புதன், 25 அக்டோபர், 2023

நிழலும்,நிஜமும் !

 

நெல்லைத்தமிழன் : 

மனித உழைப்பு, பொருட் செலவு முதலியவைகளால் உருவாக்கப்பட்ட கட்டிடங்களை போர் என்ற பெயரால் உருக்குலைப்பது மனதுக்கு ஏற்புடையதா?  பண்டைய பாரத மன்னர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக போர் நிலம் உருவாக்கி அங்கே போரிட்ட மாண்பை இப்போதுள்ளவர்கள் தொடரக்கூடாதா?

# இப்போது புழக்கத்தில் உள்ள ஆயுதங்களுக்கும் தர்ம யுத்தத்துக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை.

அந்தக் காலத்திலும் அக்கிரம யுத்தம் நடக்காமல் இருந்திருக்காது.

& இப்போ எல்லாம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக போர் நிலம்  ஒதுக்கினால் - ரியல் எஸ்டேட் ஆசாமிகள் பிளாட் போட்டு விற்று பணம்  சம்பாதித்துவிடுவார்கள்! 

புத்தக விமர்சனம், கலந்துரையாடல் என்றாலே 'குடிப்பது' என்ற கலாச்சாரம் வந்துவிட்டதே.. இது வளர்ச்சியா இல்லை சீரழிவா?

# சந்தேகம் இல்லை - சீரழிவு தான். கொண்டாட்டம் என்றால் குடி என்பது நமக்கு அந்நியமான ஒன்று.

& அப்படியா? எங்கே இதெல்லாம் நடக்கிறது? பொது இடத்திலா? நான் பார்த்தது இல்லை. 'குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும்' என்று பானர்  எழுதி வைத்திருப்பார்களா? 

= = = = = =

வாசகர் பக்கம் : 

ஊர் சுற்றி உமேஷ்  :: நிழலும்,நிஜமும் " 

பல விஷயங்கள் சினிமாவில் காட்டுவதற்கும், நிஜத்திற்கும் சம்பந்தமே இருக்காது. ஒரு முறை என் நண்பர் ஒருவரின் மகள் திருமணத்தை பதிவு செய்த பொழுது சாட்சி கையெழுத்து போட என்னை அழைத்திருந்தார்கள். சினிமாக்களில் காண்பிப்பது போல விஸ்தாரமான ஹாலில் ஒரு உயர்ந்த பீடத்தில் சுத்தமான மேஜையில் சப்-ரிஜிஸ்டரர் அமர்ந்திருப்பார் என்று எல்லோரும் நினைத்தோம், ஆனால் ஒரு பெரிய ஹாலில் ஏகப்பட்ட மேஜைகள், அந்த மேஜைகளில் குவிந்திருக்கும் கோப்புகள், கசகசவென்று ஒரே கும்பல்.

சினிமாக்களில் காட்டப்படும் ஆஸ்பத்திரி, போலீஸ் ஸ்டேஷன், எல்லாமே நாம் நிஜத்தில் பார்ப்பது போல் இருப்பதில்லை. கோர்ட் மட்டும் விதி விலக்காகி விடுமா என்ன? சமீபத்தில் கோர்ட்டுக்குச் சென்று கூண்டில் ஏறி வாக்குமூலம் அளிக்க வேண்டிய நிர்பந்தம். 

சினிமாக்களில் காட்டப்படும் நீதி மன்றத்திற்கும், நிஜமான நீதிமன்றத்திற்கும் எக்கச்சக்க வித்தியாசம்! 

சினிமாக்களில் காண்பிப்பது போல் விஸ்தாரமான, கூடம் இல்லை. மகாத்மா காந்தி ஃபோட்டோ, கண்களை கட்டிக் கொண்டிருக்கும் நீதி தேவதை சிலை போன்றவை இல்லவே இல்லை.

அட்வகேட் சுமதி ஒரு பேட்டியில், “நீதிமன்றங்களை இருப்பது போல் காட்டுங்களேன், எதற்கு இந்த கிராண்டியர்?, மலையாளப் படங்கள் பரவாயில்லை என்றார். உண்மைதான். நோ கிராண்டியர் அட் ஆல். தமிழ்ப் படங்களை பொருத்தவரை அசுரன், ஆண்டவன் கட்டளை(விஜய் சேதுபதி நடித்திருந்த படம்) போன்ற படங்கள் ஒரளவிற்கு நிஜத்திற்கு அருகில் இருந்தன.  

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதி மன்றங்கள் வளாகம் என்றிருந்த இடத்தில், கிரிமினல் கோர்ட், சிவில் கோர்ட், ஃபேமிலி கோர்ட் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அறைகள். ஆம் நிஜமாகவே அறைகள்தான். கிரிமினல் கோர்ட்டில் மட்டும் காவலர்கள் இருந்தார்கள்.

நான் சென்றது சிவில் கோர்ட். ஒரு உயர்ந்த இடத்தில் நீதிபதி(பெண்) அமர்ந்திருக்க, அவர் அருகில் கம்ப்யூட்டர் முன் ஒரு டைப்பிஸ்ட். கீழே ஒரு பெரிய செவ்வக மேஜை போடப்பட்டிருக்க, அதன் மூன்று பக்கங்களிலும் வழக்குரைஞர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். நீதிபதிக்கு நேராக இருந்த சுவற்றை ஒட்டி ஒன்றும், பக்கவாட்டு சுவற்றை ஒட்டி ஒன்றுமாக இரண்டு பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. அவைகள்தான் பார்வையாளர்களுக்கானது போல. ஆனால் பெரிதாக பார்வையாளர்கள் என்று யாரும் இல்லை. அங்கும் வக்கீல்கள்தான் அமர்ந்திருந்தார்கள்.

சாதாரணமாக சினிமாக்களில் வக்கீலகள் என்றால் நாமம், அல்லது விபூதி பட்டை அணிந்திருக்கும் பிராமணர்களாக இருப்பார்கள், ஆனால் நான் சென்ற கோர்ட்டில் ஒருத்தர் கூட அவா இல்லை. அவாள்ளாம் இப்போ வக்கீலுக்கு படிப்பதில்லையா? அல்லது வக்கீலுக்கு படித்து விட்டு, கார்ப்பரேட் லா கம்பெனிகளில் வேலைக்குச் சென்று விடுகிறார்களா?

பெரும்பான்மையான வழக்கறிஞர்கள் இளைஞர்களாக இருந்தார்கள், அதில் கணிசமானவர்கள் பெண்கள். தலை முற்றிலுமாக நரைத்த ஒரே ஒருவர் இருந்தார். வழக்கு நடந்து கொண்டிருந்தபொழுது சேரில் சாய்ந்து, கீழே பார்த்துக் கொண்டிருந்தார். தூங்குகிறரோ என்று சந்தேகமாக இருந்தது. இல்லை, விசாரணை முடிந்ததும், வெளியே வந்து “திஸ் கேஸ் ஷூட் ஹவ் பீன் ஸ்வைப்ட்” என்று கூறி விட்டுப் போனார். வழக்காடு மன்றத்தில் நான் கேட்ட ஆங்கிலம் அதுதான். வாதங்கள் கூட தமிழில்தான் நடந்தன. முன்பெல்லாம் ஆங்கிலத்தில்தான் நடக்குமாம். தனக்காக வாதாடுபவர் என்ன பேசுகிறார் என்பது வாதிக்கு புரிய வேண்டும் என்பதற்காக தமிழில் வாதாடலாம் என்று மாற்றினார்களாம். நல்ல விஷயம்தான். 

வக்கீல்கள் சிவாஜி போல மழமழவென்று ஷேவ் செய்து, தலையை படிய வாரி,பளிச்சென்று இருப்பார்கள் என்று நினைத்தால்… பெரும்பான்மையோர் இந்தக் கால ஹீரோக்கள் போல பரட்டைத் தலை, மூன்று நாள் தாடியோடுதான் இருந்தார்கள். கருப்பு ஜீன்ஸ் பாண்டின் மேல் வக்கீல் கோட் அணிந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் நைட் சூட் போல கருப்பு, வெள்ளை கோடு போட்ட கால்சராய் அணிந்திருந்தார். பெண் வழக்கறிஞர்கள் கருப்பு லெக்கிங்க்ஸ் அல்லது சூடிதார் அணிந்திருந்தார்கள். டவாலிதான் சினிமாக்களில் வருவது போலவே உடை அணிந்திருந்தார்.

எனக்கு முந்தைய கேஸ் முக்கியமானது போல, நாற்காலிகளிலும், பெஞ்சுகளிலும் நிறைய வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தார்கள். சிலர் குறிப்புகள் கூட எடுத்துக் கொண்டனர். அந்த கேஸ் விசாரணை முடிந்ததும், எல்லோரும் வெளியே வந்து விட்டனர். அப்போது மணி ஒன்றாகி விட்டது. உணவு இடைவேளையோ என்று நினைத்தேன். அருகில் இருந்தவரிடம், “எத்தனை மணிக்கு லன்ச் ப்ரேக்?” என்று வினவினேன். அவர், “அதெல்லாம் ஒன்றும் சொல்ல முடியாது, ஜட்ஜுக்கு எப்போது சாப்பிடத் தோன்றுகிறதோ அப்போதுதான் லன்ச் ப்ரேக்” என்றார். அப்படியா?

அதற்குள் முந்தய கேசில் சாட்சி கூறியவர் வெளியே வந்ததும், அவரிடம் டவாலி வந்து ஒரு பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார், அவருக்கு ரூ.50/- கொடுத்தார்கள், அதை வாங்கி கோட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.  பிறகு வெளியே வந்த வக்கீலிடம், “மதியம் என்னிடம் இன்னும் 10 கேள்விகள் கேட்க வேண்டும் என்றார்களே?” என்றார், “நீங்கள் ஏன் கையெழுத்து போட்டீர்கள்? அவ்வளவுதான், முடிந்து விட்டது” என்று வக்கீல் கூறியதும், அவர் கிளம்பிச் சென்றார்.

என்னுடைய வழக்கறிஞர் வரச்சொல்லி எனக்கு ஜாடை காண்பித்தார். சினிமாக்களில் வருவது போல டவாலி என் பெயரை மூன்று முறை உரக்கச் சொல்லி அழைப்பார் என்று நினைத்தேன் அப்படியெல்லாம் இல்லை, “….. யாரு?” என்று ஜட்ஜ் கேட்டதும், என் வழக்கறிஞர் என்னை கூண்டில் ஏறி நிற்கச் சொன்னார். பகவத் கீதை புத்தகத்தை என்னிடம் கொடுத்து, “நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறு ஒன்றுமில்லை” என்று உறுதி மொழி கூறச்சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன், மீண்டும் ஏமாற்றம், “நான் சொல்வது சத்தியம் என்று சொல்லுங்கள்” என்றார் கோர்ட் குமாஸ்தா. அவரும் பெண். நீதிபதி அருகில் அமர்ந்து, கணினியில் எல்லாவற்ரையும் பதிவு செய்து கொண்டிருந்தவரும் பெண். வங்கிகளில் ஆல் உமன் ப்ராஞ்ச் என்று உண்டு, அதைப்போல இது ஆல் உமன் கோர்டாக இருக்குமோ? என்று தோன்றியது.

நீதிபதி என்னைப் பார்த்தாரா? என்று தெரியவில்லை. என்னிடம் என் பெயர், வயது, விலாசம் போன்ற அடிப்படை கேள்விகள் மட்டும் கேட்டார். என்னுடைய வழக்கறிஞர் அவரிடம் வழக்கு பற்றி சில தகவல்களை மிகவும் பவ்யமாக கூறினார். அவைகளை கேட்டு விட்டு என்னை போகச் சொல்லி விட்டார். டவாலி என்னிடம் கோர்ட் நடவடிக்கைகளை பதிவு செய்த காகிதத்தில் கையழுத்து வாங்கிக்கொண்டார். அவருக்கு நாங்களும் ரூ.50/- கொடுத்தோம். அது சம்பிரதாயம் போலிருக்கிறது. அடுத்த ஹியரிங், அடுத்த மாதம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒரு புதிய அனுபவத்தை பெற்றுக் கொண்டு நாங்கள் கிளம்பினோம்.

= = = = = = =

KGG பக்கம் : 

JTS படித்த காலத்தில் மறக்க முடியாத ஒரு நபர், ராதாகிருஷ்ணன் என்ற சக மாணவன். அந்த மாணவன் காக்கை நிறத்தில் இருந்ததால், ' காக்கா ராதாகிருஷ்ணன் ' என்றும், சுருக்கமாக 'காக்கா ' என்றும் நண்பர்கள் அழைப்போம். 

படிப்பில் எல்லாவற்றிலும் 0. ஆனால், அவனிடம் இருந்த சிறப்புத் திறமை, குறி பார்த்து கல்லால் அடிப்பது. 

மதியானம் அவரவர்கள் கொண்டு வந்த டிஃபன் பாக்ஸ் காலி செய்தவுடன், ஒரு குழு வீதியுலா கிளம்புவார்கள். 

எங்கள் பாலிடெக்னிக் கட்டிடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவுக்குள் நாகை சப் கலெக்டர் ஆபீஸ். அந்த அலுவலக வளாகத்திற்குள் சில மாமரங்கள் உண்டு. அபாரமான மாங்காய்கள் அபரிதமாகக் காய்ததுத் தொங்கிக் கொண்டிருக்கும். 

தி மா கு (திருட்டு மாங்காய் குழு) 'காக்கா' தலைமையில் அங்கு பொடி நடையாக நடந்து செல்வார்கள். 

காக்கா, ச க ஆபீஸ் வளாகத்துக்குள் நுழைய மாட்டான். காம்பவுண்ட் சுவருக்கு வெளியே நின்றுகொள்வான். செல்லும் வழியிலேயே நான்கு அல்லது ஐந்து கருங்கற்களை சாலை வாரத்தில்இருந்து எடுத்துக்கொண்டு வருவான். 

காம்பவுண்ட் உள்ளே நன்றாக ஓடக்  கூடிய சில பையன்களை, மா மரத்தின் கீழே சிற்சில இடங்களில் கிரிக்கெட் கிரவுண்ட்ல கேப்டன் ஃபீல்ட் செட்டிங் செய்வது போல நிறுத்தி வைப்பான். 

பிறகு அவன், காம்பவுண்ட் வெளியிலிருந்து ' சர் ' சர் ' என்று நான்கைந்து கற்களை வீசிவிட்டு வேகமாக எங்கள் பள்ளிக்கூடம் நோக்கி ஓடிவிடுவான். 

சப் கலெக்டர் ஆபீஸ் காவலாளி காக்காவைத் துரத்திக்கொண்டு சிறிது தூரம் ஓடி, அவனைப் பிடிக்க முடியாமல், தோல்வி அடைந்து திரும்பி வருவார். அதற்குள், ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மற்ற நண்பர்கள் விழுந்த மாங்காய்கள் எல்லாவற்றையும் பொறுக்கி எடுத்துக்கொண்டு, சப் கலெக்டர் ஆபீஸ் மற்ற வாயில் வழியாக வெளியே வந்துவிடுவார்கள். 

சப் கலெக்டர் ஆபீஸ் காவலாளியின் பெயர் கூத்தன். அவர் எங்கள் பாலிடெக்னிக் காவலாளியின் உறவினர். 

பாலிடெக்னிக் காவலாளியின் உதவி கொண்டு, கூத்தன் ஒருநாள், JTS க்கு வந்து ஒரு காகிதத்தில் தி மா குழு பையன்களின் சில பெயர்களை எழுதி, வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டார். 

அப்பொழுது அந்த ஆசிரியர், பெயர்களைக் குறிப்பிடாமல் - ' மாங்காய் திருடுவது' போன்ற செயல்கள் எவ்வளவு கீழ்த் தரமானவை, அதனால் பள்ளியின் பெயர் எவ்வளவு பாதிக்கப் படுகிறது என்று நீண்ட விரிவுரை ஆற்றினார். 

அவ்வளவுதான். அன்றோடு தி மா கு கலைக்கப்பட்டது. 

ஆனால், தீபாவளி நேரத்தில், பள்ளிக்கூட காவலாளி ' தீபாவளி இனாம் ' கேட்டபோது தி மா கு செயல் குழு உறுப்பினர் பாலசந்திரன், " அன்னைக்கு நீயும் கூத்தனுமா சேர்ந்துகிட்டு , ' சாமி இந்தாங்க சீட்டு ' என்று எங்களை எல்லாம்  மாட்டி விட்டாய் அல்லவா ? உனக்கு இனாம் கிடையாது' என்று சொல்லிவிட்டான்! 

= = = = = = =


61 கருத்துகள்:

  1. திமாகு... மாங்காய்க்கு அதிலும் திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகம்தான்

    பதிலளிநீக்கு
  2. திரையில் உண்மைத் தன்மை வெகுசில படங்கள் தவிர வேறு எதிலும் ரசிக்காது.

    கத்தரிக்காயை ஒழுங்கா நறுக்கத் தெரியாதவன்லாம் விசுக் விசுக் என்று தலையைச் சீவுவதை ரசிப்பதில்லையா? ஸ்ரீதர் எடுத்த விக்ரமின் தோல்விப்படம் நினைவுக்கு வருது

    பதிலளிநீக்கு
  3. குடிப்பழக்கம் குடியைக் கெடுக்கும்னு பானர் வைத்தால் கைது நிச்சயம், அரசுக்கு எதிராக இருப்பதால்

    பதிலளிநீக்கு
  4. தற்கால போர்கள் தெருச்சண்டைகள் போல் ஆகிவிட்டது. காரண காரியங்கள் இல்லை. சட்டங்கள் அவர் அவர் வைத்தது. மக்களை சொல்லி குற்றம் இல்லை. தலைவர்கள் தான் அதிகார போதையில் போர்களைத் துவங்குகின்றனர்.

    தி மா கு வில் நானும் இருந்தேன். கடலூரில் நான் படித்த பள்ளி கர்னல் தோட்டம் என்று அழைக்கப்பட்ட புனித வளனார் மேல்நிலைப் பள்ளி. பெரிய மாந்தோப்பினிடையே இருந்தது. பெரிய மரங்கள், ஆகவே ஏறுவது கடினம். கல்லால் அடித்து கீழே விழுவதை எடுப்போம். ப்ரினிசிபால் அல்லது பர்சர் பார்த்துவிட்டால் TC தான்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலத்தில் அதெல்லாம் திருட்டு என்பது நமக்குத் தெரியாது. திரில் என்று நினைப்போம்!

      நீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. போர்/ யுத்தம் என்றாலே அடுத்த நாட்டை உருக்குலைப்பது தான்..

    நிறைய சொல்லலாம்.. ஆனால்

    வேறொரு நாளைக்கு!..

    பதிலளிநீக்கு
  7. ஆனால்
    அப்பாவி பொதுமக்களைத் தாக்கி அழித்த மூர்க்கம் தான் சிந்திக்கப்பட வேண்டியது..

    பதிலளிநீக்கு
  8. வாசகர் பக்கம் அருமை..

    நீதி மன்ற வளாகத்திற்கு நான் சென்றதில்லை..

    பதிலளிநீக்கு
  9. உறவினர் ஒருவர் போலீஸ்.. அவரைப் பார்ப்பதற்காக ஒருமுறை காவல் நிலையத்திற்கு சென்றிருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  10. பணப் பிரச்னையில் முறையீடு செய்வதற்காக ஒரே ஒருமுறை காவல் நிலையத்திற்கு சென்று அதன் பிறகு அந்தப் பிரச்னையை விட்டு விட்டேன்..

    அதற்குள் உள்குத்து ஆரம்பமாகி விட்டது..

    ஓரிரு வருடத்தில் அந்தப் பிரச்னை அதுவாகவே தீர்ந்து விட்டது..

    பதிலளிநீக்கு
  11. அந்த நாட்களில் பள்ளிகளில் மரத்தடி வகுப்புகள் பிரசித்தம்..

    அது பெரும்பாலும் மாமரத்தடியின் கீழ் தான் நடக்கும்..

    மிகமிகப் பசுமையான நாட்கள் அவை..

    பதிலளிநீக்கு
  12. அப்போதெல்லாம் பள்ளிகளில் மரத்தடி வகுப்புகள் பிரசித்தம்...

    மரத்தடி என்றால் அது - மா மரத்தின் நிழல் தான்..

    மிக மிகப் பசுமையான நினைவுகள்..

    பதிலளிநீக்கு
  13. // உனக்கு தீபாவளி இனாம் கிடையாது' என்று சொல்லிவிட்டான்!.. //

    தி மா குழு வை மாட்டி விட்டவர்களுக்கு சரியான பதிலடி..

    பதிலளிநீக்கு
  14. போருக்கு நாட்டின் அதிபர்கள் கட்டாயம் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால் போர்கள் வராது.

    குளு குளு அறையில் உட்கார்ந்து கொண்டு உத்தரவு போடுபவர்களுக்கு போரைப் பற்றி என்ன தெரியும் ?

    உலகிலேயே சிறந்த கதாநாயகன் இராணுவ சிப்பாய்கேளே...

    நிழல் படங்கள் அருமை ஜி

    பதிலளிநீக்கு
  15. //மனித உழைப்பு, பொருட் செலவு முதலியவைகளால் உருவாக்கப்பட்ட கட்டிடங்களை போர் என்ற பெயரால் உருக்குலைப்பது மனதுக்கு ஏற்புடையதா? பண்டைய பாரத மன்னர்கள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக போர் நிலம் உருவாக்கி அங்கே போரிட்ட மாண்பை இப்போதுள்ளவர்கள் தொடரக்கூடாதா?//
    பண்டைய காலத்து மன்னர்களும் இதற்கு விலக்கில்லை. மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனை வென்று தஞ்சையையும் உறையூரையும் தீயிட்டுக் கொளுத்தி, அழித்து, தஞ்சை அரண்மணையை தரைமட்டம் ஆக்கினான் என்பதை வரலாறு கூறுகிறது. அப்படி தரைமட்டம் ஆக்கிய இடத்தை சமன் செய்து உழுது வரகு விதைத்தான் என்று கூறுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று தஞ்சையில் சதய விழா நடைபெறுகின்ற நேரத்தில் இதைப் பற்றி எழுத வேண்டாம் என்று தான் இருந்தேன்..

      தஞ்சையை அழித்து கழுதை கட்டி உழுது விதைக்கப்பட்டது
      வரகு அல்ல...

      வெள்ளெருக்கு என்றும் பேய்க் கடுகு என்றும் சொல்லப்படுகின்றது..

      நீக்கு
  16. கழுதையைக் கட்டி உழப்பட்ட பொன் விளைந்த வயல்களை இன்று நமக்கு நாமே மனைக்கட்டு வீடு என்று அழித்துக் கொண்டிருப்பது சிறப்பிலும் சிறப்பு..

    வால்க சுதந்திரம்!..
    வாள்க.. வாள்க!..

    (வாழ்க சுதந்திரம்!..)

    பதிலளிநீக்கு
  17. 1. நெல்லை - உங்கள் கேள்வியே எனக்குச் சரியாப்படலை. அந்தக் காலம் இந்தக் காலம் எல்லா காலத்திலும் போர் என்றாலே அழிவுதான். நீங்க கட்டிடங்கள் பத்தி பேசறீங்க. அதுல சாகற மக்கள் பிற உயிர்கள் விடவா மனுஷன் கட்டின கட்டிடங்கள் பெரிசா போச்சு? உழைப்பு?

    ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறந்திட அந்தப் பெற்றோர் எவ்வளவு வேண்டியிருப்பாங்களோ? இப்படிச் சாகவா பெத்திருப்பாங்க? போரில் சண்டையிடும் மனித உயிர்கள் பிற உயிர்கள் என்பதோடு போரில் ஈடுபடாத அப்பாவி ஜனங்களும் மற்ற உயிர்களும் சாகவா இந்த உலகை அந்த பிரபஞ்ச சக்தி படைத்தது.

    இரண்டு அல்லது அதற்கும் மேலான ஆணவமிக்க ஆட்சியாளர்களுக்கு அப்பாவி மக்கள் பலியாவது எந்தவிதத்தில் நியாயம்?!

    போர் என்பதே வன்முறை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ஆணவமிக்க ஆட்சியாளர்கள் தான் முதலில் இறங்கணும். அவங்கதானே சண்டை போடச் சொல்லி ஆணையிடறாங்க? போர் வீரர்களா இல்லை அப்பாவி ஜனங்களா? அவனுக்குத்தானே சண்டையிட ஆசை? அப்ப அவந்தான் இறங்கி சண்டை போடணும். அவன் ஜாலியா ஏசி ரூம்ல உக்காந்திருப்பானாம்....இல்லைனா சண்டைக்கு அழைக்கப்படும் நாட்டுத் தலைவன் ஓடி ஒளிஞ்சுக்குவானாம் மக்களை சண்டை போடுங்கன்னு சொல்லிட்டு.....நிலத்தடியில்!!! இல்லைனா பக்கத்து நாட்டுக்கு ஓடிப் போவானாம்....இது நல்லாருக்கே.....போரில் ஜெயித்த பிறகு மெதுவா வருவானாம் கொண்டாடுவானாம்....

      வீரர்கள் தான் பாவம். போர், சண்டை என்றாலே வெறுப்பா இருக்கு. என்ன மனித ஜென்மங்களோ?

      கீதா

      நீக்கு
  18. யுத்தம் என்றாலே அதில் தர்மம் எதுவும் கிடையாது. இதில் தர்ம யுத்தம் அதர்ம யுத்தம்? இது என் தனிப்பட்டக் கருத்து

    கீதா

    பதிலளிநீக்கு
  19. & இப்போ எல்லாம் ஊருக்கு ஒதுக்குப் புறமாக போர் நிலம் ஒதுக்கினால் - ரியல் எஸ்டேட் ஆசாமிகள் பிளாட் போட்டு விற்று பணம் சம்பாதித்துவிடுவார்கள்! /

    ஹாஹாஹாஹா அப்படிப் போடுங்க கௌ அண்ணா...ஆஆஆஆ கௌ அண்ணா அதுவும் ரியல் எஸ்டேட் போர்க்களமாகிடுமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. நெல்லை, எதுக்கு புத்தக விமர்சனம் கலந்துரையாடல்னுட்டு....சும்மா நாலுபேர் சந்தித்தாலே அது இப்படியான கொண்டாட்டம் என்று பெரும்பான்மை இடங்களில்....கண்டிப்பாகச் சீரழிவுதான். இதில் என்ன சந்தேகம்!!!?

    எங்கேயோ வாசித்த நினைவு கையில் சிகரெட் இருந்தால்தான் அல்லது கொஞ்சம் தண்ணி போட்டாதான் சிந்தனாசக்தி விரியுமாமே எழுத!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  21. இப்போது சமீபத்திய கோர்ட் உடை சட்டங்கள் அதாவது வக்கீல்களுக்கு. ஆண்கள் கண்டிப்பாக ஜீன்ஸ் அணியக் கூடாது. வக்கீல் உடையில் - கவுன் காலர் என்று இருக்க வேண்டும். பெண் வக்கீல்கள் லெக்கிங்க்ஸ், ஜீன்ஸ் அணியக் கூடாது. புடவை அல்லது சல்வார் அணிய வேண்டும் ஆனால் கண்டிப்பாக வக்கீல் உடை அந்த கவுண் காலர் எல்லாம் சட்டப்படி அணிந்திருக்க வேண்டும் என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  22. அப்பொழுது அந்த ஆசிரியர், பெயர்களைக் குறிப்பிடாமல் - ' மாங்காய் திருடுவது' போன்ற செயல்கள் எவ்வளவு கீழ்த் தரமானவை, அதனால் பள்ளியின் பெயர் எவ்வளவு பாதிக்கப் படுகிறது என்று நீண்ட விரிவுரை ஆற்றினார். //

    ஹாஹாஹாஹா திமாகு வீரர்கள்னு நினைச்சா இப்பூடியா!! கலைக்கப்பட்டதுன்னு.....அந்த ஆசிரியரிடம் சொல்லியிருக்கணும்....சார் உங்களுக்குத் திமாகு அனுபவம் இல்லையா? நீங்களும் தானே மாங்கா அடிச்சு ருசித்திருப்பீங்க...அந்தக் காவலாளியும்தான் இதெல்லாம் செஞ்சுருப்பார்.....உங்கள மாதிரி எங்களுக்கும் வயசானதும் நாங்களும் இப்படி ஒரு நீண்ட விரிவுரை ஆற்றுகிறோம்....இப்ப தின்ன விடுங்க சார்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. தி மா கு செயல் குழு உறுப்பினர் பாலசந்திரன்//

    ஹாஹாஹாஹா முன்னமே தி மா ல அந்தக் கூத்தனுக்கும் 4, 5 தாரோம்னு டீல் போட்டிருந்தா இம்புட்டு தூரம் ஆகியிருந்திருக்காதே...இல்லைனா கூத்தன் வீட்டுக்குப் போயி வீட்டம்மாகிட்ட கொடுத்திருந்தா...குழு கலைக்கப்பட்டிருக்காதுல்லா!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூத்தன், ச க ஆபீஸ் மாங்காய்களைப் பறித்து தனியே விற்று வந்தார் என்று காக்கா சொன்னான். மேலும் கூத்தன், காக்காவுக்கு தூரத்து சொந்தம் என்றும் காக்கா சொன்னான்.

      நீக்கு
  24. போரில் மக்கள் படும் துன்பங்களை பார்க்கும் போது ஏன் இப்படி என்று மனம் பதை பதைத்து போகிறது. மாலில் பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கும் போது குண்டு. அவர்கள் உயிருக்கு பயந்து ஓடுவது பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

    நிழலும்,நிஜமும் காட்சிகள் அருமை.

    KGG சார் பக்கம் நன்றாக இருக்கிறது.
    //அன்னைக்கு நீயும் கூத்தனுமா சேர்ந்துகிட்டு , ' சாமி இந்தாங்க சீட்டு ' என்று எங்களை எல்லாம் மாட்டி விட்டாய் அல்லவா ? உனக்கு இனாம் கிடையாது' என்று சொல்லிவிட்டான்! //

    தீபாவளி இனாம் சமயம் இப்படி காட்டி கொடுத்து இனாமை இழந்து விட்டாரே!


    பதிலளிநீக்கு
  25. போர் என்றாலே முதலில் அப்பாவி மக்கள்தான் பலிக்கடாக்கள்.

    Kgg அவர்களின் திருட்டு மாங்காய் சுவைத்தது.

    பதிலளிநீக்கு
  26. கேள்வி/பதில் சுவாரசியம் இல்லை. திருட்டு மாங்காயெல்லாம் அடிச்சதே இல்லை. மாங்காய், உப்புக் காரம் போட்டு மாங்காய் பத்தை என சென்னையில் முன்னெல்லாம் விற்பார்கள்> சாப்பிடணூம்னு எல்லாம் நினைக்கலை.

    பதிலளிநீக்கு
  27. போர் என்றாலே அழிவு தானே! மருத்துவமனைகள் எல்லாமும் தாக்கப்படுகின்றன. மனிதரும், கட்டிடங்களூம் குழந்தைகளூம் எம்மாத்திரம்?

    பதிலளிநீக்கு
  28. நேத்திக்கு பாத்ரூம் சுவர் ஓரத்தில் இடித்துக் கொண்டு விழ இருந்தேன். சமாளீத்தாலும் இடக்காலில் நல்ல அடி. அதுவேறே வீங்கிக் கொண்டு பாதம் ஊனவே முடியாமல் நேத்திலிருந்து தத்தித் தத்தி நடக்கிறேன். இப்போக் கொஞ்சம் பரவாயில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ. கவனமாக இருங்கள். விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!