சனி, 15 ஜூலை, 2023

நேர்மை, உழைப்பு மற்றும் நான் படிச்ச கதை ​

 

============================================================================================================================================================================================================================


நீலகிரி மாவட்டம், ஊட்டி கார்டன் மந்து பகுதியைச் சேர்ந்த தோடர் பழங்குடி மாணவி #நீது_சின், முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாது தோடர் பழங்குடி இனத்தில் நீட் தேர்வை வென்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகேயுள்ள காரை கிராமம் மலையப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்-மஞ்சுளா தம்பதியினர். நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இந்த தம்பதியின் மகள் #கோகிலா.
ஊசிபாசி மணிகள் விற்று பிழைப்பு நடத்தி வரும் சுப்பிரமணியன் தனது மகளை படிப்பில் உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் படிக்க வைத்தார்.
அதற்கேற்ப தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்ற நிலையில் கோகிலாவும் படிப்பில் அதிக கவனம் செலுத்தினார். அதன் பிரதிபலனாக தற்போது நீட் தேர்வில் 161 மதிப்பெண்கள் பெற்று நரிக்குறவர் சமுதாயத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் மாணவி என்ற பெருமையை கொண்டுள்ளார்.

============================================================================================


19 வருஷமா குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா என நெடும் பயணங்களில் கழிகிறது என் வாழ்க்கை.
குடும்பத்தின் சிரமத்தைப் போக்க, கணவருக்கு உதவியாக கிளீனராக லாரி ஏறி, இப்போது முழுநேர டிரைவர்.
அதுவும், மாநிலம் விட்டு மாநிலம் போய் சரக்கு ஏற்றி இறக்கும் டிரைவர்.
நான் சங்ககிரிங்க,
சங்ககிரியில் பெரும்பாலானோருக்குத் தொழில் லாரி ஓட்டுவது தான்.
கோவை, திருப்பூர் என தொழில் நகரங்கள் சூழ்ந்திருப்பதால் சரக்கு ஏற்றி இறக்க லாரிகளுக்கு தேவை அதிகம்.
செல்வமணியின் பிறந்தகமும் புகுந்தகமும் டிரைவர் குடும்பம் தான்.
கடன் தொல்லை ஒரு பக்கம்...
கணவர் படும் சிரமத்தைக் குறைக்க வேண்டும் என்ற தீவிரம் இன்னொரு பக்கம்...
திருமணத்துக்கு முன் சைக்கிள் கூட ஓட்டப்பழகாத செல்வமணி, திருமணத்துக்குப் பிறகு குடும்பச்சூழல் காரணமாக லாரி ஓட்டக் கற்றுக் கொண்டேன்
"எனக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேரையும் நல்லாப் படிக்க வச்சுட்டேன். மூத்தவன் எம்பிஏ முடிச்சுட்டு பெங்களூர்ல வேலைக்கு சேந்திருக்கான்.
சின்னவனும் ஐ.டி ஐ முடிச்சுட்டு வேலை பாக்குறான்"
"8 லட்சத்துல ஒரு வீடு கட்டிட்டோம். இன்னும் கொஞ்சம் கடன் இருக்கு. ரெண்டு வருஷத்துல அதையும் அடைச்சுட்டு நிம்மதியா வீட்டுல உக்காரலாம்ன்னு நினைக்கிறேன்..."

================================================================================ 

நான் படிச்ச கதை (JKC)

பாகம் 2/2பாகம் 1 சுட்டி


முன்கதைச்சுருக்கம்

அரி என்கிற அறிவுக்குமரன் ஏ/எல் (+2) பள்ளிப் படிப்பில் இலங்கையில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றவன். தாரிணி என்கிற சக மாணவி அவனை பி கே என்கிற பரமேஸ்வரன் கோடீஸ்வரன் என்ற பள்ளி இராசயன ஆசிரியர் விளித்ததாக கூறிவிட்டு செல்கிறாள். பாராட்டுவதற்காக இருக்கலாம் என்று அரி அவருடைய வீட்டிற்கு செல்கிறான்.

பி கே சார் ஒரு விசித்திர பேர்வழி. எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி செய்து கொண்டோ அல்லது படித்துக்கொண்டோ இருப்பார். வயதானாலும் தனியாக வாழ்ந்து வந்தார்.

பி கே சார் அவனிடம் ஒரு புதையல் பற்றிக் கூறுகிறார்.

ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் சிங்கள அரசன் ஆறாம் பராக்கிரம பாகுவின் படைத்தலைவன் சப்புமல் குமாரய என்கிற செம்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து கைப்பற்றினான். அவனுக்கு உதவியாக முத்து ராசக் கவிஞர் என்கிற உள்ளூர் எட்டப்பன் இருந்தான். அந்த முத்து ராசக் கவிஞருடைய வழித்தோன்றல் தான் பி கே. முத்து ராசக் கவிஞர் ஒரு பொக்கிஷத்தை சேர்த்ததாகவும் அதை ஒரு ரகசிய கேந்திரத்தில் புதைத்து வைத்துள்ளதாகவும் அந்தப் புதையல் 400 கோடி ரூபாய் மதிப்புள்ளது என்றும் பி கே சார் கூறுகிறார்.

இவ்விவரங்களை அவர் பாட்டாகவும் எண்களாகவும் சங்கேதமாக (encrypt) செய்து எழுதி வைத்துள்ளதாகவும் கூறுகிறார். இனி


பிகே சேர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு இப்போதுதான் என்னை வடிவாகப் பார்த்தார். கொஞ்சம் நக்கல் சிரிப்பும் வந்தது.

“எஞ்சினியர் ஆகி? … உழைச்சு ..தெரியாமக் கேக்கிறன் … எவ்வளவு உழைப்பாய்?”

“சேர் .. வெள்ளவத்தைல ஒரு பிளாட் கட்டினா, கையில ரெண்டுகோடி சும்மா வருதாம்.. நான் சிவில் செய்யிறதா?”

“இண்டைக்கே நானூறு கோடி … உனக்கு கிடைக்கப் பண்ணுறன்”

முதன்முதலில் என் பேச்சில் மரியாதை குறைந்தது.

“சேர் சும்மா பேய்க்கதை கதைக்காதீங்க”

“இல்ல அரி .. இது உண்மைதான், முத்துராயரின் புதையலின் மதிப்பு இன்றைய திகதிக்கு நானூறு கோடி ..அதுபற்றி கதிரையப்பருக்கு பட்டயம் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார்”

“எப்படி?”

“அது ஒரு பெரிய பட்டயம் .. சாம்பிளுக்கு ஒன்று சொல்கிறேன்”

“செம்பொன் மகுடமணி செப்பு குடம் எட்டு அணை
சுற்றுநவ ரத்னவகை சுற்றியழுத் தித்திருத்திப்
பட்டுமணி வைரவை டூரியமும் மட்டுவுமே
பொன்னினங்கி சாத்திபுகா, காற்று அது தோற்றிடுமே”

“தளை தட்டுது சேர்”

“மரண பயத்தில எழுதியிருக்கிறார். அவசரமா. அதில தளை தட்டியிருக்கும்.”

“இதை நம்பச்சொல்லுறீங்களா? இதல்லாம் எங்கட வரலாற்று நூல்களில இருக்கா?”

“இப்படி சுமார் ஆயிரம் பாட்டுகள் இருக்கு. ஆனா ஒருத்தருக்கும் எங்கட பரம்பரை மூச்சுக்கூட விடேல்ல. ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு நகை, நட்டு பற்றி சின்ன சின்ன டீடைலிங்கூட. இன்றைய மார்க்கட் நிலவரப்படி ஒரு பவுன் எண்ணாயிரம் ரூபா கணக்குப்போட்டேன். நானூறு கோடி. சிம்பிளா வரும். அவ்வளவு பெரிய புதையல்.”

“செண்பகப்பெருமாள் தேடி எடுக்காம விட்டிருப்பானெண்டோ?”

“போட்டு மெழுகி சாறி இருக்கிறான் .. முத்துராயரிண்ட வீடு மட்டுமில்லாமல் அக்கம் பக்கம் எல்லாமே, சொந்தக்காரர் எல்லாரையும் கழுவேற்றியிருக்கிறான். கதிரையப்பர் மாத்திரம் உச்சிட்டார். மாதொட்டத்துக்குச்சென்று இந்தியாவுக்கு தப்பீட்டார். அன்றைக்கு தொடங்கின வேட்டை இது”

“இவ்வளவு தகவல் எழுதின முத்துராயர் அந்தப்புதையல் எங்கே இருக்கும்? எண்டு எழுதிவைக்க இல்லையா?”

“அங்கதான் ஒரு பிசகல். தகவலை அப்படியே எழுதினா செண்பகப்பெருமாள் கைக்கு அது போயிடும் என்று, புதையல் எங்கே இருக்கு என்ற விஷயத்தை சங்கேத பாசையில் எழுதிவிட்டார். கிரிப்டோகிராபி .. கேள்விப்பட்டிருக்கிறியா?”

“ஓ .. கேள்விப்பட்டிடுக்கிறன்.. அதை உடைக்க ட்ரை பண்ண இல்லையா?”

“அதை உடைக்கிறதுக்கு ஒரு கீ … இன்னொரு சங்கேத வார்த்தை வேண்டும். அதை முத்துராயர் தன்னுடைய வேலைக்காரனான நல்லதம்பியிடம் கொடுத்திருக்கிறார். தன்னுடைய உயிர்போனால், செண்பகப்பெருமாள் இறந்தபிறகே அந்த சங்கேத வார்த்தையை தன் குடும்பத்திடம் சேர்க்கவேண்டும் என்ற உத்தரவோடு”

“நல்லதம்பி செண்பகப்பெருமாள் இறந்தவுடன் அந்த சந்தேக வார்த்தையை கதிரையப்பர் குடும்பத்திடம் செர்த்தானா?”

“ம்ஹூம் .. முத்துராயர் பிலாப்பழத்துக்கு பக்கத்து பிலாப்பழமே நல்லதம்பிதானே”

“அடக் கருமாந்திரமே .. அப்ப அந்த புதையலுக்கு என்னதான் ஆச்சுது?”

“பிறகென்ன .. வெளியில இத சொல்லவும் முடியாது. அந்த புதையல் எங்கட குடும்ப சொத்து. அதால பரம்பரை பரம்பரையா நாங்களே அந்த சந்கேத வார்த்தையை கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். அவ்வப்போது கணிதத்தில் மண்டைக்காய்கள் உருவானா, அவையிண்ட ஹெல்ப் கேப்பம் .. வானதி, உதயசங்கர், ஹம்சாநந்தினி என்று பலர். ஒரு புல்லைக்கூட தூக்கிப் போட முடியாமல் போச்சுது”

எனக்கு இப்போது புரியத்தொடங்கியது. சேர் என்னிடம் அந்த கிரிப்டோகோடைக் கொடுத்து உடைக்கச்சொல்லப்போகிறார். ஒரு கை பார்த்திடவேண்டியதுதான்.

“உங்களிட்ட அந்த கோட் இருக்குதா சேர்?”

சேர் எழுந்து மீண்டும் அலுமாரி புதைகுழிக்குள் விழுந்தார். மீண்டும் சாறத்தை பிடித்து சீறினார். இம்முறை ஒரு புராதன பெட்டி போன்று எதையோ எடுத்தார். திறந்துபார்த்தால் உள்ளே. அட ஓலைச்சுவடி. வாங்கிப்பார்த்தேன். முதல் பக்கம், தமிழில் இருந்தது.

கருநாக கந்தகத்து பெருமாளை துதிபாடி
புகழெலாம் துறந்தேனே, பொருளெலாம் புதைத்தேனே
புதைகுழியில் எழுந்திட்டு போராடும் மறவன்போல்
சிதைமீண்டு வருவேனே சிறைமீட்டுத் தருவேனே.

சேரை நான் நிமிர்ந்துபார்த்தேன்.

“ஆள் இதிலதான் சும்மா வீரம் பீறிட்டு வெண்பாவுல சீறியிருக்கிறார். ஆனால் செண்பகப்பெருமாள் முன்னாலே காலில விழுந்திருக்கிறார். அவன் மசியேல்ல”

“அதில்ல சேர் .. தமிழில விளக்கமாதானே இருக்கு .. என்ன பிரச்சனை?”

“ஓ அதக் கேக்கிறியா? .. மேல வாசி..”

“ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்
அக்குறு தொலைத்து லக்குணு புகுத்தி
ஆரியன் உறையும்வரை பாயிரம் காப்பீரே.
காரியம் முடியும்வரை காதிரு இணைப்பீரே”

“விளங்கேல்ல .. ஆனா இதுவும் தமிழ்தானே”

“அடுத்த பக்கத்தை திருப்பு”

“480 13 400 550 54 1 300 23 43 234 23 43 13 9 555 54 80 104 87 509 234 23…”

எல்லாம் இலக்கங்கள். குழம்பிப்போனேன்.

“என்ன சேர் இது?”

“இதிலதான் விஷயம் இருக்கு … மூன்று தலைமுறைகளா குத்தி முறிஞ்சும் ஒரு மண்ணும் விளங்கேல்ல… நீ கண்டுபிடி பார்ப்பம் .. நானூறு கோடி ரூவா…”

“அதில்ல சேர்..”

“நீ எல்லாம் ஐலண்ட் பர்ஸ்ட் எண்டு எண்ணத்துக்கு சொல்லிக்கொண்டு திரியிறாய்”

சேர் அடுத்த ஆயுதத்தை வீசினார். இது இப்போது ஒரு தன்மானப் பிரச்சனையாகிவிட்டது. காட்டிக்கொள்ளவில்லை.

மீண்டும் மீண்டும் இலக்கங்களைப் பார்த்தேன், கூட்டிக்கழித்து பெருக்கி வகுத்து, லொக் எடுத்து, வகையிட்டு, தொகையிட்டு, தூய கணித அறிவு எல்லாமே பாவித்துப்பார்த்தாலும் ம்ஹூம். இதற்கான கீ நல்லதம்பியிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவன் மண்டையப்போட்டிட்டான். அவனிடம் இருந்த சங்கேத வார்த்தையை முன்னூறு வருடங்களுக்கு பின்னர் எங்கே போய்த் தேடுவது? இவ்வளவும் பக்காவாக செய்த முத்துராயர் ஒரு பக்அப் ப்ளான் பண்ணாமலா போயிருப்பார்? மீண்டும் முன்பக்கத்தை புரட்டினேன்.

“கருநாக கந்தகத்து பெருமாளை துதிபாடி
புகழெலாம் துறந்தேனே, பொருளெலாம் புதைத்தேனே
புதைகுழியில் எழுந்திட்டு போராடும் மறவன்போல்
சிதைமீண்டு வருவேனே சிறைமீட்டுத் தருவேனே”

நிச்சயமாக இது இளவயது மகன் கதிரையப்பருக்கு எளிமையாக அவன் வயதுக்கு ஏற்ற தமிழில் முத்துராயர் எழுதியிருக்கிறார். “பயப்படாமால் தனியே போய்த்தப்பு மகனே, நான் வந்து உன்னை மீட்பேன்” என்கிறார். “சிறைமீட்டு தருவேனே” என்பதுதான் விளங்கவில்லை. எது சிறை? கதிரையப்பர் இந்தியாவுக்கு தப்பி ஓடினதாக சேர் சொன்னாரே. ஆனால் முத்துராயரோ அதை சிறை என்கிறாரே. அப்படி என்றால் இப்போது போலவே அப்போதும் இந்தியாவுக்கு தப்பியோடும் தமிழன் சிறைப்பிடிக்கப்பட்டானா? தேவையில்லாத இடத்தில் எதற்கு முத்துராயர் அரசியலை புகுத்தினார். இதுதான் அவர் டச்சோ? ..

அடுத்தபாடலுக்கு போனேன். சேர் டீ என்ற பெயரில் ஒரு களனித்தண்ணி ஊற்றிக்கொண்டுவந்து தந்தார்.

"ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்
அக்குற தொலைத்து லக்குணு புகுத்தி
ஆரியன் உறையும்வரை பாயிரம் காப்பீரே
காரியம் முடியும்வரை காதிரு இணைப்பீரே”

இந்த தமிழ் கடினமாக இருக்கிறது. சிறுவனான கதிரையப்பருக்கு எழுதியதாக தெரியவில்லை. பெரியவருக்கான கவிதை இது. “ஐந்திரம் நிறையோனின்”. யாரது அந்த ஐந்திரம் நிறையோன்? சேரிடம் கேட்டேன்.

“தெரிஞ்சா நான் ஏண்டா இப்பிடி இருக்கிறன் .. ஐந்திரம் என்றால் எந்திரம் .. அந்தக்காலத்தில எந்திரம் என்றால் குதிரைவண்டில் .. அல்லது உழவு கருவி, வண்டிலில் நிறையோன் யாரு … ”இல்லாட்டி எந்திரம் என்றால் கொம்பியூட்டரா? அந்தக்காலத்தில எங்கடா கொம்பியூட்டர்?”

“இல்ல சேர் .. ஐந்திரம் என்றால் வேற என்னவோ .. இந்திரனாக இருக்கலாம்”

“சந்திரனாக கூட இருக்கலாம்”

சேர் சொல்லிவிட்டு கண்ணடித்தார். சேருக்கு மூடு கொஞ்சம் மாறுமாப்போல இருந்தது. இதற்குமேல் தாங்காது. சேரிடம் அந்த பாடல்களை நகல் எடுக்கலாமா? என்று கேட்டேன். மறுத்துவிட்டார். “ஒருவருக்கும் சொல்லமாட்டேன்” என்று அம்மாவான சத்தியம் செய்தேன். இலக்கங்களை மாத்திரம் எழுதிக்கொண்டுபோக அனுமதித்தார். முதலாவது பாடல் தேவையில்லை போன்று தோன்றியது. இரண்டாவதை மனப்பாடம் செய்தேன்.

"ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்
அக்குற தொலைத்து லக்குணு புகுத்தி
ஆரியன் உறையும்வரை பாயிரம் காப்பீரே
காரியம் முடியும்வரை காதிரு இணைப்பீரே”

“ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்’ .. 480 13 400 .. எல்லாமே கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருக்க, ஷ்ரோடிங்கருக்கும் பிளாங்குக்கும் கைகாட்டிக்கொண்டு சேரிடமிருந்து விடைபெற்றேன்.

“உன்னை ஒரு மத்ஸ் மண்டைக்காய் எண்டு நினைச்சன்”

சேர் நக்கலடிக்க அவமானத்தோடு வெளியேறினேன். பெடலில் கால்வைத்து சைக்கிள் சீட்டில் உட்காரும்போது முன்வீட்டில் தாரணி பூங்கன்றுக்கு ஹோர்ஸ் பைப்பால் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். நான் அவளை கண்டு அலட்டிக்கொள்ளும் மூடில் இல்லை. 480 13 400 .. ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில் … 480 13 400 .. இப்போது தாரணி வீட்டு கேற்றடி தாண்டுகிறேன். என்னைக்கண்டும் காணாமல் பூங்கன்றுக்கு தண்ணீர் விட்டபடி .. ச்சே இவளைப்போய் .. 143 சொன்னேனே .. 143.. ஆ. மூளைக்குள் எதுவோ பளிச்சிட்டது. அப்படியென்றால் ஒவ்வொரு இலக்கமும் ஒவ்வொரு எழுத்து. புரிந்துவிட்டது.

மீண்டும் ஒற்றையை புரட்டினேன். முதல் எழுத்து 480இல் ஆரம்பிக்கிறது. ஆகக்கூடிய இலக்கம் 555. முன்னிரு பாடல்களின் எழுத்துக்களின் எண்ணிக்கை இருநூறை தாண்டாது. எனவே சங்கேத வார்த்தை அந்தப்பாடல்களில் இல்லை. வேறு எங்கேயோ இருக்கிறது. நல்லதம்பியிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் முத்துராயர் முட்டாள் கிடையாது. இன்னொரு பிளானும் வைத்திருக்கவேண்டும். அந்த இரண்டாவது பாடல். ஏதோவொன்று அதிலே இருக்கிறது அரி. கண்டுபிடிடா. அந்த “ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்”.. ஆயிரம் பாயிரம். பாயிர வரிகள். ஐந்திரம் நிறையோனின் பாயிர வரிகள். எவன்டா அந்த ஐந்திரம் நிறையோன்?

சைக்கிள் அரசடிச்சந்தி, ஆலடிச்சந்தி என்று அலைபாய்கிறது. வீடு போகும் மனமில்லை. ஐந்திரம் நிறையோன் யார்? கம்பனா? வள்ளுவனா? ஒட்டக்கூத்தனா? நேரே சைக்கிள் பொன்னுச்சாமி மாஸ்டர் வீட்டுக்குப்போகிறது. போகும் அவசரத்தில் பொன்னுச்சாமி மாஸ்டர் பற்றிய ஒரு இன்ட்ரோ கொடுக்கும் மூடில் நானில்லை. நேரே விஷயத்துக்கு வருகிறேன்.

“சேர் .. ஐந்திரம் நிறையோன் என்றால் யார்?”

சேர் யோசிக்காமல் பதில் சொன்னார்.

“தொல்காப்பியர்”

“என்ன?”

“மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று சிறப்புப்பாயிரம் சொல்லுது.”

எல்லாமே கணத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

"ஐந்திரம் நிறையோனின் ஆயிரவரிகளில்
அக்குற தொலைத்து லக்குணு புகுத்தி
ஆரியன் உறையும்வரை பாயிரம் காப்பீரே
காரியம் முடியும்வரை காதிரு இணைப்பீரே”

அக்குற தொலைத்து லக்குணு புகுத்தி, அக்குற என்றால் எழுத்து. லக்குணு என்றால் இலக்கம். இரண்டுமே சிங்களச் சொற்கள். அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருமொழியும் தெரிந்தவர் முத்துராயர் மாத்திரமே. ஆரியன் என்று அவர் செண்பகப்பெருமாளை குறித்திருக்கலாம். சிங்கள அரசனையும் குறித்திருக்கலாம். காதிரு இணைப்பீர் என்றால் காதும் காதும் வைத்தபடி. அப்படி என்றால், தொல்காப்பியவரிகளில் உள்ள எழுத்து வரிசையின் இலக்கம் கண்டறிந்து, செண்பகப்பெருமாள் சாகும்வரை பொறுத்திருந்து, பின்னர் புதையலை தேடிப்போய் எடுக்கச்சொல்கிறார். நானூறு கோடி ரூபாய். ஐசலக்கா.

“சேர் உங்களிட்ட தொல்காப்பியம் இருக்குதா?”

கொண்டுவந்தார். “எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து …” 50, 51 … 478, 479, 480 ..” உட் பெறு புள்ளி உரு ஆகும்மே”. ஆகவே சங்கேத வார்த்தைகளின் முதல் எழுத்து “மே”. அடுத்தது 13வது எழுத்து “க”. … 400வது எழுத்து .. “அவ் இயல் நிலையும் ஏனை மூன்றே” “லை” … மேகலை. அடடா. 400 கோடி. இவ்வளவு ஈசியாக கிடைக்குமா? விறுவிறு என்று மிகுதி இலக்கங்களையும் கோர்த்தேன்.

“480(மே) 13(க) 400(லை) 550(க்) 54(கு) 1(அ) 300(மு) 23(து) 43(த) 234(ந்) 23(து) 43(நா) 13(க) 9(ரு) 555(க்) 54 (கு) 80(பு) 104(வி) 87(உ)509(வ) 234(ந்) 23(து) 43(நா)298(லு)354(ம)567(ணி) ..”

கவிதை கவிதை…

“மேகலைக்கு அமுதுதந்து நாகருக்கு புவிஉவந்து”

யாரு மேகலை? .. முத்துராயருமா? அடக்கடவுளே!

“நாலுமணி பல்லவத்து தீவினுக்குள் வாவியொன்று”

மேகலை, நாலு மணிபல்லவத்து, அட எங்கட மணிமேகலை. மேகலைக்கு அமுது .. அமுதசுரபி, நாகருக்கு புவி, நாடு கொடுத்து, அது எது? நாகதீவு. எங்கட நயினாதீவு. நயினாதீவில் எங்கே?

பூசணிக்கு நாலுகாதம் கீழ்திசையில் இருக்குதாம்.
பாசனத்து நீரகற்ற காரிருளும் அகழுமாம்.

பூசணி, நாகபூசணி அம்மன் கோயில். அதற்கு கீழ் திசை .. கிழக்கு ..கோயிலுக்கு கிழக்கே கடல் அல்லவா இருக்கிறது? நாலு காதத்துக்கு எங்கே போவது? கடலுக்குள்ளா?.

“சேர் கீழ் திசை என்றால் கிழக்கா?”

“சில நேரங்களில் தெற்கு திசையையும் கீழ் திசை எனலாம்”

“கடவுள் சேர் நீங்க .. உங்களுக்கு ஒரு வீட்டையே எழுதித்தாறன்”

உற்சாகத்தில் குதித்தேன். அப்பாடி. தெற்கால, நான்கு காததூரம். பாசனத்து நீரகற்ற. பாசனத்து நீரை எங்கே அகற்ற? அதற்கு குளம் வேண்டும். நயினாதீவில் எங்கு குளம்? இருக்கிறதே. ஒன்றே ஒன்று. கண்ணே கண்ணு. கிராய்க்குளம். நயினாதீவு கிராய்க்குளத்தில்தான் புதையல் இருக்கிறது. முதலைக்குளம். ஒருவரும் நீந்தப்போகமாட்டார்கள். கண்டுபிடிக்கவே முடியாது. முத்துராயரின் மாஸ்டர் பிளான். ஜீனியஸ். பிகேயிடம் போய்ச்சொல்லுவோமா? 400 கோடி. “அவன்” கிடந்தான். அவனுக்கு எதற்கு? மூன்று தலைமுறையாக குத்திமுறியிறதை, வானதி அக்கா, உதயசங்கர் அண்ணா, ஹம்சாநந்தினி அக்கா என்று எவராலும் கண்டுபிடிக்க முடியாததை இந்த அரி கண்டுபிடித்திருக்கிறான் என்றால், .. மீண்டும் பாடலை வாசித்துப்பார்த்தேன். பெருமையாக இருந்தது.

மேகலைக்கு அமுதுதந்து நாகருக்கு புவிஉவந்து
நாலுமணி பல்லவத்து தீவினுக்குள் வாவியொன்று
பூசணிக்கு நாலுகாதம், கீழ்திசையில் இருக்குதாம்.
பாசனத்து நீரகற்ற காரிருளும் அகழுமாம்.

அதற்குள் பொன்னுச்சாமி மாஸ்டரின் பெஞ்சாதி டீ கொண்டுவந்தார். குடிக்க நேரமில்லை.

“கோயிக்காதீங்கோ… நேரமில்லை … குறிகட்டுவான் கடைசி லோஞ்சிக்கு நேரம் போட்டுது”

“இப்பத்த பெடியளுக்கு இதே வேலையாப் போட்டுது …. பயங்கர கெட்டிக்காரர் எல்லாருக்கும் என்ன நடக்குதோ தெரியேல்ல”

சேர் புறுபுறுத்தார்.

“என்ன சொல்லுறீங்க சேர்?”

“இப்பிடித்தான் முந்தி வானதியும் .. ”

“வானதியும் .. ?”

அடிவயிற்றை கலக்கியது.

“ஏ/எல் ரிசல்ட் வந்து அடுத்தநாளே தொல்காப்பியம் படிக்க வந்தா…”

“வந்து?”

“ஏதோ நோட்ஸ் எடுத்துக்கொண்டு நயினாதீவுக்கு கும்புடுறதுக்கு ஓடிட்டா”

நான் அதிர்ச்சியில் ஆடாமல் அசையாமல் நின்றேன்.

“என்ர அம்மாளாச்சி .. நானூறு கோடி போயிட்டுதா”

அரற்றியபடி அயர்ச்சியில் மதிலோடு சாய, பொன்னுச்சாமி மாஸ்டர் ஆச்சரியத்தோடு சொன்னார்.

“அட உப்பிடித்தான் உதயசங்கரும் சாஞ்சவன்

பின்னுரை

உப்பிடித்தான் சந்தன வீரப்பன் புதைத்து வைத்த புதையலையும் சிலர் தேடிக் கொண்டிருந்தார்களாம். ஆனால் அவன் புதைத்து வைத்த பணம் தற்போது வெறும் காகிதக் குப்பையாகிவிட்டது.

17 கருத்துகள்:

 1. கதை மிக நன்றாக இருந்தது. இலங்கைத் தமிழின் இனிமை, நகைச்சுவை எல்லாம் கலந்து எழுதியிருக்கிறார். நல்ல பகிர்வு. இதுக்கு படம் போடாமல் விட்டுவிட்டாரே கேஜிஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சனிக்கிழமைக் கதைகளை படம் வரையும் நோக்கத்துடன் பார்ப்பது இல்லை. மேலும், இந்த வாரம் கொஞ்சம் டைட் ஷெட்யூல்.

   நீக்கு
 2. லாரி ஓட்டும் பெண்மணி கவர்ந்தார். நீட்டில் தேற முயற்சி மாத்திரம் போதும், பணக் கட்டுகள் மருத்துவப் படிப்புக்கு வேண்டாம் என்பதைப் பலர் புரியவைக்கின்றனர்.

  பதிலளிநீக்கு
 3. புதையல் பாகம் ஒன்று சுட்டி

  https://engalblog.blogspot.com/2023/07/blog-post_08.html

  பதிலளிநீக்கு
 4. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அதுவும் இருவரின் பின்னணியும் எப்படி இருந்தாலும் தேர்ச்சி பெற்று படிக்கும் ஆர்வம் முன்னுதாரணம். மருத்துவப் படிப்புக்கு ஆகும் செலவு நாம் எல்லோரும் அறிந்ததே. இப்படித் தேர்ச்சி அடையும் போது அந்தச் சுமை குறைகிறது.

  அரசு மருத்துவக்கல்லூரிகள் தங்களின் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

  பல மாணவ மாணவிகள் தனியார் கல்லூரிகளை விரும்புவது அதுதான் காரணமாம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. லாரி ஓட்டும் பெண்மணி குறித்து வாசித்திருக்கிறேன். பாராட்ட வேண்டிய விஷயம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. முடிவு அந்த புதையலுக்கு ஆப்புதான் என்பது முதல் பகுதி வாசிக்கும் போதே யூகிக்க முடிந்தது. அதுவும்

  //“இப்பிடித்தான் முந்தி வானதியும் .. ”

  “வானதியும் .. ?”

  அடிவயிற்றை கலக்கியது.

  “ஏ/எல் ரிசல்ட் வந்து அடுத்தநாளே தொல்காப்பியம் படிக்க வந்தா…”

  “வந்து?”

  “ஏதோ நோட்ஸ் எடுத்துக்கொண்டு நயினாதீவுக்கு கும்புடுறதுக்கு ஓடிட்டா”//

  இந்த வரிகள் உறுதிப்படுத்தின.

  இப்ப அரி, ஷாக்கிலிருந்து மீண்டு, எஞ்சினியர் படிப்பு, வெள்ளவத்தையில் வீடு பற்றி கற்பனையில் இருப்பார்!!! ஹாஹாஹாஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. கதையை மிகவும் ரசித்து வாசித்தேன். ஆசிரியர் எழுதிய விதம் அப்படி. இலங்கைத் தமிழும், இடையில் கவிதைகள் என்று...

  '“தளை தட்டுது சேர்”

  “மரண பயத்தில எழுதியிருக்கிறார். அவசரமா. அதில தளை தட்டியிருக்கும்.”//

  சிரித்துவிட்டேன். இப்படியான பகுதிகள்! நக்கலாக!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. செல்வமணியின் துயர் இரண்டு ஆண்டுகளில் தீரட்டும்.

  பதிலளிநீக்கு
 9. உழைக்கும் கரங்களுக்கும், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

  புதையல் ...ஹா...ஹா...கதை நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 10. நல்ல செய்திகள் அனைத்தும் அருமை.
  எல்லோரையும் பாராட்ட வேண்டும், வாழ்த்த வேண்டும்.
  பாராட்டுக்கள், வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. //அவன் புதைத்து வைத்த பணம் தற்போது வெறும் காகிதக் குப்பையாகிவிட்டது.//

  இப்படி ஆகி விட்டதா புதையல்?

  கதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காகிதக் குப்பையானது வீரப்பன் சேர்த்து வைத்தது.

   நீக்கு
 12. வருகை புரிந்தோருக்கும் கருத்துக் கூறியோர்க்கும் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 13. கதை வெகு சுவாரஸ்யம்.  சட்டென வேகமாகக் கண்டுபிடித்து வேகமாக முடிவுக்கு வந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதையின் இரண்டாம் பாகம் நன்றாக உள்ளது. புதையல் இருக்குமிடத்தை கண்டு பிடித்த விதம் சுவாரஸ்யமானது. ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன விதம் மனதிற்கு கவலைதான்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!