சனி, 17 ஜூன், 2023

அஞ்சாத அதிகாரி.. மற்றும் நான் படிச்ச கதை

 

இது மாதிரி மாட்டிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்கிற பயிற்சி  இல்லாமலேயே வாழும் உந்துதலில் தைரியமாக இருந்தவர்களை பாராட்ட வேண்டும்.


இது மாதிரி பல இடங்களில் நடந்தாலும் அவை அவர்களது உயர் அதிகாரிகளால் இதுவரை கண்டு கொல்லபபடவில்லை என்பது நாம் அறிந்தது.  நடவடிக்கை எடுக்கபப்டுவது இது முதல்முறை.

அதன் தொடர்ச்சியாக இதுவும்.


அஞ்சாத அதிகாரி..





 ==============================================================================================================================

நான் படிச்ச கதை (JKC)



இன்றைய பதிவு பா செயப்பிரகாசம் எழுதிய “தாலியில் பூச்சூடியவர்கள்” என்ற கதையைப் பற்றியது. இந்தக் கதையை இப்பகுதியில் உட்படுத்த வெகு நாட்களாக முயன்றும் தற்போது தான் முடிந்தது. அதற்குக் காரணங்கள் பல.

1. கதை நீளமானது. 2. கதை, கதை வடிவத்தில் இல்லை. 3. எ பி வாசகர்களுக்குப் பிடிக்காது.

ஆகவே முழுக்கதையும் பதிவில் உட்படுத்தவில்லை. சுட்டி தரப்பட்டுள்ளது. விரும்புவோர் சுட்டியில் சென்று வாசிக்கலாம்.

கதைச் சுருக்கம்

நகரங்களில் இருந்து மறைந்தாலும் சிலஜாதிப் பாகுபாடும் தீண்டாமையும் கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களில் தீவிரமாக உள்ள காலம். அதுவும் தென் தமிழ்நாட்டில் மிகவும் கொடுமை. அப்படிப்பட்ட ஒரு கிராமம் (ஆசிரியர் கிராமத்துப் பெயரை தவிர்க்கிறார்). நிலங்கள் எல்லாம் ரெட்டி என்ற மேல்ஜாதியினருக்கு உரியது. பள்ளன், பறையன், ஒட்டன் போன்றவர்கள் அவர்களுக்குக் கிட்டத்தட்ட அடிமைகளாய் உழைக்க வேண்டும். அந்த கிராமத்திற்கு தைலி என்ற பள்ளப்பெண் மாடசாமி என்ற பள்ளனுக்கு வாழ்க்கைப் பட்டு ஊருக்கு புதியவளாய் வருகிறாள். வந்த இடத்தில் கீழ்ஜாதியினருக்கான ஊர் கட்டுப்பாடுகள் அவளுக்கு புதிதாகவும் புரியாமலும் இருக்கின்றன.

சிறிது சிறிதாக ஊரின் சட்ட திட்டங்களைக் கற்கிறாள். கூந்தலை அள்ளி முடிக்கக் கூடாது. தலையில் பூ வைக்கக் கூடாது. வேண்டுமென்றால் தாலியில் பூ வைத்துக் கொள்ளலாம். எங்கும் எதிலும் மேல்சாதியினருக்கே முதல் உரிமை. பொது கண்மாயில் தண்ணீர் எடுக்கக்கூடாது. குடத்தை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். யாராவது மேல்ஜாதியினர் மனம் இரங்கி ஒரு வாளி தண்ணீர் தந்தால் பாக்கியம். மேல்ஜாதியினர் வசிக்கும் தெரு வழியே செல்லக்கூடாது. ஊரைச் சுற்றிக் கொண்டு செல்லவேண்டும். செருப்பு போடக்கூடாது. செருப்பில்லாமல் ரோட்டின் ஓரத்தில் கல், முட்கள் இருந்தாலும், வெயில் உறைத்தாலும் வெறும் காலுடன் தான் நடக்க வேண்டும். ரெட்டிமார்களை முதலாளி என்றே அழைக்க வேண்டும். மளிகைக் கடைக்காரரைப் போல் அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை அப்புச்சி என்றே விளிக்க வேண்டும். கடையில் கடைசியாகவே பொருட்கள் இவர்களுக்கு வழங்கப்படும் .

அந்த ஊரின் தலைமைப் பொறுப்பு சில மேல்ஜாதிக்காரர் அடங்கிய சபைக்கு இருந்தது. ஊர் செல்வந்தர்களுக்கு ஒரு இடர். ஊர்க்காலியாக மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கொண்டு வர ஆள் இல்லை. இந்த மேய்ச்சல் என்பது கீழ் ஜாதியினர் யாராவது ஊர்குற்றம் புரிந்தால் தரப்படும் தண்டனை. இத்தண்டனைக்கு உள்ளூர் காரர் யாரும் இது வரை அகப்படவில்லை. மேய்ச்சல் இல்லாமல் பசுக்கள் தரும் பாலின் அளவு குறைந்தது. காளைகளுக்கு திறன் குறைந்தது. ஆகவே அவர்கள் ஊர்க்காலியாக யாராவது அகப்படுவார்களா என்று தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஊர் இளவட்டங்களுக்கு தைலியின் மீது ஒரு கண். குறிப்பாக வடரெட்டிக்கு. அவனுடைய பெண்சாதி தும்மக்கா. அவளுக்கு என்று சொந்த நில புலன்கள் இருந்தன அதில் இருந்து வரும் தானியம் மற்றும் பருத்தி ஆகியவற்றை புருசன் போலும் எடுக்கச் சம்மதிக்க மாட்டாள். ஆனாலும் வடரெட்டி அவ்வப்போது கொஞ்சம் எடுத்து பள்ளச்சி பறச்சிகளுக்கு கொடுத்து வசப்படுத்தி விடுவான். தும்மக்கா வடரெட்டியின் இந்தப் போக்கை நிறுத்த வழி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊரில் உள்ள ரெட்டிப் பெண்களுக்கும் தைலியை சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம் அவளுடைய வசீகரம், துணிச்சல், அடங்காத தன்மை, மற்றும் திறமை. அவள் திமிர் பிடித்தவள் என்று கருதினார்கள். ஊர் ஆண்கள் அவள் பின்னால் சுற்றுவதையும் அவர்கள் விரும்பவில்லை. ஆகவே அவளை ஊர்காலியாக்க ஒரு சந்தர்ப்பத்தை நோக்கி இருந்தார்கள்.

இப்படி இவர்கள் எல்லோரும் சேர்ந்து வேற்றூர்க்காரி தைலியை தவறிழைக்க வைத்து ஊர்க்காலியாக்கி மாடு மேய்க்கும் தண்டனை தருவதே கதை.

இந்தக் கதையை ஆசிரியர் கதையாக எழுதவில்லை. ஒரு powerpoint presentation போல் தருகிறார். கதை ஸ்லைடுகளூடே பின்னி நூல் போல் செல்கிறது. முழு presentation முடிந்து lights இடும்போது நமக்கும் மூளையில் ஒரு பல்ப் எரிகிறது. மேல்ஜாதிக்காரர்களின் சாணக்கியத்தனமான சூழ்ச்சி புரிகிறது.

இனி ஒவ்வொரு slide ஆகப் பார்ப்போம்.

முதல் ஸ்லைடு-

இந்த ஸ்லைடில் ஒரு வீடியோ, ஆசிரியரின் விவரணம், தாலியில் பூச்சூடியவர்கள் என்ற தலைப்பின் காரணம் முதலியவை விளக்கப்படுகின்றது. தைலி பள்ளர் தெய்வமான கருப்பசாமியின் ஆண்டு திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து சாமியாடுகிறாள்.

ஒரு பெண் அக்னிச்சட்டி எடுப்பது முதல் முறை. அக்கினிச் சட்டியை மேலே தூக்கி வீசி ஆடுகிறாள். ஒரு சிவப்பு மலரை, நட்சத்திரங்களுக்குள்ள ஆகாயத்தை நோக்கி வீசியெறிவது போல், சுழலும் தீப்பந்துகளுடன் அக்கினிச்சட்டி ஒரு கையிலிருந்து, இன்னொரு கைக்குத் தாவுகிறது.

கையில் வேப்பங்குழை இல்லாமல், வெறுஞ்சட்டியுடன் செம்பந்துகள் போல் அக்கினிக் கொழுந்துகள் சுழல, ஆடுகிற பெண்ணை பெண்டுகள் பிரமிப்புடன் பார்த்தார்கள்.

பள்ளத் தெருவைக் கடந்து சாமியாட்டம் ஊருக்குள் வந்தபோது, கணுக்கை முதல் தோள்வரை பச்சை குத்திய சதைப்பிடிப்புள்ள கைகளில் ரெட்டி வீட்டு இளவட்டங்களின் பார்வைகள் அமர்ந்திருந்தன. கைகளை உயரத்தூக்கி அக்கினிச் சட்டியை மாற்றி ஆடுகையில் அவர்களின் பார்வைகள் சாமியாடியின் மார்புப் புறங்களிலேயே நின்றன.

இரண்டாம் ஸ்லைடு-

தும்மக்காவும் வடரெட்டியும் குலுக்கை பக்கம் நின்று தகராறு செய்யும் வீடியோ

குலுக்கை நிறைய தவசம் (தானியம்) தளும்பியது. அது முழுதும் அவளுக்குரியது. ஒரு கையை இடுப்பில் ஊன்றி, இன்னொரு கையை குலுக்கை மேல் வைத்து, சாய்ந்து நின்றபடி தும்மக்கா கேட்டாள். “நீ எங்கே கொண்டுபோறேன்னு தெரியும். ஊரிலே இருக்கிற பள்ளச்சிக்கும் பறைச்சிக்கும் கொட்டிக் கொடுக்கிறதுக்காக நான் சேத்து வைக்கலே.”

புருஷனைத்தான் கேட்டாள். பேச்சில், அலட்சிய பாவம் தெறித்தது. புருஷனை எரித்துவிடுவதுபோல் பார்த்தபடி கேட்டாள். “எஞ் சொத்தையெல்லாம் மொங்கான் (கொள்ளை) அடிச்சிட்டுப் போகலாம்ணு பாக்கிறீயா?”

புருஷனுடன் வாழ்கிறபோதும் அவளுடைய சொத்து தனியாக இருந்தது. அதன் இயக்கம் தனியாக நடந்துவந்தது. அது தன் இனவிருத்தியைப் பெருக்கியது. கழுத்தில் ஒவ்வொரு வருஷமும், ஒரு ‘செயின்’ கூடிக்கொண்டு போனது. ‘செயின்காரி’ என்றுதான் ஊர்க்காரர்கள் பெயர் வைத்தார்கள். ‘செயின்காரி’ புருஷன் ‘வடரெட்டி’ என்றுதான் அவனுக்குப் பெயர் வந்தது.

மூன்றாம் ஸ்லைடு

சாயந்திரம் தைலி ராஜாமணியின் மளிகைக் கடையில் வெகு நேரமாக காத்திருக்க அவன் அவளுக்குப் பின் வந்த, வந்துகொண்டிருக்கிற ரெட்டிப் பெண்களுக்கு கொடுப்பதில் கவனம் செலுத்துகிறான் தவிர இவளைத் திரும்பிப் பார்க்கவில்லை. வடரெட்டி அங்கு கடையில் உட்கார்ந்திருக்கிறான். இது வீடியோ.

கடைக்காரன் ராஜாமணி, எதுவும் அறியாத பாவனையில் கேட்டான். “ஒனக்கு என்ன வேணும்?”

“மாகாணிப்படி தவசத்துக்கு பொரிகடலையும், அரைவீசத்துக்கு புளி, மிளகாயும் கொடுங்க அப்புச்சி” - இது நான்காவது தடவையாகச் சொல்கிறாள்.

“வீட்டில் வேலை இருக்கா?” அர்த்த சேஷ்டையுள்ள குரலில் ராஜாமணி கேட்டான். கண்களில் விஷமம் பொங்கியது.

கொச்சையான வார்த்தைகளும், பெண் பாவனைகளும் கடைக்காரன் ராஜாமணிக்குக் கை வந்தவை.

வடரெட்டி சரியான இடத்தில் உட்கார்ந்திருக்கிறான். சாமான் வாங்குகிறபோதும், எடுக்கிறபோதும் கை அவன்மேல் படுகிறது. கைகள் அவன் தலைக்குமேலேயே போய் வர வேண்டியிருக்கிறது.

வடரெட்டி, கூர்மையாய் தைலிமேல் பார்வையைப் பதித்துக் கொண்டே ராஜாமணியிடம் சொன்னான். “அந்த கொட்டானிலே அரைப்படி புல்லுக்கு (கம்பு) சீனி மிட்டாய் போடு. நம்ம கணக்கிலேயே போடு”

தைலியின் நார்க்கொட்டான் நிறைய சீனிமிட்டாய் விழுந்தது.

தைலி கூனிக்குறுகினாள் பயத்துடன்.

தைலியின் குரல் நடுங்கியது. “வேண்டாங்க முதலாளி.”

“வாங்கிட்டா என்ன? முதலாளி கொடுத்ததை வாங்கிட்டா வாந்தி வருமா?” - ராஜாமணிதான் பேசினான். மெதுவான, கைவசப்படுத்தும் குரல் வடரெட்டியிடமிருந்து வந்தது. “இங்கே யாரும் அந்நியங்க இல்லை.” அவன் பார்வையைக் கண்டுகொள்ள முடிந்தது. பயத்தில் தைலியின் உடல் நடுங்கியது. நாக்கு குழறி, வார்த்தைகள் சிதற, ராஜாமணியிடம் சொன்னாள். “இது நல்லால்லே, அப்புச்சி.”

அவள் விட்டுச்சென்ற நார்க்கொட்டானும் சாமான்களும் அப்படியே கிடந்தன. போகையில் இரு நீர்த்துளிகள் கண்ணில் பளிச்சிட்டன.

நான்காவது ஸ்லைட்

இந்த ஸ்லைடில் இரண்டு வீடியோ.

தைலி ரோட்டில் நடந்து போகும்போது பொறுக்கமாட்டாத ரெட்டி பெண்கள் வம்பிழுக்கிறார்கள்.

ஊருக்குப் புதிதாய் வந்த ஒரு பள்ளச்சி எதிர்த்துப் பேசுகிறாள். ரெட்டிவீட்டுப் பெண்க்ள் கோபத்துடன் அவள் போன திக்கையே பார்த்தார்கள்.

“இவ ஊர்க்காலி மாடு மேய்க்கப் போவா, ஊர்க்காலி மாடு மேய்க்கப் போகாம இவ திமிர் அடங்காது.”

அடுத்த வீடியோ -

பள்ளத் தெருவிலுள்ள மட்டைப் பந்துக் களம், சுறுசுறுப்பாக இயங்குகிறது. பறையன், அம்பட்டன், சக்கிலியன் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த மட்டைப்பந்துக் களத்தில் இப்போது ரெட்டி வீட்டு இளவட்டங்கள் விளையாடுகிறார்கள்.

மட்டைப்பந்து அடிக்கிறபோது, பந்துகள் மாடசாமிப் பள்ளனின் குடிசை முன்னால் போய் விழுந்தன. எடுக்கிற சாக்கில் விழிப்பாய்ச்சல்கள் உள்ளே போய் வந்தன.

கரிசல்மண் தீரத்தில், அதன் நிறத்திலேயே உள்ள ஒரு பெண்ணுக்காய் ஆசை மாளிகைகளை நிறுவிக் காத்திருந்தார்கள். நாணத்தில் தீப்பிடிக்கும் கன்னங்கள், கறுப்பிலும் தீப்பிடித்தது. உயர்ந்து வளர்ந்த கறுப்பு உடல், எல்லாத் திசைகளிலும், காம புஷ்பங்களைக் கொட்டியது.

அன்றிலிருந்து, ஊரிலுள்ள கல்யாணமான, ஆகாத எல்லாப் பெண்களுக்கும் தைலி என்ற பொது எதிரி உருவானாள்.

ஐந்தாவது ஸ்லைட் -

வீடியோ: நிலா இரவில் “தவிட்டுக் குஞ்சு” விளையாடுகிறார்கள். ஒளிவதற்கு சந்துகளும் வாசற்படியும் இல்லாத பள்ளக்குடியில் விளையாடுகிறார்கள். ரெட்டிவீட்டு இளவட்டங்களின் நிலாக்கால முற்றுகை இப்படி ஆரம்பமாகியிருக்கிறது.

பகலில் அந்தக் குடிசை ஓய்ந்து கிடந்தது. இரவானால் சண்டையும் கூச்சலும் நிறைந்தது. பகலின் அதன் அமைதி, இரவு நேர சண்டைக்கான கருவை தனக்குள் ஏந்தியிருப்பதுபோல் தோன்றியது.

இரவுநேரத்தில், குடிசைக்கு வெளியே, மாடசாமி பள்ளனின் காவல் தவம் வழக்கமாகியது. கனவுகளைக் கலைப்பதற்கு இடியோசை தேவையில்லை. காலடியோசை கேட்டாலே அவன் கனவுகள் கலைந்துவிடும். சில நேரங்களில் மிருகங்களின் காலடியோசையாகக் கூட அது இருந்தது. அப்போதும் அவன் விழித்துக் கொள்வான்.

ஆறாவது ஸ்லைட் -

இதில் வீடியோ என்று சொல்லும்படி இல்லை.

கோடை காலத்தில் ஊரில் வேலையில்லாமல் எல்லோரும் சோம்பிப் போய் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆம்பிளைகள் பொரணிமடத்தில் பதினெட்டாம் தாயம் விளையாடுகிறார்கள். பெண்கள் பகலில் வீட்டுக்கு வீடு சண்டை இழுப்பதும் சாயந்தர நேரத்தில் முற்றத்தில் ‘தட்டாங்கல்’ ஆடுவதும் நடக்கிறது. இது மகசூல் முடிந்து, வெள்ளாமை வீட்டுக்கு வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. அக்னி நட்சத்திரங்கள் வெடிக்கும் கோடைக்கால அறிகுறியைச் சொல்லுகிறது.

அப்போதுதான்

”முதலாளி வீட்டுக்குக் கம்மம்புல் குத்திக் கொடுக்க வர்றியா?”

‘சரி, சாமி”

அது தைலி வடரெட்டியைப் பார்த்துச் சொன்ன பதிலாக இருந்தது. ராஜாமணிதான் கேட்டான். ஆனால் தைலியின் பதில் கடைப்பலகை ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் வடரெட்டியை நோக்கிப் போனது.

”எவ்வள்வு கேக்கறே?” வடரெட்டி கேட்டான்.

“ஊம் எவ்வளவுன்னு கேட்கணும்? முதலாளி கொடுக்கிறதே, முந்தானை கொள்ளாது. கொடுக்கிறத கொடுத்தா வாங்கறவங்க வாங்கிட்டுப் போறாங்க” - பெண் பாவனையில் கழுத்தை வெட்டி நளினமுடன் வார்த்தைகளை நீட்டி நீட்டிச் சொன்னான் ராஜாமணி.

”புருஷன்கிட்டே கேக்கணுமா?”

“ஆமா புருஷன்கிட்டே கேப்பாக. புருஷன் பொடவைக்குள்ளே. பொடவைக்குள்ளே இருக்கிற புருஷனை எதுக்குக் கேட்கணும், பெண்டாட்டி சொல்றதெ எந்த வீட்டிலே புருஷன் தட்டியிருக்கான்?” - சட்டை போடாத மேல் உடம்பில் துண்டை மாராப்புப் போல் போட்டுக்கொண்டு ராஜாமணிநிலாக்கதிர்கள் குடிசை உள்ளில் பாய்ந்தபோது, தைலியின் கனிந்த பார்வைகள் பள்ளன்மீது விழுந்தன. கறுத்து விரிந்த பள்ளனின் மார்பில் கை அலைந்தபடி, அவள் பேசினாள்.

பள்ளன் அடித்தொண்டையிலிருந்து குரல் வந்தது “என்ன!”

“மேல் வீட்டு முதலாளி வீட்டுக்கு வேலைக்கு கூப்பிட்டாங்க”

“ரெண்டு நாழி புல் கொடுக்கிறாங்க”

“ரெண்டு நாழியா”

”இந்தக் காலத்திலே இப்படி யார் கொடுக்கிறாங்க? அப்பப்ப அங்க சாப்பாடும் கிடைக்கும்”

“சரி”

மெல்லிய சாமர வீச்சுப்போல் தைலியின் கைகள் அவன்மீது படர்ந்தன.

சலசலக்கும் ஊதற்காற்றும், குடிசை முகடு வழியே நிலவின் கத்தி வீச்சும் பள்ளனைச் சம்மதிக்க வைத்தது.

தும்மக்கா வெறிபிடித்தவளாய் கத்தினாள். “நீ முதல்லே வீட்டை விட்டு வெளியே போ”

“நீ யாருடி என்னைப் போகச் சொல்றதுக்கு”

“நீயும் ஒம் பிள்ளைகளும் யாரு சொத்திலே உக்காந்திட்டுத் திங்கறீஙளோ, அவ”

ஊரின் மேல்கோடியில் ஒரு புயல் நடந்தது. சண்டையும் சத்தமும் மேலத் தெருவைக் கடந்து, ஊர் மடத்தை எட்டின. மடத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை, விழித்து உட்கார வைத்தன. தும்மக்கா வெறிபிடித்தவளாய் கத்தினாள். “நீ முதல்லே வீட்டை விட்டு வெளியே போ” “நீ யாருடி என்னைப் போகச் சொல்றதுக்கு” “நீயும் ஒம் பிள்ளைகளும் யாரு சொத்திலே உக்காந்திட்டுத் திங்கறீஙளோ, அவ”

வடரெட்டி பேசினான். “கூலி பேசியாச்சு. இனிமே வேண்டாம்னு சொல்ல முடியாது”.

‘அவ வந்திருவாளா? காலை ‘சடக்’னு ஒடிச்சு குழியிலே வைக்கலே, நானில்லே”

வடரெட்டியின் திடமான முகமே பதிலாக இருந்தது துண்டைத் தோளில் போட்டுகொண்டு, வெளித்திண்ணையை நோக்கி நடந்தான்.

அவளுடைய சண்டை தோற்றுப் போனது. அவளுக்குச் சொந்தமான புல்லும் பருத்தியும் வீட்டில் இருக்கையில், தோற்றுப்போவதைத் தவிர வேறுவழியில்லை. தாய் வீட்டுக்குப் போனால் எல்லாம் காலியாகிவிடும். பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. இங்கேயிருந்து உள் சண்டை போட்டுக் கொண்டாவது அவளுக்குச் சொந்தமானவைகளைக் காப்பாற்ற முடியும்

ஏழாவது ஸ்லைட்

”ஸ்சோ, ஸ்சோ” என்ற சத்தம் தாள லயத்துடன் விழுகையில், உலக்கை மேலும் கீழும் போய்வருகிறது. தைலி உலக்கை போடுகிறாள். பக்கத்தில், வண்டியில் மேக்கால் மீது வடரெட்டி உட்கார்ந்திருக்கிறான். அந்தப் பெரிய தொழுவம் வேப்பமர அசைவையும், உலக்கையின் சீரான ஓசையையும் தவிர, மௌனம் சுமந்திருக்கிறது. இது வீடியோ.

ஓரச் சாய்ப்புள்ள் பார்வைகளை, அவன்மீது போட்டபடி தைலி கேட்கிறாள்.

“எனக்கு ஒரு ஆசை உண்டு”

“என்ன?”

ஈரக்காற்று போல் துவண்ட மெல்லிய குரலில் தைலி சொல்கிறாள்.

“ஊரைச் சுத்தியே தண்ணிக்குப் போக வேண்டியிருக்கு கொதிக்கிற வெய்யில்லே”

“சரி”

“நேரே போனா என்ன?”

“ஊர் வழியாவா?”

“ம்”

அவன் முகம் சிந்தனையில் ஆழ்ந்தது. பதில் இல்லை.

“முதலாளி வீட்டுக்குத்தானே, தண்ணிக்குப் போறேன். எங்க வீட்டுக்கா போறேன்”

“ஆனா ஊரிலே சொல்லுவாங்க”

அவனுடைய தயக்கத்தை உடைப்பதுபோல், தைலி ஏறெடுத்துப் பார்த்தாள். எல்லாவற்றையும் எதிர்த்து உடைப்பதுபோல். தீர்க்கமான முடிவுகளும் எதற்கும் அஞ்சாத துணிவும் தென்பட்டது. எடுப்பான குரல் வந்தது.

”அங்கங்கே என்னென்னவோ செய்யறாங்க. எவ்வளவு தூரம் சுத்திப் போக வேண்டிருக்கு. அதுவும் கொதிக்கிற வெயிலில். காலிலே செருப்புக்கூட இல்லாம”

தரையைப் பார்த்துக்கொண்டு சிந்தனையில் மூழ்கியிருந்த வடரெட்டி, நிமிர்ந்து ஏறிட்டுப் பார்த்தான். அவள் விழிகளைச் சந்தித்துக்கொண்டே தயங்கிய குரலில் சொன்னான். “சரி, போய்ட்டு வா.”

எட்டாவது ஸ்லைடு -

முதன்முதலாய் ஒரு பள்ளச்சி, வீதி வழியே தண்ணீர் எடுத்துப் போவதை அவர்கள் கண்டார்கள். அதுவும் காலில் செருப்புடன் நடந்தாள். இது வீடியோ 1

கம்மாய்க்கரை மேட்டில் குளிர்ந்த காற்றில் கண் அயர்ந்தவர்கள் முழங்கையை ஊன்றியபடி தலையை மட்டும் உயர்த்தி நோக்கினார்கள்.

பள்ளக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் ஊர் வழியே போகிறாள். வீதி வழியே ஒரு பள்ளச்சி தண்ணீர் எடுத்துப் போவதை, தங்களின் வாழ்காலத்திலேயே அவர்கள் பார்க்க வேண்டி வந்தது.

வீடியோ 2. அந்தச் சின்ன சபை, வேப்பமரத்தின் கீழ் பொதுமேடையில் கூடியிருந்தது. ஒட்டுக்கல்லில் சிலபேரும், கல்லுரல்கள் மேல் சிலபேரும் உட்கார்ந்திருந்தார்கள். வயசான பெரிய வீட்டு முதலாளிகள் மேடைமேல் அமர்ந்திருக்கிறார்கள்.

மொட்டை ரெட்டியார் வீட்டுத் தாழ்வாரத்தில் கூரை நிழலில் ஒரு உருவம் தெரிகிறது. அதன் விழிகளும் முகமும் கலவரப்பட்டிருக்கின்றன. வளத்தியான சிவந்த தேமலுள்ள உருவம்; அது யாரென்று எல்லோருக்கும் தெரிகிறது.

தனக்கு ஆதரவான முகத்தை அவள் தேடினாள்; முதலிலிருந்தே தனக்கு ஆதரவான அந்த விழிகளைத் தேடிக்கொண்டிருந்தாள். சுவரோரத்தில், மொட்டை ரெட்டியார் வீட்டுத் தாழ்வார நிழலில் அந்த உருவம் ஒதுங்கியபோதே, அந்த உருவம் தனக்கு ஆதரவாக வரும் என்று நினைத்தாள். தீர்ப்புச் சொல்லப்பட்டபோது, அது தனக்காக வரவில்லை. பஞ்சாயத்தின் எந்தச் சொல்லுக்கும் எதிர்ச்சொல் சொல்லாமலே, தாழ்வார நிழலிலிருந்து அது வெளியேறிப் போயிற்று.

வீடியோ 3 - 

விடியலில் நிசப்தமாக பூமி விடிந்தபோது, புளியந்தோப்பில் ஊர்க்காலி மாடுகளைப் பத்திக்கொண்டு, ஒரு பெண் போவதை எல்லோரும் பார்த்தார்கள். தோள்களில் சிதறி விழும் நீண்ட கரிய கூந்தலுள்ள உருவம் அது.

என்னுரை

இவ்வாறு எல்லோருடைய பிரச்சினையும் தீர்க்கப்பட்டது. மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போக ஒரு வெளியூர்க்காரி ஊர்க்காலியானாள். ஊரில் உள்ள ரெட்டிப் பெண்களுக்கு நிம்மதி. ஆண்கள் இனி தைலியைப் பார்க்கவோ பின்தொடரவோ மாட்டார்கள்.

தும்மக்காவிற்கு இரட்டை தீர்வு. அவளுடைய தானியம், பருத்தி எல்லாம் வடரெட்டியின் சுரண்டலிலில் இருந்து பாதுகாக்கப்பட்டன. இரண்டாவதாக வடரெட்டி இனிமேல் எந்தப் பள்ளச்சியையும் வளைக்க முடியாது.

ஆனால் பலியாடாக்கப்பட்டது தைலி மட்டும்தானா? பகல் முழுதும் வெளிவேலை பார்த்து விட்டு கிடைத்த கூலியில் தனக்கும் புருஷனுக்கும் பொங்கிப் போட்ட தைலியின் வருமானம் போன பின் மாடசாமி தற்போது வேலைக்குப் போக வேண்டுமே! அவனுக்கும் தான் பொழைப்பு பிழைப்பாகி விட்டது.

ஆசிரியர் ஒரு நாவல் என்று தொடங்கி சிறுகதையாக்கி முடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதனால் தான் அத்தியாயம் 1 அத்தியாயம் 2 என்ற முறையில் ஒரு சீரான ஒழுக்கில்லாமல் இடையில் சில வழி மாறுதல்களுடன் கதையை நகர்த்துகிறார். இதைத்தான் நான் powerpoint போல் இருக்கிறது என்று விளக்கியுள்ளேன். விளக்கம் தவறாகவும் இருக்கலாம்.

எஸ்ரா 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இந்தக் கதையையும் தேர்ந்திருக்கிறார். ஆனால் ஜெயமோகன் “என் பார்வையில் மிகச்செயற்கையான, மிகமிக மேலோட்டமான முதிரா எழுத்துக்கள் பா.செயப்பிரகாசம் எழுதியவை.” என்று சாடுகிறார். இலக்கியத்தரம் இல்லாதவை அவருடைய எழுத்துக்கள் என்றும் கூறுகிறார்.

கடைசியாக ஒரு confession. தைலி அக்னிச்சட்டி எடுத்து ஆடுவதைப் படித்தபோது மனத்திரையில் சிலுக்கு அக்னிச்சட்டி எடுத்து ஆடுவதுபோல் ஒரு கற்பனைக் கண்ணோட்டம்.

கதையின் சுட்டிகள்





ஆசிரியர் பற்றிய விவரங்கள் சுட்டி.   JKC ஸார் இப்போது பின்னூட்டத்தில் கொடுத்துள்ள சுட்டி...   இங்கே சொடுக்கவும்.


பா. செயப்பிரகாசம் (1941 – அக்டோபர் 23, 2022) தமிழ் சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், தொகுப்பாசிரியர், கவிஞர். கரிசல் மண்ணின் வாழ்வியலையும் அரசியல், சமூக கருத்துக்களையும் வெளிப்படுத்தும் கதைகளை எழுதினார். 'ஒரு ஜெருசலேம்', 'காடு' ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. பொறுப்பாசிரியராக இருந்து 'மனஓசை' இதழை நடத்தினார். சூரியதீபன் என்னும் புனைபெயரில் கட்டுரைகளும், கவிதைகளும் எழுதினார். 1965-ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற மாணவர் அணித் தலைவர்களுள் ஒருவர். தமிழக அரசின் செய்தித்துறையின் இணை இயக்குனராகப் பணியாற்றினார்.

14 கருத்துகள்:

  1. ஆசிரியர் பற்றிய சுய விவரங்கள் சுட்டி தவறாக உள்ளது. சுட்டி


    https://www.jeyapirakasam.com/2019/02/blog-post.html



    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் அங்கு இருக்கும் சுட்டியும் அவரைப்பற்றிய விசாரங்களைக் கொடுக்கிறது.  எனினும்  நீங்கள் கொடுத்துள்ள சுட்டியையும் இணைத்து விட்டேன்.

      நீக்கு
  2. காட்டில் நாற்பது நாட்கள் இலை தளைகளை உண்டு வாழ்ந்து தப்பிய குழந்தைகள் நெஞ்சைதொட்டனர்.

    நீண்ட கதை என்பதில் கதைச்சுருக்கமே நீண்டதாகத்தான் உள்ளது.
    கிராமங்களில் கீழ்சாதி மக்கள் படும் அவலம் எடுத்துக் காட்டப்படுகிறது.
    ஜெயமோகன் பார்வையையும் படித்தோம்.

    பதிலளிநீக்கு
  3. ஆற்று மணல் அள்ளுவதே தப்பு. இதில் அளவுக்கு மீறி ன்னு வேற..

    விமானவிபத்தில் தப்பித்த குழந்தைகள் அதிர்ச்சி மற்றும் வியப்பாகவும் இருக்கிறது அதுவும் காட்டிற்குள் கிடைக்கும் தாவரங்கள் விதைகள் என்று எப்படித் தெரிந்துகொண்டு...இது வியப்பான அதே சமயம் ஏதோ ஒரு செய்தி சொல்வது போன்றும் இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. ஓசியில் ஜூஸ் நடவடிக்கை சூப்பர். தொடர வேண்டும்.

    ஓசியில் பயணம் - டிஜிபி விடுத்திருக்கும் எச்சரிக்கை பாராட்டத்தக்கது.

    மணல் கொள்ளையைத் தைரியமாகக் கேஸ் பதிவு செய்த போலீசுக்குப்பாராட்டுகள்.

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடி மாணவிக்கும், எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட பெண்ணிற்கும் வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கதை நன்றாகத்தான் இருக்கிறது. அதை இலக்கியமில்லை என்று சொல்லமுடியாது. ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் வெவ்வேறு சமயங்களில் தினங்களில் நேர்ந்ததாகச் சம்பவங்களை காட்சிகளாக ஆசிரியர் விவரித்திருக்கிறார். இதுவும் நன்றாகத்தான் இருந்தாலும், அன்று நேற்று, வேறொரு தினம் என்று பொருத்தமான வரிகள் சேர்த்து காட்சிகளை வரிகளால் தொடர்புபடுத்தியிருக்கலாம் என்று தோன்றியது.

    தைலி பாவம்...ஜெ கே அண்ணா சொல்லியிருபப்து போல் சூட்சியில் மாட்டிக் கொள்கிறாள்

    கூடவே வேறொன்றும் தோன்றியது. தைலிக்குத் தங்கள் சமுதாயம் இப்படிப் பார்க்கப்படுகிறது என்பது அவள் இருந்த அதாவது திருமணத்திற்கு முன்பு இருந்த கிராமத்தில் அவளுக்கு அனுபவம் இல்லையோ....அப்படி என்றால் அவள் இருந்த கிராமத்தில் இப்படியான பார்வைகள் இல்லை போலும்....அதைக் கொஞ்சம் கோடிட்டுக் காட்டியிருக்கலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஜெ கே அண்ணாவின் விவரிப்பை ரசித்தேன் அதுவும் காட்சிகளை குறும்படம் போலச் சொல்லியிருப்பது..நல்ல கற்பனை, அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. வழக்கமாக பாசிட்டிவ் செய்திகளுக்கு கருத்துக் கூறுபவர்கள் போலும் இன்று கதையை நிராரித்ததால் பின்னூட்டம் இடவில்லை என்று தோண்றுகிறது. இது எதிர்பார்த்ததே. கதையைப் பற்றி கருத்துக் கூறிய இருவருக்கு நன்றி.

    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வளவு குறைவான கமெண்ட்ஸ் வருவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.  வெய்யில் காலம் என்னைப்போலவே எல்லோரையும் படுத்துகிறது போலும்!  வல்லிம்மா இப்போதெல்லாம் வருவதே இல்லை.  கோமதி அக்காவுக்கு உடல்நிலை சரி இல்லை.  கீதா அக்காவும் அப்படியே.  பானு அக்கா நினைத்தபோது வருவார்.  ரெகுலராக எதிர்பார்க்க முடியாது.  ஏனோ அதிராவை இன்னும் காணோம்.  தேவகோட்டைஜி மறந்து விட்டார் போலும்.  வெங்கட்டையும் ரெகுலராக எதிர்பார்க்க முடியாது.  துரை அண்ணா உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்.. அல்லது அவர் சனிக்கிழமை பதிவுகளை அவ்வளவாக வருவதில்லை.  நெல்லை வெளியூரா?  தெரியவில்லை.  கமலா அக்காவுக்கு உறவினர் வருகை, அல்லது உடல்நிலை.  தாமதமாக வரக்கூடும்.

      ஆக, 

      இந்த சனிக்கிழமை இப்படிப் போயிற்று!

      நீக்கு
    2. //கதையை நிராகரித்ததால்// - நல்ல கற்பனை.

      பாசிடிவ் செய்திகள் ஓகே. (இன்று அமாவாசை நினைவிருக்கிறதா?)

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் படிக்கிறேன். இன்றைய கதைப்பகிர்வும் இப்போதுதான் பதிவிலும், சுட்டியிலுமாக படித்தேன். இதை நூறு கதைளுக்குள் ஒன்றாக எப்போதோ படித்த நினைவும் வந்தது.(படிக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது)

    கதாசிரியர் இயல்பாக நல்ல மொழி ஆற்றலுடன் அப்போது அந்த காலத்தில் நடந்ததை, உள்ளதை சிறப்பாக எழுதியுள்ளார். ஆசிரியர் பற்றிய குறிப்பும் படித்தேன்.கதைப் பகிர்வுக்கும், அலசலுக்கும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

    ஒரு சந்தேகம்... இந்த தீச்சட்டி ஏந்தும் நிகழ்வு தைலிக்கு ஊர் பஞ்சாயத்து தண்டனை வழங்கப்பட்ட பின் இறைவன் மனம் பொறுக்காமல் அவள் மேல் வந்திறங்கியது போல் குறிக்கப்பட்டுள்ளதா?

    இன்று வலைப்பக்கம் வர தாமதந்தான். சகோதரர் நெல்லைத்தமிழர் சொல்லியது போல் அமாவாசை வேலைகள் குழந்தைக்கு பள்ளிக்கு தயார் செய்து அனுப்பும் வேலைகள் என காலையில் வர இயலாமல் போய் விட்டது. மதியம் கொஞ்சம் அலுப்பினால் கண்கள் என்னைக் கேட்காமலேயே மூடிக் கொண்டு விட்டது. எப்போதும் முதலில், இல்லை, நடுவிலாவது வந்து கருத்துக்களைத் தருபவள் இன்று வராமல் இருந்த பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்று விட்டது வருத்தமாக உள்ளது. :(( அதனால்தான் கதையை படித்தவுடன் வந்து கருத்தை பகிர்ந்து விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!