புதன், 19 ஜூலை, 2023

சிங்கப்பூர் மாமா !

 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

செல்ஃபோன், மூக்கு கண்ணாடி இந்த இரண்டில் அடிக்கடி எங்கேயாவது வைத்துவிட்டு தேடும் பொருள் எது?

# இரண்டுமேதான். என்றாலும் கண்ணாடி செல் போன் அளவு காணாமல் போவதில்லை.

$ Phone ஐ க்கூப்பிடலாம் . கண்ணாடி செவிடு!

& கண்ணாடி அணிவதில்லை. செல்போன் எப்பொழுதுமே சட்டைப்பையில் இருக்கும். தூங்கும்போது + சார்ஜ் செய்யும்போது கட்டிலில் பக்கத்தில் இருக்கும். எப்பொழுதாவது, வேறு இடங்களில் வைக்க நேரிட்டாலும், டி வி அருகில் அல்லது லேப்டாப் அருகில் இருக்கும். போனைத் தேடுகின்ற சந்தர்ப்பங்கள் மிக மிக அரிது. 

= = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) மாமியார் & மருமகள் - இருவரில் யாருக்கு டி வி சீரியல்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்? 

2) டி வி சீரியல்களால் விளையும் நன்மைகள் என்னென்ன? 

3) Lending Library உறுப்பினராக இருந்தது உண்டா? அங்கேயிருந்து என்ன வகை புத்தகங்கள் எடுத்துப் படித்திருக்கிறீர்கள்? 

4) உங்களை மிகவும் கவர்ந்த மரம் எது? ஏன்? 

= = = = = = = = =

KGG பக்கம் :

ஸ்ரீநிவாசன் வீட்டுக்குச் செல்லவேண்டிய அந்த நந்நாளும் வந்தது. அது ஒரு சனிக்கிழமை மாலை நேரம். என்  வீட்டிலிருந்து அவனுடைய வீட்டுக்குச் செல்ல வழி கேட்டு வைத்துக்கொண்டேன். 

ஸ்ரீநிவாசன் வீட்டுக்குப் புறப்படுவதற்கு முன்பு என் அண்ணனுடன் ஏதோ சிறிய சண்டை. சண்டை முடிவில், வழக்கம் போல அவன் ஜெயித்துவிட்டான். அந்தக் கோபத்தில், மனதுக்குள் ' போ உனக்கும் சேர்த்து காமிரா, சினிமா ஸ்லைடு எல்லாம் ஸ்ரீனி மாமாவிடம் வாங்கிக்கொண்டு வந்து உனக்குக் கொடுக்கலாம் என்று இருந்தேன். உனக்கு எதுவும் கொடுக்கமாட்டேன் - வெவ்வெவ்வே' என்று நினைத்தவாறு கிளம்பினேன். 

அவனுடைய வீட்டை தேடிக் கண்டுபிடித்ததும் முதல் அதிர்ச்சி. மிக மிக சாதாரணமான ஒரு சிறிய வாடகை வீடு. 

வாசலில் தனி ஆளாக பாண்டி ஆடிக்கொண்டிருந்த ஒரு சிறுமியிடம், " ஸ்ரீநிவாசன் வீடு .. " என்று ஆரம்பித்தவுடன், அவள் உள்ளே பார்த்து, " டேய் சீனி உன்னை தேடிக்கிட்டு யாரோ ஒரு பையன் வந்திருக்கான் " என்று சொல்லிவிட்டு தன்னுடைய சோலோ ஆட்டத்தைத் தொடர்ந்தாள். 

வெளியே வந்த அரை டிராயர் ஸ்ரீநிவாசன், " அடேடே! நீயா? திண்ணையில உட்காரு. இதோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய தங்கையிடம், " யேய் லல்லி - உள்ளே போய் விளையாடுடீ "  என்றான். 

அவள் அதற்கு, " நீ போடா - சொஜ்ஜி பகடவா " என்றாள். தொடர்ந்து பாண்டி ஆடிக்கொண்டிருந்தாள். (பகடவா என்றால் அவளுடைய பாஷையில் பக்கோடா என்று பிறகு தெரிந்துகொண்டேன். ) 

ஸ்ரீனி உள்ளே சென்று சட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு வந்தான். 

என்னிடம், " வா என்னோடு. என்னுடைய மாமாவைப் பார்க்கப் போகலாம்" என்றான்.. 

என் மனது சொல்லியது : ' அதானே பார்த்தேன் - சிங்கப்பூர் மாமாவெல்லாம் இந்த மாதிரி சாதாரண வீட்டில் தங்குவார்களா - பெரிய வீடு அல்லது ஹோட்டலில் அல்லவா தங்குவார்கள்! ' 

அவனுடன் ஆசையாக கிளம்பி சென்றேன். 

அவன் என்னை அழைத்துக்கொண்டு நாகை நாணயக்காரத் தெருவின் மத்தியில் அமைந்திருந்த, 'நள பீம விலாஸ்' என்ற சிறு காபி கிளப்புக்கு உள்ளே சென்றான். 

உள்ளேயிருந்து வந்த அரை வேட்டி + துண்டு அணிந்த  ஒருவர், " வாடா சீனி - இது யாருடா - உன்னுடைய ஃப்ரெண்டா ? " என்று கேட்டார். 

" ஆமாம் மாமா - இவன் என்னுடைய ஃப்ரெண்ட் - பெயர் கௌதமன் " என்றான். 

மாமா ? 

அடப்பாவி - இவர்தான் சிங்கப்பூர் மாமாவா ? இடிந்துபோனேன். 

அவர் ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் பகடவா(!) கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். அல்வா இல்லை - அதைத்தான் ஸ்ரீநிவாசன் எனக்கு கிலோ கிலோவாகக் கொடுத்துவிட்டானே ! 

பிறகு ஸ்ரீநிவாசனிடமிருந்து நான் தெரிந்துக்கொண்ட விஷயங்கள் : 

ஸ்ரீநிவாசனின் அப்பா சில வருடங்கள் முன்பு இறந்துபோய்விட்டார். 

ஸ்ரீநிவாசனின் தாய் மாமாவும், சித்தப்பாவும் சேர்ந்து இந்த சிறிய நளபீம விலாஸ் ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். ஸ்ரீநிவாசன், அவனுடைய தங்கை, அவனுடைய அம்மா, அம்மாவின் தம்பி குடும்பம், ஸ்ரீநிவாசனின் சித்தப்பா குடும்பம் எல்லோரும் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். 

அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பும் முன்பு  ஸ்ரீநிவாசனிடம் கேட்டேன் - " என்னை ஏண்டா என்னென்னவோ பொய்கள் எல்லாம் சொல்லி ஏமாற்றினாய்? " 

" நான் சொன்னது எல்லாமே டூப்தான்டா  - எல்லாத்தையும் உண்மை என்று நம்பிட்டியா ? " 

" ஏண்டா இவ்வளவு டூப் அடிச்சே? " 

" அதுவா - எங்கள் தெரு நண்பர்களுக்குள் ஒரு போட்டி. யாரு அதிகம் பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள் என்று. அதில் நீ வந்து வகையாக மாட்டிக்கொண்டுவிட்டாய் " 

ஸ்ரீநிவாசன் கதைகள் முடிந்தது. 

அடுத்து சிங்காரவேலு! 

= = = = = = =

அப்பாதுரை பக்கம் : 

உயர்ந்த மனிதன். 

ஒரு விஷயம் தெரியுமா? உயரமான ஆண்கள் பிறரை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள், பிறரை விட அழகான பெண்களை மணக்கிறார்கள், அதிகம் படிக்கிறார்கள், அதிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தத்  திருப்தியில் மண்டையைப் போடுகிறார்கள்.  இந்த விவரங்களை அமெரிக்க சேப்மன் பல்கலை ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள். (அமெரிக்காவில் உருப்படியாக ஏதாவது ஆய்வு செய்கிறார்களா என்று யாராவது ஒரு ஆய்வு செய்ய வேண்டும்).

சேப்மன் ஆய்வைப் படித்ததாலா இல்லை தானாகவே கண்டுபிடித்தாரா தெரியவில்லை, அலெக்ஸ் தன் உயரக்குறைவினால் நொந்து போயிருந்தார். தான் ஐந்தடி ஏழங்குல உயரம் என்பதில் அவருக்கு மிக வருத்தம்.  அதைவிட பக்கத்து வீட்டுக்காரர் ஆறடி ரெண்டங்குலம் என்பதில் இன்னும் வருத்தம். 

இந்த வருத்தம் தீர அலெக்ஸ் என்னிடம் வந்திருக்கலாம். என்னை விட அரையடி  உயர்ந்தவர் என்ற திருப்தி தந்த முனைப்பில் உலக சாதனைகள் பல புரிந்திருக்கலாம். ஆனால் அவர் என்னிடம் வரவில்லை. உலக சாதனைகள் பல புரியப்படாமலே கிடக்கின்றன.  அலெக்ஸ் யாரிடம் சென்றார்? டாக்டர் மகபூபியனிடம்.

யாரிந்த மகபூபியன்?  சிகிச்சை வழியாக உயர்ந்த மனிதர்களை உருவாக்கும் மருத்துவர். அதாவது நூறாயிரம் டாலரும் ஐந்தடி உயரமும் கொண்டு அவரிடம் சென்றால், கையில் ஒரு டாலரும் இல்லாமல் பிடுங்கிக் கொண்டு ஐந்தரை அடி உயரத்தோடு திருப்பி அனுப்பும்  மருத்துவர்.

உயரம் கூட்டும் சிகிச்சையில் என்ன செய்வார்கள் என்பதை வரிசைப்படுத்தி எழுதுக என்ற கேள்விக்கு டாக்டர் மகபூபியன் இப்படி பதில் அளிக்கக்கூடும்:

1. முதலில் சிகிச்சை மேஜையில் படுக்க வைப்பார்கள். (க்க்கும்).  

2. இரண்டு கால்களிலும் தொடை எலும்பை கணிசமாக வெட்டி எடுப்பார்கள். 

3. வெட்டி எடுத்த பகுதியில் ஸ்டீல் அல்லது பைபரினால் ஆன நீளக்கூடிய உருளைகளைப் பொறுத்துவார்கள்.

4. தினம் கொஞ்சம் கொஞ்சமாக ரிமோட் கன்ட்ரோல் வழியாக உருளைகளை நீட்டுவார்கள்

5. உயிர் போகிற வலி, வலிக்கான மருந்துடன் ஆறு வாரம் கிடக்க வைப்பார்கள். 

6. ஆறு வாரங்களில் உருளைகளைச் சுற்றி எலும்பும் சதையும் வளர்ந்து விட்டதை சரிபார்ப்பர்கள்

7. நாலு வாரங்களுக்கு தினம் எழுந்து நடக்கும் பயிற்சி தருவார்கள்

8. நடக்க முடிந்ததும் 'போய்வா உயர்ந்த மனிதா!' என்று விரட்டுவார்கள்

9. மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு வார மீள் சிகிச்சைக்கு வரச் சொல்வார்கள்

10. முதல் நாள் உருளைகளை சிகிச்சை வழியாக உருவியெடுப்பார்கள்

11. ஆறாம் நாள் காயம் ஆறிவிட்டதா என்று பார்ப்பார்கள்

12. ஏழாம் நாள் காயம் ஆறினாலும் ஆறாவிட்டாலும் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விடுவார்கள்.

சிகிச்சை முடிந்து ஒரு வருடமான நிறைவில் அலெக்ஸ்  நிறைய பேட்டி தருகிறார். மகபூபியனுக்கும் மகத்தான வருமானம். நூறாயிரம் டாலர் செலவழித்த திருப்தியில் அலெக்ஸ் பெருமிதத்துடன் உயர்ந்து நிற்கிறார். 

வால்: 

பின் தொண்ணூறுகளில் ஆண்களின் தலை வழுக்கை ஒரு வியாபாரத் தளமாக தொடங்கி முப்பது வருடங்களில் பல பிலியன் டாலர் வருமானத்துக்கு விரிந்திருக்கிறது. தொப்பை குறைப்பு சிகிச்சை ஏனோ அவ்வளவு வேகமாக விரிவடையவில்லை. இப்போது உயரக் கூட்டல் சிகிச்சை.   இந்த வருடம் மட்டும் அமெரிக்காவில் ஐம்பது மிலியன் டாலருக்கு உயரக் கூட்டு சிகிச்சைகள் நடக்குமாம். பெண்களைப் போல் உடலழகு மேம்பாட்டில் ஆண்களுக்கு ஆர்வமில்லை எனறு யார் சொன்னது?

= = = = = = =

63 கருத்துகள்:

  1. 1) மாமியார் & மருமகள் - இருவரில் யாருக்கு டி வி சீரியல்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்?

    மாமியார் தான் கண்டிப்பாக. எங்கள் வீட்டில் பாஸ் 10 சீரியல் பார்ப்பார். மருமகள்கள் அது பற்றி கண்டு கொள்ள மாட்டார்கள்.

    2) டி வி சீரியல்களால் விளையும் நன்மைகள் என்னென்ன?

    அவ்வாறு பார்க்கும் நேரங்களிலாவது அவர்கள் பேச மாட்டார்கள். வாய் மூடி இருக்கும். இல்லாவிடில் ஏதாவது குறை அல்லது கதை பேசுவார்கள்.

    3) Lending Library உறுப்பினராக இருந்தது உண்டா? அங்கேயிருந்து என்ன வகை புத்தகங்கள் எடுத்துப் படித்திருக்கிறீர்கள்?

    இல்லை. பப்ளிக் லைப்ரரி உறுப்பினராக இருந்ததுண்டு. அங்கு உறுப்பினர் சந்தா மட்டுமே. புத்தக விலை அனுசரித்து வாடகை இல்லை.

    அலுவலகத்தில் சிறிய கிளப்பில் வார, மாதப் பத்திரிகளைகள் சர்குலேஷன் உறுப்பினர் ஆக இருந்ததுண்டு. அது ஒரு காலம். illustrated weekly, mirror, imprint, caravan, Bhavans journal, readers digest, blitz, times weekly, shankar's weekly என்று அவ்வாறு பல ஆங்கிலப் பத்திரிக்கை களையும் வாசித்ததுண்டு. இவை ஒருத்தருக்காக வாங்கினால் கட்டுபடியாகாது.

    4) உங்களை மிகவும் கவர்ந்த மரம் எது? ஏன்?

    வேறு என்ன. கேரளம் ஆனதால் தென்னை மரம் தான். இங்கு எனது பிளாட்டில் 4 தென்னை மரம் உண்டு. எல்லாம் 70 வயதானதால் காய் பலம் குறைவு. மரம் ஏறுபவருக்கு கொடுக்கும் ஊதியத்திற்கு போட்ட காய்கள் போல் 2 மடங்கு வெளியில் வாங்கி விடலாம். ஆனாழும் வெட்ட மனசில்லை.

    ஸ்ரீனிவாசனுக்கு kgg யை விட கற்பனை அதிகம் தான். எவ்வளவு நம்பும்படியாக பொய்களை சொல்லியிருக்கிறான்.

    உயரம் கூட்ட ரொட்டிமாவு பிசைந்து உருட்டி இழுப்பது போல் இழுக்காமல் விட்டார்களே!

    Jayakumar

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. 1) மாமியார் & மருமகள் - இருவரில் யாருக்கு டி வி சீரியல்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகம் ?

    எங்கும் மாமியார்தான்

    2) டி வி சீரியல்களால் விளையும் நன்மைகள் என்னென்ன ?

    இதனால் நன்மையும் உண்டா ?

    பதிலளிநீக்கு
  4. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

      நீக்கு
  5. JC-சாரின் பதிலில் imprint, mirror, Illustrated weekly போன்ற ஆங்கில இதழ்களின் பெயர்களைப் படித்ததே சுகமாக இருக்கிறது. டெல்லியில் எனது ஆரம்ப வருடங்கள் நினைவில் ஆடுகின்றன. இவற்றையெல்லாம் நான் காசு கொடுத்து வாங்கித்தான் வாசித்தேன் அப்போது. டெல்லியில் வசித்த என் அண்ணா கொடுத்த சுதந்திரம் முக்கிய காரணம்!

    பதிலளிநீக்கு
  6. ஏன் ஸ்ரீராம்ஜி அவர்கள் வரவில்லை ?

    பதிலளிநீக்கு
  7. சேப்மன் பல்கலை - என்னவொரு பித்தலாட்டம்...!

    பதிலளிநீக்கு
  8. செல்ஃபோன் தான். முன்பு தேடுவதுண்டு. ஆனால் அதுவும் இப்போது சரியாக ஒரே இடத்தில் வைத்து எடுப்பதால் என் கணினி அருகில் (வீடும் ரொம்பச் சின்னதுதானே!!) வைத்து எடுப்பதால் தேடும் படலம் வெகுவாகக் குறைந்துவிட்டது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. டி வி சீரியல்கள் பற்றி நோ ஐடியா...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சிங்கப்பூர் மாமா - ஹாஹாஹாஹாஹா கௌ அண்ணா போன புதனே சொல்லிருந்தேன் நினைவிருக்கிறதா? பெரிய டப்பா அல்வாவோடு வரவேற்பு இருக்கும்னு!!!!!! ஹாஹாஹாஹா

    அடுத்து சிங்காரவேலனா ? இதுவும் இன்னொரு அல்வா கதையோ?!!!! ஸ்ரீநிவாஸன் அல்வா கொடுத்ததை மறக்காம சிங்காரவேலுக்கிட்ட ஸ்மார்ட்டா இருந்தீங்களா இல்லை இங்கயும் டன் கணக்குல அல்வாவா??!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!111

    கீதா

    பதிலளிநீக்கு
  11. தான் ஐந்தடி ஏழங்குல உயரம் என்பதில் அவருக்கு மிக வருத்தம். //
    இந்த வருத்தம் தீர அலெக்ஸ் என்னிடம் வந்திருக்கலாம். என்னை விட அரையடி உயர்ந்தவர் என்ற திருப்தி தந்த முனைப்பில் உலக சாதனைகள் பல புரிந்திருக்கலாம்.//

    ஹாஹாஹாஹா எங்கிட்ட வந்திருந்தார்னா நிறையவே யோசிச்சிருப்பார்!!!! பின்ன? நான் நாலடியார்!!!!!!!! ஆனா எந்த சாதனையும் புரியலை ஹிஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  12. உயரமாக சிகிச்சை - ஹூம்...பைத்தியக்காரத்தனம். பல மக்களும் Crazy!!! .பணத்தை வைச்சுட்டு என்ன பண்ணனும்னு தெரியலை போல அந்த 5 அடி 7 அங்குலக்காரருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. Lending Library உறுப்பினராக இருந்தது உண்டா? அங்கேயிருந்து என்ன வகை புத்தகங்கள் எடுத்துப் படித்திருக்கிறீர்கள்? //

    திருவனந்தபுரத்தில் இருந்தப்ப British Council library யில் நம்ம வீட்டுத் தலைவர் உறுப்பினர் அதன் மூலம் நானும் வாசிக்க முடியும்...அப்போது எனக்குச் சில மருத்துவ ரீதியான சில விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருந்ததால் அப்படியான புத்தகங்கள் வாசித்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி Readers digest உம் சில வாசித்ததுண்டு. வாங்கி வாசித்ததில்லை. அங்கிருந்து ஊர் ஊராகப் ப்யணப்பட்டதில் அதன் பின் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

      கீதா

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  14. இன்றைக்கு ஒன்றும் சுறுசுறுப்பாக இல்லை..

    பதிலளிநீக்கு
  15. சீனிவாசன் அல்வா கொடுத்தது தான் சுவை!..

    அது பாதாம் அல்வா தானே!..

    பதிலளிநீக்கு
  16. பொதுவாக நான் எதையும் தேடும்படி வைச்சதில்லை. அப்படி வைச்சிருந்தால் என்னோட முதல் செல்ஃபோனை வீடு புகுந்து தூக்கிச் சென்றிருக்க மாட்டாங்களோ? என்னவோ போங்க! மூக்குக் கண்ணாடி எப்போவும் அதன் கூட்டுக்குள்ளேயே இருக்கும். படிக்காத/கணினியில் வேலை செய்யாத நேரங்களில். செல்ஃபோனை இப்போவெல்லாம் எங்க படுக்கை அறையில் என்னோட அல்மிரா மீது வைச்சுடுவேன். அங்கே தான் என்னோட மருந்துகளில் இருந்து எல்லாமும் அடிக்கடி எடுக்க வேண்டியவை வைச்சிருப்பேன்.

    பதிலளிநீக்கு
  17. எங்க வீட்டில் நம்ம ரங்க்ஸ் நிறைய சீரியல்கள் பார்ப்பார். மின்சாரம் வரலைனா தவிச்சுடுவார். அதே போல் என் மாமியாரும். மத்தியான சீரியல்களில் இருந்து ராத்திரி பத்து மணி வரை பார்ப்பதோடு அல்லாமல் எந்த சீரியலில் யார் கதாநாயகி என்பது முதற்கொண்டு தப்பில்லாமல் சொல்லுவார். நானும் அவ்வப்போது பார்ப்பது உண்டு என்றாலும் ஆழ்ந்து மனதைச் செலுத்தியதில்லை. பார்ப்பது மறந்துடும். :(

    பதிலளிநீக்கு
  18. டிவி சீரியல்களால் நன்மையா? அப்படி ஒண்ணும் இருப்பதாகத் தெரியலை. என்ன அந்த நேரம் வீட்டில் ஒருவருக்கொருவர் பேச்சு இருக்காது. சீரியலை விடாப்பிடியாகப் பார்க்கும் வீடுகளுக்குப் போனால் அவங்க கூட நம்மை வா நு சொல்ல மாட்டாங்க. பேச மாட்டாங்க. நாமும் சேர்ந்து சீரியலைப் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  19. லென்டிங் லைப்ரரி. எனக்குப் பிடித்தது. வாராந்தரி, மாதாந்தரி, மாதமிரு முறை புத்தகங்கள் தீபாவளி மலர்கள்னு எல்லாமும் கிடைக்கும். சிலவற்றை வந்ததுமே கொடுப்பார்கள். ஒரு முறை வைத்துக் கொண்டு. இம்முறை நமக்குன்னா அடுத்த முறை இன்னொருத்தருக்கு என. இதைத் தவிரவும் நாவல்கள், கதைப் புத்தகங்கள் எனப் பலவும் உள்ள லைப்ரரியிலும் உறுப்பினராக இருந்திருக்கேன். டெபாசிட் தொகை 100 ரூ. ஒரு புத்தகம் ஒரூ தரம் எடுத்தால் ஒரு வாரம் படிக்க நேரம் கொடுப்பாங்க. புத்தக விலையைப் பொறுத்து ஒரு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை அந்த ஒரு வாரத்துக்கு வாங்குவாங்க. அப்போத் தான் முதல் முதலாகப் பல வருடங்கள் கழிச்சு கல்கியின் அமரதாரா, ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா ஆகியோரின் புத்தகங்கள் எனப் படிச்சேன். மதுரையில் என் தாத்தா தன்னோட அரசு நூலக டோக்கனை என் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். இரண்டு டோக்கன்கள். புத்தகம் எடுக்கப் பணமெல்லாம் இல்லை. நினைச்சப்போப் போய்ப் புத்தகம் எடுத்து வருவேன். அப்போ சிம்மக்கல்லில் இருந்தது பொது நூலகம். சென்னையிலும் அம்பத்தூரில் பொது நூலகத்தில் உறுப்பினர். வீட்டிலிருந்து நடக்கும் தூரம் தான். அடிக்கடி புத்தகம் எடுத்து வருவேன்.

    பதிலளிநீக்கு
  20. என்னைக் கவர்ந்த மரம் முதலில் வேப்பமரம். எங்க வீட்டில் (அம்பத்தூரில்) வீடு கட்டி கிரஹப்ரவேசம் ஆனதும் சின்னக் கன்றாக நட்டது. தெருப்பூராவும் நிழல் கொடுத்தது. அந்தத் தெருவில் டியுசிஎஸ் இருந்ததால் அரிசி, பருப்பு, சர்க்கரை வாங்க வரும் மக்கள் வாசலில் மரத்தடியில் உட்கார்ந்துஇளைப்பாறிச் செல்வார்கள். பசுமாடுகள் அங்கே படுத்து இளைப்பாறும். தொல்லை என்னன்னா வெளியே போயிட்டு வந்தால் உள்ளே விடாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  21. வீட்டை விற்கையில் வேப்பமரத்தை வெட்ட வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் அந்த பில்டர்ஸ் கேட்கலை. வெட்டிட்டாங்க. அதே போல் தென்னை மரங்களும் பலா மரமும். ஓரமாகத் தான் இருந்தன. வீடு கட்டும்போது கூடத் தொந்திரவாக இருந்திருக்காது. ஆனாலும் வெட்டிட்டாங்க அவற்றையும். இதைத் தவிர்த்து கிராமங்களில் படர்ந்து விரிந்து விழுது பரப்பும் ஆல மரங்களைப் பிடிக்கும். அரசமரக் காற்றின் "மர்மர" சப்தம் (உபயம் பொன்னியின் செல்வன்) மேலைக்காற்றில் அரச இலைகள் உரசும் சப்தம் பிடிக்கும். இன்னிக்குக் காற்று பலமாக வீசுகிறது. வடக்குப் பக்கம் நெட்டிலிங்க மரம் காற்றுக்கு ஏற்ப வலைந்து கொடுத்துக் கொண்டு சமாளிக்கிறது. முகத்தில் வந்து பளீரென அறைகிறது காற்று. அநேகமாய்க் கேரளம், கர்நாடகாவில் மழை பெய்யும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///அரச மரக் காற்றின் "மர மர" சப்தம் (உபயம் பொன்னியின் செல்வன்)

      மேலைக்காற்றில் அரச இலைகள் உரசும் சப்தம் பிடிக்கும்..///

      காற்றில் அரச இலைகள் உரசும் சப்தம் யாருக்குத் தான் பிடிக்காது?..

      அடுத்த தலைமுறையினர் - ஏன் இப்பொழுதே -

      கைத்தல பேசியில் எல்லா சத்தங்களையும் கேட்டுக் கொள்ள வேண்டியது தான் - காதுகள் பழுது படாதிருந்தால்!..

      நீக்கு
    2. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    என் செல்போன் எப்போதும் கண்ணெதிரேதான் இருக்கும். (அதில்தான் என் உலகமே (பதிவுலகமே) அடங்கியிருப்பதால்..) மற்றபடி கண்ணாடி ஏதும் இதுவரை இல்லை. ஆனால், இனி அணியும் வாய்ப்பும் உண்டு.

    ஆமாம்... இது உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி. நீங்கள் அனைவரும் ஆளுக்கொரு பதிலாக அழகாக சொல்லி விட்டீர்கள். ஆனாலும், தொடர்ந்து எங்களுக்கான சில கேள்விகள் இருக்கும் போதும், இதற்கு நாங்களும் ஏன் ஒவ்வொரு விதமாக பதில் கூறுகிறோம். புரியவில்லை. ஹா ஹா ஹா.

    சீரியல் பார்ப்பது தவறுதான். தொலைக்காட்சி என்ற ஒன்று நம்முடன் ஐக்கியமானவுடன் , வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுது போக்காக இருக்கட்டுமென ஆரம்பித்த இந்தக் கதை களங்கள் இன்று வெற்றிப்பாதையில் நடை போடுவதே இந்த பெண்களால்தான். இதில் மாமியார் என்ன..! மருமகள் என்ன..! அப்போதே இதில் வீட்டு ஆண்களும் பெண்களுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து விட்டனர். முன்பே எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் காலை மணி பத்திலிருந்து இரவு படுக்கும் வரை இந்த சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் தனக்காகத்தான் இந்தக் கதா பாத்திரம் என்பதாக கதைக்குள் ஒன்றி விடுகிறார்கள். இனி அவர்களை அதிலிருந்து பிரித்தெடுப்பது சிரமந்தான்.

    மரங்கள் அனைத்தும் ஒவ்வொரு அழகு. அதன் இலைகளும், அதன் அசைவும் அபாரமான அழகுதான். பார்வைக்குத் தெரியும் அதன் அசைவின் சப்தங்களை முன்பு போல் இப்போது கேட்க முடியவில்லை என்பதுதான் இப்போதைய என் வருத்தம். என்ன செய்வது? எது கிடைக்குமோ அதுதானே வாழ்வில் கிடைக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. சிங்கப்பூர் மாமா பற்றி இப்படித்தான் நினைச்சிருந்தேன். சரியாக இருக்கு. அப்பாதுரை எழுதி இருப்பதைப் பார்த்தாலே எனக்கு வயிற்றைக் கலக்குதே! என் அப்பா வழியிலும் தாத்தா, அத்தை, பெரியப்பாக்கள் எல்லோரும் உயரம். அம்மா வழியிலும் தாத்தா, மாமாக்கள், பெரியம்மா, சித்திகள் அனைவரும் உயரம். என் அப்பாவும் அம்மாவும் மட்டும் ஐந்தடிக்குள். எங்களுக்கும் அதே லபித்துவிட்டது. மூணு பேரில் யாருமே உயரம் இல்லை. அதிலும் என் தம்பி, இப்போக் கூடச் சின்னப் பையர் போல் இருப்பார்.

    பதிலளிநீக்கு
  24. என் புக்ககத்திலோ கேட்கவே வேண்டாம். மாமனார், மாமியார், நம்மவர், அவர் தம்பி, தங்கைகள், அக்கா என அனைவரும் உயரம். அதிலும் நம்மவரும் அவர் கடைசித்தங்கையும் உயரமோ உயரம். அவங்களுக்கெல்லாம் இதில் பெருமையும் கூட. நின்ற வண்ணமே மேல் லாஃப்டில் இருந்து பொருட்களை எடுப்பார்கள். நம்ம பையரும் உயரம். ஆனால் அதற்கேற்றவாறு பருமனும் உண்டு. இவங்கல்லாம் ஆரம்பத்தில் ரொம்ப ஒல்லி. இப்போக் கொஞ்சம் பருமன். என்னைக் கேலி செய்து கொண்டே இருப்பாங்க உயரமாய் இல்லை என்பதால். புதுப்புடைவை ஏதேனும் கட்டிக் கொண்டால் என் மாமியார் "தூணுக்குச் சுத்தின துணி" மாதிரி இருக்குனு சிரிப்பார். ரொம்பவே வெட்கமா இருக்கும். நாம் தான் குட்டையாய்ப் பிறந்து தப்புப் பண்ணிட்டோமோனு ஆரம்ப காலங்களில் தோணும். பின்னால் கேட்டுக் கேட்டுப் பழகிப் போச்சு. சகஜமா ஆயிடுத்து.

    பதிலளிநீக்கு
  25. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  26. உயரமாவதற்குப் பட்ட/படும் கஷ்டங்களை நினைச்சால் குட்டையாகவே இருந்துட்டுப் போகலாம்னு தோணுது.

    பதிலளிநீக்கு
  27. கேள்விகளுக்கு பதில்கள் நன்றாக இருக்கிறது.

    லென்டிங் லைப்ரரியில் சேர்ந்து நிறைய புத்தகங்கள் படித்து இருக்கிறேன். ஒரு புதுபுத்தகம், ஒரு பழைய புத்தகம் தருவார்கள்.
    அனைத்து மரங்களும் பிடிக்கும். அதில் தங்கும் பறவைகள் அனைத்தும் பிடிக்கும்.


    பதிலளிநீக்கு
  28. //ஒரு போட்டி. யாரு அதிகம் பொய் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுகிறார்கள் என்று. அதில் நீ வந்து வகையாக மாட்டிக்கொண்டுவிட்டாய் " //

    ஆஹா! டூப் மாஸ்டரிடம் மாட்டிக் கொண்டு விட்டீர்களா?
    சிங்கப்பூர் மாமா பற்றி நல்ல அறிமுகம்.
    நளபீம விலாஸ் பகடவா(!) நன்றாக இருந்ததா?

    பதிலளிநீக்கு
  29. உயர்ந்த மனிதனாக இவ்வளவு சிரமம் பட வேண்டுமா?

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே

    இன்றைய தங்கள் பக்கத்தில் தங்கள் நண்பர் சொன்ன பொய்களுக்கு அவர் சொன்ன காரணம் சிரிப்பை வரவழைத்தது.

    சிங்கப்பூர் மாமா என நீங்கள் ஏமாந்தது பாவந்தான்...! அந்த வயதில் நிறைய எதிர்பார்ப்புக்கள் எதையும் உண்மை என நம்பி விடும் ஒரு எண்ணம் வருவது இயல்புதான்.

    /அவர் ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் பகடவா(!) கொண்டு வந்து எனக்குக் கொடுத்தார். அல்வா இல்லை - அதைத்தான் ஸ்ரீநிவாசன் எனக்கு கிலோ கிலோவாகக் கொடுத்துவிட்டானே !

    ஹா ஹா ஹா. அடுத்து சிங்கார வேலவனா ? தங்களின் பழைய நினைவுகள் சுவாரஸ்யமாக உள்ளது. உங்களுக்குத்தான் அப்போதைய வயதில் வேதனையாகவும், ஏமாற்றமாகவும் இருந்திருக்கும். தாங்கள் அத்தனையும் நினைவில் நிறுத்திக் கொள்வது வியப்புக்குரிய ஒரு செயல்.

    உயரம் கூட்டுவதற்கான உத்திகளை சகோதரர் அப்பாத்துரை அவர்களின் பக்கம் படித்ததும், வயிற்றை கலக்குகிறது. உயரத்தை விட குட்டையாகவே இருந்து என்ன சாதிக்கிறோமோ அது போதுமென தோன்றுகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!