன் காரணம், அடுத்த பகுதி எப்போ வரும் என்று தெரியாத்தாலா இல்லை நிறைய பகுதிகள் வரப்போகிறதா?

    சிலவற்றை சென்சார் செய்யாத்தன் காரணம் சுஜாதா போட்ட நடைபாதைதானே என்ற எண்ணமா (எபி ஆசிரியருக்கு?)

    பதிலளிநீக்கு
  6. ஜேம்ஸ் பாண்ட் ,மற்றும் சிகாகோ டிடெக்டிவ் டானி பாய்ட்
    கம்பீரத்துடன் ஆரம்பித்திருக்கும் துரையின் ஜூல் கதை
    அருமையாக இருக்கிறது.

    துடிப்புடன் நகர்கிறது.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பதைப் போல உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். உலக மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியத்துடன் பிரச்னைகள் இன்றி வாழப் பிரார்த்திக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. அப்பாதுரையின் கதை! இதற்கு விமரிசனங்களே தேவை இல்லை. பிச்சு வாங்கறார். மிக இயல்பாகவும், அருமையாகவும் கதையைக்கொண்டு போகிறார். ஜூலுக்கு என்ன நடக்கப் போகிறதோ என்று கவலையாகத் தான் இருக்கிறது. அது சரி, கதை நாயகன் ஜெயிலில் இருந்து பரோலில் வந்திருப்பதாகக் கதை ஆரம்பத்தில் சொல்லி இருக்கார். அப்போ ஜூலை யார் பார்த்துக் கொண்டார்கள்? (என் கவலை எனக்கு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ ஜூலை யார் பார்த்துக் கொண்டார்கள்? (என் கவலை எனக்கு)//

      ஹா ஹா ஹா கீதாக்கா நல்லா கேட்டீங்க. இப்ப கதையாளு டென்ஷன்ல ருக்காப்ல...எப்படி வைரத்தை ஆட்டைய போடறது, நிவாவை எப்படி ஆட்டத்தை அடக்கறதுனு கேல்குலேஷன்ல இருக்கப்ப ஃப்ளாஷ்பேக்? ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. //அப்போ ஜூலை யார் பார்த்துக் கொண்டார்கள்? (என் கவலை எனக்கு)// - நியாயமா கீசா மேடத்துக்கு என்ன டவுட் வரணும்? இவன் தகிடுதத்தத்தில் இறங்கிட்டானே... இவன் உள்ள போனா ஜூலுக்கு என்ன கதியாகும்னுனா டவுட் வரணும்? கீசா மேடத்துக்கு முன்கதைமேலதான் ஆசை போலிருக்கு. ஹாஹா

      நீக்கு
    3. நியாயமான கேள்வி.. ஜூலை பிராணி ஜெயில்ல போட்டாங்களோ? இப்பல்லாம் சம வாழ்வாதாரம்* கேக்குறாப்ல கதை நடந்த நாள்ல இருந்துச்சா தெரியலியே..

      *நீதிபதி கேட்ட கேள்விக்கு கொலை குற்றம் சுமத்தப்பட்ட நபர் தன்னுடைய நாயும் உடன் வர வேண்டும் என்று வேண்டினாராம்.. inmate demands own dog to join சமீபத்தில் பிரபலமான கைதி உரிமை..

      நீக்கு
    4. //அது சரி, கதை நாயகன் ஜெயிலில் இருந்து பரோலில் வந்திருப்பதாகக் கதை ஆரம்பத்தில் சொல்லி இருக்கார். அப்போ ஜூலை யார் பார்த்துக் கொண்டார்கள்?// சாதாரணமாக இந்த மாதிரி விறுவிறுப்பு மசாலா கதைகளில் லாஜிக் ஓட்டைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள். அல்லது கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள். இங்கதான் கீதா அக்கா நிக்குறாங்க! 

      நீக்கு
    5. கதை தொடங்குறதுக்கு முன்னால நடந்தது எப்படி கதைல ஓட்டையாகும்?

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கதை சுவாரஸ்யமாக உள்ளது. கதாசியருக்கு வாழ்த்துக்கள். ஒவ்வொரு வரிகளிலும் விறுவிறுப்பு. அடுத்து என்னவோ என்ற ஆவலில் நானும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. பொறுமையாகப் படித்து கருத்திட்டதற்கு நன்றி.
    பொறுமையாகக் காத்திருந்து பதிவிட்ட ஶ்ரீராமுக்கும் நன்றி.
    - அப்பாதுரை

    பதிலளிநீக்கு
  13. அழகான விறு விறுப்பான இங்கிலிஷ் படம் பார்த்தாப்ல இருக்கு அது சரி படம் னா இன்டெர்வெல் அஞ்சொ பத்தோ நிமிஷம் தான் விடுவாங்க இதென்ன ஒரு வாரம்!!!! ஹா ஹா ஹா

    இந்த மாதிரி விறு விறு கதை எல்லாம் ஒரே மடக்குல படிச்சு குடிச்சுரணும்.!!

    ஜூல் பாவம். என்னமா உழைக்குது. கடைசி வரை ஹீரோ மத்தவனை எல்லாம் கொல்றானோ இல்லையோ கொள்ளை அடிக்கறானோ இல்லையோ ஜூலை சாகவிடாம பார்த்துக்கிட்டா போதும்...

    உங்க கதை எழுத்து நடையை எல்லாம் விமர்சிக்க முடியாது அப்பாதுரை ஜி! அசாத்தியமான எழுத்தாளுமை. மிகவும் ரசித்து வாசித்தேன். எனக்கு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகள் ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. கதை நன்றாக விறு விறுப்பாக போகிறது.
    திரில்லர் கதைக்கு வேண்டிய அனைத்தும் இருக்கிறது.

    ஜூல் பிழைத்து எழுந்து கதை நாயகனோடு நிவா குழுவினரை பழி வாங்க வேண்டுமே!

    பதிலளிநீக்கு
  16. எ.பி.யில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதை. புதிதாக போடப்பட்ட நார்த்தங்காய் ஊறுகாய் போல் விறுவிறுப்பு!

    பதிலளிநீக்கு
  17. aஆங்கிலக்கதைபோல் இருப்பதால் நேட்டிவிடி மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
  18. // முடிக்காம விட்டாலும் கொரொனா கலவரத்துல யாரு கவனிக்கப் போறாங்க?// அப்படியெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். அடாது மழை பெய்தாலும், புயல் அடித்தாலும், எ.பி. படிக்காமல் இருக்க மாட்டோம். கொரோனவாவது? ஒன்றாவது? இப்போதுதான் நான் சென்னை, பாண்டிச்சேரி என்று சுற்றி விட்டு வந்தேன். எல்லோரும் மாஸ்க் போட்டுக் கொண்டு நடக்கிறார்கள், டீ குடிக்கிறார்கள், எச்சில் துப்புகிறார்கள் அப்புறம் கதை படிப்பதற்கு என்ன? 

    பதிலளிநீக்கு
  19. //குடிக்கிறார்கள், எச்சில் துப்புகிறார்கள் //
    😁

    பதிலளிநீக்கு
  20. துப்பறியும் கதைகள் போன்ற விறுவிறுப்பு.

    பதிலளிநீக்கு
  21. ஓஒ...!

    காணாமற் போன ஐயா வருக... தொடர்க...

    குறள்களால் குதற விரும்பாமையால், ரசிக்கிறேன்...!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!