சனி, 22 ஜூலை, 2023

இ வா ந செ, மற்றும் நான் படிச்ச கதை

 


லண்டன் : மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிராக, மூன்று வயது முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதற்காக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஏழு வயதான இங்கிலாந்து சிறுமிக்கு, ‛பாயிண்ட் ஆப் லைட்' விருது வழங்கப்பட்டுள்ளது.


இங்கிலாந்தைச் சேர்ந்த, இந்திய வம்சாவளியினரான, சவுரவ் ராய் மற்றும் ராகினி ஜி ராய் தம்பதியரின் மகள், மோக்-ஷா. 7.உலகின் இளம் வயது வழக்கறிஞர் எனப்பெயர் பெற்ற இவருக்கு, கடந்த வாரம், பிரிட்டனின் உயரிய விருதான, ‛பாயிண்ட் ஆப் லைட்' அந்நாட்டின், துணை பிரதமரான, ஆலிவர் டவுடனால் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கல்வி கிடைப்பதற்காக, பல்வேறு விதங்களில் உதவியுள்ள மோக்-ஷாவிற்கு, குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டியதற்காகவும், இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

துணை பிரதமர், ஆலிவர் டவுடன் கூறியுள்ளதாவது:...

மூன்று வயதிலிருந்து, மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டிக்கு எதிராக, மோக்-ஷா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஐ.நா.,வின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை வென்றெடுப்பதில், மோக்-ஷா ஒரு சிறந்த முன்மாதிரியை அமைத்துள்ளார்.

பள்ளி பாடத்திட்டத்தில், அவற்றை சேர்ப்பது குறித்து, ஊக்குவிக்க உலக தலைவர்களுடன், அவர் பேசியுள்ளார்.  மோக்-ஷாவின் முயற்சியால் அவரது பள்ளியிலும், பிளாஸ்டிக் கலை பொருட்கள் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது. அவரின், வலுவான நம்பிக்கைகள், சிறந்த உலகை உருவாக்க தன்னை சுற்றியுள்ளவர்களை, மாற்றும் திறன் கொண்டவையாக இருக்கும்.  இவ்வாறு, அவர் கூறியுள்ளார்....

மோக்-ஷா கூறியுள்ளதாவது:...

விருதை பெறுவதில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....

பூமியை பாதுகாப்பது என்பது, பல் துலக்குவது போல தான். இந்த பூமியையும், இங்கு வாழும் மக்களையும், பாதுகாக்கும் பொறுப்பு, ஒரு சிலருக்கு மட்டும் இருக்கக்கூடாது. இதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.  பருவநிலை மாற்றம், மாசுபாடு, வறுமை மற்றும் சமத்துமின்மை போன்ற, பெரிய சவால்களை எதிர்த்து போராட, நாம் ஒவ்வொருவரும், நம் சொந்த வாழ்க்கையில், சிறிய மாற்றங்களையாவது செய்ய வேண்டும்.

==================================================================================================






அனந்தபுர் :ஆந்திராவைச் சேர்ந்த பெண் கூலித் தொழிலாளி ஒருவர், தன் விடாமுயற்சி காரணமாக, பி எச்.டி., பட்டம் பெற்ற சம்பவம், பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.

இங்கு, அனந்தபுர் மாவட்டத்தில் உள்ள நாகுலகுடம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவருக்கு மூன்று சகோதரிகள்.  குடும்பத்திற்கு மூத்த மகளான பாரதி, பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் மேற்படிப்பை தொடர முடியவில்லை  இதற்கிடையே, பாரதிக்கும், தாய் வழி மாமாவான சிவபிரசாத்துக்கும் திருமணம் நடந்தது. இருவரும் விவசாய கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பத்தை, கணவர் சிவபிரசாத்திடம் பாரதி கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்த அவர், மேற்படிப்புக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் உறுதி அளித்தார்.

இதையடுத்து, அனந்தபுரில் உள்ள கல்லுாரி ஒன்றில், வேதியியல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை பாரதி முடித்தார்.  பேராசிரியர்கள் ஊக்கப்படுத்தியதை அடுத்து, ஸ்ரீ கிருஷ்ணா தேவராஜ் பல்கலையில், வேதியியல் பிஎச்.டி., பட்டத்தை பாரதி பெற்றுள்ளார். இது குறித்து, பாரதி கூறியதாவது:...

பல்கலையில் பேராசிரியையாக பணியாற்ற விரும்புகிறேன். கல்வி வாயிலாக மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.. மேற்படிப்பை மேற்கொள்வதற்காக, பல நாட்கள் கூலி வேலை செய்து கடுமையாக உழைத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கூலித் தொழிலாளியாக இருந்து பிஎச்.டி., முடித்துள்ள பாரதிக்கு, சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
================================================================================================

2016 News..
==========================================================================================================================================================================

 


நான் படிச்ச கதை(கள்) (JKC)

தர்ட் க்லாஸ் மற்றும் யாழ் இனிது! யார் சொன்னது

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி


சொல்லுகிறேன்

பழகப் பழகப் பாலும் புளிக்கும். தொடரத் தொடர ‘நான் படிச்ச கதை’ பதிவும் போரடிக்கும். ஜீவி அவர்கள் ஆதங்கப்பட்டபோது ஏதோ ஒரு ஆர்வத்தில் இப்பணியை ஏற்றுக்கொண்டேன். 

ஆனால் அப்போது உணரவில்லை, இது ஸ்ரீரங்கத்து உலக்கை என்பதை. 

ஆரம்பித்தபோது இருந்த உழைப்பு, உற்சாகம், ஆர்வம் தற்போது இல்லை.

பலவிதங்களில் இப்பகுதியை எழுதினேன். அரட்டை அரங்கமாக, கதாப்பிரசங்கமாக, பள்ளிக்கூட வியாசம் போல, வில்லுப்பாட்டு போல, கட்டுரையாக, என்று பல நடைகளில் எழுதினேன். எனக்குள்ளும் ஜீவி போல ஒரு ஜே கே உண்டு என்பதை உணர்ந்தேன்.

‘காவேரி மடத்துக் கிழவர்’ நாணு, ‘இணைப்பறவைகள்’ தாத்தா, ‘காட்டில் ஒரு மான்’ தங்கம்மா ஆச்சி, ‘ஒரு சிறு இசை’ மூக்கம்மா ஆச்சி, ‘பயித்திக்கார பிள்ளை’ ராஜம் போன்றோர் தற்போதும் என் நீங்கா நினைவில் நிற்கின்றனர்.

இணையத்தில் புகழ் பெற்ற பல பதிவாளர்களும் பதிவு எழுதுவதை நிறுத்தி வெளியேறி விட்டனர். அதே போல் வாசகர்களும். ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது நானும் என் பதிவும் எம்மாத்திரம், ஆகவே ஓரம் கட்டப்பட்டேன்.

ஆகவே கடந்த சில மாதங்களாக அவசர கதியில் ஒரே டெம்பிளேட்டில் … (முழுக் கதை, ஆசிரியர் பற்றிய குறிப்பு, கதையின் சுட்டி, ஒரு பின்னுரை) …. என்று எழுதி சில படங்களை இணையத்தில்இருந்து எடுத்து இணைத்து ஒரே மாதிரி பதிவுகளாக வெளியிடுவதைக் கவனித்திருப்பீர்கள்.

வாசகர்கள் தான் எ பி யின் முதுகெலும்பு. ஏதேனும் புதுப் பகுதிகளை ஆரம்பிக்க அவர்கள் பரிந்துரை செய்யலாம். உதாரணமாக படித்த மற்ற மொழிகளில் (ஆங்கிலம் etc.) ஜோக்ஸ், ரசித்த குறுங்கவிதைகள், கவர்ந்த படங்கள் (கவர்ச்சி அல்ல) என்று செய்யலாம். எ பி ஆசிரியர்கள் இது பற்றி ஆலோசித்து முடிவை அறிவிக்கக் கோருகிறேன்.

புலம்பல்கள் போதும். ஒரு ஆங்கில ஜோக்.

A leave letter

Dear Sir

As I am going to the cremation ground and may not return, I request you to grant me half a day casual leave.

முன்னுரை

இன்று நாம் காணப்போவது ஏ. ஏ. ஹெச். கே. கோரி யுடைய இரண்டு சிறு சிறுகதைகள். கேட்ட பெயராகத் தோன்றுகிறதா? 80, 90களில் இவரது படைப்புகள் குமுதம், விகடன், தினமணி கதிர் போன்ற வணிகப் பத்திரிக்கைகளிலும், கணையாழி, தாமரை போன்ற இலக்கிய பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளன.



ஏ ஏ ஹெச் கே கோரி திருநெல்வேலிக்காரர்.. தற்போது சென்னையில் வசிப்பவர். இலங்கைக்கும் சென்று வந்தவர். 200க்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார்.

அவருடைய பேட்டி ஒன்று https://www.nilacharal.com

தளத்தில் வெளிவந்துள்ளது. அதில் அவரைப் பற்றி அவரே கூறுவது.

3. சிறந்த சிறுகதையின் லட்சணம் என்ன?

நாலுபக்க அஞ்சுபக்க அச்செழுத்துகளைத் தாண்டி, வாசகனை யோசிக்க வைப்பதுதான் சிறுகதையின் லட்சணம் என்று நினைக்கிறேன்.

4. உங்கள் சிறுகதையின் சிறப்பம்சமாக எதைக் கருதுகிறீர்கள்?

யதார்த்தம், நெஞ்சைக் கனக்கச் செய்கிற கதைகளில் கூட ஒரு lighter element, மனசை சுண்டியிழுக்கிற மாதிரி வெடுக்கென்று ஒரு கடைசி வாக்கியம் இவற்றை என்னுடைய சிறுகதையின் சிறப்பம்சங்களாகச் சொல்லுவேன்.

சிறுகதைக்குக் கருவை விட மொழியாளுமையும் ஸ்டைலும் முக்கியம் என்று நினைக்கிறவன் நான். கரு களவாடப் படலாம். ஆனால் மொழியாளுமையும், ஸ்டைலும் களவாடப்பட முடியாதது. அதுதான் ஒரு படைப்பாளியின் தனித்தன்மையைப் பறை சாற்றுவது. அதோடு, கடைசி வாக்கியத்தில் அல்லது கடைசிப் பத்தியில் ஒரு கொக்கி போட்டு சுண்டியிழுத்து வாசகனைச் சிலிர்க்கச் செய்கிற உத்தியை அல்லது வித்தையையும் என்னுடைய தனித்தன்மையாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

6. வெளியிடும் பத்திரிகைக்கேற்ப கதை, மொழிநடை ஆகியவற்றைத் தேர்வு செய்வீர்களா?

இல்லை. கதையை எழுதி முடித்த பின்னால், இது இந்தப் பத்திரிகைக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றும். அதன்படி அந்தப் பத்திரிகைக்குக் கதை போய்ச் சேரும்.

இவருடைய இரண்டு சிறுகதைகள் இப்பதிவில் இடம் பெறுகின்றன. விகடனில் வெளியானவை.

தர்ட் க்லாஸ்

கதையாசிரியர்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி


“எக்மோர் ஸ்டேஷனுக்குப் போறதுக்குக் கால்டாக்ஸி ஒண்ணு அமத்திக்கிருவோமா டேய்” என்று சித்தப்பா கேட்டதற்கு, “கால் டாக்ஸி போறாது சித்தப்பா, முழு டாக்ஸியே போவோம்” என்று நான் ஜோக் அடித்ததை ரசிக்காமல், சித்தப்பா முறைத்தார்.

ஏற்கனவே என் பேரில் அதிருப்தியாயிருக்கிறார். நான் தமாஷ் பண்ணியிருக்கக் கூடாது

மத்தியானந்தான் சிங்கப்பூரிலிருந்து ப்ளைட்டில் வந்தார். என்னை ஏர் போர்ட்டுக்கு வரவேண்டாமென்று சொல்லியிருந்தார். தானாகவே ஒரு டாக்ஸி பிடித்துக் கொண்டு ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்து விட்டார்.

சில மணி நேரம் என்னுடைய அறையில் ஓய்வு எடுத்துவிட்டு, ராத்திரி நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் ரெண்டு பேரும் திருநெல்வேலிக்குக் கிளம்புவதாய் ஏற்பாடு.

வந்தவர், “ஏ பாவி, என்ன டேய் ஒங்க மெட்ராஸ்ல வெயில் இந்தக் கொளுத்துக் கொளுத்துது!” என்று தாகத்துக்குத் தண்ணி கேட்டார்.

அப்போது தான் நான் அந்தத் தப்பைச் செய்தேன். கவனமில்லாமல், அந்த டம்ளரில் தண்ணீர் கொண்டு கொடுத்தேன்.


டம்ளரில் மேலே பொறித்திருந்த வாக்கியத்தைப் பார்த்து விட்டார். “என்னது டேய் இது?”

“எதக் கேக்கிக சித்தப்பா.”

“தெரியாத மாறி கேக்கியே என்ன டேய்? இது கீதா கபேயில் திருடியதுன்னு இதுல எழுதியிருக்குல்லா, அதத்தாம்ல கேக்கேன்.”

“அது… சித்தப்பா… இது என் ரூம் மேட்டோட டம்ளர் சித்தப்பா.”

“ஒன் ரூம் மேட் படிக்யானா, இல்ல இப்படியொரு தொழில் செஞ்சுக்கிட்டு அலையுதானா?”

“நல்ல பையன் சித்தப்பா அவன். நம்ம ஊர்க்காரந் தான். புள்ளமார்ப்பையன். நல்லா படிப்பான்.”

“அதெல்லாஞ் சரிதாண்டேய். களவாணிப் பயபுள்ளயா இருப்பாம் போலயிருக்கே.”

“அது… சும்மா ஒரு த்ரில்லுக்காக செய்யறது சித்தப்பா… இந்த வயசுல எல்லாரும் செய்யறதுதான சித்தப்பா…”

“ஆமாண்டேய், நாங்கள்ளாம் இப்படித்தான் களவாண்டுக்கிட்டு அலஞ்சோமாக்கும்?”

“சும்மா ஜாலிக்கி இப்படிப் பண்ணுவான் சித்தப்பா. பெறவு, சத்தங்காட்டாமக் கொண்டுகிட்டுப் போய் எடுத்த எடத்துல வச்சிருவான்.”

“மாட்டிக்கிட்டா எப்படியிருக்கும் தெரியும்லா? இந்த மாதிரிச் சேட்டக்காரப் பயகூடல்லாம் சேராத டேய். அவன எங்க, இங்ஙனதான் இருக்கானா?”

“இல்ல சித்தப்பா, ஸெமஸ்டர் முடிஞ்சி நேத்தே ஊருக்குக் கெளம்பிட்டான். நாந்தான் ஒங்களுக்காகப் பின்தங்கிட்டேன்.”

“திரும்பி வந்தாம்னா, அவனக் களட்டி வுட்டுட்டு மறு சோலி பாரு. இல்லாட்டி நீ வேற ரூம்புக்கு மாறிக்க. என்ன டேய் நாஞ் சொல்றது?”

“ஆட்டும் சித்தப்பா” என்று சித்தப்பாவுக்கு ஒப்புக்கு ஒரு ஒப்புதல் அளித்துவிட்டுட் டாப்பிக்கை மாற்றினேன்.

“இந்தாங்க சித்தப்பா டிக்கட். நெல்லை எக்ஸ்ப்ரஸ். டிபாச்சர் ஏழுப்பது. பஸ்ட் க்லாஸ்.”

“ப்ஸ்ட் க்லாஸா? ஸெகண்ட் ஏஸில்ல டேய் எடுக்கச் சொன்னேன்?”

“அதவிட இது காசு கம்மி சித்தப்பா.”

“அடக் கோட்டிக்காரா, பத்து இருவது கூட ஆனாலும் ஏஸி ஏஸி தானல. இந்த வேக்காட்ல திருநவேலி போய்ச் சேர்றதுக்குள்ள மனுசன் செத்து சுண்ணாம்பால்ல போயிருவான். சொன்னதச் செய்ய மாட்டிங்கியே, முந்திரிக் கொட்ட வேல பாக்கியே டேய்.”

சித்தப்பாவுக்கு காசு மிச்சம் பிடித்துக் கொடுக்கிற முயற்சியில் அவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது தான் மிச்சம். பிறகு அவரிடம் பேச்சுக் கொடுக்கவில்லை.

ஒரு டாக்ஸியில் லக்கேஜை ஏற்றிக் கொண்டு ரெண்டு பேரும் எழும்பூர் வந்து சேர்ந்தோம். ஊருக்குப் போய் அப்பா அம்மா தங்கச்சிகளைப் பார்க்கப்போகிற சந்தோஷத்தோடு, வாழ்க்கையில் முதல் முதலாய் முதல் வகுப்பில் பிராயணஞ் செய்கிற உற்சாகமும் சேர்ந்து கொண்டது.

சித்தப்பா சொன்னது போல, ஸெகண்ட் ஏஸி என்றால் இன்னும் விசேஷமாய்த்தான் இருந்திருக்கும் போல. பரவாயில்லை, படிப்படியாய் முன்னேறுவோம்.

“ஏஸின்னா, அவனே பெட் ஸ்ப்ரட், பிளாங்க்கட், பில்லோ எல்லாம் குடுத்துருவான் என்று சொல்லிக் கொண்டே சித்தப்பா அவருடைய பிரம்மாண்டமான ஸூட்கேஸைத் திறந்து ஒரு தலகாணியும் போர்வையும் எடுத்து லோயர் பர்த்தில் அவருடைய படுக்கையை ஒழுங்கு செய்து கொண்டார்.

“ஒனக்கு விரிச்சிப் படுக்க என்னமும் இருக்கா டேய்?”

“எனக்கு வேண்டாம் சித்தப்பா.”

“சரி இந்தப் பில்லோவ வேணா தலக்கி வச்சிக்க.”

விமானப் பயண அடையாளமாய் டாக் ஒன்று தொங்கிய தன்னுடைய ஹாண்ட் பாகேஜின் ஸிப்பைத் திறந்து சித்தப்பா ஒரு குட்டித் தலகாணியை எடுத்தார். “புதுசு டேய், அழுக்காக்கிராமப் பாத்துக்க” என்கிற வேண்டுகோளோடு அதை என்னிடம் தந்தார்.

சிக்கனமாய்க் கைக்கு அடக்கமான, அழகான, விசேஷமான மினி பில்லோ.

அதன் ஒரு முனையில், சின்னதாய் அழகாய் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் என்று.


படங்கள் இணையத்திலிருந்து

—------------------------------------------------------------------------------------------------------------

யாழ் இனிது! யார் சொன்னது

கதையாசிரியர்: ஏ.ஏ.ஹெச்.கே.கோரி


உறக்கம் தடைபட்டுக் கண்விழித்துப் பார்த்தான் ரமணன். புன்னகையுடன் பக்கத்திலே வேணி.

“என்ன வேணி, சுகமான நித்திரையிலிருந்தனான், கலைச்சிப் போட்டீர்” என்று செல்லமாய்க் கோபித்துக் கொண்டான்.

“துப்பாக்கிச் சத்தத்திலையும், பொம்மர்களின் இரைச்சலிலையும், ஷெல் பயத்திலையும் வடிவா உறங்கிக் கன காலமாச்சுதுதானே! இண்டைக்கித்தான் ஹெலிக்கொப்ரர் சத்தங்கூட இல்லை, வரப்பிலை கொஞ்சம் படுக்கலாமெண்டா….”

வேணி சட்டென்று எழுந்து கொண்டாள்.”அப்ப நீங்க படுங்கோ, நான் போறன்.”

“எங்கை போறீராம்?”

“அம்மாவும் அப்பாவும் இந்தியாவுக்குப் போகினம். உங்களுக்குப் பிடிக்கலையெண்டா நான் மட்டும் எதுக்கு இங்கை யாழ்ப்பாணத்திலை நிக்க வேணும்? நானும் போறன். பின் நேரம் தோணி.”

“பகிடி பண்ண வேண்டாம் வேணி. நீர் போய்ட்டீரெண்டா நான் இங்கை உயிரோடிக்கேலுமே? இந்தக் காணிக்காகவும் எண்ட வேணிக்காகவுந்தானே, நான் இன்னும் இன்னும் இலங்கையிலை நிக்கிறன்! இப்படி வாருமன்.”

எட்டி அவளுடைய கையை இவன் பிடிக்க முயல, அவள் விலகினாள்.

“ம்ம், கல்யாணத்துக்கு முந்தி என்னைத் தொடவே மாட்டேனெண்டு சொன்னதெல்லாம் மச்சானுக்கு மறந்து போச்சு போலை!”

“ஓமப்பா, சொன்னனான், ஆனா, இனியும் தாங்கேலாது. அடுத்த கிழமை நல்லூர் முருகன் கோவிலடியிலை எங்களுக்குக் கல்யாணம்.”

படம் இணையத்திலிருந்து

“அடுத்த கிழமையே? சமாதானம் வந்த பிறகுதான் கல்யாணம் எண்டு சொன்னனீங்கள்?”

“நீரும் நானும் உயிரோடிருக்கிற காலத்திலை சமாதானம் வராது போலைத் தெரியுது வேணி. கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேரும் ஒருக்கா கதிர்காமம் போய் வருவம்.”

“இதென்ன விசர்க் கதை மச்சான்! இங்கை இயக்கத்துப் பொடியன்களைத் தாண்டி வெளிக்கிட்டாலும் அங்கை ஆமிக்காரனைத் தாண்டிப் போகேலுமே?”

“முருகன் மனசு வைச்சானெண்டா எலும். மாலையும் கழுத்துமாய்க் கதிர் காமத்திலை போய் நிண்டு, எங்கட நாட்டுக்கு சமாதானமும், நிம்மதியும் குடு ஆண்டவா எண்டு நீரும் நானும் வேண்டினாத்தான் இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும் போலைக் கிடக்குது. அங்கை என்ன பாக்குறீர் வேணி?, நான் உம்மிட்ட தான் கதைக்கிறன்.”

“உது என்ன மச்சான், வடக்காலை ஒரு சத்தம்!”

வேணி சுட்டிக் காட்டிய திக்கில் ரமணன் கவனம் செலுத்தினான். பிறகு, தீவிரமடைந்து வேகமாய் அவளுடைய கையைப் பற்றினான்.

“மச்சான் என்ன இது, கல்யாணத்துக்கு முந்தி….!” என்று ஆட்சேபித்த வேணியை இழுத்து இறுக்கமாய் அணைத்துப் பிடித்தான்.

“பொம்மர் ஒண்டு வருகுது வேணி, என்னைக் கெட்டியாய்ப் பிடிச்சிக் கொள்ளும்.”

பொம்மர் நெருங்கி வந்தது. ஒருவரோடொருவர் பின்னியபடி ரெண்டு பேரும் வரப்பிலிருந்து வயலுக்குள் உருண்டார்கள்.

தாழப்பறந்து வந்த பொம்மர், சில குண்டுகளை அனாயாசமாய்த் தூவிச் சென்றது. கண் மூடித் திறப்பதற்குள் காணி கருகி உருக்குலைந்து போனது. அதோடு, மென்மையான ஒரு காதலும்!

(ஆனந்த விகடன், தீபாவளி மலர், 2006)



பின்னுரை

இரண்டு சிறுகதைகளும் இரண்டு வட்டார வழக்கில், வட்டார மொழியில் எழுதப்பட்டுள்ளன. முதல் கதை திருநெல்வேலி தமிழ் என்றால் இரண்டாவது கதை இலங்கை யாழ்ப்பாணத்து தமிழில் எழுதப்பட்டுள்ளது.

அதே போன்று இவர் தலைப்பிலும் ஒரு சிறப்பை நாட்டுகிறார். விமானத்திலும் ரயிலில் முதல் வகுப்பிலும் செல்பவர்கள் போலும் சில சமயங்களில் ‘தேர்ட் க்ளாஸ்’ ஆக இருப்பதை தலைப்பில் சுட்டுகிறார். அதே போன்று இரண்டாவது கதையின் தலைப்பில் யாழ் என்கிற யாழ்ப்பாணம் படுகிற அவஸ்தையை சிலேடையாக ‘யாழ் இனிது என்று யார் சொன்னது’ என்று கேட்கிறார்.

அவர் கூறியபடியே கடைசி வாக்கியத்தில் ஒரு பஞ்ச் வைத்து முடிக்கிறார்.

முதல் கதை “ஊருக்குத்தான் உபதேசம்” என்று சொலவடைக்கு ஏற்ப உள்ளது. அதே போன்று இரண்டாவது கதை “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்ற சொல்லுக்கு ஏற்ப உள்ளது. இதைத்தான் ஆசிரியரும்

//கடைசி வாக்கியத்தில் அல்லது கடைசிப் பத்தியில் ஒரு கொக்கி போட்டு சுண்டியிழுத்து வாசகனைச் சிலிர்க்கச் செய்கிற உத்தியை அல்லது வித்தையையும் என்னுடைய தனித்தன்மையாய் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். // என்கிறார்.


28 கருத்துகள்:

  1. இன்றைய பாசிடிவ் செய்திகள், அதிலும் கூலித் தொழிலாளியாக இருந்துகொண்டு சாதித்த பெண் என்னைக் கவர்ந்தார். படிப்பு போல ஒரு குடும்பத்தில் மாற்றம் கொண்டுவர வேறு சாதனமில்லை. வந்து எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. கதையை இனித்தான் படிக்கணும்.

    எந்தப் பகுதி/பதிவை எழுத எழுத்த்தான் மிளிரும். ஜெயகுமார் சார், நிறைய நல்ல கதைகளை அறிமுகம் செய்துள்ளார். பல பதிவுகள் எழுதும்போது சி சப்பையாக இருப்பது தவிர்க்க இயலாது. தொடர்ந்து, பிற மொழிச் சிறுகதைகளில் அவரைக் கவர்ந்தவற்றை எழுதவேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. கதைக்கான கருத்துகளுக்கும், அவர் பதிலெழுதும்போதுதான் பதிவைப் பற்றிய விவாதங்களும் முழுமைபெறும் என்பது என் அபிப்ராயம் (தமிழில் ஒரு பொருளுக்குப் பல வார்த்தைகள் உண்டு. அவற்றில் தமிழ் வார்த்தையைத்தான் உபயோகிக்கணும். பிறமொழியிலிருந்து தமிழுக்கு வந்தவைகளை முடிந்த அளவு தவிர்க்கணும். இந்த என் கருத்தில் எந்த வார்த்தைக்கு தமிழ் வார்த்தைகள் உண்டு?)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை சார் தங்களுடைய ஊக்குவித்தலுக்கு நன்றி. நான் கதையைப் பற்றி கருத்துக்கள் எழுதுபவர்களுக்கு பதில் சொல்லாததிற்குக் காரணம் அந்தக் கதை ஆசிரியர் வேறு ஒருவர் என்பதாலேயே. கதை பற்றிய என்னுடைய கருத்துக்களுக்கு பதில் கருத்துக்கள் கூறுபவர்களுக்கு சாதாரணமாக விளக்கம் கூறுவது உண்டு. என் பணி ஒரு "ஆற்றுப்படை" என்பது மட்டுமே! ஸ்ரீரங்கத்து உலக்கை பற்றி தெரியுமா? ஒன்றுமே சொல்லவில்லை.

      இத்தலமும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.

      https://tamil.sampspeak.in/
      Jayakumar

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. பிரிட்டனின் சிறந்த விருது பெறும் இந்திய வம்சாவளியான ஏழு வயது சிறுமி மோக்-ஷா வையும் , கூலி வேலை செய்தும், படிப்பின் மேல் ஆர்வமாக இருந்து, படித்து சாதித்து டாக்டர் பட்டம் வாங்கிய பாரதியையும் பாராட்டுவோம். திறமைகள் என்றும் போற்றப்படக் கூடியவை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதைப்பகிர்வும் அருமை. இவரது கதைகளை வாராந்திர பத்திரிக்கைகளில் முன்பு படித்திருக்கிறேன்.

    இன்றைய இரு சிறு கதைகளிலும், கதையின் முடிவு வார்த்தைகளை கொண்டு கதை முடிவை தெளிவுபடுத்தியது சிறப்பு. முதலில் இடம் பெற்ற சிறுகதையை ஏற்கனவே படித்துள்ளேன் என நினைக்கிறேன். இரண்டாவது சிறுகதை மனதை மிகவும் வருத்தியது.

    ஆசிரியர் குறிப்பு, அவரின் பேட்டி அனைத்தையும் படித்து தெரிந்து கொண்டேன். இக்கதைகளை இன்று தேர்வு செய்து இங்கு பகிர்ந்தமைக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ஒவ்வொரு வாரமும், பல மறக்க முடியாத எழுத்தாளர்களின் படைப்புகளை இங்கு வழங்கி வரும் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களின் பணி சிறந்தது. வாழ்த்துகள். எனவே பழைய ஊக்கத்துடனேயே தொடருங்கள். நாங்களும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் இருக்கிறோம். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமும் தவறாது வந்து எல்லோரும் நலம் வாழ வாழ்த்தி பதிவை பற்றி இன்சொல் மட்டுமே கூறி விரிவான கருத்து சொல்லி ஊக்குவிக்கும் சகோ கமலா அவர்களின் பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  7. டாக்டர் பட்டம் பெற்ற கூலித்தொழிலாளி பாராட்டுக்கு உரியவர்.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  9. மோக்-ஷா , பாரதி, தொழில் அதிபருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    நல்ல செய்திகள்.

    பதிலளிநீக்கு
  10. இரு கதைகளும் நன்றாக இருக்கிறது.
    இராண்டாவது கதை சோகம் ஆனால் அப்போது உள்ள சூழ்நிலையை கூறுகிறது. முருகன் ஏன் மனசு வைக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது மனதில்.
    கதை தேர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  11. பாசிட்டிவ் செய்திகளில், ஆந்திராவில் ஒரு கூலி வேலை செய்யும் பெண்மணி டாக்டர் பட்டம் அதுவும் வேதியியலில்!!!!!! செம பாசிட்டிவ். எப்படியான பின்னணி! படிக்க வேண்டும் என்று நினைத்தால் ஆயிரம் வழிகள் இருக்கின்றன. நம் விடா முயற்சியும் ஆர்வமும்தான் மிக மிக முக்கியம் என்பதை நிரூபித்திருக்கிறார்! எனக்கு வார்த்தைகளே இல்லை....கல்வி என்பது எவ்வளவு முக்கியம் ஒரு குடும்பத்தையே மாற்றும் திறன் படைத்தது. இங்கு நான் கல்வி என்பது ஏட்டுப் படிப்பு என்றில்லை, விவசாயம் செய்பவர்கள், தொழில் செய்பவர்கள் கூட பலவற்றை அனுபவங்களில் கற்று செயல்படுத்தி முன்னேறிடலாம் ஆர்வம் + அயராத உழைப்பு இதுதான் ingredients!

    மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள் அப்பெண்மணிக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. 2016 செய்தி - லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்!!! இவருக்கும் பாராட்டுகள். முன்னுதாரணம். டாம்பீகக் கல்யாணங்கள் மத்தியதரக் குடும்பங்களுமே இப்பல்லாம் செய்யறாங்க...அதுக்கு இவர் முன்னுதாரணம்.

    என் மனதில் இருக்கும் எண்ணம். என் தனிப்பட்டக் கருத்து. கல்யாணங்கள் எளிமையாக்கப்பட வேண்டும்! அதுக்குச் செலவு செய்வதை எத்தனையோ நல்ல விஷயங்களுக்குச் செலவழிக்கலாம்.

    லண்டன் - குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள்.

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஜெகே அண்ணா ஏன் புலம்பல்!? நோ புலம்பல். நீங்க நிறைய நல்ல கதைகள், எங்களுக்குத் தெரியாத எழுத்தாளர்கள் பலருடைய கதைகளை இங்க பகிர்ந்திருக்கீங்க. அதற்கான வாசிப்பும் அதைப் பகிர உங்கள் உழைப்பும் அதுவும் பலவித உடல் உபாதைகளுக்கு இடையில் செய்வது அபாரம். ஸ்ரீரங்கத்து உலக்கையை எல்லாம் அப்பால வைங்க..புரிகிறது நீங்கள் மட்டுமே இங்கு இடித்துக் கொண்டிருக்கீங்க..... உங்களுக்கு ஒரு கை கொடுக்கணுமா இடிக்க?!!!!!!!!!!!! ஹாஹாஹாஹாஹா ...

    ஸ்ரீராமும் கேட்டு அலுத்துவிட்டார்!!!! யாராவது கூட இடிங்கப்பான்னு சொல்லி.....எனக்கும் பகிர ஆசையாகத்தான் இருக்கிறது. வாசிக்கவும் செய்கிறேன். ஆனால் எழுதுவதற்குதான் சிரமமாக இருக்கிறது அதாவது நேரம். முயற்சி செய்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இன்று பகிரப்பட்ட கதைகள் இரண்டுமே நன்று இரண்டாவது கதை மிகவும் பிடித்தது. மனதை என்னவோ செய்த கதை. இரண்டுமே எளிமையான கதைகள். கதைக்கருவும்..

    முதல் கதையில் தலயணையை ஆட்டையை போட்டிருக்கிறாரோ? அது சரி சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல இப்படித் தலையணை எல்லாம் கொடுக்கறாங்களா? கேட்டா கொடுப்பாங்களோ?!! முகம் துடைக்க டவல், டிஷு தருவாங்க..எனக்கு விமானப்பயணம் அதிகம் அனுபவம் இல்லை என்பதால் கடைசியில் கொக்கி என்றது புரியவில்லை . அப்புறம்தான் ஓ டம்ளரை ஆட்டையை போட்டது பற்றி சொல்லியிருப்பதற்கும் இதற்கும் முடிச்சு...

    ஹோட்டல் டம்ளர்ல இது கீதா கபேயில் திருடியதுன்னு அச்சடிச்சிருப்பாங்க.....ஆனா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலையணையில அப்படி எதுவும் இருந்திருக்காதோ என்னவோ அதான் அவர் நாம கொடுத்த டிக்கெட்டுக்கு இதுவும் கொடுக்கறாய்ங்க போலன்னு எடுத்து வைத்துக் கொண்டார் போல!!!!!!!!!!!!!!!!!!! ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  15. வெளிநாட்டுப்பயணம் செய்யறவங்க பலரும் அந்த ஏர்லைன்ஸ் கொடுக்கற பேஸ்ட், சின்ன ப்ரஷ், அப்புறம் சின்ன சோப் கூட கொண்டு வந்ததைப் பார்த்திருக்கிறேன்...சின்ன டவல்கள் கூட. pouch.....இப்படிச் சின்ன பொருட்கள் பார்த்திருக்கிறேன் கிஃப்ட் நு கூட...ஒரு வேளை அவங்க frequent fliers பட்டியலில் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உற்சாகமூட்டியதற்கு நன்றி கீதா மேடம். நன்றி. நீண்ட பயணங்களில் உறங்குவதற்காக கண்களை மூட மாஸ்க்கும் தலைக்கு சிறு தலையணையும் தருவது வழக்கம்.

      நீக்கு
    2. விமானப் பயணங்களில் சின்னப் பவுச் ஒன்றில் பேஸ்ட், பிரஷ், சின்னக் கைத்துண்டு மெல்லியதாக வைத்திருப்பார்கள். சின்னக் குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் கொடுப்பதும் உண்டு. சாக்லேட், கேக், பிட்ஸா, ஐஸ்க்ரீம் போன்றவையும் நேரத்துக்கு ஏற்றாற்போல் கொடுப்பாங்க. குட்டிக் குஞ்சுலுவுக்கு எங்களோட வந்தப்போ ஐஸ்க்ரீமும், பொம்மையும் கிடைச்சது. எக்சிக்யூடிவ் வகுப்பு/முதல் வகுப்பு எனில் இரவு நேர உடை, செருப்பு, துண்டு, சாக்லெட் பெட்டிகள், சோப், கைத்துண்டு, பேஸ்ட், பிரஷ் போன்றவற்றோடு விமானம் கிளம்பத் தாமதம் ஆனால் உணவு இலவசம், தங்குமிடம் இலவசம் எனக் கொடுப்பாங்க. காத்திருக்கும் நேரத்தைப் பொறுத்துப் படுக்கவும் ஏற்பாடுகள் செய்வார்கள்.

      நீக்கு
  16. இன்று வருகை புரிந்தோருக்கும் கருத்துகள் கூறியோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நன்றிஜெஸி ஸார் மறக்காமல் என்னைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு.
    நான் தற்சமயம் யு.எஸ்.ஸில் இருப்பதால்
    தாமதமாக இப்பொழுது. தான் பார்த்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. மோக்க்ஷா பாரதி இருவருக்கும் வாழ்த்துகள்.
    இரண்டு கதைகளும் அருமை. இரண்டாவது மனம் கனத்தாலும் அன்றைய காலத்தை அப்பட்டமாக காட்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  19. மிக நீண்ட இடைவெளிக்குப்பின் தளத்திற்கு வந்தேன். தகவல்கள் சிறப்பு. இரண்டு சிறுகதைகளும் மனதை கவர்ந்தன. அதிலும் முதல் கதை மிகவும் சிறப்பு. கதை எழுதிப் பழகும் என் போன்றோருக்கு இப்பகுதி மிகவும் உதவியாக இருக்கும். நன்றி!

    பதிலளிநீக்கு
  20. அனைத்தும் மிக நல்ல செய்திகள். இந்திய வம்சாவளிப்பெண்ணின் சாதனையும் கூலித்தொழிலாளியின் சாதனையும் அபாரம். அவங்களை நினைச்சால் எனக்கு வெட்கமாய் இருக்கு. இப்படி எதுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருக்கோமேனு நினைச்சுக்கறேன்.

    திருமணங்களில் செலவு குறைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. மீதமாகும் பணத்தை வேறு வழியில் செலவு செய்ய இஷ்டமில்லை எனில் கல்யாணப் பெண்/பிள்ளைகள் பெயரிலேயே நிரந்தர வைப்புத் தொகையாகப் போட்டு அவங்களிடமே கொடுத்துடலாம்.

    பதிலளிநீக்கு
  21. திரு ஜேகே அவர்கள் எழுதி இருப்பதைப் படிக்கையில் வருத்தமாக இருக்கு. எல்லோருமே அவர் எழுதுவதை ஆதரிக்கத் தானே செய்கிறோம்? பிறகு ஏன் இந்த மனத் தளர்ச்சி? உடல் நிலை/மனநிலை காரணமோ? உடல் பூரண குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். மலையாளத்தில் பல தெரியாத விஷயங்களை இந்த மொழி பெயர்ப்புக் கதைகள் மூலமாகத் தானே தெரியப் படுத்தி இருக்கார்.

    பதிலளிநீக்கு
  22. இப்போதெல்லாம் ஆழமான கருத்துள்ள கதைகளைப் படிக்க ஆளில்லை என்பதும் உண்மை. லேசாகப் புரட்டிப் பார்த்துட்டுப் போகணும் என்னும் எண்ணமே அனைவரிடமும் உள்ளது. ஆகவே வேகமாகப் படிக்கும் சில சிறுகதைகளையே விரும்பிப் படிக்கின்றனர்.அப்படியும் வித்யா சுப்ரமணியம், ரிஷபன் ஸ்ரீநிவாசன் போன்றோர் நல்ல சிறுகதைத் தொகுப்புகள் வெளியிடுகின்றனர். நம் மாலா மாதவன் கூட வெளியிட்டிருக்கார். அவற்றுக்கும் ரசிகர்கள் இருக்கத்க் தான் செய்கின்றனர். எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யக் குழு அவங்களைத் தொடர்பு கொண்டு அவங்க மூலம் சிறுகதைகள், விமரிசனங்களைச் செய்ய வைக்கலாம். அதோடு சனிக்கிழமை வெறும் நற்செய்திகளை வெளியிடும் ஒரு கிழமையாகவே இருந்து வந்தது. ரமா ஸ்ரீநிவாசன் ஏதோ அவர் அனுபவங்களை எழுத ஆரம்பித்துப் பின் பல மாற்றங்கள் கண்டு கடைசியில் இப்போ ஓரிரு வருடங்களாக திரு ஜேகே அவர்கள் தன் கைவண்ணத்தைக் காட்டி வருகிறார். மறுபடியும் பாசிடிவ் செய்திகளுக்கு மட்டும் என இந்தக் கிழமையை ஒதுக்கினால் சரியாக இருக்காது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!