ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 05 : நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோயில்கள் ஐந்து துவாரகைகள் யாத்திரை பகுதி 05

கோவிலுக்குச் செல்வதற்கு முன்பு, துவாரகா பற்றிய கதைகளைச் (வரலாற்றை) சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்த இடம் குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் உள்ளது. இதுதான் குஜராத்தின் முதல் தலைநகரம் என்று கருதப்பட்டது. மஹாபாரதத்தில் துவாரகா பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. கம்சனை மதுராவில் வதம் செய்த பிறகு கிருஷ்ணர் இந்த இட த்தில் இருந்துகொண்டு அரசாண்டார், அதற்காக கடலிலிருந்து சுமார் 100 சதுர கிமீ பரப்பளவை மீட்டு, துவாரகா நகரை நிர்மாணித்தார் என்கின்றன புராணங்கள். தொல்லியல் துறையும், துவாரகாதீஷ் கோவில் பொது ஆண்டுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பேயே இருந்ததை உறுதி செய்திருக்கிறது.  துவாரகா பற்றிய செப்பேடுகள் பொது ஆண்டுக்கு ஐந்து நூற்றாண்டுக்கு முந்தயவை.  இந்தக் கோவில் முஸ்லீம் படையெடுப்புகளால் (12ம் நூற்றாண்டில் இருந்து 15ம் நூற்றாண்டு வரை) அழிக்கப்பட்டது. கோவிலில் இருந்த தெய்வச் சிலை, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது. துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் சிலை, ருக்மணியால் வழிபடப்பட்டது என்கிறார்கள். 14ம் நூற்றாண்டில் வல்லப ஆச்சார்யர் என்பவர் முஸ்லீம் படையிடமிருந்து இந்தச் சிலை சாவித்திரி வாவி என்ற சிறிய குளத்தில் வைத்துப் பாதுகாத்தார். பிறகு இந்தச் சிலையை bபேட் துவாரகா என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.  18ம் நூற்றாண்டில் இந்தக் கோவில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டது.

இந்தக் கோவில், சுண்ணாம்புக் கற்களால் அமைக்கப்பட்டது (இந்தப் பகுதியில் மற்ற கோவில்களும் அப்படித்தான்). ஐந்து மாடங்கள் கொண்ட கோவிலாக இது அமைக்கப்பட்டிருக்கிறது.  மூலவர் துவாரகாதீஷ் எனப்படும் விஷ்ணு. அந்தக் கோவிலின் எதிரே தேவகிக்கு சிறிய கோவில் உள்ளது. வளாகத்தில் பலராமர், ப்ரத்யும்னர் மற்றும் அனிருத்தருக்கும் கோவில்கள் உள்ளன. இதைத் தவிர ராதா, சத்யபாமா மற்றும் லக்ஷ்மிக்கும் சிறிய கோவில்கள் உள்ளன.  மொத்த கோவில் வளாகமே 65 அடிக்கு 65 அடி இருக்கலாம். கோவில் சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. தினமும் கோவில் கோபுரத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடக்கிறது. கோவிலுக்கு கடுமையான பாதுகாப்பு இருப்பதால், உள்ளே எந்தப் படமும் எடுக்க இயலாது.

கோவிலின் உட்பகுதி இணையம்.

நுணுக்கமான சிற்பங்கள். இவை உப்புக் காற்றால் சிதைவுறுகின்றன

துவாரகாவில் இருந்து கிருஷ்ணர் எப்படி அரசாண்டார் என்பதைக் குறிக்கும் அக்பர் கால ஓவியம். 

கோவிலில் நுழைந்து கிருஷ்ணர் சந்நிதிக்கு வரிசையில் சென்றோம். விரைவில் தரிசனம் கிடைத்துவிடுகிறது. தரிசனம் முடிந்ததும் வெளியேறும் வழியில் வந்து திரும்பவும் வரிசையில் நின்றுகொள்ள முடியும். 2022ல் சென்றிருந்தபோது ஸ்ரீகிருஷ்ணர் சந்நிதிக்கு முன்பாக பல்வேறு வகைப்பட்ட இனிப்புப் பிரசாதங்களை வைத்திருந்தனர். ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்த பிறகு, கண்ணாடியை அவர் முன் பவ்யமாகக் காண்பித்து, அலங்காரம் சரியாக உள்ளதா என்று கேட்டுக்கொள்கின்றனர். அவர்களுடைய பக்தி என்னை வியக்க வைத்தது.  (இதைப்போன்று இன்னொரு காட்சியை நான் நாத் துவாரகா கோவிலுக்குள் ஸ்ரீகிருஷ்ணர் சந்நிதி முன்பு பார்த்தேன். அதைப் பிறகு எழுதுகிறேன்)

ஆழ்வார் பதின்மரில், தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன்னைப்பற்றி எழுதும்போது,

போதெல்லாம் போது கொண்டு உன் பொன் அடி புனைய மாட்டேன்

தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்

காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்

பாரில் நின் பாத மூலம் பற்று இலேன்

மனத்திலோர் தூய்மை இல்லை, வாயில் ஓர் இன்சொல் இல்லை

சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா

தவத்துளார் தம்மில் அல்லேன், தனம் படைத்தாரில் அல்லேன்

உவத்த நீர் போல என் தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன்

துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன்

என்றெல்லாம் சொல்லிக்கொள்கிறார். அவருக்கே அப்படி என்றால் நானெல்லாம் எம்மாத்திரம்? அதனால் உண்மையான பக்தியுணர்வு கொண்டவர்களைப் பார்க்கும்போது என் மனது சந்தோஷமடைகிறது.

கோவிலில் எல்லாச் சந்நிதிகளிலும் சென்று தரிசனம் செய்தோம். பிறகு வெளியே வந்து அலைபேசியை வாங்கிக்கொண்டு வெளிப்புறத்தில் சில பல படங்கள் எடுத்துக்கொண்டேன். மீண்டும் பஞ்சத்வாரகா யாத்திரை வந்தால்தான் இந்த இடங்களையெல்லாம் தரிசிக்க முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.


கோமதி துவாரகை, துவாரகேஷ் மூலவர். 


பலரும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். பிறகு எல்லோரும் திரும்பவும் கோமதி நதிக்கரை வழியாக எங்கள் பேருந்து இருந்த இட த்தை அடைந்தோம். அப்போது கோமதி நதியில் நீர் இல்லாததாலும் கடலும் உள்வாங்கியிருந்த தாலும், நதிப்பகுதியில் ஒட்டகச் சவாரி போன்றவைகள் நடந்துகொண்டிருந்தன.

முகத்துவாரத்தில் நீர் உள்வாங்கிவிட்ட தால், கடல்/நதித் தரையில் ஒட்டகச் சவாரி. 


12 ½ மணிக்குத் தங்கும் இடத்திற்குச் சென்று ஈரமான துணிகளைக் காயப்போட்டோம். 1 மணிக்கு நல்ல மதிய உணவு  (அவரை கறி, கத்தரி கூட்டு, பூசனி தான் போட்ட மோர்க்குழம்பு, முப்பருப்பு வடை, சீரக சாத்துமது, பால் பாயசம்).  3 ½ க்கு காபி சாப்பிட்டபிறகு 4 மணிக்கு ருக்மணி கோவிலுக்குப் போவோம் என்றார்கள். 

சாப்பிட்ட பிறகு காய்ந்த துணிகளை மடித்து பெட்டியில் வைத்துக்கொண்டோம். நல்ல வெய்யில். 3 ¾ க்கு அசோகா அல்வாவும் நிலக்கடலை சுண்டலும் தந்தார்கள். 4 மணிக்கு பேருந்தில் ஏறி ருக்மணி கோவிலுக்குச் சென்றோம்

இந்தக் கோவில் துவாரகையிலிருந்து சுமார் 2 கிமீ தூரத்தில் இருக்கிறதுதுர்வாசரின் சாபத்தால் ருக்மணி, கிருஷ்ணர் இருக்கும் இட த்திலிருந்து விலகியே இருக்கவேண்டும் என்ற நிலை உருவானதால், ருக்மணி இங்கு வசித்தார் என்றும், கிருஷ்ணர் துவாரகையிலிருந்து அரசாண்டார் என்றும் சொல்லப்படுகிறதுஇந்த ருக்மணி கோவில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். இருந்தாலும் இப்போதைய கோவில் அமைப்பு 12ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். மிக அருமையான சிற்பங்கள் கொண்ட கோவில் இது. இருந்தாலும் கடற்காற்றால் சிற்பங்கள் சிதைவுற்றிருக்கின்றன.








இன்னும் பார்க்கவேண்டிய சிற்பங்கள் இந்தக் கோவிலின் வெளிப்புறத்தில் இருக்கின்றன. அடுத்த வாரம் தொடரலாமா?

(தொடரும்) 

 

46 கருத்துகள்:

  1. அழகான கோயில், அற்பதமான துவாரகேஷ் மூலவர் தரிசனம், ருக்மணி கோயில் தரிசனம், கோயில் சுற்றுபுற சுவரின் சிற்ப அழகுகள் எல்லாமே கண் கொள்ளா காட்சிகள். இவற்றையெல்லாம் சேமிப்பில் வைத்திருந்து இப்பொழுது ஒவ்வொன்றாக விளக்கங்கள் -- அடிக் குறிப்புகள் என்று வழங்கும் நேர்த்தியும் ஈடுபாடும் வியக்க வைக்கின்றன. நன்றி, நெல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜீவி சார். முன்பே எழுதியிருக்கிறேன். அனேகமாக முக்கிய நிகழ்வுகளையும், சென்ற இடங்களில் காண்பவைகளின் படங்களையும் குறிப்புடன் சேமித்துவைத்துக்கொள்வேன்.

      நீக்கு
  2. நெல்லை, கோயிலின் கலை நுண்ணிய வேலைப்பாடுகள் கவனத்தை ரொம்பவே ஈர்க்கின்றன. அட்டகாசமா இருக்கு, முழுவதும் பார்த்துவிட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். துளசிதரன் சார் பதிவுக்குப் பிறகு துபாய் வாழ்க்கை, பிறகு முப்பது முறையாவது துபாய்க்குப் பயணித்த விவரங்கள் பற்றிப் படங்களுடன் எழுத ஆவல்.

      நீக்கு
  3. சிற்பங்கள் உப்புக் காற்றில் அரிப்பதைத் தவிர்க்க முடியாதுதான். படங்களில் கொஞ்சம் தெரிகிறது ஆனால் அதைப் பாதுகாக்க முடியும்.

    கண்ணாடி காட்டிக் கேட்பது - ரசித்தேன். கிட்டத்தட்ட கண்ணாடி சேவை போலன்னு சொல்லலாம்.

    பொதுவாகவே வட இந்தியாவில் பெரும்பான்மை கோயில்களில் அங்கு அருகில் சென்று இறை உருவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வழிபடலாம் என்பதால் பலரும் இறைவனோடு பேசுவதையும் பார்த்திருக்கிறேன்.

    அவங்க தென்னிந்தியாவில் ஏன் உள்ளே விட மாட்டேன்றாங்கன்னு கேட்டிருக்காங்க!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துவாரகை கோவிலில் இறைவனைத் தொட முடியாது. தேர இருந்து ரசிக்கலாம். தரிசிக்கலாம்.

      நீக்கு
  4. /உண்மையான பக்தியுணர்வு கொண்டவர்களைப் பார்க்கும்போது//

    எப்படி அது தெரியும் நெல்லை? என் சிற்றறிவிற்கு எட்டியவரை பக்தி உணர்வு, ஆன்மீகம் (இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு) இவை அமைதியானவை. இறைவனோடு ஆத்மார்த்தமாகப் பேசுவது. இணைந்திருப்பது. வெளியில் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது. பக்தியும் அதற்கு அடுத்த லெவலான ஆன்மீகமும் வந்துவிட்டால் நாம் அமைதி தானாக வந்துவிடும். சிலர் வெளியில் சொல்வதுண்டு. சிலர் வெளியில் காட்ட மாட்டாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்... நமக்குப் பார்க்கும்போதே இது இயல்பான பக்தியா இல்லை விளம்பர பக்தியா என ஓரளவு புரிந்துவிடும். பொதுவா மூன்றாம் பாலினத்தவரிடம் அசூயை படுவோம். அப்படி இல்லாமல் அவங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இறை பக்தி உணர்வோடு இருப்பதை ஶ்ரீநாத் துவாரகையில் பார்த்தேன்.

      நீக்கு
  5. பதிவு சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். விவரணம் துல்லியம்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. மதிய சாப்பாடு ஆஹா!!! சூப்பரா இருக்கிறதே!

    அட! ருகமணிக்கென்று தனி கோயில் என்று வாசித்த வேளையில் அதற்கான கதை தெரிந்தது.

    தங்கும் வளாகம் அழகா இருக்கிறது. உட்கார்வதற்கு சிமென்ட் இருக்கைகள் பூங்காவில் இருப்பது போல் இருப்பது எல்லாம் நன்றாக இருக்கிறது.

    சிற்பங்கள் செம. அரிப்பு தெரிகிறது. நுணுக்கமான வேலைப்பாடுகள் இப்படி பாதிப்படைவது வருத்தமாக இருக்கிறது.

    நுணுக்கமான சிற்பங்கள்னு சொல்லியிருக்கும் படத்தின் கீழே இருக்கும் படத்தில் இடப்புறம் ஒருவர் விற்பனை ஏதோ செய்வது தெரியும் படத்தில் நடுவில் குண்டாக ஏதோ இருக்கிறதே, மரம் ஏதாவது வளர்கிறதா இல்லை கூடா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது மரமில்லை கீதா ரங்கன். கல்லின் சிதைந்த வடிவம். பொதுவா தமிழகத்தில்தான் பல ராஜகோபுரங்கள் உண்டு. கிளி போன்ற பறவைகள் அதிகம் வருவதால் செடி, மரங்கள் போன்றவை நிறைய வளர்ந்து சிதைக்கிறது.

      இதைப் படிக்கும்போதே இதுபற்றிப் படங்களுடன் எழுத்த் தோன்றுகிறது.

      நீக்கு
  7. முதலையின் வாய் போன்ற அமைப்பு பார்த்ததுமே தெரிந்து விடுகிறது நீர் வேளியேறும் வாய் என்று..மடிப்பு மடிப்பாகக் கற்கள் அடுக்கியிருக்காப்ல இருப்பது எல்லாம் அழகான வேலைப்பாடு. இத்தனை இண்டு இடுக்கு இருப்பதும் பராமரிப்பதற்கும் ஆட்கள் வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவா பராமரிப்பது குறைவு. கஷ்டமும் கூட. அதனால்தான் நவீன சலவைக் கற்கள் கோவிலின் கர்ப்பக்ரஹத்துக்குள் வந்துவிடுகிறது.

      நீக்கு
  8. தொல்வினை தீர்ப்பாய்
    துவாரகை நாதா
    தோன்றாத் துணையே
    துவாரகை நாதா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை அருமை.... பழவினைகளைப் பற்றறுக்கச் சொல்லும்போதே என் மனதில் தற்போது செய்யும் வினைகள் நிழலாடும்.

      நீக்கு
  9. வழக்கம் போல கலைப் பொக்கிஷம்..

    இனிய தரிசனம்..

    பதிலளிநீக்கு
  10. துவாரகாதீஷ், ருக்மணி கோயில் போன்றவை பார்க்கும்போது, இங்கே சென்று வந்த எனது பயண அனுபவங்கள் நினைவில். துவாரகாதீஷ் கோயில் மட்டுமல்ல, ஐந்து துவாரகா கோயில்களிலும் இப்படி கண்ணாடி காண்பிக்கும் நிகழ்வு உண்டு. ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து செய்வார்கள். எத்தனை வித அலங்காரங்கள், எத்தனை விதமான நிவேதனங்கள் என பிரமிக்க வைக்கும் விஷயங்கள். சில நாட்களாவது தங்கி எல்லா வித அலங்காரங்களும் விசேஷங்களையும் பார்க்கத் தோன்றும்.

    தொடரட்டும் பயணக் குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட். அவர்களின் ஈடுபாடு என்னை வியக்க வைக்கும். மெகானிக்கலாகச் செய்வதில்லை. அதுபோல பிரசாத வகைகள் (ராஜ் Bபோக் என்று பல்வேறு பிரசாதங்களை இறைவன் முன்பு அடுக்கியிருப்பார்கள்).

      எத்தனை நாட்கள் தங்கினாலும் திருப்தி வருமா?

      நீக்கு
  11. @ நெல்லை

    பழவினை எல்லாம் பற்றறும் போது
    நிகழ்வினை செய்ய நெஞ்சம் ஏது!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பற்றும் காலம் வரை, நிகழ்வினை பற்றி நமக்குச் சிந்தை ஏது? இல்லையா?

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. கோவில் வரலாறு , மற்றும் இணையபடம், நீங்கள் எடுத்த படங்கள் எல்லாம் அருமை.

    //நுணுக்கமான சிற்பங்கள். இவை உப்புக் காற்றால் சிதைவுறுகின்றன//

    சிதைவது வருத்தமான விஷயம்.

    //ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்த பிறகு, கண்ணாடியை அவர் முன் பவ்யமாகக் காண்பித்து, அலங்காரம் சரியாக உள்ளதா என்று கேட்டுக்கொள்கின்றனர்.//

    சோடஷ உபசாரம் என்று சொல்வார்கள் 16 வகையான உபசாரங்கள், அதில் கண்ணாடி, குடை, கவுரி , விசிறி, குடை எல்லாம் உண்டு. பித்தளையில் செய்த கண்ணாடி எல்லா கோவில்களிலும் இங்கும் உண்டு . அங்கு உணவை வாயில் ஊட்டி விடுவார்கள், வாயை துடைத்து விடுவார்கள். நம் ஊர்களில் காட்டுதல் மட்டுமே.
    தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கர் கோயிலில் இப்படி செய்வார்கள் .




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதி அரசு மேடம். ஷோடஸ உபசாரத்துக்கென்றே விசிறி, விளக்கு, ஆலவட்டம் போன்ற எல்லாப் பொருட்களையும் வைத்திருப்பார்கள். நம் ஊரிலும் பல கோவில்களில் இதனைக் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
  14. ருக்மணி கோவில் அழகாய் இருக்கிறது, கலைநயத்தோடு கட்டப்பட்டு இருக்கிறது. சிற்பங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது. உங்கள் பதிவு மூலம் தரிசனம் செய்து கொண்டேன். நன்றி, தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் நெல்லைத்தமிழர் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள். ஞாயிறு பதிவு எப்போதும் போல் மிக அருமையாக உள்ளது. கோவில் சிற்பங்களின் படங்களும், அதன் விபரங்களும் அருமை. துவாரகை மூலவர் அழகான கிருஷ்ணரை தரிசித்து வணங்கிக் கொண்டேன்.ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகா கோவில் வரலாற்றை தெரிந்து கொண்டேன். அக்பர் காலத்து ஒவியமும் நன்றாக உள்ளது.

    தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் பாடல் நன்றாக உள்ளது. அந்த வரிகளின் தாக்கம் மனதை அழுத்துகிறது. இறைவனிடம் முழுதாக பரிபூரண பக்தி கொள்ள கொடுப்பினை வேண்டும். அது எந்தப்பிறவியில் எனக்கு வாய்க்க வேண்டுமென்று இருக்கிறதோ என்றுதான் நானும் நினைத்துக் கொள்வேன்.

    இன்னமும் அனைத்துப் படங்கள் விபரங்கள் என பார்த்து விட்டு வருகிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ஞாயிறு, துவாரகை கிருஷ்ணரோடு மலர்ந்துள்ளது

      நீக்கு
  16. @ நெல்லை அவர்களுக்கு..

    பற்றும் காலம் வரை, நிகழ் வினை பற்றிய
    சிந்தை நமக்கு இருக்கத்தான் செய்யும்..

    பழவினை எல்லாம் பற்றறும் போது சிந்தையானது
    ஓட்டின் உள்ளே புளியம் பழம் போல ஆகி விடும்..

    இது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய எண்ணம் பிறவிச் சுழற்சி நீங்கும் கடைசிப் பிறவியில்தான் ஒடுங்குதல் நிகழும்.

      நீக்கு
  17. துவாரகேஷ் மற்றும் ருக்மணி கோயில்களைப் பற்றி மிக விரிவாக, புகைப்படங்களுடன் குறிப்பாக வரலாற்றுடன் சொல்லியது அருமை. அங்கு இப்போதும் நடத்தப்படுபவை ஆராதிக்கும் முறை அங்கு வரும் பக்தர்களின் ஈடுபாடு இதைப் பற்றி எல்லாம் அறிய முடிந்தது. ஒவ்வொன்றின் படங்களும் அழகாக விரிவாக எடுத்திருக்கிறீர்கள். படங்கள் எல்லாம் மிகவும் அருமையாக இருக்கின்றன. நேரில் பார்த்தது போன்ற உணர்வு.

    இது போன்று துபாய் பற்றிய அரிய தகவல்களை நிகழ்வுகளை உங்கள் அனுபவங்களைத் தாங்கிய உங்கள் பதிவுகளும் வந்தால் நல்லது. ஏராளமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலே நீங்கள் கீதாவுக்குக் கொடுத்திருந்த பதிலைப் பார்த்து இங்கு சொல்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசிதரன் சார்.... எனக்கு 2018ம் ஆண்டு கசப்பான நினைவுகளைக் கொடுத்தது (பஹ்ரைன்). அதனால் அவற்றைப்பற்றியெல்லாம் சிந்தை செய்யாமலேயே இருந்தேன். உங்கள் பதிவு, நினைவுகளை படங்கள் வாயிலாக எழுத்த் தூண்டுகிறது.

      இறைவன், எப்படி வெளிநாடு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தான், முயற்சி எடுக்காமலேயே ஒவ்வொன்றாக நிகழ்ந்தது, ஏமாற்றக்கள், புது சபூகத்தில் பொருத்திக்கொள்ளக் கஷ்டப்பட்டது, சந்தோஷத் தருணங்கள், என் இயல்பு/குணம் எனப் பலவற்றையும் எழுத ஆசைதான். எல்லாமே எழுதப்பட்ட விதியின்படிதான் நிகழ்ந்தது, என்னுடைய திறமையோ இல்லை படிப்போ காரணமல்ல என்பதில் எனக்குத் தீராத நம்பிக்கை.

      நீக்கு
  18. அலங்காரங்கள் மிக அழகாக இருக்கு. அவங்க அங்கு ரொம்ப பார்த்து பார்த்து செய்வதை அதாவது இறைவன் நம்மில் ஒருவர் என்பது போன்று செய்வதை மிகச் சிறிய பிரபலமாக இல்லாத (அது சரி இறைவனுக்கு எதுக்கு விளம்பரம் பிரபலம் எனும் சொல்!!! இல்லையா!!) கோயிலிலும் செய்யறதைப் பார்த்திருக்கிறேன். காளி மாதாவுக்கு.

    இங்கு நம் வீட்டருகில் இருக்கும் ஆஞ்சு கோயிலில் சேவை செய்பவர், ஆஞ்சுவுக்கும் பிள்ளையாருக்கும் அலங்காரம் செய்வதைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு நாளும் சிரத்தையாகச் செய்கிறார். சின்ன பசங்கதான். ஆனா ரொம்ப அழகா செய்யறாங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாக் கோயில்களிலும் இறைவன் இருக்கிறார். இறைவனுக்குச் சேவை செய்கிறோம் என்ற உணர்வுடன் அதீத அன்புடன் சேவை செய்பவர்களும் பலர் உண்டு. Boss அறையில் இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் கத்திப் பேசிக்கொண்டு, ஊர்க்கதை பேசும், நல்ல வார்த்தைகளைக் கோர்க்காத சேவை செய்பவர்களும் உண்டு. பலன் நம் மனதைப் பொறுத்துத்தான்.

      நீக்கு
  19. படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.

    தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  20. அற்புதமானசிற்பங்கள். மிகவும் அழகு.
    நல்ல தரிசனம். படிக்கவே இனிமை.

    யாத்திரையில் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    விளக்கமான கோவில் யாத்திரை பகிர்வுகள். கிருஷ்ணருக்கு செய்த அலங்காரங்கள் அழகாக இருக்கிறது. மதிய உணவு அட்டவணையும் நன்றாக உள்ளது. ருக்மணி கோவில் நன்றாக உள்ளது. கோவில் சுற்றுச் சுவரில் உள்ள அழகான கலை நுணுக்க வடிவத்துடன் கூடிய சிற்பங்கள் மனதை கவர்கின்றன. .இனி வரும் கோவில் யாத்திரையில் நானும் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலா ஹரிஹரன் மேடம். இன்று பூரி யாத்திரைக்குக் கிளம்புகிறேன். ஒரு வாரத்துக்கும் அதிகமான நாட்கள்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தங்களின் பிரயாண அவசரத்திலும் உடன் பதில் தந்தமைக்குநன்றி சகோதரரே. நல்லபடியாக கோவில் யாத்திரை உலா சென்று வாருங்கள். அடுத்து நாங்களும் உங்கள் பதிவின் வாயிலாக பூரி ஜெகன்னாதரை தரிசிக்க காத்திருக்கிறோம். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!