திங்கள், 3 ஜூலை, 2023

"திங்கக்"கிழமை :  இலைக்கறி, இலை போளி   - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 மின் தமிழில் இலைக்கறி, இலை போளி போன்றவை குறித்து எழுதினதிலே இருந்து சேம்பு இலைக் கறி/வடை(மதுரையில் வடைனே சொல்வோம்) பத்தி எழுத நினைச்சேன்.  ஆனால் உடனே எழுத முடியாமல் மின்சாரம் படுத்தல், மற்ற சில, பல பிரச்னைகள்.



 படம் கூகிளாருக்கு நன்றி.

தேவையான பொருட்கள்:

சேம்பு இலை( வீட்டிலேயே தொட்டிகளில் வளர்க்கலாம்.  இல்லைனாலும் காய்கறி மார்க்கெட்டில் சொல்லி வைத்து வாங்கலாம். கீரை விற்பவர்களிடம் சொன்னால் எளிதில் கிடைக்கும்.)  நல்ல பெரிதாக நான்கு அல்லது ஐந்து.

இதற்கு உள்ளே அடைக்க சிலர் கடலைமாவைப் புளி ஜலத்தில் விழுது போல் கரைத்துக் கொண்டு உப்பு, மிளகாய்த் தூள், பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அதைத் தடவி விட்டு அப்படியே வேக வைக்கின்றனர். ஆனால் எங்க வீட்டில் அப்படிச் செய்தது இல்லை.

து.பருப்பு, சின்னக் கிண்ணம் ஒன்று

க.பருப்பு அதே அளவு,

பாசிப்பருப்பு அந்த அளவில் பாதி

மிளகாய் வற்றல் (கொஞ்சம் கூடவே வைச்சுக்கணும்.) 15

உப்பு தேவைக்கு

பெருங்காயம்

கருகப்பிலை, கொத்துமல்லி  நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்

வறுக்க சமையல் எண்ணெய்

கடுகு, உ.பருப்பு.

சேம்பு இலைகளை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு மஞ்சள் தூள் & உப்புக் கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பருப்பு வகைகளை நன்கு கழுவி ஊற வைக்கவும்.  இரண்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊறியதும் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.  நன்கு நைசாகவே அரைக்கலாம்.  அரைத்த விழுதில் கருகப்பிலை, கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்.

இப்போது சேம்பு இலைகளை  வெளியே எடுத்துக் கொண்டு அவற்றில் அரைத்த விழுதை ஒரு பக்கமாகத் தடவவும்.  அரை அங்குலம் கனத்துக்குத் தடவலாம்.  தடவாத மறு பாதியை அப்படியே தடவி இருக்கும் பக்கம் பாதியாக மடிக்கவும்.  இப்படியே எல்லா இலைகளிலும் அரைத்த விழுதைத் தடவி இலையை மடித்துக் கொள்ளவும்.  இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.

வேக வைத்ததை வெளியே எடுத்து ஒரு கத்தியால் சின்னத் துண்டங்களாகப் போடவும்.  இரும்பு வாணலியில் எண்ணெயைக் காய வைத்துக் கடுகு, உ.பருப்புப் போட்டு நறுக்கிய துண்டங்களை மொறுமொறுப்பாக வறுத்து/ பொரித்து எடுக்கவும்.

இதை மாலை தேநீரோடும் சாப்பிடலாம்.  சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ளும்படியும் வைத்துக் கொள்ளலாம்.  இங்கே சேம்பு இலையே கிடைக்க மாட்டேன் என்கிறது.  திருச்சி போகணுமோ என்னமோ! :)

30 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..  வணக்கம்.  இறைவன் காக்கட்டும்.

      நீக்கு
  2. சுலபமான செய்முறை சொல்லிய விதம் அருமை

    பதிலளிநீக்கு
  3. ஹை! கீதாக்கா சூப்பரா வந்திருக்கு. படங்கள் நல்லாருக்கு

    இன்று சேம்பு இலை சுருள் வடை - இது நம்ம வீட்டில் இப்படித்தான் சொல்வாங்க..இதே ரெசிப்பிதான்...

    சில சமயம் அம்மா உளுந்தும் போட்டுப்பாங்க - ஊரில் இருந்தவரை சேம்பு இலை கிடைக்கும்...செய்வதுண்டு. நான் திருவனந்தபுரத்தில் இருந்தவரையும் அதன் பின் இடையில் செய்ததில்லை.....இப்போது இங்கு சேம்பு தொட்டியில் நட்டிருக்கிறேன். பழைய வீட்டிலும் நட்டிருந்தேன்...செய்தேன். கடலை மாவில் செய்வதை விட இதுதான் நன்றாக இருக்கிறது.
    கடலை மாவில் செய்வது கொஞ்சம் கசப்பும் அந்தச் சுவை - அது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இது நன்றாக இருக்கும்.

    கர்நாடகாவில் இதை பத்ரோட், பத்ரவடே (கொங்கணியில்), பட்ரா என்று சொல்வதுண்டு. இங்கு மங்களூர் கடையில் இருப்பதைப் பார்த்தேன். அது கடலைமாவில் மெலிதாகப் பேஸ்ட் தடவி செய்திருந்தது தெரிந்தது. வாங்கவில்லை. நாம் கொஞ்சம் கனமாகத் தடவுவோமே.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தி/கீதா. நான் உளுந்தெல்லாம் போடவே மாட்டேன். இந்தச் செய்முறை குறித்து மின் தமிழ்க்குழும/தற்சமயம் முகநூல் நண்பர் திரு கிருஷ்ணகுமார் கேட்டுக் கொண்டிருந்தார். இன்னிக்கு அங்கேயும் லிங்க் கொடுத்தேன். அவரைக் கொஞ்ச மாதங்களாகவே முகநூலில் பார்க்க முடியலை. :( போகட்டும்.மெதுவா வந்து பார்ப்பார்னு நம்புவோம்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரி

    இன்றைய திங்கள் பதிவில் தங்கள் செய்முறையாக இலை வடை நன்றாக உள்ளது. சேம்பு இலை என்றதும், அது என்னவென்று அறிய கூகுளுக்கு சென்று பார்த்து வந்தேன். நான் நினைத்தபடி அது சேப்பங்கிழங்கின் இலைதான் என்றும் தெரிந்து வந்தேன். இதுபோல் நான் இதுவரை செய்ததில்லை

    கீரைகள் தினுசு தினுசாக வைத்து விற்பவர்கள் கடைகளில் சென்று பார்க்க வேண்டும். பீட்ரூட், முள்ளங்கி இலைகளில் மதுரையில் இருக்கும் போது கூட்டு, சாம்பார் என செய்திருக்கிறேன். இங்கு அதுபோல் கிடைக்கவில்லை. அல்லது கிடைக்கும், நேரத்தில், கிடைக்கும் இடங்களை நான் பார்த்ததில்லையா என்னவோ..!

    இங்கு சேம்பு இலை வடை படங்களைப் பார்க்கையில் மிகவும் நன்றாக உள்ளது. இந்த இலை கிடைத்தால் நான் இதுபோல் செய்து பார்க்கிறேன்.

    இது போல் கற்பூரவல்லி இலைகளில் செய்வார்களோ ? வேறு சில இலைகளிலும் இதைப்போல் செய்து பார்த்துள்ளேன்./ கேள்விபட்டுள்ளேன். இதுவும் நன்றாக உள்ளது நல்ல விபரமாக கூறியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்பூரவல்லி இலையில் ரசம் வைக்கலாம். சின்னக் குழந்தைகளுக்கு பஜ்ஜி மாதிரிப் போட்டுக் கொடுக்கலாம். சேம்பு இலை சில சமயங்களில் நாக்கு அரிக்கும் என்பதால் குழந்தைகளுக்குக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. முன்னெல்லாம் எங்க அப்பா ஊரான மேல்மங்கலத்தில் இருந்து சேம்பு இலைகள் கட்டுக்கட்டாக வரும். அநேகமா வாரம் இரண்டு நாட்கள் அம்மா இதைப் பண்ணிடுவார். அதே போல் பச்சை வேர்க்கடலையும் மூட்டைகலில் வரும். வறுத்து/வேக வைச்சு, கடலை உருண்டி பிடிச்சு எனச் சாப்பிட்டுத் தீர்ப்போம். அங்கே வயலின் வரப்புகளில் போடப்படும் மஞ்சள், சேப்பங்கிழங்கு ஆகியவையும் ருசியாக இருக்கும். மஞ்சளைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கி எலுமிச்சம்பழம் பிழிந்து பச்சை மிளகாய், உப்புப் போட்டு அப்படியே சாப்பிடலாம்.

      நீக்கு
  5. சாப்பாட்டுக்குத் தொட்டுக்கொள்ளும்படியும் வைத்துக் கொள்ளலாம். //

    ஆமாம், ரொம்ப நல்லருக்கும். கிட்டத்தட்ட பருப்பு உசிலி போல...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்க வீட்டில் சாயங்காலம் டிஃபனுக்குத் தான்.

      நீக்கு
  6. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  7. எளிதான செய்முறை.. இப்போது தான் அறிகின்றேன்..
    சிறப்பு.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தம்பி. பலருக்கும் தெரியவில்லை. ஆனால் குஜராத்தில் இது ரொம்பவே பிரபலமான உணவு வகைகளில் முக்கியமானது, பெரிய விருந்துகளில் இதுவும் இடம்பிடிச்சிருக்கும். ஆனால் கடலை மாவில் தான் மசாலா தயாரிப்பெல்லாம்.

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. இலைக்கறி, இலை போளி செய்முறை நன்றாக இருக்கிறது.
    சேம்பு இலை கிடைக்கும் போது செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி. உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேனே!

      நீக்கு
    2. திருநெல்வேலிக்காரங்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை, நெல்லை! இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
  10. சேம்பு இலை வறுவல் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. கேள்விப்பட்டிருக்கேன் பார்த்திருக்கிறேன். சாப்பிட்டதில்லை

    பதிலளிநீக்கு
  12. இது குஜராத்தி ஸ்பெஷல்! என் குழந்தைகளை பார்த்துக்கொண்ட பேபி சிட்டர் ஒரு குஜராத்தி. அவர் இதை பாத்ரா என்பார்கள். அவர் இதை செய்யும் பொழுதெல்லாம் எங்களுக்கும் கொடுத்தனுப்புவார். பருப்பு உசிலியின் மற்றொரு வடிவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநியாயமா இருக்கே! குஜராத்தி ஸ்பெஷல் எல்லாம் இல்லை. எங்க வீட்டில் என்னோட சின்ன வயசில் இருந்தே சாப்பிட்டிருக்கேன். உறவினர் வீடுகளிலேயும். அதே போல் மாமியார் வீட்டிலும் வாரம் ஒரு நாளாவது சேம்பு இலைக்கறி இருக்கும்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!