சனி, 8 ஜூலை, 2023

மனிதாபிமானம் மற்றும் நான் படிச்ச கதை


மனிதாபிமானம் =======================================================================================================

எதிர்ப்பை காட்டும் தைரியம்..===================================================================================================

கொஞ்சம் பழசோ என்று சந்தேகம்.  ஏற்கெனவே பகிர்ந்ததோ என்றும்தான்..  எனினும் நல்ல விஷயம் இன்னொரு முறை பகிர்வதில் தவறில்லை என்று...


=====================================================================================================


இவரது தானம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...==========================================================================================================


நான் படிச்ச கதை (JKC)

சப்புமல் குமாரயாவின் புதையல்

பாகம் 1/2

கதையாசிரியர்: ஜே.கே

கதைப்பதிவு: August 3, 2019

பார்வையிட்டோர்: 194,316

முன்னுரை

இந்தக்கதை (சப்புமல் குமாரயாவின் புதையல்) sirukathaigal.com தளத்தில் இருந்து பகிரப்படுகிறது. தலைப்பில் இருக்கும் வரிகளைப் பாருங்கள். ஆசிரியர் ஜே கே. இந்த ஜே கே நான் இல்லை. இந்தக் கதையை பார்த்தவர்கள், வாசித்தவர்கள் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர். ஆகவே கதையின் பிரபல்யம் மற்றும் சுவாரசியம் தெரிய வருகிறது. இவர் ஒரு இலங்கை ஈழத்து எழுத்தாளர் என்பது புரிகிறது. இவரைப்பற்றிய மேலும் அதிக விவரங்களைச் சேகரிக்க முடியவில்லை. ஆனால் இவர் எழுதியதாக 49 கதைகள் sirukathaigal.com இல் உள்ளன.

கதையை பிரபல ஆசிரியர் சுஜாதாவின் நடையில் எழுதி இருக்கிறார். கதையில் உரையாடல்கள் ஈழத்தமிழிலும் கதையின் மற்ற விவரங்கள் சாதாரண தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. சுஜாதாவைப் பின்பற்றி கொஞ்சம் நக்கல், கொஞ்சம் சயன்ஸ், கொஞ்சம் இலக்கியம், வெண்பாக்கள், கொஞ்சம் உருவகம் என்று கலந்து எழுதியிருக்கிறார். அவரைப் போன்றே எதிர்பாராத ஒரு பன்ச் முடிவையும் தந்து திகைக்க வைக்கிறார். (கடவுள் வருகிறார் முடிவு தெரியுமா? அதே போன்று).

கொஞ்சம் A வரிகளும் உள்ளன.

//செய்முறை இல்லாத இரசாயன படிப்பு, சரோஜாதேவி புத்தகம் வாசிப்பதில் கிடைக்கும் திருப்தியைப் போன்றது//.

சில சமயம் இது போன்ற அனாவசிய இடைச் செருகல்கள் திகட்டுகிறது.

கதையின் நீளம் கொஞ்சம் பெரியது. சுருக்கினால் ஆசிரியரின் கதை சொல்லல் தடையுறும். ஆகவே இக்கதை பற்றிய பதிவை இரு பாகங்களாக வெளியிடலாம் என்று உத்தேசம்.

கதைச் சுருக்கம்

கோட்டே அரசன் ஆறாம் பராக்கிரம பாகு யாழ்ப்பாணத்தை கைப்பற்ற தனது படைத் தளபதி சப்புமல் குமாரய வை அனுப்பினான். சிங்களத்தில் பெயர் சப்புமல் குமாரய, தமிழ் பெயர் செண்பக பெருமாள். அவருடைய உதவியாளர் முத்து ராசக் கவிஞர் என்ற ஒரு எட்டப்பன். அவரது பரம்பரையில் பிறந்த பி கே என்றழைக்கப்படும் பரமேஸ்வரன் கோடீஸ்வரன் என்ற பள்ளி ஆசிரியர் (இரசாயன பாட ஆசிரியர்)

யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய செண்பகப்பெருமாள் முத்துராசக் கவிஞருக்கு மாதோட்டம் பகுதியில் கொள்ளை அடித்த யாவையும் பரிசாக பட்டயம் எழுதித் தந்தான். மாதோட்டம் பகுதியில் இருந்து நிறைய செல்வம் முத்து ராசக் கவிஞருக்குக் கிடைத்தது. அந்த செல்வங்களைப் பற்றி கேள்விப்பட்ட செண்பக பெருமாள் அந்த செல்வத்தை பறிக்க முயன்றான். ஆனால் முத்துராசக் கவிஞர் அந்த பொக்கிஷத்தை எங்கோ புதைத்து விட்டார். ஆசை நிறைவேறாததால் முத்து ராசக் கவிஞர், அவருடைய உறவினர்கள், மற்றும் அவருடைய வேலையாட்கள் யாவரும் தூக்கில் இடப்பட்டனர். அந்த பொக்கிஷம் இது வரையிலும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது.

பொக்கிஷம் என்றாலே இருப்பிடம் சங்கேத மொழியில் (encryption) தானே எழுதப்பட்டிருக்கும். அந்த சங்கேத மொழியை decrypt செய்து உதவ அரி என்கிற அறிவுக்குமரன் உதவியை பி கே நாடுகிறார். இன்றைய மதிப்பில் 400 கோடி பெறுமானமுள்ள பொக்கிஷம் அது.

இந்த ஒன்றாம் பகுதி அரி என்கிற அறிவுக்குமரன் பி கே வீட்டிற்கு செல்வதில் ஆரம்பித்து கண்டுபிடிக்கப்படும் பொக்கிஷம் முழுவதையும் அவனுக்கே தர பி கே சம்மதிப்பதாய் முடிவடைகிறது.

கதை அறிவுக்குமரன் சொல்வது போல் அமைந்துள்ளது.

சங்கேத விவரங்கள் தெரிய வந்தனவா? பொக்கிஷம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார்களா? பொக்கிஷம் கிடைத்ததா ? முடிவு என்ன ஆயிற்று? என்பது போன்ற விவரங்கள் இரண்டாம் பகுதியில்.


சப்புமல் குமாரயாவின் புதையல் (½)குளித்துக்கொண்டிருக்கும்போது கிணற்றடிக்கு அம்மா வந்தார்.

“யாரோ ஒரு பொம்பிளைப் பிள்ளை உன்னை தேடிக்கொண்டு வந்திருக்கு”

கிணற்றடியில் நின்றவாறே அடைப்பு வேலி விரிசலுக்குள்ளால் முற்றத்தைப் பார்க்கலாம். சொப்பர் சைக்கிள், கறுப்புப்பாவாடை, சிவப்புச்சட்டை, முகம் கிளியராக தெரியவில்லை. தேவையில்லை. இது தாரணிதான். காதருகே மச்சம், இரட்டைப்பின்னல், ஒருபக்க கண் இமை நீளம், கிறங்கடிக்கும் .. என்று வழமையான கதை என்றால் வர்ணனையிலேயே புங்குடுதீவு வரையும் போயிருப்பேன். அந்தளவுக்கு தாரணியை விடாமல் முன்னே பின்னே துரத்தியிருக்கிறேன். 143 சொல்லியிருக்கிறேன். அதான், I LOVE YOU. அவள் கொஞ்சம் ஒபின் டைப். திருப்பி 143 என்றாள். எனக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. அன்றைக்கே கல்யாணியில் பெடியளுக்கு ஸ்பெஷல் வாங்கிக்கொடுத்தேன். ஒருநாள்தான். அடுத்தநாள் வந்து விளக்கம் கொடுத்தாள். 143 என்றால் அவள் அகராதியில் I HATE YOU வாம். இப்படி நிறையச் சொல்லவேண்டும். ஆனால் இந்தக் கதையில் அதைச் சொல்ல முடியாது. காரணங்கள் இரண்டு. முதலாவது, இந்தக்கதையில் அடுத்த இரண்டு வரிகளில் “உம்மளை ஒருக்கா பி.கே சேர் வரச்சொன்னார்” என்கின்ற ஒற்றை வாக்கியத்தோடு தாரணி காணாமல் போய்விடுவாள். பின்னர் கிளைமாக்ஸில் ஒரு ரீ-என்ட்ரி, அவளுக்குபோய் அத்தனை அனட்டமி டீடெயிலிங் தேவையில்லை.

இரண்டாவது காரணம், இந்தக்கதை சப்புமல்குமாரயாவின் புதையல் சம்பந்தப்பட்டது.

ஈரச்சாறத்தோடு, வேண்டுமென்றே, நெஞ்சு தெரியட்டுமென, துவாலயால் ஈரமில்லாத தலையை துவட்டியபடி முற்றத்துக்கு வந்தேன். தாரணி சிரிக்கவில்லை.

“உம்மளை ஒருக்கா பிகே சேர் வரச்சொன்னார்”

நன்றி - shutterstock


“எதுக்கு?, உள்ளுக்க வாருமேன், டீ குடியுமேன்” என்றெல்லாம் சொல்ல சந்தர்ப்பம் தராமல் தாரணி சைக்கிளை திருப்பிக்கொண்டு வெடுக்கென்று கிளம்பிப் போய்விட்டாள். பிகே சேரின் வீட்டுக்கு முன்வீடுதான் அவளுடையது. அவளை அடிக்கடி கிளாசுக்கு போகும்போது நான் .. வேண்டாம், விட்டுவிடுவொம்.

யாரிந்த பிகே சேர்?

“P.கோடீஸ்வரன்”. சுருக்கமாக பி.கே. அக்காமாருக்கு ‘அவன்’ ஒரு பெட்டைக் கள்ளன். எனக்கோ ‘அவர்’ கடவுள். இரசாயனக்கடவுள். யாழ்ப்பாணத்தில் மணியம், நாகர், மகாதேவா, குட்டி மக்கர் என்று நிறைய இரசாயன ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் பி.கே இவர்களிடம் இருந்து நிறைய வித்தியாசப்படுவார். செய்முறை இல்லாத இரசாயன படிப்பு, சரோஜாதேவி புத்தகம் வாசிப்பதில் கிடைக்கும் திருப்தியைப் போன்றது என்பார்.

அவர் வீட்டில் சோதனைக் குளாய் முதல் டிஸ்டில்லர் வரை எல்லாவிதமான இரசாயன உபகரணங்களும் இருக்கும். மாட்டுக்கொழுப்பை வைத்து சவர்க்காரம் செய்ய முயல்வார். அசெற்றிக் அமிலத்தின் நடுநிலையாக்க வெப்பவுள்ளுறையை காண்பதற்கு பரிசோதனை செய்வார். அவருடைய டியூஷனில் அடிக்கடி ஏதாவது வெடித்து, எரிந்து சுவர் முழுதும் கறுப்பு ஒட்டிக்கிடக்கும். பிகே சேரின் வாயின் இடதுபக்கம் பெரிய ஒரு தழும்பு இருக்கிறது. காரணம் பொட்டாசியம் காபனேற் எனறு 97 பட்ச் அண்ணாமார் சொல்வார்கள். மக்னீசியப்பால் என்று 95 பட்ச்காரர் சொல்வார்கள். 93 பட்ச் அக்காமாரிடம் கேட்டுப்பாருங்கள். ஏகொபித்தகுரலில் ஒன்றையே சொல்லுவார்கள்.

“பிகே என்றால் பெட்டைக்கள்ளன்”.

பிகே சேர் ஏன் என்னை அழைக்கிறார்? என்று ஓரளவுக்கு ஊகிக்கமுடிந்தது. நேற்றுத்தான் எனக்கு ஏ/எல் ரிசல்ட் வந்திருந்தது. உதயன் பார்த்திருந்தீர்கள் என்றால் தெரிந்திருக்கும். “கோண்டாவில் இராமகிருஷ்ணா கல்லூரி மாணவன் அறிவுக்குமரன் அகில இலங்கையில் முதலிடம்” என்று முதல்பக்கத்தில் செய்தியும், அருகே போஸ்டல் ஐடென்டிட்டி கார்ட் பால்குடி படமும் பிரசுரமாகியிருக்கும். அந்த அறிவுக்குமரன் வேறு யாருமில்லை. சாட்சாத் நானே. ஷோர்ட்டாக “அரி”. நான்கு பாடங்களுக்கும் “ஏ”. மொத்த மதிப்பெண்கள் 399. மெய்தான். 400க்கு 399. நம்பமுடியவில்லையா? எனக்கும்தான். மண்டை விறைத்துப் போய்விட்டது. எப்படி அந்த ஒரு மார்க் தவறியது? ரி-கரக்‌ஷன் போடப்போகிறேன்.

பிகே சேர் என்னை விஷ் பண்ணுவதற்குத்தான் அழைத்திருக்கவேண்டும். அவரே வீட்டுக்கு வந்திருக்கலாம். பரவாயில்லை. போவோம். போகும் வழியில் கே.கே.எஸ் ரோட்டில் சேருக்கு பரிசாக மிக்ஸர் வாங்கிக்கொண்டு போனேன். அல்பா மிக்ஸர் அல்ல. KMnO4 மிக்ஸர். தட்டாதெருச்சந்தியடியில் அவர் வீடு இருக்கிறது. கேற்றுக்குள் நுழையும்போது பிளாங் நடுமுற்றத்தில் குட்டையை சொறிந்தபடி கிடந்தது. என்னைக்கண்டு குரைக்கவில்லை. வீணி வடித்தது. அது வகுப்பு இல்லாத நேரம். வீடும் வளவும் வெறிச்சோடிப்போய் இருந்தது. எந்த அசுமாத்தமும் இல்லை. சேரின் மனிசி கடந்த பதினைந்து வருடங்களாக அவரோடு கூட இல்லை. தனிக்கட்டை. வேலைக்காரி, தோட்டக்காரன், படிக்கிற பெடி பெட்டையள், அடிக்கடி அவர் வீட்டுக்கு வரும் ஒரு அன்ரி, மேனன் அந்த அன்ரியைப்பற்றி தேவையில்லாமல் கதைப்பான். சேரின் வட்டம் மிகவும் குறுகிய வட்டம். பிகே சேர் ஒரு தீவிர படிப்பாளி. எந்த நேரமும் எதையாவது ஒன்றை வாசித்துக்கொண்டே இருப்பார். பக்கத்திலே ஒரு கொப்பி பேனா எப்போதும் கூடவே இருக்கும். காலநேரம் கிடையாது. தட்டாதெருவால் நடுச்சாமத்தில் போகின்றபோதும்கூட சேரின் வீட்டுப்பக்கம் எட்டிப்பார்த்தால், உள் அறையில் லைட், கரண்ட் போனால் பெட்ரோல் மக்ஸ், என்று ஏதாவது ஒன்று எரியும். படித்துக்கொண்டே இருப்பார். மேனன் வேறு ஏதோ சொல்லுவான். இங்கே வேண்டாம். ஒன்று மட்டும் நிச்சயம். சேரிடம் ஒரு தேடல் இருக்கிறது. தன்னுடைய டபிள் லென்ஸ் கண்ணாடியை கழட்டும் சமயங்களில் அவருடைய கண்களை கூர்ந்து கவனித்தால் தெரியும். எதைத் தொலைத்தோம் என்றே தெரியாமலேயே தேடுபவரின் கண்கள் அவை.

வாசல்படிக்குப்போனேன். வீட்டுக்கதவு கதவு திறந்துகிடந்தது. எட்டிப்பார்த்தேன். நாச்சார்வீடு. உள்ளே பழைய ஈசிச்சேரில் படுத்துக்கிடந்த ஷிரோடிங்கர் என்னைக்கண்டு மியாவ் என்றபடி மீண்டும் குறண்டியது. வேறு அரவம் எதுவும் இல்லை. கூப்பிட்டேன்.

“சேர்”

எந்தச்சிலமனும் இல்லை.

“சேர்…”

உள் அறை ஒன்றில் கதிரை அரக்கப்படும் சத்தம் கேட்டது. இரண்டு நிமிடங்கள் காத்திருப்பு. அடுத்த “சேர்” க்கு தயாராகையில் கதவைத்திறந்தபடி பிகே சேர் வெளிவந்தார். வெறும்மேல். சாறம். அதே பழைய டபிள் லென்ஸ் கண்ணாடி. தலையின் மேல் வெட்ட வெளியில், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஈழத்தமிழன் போல அடங்காமல் பறக்கும் நரைமுடிகள் என்று சேர் எங்கள் வகுப்பறையில் இருக்குமாப்போலவே இப்போதும் இருந்தார்.

“வாடா அரி.. தனியத்தானே வந்தனி?”

ரிசல்டுக்கு வாழ்த்துவார் என்று எதிர்பார்த்தேன். வாழ்த்தவில்லை. அவசரமாக வாசலுக்குப்போய் கதவைப்பூட்டி “பார்”த்தடியை போட்டார். பின்வாசல் பூட்டியிருக்கா? என்று செக் பண்ணினார். பின்னர் என்னை அந்த அறைக்குள் அழைத்துப்போனார். கூடவே ஷ்ரொடிங்கரும் உள்ளே நுழைய முயற்சிக்க, “அங்கால போ சனியனே” என்று அதைத்துரத்தி கதவை உள்தாழ்ப்பாள் போட்டார். உள்ளூற எனக்கு பயம்பிடித்தது. பி என்றால் பெட்டையா? பெடியனா?

“இப்பிடி இரு”

அப்போதுதான் அந்த அறையைப் பாரத்தேன். கலவரத்தில் சூறையாடப்பட்ட புத்தகக்கடை போல அந்த அறை இருந்தது. யன்னலைத் தவிர மிகுதி இடம் பூராக புத்தகங்களும் பேப்பர்களும். ஒரு பக்க சுவரில் யாழ்ப்பாண இராசதானி வரைபடம் மாட்டப்பட்டிருந்தது. ஆங்காங்கே குட்டி குட்டி ஸ்டிக்கர் துண்டுகள் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு புத்தக அலுமாரிகள். அதற்குள்ளே, வெளியே, முன்னே, பின்னே என்று எங்கு பார்த்தாலும் புத்தகங்கள். ஆங்கிலம், தமிழ், சிங்களம், மலையாள்ம் என்று பல மொழிப் புத்தகங்கள். தரை முழுதும் கொப்பிப் பேப்பர்கள். கசக்கி கிழித்துப் போடப்பட்டிருக்கும் பேப்பர்கள். சிலது அறைக்குள்ளேயே குவித்து எரிக்கப்பட்டிருக்கவேண்டும். கரி குவிந்து கிடந்தது.

யாழ்ப்பாண வைபவமாலை, மகாவம்சம், சூள வம்சம் போன்ற புராதன நூல்கள் முதல் சமீபத்தில் வெளியான “The Code Book” வரை மேசையில் கிடந்த புத்தகங்களை எல்லாம் ஒவ்வொன்றாக நோட்டம் விட்டேன்.

“உன்னை ஏன் வரச்சொன்னனான் எண்டு தெரியுமா?”

சேரை இப்போது நன்றாக நான் நிமிர்ந்துபார்த்தேன்.

“ரிசல்ட்ஸ் கேள்விப்பட்டிருப்பீங்கள் சேர் … நானே வந்து நன்றி சொல்லோணும் எண்டு …”

“எண்ட ஐம்பது வருட டீச்சிங் அனுபவத்தில உன்னை மாதிரி ஒரு மத்ஸ் மண்டையை நான் கண்டதே இல்ல அரி”

“நன்றி சேர் .. எல்லாம் உங்கட .. ”

நான் பேசி முடிப்பதற்கும் சேர் இடை மறித்தார்.

“உனக்கு நான் ஒரு புதையல் பரிசா தருவம் எண்டு பாக்கிறன்.”

“புதையலா? .. என்ன சேர் புதிர் போடுறீங்கள்?”

“புதையல் … தங்கம் வெள்ளி … ஏன் வைரம் வைடூரியம் கூட இருக்கும்”

“என்ன சேர்… விளங்கேல்ல”

“திங்களொடு கங்கையணி செஞ்சடையர் மங்கையொரு
பங்கர் கயிலாய மாலைக்குத் -துங்கச்
சயிலமிசைப் பாரதத்தைத் தானெழுதும் அங்கைச்
சயிலமுகத் தோன்துணைய தரம்”

சேர் திடீரென்று வெண்பாவோ விருத்தமோ ஏதோ ஒன்றை இடறாமல் விறுவிறுவென்று ஒப்புவித்தார். “பிகே ஒரு அலுக்கோசு” என்று மேனன் அடிக்கடி சொல்லும்போது நான் நம்பியதில்லை. இப்போது கொஞ்சம் சந்தேகம் வந்தது.

“என்ன சேர் திடீரென்று சங்க இலக்கியம் .. ”

“இது எங்கட ஆக்கள் தம்பி .. கைலாயமாலை .. எழுதினது முத்துராசக்கவிராயர் .. அவரோட மகன் ஆர் தெரியுமா?”

“நீங்களா சேர்?”

சேர் என்னுடைய நக்கலை கவனித்ததாக தெரியவில்லை.

“மொக்குப் பணியாரம்.. முத்துராசக்கவிஞர் முன்னூறு வருஷத்துக்கு முன்னைய ஆள். அவருடைய மகன், கதிரையப்பர், அவர் மகன் செந்தியப்பன், அவர் மகள் செண்பகநாயகி, செண்பகநாயகியோட மகன் பரமேஸ்வரன். பரமேஸ்வரன் மகன்தான்..”

“கோடீஸ்வரன் .. பி.கே .. பரமேஸ்வரன் கோடீஸ்வரன்”

“அதேதான்”

“இந்த வரலாறு இப்ப என்னத்துக்கு சேர்?”

சேர் அலுமாரிக்குப்பக்கத்து குவியலுக்குள் முழுகி, ஒரு பெரிய தும்மல் தும்மி, சாறத்தை தூக்கி சளியை சீறி இழுத்து, காறியபடி, கையில் ஒரு புத்தகத்தோடு மீண்டார். என் கையில் தரவில்லை. பக்கங்களைப் புரட்டியபடியே கதை சொல்லத்தொடங்கினார்.

“சந்திரனில் லாதவெழிற் றாரகைபோல் வானரசாள்
இந்திரனில் லாத இமையவர்போல்-விந்தை
கரைசேரிம் மாநகர்கோர் காவலரண் செய்யுந்
தரையரச னின்றித் தளம்ப”

பதினேழாம் நூற்றாண்டு. யாழ்ப்பாண இராசதானி சரியான தலைவன் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருந்த சமயம். அந்த சுதந்திர நாட்டை தன் கட்டுக்குள் கொண்டுவர கோட்டே மன்னனான ஆறாம் பராக்கிரமபாகு விரும்பினான். அதுதான் தகுந்த சந்தர்ப்பம் என்று அறிந்தான். போர் தொடுத்தான். படைத்தளபதியாக சப்புமல்குமாரயாவை அனுப்பினான். அவன் யாழ்ப்பாணத்துக்கு படையெடுத்து வந்து ..

”அவன்தானே செண்பகப்பெருமாள்? .. வரலாறு பாடத்தில படிச்சிருக்கிறன்”

சிங்களத்தில் சப்புமல்குமாரய. தமிழில் செண்பகப்பெருமாள். யாழ்ப்பாண இராசதானியை ஆக்கிரமித்தான். சூறையாடினான். அவனுக்கு உள்ளுக்க இருந்து உளவு பார்த்து உதவி செய்தது எங்கள் மூதாதையரான முத்துராசக்கவிஞர்தான்.

“காட்டிக்குடுத்திருக்கிறார்கள்” என்று எனக்கு வாய் உன்னியது. பிச். யார்தான் துரோகி இல்லை?

“ஒகே சேர் இந்தக்கதையை இப்ப ஏன் எனக்கு சொல்லுறீங்க?”

சேர் பதில் சொல்லாமல் தன் கதையை தொடர்ந்தார்.

அதுக்கு பிரதியுபகாரமாக செண்பகப்பெருமாள் முத்துராசக்கவிஞருக்கு, மாதோட்டத்தில் கொள்ளையடித்த அத்தனையும் அவருக்கே என்று பட்டயம் எழுதிக்கொடுத்தான். முத்துராசக்கவிஞர் ஓவர் நைட்டில் முதலாளி ஆனார். சொத்து என்றால் சொத்து. ஊர் காணாத சொத்து. கவிஞருக்கு புளுகம் தாங்கமுடியவில்லை. செண்பகப்பெருமாளை துதி பாடத்தொடங்கினார். நல்லூர் கோயிலை இடித்து நாசமாக்கினதே செண்பகப்பெருமாள்தான். ஆனால் நல்லூரை அவனே திருத்தியமைத்தான் என்று மாற்றி எழுதினார்.  கவிதை புல் புஃளோ.

இலக்கிய சகாப்த மெண்ணூர், றெழுபதா மாண்ட தெல்லை,
அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகவாகு,
நலமிகும் யாழ்ப்பாண நகரி,கட்டுவித்து நல்லைக்,
குலவிய கந்தவேட்குக், கோயிலும் புரிவித்தானே

“இதெல்லாம் எப்பிடி சேர் உங்களுக்கு தெரிஞ்சது? .. நீங்கள் கெமிஸ்ட்ரி மாஸ்டரல்லோ?”

நான் பொறுமையில்லாமல் கேட்க, சேர் “பொறு .. சொல்லுறன்” என்று தொடர்ந்தார்.

ஆரம்பத்தில் மாதோட்டம் வெறும் மீனவக்கிராமம் என்றே செண்பகப்பெருமாள் நினைத்திருக்கிறான். ஆனால் பல வருடங்களுக்குப் பின்னர்தான் தெரிந்தது, மாதோட்டத்தில் ஒரு பெரும் வணிகத்துறைமுகமே இருந்தது என்று. இந்த விஷயத்தை செண்பகப்பெருமாளிடம் மறைத்து, முத்துராசரும் ஆண்டுக் கணக்கில் நன்றாக முத்துக் குளித்துவிட்டார். விஷயம் கேள்விப்பட்ட செண்பகப்பெருமாள் நெருப்பெடுத்துவிட்டான். உடனேயே மொத்த குடும்பத்தையும் கழுவேற்றிவிட்டு, அனைத்துப் பெறுமதிகளையும் மீட்டுவருமாறு ஆணை பிறப்பித்தான்.

“அடக்கடவுளே .. அப்புறம் எப்படித் தப்பினார்கள்?”

“முத்துராசர் தான் வைத்திருந்த தங்க நகைகள், வைரம் வெள்ளி என்று அத்தனையையும் ஒன்றாக சேர்த்து எங்கேயோ பதுக்கிவைத்துவிட்டு வன்னிக்கு தப்பியோட முயன்றிருக்கிறார்”

“ஆ..”

“ஆனா பூநகரியில் பிடிபட்டுப்போனார். அடுத்தநாளே நல்லூருக்கு கொண்டுவரப்பட்டு, மறுநாள் காலை கோண்டாவில் பக்கம், பிலாமரம் ஒன்றில், தலைகீழாக தொங்கினார். பிணமாக, பக்கத்தில் பிலாப்பழமும் ஒன்று தொங்கியது. பாட்டு இருக்குது”

“அதுக்கும் பாட்டா? யார் எழுதினது”

“சேகராயர் … முத்துராயரின் மச்சான். அவர்களுக்குள் தொழில்போட்டி. முத்துராயரை காட்டிக்கொடுத்தது சேகராயர்தான்”

அப்படியென்றால் நிச்சயம் இது ஈழத்துக்கதைதான். சேர் சொல்வதை நம்பலாம் போலிருந்தது. கதை என்னவோ சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் எதற்கு சேர் என்னை அழைத்தார்? என்று எந்த இழவும் விளங்கவில்லை.

“இதெல்லாம் சரிதான் சேர் .. எனக்கெதுக்கு இந்த வரலாறு? நான் எஞ்சினியரிங் செய்யப்போறன்”

பிகே சேர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு இப்போதுதான் என்னை வடிவாகப் பார்த்தார். கொஞ்சம் நக்கல் சிரிப்பும் வந்தது.

“எஞ்சினியர் ஆகி? … உழைச்சு ..தெரியாமக் கேக்கிறன் … எவ்வளவு உழைப்பாய்?”

“சேர் .. வெள்ளவத்தைல ஒரு பிளாட் கட்டினா, கையில ரெண்டுகோடி சும்மா வருதாம்.. நான் சிவில் செய்யிறதா?”

“இண்டைக்கே நானூறு கோடி … உனக்கு கிடைக்கப் பண்ணுறன்”

தொடரும்.....

16 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு

 2. சண்முக பெருமாள் என்பதை செண்பக பெருமாள் என்று
  ​திருத்திக்கொள்ளவும். ​

  திருத்திக்கொள்ளவும்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. P என்றால் பேட்டையா பெடியனா..   சிரித்து விட்டேன்!  நிறைய இடங்கள் ரசிக்க வைக்கின்றன.  சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை.  சில இல்லை பல!  ஆனால் பொதுவாகவே ரசிக்க வைக்கும் நடை.

  பதிலளிநீக்கு
 4. கதை நன்றாகச் செல்கிறது. ரசனையான நடை. நல்ல பகிர்வு. இல்லையென்றால் படித்திருக்க வாய்ப்பே இல்லை

  பதிலளிநீக்கு
 5. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 6. மனிதாபிமான சம்பவம் நடத்துனர் ஓட்டுநர் இருவரும் மனதைக்கவர்ந்துவிட்டனர்.

  முதலுதவி சிகிச்சை அளித்த செவிலி வனிதா விற்குப் பாராட்டுகள். வாசித்த நினைவு இருக்காப்ப்ல இருக்கு அதனால என்ன?

  யாசகம் செய்து கல்விக்கு உதவும் பெரியவர் - பாராட்டுகள்.

  நல்ல ரோடு போடப்படும் என்ற உறுதி மொழியை வாங்கிய மக்களுக்கும் பாராட்டுகள். இப்படி எல்லாப் பகுதிகளிலும் இருந்துவிட்டால் நலல்து. ஆள்பவர்களுக்கும் கொஞ்சம் பயம் இருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 7. கதையை ரொம்ப ரசித்து வாசித்தேன் ஜெகே அண்ணா.

  அதுவும் இலங்கைத் தமிழ் வாசிக்கவே சுவாரசியமாக இருக்கும். ரொம்பப் பிடிக்கும். ஆசிரியர் எழுதிய விதமும் சூப்பர்.

  நக்கல் உரையாடல்கள்!! பல இடங்களில் சிரித்துவிட்டேன்.

  நல்ல பகிர்வு. மிக்க நன்றி ஜெ கே அண்ணா இப்படி அறிமுகப்படுத்துவதற்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 8. அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி. தினசரியில் நானும் படிச்சேன். கதை புதுமாதிரியா இருக்கு. எங்கெங்கேயோ அலையுதே! பார்க்கலாம் அடுத்த வாரம்.

  பதிலளிநீக்கு
 9. பரமசிவம் அவர்களுக்கும் வனஜா அவர்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 10. வருகை புரிந்தவர்களுக்கும் கருத்து கூறியவர்களுக்கும் நன்றி.

  ஈழத்தமிழ் என்றவுடன் அதிரா எட்டிப்பார்த்து கருத்துக் கூறுவார் என்று நினைத்தேன். காணவில்லை.
  Jayakumar

  பதிலளிநீக்கு
 11. செய்திகள் அனைத்தும் நல்ல செய்திகள். நடத்துனர் பரமசிவம் அவர்களுக்கும் , முதல் உதவி செய்து உயிரை காத்த செவிலியர் வனஜா அவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. கதை படித்தேன்.

  //முத்துராசர் தான் வைத்திருந்த தங்க நகைகள், வைரம் வெள்ளி என்று அத்தனையையும் ஒன்றாக சேர்த்து எங்கேயோ பதுக்கிவைத்துவிட்டு வன்னிக்கு தப்பியோட முயன்றிருக்கிறார்”//


  பதுக்கி வைத்தவைகளை தேட போகிறார்களா?

  பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. ஒரு உயிரை காப்பாற்றிய பேருந்தின் நடத்துனரையும், ஓட்டுனரையும் போற்றுவோம்.

  அதுபோல் தக்க சமயத்தில் முதலுதவி செய்த செவிலியருக்கும் பாராட்டுக்கள். நல்லவர்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதை பகிர்வும் வித்தியாசமானதோர் நடையமைப்பில் படிக்க நன்றாக உள்ளது. சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்கள் சொன்னபடி பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களின் எழுத்து சாயலுடன் இருக்கிறது. ரசித்துப் படித்தேன். இதன் இரண்டாம் பாகத்தையும் படிக்க ஆவலாக உள்ளேன். இக்கதையை பகிர்ந்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

  நேற்று என்னால் வலைத்தளம் வர இயலவில்லை. அதனால் தாமதம். மன்னிக்கவும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. இந்த வாரத்தின் பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!