வியாழன், 8 பிப்ரவரி, 2024

உன் பணம் பணம்.. என் பணம் பணம்... மாயக்காசு !

 கற்றுக்கொண்ட விஷயங்களில் அடுத்த ஒன்று...!

இப்போதெல்லாம் கையிலிருந்து காசு எடுத்துக் கொடுப்பது குறைந்து காணாமலேயே போய்விட்டது.  எங்கள் துணிகளை அயன் செய்து தருபவர் சில சமயங்களில் பிடிவாதமாக காசு கையில் வேண்டும் என்றுகேட்டு வாங்குவார்.

வீட்டில் பணிபுரியும் பெண்மணிக்கு G Pay கிடையாது என்பதால் அவருக்கும் கையிலே தான் காசாய் கொடுக்க வேண்டும்.மற்ற எல்லாம் டிஜிட்டல் பேமெண்ட்தான்.  இதை குறை கூறுபவர்கள் இருக்கிறார்கள்.  எனக்கு இதில் குறை ஒன்றுமில்லை, வசதிதான்.

சில இடங்களில் பணமாய் கொடுத்தால் ஜி எஸ் டி இல்லாமல் காசு குறைவாய் கொடுக்கலாம் என்பதைத் தவிர...

ஒருமுறை ஜெராக்ஸ் எடுக்க ஒரு கடைக்குச் சென்றிருந்தபோது ப்ளஸ் டூ மாணவன் ஒருவன் வந்து இரண்டு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு இரண்டரை ரூபாயை G Payயில் போட்டு விட்டுச் சென்றபோது கொஞ்சம் ஓவராய்த் தெரிந்தாலும் அது சகஜமாகி விட்டது.  


இப்போதெல்லாம்  சாலையோர கடைகள், அயன்காரர் முதற்கொண்டு ஒரு அட்டையில் Q R கோட் வைத்துக் கொண்டு G Pay அக்செப்ட் செய்து கொள்கிறார்கள்.  காலம் மாறி விட்டது!

இது சம்பந்தமாக மோடியை ப. சிதம்பரம் சில வருடங்களுக்கு முன் கிண்டல் செய்து பேசிய பேச்சு நேற்று வாட்ஸாப் ஃபார்வேர்டில் பார்த்தேன்.  "என்ன டிஜிட்டல்?  எப்படி சாத்தியம்?  ரோடோரத்தில் உருளைக்கிழங்கும் தக்காளியும் விற்பவர்கள் மெஷினுக்கோ, கரண்ட்டுக்கோ, இணைய வசதிக்கோ எங்கே  போவார்கள்?  முட்டாள்தனமான திட்டம்" என்று பேசி  இருந்தார்!

மாதம் பிறந்தால் ஸ்டாம்ப் ஒட்டி கையில் கட்டுக் கட்டாய் பணம் வாங்கி வீடு வரும்வரை அந்தக் கட்டுப் பணத்தில் மகிழ்ந்து, பட்ஜெட் போட்டு, பிரித்து வைத்து, கொஞ்சம் கொஞ்சமாய் கட்டு கரைந்து இருபது தேதிக்குள் சிலலறைகளை மிச்சம் வைத்திருந்து, மறுபடி ஒன்றாம் தேதிக்காய் காத்திருந்த  காலம் ஒன்று...

மாயக்காசாய் பணம் நம் கையில் இருக்கிறது என்று ஞானக்கண்ணால்மட்டும் பார்த்து அதை பார்க்காமலேயே அங்குமிங்கும்  கொடுத்து, அனுப்பி, மாற்றி செலவு செய்யும் கால இந்தக் காலம்!

ஜி பே யில் என்னுடைய  பணம் அனுப்பும் சக்தி என்ன என்று எனக்கு எப்போதும் குழப்பம்தான்.  ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி.

வீட்டில் அலமாரி, Rack வைக்கும் வேலை நடக்கும் நேரங்களில் ஒரே ஷாட்டில் ஒரே ஒருமுறை 40,000 அனுப்பி இருக்கிறேன்.  அதேபோல வேறொரு சமயம் முயன்றபோது இருமுறையாக இருபது இருபதாயிரமாகத்தான் அனுப்ப முடிந்தது.  அன்று அப்புறம் வேறெதற்காவது முயன்றால் உன்னுடையல் இன்றைய லிமிட் முடிந்து விட்டது.  இனி நாளைத்தான் பணம் அனுப்ப முடியும் என்று செய்தி வரும்.  கடைகளில்  சென்று டெபிட் கார்ட் போட்டாலும் அதே கதைதான்.  அப்புறம் சிலசமயம் அப்படி செய்தி வந்தாலும் டெபிட் கார்டில் பணம் செலுத்த முடிந்திருக்கிறது.  அதுவும் ஒரு லிமிட்தான் என்று நினைத்திருந்த ஒரு நாள் ஒரு நகை வாங்கிய சமயம் பெரிய தொகையையே அது மாற்றிக் கொடுத்தது.  வழக்கம்போல இன்னொரு சமயம் மறுத்து விட்டது.  இத்தனைக்கும் அன்று அதுதான் முதல் செலவே...

சமீபத்தில் காலை முதல் ஆயிரம் ரூபாய்க்குள்ளேயே செலவு நடந்திருந்தும் அடுத்த ஒரு இருநூறு ரூபாயை அனுப்ப மறுத்து விட்டது.  அப்போது பாப்அப் ஆகி வந்து உடனே மறைந்த மெஸேஜை கஷ்டப்பட்டு இரண்டு மூன்று முறை முயன்று படித்ததில் ஒரு விஷயம் தெரிந்தது.

அதாவது,

கடந்த 24 மணி நேரத்தில் நீங்கள் ஒருவருக்கு ஒருவர் (நான் என் ஆஸ்தான ஆட்டோவுக்கோ, அல்லது முருகன், கந்தன், செந்தில், கார்த்தி என்று தனி நபர்களுக்கு பணம் அனுப்புவது) என்று பணம் அனுப்பும் செயலில் 20 பேர்களுக்கு அனுப்பி விட்டீர்கள்.  இனி 24 மணி நேரம் தாண்டிதான் இப்படி ஒரு நபரிலிருந்து ஒரு நபருக்கு அனுப்ப முடியும்.  எனினும், கார்ட் போட்டு அல்லது இதே ஜி பேயை வணிக வளாகங்களில் பயன் படுத்துவதில் தடையில்லை!  நிறுவனங்களில் உபயோகிக்க முடியும்.  அப்படிஉபயோகித்தால் அது எப்போது நிற்குமோ!

இப்படி வேறு இருக்கிறதா என்று நினைத்துக் கொண்டேன்.  தெரிந்து கொண்டேன்.  அது நான் லேட்டாக தெரிந்து கொண்ட ஒரு சிறு விஷயம்.  இன்னும் இதில் எனக்குத் தெரியாத, புரிந்து கொள்ள முடியாத விஷயங்களும் நிறைய இருக்கின்றன.

KYC தரவில்லை என்று சமீபத்தில் என் பணம் வழங்கும் வழியை நிறுத்தி விட்டது பேங்க்.  ரிசர்வ் பேங்க் ஆணையாம்.  சரி கார்ட் உபயோகமாகுமே என்று அதை எடுத்தால் அதுவும் சண்டி செய்தது.

மறுநாள் பேங்க் - என் பிராஞ்சுக்கு சென்றுதான் சரி செய்ய முடியும் - சென்றேன்.  தேவைப்பட்ட ஆவணங்களைக் கொடுத்தேன்.  24 மணி நேரத்தில் (எப்போது வேண்டுமானாலும்) சரியாகும் என்றார்கள்.  எனக்கு உடனடியாக கொஞ்சம் பணம் தேவைப் படுகிறதே என்றேன்.  அங்கேயே சலான் போட்டு எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்.  அதற்கு பத்து நிமிடம் காத்திருந்த நேரத்தில் நான் பேசிய பெண்மணியும், இன்னொரு பெண்மணியும் என் வங்கிக்கணக்கை தற்காலிகமாக ரிலீஸ் செய்வது பற்றி பேசிக்கொள்ள, அவர் என்னவோ செய்ததும் வித்ட்ரா சலான் தந்த என் கைக்கு என் பணம் கிடைத்தது!  24 மணி நேரத்துக்குள் சரியாகி ரிலீஸ் ஆகிவிடும் என்றார்கள்.  வரும் வழியிலேயே ஒரு ஸ்வீட் கடையில் ஸ்நாக்ஸ்  வாங்கிக்கொண்டு சும்மா காரடைப் போட்டு பார்ப்போம் என்று என்று பார்த்தால் ஓகே ஆகிவிட்டது!  அந்த ட்ரிப் முடிந்ததும் ஆட்டோக்காரருக்கு G Pay யம் செய்ய முடிந்தது.  வங்கியில் கணினியில் என் கணக்கை தற்காலிகமாக ரிலீஸ் செய்த பெண்மணி மறந்து அப்படியே விட்டு விட்டாரா, அல்லது 'அக்கவுண்ட்டை திறந்தது திறந்தோம், KYC விவரங்களை Feed செய்து விடுவோம்' என்று வேலையை முடித்து விட்டாரா, தெரியாது!

ஜி பே போன்ற செயலிகளை உபயோகிப்பவர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள்.  முன்பெல்லாம் நீங்கள் யாருக்காவது பணம் அனுப்பினால் உங்களுக்கு பரிசாக அது ஒரு தொகையை திரும்பக் கொடுக்கும்.  ஆரம்ப கால கொக்கி!  அப்போது ஒரு பேச்சு இருந்தது.  'யாருக்கோ ஒரு லட்சம், ஒரு கோடி (என்னங்கடா...) கூட இது மாதிரி கிடைத்திருக்கிறது.  உங்களுக்கும் கிடைக்கலாம்!'  

ஆனால் எனக்கு சில முறைகளே பணம் திரும்பக் கிடைத்தது.  அதுவும்  அதிகபட்சமாக மூன்று ரூபாய்தான் திரும்பக் கிடைத்தது.  இதில் இன்னொன்று, அவர்கள் அனுப்பும் அந்த கிஃப்ட் வவுச்சரை காலாகாலத்தில் நீங்கள் திறந்து பார்க்கா விட்டால் அது கலாவதி, மன்னிக்கவும் காலாவதி ஆகிவிடும்!  கிடைக்காது.  இப்போதெல்லாம் அவர்கள் பரிசாக அனுப்புவதை யாராவது உபயோகிக்கிறீர்களா என்றே தெரியாது.  நீங்கள் போகாத ஒரு கடையில், நீங்கள் வாங்க விரும்பாத சில பொருள்கள் வாங்கும்போது உபயோகித்துக் கொள்ள தள்ளுபடி கூப்பன்.  



என்னங்கடா...  

அதில் தேதி குறிப்பிட்டு அதுவரைதான் உபயோகிக்கலாம் என்கிற நிபந்தனை வேறு!  அப்புறம் அதுவும் காலாவதி ஆகி விடும்.



டிஜிட்டல் பேமெண்ட் நமக்கு வசதிதான். பரிசு என்கிற இந்த விஷ(ம)யங்களை - விளம்பரங்களை நிறுத்தி விடலாம்.  அவற்றை நூற்றுக்கு பத்து பேர் கூட உபயோகிக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.  அதில் ஏதோ வீடுகட்ட என்பது போல ஒரு விளையாட்டா வேறு ஏதாவதா தெரியவில்லை.  அதற்கு வேறு என்னென்னமோ தருகிறார்கள் அந்த பரிசுக்கு கூப்பன்கள் மூலம்.  இதில் வேறு ஏதாவது இருக்கிறதா என்றும் தெரியவில்லை.  

ஏன் இப்படி சொல்கிறேன் என்றால்,

========================================================================================== 

நியூஸ் ரூம் 









==============================================================================================



பல ஆண்டுகளுக்கு முன்னே கரிச்சான் குஞ்சுவை சந்தித்த போது ”என்ன கரிச்சான் குஞ்சு, இப்படி சட்டை போடாமல் குடுமியும் பூணூலுமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். (அப்போதெல்லாம் சார் போட்டுப் பேசும் வழக்கம் இல்லை) ஏனென்றால், அவர் அப்போது தேவி ப்ரஸாத் சட்டோபாத்யாயவின் ஒரு தலையணை சைஸ் நூலை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தமிழாசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். அதே சமயம் சம்ஸ்கிருத அறிஞரும் கூட. அக்காலத்தில் தமிழாசிரியர் என்றால் சம்ஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர்களாக இருந்தார்கள்.
சட்டோபாத்யாய ஒரு இடதுசாரி. நாத்திகவாதி. கரிச்சான் குஞ்சுவும் புரட்சிகர இயக்கங்களின் நக்ஸல்பாரி ஆதரவுப் போராட்டங்களில் முன் வரிசையில் கொடி பிடித்து கோஷம் போட்டுச் செல்பவர். அதனால்தான் அப்படிக் கேட்டேனே ஒழிய தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புகளில் நான் தலையிடுவது இல்லை. நானே பிற்காலத்தில் தலைமுடியின் பின்னால் ரப்பர் பேண்ட் போட்டிருந்தவன்தான்.
கரிச்சான் குஞ்சு சொன்னார், நான் ஆசாரமான பிராமண வீட்டில் ஓசி சோறு சாப்பிடுகிறேன். என் மகள் வீடு. யாராவது எனக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டால் இந்த க்ஷணமே குடுமியையும் பூணூலையும் அறுத்துப் போட்டு விடுவேன் என்றார்.
கரிச்சான் குஞ்சு குடுமி வைத்திருந்தது நமக்குப் பிரச்சினை இல்லை. அவரது இலக்கியச் சாதனைகளைப் பார்க்க வேண்டும். சட்டோபாத்யாயவின் தலையணை சைஸ் நூலை அவர் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் புரை நோய் வேறு வந்து விட்டது. நான் தில்லியில் இல்லாமல் இங்கே கும்பகோணத்தில் இருந்திருந்தால் ‘நீங்கள் சொல்லுங்கள் கரிச்சான் குஞ்சு, நான் எழுதுகிறேன்’ என்று சொல்லியிருப்பேன் என்றேன். அறுபது ஆண்டுகளுக்கு முன்பே பசித்த மானுடம் என்ற ஆண் ஓரின உறவு நாவலை எழுதியவர் அவர்.
அவர் மொழிபெயர்த்தது சட்டோபாத்யாயவின் What is Living and What is Dead in Indian Philosophy? என்ற புத்தகம். அதை மொழிபெயர்க்க சம்ஸ்கிருத அறிவும் தேவை.
-சாருநிவேதிதா

நன்றி R. கந்தசாமி ஸார்.

====================================================================================

ஏகாந்தமாய் 
ஏகாந்தன் 

வித்தை காட்டிய ’நிடோ’

சோமாலியத் தலைநகர் மொகதிஷுவை ஒரு நகரம் என்று சொல்ல மனம் ஒப்பியதில்லை. மிஞ்சிப்போனால் அது ஒரு பெரிய டவுன் எனலாம். அதன் குறைவான நிலப்பரப்பு, ஒரு மில்லியனுக்கும் குறைவான, திட்டுத் திட்டாகக் காணப்ப்பட்ட ஜனத் திரள், இருப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தும் சாலைகள், மிகக்குறைவான ஆதார வசதிகள், ஏனோதானோ பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் என்று ஒவ்வொன்றையும் குறிப்பாகப் பார்க்க ஆரம்பித்தால், பிரச்னைகளின் பட்டியல் விரிய, விரிய இப்படித்தான் விவரிக்க நேரும். நான் சொல்வது 80-களின் காலகட்டம். உள்நாட்டுக்கலவரங்கள், கொக்கரித்த தீவிரவாதம்,
ஓயாத ஆதிவாசிச் சண்டைகள் என மலிந்துபோன 90-களில், நிலமை மேலும் மோசமாகி சிரழிந்தது நாடு. நாடு என்று சொல்வதற்கே ஒரு தகுதியில்லாது போனது அதற்கு.

நானிருந்த காலகட்டத்தில், வார விடுமுறை நாட்கள் காய்கறி வாங்குதல், சமையல் எண்ணெய், பால் பவுடர், பருப்புவகைகள் எங்கே கிடைக்கும் என்றெல்லாம் வலைபோட்டுத் தேடுதல், புலனறிதல் என வியாபித்து, சட்டென மறைந்துவிடும். நகரின் ஷபேலே (Shabele)பகுதி சோமாலி பார்லிமெண்ட், அரசு அலுவலகங்கள், நினைவுச்சின்னங்கள், ஒன்றிரண்டு இத்தாலிய கடைகள், குட்டி காஃபி ஷாப்கள் எனத் தன்னகத்தேக் கொண்டு
கொஞ்சம் கௌரவமாயிருந்தது. இத்தாலியக் கடைகளில் ஆனைவிலை, குதிரைவிலையில் தயிர், ப்ரெட், பட்டர், ஜூஸ் கிடைக்கும்.. ம்… ஒரு இந்தியனும் தவறிக்கூட அங்கே ஷாப்பிங் செய்து நான் பார்த்ததில்லை! வெள்ளையர்கள் சிலர்தான் ஊர்வார்கள் அதற்குள். ஆஃபீஸ் விட்டுச் செல்லும்போது சில சமயங்களில் தயிர் அல்லது பட்டர் வாங்க என, அங்கே நான் போவதுண்டு. கடையையும் பார்க்க அழகாக வைத்திருந்தான் அந்த இத்தாலிக்காரன்.

பகாரா (Bakara) மார்க்கெட் ஏரியா அந்த ஊரின் பிரதான சந்தை வெளி எனலாம். ஊருக்கு சற்று வெளியே இருந்ததாகத் தெரியும். அங்கே
சில பெரிய சைஸ் மளிகைக் கடைகள் இருந்தன. அவற்றில்தான் வீட்டுச்சாமான்கள் வாங்கவேண்டும். கூடவே ஆங்காங்கே பழைய சாமான்கள் விற்கும் கடைகள், சிகரெட் கடைகள், ரோட்டோரத் துணி வியாபாரம் (பெரும்பாலும் பாம்பேயிலிருந்து வந்தவை) - இப்படி
ஒரு காட்சி. இவற்றோடு, வாசலில் ஒல்லிக்குச்சி செக்யூரிட்டியோடு ஒரு குஜராத்தி நகைக்கடை (இது ஒன்னுதான் குறைச்சல்!) அங்கே இயங்கியது. இப்படி எந்தவகையிலும் ஒத்துவராத ஒரு வினோதமான ஊரது. மொகதிஷு துறைமுகத்திற்கு இந்தியா, வளைகுடா, இத்தாலி போன்ற நாடுகளின் சாமான்களை அள்ளிப்போட்டுக்கொண்டு எப்போதாவது வந்து நிற்கும் ஒன்றிரண்டு வணிகக்கப்பல்கள். நிடோ (Nido) பால்பவுடர் மார்க்கெட்டில் கிடைக்கவில்லை என்கிற பயங்கர நிதர்சனம் ஊரின் வெளிநாட்டு மனிதர்களிடையே பரவியிருக்க, போய் கடைகளில் விஜாரித்தால், ”அடுத்தமாதம் கப்பல் வந்துரும்.. கிடைக்கும்..  அவசரப்படாதீர்கள்” என்று சர்வசாதாரணமாகச் சொல்வார்கள். உள்நாட்டுக் கால்நடைகள் காசநோயினால் அவதிப்படுவதாக சில  வருடங்களுக்கு முன் வந்த ரிப்போர்ட் ஒன்று (ஐ.நா. நிபுணர்களின் கைங்கர்யம்) அங்கு வசித்த வெளிநாட்டவரிடையே பீதியைக் கிளப்பிவிட்டிருக்க, கறந்த பால் எங்கும் கிடைக்குமா என்றே ஒருவரும் தேட முயற்சித்ததில்லை. ஸ்வீடனிலிருந்தோ, டென்மார்க்கிலிருந்தோ வந்துகொண்டிருந்த நிடோ டின் தான் அம்ருத கலசம் அங்கே. 

கிலோ டின் இரண்டு வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு யாராவது
மார்க்கெட் பக்கத்திலிருந்து வருவது தென்பட்டால் போதும்.. அவரை விரட்டோ விரட்டென்று விரட்டி, எங்கே .. எப்படிக் கிடைத்தது என்று
குடைந்து விஜாரித்து, உடனே ஓடுவார்கள் மார்க்கெட்டிற்கு. அங்கே வழக்கமாக வாங்கும் கடைகளுக்குள் தலையைவிட்டுக் கேட்டால்,
”நோ ஸ்டாக்!” என்று கூலாகச் சொல்லிவிட்டு வேறு வேலைகளைப்பார்த்துக்கொண்டிருப்பார்கள் கடைமுதலாளிகள். சில சமயங்களில் துவரம்பருப்பு அந்தக் கடைகளில் தென்படும். விலையைக்
கேட்டபின், பருப்பில்லாமல் பண்ணுவதற்கு எத்தனை ஐட்டம் இருக்கு.. என்று நினைத்தவாறு வேகமாக நகர நேரும். சமையல் எண்ணெயில் சோயா, சோள எண்ணெய்கள் அவ்வப்போது கிடைத்தன. எப்போது தலைகாட்டுகிறதோ அப்போதே ஸ்பேர் பாட்டில்கள் வாங்கி வைத்துக்கொள்ளவேண்டியதுதான். அடுத்த வாரம் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தால் அம்பேலாகிவிடும்.

”இது சோமாலியா.. கண்ணு! எப்பவேணாலும் வாங்கிக்கலாம்கற இந்தியான்னு நெனச்சிட்டியாக்கும்” எனத் தமிழர்கள் யாராவது ஒருவரின் வீட்டில் சந்தித்து, புதிதாக அங்கு வந்திருக்கும் நம்நாட்டவர் ஒருவரைக் கலாய்த்தவாறு சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் மோப்பமிட்டு, யார் அதிகமாக வாங்கி சேர்த்துவைத்திருக்கிறார்களோ அவர்களிடம் நைஸாகக் கெஞ்சி ஒரு எண்ணெய் பாட்டில், ஒரு டின் நிடோ என்று வாங்கிச் செல்வதையும் கவனித்திருக்கிறேன். வயிற்றுக்குச் சோறிடல்.. அதுவும் ஒழுங்கு முறையாக இடல் எவ்வளவு முக்கியம் வாழ்வில்…என்பது சோமாலியா போன்ற பஞ்ச நாடுகளில் வாழ
நேர்கையில் நொடியில் புரிந்துவிடும். வந்துசேர்ந்த சில நாட்களிலேயே, நமது வாழ்க்கையைப் பிரித்து மேய்ந்துவிடும் நாடது.

- வளரும்

==========================================================================


ஜாதகம் - ஜோசியம் - திரு ரவி சாரங்கன் - Face Book 

முகூர்த்தம்- திருமணம் - 12ம் இடம் - பஞ்சாங்கம்
திருமணத்துக்கு முகூர்த்தம் குறிப்பது மிக முக்கியமான ஒன்று அதேபோல திருமண பொருத்தம் பார்க்கிற போது வெறும் 10 பொருத்தங்கள் மட்டுமல்லாது இருவரது லக்னத்துக்கு 12ம் இடம், சுக்ரனுக்கு 12ம் இடம் அதன் அதிபதி பலம் பார்வை இவற்றை கொண்டு பொருத்தம் சொல்லவேண்டும்.
பஞ்சாங்கத்தில் ஒருமாதத்தில் பல முகூர்த்தங்கள் போட்டிருப்பார்கள் அது அத்தனையும் ஒருவருக்கு செட்டாகும் என சொல்ல இயலாது. அதில் கசரம், விஷ கடிகை, பல இடங்களின் பலம் திருஷ்டி இப்படி பார்க்கனும்
சமீபத்தில் ஒரு வக்கீல் சாருடன் பேசிய அனுபவம். அவர் சொன்னது டைவர்ஸ் கேஸ்களில் முக்கிய பங்கு வகிப்பது பெண்ணின் அம்மா என, இரண்டாவது வயது வித்யாசம் மிக குறைவாக இருப்பது (இதுதான் ஈகோவுக்கு காரணமாக அமைவது என்பது அடியேன் புரிதல்)
அடியேன் பொருத்தம் பார்க்கும்போது பெண்ணுக்கு மாமியார் ரிலேஷன் பார்ப்பது போல பிள்ளைக்கும் பார்ப்பேன் அதனால் தான் 12ம் இடம் அவசியம் பார்க்க வேண்டும் அதில் இருக்கும் கிரஹம் பலம் இவைதான் அந்த திருமண வாழ்க்கை சுகம் தருமா, பிரிவு தருமா என சொல்வது.
இவை எல்லாம் நன்றாக இருந்தால் கூட திருமணத்துக்கு குறிக்கும் முகூர்த்த லக்னம் அதில் இருக்கும் கிரஹ நிலைகள் மட்டுமல்லாது அன்றய வாரம், திதி,யோகம் கரணம் இவையும் சேர்த்து பார்க்கனும் பஞ்சாங்கம் இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
பலதடவை சொல்லி இருக்கிறேன் தாலி கட்டுவது என்பது 500 வருடங்களுக்குள் வந்திருக்கலாம் அது முக்கியமில்லை அந்த முகூர்த்த நேரத்துக்குள் அக்னி வளர்த்து 7 அடி வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்யும் பாணிக்ரஹணம் ரொம்ப முக்கியம் அதை மனதில் கொண்டு முகூர்த்தத்தை நடத்தினால்
நிச்சயம் விவாகரத்து குறையும், பெண் பிள்ளையை விட 5-7 வயதுகள் குறைவாக இருந்தால் விவாகரத்து உண்டாக வாய்ப்பே இல்லை என்பது அடியேன் ஜோதிட அனுபவம்

==================================================================================

வெள்ளையில் வெள்ளையையும் 
கருப்பில் கருப்பையும் 
கலந்தபோது
கவனிப்பார், கவலை கொள்வார் 
யாருமில்லை.
கருப்பில் வெள்ளை, வெள்ளையில் கருப்பு 
என்று மாற்றிக் கலந்தால் 
உற்று நோக்குவார்கள் குற்றம் சொல்வார்கள்.
ஒத்துப் போவதில் என்றும் ஒன்றும் ஆவதில்லை 
முரண்படுவதில் தான் முகங்கள் தெரிகின்றன 

=============================================================================================

72 கருத்துகள்:

  1. முரண்படுவதில் தான் முகங்கள் தெரிகின்றன.

    -- இதெல்லாம் யோசித்து எழுதும் வார்த்தைகள் அல்ல. தானே வந்து விழும் வார்ர்தைக் கோவைகள். வாழ்த்துக்கள்.

    எழுதுவதில் கூட வழக்கமான முடிவுகள் கொண்ட கதைகள் சுவாரஸ்யம் தருவதில்லை.
    வழக்கத்திலிருந்து விடுபட்டு வாசகர்கள் நினைத்துக் கூட பார்க்காத வகைகளில் கதை முடிவுகளை அமைப்பது என்றுமே வரவேற்பைப் பெருகின்றன. வழக்கமான சிந்தனைகளிலிருந்து விலகி தனித்துத் தெரிவது என்றுமே வெற்றிக்கான திறவு கோல்.

    சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் இதனால் தான் சோபித்திருக்கிறார்கள் என்பது என் கணிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார். அவைதான் கவன ஈர்ப்பு பெறுகிறது!!

      நீக்கு
  2. GPay Phone pay இல்லைனா சில்லறைத் திருடர்களின் கொட்டம் தாங்காது. சரியான சில்லறை கொடுன்னு நம்மை மிரட்டுவானுங்க. நமக்குக் கொடுக்கவேண்டியதைத் தராம சில்லறை இல்லைனு கூசாம திருடுவானுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  ஆனால் ஆட்டோக்காரர்கள் G Pay யில் பணம் போட்டாலும் முப்பது ரூபாய் சேர்த்துப் போடுங்கள் சார்.,,  என்கிறர்கள்!

      நீக்கு
  3. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  4. GPay Phone pay இதற்கும் நமக்கும் வெகுதூரம்.. ஆனாலும் வேறு ஏதாவதொன்று கைவசம் வேண்டும்.,

    /// சில்லறைத் திருடர்களின் கொட்டம் ///

    அருமை.. அருமை..

    பதிலளிநீக்கு
  5. முரண்படுவதில்
    முகங்கள் தெரிந்தாலும்
    மனங்கள் புரிவதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரண்படுவதை உணர்வதே மனம்தானே!

      நீக்கு
    2. நம் சொந்த மனப்போக்குகளை ஒதுக்கி தூர வைத்து விட்டு சிருஷ்டிக்கும் விதவித கதாபாத்திரங்களின்
      மனோலயத்தில் சொகுசாக உலா வரும் உல்லாசம் தானே படைப்பிலக்கியத்தின் ஆதார ஸ்ருதி?.. இரண்டு வகையான கதாபாத்திரங்களின் உள்ள முரண்பாடுகள் தானே கதைகளுக்கான கருவாகின்றன?

      நம் ஒற்றை மன நிலை, ஒரே மாதிரியான தீர்வுகள், போக்குகள் இதெல்லாம் பல்வேறு
      மனநிலைகள் கொண்ட வாசகர்களை சென்று அடையாது அல்லவா?
      அதற்காக அப்படி நினைத்தேன்.

      நீக்கு
    3. ஜீவி அண்ணா உங்கள் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன். அதேதான். படைப்பிலக்கியத்தில் //நம் சொந்த மனப்போக்குகளை ஒதுக்கி தூர வைத்து விட்டு சிருஷ்டிக்கும் விதவித கதாபாத்திரங்களின்
      மனோலயத்தில் சொகுசாக உலா வரும் உல்லாசம் தானே படைப்பிலக்கியத்தின் ஆதார ஸ்ருதி?..//

      அதே அதே!

      கீதா

      நீக்கு
    4. சிக்கலான​ வார்த்தை அமைப்பு.. மனதில் ஏறிக்கொள்ள முயற்சிக்கிறேன்

      நீக்கு
    5. தி. கீதாவின் Observation அருமை.
      மனோதத்துவம் அறிந்தவர். எழுத்தாற்றலும் கொண்டவர். கதைகள் எழுதும் பொழுது சிறந்த எழுத்தாளர்கள் கதாபாத்திரங்களின் மனோநிலைக்கு கூடு விட்டு கூடு பாய்ந்து தாம் எழுதும் கதைகளுக்கு
      எப்படி தத்ரூபத்தைக் கொடுக்கிறார்கள் என்பதைக் கணிப்பது அவருக்கு எளிதாய் போயிற்று.

      நீக்கு
    6. சிறந்த எழுத்தாளர்கள் தமக்கு வாய்த்த இயல்பான குணங்கள் தாம் எழுதும் கதைகளில் முன்னிருத்தப்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில்
      தாம் எழுதும் கதைகளின்
      கதாபாத்திரங்களின் மன நிலையை சுவீகரித்துக் கொண்டு தம் கதைகளுக்கு தத்ரூப சாயலைக் கொடுக்கிறார்கள் என்றால் இன்னும் எளிமையாக இருக்கும்.

      இதனால் என்ன advantage என்றால் கதை மாந்தர்களின் போக்குகள் அவர்கள் எழுதும் கதைகளில் ஒரே மாதிரி இல்லாமல் கதைக்குக் கதை வித்தியாசப்பட்டு வாசிக்க சுவையாக இருக்கும்.

      நீக்கு
  6. சின்ன சின்ன சில்லறை காரியங்களுக்கு ஜீ பே உபயோகிப்பதால் நம்முடைய கையிருப்பு உண்டு என்ற கணக்கு தப்பி போய்விடுகிறது.

    தாலி செண்டிமெண்ட் இல்லாத T V தொடர் இல்லை. தாலி என்பது நமது பழைய பண்பாடு என்பது எனது புரிதல். தாலி என்ற சொல் பனைக் குருத்தோலை என்பதாக ஜெ மோ அவருடைய வெண்முரசு (மஹா பாரத) நாவலில் எழுதியிருப்பதாக அறிவு. தற்போது தாலிக்கு தென் இந்தியாவில் தான் அதிக முக்கியத்துவம். வடக்கில் தான் சப்தபதிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

    ஒத்துப்போனால் உண்டு வாழ்வு, முரண்பட்டால் உண்டு .....(சிறையில்).

    பொக்கிஷம் இல்லாத வியாழன். பின்னூட்டம் இட கருத்துகளும் இல்லை.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீராம், தலைப்பு பார்த்ததும் உடன் நினைவுக்கு வந்தது..ஹாஹாஹா
    ஒரு பாடல்.......உன் பணம் பணம் என் பணம் பணம் உன் பணம் பணம்.....ஆனா எந்தப் பாட்டுன்னு டக்குனு நினைவுக்கு வரவில்லை. யப்பா யப்பா ஐயப்பா?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. எனக்கு Pay (பேய்) நட்புகள் தான் இருந்தாலும் எந்த Pay யும் இல்லை!!!!! இப்பவும் பணம் தான்.

    ஆனால் ஒரு சில இடங்களில் இந்தப் பே கள் உதவுகின்றன எனலாம் முக்கியமாகச் சில்லறை. இல்லைனா உடனே ஒரு ஷாம்பூ sachet, பாத்திரம் தேய்க்கும் புதிய சோப் sachet இல்லைனா மிட்டாய நீட்டிடுவாங்க! கடுப்பு! அதிலும் மிட்டாய்தான் ரொம்பக் கடுப்பு.

    இதுல நிறைய சொல்லலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணமாய் தந்தால் நிறைய செல்வது போல ஒரு பீலிங்!  இது போவதே தெரியவில்லை!!

      நீக்கு
  9. சில இடங்களில் பணமாய் கொடுத்தால் ஜி எஸ் டி இல்லாமல் காசு குறைவாய் கொடுக்கலாம் என்பதைத் தவிர...//

    ஓ அப்படியா! இது புதுசா இருக்கே. அப்ப கணக்கு வைச்சுக்க மாட்டாங்களா? அதுவும் தப்பாச்சே பில் இல்லைனா அவங்க கணக்குல வராதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அதேபோல டோல் களில் வரி செலுத்த ஈ பணம் இல்லாமல் கையில் பணமாய் தந்தால் அதிகம் அழவேண்டும்ந!  தலைகீழ்.

      நீக்கு
  10. அப்போது ஒரு பேச்சு இருந்தது. 'யாருக்கோ ஒரு லட்சம், ஒரு கோடி (என்னங்கடா...) கூட இது மாதிரி கிடைத்திருக்கிறது. உங்களுக்கும் கிடைக்கலாம்!' //

    ஆ!! இது டுபாக்கூரா இருக்கும்

    சில இடங்களில் g pay or phone pay பண்ணினா 50, 100 ரூ கழிச்சுக்குவோம்ன்னு பார்த்திருக்கிறேன். discount offer??!!!

    இந்த டிஜிட்டல் வழி பணப் பரிமாற்றம் மிக நல்ல விஷயம். accountability. இப்போது தெரு வியாபாரிகள் தனியாகச் சில்லறை வைத்துக் கொள்கிறார்கள் ஒரு வேளை நாம் பணமாகக் கொடுத்தால் தருகிறார்கள்.

    ப்ணமாகக் கொடுப்பததில் இப்போதைய பிரச்சனைகள், அந்நியன் கணக்குதான்! நாணயங்கள் 50, 1, 2 ரூபாய் மிகவும் குறைவு புழக்கத்தில். சில சமயங்களில் 5 ரூபாய்.

    அது போல 200.99 பேட்டா போல இப்போது பலரும் வைக்கிறார்கள் இங்கும் டிஜிட்டல் தான் உதவும் இல்லை என்றால் அந்நியன் கணக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு மொபைல் ரீசார்ஜ் செய்ய பணம் 239 ரூபாய் என்றது.  ரீசார்ச்ஜ் செய்ததும் அதுவே 240 என்று மாறிக்கொண்டது!

      நீக்கு
  11. எஸ் இ டி சி பஸ்ஸில் செய்தியில் "நெல்லை" ன்னு பார்த்ததும் அட நம்ம நெல்லை, செய்திகளில் இடம் பெறுகிறார! வேற லெவல்பா என்று நினைத்து அடுத்தச் சொல்லுக்கு வருவதற்குள் கற்பனைக் குதிரை கற்பனையில் மேய்ந்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ற்று சென்னைப்பேருந்தில் வந்த ஒரு பெண் தனது ஸ்டாப் வந்தததும் இறங்க முற்பட, கீழே இருந்தான் பலகை நழுவி அவள் கீழே விழுந்தாளாம்.

      நீக்கு
  12. ஜி.பே என்றால் வங்கிக் கணக்கு ஒருவர் பெயரில் மட்டும் இருக்க வேண்டுமாமே? அப்படியா, ஸ்ரீராம்?
    அடுத்தது இரட்டை பரிசீலனை. இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்பதால் ஜி.பே. பக்கமே போகவில்லை. ஓலா, ஊபர் எல்லாம் Card என்றாலே வருவதில்லை.
    சமீபத்திய கிளாம்பாக்க
    சவாரி மவுசுகள் வேறே.
    (கிளாம்பாக்க அசெளகரியங்களில் மாட்டிக்கொண்ட சென்னை நகர அன்றாட போக்குவரத்து-- ஒரு பதிவுக்கான விஷயம்)
    இரண்டாவது பெட்டிக்கடை மாதிரி ஆசாமிகளிடம் சில்லறை வணிகம் தான் என் வயதுக்கெல்லாம் சரிப்பட்டு வரும் என்பதாலும். காசைக் கொடுத்தோமா, சங்காத்தியத்தை முடித்தோமோ என்ற அனுபவ மனப்போக்கு.
    வெளியே கிளம்பும் போதே கை (ஒரு பாலிதின் கவரில்) நிறைய சில்லறை எடுத்துக் கொள்பவனுக்கு கவலை ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவர் பெயரில் மட்டும் தான் இருக்க வேண்டும் என்றில்லை... ஒரு அக்கவுண்ட் இருந்தால் போதும். நான் பெரும்பாலும் டிஜிட்டல் பே தான்!

      நீக்கு
  13. அடுத்த - ச் - கட்

    ரொம்ப தட்டச்சுப் பிழை, கவனக் குறைவு இப்ப எல்லாம் நிறைய வருகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஆ! என் அபிமான வாத்தியார் நாராயண ஸ்வாமி ஸார் பற்றியா?
    என்னலாம் உருட்டு? நாளை வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..மன்னார்குடியில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். சமஸ்கிருதம் கற்ற அறிஞர். குபரா, தி.ஜா, எம்விவி குழு நண்பர்களோடு நெருக்கம் கொண்டவர். பிற்காலத்தில் கும்பகோணம் டபீர் தெருவில் வசித்தார்.
      சாரு பிறந்த பொழுது ஸாருக்கு 34 வயசு. சாருவை விட அவ்வளவு வயசுப் பெரியவர் இவர்.

      நீக்கு
    2. :)) ஓ..  அந்த நேரத்தில் அப்பா கும்பகோணத்தில்தான் இருந்தார்.  நானும் இருந்திருப்பேன்.  நினைவில்லை!

      நீக்கு
  15. ஒரு முக்கியமான செய்திய விட்டுட்டீங்களே ஸ்ரீராம்.

    தமிழக வெற்றி கழகம் னு விஜயின் கட்சியின் பெயரில் ஒற்றுப் பிழை..... இதை விஜய் கவனிப்பாரா சரி செய்வாரா...செய்தே ஆக வேண்டும் என்று சொல்லிட்டுருக்காங்களே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழக வெற்றிக்கும் கழகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதால் ஒற்று வரவில்லை.

      நீக்கு
    2. பிழையுடன் பெயர் வைப்பது தமிழ்ப்பற்று மற்றும் பகுத்தறிவு!

      நீக்கு
  16. ஆளாளுக்குக் கட்சி!!! பணம் இருக்கு என்ன செய்யன்னு தெரியலை போல! எனக்கு ஆச்சரியமான விஷயம்....செலவாகுமே நிறைய அப்புறம் எப்படின்னு?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கெங்கிருந்தோ வரும்.  கருப்பு வெள்ளையாகும்...  நிறைய இருக்கே.

      நீக்கு
  17. நான் சில்லறைகள் நிறைய வைத்துக் கொள்கிறேன், எங்கு எந்தக் கடையில் கிடைத்தாலும் அப்படியே தனியாக அதை வைத்துக்கொண்டுவிடுவேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் எதற்கும் இருக்கட்டும் என்று வைத்திருப்பேன்.

      நீக்கு
  18. G-Pay போன்றவை நல்ல வசதி தான். சமீபத்தில் G-Pay மூலம் மொபைல் recharge செய்தால் Convenience Fee வாங்க ஆரம்பித்து இருக்கிறார்கள் - இதுவும் ஒரு வித வசூல் தான். ஆரம்பத்தில் எல்லாம் இலவசம், Cashback தருவோம் என்று ஆரம்பித்தாலும், மக்கள் அதற்கு பழக்கப்பட்ட பிறகு இது போன்று விஷயங்கள் - Convenience Fee போன்றவை தொடங்கிவிடும். மக்களும் வேறு வழியின்றி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். நான் அதனால் recharge செய்வதற்கு G-Pay பயன்படுத்துவது இல்லை. வங்கிக்கான செயலியிலி இருந்தே செய்கிறேன். எல்லா இடங்களிலும் G-Pay போன்ற செயலிகள் தான் பயன்படுத்துகிறேன். சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன் - பிச்சை கேட்கும் ஒருவர் கூட Phonepe QR Code வைத்திருப்பது போல - உண்மையோ, பொய்யோ - அப்படியான நாள் வந்தாலும் வரலாம்!

    பதிவின் மற்ற பகுதிகளும் நன்று. தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைல் ரீசார்ஜ் போன்றவை செய்தால் அதில் ஏதேதோ சலுகைகள் இருப்பதாய் விளம்பரப்படுத்துவார்கள். நன்றி வெங்கட்.

      நீக்கு
  19. கரிச்சான் குஞ்சு அவர்களைப் பற்றிய தகவல்கள் யோசிக்க வைக்கிறது. அதை எழுதியவரைப் பார்த்ததும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. டிஜிட்டல் வாழ்க்கை சரிதான் ஆனால் அது என்னைப் போன்ற பாமரர்களை ஏமாற்றி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  21. ஏகாந்தன் அண்ணாவின் சோமாலியா அனுபவங்களும் அன்றைய சோமாலியா விஷயங்களும் தகவல்களாக...

    கீதா

    பதிலளிநீக்கு
  22. தாலி கட்டுவது என்பது 500 வருடங்களுக்குள் வந்திருக்கலாம் அது முக்கியமில்லை அந்த முகூர்த்த நேரத்துக்குள் அக்னி வளர்த்து 7 அடி வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்யும் பாணிக்ரஹணம் //

    அதேதான். இதுதான் என் புரிதலும் பல வருடங்களாக. நான் அடிக்கடி சொல்வது இது. தாலி என்பது முன்பு காலத்தில் இல்லை. ஆண்டாளின் வாரணமாயிரத்திலேயே தெரியும். அதுவும் இந்த வழக்கம் நம் நாட்டிந் தெற்குப் பகுதியில்தான் கூடுதல். குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த தாலி செண்டிமென்ட் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப.

    வடக்கில் உள்ள பெரும்பான்மையோர் சப்தபதி யைத்தான் முக்கியமாகக் கருதுகின்றனர். அவர்களுக்குத் தாலி கட்டும் பழக்கம் இல்லை. அவர்கள் சமூகப்படித் திருமணம் நடந்தால் திருமணப் பதிவில் இந்த சப்தபதி புகைப்படம் இணைக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு பதிவுத் திருமணம் செய்ய சப்தபதி நடந்ததா என்கிற கேள்வி இருந்தது. இப்போது எப்படியோ தெரியாது.

      நீக்கு
  23. ஸ்ரீராம், கறுப்பும் வெள்ளையும் அடிப்படை பல நிறங்களுக்கு. உங்கள் எண்ணத்தின் வெளிப்பாடு அருமை. புரிந்தது,

    எதிலுமே கருப்பு இருக்கக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். சென்டிமென்ட்.
    அதை விடுங்க நம்ம உடம்பிலேயே கருப்புதானே இருக்கு தலைமுடி, கண் விழி.....அப்போ செண்டிமென்ட் என்னவோ?!! தலை முடி. அது வெள்ளையானா கூடக் கருப்பு வண்ணம்தான் பூசிக்கறாங்க!!!!! கருப்பை சனியாகப் பார்த்தால் நம் உடம்பிலேயே பிறக்கும் போதே கூடவே தானே! பிரபஞ்சம் கருப்பு ...இயற்கை/இறைவனின் படைப்புகள் நமக்கு நிறைய பாடங்களையும் தத்துவங்களையும் கற்பிக்கின்றன. நாம் தான் அதிலிருந்து விலகி நிற்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பு என்பதை எதிர்மறையாக, வெள்ளை என்பதை நேர்மறையாக கொள்ளலாம்.  சாதி, சமயமாகவும் கொள்ளலாம்.

      நீக்கு
  24. உண்மைதான். சாலையோரக் கடைகளில் எல்லாம் qr code வந்து பல காலமாகிறது. கையிலிருந்து நோட்டுகள் செலவழிக்கும் வாய்ப்புகளே குறைவு. நல்ல அலசல்

    கவிதை அருமை.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களில் , நானும் நிறைய கற்றுக் கொண்டேன்.G-Pay பழகவில்லை. பிள்ளைகள் விடுமுறைக்கு வரும் போது அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
    நீங்கள் சொல்வது போல வேலை செய்யும் உதவி ஆள், பூக்கார அம்மா, நான் வாங்கும் காய்கறி கார அம்மாள் எல்லாம் பணம் கையில் வேண்டும் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமீப காலமாக வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வாட்ஸாப்ப்புக்கும் GPay க்கும் பழகி வருகிறார்.  நல்ல அறிகுறி.

      நீக்கு
  26. //வயிற்றுக்குச் சோறிடல்.. அதுவும் ஒழுங்கு முறையாக இடல் எவ்வளவு முக்கியம் வாழ்வில்…என்பது சோமாலியா போன்ற பஞ்ச நாடுகளில் வாழ
    நேர்கையில் நொடியில் புரிந்துவிடும்.//

    சோமாலியா வாழ்க்கை மிக கடினம் ,அதை பொறுத்துக் கொண்டு பணிபுரிந்து இருக்கிறார் ஏகாந்தன் அவர்கள்.

    பதிலளிநீக்கு
  27. //ஒத்துப் போவதில் என்றும் ஒன்றும் ஆவதில்லை
    முரண்படுவதில் தான் முகங்கள் தெரிகின்றன //

    கவிதை அருமை. முரண்படும்போதுதானே யார் யார் எப்படி என்று தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  இல்லா விட்டால் மௌனமாக இருந்து விடுவார்கள்!  நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  28. பல தகவல்களுடன் பகிர்வு கண்டோம்.

    பதிலளிநீக்கு
  29. ட்ஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் இருப்பது மிகவும் சௌகரியமாகவே இருக்கிறது. ஜிபே, கூகுள் பே எல்லாமே. பயணம் செய்யும் போது குறைவாகப் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு செல்லலாம். டெபிட் கார்ட் கையில் இருப்பதும் நலம். சில இடங்களில் நெட்வொர்க் சிரமப்படுத்தும். கார்டுகள் பயன்படுத்தினால் கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    என்றாலும் வங்கிக்குச் செல்லும் வழக்கம் இன்னும் இருக்கிறது. சிலவற்றை மொபைல் வழியாகச் செய்ய முடிவதில்லை.

    இப்போதெல்லாம் ஆஃபர்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. ஏகாந்த சாரின் சோமாலியா கட்டுரை மிக அருமையாகச் செல்கிறது. அந்த நாட்டின் அப்போதைய நிலைமையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    ஸ்ரீராம், உங்கள் கவிதை தத்துவார்த்தமாக, உள் அர்த்தத்தைக் கொண்டதாக நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!