சனி, 1 அக்டோபர், 2022

மூன்று பேர்கள் ... மூன்று செய்திகள் And ஆயிஷா நடராசன் (நான் படிச்ச கதை ) JC

 நாகப்பட்டினம்:நாகையில், 'சுனாமி'யின் கோரத்தாண்டவத்தால் உறவுகளை இழந்து, காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, பட்டதாரியாகி, தற்போது, இரு குழந்தைகளுக்கு தாயாக உள்ள பெண்ணை, உணவுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

அப்பெண், 'ஏம்ப்பா இத்தனை வருஷமா என்னை பார்க்க வரவில்லை' என, அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்ட நிகழ்வு, அங்கிருந்தோர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாகை மாவட்டத்தில் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமியின் கோரப்பசியில், நுாற்றுக்கணக்கான குழந்தைகள் ஆதரவற்றோராக மாறினர்.



கடந்த 2004ல் சுனாமி தாக்குதலின் இரண்டாம் நாளில், கீச்சாங்குப்பம் கடலோரத்தில் அழுகுரல் கேட்ட மீனவர்கள், 2 வயது குழந்தையை மீட்டு, அப்போது கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல், வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட இரண்டரை வயது குழந்தையையும் கலெக்டரிடம் ஒப்படைத்தனர். இவ்விரு குழந்தைகளையும் அன்னை சத்யா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கவைத்து பராமரிக்க, கலெக்டராக இருந்த ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.வேளாங்கண்ணியில் மீட்கப்பட்ட குழந்தைக்கு, 'சவுமியா' என்றும், கீச்சாங்குப்பத்தில் மீட்கப்பட்ட குழந்தைக்கு, 'மீனா' என்றும் பெயர் சூட்டினார்.
இரு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா வளர்த்து வந்தாலும், காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, 150 குழந்தைகள் மீதும் தனி கவனம் செலுத்தி வந்தனர்.தங்கள் குழந்தைகளாகவே பாவித்து, பெற்றோர்களை போல் கவனித்துக் கொண்டதால், ராதாகிருஷ்ணனை 'அப்பா' என்றும், அவரது மனைவி கிருத்திகாவை 'அம்மா' என்றும் குழந்தைகள் அழைத்து வந்தனர்.
காப்பகத்தில் இருந்த குழந்தைகள் வளர்ந்து, திருமணமாகி சென்று விட்டனர். ராதாகிருஷ்ணன் முதன்மை செயலரான பிறகு நாகைக்கு வரும் போதெல்லாம் சவுமியாவையும், மீனாவையும் பார்த்துச் செல்வது, திருமணமாகி பல்வேறு இடங்களில் வசிக்கும் காப்பகத்தில் வளர்ந்தவர்களிடம் ஒருவித ஏக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கொட்டாய்மேடு என்ற மீனவ கிராமத்தில் சுனாமியால் பெற்றோரை இழந்து, அன்னை சத்யா ஆதரவற்ற காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, தற்போது வேளாங்கண்ணி அடுத்த செருதுார் கிராமத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் தமிழரசி, 32, வீட்டிற்கு, நேற்று ராதாகிருஷ்ணன், கலெக்டர் அருண் தம்புராஜ் உடன் சென்றார்.

இதையறிந்த தமிழரசி, தன் கணவர் விஜயபாலன், 35, என்பவருடன் வீட்டு வாசலிலேயே காத்திருந்தார். காரில் இருந்து ராதாகிருஷ்ணன் இறங்கியதும், சிறு குழந்தையைப் போல் தமிழரசி ஓடிச்சென்று, ராதாகிருஷ்ணனை இறுகப் பிடித்துக் கொண்டார்.'ஏம்ப்பா இத்தனை வருஷமா என்னை பார்க்க வரவில்லை...' என, உரிமையோடு கேள்வி கேட்டபடியே வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
ராதாகிருஷ்ணன் வாங்கி வந்த பழங்களை, ஆசையோடு தமிழரசி வாங்கிக் கொண்டார். இருவரும் நீண்ட நேரம் பழைய நினைவுகளை அசை போட்டதை, கலெக்டர் அருண் தம்புராஜ், டி.ஆர்.ஓ., ஷகிலா அமைதியாக நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.பின், காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு, தற்போது மலர்விழி என்பவரின் பராமரிப்பில் தங்கியுள்ள மீனா, சவுமியா, தரங்கம்பாடி கிராமத்தில் வசிக்கும் சாதனா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.அவர்களுடனும் சிறிது நேரத்தை செலவிட்டு, மலரும் நினைவுகளுடன் கனத்த இதயத்துடன் ராதாகிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றார்.

=============================================================================================================================


ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் லண்டனின் வாழும் தமிழர்களாகிய எங்களுக்கு துணையாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது தினமலர் இணையதளம்தான்என்று சென்னை வந்துள்ள லண்டன் கவுன்சிலர் அப்பு சீனிவாசன் குறிப்பிட்டார்.


உண்மையும்,உழைப்பும்.உறுதியான மனமும் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் உன்னதமான நிலையை அடைய முடியும் என்பதற்கான உதாரணம்தான் அப்பு சீனிவாசன்



லண்டனில் உள்ள பிரதான எதிர்கட்சியான தொழிலாளர் கட்சியின் ‛குராய்டன்' பகுதயின் கவுன்சிலராக அங்குள்ள மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள அப்பு சீனிவாசன்சென்னை கேகேநகரில் பிறந்து வளர்ந்தவர்.
கடந்த 1990-ம் ஆண்டு பொறியியல் துறயைில் மேல்படிப்பிற்காக லண்டன் பயணம் மேற்கொண்டவர் அங்கு படித்துக் கொண்டே வேலை பார்த்தார்,படித்து முடிப்பதற்குள்ளாக பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது.


தனது அறிவால் ஆ்ற்றலால் படிப்படியாக வளர்ந்து அந்த நிறுனத்தின் முதன்மை அதிகாரியானார் இவரால் நிறுவனம் வளர்ந்தது, நிறுவனத்தால் இவரும் வளர்ந்தார்.இவரது திறமையைப் பாராட்டி இவருக்காகவே புதிய நிறுவனத்தை துவக்கி அதற்கு இவரை தலைமை நிர்வாகியாக்கினர்.
ஒரு கட்டத்தில் அடுத்தவர்களுக்கு உழைத்தது போதும் என்று கையில் இருந்த பணத்தைக் கொண்டு தனது தாயார் சரோஜினியின் நினைவாக அங்குள்ளவர்களின்உச்சரிக்க ஏதுவாக ‛சாரா' என்ற பெயரில் சூப்பர் மார்கெட்டை துவக்கினார்.


இப்படி படிப்படியாக முன்னேறி லண்டனில் ஒரு முக்கியமான நபராக மாறினாலும் படிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து சொந்தமாக தொழில் துவங்குவது வரைஅவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும் பிரச்னைகளும் மிக அதிகம்.


தனக்கு ஏற்பட்ட பிரச்னைகள் புதிதாக லண்டனுக்கு பிழைக்கவரும் எந்த தமிழனுக்கும் ஏற்படக்கூடாது என்று நினைத்து ‛குராய்டன்' தமிழ் சங்கத்தை ஏற்படுத்திஅந்த சங்கத்தின் மூலம் லண்டன் வரும் தமிழர்களுக்கும், வந்த தமிழர்களுக்கும் பெரும் உதவி செய்துவருகிறார்.
இவரது இந்த உதவும் மனப்பான்மை காரணமாக லண்டன் வாழ் தமிழர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார், அப்பண்ணன் சொன்னால் போதும் என்றளவில்மரியாதையைப் பெற்றுள்ளார்.


இப்படி தமிழர்கள் மத்தியில் இடம் பிடித்தது போல லண்டன் மக்களிடம் செல்வக்கு பெற்றுள்ளார் அதற்கு காரணமாக இருந்தது கோவிட்தான்.
லண்டனைப் பொறுத்தவரை தனிமையைப் பெரிதும் விரும்புபவர்கள், பதினெட்டு வயதானானல் ஆனோ பெண்ணோ தனியாக அவர்கள் வாழ்க்கையை அவர்கள்பார்த்துக் கொள்ள வேண்டும் அதே போல எவ்வளவு வயதான தாய் தந்தையாக இருந்தாலும் போனிலோ நேரிலோ பார்த்தால் ஒரு ஹலோ சொல்வதோடு முடித்துக் கொள்வர்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில் வயதாகி தனியாக வாழும் வயது முதிர்ந்தவர்கள் கோவிட் காலத்தில் உணவிற்கும் மருந்துக்கும் மருத்துவ உதவிக்கும் தவித்துப் போனார்கள்,மருந்தும், உணவுப் பொருளும் அதிக விலைக்கு விற்கப்பட்டது அந்த நேரத்தில் வயதானவர்கள் அத்தனை பேருக்கும் மகனாக இருந்தவர் அப்பு சீனிவாசன்தான்.


அவர்களின் உணவு மற்றும் மருந்து தேவை தடையின்றி குறைந்த விலையில் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார் கோவிட் பயமின்றி அவர்களை நேரில் சந்தித்துதைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்தார் , தடுப்பூசி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்தார்.


இதன் காரணமாக கோவிட் நேரத்தில் மக்களுக்காக சிறந்த முறையில் தொண்டு செய்தவர் என்ற மகத்தான விருது வழங்கப்பட்டது விருது வழங்கும் விழாவில்இனம் பேதம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் உழைக்கும் இவரைப் போன்றவர்கள்தான் அரசியலில் ஆட்சியில் இடம் பெறவேண்டும் என்று தொழிலாளர்கட்சியின் முக்கிய தலைவரும் அடுத்த பிரதமராக வருவார் என்று கணிக்கப்படுபவருமான கீர் ஸ்டார்மர் குறிப்பிட்டார்.
அதற்கேற்ப அடுத்து வந்த அந்தப்பகுதிக்கான கவுன்சிலர தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்


குராய்டன் பகுதியின் கவுன்சிலர் என்ற கவுரப்பட்டத்தை தனது தாயின்காலில் சமர்ப்பித்து ஆசிபெற மனைவி கார்த்திகா, மகன் குருகிருஷ்ணாஆகியோருடன் சென்னை வந்துள்ள அவர் நமது நிருபரிடம் பேசுகயைில்..


தமிழர்கள் அதிகம் வாழும் முக்கிய நகரங்களில் லண்டனும் ஒன்று இங்குள்ள தமிழர்கள் எந்த தேவைக்காக துாதரகத்தை அணுகினாலும், நீங்கள் அப்பண்ணனை போய்பாருங்கள் என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றுள்ளேன்.


சக தமிழர்கள் ஆதரவுடன் பல கோடி ரூபாய்க்கு தமிழ்சங்கம் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, இங்கு பிறந்து வளரும் தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது,நமது தமிழ்ப்பற்றும் தாய்மண் பற்றும் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து மூத்த தமிழறிஞர்கள் தமிழ் கலைஞர்கள் பலரை அழைத்து விழாநடத்திவருகிறோம்.வருங்காலத்தில் தமிழர்களுக்காக இன்னும் நிறைய திட்டங்கள் வைத்துள்ளோம்


ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள தமிழர்களாகிய நாங்கள் பெருமைப்படக்கூடிய விஷயம் தினமலர்

 இணையதளம்தான்தமிழ்நாட்டில்என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள எங்கள் எல்லோர் மொபைலிலும் உள்ள ஆப் தினமலர் ஆப்தான், தினமலர் இணையதளம் மேலும்வாழ்க வளர்க என்று கூறி முடித்தார்.


-எல்.முருகராஜ்.

========================================================================================================================


புனே : “டெஸ்லா நிறுவனத்தில் என் தகுதியை மதித்து வேலை தர வேண்டும்; அதன் சி.இ.ஓ., எலான் மஸ்க் என்னை நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும்,” என, சமூக வலைதளத்தில் அடிக்கடி மஸ்க்குடன் அரட்டை அடிக்கும் புனே நகரை சேர்ந்த இளைஞர் கூறினார்.



மஹாராஷ்டிராவின் புனே நகரை சேர்ந்தவர் பிரனாய் பத்தோல்,23. மென்பொருள் பொறியாளரான இவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு, டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்குடன் 2018ல் சமூக வலைதளத்தில் நட்பு ஏற்பட்டது.

அப்போது டெஸ்லா காரின் 'வைப்பரில்' உள்ள தவறு குறித்து, சமூக வலைதளத்தில் மஸ்க்குக்கு சுட்டிக்காட்டினார். அதற்கு உடனடியாக பதிலளித்த மஸ்க், தவறு உடனே திருத்தப்படும் என கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சமூக வலைதளத்தில் அரட்டை அடித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரனாய் பத்தோல், டெஸ்லா நிறுவனத்தில் எலான் மஸ்க்கை சந்தித்துள்ளார். அந்த போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதை ஏராளமானோர் பகிர்ந்து எலான் மஸ்க்கை புகழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து, பத்தோல் கூறியதாவது:எலான் மஸ்க் நிறுவனத்தில் என் தகுதியை மதித்து எனக்கு வேலை வேண்டும் என விரும்புகிறேன். மஸ்க்குடன் தொடர்பில் இருப்பதால் சலுகைகளை எதிர்பார்க்கவில்லை. மேலும், அவரே என்னை நேர்காணல் செய்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.எ

லான் மஸ்க்கை சமூக வலைதளத்தில் 10.3 கோடி பேர் தொடர்கின்றனர். அதில் நம் நாட்டின் இளம்பொறியாளருடன் நட்பு பாராட்டி அவருடைய கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

==============================================================================================================================================


நான் படிச்ச கதை (JC)

ஆயிஷா

இரா.நடராசன்

-------------------------


ஆயிஷா என்ற இக்குறுநாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது (தகவல் நன்றி : விக்கி)

 

இக்குறுநாவல் ஒரு பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டது. கதைக்குள் கதையாக இருக்கும் ஆயிஷாவின் கதையை மட்டும் ஆசிரியருடைய வாக்குகளைச் சிதைக்காமல் அவருடைய எழுத்துக்களாலேயே சுருக்கமாக தந்திருக்கிறேன்.  அப்படி இருந்தும் கட்டுரை நீண்டு விட்டது.


கதை ஒரு பள்ளி மாணவியைப் பற்றியது. முன்னரே சொன்ன மாதிரி ஒரு

குறுநாவல். எ பி வாசகர்கள் கதையை மேலோட்டமாக வாசிப்பவர்கள். ஆனால் இந்தக் கதையை ஆழ்ந்த ஈடுபாடுடன் வாசித்தால் மட்டுமே படித்ததின் முழு தாக்கத்தை உணரமுடியும். ஆகவே பொறுமையுடன் வாசிக்கக் கோருகிறேன்.


முன்பே படித்தவர்கள் கடைசி பகுதிக்கு நேராக செல்லலாம். கதை

http://www.sirukathaigal.com/ இல் இருந்து எடுக்கப்பட்டது. வெளியான வருடம் 2011.  அதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


ஆயிஷா


ஆயிஷாவுக்கு 15 வயது. நான் அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் பத்தாம் வகுப்பு – பி பிரிவில் ஐம்பத்தாறு மாணவிகளில் ஒருத்தி. நான் அப்பள்ளி மாணவியர் விடுதியின் காப்பாள யுவதிகளில் ஒருத்தி அதிகம் கவர்கிற விதமில்லை ஆயிஷா. பற்கள் துருத்தியபடி முகத்தில் வந்து விழுகிற கேசத்தைப் பற்றிய அக்கறையின்றி நாலாவது வரிசையில் குச்சியாக அமர்ந்திருக்கும் ஒருத்தி. முதலில் எனக்கு ஆயிஷா யாரோ ஒருத்தி.


இத்தனை வருடத்தில் பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் என்ன பெரிதாக மாறிவிட்டது? அதே ஓம்ஸ் விதி. ஒரே செல் பிரிதல் புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வமற்று ஓர் இயந்திரமாய் கிரீச்சிட்டுக் கொண்டிருந்த என்னை என் முகத்தில் கேள்விகளால் ஓங்கி அறைந்தாள் ஆயிஷா.


அன்று காந்தவியல் குறித்து பாடம், பூமி எப்படி ஒரு காந்தமாக உள்ளதென

விளக்கிக் கொண்டிருந்தேன். ஒரு காந்தம் அதுவும் செவ்வக வடிவக் காந்தம்.


அதைக் கையில் உயர்த்திக் காட்டினேன். சிரமமே இல்லை. காந்தத்தின்

வடநோக்கு அம்சம் குறித்து வழக்கமான எந்திரத்தனத்துடன் யாவரையும் உறங்க வைத்துவிடும் என் தொனியில் கரும்பலகையில் சில கிறுக்கல்களுடன் நடத்திக் கொண்டே போனேன். எவ்வளவு நேரமோ?


'மிஸ்… சந்தேகம் ‘மிஸ்…அந்தக் காந்தத்தை ரெண்டா வெட்டினா என்ன

ஆகும்…மிஸ்?’


நான் அறிவியல் போதினியாக வந்துவிட்ட இந்த ஆறு ஆண்டுகளில் காந்தவியல் பற்றி நான் சந்திக்கும் முதல் சவால். காந்தத்தைப் பற்றி யோசித்து மூன்று நிமிட அவகாசத்திற்குப் பிறகு சற்று பொறி தட்டியது.

‘ரெண்டு காந்தம் கிடைக்கும்’, சரி. பதில் சொல்லியாகிவிட்டது. ஆனால் அவள் உட்காரவில்லை. மிகக் கடினப்பட்டு புன்னகைக்க முயற்சி செய்தாள்.


‘அந்தக் காந்தத்தை வெட்டிக்கிட்டே போனா? உதாரணமாக நமக்கு இந்தக்

காந்தத்தைத் துண்டாக்கிக் கிடைத்த காந்தங்களின் எண்ணிக்கை ஒரு முடிவுறா எண் என்று வெச்சிட்டா ..?’


’‘ரொம்ப சிம்பிள்மா.. முடிவுறா எண்ணிக்கையில் காந்தம் கிடைக்கும்.”


ஏதேதோ பாவனையாகப் பேசிக் கொண்டு குறுக்கு நெடுக்காக மணி அடிக்கும்வரை அலைந்துவிட்டு வகுப்பிலிருந்து வெட்கமில்லாமல் மிடுக்காக வெளியேறினேன்.


அடுத்த வகுப்பறையைத் தாண்டியிருக்க மாட்டேன். கூடவே வந்தது நிழல்.


‘மிஸ்..  ப்ளீஸ், மிஸ். ஒரே ஒரு நிமிஷம் மிஸ்.. ‘அப்படி சொல்லும்போது அவள் முகத்தை பார்க்க வேண்டும் நீங்கள். அதற்கு மேலும் புறக்கணிக்க முடியவே முடியாது.


‘என்ன சொல்லு?’


‘காந்தம் பத்திதான்.. மிஸ்’


‘சொல்லும்மா.. டயம் ஆச்சில்ல?”


‘முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை ஒரே நேர் கோட்டில் வெச்சா..  எதிர்துருவங்களைக் கவரும் அதன் இயல்பு என்ன ஆகும்.’


‘ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும். ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கை அடுத்துள்ள காந்தம் ஏற்கனவே இழுத்துகிட்டிருக்கும் இல்லையா.. மிஸ்?’


‘ஆமா.. அதுக்கென்னன்ற?’


‘என் சந்தேகமே அங்கதான் இருக்கு. எல்லாக் காந்தங்களின் கவர்திறனும்

ஒன்றெனக் கொண்டால் அவை ஒட்டிக்கொள்ளத் தான் வாய்ப்பே இல்லையே..  எப்புறமும் நகராமல் அப்படியே தானே இருக்கும்.’


‘…’


‘ஏன் நாம இந்தப் பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை

நேர்க்கோட்டில் வைத்தது போல் அமைக்கப்பட்டதா வெச்சிக்கக் கூடாது? அந்தக் கோணத்தில் பூமிங்கற காந்தத்த ஆராயலாம் இல்லையா?’


பதிமூன்று வருடப் பள்ளி வாழ்க்கை. பின் மூன்றாண்டு இயற்பியல் –

பல்கலைக்கழகத்தில். இப்படியொரு கேள்வியை நான் கேட்டுக்கொண்டதாக நினைவில்லை. 


‘எங்கோ படித்ததாக ஞாபகம்’ என்றேன். ஏதாவது சொல்ல வேண்டுமே.’


‘…’


The Truth of Magnets. வெட்ரோட் ஸ்டூடண்ட் கிங்லீங் எழுதியது.. அருமையா

இருக்கு..படிக்கிறீங்களா மிஸ்..’


‘இந்த புக்கெல்லாம் நீ படிக்கிறயா?’ அவ்வளவுதான்..என் ஆயிஷா

கிடைத்துவிட்டாள். அந்த அதிர்ச்சியில் இருந்து இன்றுவரை மீள முடியவில்லை.


அறை வாங்கியவளைப் போல புத்தகத்தை வாங்கிக் கொண்டு சரசரவென

ஆசிரியர் அறைக்கு நடந்தேன்.


இப்போதும் சொல்கிறேன். அந்த நிமிடத்திலேயே ஆயிஷா என்னை முழுதாக வென்று விட்டாள். எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலும் அதன்பின் அவளை நான் வெறுத்ததே இல்லை. ஒரு செக்கு மாட்டிற்கு இதைவிட அமர்க்களமாய் யார்தான் சூடு போட முடியும்?


இரவில் எனது விடுதி அறையில் புத்தகத்தைப் புரட்டியபோது மேலும் பல

அதிர்ச்சிகள். ஆங்காங்கே காணப்பட்ட அடிக்குறிப்புகள். எல்லாமே அவளைக் குறித்த எனது எண்ணத்திற்கு மேலும் மேலும் ஆச்சரியக் குறிகளை கூட்டிக் கொண்டிருந்தன. ஆயிஷா ஒரு குழந்தை இல்லை. அவள் யாரோ ஒரு மனுஷி கூட இல்லை. வேறு ஏதோ ஒரு பிறவி. கடவுளே…நான் ஒரு நிமிடம் கூடத் தூங்கவில்லை.


முதல் பாடவேளையில் வகுப்பேதும் இன்றி ஆசிரியர் ஓய்வறையில் அமர்ந்து இருந்தேன். கையில் புத்தகம். என் மீதே எனக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஒரு பெண், அறிவார்த்தமான ஒரே ஒரு கேள்வியால் என்னை எப்படி யோசிக்க வைத்து விட்டாள்?


பள்ளிக்கூடங்கள் பலிக்கூடங்கள் ஆகிவிட்டன. நானும் அவர்களது கூட்டத்தில் ஒருத்தியா? எல்லாமே முன் தயாரிக்கப்பட்டவை. ரெடிமேட் கேள்விகள்.  அவற்றிற்கு நோட்ஸ்களில் ரெடிமேட் பதில்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் ஓய்வெடுக்கிறார்கள். வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரமாய் (அதுவும் முக்கிய கேள்விகளுக்கு விடைகளை மட்டும்) மாணவர்கள் உருமாற்றம் அடைந்துவிட்டனர்.


‘ஒரு கேஸ் இன்னிக்கு பிடிபட்டுது. இத கேட்டியோ’ என்று அங்கலாய்த்தபடி

என்னிடம் வந்தாள் சுகுணா மிஸ். மேல்நிலைக்கு கணக்கு நடத்துபவள்.


எந்த உற்சாகமும் இன்றி ‘என்ன?’ என்றேன்.


‘விநோதமான கேஸ்…லெவன்த் வீட்டுக் கணக்கு திருத்திக்கிட்டிருந்தப்போ

கஷ்டப்பட்டு பிடிச்சேன். பாதிப்பேர் நோட்ல ஒரே கையெழுத்து. அதுவும் ஒரு லாஜிக்சம். முதல்ல காப்பினும் நெனச்சேன். அப்புறம் ஒருத்திய பிடிச்சி

செமத்தியா குடுத்தேன். உண்மையைக் கொட்டிட்டா.’


கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவள் என்னைக் காத்திருக்க வைத்தாள். நான் திடுக்கிட வேண்டுமென விரும்புபவள் போலிருந்தாள்.


‘ம்…சொல்லு’ என்றேன்.


‘சித்தி வீடோ என்னமோ..கார்டியனை வரச்சொல்லியிருக்காங்க. மோஸ்ட்லி டி.சி.யா கத்தான் இருக்கும்.


’‘நம்ப மாட்ட…ஒரு டென்த் ஸ்டாண்டர்டு படிக்கிற பெண் லெவன்த்துக்கு வீட்டுக்கணக்கு போட்டு தந்திருக்கு.’


‘டென்த்தா?’ எழுந்து நின்றிருந்தேன்.


‘ஆமாம்…கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன். நேரா…ஸிஸ்டர்ட்ட போயிட்டேன்..’ எனக்கு ஊர்ஜிதமாகிவிட்டது போலானது. 


‘என்னா.. பண்ணினாங்க அந்தப் பெண்ண…?’


‘அது ஒரு ஆயி அப்பன் இல்லாத கேஸ்?’


‘அர்பன்ஸ் ஹோமா?’


நான் எப்படித் தவித்தேன் என்பதை என்னால் இங்கு எழுத முடியாது.

பிரின்ஸிபால் அறைக்கும் ஓயவறைக்கும் இருப்புக் கொள்ளாமல் நான்

அலைந்தேன். பதினொன்றாம் வகுப்பு மாணவியர்க்கு டென்த் மாணவி வீட்டுக் கணக்குச் சொல்லித் தருகிறாள் என்றால் அவள் நம்ப முடியாத பிறவி? இங்கு வந்து ஏன் பிறந்து தொலைத்தாள்? அம்மா அப்பா இல்லாதவளாமே… கடவுளே  எங்கள் குழந்தைகளை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றும்.


அவளது வகுப்பிற்கு நான் போன நேரத்தில் அவளது இடம் காலியாக இருந்தது/ 


விசாரித்தேன். செம அடி மிஸ் என்று கலங்க அடித்தார்கள். ஏதோ

ஆகிப்போயிருந்தேன். எதுவும் நடத்தப் பிடிக்காதவளாய் இருக்கையில்

அமரப்போனேன்.


‘மே.. அய்… கம்.. இன்..மிஸ்?’ ஆயிஷா நின்றிருந்தாள். கலைந்தெறியப்பட்ட கனவு.


பால், வெள்ளைப் படுதாவுடன் இரண்டு இசுலாமியப் பெண்கள் உடன்

நின்றிருந்தனர். ஒருத்தி எனக்கு முகமன் செயதாள்.


‘நான் ஆயிஷாவோட சித்தி…’


‘வாங்க’


‘எப்படி படுத்தறா பார்த்தீங்களா.. இவ என்னோட அக்கா பொண்ணு. இவப் பொறந்த நேரமே சரியில்லே. இந்தச் சனியன் வேணும்னு யார் அழுதா… தறுதல மக….’  என் கண் முன்னால் ஆயிஷாவை அடிக்க முயன்றாள்.


‘கொஞ்சம் பாத்துக்கங்க… புத்தி சொல்லுங்க..என் புருஷன் கூட இங்க இல்ல..  துபாயில இருக்காரு.. தனியா அவஸ்தைப்படறேன்…இது இப்படி இருக்கு. படிப்ப நிறுத்திடலாம்னா… சரி இவ்வளவு வருசம் படிச்சது படிச்சாச்சு. ஒரு எசெல்சி முடிச்சிடட்டுமேனு பாக்கேன்.’


அன்று வகுப்பிலிருந்து கிளம்பும்போது சொன்னேன்.


‘ஆயிஷா… ஈவினிங் ஹாஸ்டல்ல வந்து என்ன பாரு…’


‘எஸ்… மிஸ்.’


வகுப்பறை என்றல்ல. ஒரு நாள் நான் எனது ஆடைகளை துவைத்துக்

கொண்டிருக்கும்போது கேட்டாள். ‘துணி துவைக்கிற சோப் அழுக்கை

அகற்றுவதற்கும், குளியல் சோப் அழுக்கை அகற்றுவதற்கும் இடையிலான

வித்தியாசம் என்ன?’ கடவுளே, இந்த பெண்…கேள்விகளால் இந்தப் பிரபஞ்சத்தை உலுக்கவே பிறந்திருக்கிறாள்.


ஒரு கேள்வியை எழுப்பிக்கொள்வது, பிறகு அதற்கொரு விடை தெரியும்வரை ஓயாது தேடுதல் என்கிற தேர்ந்த விஞ்ஞானியின் தகுதி ஆயிஷாவிடம் இயல்பிலேயே இருந்தது.


‘மிஸ்.. மின்னலிலிருந்து மண்ணை மின்சாரம் தாக்கும் இல்லயா? மரம் கூட விழுவதுண்டு. கம்பியிலுள்ள மின்சாரத்திற்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?  எப்படி மின்சாரம் பரவுது?’


என் ஆயிஷா அப்படிப்பட்டவளாக இருந்தாள். என் பழைய ரெக்சின் பையில்

அவளது சின்ன ஆய்வுக்கூடப் பொருட்கள் இருந்தன. ஒரு லென்சுக்கண்ணாடி, வட்ட வடிவக காந்தம்.. மருத்துவரின் ஊசி சிரிஞ்சு ஒன்று மற்றும் ஒரு பழுதடைந்த டிரான்சிஸ்டர் வானொலி. அதனைச் சரிசெய்யும் முயற்சிலேயே அவளின் பல விடுமுறை நாட்கள் கழிந்தன.


நானே நிறைய மாறிக்கொண்டிருந்தேன். எவ்வளவு மோசமானவளாக

இருந்திருக்கிறேன்? எனது சொந்தத்துறை மீதே எவ்வித அக்கறையும் இல்லாமல் சொரணையற்ற பிண்டமாக ஆறு ஆண்டுகள் வெறுமனே தள்ளியிருக்கிறேன்.


ஆயிஷாவின் உறவில்தான் நான் உணர ஆரம்பித்தேன். எவ்வளவு தூரம்

விஞ்ஞானமற்ற முறையில் நாம் நம் குழந்தைகளுக்கு விஞ்ஞானம்

போதிக்கிறோம் என்று. நாம் எங்கே குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தை உணர்ந்து கேள்வி கேட்க அவகாசம் தருகிறோம்? அவர்கள் கேட்கத் தொடங்கும் முன்னரே நாமாக முன் தயாரிக்கப்பட்ட கேள்விகளால் அவர்களை மூழ்கடித்து விடுகிறோம். அறிவும் வளருவதில்லை. பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் சொல்வது எதை?


கையக் கட்டு.. வாயைப் பொத்து…


விரைவில் புரிந்து கொண்டேன். என் ஆயிஷாவுக்கு நாலுபுறமிருந்தும்

பிரச்சினைகள் முளைத்தன. ஆனால் பயித்தியக்காரி. நான். உணரத்

தலைப்படவில்லை, அவளை, அவளின் அறிவை. அது எந்தத் திசையில்

செலுத்தும் என்று ஒரு நாள் சட்டென்று கண்ணில்பட்டது அது

ஆயிஷாவின் பின்காலில் பட்டை பட்டையாக வீக்கம். தடித்துப் போகுமளவு அடி வாங்கியிருந்தாள். இப்போது அவள் என்னிடம் மிகவும் நெருங்கியிருந்தாள்.


அவளைத் தொடாமல் என்னால் பேசவே முடியாது. அவள் மீது அவ்வளவு

அன்பூறும்படி அவள் செய்திருந்தாள். அருகில் அழைத்து விசாரித்தேன்.


‘கெமிஸ்ட்ரி மிஸ் அடிச்சாங்க’ என்றாள்.


‘ஏன்.. ஏன் ஆயிஷா?”


‘பேப்பர் வந்தது. மார்க் சரியா போடல. கேட்டேன் சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம். நோட்ஸ்ல இருக்கிறத அப்படியே எழுதணுமாம். டென்த்துன்னு மிரட்டுறாங்க. மிஸ்..நோட்ஸ்ல தப்பாயிருந்தா என்ன பண்றதுனுட்டு கேட்டேன்.’ …


பேச முடியவில்லை. அவளை காணச் சகிக்கவில்லை. அழும்போது அவள்

குழந்தையாக இருக்கிறாள்.


கிட்டத்தட்ட எல்லா ஆசிரியைகளுமே வீட்டில் தனியாக டியூசன் நடத்தி வந்தனர்.  பணம், எல்லாம் அது படுத்தும்பாடு. போட்டா போட்டி சண்டை வீட்டிற்கு படிக்க வருவோர்க்கு விசேஷ சலுகை, சட்டங்கள், வகுப்பில் ராஜமரியாதை. வினாத்தாள்கள் முன்பே அறியும் உரிமை. எவ்வளவு குமட்ட வைப்பது அது.


வெட்கமில்லாமல் இதை அவர்கள் செய்தே வருகிறார்கள்.  வருமானவரியில் சேராத வருமானம் யார்தான் விடுவார்கள்?


ஆயிஷா யாரிடமும் டியூசன் படிக்காதவள் என்பதால் பழி வாங்கப்பட்டாள்.

வகுப்பிலும் கேள்விகள் கேட்டு குழப்பி விடுபவளாக இருக்கிறாள் அல்லவா?


தொழிலைக் கடினமாக ஆக்குபவளை யார்தான் விரும்புவார்? விரைவில் எனது போராளி தினமும் உதை வாங்கி வரத் தொடங்கினாள்.


வரலாற்றுப் பாடவேளையில் ஜெர்சி மிஸ் என்ன செய்தாள்?


‘அசோகரை புத்த மதத்துக்கு மாற்றியது யார் மிஸ்?’


‘புத்த பிட்சு ஒருத்தர்.’


‘இல்ல, அவர் பெயர்?’


‘…..’


‘அவரது பெயர் உபகுப்தர் மிஸ்.’


‘தெரிஞ்சு வெச்சிக்கிட்டு டெஸ்ட் பண்றயா.. வாடி இங்க.’


ஒரு காலில் நிற்க வைத்து உதைத்திருக்கிறாள். இப்படி ஆயிஷா முன் எல்லா ஆசிரியைகளுமே தனது பிரம்புப் பிரயத்தனத்தால் அறிவை நிலைநாட்டத் தொடங்கி விட்டார்கள். டீச்சர் அடிச்சா வலிக்காம இருக்க ஏதாவது மருந்து இருக்கா? என்று கேட்கிறாள் ஆயிஷா.


‘அடி.. அசட்டுப் பெண்ணே’ என்று கட்டிக் கொண்ட என்னால் அப்போது எந்தப் புதிரையும் உணர முடியவில்லை. எவ்வளவு பெரிய முட்டாளாக

இருந்துவிட்டேன் நான்.


ஒரு இரவு அவசரமாக வீட்டுக்கு கிளம்பிய போது தனது சிறிய குறிப்பு நோட்டை விட்டுச் சென்றுவிட்டாள் ஆயிஷா. அன்றைக்குத்தான் என் ஆயிஷாவின் இன்னொரு பக்கம் தெரியவந்தது – நூற்றுக்கணக்கான கேள்விகளின் தேவையை விட, இந்த என் ஆயிஷா வித்தியாசமானவள் – முதலில் அந்த நோட்டு என் கண்ணில் பட்டபோது அதை எடுத்து மேஜையில் வைத்துவிட்டு, வழக்கமான விடை திருத்தும் வேலையில் இறங்கிவிட்டேன். பிறகு ஏதோ ஒரு உந்துதலின் பேரில் அதை எடுத்தப் புரட்டினேன்.


முதல் பக்கம்.. இரண்டு.. மூன்று.. நான்காவது பக்கத்தில் எனக்கு முதல் அதிர்ச்சி.


ஒரு பக்கம் முழுவதும் ஆயிஷா நூற்றுக்கணக்கான முறை என் பெயரை எழுதி வைத்திருந்தாள். நீண்ட நேரம் அந்தப் பக்கத்தை நோக்கிய எனக்கு கண்ணீர் முட்டியது. பின் சில பக்கங்கள், வகுப்பில் எழுதப்பட்ட ஆங்கிலப்பாட்டு மூன்று முறை. பின் ஒரு பக்கம் என்னை மேலும் அதிர்ச்சியடைய வைத்து கிட்டத்தட்ட மூர்ச்சையாகி விழ வைத்தது.

அந்தப் பக்கம் என் பெயரை எழுதியிருந்த ஆயிஷா அதற்கு கீழே ‘என் தாயார், என் முதல் ஆசிரியை, என் முதல் உயிர்’ என்று ரத்தத்தால் எழுதியிருந்தாள்.


ஆம். அது ரத்தம் தான். அய்யோ.. இது என்ன பெண்ணே .. உனக்கு என்ன நான் செய்துவிட்டேன். உனது கேள்விகள் சிலவற்றைக் காது கொடுத்து கேட்டதைத் தவிர அதற்காகவா இத்தனை அன்பு பொழிகிறாய்? அம்மா, நீ பெரும் மனுஷி. நீ இல்லாது போயிருந்தால் நான் மட்டும் யாரடி? ஒரு எந்திரத்தைவிட கேவலமான ஆசிரியையாகவே செத்துப் போய்க் கிடந்த என்னை மீட்டெடுத்தவளல்லவா நீ.  நான் சொல்லிக்கொண்டேன். 


அவளுக்கு,... என் உயிரான ஆயிஷாவுக்கு எப்படியாவது நன்றியாக எதையாவது செய்ய வேண்டும். உன்னை எப்படி ஆக்குகிறேன் பாரடி…?


கடவுளே.. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.


சம்பவத்திற்கு முதல் நாள் வகுப்பில் சர். ஹம்ப்ரி டேவியைப் பற்றிச் சுருக்கமாய் சிலவற்றைச் சொன்னேன். அறுவைச் சிகிச்சையின்போது உடலை மரத்துப்போக வைக்கிற நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை அவர் கண்டுபிடித்தது குறித்து பாடம் நடத்தினேன்.


‘நைட்ரஸ் ஆக்சைடு தண்ணீரில் கரையுமா?.. மிஸ்.’


‘தண்ணீரில் மட்டுமல்ல அது எத்தனாலிலும், சல்பியூரிக் அமிலத்திலும் கூடக் கரையும்’ 


இப்படித்தான் நான் மோசம் போனது. எப்படி மறப்பது அதை?


எனது சொந்த வேலைகளில் மும்முரமாக இருந்தபோது உச்சிவெயிலில் ஒரு மாணவி வந்து அழைத்தாள். ஆயிஷா அனுப்பியதாகவும், வேதியியல்

ஆய்வுக்கூடத்திற்கு பின்புறம் அவள் இருப்பதாகவும் கூறினாள்.


‘ஏன் அவ இங்க வர வேண்டியதுதானே?”


‘தெரியல மிஸ்.’


அவளை அனுப்பிவிட்டுக் கிளம்பினேன். மனசுக்குள் ஏதோ எங்கோ பிசகிப்

போனதை உணர்ந்தேன். கடவுளே.. இதை எழுதும் தருணத்தில் எனக்கு எப்படி உடல் நடுங்குகிறது.


லேசான களைப்பில் இருப்பவளைப் போலிருந்தாள் ஆயிஷா.


‘இன்னிக்கு.. எக்ஸ்பரிமண்ட் சக்சஸ் மிஸ்.’


‘என்ன.. என்ன எக்ஸ்பரிமண்ட்?’


‘இந்தாங்க ஸ்கேல்.. என்னை அடியுங்க பாப்போம்.’


‘ஏன் ஆயிஷா என்ன சொல்றே நீ..’


‘மருந்து மிஸ்.. மரத்துப்போற மருந்து.. இனிமே யாரு அடிச்சாலும் எனக்கு

வலிக்காது மிஸ்.. எப்படி வேணும்னாலும் அடிச்சிக்கட்டும்.’


‘ஆயிஷா உனக்கென்ன பயித்தியமா?’


‘லேபிலிருந்து நைட்ரஸ் எத்தனால் கரைசல் கெடச்சது மிஸ். முதல்ல இந்தத் தவளைக்கு ஊசி போட்டேன். இரண்டு மணி நேரம் மல்லாக் போட்டாலும் உணர்ச்சி இல்ல.. அப்போ மரத்துப் போச்சினு அர்த்தம்.’


“அப்புறம் அதே மருந்தை எனக்கு ஊசி போட்டுக்கிட்டேன். எப்படி ஐடியா…’


‘ஏம்மா.. இப்படியெல்லாம் பண்ற.’


‘பாருங்க இந்தத் தவளைதான்.’


நான் பார்த்த இடத்தில் வாளித்தண்ணீரில் ஒரு தவளை தலைகீழாய் மிதந்தது.


‘ஆயிஷா.. நோ…’

‘அய்யய்யோ.. தவளை செத்துப்போச்சு மிஸ்’


கடவுளே அதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது? வேதியியல் ஆய்வுக்கூடத்தின் பின்னால் ஆயிஷா விழுந்து கிடந்தாள். ஒரு மாலை மாதிரி விழுந்து கிடந்தாள்.


சின்னக் கூட்டம் கூடியது. பியூன் கோவிந்தன் ஆட்டோ கொண்டுவர ஓடினான்.


சிஸ்டருக்கு சொல்லப்பட்டது. அவளை – என் உயிருக்கு உயிரான ஆயிஷாவைச் சுமந்து கொண்டு நான் சாலைக்கு ஓடினேன்  – என் கண்ணான அவளை எப்படியாவது பிழைக்க வைத்துவிட வேண்டுமெனத் தவித்தேன்.


ஆனால் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்குப் போவதற்குள் என் ஆயிஷா பிரிந்து

விட்டாள்.


என் பொக்கிஷமே ஆயிஷா..நீ கேட்ட கேள்விகளிலேயே என்னை மிகவும் பாதித்த ஒரு கேள்வி உண்டு. அதை வாசகர் முன்வைத்து என் முன்னுரையை முடிப்பதே பொருத்தமாக இருக்கும்.


‘மிஸ் கரோலின் ஏர்ஷல் போலவோ மேரி கியூரி போலவோ நம்ம நாட்டுல பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்?’


இக்கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை. தங்கள் சொந்த வீடுகளின் இருண்ட சமையலறயில் போய் அவர்கள் அதைத் தேடட்டும்.


- 2011-இல் வெளியான ஒரு சிறுகதை


கதை ஆய்வு.


எம் வீ வெங்கட்ராமின் ராஜம், ஒரு பைத்தியக்காரப் பிள்ளை. வாழ்க்கை ஒரு பிரச்சினை என்றால் வாழ்க்கை என்பதே வேண்டாம் என்று முடிவெடுத்தவன்.


ஆயிஷா வாழ்க்கைத் தண்டனைகளிடம் இருந்து தப்பிக்கத் தவறான வழியைத் தேர்ந்தெடுத்த ஒரு பைத்தியக்காரப் பிள்ளை. இருவரது முடிவும் ஒன்றே.


தற்கொலை!


கதை ஆசிரியர் தமிழில் அறிவியல் நூல் எழுதும் முன் முன்னுரையாக ஆயிஷா கதையைக் கூறுகிறார். ஆயிஷா கேட்டுக்கொண்டபடி ஆங்கிலம் அதிகம் வசப்படாதவருக்கும் அறிவியல் விளக்கம் எளிய தமிழில் எழுதுவதாக கதையைத் துவங்குகிறார். இப்படி துவங்கிய கதை பாடத்திட்டங்களை பற்றியும் அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றியும் விரிவடைகிறது.


ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகளை ஒழி. ஆசிரியர்கள் சொல்லும்

பாடங்களை மனப்பாடம் செய். பொதுத் தேர்வில் மதிப்பெண்களை பெறு. படித்த கல்விக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து சம்பாதித்து எப்படியோ வாழ்க்கையை வாழ்ந்து முடி. இதுவே விதி.

இது போன்ற மனப்பான்மை எப்படி இங்கு உருவானது? மெக்காலே

கல்வித்திட்டத்தை நமது குருகுல முறைப்படி கற்பிப்பதால் தான்.

குரு சொல்வதை மீறாதே என்பது இந்திய பண்பாடு. குருவை குறுக்கு விசாரணை செய்யாதே என்பதே சட்டம். ஆனால் இப்படி சொல்பவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். ஒவ்வொரு இந்திய குருவும் அவருடைய வித்தையில் மட்டுமே விற்பன்னர். வேதகுரு வேதம் படிப்பிப்பார். ஷத்ரிய குரு ஆயுத வித்தையும் போர் புரிதல் பற்றியும் கற்பிப்பார். வேதகுருவிடம் பயின்றவன் வேதியர் ஆகிறான்.


ஷத்ரிய குருவிடம் பயின்றவன் போர் வீரன் அல்லது மன்னன் ஆகிறான்.

மாணவர்கள் பல வித்தைகளைக் கற்க வேண்டும் எனில் ஒவ்வொரு குருவிடமும் பயிற்சி முடிந்த பின்னரே அடுத்த குருவிடம் சென்று பயில முடியும்.


மெக்காலே முறை அப்படி இல்லை. ஏட்டு படிப்பு. எல்லா பாடங்களிலும்

கொஞ்சம் கொஞ்சமாக எல்லா வகுப்புகளிலும் படிக்க வேண்டும். எல்லாப்

பாடங்களிலும் குறிப்பிட்ட மதிப்பெண் பெற்றாலே அடுத்த வகுப்பு செல்ல முடியும்.


(தற்போதும் கிராமப்புற மாணவர்களுக்கு அல்ஜீப்ரா ஒரு புரியாத தடை சுவர்.)


‘எல்லாம் தெரியும் ஆனால் ஒன்றும் உருப்படியாகத் தெரியாது’ என்பதே நமது கல்விமுறை. இதைத்தான் கதை ஆசிரியரும் மறைமுகமாக எடுத்துக்

காட்டுகிறார்.  


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.


KNOWLEDGE (படிப்பறிவு) INTELLIGENCE ( புத்திகூர்மை) இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் புரியுமானால் அதுவே இக்கதையின் வெற்றி.


கதையின் சுட்டி : ஆயிஷா-சிறுகதை

ஆசிரியர் பற்றிய குறிப்பு.





ஆயிஷா நடராசன் (எ) இரா. நடராசன் (Era Natarasan) 2014-ஆம் ஆண்டிற்கான பால சாகித்திய அகாதமி விருது பெற்ற சிறுவர் இலக்கிய எழுத்தாளர் .


இவர் எழுதிய ஆயிஷா எனும் சிறுகதை ஏற்படுத்திய தாக்கத்தால் இவர் ஆயிஷா நடராசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த ஆயிஷா

சிறுகதை இவருடைய இரா. நடராசன் சிறுகதைகள் என்ற தொகுப்பிலும் தனிநூலாகவும் கிடைக்கிறது. எளிய தமிழில் அறிவியல் கருத்துகளையும், சில மொழி பெயர்ப்பு நூல்களையும், மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய அறிவியல் சோதனைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.


கடலூரில் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரா நடராசன் பணியாற்றி வருகிறார்.


நன்றி சுட்டி:: இரா. நடராசன் - தமிழ் விக்கிப்பீடியா


ஊசிக்குறிப்பு.


சாதாரணமாக குறை நிறைகளை பட்டியல் இடுவேன். இம்முறை அவை இல்லை எனக் கருதவேண்டாம். கதை படித்த தாக்கம் குறைந்து விடும் என்பதாலும், பதிவு நீளம் அதிகமாகி விட்டதாலும் தவிர்த்து விட்டேன். பொறுத்தருள்க.


//‘மிஸ் கரோலின் ஏர்ஷல் போலவோ மேரி கியூரி போலவோ நம்ம நாட்டுல

பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலையே ஏன்?’//


வந்துவிட்டார்கள். பயோகான் கிரண் மஜும்தார், கலைச்செல்வி (CSIR D G), Tessy Thomas (AGNi DRDO), Lalithambika ((Gaganyaan ISRO), மற்றும் சிலர்.



46 கருத்துகள்:

  1. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    குறள் நெறி வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. சந்தனத் தென்றலாக சனிக்கிழமை..

    அன்பின்
    வணக்கங்களுடன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  3. திரு. ராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றிய செய்தி அறிந்தது தான்..

    இது தான் உண்மையான
    மனித நேயம்.. அன்பு..

    இந்தச் செய்தி தினமலரில் வந்திருந்த போது நல்ல குணங்களை எதிர்ப்பவர்கள் வழக்கம் போல தங்களது குணத்தைக் காட்டியிருந்தனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாக் கருத்துக்கும் எதிர்க்கருத்தும் உண்டுதானே...

      நீக்கு
  4. பதில்கள்
    1. ஆம்.  கைவசம் எதுவும் இல்லை. அதனால் வெளியிட முடியவில்லை!

      நீக்கு
    2. இப்போது சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      நீக்கு
  5. திரு ஜெயக்குமார் சந்திர சேகர் அவர்களது கைவண்ணம் காணாமல் என்னவோ போல் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      நீக்கு
  6. 2011-ல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையா? இதெல்லாம் நமக்கு எப்படித் தெரியாமல் போயிற்று? ஜெமோ, சாரு, எஸ்ஸார் என்று ஒரு வட்டமே இருக்கே! விற்பனை நுணுக்கங்கள் தெரிந்த அந்த சகலகலா வல்லுனர்களுக்கே தெரியாத ரகசியமான்னா இருக்கு?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரே வாங்கி உக்ராண அறையில் வைத்திருக்கிறாரோ என்னவோ!  மன்னிக்கவும் நகைச்சுவை!

      நீக்கு
    2. சினிமா பாட்டுப்புத்தகம் போன்று 2 ரூபாய்க்கு விற்றால்  ஏன் விற்பனை ஆகாது.
      பார்க்க 
      https://www.goodreads.com/ta/book/show/5055097-ayeesha
      Jayakumar

      நீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. ஆயிஷா... கதை மிகச் சிறந்த பதிவு. கடந்த இரு வாரங்களாக சனிக் கிழமை பகுதி களைகட்டுகிறது. Welldone Jayakumar sir. கதையைப் பற்றிய ஆய்வு என,ற கொடுமை உறுத்துகிறது. இந்தக் கதை மனதில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். இன்று மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னையும் கவர்ந்தது. ஆயிஷாவின் சித்தி அவ்வளவு மூடமா?

      நீக்கு
    2. ஸ்ரீராம்.... நம்மில் எத்தனைபேர் நம் குழந்தையின் ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்க முயன்றிருக்கிறோம் (நான் உட்பட). ஏ..கொஞ்சம் சும்மா இருடா... அப்புறம் செக் பண்ணிச் சொல்றேண்டா.... அப்படீன்னு சொல்லி டாப்பிக்கை மாத்திவிடுவோம்... இல்லைனா... வந்துட்டாண்டா கேள்விக்குப் பிறந்தவன்னு சொல்லி டிஸ்கரேஜ் பண்ணுவோம். அவ்ளோதான்.

      நீக்கு
  9. கதையின் சுட்டி : https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be/#more-36825https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%be/#more-36825

    ஆசிரியர் சுட்டி:: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

    தகவல் சுட்டி

    https://www.goodreads.com/ta/book/show/5055097-ayeeshahttps://www.goodreads.com/ta/book/show/5055097-ayeesha



    Jayakuma




    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Goodreads பக்கம் மட்டும் இணையவில்லை; சரியில்லை.  மற்ற இரண்டு சுட்டிகளை இணைத்திருக்கிறேன்.

      நீக்கு
  10. ஆசிரியர் இரா. நடராஜன் தான் கதைக்காக ஆயிஷாவாகியிருக்கிறார். ஆசிரியர்கள் என்று பெயர் கொண்டிருக்கும் அசமந்த ஆசிரியர்களிடமிருந்து விடுபட்ட அவர் ஞானம் தான் கதையாகியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. ஆயிஷா : ஸார்! என் பெயரை பிழையில்லாமல் எப்படி எழுத வேண்டும்? ஆயிசாவா, ஆயிஷாவா?

    ஆசிரியர்: இதிலென்ன சந்தேகம்? ஆயிஷா தான்.

    ஆயிஷா: அப்போ, நடராசன் இல்லை நடராஜன் தான் சரி. இல்லையா, ஸார்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் பெயருக்கு தமிழில் எழுதவேண்டும். தமிழ் அல்லாத பெயர்கள் அந்த மொழி உச்சரிப்புடன் எழுதவேண்டும். இதுதான் சரி. இதையே மரபுக் கவிதையில் உபயோகப்படுத்தவேண்டும் என்றால் தமிழுக்கு மாற்றவேண்டும். புருஷன் என்பது புருடன் என்று வரும். விஷ்ணு என்பது விட்டு என்று வரும். நாவலில் ஆயிஷா, நடராஜன் என்று வரலாம். அதை வலிந்து நடராசன் என்று எழுதி, தான் தமிழை வாழ்விக்க வந்தவன் என்று காட்ட வேண்டியதில்லை.

      நீக்கு
  12. கதையின் முடிவை மாற்றியிருக்கலாம் தான்.
    பின்னே ஆயிஷா போன்ற அசாத்திய ஞானமுள்ள குழந்தைகள் வாழ்க்கையின் உயர்வான உச்சிகளைத் தொடுவதை நிகழ் உண்மைகளாய் சாத்தியப்படுத்துவது தான் எப்படி?.. சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடய கருத்தை ஜீவி சாரின் கருத்துக்கான பதிலாகவே எடுத்துக்கொள்ளலாம்.

      1. நம் கல்வி முறை மனப்பாடக் கல்வி முறை (தமிழக.. நான் படித்தவரையில்). இது முதுநிலைக் கல்வி வரை தொடர்கிறது. இதுதான் இன்றைய நிலையாகவும் இருக்கும்.
      2. புரிந்துகொண்டு அறிவுச் சிந்தனையை வளர்க்க ஓரளவு சிபிஎஸ்ஸி முறை கல்வி உபயோகப்படுகிறது. தமிழக அரசுப் பள்ளிக் கல்விமுறை தரம் தாழ்ந்து இருக்கக் காரணம், அரசின் பொறுப்பற்ற தனம், ஆசிரியர்களுக்கான இடம் குறைவு. is space given to teacher is very less. ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த தலைமுறையை வளர்க்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது.
      3. கல்லூரிகளிலும் மனப்பாடம் மட்டுமே ஊக்குவிக்கப்படுகிறது. தூய சவேரியார் கல்லூரியில் படித்தபோது, ஒவ்வொரு வகுப்பிலும் நோட்ஸ்தான். தன் எக்ஸாமில் தன்னுடைய நோட்ஸை மாத்திரமே வாந்தி எடுக்கவேண்டும், வேறொரு பேராசிரியர் நோட்ஸ் என்றால் மதிப்பெண் குறைவு என்ற நிலைதான் இருந்தது. (நான் என் அண்ணனின் நோட்ஸைப் பார்த்து முன்னமே படித்து இண்டெர்னலில் எழுதினால் மதிப்பெண் கிடைக்காது. அவனது பேராசிரியர் வேறு, எனக்கு வகுப்பெடுத்த பேராசிரியர் வேறு, ஒரே கல்லூரியாக, ஒரே ஸ்ட்ரீமாக இருந்தாலும்) பிறகு படித்த முதுநிலை இன்னும் மோசம் என்றுதான் கொள்ளணும். எங்களுக்கு பேராசிரியராக வந்தவர், எங்களுக்கு முன்பு முடித்து யூனியில் மெடல் பெற்று, அவரது கல்லூரி நோட்ஸைத் தூக்கிக்கொண்டு வந்தவர். என்னுடன் படித்த ஒருவன், ஒவ்வொர் பேப்பருக்கும் 20-25 கேள்விகள் மாத்திரமே மனப்பாடம் செய்து பாஸ் பண்ணிடுவான். அப்போ ஒருவன் முதுநிலை படித்தவன் என்றால் அவனுக்கும் 5வது படித்தவனுக்கும் என்ன வித்தியாசம்?
      4. தண்ணீருக்குள்....... எப்படியும் காற்று மேலே வந்துவிடும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அறிவுள்ள மாணவன், புரிந்தும் படிக்கிறான், வாய்ப்பு கிடைக்கும்போது தனக்குக் கிடைக்கும் நல்ல உயர் கல்வி மூலம் இன்னும் மேலெழுகிறான். ஐஐடி போன்ற திறமை சார் கல்வி நிறுவனங்களில் படிக்கும்போது நன்றாகப் பிரகாசிக்கிறான். இதனால்தான் சுப்பன் குப்பன் என்று யார் மேனாட்டுக்குச் சென்றாலும் உயர் கல்வியை முடித்து அருமையாக வேலைக்குச் சென்று முன்னேற முடிகிறது. இயல்பான மூளை, வாய்ப்பு கிடைக்கும்போது பிரகாசிக்கிறது. நம்ம ஊரில் யூனி கோல்ட் மெடலிஸ்ட் என்றால், மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதில் எக்ஸ்பர்ட் என்றுதான் பெரும்பாலும் நாம் அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும். இதன் காரணமாகவே, ரேங்க் மாத்திரம் எடுக்கும் மாணவர்கள் நல்ல மருத்துவர்களாகவோ நல்ல பொறியாளர்களாகவோ ஆக முடிவதில்லை.
      5. மேனாடுகளில் புரிதல் திறமை, ஆர்வம்/உழைப்பு உள்ளவன் மாத்திரம் மேல் கல்வி கற்கமுடிவது என்றெல்லாம் ஒழுங்குமுறை இருக்கிறது. கல்விக்கு அதிகச் செலவு, மாணவன் ஆர்வம் கொண்டு படிக்கணும், it is his/her responsibility என்ற முறையில் மாணவன் தன்னுடைய உழைப்பு/ஆர்வத்தைக் காண்பித்து முன்னேறுகிறான். என்னுடைய கம்பெனியில் HR head ஒரு தென்னாப்பிரிக்கர். அவர் சொல்லுவார், உங்க ஊர்ல, தெருவுக்கு மூணு டாக்டர், பத்து எஞ்சினீயர், பாக்கி உள்ளவன் முதுகலை என்று கூறுபோட்டுக் கிடைக்கிறது. அதனால் quantity education தான், quality education வெளிநாடுகளில்தான் உண்டு என்பார் (நம்மிடமும் அத்தகைய கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் பலப்பல என்று அவருக்குத் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் புற்றீசல் பொறியியல் கல்லூரிகளும், அரசின் கலைக்கல்லூரி என்ற பெரும்பாலும் நகைப்புக்கிடமான நிறுவனங்களும்தான்)

      அசாத்திய ஞானமுள்ளவர்கள் வெகு வெகு அபூர்வமாகவே இந்தியாவில் மிளிர முடியும். வெளிநாடுகளில் அவர்கள் நிச்சயமாகப் பிரகாசிக்க முடியும்.

      நீக்கு
    2. என்னுடன் இளநிலை படித்தவன், சென்னையிலிருந்து வந்தவன் (அவன் +2 நல்ல பள்ளியில் படித்திருக்கவேண்டும்). இயற்பியலில் அவன் கேள்விகள் கேட்பது என் ஆசிரியருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவன் நின்னால் குற்றம் காலை மடித்தால் குற்றம் என்று அவனுக்கு நிறையவே டார்ச்சர் கொடுத்தார். அவர்களுக்குத் தேவை நோட்ஸை எழுதி அதனை அப்படியே தேர்வில் எழுதும் மாணவர்கள்தாம். அவர்களால்தான் ரேங்க் பெறமுடியும் என்பதில் அவர்களுக்கு அசாத்திய நம்பிக்கை.

      நீக்கு
    3. கதை உங்கள் சிந்தனையை தூண்டியதற்கு மிக்க மகிழ்ச்சி நெல்லை சார்.

      ஜீவி சாருக்கு பதிலாக  எழுதிய உங்கள் கருத்துரையையும் கண்டேன். இதைத்தான் நான் கல்வித்திட்டம் சரியானாலும் போதிக்கும் முறை சரியில்லை என்று சொன்னேன்.

      வேதம் போதிக்கும் குரு என்ன செய்கிறார். குரு  வேதம் ஓத மாணவர்கள் அதை மனப்பாடம் செய்கிறார்கள் தலை அசைத்தல் உட்பட. அதை மறுபடியும் அவர்கள் மற்றவர்களுக்கு போதிக்கிறார்கள். அவ்வாறு படித்த மாணவர்கள் பலரும் அர்த்தம் புரிந்து கொள்ளாமல்  இப்படித் தான் படிக்க வேண்டும் என்று கீழ்படிகிறார்கள். வேதத்திற்கு வேண்டுமானால் அது பொருந்தலாம். ஆனால் நவீன மேனாட்டு கல்வி, கிளிப்பிள்ளை களை உருவாக்காமல் ஆராய்ந்து அறியும் திறனை எதிர்பார்க்கின்றது. இந்த கருத்தைத்தான் நான் என்னுடைய கதை ஆய்வில் எழுதியிருக்கிறேன்.

      அவசரமாக ஒரே நாளில் தயார் செய்த கட்டுரையானாலும் ஓரிருவரை சிந்திக்க வைத்திருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சி.


      Jayakumar

      நீக்கு
  13. நான் படிச்ச கதை..

    ஏன் படிச்சோம் என்றாகி விட்டது..

    பதிலளிநீக்கு
  14. காலங்கார்த்தால ஏன் இப்படி கஷ்டம்?..

    இனிமேல் இளகிய மனம் உடையவர்கள் இந்தப் பக்கம் வர வேண்டாம் ! - என்று தலைப்புக்கு முன்னால் போட்டு விடுங்கள்.. தயவு செய்து...

    பதிலளிநீக்கு
  15. தினமலர் தர்ற சேதிகள் பத்தாது..ந்னு எபியும் இந்த மாதிரி செய்யுதே..

    பதிலளிநீக்கு
  16. இல்லை..

    நடராஜன்!

    நடராசனாத்
    தான் இருக்கணும்

    நாங்க.. ல்லாம் யாரு?..

    பதிலளிநீக்கு
  17. // மெக்காலே முறை அப்படி இல்லை. ..//

    ஓ... இது அவியல் குரு சிஸ்டமா!!.

    அவியல் குருவினால் தான்
    அழியல் முறைக்குப் போய்க் கொண்டிருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  18. அழியல் என்றால் நீதி மன்றத் தீர்ப்புகள் எதைப் பற்றியும் நினைத்துக் கொள்ள வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  19. திரு.ராதாகிருஷ்ணன் போன்றவர்களாஸ்தான் மனிதம் சற்றே வாழ்கிறது... என்ற நம்பிக்கை வருகிறது.

    பதிலளிநீக்கு
  20. பாஸிடிவ் செய்திகள் இரண்டும் அருமை. மனித நேயத்தை சொல்லும் நல்ல செய்திகள் இரண்டும்.

    சந்திர சேகரன் சார் பகிர்ந்த கதையும் நன்றாக இருக்கிறது.
    ஆனால் மனம் கனத்து போனது படித்து. ஆசிரியர் அந்த குழந்தையை அடித்து மிகவும் வேதனை படித்தி இருக்கிறார்கள். அறிவுள்ள குழந்தையை ஊக்கபடுத்தி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  21. மனிதநேயங்கள் வாழட்டும்.

    ஆசிரியரிடம் கேள்வி கேட்டாலே அடி என்ற நிலைதான்.

    கதை படிக்கும் போது ஆயிஷாவை ஆசிரியர்கள் ஊக்கம் அளித்து இருந்தால்...... என்ற எண்ணம் வந்து போனது.

    பதிலளிநீக்கு
  22. Era. Natarasan
    4.40
    189 ratings29 reviews
    கல்வி - வாழ்க்கை - அறிவியல் புனைக்கதை

    தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.

    பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.

    இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குற்த்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை.

    - கணையாழி வழி - ஜெராக்ஸ் எடுத்து பல நூறுபேர் பல ஆயிரம் பேருக்கு வாசிக்க அன்போடு முன்மொழிந்தார்கள்.

    - ஸ்நேகா பதிப்பகம் இரண்டு ரூபாய்க்கு ஒரு சிறு தனி நூலாகக் கொண்டு வர ஒரே வருடத்தில் ஒன்பது பதிப்புகள் கண்டது.

    - நிகர் முதல் வாசல் வரை - 17 அமைப்புகள் ஆயிஷா கதையை தனிநூலாக்கி பரவலாக எடுத்துச் சென்றன.

    - அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளின் போது ஆயிஷா கட்டாய பாடமாக்கப்பட்டது.

    - அதைத் தவிர ஏழு தன்னதிகார கல்லூரிகள், மூன்று பல்கலைகழகங்கள் ஆயிஷாவை பாடமாக வைத்துள்ளன.

    - ஆயிஷா மன்றங்கள் என்று மதுரை மற்றும் கோவையில் கிராமப்புற குழந்தைகளால் தொடங்கப்பட்டு அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!