வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

​ வெள்ளி வீடியோ : காமன் விழா காணும் நிலா மடிமேல் விழும் என் மஞ்சள் புறா ...

 லக்ஷ்மிகாந்த் பியாரேலால் -  ஹிந்தி இசை இரட்டையர்கள்.

தீபாவளி சமயம் வரும் லட்சுமி பூஜையின்போது பிறந்தததால் லக்ஷ்மிகாந்த் ஷாந்தாராம் குடால்கர் என்று பெயரிடப்பட்ட இவர் இளமையில் வறுமையைத் தவிர வேறொன்றும் அறியாதவர்.​

படிப்பைத் தொடர முடியாததால் மாண்டலின் கற்றுக் கொண்டவர் 1949 - 50 களில் இரண்டு படங்களில்  குழந்தை நட்சத்திரமாகவும்  நடித்திருக்கிறார்.  இவருக்கு மூன்று வயது இளையவரான ப்யாரேலால் ராம்பிரசாத் சர்மா புகழ்பெற்ற ட்ரம்பெட் கலைஞரின் மகன்.  இசையின் நுணுக்கங்கள் அத்தனையும் தந்தையிடம் கற்றவர்.  ஆண்டனி கோன்சல்விஸ் என்பவரிடம் வயலின் கற்றவர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமர் அக்பர் ஆண்டனி படத்தில் 'மை நேம் இஸ் ஆன்ட்டனி கோன்சல்விஸ்'  என்கிற பாடலை இசையமைத்தார்.  இவரும் குறிப்பிட்ட வயதில் வறுமையை சந்தித்தவர்தான்.

மேற்கத்தி இசையில் ஆர்வமும் திறமையும் கொண்டிருந்த பியாரேலால் பாம்பே, சென்னை, வியன்னா என்று சென்று நல்ல வாய்ப்பளித்த தேட திட்டமிட்டார்.  எதுவுமே பலனளிக்காத நிலையில், வறுமையாலேயே நணபர்களாகி விட்டிருந்த இருவரும் அந்நாளைய பல ஹிந்தி இசையமைப்பாளர்களிடம் பல விதங்களிலும் பணியாற்றியுள்ளனர்.  அதற்கு காரணமாகவும் உதவியாகவும் இருந்தவர் லதா மங்கேஷ்கர்.

கிஷோர் குமார்தான் இவர்கள் இசையில் அதிக தனிப்பாடல்கள் பாடி இருக்கும் பாடகராம்.  402 பாடல்கள்.  தோஸ்தி தான் இவர்களுக்கு பெயரையும், விருதையும் வாங்கி கொடுத்த முதல் படம்.  (சாஹூங்கா மெயின் துஜே.. சாந்த் சவேரே ) புதிய நடிகர்கள் நடித்திருந்த இந்தப் படத்துக்கும் சரி, லூடெரா படத்துக்கும் சரி இவர்கள் இசைதான் பலம்.  பல வாரங்கள் இவர்கள் பாடல்கள்தான் 'பினாகா கீத் மாலா'வில் (நினைவிருக்கிறதா?) முதலிடம் பெற்றிருக்கும்.  அதோடு வருடக் கடைசியில் இந்த முதலிடம் பெற்ற பாடல்களைத் தொகுக்கும்போது  இவர்கள் பாடல்கள்தான் அதிக எண்ணிக்கையில் முன்னணியில் இருந்திருக்கின்றனவாம்.


அப்படிப் பட்ட இரட்டையர்கள் தமிழில் இசையமைத்த இரண்டு பாடல்கள்தான் இந்த வாரம்.  இரண்டுமே எஸ் பி  பாலசுப்ரமணியம் பாடியது.  இவரை முதலில் ஏக் துஜே கேலியேவில் பாட வைக்க பாலச்சந்தர் யூனிட் சொன்னபோது மிகவும் தயங்கினராம் இந்த இரட்டையர்கள்.  கிஷோர் குமார்தான் அவர்கள் சாய்சாக இருந்தது.




உயிரே உனக்காக.  1986 ல் வெளிவந்த படம்.  மதர்லேண்ட் பிக்சர்ஸ் படம்.  மதர்லேண்ட் பிக்சர்ஸ் என்றாலே 'ஏழைகளின் கமலஹாசன்' மோகன் இருப்பார்.  இசை ஸ்பெஷலாக இருக்கும்.  இதிலும் அப்படியே.  ஏழை என்றால் பணமில்லாத என்று அர்த்தமல்ல.  மதர்லேண்ட் பிக்சர்ஸிடம் பணமில்லை என்றால் யாரிடம் இருக்கும்?!!  கமல் கால்ஷீட் கிடைக்காத என்று சொல்லலாம்.  ஆனால் ஆரம்ப நாட்களில்தான் அப்படியே தவிர, மோகன் பின்னாட்களில் சொந்த உழைப்பிலேயே பிஸியாகிவிட்டார்.  இந்தப் பாடல் ஒரு சிறிய பாடல்.  வைரமுத்து எழுதி இருக்கும் பாடல்.  பாடலின் ஸ்பெஷல் கிடார்.

காட்சியில் மோகன், நதியா.

காதல் கொண்ட நாயகன் காதலியின் உள்ளம் அறியாமல் அந்த ஏக்கத்தில் பாடும் பாடலாகக் கொள்ளலாம்.  அந்த ஏக்கம், அந்த எதிர்பார்ப்பு எஸ் பி பி குரலில் தெரியும்.

பல்லவி இல்லாமல் பாடுகிறேன் பாதை இல்லாமல் ஓடுகிறேன் 
ஊமைக் காற்றாய் வீசுகிறேன் உறங்கும்போதும் பேசுகிறேன் 
இந்த ராகம் தாளம் எதற்காக..  உயிரே உனக்காக 
உயிரே உனக்காக உயிரே உனக்காக உயிரே உனக்காக 


ரகசிய போலீஸ்.  எம் ஜி ஆர் படம் அல்ல.  பாக்யராஜ் படமும் அல்ல!  1995 ல் வெளியான சரத்குமார் படம்!  இதற்கும் இசை லபி இரட்டையர்கள்தான்.  ரொம்ப ரிச்சான இசை.  இதிலுமே கிடார் முக்கிய பங்கு வகிக்கும்.  எஸ் பி பி யின் அழகான ஹம்மிங்கைத் தொடர்ந்து வரும் ஆரம்ப இசையே ரொம்ப அமர்க்களமாக இருக்கும்.

பாடல் ஆரம்பிக்கும்போது முதலில் உணர்வது எஸ் பி பி யின் Bபாவம் நிறைந்த குரல்.  காதலில் திளைக்கும் குரல்.  ஆர்ப்பாட்டமில்லாமல், அமைதியாக அதே சமயம் பரவசம் கலந்த கம்பீரத்தில் பாடல்.  ஆரம்பம்தான் அசத்தல் என்றால் சரணங்களிலும் தொடரும் குரல் ஆதிக்கம்...  சரணத்தின் முடிவில் பாவை உடல்...  புல்லாங்குழல் எனும் வரிகளுக்கிடையில் குறுக்கிட்டு வசீகரிக்கும் வயலின்..  

பாடலின் பல்லவியே சற்று நீளமாக அமைந்த பாடல்.முதல் வரியிலிருந்து பாடலின் வசீகரம் வரிக்கு வரி ஏறிக்கொண்டே போகும்.  வளைந்து செல்லும் டியூனா, எஸ் பி பி  குரலா..  எல்லாம் இணைந்த மாயம்.

பாடலை எழுதி இருப்பவர் வாலி.  காட்சியில் சரத்குமாரும் நக்மாவும்.

மயில்தோகை அழைத்தால் மழைமேகம் நெருங்கும் 
மடல்வாழை அழைத்தால் மலைச்சாரல் திரும்பும் 
அழைக்காமல் வருவேன் அலுக்காமல் தருவேன் 
மனக்கோவில் சிலையே உனக்கேது விலையே 
வளைக்காமல் வளைக்கரம் தேட வருந்தாமல் துணைக்கரம் கூட 
இடைசேர நமக்கு இடைவேளை எதற்கு 

நதியே மண்மீது நீயும் நடந்தால் என் ஆசை பூக்கும் 
பறித்தால் செந்தேனைச் சேர்த்து பனிப்பூ என்மீது வார்க்கும் 
பாவை உடல் புல்லாங்குழல் மெதுவாய்த் தொடும் உன் மன்னன் விரல் 
தீராது ஆசை பாடல் 
தொடங்கும் தொடரும் தலைவன் கூடல் 

கடலில் இல்லாத மீனும் கனலில் விழாத மானும் 
விழியில் கொண்டாடும் மாது விடுமோ அன்றாடம் தூது 
காமன் விழா காணும் நிலா மடிமேல் விழும் என் மஞ்சள் புறா 
மேலாடை சூடி ஆடும் 
மெதுவாய் புதிதாய் கவிதை பாடும் 

35 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை வணக்கம்.

    இரண்டு பாடல்களையும் கேட்ட நினைவு இல்லை. பிறகுதான் காணொளி பார்க்கணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  வணக்கம்.  பிறகு கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம்.
    என்னாளும் இறைவன் அருளுடன்
    எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இல்லாமல் விவித் பாரதி கேட்ட நாட்களே இல்லை. அதற்கு முன் ஷங்கர் ஜெய்கிஷன்,. உன்னதமான நாட்கள்.

    பதிலளிநீக்கு
  4. நதியா மோகன் மிகப் பிரமாதமான ஜோடி.
    பிரபலம் கூட.
    SPB sir குரலுக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்.
    இரண்டு பாடல்களிலும் ,இசையிலும் அப்படியே
    இந்திப் படச் சாயல் அதிகம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோகன் நதியாவோடும், ரேவதியோடும் நிறைய நடித்திருக்கிறார். சுரேஷும் அப்படியே

      நீக்கு
  5. சுரா கே தில் மேரா நினைவு இருக்கிறதா?
    அடுத்த பாடலைப் பார்க்கும் போது நினைவுக்கு
    வந்தது.

    இந்தப் பெண்ணை அவ்வளவாக எனக்குப் பிடிக்காது.
    மத்தபடி பாட்டு மிக நல்ல இசை.
    பாலு சாரின் குரல் மாடுலேஷன் அதி அற்புதம்.

    மிக மிக நன்றி மா ஸ்ரீராம்.
    முதல் பாடல் கேட்டிருக்கிறேன்.
    இரண்டாவது கேட்டிருக்கிறேனா என்று நினைவில்லை.
    தேடித் தேடி நல்ல பாடல்களைப் பதிவு செய்கிறீர்கள்.
    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. இரண்டு பாடல்களும் கேட்டேன். பாடல்கள் கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. இன்று மீண்டும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. இரண்டையும் கேட்டிருக்கிறேன்... முதல் பாடல் பலமுறை...

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு இசையமைப்பாளர் ஜோடி. ஹிந்தியில் நிறைய பாடல்கள் பிரபலம். இன்றைய பதிவில் குறிப்பிட்ட பாடல்கள் கேட்ட நினைவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். ஹிந்தியில் ஏகப்பட்ட பாடல்கள் பிரபலம்.. நன்றி வெங்கட்.

      நீக்கு
  11. இவங்க பாடல்களை ஹிந்தியில் நிறையக் கேட்டிருக்கேன். ஆனால் தமிழிலும் இசை அமைத்திருப்பது தெரியாது. பாடல்கள் கேட்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடநாட்டு இசை அமைப்பாளர்கள் சில தமிழ்ப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்கள்.  இவர்கள், ஆர் டி பர்மன், சலீல் சவுத்ரிm பப்பி லஹிரி ...

      நீக்கு
  12. உங்கள் பாடல்கள் கலெக்ஷன் பிரமிக்க வைக்கிறது. முதல் பாடல் கேட்ட நினைவில்லை. இரண்டாவது பாடல் கேட்டிருக்கிறேன் ஆனால் இசையமைத்து லக்ஷ்மி காந்த் பியாரிலால் என்று தெரியாது.

    பதிலளிநீக்கு
  13. இந்தப் பாடல்களைக் கேட்டதாக நினைவு இல்லை...

    நகுமா இது தகுமா!?..- என்று அப்போது வெளியான படங்களை விரும்பிப் பார்த்ததில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிக்கக் கூடிய பாடல்கள் காதில் விழுந்தால் இதயத்தில் தங்கிவிடுகின்றன!​

      நீக்கு
  14. நேற்று குழாயடியில் பழைய பாடல்கள் பலவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்...

    அவற்றில் ஒன்றுக்கும் ஈடாவதில்லை இன்றைய பாடல்கள்...

    பதிலளிநீக்கு
  15. முதல்பாடல் முன்பு கேட்டிருக்கிறேன். இரண்டாவது இப்பொழுதுதான். இரண்டுமே நல்ல பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் முகம் மலர அன்பான மாலை வணக்கங்கள்! இன்றைய பாடல்கள் இரண்டும் இனிமை! முதல் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. மைக் மோகனின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்.என்னவருக்கு எங்காவது ஊர்களுக்கு செல்லும் பொழுது, வாகனத்தில் எண்பதுகளின் இளையராஜாவின் இசை தவழ வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டே, இசை கேட்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  பயணங்களில் மனதுக்குப் பிடித்த அப்பாடல்கள் கேட்பது இதம்.  பயணத்துக்கு கூடுதல் சுகம்.  நன்றி வானம்பாடி...

      நீக்கு
  17. மிக சிரமப்பட்டு இசையமைத்திருக்கிறார்கள்.. மிக சிரமபட்டு பாடியிருக்கிறார். மிக சிரமப்பட்டு கேட்க வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. கம்பன் விழாத் தெரியும்.. அதென்னது காமன் விழா... ஹா ஹா ஹா.

    பாட்டுக்கள் சூப்பர், ஆனாலும் எனது முதல் சொய்ஸ் 2 வது தெரிவாக வந்திருப்பதுதான். முதலாவது பாட்டுப் பெரிதாகக் கேட்டதில்லை, ஆனாலும் தெரியும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!