ஞாயிறு, 23 ஜூலை, 2023

நான் தரிசனம் செய்த கோவில்கள்: நெல்லைத்தமிழன் : வைரமுடி யாத்திரை 06

 

வைரமுடி யாத்திரை – மைசூர் அரண்மனை – பகுதி 6

மைசூர் அரண்மனையில் இன்னும் பல பகுதிகள் இருக்கின்றன. பார்த்துக்கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் தொடர்ந்து நடக்கிறேன். 1 ½ மணி நேரத்துக்குள் பார்த்து முடித்துவிட்டு வெளியில் சென்றுவிடணும். பிறகு வேறு இடங்களுக்குச் செல்லவேண்டியிருக்கிறதே.










இதை எழுதும்போது, பஹ்ரைன் அரசர் பற்றிச் சிலர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பதவி ஏற்றுக்கொள்ளும்போது, boy எனப்படும் அரசரின் அந்தரங்க உதவியாளர் பதவிக்குப் பெரும் போட்டி இருக்குமாம். அவருடைய அனுமதி இல்லாமல் யாருமே, அரசரின் பையன், மனைவி உட்பட, அரசரைப் பார்க்கமுடியாது. அரசரது சயன அறைக்கு வெளியே இந்த உதவியாளர் படுத்திருப்பாராம். இந்த உதவியாளருக்கு ஏராளமான பண வரவு கிடைக்கும். இவர் எங்கு சென்றாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது. அரசருக்காக வெளிநாட்டுப் பெண்கள் வரும்போது அவர்களை இவர்தான் அழைத்துக்கொண்டு வருவாராம். அரசர் மரணித்த உடன், இந்த உதவியாளரது பதவி முடிவுக்கு வந்துவிடும். அதுவரை சம்பாதித்தை எடுத்துக்கொண்டு கிளம்பவேண்டியது தான். அரசருக்கான உணவு மேசை, மிகப் பெரிதாக இருக்கும். அவர் என்ன கேட்கிறாரோ அது இருந்தே ஆகணும். அதனால் விதவித உணவு, வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட பழங்கள் எனப் பல்வேறு ஐட்டங்கள் தயாராக இருக்குமாம். அரசர் சாப்பிட்டு முடிந்த தும் மீதம் உள்ளது அங்கிருப்பவர்களுக்குப் போகுமாம். பஹ்ரைன், எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஒரு தொந்தரவும் தராதவர்கள். இது பற்றி இன்னொரு சமயத்தில் விரிவாக எழுதுகிறேன்.

சுமார் 1 ½ மணி நேரம் அரண்மனையைச் சுற்றிப் பார்ப்பதில் செலவழித்திருப்போம். பிறகு அங்கிருந்து 4 ¼ க்குக் கிளம்பி, சாமுண்டி மலையில் இருக்கும் சாமுண்டேஸ்வரி கோவிலுக்குச் சென்றோம். 15-20 நிமிடப் பிரயாணம்தான். மலையின் உச்சியில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி கோவில். 

பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் நடந்தால் கோவில் வரும். வழியில் கடைகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக மைசூர் சில்க் புடவைகள் விற்கும் கடைகள்.

கோவிலுக்கு அருகில் செருப்புகளை டெபாஸிட் பண்ணிவிட்டு, கோவிலுக்குச் சென்றோம். சிறப்பு தரிசன வரிசை, சாதா தரிசன வரிசை இருந்தது. (சிறப்பு வரிசை 100 ரூபாய்). இந்தத் தடவை கூட்டமே இல்லை. அதனால் சாதா வரிசையிலேயே சென்று பத்து நிமிடங்களில் சாமுண்டீஸ்வரியை நிம்மதியாகத் தரிசனம் செய்தோம். சென்ற வருடம் சிறிது கூட்டம் இருந்ததால் சிறப்பு தரிசன வரிசையில் சென்றேன்.



சாமுண்டீஸ்வரி அன்னையை தரிசனம் செய்தபோது, கோவில் பூஜாரி, எனக்கு ஒரு தேங்காயும் பூ, குங்குமப் பிரசாதமும் தந்தார். அவர் தவறுதலாக என்னிடம் தருகிறாரோ என்று எண்ணி, நான் கொடுக்கவில்லை என்றேன். அவர், இல்லை..உங்களுக்குத்தான் பிரசாதம் என்றார். அன்னையின் கருணையை மனதில் எண்ணினேன்.

கோவிலுக்கு வெளியே பரந்து விரிந்த இடத்தில், கடைகள் இருக்கின்றன. நந்தினி (நம்ம ஊர் ஆவின் மாதிரி), பழரசக் கடைகள், ஹாப்ஹாம்ஸ் என்று அழைக்கப்படும் காய் கனி கடை, ஹைக்ளாஸ் ரெஸ்ட்ரூம்ஸ் என்று மிக அழகாகவும் சுத்தமாகவும் இருந்தன. எங்களுடன் வந்தவர்களில் எனக்குத் தெரிந்தவர், அங்கு இருந்த சில்க் கடையில் (authorized store) 2500 ரூபாய்க்கு ஒரு மைசூர் சில்க் புடவை வாங்கினார். நானும் என் மனைவிக்கு ஒரு மைசூர்சில்க் புடவை வாங்கினேன்.


பேருந்து நிறுத்திய இடத்தில் இருந்த சாமுண்ட்ஸ்வரி சில்க் ஹவுஸ் கடைக்கு பட்டுப்புடவைகள் வாங்க பலர் சென்றனர். அவர்களையெல்லாம் அவசரப்படுத்தி பேருந்துக்கு யாத்திரைக் குழு நடத்துபவர் அழைத்துவந்தார்.  மாலை 6 மணிக்கு சாமுண்டீஸ்வரி மலையிலிருந்து புறப்பட்டு பிருந்தாவன் கார்டன்ஸ் சென்றோம். அது அடுத்த வாரம்.

(தொடரும்) 
 

42 கருத்துகள்:

  1. படங்கள் வழக்கம் போல அழகு.

    மன்னர்களது வாழ்வு ராஜபோகமாக இருந்தாலும் துன்பங்களுக்கும் தயாராக இருக்கணும்.

    1983-ல் சாமுண்டீஸ்வரி கோயில் போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி... வாழ்க்கை என்பது பாலைவனமும் சோலை வனமும் கலந்தது. அவரவர்கள் வாங்கிவந்த வரத்திற்கேற்ப விகிதாச்சாரம் மாறும். அவ்ளோதான்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். காலை ப்ரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  3. படங்கள் அழகாக இருக்கின்றன. தமிழ்நாட்டிற்கும் இங்கும் உள்ள பெண் சிற்பஙகளின் வித்தியாசம் பற்றி கேட்டிருந்தீர்கள். இங்கு உள்ள சிற்பங்கள் அழகாக, நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளவையாக தோன்றுகிறது. ஆனால் ஒரு உயிரோட்டம் இல்லாமல் தூங்குவது போல் அமைத்திருப்பதாகத் தோன்றுகிறது. நம்முடைய கோயில்களில் உள்ள தூண் சிற்பங்களில் ஒரு செயல் செய்யும் (activity) புலப்படும். அழகு, நுணுக்கம் இவை இரண்டாம் பச்சம். உதாரணமாக இங்கு சிலைகளின் இடுப்பை கவனியுங்கள்.

    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார்.

      அனேகமாக எல்லா புராதானமான கோவில்களிலும் நுழைவாயிலில் இந்த பெண் சிற்பம் இருபுறமும் இருக்கும் (பெரும்பாலும் விதிவிலக்குகள் கிடையாது)

      தமிழக்க் கோவில்களில் மார்கச்சையுடன் பெண் சிற்பம் பார்த்த நினைவில்லை (நுழைவாயில்).

      நீக்கு
  4. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    மைசூர் அரண்மனை படங்கள் அனைத்தும் இந்த வாரமும் நன்றாக உள்ளது. அரண்மனையின் உள்ளும், புறமும் உள்ள அகண்ட விஸ்தாரங்கள் பிரமிப்பைத்தான் உண்டாக்குகின்றன.

    தூண்கள், அதனின் வேலைப்பாடுகள் மேல் விதான வேலைப்பாடுகள் என அனைத்துமே வியக்க வைக்கிறது. கோவில்கள் அதன் அழகுகள், ஒவ்வொரு தெய்வத்திற்கும் பூஜை, புனஸ்காரங்கள் என பார்த்துப் பார்த்து ஒவ்வொரு நாளும் செய்வதிலேயே அரச குடும்பத்தினரின் வாழ்நாட்கள் மகிழ்வுடன் கழிந்திருக்கும்.

    "அவனுக்கென்ன ராஜ போக வாழ்க்கை வாழ்கிறான் " என சிலரை பார்த்து பிறர் கூறுவார்கள். (இது வெறும் பொறாமையால் உண்டான வார்த்தை இல்லையா?) அந்த ராஜ வாழ்க்கையை முறையாக வாழ்வதும் ஒரு விதமான கஸ்டந்தான் இல்லையா? அனுபவித்தால்தான் அதன் , கட்டுப்பாடுகளின் சிரமங்கள் புரியும்.

    இறுதி படத்தின் விளக்க வரிகள்" ஆடி அடங்கும் வாழ்க்கையடா..! ஆறடி நிலமே சொந்தமடா..! என்ற பாடலை நினைவு படுத்துகிறது. (அந்த நிலமுமே யாருக்கும் சொந்தமில்லை. அது வேறு விஷயம்...)

    பக்ரைன் அரச குலத்தின் வழக்கங்களை அறிந்து கொண்டேன். அந்த உதவியாளரை பார்த்து, (அவரது அனுமதியின் தாக்கத்தினால்.) அரசரை சேர்ந்த அவரது நெருங்கிய குடும்பத்தினர் எத்தனை சமயத்தில் கோபமடைந்திருப்பார்களோ...., இல்லை.. நான் மேலே சொன்ன மாதிரி, அவர்களின் வழக்கப்படி அரசகுல கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு அவரவர் வாழ்க்கை முறைகளை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டிருப்பார்களோ.. எனத் தோன்றுகிறது. பல சிந்தனைகளை தங்கள் பதிவு உண்டாக்குகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நெடிய கருத்துக்கு நன்றி.

      அரச வாழ்க்கை கடுமையான தொடர்ந்த வேலைகளுடன் கூடியது. 100, 500 பெண்களை (மனைவிகளாக இருக்காது) வைத்திருந்தான் பெரும் அரண்மனை என்றெல்லாம் முஸ்லீம் அரசர்களைப்பற்றிப் படிக்கிறோம். இதைப்பற்றிச் சுருக்கமாக எழுத முயல்கிறேன். ப்ரைவசி இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையாகுமா? கடமையாகத்தான் இருந்திருக்க முடியும்.

      எதையும் கொண்டுவரவில்லை. எதையும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. அவ்ளோதான். பிறகு வருகிறேன்.

      நீக்கு
  5. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐந்து நாட்கள் (நான்கு இரவுகள்) திருப்பதி வாசத்திற்குப் பிறகு நேற்றுதான் வந்தேன். நான்கு நாளும் சிறப்பாக தரிசனம் செய்தேன். அனேகமாக எந்தப் பதிவுக்கும் போகவில்லை, காரணம் நான்கு நாட்களும் பாராயணம்.(மற்றும்....... எனக்குப் பிடிக்காத கர்நாடக பாணி உணவுதான்)

      நீக்கு
  6. படங்களும் பதிவும் வழக்கம் போல அருமை..

    சிறப்பு...

    பதிலளிநீக்கு
  7. வரலாற்றின் பக்கங்கள் சிறப்பாக காட்சிப் படுத்தப் பட்டிருக்கின்றது....

    பதிலளிநீக்கு
  8. /// நந்தினி (நம்ம ஊர் ஆவின் மாதிரி) ///

    நீங்கள் தான் மெச்சிக் கொள்ள வேண்டும்..

    என்னவோ காலக் கொடுமை..

    காளைகளும் பசுக்களும் விவசாயமும் அழிகின்ற நாட்டில் - பாக்கெட்டில் பால் சிறப்போ சிறப்பு!..

    இதற்கு தனி எருமைப் பாலும் அதன் இனிப்புகளும் மேல்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார்.... உங்கள் ஆதங்கம் பற்றி இன்று எழுதுகிறேன்.

      நீக்கு
  9. கருங்கல்லில் சிலை என்றாலும் கண்கள் சும்மா விடுவதில்லை..

    இது இயல்பு.. இதற்கிடையில் -

    அது அழகா.. இது அழகா.. என்று பட்டி மன்றத்தையும் தொடங்கியாயிற்று..

    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /சிலை என்றாலும் கண்கள் சும்மா விடுவதில்லை.// - சிற்பி வடித்ததே நாம் எல்லோரும் பார்த்து ரசிக்கணும் என்றுதானே. பார்த்தால் தப்பில்லை.

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. மைசூர் அரண்மனை படங்கள் எல்லாம் அழகு.
    தூண்கள் , மேற்கூரை படங்கள் மிக அழகு.
    லக்ஷ்மி ரமணர் கோவில் கோபுரம், சோழர் காலத்து கோபுரம்,
    சாமுண்டீஸ்வரி கோவில் கோபுரம் அருமை.
    சாமுண்டீஸ்வரி அன்னை தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    சாமுண்டீஸ்வரி பிரசாதம் கிடைத்தது கேட்டு மகிழ்ச்சி, அன்னையின் கருணைதான்.
    திருப்பதி தரிசனம் நல்லபடியாக செய்து இருப்பீர்கள்.நான்கு நாட்களும் பாராயணம் மட்டுமா? கோவில் தரிசனமும் உண்டுதானே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்பதியில் பாராயணமும் நான்கு நாட்களும் காலையில் பெருமாள் தரிசனமும் (துவாரபாலகர்கள் நுழைவாயிலைத் தாண்டி இரண்டு நுழைவாயில்களில் சென்று) திருப்தியாகக் கிடைத்தன. கூடவே அதிகாலையில் பெருமாளுக்குக் கண்டருளப்படும் சுடச் சுட தயிர்சாதமும் (எங்களுக்கு இரண்டு தொன்னைகளில் தந்தார்கள்)

      நீக்கு
  12. ..வழியில் உள்ள மஹிஷாசுரன் சிலை..//

    என்னதான் கையில் அரிவாளும், பாம்பையும் பிடித்திருந்தாலும் ஏனோ கொடூரமாகத் தெரியவில்லை.

    நாட்டில் திரியும் சிலரது முகங்களை, அவர்களது நடவடிக்கைகளைப் பார்த்தபிறகு, கேட்டபிறகு அந்தக் கால அரக்கர்கள் அப்பாவிகளே என்று மனம் சொல்கிறது. குற்றமும், கொடூரமும், வன்மமும், வேதனையும் நமது திறன்வாய்ந்த மீடியாக்களின் தினசரிக் கைங்கர்யத்தினால் பழக்கப்பட்டுப்போனதும், நமது மனம் மரத்துப்போனதும் காரணமாயிருக்கலாம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// குற்றமும், கொடூரமும், வன்மமும், வேதனையும் நமது திறன்வாய்ந்த மீடியாக்களின் தினசரிக் கைங்கர்யத்தினால் பழக்கப்பட்டுப்போனதும், நமது மனம் மரத்துப்போனதும் காரணமாய் இருக்கலாம்.. //

      இருக்கலாம்..
      இருக்கலாம்..

      நிறைவான கருத்து..
      மிகவும் பிடித்திருக்கின்றது..

      நீக்கு
    2. வாங்க ஏகாந்தன் சார்.

      //நமது திறன்வாய்ந்த மீடியாக்களின் தினசரிக் கைங்கர்யத்தினால்// - எதனால் கெட்டவற்றைப் பேசக்கூடாது, பார்க்கக்கூடாது என்றார்கள்? மனம் அவற்றைப் பார்த்து, கேட்டு மரத்துப் போய்விட்டால், அதில் உள்ள கெட்டவை மறைந்துவிடும். முன்னெல்லாம் குடிகாரன் என்றாலே அருவருப்பு அடைந்ததும், இப்போ, 'நான் குடிக்கமாட்டேன்' என்று யாரேனும் சொன்னால், இவன் யாருடா சுத்த பயித்தியக்காரனாக இருப்பான் போலிருக்கு என்று எண்ணுவதும் இத்தகைய திறன் வாய்ந்த ஊடகங்களினால் வந்த நன்மை.

      நீக்கு
    3. @ துரை செல்வராஜு, @ நெல்லைத் தமிழன்:

      குற்றப்பின்னணி கொண்டிருத்தல், அதனைப் பெருமைபோல் காத்தல், தொடர்தல் என்பது ஒரு ஃபேஷன், ட்ரெண்ட் ஆகிவிட்டது இந்தக் காலகட்டத்தில். குணக்கேடுகளும், குற்றங்குறைகளும் கொண்டு வெட்கமின்றி உலவுவதே வாழ்வதற்குத் தேவையான, சரியான க்வாலிஃபிகேஷன் என்றாகியிருப்பது நம் கர்மா நம்மைப் பார்த்துச் சிரிக்கும் வெடிச்சிரிப்பு...

      நீக்கு
  13. படங்கள் அனைத்தும் அழகு...
    விளக்கங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  14. அரண்மனை படங்கள் அனைத்தும் அழகு. விபரங்களையும் சிறப்பாக தந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. கதவில் ஓவியங்கள் ரொம்ப அழகு.

    தூண்கள் மேல் கூரைகள் தூண்கள் கூரைகளோடு சேரும் பகுதி என்று நுண்ணிய கலை அம்சங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ரொம்ப மனதைக் கவர்கின்றன. தூண்களின் வண்ணமும் கூட அத்தனை அழகு.

    நெல்லை இத்தனை அழகையும் நீங்க படம் பிடிச்சிருக்கற விதம் ரொம்பவே பாராட்டுக்குரியது..

    கீதா

    பதிலளிநீக்கு
  16. யம்மாடியோவ் வெள்ளிக் கதவுகள்!!! ஆனையின் மேக்கப் சாமான்கள் எல்லாம் அழகு இப்பவும் நேரடியாகவே பார்க்கிறோமே...ஆனா இப்பல்லாம் இமிட்டேஷனா இருக்கும் அரண்மனைல இருக்கறது எல்லாம் தங்கமா இருக்குமோ?!!!

    பின்னாடி தங்கும் இடங்களும் பெரிதாக மாளிகை போல இருக்கு பின்ன இத்தனையும் சுத்தமாக வைக்கிறது என்றால் சும்மாவா? பெண்டு நிமிர்ந்திடும்...அவங்களுக்கு நல்ல வசதிகள் செஞ்சு கொடுக்கணும்தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கம்லாம் இருந்தால் பாதுகாப்பது மிகவும் சிரமம். இமிடேஷனாகத்தான் இருக்கும். பராமரிப்பது மிகவும் கடினமான வேலை

      நீக்கு
  17. கோயில் கோபுரம் ஆஹா!! கவர்ச்சியாக இருக்கு

    ஆதுக்குக் கீழுள்ள சிற்பங்களும்தான்! முக அமைப்பு வரவேற்கும் பெண்கள் போல இல்லையே!! தமிழகச்சிற்பங்களில் கண்விழிகள் இருக்கும் என்ற நினைவு. அது போல மார்கச்சை. தமிழகச் சிற்பங்களில் இருக்காது என்பது என் நினைவு. இதுல அரை ஆடை....ஸ்கர்ட் குட்டைப் பாவாடை போல!!!

    தமிழகத்தில் உடை உடுத்தியது போல் இருந்தால் முழுவதும் இருப்பது போல் இடுப்பிலிருந்து கால் வரை ...இல்லைனா இருக்காது! படத்துல எல்லாம் பரதநாட்டியம் ஆடுறவங்கன்னு காட்ட ஒரு உடை போடுவாங்களே!! அப்படி. ஒரு வேளை அவங்க இப்படியான சிற்பங்களைப் பார்த்துதான் அப்படிஉடை வடிவமைப்பா இருந்திருக்கும். அதென்னவோ பரதநாட்டியம்னாலே அப்படியான உடையத்தான் மாட்டி விட்டிருக்காங்க பழைய திரைப்படங்கள்ல!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொல்லிட்டீங்க. அதுதான் தமிழக கோவில் சிற்பங்களுக்கும் இந்தச் சிற்பங்களுக்குமான வித்தியாசம்.

      //பழைய திரைப்படங்கள்ல// - திரைப்படங்களில் பெண்கள் இருப்பதே கவர்ச்சி காண்பிக்கத்தான். அதனால பரதநாட்டியமோ இல்லை கடவுள் டேன்ஸோ இல்லை க்ளப் டான்ஸோ...கவர்ச்சி டிரெஸ் நிச்சயம்

      நீக்கு
  18. அரண்மனைப்படங்கள் எல்லாமே செம. அங்க சுத்தினாலே நல்ல நடைபயிற்சி ஆகிடும்! அம்மாம் பெரிசுதான்.

    //அரசரின் அந்தரங்க உதவியாளர் அவருடைய அனுமதி இல்லாமல் யாருமே, அரசரின் பையன், மனைவி உட்பட, அரசரைப் பார்க்கமுடியாது.//

    சமீபத்தில் கண்ணில் பட்ட செய்தி. நடிகை ரேகாவுக்குக் கூட இப்படி பெண் உதவியாளர் உண்டாமே!!

    இதே போன்ற செய்திதான் இந்த நடிகை உதவியாளர் பற்றியதும். ஆனால் ஒரே ஒரு வரியைத் தவிர.

    மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் எல்லாமே முன்பு போனதுதான் அதன் பின் போகவில்லை. மைசூர் பிருந்தாவன் உட்பட... எல்லாமே ரெண்டு முறை போயிருக்கிறேன் என்றாலும் பல பல வருடங்களுக்கு முன். (அட! நான் அக்கான்னு நினைச்சுல்லா க்கா க்கான்னு கூப்பிட்டேன்...அப்ப நீங்க பாட்டியா? தெரியாம போச்சே!!ன்னு கேட்கக் கூடாதாக்கும்!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நடிகை ரேகாவுக்குக் கூட இப்படி பெண் உதவியாளர்// எந்த ரேகா?

      முன்பு உங்களுக்கு இந்தக் கோவில் தரிசனங்கள் வாய்த்திருக்கலாம். இப்போ வேறு பல வேலைகள் முன்னுரிமைகள் இருப்பதால் செல்ல வாய்ப்பு கிட்டவில்லை போலிருக்கு. விரைவில் இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கட்டும்.

      நீக்கு
  19. 1980 ஆம் ஆண்டில் முதல் முறையாக மைசூரு, பெண்களூரு போனோம். சாமுண்டி ஹில்ஸ், பசவங்குடி இரண்டும் அதுக்கப்புறமாவும் சில/பல முறை போயிருக்கோம். பாலஸுக்கு இரு முறை போனோம். யானையின் ஆபரணங்களும், கோயிலும் நன்றாக நினைவில் உள்ளன. வாயிலில் நின்று வரவேற்கும் பெண்களையும் பார்த்த நினைவு இருக்கு. இங்கே இருக்கும் சிலைகளில் காணப்படும் நுணுக்கமான உணர்வுகள் சிலைகளின் கண்களில் வெளிப்படும். இவற்றில் அதைக் காணோம்.

    பதிலளிநீக்கு
  20. 2013 ஆம் ஆண்டில் சாமுண்டி கோயில் போனப்போக் கூடப் புடைவைக்கடைகளைப் பார்த்த நினைவு இல்லை. ஊருக்குள் வந்து தான் கர்நாடகா சில்க் கார்ப்பரேஷனின் கடையில் ஒரு பிரின்டட் சில்க் புடைவை எடுத்தேன். க்ரே கலரில் மஞ்சள் பார்டர்.

    பதிலளிநீக்கு
  21. ஏல்லாப் படங்களும் நன்றாக ரசித்து நல்ல கோணங்களில் எடுத்திருக்கீங்க. ஒன்றரை மணி நேரத்துக்குள்ளாக இது ஒரு சாதனை தான். நாங்க போனப்போ எல்லாம் காமிராவெல்லாம் கொண்டு போகலை. மேலும் அப்போவெல்லாம் ஃபில்ம் ரோல் மாற்றும் கானன் காமிரா தான் இருந்தது. அதையும் எடுத்துப் போகலை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!