வியாழன், 1 பிப்ரவரி, 2024

சில அவதானிப்புகள்

 ஒருவருக்கொருவர் மாறுபட்ட சிந்தனை இருக்கலாம்;இருக்கும்.  உணர்வுகளின் வெளிப்பாடு ஒவ்வொருவருக்கும் எப்படி வெளிப்படும்?   பெரும்பாலும் அதுவும் ஒரே மாதிரி இருக்காதுதான்.  யார் யார் எப்படி எப்படி ரீயாக்ட் செய்வார்கள் என்று நினைத்துப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யம்.

சிலர் ஓவராய் உணர்ச்சி வசப்படுவார்கள். சிலர் உணர்ச்சியையே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது எதிரே பல வருடங்களாய் பார்க்காமலிருந்த ஒரு உறவை, அல்லது நட்பை பார்க்கிறீர்கள்?  உங்கள் உணர்வு எப்படி வெளிப்படும்?   கற்பனை செய்தபோது நான் சட்டென விரைந்து அவர் கையைப் பற்றி தோளில் தட்டி 'ஹேய்' என்று ஆரம்பித்து வியப்பை, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன் என்று எனக்குள் தோன்றியது.  ஆனால் உண்மையில் நான் உணர்ச்சிகளை உள்ளுக்குள் வைத்து பழக்கப்பட்டவன்.  அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத ரகம்.  அப்படிதான் பெயரெடுத்திருக்கிறேன்.   அதனால் சில கெட்ட பெயர்களும் வாங்கி இருக்கிறேன்.

என் பாஸ் என்றால் துள்ளிச் சென்று உரத்த குரலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்.  நீங்களும் உங்களையும், உங்களோடு சேர்ந்தவர்களையும் இப்படி யோசித்துப் பார்க்கலாம்.

இதையே காட்சி மாற்றி 

வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கிறது.  யாரென்று பார்க்க கதவைத் திறந்தால் அதே எதிர்பாராத நபர்.  


இங்கே உணர்ச்சியை அடக்கி 'நினைத்தாலே இனிக்கும்' கமலஹாசன் ஜெயப்ரதாவை அழைப்பது போல 'ஹாய்' என்றால் அவர் மனம் சுருங்கி விடும்.  ஆச்சர்யத்தை வெளிக்காட்டியே ஆகவேண்டும்.  நம்மை அறியாமல் வருவது பாதி.  விரைவாக சூழ்நிலையை உணர்ந்து நம்மை அறிந்து வெளிப்படுத்துவது பாதி!!  மனதுக்குள் மகிழ்ச்சி இருக்கும், ஆனால் நம் இயல்புப்படி அமைதியாய் இருக்க முடியாது என்பதைச் சொல்ல வருகிறேன்.

என் மகன்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தால், விரைந்து அருகே வந்து 'ஹாய்' என்று கையைப் பிடித்துக் கொள்வார்கள்.  'எப்படி இருக்கீங்க' என்பார்கள் அடுத்து!

முன்பு எங்கோ படித்திருக்கிறேன்.  வீட்டுக்கு வருவோரை 'வாங்க வாங்க வாங்க' என்று பலமுறை சொல்லி வரவேற்றால் அது போலியாம்.  அதுவே மகிழ்ந்து போய் வாய் நிறைய ஒரே முறை "வாங்க" என்றால்தான் அது உண்மையான மகிழ்ச்சியின் வெளிப்பாடாம்.  ஏற்றுக் கொள்கிறீர்களா?

என் நண்பன் வேலாயுதம் அமைதியான டைப்தான்.  ஒரு ஆச்சர்யமான விஷயத்தைச் சொன்னாலும் ஏதோ நீண்ட நாட்களுக்கு முன்னரே தனக்குத் தெரிந்த விஷயம் போலதான் கேட்டுக்கொள்வான்.  இன்னொரு நண்பன் ஜெரோமும் கூட அப்படித்தான்.  'இதில் என்ன இருக்கு; என்கிற பாவம்.   அவர்களை போல எனக்கும் கொஞ்சம் அந்த குணம் உண்டு.

அதே போல என் மகன்கள் பேசும்போது அவர்கள் முகத்தையே நான் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.  முகத்தைக் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பினால் பேச்சை நிறுத்தி விடுவார்கள்.  நான் கணினியில், அல்லது வேறு வேலையில் இருந்தாலும் அவர்கள் பேசுவதை என்னால் கிரகித்துக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.  என் அப்பாவுக்கும் கொஞ்சம் இந்த குணம் உண்டு.  நாம் பேசுவதை இவர்கள் சரியாக காது கொடுத்துக் கேட்பதில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு வருவது இயற்கைதான்.

இதில் எனக்கொரு லாபமும் உண்டு.  நான் வேறு வேலையில் இருப்பதால் கவனிக்க மாட்டேன் என்று நினைத்து அவர்கள் பேசும் விஷயங்களையும் கேட்டுக்கொள்ளலாம்.   ஆனால் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்வதோ, ரீயாக்ட் செய்வதோ கிடையாது.  செய்தால் அப்புறம் நம் காதுக்கு வரவேண்டிய விஷயங்கள் வராமலே போய்விடுமே!

அதே போல என் மகன்களிடமோ, என் பாஸிடமோ அவர்கள் இயல்பில் செய்யும் சில விஷயங்களை, பேச்சை, காட்டும் பாவங்களை நான் ரசிப்பேன்.  ஆனால் காட்டிக்கொள்ள மாட்டேன்.  'இது தவறு, அந்த சந்தோஷத்தை அவர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்' என்று நீங்கள் சொல்லலாம்.  எனக்கு கொஞ்சம் சுயநலம்.  நான் அதை வெளிக்காட்டி விட்டால் அதன் பிறகு அவர்கள் அதேபோல செய்யும்போது அவர்களிடம் ஒரு செயற்கைத்தனம் வந்து விடும்.  மேலும் எதிர்பார்க்கவும் தொடங்கி விடுவார்கள்.  சில ரசனைகள் உள்ளுக்குள்ளேயே இருக்க வேண்டும்!

உணர்வுகளை சிலர் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.  சிலர் ஒருமுறை அல்லது இருமுறை சொல்லிவிட்டு அடங்கி விடுவார்கள்.  சிலர் சொல்லவே மாட்டார்கள்!

இந்த விஷயம் என்றில்லை, சோகமான சந்தர்ப்பங்களிலும் கூட ஆர்ப்பாட்டமான வெளிப்பாடு சிலருக்கும், அமைதியான வெளிப்பாடு சிலருக்கும் இருக்கும்.  மற்றவர்களின் வெளிப்பாடுகளை பார்த்து நாமும் அவர்கள் போல் ஆகா முயர்த்திப்பதில்லை.  நம் இயல்பு அப்படி நம்மை தொடர்ந்து இருக்கவும் விடாது!

===============================================================================================

ஏகாந்தமாய் 

மிஸ்டர் லூ

உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சோவியத் யூனியனும் கூட்டணி நாடுகளையும் சேர்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் மிரட்டிவந்த பனிப்போர் காலமது. அழிவாயுதங்கள் தயாரிப்பதிலிருந்து, ஆகாசத்தைக் குடைவதுவரை இந்தக் கடும் போட்டி பரந்து விரிந்தவாறிருந்தது. ஆரம்பத்தில் சோவியத் ப்ளாக்குடன் குலவிக்கொண்டிருந்த சோமாலியா, திடீர் என வெளியுறவுக் கொள்கையில் அதிரடி மாற்றம் செய்தது.அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டது. பதினைந்து நாட்கள் கால அவகாசம் கொடுத்து மொகதிஷுவில் வெகு ஜாலியாக இயங்கி வந்த சோவியத் எம்பஸியை மூடவைத்தது. சோமாலியாவின் இந்த ராஜீய முடிவு ஆஃபிரிக்காவில் அப்போது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க அரவணைப்புக்குள்
வந்ததால், சோமாலியாவுக்கு உலகவங்கி, ஐ.நா. தொடர்பான ப்ராஜெக்ட்கள் கிடைக்க ஆரம்பித்தன.

வெளிநாட்டவரோடு (பொதுவாக வெள்ளையரோடு), இந்திய நிபுணர்கள், எஞ்ஜினீயர்கள் சிலரும் அந்தந்த ப்ராஜெக்ட்களில் வேலைபார்த்தார்கள். சில நாட்களிலேயே அவ்வாறு பணியிலிருந்த இந்தியர்கள் எனக்கு அறிமுகமாக ஆரம்பித்தார்கள். நல்லதொரு இந்திய நட்புவட்டம் சோமாலியாவில் அமையும் எனக் கனவிலும் நினைத்ததில்லை. அத்தனை இந்தியர்கள் அங்கே வசித்தார்கள் என்பதே முதலில் ஆச்சர்யம் தந்தது. கேசவன் (உலகவங்கி), சிதம்பரம், ஜெயராமன் (ஐ.நா), டேவிட் டென்ஸில் (யுஎஸ் எய்ட்),
டேவிட் ராஜ் (வர்ல்ட் விஷன்), ரவீந்திரன், பார்த்தசாரதி, கோவிந்த் குமார், ஊமன் ஆப்ரஹாம், பங்கஜ் கபூர், ராஜேந்தர் மதான், ராமகிருஷ்ணன் (சோமாலி அரசு நிறுவனங்களில் வேலை செய்த சில இந்தியர்கள்) போன்றோர் பழக்கப்பட்டார்கள். பின்னாளில் நல்ல நண்பர்களானார்கள்.

சோமாலி டெமாக்ரடிக் ரிபப்ளிக் எனத் தன்னை அழைத்துக்கொண்டாலும், ஒரு இஸ்லாமிய நாடாக ஆகிவிட்டிருந்தது அது. மக்கள் பாவம். அவர்கள் முதன்மையாக ஆதிவாசிகள். எல்லோருடனும் வெள்ளையாகப் பழகுபவர்கள்.
பெண்கள் உழைப்பவர்கள். குடும்பம் நடத்த பொருளாதார வசதி தேட  முனைபவர்கள். ஆண்களில் பெரும்பாலோர் ப்ளெய்ன் சோம்பேறிகள். அடிக்கடி பீர், சிகரெட், குறைந்த பட்சம் ஃப்ளாஸ்க் நிறைய டீ தேவைப்பட்டது அவர்களுக்கு. மற்றபடி மூலைக்கு மூலை நடந்துகொண்டோ, யார் வீட்டு வாசலில் உட்கார்ந்துகொண்டோ நாள்முழுதும் அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்.  சிலர் அவ்வப்போது தொழுகையும்
செய்வார்கள். கட்டாயம் எல்லாம் அங்கில்லை. வெள்ளி, சனி வார விடுமுறை நாட்கள் அங்கே.

மொகதிஷுவில் பொறுப்பான உத்தியோகங்களில் இருந்த இந்தியர்கள் சிலர் அடிக்கடி தங்களில் யாராவது ஒருவரின் வீட்டில் முன்னேற்பாடு செய்து சந்திப்பார்கள். லஞ்ச், டின்னரோடு தீராத அரட்டை எனப் பொழுதுபோகும். நான் அங்கு வந்திருந்த புதிதில், ஒரு நாள் ஏதோ காரியமாக ஆஃபீஸிற்கு வந்திருந்த பங்கஜ் கபூர் என்னிடம் லைப்ரரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். ”வரும் வியாழக்கிழமை மாலை நாங்கள் ‘மிஸ்டர் லூ’ வீட்டில் சந்திக்கிறோம். நீங்களும் வருகிறீர்களா.. மேலும் இந்திய நண்பர்களைச் சந்திக்கலாம்” என்றார். மொகதிஷு இந்தியர் யாரும்
எனக்கு அதுவரை சரிவர அறிமுகமாகாத நிலையில், இப்படி ஒரு சர்ப்ரைஸ் அழைப்பு! “என்ன மாதிரியான கெட்-டுகெதர் இது, ஏதேனும் விசேஷமா..?” என்று விஜாரித்தேன்.

”வியாழக்கிழமைகளில் நாங்கள் சாயி பஜன் நடத்துவோம். ஒரு மணிநேரம் நடக்கும். பின்னர் சாப்பாடு. அரட்டை. வீடு திரும்பல்.. என்று போகும். இந்த வியாழன், லூ வீட்டில்!” என்றார். நான் ஒரு ஷிர்டி சாயிபாபா பக்தன் எல்லாமில்லை எனினும், போவதைப்பற்றி யோசித்தேன். சோமாலியா போன்றதொரு பிரதேசத்தில் இந்தியர்கள் இருப்பதே அபூர்வம். அப்படியே சிலர் இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் வசிப்பவர்கள். முறையான டிரான்ஸ்போர்ட் வசதி இல்லாத நகரத்தில் ஒருவரையொருவர் வார  விடுமுறையின்போதுகூட சந்திப்பது கஷ்டம். அப்படிப்பட்ட விசித்திர
சூழலில், நம்மவர்களை சந்தித்து அளவளாவ ஒரு வாய்ப்பு வந்தால், அதை விட்டுவிட முடியுமா என்ன.. ஆனால்… யாரிந்த லூ? சாயி பஜன்லாம் நடத்தறாரு..! பெயரை வைத்து ஒன்றும் புரிந்துகொள்ளமுடியவில்லை. ”எனக்கு லூவைத் தெரியாதே.. நான் எப்படி அவர் வீட்டுக்கு..” என்று இழுத்தேன்.

“அதைப்பற்றி யோசிக்காதீர்கள். நான் அவருக்கு சொல்லிவிடுகிறேன்.  அங்கே சந்தித்தால் போச்சு.. நீங்களும் ஊருக்குப் புதிதுதானே..  இண்டியன் எம்பஸியில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறீர்கள்..  எங்களுக்கும் இன்னொரு இந்திய நண்பர் கிடைத்ததாக இருக்கும்.  உட்கார்ந்து பேசலாம் ..” என்று உற்சாகம் காண்பித்தார் கபூர். 

”சரி, வருகிறேன்.” என்றதும், ”வியாழன் மாலை ஆறுமணிக்கு நான் உங்கள் வீட்டுக்கு வந்து பிக்-அப் செய்கிறேன். பஜனை/டின்னர் முடிந்ததும், இரவில் நானே உங்களை வீட்டில் ட்ராப் செய்துவிடுகிறேன். ட்ரான்ஸ்போர்ட் பற்றிக் கவலைப்படாதீர்கள்” என்று கபூர் உறுதிப்படுத்திச் சொன்னது மனதிற்கு இதமாக இருந்தது.

அந்த வியாழன் மாலையில் கபூரோடு, லூ-வின் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தேன். காம்பவுண்டுக்குள் அமைந்திருந்த பழைய, கொஞ்சம் பெரிய வீடு. பத்துப் பன்னிரெண்டு இந்தியர்கள் வந்திருந்தார்கள். சிலர் மனைவிகளுடன். லூ வை புதியானான எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். 60+ என யூகிக்க முடிந்தது.  அவருடைய மகன் முப்பதுகளில், அவரோடு வசித்துவந்தார்.  குடும்பத்தை சோமாலியாவுக்கு அழைத்துவராத இருவரும் (இப்படிப் பலர் இருந்தார்கள்) மொகதிஷுவில் வேலை பார்க்கிறார்கள்.  இந்தியாவில் எந்த மாநிலத்து மாமனிதர் இவர், என்ன பெயரிது..  என்றெல்லாம் குழப்பம் குதித்தவாறு இருந்தது எனக்குள்.

அவர்களின் பேச்சிலிருந்து, எம்பஸியில் ஒரு தமிழர் வந்து சேர்ந்ததில் பலருக்கு ஆச்சர்யம், திருப்தி எனத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆரம்ப அறிமுகங்களூக்குப்பின் தரையில், கார்ப்பெட்டில் உட்கார்ந்துகொண்டோம். ஸ்வாமி படங்கள், ஷிர்டி பாபா படங்களுக்கு முன் சிறிய குத்துவிளக்கு ஏற்றப்பட்டிருந்தது.

ஊதுபத்தி புகை பரப்ப ஆரம்பிக்க, இந்திய மணம் அங்கே கமழ்ந்தது.  மெல்ல மனதை ஆட்கொண்டது. பஜனை ஆரம்பமானது. கபூர், ராமகிருஷ்ணன் போன்றோர் ஆளுக்கொரு பாட்டாகப் பாட, மற்றவர்கள் சேர்ந்து பாடினர், குறிப்பாகப் பெண்கள். நான் கடைசிவரிசையில் உட்கார்ந்து கவனித்தவாறு இருந்தேன்.

பாட்டுக்கள் முடிந்து, நைவேத்யம், தீபாராதனை. இப்போது எல்லோரும் நாற்காலிகளில் வசதியாக உட்கார்ந்திருந்தோம்.

அருகில் உட்கார்ந்திருந்த ரவீந்திரனிடம் பேச்சுக்கொடுத்தேன். ” நம்ம
நாட்டுக்காரர்தானே இவர்? லூ –ன்னு பேரா இவருக்கு? ”என்றேன் குழப்பமான முகத்துடன். ரவி சிரித்தார். ”இங்கே அவரை அப்படித்தான் கூப்பிடறது வழக்கம். ஆந்திராக்காரர். முழுப்பெயர் வெங்கடேஸ்வரலு.. கூப்பிடறதுக்கு ஈஸியா இருக்கறதாலே.. லூ !”

அட ஆண்டவா! சோமாலியா வந்தவுடன் இவர் பெயரின் எல்லா எழுத்துக்களும் மறைந்துவிட, லு-வில் வந்து நின்றதா! குழப்பம் விலக, மனம் நிர்மலமானது. டைனிங் டேபிளுக்கு சூடேற்றப்பட்ட உணவுப்பண்டங்கள் வந்துசேர, ’லூ’ எல்லோரையும் சாப்பிட அழைத்தார். மற்றவர்களுடன் நானும் சேர்ந்து நின்று டின்னர் தட்டை வாங்கிக்கொண்டேன். லூ-வின் வீட்டில் ஏதோ ஒரு சாப்பாட்டு ஐட்டம் செய்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் குடும்பத்துடன் இருப்பவர்கள் எலுமிச்சை சாதம், தயிர்சாதம், வடை, அப்பளம், கூட்டு ஆகிய சிலவற்றை செய்து கொண்டுவந்திருந்தார்கள். சமையலறைக்கு வேண்டிய அடிப்படை  சங்கதிகளேகூட சரிவரக் கிடைக்காத மொகதிஷுவில், இந்திய
டின்னர் அலாதியான சுவையுடன் இருப்பதாகத் தோன்றியது.  கலகலப்பான அரட்டை தொடர்ந்தது. சொன்னபடி, கபூர் என்னை இரவு பத்துமணி வாக்கில் வீட்டில் இறக்கிவிட்டார். ”நீங்கள் இனி ஒவ்வொரு வாரமும் பங்குகொள்ளலாம். நானோ, வேறு யாராவது ஒருவரோ உங்களை பிக்-அப் செய்துகொள்வோம்” என்றார். நன்றி கூறி அவரை அனுப்பிவைத்தேன்.


- வளரும்…


**
==========================================================================================

'அந்தக் காலம் போல  
இந்தக் காலம் இல்லை'
எல்லோராலும் 
எந்தக் காலத்திலும் 
சொல்லப்படும் வார்த்தைகள்  
என்றுமே பொருந்தும் 
இளமையை அசைபோடும் 
வார்த்தைகள்..


'நான் செய்தது போல் 
நீங்கள் செய்யவில்லை' 
'நான் உருவாக்கினேன் 
இவைகளை' 
'நானெல்லாம் 
பட்ட சிரமம் 
நீங்கள் படவில்லை' 

'எப்படிச் செய்தேன் 
தெரியுமா நான் 
அப்போதெல்லாம்...'
'நான் இதைச் செய்தேன் 
நான் அதைச் செய்தேன்...'

பேச்சை நிறுத்தி 
உற்று கவனிக்கிறேன் 
உள்ளுக்குள் 
நானா செய்தேன் 
இவை எல்லாம் 
என்னால்தானா 
முடிந்தது எல்லாம்?

எட்டிப் பார்க்கும் 
குட்டி நினைவுகள் 
தட்டி விடுகின்றன 
சில தலைகனங்களை 
பேசும்போது 
வெளிப்படுகின்றன 
வீண் 
பெருமைகளாய் 

நான் இல்லாவிடினும் 
அவை 
நிகழ்ந்திருக்கும். 
நான் பிரியும்போது 
ஞானம் பிறக்கும்.
 
பிரிவதும் பிறத்தலும் 
நிகழ்வதில்லை 
எல்லோருக்கும் 


====================================================================================================

நியூஸ் ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 


- தமிழகம், கர்நாடகா, கேரளா இம்மூன்று மாநிலங்களிலும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த வனத்துறை கணக்கெடுப்பு வாயிலாக கழுகுகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.

- குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான போப்பண்ணா தன் பெற்றோர்களுடன் வசித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு ஆளான அவரது தந்தை, குடித்து விட்டு வந்து மகனிடம் பணம் கேட்டு தகராறு செய்திருக்கிறார். மகன் பணம் தர மறுத்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். குண்டடிபட்ட மகன் தன் சகோதரிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார், அவர் மூலம் தகவலறிந்த உறவினர்கள் வந்து மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

- தாவணகெரே பஸ் நிலையம் அருகில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் மக்களை பீதியில் ஆழ்த்தியது. தகவலறிந்த போலீசார் மனப்பூர்வமாக நாயை வரவழைத்து சோதித்ததில் அது காலி சூட்கேஸ் என தெரிந்தது.

- டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி கிராமத்திலிருந்து அழைத்து வந்த பெண்ணுக்கு சூடு போட்டு கொடுமைபடுத்திய பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோவும், மருமகள் மார்லினோவும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

- கணவனோடு சண்டை போட்ட பெண் மருத்துவர் கோபத்தில் வீட்டிற்கு தீ வைத்த விபரீதம்.

- பெங்களூரில் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதற்கு மொபைல் ஃபோன் காரணம். போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை. வாகன விபத்துகளை விட பாதசாரிகள் இறப்பு அதிகமாக உள்ளது. ஸ்மார்ட் ஃபோன் பேசியபடி, வீடியோ பார்த்தபடி மக்கள் சாலையை கடப்பதால் விபத்துகள் நிகழ்கின்றன.

===============================================================================================

திரு ரவி சாரங்கன் பற்றி ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.  அவர் எழுத்துகளிலிருந்து மறுபடி கொஞ்சம்.......


பெண் ஜாதகமும் - திருமணமும்
அப்பா அம்மா, பெண் மூவரும் வந்து அமர்ந்தனர், ஜாதகம் போட்டுவிட்டு பெருமாளை சேவித்து முதல் கேள்வி கேட்டேன் டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டிங்களா?
அவர்கள் ஆச்சர்யப்பட்டனர் அதுக்குத்தான் பண்ணலாமா என கேட்கவந்திருக்கிறோம் என்றனர் முதலில் பண்ணிவிட்டு பிறகு வாருங்கள் குழந்தை நரகத்தில் இருக்கிறாள் அங்கிருந்து வெளியில் வரவழையுங்கள் என்றேன்.
பொதுவாக திருமண பொருத்தம் பார்க்கும் போது பெரும்பாலும் பத்து பொருத்தம், 7ம் இடம் அதன் தசை புக்தி குருபலம், சுக்ரன் என பொத்தம்பொதுவாக சொல்லிவிடுகின்ற்னர்.
ஆனால் முக்கியமான 12ம் இடத்தை மறந்துவிடுகின்றனர். மேலும் நவாம்ஸத்தில் சுக்ரனுக்கு 12ல் இருக்கும் கிரஹம் 2ல் இருக்கும் கிரஹம் ஆண் /பெண் இருவருக்கும் பகையா நட்பா என்றெல்லாம் பார்க்கனும். மேலும் இருவரது ராசிகளின் தன்மை நவாம்ஸம் தசாம்ஸம் இரண்டிலும் நட்பா பகையா இவ்வளவு யோசித்து பின் முடிவுக்கு வரவேண்டும். அதனால் தான் பொருத்தம்பார்க்க மிகுந்த நேரமும் கவனமும் எடுக்கிறேன். தற்போது சில காரணங்களால் பொருத்தம் பார்க்க இயலவில்லை.
பொதுவாக பெண் ஜாதகத்தை அலசும்போது சில முக்கிய அம்ஸங்களை தாம்பத்யம் அன்யோன்யம், கணவன் வழி உறவுகளால் நன்மையா தொல்லையா செவ்வாய்,ராகு,சுக்ரன் தன்மை மறுமணம் உண்டா, திருமணத்துக்கு பின் 2ம் இடம் தன்மை சுக்ரனுக்கு அடுத்து இருக்கும் கிரஹத்தின் பலம் தசை புக்திகள் என பார்த்து முடிவு செய்வது உத்தமம்
பல பெண்களுக்கு மண வாழ்க்கை என்பது மிக கொடூரமாக இருக்கு இதற்கு காரணம் தாம்பத்யம் எனப்படும் 12ம் இடம், சுக்ரனுக்கு 12ல் /2ல் இருக்கும் பாப கிரஹத்தின் தன்மையை கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
2வருடம் கழித்து அந்த பெண்ணும் அவள் சகோதரனும் திரும்ப வந்து டைவர்ஸ் ஒருவழியா ஆகிவிட்டது மறுமணம் செய்யலாமா வரன் வருகிறது என்றபோது தடுத்துவிட்டேன் என் பெண் மாதிரி நீ வேண்டாம் உனக்கு வேறு கடமைகள் இருக்கு என்றேன்
காரணம் இந்த உலகில் பெண் சுதந்திரம் விடுதலை என்ன வேண்டுமானாலும் பேசலாம் ஆனால் 2024லிலும் இன்னும் பெண் போக பொருளாகத்தான் பார்க்க படுகிறாள்.
பெற்றோர்களுக்கு எப்படியாவது பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிடனும்னு துடிக்கிறார்கள் ஜோதிடர் சாமியார் என யாரை பார்த்தாலும் ஓடுகிறார்கள்
சமீபத்தில் கோயிலில் ஒரு பெண்மணி அடியேன் யார் என்று கூட அவருக்கு தெரியாது என் பெண்ணுக்கு எப்ப கல்யாணம் ஆகும் சொல்லுங்க என வருகிறார் அடியேன் நல்லவனா கெட்டவனா எப்படி தெரியும் அவருக்கு அந்த அளவுக்கு எத்தை தின்னா பித்தம் தெளியும் என மக்களின் மனம் . பாவமாவும் வேதனையாகவும் இருக்கு
பெண்ணை பெற்றவர்களால் ,உறவுகளால், எப்படி ஒரு பெண்ணுக்கு துன்பம் ஏற்படுகிறது - நாளை விரிவாக பார்க்கலாம்

================================================================================

இளையராஜாவுக்கு எதிராக 37பேர்! வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா

முகிலினி
கே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி (?) உரையைக் கேட்ட போது ஒன்று புரிந்தது. திரையுலகில் நம்பிக்கைத் துரோகம், பொறாமை எல்லாம் கண்கூடு என்றாலும் தன்னை வளர்த்தவரையே பதம் பார்க்கும் அளவுக்கு மோசமானது என்பதை வெளிப்படையாகக் காண முடியும் என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம்.
இளையராஜாவை விழுத்த 37 இசைமைப்பாளர்களை உற்பத்தி பண்ணினாராம், ஆறு ஆண்டுகள் தவம் கிடந்தாராம். அட திலீப்பு நீ தான் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளரா என்று ரஹ்மான் வரவால் இளையராஜாவை விழுத்த முடிந்ததாம். இந்தப் பேச்சில் கொஞ்சம் பம்மிப் பம்மியே பேசியிருந்தாலும் யூடியூப் தளத்தில் மட்டும் “அவரைத் தோற்கடிக்க ரஹ்மான் கிடைச்சார்” என்ற மலிவான விளம்பர உத்தியைப் பயன்படுத்திக் கொண்டனர்.
சரி இனி விஷயத்துக்கு வருவோம்.
“மக்களை சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம்”

என்று அறச்சீற்றப் பொங்கல் வைத்த வைரமுத்து ஈற்றில் நிழல்கள் வழியாக திரைப்படத்துறைக்குள் ஒதுங்குகிறார். பிள்ளையார் சுழி போட்ட இளையராஜாவின் நிழல்கள் தொடங்கி புன்னகை மன்னன் வரை மொத்தம் ஆறு ஆண்டுகள் தனியே இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களைக் கணக்கிட்டாலேயே போதும் இன்று ராஜாவை ஒதுக்கத் திட்டம் தீட்டியதாகச் சொல்லும் வைரமுத்துவுக்கு ராஜா எவ்வளவு தூரம் கைங்கரியம் செய்திருக்கிறார் என்று புரியும்.
நூற்றுக்கணக்கான பாடல்கள், இவற்றில் ஒரே படத்தில் அனைத்துப் பாடல்களும் வைரமுத்து என்று அள்ளிக் கொடுத்தார் ராஜா. இம்மட்டுக்கும் வாலி, மு.மேத்தா, கங்கை அமரன், நா.காமராசன், காமகோடியன், முத்துலிங்கம், புலமைப்பித்தன், பிறைசூடன் என்று ஒரு பாடலாசிரியர் பட்டாளமே இருக்க வைரமுத்துவுக்கு மட்டும் ராஜா இப்படி அள்ளிக் கொடுத்த கயமைத்தனத்தை (!) என்னவென்று சொல்ல.
அதுமட்டுமா அலைகள் ஓய்வதில்லை, ஆனந்தக் கும்மி, கோழி கூவுது என்று ராஜாவின் குடும்ப நிறுவனப் படங்களிலும் வைரமுத்துவுக்கும் முக்கிய இடம்.
இதைத்தான் கங்கை அமரன் தனது “பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்” தொடரில், “வைரமுத்துவைக் கண்டதும் அண்ணன் எனக்கே வாய்ப்புக் கொடுக்கல” என்று வாய் விட்டுப் புலம்பினார்.
அப்போதெல்லாம் இளையராஜா இசைக்கு இன்னார் தான் எழுதினால் எடுப்பாக இருக்கும் என்ற நிலை இருந்ததா? உங்கள் நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்களேன்?
இளையராஜா - வைரமுத்து கூட்டணியின் பாடல்களை இனங்கண்டு ரசித்துச் சிலாகிக்கும் மரபு இன்றைய காலம் போல எண்பதுகளில் இருந்ததில்லையே? பிறகெதற்கு ராஜா வைரமுத்துவை இவ்வளவு தூரம் தலையில் வைத்து ஆடினார்?
இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்குமான தனிப்பட்ட பிரச்சனையை நாகரிகம் கருதிப் பேசாது ஒதுங்கிய என்போன்ற ரசிகர்கள் இந்தக் கூட்டணி மீண்டும் வர வேண்டும் என்று விரும்பியிருந்தாலும் முன் சொன்ன பாடலாசிரியர்களின் பாடல்களை ஈரம் சொட்டச் சொட்ட இன்னும் கேட்டு ரசிக்கிறோமே?
கவிஞர் வாலியின் திறனைக் கூட இந்த கே.பாலசந்தர் அஞ்சலிக் கூட்டத்தில் உரசிப்பார்க்கிறார் வைரமுத்து. உண்மையில் வைரமுத்துவை விடச் சிறந்த கவி வளம் படைத்த கவிஞர் அவர். ஆனால் ஜனரஞ்சக சினிமாவுக்கு எது தேவை, கலைப்படத்துக்கு இது தேவை என்று நுண்ணுணர்வு படைத்த படைப்பாளி இந்த வாலி. தேவையில்லாமல் தன் வித்துவத்திறமையை அவர் மசாலாவுக்குள் போட்டுக் குழப்பி அடிப்பதில்லை.
கொடுமை என்னவென்றால் இளையராஜாவை ஒதுக்க ரஹ்மானைத் தான் பிறப்பித்ததாகச் சொல்லும் வைரமுத்துவை விலக்கி முழுப்பாடல்களும் வாலி என்று அடுத்த ஆண்டே “உழவன்” படத்தில் சேர்த்துக் கொண்டாரே? அப்படியென்றால் ரஹ்மான் கணக்கில் வைரமுத்து ஒரே ஆண்டில் டொக்காகி விட்டாரா?
‪தன்னுடைய திறமையை நம்பாமல் அடுத்தவர் முதுகில் ஏன் இந்த வைரமுத்து இப்படிச் சவாரி செய்ய வேண்டும்?‬
அடுத்தது கே.பாலசந்தரை வைரமுத்து தன் வம்புக்கு இழுத்திருப்பது பற்றி.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் தன்னுடைய கவனத்தை மீறி மரகதமணியை வைத்துப் பின்னணி இசையமைத்ததால் இளையராஜாவுக்குச் சினம் வந்ததாக கே.பாலசந்தர் உயிருடன் இருக்கும் காலத்திலேயே ராஜா தன்னிலை விளக்கம் அளித்தவர். அத்தோடு அண்ணாமலை படத்தின் இசையமைப்பு என்ற பெரிய வாய்ப்பையே உதறியவர் ராஜா. அதனால் தான் கே.பாலசந்தர் தேவாவைத் தேட வேண்டியிருந்தது வைரமுத்து அவர்களே.
அத்தோடு சிந்து பைரவி என்ற படத்தில் வைரமுத்து தன் கவித்திறனைக் காட்டியதால் அப்படியே கே.பாலசந்தர் புன்னகை மன்னனைத் தொடர்ந்து இவருக்கொன்றும் அடுத்த படமான மனதில் உறுதி வேண்டும் படத்தில் சிவப்புக் கம்பளம் விரிக்கவில்லையே? மனதில் உறுதி வேண்டும் படத்தின் முழுப் பாடல்களும் வாலியின் கை வண்ணம் ஆச்சே?
‪வைரமுத்துவுக்காக ராஜாவை ஒதுக்கி வைத்திருந்திருக்கலாமே இயக்குநர் கே.பாலசந்தர் அப்போது?‬
இளையராஜாவை விட்டுப் பிரிந்த பின் ஏவிஎம் நிழலில் தான் வைரமுத்து ஒதுங்கினார். அவர்கள் தொடர்ச்சியாகத் தயாரித்த படங்களில் சந்திரபோஸ் என்ற உன்னத இசையமைப்பாளர், மற்றும் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள், மனோஜ் - கியான், மரகதமணி, தேவேந்திரன், தேவா என்று 37 இசையமைப்பாளர்களின் இசை தன் பாடல்களுக்குப் பொருந்தவில்லையாம். இதை அந்தக் காலத்தில் காக்காய் பிடித்துப் பாட்டு வாய்ப்புக் கேட்கும் போதே சொல்லி விட்டுப் பிச்சை எடுத்திருக்கலாமே வைரமுத்து அவர்களே? முப்பது ஆண்டுகளாகத் தன்னை வளர்த்த இசையமைப்பாளர்களுக்கு இவர் செய்யும் நன்றிக்கடனைப் பாருங்கள்.
உண்மையில் இந்த இசையமைப்பாளர்கள் வைரமுத்துவின் வரிகள் நோகாமல் இசையமைத்த சிறப்பை இசை ரசிகர்கள் நாம் பாரபட்சமின்றி ரசித்துப் போற்றினோமே?
இந்த மாதிரி ஒரு ஈனத்தனமான கருத்துக்கு ஒட்டுமொத்த இசையமைப்பாளர் சங்கமே பொங்கியிருக்கணுமே?
தான் உற்பத்தி பண்ணியதாகச் சொல்லும் 37 இசையமைப்பாளர்களில் சந்திரபோஸ் ஐயும் அடக்கியிருக்கிறார். வைரமுத்துவுக்கு முன்பே சந்திரபோஸ் இசையமைப்பாளராகி விட்ட வரலாறும் இவருக்கு நாம் சொல்லிக் கொடுக்கணுமா?‬
அச்சமில்லை அச்சமில்லை படத்துக்குத் தன்னையே இசையமைக்க வாய்ப்புக் கொடுக்கும்படி பாலசந்தரைக் கேட்டவர் இளையராஜா என்று சொல்லியிருக்கிறார் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன். பாருங்கள் ராஜாவுக்கு எப்பேர்ப்பட்ட காழ்ப்புணர்வு.
வைரமுத்துவின் கணக்கில் ராஜாவை ஓரம் கட்ட ரஹ்மானை அறிமுகப்படுத்தினோம் என்றால் மெல்லிசை மன்னர் விஸவநாதன் நினைத்தாலே இனிக்கும் காலத்தைக் கடந்தும் கே.பாலசந்தருக்கு அதே இனிமை சொட்டப் பாடல்களைக் கொடுத்த போதும் எம்.எஸ்.வியை விட்டு இளையராஜாவிடம் போனது மெல்லிசை மன்னரை ஓரம் கட்டவா?
‪அந்த நேரத்தில் மணிரத்னம் என்ற நட்சத்திர அடையாளம் இல்லாவிட்டால் என்னதான் திறமையிருந்தும் ரஹ்மான் துலங்கியிருப்பாரா? இல்லை வைரமுத்துத்தான் வாய்ப்பு எடுத்துக் கொடுத்திருப்பாரா?‬
“டூயட்” படத்தின் தோல்விக்குப் பின் கே.பாலசந்தர் ரஹ்மானை விட்டு விலகி அடுத்த படமான கல்கியில் தேவாவை இசையமைக்க வைத்ததும், “பார்த்தாலே பரவசம்” படத்தின் படுதோல்விக்குப் பின் கடந்த 18 ஆண்டுகளாக கவிதாலயா நிறுவனத்துக்கோ கே.பாலசந்தருக்கோ ரஹ்மானை இசையமைக்காமல் வைத்திருப்பது கூட இந்த மாதிரி ரஹ்மானை ஓரம் கட்டவே என்று எடுத்துக் கொள்ளலாமா வைரமுத்து அவர்களே?
இளையராஜா ஒருபோதும் இம்மாதிரிப் பேர்வழிகளைத் தன் பக்கம் அண்ட விடக்கூடாது என்பதைக் காலம் கடந்து நிரூபித்திருக்கிறார் வைரமுத்து.
உண்மையில் இந்த உலகத்தில் இளையராஜா போன்று வெளிப்படையாக வாழ்வது கஷ்டம், சூது, வாது, காக்காய் பிடிப்போடு வைரமுத்துவாக வாழ்வது வெகு இலகு.
கானா பிரபா
நன்றி: பதிவு.காம்  ------    

========================================================================================

பொக்கிஷம்  ::122 கருத்துகள்:

 1. அனைத்தையும் படித்தபின் மனதில் நின்றது சோமாலியாவின் அனுபவமும், ஒட்டுண்ணியின் அபத்தப் பேச்சுகளும், இன்றைய பத்திரிகைத் துணுக்குகளும், ஒவ்வொரு துணுக்கும், நண்டு உட்பட சுவாரசியம், ஒன்றைத் தவிர

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லை..   துணுக்குகள் எல்லாவற்றையும் படிக்க முடிந்ததா?

   நீக்கு
  2. எல்லாமே கிளியராக இருந்தன. கார் கண்ணாடிதான் அபத்தமாக இருந்தது

   நீக்கு
  3. அப்போதைய அரசியல் பற்றி அவர் ஏதோ சொல்ல முயன்றிருக்கிறார்.

   நீக்கு
  4. அதேதான்....ஸ்ரீராம் அது அரசியல் மறைமுகமாக அதான் கடைசில அந்த வரி கீதம்!!!!

   கீதா

   நீக்கு
 2. ரசனைகள் பகிரப்படவில்லையென்றால் காட்டில் காய்ந்த நிலவு தான் என்பது அபிப்ராயம்.

  சமீபத்தில் முக நூலில் நமக்கெல்லாம் தெரிந்தவர் ஒருவர் 'தூங்கும் இரவின் இருட்டில் ஜொலிக்கும் நிலவின் படம் ஒன்றைப் போட்டு, 'நிலவே என்னிடம் நெருங்காதே'
  என்று எழுதியிருந்தார்.
  அதைப் பார்த்தவுடனேயே எனக்கு கஷ்டமாக இருந்தது. உடனே சட்டென்று அவருக்கு சொல்லும் ஆறுதல் போல 'கோடையில் ஒரு நாள் மழை வரலாம்' என்று என் ரீ ஆக்‌ஷனை பதிவு பண்ணினேன். அப்படிச் செய்தது இரண்டு பேருமே ஆறுதலாகப் பேசிக் கொண்டது போல எனக்கிருந்தது.

  மனித மனம் விசித்திரமானது. எந்த நேரத்தில் எப்படிப்பட்ட ஆக்கிரமிப்புகளில் சிக்கித் திணறும் அல்லது சந்தோஷப்படும் என்று அதற்கே தெரியாது.
  அதற்குக் காரணம் 'மனிதன் தனித்தீவல்ல' என்ற உண்மை தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேட்பவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும் என்பதை மறுக்கவில்லை. அதன் பின்விளைவுகளை சொன்னேன்.

   நீக்கு
 3. ஜோதிடத்தைப் பற்றிப் படித்தால் குழப்பம்தான் மிஞ்சும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடக்கும்போது சந்தோஷம்.  நடக்கவில்லை என்றால்?  அடுத்த ஜோசியர்!

   நீக்கு
  2. நடக்கவில்லையென்றால் அடுத்த ஜோசியர், பத்தாம் கட்டத்தில் சனி வியாழனைப் பார்ப்பதால் எனக் காரணம் சொன்னால் அதற்கும் தலையாட்டிக்கொள்ள வேண்டியதுதான்.

   நீக்கு
  3. மிகச் சமீபத்தில் நான் சந்தித்த ஒரு ஜோசிய மிகத் துல்லியமாக சொன்னார்.  மற்றவர்களுக்கு அப்படி பொருந்துகிறது என்று சொன்னதாலேயே நானும் அவரை அணுகினேன்.

   நீக்கு
 4. தேங்காய் நண்டைப் பிடிக்கும் முறை, மலையைக் கில்லி எலியைப் பிடிப்பது மாதிரி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. எனக்கு யாரிடமும் ரொம்ப நேரம் கேட்டுக்கொண்டிருக்க முடியாது. அதனால் நான் கவனிப்பதில்லை என்று வீட்டில் எல்லோரும் சொல்வார்கள். அது என்னுடைய குறை. ஒருவேளை நான் தனித் தீவோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஆண்களுக்கான பொதுவான குணமோ!

   நீக்கு
  2. தேவைக்காக ஆபீசில் இயல்பை விட்டு நிறையப் பேசுவதால் வீட்டில் இன்னமுமே அமைதியாகிவிடுகிறோம். விதிவிலக்குகளைக் கண்டிருக்கிறேன், சமீபத்தைய உறவிலும்.

   நீக்கு
  3. உண்மையில் ஆபீஸிலும் நான் நிறைய பேசுவதில்லை!

   நீக்கு
 6. ஒரே வரியில் சொல்வதானால் இந்த வாரப் பதிவு ஏகாந்தன் மற்றும் ப வே படைப்புகள் நீங்கலாக மனதில் நிறுத்த முடியவில்லை.
  .
  //சிலர் ஓவராய் உணர்ச்சி வசப்படுவார்கள்.
  சிலர் உணர்ச்சியையே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.//
  என்ன சிவாஜி எம் ஜி ஆர் நக்கலா?

  //உணர்வுகளை சிலர் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சிலர் ஒருமுறை அல்லது இருமுறை சொல்லிவிட்டு அடங்கி விடுவார்கள். சிலர் சொல்லவே மாட்டார்கள்!//

  சொல்வதும் சொல்லாமல் இருப்பதும் ஒரு வடிகால் தான். சொல்வதால் சீக்கிரம் காலி செய்யலாம். சொல்லாமல் இருப்பதால் சேமித்து வைக்கலாம். அவரவர் குணாதசியம்.

  //அந்தக் காலம் போல
  இந்தக் காலம் இல்லை'//
  மாற்றம் ஒன்றே மாறாதது

  கடந்த காலம் கடந்து விட்டது
  திருத்த முயல்பவர் முயல்கிறார்கள்
  நிகழ் காலம் கண்ணெதிரில்
  விதி அதை செயலாக்குகிறது.
  எதிர்காலம் கற்பனையே.
  எதிர்பார்ப்புகள் உண்மையாவதில்லை.

  நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாம் நன்றே
  பிரிவதும் பெற்றதும் எல்லோருக்கும் உண்டு.
  நன்மை தீமை என்பது அவரவர் அவதானிப்பே!

  அரசியல் நெடி கூடுதல் இந்த வார பொக்கிஷத்தில். அதிலும் எனது வோட்டு ......... மற்றவை கதம்பமாக. தேங்காய் நண்டு இங்கு கேரளத்திலும் உண்டு.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி JKC ஸார்...  அந்த எனது வோட்டு முகநூலிலும் பகிர்ந்திருந்தேன்.  அப்போதைய மனநிலையைக் காட்ட...

   நீக்கு
 7. வைரமுத்துவைவிட வாலி மிகவும் படித்தவர் திறமைசாலி. பாரதிராஜாவுக்காக (தேவர்) வைரமுத்துவை இளையராஜா ஆதரித்திருப்பார். திரைப்பாடலுக்கு வைரமுத்துவைவிடப் பலரும் திறமையானவர்கள். வைரமுத்துவின் பல பாடல்களும் இசையினால்தான் நம் மனதை நிரப்பின.

  அரசியல் ஒட்டுண்ணி என்பதால் வாழ்வில் வளம் பெற்றவர், பத்திரிகைகளில் தன்னைப் பற்றி வருமாறு அரசியல் கைக்கூலியாகச் செயல்பட்டவர், செயல்படுபவர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  ஆனால் வைரமுத்துவின் நிறைய வரிகளை நான் ரசிப்பதுண்டு.

   நீக்கு
  2. 'மடை திறந்து தாவும் நதியலை நான்
   மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்..'

   'அந்தி மழை பொழிகிறது
   ஒவ்வொரு துளியிலும் உன் முகம்
   தெரிகிறது'

   --- இப்படி இன்னும் சில அந்தக்கால சந்தோஷங்கள்.

   நீக்கு
  3. முத்துவைரம்பற்றி நெல்லை சொன்னவைகளோடு ஒத்துப்போகிறேன். அந்திமழையை நினைவுகூர்ந்த ஜீவி சாரின் ரசனையையும் அலட்சியப்படுத்துவதற்கில்லை!

   நீக்கு
  4. அழகான முக வனப்பு கொண்ட பெண் இருக்கிறாள். பார்த்தவுடன் வசீகரமாகிறோம். பிறகு பழகுகிறோம். அவள் குணம் மிக மோசமானதாக இருக்கிறது. பிறரைப் பற்றிக் கவலை இல்லாதவளாகவும் சுயநலவாதியாகவும், பிற்ரைத் துன்புறச் செய்து இன்பம் காணுபவளாகவும் இன்னும் பல மோசமான குணங்களோடும் இருப்பதைக் காண்கிறோம். இப்போ அவள் முகத்தைப் பார்த்தால் அவள் எழில் தெரியுமா இல்லை அவளின் மோசமான குணம் தெரியுமா?

   நீக்கு
  5. என்ன புதன் கேள்வியா?.
   இப்படி இடுக்கில் எல்லாம் கேள்வியை நுழைத்தால் எப்படி நெல்லை?

   நீக்கு
  6. இல்லை வய்யிர முத்துவுக்கான என் கருத்து. அவரை நினைத்தாலே அவரது மோசமான குணம், தவறுகள், பெண்களை தன் அதிகாரத்தால் வயப்படுத்துவது-ஏ ஆர் ரகுமான் குடும்பம் உட்பட என்று சொல்கின்றனர், அரசியல் ப்ரோக்கர்தனம், காசை வீசி பத்திரிகையில் செய்திகள் வரச் செய்வது என்பதுதான் என் நினைவுக்கு வருகிறதே தவிர, இளையராஜா இசையில் அவர் எழுதிய பாடல்கள் அல்ல.

   நீக்கு
  7. வைரமுத்துவின் மோசமான பக்கங்களை நானும் அறிவேன்.  எனக்கும் பிடிக்காது.  ஆனால் அவர் பாடல்கள் பலவற்றில் உள்ள வரிகளை ரசிக்காமல் இருக்கவும் முடியாது.  மனதில் ஏற்கெனவே இடம்பிடித்து விட்ட வரிகள் அவை.

   நீக்கு
 8. கற்பனை செய்தபோது நான் சட்டென விரைந்து அவர் கையைப் பற்றி தோளில் தட்டி 'ஹேய்' என்று ஆரம்பித்து வியப்பை, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவேன் என்று எனக்குள் தோன்றியது. //

  நான் இப்படித்தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 9. எனக்கும் டக்கென்று உங்க பாஸ் தான் நினைவுக்கு வந்தார்.

  பொதுவாக ஆண்கள் உணர்வுகளை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. ஒரு சிலர் விதிவிலக்குகளையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒருவரைப் பார்த்து வியந்திருக்கிறேன். சொல்கிறேன். கீழே.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ஒருவர் யார் என்று கீழே சொல்லி இருக்கிறீர்களா என்ன, படித்த நினைவில்லை. பார்க்கிறேன்!

   நீக்கு
 10. மனம் கவர்ந்த லூ...

  இங்கே அமேரிக்காவில் கூட அப்படியே தான் இப்பவும்.

  ஆளுக்கொரு உணவு ஐட்டம் பண்ணிக் கொண்டு வர இந்திய நண்பர்கள் ஒன்று கூடி.. அல்லது ஒவ்வொருவர் வீட்டில் ஒரு நாள் என்று...

  மாதத்திற்கு ஒன்று எப்படியும் எதையாவது தொட்டு இருந்து கொண்டே இருக்கும்.

  வடக்கத்திக்காரர்கள் என்னைப் போன்ற வயது மூத்தோரிடம் காட்டும் உண்மையான பணிவும் மரியாதையும்..... இதெற்கெல்லாம் அருகதை உடையவன் தானா என்று பல சமயங்களில் எனக்குத் தோன்றியிருக்கிறது.

  வாராவாரம் ஏகாந்தன் ஸார் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறார். அவர் சொல்லிச் செல்லும் எழுத்து நடை அந்த சுவாரஸ்யத்திற்கு முக்கிய பங்களிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடக்கத்திக்கார்ர்கள் பெரியோர்களிடம் கால் தொட்டு வணங்குவதை எல்லா இடங்களிலும் கண்டிருக்கிறேன். என் நண்பன் அவன் அம்மாலை துபாயில் சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது அவன் ஆபீசில் வேலை செய்யும் சிந்திக்காரனிடம் அறிமுகப்படுத்தியபோது, ரோடில் கால் தொட்டு வணங்கியதைக் கண்டு அசந்திருக்கிறேன்.

   நீக்கு
  2. ஆமாம் நெல்லை, அவங்க எங்க பார்த்தாலும் அப்படிச் செய்யறாங்க. நானும் பார்க்கிறேன்.

   கீதா

   நீக்கு
  3. இந்த வழக்கம் எங்கள் வீட்டிலும் சிலரிடம் உண்டு.  சுவாரஸ்யமான விஷயம், அவ் கார்கள் வடநாட்டில் சில காலம் இருந்தவர்கள்.

   நீக்கு
 11. ஸ்ரீராம் முதல் பகுதி முழுவதும் உளவியல் சார்ந்த ஒன்று. சிலருக்கு சில சமயங்களில் இயல்புப் படி நடக்க முடியாத சூழல்கள் வருவதுண்டு. உதாரணத்திற்கு

  நம்முடன் இருப்பவர்களுக்கு மனதிற்கு ஒவ்வாத ஒருவர் அதாவது அவர்களாகவே ஏதோ தப்பான அர்த்தம் கொண்டு அந்த நபரை ஒவ்வாத வகையில் போட்டு வைத்திருந்தால், அந்த நபர் நம் வீட்டிற்கு வருகிறார் என்றால் - அவர் நமக்கு எந்த ஒவ்வாமையும் வரவில்லை என்றாலும் கூட நம்மோடு இருக்கும் மற்றவருக்காக நம் இயல்பை மாற்றிக் கொண்டு அடக்கி வாசிக்க வேண்டிய சூழல் வருவதுண்டு. இதைப் பற்றி உளவியல் ரீதியாகப் பேச வேண்டும் என்றால் பாடம் போல் ஆகிவிடும்.

  பொதுவாகவே பெண்களுக்கு உணர்ச்சிகள் கூடுதல். அதுவும் வாழ்க்கை முழுவதும், தனக்கு ஒத்துவராத கஷ்டப்பட்டு adjust செய்து பல இடர்களையும் கெட்ட வார்த்தைகளையும் பொறுத்துக் கொண்டு வாழும் பெண்களுக்குக் கண்டிப்பாகக் கொட்டுவதற்கும் காட்டுவதற்கும் உணர்வுகள் நிறைய இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசி பத்தி மனதைத் தொட்டது. பெண்களிடம் (அதாவது துணையிடம்) எவ்வளவு மன்னிப்பு வேண்டினாலும் கரையாத பாவங்கள் அவை.

   நீக்கு
  2. நெல்லை, பெண்கள் பலரும் சின்ன வயதில் இளம் வயதில் பொறுப்புகள் இருப்பதால் இவற்றைக் கடந்து அட்ஜஸ்ட் செய்து வந்துடறாங்க....ஆனால் 50 ஐ நெருங்கும் சமயத்தில் ஆழ் மனதில் புதைந்து இருப்பவை மெதுவாக எழத் தொடங்கும் அதுவும் அப்போது ஹார்மோனல் மாற்றங்கள் நிகழுமே மெனோபாஸ்.....சிலருக்குக் கர்ப்பப் பை அகற்றுவது இப்படிப் பல பிரச்சனைகளால் பெரும்பாலும் 40 ல் தொடங்கி சில பெண்கள் ஹிஸ்டீரிக்கலாக மாறுவதுண்டு, அச்சமயத்தில் அக்குழந்தைகளுக்குப் புரியாது தன் அம்மா ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று. இடைவெளி ஏற்படும். இப்போதாவது இதற்கெல்லாம் தகுந்த மருத்துவம் விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் முந்தைய தலைமுறையில் இதெல்லாம் இருந்ததில்லையே....

   கீதா

   நீக்கு
  3. நான் சந்தித்த பெண்மணி ஒருவர் விஷயத்திலும் இது அப்படியே ஒத்துப்போகிறது.

   நீக்கு
 12. முன்பு எங்கோ படித்திருக்கிறேன். வீட்டுக்கு வருவோரை 'வாங்க வாங்க வாங்க' என்று பலமுறை சொல்லி வரவேற்றால் அது போலியாம். அதுவே மகிழ்ந்து போய் வாய் நிறைய ஒரே முறை "வாங்க" என்றால்தான் அது உண்மையான மகிழ்ச்சியின் வெளிப்பாடாம். ஏற்றுக் கொள்கிறீர்களா?//

  இல்லை ஸ்ரீராம், இந்த வாங்க என்பதை எத்தனை முறை சொன்னாலும், வார்த்தைகளில் இல்லை வெளிப்பாடு. அது முகத்தில் கண்களில், சொல்லும் tone ல், உடல் மொழியில் இருக்கிறது. இது என் தனிப்பட்டக் கருத்து.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அப்படிதான் தோன்றியது. அதைச் சொன்னவர் நாகேஷ் என்று (அரைகுறை) நினைவு!

   நீக்கு
 13. மேலே சொன்ன பகுதிக்குக் கீழே வரும் பத்தி உங்கள் மகன்கள் போலத்தான் நானும், முகம் பார்த்துப் பேசுவதுதான் நல்லது ஸ்ரீராம். பார்க்கப் போனால், கண்கள் முகம் வெளிப்படுத்தும் உணர்வுகள் முக்கியம் ஒரு உரையாடலில். நானும் யாரேனும் முகம் பார்த்துப் பேசவில்லை என்றால் நிறுத்திவிடுவேன். ஒருவேளை அவங்களுக்குப் போரடிக்குத் போல என்று.

  அது போல எனக்கு இப்போது செவித்திறனும் இல்லாததால் எதிராளி என் முகம் பார்த்துப் பேசினால்தான் புரியும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏனோ என்னால் அப்படி பேசுபவர்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை!!

   நீக்கு
 14. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 15. அதே போல என் மகன்களிடமோ, என் பாஸிடமோ அவர்கள் இயல்பில் செய்யும் சில விஷயங்களை, பேச்சை, காட்டும் பாவங்களை நான் ரசிப்பேன். ஆனால் காட்டிக்கொள்ள மாட்டேன். //

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

  கீதா

  பதிலளிநீக்கு
 16. நம் இயல்பு அப்படி நம்மை தொடர்ந்து இருக்கவும் விடாது!//

  நாம் நாமாக இருப்பதுதான் நல்லது ஸ்ரீராம். நம் இயல்பை அதுவும் மற்றவர்களுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சில சமயங்களில் ஒரு வேளை நம் நெருங்கிய உறவுகளுக்கு அது சந்தோஷம் தரும் என்றால் ஒரு சில வற்றில் சற்று மாற்றிக் கொள்வது தப்பில்லை என்று தோன்ற்ம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில உள்ளார்ந்த சந்தோஷங்களை இழக்க மனம் வருவதில்லை கீதா!

   நீக்கு
 17. ஹி..ஹி.. டாலர் குறியீடு சரித்திரம் அருமை.

  பதிலளிநீக்கு
 18. தேர்ந்தெடுக்கும் துணுக்குகளில் ஒற்றை சார்பு அரசியல் நெடி இல்லாமல் வரும் பகுதிகளிலாவது பார்த்துக் கொள்ளலாம்.

  நிகழ் காலத்து அரசியல் போக்கை வரும் காலத்தில் பார்த்தாலும் இப்படித் தான் இருக்கும்.

  இது ஒரு சாணக்கிய உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வப்போது எடுத்துக் கோர்பப்பதில் இப்படி அமைந்து விடுகின்றன.  முயற்சி செய்கிறேன் ஸார்.

   நீக்கு
 19. உணர்வுகளை அடக்குவதில் அல்லது வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது தவறில்லை. அது அவரவர் இயல்பு. அப்படி அடக்கப்படுவதை மனம் கடந்து வரத் தெரிந்துவிட்டால் நல்லது. இல்லை என்றால் கஷ்டம். சில சமயம் நாம் கடந்துவிட்டோம் என்ற ஒரு எண்ணத்தில் இருப்போம். ஆனால் அவை என்றேனும் ஒரு நாள் வெடிக்கும் அபாயம் அல்லது மனப் பிரச்சனையில் முடியும் அபாயம் உண்டு. இது ஆணுக்கும் சரி பெண்ணிற்கும் சரி பொருந்தும்.

  இப்போது உளவியல் துறை பெருகி, வளர்ந்து வருவதற்குக் காரணம் இதுதான்.

  தன் உணர்வுகளைக் கடந்து வருபவர்கள் அல்லது அவ்வளவாக உணர்வுகள் அற்றவர்கள், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு உளவியல் துறை என்பது சுத்த ஹம்பக்! என்னவோ பெரிசா உளவியலாம் என்று டக்கென்று comment அடித்துவிடுவார்கள். ஆனால் அனுபவித்தவர்களுக்குத்தான் அது புரியும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணர்வுகளை அடக்க வேண்டியதில்லையே கீதா..  அவரவர் வெளிப்பாடு ஒவ்வொரு மாதிரி இருக்கும் என்று சொல்ல வந்தேன்.  ஆனால் நீங்கள் சொல்லி இருப்பதும் இதில் கொஞ்சம் அடங்குந்தான்.

   நீக்கு
 20. இன்றைய தொகுப்பில் அதிகம் ரசித்தது ஏகாந்தன் அவர்களின் அனுபவங்கள். துணுக்குகள், மற்ற விஷயங்கள் என அனைத்தும் நன்று. வைரமுத்து குறித்து அதிகம் பேசுவதற்கு இல்லை. அவரை விட திறமைசாலிகள் இருந்தாலும் அதிகம் வெளிச்சத்திற்கு வரவில்லை என்பதே நிதர்சனம்.

  பதிலளிநீக்கு
 21. அன்பின் ஏகாந்தன் அவர்களது பக்கம் அழகு.. அவரது எழுத்து நடை அருமை..

  பதிலளிநீக்கு
 22. டகர டப்பா என்றைக்குமே டகர டப்பா தான்..

  எதோ ஒரு சமயத்தில அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதற்கு இப்போது வெட்கம்.. வருத்தம்..

  பதிலளிநீக்கு
 23. முதல் பகுதி சூப்பர் ஸ்ரீராம். பேச நிறைய இருக்கு. ஆனால் நேரமின்மையால் இயலாமை என்பதோடு பாட வகுப்பு போல ஆகிடுமே என்ற அபாயம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். சொல்ல வந்த விஷயம் மயிரிழையில் பாதை மாறி விடும் அபாயமும் உண்டு.

   நீக்கு
 24. ஏகாந்தன் அண்ணா, உங்கள் அனுபவங்கள் சூப்பர்.

  வெளிநாடுகளில் இப்படித்தான் நம்மூர்க்காரர்களைத் தெரிந்துகொள்வது முதலில் கோயில்கள், அப்படிச் சந்திக்கும் போது பரஸ்பரம் எண்கள் பரிமாறிக் கொண்டு, பஜன், ஆடி வெள்ளி, தை வெள்ளி... நவராத்திருக்கு வந்திடுங்க....குழந்தைகளின் நடனம் பாட்டு கோயிலில் அரங்கேற்ம் தினம் சொல்லி வந்திடுங்க இப்படி நிறைய தெரிந்து கொள்ள முடியும்.

  உங்கள் இந்திய வட்டமும் பாருங்க பஜனையில் தொடங்கியிருந்திருக்கு. ரசித்து வாசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 25. யதார்த்தம் பேசும் கவிதைகள்! அந்தக்காலம், என்று நம் பிள்ளைகளும் எதிர்காலத்தில் சொல்லக் கூடும்!

  அதே போன்றுதான், இரண்டாவதும் - சிலர் நான் அப்படிச் செய்தேன் இப்படிச் செய்தேன் கஷ்டப்பட்டேன் நான் தான் உருவாக்கினேன் வளர்த்துவிட்டேன்...கண்டிப்பாக இது சொல்லப்படும் இடம் பொருள் ஏவல் பொருத்து இருக்கு. சில இடங்களில் அனுபவமாகப் பிறருக்கு ஒரு பாடமாக. சில சமயம் அது தலைக்கனமாகவும் தோன்றக் கூடும்.

  கீதா

  பதிலளிநீக்கு
 26. கர்நாடகா - குறிப்பாகப் பெங்களூரில் (மத்த ஊர் பற்றித் தெரியாதே!) கழுகுக் குடும்பங்கள் பெருகி யிருக்கின்றன. நிறைய பார்க்கலாம்.

  கடைசி செய்தி - நான் தினமும் பார்த்து வருகிறேன். விபத்துகளை அல்ல. மக்கள் நடக்கும் போதும் ஃபோன் பேசிக் கொண்டே, அல்லது வீடியோ பார்த்துக் கொண்டே வாட்சப் பார்த்துக் கொண்டே.....செல்வதை ஓட்டும் போதும் செய்வதைப் பார்க்கிறேன். இங்கு போலீஸ் அவ்வப்போது வண்டிகளில் வந்து சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். ரோட்டில் ஃபோன் பயன்படுத்தாதீங்கன்னு.

  டாக்டர் செய்தி - எத்தனை படித்தால் என்ன மனித மனம் பொல்லாதது. அதை அடக்கத் தெரியலைனா சங்கடம்தான்.

  மற்ற செய்திகளும் பார்த்துக் கொண்டோம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 27. ஏகாந்தன் சாரின் எழுத்து என்னை 89 மேட்டூருக்கும் 93 துபாய்க்கும் இழுத்துச் சென்றன. 89ல் பேச்சலர், நல்ல பையன் என்பதால் கூட வேலைபார்த்த எல்லோர் வீட்டிற்கும் உணவுக்குக் கூப்பிட்டுவிடுவார்கள். அதிலும் ஒருவர் அவர் ஷிப்ட் வரும்போது, இன்று மாலை இன்ன டிபன், உனக்கு (உங்களுக்குன்னு ஆபீசில் சொல்வார்) பிடிக்கும் வந்துவிடும்பார். நானும் சில நாட்கள், மறந்து தூங்கிவிட்டேன், இரவு 9 மணி, பசிக்குது என்று சொல்லி அவர் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டருக்கிறேன்.

  துபாயில் தேராவிலிருந்து பர்துபாய்க்குச் ஒருவர் வீட்டிற்குச் செல்வேன் (அப்போ அவர் குடும்பம் மும்பையில் அவர் தனியா இருந்தார். அவர் மச்சின்னும் வார இறுதியில் அதாவது வியாழன் இரவு 8 மணிக்குச் சேர்ந்துகொள்வான். இரவு உணவு தயார் செய்து நானும் அவர்களுடன் உண்பேன். மறுநாள் மாலை வரை அங்கிருப்பளன். அந்த நல்ல உள்ளத்தின் கான்டாக்ட் நம்பர்தான் இல்லாமல் போய்விட்டது. இன்னும் நிறைய நல்ல உள்ளங்களை துபாயில் சந்தித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. பஹ்ரைன் சத்சங்கத்திலும் வலுவில் கேட்டு நாங்கள் ஒரு ஐட்டம் அனைவருக்கும் பண்ணிக்கொண்டு போவோம். இல்லைனா ஹோஸ்ட் தம்பதிகளே எல்லாம் செய்ய ஆர்வமாக இருப்பார்கள். அதெல்லாம் பொற்காலங்கள்.

  பதிலளிநீக்கு
 29. நான் ஜோசியம் பக்கம் செல்வதில்லை.

  ஆனால் நான் ஜோஸ்யம் எனும் பாடத்தை மறுப்பதில்லை. அதை முறையாகக் கற்றுக் கொண்டு அதாவது அறிவியல் போல அதைக் கையாளலாம்தான். திரு ரவி சாரங்கன் எழுதுவது சுவாரசியமாக இருக்கிறது. என்பதோடு logical ஆக யதார்த்தமாக இருக்கிறது.

  அவர் இங்கு சொல்லியிருப்பது போல் பெண் ஜாதகங்களை பொருத்தம் பார்க்கும் போது சரியாகப் பார்ப்பதில்லை. அதாவது சும்மா கல்லானாலும் புருஷன், தாலி பாக்கியம் இருக்கா, அடிச்சாலும் புடிச்சாலும் கடைசி வரை சேர்ந்திருப்பாங்களான்றது மட்டும் தான் பார்க்கிறாங்க. மிக முக்கியமான ஒன்றான compatibility இதைப் பார்ப்பதில்லை.

  //பெற்றோர்களுக்கு எப்படியாவது பெண்ணுக்கு கல்யாணம் பண்ணிடனும்னு துடிக்கிறார்கள் ஜோதிடர் சாமியார் என யாரை பார்த்தாலும் ஓடுகிறார்கள்//

  அதே அதே அதே!!! பெண்ணிற்கு மட்டுமல்ல பிள்ளைக்கும்தான். பெண்ணிற்குச் சற்றுக் கூடுதல். அப்ப்டியே டிட்டோ செய்கிறேன்.

  //சமீபத்தில் கோயிலில் ஒரு பெண்மணி அடியேன் யார் என்று கூட அவருக்கு தெரியாது என் பெண்ணுக்கு எப்ப கல்யாணம் ஆகும் சொல்லுங்க என வருகிறார் அடியேன் நல்லவனா கெட்டவனா எப்படி தெரியும் அவருக்கு அந்த அளவுக்கு எத்தை தின்னா பித்தம் தெளியும் என மக்களின் மனம் . பாவமாவும் வேதனையாகவும் இருக்கு//

  Very practical man. ரொம்ப நன்றாகச் சொல்கிறார்!!

  //பெண்ணை பெற்றவர்களால் ,உறவுகளால், எப்படி ஒரு பெண்ணுக்கு துன்பம் ஏற்படுகிறது - நாளை விரிவாக பார்க்கலாம்//

  ஸ்ரீராம் இப்பகுதியை கண்டிப்பாக இங்கு பகிர வேண்டும்னு கேட்டுக் கொள்கிறேன். நம் எல்லாரிடமும் இதுக்கு நிறைய அனுபவ்னகள் பார்த்தவை கேட்டவைன்னு இருக்கும் இவர் என்ன சொல்கிறார் என்பதை அறியும் ஆவல்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கு தொடர்ச்சியாகக் கிடைத்தால் கண்டிப்பாக பகிர்கிறேன் கீதா.  சரியாக பார்ப்பதில்லை என்கிற கருத்த சரியானதாக இருக்குமா என்று சொல்ல முடியவில்லை.

   நீக்கு
 30. வைரமுத்து, வாலி, ராஜா, மெல்லிசை மன்னர், ரஹ்மான், பாலச்சந்தர் மணி ரத்தினம்....எல்லாம் பத்திரிகைகளில் எழுதுவதை வைத்துத்தான் நாம் சொல்கிறோம் இப்படி அப்படி என்று. உண்மையில் நடந்தது என்பது அவரவர் கோணத்தில் பேசுகின்றனர். இதெல்லாம் பெரும்புள்ளிகளாக இருந்தால் சகஜமப்பா! நாம நமக்குப் பிடிச்சிருந்தா ரசிப்போம் உருவங்களை அதோடு இணைத்துப் பார்க்காமல்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  ஆனாலும் பிடித்ததை பிடித்திருக்கிறது என்று சொல்வதில் என்ன இருக்கிறது!  நான் பாடல் வரிகளை சொல்கிறேன்.

   நீக்கு
 31. உங்க்ள் வோட்டு யாருக்கு - அதில் சலவைத் தொழிலாளி முதல் புத்தகவங்கியில் புத்தகம் வாங்கி படிக்கும் சட்டக்க்ல்லூரி மாணவர் வரை பேசுவதைக் கேட்க வேண்டும்!!!!//

  இந்த மூளைச் சலவை பத்தி அப்பவே புலம்பல்.. இப்ப, கண்டபடி அரசியல் பேசும் யுட்யூபர்ஸ் வரை கேட்க வேண்டியிருக்குமே!

  அப்போது சொல்லப்பட்டிருப்பது இப்ப வரை பொருந்திப் போகிறது என்பதைப் பார்க்கறப்ப நாம வளரவே இல்லை!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரசியலில் எப்போதும் ஒரே மாதிரி (அ)யோக்கியர்கள்தானே!

   நீக்கு
 32. அந்தக்காலம் இந்தக்காலம்னு இனி பேசாதீங்க எல்லாக் காலத்திலும் கெட்ட பழக்கங்கள் இருந்திருக்கு. இருக்குதான். அப்ப தெரியலை....இப்ப கைக்குக் கை கேமரா செல்ஃபோன், யுட்யூப் எல்லாம் இருக்கறதுனால எல்லாம் வந்திருது அம்பலமாக. அண்ணா தேர்வு எழுதியது பற்றிய துணுக்கைச் சொல்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் விஷயம் படிக்கும் காலத்தில் அண்ணாவுக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்குமா?  இருந்திருந்தாலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குமா?  ஏதோ ரசிக்க ஒரு துணுக்கு!

   நீக்கு
 33. மலையைக் கெல்லி எலியை பிடிச்சாங்களா இல்லையா? பண்டைய கலிஃபோர்னியா போல இப்பவும் அங்கு பிரச்சனைகள் இருக்கின்றனவே. அங்கும் தண்ணிப் பிரச்சனை உண்டு. தண்ணீரைச் சிக்கனமாகச் செலவிடுங்கன்னு சொல்வதுண்டு.

  எதை நோக்கி - வாசிக்கத் தொடங்கியதும் வழக்கமான அமாவசை புதிரோன்னு நினைச்சேன்!

  கீதா

  பதிலளிநீக்கு
 34. பறவை பற்றியது தகவல்.

  தென்னையும் நண்டும் - கேரளத்தில் பார்த்திருக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 35. தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது எதிரே பல வருடங்களாய் பார்க்காமலிருந்த ஒரு உறவை, அல்லது நட்பை பார்க்கிறீர்கள்? உங்கள் உணர்வு எப்படி வெளிப்படும்? //

  பல வருடங்களாய் என்பதால் மாற்றங்கள் அவர் உடலில் முகத்தில் வந்திருக்கும்தானே. பெயர் நினைவிருக்க வேண்டுமே. தெரிந்துவிட்டால் அருகில் சென்று மகிழ்ச்சியுடன் பேசிவிடுவேன். அவர்தானா என்ற சந்தேகம் வந்தாலும் கொஞ்சம் தயங்கிவிட்டு அருகில் சென்று உறுதிப் படுத்திக் கொண்டு அவரேதான் என்று தெரிந்தால் மகிழ்ச்சியில் பேசத் தொடங்கிவிடுவேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உருவ மாறுதல் பற்றியும் சரியாய்ச் சொல்லி இருக்கிறீர்கள் துளஸிஜி.  நன்றி.

   நீக்கு
 36. மனிதர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதம். உணர்வுகளை வெளிப்படுத்துவதிலும் தான். அவர்கள் வெளிப்படுத்தும் விதத்தை வைத்து எடை போட்டும்விடமுடியாது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எடை போட இல்லை.  தெரிந்து கொள்ள, பார்த்து ரசிக்க ஜி!

   நீக்கு
 37. ஏகாந்தன் சாரின் அனுபவங்களை அவர் எழுதும் விதம் அருமையாக இருக்கிறது.

  லு என்பவர் வடகிழக்கு மாநிலத்தவராக இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் ஷீரடி பாபா பஜன் என்றதும் ஒரு சின்ன சந்தேகம் வந்தது. கடைசியில் வெங்கடேஸ்வரலு தான் லு என்றாகியிருக்கிறது. இப்படிப் பலரது பெயர்களும் சுருக்கப்பட்டிருக்குமோ?

  அந்த நாட்டைப் பற்றி நிறைய அரிய தகவல்கள். தொடர்கிறோம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 38. எட்டிப் பார்க்கும்
  குட்டி நினைவுகள்

  சிந்திக்க வைக்கிறது. இரு பகுதிகளுமே ஆழமான கருத்துக்கள். இறப்பு பிறப்பு என்று அலசிச் செல்கின்றன, ரசித்தேன்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 39. திரையுலகத் தகவல்கள் திரையுலகில் போட்டி பொறாமை வஞ்சம் ஏமாற்றல் என்றுதான் அதிகம் பேசப்படும். நாம் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம்,

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 40. எங்கள் வோட்டு பகுதியில் நல்ல கருத்துகள் சில சொல்லப்பட்டிருக்கிறது.

  அறிஞர் அண்ணா பற்றிய துணுக்குத்தகவல் புதிய தகவல்

  டாலரின் தோற்றம் சுவாரசியம்.

  எதை நோக்கி என்பது அரசியலை மறைவாகத் தாங்கிவருவது போல் இருக்கிறது.

  தேங்காய் நண்டு எங்கள் ஊர்ப்பக்கங்களில் உண்டுதான். அதிகம் இல்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 41. அதே போல என் மகன்கள் பேசும்போது அவர்கள் முகத்தையே நான் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். முகத்தைக் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பினால் பேச்சை நிறுத்தி விடுவார்கள். //

  என் மகனும், பேரனும் அப்படித்தான் அவர்கள் பேசும் போது அவர்களை பார்க்க வேண்டும் முகபாவங்கள் மாறும், மகன் பேசும் போது குருக்கே பேச கூடாது நான் சொல்வதை மட்டும் கேளுங்கள் என்பான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் மகனும் அப்படித்தான் கோமதிக்கா. நானும் அப்படித்தான்!!!

   கீதா

   நீக்கு
  2. நிறைய பேர்கள் கேட்பவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் போலும்! ஆனால் சிரமம் அக்கா, கீதா!

   நீக்கு
 42. சோமாலியாவில் லூ அவர்கள் வீட்டில் நம் உணவுகள் பிரசாதமாக கிடைத்து மகிழ்ச்சிதான். லூ அவர்களின் பெயர் காரணமும் அருமை.

  பதிலளிநீக்கு
 43. ஆமாம், உங்கள் மகன்களைப் போல எனக்கும் நாம் பேசும் போது கேட்காமல் வேறு ஏதேனும் செய்யவோ, எங்கேனும் பார்க்கவோ செய்தால் கொஞ்சம் வருத்தமாகிவிடும்.

  ஓ ஒரே நேரத்தில் இரண்டோ மூன்றோ வேலைகள் செய்வது இப்படி உண்டு இல்லையா.. இது அப்பாவிடம் இருந்து கிடைத்த ஒன்றா. நல்ல விஷயம்தான். அதுகடினமான விஷயம்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா... கொஞ்சம் அப்படி இப்படி திரும்பினால் கூட தவறா என்ன!

   நீக்கு
 44. கவிதை தத்துவமாக இருக்கிறது, இப்படி யோசிப்புகள் வரும் தான் வயது ஆக ஆக.
  ப்டி
  நியூஸ் ரூம் படித்தேன்.
  ஜாதகம் திரு ரவி சாரங்கன் அவர்கள் சொல்வது சரியே. காலங்கள் மாறினாலும் பெண்கள் நிலை இன்னும் மாறவில்லை.

  பொக்கிஷ பகிர்வில் பறவைகளை பற்றிய செய்தி அருமை.

  பதிலளிநீக்கு
 45. இளையராஜா - வைரமுத்து அலசல் நன்று.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம் சகோதரரே

  இன்றைய கதம்பம் எப்போதும் போல் அருமை. நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. முதல் பகுதியில் தங்களின் எண்ணங்கள் சரியே.. .

  தங்களின் தத்துவார்த்தமான கவிதை நன்றாக உள்ளது.

  /நான் இல்லாவிடினும்
  அவை
  நிகழ்ந்திருக்கும்.
  நான் பிரியும்போது
  ஞானம் பிறக்கும்.

  பிரிவதும் பிறத்தலும்
  நிகழ்வதில்லை
  எல்லோருக்கும்/

  உண்மை... இவ்வரிகளை ரசித்தேன். நான் என்பது விலகினால் ஞானம் பிறக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எடுத்துக் காட்டி ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 47. வணக்கம் சகோதரரே

  சகோதரர் ஏகாந்தன் அவர்களது பக்கம் ஸ்வாரஸ்யமாக உள்ளது. நண்பர் ஆந்திரகாராரின் பெயர் கடைசி எழுத்தில் வந்து அறிமுகபட்டிருப்பது நகைச்சுவை. மற்றபடி வெளி நாட்டிலும், தெய்வ பக்தியுடன் வியாழன் நகர்ந்தது சிறப்பு.

  சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தி அறை பக்கமும் அனைத்தும் படித்து தெரிந்து கொண்டேன்.

  ஜாதக அலசல் நன்று. அவர் சொல்வதெல்லாம் உண்மைதான். ஆனால், பல திருமணங்களின் போது இதை ஆராய்ந்து அதன படிக்கு நடக்க விடாமல் விதி அவசரமாக சதி செய்து, சதி, பதியை இணைத்து விடுகிறது. ஆக விதியின் பலன்களில் இருந்து தப்ப முடியவில்லை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 48. வணக்கம் சகோதரரே

  பொக்கிஷம் பகுதிகள் அனைத்தும் அருமை. டாலர் குறியீடு தெரிந்து கொண்டேன். பறவையின் புழுதி குளியல் செய்தி விநோதம். பறவைகளின் நீர் குளியல் பார்த்திருக்கிறோம்.

  தென்னை நண்டும், தென்னைமரத்து வண்டும் ஒன்றா? வண்டும் பெரிதாக கனமாக இருக்கும். அதைப் பார்த்திருக்கிறேன்.சிறு வயதில் அது இருட்டான ஒரு இரவு நேரத்தில் என் தோள் மீது வந்து விழ அதை கீழே தள்ளி விடுவதற்கு நான் பட்ட பாடு மறக்க முடியாதது. அப்போது எங்கள் வீட்டருகில் தென்னை மரங்கள் அதிகம். ஒரு வேளை இரண்டும் ஒன்றோ என்னவோ..! இன்று நீங்கள் தந்த தகவலைப் படித்ததும் அதன் நினைவு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 49. ஏகாந்தன் சாரின் அனுபவங்கள் வெளிநாடு செல்லும் பலருக்கும் ஏற்படுவதுதான். கூடியிருந்து குளிர ஒரு வாய்ப்பாகத்தான் இப்படிப்பட்ட பஜனை, பூஜை முதலியவை கருதப்படும்.

  பதிலளிநீக்கு
 50. சிந்திக்க வைக்கின்றன அவதானிப்புகளும் கவிதைகளும். டாலர், பறவைகளின் புழுதிக் குளியல், தேங்காய் நண்டு ... பல அறியாத தகவல்கள்.

  சிறப்பான தொகுப்பு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!