செவ்வாய், 31 அக்டோபர், 2023

சிறுகதை : சொர்ணபுஷ்பம் - துரை செல்வராஜூ

 சொர்ணபுஷ்பம்

*** *** *** *** *** *

" சுசீலா!.. வாசல்ல ஆட்டோ வந்து நிக்கிற மாதிரி இருக்கு..  என்னா.. ன்னு பாரும்மா.. "

" இதோ வர்றேன்.. அத்தை.. " - என்றபடி சமையலறையில் இருந்து வெளியே வருவதற்கும் - 

" புஷ்பம்.. " - என்ற அழைப்பு கேட்பதற்கும் சரியாக இருந்தது..

அதுவரையில் கட்டிலில் கிழிந்த நாராய்க்  கிடந்த புஷ்பத்தின் கண்களில் பிரகாசம்..

" யக்கா!.. " - என்றபடி தட்டுத் தடுமாறி எழுவதற்குள் கண்கள் பொங்கின.. விம்மல் வெளிப்பட்டு விட்டது..


சொர்ணமும் புஷ்பமும் ஒரு தாய் மக்கள்.. மூன்று வருடம் வித்தியாசம்.. ஒருவருக்கொருவர் பார்த்துப் பேசி பல வருடங்கள் ஆகி விட்டன.. அவரவருக்கும் பிரச்னைகள்.. யாரைக் குறை சொல்வது?.. 

கடுதாசியில் நாலெழுத்து எழுதி விவரம் கேட்டுக் கொண்ட காலங்கள் மலையேறி - கைக்குள் உலகம் வந்த நேரத்தில் அது இருவருக்குமே பயன்படாததாகி விட்டது.. 

மூப்பும் வந்து எய்தியதால் அதிலெல்லாம் விருப்பம் இல்லாமல் போனது..

இரண்டு கைகளிலும் கனத்த பைகளுடன் வீட்டுக்குள் வந்த சொர்ணத்தின் கண்களிலும் கண்ணீர்.. 

" சரி.. சரி.. என்னத்துக்கு வருத்தப்படறே.. வயசாகிப் போச்சுன்னா இதெல்லாம் சகஜந்தானே.. "
 
" வாங்க அத்தை.." - என்றபடி  நாற்காலியை எடுத்துப் போட்டாள் சுசீலா..

அழுகையுடன் ஏதோ சில வார்த்தைகள் புஷ்பத்திடம்..

" எதுக்கும் கவலப்படாதே.. தைரியமா இரு.. ஓடியாடி ஒழைச்ச ஒடம்பு.. உவத்திரவம் ஒன்னும் கொடுக்காது... மகமாயி இருக்கா.. "

" பெரியவன் சின்னவன் எப்படி இருக்கானுங்க.. மருமக சும்மாதான் இருக்காளா.. "

" எல்லாம் பெறவு சொல்றேன்.. " 

சரி.. சாப்பிடு.. அக்கா.. " - என்ற புஷ்பம் தலை நிமிர்ந்து சுசீலாவைப் பார்த்தாள்.. அதற்குள் பல அர்த்தங்கள்..

காலையில் அவித்த இட்டலிகளில் கணேசன் சாப்பிட்டு விட்டு மதியத்துக்கு எடுத்துக் கொண்டு வேலைக்குப் போய் விட்டான்.. சுசீலாவும் சாப்பிட்டு விட்டு மதியத்துக்கு எடுத்துக் கொண்டாள்.. புஷ்பம் சாப்பிட்டது போக மத்தியானத்துக்கு என்று ஐந்து இட்டலியும் சாம்பாரும் இருக்கின்றன.. அதைத் தான் இப்போது சொர்ணத்துக்கு பரிமாறியாக வேண்டும்..

" அத்தை வாங்க.. உட்காருங்க.. சாப்பிடலாம்.. " - என்றாள் கனிவுடன்..

" நான் சாப்பிட்டுத் தான் வர்றேன்.. " 

" அதான் பார்த்ததும் தெரியுதே.. " -  என்றபடி சிரித்தாள் புஷ்பம்..

" இதிலேயே கை கழுவுங்க அத்தை.. " - என்றபடி  செம்பில் தண்ணீரும் சிறிய பிளாஸ்டிக் வாளியையும் கொண்டு வந்து வைத்தாள் சுசீலா..

" கணேசன் எங்கே?.. "

" அவன் - குருசாமி ஸ்டோர் ல வேலை செய்றான்..   பன்னண்டு மணி நேரம் வேலை..  ராத்திரி எட்டு மணிக்குத் தான் வருவான்.. இன்னும் கொஞ்ச நேரத்துல சுசீலாவும் கிளம்பிடுவா.. சுசீலாவுக்கும் அண்ணாச்சி குடோன்ல தான் வேலை..  எட்டு மணி நேர வேலை.. ரெண்டு பேரும் வேலை முடிஞ்சு வர்ற வரைக்கும் வீட்ல நா மட்டும்தான்.. கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு இருப்பேன்... "

இடையில் சற்றே நிறுத்திய புஷ்பம் தொடர்ந்தாள்.

" உங்கிட்ட சொல்றதுக்கு என்ன.. ரெண்டு பேருமா இருவத்தைஞ்சாயிரம் கொண்டு வர்றாங்க... இந்த வீட்டுக்கு மாசம் ஆறாயிரம் வாடகை.. வெலைவாசி தான் உனக்குத் தெரியுமே.. இன்னிக்கு பருப்பு வெலை ஏறுனா நாளைக்கு பால் வெலை ஏறும்.. மல்லி வெலை இன்னிக்கு.. மிளகா வெலை நாளைக்கு.. இந்த லச்சணத்து ல  கெரகம் வந்து ஆடுது.. மாசக் கணக்குல எனக்கு வைத்தியச் செலவு வேற.. "

" எல்லாம் சரியாய்டும்.. கவலப்படாதே.. " - என்றாள் சொர்ணம்..

" பெரியவன் தான் கலியாணம் கட்டிக்கிட்டு தனியாப் போய்ட்டான்... இப்போ சின்னவனுக்கும் வயசு தானே.. பொண்ணு ஏதும் பார்க்கிறியா.. " புஷ்பத்திடம் இருந்து கேள்வி..

" அத ஏன் கேக்குற புஷ்பம்... அவன் தான் ரொம்பப் படிக்காம நாம சொன்ன புள்ளைய கட்டிக்கிட்டு ஒதுங்கிட்டான்.. இவன் நாலு எழுத்து படிச்சிருக்கான்.. நமக்கு ஒத்தாசையா இருப்பா..ன்னு நெனச்சா.. "

" ஏன்.. என்ன ஆச்சு?.. " புஷ்பத்திடம் அதிர்ச்சி..

" கூடப் படிக்கிற புள்ளயோட ராசியா இருக்கேன் னு சொன்னான்.... நானும் சரிப்பா.. உன்னோட இஷ்டம்.. ன்னு விட்டுட்டேன்.. இப்போ அந்தப் பொண்ணு சொல்றாளாம்.. மாசாமாசம் வேணுங்கற பணத்தை கொடுத்துடுவோம்.. உங்க அம்மா எங்கேயாவது ஆஸ்ரமத்துல இருந்துக்கட்டும்.. அதுக்கு இஷ்டம் னா தான் கல்யாணம் அப்படின்னு.. "

சொர்ணம் கை கழுவிக் கொண்டிருந்தாள்..

" அடக் கடவுளே!.. "

" அண்ணன் தான் கல்யாணம் கட்டிக்கிட்டு ஒதுங்கிட்டான்.. நாம அம்மா கூட இருந்து பார்த்துக்குவோம்.. ன்னு சின்னவன் சொல்றத அந்தப் பொண்ணு கேக்கவே இல்லை.. சேதி எங்காதுக்கு வந்தது.. சரி டா ராஜா.. நீ உம்பொழப்பை பார்த்துக்கோ.. உங்க சம்பாத்தியம் கூட எனக்கு வேணாம்.. ன்னு சொல்லிட்டேன்.. "

" அட.. என்ன பெத்த சாமி.. இப்படியும் நடக்குதே நம்ம வூட்டுக்குள்ள!.. " - புஷ்பம் பரிதவித்தாள்..

" அது கிடக்கு விடு.. ஏம்மா.. சுசீலா நீ வேலைக்கு கெளம்பலையா.. மணி ஒம்பதரை ஆச்சே.. "

" இல்லீங்க.. அத்தை... இன்னிக்கு லீவு சொல்லி  சேதி அனுப்பிட்டேன்.. இன்னிக்கு வீட்டோடத்தான்.. "

" அடி.. என் ராசாத்தி!..  " என்றபடி சுசீலாவின் கன்னங்களை வருடி திருஷ்டி கழித்தாள் சொர்ணம்..

பொன்னி அரிசி வடித்து சின்ன வெங்காயம் கேரட்டுடன் முருங்கைக்காய் சாம்பார்.. உருளைக்கிழங்கு வறுவல்.. தாளித்த மோர்.. பொரித்த வற்றல், சுள்ளென்று ஊறுகாய்.. 

பெரிய அத்தைக்கு அவங்க அம்மாவின் ஞாபகம் வந்ததாம்..

அன்று மாலை தகவல் அறிந்து  சீக்கிரமே வீட்டுக்கு வந்து விட்டான் கணேசன்..

ஒரு வருசமா முடியாமல் கிடந்த அம்மா இன்றைக்கு பெரியம்மாவுடன் கோயிலுக்கு போய் இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.. 

" இன்னும் கோயில்ல இருந்து திரும்பலை..  எல்லா சேதியையும் பேசிட்டுத் தான் வருவாங்க போல!.. '

" பெரிய அத்தையப் பார்த்ததும் தான் அத்தைக்கு புது ரத்தம் ஊறிடுச்சே.." 

"  என்ன இருந்தாலும் பந்த பாசம் விட்டுப் போகுமா.. "

" பெரிய அத்தை இனிமே சின்னவர் வீட்டுக்குப் போக மாட்டாங்களாம்.. நம்மோடயே இருந்துடப் போறாங்களாம்..  அவங்களுக்கு அண்ணாச்சி குடோன் ல சோம்பு சீரகம் பாக்கெட் போடற வேல  ஏற்பாடு செஞ்சித் தரணுமாம்.. காலம் பூரா உழச்ச உடம்பு.. சும்மா இருக்க ஏலாது ன்றாங்க!.."

" அதுக்கென்ன.. அவங்களும் நம்மோட இருக்கட்டுமே.. "

" இன்னிக்கு பெரிய அத்தை வந்ததோட இன்னோரு நல்ல சேதியும் கெடைச்சிருக்கு.. "

" என்ன அது!.. "

மெலிதாகப்  புன்னகைத்த சுசீலா - கணேசனின் வலது கையைப் பிடித்து  தன் வயிற்றின் மீது வைத்துக்  கொண்டாள்..

***

46 கருத்துகள்:

  1. சின்னதிலும் சின்னதாய் கதை இருந்தாலும் குறுகத் தரித்த குறள் போல நிறைவாக இருந்தது.

    செவ்வாய்க் கிழமை தொடர்புகள் விட்டுப் போய் விடாமல் தாங்களாவது முடியதறதோ முடியலையோ தொடர்ந்து இந்தப் பகுதியை நிறைவு செய்வது நிறைவாய் இருக்கிறது. நன்றி, தம்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி அண்ணா..

      நீக்கு
    2. +1 . என்னால் டக் டக்கென்று எழுதி அனுப்ப இயலவில்லை. திங்க பதிவுகளேனும் படங்கள் இருக்கும். நாலு வார்த்தைகளைக் கோர்த்து எழுதி (அதுவே சில சமயம் நேரம் கிடைப்பது கஷ்டமாக இருக்கு) எப்படியேனும் ஒப்பேத்திவிடலாம் ஆனால் கதை என்பது அப்படி அல்ல. மனம் அதற்குள் நுழைந்தால்தான் முடியும்! சமீபகாலமாக முடிவதில்லை.

      கீதா

      நீக்கு
    3. உண்மை தான்..

      மகிழ்ச்சி..
      நன்றி சகோ..

      நீக்கு
  2. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு அன்பின் நன்றி..

    பதிலளிநீக்கு
  5. கதையோடு ஒட்டியிருந்தாலும் இணைக்கப் பட்டிருக்கும் படம் நெஞ்சை அழுத்துகின்றது..

    அனைவரையும் ஈசன்
    கஷ்டத்தில் இருந்து காத்தருள வேண்டும்..

    பதிலளிநீக்கு
  6. கதைத் தலைப்பினைக் கோர்த்த நேர்த்தி பற்றி யாராவது விரிவாகச் சொல்லி மகிழுங்களேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்றவரை கை காட்டாமல் யார் உணர்கிறார்களோ அவர்கள்தான் சொல்ல வேண்டும்!!

      நீக்கு
    2. @ ஸ்ரீராம்..

      /// மற்றவரை கை காட்டாமல் யார் உணர்கிறார்களோ அவர்கள்தான் சொல்ல வேண்டும்!..///

      சொர்ணம் புஷ்பம்..
      தங்க மலர்..

      உண்மையில் சொர்ணபுஷ்பம் யாரென்றால் புஷ்பத்தின் மருமகள் சுசீலா தான்!..

      நீக்கு
  7. விட்டுப் போகாத பாசம், எளிய மனிதர்களின் குடும்பச் சூழல், மாறிவரும் காலத்தினால் பெற்றவர்களுக்கு ஏற்படும் தனிமை, நீர் அடித்து நீர் விலகாத தன்மை, இருப்பதைப் பகிர நினைக்கும் குணம், இந்தக் கஷ்டங்களினூடே எட்டிப்பார்க்கும் சந்தோஷ தருணங்கள்... சிறுகதையில் சிறப்பாக வந்திருக்கிறது. பாராட்டுகள் துரை செல்வராஜு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சனிக்கிழமை
      திவ்ய தேச நினைவுகளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை!..

      நீக்கு
    2. சனிக்கிழமை திவ்ய தேச - நினைவுகளில் இருந்து நான் இன்னும் மீளவில்லை..

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒற்றுமையே பலம் -
      என்கிற பொன் மொழிகளை எல்லாம் மக்கள் மனதில் இருந்தும் கல்வி முறையில் இருந்தும்
      அகற்றி விட்டார்கள்..

      அப்புறமாக அடிதடியில் இறங்கி மண்டையை உடைத்துக் கொண்ட பின் சர்வதேச நியாயம் பேச வேண்டியது..

      நீக்கு
  8. தங்கம், பூ என்றாலும் பேர் வைத்திருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக்க் கடைசி காலங்களில் சேரும்போது, சொர்ணபுஷ்பமாக மிளிர்வதைக் கதை தலைப்பு உணர்த்துகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

      நெல்லை அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. கதை மிக அருமை.
    கதை நிறைவு பகுதியை படித்தவுடன் கண்களில் நீர் துளிர்த்து விட்டது.

    //சொர்ணமும் புஷ்பமும் ஒரு தாய் மக்கள்.. மூன்று வருடம் வித்தியாசம்.. ஒருவருக்கொருவர் பார்த்துப் பேசி பல வருடங்கள் ஆகி விட்டன.. அவரவருக்கும் பிரச்னைகள்.. யாரைக் குறை சொல்வது?.. //

    ஆமாம், யாரையும் குறை சொல்லமுடியாது.

    இறைவனுக்கு சொர்ணபுஷ்பம் சாற்றியது போல இருக்கிறது.
    அருமையான குடும்பம், அன்பால் இணைந்த உள்ளங்கள்.
    நல்ல கதைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பால் இணைந்த உள்ளங்கள்.
      நல்ல கதைக்கு வாழ்த்துகள்...

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  11. நல்ல உள்ளங்கொண்ட மனிதர்களின் கதை படிக்க மனதுக்கு இதம். அவர்களின் மனம்போல வாழ்க்கையும் இனிமேல் மகிழ்வாக அமையட்டும்.

    நல்லதோர் கதை வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  12. கதையின் இறுதியில் மகிழ்ச்சி ‌

    பதிலளிநீக்கு
  13. கதை மிக நன்று துரை அண்ணா.

    இப்படியும் பார்த்துக் கொள்ளும் உறவுகள் இப்பவும் இருக்கிறார்கள்.

    அடுத்த தலைமுறையினரில் பார்த்துக் கொள்ளும் விருப்பம் இல்லை என்பதை விட இப்போதைய வாழ்க்கைச் சூழலும் அப்படி இருக்கிறதுதான். வயிற்றுப் பிழைப்பு பிரிக்கிறதுதான்.

    சொர்ணபுஷ்பம் என்ற தலைப்பைப் பார்த்ததும், கோயில் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்தேன்! சொர்ணாகர்ஷண பைரவ்ர், பைரவருக்கு சொர்ண புஷ்பத்தால் - காசால் பூசை என்று பைரவர் வழிபாடு தங்கைக்காகச்சென்ற போது அறிந்த்தால்...அப்படியான கதையோ என்று நினைத்தேன். கொன்றை மலருக்கும் இப்பெயர் உண்டே!

    ஆனால் கதையை வாசித்ததும், தெரிந்தது விலைமதிப்பில்லாத என்ற பொருள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஆகா.. ஆகா..
    வித்தியாசமான கோணம்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
  15. சொர்ணமும் புஷ்பமும் சேர்ந்து சொர்ண புஷ்பமாக மிளிர்ந்து வீட்டையும் மகன், மருமகளையும் சிறப்பாக வாழ வைக்க மனமார்ந்த வாழ்த்துகள். கதையின் தலைப்பு அருமை. அதிலிருந்தே தெரிந்தது இந்தக் கதையும் அத்தகைய சொர்ண புஷ்பமாகவே இருக்கும் என்பது. ஏதோ விசேஷங்களில் ஒரு ரூபாய்க் காசு வைக்கும் இஅடத்தில் சொர்ண புஷ்பம் என்பார்கள். அதைப் போலவே இங்கேயும் விலைமதிப்பில்லா உறவு. அதை ஏற்கும் மனதுள்ள தம்பதியர்.

    பதிலளிநீக்கு
  16. விசேஷங்களில் வைக்கும் ஒரு ரூபாய்க் காசு தான் சொர்ண புஷ்பம்..

    த்ங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..

    நன்றி அக்கா..

    பதிலளிநீக்கு
  17. என் கருத்து ஸ்ரீராம் வந்து தான் விடுவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. கதையின் நிறைவு மகிழ்ச்சி நெகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. த்ங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஐயா..

      நீக்கு
  19. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே.

    கதை அருமையாக உள்ளது. உடன்பிறந்த பாசங்கள், எந்த வயதிலும் குறைந்து போகாதென்பதும், கூடவே நல்ல மனதுடையவர்களை ஒன்று சேர்ந்து வாழும்படி இணைத்து வைக்கும் என்பதையும் சிறப்பான இக்கதை உணர்த்துகிறது.

    கதையின் தலைப்பு நன்றாக உள்ளது.

    தங்கமாக பிரகாசிக்கும் அக்கா, தங்கை உறவின் பாசத்துடன் தங்கையின் மகன் கணேஷ், மற்றும் மருமகள் சுசீலாவின் நறுமணம் வீசும் நல்ல மனதும் இணைந்து நல்ல மணம் வீசும் தேவலோக பாரிஜாத மலராக கதை மணக்கிறது.

    கதை முடிவும் மனதை தொடுகிறது. அருமையான கதையைத் தந்த தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    எப்போதும் போல் இன்று காலையில் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. தங்கையின் மகன் கணேஷ், மற்றும் மருமகள் சுசீலாவின் நறுமணம் வீசும் நல்ல மனதும் இணைந்து நல்ல மணம் வீசும் தேவலோக பாரிஜாத மலராக கதை மணக்கிறது.

    த்ங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
    நன்றி ..

    பதிலளிநீக்கு
  21. உங்கள் கதைகளில் வாழும் மனிதர்களும், மனித நேயமும் எப்போதுமே படிக்க வெகு சுகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி .. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!