திங்கள், 26 பிப்ரவரி, 2024

"திங்க"க்கிழமை : மணத்தக்காளி தண்ணீர் சாறு - மனோ சாமிநாதன் ரெஸிப்பி

 

*********************************************

மணத்தக்காளி தண்ணீர் சாறு

மனோ சாமிநாதன்

*********************************************

மணத்தக்காளி இலையை ‘ உணவே மருந்து ‘ என்ற லிஸ்ட்டில் முதல் வரிசையில் சேர்க்கலாம். அந்த அளவிற்கு இது உடலுக்கு நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண்களுக்கு இந்த சாற்றினை அடிக்கடி குடித்து வர, புண்கள் சரியாகும். சமீபத்தில் சிறு நீரகப்பிரச்சினைகளுக்கும் இது நல்ல பலனைக் கொடுக்கும் என்று தெரிந்து கொண்டேன். இந்த இலை சிறிது கசப்புத்தன்மை உடையது என்பதால் இதை சமைக்கும்போது சின்ன வெங்காயம், பூண்டு என்று சேர்த்து சமைப்பார்கள். தஞ்சை வட்டத்தில் இந்த தண்ணீர் சாறு மிகவும் புகழ் பெற்றது. கழனித்தண்ணீரில் சமைப்பதால் இதை ‘ மணத்தக்காளி கழனி சாறு’ என்றும் சொல்வார்கள். இனி இதை சமைக்கும் விதம் பற்றி....

தேவை:

மணத்தக்காளி கீரை- 2 பெரிய கைப்பிடி

தக்காளி-1

சின்ன வெங்காயம்- ஒரு கைப்பிடி

பூண்டிதழ்கள்-8

அரிசி களைந்த நீர் [ கழனித்தண்ணீர் ]- 2 கப்

வெந்தயம்- அரை ஸ்பூன்

சீரகம்- அரை ஸ்பூன்

மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி

தேங்காய்த்துருவல்- 2 மேசைக்கரண்டி

பெருஞ்சீரகம்- கால் ஸ்பூன்

தேவையான உப்பு

செய்முறை:

வாணலியை சூடு பண்ணி நல்லெண்ணெயை ஊற்றவும்.

வெந்தயம் போட்டு சிவந்ததும் சீரகம் சேர்க்கவும்.

சீரகம் பொரிய ஆரம்பித்ததும் சின்ன வெங்காயம்பூண்டு சேர்த்து வதக்கவும்.


பின் தக்காளியை மஞ்சள் தூளுடன் சேர்த்து குழைய வதக்கவும்.

இப்போது மணத்தக்காளி இலைகளை அரியாமல் அப்படியே சேர்த்து வதக்கவும்.


இப்போது கழனித்தண்ணீர்உப்பு ,  2 தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

ஐந்து நிமிடம் கொதித்தால் போதும்.



இப்போது தேங்காய்த்துருவலை சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துச் சேர்க்கவும்.

கழனி சாறு கொதிக்கத் தொடங்கும்போது இறக்கவும்.



43 கருத்துகள்:

  1. உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொள்ளும் நல்ல ரெஸிபி. எங்கள் வீட்டில் கீரைகள் வாங்கி சமைக்கும் வரிசையில் மணத்தக்காளிக்கு எப்பொழுதும் முதலிடம் உண்டு. மணத்தக்காளி வத்தக் குழம்பும் சூப்பராக இருக்கும். அரிசி களைந்த நீரில் தண்ணீர் கலந்து கொதிக்க வைக்க வேண்டும் என்பது மட்டும் புதுத்தகவம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி, சகோதரி.

    பதிலளிநீக்கு
  2. பாட்டி வைத்தியத்தில் உட்படும் ரெசிபி. சூப்பர்மார்க்கட்டுகளில் காய்கறி வாங்குவதால் மணத்தக்காளி கீரை போன்றவை கிடைப்பதில்லை. வயிற்றுப்புண்ணுக்கு நல்லது.
    படங்கள் நன்றாக உள்ளன.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  3. இன்றைக்கு எனது குறிப்பை வெளியிட்டுள்ளதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் அக்கா. நன்றி.

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜீவி! மணத்தக்காளி வற்றல் குழம்பு என்றால் மணத்தக்காளி காய்கள் வற்றலாக கிடைக்கும், அதைத்தானே சொல்கிறீர்கள்? அல்லது மணத்தக்காளி கீரையை வைத்தே வற்றல் குழம்பு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு வகைகளிலும் உண்டு. கீரையில் கிடைக்கும் காய்களை
      தனியே எடுத்து வத்தக் குழம்பில் சேர்த்துக் கொள்வதும் உண்டு. அதிர்ஷ்ட்ட வசமாக நிறைய காய்களுடன் கீரை கிடைப்பதுண்டு.

      அப்பளாம், வற்றல்கள் விற்கும் கடைகளில் பாக்கெட்டுகளில் மணத்தக்காளி வாங்கினால் உப்பு (அதிகம்)கலக்காத ம.வற்றல் வாங்கி ஸ்டாக்கில் வைத்துக் கொண்டு வத்தல் குழம்பு செய்யும் சமயங்களில்
      உபயோகிக்கும் பொழுது நாமே லேசாக உப்பு கலந்து விடுவதுண்டு. கடைகளில் கிடைக்கும் மணத்தக்காளி வற்றல்களில் 'பயங்கர' உப்பு கலந்து கிடைப்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடு.

      சென்னையில் உப்பு கலந்த, கலக்காத இரண்டு வகை மணத்தக்காளி வற்றல் பாக்கெட்டுகளும் கிடைக்கின்றன.

      நீக்கு
  6. உடல் நலம் காப்பதில்
    மணித் தக்காளிக்கு எப்பொழுதுமே முதலிடம்..

    மிக எளிமையான செய்முறை..

    பதிலளிநீக்கு
  7. மணித் தக்காளி என்பது தான் மணத்தக்காளி என்றாகி விட்டது..

    பதிலளிநீக்கு
  8. மணித்தக்காளி பாசிப்பருப்பு கூட்டு தஞ்சை மண்ணின் சிறப்புகளில் ஒன்று..

    ஏன் இதை மற்ற ஊர்ல செய்ய மாட்டாங்களா?..

    இதனோட வளர் இயல்புக்கு இதனோட குணத்துக்கு சொல்லப்பட்ட விஷயம் அது..

    வறட்டு நிலங்களில் இது வளர்வதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீரையை வைத்து 99  சதவிகிதம் இந்த வகை கூட்டுதான் செய்வது!  வாய்ப்புண்ணுக்கு மிக நாளளது.  கூடவே பாசிப்பருப்பும் தேங்காயும் கூட வாய்ப்புண்ணுக்கு மருந்து.

      நீக்கு
  9. மணித்தக்காளி பழத்தின் சுவையே சுவை..

    பதிலளிநீக்கு
  10. மணித்தக்காளி வற்றல் குழம்பு சிறப்பு தான்..

    கடையில் வற்றல் வாங்குவதில் சந்தேகம்...

    பதிலளிநீக்கு
  11. மணத்தக்காளி கீரையில் செய்யப்படும் பாசிப்பருப்பு கூட்டு எனக்கு ரொம்பப் பிடித்தமானது. 10-20 ரூபாய்க்கு பெரிய கீரைக்கட்டாக இங்கு கிடைக்கும். நீங்க சொன்னதுபோல சிறிது கசப்புத் தன்மை உண்டு, ஆனால் அது கீரையோடு வரும் மணத்தக்காளிப் பிஞ்சுகளினால் என்றே நினைக்கிறேன். சின்ன வயதில் இந்தக் கூட்டு சாப்பிட்டபோது கசப்புச் சுவை வந்ததில்லை.

    இதை வைத்து ரசம்... புதிது. இதுவரை சாப்பிட்டதில்லை. ரசத்தை தண்ணிச் சாறு என்று தஞ்சை நண்பன் குறிப்பிடுவான். புதிய ரெசிப்பி நன்று 5வெங் பூண்டு இல்லாமல் செய்து பார்க்கணும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் நெல்லைத்தமிழன்!!

      நீக்கு
    2. // ரசத்தை தண்ணிச் சாறு என்று தஞ்சை நண்பன் குறிப்பிடுவான். //

      மனோ அக்காவும் தஞ்சாவூர்தான்!

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  13. மாயவரத்தில் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் இந்த "தண்ணீர் சாறு" சொல்லி கொடுத்தார்கள். நானும் செய்து இருக்கிறேன். சோம்பு என்ற பெருசீரகம் சேர்க்காமல் சீரகம் சேர்த்து செய்து இருக்கிறேன். படங்களுடன் செய்முறை அருமை.

    இங்கு கீரை மார்கெட் போனால் தான் கிடைக்கும்.
    உங்கள் செய்முறை படங்கள் பார்த்தவுடன் ஒரு நாள் செய்ய எண்ணம் வருகிறது.

    மணதக்காளி கூட்டு பாசிப்பருப்பு போட்டும், துவரம் பருப்பு போட்டும் செய்வேன். மணத்தக்களி வற்றல் போட்டு வற்றல் குழம்பும் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!! அவசியம் இதை ஒரு நாள் செய்து பாருங்கள்!!

      நீக்கு
  14. உடல் நலத்துக்கு ஏற்ற நல்ல குறிப்பு. இலகுவான முறையும் பலருக்கும் உகந்தது.

    எங்கள்நாட்டிலும் கிடைக்கும். நாங்கள் வற்றல் ஆக்காமல் இதன் கீரை ,காய்களை அப்படியே சமையல்களில் சேர்ப்போம். சட்னி ,வறையும் செய்வோம்.

    பதிலளிநீக்கு
  15. மனோ அக்கா செம ரெசிப்பி!!! பெயரே வித்தியாசமாக. பொருட்கள் பார்த்தால் கிட்டத்தட்ட கடையல் செய்வது போன்று இருக்கு பெருஞ்சீரகம், அரிசி களைந்த நீர் சேர்ப்பது தவிர....

    இதில் அரிசி களைந்த நீர் சேர்த்து செய்ததில்லை நான், மனோ அக்கா. நம் வீட்டில் அடிக்கடி மணத்தக்காளிக் கீரை வாங்குவதால் செய்துவிடுகிறேன், இதையும்.

    அரிசி களைந்த நீர் சேர்த்து மண்டி என்று செட்டி நாட்டு செய்முறைகளில் உண்டு இல்லையா? அது செய்ததுண்டு,

    நான் கீரையை அப்படியேதான் சேர்க்கும் வழக்கம். நறுக்குவதில்லை.
    இந்த ரெசிப்பி சூப்பர். குறித்து வைத்துக் கொண்டுவிட்டேன்.

    மணத்தக்காளிக்கீரை இங்கு கிடைக்கறப்ப எல்லாம் செய்வதுண்டு. பொரியல், பாசிப்பருப்பு போட்டுக் கூட்டு, தக்காளி வெங்காயம் பூண்டு எல்லாம் போட்டு கடையல் என்று ...

    ரெசிப்பி அருமையா இருக்கு மனோ அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிசி களைந்த நீர் எல்லாம் சேர்த்து நான் எதுவும் செய்ததில்லை கீதா. எனக்கு புதுசு.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      அரிசி களைந்த நீரில் முதல் தடவை ஒரு சுத்தத்திற்காக கொஞ்சமாக களைந்து கீழே விட்டு விடலாம். (ஏனென்றால் இப்போதுள்ள அரிசிகள் அந்த மாதிரி தரம் கொண்டவை. முன்பு வீட்டிலேயே நெல்லை அரிசியாக்கி, முறம் கொண்டு நன்கு புடைத்து தவிடு, உமி, குருணை, நொய் குருணை என நீக்கி தரமான அரிசியை வைத்திருப்போம். இப்போது ரெடிமேடாக மூட்டை அரிசிதான் வாங்குகிறோம். ) இரண்டாவதாக களைந்த அந்த தண்ணிரில் மேற்கொண்டு வேண்டிய தண்ணீர் சேர்த்து விட்டு பொங்கல் வைத்தால் சுவையாக இருக்கும் (சர்க்கரை பொங்கலும் .) அரிசி களைந்தநீரில் காய்கறிகளை அலம்பி னால் அதன் சக்தியும் சுவையும் கூடும். தண்ணீர் சிக்கனத்திற்கும் சௌகரியமாக இருக்கும்.

      பின் அரிசி கழுவிய நீரை, சிறு குழந்தைகள் அதற்குரிய வயதில் எழுந்து நடக்க நடை தடுமாற்றம் ஏற்பட்டால், அந்த நீரை சுட வைத்து குழந்தையை குளிப்பாட்டும் போது, சுட வைத்த அந்த தண்ணீரை விட்டு கால்களை முழங்காலில் இருந்து பாதம் வரை நீவிவிட்டு குளிப்பாட்டி வந்தால் குழந்தைகள் தடுமாற்றம் இன்றி சாதாரணமாக நடக்க ஆரம்பித்து விடும். எங்கள் பெரிய மகனுக்கு அப்போது இந்த வைத்தியத்தை முறைப்படி செய்தேன்.

      நமக்கோ, நம் குழந்தைகளுக்கோ, எங்காவது கீழே விழுந்து சுளுக்கு ஏற்பட்டு விட்டால் இந்த நீரை சுட வைத்து பொறுக்கும் சூட்டில் அந்த சுளுக்கில் விட்டு வந்தால் சட்டென குணம் தெரியும். இப்படி பல விதங்களில் அரிசி களைந்த தண்ணீர் பயனுள்ளதாக அமைகிறது. இன்று கீரை சமையலிலும் அந்த தண்ணீரின் பயனை தெரிந்து கொண்டேன். பகிர்ந்த மனோ சாமிநாதன் சகோதரிக்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. விவரங்களுக்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
  16. படங்கள் சூப்பரா இருக்கு மனோ அக்கா. கடைசியாக செய்து முடித்து காட்டியிருப்பதும் பார்க்கவே ஆஹா எடுத்துச் சாப்பிடணும் போல இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. ஆரோக்கியமான உணவு வகை சிறப்பு.

    பதிலளிநீக்கு
  18. சுவையான குறிப்பு. மணத்தக்காளி எனக்கும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  19. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெ.சந்திரசேகரன்!!

    பதிலளிநீக்கு
  20. விளக்கத்துக்கு அன்பு நன்றி சகோதரர் ஜீவி! புளிக்குழம்பில் கூட ஒரு கட்டு கீரையை அரிந்து சேர்க்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீரையை போட்டு நானும் கூட ஒருமுறை குழம்பு முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரி

    இன்று தங்களின் சமையல் குறிப்பாக மணத்தக்காளி சாறு நன்றாக உள்ளது. படங்களும் செய்முறையும் அற்புதமாக உள்ளது.

    நாங்கள் மணத்தக்காளி இலையில் பாசிப்பருப்பு கூட்டு செய்வோம். அதன் காய்களில் வற்றல் குழம்பு, இல்லையேல் காய்களை நெய்யில் வறுத்துக் கொண்டு அதை சிறிது வறுத்த மிளகு பொடி சேர்த்த சூடான சாதத்தில் நெய் கலந்து பிசறி சாப்பிடுவோம். வயிற்றுப் பொருமலுக்கும், புண்ணுக்கும் நல்லதென இந்த முறை பிரயோகம்.

    கழனி தண்ணியும் உடல் சூட்டை குறைத்து நன்மை தரும். இந்த முறையில் நீங்கள் செய்த பக்குவத்தையும் ஒருதடவை செய்து பார்க்கிறேன். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான கருத்துரைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி கமலா ஹரிஹரன்!!

    பதிலளிநீக்கு
  23. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கிலலர்ஜி

    பதிலளிநீக்கு
  24. அருமையான விளக்கங்களுடன் அளித்த பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!