வியாழன், 12 அக்டோபர், 2023

மனக்குளத்தில் மந்திரக்கல்

 ஒருவழியாக தாயாரை சேவித்து வெளிவந்தோம்.  இந்நேரத்தில் சக்தியும் எங்களைத் தேடி வந்து விட்டார்.  "என்ன ஃபோனே பண்ணவில்லை?"

நொடிக்கு நொடி ஏறும் கால்வலியோடு பாஸ் மிகவும் சிரமப்பட்டு நடக்க, பேட்டரி கார் எதுவும் கண்ணில் அடாத நிலையில் பெரிய ப்ரகாரங்களைக் கடந்து நடந்தோம்.  மிகவும் விஸ்தீரணமுள்ள கோவில்.



சில இடங்களில் உள்ள மணல்வெளி நடக்க இன்னும் சிரமப்படுத்தியது பாஸை.  ராமானுஜரை நான் மட்டும் தரிசித்தேன்.  எங்களுடனேயே நடந்தார் சக்தி.   அவர் காலிலும் அடிபட்டிருந்தது!

லக்ஷ்மி நின்றிருந்த இடத்தில் நின்று படம் எடுக்க முயன்றபோது மறுபடி இங்கேயும் 'எடுக்கக் கூடாது' என்று கோபமாக ஆட்சேபித்தார்கள். 


வெளியே வந்தபோது மணி எட்டேமுக்கால் ஆகியிருக்க, சக்திக்கு செட்டில் செய்து விட்டு, காரை அங்கேயே வரவழைத்து தங்கியிருக்கும் இடம் சென்று காலி செய்து கொண்டு விழா நடக்கும் ஹாலை அடைந்தோம்.  நலல்வேளை மாங்கல்ய தாரணம் இன்னும் முடிந்திருக்கவில்லை.  அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது.


மேலே சென்று அருமையான டிஃபன் முடித்து, அருமையான காஃபியோடு கீழே வந்து பார்வையாளர் இடத்தில் அமர்ந்தோம்.  விருந்தினர்களை, உறவுகளையும் உபசரிப்பதில் ஹேமா பி ஹெச் டி.  ஒரே நேரத்தில் மேடையிலும் இருப்பார், நம் அருகிலும் இருப்பார் என்கிற மாதிரி பார்த்துக் கொண்டார்.  யாருக்கும் குறை வைக்கவில்லை.  புன்னகை மாறா முகம்.

போட்டோவில் அவர் பின்னல் நிற்கும் இளைஞர் பற்றி ஒரு பாஸிட்டிவ் செய்தி உண்டு.  எங்கள் அலுவலகத்துக்கு சரவணபவன் சார்பில் காஃபி கொண்டுவந்த குழுவில் இருந்த இந்த இளைஞரை பேட்டி கண்டபோது அவர் எம் பி பி எஸ் படிப்பை காசு இல்லாததால் முதல் வருடத்தோடு நிறுத்தியவர் என்பது தெரிந்தது.  நம் ஹேமா முன்னின்று அவர் நிறையவும், எங்களிடமிருந்தெல்லாம் கொஞ்சமும், இன்னொரு நண்பரிடம் நிறையவும் உதவிகள் பெற்று அவரை எம் பி பி எஸ் முடிக்க வைத்தார்.  இன்று அவர் ஒரு பெருமைமிகு மருத்துவர்.

சுவையான மதிய உணவையும் முடித்துக் கொண்டு அவரிடம் விடைபெற்று சென்னை கிளம்பினோம்.   வழியில் சமயபுரம் சென்று விட்டு பிரம்மா கோவிலும் செல்வதென ஏற்பாடு.  நல்ல வெய்யில்.  பயங்கர தாகம்.  எனவே நடுவில் ஒரு கடையில் நின்று ப்ரெஷ் ஜூஸ் குடிக்க முயன்ற முயற்சி தோல்வியடைய, கிடைத்த ஜிகர்தண்டா குடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்டேன்.

சமயபுரம் நோக்கி சென்றோம்.  அந்த ஊருக்குள் நுழைந்ததுமே நுழைவுக்கட்டணம் என்று ஐம்பது ரூபாய் வாங்கி விட்டார்கள். சமயபுரம் கோவிலில் வண்டி நின்றபோது இங்கொரு சக்தி கிடைத்தார்.  இவர் பெயர் சூர்யா.  அதே போல ஐநூறு ரூபாய் வாங்கி கொண்டு உள்ளே அனுப்ப பேசினார்.

இவர் போன்றோரிடம் முன்னரே காசு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.  எல்லாம் முடிந்த பின்னர் கொடுத்தால் போதும்.  ஒவ்வொரு ஏரியாவில் ஒவ்வொருவர் பொறுப்பேற்றுக் கொண்டாலும், அவர்கள் நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு கோவிலிலும் இதற்கென்று ஒரு குழு இருக்கிறது என்பது புரிகிறது.  இவர்களை உபயோகித்துக் கொள்பவர்கள் வெகு சொற்பம்.    நிறைய இருந்தால் அந்த இடமே ஹவுஸ்புல் ஆகி இருக்கும்.  அறநிலையத்துறை பாதுகாப்பு, முறைப்படுத்தல் என்கிற பெயரில் ஆங்காங்கே கம்பிகளிட்டு, தடுத்து, வளைந்து வளைந்து சிறிய கோவிலுக்குள் கூட மைல் கணக்கில் நகர வைக்கும் வியாபாரம்.  மேலும், சிறப்பு தரிசனம் முதல், அர்ச்சனை, அபிஷேகம் வரை ஒவ்வொன்றுக்கும் விலை வைத்து செய்யும் வியாபாரத்துக்கு நடுவே பணம் படைத்தவர்கள், அரசியல்வாதிகள், வி ஐ பி க்களை எந்த வித கட்டுப்பாடுமின்றி குறுக்கே அழைத்துச் சென்று மரியாதை செய்யும் அவலங்களுக்கு நடுவே இவர்கள் போன்றவர்கள் செய்வது பெரிய பாவமல்ல.

செருப்பை காரிலேயே விட்டு விட்டு அவர்கள் சொன்ன இடத்துக்கு வெறும் காலில் நடப்பதற்கும் கால் பாதங்கள் கொப்பளித்து விட்டன.  அவர்கள் எங்களை அழைத்துச் சென்ற இடம் சமயபுரம் அம்மனை தரிசித்து வெளியில் வரும் வழி கதவு.  அங்கு காத்திருக்கச் சொன்னார்கள்.  உள்ளிருந்து ஒரு ஆள் வரும்வரை காத்திருக்கச் சொன்னார்கள்.  அங்கு ஒரு பலமான அரவாணி நின்று கொண்டு அனைவரையும் அதட்டலாக விரட்டிக் கொண்டிருந்தார்.  

சற்று நேர காத்திருப்புக்குப் பின் உள்ளிருந்து வந்த ஒரு நபர், நீலச்சட்டையைத் தேடி என்னைக் கண்டு பிடித்து கண்களால் அழைக்க, அவருடன் உள்ளே சென்றேன்.  'எவ்வளவு கேட்டார்?'  என்று அவர் கேட்க, 'ஐநூறு' என்றேன்.  'கேட்டுக்க வேண்டியதாயிருக்கு..  இல்லன்னா உங்க கிட்ட ஒண்ணு வாங்கிட்டு, எங்க கிட்ட ஒண்ணு சொல்றாங்க' என்றார்!

எங்களை கிட்டத்தட்ட அம்மன் அருகில் விட்டுச் சென்றார்.  திவ்ய தரிசனம்.  நின்று நிதானித்து அந்தக் கூட்டத்திலும் தரிசிக்க முடிந்தது.  தரிசனத்துக்கு காத்திருக்கையிலேயே ஒருவர் என்னை அணுகி 'சூர்யா அனுப்பிய ஆள் நீங்கதானா?' என்றார்.  'ஆம்' என்றேன்.  'உள்ளே வந்துட்டீங்களா..  ஆள் மாறி விட்டது.  பரவாயில்லை.'. என்று சொல்லி சென்று விட்டார்.  இந்த குறுக்கு வழி வியாபாரமெல்லாம் கூட்டமிருக்கும் விசேஷ நாட்களில்தான்.  மற்றபடி வெளியூர் கோவில்களில் கூட்டமில்லா சாதாரண நாட்களில் இதற்கெல்லாம் அவர்களுக்கு சாத்தியமில்லை என்பதையும் சொல்ல வேண்டும்!  ஆள் மாற்றி உள்ளே வந்துட்டீங்க..  எனக்கும் தரணும் காசு என்கிற கதை எல்லாம் நல்வேளை சொல்லவில்லை!

அவசரமில்லாமல் அம்மனின் தரிசனம் அழகாய்க் கிடைத்ததில் பாஸுக்கு வெகு திருப்தி.  கால்வலியைக் கூட சற்று நேரம் மறந்தார்.

அம்மனை தரிசித்து வெளியில் வந்தததும், அங்கு காத்திருந்தவர் எங்களை அழைத்துக் கொண்டு கோவிலின் மற்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விட்டு மறுபடி வாசலுக்காய் கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டார்.  வெளியில் வரும் வழியில் எந்தப் பக்கம் நகர்ந்தாலும் அந்த பிரம்மாண்ட அகல அரவாணி எங்களைக் குறுக்கிட்டு உரிமையான அதட்டலுடன் காசு கேட்டு வாங்கி கொண்டார்.  எனக்கு இவர்களைக் கண்டால் லேசான பயம் உண்டு.  சட்டென காசைக் கொடுத்து விட்டு தாண்டி நகர்ந்து வந்து விட்டேன்.

கார் தயாராக நின்றிருந்தது.  செருப்பில்லாமல் கொதிக்க கொதிக்க நடப்பது சிரமம் என்பதால் அங்கேயே காரைக் கொண்டு வந்து நிறுத்தி இருந்தார் அருண்.  கிளம்பி இருந்தால் சூர்யா பார்த்திருக்க முடியாதுதான்.  அருணும் 'வாங்க போகலாம்' என்றார்.  ஆனால் ஒரு ஆளை அனுப்பி சூர்யாவை அழைத்து வரச் செய்து பேசிய தொகையைக் கொடுத்தேன்.  'உள்ளே இருக்கும் ஆளுக்கு இன்னொரு 500 கொடுங்க' என்றார்.  மறுத்து விட்டு, முதலில் பேசிய தொகை இதுதான் என்று சொல்லிக் கிளம்பினோம்.

அடுத்ததாக பிரம்மா கோவில் செல்லும் வழியில் திரும்பினோம். முதலியேயே விசாரித்திருந்ததில் நாள் முழுவதும் திறந்திருக்கும் என்றுதான் சொல்லி இருந்தார்கள்.  ஆனால் கோவில் மூடி இருந்தது.  மாலை நான்கு மணிக்கு திறப்பார்கள் என்றார்.  மணி அப்போதுதான் ஒன்றேகால் ஆக்கிக் கொண்டிருக்க, அடுத்த முறை பார்க்கலாம் என்று மெல்ல கிளம்பினோம். 


மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பி இருந்ததால், வேறெங்கும் சாப்பிடவில்லை.  இந்தக் கடையில் நிறுத்தி ஆளுக்கு ஒரு போண்டா, டீ மட்டும் சாப்பிட்டு கிளம்பினோம். 



வழியில் பார்த்த இந்த மரம் என்னை படம் எடுத்து ஒரு கவிதை எழுத முயற்சி பண்ணேன்" என்றது.  'அப்புறம் பார்க்கிறேன் 'என்று மனதுக்குள் சொல்லி படம் மட்டும் எடுத்துக் கொண்டேன்!

 
வழியில் இரண்டு கொடூரமான விபத்துகள் கண்ணில் பட்டதால் அருண் இயல்பாய் காரின் வேகத்தைக் குறைத்திருந்தார்..  இரவு பத்து மணிக்கு சென்னை வந்தடைந்தோம்!

================================================================================================

கவிதை முயற்சி...

நீந்தும் நினைவுகள் 
மனக்குளத்தில் மூழ்கி 
எங்கோ மூலையில் அசைந்தபடி 
ஓய்வெடுக்கிறது. 
வார்த்தைச்  
சலனங்களின் சலசலப்பில் 
அவ்வப்போது மேலே வந்து செல்கிறது.  

பற்றிக் கொள்வதற்குள்  
அடுத்து விழும் வார்த்தைகளின் 
அவசர பரபரப்பில் 
வேறு சில நினைவுகளை 
மேலே மிதக்க விட்டு 
அவை மறுபடி 
மூழ்கி விடுகின்றன 

நின்று விடும் 
சில நினைவுகள் மட்டும் 
மீட்டெடுக்கின்றன 
பழைய காலத்தை 

=====================================================================================================================



படித்ததில் ரசித்தது...



1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கி வார இதழில் பணிக்குச் சேர்ந்தேன். சுமார் முக்கால் மணி நேரம் நாற்காலியில் உட்கார்ந்திருந்து விட்டு, எழுந்து கீழே உள்ள அச்சுக் கூடத்தைச் சுற்றிப் பார்க்கப் போய்விட்டேன். ஓர் அச்சு இயந்திரத்தைப் பார்ப்பது என்பது அந்நாளில் என் பெருங்கனவாக இருந்தது. இந்த உலகின் வேறு எந்த அதிசயமும் அன்று எனக்கு அவ்வளவு ஆர்வ மூட்டக்கூடியதாக இருந்திருக்க வாய்ப்பில்லை. கல்கியில் அன்று பெரிது பெரிதாக இரண்டு மூன்ற இயந்திரங்கள் இருந்தன. இயந்திரங்களுக்கு நடுவே மலை மலையாகக் காகித உருளைகள் அடுக்கப்பட்டிருக்கும். சத்தமென்றால் அப்படியொரு பெருஞ்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மலையைக் குடைந்து கொண்டு ஒரு ராட்சச வல்லூறு வெளியே வருவது போல அச்சான தாள்கள் இயந்திரத்துக்குள் இருந்து வெளியே வருவதை நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அது மடங்கி, ஃபாரம் ஆவது, பிறகு ஃபாரங்கள் இணைக்கப்பட்டு, பின் அடித்துப் புத்தகமாவதைப் பார்க்க அவ்வளவு பரவசமாக இருக்கும்.
பிறகு குமுதத்துக்குச் சென்றபோது இன்னும் பெரிய இயந்திரங்கள், இன்னும் அதிக இயந்திரங்களைக் கண்டேன். நாளெல்லாம், இரவெல்லாம் ஓடிக் கொண்டே இருக்கும் இயந்திரங்கள். அச்சு இயந்திரங்கள் வெளிப்படுத்தும் சத்தம் ஒரு சிறந்த கவனக் குவிப்பு வைத்தியம். அங்கே போய் நின்றுகொண்டு என்ன யோசித்தாலும் மனம் ஆணி அடித்தாற்போல ஒரு புள்ளியில் நிற்கும். இது என் அனுபவம்.
பத்திரிகைப் பணியில் இருந்து வெளிவந்துவிட்ட பிறகு அச்சு இயந்திரங்களைப் பார்க்கும் வாய்ப்பு இல்லாமலாகி விட்டது. சமீபத்தில் ஒருநாள் தரங்கம்பாடிக்குச் சென்றேன். இந்தியாவின் முதல் அச்சுக்கூடம் உருவான கடலோரக் கிராமம். ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்க் குறித்தும் அவர் தமிழ் கற்றுக்கொண்டு பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்து, அச்சிட்டு வெளியிட்டது குறித்தும் படித்திருப்போம். அந்த அச்சகத்தையும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவிலிருந்து தருவிக்கப்பட்ட அப்புராதன அச்சு இயந்திரத்தையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
தரங்கம்பாடியில் சீகன் பால்க் வசித்த வீட்டை அருமையாகப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்க்கப் பெரிய பங்களா போலத் தோற்றமளித்தாலும் அவ்வளவு பெரிய பங்களாவெல்லாம் இல்லை. தரைத்தளத்தில் ஒரு குடித்தனம், மாடியில் ஒரு குடித்தனம் விடலாம். அவ்வளவுதான் அளவு. அவர் பயன்படுத்திய அச்சு இயந்திரங்கள், அவரது கையெழுத்துப் பிரதிகள், அவர் அச்சிட்ட புத்தக மாதிரிகள் அனைத்தும் கண்ணாடி போட்டு மூடி, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ரொம்ப முக்கியம், எதன்மீதும் தூசு இல்லை. அதனினும் முக்கியம், அங்கு பணியில் உள்ள உதவியாளர்கள், சீகன் பால்க் காலத்துப் புள்ளி வைக்காத தமிழ் எழுத்துகளைத் தடையின்றி வாசித்துக் காட்டுகிறார்கள். நாம் சிறிது யோசித்தால் பைபிள் தமிழுக்குத் தற்காலத் தமிழில் விளக்கமும் சொல்கிறார்கள்.
செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு அம்முதல் அச்சு இயந்திரம் இருந்த அறைக்குள் நுழைந்தேன். ‘நீங்கள் செருப்புடனேயே செல்லலாம்’ என்றார் பணியில் இருந்த பெண்மணி. மனம் வரவில்லை. சிறியதோர் அறையின் நடுவே பாய் விரித்த தோணியைப் போல நின்றுகொண்டிருந்தது அவ்வியந்திரம். ஒரு சாக்குக் கோணியை விரித்து அதன்மீது நிறுத்தியிருக்கலாம். அல்லது மரத்தாலான ஒரு சிறு மேடை அமைத்திருக்கலாம். ஏனோ செய்தித் தாள்களை விரித்திருந்தார்கள். ஒவ்வொரு எழுத்துக்குமான ப்ளாக்குகள் தனியே இருந்தன. ப்ளாக் என்றால் என்னவென்று தெரியாத தலைமுறை நிச்சயமாகத் திகைத்துவிடும். அவ்வளவு அழகு. அவ்வளவு ஒழுங்கு. ஒருசிலவற்றை எடுத்துப் பார்த்தேன். முந்நூறு வருடங்களானாலும் முனை உடையாமல், மழுங்காமல் கூர் காட்டி நின்றன. சீகன் பால்க் அச்சிட்ட பக்கங்களில் சிலவற்றையும் அந்த அறையில் ஃப்ரேம் போட்டு வைத்திருக்கிறார்கள்.
சற்றுத் தள்ளி, கட்டிங் மெஷின் ஒன்று இருந்தது. அதுவும் அவர் பயன்படுத்தியதுதான். அவர் சேகரித்த ஓலைச் சுவடிகள், பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சில புத்தகப் பிரதிகளும் இருந்தன.
சீகன் பால்க், கிறித்தவத்தைப் பரப்புவதற்காகத்தான் இந்தியாவுக்கு வந்தார். அனுப்பி வைத்த டென்மார்க் மன்னர் சகல சகாயங்களும் செய்துதான் அனுப்பி வைத்தார் என்றாலும் இங்கே அவருக்கு அவ்வளவு சிறப்பான வரவேற்பு இருக்கவில்லை. ஏனெனில், அவர் பரப்ப வந்தது ப்ராட்டஸ்டண்ட் கிறித்தவம். (லுத்தரன் சபையைச் சேர்ந்தவர்). இங்கிருந்த டானிஷ் கவர்னரும் பிற அதிகாரிகளும் அது கூடாது என்று கருதியவர்கள்.
சொந்த நாட்டுக்காரர்களின் சகாயம் அகப்படாமல் உள்ளூர் மக்களின் உதவியால்தான் அவர் செயல்பட்டிருக்கிறார். தரங்கம்பாடி மக்களிடமே தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து மணலில் எழுதிப் பார்த்து எழுத்துகளை அறிமுகம் செய்துகொண்டாலும் சொற்களுக்கு அர்த்தம் விளங்கிக்கொள்வதில் நிறைய சிக்கல் இருந்திருக்கிறது. கிராமத்து மக்களுக்கு அவருக்குத் தெரிந்த ஜெர்மன் தெரியாது. அவருக்கோ, தமிழ் தெரியாது.
உள்ளூரில் ஏதாவது ஐரோப்பிய மொழி அறிந்த யாராவது இருப்பார்களா என்று தேடி அழகப்பன் என்றொருவரைக் கண்டுபிடித்திருக்கிறார். அழகப்பனுக்குச் சிறிது போர்த்துகீசிய மொழி தெரிந்திருந்தது. அந்நாளில் வியாபாரம் செய்ய வந்தவர்களுடன் பேசிப் பழகிய அனுபவம். நல்லவேளையாக சீகன் பால்குக்கு போர்த்துகீசிய மொழி தெரிந்திருந்ததால் தமிழ்ச் சொற்களுக்கு அழகப்பனிடம் போர்த்துகீசிய மொழியில் விளக்கம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதை (மணலில்) எழுதி எழுதிப் பார்த்தே தமிழ் கற்றிருக்கிறார். பிறகு சில வல்லுநர்களைத் தேடிச் சென்று இலக்கணம் படித்து, தமிழில் இருந்து ஜெர்மனுக்கும், ஜெர்மனில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்துப் பயிற்சி செய்தார்.
இந்தப் பயிற்சிக்கு உதவியது, அவருக்குக் கிடைத்த நான்கு மாத சிறைவாசம். வேறு வழி? சீகன் பால்கின் லுத்தரன் திருச்சபைக்க மக்கள் வரத் தொடங்கியது அன்றைய தரங்கம்பாடி டேனிஷ் கவர்னருக்கு ஆகவில்லை. ஏதோ ஒரு காரணம். என்னென்னவோ குற்றச்சாட்டுகள். பிடித்துப் போடு.
ப்ளுட்ஸோ என்கிற நண்பருடன் சீகன் பால்க் தரங்கம்பாடிக்கு முதல் முதலில் வந்து இறங்கியபோது அவருக்கு வயது 24. வருடம் 1706. தமிழில் முதல் முதலாக அவர் ஒரு நூலை (இரட்சிப்பின் ஒழுங்கு) அச்சிட்டு வெளியிட்டது 1712ம் ஆண்டு. அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்கள், எத்தனை எத்தனையோ மொழிபெயர்ப்புகள். இதன் பிறகுதான் தமிழ்நாட்டில் கிறித்தவம் மிக வேகமாகப் பரவ ஆரம்பித்தது.
பிரசங்கங்கள், பிரசாரங்கள் ஒருபுறம் இருந்தாலும் மக்களை உட்கார வைத்து, படிக்க வைத்து, சிந்திக்க வைத்து, முடிவெடுக்க வைத்தாலொழிய மன மாற்றமோ மத மாற்றமோ சாத்தியமில்லை என்பது சீகன் பால்குக்குத் தெரிந்திருக்கிறது. என்ன நோக்கத்துடன் அவர் தரங்கம்பாடிக்கு வந்தாரோ, அதை வெற்றிகரமாக சாதித்து முடித்தார்.
இன்றைக்குச் சரியாக 311 ஆண்டுகள் நிறைந்து விட்டன. அச்சுத் துறையே அபாரமான தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து நம்ப முடியாத உயரங்களுக்குச் சென்றுவிட்டது. மறுபுறம், மின்நூல்களும் ஒலி நூல்களும் மெல்ல மெல்லப் பெருகத் தொடங்கியிருக்கின்றன.
நாம் ஊருக்கொரு புத்தகக் காட்சி நடத்திக்கொண்டு, கூடவே தமிழன் ஏன் புத்தகம் படிப்பதில்லை என்றும் பேசிக்கொண்டிருக்கிறோம்.
- பா.ராகவன்
====================================================================================

நியூஸ் ரூம்


பானுமதி வெங்கடேஸ்வரன்

செய்திகள் 12-10-23

- மங்களூரில் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக போட்ட ஆசிரியை குடிக்கும் நீரில் மாத்திரைகளை கலந்த ஆறாம் வகுப்பு மாணவிகள். ஆசிரியைகள் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் மாணவியர்கள் சிறுமிகள் என்பதால் போலீஸில் புகார் அளிக்கவில்லை.

- பரமத்தி நல்லூரில் ஆயுத பூஜைக்கு பொரி ரெடி. பொரி தயாரிக்க கர்னாடகாவிலிருந்து வாங்கப்படும் அரிசி விலை ஏறியுள்ளதால் இந்த ஆண்டு பொரி விலை அதிகரித்துள்ளது.

- சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்(2023) இந்தியா முதல்முறையாக 107 பதக்கங்களை வென்று நான்காம் இடத்தை பெற்றுள்ளது.

- பெங்களூருவில் மட்டும் நடப்பாண்டின் ஒன்பது மாதங்களில் 470கோடி ரூபாய் இழந்திருக்கிறார்கள். அதில் 27.6கோடியை மீட்க முடிந்திருக்கிறது.

- இந்த ஆண்டு தசரா மற்றும் தீபாவளிக்கு கர்நாடகாவில் பசுமை பட்டாசுகள் மட்டுமே அனுமதிக்கப்படுமாம். திருவிழாக்கள், திருமணங்கள், அரசியல் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களில் பட்டாசுகள் வெடிக்கத் தடை
==============================================================================================

பொக்கிஷம் :- 1966








========================================================================================

ஏகாந்தமாய்....


ராஜதானியில் வாய்த்த உத்தியோகமும், இன்னபிறவும்…

- ஏகாந்தன் -
பாரதத்தின் ராஜதானி. அதாவது இந்தியத் தலைநகரான புதுதில்லி. ராஷ்ட்ரபதி பவனின் லாங்-ஷாட் படத்தில், அதன் இடது வலதாக படர்ந்து நிற்கும் ரோஸ்/சிவப்பு நிறக் கட்டிடத் தொடர்களைப் ர்த்திருக்கிறீர்களா?
இடது பக்கம் இருக்கும் கட்டிடங்களின் பெயர் சௌத் ப்ளாக். வலது பக்கம் படந்திருப்பது நார்த் ப்ளாக். பிரிட்டிஷ் ஏகாதிபத்வாதிகள் சர்வ அதிகாரத்துடன் கோலோச்சிய அரசுக் கட்டிடங்கள். இன்றும் கம்பீரம் இழக்காமல் வாட்டசாட்டமாக உயர்ந்து நிற்கின்றன. சுதந்திர இந்தியாவின் சில பிரதானமான மந்திரிசபைகள் இங்கே இருந்துதான் இயங்குகின்றன.
இடது புறக்கட்டிடத் தொடரில், அதாவது சௌத் ப்ளாக்கில், பல வாசல்கள். உள்ளே நுழைபவர், வெளியேறுபவர்களைக் கண்காணிக்க என உள்துறையின் டாப் செக்யூரிட்டி ஏற்பாடுகளுடன். அப்போதே அப்படி. இப்போதோ கேட்கவேண்டியதில்லை! ஜனாதிபதி மாளிகையைத் தொட்டுக்கொண்டு இருப்பதுபோல் தோன்றும் வாசல்கள் - கேட் நம்பர் 7-ல் ஆரம்பித்துப் பின்னோக்கி விஜய் சௌக்கைப் பார்க்கச் செல்லும். நம்பர் 5 தான் வெளியுறவு அமைச்சக வாயில். வாசல் ரிசர்வ்ட் பார்க்கிங்கில் நீலநிற ரெஜிஸ்ட்ரேஷன் ப்ளேட்டோடு விதவிதமான வெளிநாட்டு கார்கள் சில நிற்பதும் ஒரு அடையாளம். டெல்லியில் தூதரகம் கொண்டுள்ள அயல்நாட்டு எம்பசி கார்கள். இந்திய ராஜீய உறவுகள், சர்வதேச அரசியல் என எழுதும் நிபுணர்கள், பத்தியாளர்கள் போன்றோர் தங்கள் பேச்சினிடையே, எழுத்தினூடே ’சௌத் ப்ளாக்’ என்று குறிப்பிட்டால், அது வெளியுறவுத்துறையையே குறிக்கும். பெண்ட்டகன் என்றால் எப்படி அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமோ, அப்படி. எதிரே இருக்க்கும் ’நார்த் ப்ளாக்’கில் உள்துறை, நிதி அமைச்சகங்களின் சில துறைகள் பணியாற்றுகின்றன. வெளியுறவு அமைச்சகத்தின் சில பகுதிகள்டெல்லியில் வேறுசில கட்டிடங்களிலிருந்தும் இயங்குகின்றன. குறிப்பாக, பாஸ்போர்ட், விசா, கான்சுலர் பகுதிகள், இந்தியா கேட்டைத்தாண்டிச் செல்லும் திலக் மார்க்கிலிருக்கும் பட்டியாலா ஹவுஸ் எனும் வளாகத்தில். பொது நிர்வாகம், அக்கவுண்ட்ஸ் போன்றவை ஜன்பத்திலிருக்கும் ஜேஎன்பி என்றழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு பவனில் செயல்படுகின்றன.
மத்திய அரசுத் தேர்வில் பாஸானதோடு எதிர்பாராதவிதமாக நல்ல ரேங்கும் கிடைத்ததால், அப்ளிகேஷனில் விருப்பமாகத் தெரிவித்திருந்த வெளியுறவு அமைச்சகமே கிடைத்திருந்தது. டெல்லியின் சௌத் ப்ளாக்கில் இருக்கும் வெளியுறவு அமைச்சகத் தலைமையகத்தில்தான் பணி ஏற்கச் சொல்லியிருந்தார்கள். அந்தக்காலத்தில் மத்திய அரசு தொடர்பான கடிதங்கள் பழுப்புநிற கவரில் வந்து சேரும். சர்க்கார் தபால்! மேலே OIGS – அதாவது ’ஆன் இண்டியா கவர்ன்மெண்ட் சர்வீஸ்’ என்று பொருள்படும் விதத்தில் கொட்டை எழுத்துக்களில் ரம்பர் ஸ்டேம்ப் குத்தியிருக்க, கீழேஇடது மூலையில் எந்தத்துறை/அமைச்சகத்திலிருந்து என்று விலாசம் சுருக்கமாக ப்ரிண்ட் ஆகியிருக்கும். புதுக்கோட்டை அருகே செம்பாட்டூர்என்ற கிராமத்தில் வசித்த காலம். மத்திய அரசு தேர்வு எழுதி, சில மாதங்கள் கழித்தும் தபால் வராததால் சரி இது அவ்வளவுதான் என மறந்துவிட்டு கிராமத்து பசங்களோடு கிரிக்கெட் விளையாடிப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த கால கட்டம். ஒரு காலையில் வீட்டுக்கு வந்த அஞ்சலக ஊழியர், ’டெல்லிலேர்ந்து ஒங்களுக்குத் தபால் சார்!’ என்று சொல்லி பௌவ்யமாகக் கொடுத்துவிட்டுப் போனதும், அருகில் நின்றுகொண்டிருந்த அப்பா ’பிரிச்சு என்னன்னு பாருடா!’ என்று சொன்னதும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
தமிழ்நாடு சர்வீஸ் கமிஷன் தேர்வொன்றில் செலக்ட் ஆகி அப்போது சில மாதங்களாகத்தான் பதிவுத்துறையில் ராஜபாளையம் அருகே குன்னூர் என்கிற கிராமத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். மத்திய அரசு அழைக்க, மாநில அரசு உத்யோகத்தை வேறுவழியின்றித் துறந்தேன். புதுக்கோட்டையில் இரவு பஸ் பிடித்து மதராஸுக்குக் காலையில் வந்து, இரவில் செண்ட்ரல் ஸ்டேஷனில் ஜி.டி. எக்ஸ்ப்ரெஸில் ஏறினேன் டெல்லிக்கு. இந்தியப் பெருநாட்டின் குறுக்காக ஒரு பகல், இரண்டு இரவுகள் எனப் பயணம். வண்டி நிறைய ஸ்டேஷன்களில் நின்று சென்றதில் விதவிதமான ஊர்கள். மனிதர்கள். அது ஒரு தனி அனுபவம்! டெல்லியின் நயி தில்லி ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கி வெளியே வந்து ஸ்டேஷன் வாசலில் டாக்ஸிக்காரர்கள் மொய்க்க, ஒரு வயதான சர்தார்ஜி டாக்ஸி ட்ரைவரிடம் அட்ரஸ் காண்பித்தேன். சுற்றிவளைத்து ஊரெல்லாம் காண்பித்துக் குழப்பாமல், கனாட்ப்ளேசின் ஃபெரோஸ் ஷா வீதியிலிருந்த என் அண்ணாவின் வீட்டின் கேட் வாசலில் இறக்கிவிட்டுச் சென்றார் அந்த மஹானுபாவர்! குளித்து சாப்பிட்டுவிட்டு அப்பாடா என்று சோஃபாவில் சாய்ந்திருந்தேன். ’இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்குவோம். நாளைக்கிப் போகலாம் மினிஸ்ட்ரியில் ஜாய்ன் பண்ண’ என்று தீர்மானித்து அண்ணாவின் ட்ராயிங் ரூமிலிருந்த ஆங்கில சஞ்சிகைகள், நாளிதழ்களை ஆர்வமாகப் புரட்டிக்கொண்டிருந்தேன். ரயிலில் ஸ்லீப்பர் இருந்தும் சரியாகத் தூங்காததால், கண்ணில் பொங்கிய தூக்கம் ’கொஞ்சம் படுத்துக்கோடா’ என்று கெஞ்சியது.
அப்பொழுது பார்த்துத்தான் என் அண்ணியின் அப்பா அப்போது அங்கே வந்துசேரணுமா? சேர்ந்தார். என்னைப் பார்த்தவுடனே.. ’அடடே.. வந்தாச்சா! என்ன, சாவகாசமா பேப்பரக் கையில வச்சிண்டு உட்கார்ந்திருக்கே.. டூட்டி ஜாய்ன் பண்ணலையா!’ என்றார் படபடப்புடன், என்னமோ இவருக்குத்தான் வேலை கிடைத்ததுபோல!

நான் திடுக்கிட்டு, ‘இல்ல.. இன்னிக்கி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு, நாளைக்குப்போய்..’ என்று முடிப்பதற்குள் –
’நாளைக்கா! அட, என்னப்பா நீ! இன்னிக்கே ஜாய்ன் பண்ணு. மணி என்ன? பத்தரைதானே ஆறது.. ஒங்க ஆஃபீஸ் கிட்டக்கத்தான். சுருக்கமாக வழி சொன்னார். ’நீ நடந்தே போயிடலாம். 20-25 நிமிஷந்தான். ம்.. எழுந்திரு.. சீக்கிரமா ட்ரெஸ்ஸ மாத்து. ஒரு நாள் சம்பளத்த விடலாமா.. பன்னெண்டு மணிக்குள்ள, ஃபோர்நூன்ல டூட்டில ஜாய்ன் பண்ணிடுப்பா. ஓடு!’ என்று துரத்திவிட்டார்.

விமானப்படைப் பணியின் பரபரப்புத் தோரணை அவரில். ம்ஹ்ம்ம்.. படுத்துக் கிடப்பதற்கும் பாக்யம் வேணும் என மனதினில் முணுமுணுத்தவாறு, வேறு வழியில்லாமல் கிளம்பி, சௌத் ப்ளாக்கை நோக்கி நடக்கலானேன். ஃபெரோஸ் ஷா ரோடு, ஒரு ட்ராஃபிக் ரவுண்டானா, நேராக ரெய்ஸினா ரோடு, இன்னுமொரு ரவுண்டானா, எதிரே ரயில் பவன். இடதுபுறமாக நீண்டு சென்ற ஜன்பத்தில் நடந்தபின் முதல் க்ராஸிங்கில் ராஜ்பத். ராஜ பாதை, வீதி! அதில் இடது புறம் திரும்பி சுமார் 500 மீட்டர் தொலைவில் நடக்க, இதோ விஜய் சௌக்.. மேலேறும் சாலையில் ஏறி நடந்தபின் எதிரே தெரிந்தது கருப்பு டோம், சிவப்பு உடம்பாக நிற்கும் ராஷ்ட்ரபதி பவன். ஹிந்தி தெரியாத, டெல்லி புரியாத தமிழ் இளைஞனாய் கையில் அந்தப் பழுப்புக் கவரை வைத்துக்கொண்டு, ஆங்காங்கே டூட்டியில் தென்பட்டு மறித்த சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள்களுக்கு ஆங்கிலத்தில் எப்படி எப்படியோ விளக்கி முன்னேற,
இடது பக்க வரிசையின் சிவப்பு பில்டிங். சௌத் ப்ளாக், கேட் நம்பர் 5. பாலிஷ் செய்யப்பட்ட பித்தளையில் மினுமினுத்த செவ்வக போர்டு – Ministry of External Affairs – வா, தம்பி! என்றது. தயக்கத்துடன் ரிஸப்ஷனுக்குள் நுழைந்தேன். வலதுபுறமாக ஒரு பெரிய டேபிளுக்கருகில் சைடு- டேபிள்களில் இடதுபுறம் க்ளாசிக் லுக்கில் ஒரு டேபிள் லேம்ப், வலது புறம் கருப்பு, சிவப்பு நிற முரட்டு ஃபோன்கள் என அட்டகாசமாக அமர்ந்திருந்த செக்யூரிட்டி ஆஃபீஸரிடம் யூபிஎஸ்சி கவரைக் கொடுத்தேன்.
பிரித்துப் பார்த்தார்.

மூக்குக்கண்ணாடியை மேலே தூக்கிவிட்டவாறு, ’ஓ.. அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரா! டூட்டி ஜாய்ன் பண்ணனுமா?’ என்று என்னை ஒரு முறை கூரிய பார்வையில் என்னை அளந்துவிட்டு, மீண்டும் கடித வாசகங்களைக் கவனித்து உறுதிசெய்துகொண்டார் அந்த ஐம்பது ப்ளஸ் வட இந்திய அதிகாரி. வெளியுறவு மந்திரிசபையின் நிர்வாகத்துறை இயங்கும் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் நுழைய என, அந்த எண்ணிட்ட ’எண்ட்ரி-பாஸ்’ ஐ எடுத்து அதில் அன்றைய தேதியை எழுதி கையெழுத்திட்டு, ப்ர்ப்பிள் நிற பைலிங்குவல் ஸ்டாம்ப் அடித்து என்னிடம் கொடுத்து, உள்ளே போகவேண்டிய திசையைக் காண்பித்தார். எழும்பாத குரலில் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டு, இனந்தெரியா உணர்வுகளுடன் மெல்ல உள்ளே நடக்கலானேன். காலனிய ஆதிக்கத்தின் பெரும் சரித்திரத்தையும், பரம ரகசியங்களையும், சுதந்திர இந்தியாவின் அதிர்வுகளையும் தன்னகத்துள்ளே அழுத்திக்கொண்டிருந்த அந்த மாபெரும் மரபுக் கட்டிடம் என்னை உள்ளே.. உள்ளே.. என ஆகர்ஷித்ததுபோலிருந்தது.
இப்படி, நான் டூட்டியில் சேர்ந்த கதைப் படலத்தை எழுதிக்கொண்டு போகலாம்தான். இங்கே, இது போதும்…
ஆரம்பத்திலிருந்தே 110 011 என போஸ்டல் கோடுகொண்ட, தலைநகரின் குறிப்பிடத்தக்க விவிஐபி அட்ரஸான சௌத் ப்ளாக்கில் மட்டும்தான் எனக்கு வேலை. டெல்லியில், வேறு இடங்களில் இயங்கி வந்த எங்கள் அமைச்சக அலுவலகங்கள் எதற்கும் நான் மாற்றப்பட்டதில்லை. 2, 3 ஆண்டுகளுக்கொரு முறை என வெளிநாடுகளிலிருக்கும் இந்திய தூதரகங்கள் சிலவற்றுக்கு என மட்டுமே பணியிட மாற்றம்.

இப்படி ஆரம்பித்து முப்பது ப்ளஸ் வருடங்களாக நீண்ட தேசப்பணி சார்ந்த வாழ்க்கை. பணிசார் விஷயங்கள் தவிர்த்து, இந்திய, அயல்நாட்டுத் தலைநகர்களில், ஆஃபீஸ், அதற்கு வெளியே என்றெல்லாம் அனுபவிக்க நேர்ந்த சில விசித்திரப் பொழுதுகள், நிகழ்வுகள், காமெடி சீன்கள், கலாச்சார அதிர்ச்சிகள் என நினைவில் அவ்வப்போது தட்டுவதிலிருந்து, கொஞ்சம் சொல்லப் பார்க்கிறேன். சின்ன, சின்ன சம்பவத் துக்கடாக்கள் !
(வளரும்)

**

122 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. இன்றும் ஸ்ரீ ரங்கம் கோவில் தரிசனம் கண்டு கொண்டேன். படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. யானை லக்ஷ்மியின் படத்தை பல தடைகளையும் தாண்டி எப்படியோ எடுத்து விட்டீர்களே..!

    நாங்கள் இந்த பக்கமே செல்லவில்லை போலும். இந்த சன்னதிகளை பார்த்த நினைவில்லை. பல சன்னதிகள் மூடியிருந்தன . பெரிய கோவில்தான். ஸ்ரீரங்க நாதனை தரிசித்தவுடன் இடது கை பக்கமாக உள்ள சன்னதிகளை பார்த்து விட்டு வெளியேறி விட்டோம் போலிருக்கிறது.

    நொடிக்கு நொடி ஏறிய தங்கள் பாஸின் கால் வலியை பிறகு எப்படி குறைத்தீர்கள்.? குணப்படுத்த ஏதாவது உடனடி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாரா ? அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே..! படிக்கும் போது எனக்ககே கஸ்டமாக இருந்தது. அவர் எப்படி அதை தாங்கிக் கொண்டு நடந்திருப்பார் . பாவம்..!

    நான் இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் அயோடக்ஸ் தைலம், நீலகிரி தைலம் என கைவசம் வைத்திருப்பேன். கால் என் வசமின்றி இடறி எப்போது கீழே விழுவேனென்று அந்த கடவுளுக்கே தெரியாது. அதனால் எங்கும் தனியே செல்வதில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரங்கம் கோவிலும் திருவானைக்கா, திருவாரூர் கோவில்கள் போல மிகப்பெரிய கோவில்கள்.  அனைத்தையும் பார்ப்பது நாம் செல்லும்போது இருக்கும் வேலைகளுக்கு நடுவே மிகவும் கடினம்!   பாஸ் கால்வலிக்கு மருந்து எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை.  நாங்கள் கொண்டு போகவும் இல்லை! 

      நீக்கு
    2. ​//நொடிக்கு நொடி ஏறிய தங்கள் பாஸின் கால் வலியை பிறகு எப்படி குறைத்தீர்கள்.? குணப்படுத்த ஏதாவது உடனடி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாரா ?//

      சின்னப் பிள்ளைகள் கால் வலிக்கிறது என்று சொன்னால் நாம் என்ன செய்வோம். தூக்கிக் கொண்டு செல்வோம். அது போலத்தான்.

      நீக்கு
    3. கால் வலி.... இது ஒரு வித்தியாசமான சிச்சுவேஷன். கோவில் தரிசனம் முக்கியம். கூட வருபவர்கள் உடல்நிலை காரணத்தினால் வரமுடியாமல் போனால், நாமாவது தரிசித்துவிடலாமே என்று தோன்றும். நமக்குமே கால் வலி வந்தாலும், பரவாயில்லை... ஊருக்குச் சென்று ஓய்வெடுத்துக்கலாம், வந்த இடத்தில் வாய்ப்பைத் தவறவிடுவானேன் என்று தோன்றும்.

      நீக்கு
    4. /சின்னப் பிள்ளைகள் கால் வலி என்றால்/

      ஹா ஹா ஹா. கார்த்திக், சௌந்தரியா பாடல் "நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா.." வெள்ளி வீடியோவாக நினைவுக்கு வருகிறது. (மனக்குளத்தில், சில நினைவுகள்..)) ) அந்த பாட்டில் அவர் வீடு வரை சௌந்தரியாவை தோளில் சுமந்தபடி செல்வார்.ஸ்ரீ ராம் சகோதரர் இந்தப்பாடலை பாடலை முன்பே பகிர்ந்து விட்டாரோ? இல்லையென்றால் பகிரலாமே... பாடல் நன்றாக இருக்கும். .

      நான் சொன்னது கால்வலிக்கு உடனடி நிவாரணமாக ஏதாவது தைலங்களை பூசி விட்டால் சற்று நடக்க முடியுமே என்பதற்காக அப்படி குறிப்பிட்டேன்.

      பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா?
      ஆமாம் பாம்பிற்கு கால்கள் உண்டா? எதனால் இப்படி ஒரு பழமொழி உண்டானது.? கேள்விகள் பிறக்கும் மறுநாள் இந்த கேள்விகள் உருவாகின்றன.. :)) .

      நீக்கு
    5. // தூக்கிக் கொண்டு செல்வோம். அது போலத்தான். //

      நான் என்ன பாஹுபலியா JKC ஸார்...  என் முதுகு என்ன ஆவது!

      நீக்கு
    6. நெல்லை சொன்ன மாதிரிதான் எனக்குத் தோன்றியது.  பார்க்காததில் பாஸுக்கு வருத்தமில்லை.  பார்த்ததில் எனக்கு திருப்தி.

      நீக்கு
    7. நெஞ்சுக்குள்ளே என்னாதுன்னு பாடல் எனக்கும் பிடிக்கும் கமலா அக்கா.  ஒருநாள் பகிர்ந்து விடுவோம்!

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    தாங்கள் சென்றிருந்த அறுபதாம் கல்யாணத்தில், தங்களின் நல்ல நட்பான திருமதி ஹேமா தம்பதியரின் மணவிழா படம் நன்றாக உள்ளது. அவர்கள் இருவரும் என்றும் சிறப்பாக ஆயுள் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுமென இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன். அவர்கள் பின் நிற்கும் இளைஞரின் படிப்புக்கு உதவிய அவர்களை வணங்கி போற்றுகிறேன். நல்ல மனதுடையவர்கள் வாழ்க வளமுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. ஏகாந்தன் சாரின் பணி அனுபவம் நன்கு தொடங்கியிருக்கிறது.

    இப்போதெல்லாம் தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சக வேலைக்குச் செல்ல தமிழ் இளைஞர்களுக்கு விருப்பம் இல்லையாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  இப்போது நிலவரம் என்ன என்று தெரியாது.  வெங்கட் இங்கிருந்து அங்கு சென்று கோலோச்சிக் கொண்டிருப்பபவர்தானே...

      நீக்கு
    2. வெங்கட்டும் கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் முன்னால் சென்றார்.

      நீக்கு
  5. ஒவ்வொரு கோயலும் ப்ராஃபிட் சென்டர் என அமைச்சர் கூறிய பிறகு, இலவசமாவது தரிசனமாவது....

    500 ரூபாய்க்கு நல்ல தரிசனம் கிடைத்ததே என்று மகிழ வேண்டியதுதான்.

    தஞ்சை மற்றும் தென் தமிழகத்தில் எஓயில்கள் பிரம்மாண்டம்தான். நடக்கத் தயாராக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வி ஐ பிக்கள் கவனிப்பு நமக்கு அவர்களிடம் கிடைக்காது.  இவர்கள் சத்தமின்றி அதைச் செய்கிறார்கள்!  முன்பைவிட இப்போது கோவில்களில் அரசின் அராஜகங்கள் பற்றி பேச்சுகள் பலமாக தொடங்கி இருக்கின்றன.

      நீக்கு
    2. ஆமாம். கோவிலை பணம் கொழிக்கும் இடமாகவும், அதை வைத்து கட்சிக்கார்ர்களைக் கவனிக்கும் இடமாகவும், அரசு கஜானாவை நிரப்பும் இடமாகவும், முடிந்த அளவு கலாச்சாரத்தின்மேல் நம்பிக்கை இல்லாத இடமாகவும் அரசு ஆக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

      நீக்கு
    3. மக்களிடம் பணத்தைப் பிடுங்கி அரசு அதிகாரிகளும், அமைச்சகமும் முந்திரி பக்கோடாவும், ஏ ஸி அறை, ஏ ஸி கார்களும் அனுபவிப்பதற்கு இது தேவலாம் என்பதே என் கருத்து.

      நீக்கு
  6. பாதையும் பயணமும் கவிதை, குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவினுடையதைப்போல் இருக்கிறது. மு மேத்தா புதுக்கவிதைக்கார்ரல்லவா?

    பதிலளிநீக்கு
  7. ஒரு காலத்தில்்பேப்பரில் வருவது உண்மைச் செய்தி என்ற நம்பிக்கை இருந்தது, அதிலும் சில பத்திரிகைகள் வார இதழ்கள் (இந்து, எக்ஸ்ப்ரஸ், விகடன், கல்கி). இப்போதோ எல்லாமேஆசுக்காக எழுதப்படுபவை என்பதால் பொய்யை, மெய் போலும்மே மெய் போலும்மே என்று விளம்பரம் செய்தாலும் நம்பமாட்டான் என்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு உண்மையை கவிழ்க்க பல பொய்களை உண்மை போல கட்டவிழ்த்து விட்டு பிராடு செய்யும் காலம் இது. பத்திரிகைகளிடம் நடுநிலையை எதிர்பார்க்க முடியாது.

      நீக்கு
  8. ஏகாந்தமாய் --

    ஹி...ஹி... பொருத்தமிகு தலைப்பு. செளத் பிளாக், நார்த் பிளாக். அவற்றின் உள்ளிட்ட அமைச்சரக விவரிப்புகள் எல்லாம் பிரமாதம்.

    ஒருவர் உரையாடலாய் சொல்வதற்கு "........" இந்தக் குறியீடை உபயோகப்படுத்துங்கள்.

    ஒருவர் நினைப்பதைத் தெரிவிப்பது தான் '......' இந்தக் குறியீடு.

    அடுத்தப் பகுதி வாசிக்க இப்பொழுதே ஆவல் பிறந்து விட்டது. சுவாரஸ்யத் தொடராக எழுதவிருப்பது குறித்து மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கேட்ட, எதிர்ப்பார்த்த சிறு வித்தியாசமாவது இந்த வாரம் இருந்ததா ஜீவி ஸார்?  

      ஏகாந்தன் ஸார் அனுபவங்களைப் படிக்க நானும் ஆவலுடன் இருக்கிறேன்.

      நீக்கு
  9. எம்பிபிஎஸ் இடம் கிடைத்து, அதில் சேரக்கூடிய அளவு பணவசதி இல்லாத ஒரு பெண் எனக்கு 89-90ல் நண்பியாக இருந்தார். அது ஒரு காலம்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    தாங்கள் எழுதிய கவிதை அருமை. ரசித்தேன்.

    /நின்று விடும்
    சில நினைவுகள் மட்டும்
    மீட்டெடுக்கின்றன
    பழைய காலத்தை /

    இந்த வரிகளை மிகவும் ரசித்தேன். இன்றைய தலைப்புகான வரிகளையும் அது கொண்டு வந்து தந்து விட்டது. கவிதைக்கான தலைப்பு தங்கள் தன்னடக்கத்தை காட்டுகிறது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் மாயக்கல் என்று எழுத நினைத்தேன். பின்னர் அதை மந்திரக்கல் ஆக்கி விட்டேன்.

      நீக்கு
  11. இப்படி தனி நபர்கள் காசு வாங்கிக் கொண்டு உள்ளே விடும் கலாச்சாரத்தை வாசிக்கும் பொழுதே மனம் கொதித்தால், இதிலும் ஏதோ நன்மை இருக்கிற தொனியில் ஸ்ரீராம் எழுதுகிறாரே, நியாயமா நெல்லை?

    சமூக அக்கறையை விட தனி நபர்கள் செளகரியங்கள் முக்கியமாகிப் போகின்றனவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் கோவிலுக்கு பணம் கொடுத்துச் செல்வதே மனது ஒப்புவதில்லை.

      ஆனால் இந்தப் பணம் யாருக்குப் போகிறது? ஏழைப்பட்டவர்களுக்குத்தானே. அதனால் நமக்கும் சௌகரியம் கிடைக்கிறது அல்லவா?

      கோவில் உண்டியலில் செலுத்தும் பணத்தில் அரசியல்வாதிகள் இனோவா காரும் மற்ற சௌகரியங்களும் செய்துகொள்வதைவிட இது எவ்வளவோ பரவாயில்லை என்று என் மனதுக்குத் தோன்றுகிறது.

      நீக்கு
    2. ஏழைப்பட்டவர்கள் !!
      ஆஹா.. என்ன கரிசனம்? செபாஸ்டின், பெர்னாண்டஸ் என்ற பெயர் கொண்டவர்களாய் இருப்பின் பொங்கி வழிந்திருப்பீர்களே!

      நீக்கு
    3. சமூக அக்கறை என்பது இடம் பொருள் ஏவல் பொறுத்து மாறுகிறது ஜீவி ஸார்.

      நீக்கு
    4. //செபாஸ்டின், பெர்னாண்டஸ் என்ற பெயர் கொண்டவர்களாய் இருப்பின் பொங்கி வழிந்திருப்பீர்களே!/

      இப்படி நினைத்துப் பார்க்காத தோன்றவில்லை.  பொதுவாக அவர்கள் இந்தப் பக்கம் வரமாட்டார்கள்.

      நீக்கு
    5. //செபாஸ்டின், பெர்னாண்டஸ் என்ற பெயர் கொண்டவர்களாய் இருப்பின் பொங்கி வழிந்திருப்பீர்களே!// - உண்மைதான் ஜீவி சார்.

      நீக்கு
  12. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  13. வியாழன் பதிவு மட்டும் ஒரு பல்சுவை மலர். கட்டுரை, கவிதை, செய்தி, பயணக்கட்டுரை, 60 வருடத்திற்கு முந்தைய பொக்கிஷங்கள் என்று கலந்து ஒரு வாரப்பத்திரிகை போன்று வெளிவருவது சந்தோசம். ஆனால் திங்கள் செவ்வாய் தற்போது ஆக்சிஜன் மாஸ்க்கில் என்பதும் சற்று உறுத்துகிறது. நியூஸ் ரூமை தினசரிப் பதிவாக்கலாம்.

    வழியில் பார்த்த மரம் அருமையான செட் போட்டோ. மின்சார மரம், குட்டி மலை, பசுமை மரம் என்று போட்டோ அழகான பிரேமில் இருக்கிறது.

    கவிதையைப் பற்றி

    எல்லா நினைவுகளும் மேலே வந்தால் பாசி படிந்த குளம் போல் ஆகிவிடும். நல்ல நினைவு மேலே வரட்டும். கெட்ட நினைவுகள் மூழ்கட்டும்.

    பேங்களூரில் எப்படி 470 கோடியை இழந்தார்கள் என்ற விவரம் இல்லை. செய்தி முற்றுப் பெறவில்லை.

    பொக்கிஷம் எந்தப் பத்திரிகையில் இருந்து எடுத்தது? அதுவும் ஒரு கதம்பமாய்!

    ஏகாந்தன் போட்டோ அவதார் சீன் போன்று உள்ளது. எழுதும் வாழ்க்கை குறிப்பும் நன்றாக உள்ளது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி JKC ஸார்..   திங்கள் செவ்வாயில் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.

      அதுசரி, அந்த போட்டுவுக்கு நான்தான் கவிதை எழுத வேண்டுமா என்ன!  எசப்பாட்டு படிக்கும் நீங்கள் முயற்சித்திருக்கக் கூடாதா!

      நினைவுகள் நம் விருப்பத்தில் மேலும் கீழும் நகர்வதில்லையே..

      பொக்கிஷம் தீபம் இதழிலிருந்து எடுக்கபப்ட்டது.  1966 ம் வருடத்து தீபம் இதழ்.

      அது ஏகாந்தன் ஸார் போட்டோ இல்லை.  தலைப்புக்கு தக்கபடி இணையத்திலிருந்து நான் எடுத்துச் சேர்த்த படம்! 

      நீக்கு
  14. ஏழையொருவர் மருத்துவம் படிப்பதற்கு உதவிய பெரியோர்க்கு வணக்கங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாமனார் (அவரும் ப்ரொபசராக இருந்தவர்), ஏழைகளின் படிப்புக்கு நிறைய உதவி செய்வார். அவரை ஒட்டி என் மச்சினர்களில் ஒருவனும் அப்படியே. இதெல்லாம் இறைவன், இதனை இவனால் இவன்கண்... என்று முடித்துக்கொள்வார் எனத் தோன்றும்.

      நீக்கு
    2. உண்மையிலேயே பெரிய உதவி. அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாரதி சொல்லி இருப்பது போல...

      நீக்கு
  15. ஏகாந்தன் அவர்களது கை வண்ணம் சிறப்பு..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  16. பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூரில் மூலஸ்தானத்திற்குப் பின்புறமுள்ள பஞ்சலிங்க தரிசனத்திற்காக பணம் கொடுத்தது தான்..

    அதற்குப் பின்பு இப்படி ஏதும் இல்லை..

    பதிலளிநீக்கு

  17. பல ஆண்டுகளுக்கு முன்பு திரு ஆனைக்கா முதன் முறை தரிசனத்தின் போது எவ்வித தடையும் இன்றி மூலஸ்தானத்தில் அப்பு லிங்க தரிசனம்..

    அப்போது கார்த்திகை மாதம்.. முழங்கால் வரை நீர்..
    தண்ணீருக்குள் இருந்தார் ஜம்புகேஸ்வரர்..

    மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகியது..

    அதன்பிறகு நல்லதோர் நாளில் வசூல் வேட்டை தொடங்கப்பட்டது.. ஆ. நி. துறைக்குக் கப்பம் கட்டினால் தான் சிவ தரிசனம் என்றாகி விட்டது.. வேறு வழியின்றி தண்டம் கட்டி விட்டு சுவாமி தரிசனம்..

    இதன் பிறகு பதினைந்து ஆண்டுகள் ஓடி விட்டன..

    ஜம்புகேஸ்வரத்தில் இப்போது எப்படியோ தெரியவில்லை..

    வாழ்க ஆனாநீனா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த நாளில் கோவில் சென்று தரிசனம் செய்த அனுபவங்கள் மனதில் நிழலாடுகின்றன. இன்றைய தலைமுறை அப்படி ஒரு காலம் இருந்தது என்பதையே உணராது!

      நீக்கு
  18. ஆனை ஆனை ஆண்டாள் ஆனை
    நடனம் ஆடும் அழகு ஆனை!

    ரசித்தேன்...என்ன அழகு!

    இங்கயாச்சும் காணொளி எடுத்தீங்களே ஸ்ரீராம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  19. ஹேமா தம்பதியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருந்திட வாழ்த்துகள்!

    படங்கள் சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
  20. விருந்தினர்களை, உறவுகளையும் உபசரிப்பதில் ஹேமா பி ஹெச் டி. ஒரே நேரத்தில் மேடையிலும் இருப்பார், நம் அருகிலும் இருப்பார் என்கிற மாதிரி பார்த்துக் கொண்டார். யாருக்கும் குறை வைக்கவில்லை. புன்னகை மாறா முகம்.//

    சூப்பர் இப்படி இருப்பது வெகு சிலரே....வாழ்த்துகள் சொல்லிடுங்க ஸ்ரீராம், அவங்ககிட்ட

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அவர் எம் பி பி எஸ் படிப்பை காசு இல்லாததால் முதல் வருடத்தோடு நிறுத்தியவர் என்பது தெரிந்தது. நம் ஹேமா முன்னின்று அவர் நிறையவும், எங்களிடமிருந்தெல்லாம் கொஞ்சமும், இன்னொரு நண்பரிடம் நிறையவும் உதவிகள் பெற்று அவரை எம் பி பி எஸ் முடிக்க வைத்தார். இன்று அவர் ஒரு பெருமைமிகு மருத்துவர்.//

    சத்தியமாக மெய் சிலிர்த்தது!! வாழ்க வாழ்க வாழ்க ஹேமா அண்ட் உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும். எனக்குக் கண்ணில் நீர் துளிர்த்தது ஸ்ரீராம்....

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கிடைத்த ஜிகர்தண்டா குடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்டேன்.//

    அதான் இருமல் படுத்துவது தெரிகிறதே! காரணம் புரிஞ்சு போச்சு!!!

    உங்க இருமலுக்கு மருத்துவர் யாராவது தனியாக ஆராய்ச்சி மேற்கொண்டு ஸ்பெஷலைஸேஷன் செய்ய வேண்டும். நீங்க தான் சோதனை எலி!!!!! என்று நினைக்கிறேன். இவ்வளவு மாசம்/வருஷமா தொடர்ந்துகொண்டிருக்கிறதே எப்ப அதுக்குத் தீர்வு வரும்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அநியாயம் கீதா. அதற்கு முன்பிருந்தே இருமல் படுத்துகிறது!

      நீக்கு
  23. எனக்கு பைசா கொடுத்து கோயில் தரிசனம் செய்வதில் உடன்பாடுகிடையாது. செய்ததும் இல்லை. ஃப்ரீயா போக முடிந்த கோயிலுக்குத்தான் செல்கிறோம்........ஆனால், ஸ்ரீராம் நீங்க போன பதிவுல என் கருத்திற்குச் சொன்ன பதில் பாயின்ட் யோசிச்சப்ப, உண்டியல் கொள்ளைக்கு, இந்த ஆட்களுக்குக் கொடுப்பது பரவால்ல என்று தோன்றியதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் அப்படிதான் தோன்றுகிறது.

      நீக்கு
    2. காசு வாங்கிக் கொண்டு கோயில் உள்ளே அனுமதிக்க
      யாராலோ நியமிக்கப் பட்ட ஊழியர்கள் இவர்கள்என்று தெரிகிறது. யாரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது தான் கேள்வி.
      அப்படி இல்லை என்றால் ஒழுங்குமுறையுடன் ஒரு புரிதலுடன் இந்தக் காரியம் நடக்காது. தலைக்கு தலை காசு வசூலிக்க ஆரம்பித்தால் இந்த ஸிஸ்டமே பணாலாகி விடும். இந்த அடிப்படை கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் இது பற்றிப் பேசுவதில் அர்த்தமேயில்லை.

      அடுத்து ஸ்ரீராம் எந்தக் கோயிலுக்கு குடும்பத்துடன் போனாலும், "எங்கேப்பா அவங்க?"
      என்று இந்த மாதிரி நபர்களைத் தேடுகிற அளவுக்கு இந்த விஷயத்தில் பழக்கமாகி விட்டார்.
      ஆகவே....

      நீக்கு
    3. இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை என்கிறீர்களா!!

      நீக்கு
    4. ஒரு பக்கம் அ.நி. துரை டிக்கெட் கலெக்‌ஷன், இன்னொரு பக்கம் இந்த மாதிரி என்று இரட்டை வாத்தியமாக
      வசூலிப்பு நடக்கலாம்.
      வரும் காலத்தில் இது பற்றி மேலதிக தகவல்கள் கிடைக்கும் பொழுது நாம் விவரமாகத் தெரிந்து கொள்ளலாம்.

      நீக்கு
    5. இந்த தருணத்தில் இல்லை. .

      நீக்கு
    6. வரும் காலத்தில் இதிலும் ஓவராகப் போகும்போது கவனிக்கப்படலாம்.  இப்போதைக்கு இது ஒரு சாதாரண எளிய தரிசன முறை -   வி ஐ பி அந்தஸ்து இல்லாதவர்களுக்கு!

      நீக்கு
    7. டிக்கெட் இல்லாத கலெக்‌ஷன் என்பது முக்கியம்.

      நீக்கு
  24. 'எவ்வளவு கேட்டார்?' என்று அவர் கேட்க, 'ஐநூறு' என்றேன். 'கேட்டுக்க வேண்டியதாயிருக்கு.. இல்லன்னா உங்க கிட்ட ஒண்ணு வாங்கிட்டு, எங்க கிட்ட ஒண்ணு சொல்றாங்க' என்றார்!//

    ஒருவர் என்னை அணுகி 'சூர்யா அனுப்பிய ஆள் நீங்கதானா?' என்றார். 'ஆம்' என்றேன். 'உள்ளே வந்துட்டீங்களா.. ஆள் மாறி விட்டது. பரவாயில்லை.'. என்று சொல்லி சென்று விட்டார்.//

    என்னவோ ம்ம்ம்ம்....

    //ஆள் மாற்றி உள்ளே வந்துட்டீங்க.. எனக்கும் தரணும் காசு என்கிற கதை எல்லாம் நல்வேளை சொல்லவில்லை!//

    நல்ல காலம்....ஒரு வேளை அவங்க எல்லாமே ஒரு குழுவா இருக்கலாம் ஸ்ரீராம். அவங்களுக்குள்ள அட்ஜஸ்ட்மென்ட்ஸ் இருக்குமா இருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழுவில் ஒன்றிரண்டு பேர் அப்படியும் இருப்பார்கள்தானே!

      நீக்கு
  25. ஆனால் ஒரு ஆளை அனுப்பி சூர்யாவை அழைத்து வரச் செய்து பேசிய தொகையைக் கொடுத்தேன். //

    அப்படிக் கிளம்பிட நமக்கு மனசு வராது ஸ்ரீராம். நல்ல தரிசனம் கிடைச்சுச்சே...

    'உள்ளே இருக்கும் ஆளுக்கு இன்னொரு 500 கொடுங்க' என்றார். மறுத்து விட்டு, முதலில் பேசிய தொகை இதுதான் என்று சொல்லிக் கிளம்பினோம்.//

    ஆ உள்ள கேக்கலை அப்ப நான் நினைச்சேன் ஒரே குழுதானே...அட்ஜஸ்ட்மென்ட்னு .........இங்க கேட்டிருக்கார் பாருங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  26. வாழ்வும். திருப்தியாக கிடைத்ததில் மகிழ்ச்சி.

    திரு.ஏகானந்தன் அவர்களின் அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. கவிதையை ரொம்ப ரசித்தேன் ஸ்ரீராம்.

    எனக்கும் இப்படி ஒரு எண்ணம் வரும் ஆனா பாருங்க நீங்க அதை அழகா கவிதையா வடிச்சிட்டீங்க....

    என் மனதிற்குள் இப்படி எழும் எண்ணங்களை நான் இப்படி நீஞ்சி களைப்பில் கரையோரத்துல ரெஸ்ட் எடுக்கறப்ப நாம அதை அப்படியே லபக்கி சேமிக்கலாம்னு நினைக்கறப்ப மீண்டும் அடுத்து ஒரு செட் எங்களுக்கு வழி விடுங்கன்னு இதுங்கள தள்ளிட்டு வந்து குதிக்கறப்ப இவை மெதுவாக மெதுவாக வலுவிழக்க மூழ்கிடுதேன்னு....நினைச்சு இப்படி வார்த்தைகளாக எழுதி வைச்சிருக்கேன்...குறிப்புகளாக....ஒரு கதைக்காக....நம்ம கதைகள்ல எல்லாம் உளவியல் இருக்குமே!! அப்படியான ஒரு கதைக்கு...ஸோ....உங்க கவிதை அபேஸ்!

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்த எண்ணங்களை மறையும் முன் பிடித்து வைப்பது எளிதல்ல கீதா.

      நீக்கு
  28. பா. ராகவன் - சுவாரஸியம்.....எனக்கும் அச்சு இயந்திரங்கள் பார்க்க வேண்டும் என்றா ஆசை உண்டு. ஒரு புத்தகம் அச்சில் வெளி வரும் போது அது தனி மகிழ்ச்சிதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். ஆனால் எனக்கு அப்படி ஆசை எதுவும் இல்லை!

      நீக்கு
  29. கருத்து போனதா தெரியலை....வெளியிட்டது ஆனால் இங்கு காணவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  30. பா. ராகவன் பகுதிக்கு எழுதிய கருத்து??

    கீதா

    பதிலளிநீக்கு
  31. நியூஸ் ரூம் - முதல் செய்தி .....நல்ல சமுதாயத்திற்கான லட்சணமா தெரியலை

    கடைசி செய்தி - ஹப்பா பட்டாசுக்குத் தடை!!

    கீதா

    பதிலளிநீக்கு
  32. பொக்கிஷம் - தவறுதலாக அச்சடிக்கப்பட்டது சிரித்துவிட்டேன்.

    கனவில் உதித்த நாவல் - உண்மையில் சில கனவுகள் கதைக்கு நல்ல கருவாக அமையும். நேற்று கூட ஆதி அவங்க கனவு பத்தி எழுதியிருந்த பதிவுக்கும் இப்படியான ஒரு கருத்து போட்டிருந்தேன்.

    இந்தியரின் சாதனை - ஹாஹாஹாஹா இது வேறு வகையிலும் வாசித்த நினைவு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். ஒரு வகையில் வந்து விட்டால் காப்பியடித்து வேறு வகையில் எழுதி வைப்பதும் ஒரு யுக்தி!

      நீக்கு
  33. ஏகாந்தன் அண்ணா வின் அனுபவங்கள் சுவாரசியமாகத் தொடங்கியிருக்கிறது. அவர் அனுஅப்வங்கள் ரொம்ப சுவாரசியமாக இருக்கும். நிறைய அனுபவங்கள். வெளிநாட்டு அனுபவங்கள். சொல்வனத்தில் சில் வாசித்ததுண்டு.

    ஏகாந்தன் அண்ணா, நெடுக்கால்லா போயிருக்கீங்க...தெக்குலருந்து வடக்கு நோக்கி!!!

    இப்பவும் எனக்கு ரயிலில் தில்லி நோக்கிய பயணம் ரொம்பப் பிடிக்கும். நிற்கும் ஊர்கள், ஆறுகள் மலைகள், மனிதர்கள் அந்தக் கிராமங்கள் எலலம் பார்க்க பார்க்க அது ஒரு தனி அனுபவம். அதுவும் நாக்பூர் தாண்டி போபால் வரை...ரயில் பயணமே ரொம்பப் பிடித்த ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட ரயில் பயணங்கள் அலுப்பூட்டும் என்று எனக்குத் தோன்றும். உங்களுக்கெல்லாம் பிடித்திருக்கிறது! ஏகாந்தன் சாரின் அனுபவங்களுக்கு நானும் காத்திருக்கிறேன்.

      நீக்கு
  34. இன்றைய பதிவு அருமை.
    கோவில் தரிசனம் நல்லபடியாக முடிந்தது மகிழ்ச்சி. உங்கள் பாஸ் கால்வலியால் சில இடங்களை பார்க்க முடியாமல் போய் விட்டதே!
    கமலா ஹரிஹரன் சொன்னது போல வலிக்கு ஏதாவது தைலம் தேய்த்து கொண்டு சற்று ஓய்வு எடுத்து பார்த்து இருக்கலாம்.

    ஸ்ரீரங்கம் கோவில் யானை காணொளி , மற்றும் படங்கள் நன்றாக இருக்கிறது. "படம்தானே எடுக்க கூடாது என்றீர்கள் நான் காணொளி எடுத்து விட்டேன்" என்று லக்ஷ்மியை காணொளி எடுத்து எங்களுக்கு காட்டி விட்டீர்கள்.

    //அவசரமில்லாமல் அம்மனின் தரிசனம் அழகாய்க் கிடைத்ததில் பாஸுக்கு வெகு திருப்தி. கால்வலியைக் கூட சற்று நேரம் மறந்தார்.//

    சமயபுர அம்மனின் தரிசனமும் நன்றாக கிடைத்தது மகிழ்ச்சி.
    அம்மன் தரிசனம் நன்கு கிடைத்து விட்டால் கால்வலி தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தைலம் தேய்க்க முடியாது. சோரியாட்டிக் ஆர்த்ரைடிஸ். காலில் சிவப்பு சிவப்பாக இருக்கும். தைலங்கள் சமயங்களில் அலர்ஜியாகி விடும்.

      காணொளி என்றால் அசையாமல் வைத்திருப்பதால் அவர்கள் கவனிக்க வாய்ப்பில்லை! எனவே எடுக்க முடிந்தது! எனினும் அலைபேசியை பிடுங்கி விடுவார்களோ என்று சட்டென நிறுத்தியும் விட்டேன்!

      நீக்கு
  35. ஹேமா தம்பதியருக்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
    அவரின் நல்ல குணங்கள் அறிந்து மகிழ்ச்சி.
    உறவுகள், நட்புகளை நன்கு கவனித்து கொண்டதும், மருத்துவ கல்விக்கு உதவியதும் உங்கள் எல்லோரையும் அந்த சேவையில் இணைத்து கொண்டதற்கும் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துகளை அவரிடம் சொன்னேன். நன்றி சொன்னார். கிருஷ்ணன் செய்யச் சொன்னான் என்கிறார்.

      நீக்கு
  36. உங்கள் சம்பவத்துக்கடாக்களை வாசிக்க ஆர்வத்துடன் தொடர்கிறேன்.

    இரு ப்ளாக்குகளையும் அந்தப் பகுதியையும் பார்க்க நேரிடும் போதெல்லாம் மத்திய அரசு பரீட்சை, வேலை எனக்கு என் நினைவுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். எனக்குக் கிடைத்த வேலைக்குச் செல்ல முடியாதது இப்போதும் எனக்கு அந்தக் குறை உண்டு. என்னதான் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொன்னாலும் என் மனதில் இந்தக் குறையும், எனக்கு இருந்த எழுத்து ஆர்வம், பாட்டு, எதையும் தொடர்ந்து ஆழமாகச் செய்ய முடியாமல் போகும் குறையும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ.. வேலை கிடைத்து சேர முடியாமல் போயிருந்தால் அந்த வருத்தம், அந்த இழப்பு இருக்கும்தான்.

      நீக்கு
  37. மனக்குளத்தில் மூழ்கி எடுத்த முத்தான கவிதை அருமை.
    //வழியில் பார்த்த இந்த மரம் என்னை படம் எடுத்து ஒரு கவிதை எழுத முயற்சி பண்ணேன்" என்றது. 'அப்புறம் பார்க்கிறேன் 'என்று மனதுக்குள் சொல்லி படம் மட்டும் எடுத்துக் கொண்டேன்!//

    அடுத்த வாரம் மரத்தைபற்றிய கவிதை வரும் என்று நினைக்கிறேன்.

    மேத்தா அவர்களின் கவிதை பகிர்வும் அருமை.

    வசந்த் தொலைக்காட்சியில் "மண்பேசும் சரித்திரம்" நிகழ்ச்சியில்
    தரங்கபாடி டேனீஸ் கோட்டையை பற்றியும், சீகன் பால் பற்றியும் மாசிலாமணி கோவிலும் காட்டினார்கள்.

    https://mathysblog.blogspot.com/2013/04/blog-post_22.html நானும் பதிவு போட்டு இருக்கிறேன். சீகன் பால் பற்றி சொல்லி இருக்கிறேன்.

    பா.ராகவன் பத்திரிக்கைகளைபற்றியும் அச்சு இயந்திரங்கள் பற்றியும் சீகன் பால் பற்றியும் சொன்ன கட்டுரை பகிர்வு அருமை.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரக்கவிதை அடுத்த வாரமா? முயற்சிக்கிறேன். நான் ஏற்கெனவே சொல்லியுள்ளபடி நீங்கள் யாரேனும் கூட முயற்சிக்கலாம்! உங்கள் பழைய பதிவு சென்று பார்க்கிறேன்.

      நீக்கு
  38. செய்திகள், பொக்கிஷபகிர்வுகள் அனைத்தும் படித்தேன்.

    திரு.ஏகாந்தன் அவர்களின் வேலை கிடைத்த விதம், அவர் வேலையில் சேர்ந்த அனுபவங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  39. இறைவனுக்கு இடையில் எத்தனை இடைத்தரகர்கள் ???

    பதிலளிநீக்கு
  40. // ஒரு ஆளை அனுப்பி சூர்யாவை அழைத்து வரச் செய்து பேசிய தொகையைக் கொடுத்தேன். //

    அந்த மனசு இருக்கே...

    // 'உள்ளே இருக்கும் ஆளுக்கு இன்னொரு 500 கொடுங்க' //

    இந்த மனசும் இருக்கே...

    நேர்மைகள் -
    பலவிதம்....
    ஒவ்வொன்றும்
    ஒருவிதம்...

    பதிலளிநீக்கு
  41. ஹேமா தம்பதியருக்கு மனமார்ந்த நல்லாசிகள். கடும் முயற்சி எடுத்து அந்த நண்பரை மருத்துவப் படிப்பு படிக்க வைத்த நல்ல மனதுக்கு மிக்க நன்னி என்பதெல்லாம் வெட்டிப் பேச்சு. வார்த்தைக்கு இடமே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரும் மனம் நிறைந்து நன்றி சொன்ன வண்ணம் இருக்கிறார்.

      நீக்கு
  42. ஹேமா தம்பதியினர் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்பதால் ருத்ர ஏகாதசினி இல்லை. உதகசாந்தி. நமக்கெல்லாம் ம்ருத்யுஞ்சய ஹோமம், தன்வந்திரி ஹோமம் எல்லாமும் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இதைபப்ற்றி முதல் பகுதியில் சொல்லியிருந்தேனா நினைவில்லை.

      நீக்கு
  43. சுவாரசியமாகத் தொடங்கி இருக்கும் ஏகாந்தனுக்கு வாழ்த்துகள். கவிதை ஓஹோ இல்லைனாலும் ஓகே. பா.ராகவனின் இந்தக் கட்டுரையை முன்னரே படிச்சிருக்கேன். நியூஸ் ரூம் செய்திகள் புதிது.

    பதிலளிநீக்கு
  44. தாயாரைத் தரிசித்ததும் அந்த அனுபவங்கள் அனைத்துமே நல்ல விவரங்கள். ராமாநுஜரை நாங்க இன்னி வரை தரிசித்தது இல்லை. அந்தப் பக்கமே போனது இல்லை. யானைக்கொட்டடிக்கு எல்லாம் போயிருக்கீங்க போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யானையைப் பார்க்காமல் எப்படி வருவது? ஏன் இதுநாள் வரை ராமானுஜரை நீங்கள் பார்த்ததில்லை?

      நீக்கு
  45. சமயபுரம் கோயில் எப்போவும் திறந்திருக்கும். திருப்பட்டூருக்குப் போக நினைச்சாலும் நம் தலைவிதி மாற வேண்டும் என விதித்திருந்தால் தான் தரிசனம் கிடைக்கும் என்கிறார்கள். நாங்க 2,3 தரம் போயிருக்கோம். எல்லாத்தரமும் தலை விதி மாறீனதா தெரியலை. ;)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நம் தலைவிதி மாற வேண்டும் என விதித்திருந்தால் தான் தரிசனம் கிடைக்கும் //

      இந்த தயக்கமூட்டும் எண்ணம் எனக்கும் தோன்றியது. எனினும் காத்திராமல் கிளம்பி விட்டோம்!

      நீக்கு
    2. இதிலே பாஸின் கால்வலி பற்றிக் கேட்டிருந்ததும், சமயபுரத்திலும் வெகு தூரம் நடந்தீர்களா எனக் கேட்டதும் எங்கே? காணாமல் போயிடுத்து போல. என்னோட மெயில் பாக்சிலும் இல்லை. ஸ்பாமில் பார்க்கணும்.

      நீக்கு
    3. இன்னொருத்தருக்குக் கொடுத்திருந்த பதிலில் சோரியாடிக் ஆர்த்ரைடிஸ் பாஸுக்கு எனச் சொல்லி இருந்தீங்க. அதுக்கும் மருத்துவம் ஆயுர்வேதத்தில் இருக்கு. சமீபத்தில் தான் படிச்சேன். நினைவு படுத்திப் பார்க்கிறேன். விரைவில் நலம் பெறப் பிரார்த்தனைகள். பிள்ளைகள் கல்யாணத்துக்கு ஓடி ஆடணும் தெம்பாக.

      நீக்கு
  46. வணக்கம் சகோதரரே

    சமயபுரம் மாரியம்மன் தரிசனமும் சிறப்பாக கிடைத்தமைக்கு மகிழ்ச்சி. எந்த கோவிலுக்கு சென்றாலும் இறைவன் அருளால் உங்களுக்கென்று அங்கொரு "சக்தி" கிடைத்து விடுகிறது.

    கவிதைக்கு காத்திருக்கும் மரம் படம் நன்றாக உள்ளது நாங்களும் காத்திருக்கிறோம். உங்கள் கவிதைக்காக..

    பாதையும், பயணமும் கவிதை நன்றாக உள்ளது.

    செய்தி அறை பகுதியில் பல செய்திகளை அறிந்து கொண்டேன்.

    சகோதரர் ஏகாந்தன் அவர்கள் அவரின் வேலை கிடைத்த அனுபவங்களை சுவையாக விவரித்திருக்கிறார். அவரின் எழுத்துக்களை அடுத்த வாரமும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தவறோ என்று சந்தேகப்பட்டதையே இறைவன் அருள் என்று சொல்லி மனபாரத்தை குறைத்து விட்டீர்கள்!

      நானும் காத்திருக்கிறேன், நீங்களும் ஒரு கவிதை எழுதுவீர்களா என்று!

      நன்றி கமலா க்கா.

      நீக்கு
  47. பா. ராகவனின் கட்டுரை வெற்று வார்த்தைக் குவியல். அச்சு இயந்திர பிரமிப்பு அனுபவம் பற்றிச் சொல்ல வந்தவர் சீகன் பால்க் பற்றிய விவரங்களில் சிக்கி உழன்று ஒருவழியாக வெளிவந்திருக்கிறார். எதை எழுத உந்துதல் ஏற்பட்டு எழுத ஆரம்பித்தோமோ அதிலிருந்து விலகி தடம் மாறிப் போகும் எழுத்துக்கு இது ஒரு உதாரணம்.

    பதிலளிநீக்கு
  48. நான் ஆனந்த விகடனின் அச்சுக்கூடத்தைப் பார்த்திருந்த பிரமிப்பில் அப்படி நினைத்தேன், ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  49. நன்றி ஸ்ரீராம். கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் அன்பார்ந்த நன்றிகள்.

    சின்னச் சின்னதாகத் தரப் பார்க்கிறேன். சில சமயங்களில் நீண்டுவிடும் அபாயமும் உண்டு!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!