செவ்வாய், 4 ஜூலை, 2023

சிறுகதை - மொழிபெயர்ப்பு - சில ஈஸ்வரன்மாருடே பிணக்கம் - JKC

 

                                     கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

மலையாளத்தில் இருந்து மொழிபெயர்ப்பு - JK

 

 சில ஈஸ்வரன்மாருடே பிணக்கம்

(கடவுள்களுக்குள்ளும் டூ-காய் உண்டு) 

 

திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது குருவாயூரப்பனை அங்கிருந்து எடுத்துக் கொண்டு அம்பலப்புழையிலும் பின்னர் மாவேலிக்கரையிலும் வைத்திருந்தனர் என்பது தெரியுமல்லவா. குருவாயூரப்பனும் அம்பலப்புழ கிருஷ்ணசாமியும் வாஸ்தவத்தில் கிருஷ்ணன் ஆயினும் இருவரும் அம்பலப்புழையில் ஒன்றாக இருந்த சமயம் பிணக்கங்களும் போட்டிகளும் உண்டானதாக அநேகம் ஐதீகங்கள் உண்டு.



 

அம்பலப்புழ ஸ்ரீ கிருஷ்ணன் 

குருவாயூரப்பனுடைய அனுக்கிரகத்திற்காக செய்யப்படும் வழிபாடு நமஸ்கார சத்யகள் (விருந்து) க்கு உள்ள காளன் (புளிசேரி, மோர்க்குழம்பு) முதலான பதார்த்தங்களை வெண்கலப் பாத்திரங்கள் அல்லாது வேறு பாத்திரங்களில் படைப்பது வழக்கம் இல்லை. மேலும் இவ்வாறு படைக்கும்போது பாத்திரங்களால் பதார்த்தம் நஞ்சாவது இல்லை, சுவையும் மாறுவது இல்லை. ஆனால் அம்பலப்புழையில் குருவாயூரப்பனுக்கு படைத்த பதார்த்தங்கள்  களிம்பு ஏறி நஞ்சாகி சுவை கெட்டது. இப்படி நச்சாக்கியது அம்பலப்புழா கிருஷ்ண சாமி என்று தெரிய வந்தது. பதார்த்தங்கள் கெட்டுப் போவதற்கு வேறு ஒரு காரணமும் தோன்றவில்லை. 

இதற்குப் பதிலாக குருவாயூரப்பனும் சில எதிர் பிரயோகம் நடத்தாமலில்லை. 

முப்பத்தி ஆறு பற சீனிப் பால்பாயசம் உச்சி கால நைவேத்யம் ஆக தினமும் அம்பலப்புழ கிருஷ்ணசாமிக்கு படைப்பது உண்டு. அதில் குருவாயூரப்பன் அட்டை, பூச்சி போன்றவற்றை இட்டு நைவேத்தியத்திற்க்கு கேடு உண்டாக்கத் தொடங்கினார். இப்படி இருவருக்கும் இடையில் பிணக்கமும், பழி தீர்த்தலும் இருந்த காரணத்தால் இருவருக்குமே பூஜை நெய்வேத்தியங்கள் உண்டாக்குவதில் தடை ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் குருவாயூரப்பனை மாவேலிக்கரைக்கு கொண்டு சென்றனர். குருவாயூரபபனை குடியிருத்திய இடமும், அங்கு ஒரு கிணறும் தற்போதும் அம்பலப்புழையில் காணலாம். 

இதேமாதிரிதான் வைக்கத்தப்பனும் ஏற்றுமானூர் தேவனுக்கும் இடையில் சில பிணக்கங்கள் உண்டாகி இருந்தன. ராஜா ராமவர்மா மஹாராஜா திருமனசு கொண்டு வைக்கத்தப்பனுக்கு காணிக்கையாக ஏழரைப் பொன் ஆனைகளை  (பலாமரத்தில் செய்து பொற்தகடால் மூடப்பட்டது. ஏழு பெரிய யானைகளும் ஒரு சிறிய யானையும்) திருவனந்தபுரத்தில் இருந்து வைக்கத்திற்கு கொடுத்தனுப்பினார். கட்டளை பிரகாரம் அவ்வேலைக்கு நியமிக்கப்பட்டவர்கள் பொன் ஆனைகளை  எடுத்துக்கொண்டு ஏற்றுமானூர் வந்து சேர்ந்தனர். யானைகளை மேற்கு கோபுர நடையில் இறக்கி வைத்துவிட்டு காவல்காரரிடம் அவற்றை பாதுகாக்கச் சொல்லிவிட்டு எல்லோரும் குளித்து உண்ண சென்றனர். குளித்து, உண்டு திரும்பி வந்து நோக்கியபோது ஒவ்வொரு யானையின் தலையிலும் ஒவ்வொரு சர்ப்பம் படம் எடுத்து நின்றதைக் கண்டனர். யாரும் அடுக்க முடியவில்லை. 

எல்லோரும் பயத்துடன் நோக்கி நிற்பது அல்லாது யானைகளுக்கு அருகில் செல்ல தைரியம் இல்லாமல் நின்றனர். பின்னர் இதனைக் குறித்து ப்ரச்னம் வைத்து பார்த்தபோது “இந்த யானைகளை அங்கிருந்து கொண்டு செல்ல விட மாட்டேன், இவை எனக்கு வேண்டும் “ என்றும் “இது ஏற்றுமானூர் அப்பன் விதித்திருப்பது” என்றும் பதில் கிடைத்தது. 

அதே போன்று இக்காரியத்தின் நிமித்தம் மஹாராஜாவுக்கும் ஒரு கனவு வந்தது. அதன்படி அந்தப் பொன் யானைகளை ஏற்றுமானூர் தேவனுடைய கருவூலத்தில் வைத்துக் கொள்ளக் கட்டளை இட்டார். இப்போதும் அவை உற்சவ காலங்களில் உற்சவருடன் கொண்டு செல்லப்படுகின்றன. 

வைக்கத்து வழிபாடாக நிச்சயித்து உண்டாக்கிய பொன் யானைகளை ஏற்றுமானூர் தேவன் எடுத்துக் கொண்டதால் மீண்டும் ஏழரைப் பொன் யானைகளை செய்து வைக்கத்திற்க்கு அனுப்ப மஹாராஜா பணி தொடங்கினார்.  இரவில் அவருக்கு ஒரு கனவு தோன்றியது. அதன் சாராம்சம் “எனக்கு பொன்  ஆனையும் மற்றும் ஒன்றும் வேண்டாம். அதற்கு செலவு செய்யும் பணம் கொண்டு எனக்கு ஒரு சஹஸ்ர கலச பூஜை நடத்தினால் போதும். வேறு ஒன்றும் வேண்டாம். இது வைக்கத்தப்பனின் ஆணை.” என்பதாகும்.

மஹாராஜா வைக்கத்தப்பனுக்கு சஹஸ்ர கலச பூஜை சிறப்பாக செய்தார். வைக்கத்தப்பதனும் ஏற்றுமானூர் அப்பனும் தற்போதும் பிணக்கத்தில் தான் உள்ளனர் என்பது மக்களுடைய விசுவாசம். வைக்கத்தஷ்டமி தரிசனத்திற்கு  ஏற்றுமானூர் மக்கள் யாரும் செல்வதில்லை. 

ஆரன்முள பார்த்தசாரதி தேவனும் சபரி சாஸ்தாவும் பிணக்கத்தில் என்பது மற்றொரு விசுத்திரமான வினோதம். .அதனால் ஆரன்முள மக்கள் சபரி மலைக்கு செல்வதில்லை. 

பண்டு ஒரு தடவை ஆரன்முளக்காரர் சிலர் சபரிமலைக்குச் செல்ல விரதம் இருந்து மலைக்கு புறப்பட்டனர். ஆரன்முள தேவன் அவர்களுடைய சொப்பனத்தில் தோன்றி “ என்னுடைய பிரஜைகள் மலை ஏற வேண்டிய அவசியம் இல்லை. எல்லா பிரார்த்தனைகளையும் என்னிடம் செய்தால் போதும்.” என்று கூறினார். 

ஆனாலும் அவர்கள் அதை உதாசீனப்படுத்தி சபரி மலைக்கு சென்றனர். சபரிமலைக்கு செல்பவர் “சரணம் அய்யப்பா” என்றும் “அய்யப்ப சாமியே சரணம்” என்றும் முழங்கிக் கொண்டு செல்வது முறை. ஆனால் ஆரன்முளக்காரர்கள் “ஆரண்முள சாமியே சரணம்” என்று முழங்கியபடி சென்றனர். அவர் சபரிமலை அடைந்தபோது  அய்யப்பனுடைய புலிகள் பாய்ந்து வந்தன. ஆரன்முளக்காரர்கள் பயந்து “ஆரன்முள சாமியே சரணம் “ என்று உரக்க விளித்தனர். வந்த காட்டு மிருகங்களின் வாயில் அம்புகள் பாய்ந்தன. அதனால் அவை பின் வாங்கிச் சென்றன. அந்த சமயம் சபரி சாஸ்தாவிற்கு வெளிப்பாடு உண்டாக்கியது. வெளிச்சப்பாடு (சாமியாடி) “ ஆரன்முளக்காரர் என்னுடைய நடைக்கு வரக்கூடாது” என்ற அருள்வாக்கு சொல்லவும் ஆரன்முளக்காரர் அய்யப்ப  தரிசனம் செய்யாமல் திரும்பினர். ஆரன்முள சாமி பார்த்தசாரதி அல்லவா. ஆகவே பார்த்தன் அம்பெய்து புலிகளை விரட்டினான் என்று ஒரு பேச்சும் உண்டு. 

இதே போன்று  கேரளத்தில் பிரதிஷ்டிக்கப் பட்டுள்ள அநேகம் தேவன்மார்களிடையில் பல பல பிணக்கக் கதைகளும் உண்டு. இவை எல்லாம் மக்களின் கற்பனையில் உண்டானவை என்பதல்லாது வேறு ஒரு காரணமும் தோன்றவில்லை. 

படங்கள் உதவி இணையம்

20 கருத்துகள்:

  1. என்னவெல்லம் கதைகள், நம்பிக்கைகள்!!!!! ஆச்சரியமாக இருக்கிறது. கடவுளர்களுக்குள்ளும் இப்படிப் பகையா!!!

    மக்களின் கற்பனைகள்தான். என்றாலும் இந்த அளவிற்கா? மக்கள் Evolve ஆகாமல் இருக்கிறார்களே! என்று தோன்றுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய செவ்வாய் கிழமையின் கதைப் பகுதி சுவாரஸ்யமாக இருக்கிறது. இறைவன் வெவ்வேறு ஸ்வரூபம் என்ற போதில் இந்த மாதிரி பகை உணர்ச்சிகளை மனிதரே தோற்றுவித்து ஆயிரம் கதைகளை பரப்பி விடுவார்கள். ஆனால், இறைவன் (விஷ்ணு அம்சம்) ஒன்றாக இருந்தும் இந்த பிணக்குகள் கதைகள் படிக்கும் போதில் ஆச்சரியமளிக்கிறது.

    இறைவன் என்ற மறைமுகமான சக்திக்கே இத்தனை கதைகள் என்றால் உலகில் கண் எதிரே நடமாடும் மனிதர்களுக்குள் எத்தனை பகைகள் உருவாகி விடும் என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஒன்றும் சொல்வதற்கில்லை. அறியாத இக்கதைகளை மொழி பெயர்த்து தந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. இறைநம்பிக்கையை பலப்படுத்துவதாக நினைத்து இப்படி கதைகள் சொல்லி இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. கடவுளர்களுக்கும் இடையே போட்டி ஆச்சரியம்தரும் கதைகள்.

    இன்று எங்கள் குடும்பத்தில் துயர் சம்பவம் எனது சகோதரர் ஒருவரின் மறைவு. எங்கள் குடும்பத்துக்காக உழைத்த பாசமிகு மனிதர்.
    அவரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி, வருத்தமான விஷயம்.குடும்பத்துக்காக உழைத்த பாசமிகு மனிதர் மறைந்தால் அது மிகவும் மனதை வருத்தும். அவரது ஆன்மா சாந்தியடைய எங்கள் பிரார்த்தனைகள்.

      கீதா

      நீக்கு
    2. மாதேவி குடும்பத்தினருக்கு இரங்கல்கள். அவர் குடும்பம் இந்தத் துன்பத்தில் இருந்து மீண்டு வரப் பிரார்த்திக்கிறோம்.

      நீக்கு
    3. ஆழ்ந்த இரங்கல்கள் மாதேவி.

      நீக்கு
    4. மாதேவி குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்

      நீக்கு
  6. மாதேவி, பாசமிகு சகோதரர் மறைவுக்கு அஞ்சலிகள்.
    அவர்கள் குடும்பத்தினர்களுக்கும், உங்களுக்கும் இறைவன் , ஆறுதலை தர பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. //ஆரன்முள பார்த்தசாரதி தேவனும் சபரி சாஸ்தாவும் பிணக்கத்தில் என்பது மற்றொரு விசுத்திரமான வினோதம். .அதனால் ஆரன்முள மக்கள் சபரி மலைக்கு செல்வதில்லை.//

    கதை படிக்கும் போது கடவுளர்களுக்கு இடையே பிணக்கா! என்று நினைக்க வைக்கிறது.
    மக்கள் எப்படி எல்லாம் கதை கட்டி விடுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  8. மாதேவி அவர்களின் குடும்பத்தினருக்கு எமது இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
  9. கடவுளருக்குள் போட்டி, பொறாமை எல்லாம் இன்று வரை கேள்விப் படாதது, எனினும் சுவாரசியமாகவே இருக்கு. தொடர்ந்து இம்மாதிரியான அபூர்வமான செய்திகளைத் தொகுத்துத் தருவதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. வந்தவர்க்கு நன்றி. மாதேவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் இரங்கல்கள்.
    Jayakumar​​

    பதிலளிநீக்கு
  11. செய்தி அறிந்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. சகோதரி மாதேவி குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது சகோதரரின் பிரிவில் இருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன் .

    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. விதம் விதமான நம்பிக்கைகளும் கதைகளும். முதல் முறையாக இப்படியான கேரளக் கதைகள் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. எனது சகோதரரின் ஆத்ம சாந்திக்காகவும், எங்கள் குடும்பத்தினரின் மன ஆறுதலுக்காகவும் பிரார்த்தித்து ஆறுதல் கூறிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!