செவ்வாய், 27 ஜூன், 2023

சிறுகதை : உறவுமுறை - துரை செல்வராஜூ

 உறவுமுறை

துரை செல்வராஜூ 

*** *** *** ***

" யளா.. கலியாணி... எங்கே அவன்?.. ஆளக் காங்கலை!.. " 

தழைந்திருந்த பட்டுப் பாவாடையை சற்றே தூக்கிச் செருகிக் கொண்டாள் கல்யாணி.. பொன்னிறப் பாதங்களில் வெள்ளிக் கொலுசுகள் மினுமினுத்தன.. 

இதென்ன இது... இப்படியும் அழகா!..

சுற்றியிருந்த இளந்தாரிப் பெண்களுக்கு ஆச்சர்யம்...

இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நின்ற கல்யாணியும் - 
" என்னளா.. தண்டட்டி!.. " - என்றாள்..

அவளது கன்னங்களில் நாணம் குழியிட்டிருந்தது..

" இப்படியே அவனையும் இடுப்புல செருகி வைச்சுக்க.. இல்லேன்னா  கோட்டய விட்டுட்டு எங்கிட்டாவது தாண்டிக் குதிச்சிடப் போறான் கோட்டச்சாமி!.. "

அப்பத்தாளுக்கும் பேத்திக்கும் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகி விட்டது..

பெண்களிடம் சிரிப்பு அலைகள்... 

" அவரு ஒன்னும் கோட்டச்சாமி இல்லே.. "

" பின்னே என்னவாம்... "

" கோபி.. கோபி குருசரண்!.. "

" என்னது!.. கோப்பிக் கரணமா?.. நல்ல பேரா வைங்களேன்டி!... பேச்சிமுத்து.. முனியாண்டி.. இசக்கியப்பன்.. இந்த மாதிரி.. "

" இனிமே தான் அவுங்களுக்குப் பேரு வைக்கணுமாக்கும்... "

அப்பத்தாவின் பேச்சு கல்யாணியின் நெஞ்சுக்குள்  கருப்பட்டிச்  சில்லு போல இனித்தது..

" ஓ... அதனால தான் நேத்து!.. " - அப்பத்தா மர்மப் புன்னகையுடன்
ஆரம்பித்ததும் கல்யாணி ஓடி வந்து  அப்பத்தாவின் மீது சாய்ந்து கொண்டாள்..

" இதயெல்லாமா வெட்ட வெளிச்சமாக்குறது!..  பேத்திக்கு ஏதாவது நல்ல யோசனயா  சொல்லாம இப்படியா குடைச்சல் கொடுக்குறது?..  "

கல்யாணியின் விழிகள் கெஞ்சின..

அப்பத்தா சிரித்தார்கள்.. கண்களுக்குள் பாசமலராய் மகன் வழிப் பேத்தி.. 

தாத்தாவோட பெட்டிக் கடை மகன் காலத்துல மளிகைக் கடையானது.. பேரன் காலத்துல டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்.. 

அப்பத்தா பாஷையில பெரிய பலசரக்குக் கடை..  நாலு லாரி வேற  அப்பத்தா பேர்ல ஓடுது..

உழைப்பு.. நேர்மை இதைத் தவிர வேறு எதுவும் மகன் காசிலிங்கத்திற்குத் தெரியாது..

உழைப்பே உயிர் மூச்சு.. இப்போ ஊர் முழுக்கப் பேச்சு.. 

நேர்மையான வணிகத்தினால் மகன் பெரியதாக வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்திருக்கின்றான்... 
 
அந்தப் பக்கம் மெட்ராஸ்..  இந்தப் பக்கம் மதுரை, சிவகாசி விருதுநகர் .. திருநவேலி.. நாகர்கோயில்.. என்று  எல்லா  சொந்தமும்
வந்திருக்கின்றார்கள்..

கிளிக் கூட்டம் மாதிரி எல்லாரும் கூடி இருக்கிறது கண்ணுக்கு எத்தனை அழகு..

வீட்டுக்கு வீடு ஒரு பையன்..  இல்லே.. ன்னா ஒரு பொண்ணு.. ஏதோ ஒரு சில குடும்பத்தில மட்டும் ரெண்டு புள்ளைங்க.. அதுவும்
அச்சடிச்ச மாதிரி ரெண்டும் பசங்க.. இல்லேன்னா ரெண்டும் பொண்ணுங்க..

அதனால், இளவட்டங்களுக்கு ஒன்றும் புரியலை.. யாருக்கு யார் என்ன உறவு என்று!.. 

பதினைஞ்சு இருபது வருசம் ஒண்ணு கூடாம கிடந்த உறவு முறைகளின் நெஞ்சுக்குள் பொங்கி வருகின்ற ஏக்கம் கண்களில் நன்றாகவே தெரிந்தது..

" எனக்கு அண்ணனே இல்லை.. "

" எனக்கு  யார் அக்கா.. யார் தங்கச்சி.. ன்னே தெரியாது!?. "

இப்படியான எண்ணங்கள் ஒவ்வொருவரது மனதிலும்  ஓடிக் கொண்டிருந்தன..

அந்த காலச் சூழ்நிலையில் கூட்டுக் குடும்பங்களில் கைக்கு காசு பணம் முடை. என்று இருந்தாலும் - வீட்டு வாசல், வெளித் திண்ணை, உள் கூடம், சமையல் கட்டு, கொல்லைப் புறம் என்று எல்லா மூலைகளிலும்  நாத்தனாரும் கொழுந்தனும் அத்தாச்சியும் அத்தானும் மச்சானும் மச்சினச்சியும் புழங்கிக் கிடந்தார்கள்..

ஒருவரும் இல்லாப் பொழுதுகளில் ஓரமாக ஒதுங்கிக் கலந்தார்கள்.. 

பந்தியில் பசித்தால் மறு சோறு கேட்கலாம்.. அந்தியில் பசித்து முந்தியில் புசிக்கும் போது மறு சோறு கேட்கவா முடியும்.. யாரும் வந்து விடுவார்களோ என்று அச்சம் மேலிட்டு மனசு தவிக்கும்.. இப்போதைக்கு இது.. என்று விழிகள் பேசிக் கொண்டாலும்  
விடியாப் பொழுதுகளாக இரவுகள் வாய்ப்பது அரிதிலும் அரிது.. 

ஆனாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் மூன்று நான்கு பிள்ளைகள்..

கூட்டுக் குடும்பத்துக்குள் ஒருத்தருக்கு என்ன பிடிக்கும்..  என்ன பிடிக்காது.. என்ற அத்தனையும் மற்றவர்களுக்கு  அத்துப்படி.. இப்போ இந்தத் தலைமுறையில் ஒருத்தருக்கு ஒருத்தர் என்ன உறவு என்றே தெரியவில்லை..

இனிமேல் - யாரைக் கூப்பிட்டு  பந்தல் கால் நட்டு வாழைமரம் கட்டி பாக்கு வெற்றிலை கொடுக்கச் சொல்வது?..

இனிமேல் - யாரைக் கூப்பிட்டு பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து குங்குமம் சூட்டச் சொல்வது?..

இனிமேல் - யாரைக் கூப்பிட்டு தண்ணீர் வைத்து தலை வாழை இட்டு இனிப்புடன் பந்தி பரிமாறச் சொல்வது?..

பங்காளி என்றால் யார் பெரியப்பா?.. யார் சித்தப்பா?.. யாருக்கு யார் மாலை போடுவது?..

தாயாதி எங்கே என்றால் யார் மாமன்?.. யார் மைத்துனன்?..   யாருக்கு யார் தாம்பூலம் வைப்பது?..

ஒன்றும் தெரியாமல் ஒன்றும் புரியாமல் ஒரு தலைமுறை உருவாகி விட்டது.. 

குற்றம் யாருடையது?.. யாருக்கும் தெரியவில்லை..

மூன்று தலைமுறைக்கு முன்னால் முளைத்து எழுந்த குருத்துகளுக்கு உள்ளூரில் அரிச்சுவடி..  மூத்த தலைமுறை பழுத்ததும் 
குஞ்சு குளுவான்கள் அடுத்த ஊருக்குப் போய் படித்தார்கள்.. உள்ளூரில் அப்பனும் பாட்டனும் பார்த்த வேலையைப் பார்த்தார்கள்..
நிம்மதியாய் இருந்தார்கள்..

இரண்டாந் தலைமுறையில் ஊருக்குள்ளேயே இங்கிலீசையும் படித்தார்கள்..  பட்டணத்தில் உத்தியோகம்  என்று பெட்டியைக் கட்டிக் கொண்டு போனார்கள்..  வாழ்ந்த வாழ்க்கையில் ஏதோ வந்தது.. ஏதோ போனது..

மூன்றாந் தலைமுறையில் இங்கிலீசை மட்டுமே படித்தார்கள்.. ஏரோப்பிளேன் ஏறினார்கள்.. எங்கெங்கேயோ போனார்கள்..போய்க் கொண்டும் இருக்கின்றார்கள்..  எப்போது வருவார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.. நல்லதும் தெரியாது. கெட்டதும் புரியாது..

அப்படி ஏதும் இல்லாமல் பருப்பு மூட்டைகளை கணக்கு பார்த்துக் கொண்டு கையில் பேரேட்டை எடுத்தவர்கள் ஊருக்குள் காலை ஊன்றிக் கொண்டார்கள்..

சட்டென பரபரப்பு எல்லாரிடத்தும்..

" ம்ம்... சாப்பிட வாங்க!... வாங்க.. பெரியம்மா... வாங்க.. அத்தை... ஏலா.. முத்து புள்ளைங்கள அழச்சுக்கிட்டு வா.. "

பட்டும் படாமலும் பேசிக் கொண்டிருந்த சொந்தங்கள் புன்னகையுடன் நடந்து புது வீட்டை ஒட்டியிருந்த பந்தலுக்குள் நுழைந்தபோது மேஜையில் இலை இடப்பட்டிருந்தது.. ஒவ்வொரு இலைக்குப் பக்கத்திலும் தண்ணீர்  பாட்டில்..

கேட்டரிங் ஆட்கள் -  ஆண்களும் பெண்களுமாக சீருடையில் தயாராக நின்றிருக்க அப்பத்தா யாரும் எதிர்பாராத வண்ணம் கையில் அன்ன பாத்திரத்தை எடுத்துக் கொண்டு பரிமாற ஆரம்பித்தார்கள்..

இதைக் கண்டு திடுக்கிட்ட பெண்களில் சிலர் எழுந்து பருப்பு, நெய், சாம்பார் -  வாளிகளை கையில் எடுத்துக் கொண்டு அப்பத்தாவைத் தொடர்ந்தார்கள்..

" ஊரு இருக்கு.. உறவு இருக்கு.. ஒருத்தர் முகம் ஒருத்தர்  பார்த்துப் பரிமாற இத விட வேற பொழுது இருக்குமா.. ங்கறேன்!.. "

அப்பத்தாவின் குரல் தழுதழுத்தது..

" அத்தை... நீங்க இருங்க..  ரெண்டு இலைக்கு பரிமாறுனீங்களா. அது போதும்.. " - என்றவாறு கல்யாணியின் தாய் முன்வந்தாள்..

இளம் பெண் ஒருத்தி அப்பத்தாவின் கையிலிருந்த அன்ன பாத்திரத்தை வாங்கிக் கொண்டாள்..

வாசலில் நின்றிருந்த மகனும் பேரனும் ஓடி வந்தார்கள்..

" ஆத்தா.. இதுக்குத்தான் ஆள் வந்திருக்காங்களே!.."

" வந்திருக்காங்க தான் காசி.. ஆனா உறவுக்காரங்க முகத்தை நாம தான பார்க்கணும்.. நாம தான பந்தி விசாரிக்கணும்!.. "

தாயின் வார்த்தைக்குக் கட்டுண்டார் காசிலிங்கம்..

" ஏலா!.. "

இலையின் முன் தோழிகளோடு அமர்ந்திருந்த கல்யாணி - " அப்பத்தா.. " என, எழுந்து ஓடி வந்தாள்..

அவளது கையைப் பிடித்துக் கொண்ட அப்பத்தா " நாம பொறவு சாப்பிடலாம்!.. " - என்றபடி அங்கிருந்த பெரியவரை நோக்கிச் சென்றார்..

" இவுக விருதுநகர்..  எனக்கு கொழுந்தனார் .. உனக்கு சின்ன தாத்தா.. தெரியுந்தானே!.. "

"  தாத்தா அவுகளத் தான் எனக்குத் தெரியுமே!.. " கல்யாணியின் கைகள் இயல்பாகக் குவிந்தன..

" இவுக  நமக்கு சம்பந்தி முறை.. சிவகாசி.. "

" இவுக தாத்தா வகையில.."

அப்பத்தாவின் அறிமுகம் கண்டு பெரியவர்களின் நெஞ்சங்கள் உருகின.. கண்கள் கசிந்தன..

" ஏதேது.. ஆத்தா  சொல்லிக்கிட்டு வர்றதப் பார்த்தா அடுத்த விசேசம் சட்டு புட்டு.. ன்னு இருக்கும் போல இருக்கே!.. "

இடையில் ஒரு குரல்..

" ஆமா.. ஐயா.. ஆமா!.. எம் பேத் தி கலியாணியோட கலியாணந்தேன்!.. "

" மாப்பிள்ள கைவசம் இருக்காராக்கும்!.. "

" இல்லாமயா!.. "

" யாரு வீட்ல சம்பந்தம்?.. "

" அச்சாபீஸ் சங்கரலிங்கம் இருக்காக..ல்ல அவுக வீட்ல  தான்!.. மாப்பிள்ளை பேரு கோபி.. கோபி குருசரண்!.. "

இந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத கல்யாணி அப்பத்தாவின் முதுகில் முகம் மறைத்துக் கொண்டாள் வெட்கத்துடன்..

***

45 கருத்துகள்:

  1. சுற்றத்தார் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்
    பெற்றத்தாற் பெற்ற பயன்..

    தமிழ் வாழ்க..

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    நோக்க நோக்க
    நொடியில் நோக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் நன் நெஞ்சங்களுக்கு அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் சித்திரத்தால் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. இன்றைய சமூகத்தின் அவலநிலையை அழகாக விவரித்தீர்கள் ஜி

    கல்யாணியிடம், குருசரண் சரணடையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு நல்வரவு..
      அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஜி..

      நீக்கு
  6. வட்டார வழக்கு உரையாடல்களுடன் கதை நன்று துரை அண்ணா. வட்டார வழக்கினை ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் " எனது பதிவுகளில் " தங்களது இயல்பான கருத்தாக்கங்களைக் காண முடிவதில்லையே..

      தங்கள் அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ..

      நீக்கு
    2. அப்படி எல்லாம் இல்லை துரை அண்ணா. என் பார்வைகள் வேறு. அதைப் பொதுவெளியில் சொன்னால் தவறாகிவிடுமோ என்பதால் சொல்வதில்லை.

      என்னைப் பொருத்தவரை அந்தக்காலம் இந்தக்காலம் என்றில்லை. என் பிறந்த வீட்டில் இருந்தவரை இத்தனைக்கும் பெரிய கூட்டுக்குடும்பம் ஆனால் எங்களை (என் அம்மா அப்பா உட்பட) எந்த நிகழ்வுகளுக்கும் என் பாட்டி அனுப்பியதில்லை அழைத்துச் சென்றதில்லை. மாமாக்களில் யாரேனும் ஒருவர் சென்று வருவாங்க. எங்கள் இலக்கு படிப்பு மட்டுமே குறியாக இருக்கணும்... எங்கள் காலில் நிற்பது என்பது மட்டுமே போதிக்கப்பட்டது. ஏனென்றால் நிதி நிலை.
      அதன் பின் திருமணம் ஆன பிறகு இரு பக்கமும் நிறைய உறவுகளைச் சந்தித்தாலும் குடும்ப வம்பு என்பதே அதுவரை அறிந்திராத எனக்கு அவை எல்லாம் மிகவும் புதிதாக இருந்தது.

      எத்தனை உறவுகள் என்ன உறவு என்பதை விட என்று பேச வருவதில்லை. நான் கேள்விகள் கேட்கும் பழக்கமும் கொண்டதில்லை. இரு பக்கமும். எனவே பேச்சு குறைவு.

      முதலில் உறவுகள் என்ன உறவு? எத்தனை என்பதை விட நம்மிடம் உண்மையான அன்புடையவர்கள், நம்மைப் பற்றிப் புறம் சொல்லாதவர்கள் எத்தனை பேர் என்பதே முக்கியம் என்ற கருத்து என் கருத்து. அதனால்தான் கதைக்கு என்ன கருத்து என்ற குழப்பம்.

      எனவே உறவுகள் நல்ல உறவுகளாக நம்மிடம் உண்மையான அன்புடையவர்களாக நாலு பேர் இருந்தால் போதும்...மற்றவர்களிடம் ஒரு புன்சிரிப்பு, ஜஸ்ட் ஹை பை என்று... கருத்து என் கருத்து. அதைச் சொல்லலாமா கூடாதா என்பதில் குழப்பம் அவ்வளவே.

      கேட்டரர்கள் இருந்தாலும் குடும்பங்களில் உணவு பரிமாறுபவங்க இருக்காங்க...விசாரிக்கறவங்களும் இருக்காங்க.

      கீதா

      நீக்கு
  7. கதை அருமை. இன்றைய காலத்தை நிலையை எடுத்துக் காட்டுகிறது.

    கேற்றரிங் காலத்தில் அப்பத்தா சொந்தங்களை உறவுமுறையில் அழைத்து பரிமாறும் அழகு மிக்க மகிழ்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// கேட்டரிங் காலத்தில் அப்பத்தா சொந்தங்களை உறவுமுறையில் அழைத்து பரிமாறும் அழகு மிக்க மகிழ்ச்சி தருகிறது.///

      தங்கள் அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  8. இன்றைய நிலை வருத்தத்தைதான் தருகிறது. 40 வருடங்களுக்கு முன்னால் இருந்த அந்நியோன்யம் இப்போது இல்லை. எல்லாமே சுயநலமாகவும் இயந்திரத்தனத்தோடும் நடக்கிறது. அப்படிப்பட்ட இழந்த காலம் மீண்டும் வராதா என்ற ஏக்கமே துரை செல்வராஜு சாரின் கதையாக்கமாக வருகிறது. எதை இழந்தோம் என்று தெரியாத தலைமுறை.

    கதை நன்று. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இழந்த காலம் மீண்டும் வராதா என்ற ஏக்கமே இந்தக் கதை...

      தங்கள் அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி நெல்லை..

      நீக்கு
  9. பயணம் மற்றும் கோவில் திருவிழாவுக்கு பத்து நாட்கள் செல்வதால் நீண்ட கருத்துகள் இருக்காது

    பதிலளிநீக்கு
  10. பொன்னிறக் கால்கள் இப்படித்தான் இருக்குமா? இருக்கும் இருக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் கேஜிஜிக்குத் தான் வெளிச்சம்...

      சிறுசுங்க பாவம்.. சும்மா விடுமா?..

      ( இதுக்கு ரெண்டு மூனு அர்த்தம்!..)

      நீக்கு
  11. உறவுமுறைப் பெயரே மறந்து கொண்டிருக்கும் இந்தக்காலத்து இளசுகள் படிக்க வேண்டிய கதை. உறவுகள் இருந்தாலும் உறவுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடாமல் தற்காலத்திய அம்பேரிக்க நாகரிகத்தில் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் இளசுகளும் இருக்காங்களே! எங்க வீட்டிலேயே உண்டு. அண்ணன் மனைவியை (எட்டு வயசுக்குக் குறையாமல் பெரியவள்) உறவுப் பெயர் சொல்லிக் கூப்பிடாமல் அவள் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் நாத்தனார் இருக்காங்க. உறவுகள் மறைவது போல் இந்தப் பெயர்களும் நாளாவட்டத்தில் மறைந்து விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// உறவுகள் இல்லாமல் போவது போல் சொந்தங்களின் பெயர்களும் நாளாவட்டத்தில் இல்லாது போகும்,,///

      சீ டீவியில் ஒருத்தியின் வாதம் என்னவென்றால் நான், என்னுடைய உடம்பு உனக்காக நான் எதுக்கு தாலியை சுமக்கணும்.. மெட்டியப் போட்டுக்கணும்?...

      ஆக , மறுபடியும் காட்டு மிராண்டி வாழ்க்கைக்குத் தயாராகி விட்டார்கள்..

      தங்கள் அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியக்கா..

      நீக்கு
    2. ..உனக்காக நான் எதுக்கு தாலியை சுமக்கணும்.. மெட்டியப் போட்டுக்கணும்? //

      இப்படியெல்லாம் பேசினால்தான், இதுக்கெல்லாம் கைதட்டி ஆரவாரித்தால்தான் டிவி சேனல் சர்ச்சை/பிரபலமாகும் அதன் பாழாய்ப்போன TRP எகிறும் (விளம்பரக் காசு வேகமாக வரும்). அவர்களின் தூண்டுதலில், வழிநடத்துதலில்தான் இப்படிப்பட்ட கேள்விகள் பதில்கள் அங்கே. மரபு, பண்பாடு போன்றவற்றைக் குலைத்து, ஏடாகூடமாகப் பொதுவெளியில் பேசுதல், அந்தரங்க வெளிப்பாடுகளில், தப்புக்காரியங்களில் பெருமைகொள்ளல் - . இதெல்லாம்தான் நமது சினிமா, டிவிக்களில் ஊக்குவிக்கப்படுகின்றன. நவீனம் என்கிற பெயரில், சுயசிந்தனை, தனிமனித முடிவு என்கிற பெயரில், கலாச்சார சிதைப்பு, பண்பாட்டு அழிப்பு, முனைப்போடு நடத்தப்படுகிறது. அதற்கு எளிதில் பலியாகும், இரையாகிப்போகும் உறுதி இல்லா உள்ளங்கள், புத்திஹீன ஆண், பெண்கள் நாட்டில் மலிந்துவிட்டனர்..

      நீக்கு
    3. // பாழாய்ப் போன அவர்களது தூண்டுதல், வழி நடத்துதலில் தான் இப்படிப்பட்ட கேள்விகள் பதில்கள் அங்கே.
      மரபு, பண்பாடு போன்றவற்றைக் குலைத்து, ஏடாகூடமாகப் பொது வெளியில் பேசுதல், //

      ஆகக் கூடியதாக பெண்களின் சீரழிவே மிச்சம்..

      தங்கள் கருத்துரைக்கு நன்றி ஏகாந்தன்..

      நீக்கு
  12. கொலுசு மெலிதாகப் போட்டிருக்கார் கௌதமன். பட்டைக் கொலுசு பிடிக்காதோ? பெண் அழகாய்த் தான் இருக்காள். கூடவே கோபி குரு சரணையும் வரைஞ்சிருக்கலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வேறயா!..

      கௌதம் ஜி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

      நீக்கு
    2. வந்தேன். சென்ற ஞாயிறு அன்று அவசரம் அவசரமாக வரைந்த படம். கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  13. இப்போ இருக்கும் கேட்டரிங் காலம் பற்றி எழுத ஆசை. ஆடம்பரம் அகம்பாவம் purpose இல்லாமை (வந்ததுக்கு சோத்தைப் போடணும் இல்லைனா function ஐ இல்லாம ஹோட்டலைத் தேடிப் போயிடுவ). திருமணம் என்ற பெயரில் நன்றாகவே கூத்தடிக்கிறோமோ?

    பதிலளிநீக்கு
  14. ..இந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத கல்யாணி அப்பத்தாவின் முதுகில் முகம் மறைத்துக் கொண்டாள் வெட்கத்துடன்..//

    இந்தக் காலக் காட்சியாக இது தெரியவில்லையே...இந்தக்கால சினிமாக்கள் இப்படி வெட்கம் காண்பிக்கும் பெண்பிள்ளைகளை தூக்கிச் சாப்பிட்டு வெகுநாளாச்சே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இந்தக் கால சினிமாக்கள் இப்படி வெட்கம் காண்பிக்கும் பெண் பிள்ளைகளை தூக்கிச் சாப்பிட்டு வெகுநாளாச்சே!..///

      எனது உடல்.. எனது உறவு.. எனது விருப்பம்.. எதற்கு தாலி?.. என்று பேசுகின்ற காலம் இது..

      நானும் மறந்து விட்டேன்..

      தங்கள் அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஏகாந்தன்....

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்கள் அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி தனபாலன்..

      நீக்கு
  16. கதை மிகவும் நன்று. சுற்றம் இல்லாமல் நடக்கும் விழாக்களே இப்போது எங்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே தான் எங்கெங்கும்..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி வெங்கட்..

      நீக்கு
  17. கதை மிகவும் நன்று. இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் உறவு இல்லாத நிலை தான். இனிமேலாவது மாற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக மாறும்..

      தங்கள் அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி வெங்கட்..

      நீக்கு
  18. கதை மிக அருமை.
    உறவு முறைகள் தெரியவேண்டுமென்றால் அடிக்கடி போய் வந்து இருந்தால் தான் தெரியும்.

    பேரன் ஊரிலிருந்து வந்து அனைவரையும் பார்த்து செல்கிறான். இப்போது மூன்றாம் தேதிவரை அம்மா வழி சொந்தங்களை சென்னையில் பார்ப்பான். வரும் போது போகும் போது விழாக்களில் தான் உறவுகள் சந்திப்பு நிகழ்கிறது.


    உங்கள் கதையில் உரையாடல்கள் அன்பை பரிமாறி கொள்வது கண் முன் பார்ப்பது போல இருக்கிறது.
    சார் வரைந்த படங்களும் கதைக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  19. தங்கள் அன்பான வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி.

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!