சனி, 10 ஜூன், 2023

காகம் என்பதால் விட்டுவிட முடியுமா? மற்றும் நான் படிச்ச கதை

 


=========================================================================================================

 

நான் படிச்ச கதை (JK)

நாதனுள்ளிருக்கையில்

அகிலன்

 
ஆசிரியர் அகிலனின் இயற்பெயர் பி.வி.அகிலாண்டம். அகிலன் (1922-1988) புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். தனது கல்லூரி படிப்பை தியாகம் செய்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார்

இவருடைய படைப்புகள் ஆங்கிலம், செருமனி, சீனா, மலாய் மற்றும் செக்கோசுலவேகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

1963இல் வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1975இல் சித்திரப்பாவை என்ற நாவலுக்கு ஞான பீட விருது கிடைத்தது. 

அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. இந்த நாவல் கல்கியின் பொன்னியின் செல்வனின்  தொடர்ச்சி எனக் கூறலாம். வேங்கையின் மைந்தனாக இருந்த இராஜேந்திர சோழனின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிய நுண்ணறிவை அகிலன் இந்நாவலில் வழங்கியுள்ளார். சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப்பட்டது. 

ஆசிரியரைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கு ====> இங்கே <====

 

நாதனுள்ளிருக்கையில்

அகிலன்

முன்னுரை.

 

இந்தக்கதை சுதந்திரத்திற்கு முன்பு எழுதப்பட்டது.  ஆகவே ஒரு இலக்கியத்தன்மையுடன் உபமானங்களும் உவமைகளும் கையாளப்படுகின்றன. ஒரு எடுத்துக்காட்டு. 

//தாழம்பூ வெடித்திருந்தது. மலர்ந்த தென்னம் பாளைகள்போல், நிலவுக் கீற்றுக்களின் தொகுப்புக்கள்போல் அவை தோன்றின. இயற்கையின் பரந்த மார்பகத்தில் இப்படி ஒரு விசித்திரமான பேரழகு கொப்பளிக்க முடியுமா? பச்சைப் புதர்களின் உச்சித் தலைகளில் கொழுந்துவிட்டெரியும் நெருப்புப் பந்தங்கள்……// 

பவுர்ணமி இரவில்

கடற்கரையில் தங்கச்சுடர்கள் 

தாழம்பூக்கள்.

நான் கதையை சிறிது எடிட் செய்து கொடுத்திருக்கிறேன். முழுக் கதையையும்  இந்த சுட்டியில்  வாசிக்கலாம். 

====>  நாதனுள்ளிருக்கையில் - சிறுகதைகள்  <====

ஸ்ரீ ராமகிருஷ்ண  பரமஹம்சர் வலியுறுத்தும் கோட்பாடு தான் இக்கதையில் விளக்கப்படுகிறது. கடவுளை அரூப வடிவத்தில் மனதில் நிறுத்தி ஞானம் பெறுவது எல்லோருக்கும் சாத்தியமல்ல. முற்றும் துறந்த பற்றற்றவர்களுக்கே அது சாத்தியம். மற்றவர்கள் பக்தி மார்க்கத்தில்  இஷ்ட தெய்வங்களை பிரார்த்தித்து ஞானம் பெறலாம். அதுவே நல்லது. 

பேரின்பநாயகம் சித்தரின் சீடராக யோகமும் கற்று உள்ளிருக்கும் நாதனை தியானித்து சித்தி பெற்றவர். ஆயினும் தியானம் மாத்திரம் அல்லாமல் பக்தியும் தேவை என்பதை கடைசியில் அவர் உணர்கிறார். அந்த கற்றல் எங்கு  எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விளக்குவதே இக்கதை.

 நாதனுள்ளிருக்கையில் 

பேரின்ப நாயகம் ஒரு சித்த மருத்துவர். அவர் மருத்துவரான கதையை ஆசிரியர் எழுதியபடி  பார்ப்போம். 

அவருடைய காளைப் பருவத்தில், இருபதாவது வயதில், அவருடைய கிராமத்துக்கு ஒரு கோவணச் சித்தர் வந்திருந்தார். அவரைப் பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டார்கள். அற்புதமான சித்து விளையாடல்களை அவர் செய்து வந்தாராம். தெருவோரம், வீட்டுத் தின்ணை, மரத்தடி, குப்பைமேடு எங்கே வேண்டுமானாலும் அவர் படுத்து உறங்கினார். வியாதியஸ்தர்களுக்குப் பச்சிலை மருந்துகள் அரைத்துக் கொடுத்துக் குணப்படுத்தினார்.

விசித்திரமான கதை ஒன்று கிளம்பிவிட்டது:

அவர் படுத்து உறங்கியபோது, கை வேறு, கால் வேறு, கழுத்து வேறாகத் தனித் தனி முண்டங்களாகக் காட்சி கொடுத்தாராம். தலைக்குப் பக்கத்தில் அந்தரத்தில் ஒரு விளக்கொளி தெரிந்ததாம். பலர் நேரில் பார்த்ததாகச் சொன்னார்கள். இந்த அதிசயம் உண்மைதானா என்று கண்டுபிடிக்கப் பேரின்பநாயகம் அவருக்குச் சீடரானார். அவருடன் பல ஊர்களைச் சுற்றி, பல மருந்துகள் அரைத்து, பலவிதமான அநுபவங்களைப் பெற்றார். ஆனால் ஒருநாள்கூடத் தமது குரு நாதரிடம் அவர் எதிர்பார்த்த அதிசயம் நடக்கவில்லை.

உறங்கும்போது சித்தர் குறட்டை விட்டார்; தலையும் கழுத்தும் ஒட்டிகொண்டுதான் இருந்தன!

சித்தரே ஒருநாள் தமதுசீடரை மடக்கினார். “ஏண்டா பயலே! நீ பிடிவாதக்காரண்டா, இதற்காகவா என்னைச் சுற்றுகிறாய்?” என்று கேட்டார்.

சீடர் மௌனம் சாதித்தார்.

“வந்ததுதான் வந்தாய்; வைத்தியத்தைக் கற்றுக்கொண்டு சொந்த ஊருக்கே போய்த் தொலை. வயது வந்த பையன் என்னோடு இருந்தால் சம்சாரபந்தம் பற்றிக்கொள்ளும்”.

மூன்று வருஷத் தொண்டு பேரின்பநாயகத்தைச் சித்தராக்கவில்லை; சித்த வைத்தியராக்கியது.

சித்த வைத்திய முறையில் அவர் பலவிதமான ‘சர்வ ரோக நிவாரணி’களைத் தயார் செய்துவிட்டார். பல வியாதிகளைப் பறக்க அடித்துப் பலலட்சம் திரட்டிவிட்டார்.

கையில் பணமிருந்தது, தொழிலைப் பிள்ளைகள் கவனித்துக் கொண்டார்கள், வீட்டை மனைவி மேற்பார்த்தாள், கட்டையில் தெம்பிருந்தது; அவர் புறப்பட்டு விட்டார்.

தற்போது தனுஷ்கோடிக்குச் சென்றுகொண்டிருந்த ‘இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸி’ல் மூன்றாம் வகுப்புப் பெட்டியில் கட்டையை நீட்டிவிட்டுப் படுத்திருந்தார் பேரின்பநாயகம்.

கட்டை நல்ல உரமான கட்டை. அதன் சட்டைப் பையில் ராமேசுவரத்துக்கு டிக்கெட் இருந்தது.

அறுபது வயதைத் தாண்டி ஆறு மாதங்கள் கடந்த முற்றி விளைந்த கட்டை அது. வைரம் பாய்ந்த தேகத்தைப் பார்த்தால் நாற்பத்தைந்து வயது கூட மதிக்க முடியாது.

பெரிய துணிப் பையைத் தலைக்கு வைத்துப் படுத்திருந்தது அது. பைக்குள் மாற்றுத் துணிகளும், கெட்டி அட்டைச் சித்தர் பாடல் தொகுப்பொன்றும் இருந்தன. பாம்பாட்டிச் சித்தர் குதம்பைச் சித்தர், அகப்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் — இப்படிப் பல சித்தர்கள் அந்த ‘பைண்ட் வால்யூமுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார்கள். பாம்பாட்டிச் சித்தரின் பதினேழாவது பக்கத்தில் ஒரு காகித உறையில் ஒரு நோட்டுக் கற்றை பிதுங்கிக்கொண்டிருந்தது.

பிறவிப் பெருங்கடல் தாண்டிய பின் முத்தி நிலையை எதிர்பார்ப்பதுபோல் பாம்பன் கடலைத் தாண்டியவுடன் ராமேசுவரத்தை எதிர்பார்த்தார் பேரின்பம்.

பாம்பன் சந்திப்பில் இறங்கி, குழாயில் தண்ணீர் குடித்துவிட்டு, அடுத்தாற்போல் காத்திருந்த ராமேசுவரம் வண்டியில் ஏறிக்கொண்டார் பெரியவர்.

அன்று வைகாசி பௌர்ணமி.

இடித்துப் புடைத்துக் கொண்டு சந்நிதியை மறைத்தது பக்தர்கள் கூட்டம். யானையைவிட பெரிதாய்ப் படுத்துக் கிடந்த நந்திக்கும், உள்ளே நட்டநடுவில் நின்ற சிவலிங்கத்துக்கும் இடையில் நெரிசல் தாங்கவில்லை. சித்த வைத்தியர் பக்தரில்லை. ஆகவே அவர் ஒதுங்கி ஓர் தூணருகில் உட்கார்ந்து, ‘சிவோஹம்– நானே சிவன்’ என்று மூச்சை உள்ளே இழுத்தார். பிறகு வெளியே விட்டார்.

நாதனுள்ளிருக்கையில் இந்த மனிதர்கள் ஏன் இப்படி நட்ட கல்லைச் சுற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்று அவருக்குப் புரியவில்லை. அழுதார்கள், தொழுதார்கள், ஆடினார்கள், பாடினார்கள், அதைக் கேட்டார்கள், இதைக் கேட்டார்கள், அர்ச்சனை அபிஷேகம் என்று என்ன என்ன வெல்லாமோ செய்தார்கள்.

பேரின்பநாயகம் எழுந்து நின்று, தம்முடைய நண்பர் ஒருவரிடம், ‘போய் வருகிறேன்’ என்று சொல்லும் பாவனையில் ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பினார்.

இதைப் போல் ஒரு நம்பிக்கையில்லாத கட்டை இங்கு எதற்காக வந்தது? வேடிக்கை பார்க்கவா?

இங்கே மட்டும் அது வரவில்லை. இமயமலைக்குப் போய்க் கம்பளிப் போர்வையைச் சுற்றிக்கொண்டு கைலாய நாதரை வேடிக்கை பார்த்தது. காசிக்குப் போய் விசுவநாதரை விசாரித்தது. கன்னியாகுமரிக்குச் சென்று அம்மனைப் பேட்டி கண்டது. கடைசி கடைசியாக ராமேசுவரத்துக்கு வந்திருக்கிறது.

தமக்குள்ளே உள்ள நாதனிடம், தாம் நம்பிகை வைப்பதுபோல், மற்ற மனிதர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மற்ற நாதர்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது. பார்த்த பிறகும் அவருக்குப் பக்தி ஏற்படவில்லை. மற்ற மனிதர்களிடம் அனுதாபம் கொண்டார்.

மறுநாள் காலையில் தனுஷ்கோடிக்குப் போய் சேதுக்கடற்கரையில் மூழ்கிவிட்டு ஊர் திரும்ப வேண்டியதுதான்.

அன்றைக்குப் பௌர்ணமியல்லவா? அமாவாசை – பௌர்ணமி இந்த இரண்டு இரவுகளும் அவருக்கு மிக முக்கியமானவை. தனிமைச் சமாதியில் உட்கார்ந்து நீண்ட நேரம் தியானத்தில் முழுகி விடுவார். வீட்டில் இருக்கும்போது அறையைத் தாழிட்டுக்கொண்டு நிலைக் கண்ணாடியின் முன்னால் உட்கார்ந்து விடுகிற வழக்கம் அவருக்கு.

இப்போது அவருக்கு அந்தத் தனிமை தேவையாக இருந்தது.

ஒரு திட்டு இயற்கையின் அழகையெல்லாம் தன்னுள் அடக்கிக்கொண்டு அவரைத் தன்னிடம் அழைத்தது. நான்கு புறமும் சுவர்போல் எழும்பியிருந்தன தாழஞ் செடிகள். கிளைக் குருத்துக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு தாழம்பூ வெடித்திருந்தது. மலர்ந்த தென்னம் பாளைகள்போல், நிலவுக் கீற்றுக்களின் தொகுப்புக்கள்போல் அவை தோன்றின. இயற்கையின் பரந்த மார்பகத்தில் இப்படி ஒரு விசித்திரமான பேரழகு கொப்பளிக்க முடியுமா? பச்சைப் புதர்களின் உச்சித் தலைகளில் கொழுந்துவிட்டெரியும் நெருப்புப் பந்தங்கள்……

அருகில் நெருங்கப் போனவர் திடுக்கிட்டு ஒருகணம் திகைத்தார்.

யாரோ இரண்டு பேர்கள் அந்தப் புதருக்குள் பேசும் சத்தம் கேட்டது. ஒன்று ஆண் குரல்; மற்றொன்று பெண் குரல்.

உண்மைதானா?

சந்தடி செய்யாமல் மறைவில் இருந்துகொண்டு புதர்வழியே எட்டிப் பார்த்தார். உண்மைதான். இறுக்கிப் போயிருந்த மணல் திட்டில் இரண்டு பேர்கள் உல்லாசமான பேச்சில் ஈடுபட்டிருந்தனர். ஆண்மகனின் மடியில் தலைவைத்துப் படுத்து அவனிடம் சிணுங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண்.

உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட நினைத்தார் பேரின்பநாயகம். ஆனால் கால்கள் நகரவில்லை. தம்மைவிட நூதனமான பிராணிகளாய் அவர்கள் தோன்றியதால் வேடிக்கை பார்த்தார்.

பெண்ணின் கண்களில் வழிந்த நீர் நிலவில் மண்புழு போல் நெளிந்தது. அதை அவன் துடைத்து விரல்களால் சுண்டினான்.

அவனுக்கு முப்பது வயதிருக்கும். அவளுக்கு ஐந்து வயது குறைவாக இருக்கலாம். இருவருமே நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது.

அவள் பேசினாள்:

“என்னுடைய கஷ்டம் உங்களுக்கு எங்கே தெரிகிறது? நீங்களும் பெண்ணாய்ப் பிறந்திருந்தால் தெரியும். என்றைக்குமே உங்களுக்கு சிரிப்பும் விளையாட்டும் தான்.”

“நான் இருப்பது உங்களுக்குப் பாரமாயிருக்கிறதா?” என்று கேட்டாள் அவள்.

“அப்படிச் சொல்லாதே!” என்று அவள் கன்னத்தில் அவன் செல்லமாய்த் தட்டினான். “சிரிப்பும் விளையாட்டும் எனக்கு நீ கொடுத்திருக்கிறாய். இல்லாவிட்டால் நான் சாமியாராய்ப் போயிருப்பேன்”.

“நமக்குக் கல்யாணமாகி ஏழு வருஷங்களுக்கு மேல் ஆகவில்லையா?”

“எழுபது வருஷமானால்தான் என்ன?”

“எழுபது வருஷமானால் அப்புறம் தெரியும். உழைத்துப்போட ஒரு பிள்ளையில்லாமல் என்ன செய்வீர்களாம்?”

“பிள்ளை, பிள்ளை, பிள்ளை! ஏழு வருஷத்தில் ஏழு பிறந்தால்தான் தெரியும் உனக்கு. ஏன், எட்டுகூடப் பிறக்கும்!”

அவன் சிரித்தான்.

“சிரிக்காதீர்கள்” என்று அவள் கத்தினாள்.

“நூறு ரூபாய் சம்பளத்தில் நூலேணியாட்டம் போடுகிறோம் நாம். உனக்கோ குழந்தைப் பைத்தியம் பிடித்திருக்கிறது. வைத்தியருக்கும், மருந்துக்கும் ரொட்டி மிட்டாய்க் கடைக்காரனுக்கும் செலவு வைக்க வேண்டுமென்கிறாய் நீ.”

“ஐம்பது ரூபாய்க்குக் குறைந்து வாங்குகிறவர்களுக்கு ஐந்து குழந்தைகள் இல்லையா?”

“அந்தக் குடும்பத்தில் ஒருநாள் தலை நீட்டிப் பார்த்தால் தெரியும்.”

உங்களுக்கு என்னைத் தெரியவே தெரியாது!” என்று அலறினாள் அவள். “நீங்கள் என்னைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது.”

சண்டைக்கு வராதே! என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? ராமேசுவரத்துக்கு வரவேண்டுமென்று ஒற்றைக் காலில் நின்றாய். கூட்டிக்கொண்டு வந்தேன்.”

“உங்களுக்கு இதில் நம்பிக்கை யில்லையா?”

“எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை யில்லை நீ நம்பினால் சரி.”

“உங்களுக்கு வேறே எதில்தான் நம்பிக்கை யுண்டு?”

“சொல்லட்டுமா! உன்னிடம் நம்பிக்கையுண்டு. என்னிடம் நம்பிக்கையுண்டு.” அவன் உரக்கச் சிரித்தான்.

“இந்தத் தன்னம்பிக்கை போதவே போதாது” என்று சீறினாள் அவள். “மனிதர்கள் குறையுள்ளவர்கள். அவர்களுடைய குறைகளைக் கடவுள்தான் தீர்த்துவைப்பார்.”

“சரி, அப்படியே வைத்துக்கொள்.”

“நான் என்ன வைத்துக் கொள்வது?” படீரென்று எழுந்து உட்கார்ந்து அவனை வெறித்துப் பார்த்தாள். “பொய் சொல்லாமல் உங்கள் நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு என்னால் ஏதாவது சுகமுண்டா?”

“எல்லாச் சுகமும் உண்டு” என்று அவள் முகத்தைத் திருப்பினான் அவன்.

“கேவலம்! என்னை நீங்கள் பெண்ணாகவே மதிக்கவில்லை. மதித்தால் என் உணர்ச்சியை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கிறேன். உங்களையே கொடுத்திருக்கிறேனா? சொல்லுங்கள்!”

மறைவிலிருந்த பேரின்பநாயகத்தின் உடல் சிலிர்த்தது. அவள் ஏதேதோ பேசிக்கொண்டே போனாள் தாய்மை உணர்ச்சியின் தவிப்பு அவர் கண்டும் கேட்டுமிராத அளவுக்கு அந்தப் பிரதேசத்தில் எதிரொலி செய்தது. தம்முடைய கண்களில் அந்தப் பெண்ணுக்காகக் கசிந்து வழிந்த நீரை அவர் துடைத்து விட்டுக் கொண்டார்.

அவன் அவளருகில் சென்று சமாதானம் செய்ய முயன்றான். அவள் விலகிக்கொண்டு தள்ளி உட்கார்ந்தாள்.

“இதோ பார், உனக்காக இப்போது கோவிலுக்குப் போய் வந்தோம்.”

“எனக்காக!’ எனக்காகத்தானே? நமக்காக இல்லையே?”

அவன் பேசவில்லை.

“எனக்காக நீங்கள் அங்கே வந்தீர்கள்; உங்களுக்காக நான் இங்கே வந்திருக்கிறேன். நமக்குள் உள்ள உறவு இவ்வளவுதானே?”

“என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்?” என்று கேட்டான் அவன்.

“இனி உங்களுக்காக என்னிடம் ஒன்றுமே இல்லை. என்னைத் தொடாதீர்கள்” அவள் எழுந்து ஓடத் தொடங்கினாள்.

அவன் பிடித்துக் கொண்டான். அவள் திமிறினாள்.

“நீங்கள் நம்பாத வரையில் நமக்குக் குழந்தை பிறக்காது. என்னை விட்டுவிடுங்கள்.” அவள் அவனுடைய பிடியை விடுவித்துக்கொண்டு போக முயன்றாள். முடியவில்லை. அவன் தோளில் ஓங்கித் தன் தலையை மோதிக்கொண்டு அந்தக் கடலே பொங்கும்படி கதறி அழுதாள்.

“கோயிலில் நீங்கள் கையெடுத்துக் கும்பிடவில்லை. அதை நான் பார்த்தேன். நாலு பேருக்கு மத்தியில் எனக்கொன்றும் சொல்லத் தோன்றவில்லை. இனி நீங்கள் கடவுளைக் கும்பிடாதவரையில் என்னைத் தொடுவதற்கு உங்களை விட மாட்டேன். தொடாதீர்கள். எட்டி நில்லுங்கள்!”

படபடவென்று அவள் தேகம் நடுங்கியது. அவள் மயங்கிப் போய் தரையில் துவண்டு விழுந்தாள். பேச்சு மூச்சில்லை; அசைவில்லை.

நடுக்காட்டில் நள்ளிரவில், அவள் கட்டையாக விறைத்துப் போய்விட்டாளோ என்ற பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. பயமும் துக்கமும் அவனைப் படாத பாடு படுத்தின. குழந்தை போல் அவள் பெயரைச் சொல்லி அழைத்துக் கேவிக் கேவி அழுதான்.

பயம், துக்கம், வேதனை! நிராசை! ஏமாற்றம்…

அவளைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டு வானத்தை நோக்கிக் கரங்களை உயர்த்தினான். பிறகு கரங்கள் தாழ்ந்து நெஞ்சுக் கெதிரே குவிந்தன. மூடிய கண்களை அவன் திறக்க வில்லை; குவிந்த கரங்களை அவன் தாழ்த்தவில்லை. கும்பிடும் சிலையாக மாறினான்.

கடல் காற்று சில்லென்று அவள் முகத்தில் வீசியது. கணவனின் கண்ணீர் அவள் கண்களில் வழிந்தது. மெல்ல மெல்ல அவள் கண்களைத் திறந்தாள். உதடுகள் துடித்தன. நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

இரண்டு புறமும் இருந்த கடல்கள் நிலவு மயக்கத்தால் கொந்தளித்து ஒன்றை ஒன்று தழுவிக்கொள்வதற்கு அலைக் கரங்களை வீசிக்கொண்டன.

ஒன்று ஆண் கடல்; மற்றொன்று பெண் கடல். – அப்படித்தான் ஊர்க்காரர்கள் பேசிக்கொண்டார்கள்.

ஆண் கடல் அலைகளை எழுப்பி விட்டுக்கொண்டு, முட்டி மோதிக்கொண்டு, சீற்றத்துடன் ஆரவாரம் செய்தது. பெண் கடலின் கொந்தளிப்பு வெளியில் தெரியவில்லை.அமைதியாக அலைகளைச் சுருளவிட்டு மென்காற்றில் அது கிளு கிளுத்தது.

பேரின்பநாயகம் கடல்களின் நிலையில் அந்தத் தம்பதிகளைக் கண்டார். சந்தடி செய்யாமல் அவர்களுடைய தனிமைக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, அந்த இடத்தை விட்டு நழுவிவிட்டார்.

காற்றைப்போல் நடந்து பழைய மணல் குன்றுக்கே வந்தார். உச்சியில் நின்று உலகத்தைத் திரும்பிப் பார்த்தார்.

அந்தப் பெண்ணுடைய கண்ணீர்த் துளிகள் இங்கே இவரது சித்த சாகரத்தில், அறுபதாண்டுகள் வரையிலும் ஏற்படாத கடும் புயலை எழுப்பிவிட்டன.

நாதன் உள் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நாதனைத் தம்மைத் தவிர வேறு யாருமே நம்பவில்லையே? தம்மை நம்பியவர்கள் தம்முடைய பணத்துக்காக, மருந்துக்காக, தம்முடைய உடைமைகளுக்காக நம்பினார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் கண்ணீர் வெறும் நம்பிக்கையால் துடைக்கப்பட்டுவிட்டதே!

நம்பிக்கை….

உருவம் இல்லாத ஒன்று, பெயர் இல்லாத ஒன்று, நிறம் இல்லாத ஒன்று, பணம் இல்லாத ஒன்று – இதற்கு உருவம் கொடுத்து, பெயர் கொடுத்து, நிறம் கொடுத்து, பொருள் கொடுத்து எப்படியெல்லாம் நம்புகிறார்கள் இந்த மனிதர்கள்! நாதன் வெளியிலும் இருக்கிறானா? அவனுக்கு கண்ணீர்தான் காணிக்கையா?

அவருடைய கண்ணீர் கரை புரண்டு வடிந்தது. “கடவுளே! அந்த ஏழைப் பெண்ணுக்கு ஓர் குழந்தையைக் கொடு! அவளுடைய துன்பத்தைப் போக்கு!” என்று தமக்குள்ளே கதறினார்

இரவெல்லாம் பக்திப் பெருக்கு அவரை ஆட்டிவைத்து விளையாட்டுப் பார்த்தது. பொழுது புலரும் வேளையில் இரண்டு கடல்கள் கூடும் சேதுக் கரைக்கு அவர் குளிக்கப் போனார். அங்கே அவருக்கு முன்னால் அந்த இளம் தம்பதிகள் ஒன்றாய்க் குளித்துக்கொண்டிருந்தார்கள் அவர்களது முகங்களில் எல்லையற்ற மகிழ்ச்சி தண்டவமாடியது

(ஆசிரியர் கதையை இங்கேயே முடித்திருக்கலாம்.. ஆனால் பேரின்ப நாயகம் பக்தி மார்க்கத்திற்கும் செல்வதை வலியுறுத்த வேண்டி கதையைத் தொடர்கிறார் என்று தோன்றுகிறது))

தனுஷ்கோடியிலிருந்து நடுப்பகலில் ரெயில் புறப்பட்டது. என்ன திருவிளையாடல் இது! அவர் உட்கார்ந்திருந்த அதே பெட்டியில் அவருடைய பலகைக்கு எதிரில் வந்து உட்கார்ந்தார்கள் அந்தத் தம்பதிகள். பேரின்பநாயகம் அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு, தாமே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

பேச்சு அவரை அறியாமலே வெளிப்பட்டதென்று சொல்லலாம்.

“உங்களுக்கு அடுத்த வருஷம் கட்டாயம் குழந்தை பிறக்கும். அப்படிப் பிறந்தால் என்ன தருகிறீர்கள்?”

அந்தப் பெண் பிள்ளையின் முகத்தில் குபீரென்று புதுக்களை பொங்கி வழிந்தது. ஆனந்தப் பெருக்கில் அவளுக்கு அவரிடம் என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.

“உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று தடுமாறினாள்.

பெரியவர் அவள் கணவனைத் திரும்பிப் பார்த்தார். அவன் கண்களில் கேலிச் சிரிப்புத் துள்ளத் தொடங்கியது. ‘பணம் பிடுங்கும் சாமி ஒன்று எதிரில் வந்து கழுத்தறுக்கத் தொடங்கிவிட்டதே! இவள் நம்மைச் சும்மா விடமாட்டாளே!’

சித்த வைத்தியர் அவன் சிரிப்பைக் கண்டுபிடித்துவிட்டார்.

துணிப் பைக்குள் இருந்த சித்தர் பாடல் தொகுப்பை வெடுக்கென்று வெளியில் இழுத்தார். பாம்பாட்டிச் சித்தரின் பதினேழாவது பக்கத்தில் பதுங்கியிருந்த பணக் கற்றை பக்குவமாய்க் கீழே விழுந்தது. இளைஞன் பிரமித்தான். ‘கட்டை வெறுங் கட்டை இல்லை போல் இருக்கிறதே! புத்தம் புது நோட்டை அச்சடித்து வைத்திருக்கிறதோ?’

“இதில் உங்கள் இருப்பிடத்தை எழுதிக் கொடுங்கள்” என்று துண்டுக் காகிதத்தை அவனிடம் நீட்டினார்.

பணத்தைக் கண்டவுடன் அவனுக்கு அவரிடம் மரியாதை பிறந்துவிட்டது. எழுதிக் கொடுத்தான். தம்முடைய அச்சிட்ட முகவரிச் சீட்டையும் அவனிடம் கொடுத்தார். அவனுக்கு அதைப் படித்தவுடன் தூக்கி வாரிப் போட்டது.

“குழந்தை பிறந்தவுடன் ஒரு முக்காலணா கார்டு போடுங்கள். நான் உங்கள் வீட்டுக்கு வருகிறேன். ஒரே ஒரு நிமிஷம் அதை என் கையில் கொடுத்தால் போதும். ஒரு முத்தம் கொடுத்து விட்டு உங்களிடம் திருப்பி கொடுத்து விடுகிறேன். எனக்கு அதுதான் காணிக்கை.”

“பிறந்தால் நாங்களே கொண்டு வருகிறோம்.” “பிறந்தாலாவது! பிறக்கும்.”

அவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டுமென்று தினந்தோறும் கடவுளை வேண்டிக்கொண்டார் பேரின்பநாயகம். அன்றிலிருந்து அவர் சித்தர் அல்ல ; பக்தர்.

என்னுரை.

வாழ்க்கையே ஒரு நம்பிக்கை தான். நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை. பக்தி நம்பிக்கையின் அடிப்படை அவ்வளவு தான்.

வியாதிகளுக்குள்ள மருந்துகளைக் கற்றுக்  கொண்டவருக்கு வியாதியல்லாத உடல் குறைப்பாடுகளுக்கு மருந்து தெரியவில்லை. அப்படி ஒன்று தான் குழந்தை பேறின்மை. அதற்கு  மருந்து தான் பக்தி

 

23 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. தன்னுள் இருக்கும் இறையை தியானத்தால் தரிசித்தால் சித்தர். அந்த இறையிடம் வேண்டுதல் வைத்தால் அது பத்தர் என்பதை அகிலன் சிறுகதை வாயிலாகச் சொல்லியிருப்பது நன்றாக இருந்தது. இதைத்தான் சொல்ல விரும்பியதால் கதை நீண்டது.

  அந்தக் குடும்பத்தில் ஒருநாள்
  உங்களுக்கு என்னை

  இந்த இரு பத்திகளும் மீண்டும் வந்துள்ளன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​நன்றி. பக்தியும் சித்தியும் ஒன்றாக சிலரிடம் இருப்பதைக் காணலாம். அதனால் தான் அவர் பேரின்ப நாயகம். ​கருத்துரைக்கு நன்றி. பத்திகள் திரும்ப வந்ததை எ பி ஆசிரியர் சரி செய்ய கோருகிறேன்.,

   நீக்கு
 3. ..இயற்கையின் பரந்த மார்பகத்தில் இப்படி ஒரு விசித்திரமான பேரழகு கொப்பளிக்க முடியுமா?//

  இயற்கையின் பரந்த மார்பகத்தில் இப்படி ஒரு பேரழகு கொப்பளிக்க முடியாதாமா! மனிதனின் பர்ரந்த மார்பில்தான் விசித்திரப் பேரழகு ‘கொப்பளிக்குமாக்கும்’?

  அகிலாண்டமே.. என்ன இது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இயற்கையின் பரந்த மார்பகத்தில் இப்படி ஒரு விசித்திரமான பேரழகு கொப்பளிக்க முடியுமா?//.

   " நீராரும் கடலுடுத்த "நினைவில் வருகிறது.

   அகிலாண்டத்திற்கு உரிய கேள்வி அகிலாண்டத்தை ஆள்பவர் பதில் தருவார்.

   நன்றி
   Jayakumar

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

  ஒடிசா ரயில் விபத்தில் விபத்தில் அடிபட்டவர்களை விரைவான முறையில் காப்பாற்ற உதவி செய்த ராணுவ வீரரையும், துணிவுள்ள பெண் போலீஸ் கலா அவர்களையும் பாராட்டுவோம்.

  காகமானலும், ஒரு உயிர் என அதனை மதித்த இளைஞருக்கும் பாராட்டுக்கள். அவரின் இந்த உதவி நெகிழ்வூட்டுகிறது. இந்த சம்பவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. அகிலன் இளம் வயதில் என்னுடைய ஆதர்ச எழுத்தாளர். அவருடைய அனைத்து புதினங்களும் சிறுகதைத்தொகுப்புகளும் என்னிடம் இருக்கின்றன. ஆனால் இந்த சிறுகதையை எப்படியோ படிக்காது விட்டிருக்கிறேன். இங்கே இதை வெளியிட்டிருப்பதற்கு சகோதரர் சந்திரசேகரன் அவர்களுக்கு இனிய நன்றி!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் ஜெயகுமார் சந்திரசேகர் சகோதரரே

  இன்றைய கதைப்பகிர்வும் நன்றாக உள்ளது.

  கதை தனுஷ்கோடியுடன் நன்றாக நகர்ந்து பயணப்பட்டு இறுதியில் பக்தி பிரவாகத்தில் இணைந்து விட்டது.

  பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். அவரைப்பற்றிய விபரங்களும் அறிந்து கொண்டேன். இந்தக்கதை இதுவரை படித்ததில்லை.

  /வாழ்க்கையே ஒரு நம்பிக்கை தான். நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை. பக்தி நம்பிக்கையின் அடிப்படை அவ்வளவு தான்.

  வியாதிகளுக்குள்ள மருந்துகளைக் கற்றுக் கொண்டவருக்கு வியாதியல்லாத உடல் குறைப்பாடுகளுக்கு மருந்து தெரியவில்லை. அப்படி ஒன்று தான் குழந்தை பேறின்மை. அதற்கு மருந்து தான் பக்தி/

  இந்த உங்களுரையும் நன்றாக உள்ளது.

  குழந்தை வரம் வேண்டி வந்தவர்களுக்கு கண்டிப்பாக அடுத்த வருடம் குழந்தை பிறந்து விடுமென ஒரு சித்தராக இல்லாமல், பக்தராக பேரின்பநாயகம் கூறியது கண்டிப்பாக பலிக்குமென்றுதான் நானும் நம்புகிறேன். ஏனெனில் இறை நம்பிக்கை என்பது நம் ஜீவ நாடி. அந்த ஜீவ நாடி எப்போதும் துடித்து கொண்டிருந்தால்தான் நம் வாழ்க்கை பயணம் ஒவ்வொரு நாளும் அதுபாட்டுக்கு நகரும்.

  நல்லதொரு கதை பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான கருத்துரைக்கு நன்றி.

   //ஏனெனில் இறை நம்பிக்கை என்பது நம் ஜீவ நாடி. அந்த ஜீவ நாடி எப்போதும் துடித்து கொண்டிருந்தால்தான் நம் வாழ்க்கை பயணம் ஒவ்வொரு நாளும் அதுபாட்டுக்கு நகரும்./
   அருமையான வார்த்தைகள. ஆனாலும் கடவுள் மறுப்பாளர்கள் இந்தக் கருத்துடன் முரண்படலாம்.நான் உத்தேசித்த "/வாழ்க்கையே ஒரு நம்பிக்கை தான். நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை. பக்தி நம்பிக்கையின் அடிப்படை அவ்வளவு தான்.// என்பது நாளை நாம் உயிருடன் வாழ்வோம் என்ற நம்பிக்கையே. இதன் ஒரு பிரிவே இறைபக்தி. ஆதாவது நான் உத்தேசித்தது உயிரின் மேல் நம்பிக்கை.

   நன்றி

   நீக்கு
 8. ஒடிசா ரயில் விபத்தில் உதவிய நம் தமிழ்நாட்டு ராணுவ வீரருக்கு சல்யூட்!

  காகத்தை மீட்ட இளைஞருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். காகம்தானே என்று விட்டுவிடாமல் காப்பாற்றியவரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனதைக்கவர்ந்த செய்தி.

  பெண்போலீஸ் கலாவுக்குப் பாராட்டுகள். அந்த நிகழ்வில் சிக்கிய அந்த போதை இளைஞர்களின் வயதைக் கொஞ்சம் பாருங்கள்!!!! எதிர்கால பாரதத்தின் முத்துகள்!!!!! கலா அவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் கூடவே தோன்றுகிறது!

  மாலை வேளையில் வெளிச்சம் இருக்கும் போதே இப்படி....இதில் சென்னை இரவு வாழ்க்கை பற்றி எபி வாட்சப் குரூப்பில் ஒரு செய்தி பகிரப்பட்டிருந்தது. நினைத்துப் பார்த்தேன்! இதனால் பாதிக்கப்படுபவர்கள் நல்லவர்களும் கூட. உண்மையாகவே இரவு வேலை முடித்துச் செல்பவர்கள் வேறு ஏதேனும் காரணங்களால் இரவு தாமதமாக வீடு செல்லுதல் என்று வரும் போது என்ன பாதுகாப்பு? அப்போது உதவிக்குக் கூப்பிடுவதற்குக் கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள். எனவே நாம் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 9. கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், ஜெ கு அண்ணா சொல்லியிருப்பது போல....அந்த இடத்தில் முடிவு பெற்றது கதை என்று தோன்றியது. அதன் பின் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...வாசகர்கள் ஊகித்துக் கொள்ள முடியும்.

  தத்துவம் பற்றி வருவது ஆசிரியரின் கருத்து. பக்தி என்பது ஒவ்வொருவரது தனிப்பட்ட விஷயம்.

  அந்தக் கடைசிப் பகுதியைத் தவிர கதை அருமையான கதை. எழுதிய விதம்.

  ஒரு மனிதனின் தத்துவார்த்த மனம், ஆன்மீக சிந்தனைகள் - நம்பிக்கை, வேண்டுதல், வழிபாடுகள் என்பதற்குள் வரும் போது பக்தி ஆகிறது என்று ஆன்மீகத்திற்கும் பக்திக்கும் உள்ள சிறு வித்தியாசம் எல்லாம் அருமை.

  ஆனால் அதே சமயம்......பேரின்ப நாயகத்தின் மனநிலையில் எந்தவிதக் குறையும் இல்லை. ஆன்மீக வழியில் செல்பவர்களுக்கு வேண்டுதல் பரிகாரங்கள், ஆராதனைகள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பேரின்பநாயகன் மற்றவர்கள் எப்படித் தொழுதால் என்ன என்று கடந்து சென்றிருக்கலாம்...

  ஆனால் அதைக் கொஞ்சம் வேறு கண்ணோடு பார்க்கும் நிலை பேரின்பநாயகனுக்கு என்பதை ஆசிரியர் கொண்டு வந்திருப்பது...நம்பிக்கை, வேண்டுதல் என்ற ரீதியில் பக்தி என்பதைச் சொல்வதற்கு என்று தோன்றியது.

  இக்கதையை வாசித்ததும் எனக்கு வேறொன்று நினைவுக்கு வந்தது. ஒவ்வொருவரது நம்பிக்கைகள், அதனால் ஏற்படும் மயக்கங்கள் அதாவது அதில் ஊன்றி இருப்பது, மூட நம்பிக்கைகள் உட்பட....- கொண்ட வெவ்வேறு வகை மனிதர்கள் எல்லாம் ஒரு பொதுவான சாமியாரை/ஆன்மீகவாதி நடத்தும் ஒரு விழா/கூட்டத்தில் கலந்துகொள்ள செல்ல அதைப் பற்றி ரா சு நல்ல பெருமாள் ஒரு கதை எழுதி அது பரிசு பெற்றது. கலைமகளோ அமுதசுரபியோ சரியாக நினைவில்லை. அருமையான கதை. அதை மீண்டும் படிக்கத் தோன்றியது. இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. புத்தகமாகக் கிடைக்கிறதா என்றால் அதுவும் இப்புத்தகம் இல்லை. அவர் அதில் மறைமுகமாக அப்போது பிராபல்யமாக இருந்த ஒரு ஆன்மீகவாதியைத்தான் சொல்லியிருப்பார் என்று தோன்றியது. ஆனால் கடைசியில் மக்களின் நம்பிக்கையைத்தான் முன்னிறுத்தியிருப்பார். அந்த ஆன்மிகவாதியின் அற்புதங்களை கவர் செய்ய வரும் பத்திரிகையாளர்கள் முதல் சாதாரண கண்மூடித்தனமான நம்பிக்கைகள் உள்ள சாதாரண மனிதரகள் பற்றியும் சொல்லியிருப்பார். கடைசியில் மக்களின் நம்பிக்கைதான் முன்னிறுத்தப்பட்டிருக்கும் என்ற நினைவு.

  ஆனால் இந்த நம்பிக்கைகள் தான் பலருக்கும் ஒரு மனசமாதானத்தைக் கொடுக்கிறது என்பதை உளவியலாகவும் சொல்லியிருப்பார்.

  அதுவும் நினைவுக்கு வந்தது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. // இமயமலைக்குப் போய்க் கம்பளிப் போர்வையைச் சுற்றிக்கொண்டு கைலாய நாதரை வேடிக்கை பார்த்தது. காசிக்குப் போய் விசுவநாதரை விசாரித்தது. கன்னியாகுமரிக்குச் சென்று அம்மனைப் பேட்டி கண்டது. கடைசி கடைசியாக ராமேசுவரத்துக்கு வந்திருக்கிறது.
   தமக்குள்ளே உள்ள நாதனிடம், தாம் நம்பிகை வைப்பதுபோல், மற்ற மனிதர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மற்ற நாதர்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.//

   //நாதன் உள் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நாதனைத் தம்மைத் தவிர வேறு யாருமே நம்பவில்லையே? தம்மை நம்பியவர்கள் தம்முடைய பணத்துக்காக, மருந்துக்காக, தம்முடைய உடைமைகளுக்காக நம்பினார்கள். ஆனால் அந்தப் பெண்ணின் கண்ணீர் வெறும் நம்பிக்கையால் துடைக்கப்பட்டுவிட்டதே!

   நம்பிக்கை….///

   ///அவருடைய கண்ணீர் கரை புரண்டு வடிந்தது. “கடவுளே! அந்த ஏழைப் பெண்ணுக்கு ஓர் குழந்தையைக் கொடு! அவளுடைய துன்பத்தைப் போக்கு!” என்று தமக்குள்ளே கதறினார்//

   //இரவெல்லாம் பக்திப் பெருக்கு அவரை ஆட்டிவைத்து விளையாட்டுப் பார்த்தது.//

   //என்ன திருவிளையாடல் இது! அவர் உட்கார்ந்திருந்த அதே பெட்டியில் அவருடைய பலகைக்கு எதிரில் வந்து உட்கார்ந்தார்கள் அந்தத் தம்பதிகள். பேரின்பநாயகம் அவர்களைப் பார்த்துச் சிரித்துவிட்டு, தாமே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.

   பேச்சு அவரை அறியாமலே வெளிப்பட்டதென்று சொல்லலாம//

   ஆம் ஒரு திருவிளயாடலே இந்தக் கதை   நீக்கு
 10. பொதுவாக நான் இறைவனை மாபெரும் அரூப சக்தியாகத்தான் பார்க்கிறேன். கோயிலுக்குச் சென்றாலும் கூட. விரதம், வேண்டுதல்கள், அர்ச்சனை, வழிபாடுகள் என்று எதுவும் செய்வதில்லை. ஆஞ்சு பிடிக்கும் பிள்ளையார் தோஸ்த் என்று நான் சொல்வதுண்டு ஆனால் சக்தியாகத்தான் மனதில்...இப்படித்தான் அந்த சக்தியை வழிபட வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்வதில்லை....அரூப சக்தியாகப் பார்க்கும் போது மத பேதம், கொள்கை வேறுபாடுகள் வருவதில்லை என்பது என் தனிப்பட்டக் கருத்து. ஆனால் பிறர் வழிபாடுகளைக் குறையாகப் பார்ப்பதுமில்லை. அவரவர் வழி. எந்த வழியிலும் அந்த சக்தியைப் போற்றலாம் வழிபடலாம், துதிக்கலாம். கடலை அடைய பல நதிகள் ஒவ்வொரு விதத்திலும் வந்து அடைகின்றன...நாம் கங்கை, காவிரி, யமுனை என்று சில நதிகளை மட்டும்தான் புனிதம் என்று போற்றுகிறோம்... பிற நதிகள்சிறிய நதிகள் எல்லாமே புனிதமானவைதான்....எல்லாமே கடலைத்தான் சென்றடைகின்றன. அது போலத்தான் மனிதர்களும்.
  நம் மனம் ஈகோ இல்லாத நல்லதாக வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சிதான். ஒரே மதத்தில், ஒரே குறிப்பிட்ட சமூகத்தில், மற்றவரின் வழிபாடுகளை, தத்துவங்களை குறையாகப் பார்ப்பதும் ஈகோதான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​பரமஹம்சரின் மொழிகளை ​மேற்கோள் காட்டியது சிறப்பு (நதிகள் உதாரணம்) இறைவனை எப்படித் தொழுதால் என்ன. 'மதம் ஏதாயாலும் மனுஷ்யன் நன்னாயால் மதி" நாராயண குரு.

   நீக்கு
  2. வைகையும் யமுனையும் கடலின் சங்கமிப்பதில்லையே கீதா ரங்கன்(க்கா). வெளிநாடுகளில் பல நதிகள் அப்படித்தானே

   நீக்கு
 11. உதவும் கரங்கள் அனைவரையும் வாழ்த்துவோம்.

  கதை இப்பொழுதுதான் படிக்கிறேன். பக்தியும் நம்பிக்கையும் பற்றி நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 12. அகிலன் கதைகளையும் நாவல்களையும் தேடித் தேடிப் படித்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இதைப் படித்ததாக நினைவில் இல்லை. நல்ல உள்ளார்ந்த பொருளுடன் கூடிய கதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நல்ல செய்திகளுக்குக் காரணம் ஆன அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள். காகம் என்பதால் அலட்சியமாய் விடாமல் காப்பாற்றியவர்களுக்கு நன்றி. முகநூலில் தோழிகள் இருவர் மொட்டை மாடியில் நடக்கும்போது இந்த மாஞ்சாக்கயிறு கழுத்தில் மாட்டிக் கொண்டு தவித்ததைப் பற்றிச் சொன்னார்கள். நல்லவேளையாய் இருவர் உயிரும் காப்பாற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!