செவ்வாய், 19 ஜனவரி, 2021

கேட்டு வாங்கிப் போடும் கதை - " கதாநாயகி" :: செல்வராஜூ துரை

" கதாநாயகி" 
---
செல்வராஜூ துரை
************** 

அவளோட பேர் என்ன?..

அவளுக்குத் தெரியாது.. 
அவளையும் அரவணைத்தபடி பூமாதேவி சுற்றிக் கொண்டு இருக்கிறாள்...

வெள்ளந்தியான ஜனங்கள் கூப்பிடும் விதத்தால் இருபது வயதிலேயே எல்லாருக்கும் ஆத்தா ஆகிவிட்டாள்...

புகழ் பெற்ற மாரியம்மன் கோயில் இருக்கும் ஊர் இது..

கோயிலுக்கு வருபவர்களை நம்பி இருக்கும் சன்னிதிக் கடைத் தெருவில்
கோயிலுக்குள் இருப்பவளை நம்பி அங்கே சுற்றி வருபவள் இவள்...

பிச்சை எடுப்பவளா!...

அப்படிச் சொல்லி விட முடியாது...

கோயிலுக்கு அந்தப் பக்கமாக  தெப்பக் குளம்...   அதன் கரையோரமாக முடி இறக்கும் கொட்டகை..

அதுதான் அவளது மாளிகை..

பழைய தகரப் பெட்டி கோரைப்பாய் துணி மூட்டை இவற்றோடு போர்வை ஒன்று..   அவ்வளவு தான் அவளது சொத்து...

அந்தப் போர்வை கூட வாழைப்பழக் கடை வைத்திருக்கும்  மீசைக்கார தாத்தா வாங்கிக் கொடுத்தது..

அம்பாளின் அருட்திரளும் ஜனங்களின் வெள்ளந்தியான குணமும் அவளுக்குப் பாதுகாப்பாக இருந்தன...

விடியற்காலையில் கோயில் திறக்கப்படுவதற்கு முன்னாலேயே விழித்துக் கொள்வாள்...

குளத்தில் முங்கிக் குளித்து விட்டு  கிழங்கு மஞ்சளை உரசி முகத்தில் பூசிக் கொள்வாள்.. கண்களில் மையிட்டுக் கொள்வாள்... நெற்றி முழுதும் திருநீறு.. நடுவாக பெரிய குங்குமம் இட்டுக் கொள்வாள்..

இந்த அலங்காரம் கிழவி சொல்லிக் கொடுத்தது...

யாரந்தக் கிழவி...

பன்னிரண்டு வருசங்களுக்கு முன்னால் கிழவி தான் இவளுக்குத் துணை.. வேறு யாரும் இல்லை..

கிழவிக்கு இவள் எந்த வகையில் பேத்தி என்று தெரிந்து கொள்வதற்குள் கிழவி போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டாள்...

ஒன்றும் புரியாமல் அழுது கொண்டு நின்ற இவளுக்கு அங்கிருந்த முடி இறக்கும் ராமசாமியும் மற்றவர்களும் ஆதரவுக்கரம் நீட்டினார்கள்...

நாலு நாள் கழித்து கிழவி சொல்லிக் கொடுத்த மாதிரி -  பூ, பொட்டு, குங்குமத்துடன் கோயில் வாசலில் நிற்க - அதுவே பழகிப் போனது..

மஞ்சள் நிறத்தில் பாவாடை.. ஜாக்கெட்..  அரக்கு நிறத்தில் தாவணி..

இதே மாதிரி நாலு செட்டும் நீல நிறத்தில் ரெண்டு செட்டும் வைத்திருக்கிறாள்..

காதுகளில்  கவரிங் ஜிமிக்கிகள்.. கழுத்தில் வண்ண வண்ண பிளாஸ்டிக் மணி மாலைகள்... கைகளில் கண்ணாடி வளையல்கள்...

எல்லாம் முடிந்ததும் தோள் பையை இடது பக்கமாக மாட்டிக் கொள்வாள்..

பூ விற்கும் ராமாயியிடம் அஞ்சு ரூபாய்க்கு மல்லிகைப் பூ வாங்கி தலையில் வைத்துக் கொள்வாள்...

வலக்கையில் வேப்பிலைக் கொத்து..  இடக்கையில் ஆளுயரத்துக்கு பிரம்பு..

அப்படியே அவள் மெல்ல நடப்பாள்...  எதிரே வரும் விடலைகளுக்கு வயிற்றைக் கலக்கியடிக்கும்...  தெறித்து ஓடிப் போய் விடுவார்கள்...

நேராகப் போய் கோயிலின் தலை வாசல் மண்டபத்தில் நிற்பாள்...

அங்கிருந்து பார்த்தால் மூலஸ்தானம் ஒளி மயமாகத் தெரியும்...  கும்பிட்டு நிற்பாள்.. கண்களில் நீர் வழியும்...

அப்படியே விழுந்து வணங்கி விட்டு அங்கே எரிந்து கொண்டிருக்கும் அக்னிச் சட்டியின் விளிம்பில் படிந்திருக்கும் கரியை மோதிர விரலால் தொட்டு புருவங்களுக்கு நடுவில் இட்டுக் கொள்வாள்...

மாதத்தில் நான்கைந்து நாட்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களும் இப்படித்தான்..

எவரிடமும் கை நீட்டி பிச்சை என்று கேட்க மாட்டாள்...

பொதுவாக கிராமத்து மக்களுக்கு மாரியம்மன் கோயிலில் வைத்து கல்யாணம் முடிப்பது என்றால் இரட்டை சந்தோஷம்...

அப்படி கோயிலில் கல்யாணம் முடித்து வருபவர்களை எதிர் கொள்வாள்...

முற்றிய நாகரிகத்தினர் ஒரு ஓரமாக விலகிப் போனாலும் ஏனையோர் முக மலர்ச்சியுடன், "வா... ஆத்தா!.." என்பார்கள்..

மணமக்களுக்கு திருஷ்டி சுற்றி வேப்பிலையால் மூன்று முறை வருடி விடுவாள்..

அவர்கள் மனமுவந்து கொடுக்கும் பணத்தை அப்படியே தோள் பையில் வாங்கிக் கொள்வாள்...

முகூர்த்த நாட்களில் எல்லாம் அவளது தோள் பை நிறைந்தே இருக்கும்..

ஒரு சமயம் யதார்த்தமாக யாருக்கோ ஏதோ சொல்லப் போக -

இருபது வருடமாக இழுத்துக் கொண்டு கிடந்த நிலத் தகராறு அவர்கள் பக்கம் ஜெயமாகி விட்டது...

தேடி வந்து மரியாதை செய்தார்கள்...

பாவாடை தாவணி, பூ பழம், அரை பவுன் மோதிரம் என்று...

மோதிரத்தைத் தவிர்த்து விட்டு மற்றவைகளை எடுத்துக் கொண்டாள்...

இது காட்டுத் தீயாகப் பரவி விட்டது...  ஏகத்துக்கும் அவளைச் சுற்றி கூட்டம்...

" நகரு... நகரு... ஆத்தாவோட பார்வைய மறைக்காதே!.. "

நாட்டாமை பண்ணிக் கொண்டு நாலு பேர் வந்தார்கள்...

விஷப் பாம்புகள் என்று மனதில் பட்டது..

" எனக்கு இஷ்டம் இல்லை... விலகிப் போய்டுங்க!... " - என்றாள்...

" எம்பேச்சைக் கேக்கலை.. ன்னா...  நீ எப்படி வேசம் கட்டுறே... ன்னு பார்க்கிறேன்...ஒட்டுத் துணி இல்லாம உருவிடுவேன்!.. " - உறுமினான் ஒருவன்..

உறுமிய அவன் அன்று சாயங்காலமே லாரியில் அடிபட்டு உருத்தெரியாமல் போனான்...

அதற்குப் பிறகு பெரும்பாலும் மௌனம் என்றானாள்...

அளவுக்கு மிஞ்சி அவள் அலைவதில்லை...  மாவிளக்கு பொங்கல் புளியோதரை நேர்ச்சை கூழ் என்று பிரசாதங்கள்...  வயிற்றுப்பாட்டிற்கு பிரச்னை இல்லை..  எல்லாவற்றுக்கும் மேல் வருசம் முழுவதும் அன்னதானம்..

'இன்றைக்கு இது போதும்' என்று மனசு சொல்லி விட்டால் கோயிலின் எல்லையை விட்டு நகர்ந்து விடுவாள்..

குளத்தில் இறங்கி முகம் கழுவி விட்டு புங்க மரத்தின் கீழ் அமர்ந்து கொள்வாள்...

மைனாக்களும் அணில்களும் சத்தம் போடுவதைக் கேட்டு சிரித்துக் கொண்டு இருப்பாள்...

சாயங்காலம் பசிக்கும் போது மணி கடையில் நாலு இட்லி...  கையோடு காசு கொடுத்து விடுவாள்...

ஒரு டீ குடித்தாலும் ஒரு ரூபாய் கொடுத்து கணக்கை நேர் செய்து விடுவாள்...

" இருக்கட்டும் ஆத்தா!.. " - என்றால், " மணியண்ணே.. நீ புள்ளக்குட்டிக்காரன்!.. " - என்பாள்..

அன்றைக்கு மணியின் கல்லாப்பெட்டி நிறைந்திருக்கும்..

அதைத் தெரிந்து கொண்ட மற்ற கடைக் காரர்கள் இன்று இங்கு ஆத்தா வரமாட்டாளா!... என்று காத்திருப்பார்கள்..

இது இது இத்தனை ரூபாய் என்பது மட்டுமே அவளுக்குத் தெரியும்..  மற்றபடி மொத்தமாக எவ்வளவு இருக்கிறது என்பது தெரியாது...

அவ்வப்போது மீசைக்காரத் தாத்தா எண்ணிப் பார்த்து இருப்பதைச் சொல்வார்....  மற்றவரை

" இதை நீங்க வெச்சுக்குங்களேன்!... " - என்று மெலிதாகச் சிரிப்பாள்...

" எனக்கெதுக்கு இது!..  வேணுங்குறது இருக்கு.. உனக்கு தேவைப்படும் கண்ணு!.. " - என்பார் பதிலுக்கு...

சரி... அவளுக்கு என்ன தேவை!?...

விவரம் கண்டு சொல்லத் தான் ஒருவரும் இல்லையே!... ஆனாலும் கிடைப்பதில் ஓரளவை கை கால் விளங்காமல் யாசித்துக் கொண்டிருப்பவர்களிடம் கொடுத்து விடுவாள்...

சிறுவயதில் தன்னை ஆதரித்த ராமசாமியின் மகள் கல்யாணத்துக்கு
' பணம் தந்தே தீருவேன்.. ' - என்று விடாப்பிடியாக சொல்லியிருக்கிறாள்...

இப்படியாகப் போய்க் கொண்டிருந்த போது ஒருநாள் சாயங்காலம் - எதிர்த்த டீக்கடையில் பரோட்டா அடிப்பவன் இளித்துக் கொண்டு வந்து எதிரில் நின்றான்...

அவன் அப்படி ஒன்றும் நல்லவன் இல்லை...

திடுக்கிட்டவள் அருகில் இருந்த பிரம்பைக் கையில் எடுத்து ஓங்கினாள்...

"அடிச்சிடாதே... அடிச்சிடாதே... " - என்றபடி தடுமாறியவன் - " உன்னிடம் ஒரு சேதி பேசணும்!.. " - என்றான்...

ஓங்கிய பிரம்பை கீழே இறக்காமல் ' என்ன?.. ' - என்பதைப் போல  புருவங்களை உயர்த்தினாள்...

" நானும் பல நாளா யோசிச்சிட்டேன்... இதத் தவிர வேற எதுவும் தெரியலே.. உனக்கு... ன்னும் யாரும் இல்லை..  எனக்கு... ன்னும் யாரும் இல்லை..  நாம கலியாணம் கட்டிக்கலாமா?... உனக்கு நான்.. எனக்கு நீ!.." 

பேசிக் கொண்டே அவள் அருகில் அமர்வதற்கு முயன்றான்..

சடார்.. எனப் பிரம்பால் தரையில் தட்டியவள் - " போய் யாராவது பெரியவங்கள வந்து பேசச் சொல்லு!.. " - என்றாள்..

" நாந்தான் யாரும் இல்லைன்னு சொல்றேனே!... "

" டீக்கடை முதலாளி!... அவரு வந்து பேச மாட்டாரா?... "

இந்தக் கேள்விக்கு ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்...

அவளுடைய மனதில் ஏதோ ஒன்று உறுத்தியது... தகரப் பெட்டிக்குள்ளிருந்து திருநீறை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு படுத்தாள்.. தூங்கி விட்டாள்...

இது நடந்த மூன்றாம் நாள்... ஞாயிற்றுக் கிழமை... சூரியன் இறங்கிக் கொண்டிருந்தான்..

கோயிலைச் சுற்றி நூற்றுக் கணக்கான மக்கள்.. கோயில் வாசலில் படுத்துறங்கினால் நோய் நொடி தீரும்.. பேய் பிசாசுகள் ஓடும் என்ற நம்பிக்கையில் கூடியிருக்கிறார்கள்...

குளத்தங்கரை கொட்டகை முன்பாகவும் மக்கள் திரள்...

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே அசந்து விட்டாள்...

அரைத் தூக்கத்தில் அப்படியும் இப்படியும் புரண்டு கொண்டிருந்தவள் காலில் ஏதோ ஊர்வது போல் இருந்ததால் சட்டென விழித்து எழுந்தாள்...

கால்மாட்டில் அவன் தான்.. அவனே தான்!..

" டே...ய்!.. "

விழுந்தடித்துக் கொண்டு ஓடினான் அவன்...

அங்குமிங்கும் படுத்துக் கிடந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு எழுந்தார்கள்... சத்தம் போட்டார்கள்... மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தார்கள்...

பொழுது விடிந்த வேளையில் டீக்கடையில் ஒரே சத்தம்...

" பரோட்டா அடிக்கிறவன் பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிப் போய்ட்டானாம்!... " - ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்...

பொழுது விடிந்தது வழக்கம் போல... கோயில் வாசலுக்குச் சென்றாள் அவள்..

ஒரு வயதுக் குழந்தையுடன் நின்றிருந்த ஏழைத் தம்பதியரை நெருங்கினாள்..

" ஆத்தா... புள்ளக்கு ஒடம்பெல்லாம் அக்கி வந்த மாதிரி இருக்கு... கொஞ்சம் துன்னூறு பூசி இறக்கி விடு.. உனக்குப் புண்ணியமாப் போகும்!.. "

குழந்தையின் மேலெல்லாம் வேப்பிலை கொண்டு வருடி விபூதியைப் பூசி விட்டாள்...

கண்ணீருடன் பத்து ரூபாயை நீட்டினார்கள்...

பணத்தைக் கை நீட்டி வாங்கியவள் அதை அந்தக் குழந்தையின் கையிலேயே கொடுத்து விட்டு நடந்த போது -

கடைத் தெருவில் பரபரப்பு...  டீக்கடையில் பரோட்டா அடித்துக் கொண்டிருந்தவன் செத்து விட்டான்!.. - என்று...

" மூக்கு வாயெல்லாம் ரத்தம்.. காட்டு வாய்க்கா கரையில கிடக்கு பிரேதம்... காசு களவு அடிச்சவன காட்டேரியம்மா அடிச்சிட்டா!... "

ஜனங்கள் வேடிக்கை பார்ப்பதற்கு ஓடினார்கள்..

நள்ளிரவில் கெட்ட எண்ணத்தோடு தன்னை நெருங்கினவனை நம்ம கதாநாயகி தான் தேடிப் போய் ரெண்டு அறை விட்டாள்..  - என்கிற விவரம் தெரியாத டீக்கடைக்காரர் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார்..

அது சரி...

இந்தக் கதைக்குக் கதாநாயகி யார்?..


அவளா... இவளா?..

ஃ ஃ ஃ 

65 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்.
    அன்பு ஸ்ரீராம், மற்றும் அன்பு துரைக்கும்
    எல்லா நாட்களும் இனிமையாக ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும்.
    இப்பொழுதுதான் திரவியம் என்னும்
    அன்பு என்னும் சொத்தைப் பற்றிப்
    படித்துவிட்டு வந்தேன்.
    இதோ இன்று இன்னோரு போனஸ்.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...    வணக்கம். துரை செல்வராஜூ சரளமாக அன்பை, நம்பிக்கையைப் பொழிகிறார்.

      நீக்கு
  2. அனாதை என்று யார். உருவானாள் அம்மன்.
    அம்மனின் சாட்சியாக நம் கதா நாயகி.

    நீதியையே நம்பி வளர்ந்தவள்.
    பணத்துக்காகவும் அவள் உடலைத் தீண்டும் துணிவோடு வந்தவனை
    அம்மன் போலவே தண்டித்து விட்டாள்.

    அர்த்த நாரீஸ்வரர் போல அம்மையாகக்
    காத்தவள், ஈசனாக தண்டனை வழங்கிவிட்டாள்.
    தப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லியம்மா அவர்களது கருத்துரையின் கோணம் வித்தியாசமானது..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. தொய்வில்லாதக் கதையோட்டம்.. சாமியா ஆசாமியா என்று குழப்பும் சிலரைப் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
    நலமே எங்கும் வாழ்க!...

    பதிலளிநீக்கு
  5. இன்று கதைக் களம் காண வந்திருக்கும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  6. இன்று எனது ஆக்கத்தினை பதிவு செய்து அன்புடன் ஊக்கம் அளித்த ஸ்ரீராம் அவர்களுக்கும் வழக்கம் போல சித்திரங்களால் சிறப்பித்த அன்பின் KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
  7. கதைக்கான சித்திரம் அழகாகாக இருக்கின்றது.. அன்பின் கௌதம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  8. கதையும், விவரித்த படி வரைந்ததும் அருமை...

    பதிலளிநீக்கு
  9. கதைக்குப் பிறகு வருவேன், வழக்கம்போல்!

    முதலில் படத்தைப் பார்த்துவிட்டேன். பெண்ணின் தலைக்குமேல் என்ன கம்பு? தலையில் போடு ஒரு போடு.. என்று அர்த்தம் கொள்ளணுமா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலக்கையில் வேப்பிலைக் கொத்து.. இடக்கையில் ஆளுயரத்துக்கு பிரம்பு..

      நீக்கு
    2. அன்பின் ஏகாந்தன்..
      சாவகாசமாக மீண்டும் வருக...
      தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. மானுஷ்யமும்,அமானுஷ்யமும் இணைந்த அருமையான கதை. தை செவ்வாய் சிறப்பு"சிறுகதை என்று கூறலாமா? பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //.. மானுஷ்யமும் அமானுஷ்யமும்...//

      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. நல்லதொரு கதை. கதைக்கான கேஜிஜி அவர்களின் ஓவியமும் சிறப்பு. இருவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டப்பட்டு கதை எழுதி பெயர் வாங்குவோர் உள்ளனர்; சும்மா உட்கார்ந்து படம் என்று எதையாவது வரைந்து பெயர் வாங்குவோரும் உள்ளனர்! இதில் நான் எந்த வகை என்று எனக்கே தெரியுது !! (mind voice)

      நீக்கு
    2. கதையின் பெயருக்கும் எழுதிய எழுத்தாளரின் பெயருக்கும் வித்தியாசம் காட்டுகிற மாதிரி நன்கு இடைவெளி விட்டு பிரசுரித்தால் எடுப்பாக இருக்கும்.

      நீக்கு
    3. அப்படியே செய்கிறோம் நன்றி.

      நீக்கு
    4. அன்பின் வெங்கட்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. கதையில் வார்த்தைகளைவிட கதையின் வர்ணிப்பு அதிகம் அருமை.

    "நாயகி" அவளேதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      கருத்துரைக்குள் பொடி வைப்பதில் வல்லவர் தாங்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  13. எழுத்தாளர் சொல்லச் சொல்ல 'அப்படியா' என்று நாம் கேட்டுக் கொள்ளும் கதைகள் உண்டு. இப்படியான கதைகள் எழுத்தாளர் கூட இருந்து நகர்த்தும் நகர்வில் தான் நகரும்.

    கதையை வாசிக்க வாசிக்க வாசிப்பு லயிப்பில் ஆழ்ந்த சுகத்தில் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்ளும் கதைகள் உண்டு. இந்த மாதிரி கதைகளுக்கு எழுத்தாளர் கூட இருந்து வழி நடத்த வேண்டும் என்ற அவசியில்லாமல் போகும். சொல்லப் போனால் எழுதியவரை மறந்து கதைகளை கதைகளாக வாசிக்கும் கதைகள் இவை.

    இந்த வகைகளில் இது முதல் வகைக் கதை.

    பதிலளிநீக்கு
  14. அந்த ஆத்தாவை நாமும் நேரிட பார்க்கும்படியாக ஒரு கதை ஆத்தாவே உருவாக்கிவிட்டார் கதையுடன் மனது லயித்து விடுகிறது அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாசிரியர் சார்பில் நன்றி.

      நீக்கு
    2. அன்பின் காமாட்சியம்மா...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. நல்ல கதை...ரசித்தேன். கேஜிஜி அவர்கள் முயன்ற படமும் நன்று. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'முயன்ற' படம் !!! ஆ - ஏதோ உள்குத்து இருக்கு !!

      நீக்கு
    2. அன்பின் நெல்லை ...

      அழகிய ஓவியத்தால் மனதைக் கவர்ந்து விட்டார் அன்பின் கௌதம் அவர்கள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  16. //கோயிலுக்குள் இருப்பளை நம்பி அங்கி சுற்றி வருபவள் இவள்...// இங்கே மட்டும் இரு இடங்களில் திருத்தி விடுங்கள்! "இருப்பவளை" "அங்கேயே" அல்லது "அங்கே"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. திருத்திவிட்டேன்.

      நீக்கு
    2. காலையில் கவனிக்கும்போது இந்தப் பிழை கண்ணில் படவில்லை..

      திருத்தம் சொன்னதற்கு நன்றியக்கா..

      நீக்கு
  17. அம்மன் காப்பாற்றி ரக்ஷித்து வருகிறாளே! அது கூடத் தெரியாமல் அவளைச் சாதாரண மனுஷினு நினைச்சுத் தொட்டவன், போய்விட்டான்! இதெல்லாம் சாதாரணப் பிறப்பே இல்லை. அவதாரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவாசிரியர் சார்பில் நன்றி.

      நீக்கு
    2. உண்மையில் எல்லாமும் எல்லோருக்கும் புரிவதில்லை.. எளிய மனிதர்கள் உணர்ந்து கொள்வதை மற்றவர்கள் தெரிந்து கொள்வதில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  18. யதார்த்தமான கதை! எல்லா அம்மன் கோயில்களிலும் இப்படி ஒரு குணச்சித்திரத்தைப் பார்க்க முடியும். அதை நம் கண் முன்னே கொண்டு வந்துவிட்டார் துரை! நம் முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண் என்னும் எண்ணம் நமக்குள் பதிந்து விடுகிறது. கோயிலும் எனக்குச் சமயபுரம் மாரியம்மன் கோயிலை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படித் தோன்றியது. பதிவாசிரியர் சார்பில் நன்றி.

      நீக்கு
    2. உண்மை...

      தஞ்சை மாரியம்மன் கோயிலில் இப்படியொரு பெண் சுற்றிக் கொண்டிருந்தாள்... ஏதோ காரணங்களால் அந்தப் பெண் சமீப காலமாக இல்லை..

      கதையின் பின்புலம் சமயபுரம் தான்..

      அக்கா அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
  19. எல்லா நிகழ்வுகளையும் கதையாகு திறன் திரை செல்வராஜு வுக்கே சாத்தியம் எதையு கதையக்கும் கற்பனை துரையிடம் உண்டு தொய்வில்லாத நடை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா ...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  20. சமயத்தில் உதவும் அம்மன் சமயபுரத்தம்மா.பித்தனாக

    திருட வந்தவனைத் தண்டித்தவள்.
    அவளேதான் இவள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவளே தான் இவள்!..

      உண்மை.. உண்மை.. இப்படியான எண்ணத்தை மனதில் உண்டாக்கி விட்டால் பிழைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  21. இன்று தை செவ்வாய் சிறப்பு சிறுகதை என்றார் ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள்..

    உண்மைதான்...
    இன்று தஞ்சையில் வீட்டில் கன்னி தெய்வ வழிபாடு நடக்கிறது..

    இந்த வழிபாட்டிற்குள் ஒரு ஆச்சர்யமும் ஒரு அமானுஷ்யமும் பிணைந்திருக்கின்றன..

    அடுத்த செவ்வாய் அன்று தஞ்சையம்பதியில் அதைத் தருவதற்கு முயற்சிக்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  22. இந்தக் கதையை வாசித்து அன்புடன் கருத்துரை செய்த அனைவருக்கும் நன்றி..

    நாம் நம்புகின்றோமோ இல்லையோ
    நம்மை அமானுஷ்யங்கள் தொடர்வது உண்மை..

    தக்க நேரத்தில் அவை தம்மை வெளிக் காட்டிக் கொள்கின்றன... ஆயினும் இக்கதையில் அமானுஷ்யம் எதுவும் சொல்லப்படவில்லை.. ஆனால் அந்த பாவனையில் கதை ரசிக்கப்பட்டுள்ளது..

    இதுவே மனதுக்கு மகிழ்ச்சி.. மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியுடன்..

    துரை செல்வராஜூ..

    பதிலளிநீக்கு
  23. //இந்தக் கதையில் அமானுஷ்யம் சொல்லப் படவில்லை//
    உண்மையே. ஆனால் அவள் தொட்டதும் வியாபாரம் பெருகுகிறது
    என்ற நோக்கில்,
    அவளுக்கு அன்னையின் அருள் பதிவாகி இருக்கிறது.
    ஒரு பெண்ணால் இன்னோருவரை அறைந்தே
    அழிக்க முடியுமானால் அவளிடம் அபார சக்தி இருக்கிறதென்றே அர்த்தமாகிறது
    இல்லையா துரை.நன்றி மா.
    எப்படியும் தீய சக்திகளை ஒழிப்பதில் அன்னையே
    எல்லை.எல்லை அம்மன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் அம்மா...

      அமானுஷ்யம் சொல்லப்படவில்லை .. ஆனாலும் அடுத்தடுத்து வரும் சம்பவங்களில் அது பதிவாகி இருக்கிறது..

      அவளிடம் அமானுஷ்யம் பதிந்திருப்பதை வெளிக்காட்டிய தங்களுக்கு நன்றி...

      நீக்கு
  24. ஆத்தாவின் கதை அழகாத்தான் இருக்கு. அடுத்த அறை யாருக்கு விழுமோன்னு அச்சமாவும் இருக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்...
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      // அடுத்த அறை யாருக்கு?...//

      சிரிப்பு வந்து விட்டது...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  25. கல்கியின் புதினத்தைப் போல...அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  26. அன்பின் ஐயா..
    // கல்கியின் புதினம்..// அந்த அளவை எல்லாம் நெருங்க முடியுமா!..

    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!