அசடு
உணவுப் பிரியர்கள் அனைவருக்கும் சுவையான வணக்கம். இன்றைக்கு எபி அடுக்களையில் மெனுவின் பெயரைப் பார்த்ததுமே “ஆ! யார் அசடு” ன்னு ஜெர்க் ஆகறீங்களா!!!!
என் மாமியார் செய்திருந்த போது, இது என்னது என்று கேட்டப்ப, அசடு! என்றார். ஒரு நிமிடம், ‘அசடு இது கூடத் தெரியலையா? என்று என்னைத்தான் சொல்றாங்க போல. நமக்குத்தான் தினப்படி சமையல் தெரியாதே! என்று நினைத்து, “எனக்கு இது புதுசு” என்று சொல்லி அவங்ககிட்ட கேட்க அப்ப அவங்க இதுக்குப் பெயர் அசடுன்னு சொல்வோம் என்று செய்முறை சொன்னதும், ஏன் இப்படி ஒரு பெயர்னு கேட்டேன். (எங்க ஊர்ப்பக்கங்களில் தனியாவின் பயன்பாடு எல்லா பதார்த்தங்களுக்கும் கிடையாது.)
“அசட்டுத்
திதிப்பு திதிக்கும். திதிப்பும் காரமும், புளிப்பும் கலந்துகட்டி வரதுனால ரெண்டாங்கெட்டான்.
கைல கிடைச்ச அல்லது வீட்டிலிருந்த கத்தரியையும், சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் அவசரத்துக்குக்
கூட்டு செஞ்சிருப்பாங்க. சாப்பிட்டவங்க இதென்ன, கத்தரி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து
புளிப்பு, காரம், இனிப்புன்னு “அசட்டுத்தனமான’ ஒரு கூட்டுன்னு கேட்கப் போய்….” என்று
அதன் வரலாற்றைச் சொல்ல…
நான் “அட! என்ன
பேரு வைக்கன்னு தெரியாம முழிச்சேன். பேரு கிடைச்சிருச்சே!” “அதான் அசடு” ன்னு புதுசா
நாமகரணம் சூட்டியிருப்பாங்களோ” என்று நினைத்துக் கொண்டேன்.
மாமியார் செஞ்சு
பெயர் வைத்ததா இல்லை அவங்க அம்மா செஞ்சு வைச்சதான்னு தெரியலை. ஆனால் நம் வீட்டில் எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும். (எங்க வீட்டுல எதுதான் பிடிக்காது!!!!)
படங்கள் அதிகம்
எடுக்கவில்லை. எடுத்த படங்களுடன் சொல்கிறேன்.
செய்முறை:
வறுத்து அரைக்க
: இங்கு கொடுக்கப்பட்ட காய்கள் அளவிற்கு
கொத்தமல்லி
விரை – 1 மேசைக்கரண்டி தூக்கலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்
கடலைப்பருப்பு
– ½ மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல்
– 4 (காரம் தேவைப்படுபவர்கள் உங்கள் தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம்)
பெருங்காயம்
பொடி – ½ தேக்கரண்டி. இங்கு படத்தில் ஒரு சின்ன தேக்கரண்டியில் paste போன்று காட்டியிருக்கிறேன்.
இது சம்பூர்ணா ஹோட்டல் பெருங்காயம். செம மணம். ஒரு துளி போட்டாலே போதும். பால் பெருங்காயம்
அளவு வாசனை. அதான் இந்த அளவு போட்டதைக் காட்டியிருக்கிறேன். இப்போது இந்த சம்பூர்ணா
ஹோட்டல் பெருங்காயம் கடைகளில் காண்பதில்லை.
என்னாச்சோ?
புளி – நெல்லிக்காய்
அளவு. இரண்டு கோப்பைத் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காய்ப்பூ
– 1/3 கோப்பை
வெல்லம் பொடித்தது
– ஒரு மேசைக்கரண்டி
உப்பு – தேவையான
அளவு
வாணலியில்
ஒரு மேசைக்கரண்டி நல்லெண்ணை விட்டுக் கொண்டு காய்களை சிறிது வதக்கிக் கொண்டு கரைத்து
வைத்திருக்கும் புளித்தண்ணீரை விட்டு 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க
விடவும். உப்பைப் போட்டுவிடவும். வேகும் போது கொஞ்சம் வெல்லம் சேர்ப்பதுண்டு. நான்
மாமியாரின் செய்முறைப்படி செய்வதால் சேர்ப்பேன். சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள்
விருப்பம். கருகப்பிலையும் சில இலைகளைப் போடலாம். நான் போடுவதுண்டு. உங்கள் விருப்பம்.
காய்கள் வேகட்டும். அதற்குள்…
வறுக்கக் கொடுத்துள்ளவற்றை,
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை விட்டுக் கொண்டு
தனித்தனியாக கொத்தமல்லி விரை, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு எல்லாவற்றையும்
வறுத்து எடுத்துக் கொண்டு தேங்காயுடன் சேர்த்து நன்றாக அரைத்ததை, காய்கள் வெந்ததும்
போட்டுக் கலக்கவும். அப்போது பெருங்காயத்தைச் சேர்க்கவும். நான் பெருங்காயம் சேர்ப்பவற்றில்
கடைசியில் சேர்ப்பதுதான் வழக்கம். பச்சையாகவொ அல்லது வறுத்துச் சேர்ப்பதாக இருந்தாலோ.
கலந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு (2 நிமிடம் போதும்) ஒரு தேக்கரண்டி எண்ணை
விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை தாளித்து அதில் போடவும்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்ககமலா அக்கா. நலமா...?
நீக்குகீதா
கசடு தெரியும். அசடு இப்போது தான் கேள்விப்படுகிறேன். கத்தரிக்காய் வள்ளிக்கிழங்கு புளிக் குழம்பு அசடு!! ஆமாம் சின்ன வெங்காயம் பூண்டு சேர்க்க வேண்டாமோ?
பதிலளிநீக்குவத்தல் குழம்பு தவிர வேறு எந்த புளிக் குழம்பும் எனக்கு பிடிப்பதில்லை.
Jayakumar
ஜெகே அண்ணா சர்க்கரைவள்ளிக் கிழங்கு. வள்ளிக் கிழங்கு என்பது வேறு.
நீக்கு//கத்தரிக்காய் வள்ளிக்கிழங்கு புளிக் குழம்பு அசடு!!//
ஹாஹாஹா !!!
வீட்டுல பெரியவங்க சின்னவெங்காயம் பூண்டு சேர்க்கறதில்லை.
நான் சின்னக் குழந்தைதானே அதனால சேர்ப்பேன். இதிலும் சேர்த்து செய்ததுண்டு.
இது குழம்பு இல்லை, அண்ணா, இது கூட்டு வகை. தொட்டுக் கொள்ள.
மிக்க நன்றி அண்ணா.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவாக தங்கள் செய்முறை அருமையாக உள்ளது.
அம்மா வீட்டில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு வைத்து கறி, கூட்டு என முன்பு செய்வோம். சாம்பாருக்கும் இது ஒரு நல்ல காயாக ஒத்து வரும். வெறும் கிழங்கை வேகவைத்துக் கொண்டும் மாலை சிற்றுண்டியாக எங்கள் சிறுவயதில் சாப்பிட்டுள்ளோம். ஆனால் என் புகுந்த வீட்டுக்கு வந்த பின் இந்தக்காயை அறவே விட்டு விட்டேனென்று கூறலாம். என் கணவருக்கு ஏனோ இது பிடிக்காது. அதனால் வாங்குவதில்லை.
இன்று கத்திரியுடன் சேர்ந்த இந்த கூட்டின் செய்முறை நன்றாக உள்ளது. நீங்கள் பகிர்ந்த படங்களும், செய்முறை விளக்கங்களும் பார்த்து, படித்து ரசித்தேன். இப்படி இப்போது ஒரு தடவை செய்து பார்க்கலாம் என நினைக்கிறேன். படங்களை பார்க்கும் போதே இதன் அருமையான பழைய சுவையை உணர்கிறேன்.
இதன் பெயரும் நன்றாக உள்ளது. இன்று விழிப்பு வந்து கண் திறந்தவுடன் பதிவை பார்த்ததும்"அசடே இன்னுமா உறங்குகிறாய்?" என உள்மனது திட்டுவது போல் எழுந்தமர்ந்தேன். :)))) . நான் கூட நெய் கசடு வைத்துத்தான் ஏதோ வித்தியாசமாக உணவை கூறியிருக்கிறீர்கள் எனவும், தூக்க கலக்கத்தில் நாம்தான் பெயரை மாற்றி படித்து விட்டோமோ எனவும் நினைத்தேன். :))) நல்ல வித்தியாசமான பெயர்.
செய்முறை விளக்கம் நன்றாக உள்ளது. தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வேகவைத்து - கரி அடுப்பில் சர்க்கரை வள்ளிக் கிழங்கைச் சுட்டுச் சாப்பிட்டிருக்கிறீர்களா? சிறுவயதில் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுபோல வறுவல்.
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஆமாம்.... நீங்கள் கூறுவது போல் கரி அடுப்பு தணலில் சுட்டும் சாப்பிட்டுள்ளோம். அதன் ருசி நன்றாகவே இருக்கும். பனங்கிழங்கும் இப்படி சுட்டு சாப்பிடும் போது, வேக வைத்ததை விட ருசியாக இருக்கும். அது ஒரு காலம். மறக்க முடியாத காலம். அப்போது இப்போதையப்போல ஸனாக்ஸ், பிஸ்கெட், வகையறாக்கள் எல்லாம் அவ்வளவாக வராத காலம். பழையதை நினைவு படுத்தித்தியமைக்கு நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கமலாக்கா நீங்கள் சொல்லியிருப்பது போல் எல்லாம் நம் வீட்டிலும் செய்வதுண்டு...ஆமாம் வெறுமனே வேக வைத்து...
நீக்குபெயரி சர்க்கரைன்னு இருந்தாலும் இது சர்க்கரை குறைபாடு உள்ளவங்களுக்கு நல்ல காய் என்று சொல்வதால், நான் இதை ஒரு உணவாக அதாவது வேக வைத்து வேறு எதுவும் இல்லாமல் மிளகு பொடி, உப்பு தூவி சாப்பிடுவது....டெஸ்டும் செய்து பார்த்தேன். சுகர் அளவுக்குள் இருந்தது. (வாக்கிங்க் போய் வருவேன்...)
இது கூட்டு வகைதான். பிடித்தால் செஞ்சு பாருங்க கமலாக்கா...
//வந்து கண் திறந்தவுடன் பதிவை பார்த்ததும்"அசடே இன்னுமா உறங்குகிறாய்?" என உள்மனது திட்டுவது போல் எழுந்தமர்ந்தேன். :))))//
ஹாஹாஹாஹா கொஞ்சம் நேரம் அசந்துட்டா 'அசடா' என்ன? உங்கள் வேலைகளுக்கு, உடல் நலத்துக்கு முக்கியம் தான் கமலாக்கா...தூக்கம் ரொம்ப அவசியம்.
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
ஆஹா நெல்லை, என் பாட்டி கரி அடுப்பில் சுட்டுத் தருவாங்களே...இப்ப அதுதானே க்ரில்ட் னு சொல்லறாங்க!!!!!
நீக்குஎனக்கும் ரொம்பப் பிடிக்கும்!
கீதா
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதிக்கா....மாலை ஆகிவிட்டது இதோ இங்கும், மற்ற தளங்களுக்கும் ஒரு ரவுன்ட் போய்ட்டுஓடணும்....
நீக்குகீதா
கமலா ஹரிஹரன் சொல்வது போல என் கணவருக்கும் பிடிக்காது வள்ளிக்கிழங்கு. எங்கள் வீட்டில் பொங்கல் அன்று மட்டும் வாங்குவோம். வெள்ளை, சிவப்பு சர்க்கரைவள்ளிகிழங்கு வாங்குவோம்.
பதிலளிநீக்குவள்ளிக்கிழங்கு என்று தனியாக ஒன்று இருக்கும் அது கொஞ்சம் வழ வழ தன்மையுடன் ஒரு ருசியும் இல்லாமல் இருக்கும். இளம் மஞ்சள் கலரில்.
நீங்கள் சொல்வது சர்க்கரை வள்ளிக்கிழங்குதானே?
கத்திரிக்காய், வள்ளிக்கிழங்கு இரண்டையும் ஒன்றாக வேக விட்டீர்களா கீதா? அல்லது தனி தனியாகவா?
தீயலுக்கு இப்படி தேங்காய் , மல்லி, கடலைபருப்பு வறுத்து அரைப்போம் அது போல இதற்கும் இல்லையா?
//கத்தரி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சேர்த்து புளிப்பு, காரம், இனிப்புன்னு “அசட்டுத்தனமான’ ஒரு கூட்டுன்னு கேட்கப் போய்….” என்று அதன் வரலாற்றைச் சொல்ல…//
குழம்பு இனிப்பும் காரமும் கலந்து இருப்பதால் அசடு பேர் பொருத்தம் சரிதான்.
படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை.
கோமதிக்கா....ஆமாம் வெள்ளை, சிவப்பு/பிங்க்? பொங்கல் சமயம் நிறைய வரும். மற்ற சமயங்களில் இப்பலாம் வருது ஆனால் அது பார்க்க சத்தாக இல்லை.
நீக்குஆமாம் வள்ளிக் கிழங்கு வேறு....தாடி மீசையுடன் !!! வழ வழன்னு இருக்கும்..இத காய்ச்சல் கிழங்குன்னும் ...இலங்கையில் இராசவள்ளிக் கிழங்குன்னும் நல்ல வயலட் கலர்ல இருக்கும்/ அதுல அல்வா செய்வதுண்டு. ரொம்ப நல்லாருக்கும்.
..ஆமாம் நான் சொல்வது சர்க்கரைவள்ளிக் கிழங்குதான்....பதிவிலும் எல்லா இடங்களிலும் சர்க்கரைவள்ளின்னுதான் சொல்லிருக்கேன் அக்கா.
கத்தரிக்காயையும் சர்க்கரை வள்ளிக் கிழங்கையும் ஒன்றாகவே வேகப் போட்டுவிட்டேன். பொதுவா கத்தரிக்காய் பாதி வெந்ததும் சர்க்கரை வள்ளிக் கிழங்கைப் போடுவேன். இம்முறை இரண்டையும் சேர்த்து போட்டுவிட்டேன். நல்லாவே இருந்தது கோமதிக்கா..
தீயலுக்கு தேங்காயை நன்றாக வறுக்கணுமே இல்லையா அக்கா. கடலைப்பருப்பும் வைப்பதில்லை அதுக்கு.
ஆமாம் இனிப்பு காரம் புளிப்பு அதான் அசடுன்னு!!!
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
மாமியார் செய்தது என்று எழுதியதைப் படித்ததும், கடைசி மாத்த்தில் மாமியாருக்கு நீங்கள் உதவியாக இருந்ததும், இறக்கும் அன்றுகூட அனுசரணையாக இருந்ததும் என் நினைவுக்கு வருகிறது கீதா ரங்கன். நீங்க என்றும் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நெல்லை அண்ணே!!!!!!!!! உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு! உங்களின், மற்றும் இங்குள்ள அனைவரின் வாழ்த்துகளும் எனக்கு டானிக்!
நீக்குஎன்னோடு கூடவே என் ஒன்றுவிட்ட நாத்தனாரும், மைத்துனரும் இருந்தாங்க. அவங்கதான் நிறைய செஞ்சவங்க நெல்லை.
என் மாமியாரிடம் நிறைய செய்முறைகள் கற்றுக் கொண்டிருக்கிறேன். கடுகுப்பச்சடி, இந்த அசடு, அவர்கள் செய்யும் மோர்க்குழம்பு, ...புழுங்கலரிசி தேங்காய் தோசை என்று...
மிக்க நன்றி நெல்லை.
கீதா
தாங்க முடியலை...வயதில் பெரியவராக இருந்தும், சின்னவனான என்னை, 'நெல்லை அண்ணே' என்று அழைப்பது. இது நியாயமா? எடையைப் பொறுத்துதான் அண்ணன், தம்பி, தங்கை என்றால், பிந்துகோஷ், கருணாநிதிக்குப் பாட்டி என்பீர்கள் போலிருக்கிறதே.
நீக்குஹாஹாஹாஹாஹா.......ஹையோ முடியலை நெல்லை. அண்ணே ந்னு அப்பப்ப சொல்லி எல்லாம் ஆசுவாசப்படுத்திக்கத்தான்!!!!
நீக்குகீதா
செய்முறை புதிது. சர்க்கரைவள்ளியும், வெல்லமும் சேர்ப்பதால் உண்டான அசட்டுத் திதிப்ப (இப்படித்தான் நாங்க சொல்லுவோம். அது என்ன அசட்டுத் திதிப்புனா, அதை விளக்க முடியாது. இரண்டுங்கெட்டான் என்பதால் அந்தப் பெயர்). சம்பந்தமே இல்லாமல் கத்திரிக்காயைச் சேர்த்திருக்கீங்க. புதிய செய்முறை.
பதிலளிநீக்குஆமாம் நெல்லை, அசட்டுத் திதிப்புதான் அசடு....
நீக்குஹலோ கத்தரிக்காய் நான் சேர்க்கலையாக்கும்...ஹிஹிஹிஹி... இது என் மாமியாரின் ரெசிப்பி!!!!....என் மாமியார் இப்படித்தான் செய்வாங்க. கத்தரியும் சர்க்கரைவள்ளிக் கிழங்கும் சேர்த்து. அதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.
மிக்க நன்றி நெல்லை..
கீதா
எந்த குழம்புக்கு, சாம்பாருக்கு நல்லாருக்கும் என்று யோசித்தால் எதுவுமே தோணமாட்டேன் என்கிறது. கலந்த சாத்த்துக்கும் சரிப்பட்டு வராது. அப்போ எதுக்கு நல்லாருக்கும்?
பதிலளிநீக்குஎன் மாமியார் பெரும்பாலும், மோர்க்குழம்பு செய்வாங்க, அவங்க செய்முறை. அசடு தொட்டுக் கொள்ள...
நீக்குஇது கூட்டு தானே அதனால நான் இதை அப்படியே சாதத்தில் கலந்து சாப்பிட செய்து விடுவதுண்டு.
பொதுவா மோர்குழம்பு - திருனெல்வேலி முறை அல்ல - தஞ்சாவூர், சென்னை கல்யாணங்களில் செய்யும் மோர்க்குழம்பு மெனுவில் இருந்தால் கண்டிப்பாக கொத்தமல்லி விரை அரைத்துவிடும் கூட்டு மெனுவில் இருக்கும்.
மிக்க நன்றி நெல்லை..
கீதா
கயாவில் நாங்கள் சர்க்கரை வள,ளிக் கிழங்கை விட்டுவிட்டோம். (விளாம்பழமும்)
பதிலளிநீக்குஆ! இப்பதான் மேலே கருத்து சொன்னப்ப, நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்கன்னா இந்த கூட்டு செய்து முதலில் கொஞ்சம் டேஸ்ட் செய்ய சொல்லலாம்னு நினைச்சேன் !!!!!!!! ஹூம் இப்படி சொல்லிட்டீங்களே!
நீக்குகீதா
வேலைப்பளு. இடையில் நேரம் கிடைக்கும் போது மதியம் மேல் வருகிறேன் பதில் கருத்து சொல்ல...
பதிலளிநீக்குகீதா
காக்க காக்க
பதிலளிநீக்குகனக வேல் காக்க..
பார்க்க பார்க்க
பாவம் பொடிபட..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
பார்க்க அழகாக இருக்கிறது ஆனால், பெயரு அசட்டுத்தனமாக இருக்கிறதே...
பதிலளிநீக்குஹாஹாஹாஹா....பெயர் அசட்டுத்தனமா இருந்தாலும் சுவை நன்றாக இருக்கும் கில்லர்ஜி.
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி!
கீதா
அசடு இதுவானால் சமத்து எதுவோ?
பதிலளிநீக்குஹாஹாஹாஹா ஜெகே அண்ணா! இந்த அசடும் தட்டிற்கு வரும் போது சமத்தாகிவிடும்!
நீக்குமிக்க நன்றி ஜெ கே அண்ணா.
கீதா
புதிய செய்முறை.
பதிலளிநீக்குசத்து அசத்து எதுவானாலும் அருமை..
ஹாஹாஹா அதே துரை அண்ணா இந்தக் கூட்டு அசத்தும்தான்!
நீக்குமிக்க நன்றி துரை அண்ணா.
கீதா
சிறப்பு
பதிலளிநீக்குமிக்க நன்றி கரந்தை சகோ!
நீக்குகீதா
என் நீண்ட பின்னூட்டம் என்னாச்சு? வெளியானதை பார்த்தேன், அப்புறம் காணோம்!
பதிலளிநீக்குவந்துவிட்டது கோமதிக்கா..பதிலும் கொடுத்தாச்சு!
நீக்குகீதா
பெயர் சிரிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குசக்கரை வள்ளி காரக்கறி , பச்சடி, சிப்ஸ் , செய்வோம். கத்தரி சேர்த்து செய்ததில்லை செய்து பார்க்கிறேன். நன்றி.
ஆமாம்!! மாதேவி.
நீக்குநாங்களும் நீங்கள் சொல்லியிருப்பவை செய்வதுண்டு.
காரக்கறி நன்றாக இருக்கும்
செய்து பார்த்து சொல்லுங்கள்.
மிக்க நன்றி மாதேவி
கீதா
ஒரேவேளை செய்து சாப்பிட்டால் சிரிப்பு வந்துகொண்டே இருக்குமோ...? (!)
பதிலளிநீக்குஹாஹாஹா...டிடி ! இதைச் சாப்பிட்டு விட்டு அட நல்லாருக்கே என்று புன்சிரிப்போமே இல்ல ஒரு கள்ளமில்லா சிரிப்பு?!!! அப்படின்னு வைச்சுக்கலாம்!!!
நீக்குமிக்க நன்றி டிடி
கீதா
கத்தரிக்காய் அசடு என்னும் பெயரில் கத்தரிக்காய் மட்டும் போட்டு எங்க வீட்டில் (பிறந்த வீடு. அங்கே தான் கூட்டு அதிகம் பண்ணுவோம்) செய்வது உண்டு. சர்க்கரை வள்ளிக்கிழங்கு வாங்கினால் வேகவிட்டுக் கொட்டிக் கொண்டு வாழைக்காய்க் கறி மாதிரி இந்தப் பொடியைப் போட்டுத் தாளித்துத் தேங்காய் சேர்த்து எடுப்பாங்க. அல்லது சாம்பாரில் போடுவாங்க. வேக/சுட்டுச் சாப்பிட்டிருக்கோம். நான் அதிகம் வறுவல் தான் பண்ணுவேன். நம்மவருக்குப் பிடிக்காது என்பதால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சௌசௌ, குடமிளகாய் போன்றவை எல்லாம் வாங்குவதே இல்லை. பார்த்தே வருஷங்கள் ஆகி இருக்கும். நடு நடுவில் பிள்ளை வருவதால் குடமிளகாய் அவ்வப்போது இடம் பெறும்.
பதிலளிநீக்குகீதாக்கா என் பிறந்த வீட்டிலும் அசடு என்று சொல்லாட்டாலும் கத்தரிக்காய் மட்டும் போட்டுச் செய்வதுண்டு. அதே போல கூட்டுதான் அதிகம் செய்வாங்க. மாமியார் வீட்டில் இதுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு போட்டுச் செய்வாங்க...கூட்டு செய்வது எப்பவாதுதான். வதக்கல், பொரியல்னுதான் செய்வாங்க.
நீக்குஆமாம் சாம்பார்ல போடலாம், வறுவலும் செய்வதுண்டு நல்லாருக்கும் கீதாக்கா.
ஓ பலருக்கும் இது பிடிக்காது போல. ஸ்ரீராமிற்கும் இது பிடிக்காது என்று இங்கோ அல்லது துரை அண்ணாவின் பதிவில் கருத்தில் சொல்லியிருந்ததை பார்த்த நினைவு..
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
மீனாக்ஷி அம்மாளின் "சமைத்துப் பார்" புத்தகத்தில் கூட (முதல் புத்தகம்) கத்திரிக்காய் அசடு எனவோ கொத்தவரைக்காய் அசடு எனவோ ஒரு கூட்டு இடம் பெற்றிருக்கும்.
பதிலளிநீக்குஓ மீனாட்சி அம்மாளின் புத்தகத்தில் இருக்கிறதா...
நீக்குஅப்ப அந்தக்காலத்துல இது செய்வாங்க போல!!
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
grrrrrrrrrrrrrrrrr where are my comments?
பதிலளிநீக்குஅக்கா உங்க கருத்துகள் வந்துவிட்டன. ஓடி ஒளிகின்றன. இங்கு வந்த பிறகும் கூட மறைகின்றன!
நீக்குகீதா
Geetha Sambasivam "'திங்க'க்கிழமை - அசடு - கீதா ரங்கன் ரெஸிப்பி ” என்ற உங்கள் இடுகையில் இவர் புதிய கருத்து தெரிவித்துள்ளார்:
பதிலளிநீக்குகத்தரிக்காய் அசடு என்னும் பெயரில் கத்தரிக்காய் மட்டும் போட்டு எங்க வீட்டில் (பிறந்த வீடு. அங்கே தான் கூட்டு அதிகம் பண்ணுவோம்) செய்வது உண்டு. சர்க்கரை வள்ளிக்கிழங்கு வாங்கினால் வேகவிட்டுக் கொட்டிக் கொண்டு வாழைக்காய்க் கறி மாதிரி இந்தப் பொடியைப் போட்டுத் தாளித்துத் தேங்காய் சேர்த்து எடுப்பாங்க. அல்லது சாம்பாரில் போடுவாங்க. வேக/சுட்டுச் சாப்பிட்டிருக்கோம். நான் அதிகம் வறுவல் தான் பண்ணுவேன். நம்மவருக்குப் பிடிக்காது என்பதால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சௌசௌ, குடமிளகாய் போன்றவை எல்லாம் வாங்குவதே இல்லை. பார்த்தே வருஷங்கள் ஆகி இருக்கும். நடு நடுவில் பிள்ளை வருவதால் குடமிளகாய் அவ்வப்போது இடம் பெறும்.
இது மேலயும் இருக்கு, பதில் கொடுத்திருக்கிறேன் அங்கு, கீதாக்கா!! ப்ளாகர் என்னவோ செய்கிறது!
நீக்குகீதா