செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

சிறுகதை : துவக்கம் - அப்பாதுரை 

 

துவக்கம்

- அப்பாதுரை -

ரபரத்தப் பேரொலித் தட்டல் கேட்டுக் கண் விழித்தாள். தூரத்தில் நின்றிருந்த வீட்டுதவிக் கமல், அருகில் வந்து 'கவனமாக இறங்குங்கள்' என்றது. படுக்கையிலிருந்து இறங்கினாள்.

 "கமல், யார் கதவைத் தட்டினார்கள்? இப்பொழுது என்ன நேரம்?" என்று கேட்டாள். 

"உங்கள் இரண்டாவது கேள்விக்கு சரியான பதிலை முதலில் சொல்கிறேன். இரவு பத்து மணி முப்பது நிமிடமாகிறது. முதல் கேள்விக்கான பதில் உங்களைச் சங்கடப்படுத்தும். நீங்கள் உடனே பாதுகாப்பறைக்குச் செல்ல வேண்டும்" 

"பத்து முப்பதா? சட்டப்படி உறக்க வேளை துவங்கி விட்டதே! இந்த வேளையில் என்ன ஆரவாரம்?" 

"தெரியவில்லை. 'சட்டத்தைக் கொளுத்து' என்று ஒரு பேரிரைச்சலைச் சற்று முன் கேட்டேன்" என்ற கமல் அவளைப் பார்த்து, "எங்கே போகிறீர்கள்?" என்றது. 

"முப்பது கோடி வருடங்களுக்கு முன், கிளம்பும் போது 'எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டால் உன்னைக் கொளுத்தியிருப்பார்கள்" என்றாள். 

"முப்பது கோடி வருடங்களுக்கு முன் கமல்கள் கிடையாது. மனிதர்களின் அறிவும்... " என்ற கமலை நிறுத்தினாள். "வெளியே என்ன ஆரவாரமென்று பார்க்கப் போகிறேன்" என்றாள். 

"அது சட்ட விரோதம். அரசாங்கத்துக்குத் தெரிந்தால் உங்கள் மாதச் சலுகைகளை ரத்து செய்து விடுவார்கள்". 

"கமல், அருகில் வா" என்றாள். வந்தது. "வெளியே சட்டத்தை என்ன செய்யச் சொன்னார்கள்?" என்றாள். 

 "கொளுத்தச் சொன்னார்கள்" 

"நானும் அதைத்தான் சொல்கிறேன். நான் திரும்பி வரும் வரை வீட்டைக் கவனித்துக் கொள். என் அனுமதியில்லாமல் ஒருவரையும் உள்ளே விடாதே. இது ஆணை" என்றாள். 

கதவைத் திறந்து வெளியேறினாள். வீதியில் அங்குமிங்கும் மக்கள் கலவரத்துடன் நடந்து கொண்டிருந்தார்கள். என்றைக்குமே கண்டோ கேட்டோ இராத நிகழ்ச்சி. ஓடிக் கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி விவரம் கேட்டாள். வானத்தைக் காட்டி "அங்கே பார்" என்றார் நின்றவர். என்றைக்கும் இல்லாதபடி நிலவு ஒளிமயமாக இருந்தது. எத்தனையோ கோடி வருடங்களாக பூமியிலிருந்து விலகி விலகி ஏறத்தாழ பத்து லட்சம் கிலோமீடர் தொலைவு சென்றுவிட்டிருந்ததால் எப்பொழுதும் சிறியதாகத் தோன்றும் நிலவு, இன்றைக்கு வளர்ந்திருந்தது போல் பட்டது. 

"பெளர்ணமியா?" என்றாள். 

"இல்லை. நிலவே தெரியக் கூடாத அமாவாசை வானில், முழு நிலவு தெரிகிறது. ஆனால் அதுவல்ல அதிசயம்" என்றார். 

 விழித்தாள். 

"நிலவைக் கவனி. அது வளர்ந்து பெரிதாகிக் கொண்டு வருவதைப் பார்" என்றார். 

கவனித்தாள். அதிர்ந்தாள். கவனித்த பத்து நொடிகளில் முழு நிலவு இன்னும் பெரிதானது. பயந்து போனாள். 

நிலவின் வெளிவட்டம் சிவந்தது போல் காணப்பட்டது. "நிலவு பற்றி எரிகிறது போலிருக்கிறதே?" என்றாள். அவள் குரலில் நடுக்கம் தொனித்தது. 

"நிலவு மட்டுமல்ல. வானமே பற்றி எரிகிறது என்று நினைக்கிறேன். தென் கிழக்கே ஆஸ்திரேலியா கண்டத்தையே காணோமாம்.. உன்னைப் பார்த்தால் சலுகையுடை பிரஜையைப் போலிருக்கிறாய். போ. பாதுகாத்துக் கொள்". ஓடத்தொடங்கினார். 

கண்ணெதிரே நிலவு வளர்ந்து கொண்டிருந்தது. சற்று கவனித்துப் பார்த்த போது வானமே வெளுப்பது போல் பட்டது. தொலைவானில் இருளில்லை. நிலவு இப்படி வளர்ந்து வருகிறது என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான். சென்ற முப்பது வருடங்களாக அரசாங்க அறிக்கைகளில் வெளிவந்தது உண்மையாகி விட்டதா? பாதுகாப்புக்காக என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார்களே, அதை விட்டு ஏன் இப்படி எல்லாரும் ஓடுகிறார்கள்? வீட்டிற்குத் திரும்பினாள். 

வாயிலில் ஒரு ஆண் நின்றிருந்தான். சலுகைக் கோட்டுக்கு கீழான கூட்டத்தைச் சேர்ந்த ஆண் என்பது அவன் முகத்திலிருந்தும் உடையிலிருந்தும் நின்ற முறையிலிருந்தும் தெரிந்தது. 

"யாரப்பா நீ? இங்கே ஏன் வந்தாய்? உடனே ஓடி விடு. இது என் வீடு. என் கமலுக்குத் தெரிந்தால் உன்னை உயிர்பிரி நிலையத்துக்குப் புகார் செய்து அனுப்பிவிடும்" என்றாள். 

"எனக்கு அடைக்கலம் கொடுங்கள்" என்றான் ஆண். 

"ஏன்? வசதியற்றவர் பிரிவில் அரசாங்கச் செலவில் இருக்க வேண்டியது தானே?" 

"அரசாங்கச் செலவில் இந்த நிலவரத்துக்குப் பாதுகாப்பு கிடைக்காது. உங்களைப் போன்றவர் யாராவது கருணை முறையில் பாதுகாப்பளித்தால் தான் உண்டு" என்றான். அவன் குரலில் அச்சமும் கெஞ்சலும் கலந்திருந்தது. 

"பாதுகாப்புக்கு என்ன அவசியம்?" 

"நிலவு வளர்ந்து கொண்டே வருகிறது. வானம் வெளுக்கிறது. கிழக்கே நாடுகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. சற்றுமுன் கிடைத்தத் தகவலின் படி சைனாவும் இந்தியாவும் காணாமல் போய்விட்டனவாம். தகவல் வருவதும் நின்றுவிடும் போலிருக்கிறது" என்றான். 

"புத்திசாலியாக இருக்கிறாயே?" என்றாள். "உன்னை என் வீட்டுக்குள் நான் அனுமதித்தாலும் என் கமல் உன்னை அனுமதிக்காது என்பது உனக்குத் தெரியாதா?" 

அதற்குள் பெருங்கூச்சலுடன் பலர் ஓடிவருவதைக் கண்டாள். அவசரமாகக் கதவின் மேல் கை வைத்து வாயினால் ஊதினாள். கைரேகை மற்றும் டிஎன்ஏ வைத்து அடையாளம் கண்டு கொண்ட கதவு, தானாகத் திறந்தது. அவனை உள்ளே அனுமதித்து, தானும் நுழைந்தாள். கமல் அவனைத் தடுத்தது. 

"கமல், நான் தான் அவனுக்கு அனுமதி கொடுத்தேன்" என்றாள்.

"இவன் சலுகையற்ற கூட்டத்தைச் சேர்ந்தவன். அடைக்கலம் கேட்டு வந்திருக்கிறான். போகட்டும், விடு" 

"இவனை உடனே வெளியேற்றுங்கள். இவனால் உங்களுக்கு ஆபத்து வரலாம். சட்டப்படி இவனுக்கு சலுகையுடையோர் கூட்டத்தில் இடமில்லை. மேலும் சட்டமீறல் உடந்தைக்கு அரசாங்கம் உங்களைத் தண்டிக்க நேரும்" 

"கமல், சட்டமும் அரசாங்கமும் பொடியாகட்டும். நீ எனக்கு இப்போது உதவ வேண்டும்" 

 "சொல்லுங்கள்" "இன்றைக்கு அமாவாசை. வெளியே முழு நிலவு தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வெளிவட்டத்தில் சிவப்பு மற்றும் நீல நிறங்கள் தெரிகின்றன. தொடுவானம் வெளுக்கிறது. நள்ளிரவில் இதெல்லாம் நடக்கிறதென்றால் அதற்கு என்ன பொருள்?" 

"முதலிலேயே சொன்னேன்.. பாதுகாப்பறைக்குச் செல்லுங்கள் என்று. நானும் கவனித்தேன்" என்ற கமல் தன் தலையை நாற்புறமும் சுழற்றியது. கழுத்தை பத்தடி உயர்த்தித் தலையை இடமும் வலமும் நகர்த்தியது. கீழிறக்கி, "என் செயற்கைக்கோள் தகவல் தொடர்புச் செதிள்கள் வேலை செய்யவில்லை. கோள்கள் அழிந்து விட்டன போல் தோன்றுகிறது. செதிள்களில் குறையா தெரியவில்லை" என்றது. 

"உன் செதிள்களில் எந்தக் குறையுமில்லை கமல்" என்றான் அடைக்கலம் புகுந்தவன்.

 "சலுகையற்றவருடன் உரையாட மாட்டேன்" என்ற கமலை கோபத்துடன் பார்த்தாள். 

"முட்டாள் கமல்... உலகமே எரியுது.. இதில் உனக்கு பேத வைராக்கியமா?" வெளியே பார்த்தாள். 

"எனக்கென்னவோ இது.." "சூபர்னோவா" என்று கமலும் அடைக்கல ஆணும் ஒரே நேரத்தில் குரல் கொடுத்தார்கள். 

"ஆமாம். சூரியன் வெடிக்கத் தொடங்கி விட்டது. சூரியனின் மத்திய நீர்வாயுவும் ஹீலியமும் வற்றி வெளிப்பரப்பிலிருக்கும் ஹீலியமும் நீர்வாயுவும் இப்பொழுது பற்றி எரிவதால் சூரியன் பெருத்து வெடித்து இருக்க வேண்டும். புதனும் வெள்ளியும் இந்நேரம் சூரியனுடன் சேர்ந்து எரிந்து கொண்டிருக்க வேண்டும். எல்லாம் சேர்ந்த மொத்த வெடிப்பில் ஏற்பட்ட வெப்பமும் தீயும் நிலவை விடப் பரப்பளவில் பெரிதானதால் தெரியக்கூடாத நிலவும் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும் பூமியானதால் கிழக்கத்திய நிலங்களும் நீர்நிலைகளும் முதலில் அழிகின்றன. அழிவு மேற்கே பரவி வருகிறது. பூமிச் சுழற்சியின் பலனாக இன்னும் சிறிது நேரத்தில் நாமும் அழியலாம்" என்றாள். 

"உங்களைப் பாதுகாப்புச் சுரங்கத்துக்கு அனுப்பிவிட்டு அரசாங்கத்துக்கு செய்தி சொல்ல வேண்டியது என் கடமை" என்றது கமல். 

"நானும் வருகிறேன்" என்றான் ஆண். 

"முடியாது. நீங்கள் வெளியேறுங்கள்" என்றது கமல் ஆணைப் பார்த்து. 

"கமல், அவனைத் தடுக்காதே. பிழைத்துப் போகட்டும்" என்றாள். 

"சூரிய வெடிப்பினால் உலகமே அழியக் கூடும். இன்னொரு சூரியன் அல்லது நட்சத்திரத்தின் எரிவாயு கிடைக்கும் வரை நீங்கள் பாதுகாப்புச் சுரங்கத்தில் இருக்க வேண்டும். சலுகையற்றவருக்கு பாதுகாப்பு சுரங்க வசதி கிடையாது என்று அரசாங்கம் அறிவித்திருப்பது உங்களுக்குத் தெரியும். மேலும், பாதுகாப்புச் சுரங்கத்தின் வெப்பக்கதிர் தடுப்பறையில் ஒருவருக்கு மட்டுமே இடமிருக்கிறது. அங்கே சென்றதும் இந்த ஆண் உங்களைத் தடுத்து விட்டால் நீங்கள் அழிந்து போவீர்கள்" என்றது கமல். 

 "ஒருவருக்கு மட்டுமே இடமென்றால் கமலின் கதி??" என்றான் ஆண். 

"என்னால் வரமுடியாது. கமல்களுக்குப் பாதுகாப்பு வசதி இல்லை. எங்களை நாங்களே அழித்துக் கொள்ளவே விதிக்கப்பட்டிருக்கிறது " என்றது கமல். 

"வேண்டாம் கமல். நீயும் எங்களுடன் வந்து விடு" என்றாள். அதற்குள் பாதுகாப்புச் சுரங்கத்துக்கான அதிவேக வண்டி தரைக்கூரை விலகி, காத்திருந்தது. 

"சுரங்கத்துக்கான வண்டி. உள்ளே இறங்குங்கள். நீங்கள் மட்டும்" என்ற கமல், திறந்த கூரையினருகே சுதாரித்து நின்றது. "நீங்கள் மட்டும்" என்றது அவளைப் பார்த்து. "அவசரம், அவசரம்". 

அவள் உள்ளே இறங்கத் துணிந்தாள். கண் இமைக்கும் நேரத்தில் கமலை உள்ளே தள்ளிவிட்டு தானும் குதித்தான் அந்த ஆண். கூரையை மூடினாள். வண்டி அதிவேகத்தில் பூமிக்கடியில் பயணத்தைத் தொடங்கியது. 

"இது ஒரு மணி நேரப் பயணம்" என்றது கமல். 

"இனி என்ன ஆகும்?" என்றான் ஆண். 

"தெரியாது. அரசாங்க அறிக்கையின் படி, சூரியன் மொத்தமாக வெடித்தால் உலகம் அழிந்து விடும். நாமெல்லோரும் அழிவோம். செவ்வாய் வரை எல்லா கிரகங்களையும் சந்திரன்களையும் இழுத்து எரித்து விடக்கூடிய அளவுக்கு சூரிய வெடிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது. சூரியன் அதற்கு மேல் வெடித்து வளராமல் வெளிப்பரப்பில் இருக்கும் ஹீலியத்தை எரித்துக் கொண்டிருந்தால் வெள்ளை நட்சத்திரமாக பல்லாயிரம் ஆண்டுகள் மெள்ளக் குளிர்ந்து கொண்டிருக்கலாம். இந்நேரம் வியாழனுக்கும் ஆஸ்டிராய்ட் பட்டியிலிருக்கும் செயற்கை உலகங்களுக்கும் செய்தி போயிருக்கும். நாம் அழியாதிருந்தால், இன்னும் சில நூறு வருடங்களில் வேறு எரிவாயு கொண்ட நட்சத்திரங்களினால் நாம் பிழைக்கலாம். அல்லது நம்மை அழைத்துச் சென்று குடிபெயர்க்க அவர்களிடமிருந்து விண்கலன்கள் வரலாம். எப்படி இருந்தாலும் நமக்கு பாதுகாப்புச் சுரங்கமே கதி" என்றது கமல். 

"இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் உன் உதவியில்லாமல் எங்களால் பிழைக்க முடியாது, அதனால் தான் உன்னை உள்ளே தள்ளினேன் கமல். என்னை மன்னித்து விடு. நீ அழிவதை நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்றான் அடைக்கல ஆண். 

"சலுகை வரம்புகளற்ற புது உலகின் முதல் கமல் நீயே". அவளைப் பார்த்தான். "கமலுடன் மூவராவோம்" என்றான். 

"வெடித்துச் சிதறி அழிவதற்கு, நெருக்கியடித்து அழிவதில் ஒன்றும் குறைவில்லை". அவன் புத்திசாலி என்பது முன்பே தெரிந்திருந்தாலும், அந்தத் தருணத்தில் அவன் அழகாக இருப்பது போலவும் பட்டது அவளுக்கு.

25 கருத்துகள்:

  1. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. இந்த மாதிரி அறிவியல் புனை கதைகள் கொஞ்சம் தலை சுற்ற வைக்கக்கூடியவை.

    கதையை உள்வாங்குவதைவிட என்ன என்ன லாஜிக் மீறல்கள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கவே மனம் விழைகின்றது.

    பெண் எப்படித் தனியாக இருக்கிறாள், நெருக்கடியான தருணத்தில் பெண்ணின் கவனம் ஆணை நோக்கிப் போவதாக முடித்து, களேபரக் கதையை காதலில் கொண்டு நிறுத்தியிருக்கிறாரே, வெளியே இந்த நெருக்கடியான தருணத்தில் சட்டப் போராட்டம் எதற்கு?, மோடி அரசே இந்தியாவிற்கு பாரதம் என்று அலுவலகப் பெயர் வழங்கும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது பல்லாயிரம் வருடங்களுக்குப் பிறகும் இந்தியா என்ற பெயரிலேயே மேற்கு நாடுகளில் அறியப்படுகிறதே, ஸ்டாலின் இந்தமுறை ஆட்சியிலேயே சாதிகளை ஒழித்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாரே... பல்லாயிரம் ஆண்டுகள் கழித்தும் வர்க்கபேத சமூகம் இருக்கிறதே... என்று ஏகப்பட்ட கேள்விகள்.... விடை மட்டும்தான் கிடைக்காது.

    வெகுஜனப் பத்திரிகைகளில் ஜெ... போடும் கவர்ச்சிப் படத்தைப் பார்த்து வாயைப் பிளந்து படிக்க ஆரம்பித்து, கதை முடியும்போது ஞே என்று ஆகியிருக்கும்.

    பழமொழி சொன்னால் ரசிக்கணும், ஆராயக் கூடாது என்ற கமலதாசரின் கட்டளை, அறிவியல் புனை கதைகளுக்கும் பொருந்தும் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹி.. சாதிகள் ஒழிய வாய்ப்பேயில்லை.
      சாதி இரண்டொழிய வேறில்லை... நாலடியார் (தானே?) வெளிவந்து 2500 ஆண்டுகளில் எத்தனை சாதிகள்?

      பெண் தனியாக இருக்கக் கூடாதா? வரும் நாட்களில் ஆண் பெண் இருவரும் தனித்து வாழ்வதற்கான வாய்ப்பே அதிகம் இருப்பதாக நினைக்கிறேன்.

      நீக்கு
  4. வித்தியாசமான அனுபவமாக இருக்கின்றது.. இதற்கு முன் இவ்வாறு படித்ததாக நினைவில் இல்லை...

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! அனைவரும் நலம் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். இன்றைய விஞ்ஞான சிறுகதை அருமை. அண்டப் பெருவெடிப்பு பற்றி படித்துள்ளோம். அப்படி ஒன்று நிகழ்ந்தால், இப்படித்தான் இருக்குமோ முப்பது கோடி வருடங்களுக்குப் பின்? அதுவரை இவ்வுலகை விட்டு வைப்பார்களா? எல்லாம் அழிந்த அந்த நொடியில், ஆலிலையில் கண்ணனும் உதித்திடுவாரோ? என மனம் நினைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதுவரை இவ்வுலகை விட்டு வைப்பார்களா?

      பொருத்தமான கவலை :-)

      நீக்கு
  6. மிக வித்தியாசமான கற்பனை. வல்லி, கோமதி இருவரும் ஜன்மாஷ்டமிக் கொண்டாட்டங்களில் இருந்திருப்பார்கள் போல! அதான் காணோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜன்மாஷ்டமி கொண்டாட்டம் இல்லை, கொழுந்தன் மகன் கல்யாண விசாரிப்பு.அடுத்த வருடம் தான் பண்டிகை எல்லாம்.

      நீக்கு
  7. நெல்லை சொல்வதைப் போல் அந்தப் பெண்ணிற்கு அந்த ஆணின் மேல் திடீர்க்காதல் உதிக்கிறது. சரியாக அந்த இடத்தில் நிறுத்திட்டார் அப்பாதுரை. இம்மாதிரிக் கதைகளுக்கெல்லாம் விமரிசனம் எழுதுவது கடினம். அத்தனை விஞ்ஞான அறிவு எனக்கு இல்லை. :))))

    பதிலளிநீக்கு
  8. ஹையோ ஆண்டவா.. நான் கதை படிப்பதை விட்டு நீண்ட நாளாயிற்று, இருப்பினும் , இன்று படிச்சுத்தான் பார்ப்போமே, எனப் படிச்சால்ல்.. தலை மட்டுமல்ல அண்ட ஆகாசமும் சுத்துது:).. ஒண்ணுமே பிரியவே இல்லை ஹா ஹா ஹா.. ஆனாலும் ஒரு வசனம் பொறுக்கிக் கொண்டேன்ன்.. ரொம்பப் பிடிச்சுப் போச்ச்ச்ச்ச்...

    // நிலவே தெரியக் கூடாத அமாவாசை வானில், முழு நிலவு தெரிகிறது. ஆனால் அதுவல்ல அதிசயம்" ////

    பதிலளிநீக்கு
  9. அன்பின் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.
    கண்ணன் அருளால் அவன் பிறந்த நாள்
    இனிமையாக நிறைவேறியது.

    கீதா வந்திருப்பதே சந்தோஷம். அட நம் அதிராப்
    பொண்ணும் வந்துவிட்டதே,.
    எல்லோரும் நலமுடன் வாழ இறைவன் அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  10. அப்பாதுரை கதை சட சட படபட வென்று மீட்டியோர்
    மாதிரி வந்து ஒளிர்ந்து மறைகிறது காதலுடன், கடமையுடன்.
    விஞ்ஞானம் புரிவது சிரமம்.
    சூப்பர் நோவா புரிந்தது.
    அரசாங்க உதவியில் புது ஆதாம் ஏவாள்கள்
    கமலுடன் உருவாகிறார்களா. நல்ல கதை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. விஞ்ஞானம் கதை ஒரு தடவைக்கு இருதடவை படித்தேன்.

    வித்தியாசமான கற்பனை கதை. நன்றாக இருக்கிறது கதை.

    பதிலளிநீக்கு
  12. அவளுக்கு மட்டுமில்லை, கமலுக்கும் தான்
    -- என்று ஒற்றை வரி ஒன்றை எனக்காகவே சேர்த்துக் கொண்டதில் என்னை மீறி புன்னகை என்னில் வெளிப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. காலங்காலமாய் இரண்டு இரண்டாகவே இருந்த நிலையின் நெருக்கம் மூன்றாகியதின் புதுமை...

    பதிலளிநீக்கு
  14. கதை நன்றாக இருக்கிறது. ஒரே ஒரு சங்கடம், இம்மாதிரி கதைகளை படிக்கும் பொழுது சுஜாதா நினைவுக்கு வந்து தொலைக்கிறாரே..?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!