வியாழன், 29 பிப்ரவரி, 2024

கண்ணுக்கு தெரியாமல் கைமாறும் காசு

 எங்கள் பெயரில் அப்பா வைத்திருந்த பினாமி கணக்கு!  இதைத்தவிர பிறந்த நாளுக்கு அப்பா தரும் காசும் அதில்தான் இருக்கும்.  அப்பா பெரும்பாலும் அம்மாவிடமிருந்தும் அவ்வப்போது எங்களிடமிருந்து 'கடன்' வாங்குவார்!  வரவு - செலவுக் கணக்கு நோட்டில் எங்கள் பெயர்கள் ஏறும்.  இன்னமும் என் பிரவுன் கலர் சொரசொர பர்ஸ் என் நினைவில் இருக்கிறது.  உள்ளே புது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகள்...நாணயங்கள்..  அதற்கான கணக்கு சொல்லும் வெள்ளை பேப்பர்...   

இப்படி முடித்திருந்தேன் சென்ற வாரம்...  தொடர்கிறது..

இப்போது நினைத்துப் பார்க்கும்போது அது என் பணம்தான் ஆனால் என் பணமல்ல!  இன்றைய டிஜிட்டல் பணம் மாதிரி! அவ்வப்போது அப்பா ஆபீஸ் சென்றிருக்கும் நேரம்  அம்மாவைக் கெஞ்சி அதை எடுத்து தொட்டுப் பார்த்து சந்தோஷம் கொள்ளலாம்.  'போறும் கொடு... போறும் கொடு' என்று அவசரப்படுத்தும் அம்மா திருப்பி வைக்கும்போது அதை எண்ணிப் பார்த்து பேப்பர் கணக்குடன் 'செக்' செய்து கொள்வாள்.  எடுத்துக் கொண்டேனோ என்கிற சந்தேகம்..  நான் தவறாக நினைக்கக் கூடாது என்று, 'கீழே எங்காவது விழுந்து வைத்து, நாம் பார்க்காமல் இதில் குறைந்து, அப்பா பார்த்து விட்டால்...  அவ்வளவுதான்' என்று பயமுறுத்தலுடன் உள்ளே வைப்பார்.  உஷார்!  நான் கடக ராசி, கடக லக்னத்துக்காரன்..  இப்படி வெளிப்படையாக தெரிகிற இடத்தில எல்லாம் என் கைவரிசை இருக்காது!  விஞ்ஞான முறைப்படி தான் ஊழல்!

என்ன சொல்ல வருகிறேன் என்றால் சம்பளம் வாங்கி பணத்துடன் வரும் நாளின் சந்தோஷம்.  என் அப்பாவிடம் வரவு செலவுக்கணக்கு எழுதும் பழக்கம் இருந்தது என்று சொன்னேன், ஆனால் அவர் பட்ஜெட் பிரித்து செலவு செய்தாரா என்று எனக்குத் தெரியாது.  எங்களுக்கு வரவு செலவுக் கணக்கு எழுத சொல்லிக் கொடுத்தார்.  யார் எழுதினார்களோ இல்லையோ, நான் எழுதினேன் - கொஞ்ச காலம்.  வேலைக்கு சேர்ந்து சுமார் பதினைந்து பதினாறு வாருங்கள் என்னிடம் அந்தப் பழக்கம் இருந்தது.  பல சமயங்களில் பல விதங்களில் உபயோகமாக இருந்தது.  

ஆரம்ப காலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தபோதும், அப்புறம் அரசு வேலை கிடைத்ததும் ஒன்றாம் தேதி  அன்று கையில் காசு வரும் நாள் ஒரு தனி உற்சாகம்தான்!  தனியார் நிறுவனத்தில் ஒன்றாம் தேதி அல்லது இரண்டாம் தேதி வேலை முடிந்து புறப்படும் சமயம் ஒரு கவரில் போட்டு சம்பளம் கைக்கு வரும்.    அரசு அலுவலகத்தில் மாதத்தின் கடைசி வேலை நாளிலேயே கைக்கு வந்து விடும்.  ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டப்பட்டு நம் கையெழுத்துக்காக காத்திருக்கும்.  கையெழுத்தை இட்ட உடன் பெரும்பாலும் உயர் அதிகாரி கையால், அல்லது பட்டுவாடா செய்யும் கிளார்க் கையால் கையில் சம்பளம் வந்து விடும்.  அங்கேயே உட்கார்ந்துகொண்டு அதை ஒருமுறைக்கு இருமுறை எண்ணி சரியாக இருக்கிறதா என்று பார்த்து, நம்மையே பார்த்துக் கொண்டிருக்கும் க்ளர்க்குக்கு சரி என்பது போல தலையாட்டி விட்டு பாக்கெட்டில் பணத்துடன் அறையை விட்டு வெளியே வரும் நாம்தான் அன்று ராஜா!

ராஜபார்ட் ரங்கதுரையில் ஒரு வசனம் வரும்.    தம்பி ஸ்ரீகாந்தின் மாமனார், ரங்கதுரையின் விசிறி.  அவர் ரங்கதுரையை தங்கள் வீட்டிலேயே வந்து இருக்கும்படி அன்புடன் மனதார அழைப்பார்.  சிவாஜி - ரங்கதுரை - மறுத்து விட்டு சொல்வார்.."பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும் ராத்திரில ராஜா வேஷம் போட்டு நடிக்கிறதுல இருக்கற இன்பம் எங்கேயுமே கிடைக்காதுங்க" என்பார்.

அதுபோல அன்று ஒருநாள் ராஜா நாங்கள்.  அல்லது பத்து நாள் ராஜா!  அந்த இன்பம் இன்று சம்பளம் வரும் நாளில் எஸ் எம் சில வந்து விழும் மெசேஜ் பார்க்கையில் இல்லை!  "வேணும்ங்கும்போது வேண்டிய அளவு - ஆனால் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் - என்கிற கட்டுப்பாடுடன் அரசாங்கமே நம் காசை தன் கையில் வைத்திருக்கிறது.   

'கையில வாங்கினேன், பையிலே போட்டேன் போன இடம் தெரியலே' என்று ஒரு பாடல் வருமே அது போல கொஞ்ச நாட்களிலேயே கட்டு கரைந்து கொண்டே வந்து காணாமல் போய்விடும்!  இருபது, இருபத்தைந்து தேதிக்கு மேல் அந்த ரெவின்யு ஸ்டாம்ப் நாளுக்காக காத்திருக்கும் மனம்!  என் அலுவலகத்தில் வேலை பார்த்த சில கீழ்நிலை ஊழியர்களுக்கு கையில் வாங்கியது தான் தெரியும்.  அடுத்த அரைமணியில் கையில் ஒன்றும் இருக்காது.  வாங்கிய கடன் பட்டுவாடா சரியாய் இருக்கும்!  அவராகவும் கொடுப்பார்.  அல்லது கொடுத்தவர்கள் காத்திருந்து அடித்துப் பிடுங்கிப் போவதும் உண்டு!  பாவம் அவர்தம் மனைவிமார்கள்.  மாதத்தை எப்படி சமாளிப்பார்களோ...  அப்போது டாஸ்மாக் என்கிற பெயர் வரவில்லை.  அவ்வளவுதான்.

சம்பளம் வாங்கி வந்து அப்பா போல காசு டப்பா இல்லா விட்டாலும், நானும் ஒரு தோல்பை வைத்திருந்தேன்.  அதில் காய்கறி, ஸ்கூல் பீஸ், வெண்ணெய், காய்கறி, காபி பொடி என்றெல்லாம் எழுதிய பேப்பர்கள் இருக்கும்.  அததற்கான பணத்தை பிரித்து அந்தந்த பேப்பருடன் இணைத்து ரப்பர் பேண்ட் போட்டு வைத்து விடுவது வாடிக்கை.

ஆரம்பம் முதலே என்னிடம் பர்ஸ் வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.  அன்றன்றுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்து மூன்றாய்ப் பிரித்து சட்டைப்பை, இரண்டு பேண்ட்ஸ் பாக்கெட் என்று வைத்துக் கொன்டு செல்வேன்.  

அன்று சம்பளம் ரூபாய் நோட்டுக்களாய் கையில் வாங்கினோம்.  ஒவ்வொரு கடையிலும் மற்ற இடங்களிலும் பணமாய்த்துதான் கொடுத்து மாற்றினோம்.  அப்போது ATM கார்ட் இல்லை. கையில் முதலில் ஃபோன் கூட இல்லை.  பின்னர் ஃபோன் வந்தும் அதில் பணம் செலுத்தும் வசதியும் இல்லை!  இப்போதுதான் பணத்தை கண்ணில் பார்க்காமலே ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டிருக்கிறோம்!

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சம்பவம்.  அலுவலகத்தில் அமர்ந்திருந்த சமயம் ஒருவர் என்னைத்த்டி வந்தார்.  அவரை கீழே பார்த்திருக்கிறேன்.  செக்கியூரிட்டிகளில் ஒருவர்.  என் பெயர் சொல்லியபடி உள்ளே வந்தார்.  கேள்விக்குறியுடன் நிமிர்ந்து பார்த்த என் கண்கள் அவர் கையில் இருந்த வஸ்துவைப் பார்த்தன.  என் ATM Card.  காலை வந்து இறங்கும்போது வாசலில் விழுந்திருந்திருக்கிறது.  அந்த கணம் வரை நான் கார்ட் தொலைந்ததை  அறிந்திருக்கவில்லை!  அவர் அதிலிருந்த ஒரு துண்டு சீட்டை பார்த்து, அதில் இருந்த போன் நம்பருக்குஞ் அழைத்து விசாரிக்க அது என் பாஸுக்கா செல்ல வேண்டும்?  அவர் விவரம் சொல்ல,  'ஆ..  அவரா..  நான் பார்த்திருக்கிறேன்' என்று சொல்லி என்னிடம் வந்து பத்திரமாக நீட்டினார்!  பர்ஸ் வைத்துக் கொள்ளாததால் வந்த கஷ்டம்.  முதல்நாள் ஏதோ பெரிய செலவுக்கு கார்ட் எடுத்துச் சென்றவன் அதை தனியே எடுத்து வைக்க மறந்து, அப்படியே கொத்தாய் பையில் - அதுவும் பேண்ட்ஸ் பையில் - போட்டுக் கொண்டு கிளம்பியதால் வந்த வினை.  அன்று நான் அணிந்த சட்டையில் பாக்கெட் இல்லை.  ஏதோ கடவுள் கொஞ்சம் என்னை நினைவு வைத்திருக்கிறார் போல...  அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் பாட்டு கேட்டிருப்பேன் என்று உங்களுக்கே தெரியும்!

==========================================================================================


ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதி வித்தியாசம் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஒரு போதும் வெறியாக மாறியதில்லை. புலம்பெயர்ந்தபோது சாதியும் புலம்பெயர்ந்தது. ஆனால் இன்று, ஒரு தலைமுறை கடந்த நிலையில், சாதி வித்தியாசம் எங்காவது அபூர்வமாகவே தென்படுகிறது. இங்கே கனடாவில் ஏறக்குறைய 60,000 தமிழ் மாணவ மாணவிகள் கல்வி கற்கிறார்கள். எந்தப் பள்ளிக்கூடத்திலும் போய் ஒரு மாணவனிடமோ, மாணவியிடமோ ’நீ என்ன சாதி?’ என்று கேட்கலாம். அவர்கள் பதில் ’சாதி என்றால் என்ன?’ என்றிருக்கும்.
நேற்று ஒரு விருந்துக்குப் போயிருந்தேன். அங்கே சமீபத்தில் மணமுடித்த தமிழ் தம்பதியினரை சந்தித்தேன். பெற்றோர்கள் பேசிச் செய்து வைத்த கல்யாணம். உங்கள் கேள்வி எனக்கு ஞாபகம் வந்தது. பெண்ணிடம் அவர் கணவனின் சாதி என்ன என்று கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை. ஆணிடம் அவர் மனைவியின் சாதி என்னவென்று கேட்டேன். அம்மாவிடம் கேளுங்கள் என்றார்.
-அ.முத்துலிங்கம்

மேற்கண்ட தகவல் Face Book ல் பகிரப்பட்டிருந்தது.  கீழே உள்ளவை அதற்கு வந்த கமெண்ட்ஸ். 

நோயல் நடேசன் :
சாதி பாகுபாடு இருந்து . கலவரம் நடைபெற்றது. 1960 பின் social disability act என இலங்கை அரசாங்கம் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பின் சாதி வேறுபாடுகள் சட்டத்திற்கு எதிரானவை . அக்காலத்தில் வளர்ந்தவர் நான் முத்துலிங்கம் போன்றவரகள். 60 பின் மொழி போராட்டத்தில் சாதிகள் ஒன்று படவேண்டும். மறைமுகமாக இருந்து , இருக்கும். புலம் பெயர் நிலை வேறு.

மணி மணிவண்ணன் 
புலம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகள் தத்தம் தமிழ் அடையாளங்களையே வெகுவிரைவில் இழந்து விடுகிறார்கள். மலேசிய, சிங்கப்பூர் தவிர பிறநாடுகளில் தமிழ் அடையாளத்தைப் பேணுவது கடினம். இதில் சாதி அடையாளம் இருப்பது மிகக்கடினம்.

தேவ தாசன் 
இவருடைய கருத்து அப்பட்டமான பொய்
புலம்பெயர்ந்து சென்றவர்களுக்கு அங்கு குழந்தை பிறந்தால் பத்து வயது கழிய ஏதோ ஒருவகையில் தங்கள் சாதியை சொல்லிக்கொடுத்து விடுவார்கள்.
பாடசாலையில் சாதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை அது வெள்ளைக்காரனின் பாடசாலை..
தமிழ் பிள்ளைகள் அனைவருக்கும் தமது சாதி தெரிந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நட்பாக பழகுவார்கள்..பேச்சுத் திருமணம் என வருகிறபோது அச்சொட்டாக சாதி பார்ப்பார்கள்...

மெலிஞ்சி முத்தன் :
சாதியின் பெயரால் கிடைக்கும் அதிகார மனநிலை இலவசமாகக் கிடைப்பது. அந்த மனநிலையை உருமாற்றி, மறைத்துவைத்து வேறேதும் அதிகாரக் காரணிகளோடு கலந்துகட்டிப் பிரயோகிக்கக் கூடியது. புலம்பெயர் நாடுகளில் இது நடக்கிறது. சாதி இருக்கிறதா இல்லையா என்பதை இவர் சொல்லும் (ஆய்வு)முறையே மிகப் பெலவீனமானது. வாசகர்கள் திரும்பிக் கேளுங்கள் 'எழுத்தாளரே நீங்கள் என்ன சாதியென்று' அப்போது ஒரு துலக்கம் வரலாம்.

தேவதாசனின் பதில் :
எழுத்தாளர்களுக்கும் சாதி உண்டு..
அவர்களும் இந்த சமூக பிராணிகள்தான்.
எழுதுவதனால் மட்டும் சாதியை கடந்துவிட முடியாது.
ஒரு எழுத்தாளனோ அல்லது சாதரணமானவரோ வேறு நிறத்தவரை வேறு மொழி பேசபவரை திருமணம் செய்திருந்தாலோ அல்லது நண்பியாகவோ நண்பனாகவோ உறவு வைத்திருந்தால் சாதியை கடந்து போக வாய்ப்புண்டு.
இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பணத்தில் திருமணபந்தத்தை ஏற்படுத்திய ஆணும் பெண்ணும் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் சாதி அவர்கள் கூடவே பயணிக்கும்.

====================================================================================================

சமீபத்தில் குன்றத்தூர் சென்றபோது இந்தக் காட்சியைக் கண்டு ஃபோட்டோ எடுத்து முகநூலில் பகிர்ந்திருந்தேன்.  நான் போட்டோ எடுப்ப்பதைப் பார்த்து ஓரிரு சிறுவர்கள் குதித்து ஓடி விட்டார்கள்!  இப்போது அந்தப் படத்தைப் போட்டு முகநூலில் நான் எழுதியதை இங்கே பகிர்கிறேன்..  தேதியைக் கவனியுங்கள்...  சமீபத்தில்தான்!


=========================================================================================================

ஏகாந்தமாய் 


அந்த மாலையில்.. அந்த வேளையில்….
-ஏகாந்தன்

புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக தன் வீட்டு வளாகத்தில் வந்திறங்கிய இந்திய அன்பர்களை கேசவன் சார் வரவேற்று அமரச் சொன்னார். ஓரத்தில் திறந்துவைக்கப்பட்டிருந்தது ஒரு மினி ‘பார்’.

டேவிட் ராஜ் இன் –சார்ஜ்! பீர், ஸ்காட்ச், கோக், ஜுஸ் என அவரவர் விருப்பப்படிக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மூலைக்கு மூலை நகர்ந்து நின்று பேசிக்கொண்டிருந்தார்கள் நண்பர்கள். 

பாட்டுக்கான மேடை, எதிரே அமர்ந்து ரசிக்க நாற்காலிகள் தயார் நிலையில். அப்போது மேடையில் தபலாக்களுடன் வந்தமர்ந்தார்கள் இரண்டு சோமாலிய இளைஞர்கள்! அட, இவன்களுமா இங்கே என ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கையில் இசை நிகழ்ச்சி ஆரம்பித்தது. அந்த இருவரில் ஒருவன் ஒரு
பாலிவுட் பாட்டை ரொம்ப கேஷுவலாக எடுத்து விட்டான். ”கோயா.. கோயா சாந்த்…// குலா ஆஸ்மான்..// ஆங்கோன் மே(ன்) ஸாரீ ராத் ஜாயேகீ…ஈ… // தும்கோ பி கைஸே.. நீந்து ஆயேகீ….ஈ..// முகமது ரஃபியின் காலத்தை வென்ற பாடல்களில் ஒன்று. அருமையான குரல் அவனுக்கு. அபாரமாகப்
பாடி அசத்திவிட்டான் அப்தி முகமது. களை கட்டியது சபை!

மாதமெல்லாம் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த உஷாவும் ரவீந்திரனும் மேடைக்கு வந்தனர் இப்போது.

’நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்..’ என கீச்சுக்குரலில் உஷா உத்தரவு போட, வேறு வழி தெரியவில்லை ரவீந்திரனுக்கு. மாட்டிக்கொண்ட ரசிகர் கூட்டத்திற்கும்தான் வழி தெரியவில்லை..

ஒரு வழியாகக் கேட்டுக்கொண்டிருந்தோரை சிரமத்திலிருந்து விடுவித்து மேடையைவிட்டு இறங்கினர் அந்த பாட்டு ஜோடி! லலிதா ஜெயராமன் இரண்டாவதாக அழைக்கப்பட, ஒரே மலர்ச்சியுடன் மேடையைப் பிடித்துக்கொண்டார் அவர். சிட்டுக்குருவி முத்தம் கொடுத்த கதையை அவர் ஒருவழியாக சொல்லி முடித்ததும், கூட்டம் அப்பாடா என்று ஆகாசத்தைப் பார்த்தது. சிலர் மெல்ல டேவிட் ராஜின் பார் பக்கம் போய் கொஞ்சம் ஊற்றிக்கொண்டு பூனைபோல் வந்தமர்ந்துகொண்டார்கள்.. மிஸ்டர்
லூவின் மகன் சாஸ்திரி (என்ன சாஸ்திரி? நினைவுக்கு வரவில்லை..) அழைக்கப்பட்டார். ஒரு தெலுங்கு படப்பாடலை சுமாராகப் பாடிவிட்டு அவர் கீழிறங்கினார்.

அடுத்தாற்போல் நண்பர் கோவிந்த்தின் பெயர். தயங்கியவாறு மேடைக்கு வந்தார். எல்லோரின் கவனமும் அவர் மேல். என்ன பாடப்போகிறார் இவர்? யாரோடும் உட்கார்ந்து பயிற்சியிலெல்லாம் ஈடுபட்டதாகத் தெரியவில்லையே. தமிழா.. ஹிந்தியா.. என்ன பாட்டு? உண்மையில் இவருக்குப் பாடத் தெரியுமா..- என்று சில பிரஹஸ்பதிகள் கிசுகிசுத்துக்கொண்டிருக்கையில்.. தலையை லேசாகக் கோதிக்கொண்டு ஆரம்பித்தார் கோவிந்த். யே ராத்.. பீகி.. பீகி…(bheegi)// யே மஸ்த் ஃபிஸாயேன்…// உ(ட்)டா தீரே… தீரே…(dheere) // ஓ சாந்த்.. ப்யாரா.. ப்யாரா…! (loosely translated as: (என்னவொரு) ஈரமான ஈரமான இரவு.. ஆனந்தம் தரும் இந்த வெளி, மெல்ல மெல்ல எழுந்து வரும் அந்த நிலா…//
(ஆஹா..)என்ன அழகு.. என்ன அழகு …) கவி ஷைலேந்தரின் வரிகள். சங்கர்-ஜெய்கிஷனின் மென்மையான இசையில் மன்னா டே/ லதா மங்கேஷ்கரின் வெகுபிரபலமான ராஜ்கபூர் படப் பாடல்.

நன்றாக ஆரம்பித்துப் பாடிக்கொண்டிருந்தார் கோவிந்த். குரலும் ஒத்துழைத்தது. இரண்டு பாரா பாடியிருப்பார்.. இடையிலே கூட்டத்தின் ஒரு வரிசையில் ஏதோ சலசலப்பு. சத்தம். இவர் தன்னைத்தான் கேலி செய்கிறார்கள், விமர்சிக்கிறார்கள் என்று நினைத்துவிட்டார் போலும்..(அங்கிருந்த சிலரோடு அவருக்கு ஒத்துப்போனதில்லை என்பது பின்னர் தெரியவந்தது). கோபம் மேலிட, பாட்டை நிறுத்திவிட்டு மேடையிலிருந்து இறங்கிவிட்டார் கோவிந்த். யாரோ ஏதோ சொல்ல முயற்சிக்க, கையை விலக்கியவாறே விடுவிடுவென நடந்து கடைசி வரிசையில்போய் உட்கார்ந்துகொண்டார். இனி அவரை அழைக்க வாய்ப்பில்லை. மேடைக்குத் திரும்பமாட்டார்.

ஒரு சின்ன இடைவேளை அறிவிக்கப்பட, அருகில் உட்கார்ந்திருந்த ஆப்ரஹாம் மெல்ல என்னைத் தட்டி சைகை காண்பிக்க, அவரோடு எழுந்து நடந்து காம்பவுண்டுக்கு வெளியில் வந்தேன். புகை பிடிக்காமல் இவ்வளவு நேரம் அவர் உட்கார்ந்திருந்ததே அதிசயம். மார்ல்பரோவை பற்றவைத்து 
ஊதியவாறு ”என்ன… கோவிந்து இப்படி செஞ்சிருச்சு.. அவங்க என்ன நெனப்பாங்க…’ என்று அங்கலாய்த்தார் ஆப்ரஹாம். பதிலாக, என் பென்ஸன் அண்ட் ஹெட்ஜஸிலிருந்தும் புகை கிளம்பி வெளியில் பரவியது. புகை, அந்த சோமாலிய இரவில் சுகம் சேர்ப்பதாகத் தோன்றியது..

நாங்கள் சீட்டுக்குத் திரும்புகையில் அடுத்த பாட்டு ஆரம்பமாகவில்லை இன்னும். சபையில் ஒரு இறுக்கம் பரவியிருந்தது. அதை சரி செய்ய முனைபவர் போல் விறுவிறுவென மேடையேறினார் கபூர்.  கனைத்துக்கொண்டார். கூட்டத்தின் கவனமும் கூடவே ஏறியிருக்க, ஆரம்பித்தார்: ”.. ஏக் தரஃப் உஸ்கா
கர்(ghar)..// ஏக் தரஃப் மேக்கதா..!// மே(ன்) கஹா ஜாவூன்..// மே(ன்) கஹா ஜாவூன்..// ஹோத்தா நஹி…  ஃபேஸ்லா..// ஏக் தரஃப் உஸ்கா கர்..// ஏக் தரஃப் மேக்கதா….”//  (நடந்து வருபவன் நடுவில் நின்று இப்படியும் அப்படியுமாய் பார்த்தவாறு..) ”ஒரு பக்கமோ அவள் வீடு.. இன்னொரு பக்கமோ (இந்தப் பாழாய்ப்போன) மதுக்கடை! எந்தப்பக்கம்.. நான் திரும்ப? (இரண்டோடும் எனக்கொரு நெருக்கம்
இருக்கிறதே..) முடிவெடுப்பதில்தான் என்ன ஒரு கஷ்டம்..”} என்று செல்லும் ஜஃபர் கோரக்புரியின்(Zafar Gorakphuri) கஸல் (Ghazal)- உருது வரிகளைப் பாடிப் பிரபலமாக்கியவர் பங்கஜ் உதாஸ். பாட்டை, சோமாலிய வாலிபர்களின் தபலா தட்டலுக்கேற்றபடி இதமாகப் பாடி அசத்திவிட்டார் கபூர். கொஞ்சம் ஸ்காட்ச்சை, பொருத்தமாக உள்ளேதள்ளிவிட்டு பாட்டுக்கேட்க வந்தமர்ந்திருந்த வடக்குகளின் தலைகள் ஸ்வரத்தோடு ஆட, (தமிழ்நாட்டுத்) தமிழர்கள் பலருக்கு வார்த்தைகள் புரிய வாய்ப்பில்லை.  இருந்தாலும் அந்த மாலை, அந்த ராகம், கபூர் குழைந்த விதம், எல்லாமாக ஒரு கலவையாகிக்
கவர்ந்துவிட்டதுபோலும். பலரின் முகங்களில் ஒளிர்ந்திருந்தது இசை.

அன்பர்களின் மேலும் ஒன்றிரண்டு தமிழ்ப் பாடல் முயற்சிகளுக்குப்பின் இசை மாலை நிறைவுபெற்றது.

சாப்பாட்டுக் கடை திறந்துவிடப்பட, குஷியோடு தட்டு பிடித்து வட்டமாக மேஜையைச் சுற்றி சுற்றி வந்து உணவு ஐட்டங்களை எடுத்துக்கொண்டனர். நல்ல ரசனையோடு செய்யப்பட்டிருந்த சங்கதிகள் வாய்க்கு ருசி சேர்த்தன. கொஞ்சம் அரட்டை, அளவளாவலோடு ’கொண்டாட்ட இரவு’ முடிவுக்கு வந்தது. கேசவன் தம்பதியருக்கு நன்றி சொல்லிவிட்டு, ஒவ்வொருவராகக் கிளம்பி வீடு திரும்பினோம்.

தூக்கம் வரத் தாமதித்த அந்த இரவில், மாலை நிகழ்ச்சிகளை அசைபோட்டவாறு படுத்திருக்கையில், அடுத்தநாள் லீவாக இருந்திருக்கக்கூடாதா என்கிற எண்ணம் மெல்ல எழுந்தது…

=====================================================================================================

புதுப்பிக்கப்படும் பழைய நினைவுகள்...


===================================================================================================


நகைச்சுவை நடிகர்..  அசடாய்த்தான் இருப்பார் என்று எளிதாய் கடந்து விடுகிறோம்....

2019 இல் டாக்டர் பட்டம் வாங்கிய நகைச்சுவை நடிகர் சார்லி


இதற்கு விதைபோட்டது யார்?- `டாக்டர்' பட்டம் வாங்கிய நடிகர் சார்லி சொல்லும் சுவாரஸ்ய அனுபவம் - கு. ராமகிருஷ்ணன்
``நான் பல தளங்கள்ல இயங்கக்கூடியவன்னு, என்னைப் பத்தி அவர்தான், வி.கே. ராமசாமிகிட்ட பெருமையா சொல்லியிருக்கார்.''
``டாக்டர் பட்டம் வாங்கணும்ங்கறது என்னோட கனவோ, நோக்கமோ எல்லாம் கிடையாது. நடிகர் வி.கே. ராமசாமி என் மேல ரொம்ப பாசமா இருப்பார். நான் அவரை அப்பானுதான் கூப்பிடுவேன். எங்க ரெண்டு பேரோட சொந்த ஊருமே விருதுநகர்தான். இதையெல்லாம் தாண்டி அவர் என் மேல மதிப்பா இருக்க, நடிகர் நாகேஷ்தான் முக்கியக் காரணம். நான் பல தளங்கள்ல இயங்ககூடியவன்னு, என்னைப் பத்தி அவர்தான், வி.கே. ராமசாமிகிட்ட பெருமையா சொல்லியிருக்கார். ஒரு தொலைக்காட்சி இன்டர்வியூவுல வி.கே. ராமசாமியோட நானும் கலந்துக்கிட்டேன்.
அப்பதான் அவர் சொன்னார் ``நல்ல திறமை இருந்தும்கூட, நகைச்சுவை நடிகர்கள்ல நிறைய பேர், வெளியில தெரியாமலே போயிட்டாங்க. அவங்க எல்லாம் மிகப்பெரிய கலைஞர்கள். அவங்களைப் பத்தி நீ பதிவு செய்யணும்”னு எனக்குள்ள ஒரு உந்துதலை ஏற்படுத்தினார். தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற தலைப்புல ஆய்வுல இறங்கினேன். நகைச்சுவையில மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்த காளி N.ரத்னம், பசி நாராயணன், தூத்துக்குடி அசோகன், கோவில்பட்டி துரைபாண்டி, பெரிய கருப்ப தேவர்.. இதுமாதிரி இன்னும் பல நகைச்சுவை கலைஞர்களைப் பத்தியும், அவங்களோட பங்களிப்பை பத்தியும் பதிவு செஞ்சேன்.
நகைச்சுவை கலைஞர்கள் வெறும் நடிகர்களாக மட்டுமல்ல, படைப்பாளியாகவும் இருந்திருக்காங்க. நாகேஷ், வி.கே ராமசாமி, ஒய்.ஜி. மகேந்திரன், எஸ்.வி.சேகர், எஸ்.எஸ். சந்திரன் போன்ற நகைச்சுவை நடிகர்கள் திரைப்படங்களையும் இயக்கியிருக்காங்க. திரைப்படங்களுக்கு நகைச்சுவை எழுதக்கூடிய A. வீரப்பா ஏழு தலைமுறைகளுக்கு பங்களிப்பு செலுத்தியிருக்கார். நகைச்சுவையில பல வகைகள் இருக்கு. உரையாடல் நகைச்சுவை, உடல்மொழி நகைச்சுவை, தொழில்நுட்ப நகைச்சுவை, அரசியல் நையாண்டி நகைச்சுவைனு இன்னும் சொல்லலாம். இதுமாதிரி என்னோட ஆய்வுகள் விரிவடைஞ்சிக்கிட்டே போச்சு.
சினிமாவுல பிஸியா இருந்தாலும் கூட, இதுக்காக நான் நிறைய உழைச்சிருக்கேன்


தொழில்முறை கலைஞராக உள்ள ஒருவர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துல முழு நேர ஆய்வு மாணவராக சேர்க்கப்பட்டது நான் ஒருத்தராகதான் இருக்கும். அப்ப துணைவேந்தரா இருந்த திருமலை சார்தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். மற்ற பேராசிரியர்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவங்க எல்லாருக்கும் இந்த நேரத்துல நான் நன்றி தெரிவிச்சிக்கிறேன். இந்த முனைவர் பட்டத்தை நான் பெருமையா நினைக்குறேன். சினிமாவுல பிஸியா இருந்தாலும்கூட, இதுக்காக நான் நிறைய உழைச்சிருக்கேன்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் டாக்டர் சார்லி.
நகைச்சுவை கலைஞர்கள் வெறும் நடிகர்களாக மட்டுமல்ல, படைப்பாளியாகவும் இருந்திருக்காங்க

நன்றி: விகடன்  ; நன்றி திரு R. கந்தசாமி 

=======================================================================================

நியூஸ்ரூம் 
பானுமதி வெங்கடேஸ்வரன் 
- தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 31 வயதான திரிஷ்னா என்பவர் சொந்தமாக விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். 

இரண்டு வருடங்களுக்கு முன் ஆன்லைன் திருமண வரன் பார்க்கும் தளத்தில் பதிவு செய்திருந்தவர், பிரபல வீடியோ சேனலில் செய்தி தொகுப்பாளராகப் பணியாற்றும் பிரணவ் சிஸ்ட்லா என்பவரின் சுய விவரத்தைப் பார்த்து தொடர்பு கொண்டு பேசி வந்தார். ஆனால் சைதன்யா ரெட்டி என்பவர் ஆள் மாறாட்டம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 

இது குறித்து பிரணவ் சிஸ்ட்லாவிற்கு தகவல் தெரிவித்த திரிஷ்னா அடிக்கடி பிரணவிற்கு வாட்ஸாப்பில் தகவல் அனுப்பியிருக்கிறார். இதை தொந்திரவாகக் கருதிய பிரணவ் திரிஷ்னாவின் நம்பரை பிளாக் செய்திருக்கிறார்.இதனால் ஆத்திரமடைந்த திரிஷ்னா தன்னிடம் வேலை பார்த்த ஒருவருக்கு 50,000 ரூபாய் தந்து, பிரணவை கடத்தி வரும்படி கூறினார். 

அதன்படி கடத்தி வரப்பட்ட பிரணவ் தொடர்ந்து பேசுவதாக ஒப்புக் கொண்ட பின்னரே அவரை விடுவித்தார். நேராக காவல் நிலையம் சென்ற பிரணவ், திரிஷ்னா மீது புகார் அளிக்க, விசாரணை நடத்திய திரிஷ்னா மற்றும் அவர் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். - கடத்தவும் செய்வாள் (ஒரு தலைக்) காதலி.

- உத்ரகண்டில், செவிலியர் பணிக்கு தேர்வான பெண் 20 வாரங்கள் கர்ப்பமாக இருந்ததால் அதைக் காரணம் காட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலைக்குச் சேர தகுதி இல்லை என வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பேறுகால விடுமுறை எடுப்பார் என்று காரணம் கூறப்பட்டிருக்கிறது. 

இதை விசாரித்த உத்ரகண்ட் உயர்நீதி மன்றம்,"தாய்மை என்பது ஒரு வரம். பணியில் இருக்கும் பெண்களுக்கு பேறு காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் கூறிவிட்டு, இன்னொரு பக்கம் இன்னொரு பக்கம் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அரசுப் பணியில் சேரக் கூடாது என்பது முரணாக இருக்கிறது. அந்தப் பெண் வேலையிலும் சேரலாம், பேறுகால விடுப்பும் எடுத்துக் கொள்ளலாம்" என்று தீர்ப்பளித்துள்ளது. -  சட்டம் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.

- பிரதமர் மோடி நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய மின் சக்தி நிலையம் அமைக்க மானியம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார். இதில் 1கிலோ வாட் அளவில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க ரூ.30,000 மும், 2கிலோ வாட் மின்சக்தி உற்பத்தி செய்ய 60,000மும் , அதற்கு மேல் உற்பத்தி செய்ய ரூ.78,000மும் மானியம் வழங்கப்படுமாம். தமிழ்நாட்டில் 25,00,000 வீடுகளுக்கு இந்த மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வந்த ஏழு நாட்களில் 25000 மனுக்கள் வந்துள்ளனவாம். - இன்னும் அதிகம் வந்திருக்க வேண்டாமோ?

- 86% இந்தியர்கள் இன்டர்நெட்டை ஓ.டீ..டீ.யில் படங்கள் பார்க்கவும், பாடல்கள் கேட்கவும்தான் பயன்படுத்துகிறார்களாம். - ஹிஹி!

- இந்த வருடம் ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும், மருத்துவம், ஃபார்மசூட்டிகல், உணவு  சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் அதிகபட்ச சம்பள உயர்வை எதிர்பார்க்கலாமாம். - எ.பி. ஆசிரியர் குழுவில் யாரோ பார்ட்டி தர தயாராகிறார் போல :))

- சென்ற வருடங்களை விட இந்த வருடம் முதல் முறையாக ஓட்டு போடப் போகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. - தகுதியான வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் சரி

===================================================================================
ரசிக்க வைத்த ஒரு வாட்ஸாப் பகிர்வு...   ரொம்பவே பழசு!  


================================================================================================

இணையத்தில் ரசித்தது...

That Looks Painful 

The first time you glance at photos like these, you might wince. When you look at them the first time, it seems like this athlete must be horribly injured for his arm to bend this way.


Actually, this player is fine! As a matter of fact, he was getting ready to throw a blistering fastball at the batter. The weird pose in the picture was actually captured as he wound up his throw. In garnering momentum, though, he swung his arm in seemingly impossible ways.

==========================================================================================

பொக்கிஷம்  :- 

சொந்த செலவில் சூன்யம்...


"இப்பவும் எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்..."


ஹா...  ஹா..  ஹா..  ஹிஹிஹி....


நாடகமேடையில் நடந்த சுவாரஸ்யமான, எதிர்பாராத சம்பவம் குறித்து...

111 கருத்துகள்:

  1. அந்த மாலையில்
    அந்த வேளையில்
    ஏகாந்தமாய்.....

    சிட்டுக் குருவி முத்தம் கொடுத்த சுவாரஸ்யம்

    'இச் இச்'சென்று சப்புக்கொட்டுமளவுக்கு
    சுகானுபவம்...

    ஹிந்தி தெரியாத குறைதான்!..

    இருந்தும்
    பீர், ஸ்காட்ச், கோக், ஜூஸ்
    புடைசூழலில்
    ஜில்லென்றிருந்த பதிவு சுகத்திற்கு குறைச்சலில்லை..
    வாரத்திற்கு வாரம்
    நெஞ்சை அள்ளுகிறது
    வாசிப்பு சுகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோயா கோயா சாந்த் பாடலை தமிழில் காபி அடித்துள்ளனர் தெரியுமோ...   பெண் குரலில் வரும். காபி நடித்திருப்பது
      இளையராஜா
      https://www.youtube.com/watch?v=80m3hHAvR0s

      நீக்கு
    2. கருத்தாக வந்திருக்கும் உங்கள் காலை வரிகளும் படிக்க படுசுகம். குடித்துக்கொண்டிருக்கும் காப்பியின் சுவையும் சட்டெனக் கூடிவிட்டதே.. எப்படி !

      நீக்கு
    3. எப்படி? எப்படி?..
      கிளி ஜோசியம் மாதிரி
      குருவி ஜோஸியம்
      ஏதானும் இருக்கா, என்ன? உம்?..

      நீக்கு
    4. ஸ்ரீராம் அது தமிழில் காப்பியா...யுட்யூப் லிங்க் போய் பார்த்தேன் அழகான பாடல். யார் இந்தியில் இசை?
      ஆனால் பாடல் இதுவரை கேட்டதில்லை.

      கீதா

      நீக்கு
    5. ஹிந்தியிலிருந்து தமிழில் காபி... ஹிந்தியில் இசை எஸ் டி பர்மன்.

      நீக்கு
  2. புதுப்பிக்கப்படும்
    பழைய நினைவுகள்
    என்று போட்டு
    இப்படி ஏமாத்தலாமா?..

    ரேடியோ பெட்டியில்
    எதையெல்லாமோ தட்டிப் பார்த்தேன்..

    ஊஹூம்.. அழிச்சாட்டியமாய்
    வாயைத் திறக்காத
    மெளனம்.

    அந்த சிட்டுக்குருவிகளையாவது
    சரஸ சல்லாபம் செய்யட்டுமென்று இந்தப் பெட்டியில் மறைவாய்
    அடைத்திருக்க வேண்டாமா?..

    ஹூம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது அந்த மாதிரி ரேடியோக்கள் கிடைக்கப்பதில்லை.  ஆனால் இவர்கள் ஸ்பீக்கர்களை இபப்டி வடிவமைத்து ஆசையைத் தூங்குகின்றனர்.   இன்னொரு 5 இந்த 1 இருக்கிறது.  ரெகார்ட் ப்ளெக்டர், கெஸ்ட், யு எஸ் பி, ரேடியோ என்று பல்வேறு விஷயங்கள் அதிலேயே வரும்.

      நீக்கு
    2. பாண்டி பஜாரில்
      கையடக்க சைஸில்
      பாட்டரி போட்டுப் பாடும்
      குட்டி டிரான்ஸிஸ்டர்
      சகோதரி கிடைக்கிறாள் ஸ்ரீராம்.
      ஆசைக்கொன்று நான் வாங்கி வைத்திருக்கிறேன்
      அப்பப்போ அவளைப் பாடச் சொல்லிக் கேட்பதுண்டு...
      ஹி..ஹி..

      நீக்கு
    3. ரேடியோ கேட்கும் ஆசை இருப்பதில்லை. ஆனால் அதைப் பார்க்கும்போது ஒரு கவர்ச்சி வருகிறது.

      நீக்கு
    4. உண்மை. நானும் அந்த ரேடியோ பெட்டியைக் கொஞ்ச நொடிகள் உற்றுப்பார்த்து உறிஞ்சினேன் இரண்டாவதாக வந்திறங்கிய கொசுறு காப்பியை...

      நீக்கு
  3. வாராவாரம்
    அப்பா மனதை
    ஆக்கிரமித்து வருகிறார்.
    செவ்வாய் ஒன்றிற்கு
    என்னை எழுத வைத்து விடுவார் என்று
    பட்சி சொல்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா என்றால் அன்பு
      அப்பா என்றால் அறிவு
      ஆசான் என்றால் கல்வி
      அவரே கற்பித்த தெய்வம்!

      நீக்கு
    2. ஸ்ரீராம், ஜீவி அண்ணா சொல்லியிருப்பது இந்தத் தொடர் பதிவில் அப்பா கணக்கு எழுதுவது, அந்தக்கால சம்பளம் கொண்டு வருவது பற்றி சொல்லி வரீங்கல்லியா அதை வைச்சு கதை எழுத வைத்துவிடுவார் என்று

      கீதா

      நீக்கு
    3. பிறகு நானும் புரிந்து கொண்டேன்.

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பெரியார் திடல்.
    பாப்கார்ன், கூல்டிரிங்ஸ்
    கடை வியாபாரம் சுற்றிலும்
    நாடகம் நடத்த வேறிடம்
    கிடைக்கவில்லையாக்கும்
    இவர்களுக்கு?.

    பதிலளிநீக்கு
  6. வோட்டர்கள் அதிகரிப்பிற்கும்
    தகுதியானவர்கள் தேர்விற்கும்
    ஏதாவது சம்பந்தம்
    இருக்கிறதா, என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வோட்டர்கள் அதிகரிப்பிற்கும்
      தகுதியானவர்கள் தேர்விற்கும்
      ஏதாவது சம்பந்தம்
      இருக்கிறதா, என்ன?// மாற வேண்டும் என்பதுதான் உட்கிடை என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? நன்றி

      நீக்கு
  7. ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் - முதல் தேதி (1955)

    ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
    கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம் - தேதி
    ஒண்ணிலே இருந்து - சம்பள தேதி
    ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத்
    தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - இருபத்
    தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
    திண்டாட்டம் திண்டாட்டம் - சம்பளத் தேதி
    ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
    கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
    .
    பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே
    தேதி ஒண்ணிலே - மனுஷன்
    படாத பாடு படுவது இருபத்தொண்ணிலே
    இருபத்தொண்ணிலே
    முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
    ஒண்ணிலே பின்னும்
    மூணாம் பேஸ்து விழுந்தது போலே
    முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே
    .
    ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்
    கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
    .
    தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
    சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
    தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
    சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே
    அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
    அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம்
    அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே - ஆமா
    தென்பழனி திருப்பதிக்கும் ஸ்ரீரங்கம் போவதற்கும்
    சில்லரையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே

    சினிமா ட்ராமா காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்காதொண்ணிலே
    தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத்தொண்ணிலே
    சிகரெட் பீடி வெற்றிலை பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே
    தெருவில் எறிந்த துண்டு பீடிக்கு
    கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே

    கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு
    கும்மாளம் கொட்டுவது ஒண்ணிலே - தேதி ஒண்ணிலே அவர்
    கூச்சல் கிளப்பிகிட்டு குஸ்திகளும் போட்டுகிட்டு
    கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே - கொஞ்சம்
    கோணிக்கொள்வார் இருபத்தொண்ணிலே

    தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
    தம்பிகளின் வாடகை சைக்கிளோட்டம் ஒண்ணிலே
    தரையில் நடந்து வருவார் இருபத்தொண்ணிலே
    நண்பர் நடமாட்டமெல்லாம் ஒண்ணிலே - எந்த
    நாயும் எட்டிப் பார்க்காது இருபத்தொண்ணிலே

    கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
    திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே
    கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே - பின்பு
    திண்டாட்டந்தான் இருபத்தொண்ணிலே.

    ~~~~~~~~~~~
    படம்:- முதல் தேதி;
    ரிலீஸ்:- 12th மார்ச், 1955;
    இசை:- T.G. லிங்கப்பா;
    பாடல் வரிகள்:- உடுமலை நாராயணகவி;
    பாடியவர்:- N.S. கிருஷ்ணன்;
    நடிப்பு:- N.S. கிருஷ்ணன் & T.A,மதுரம்;
    கதை:- தாதா மிராசி;
    தயாரிப்பு:- B.R. பந்துலு; (இப்படம் தான் முதல் தயாரிப்பு)
    திரைக்கதை, வசனம் & இயக்கம்:- P. நீலகண்டன்.
    ~~~~~~~~~~~~

    https://youtu.be/UZ-GyhPPEkY

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அந்தப் பாடல் சரி...  நான் சொல்லி இருப்பது இந்தப் பாடல்..

      https://www.youtube.com/watch?v=z1EZm-36Sxk

      நீக்கு
  8. ஜாதி அடிப்படையில் பெறப்படும் சலுகைகள், அனுகூலங்கள் நிறுத்தப்படும் நாளில் தான் சாதி பெருமை/சிறுமை மறையும். ஆனாலும் ஹிந்து என்ற மதம் இருக்கும் வரை சாதி அடையாளம் நிற்கும். இலங்கைத் தமிழர் சாதி அடையாளத்தை மறைக்கின்றனர், மறைக்கின்றனர் என்பது பிழைக்கும் வழியை பேணவே.

    ஸ்மார்ட்போன் வந்ததில் இருந்து ரேடியோ, கேமரா, ISP வழி இன்டர்நெட் என்று பலதும் கட்டெறும்பாகி விலை குறைந்து எல்லோரும் உபயோகிக்க முடிகிற படியால் பழைய ரேடியோ போன்றவை காட்சிப் பொருட்களே.

    கவிதை அந்தக்காலத்து பேச்சலர்கள் திருவல்லிக்கேணி மான்ஷனை விட்டு மெரினாவில் அமர்ந்து பாடும் கானா பாடல்களை நினைவூட்டியது.

    சோலார் சப்சிடி புதிய ஒன்றல்ல. முன்பே உள்ளது தான. இது சம்பந்தமாக சரிதா நாயர் என்பவர் சிறையிலும் உள்ளார் என்பதை அறியவும்.

    நமது ஸ்பின்னர்கள் ஒரு புதிய பந்து வீச்சு முறையை கற்றுக்கொள்ளலாம் பேஸ் பால் வீரரின் படத்தில் இருந்து.

    ஜே படங்களில் உள்ள தனித்துவம் சுதர்சன் படங்களில் இல்லை என்பது தெரிகிறது. பார்க்கத்தூண்டும் கவர்ச்சி வேறு, பார்க்காதே என்னும் கவர்ச்சி வேறு.

    வாட்சப் பெண் அனுஷ்கா சாயல் என்பதால் பதிவில் சேர்த்தீர்களா?

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா, சாதிப் பிரச்சனைகள், ஏற்றத் தாழ்வுப் பிரச்சனைகள் எல்லா மதங்களிலும் இருக்கிறதே. நான் அறிந்த வரையில். இந்து மதம் அதிகம் பேசப்படுவதால் அதிகம் வெளியில் தெரிகிறது அவ்வளவுதான்.

      கீதா

      நீக்கு
  9. நடுத்தரக் குடும்பங்களின் மாதச் சம்பளப் பிரச்சனையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ஆமாம்... பணம் என்பது என்ன? அது எப்படி உருமாறி வயிற்றை ரொப்பி வாழ்க்கையை நடத்துகிறது என்பதை யோசித்தால் ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  நன்றி நெல்லை.  பொதுவாக அந்தக் காலத்தில் பணமாய் கையில் வாங்கிய அனுபவத்தையும், இந்தக் காலத்தில் பணத்தையே கண்ணில் பார்க்காமல் இருந்து கொண்டு செலவு செய்வதையும் சொல்ல வந்தேன்!

      நீக்கு
  10. சாதி அடையாளம் நிச்சயம் ஒரு நாள் நகர்ப்புறங்களில் சுத்தமாக மறையும். கிராமங்களில் மறைய நிறைய தசாப்தங்கள் ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி சொல்கிறீர்களோ... அரசியல்வாதிகள் அதை மறையாமல் பார்த்துக் கொள்வார்கள்.

      நீக்கு
  11. வெளி நாடுகளில் இந்த சாஇ உணர்வு புலம் பெயர் மக்களின் அடுத்த தலைமுறையில் வெகுவாக்க் குறைந்துவிடும். அங்கேயும் சென்று சொந்த ஊர் வாழ்க்கைமுறைகளைத் தொடர்ந்தால் ஒரு சில தசாப்தங்கள் ஆகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிநாடுகளில் இவை தலைகாட்டாது என்றுதான் எனக்குத் தோன்றியது.

      நீக்கு
  12. சார்லி போன்ற பல நகைச்சுவைக் கலைஞர்கள் மிகத் திறமையானவர்கள். நமக்குத்தான் அவர்களைக் கதாநாயகர்களாகப் பார்க்கும் மனநிலை வருவதில்லை. நடிகர் தாமு மற்றும் பலர் நினைவுக்கு வருகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன், கல்லாப்பெட்டி சிங்காரம் கூட தமிழில் புலமை பெற்றவர்.

      நீக்கு
  13. சார்லியின் கதை சாரமான கதை.
    ஒரு கலைஞனது வாழ்வை அவனது தெரிந்த பக்கத்தைத் தாண்டியும் கவனிக்கவேண்டும், அது எப்படியாயினும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  அந்தத்துறையில் அவர்களால் பிடிக்க முடிந்த இடம் காமெடியன்.  அவ்வளவுதான்.

      நீக்கு
  14. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம், இன்று பக்கம் திறந்ததும், பக்கம் ஓடியதில் இணையம் போக்குவரத்தை நில் என்றதும் பக்கம்நின்றதா அப்ப எனக்கு முதலில் கண்ணில் பட்டது உங்க கவிதை!!! குன்றத்தூர் படமும் கவிதையும்.
    இப்படி டி ஆர் நட்புன்னு எங்ககிட்ட கூடச் சொல்லவே இல்ல!!!!!!!ஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நல்லாருக்கு அவர் ஸ்டைல் கவிதை!!! எனக்குப் பிடித்தது. படமும் கார் கண்ணாடி வழி எடுத்தீங்களோ

    கீதாஅ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். கண்ணாடி வழி எடுத்ததுதான்! ஆனால் ஆட்டோ கண்ணாடி!

      நீக்கு
  17. வாராவாரம் சிறப்புடன் மலர்கின்றது வியாழன்..

    அறுபதைக் கடந்தவர்கள் எல்லாருடைய மனதிலும் இத்தகைய நினைவுகள் தான்..

    பல நிமிடங்களுக்கு அமைதியாகி விட்டது மனது..

    பதிலளிநீக்கு
  18. அன்பின் ஏகாந்தன் அவர்களது கை வண்ணம் மிளிகின்றது..

    பதிலளிநீக்கு
  19. /// அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் பாட்டு கேட்டிருப்பேன் என்று உங்களுக்கே தெரியும்!.. ///


    ஆ,!..

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  21. //ஏதோ கடவுள் கொஞ்சம் என்னை நினைவு வைத்திருக்கிறார் போல... அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் பாட்டு கேட்டிருப்பேன் என்று உங்களுக்கே தெரியும்!//

    கடவுள் எப்போதும் நிறையவே நினைவு வைத்து இருப்பார்.
    நாம் தான் கொஞ்சம் நினைவு வைத்து இருக்கிறோம்.

    பாட்டு உங்களுக்கு பிடிக்கும் தானே! (இந்த பாட்டு பிடிக்காது என்று தெரியும்) கவனமாக இருங்கள் இனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே கவனமாக இருப்பது?  அந்த கார்டை மொத்தமாக தொலைத்தே விட்டேன்.  சென்ற ஞாயிறு தி, நகரில் தொலைந்து விட்டது!  கணக்கை பிளாக் செய்தேன்.

      நீக்கு
  22. படமும் கவிதையும் அருமை. பசங்களை அதட்டி இறங்க சொன்னீர்களா? அவர்கள் பெற்றோர் பார்த்தால் என்னாகும்?
    அடிவயிறு கலங்கும். இப்படி பயணம் செய்வது ஆபத்து, அதுவும் போக்குவரத்து அதிகம் இருக்கும் இந்தக்காலத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓடிக்கொண்டிருந்த வண்டியிலிருந்து எடுத்தது.  அவர்களிடம் நான் பேசவில்லை.  அவர்களே நான் படம் எடுப்பதை பார்த்து விட்டு ஓடிவிட்டார்கள்.

      நீக்கு
  23. டாக்டர் சார்லி வாழ்க! முனைவர் பட்டத்துக்கு எடுத்து கொண்ட ஆய்வு
    அருமை.

    நியூஸ் ரூம் செய்திகள், மற்றும் ஏகாந்தன் அவர்கள் பகிர்வு,
    ரசிக்க வைத்த ஒரு வாட்ஸாப் பகிர்வு காணொளி
    மற்றும் பொக்கிஷ பகிர்வில் சச்சுவின் தர்மசங்கடம் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  24. இன்றைய அரட்டை நன்று.

    லாரியின் பின்னால் சிறுவர்கள் - இளம் கன்று பயம் அறியாது... நினைவுக்கு வருகிறது.

    மற்ற செய்திகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  25. //அவர் பட்ஜெட் பிரித்து செலவு செய்தாரா என்று எனக்குத் தெரியாது.//

    எனக்கு இந்தப் பழக்கம் இருந்தது. தனித்தனியாக எடுத்து வைக்கும் பழக்கம். என்னிடம் பைசா யாரேனும் கொடுத்தால். ஆனால் எங்கள் வீட்டு நிதித்துறை என்னிடம் இல்லாததால் பின் பற்ற முடியவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  26. நான் செலவுக் கணக்கை எழுதி வைக்கும் பழக்கம் இருந்தது . இப்போதும் கூட அவ்வப்போது.

    //ஆரம்பம் முதலே என்னிடம் பர்ஸ் வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. அன்றன்றுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்து மூன்றாய்ப் பிரித்து சட்டைப்பை, இரண்டு பேண்ட்ஸ் பாக்கெட் என்று வைத்துக் கொன்டு செல்வேன். //

    நம் வீட்டில் கணவரும் இப்படித்தான். ஆனால் கடையில் கொடுக்கும் போது முழு பணத்தையும் எடுப்பார். சில சமயம் தவறியதுண்டு. பஸ்ஸில் பிக்பாக்கெட் போனதும் உண்டு. நாம சொன்னா கேப்பாங்களா என்ன?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      /நம் வீட்டில் கணவரும் இப்படித்தான். ஆனால் கடையில் கொடுக்கும் போது முழு பணத்தையும் எடுப்பார். சில சமயம் தவறியதுண்டு. பஸ்ஸில் பிக்பாக்கெட் போனதும் உண்டு. நாம சொன்னா கேப்பாங்களா என்ன?!!!/

      உண்மைதான் சகோதரி. என் கணவரும் அப்படித்தான்..! அவருக்கும் பர்ஸ் ஏதும் வைத்துக் கொள்ளும் பழக்கம் கிடையாது. பர்ஸோடு தொலைந்து போகவா என்பார். ஆனால், அவர் சட்டைப்பையிலிருந்து (சட்டையின் உள்பக்கம் பையில்தான் பத்திரமாக வைத்துக் கொள்வார்.) பணத்தை எடுக்கும் போது நமக்குத்தான் பயமாக இருக்கும். சொன்னால் கேட்க மாட்டார்.ஒவ்வொருவரின் குணங்கள்... அதன் விருப்பங்கள் இது..! . நீங்கள் சொன்னவுடன் எனக்கும் ஏனோ இதை குறிப்பிடத் தோன்றியது. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. என் பசங்களும் சொல்வார்கள். நான்தான் கேட்பதில்லை!

      நீக்கு
  27. இப்ப தவற விடுதல் அபூரவம் டிஜிட்டல் வந்தது சௌகரியாமாகிவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வரியை அடிக்கும் முன் கருத்து இங்கு வந்துவிட்டது தெரியாம வெளியிடை அழுத்திட்டேன் போல......

      டிஜிட்டல் சௌகரியம் ஆனா இப்ப பணத்துக்குப் பதிலா கார்டு கீழே விழுவதுண்டு.....நல்ல காலம் மொபைல் வழி பேமென்ட்....இருந்தாலும் கார்டு அகப்படலைனா ப்ராஸஸ்...

      கீதா

      நீக்கு
    2. போயே போச்!  போயிந்தே..   Its gone 

      நீக்கு
  28. அலுவலகம் முடிந்து வீடு சென்றதும் பாட்டு கேட்டிருப்பேன் என்று உங்களுக்கே தெரியும்!//

    ஹாஹாஹாஹாஹா......இதுதான் முத்தாய்ப்பு!! கதையாய் எழுதியது போல் கதைக்கான முத்தாய்ப்பு சூப்பர் ஸ்ரீராம் ரசித்ததோடு சிரித்தும் விட்டேன்...

    ஏன்னா இங்கும் அடிக்கடி பாட்டு பாடுவேனே!!!!! ஆனா எதிர்பாட்டும் கிடைக்கும் ....ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  29. 'நான் பேச நினைப்பதெல்லாம்...."' 'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து...." ஹா...ஹா....நல்ல கலக்கல்.

    நியூஸ் ரைம் நன்று.

    சாலிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. ஏகாந்தன் அண்ணாவின் அனுபவங்கள் சுவாரசியம். பொதுவாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் புதுவருடக் கொண்டாட்டம் இப்படித்தான் இருக்கும் என்று தோன்றுகிறது நான் எங்கள் வீட்டு வெளிநாட்டு வாழ் மக்களின் அனுபவங்களை கேட்ட வரையில்.

    கீதா

    பதிலளிநீக்கு
  31. என் பெரிய மாமா வீட்டிலும் இந்த மாதிரி ஒரு பெரிய ரேடியோதான் இருந்தது அதை என் மாமாவின் பெரிய மகள் என் அக்கா மாடும் பயன்படுத்தி ட்யூன் செய்து எங்களுக்குப் பாட்டு போடுவார் வீட்டில் யாரும் இல்லாதப்ப. (மாமா இல்லாதப்ப ரேடியோனா அப்ப எதுக்கு ரேடியோ? அதெல்லாம் செய்திகள் வாசிப்பது என்ற குரல் வருமே தில்லி செய்தி, அதைக் கேட்க மட்டும் தான்!!!!!)

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டிலும் அதே மாதிரி ஒரு ரேடியோ இருந்தது.  பிலிப்ஸ் வால்வ் ரேடியோ.

      நீக்கு
  32. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    பணத்திற்கும் நமக்கும் உள்ள பயன்பாடு குறித்து தொடரும் அருமையான பகிர்வு. ஒரு பக்கம் நாம் பிறந்ததிலிருந்தே பணம் நம்மை என்ன பாடு படுத்துகிறது என்றால், நாம் பணத்தை எப்படியெல்லாம் படுத்துகிறோம் என்ற எண்ணமும் வருகிறது.

    எங்கள் புகுந்த வீட்டிலும் நான் வந்த பிறகு கூட என் கணவர் அவருக்கு வரும் சம்பள பணத்தை கணக்குப்பார்த்து பிரித்து வைத்து வரவு செலவு எழுதிக் கொண்டிருந்ததும் வந்தார். அதன் பிறகு அது அவருக்கு போரடித்து விடவே அவராகவே அதை நிறுத்தி விட்டார். அந்த காலங்களிலிருந்தே இது குடும்பத்தலைவர்களுக்கு,/தலைவிகளுக்கு வழக்கமான ஒன்றுதானே..!

    இப்போது டிஜிட்டல் உலகமாக ஆகி விட்டதும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்த கணக்குப்பார்க்கும் வேலை மிச்சம். ஆனால் அன்றாடம் உழைத்து பணம் சம்பாதிப்பவர்கள் கணக்குப் நிச்சயமாக பார்ப்பார்கள் என நினைக்கிறேன்.

    தங்கள் எழுத்து அருமை. நீங்கள் கேட்ட அந்தப் பாடலை கேட்டுப்பார்த்தேன். கருத்துள்ள பாடல். இதுபோல் அந்தக்கால திரைப்படங்களில் வாழும் வாழ்க்கைக்கும், வாங்கும் சம்பள பணத்திற்கும் சம்பந்தப்பட்டதாக பல பாட்டுக்கள் வந்துள்ளன. நடிகர் தங்கவேலு பாடிய இந்தப்பாடலையும் ரசித்துக் கேட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அப்பா அலுப்பில்லாமல் கடைசி வரை எழுதினர். நான் எல்லாம்தான் அலுப்பாகிப்போய் கொஞ்ச நாட்களில் விட்டு விட்டோம்.

      நீக்கு
  33. சார்லி பற்றி வாசித்திருக்கிறேன். அவர் எம் ஃபில் செய்தது அதன் பின் அவர் செய்த ஆய்வுக்கட்டுரை பற்றியும். அருமையான விஷயம். விகே ராமாசாமி சொல்லியிருப்பது போல் நிறைய திறமையான நகைச்சுவை நடிகர்கள் கண்டு கொள்ளப்படாமல் போகிறார்கள்தான்.

    வித்யா பிரதீப்னு ஒரு நடிகையாமே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தவராம் அவர் ஸ்டெம் செல் பயாலஜில டாக்டரேட் வாங்கியிருக்கிறார்.

    இன்னும் சிலர் உண்டு டக்கென்று நினைவுக்கு வரவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டு அருமையான ஓவிய  கலைஞர். அவர் மனை திலகா கூட  ஓவியர். பத்திரிகைகளில் படம் வரைந்திருக்கிறார்.  பாண்டுதான் அதிமுக கொடியை வடிவமைத்தவர் என்று நினைவு.

      நீக்கு
  34. உத்ரகான்ட் மாநிலத்தின் நீதிமன்றத் தீர்ப்பு சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
  35. ஓட்டுகள் பெருகினாலும் நல்ல தகுதியானவர் வரவேண்டுமே...

    இணையம் பல சமயங்களில் வீணாகிறதோ என்று தோன்றும் ஆனால் பொழுது போக்கு அம்சங்களும் தேவைதானே!!! பைசா கொடுத்துதானே....

    மற்ற செய்திகளும் வாசித்துவிட்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  36. வாட்சப் காணொளி ரசித்தேன். அந்தப் பெண் கடைசியில் வெட்கப்ப்டுவதையும்.....candid video!!

    கீதா

    பதிலளிநீக்கு
  37. இணையத்தில் படம் - ஆ தோள் சுளுக்கிக்காதோ!!

    நாட்டின் தலைஎழுத்தையே மாற்றியது தபால் தலை//

    நிகழ்வும் இந்த வரியும் நச்!!! ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  38. நாடகத்துள் இப்படியான க் காட்சிகளை எப்படி அழகா ப்ளான் பண்ணிருக்காங்க இல்லையா...

    சச்சுவின் timing sense அசாத்தியம். இது நாடகத்திற்கு ரொம்ப முக்கியம். சூப்பர்...dedicated and professional!

    கீதா

    பதிலளிநீக்கு
  39. இந்த வார கதம்பத்தில் அதிகம் கவர்ந்தது சார்லியும்,சச்சுவும். ஜோக்குகள் சோ சோதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானு அக்கா...   இரண்டு காமெடியன்களும் டக்கென்று மனதில் உட்கார்ந்து விட்டார்களா?

      நீக்கு
  40. சில சமயங்களில் காலங்கார்த்தால ஏதாவது ஒரு பாட்டு வந்து மனசில்/வாயில் உட்கார்ந்து கொள்ளும். அப்படி நேற்று வந்த பாட்டு,'மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ.." இதை ஸ்ரீராம் வெள்ளியில் ஒளிபரப்புவாரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக... ஆனால் எந்த வெள்ளி என்று கேட்டு விடாதீர்கள்!!

      நீக்கு
  41. கேட்க விரும்பும் மற்றொரு பாடல்,'சுராங்கனி,சுராங்கனி..'

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... அவர் எனக்கே சொந்தம் படத்தில் அழகிய 'தேவன் திருச்சபை மலர்கள்"  பாடலை விட்டு விட்டு...

      நீக்கு
  42. நீங்கள் சொல்லியிருப்பது போன்று, கவரில் பணம் வாங்கிய நினைவும் செலவை கணக்கு போட்டு வைத்துக் கொள்வது எல்லாம் நினைவுக்கு வந்தது. இப்போதும் சில விஷயங்களுக்குப் பட்ஜெட் போட்டு எழுதி வைத்துக் கொள்வதுண்டு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  43. பணத்தை பர்ஸில் வைத்துக் கொண்டு பாக்கெட்டில் வைத்து அல்லது கார்ட் பாக்கெட்டில் வைத்து தவறுவது பற்றிச் சொல்லியதும் பணத்தையும் கார்டையை அப்படியே பாக்கெட்டில் வைத்துக் கொண்டாலும் சரி பர்ஸில் வைத்துக் கொண்டு பாக்கெட்டில் வைத்துக் கொண்டாலும் கூட விழும் அபாயம் உண்டு. தவற வேண்டும் என்றிருந்தால் நடக்கும்.

    கழிந்த டிசம்பரில் பெங்களூர் போயிருந்த போது பஸ்ஸில் பயணித்து இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிய போது என் பர்ஸ் கீழே விழுந்திருக்கிறது அதை கவனியாமல் நான் இறங்கிட, என் பின்னே இறங்கிய ஒருவர் அதை எடுத்துக் கொண்டு முன்னே நடந்திட, அதைக் கவனித்த என் மகன் ஓடிச் சென்று அவரைப் பிடித்து அந்த பர்ஸ் எங்களுடையது என்று சொல்லி வாங்கி வந்தான். அந்த நபர் பர்ஸை உரியவரிடம் சேர்ப்பிக்க எடுத்தாராம்.

    நல்ல காலம் மகன் அதைக் கவனித்ததால் டக்கென்று சென்று அவர் ரோடை க்ராஸ் செய்யும் முன் பிடித்துவிட்டார். இத்தனைக்கும் அந்த நபர் பார்க்க டீஸண்டாக இருந்தார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  44. சார்லி முனைவர் பட்டம் வாங்கிய செய்தி மிகவும் அருமையான செய்தி. அவருக்கு விருப்பமான தலைப்பில் அவர் இருந்த நகைச்சுவைத் துறையில் இருந்த நகைச்சுவை நடிகர்களைப் பற்றிய ஆய்வு என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  45. ஏகாந்தன் சாரின் சோமாலியா அனுபவத் தொடர் மிகவும் சுவாரசியமாகச் செல்கின்றது.

    குன்றத்தூரில் நீங்கள் எடுத்த படம் பீதியை உண்டாக்குகிறது. அதற்கான உங்கள் கவிதை வரிகள் டி ராஜேந்தரின் ஸ்டைலில் அசத்தல், ஸ்ரீராம்.

    செய்திகளில் முதல் செய்தி போன்று, ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், மிரட்டல்கள் எல்லாம் மிகவும் பரவலாகி வருகின்றன.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  46. பொக்கிஷத்தில் நாடகம் - மிகவும் ரசித்த சுவாரசியமான பகுதி. சச்சு அவர்களின் சரியாகக் கவனித்து அந்த டைம் சென்ஸ் ரொம்ப அருமை. அது ஈடுபாட்டில் வருவது.

    இணையத்தின் படமும் கொஞ்சம் பயமாக இருக்கிறது பார்க்கும் போது.

    தலை எழுத்தை மாற்றிய தபால்தலை அந்தத் தலை ஆற்றிய பணி சிறப்பான ஒன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில் மற்ற பகுதிகளும் அருமையாக உள்ளது. சகோதரர் ஏகாந்தன் அவர்களின் பாட்டு கச்சேரிகள் பக்கத்தை ரசித்தேன்..

    தங்கள் கவிதையும் நன்றாக உள்ளது. வாகனங்களின் பின்னால் அந்த பையன்கள் இப்படியா ஏறிச் செல்வார்கள்.? பயமாக இருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது?

    இந்த மாதிரி நினைவு ரேடியோ ஒன்று எல்லோர் வீட்டிலும் இருக்கும் போல.... ரேடியோ, தகவல் நன்று.

    நகைச்சுவை நடிகர் சார்லி டாக்டர் பட்டம் வாங்கியதற்கு மகிழ்ச்சி. ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்களுக்கும் பின்னால் சிறப்பான வாழ்க்கை முறை ஒன்றுள்ளது.

    வாட்சப் பெண்ணின் டான்ஸ் பாவங்கள் அருமை. அதன் பின் தன்னை படமெடுப்பது தெரிந்ததும் ஏற்பட்ட வெட்கம்.. ரசித்தேன்.

    இன்றைய செய்தி அறையில் பல செய்திகள் தெரிந்து கொண்டேன்.

    பொக்கிஷம் பகுதியில் ஜோக்குகள் நன்றாக உள்ளது. பாக்கி இரண்டும் பெரிதாக்கி படிக்க இயலவில்லை. அத்தனைப்பகிர்விற்கும் நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  48. கண்ணுக்கு தெரியாமல் கைமாறும் காசு.. digital transactions குறித்து அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தொடர்புடைய முந்தைய பதிவையும் வாசித்தேன். வீட்டுக் கணக்கைத் துல்லியமாக எழுதும் பழக்கம் எனக்கும் இருந்தது. பத்து வருடங்கள் நோட்டில், அடுத்த பதினைந்து வருடங்கள் excel sheet_ல். பல நேரங்களில் உபயோகமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் முடியாமல் விட்டு விட்டேன்:)!

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!