புதன், 11 அக்டோபர், 2023

ஒவ்வொரு நாளும் பெஞ்சு மேலே ஏறி நின்று ..

 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

சினிமாக்களில் காட்டுவது போல் அடிதடி சண்டையை நேரில் பார்த்திருக்கிறீர்களா?

# சினிமா ஸ்டண்ட் நாளுக்கு நாள் சகிக்க முடியாத அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது.  அந்த அளவு சண்டை தெருக்களில் பார்ப்பது துர்லபம்.

& பார்த்தது உண்டு. ஆனால், யார் கதாநாயகன், யார் வில்லன் என்று தெரியாமல் பார்த்தேன். ஒரே அடி. அவ்வளவுதான் - அடிபட்டவர் உடனடியாக கீழே விழுந்து ரத்தம் சொட்டியதைப் பார்த்தது உண்டு. ஆனால் சினிமா போல திரும்பத் திரும்ப அடிப்பதோ அல்லது அடி வாங்கியதோ இல்லை. தெருவில் இரண்டொரு முறை + நான் பணிபுரிந்த தொழிற்சாலையில் சேர்ந்த புதிதில் நிகழ்ந்த தொழிற்சங்க தகராறில் ஒருமுறை. 

காந்தி ஜெயந்தியை கொண்டாடும் நாம்(காங்கிரஸ்காரர்கள் உட்பட)அதே நாளில் பிறந்த லால்பகதூர் சாஸ்திரியை மறந்து விடுகிறோமே? 

அதேபோல் செப்.5 ல்    டாக்டர். ராதாகிருஷ்ணனை சிலர் நினைத்தாலும் வ.உ.சி.யை மறப்பது நியாயமா?

# நம் நடவடிக்கைகளிலும் மனப்பாங்கிலும் பெரிய மாற்றம் வராத வரை, யாரை மறந்தால் என்ன யாரைக் கொண்டடினல்தான் என்ன !

உங்கள் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் உண்டா? பிறந்த நாள் பரிசுகளில் மறக்க முடியாதது எது?

# பெரிதாகக் கொண்டடியதாக  நினைவு இல்லை. பிறந்த நாள் பரிசுகள் வழக்கமான வேட்டி சட்டை தவிர விசேஷமாகக்  குறிப்பிடும்படியாக  எதுவுமில்லை..

& என் பிறந்தநாளை நானே கொண்டாடியதாக ஞாபகம் எதுவும் இல்லை. வேலைக்குச் சேர்ந்த பிறகு, சில வருடங்கள், என் பிறந்த நாளுக்காக ஏதேனும் புத்தகம் வாங்கியது உண்டு. 'வாரியார் விரிவுரை விருந்து', 'கந்தரனுபூதி', 'தியாகராஜ கீர்த்தனைகள்' இதெல்லாம் என் பிறந்த நாளுக்காக நான் வாங்கிய சில புத்தகங்கள்.  சமீபத்தில் எழுபது வயது பூர்த்தி ஆன பிறந்த நாளுக்காக மகன், மருமகள், பேரன்கள் ஏற்பாடு செய்த கேக் வெட்டி கொண்டாடியதுதான் முதல் முறையாக கேக் வெட்டி கொண்டாடிய பிறந்தநாள். 

= = = = = = =

KGG பக்கம் : 

பள்ளிக்கூட நாட்களில் நான் வாங்கிய முதல் பரிசு பற்றி போன வாரம் எழுதியிருந்தேன். 

அடுத்த பரிசு, ஏழாம் வகுப்பு படித்தபோது, பள்ளிக்கூடம் நடத்திய, 'பாரதியார் பிறந்தநாள்' கட்டுரைப் போட்டியில், பாரதியார் பற்றி நான் எழுதிய கட்டுரைக்கு கிடைத்த புத்தகம். " இலக்கியப் பாதையில் " என்ற தலைப்பில், 'வே கபிலன்' என்பவர் எழுதிய புத்தகம். ( கட்டுரை ரொம்ப ரொம்ப சாதாரணமாக எழுதப்பட்ட கட்டுரைதான். பாரதியார் எந்த தேதியில் பிறந்தார், எப்போது இறந்தார், கவிதைகளால் சுதந்திர உணர்வை எப்படி மக்களுக்குப் புகட்டினார் என்று எழுதியிருந்தேன். போட்டியில் பங்கேற்ற மற்ற மாணவர்கள் அதைக் கூட சரியாக எழுதவில்லை என்பதால் எனக்குப் பரிசு கொடுத்தார்கள். 'ஆலை இல்லாத ஊரில் நான்தான் இலுப்பைப் பூ !) 

பிறகு படித்த காலத்தில், நான் வாங்கிய நான்கு / ஐந்து  பரிசுகள் எல்லாமே  பெற்ற முதல் மதிப்பெண்ணுக்காக வழங்கப்பட்ட பரிசுகள் மட்டுமே. 

= = = = =

எட்டாம் வகுப்பு பாஸ் செய்த பின், என்னுடைய அப்பா என்னை அப்பொழுது புதிதாகத் தொடங்கப்பட்ட ( 1965) ஜூனியர் பாலிடெக்னிக் பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு எடுத்தார். அந்த ஆண்டுதான் அந்தப் பள்ளிக்கூடம் நாகை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் ஆதரவில், அந்த கட்டிடத்திலேயே தொடங்கப்பட்டது. 

அதற்கான விண்ணப்பம் அனுப்பி, நேர்முகத் தேர்வில் பங்கு பெற்று, எப்பொழுது மாணவர் தேர்வுப் பட்டியல் வெளியாகும் என்று காத்திருந்தோம். ஆரம்ப வருடம் என்பதால் மாணவர் தேர்வு பட்டியல் வெளியாக அப்பொழுது மிகவும் தாமதம் ஆகியது. ஆனால், நான் எட்டாம் வகுப்புப் படித்த பள்ளியில், ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பள்ளி திறந்துவிட்டது. என் அப்பா என்னிடம், " ஜூனியர் பாலிடெக்னிக் இந்த வருடம்தான் ஆரம்பமாகிறது என்பதால், மாணவர் தேர்வு, மாணவர் சேர்க்கை எல்லாம் தாமதமாகும் என்கிறார்கள். ஒருவேளை நீ அங்கு செலக்ட் ஆகாமல் போய்விட்டால் - ஒரு வருட படிப்பு வீணாகிவிடும். தேர்வு பட்டியல் வந்து, நீ அங்கு சேர்வது உறுதி என்று தெரிந்தபின்தான் இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து T C வாங்கப் போகிறேன். அதுவரை நீ இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புக்குச் சென்று வா" என்று சொல்லிவிட்டார். 

நானும் தினமும் ஒரே ஒரு நோட்டு எடுத்துக்கொண்டு, ஒன்பதாம் வகுப்புக்குச் சென்று, முதல் வாரத்தில். அங்கு வகுப்பில் சுவாரஸ்யம் எதுவும் இல்லாமல், பாடங்களை கவனிக்காமல்  உட்கார்ந்து வந்துகொண்டு இருந்தேன். 

இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்கியது டார்ச்சர் ! 

"இன்னும் புத்தகம், நோட்டு எல்லாம் வாங்கவில்லையா? ஏறு பெஞ்சு மேலே" 

" வீட்டுப் பாடம் எழுதவில்லையா! ஏறு பெஞ்சு மேலே "

" வீட்டுக் கணக்குப் போடவில்லையா ! (கணக்குப் புத்தகம் வாங்கவில்லை - அதனால், முதல் பயிற்சியில் முதல் ஐந்து கணக்குகள் என்ன என்றே தெரியாமல் எப்படி கணக்கு போடுவது? மேலும் கணக்கு நோட்டும் கிடையாது!) 

இந்த வகையில் பள்ளிக்கூடம் ஆரம்பமான இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் பெஞ்சு மேலே ஏறி நின்று பாடம் கேட்டு வந்துகொண்டு இருந்தேன். 

ஒரு மாத காலம் இப்படி சென்றது. 

அதற்குப் பின், ஜூனியர் பாலிடெக்னிக்கில் சேர நான் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேன் என்ற செய்தி வந்த நாளிலிருந்து இந்தப் பள்ளிக்கூடம் செல்வதை சந்தோஷமாக நிறுத்திக்கொண்டேன். 

= = = = = =

அப்பாதுரை பக்கம் : 

அமெரிக்க கலிபோர்னியா மாநிலம் கீதே, படா பேஜாருங்க. 

அங்க பட்சவங்க கீறாங்க, படா பணம் படச்சவங்க கீறாங்க, அறிவாளிங்க, அழகானவங்க, கலைஞருங்க.. அல்லாம் கீறாங்க. ஆனா பாருங்க திருட்டு, போதை, கடத்தல், கடன், பிச்சை, நோய்.. எல்லாத்துலயும் டாப் டக்கரா கீது. ஜனங்க வசதிக்கு சட்டம் போடணும் முற்போக்கா இருக்கணும் அப்டி இப்டினு நினைச்சுக்கிட்டு கேனயாட்டம் நடந்துக்குறாங்க அரசியல்வாதிங்க.. அது எத்தினி டேஞ்சரான விளைவுங்களை கொணாருது..

நம்ம புள்ளங்க இன்னாடானா கலிபோர்னியாவ விட்டு கெளம்ப மாட்டேனு கறாரா கீறாங்க.. குடாக்குங்க.

மிச்சத்தை அடுத்த புதன் கிழமை படிச்சுக்குங்க.. இப்ப க்ரிகெட் மாச்சி பாருங்க.. வெள்ளக்கார பசங்க 200 ரன் தேறுவாங்களா தெர்ல.

= = = = = = =

36 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. காக்க காக்க
    கனக வேல் காக்க..
    பார்க்க பார்க்க
    பாவம் பொடிபட..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன்
      நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்.

      நீக்கு
  3. கலிஃபோர்னியா - ஒரு கால் பக்க ரிப்போர்ட்..
    சென்னை சேப்பாக் ஹீட்ல ஆஸிங்க ரோஸ்ட் ஆறத பாத்துக்கிட்டே எழுதினா, கத இப்பிடித்தான் டி-20 மாதிரி ரத்னச்சுருக்கமா முடிஞ்சிறும்.. இதுவும் சரிதான்!

    அன்னிக்கி.. ரோஹித் மைதானத்துல டாஸ் காய்ன சுண்டிவிடறாரு.. கம்மின்ஸ் மேல பாக்கறாரு.. மைக்கப் புடிச்சிகிட்டு பக்கத்துல நின்ன இயான் பிஷப்போட மொட்ட மண்டைல முத்து முத்தா வேர்வ.. என்ன ஊருப்பா இந்த சென்னை.. தர்மசாலாவப் பாருங்க.16 degree ல பளபளன்னு.. சிலுசிலுன்னு எப்பிடித்தான் இருக்கு..

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. // வ.உ.சி அவர்களை முற்றாக மறந்து போனோம்.. //

      அது அவரோட தலை எழுத்து..

      அவுரு இன்னா காண்டி மாரி
      கடைத் தேங்காய எடுத்தா வழிப் புள்ளியாருக்கு ஒடைச்சாரு?..

      சொந்தக் காசு நயினா சொந்தக் காசு!..

      (பெருஞ்செல்வத்தை விற்று வேலை நிறுத்த நேரத்தில் தொழிலாளர்களுக்கு சோறு போட்ட புண்ணியவான் அவர்..)

      கடேசில கய்ட்டப்பட்டு கால் வயித்துக்கும் வழியில்லாம போய்ச் சேந்தாரு..

      நாமெல்லாம் ஆரு?..
      டமிழன்.. ஜெந்டமிளன்..

      வாவூசியோ.. கோணூசியோ.. ன்னு - ஜினிமாவுல அவர நக்கல் பண்ணினப்ப கை தட்டி ரஷிச்சவங்களாச்சே!..

      இதுக்கு அப்பாலயும் இருக்கே..

      அவுரா கப்பலு ஓட்னாரு?.. ன்னு கேய்வி கேட்டுக்கினு திரிஞ்சவங்களாச்சே!..

      ஹெஹ்ஹே!...

      ( வ.உ.சி. என்னை மன்னிப்பாராக!..)

      பிக்பாக்கெட் திருடனும் பகல் கொள்ளையனும் இடையழகும் தொடையழகும் இங்கே போதும்..

      நீக்கு
  5. வ.உ.சி. அவர்களின் பெயரன் இறந்தபோது சொந்த ஊரில் பத்து நபர்கள் வந்து நின்றார்களாம்.

    தமிழன் நன்றி கெட்டவன் கூத்தாடன், கூத்தாடிகளுக்கு காவடி தூக்குபவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனையின் உண்மை..

      வெட்கம்..

      இதற்கு மேல் என்ன சொல்வது?..

      நீக்கு
  6. Kgg பக்கம் அன்றைய காலத்தை நினைவுறுத்துகிறது.

    இப்பொழுது மூன்று வயது ஆவதற்கு முன்பே காசு இல்லை என்று சொன்னால் காட்டை போட்டு பாங்கில் எடுங்கள் என்கிறார்கள்.எனது பேரன்,:)
    அடுத்த பிறந்த நாளுக்கு என்ன கேக் வேண்டும் என்று சொல்கிறார்கள் :) காலத்தின் மாற்றங்கள்.

    பதிலளிநீக்கு
  7. கேள்விகளும் அதற்கு பதில்களும் அருமை.
    வ.உ.சி அவர்களை இப்போது நினைந்து அவர் சிலைக்கு மாலை மரியாதை செய்து வருகிறார்கள்(கோவையில்) மரியாதை செய்யும் குழுவில் என் கணவரின் அண்ணா இருக்கிறார்கள். அன்று அவரைப்பற்றி பேசுவார்கள். மதுரையில் நிறைய இடங்களில் நடக்கிறது.

    KGG சாரின் பள்ளி அனுபவங்களை படிக்கும் போது அவர் பெற்ற பரிசுகளை நினைத்து மகிழ்ச்சியும். புத்தகம் வாங்காமல் வீட்டுப்பாடம் செய்யாமல் பெஞ்ச் மேல் நிற்கும் தண்டனை பெற்றது வருத்தம்.

    //திருட்டு, போதை, கடத்தல், கடன், பிச்சை, நோய்.. எல்லாத்துலயும் டாப் டக்கரா கீது//

    அப்பாதுரை சார் எழுதி இருப்பதை படித்த போது எங்குதான் இல்லை என்ற நினைப்பு வருகிறது.

    பதிலளிநீக்கு
  8. அடிதடி சண்டை நிறைய பார்த்ததுண்டு. என்ன, சினிமால பறந்து பறந்து அடிக்கறதெல்லாம் நடக்காது. ஹீரோ வில்லன்லாம் கிடையாது. அன்னன்னிக்கு யாரு கை கால் முறியற அளவு அடி பின்னுறாங்களோ அந்த ஆள் ஹீரோ...ஏனா அடி வாங்கி முறிஞ்சு போர ஆள் உதட்டுல வழியற ரத்தத்த கைல எடுத்துப் பார்த்து அப்படியே அடிச்ச ஹீரோவையும் பார்த்து...இருக்குடா உனக்கு என்று கறுவி....இன்னொரு நாள் தொடரும்....இதெல்லாம் ஒரு காலத்துல சர்வ சகஜம் நான் இருந்த ஊர்ல...

    அதுக்கப்புறம் திருவனந்தபுரத்துல நம்ம வீட்டு முன்னாடியே கத்தி குத்து, கொலை....பார்த்ததுண்டு. அப்ப அந்த ஏரியா....ரெண்டு அரசியல் கட்சிகளின் யுத்தகளம். கோயில் அருகில்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /அதுக்கப்புறம் திருவனந்தபுரத்துல நம்ம வீட்டு முன்னாடியே கத்தி குத்து, கொலை....பார்த்ததுண்டு. அப்ப அந்த ஏரியா....ரெண்டு அரசியல் கட்சிகளின் யுத்தகளம். கோயில் அருகில்!/

      நீங்கள் சொல்லும் போதே பயமாக உள்ளது சகோதரி. சினிமாக்களில் பார்க்கும் போதே அது உண்மையல்ல என உணரும் போதே மனது படபடவென இருக்கும். நேரடியாக இவற்றை எப்படி சந்தித்தீர்களோ ?

      நீக்கு
  9. பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் சுத்தமாகக் கிடையாது. சிறு வயதிலிருந்தே...தேதி நினைவு இருப்பதும் இல்லை. Its yet another day!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. வ உ சி, லால்பகதூர் சாஸ்திரி - இருவரது நாளையும் துரை அண்ணா சிறப்பிப்பதை அவர் பக்கத்தில் வருடந்தோறும் காணலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கேள்விகளும் பதில்களும் அருமை. சகோதரர் கௌதமன் அவர்களின் பக்கமும், சகோதரர் அப்பாத்துரை அவர்களின் பக்கமும் நன்றாக உள்ளது. சிறு வயதில் கௌதமன் அவர்கள் வாங்கிய பரிசுகள் மனதை மகிழ்விக்கிறது. நினைத்தபடி பாலிடெக்னிக் பள்ளியில் சேர்ந்ததும் அதிர்ஷ்டந்தான். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. கௌ அண்ணா!!! படம் ஏன் இப்படி? உங்க படத்தையே போட்டிருக்கலாமே!!!

    நிறைய பரிசுகள் வாங்கியிருக்கீங்க!! எனக்கும் என் பழைய நினைவுகளை கொண்டாந்துச்சு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ எல்லாம் போட்டோ எடுத்தார்கள். ஆனால் போட்டோ எடுத்த போட்டோ ஸ்டுடியோ ஆளிடமிருந்து காசு கொடுத்து வாங்குவதற்கு எங்கள் வீட்டில் பணம் இல்லை.

      நீக்கு
  13. அப்பாதுரை ஜி - எபி வாட்ஸப்ல வந்தது இந்த புதனுக்கு ட்ரெய்லர்னு நினைச்சா இங்க அடுத்த புதனுக்கு ட்ரெய்லரா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தூர்ல மேற்குக்கு கிழக்கு பிடிக்காது கிழக்குக்கு மேற்கு பிடிக்காது! நம்மூர்ல தெக்கும் வடக்கும் போல!

      கீதா

      நீக்கு
    2. இதை நான் இங்கே வெளியிட்டது அவருக்கே தெரியாது!!

      நீக்கு
  14. //Geetha Sambasivam6 அக்டோபர், 2023 அன்று பிற்பகல் 2:50
    சின்ன வயசில் கடவுளைக் கும்பிடும்போது பெரியவங்க பயம் காட்டி பக்தியை வளர்த்தாங்களா? நீங்க பயந்திருக்கீங்களா?

    பதிலளிநீக்கு

    Geetha Sambasivam6 அக்டோபர், 2023 அன்று பிற்பகல் 2:51
    எல்லாம் அவன் செயல் என்பது தப்பித்தலா? அல்லது பக்தியின் எல்லையா?

    பதிலளிநீக்கு// போன வாரம் நான் கேட்ட கேள்விகள். யாருமே கவனிக்கலை. பதிலும் வரலை. :( நேத்திக்கே பார்த்துட்டேன். ஆனாலும் நேத்திக்குக் கருத்துச் சொல்ல முடியலை. ;(

    பதிலளிநீக்கு
  15. சண்டைக் காட்சிகள் எல்லாம் திரைப்படங்களீல் பார்த்தது தான். பொதுவான வாய்ச்சண்டை, குழாயடிச் சண்டை பார்த்திருக்கேன். அதிலே சில சமயம் அடிதடியும் இருந்தாலும் பயமாகவெல்லாம் இருந்தது இல்லை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!