ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 08 : நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 08

Bபேட் துவாரகைத் தீவில் ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்துவிட்டு மன நிறைவோடு நிலப்பகுதியை நோக்கிய எங்கள் படகுப் பயணம் தொடர்ந்தது. தீவை நோக்கிய பிரயாணத்தில் பார்த்தது போலவே சீகல் பறவைகள். அவைகளைக் கண்டுகளித்து, அவைகளுக்கும் விடை கூறி, நிலப் பகுதியை அடைந்தோம்.

படகுகளின் நிறுத்தம். பார்க்கவே மிக அழகாக இருந்தது. 

மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு, இந்தப் படகுகளில் எல்லாம் தேசியக் கொடிகள் பறக்கின்றன. இதைப்போலவே வாரணாசியிலும் மற்ற பகுதிகளிலும். இந்த வித்தியாசத்தை நான் காண முடிந்தது. 

திரும்பிச் செல்லும்போது எங்களுக்காக தீவில் ஏதேனும் வாங்கி வந்தீர்களா என்று பார்க்கிறது போல..

நீயெல்லாம் நம்மாள், அதனால் பயமில்லை என்று சொல்வதுபோல பறவைகள் வெகு அருகிலேயே படகில் உட்கார்ந்துவிட்டன.


நாங்களும் சமாதானப் புறாக்கள்தாம் என்று சொல்கின்றனவோ?


இரண்டு மணி நேரங்கள் நிலப்பகுதியிலிருந்து பேட் துவாரகை சென்று தரிசனம் செய்து மீண்டும் நிலப்பகுதிக்கு வருவதற்கு ஆகியிருந்தது. அரை மணி நேர பேருந்துப் பயணத்திற்குப் பிறகு நாங்கள் கோமதி துவாரகையில் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம் (இரவு 8 மணி). அருகிலேயே கோமதி துவாரகை கோவிலுக்கு ஆட்டோவில் சென்றுவிட்டு, முடிந்தால் தரிசனம் செய்துவிட்டு 9 மணிக்குள் சாப்பிடும் இடத்திற்கு வந்துவிடுங்கள் என்று யாத்திரைக் குழுத் தலைவர் சொன்னார். 

எங்களில் சிலர் மாத்திரம், ஆட்டோக்களில் கோவிலுக்குச் சென்று சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நேரக் குறைவினால் கோவிலுக்குள் செல்லவில்லை. அருகிலிருந்த கடைகளில் பாலில் செய்யப்பட்ட இனிப்புகள் எங்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதுபோல இருந்தது. 9 மணிக்கு அவசர அவசரமாக, உணவு உண்ணும் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.

இரவு உணவாக சாதம், குழம்பு, ரசம், கறியமுது கூட்டு என்று எப்போதும்போல நன்றாகவும் சூடாகவும் தந்தனர். அதிகாலை 3:45க்கு காபி தரப்படும் எனவும், அதனால் அதற்கு முன்பாகக் குளித்துவிட்டு தங்குமிட த்திலிருந்து உணவு உண்ணும் இடத்திற்கு லக்கேஜுடன் வந்துவிடவேண்டும் என்றும் 4 ½ க்கு கோமதி துவாரகையிலிருந்து கிளம்பிவிடுவோம் என்றும் கூறியிருந்தார்கள். 


வண்ண விளக்குகளால் ஜொலித்த கோவில் கோபுரம்

காலை 3 ¾ க்கு காபி கொடுக்கும் இடத்திற்குச் செல்லவேண்டும் என்றால், காலை 2 ½ மணிக்கே எழுந்து குளித்துத் தயாராக இருக்கவேண்டும்.  யாத்திரை என்பதால் எல்லோரும் குளித்துத் தயாராகிவிடுவார்கள். இந்த மாதிரிப் பயணங்களில் முழுமையான தூக்கம் இருக்காது. நானும், இரவு உணவை மிக மிகக் குறைவாகத்தான் எடுத்துக்கொள்வேன். 


காலை 3 ½ க்குத் தயாராகி, 4 ¼ க்கு காபி குடித்துவிட்டு, விஷ்ரோலியா அதிதி பவன் என்னும் இடத்திற்கு விடை கொடுத்துவிட்டு, 4 ¾ க்கு கோமதி துவாரகையை விட்டு மூல் துவாரகை நோக்கிப் பயணப்பட்டோம்.

மூலத் துவாரகை 

மதுராவிலிருந்து கிளம்பி ஸ்ரீகிருஷ்ணர் துவாரகைக்கு வரும்போது, இங்குதான் முதலில் தடம் பதித்தாராம். இந்த இடம் போர்பந்தர் அருகிலுள்ள வைசாவ்தா (விசாவ்தா) என்ற கிராமமாகும்.

ஜராசந்தனின் குழந்தைகளை கிருஷ்ணர் அழித்த தனால், அவர் மீது தொடர்ந்து போர் தொடுத்தும் கிருஷ்ணரிடம் அவன் தோல்வியடைந்தான். ஜராசந்தன் பீமாவின் கரங்களால்தான் மடியவேண்டும் என்பதால், கிருஷ்ணர் அந்த இடத்தை விட்டு விலகி, துவாரகை நோக்கிச் சென்றார்.  இந்த மூலத் துவாரகை, மஹாபாரதம் காலத்தைய இடமாகும்.


மூலத் துவாரகையும், அதன் எதிரில் இருந்த மண்டபமும்

விஷாவாடா என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில், நிறைய விஷ்ணு கோவில்களும், சிவன் சன்னிதியும், மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் பாதமும் இருக்கின்றன. கிருஷ்ணர் உபயோகித்த நீர்நிலையும் இங்கு உண்டு என்கிறார்கள்.

கோவில் வளாகத்தில் நிறைய சிறு சிறு கோவில்கள் உள்ளன. 

மூல துவாரகை துவாரகாதீஷ்

வளாகத்திலிருந்த சிறு சிறு கோவில்கள். 

வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த சிவன் சன்னிதி, துவாரகாதீஷ் எதிரில் இருக்கும் கோவிலில்

மூலத் துவாரகை துவாரகாதீஷ்.. 

மூலத் துவாரகை கோவிலில் நான்.

இந்தக் கோவிலில் 20 ரூபாய்க்கு மைதாவினால் செய்யப்பட்ட ஒரு இனிப்பு பிரசாதமாகக் கொடுத்தார்கள். ஒரு தடவை நாங்கள் காலை 5  க்கு கோமதி துவாரகையில் புறப்பட்டு, 6 ½ மணி வாக்கில் மூலத் துவாரகையை அடைந்தோம். இன்னொரு முறை காலை 6 மணிக்குக் கிளம்பி, 7 ½ க்கு மூலத் துவாரகை வந்து சேர்ந்தோம். இந்த மாதிரி சில நேரங்களில் தாமதமாகிவிடுவதால், காலை பாலபோகம் தருகின்ற இடம் மாறிவிடும். ஒரு முறை மூலத் துவாரகை தரிசனத்திற்குப் பிறகு வளாகத்திலேயே பின்புறம் நாங்கள் காலை பாலபோகம் சாப்பிட்டோம். இன்னொரு முறை, சுதாமா கோவிலில் தரிசனத்திற்குப் பிறகு சாப்பிட்டோம்.

பொதுவாக யாத்திரையில் காலை 6 மணிக்கு காபியும் (டீ அல்லது பால் கொடுப்பார்கள் தேவையானவர்களுக்கு. ஆனால் இதனை யாத்திரையின் முதல் நாளிலேயே சொல்லிவிட வேண்டும்). பிறகு 10 ½ அல்லது 11 மணிக்கு காலை உணவு (முழு உணவு), பிறகு மாலை 4 ½ க்கு காபி, ஒரு இனிப்பு மற்றும் காரம், இரவு 8 ½ மணிக்கு முழு இரவு உணவு என்று கொடுப்பார்கள். பிரயாணத்தால் இந்த நேரங்கள் மாறுபடும். காலை உணவு, கிட்ட த்தட்ட மதிய நேரம்தான் வழங்க முடியும் என்று இருக்கும் சமயங்களில், பால போகம் என்று சிறு உணவாக, உளுந்து சாதம், எலுமிச்சை சாதம் என்று வழங்குவார்கள். பொதுவாக யாத்திரை நடத்துபவர், இவ்வளவுதான் தருவோம் என்று சொல்வதில்லை. கேட்கும் அளவு தருவார்கள். ஆனால் பாலபோகத்தையே அதிகமாகச் சாப்பிட்டுவிட்டால், மதிய உணவு சாப்பிட முடியாது என்பதால் ஜாக்கிரதையாக இருப்பார்கள். பாலபோகத்தைப் பற்றி எழுத இந்த இடம்தான் கிடைத்தது.

தரிசனம் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பி, சுதாமாபுரி என்று அழைக்கப்படும், குசேலர் பிறந்த இடத்திற்குச் சென்றோம். சுமார் 1 மணி நேரத்திற்கும் குறைவான பிரயாணம்.

அந்த இடத்தைப் பற்றி வரும் வாரத்தில் பார்க்கலாமா?

 

69 கருத்துகள்:

 1. கற்பக கணபதி
  கனிவுடன் காக்க..
  முத்துக்குமரன்
  முன்னின்று காக்க..
  தையல் நாயகி
  தயவுடன் காக்க..
  வைத்திய நாதன்
  வந்தெதிர் காக்க..

  இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
  பிரார்த்திப்போம்..

  எல்லாருக்கும் இறைவன்
  நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. /// மத்தியில் பாஜக ஆட்சி வந்த பிறகு, இந்தப் படகுகளில் எல்லாம் தேசியக் கொடிகள் பறக்கின்றன... ///

  தேசியக் கொடி பற்க்குதா!?...

  பாசகா உள்ள வந்துடுமே!..

  எதுக்கும் நாம உசாராவே இருப்போம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா. கர்நாடகத்தில் (பெங்களூரில்) திரையரங்குகளில், படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசியகீதம் இசைக்கப்படும். அந்த நடைமுறை, தற்போதைய காங்கிரஸ் அரசு வந்தவுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. அதுபோல இந்த வாரம், கோவில் வருமானத்திற்கு பத்து சதம் வரி என அறிவிக்கப்பட்டு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நேற்று அது வாபஸ் பெறப்பட்டது. நன்றாக இருந்த காங்கிரஸ், தன்னைத் தானே இந்து மத மற்றும் தேசீயத்தின் எதிரியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு ஏன் அழிந்துபோக ஆசைப்படுகிறது என்று புரியவில்லை.

   நீக்கு
  2. தமிழகத்தில் தேசிய கீதம் என்றால் எப்பொழுதும் நிகழ்ச்சியின் முடிவில் தான். திரையரங்குகளிலும் இந்த வழக்கம் ஒருகாலத்தில் இருந்தது.

   அதே மாதிரி இடது கையை நீட்டியும் உயர்த்தியும் கூட்டங்களில் வாழ்த்துச் சொல்கிறார்கள். நம் பழக்கமோ எல்லாவற்றிற்கும் வலது கை தான்.

   இதே மாதிரி தான் மற்றவர்கள் உச்சந்தலையில் அழுத்துகிற மாதிரி தொட்டு ஆசுவாசப் படுத்துகிறார்கள். . நமக்கோ
   தலையில் கை வைத்தலே கூடாது. அது எதிர்மறை செயல்பாடு.

   தோளைத் தொட்டு
   அணைத்தோ என்பது நம் வழக்கம்.

   நீக்கு
  3. /// அதே மாதிரி இடது கையை நீட்டியும் உயர்த்தியும் கூட்டங்களில் வாழ்த்துச் சொல்கிறார்கள். நம் பழக்கமோ எல்லாவற்றிற்கும் வலது கை தான்... ///

   இவனுங்க யார் நம்மை வாழ்த்துவதற்கு??

   நீக்கு
  4. /// இடது கையை நீட்டியும்.. ///

   துக்க காரியங்களை
   இடக் கையால் செய்வர்..

   நீக்கு
 3. இதுவரையிலும் பகல் காட்சிகள் தான் புகைப்படங்களில் இடம் பெற்றன. ஆனால் இப்பதிவில் இரவு காட்சிகள் விதம் விதமான கலர்களில் ஜொலிக்கின்றன. பதிவு நன்று.
  Jayakumar​

  பதிலளிநீக்கு
 4. வெள்ளிக்கிழமைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை பதிவில் மனம் நிறைகின்றது..

  புண்ணியத் தலங்களின் தரிசனம்.. நான் எப்போது சென்று பார்ப்பது?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரவர்க்கான வேளை வரும். அது தவிர அங்கிருப்பவனும் இங்கிருப்பவனும் எங்கிருப்பவனும் அவனே அல்லவா? சமீப, கொஞ்சம் கடினமான பூரி யாத்திரையில், பூரி ஜெகன்னாதரைத் தரிசனம் செய்தாலும், கருவறை மிக தூரமாகவும், போதிய வெளிச்சம் இல்லாமையாலும் முழுமையாக தரிசனம் செய்யவில்லை எனத் தோன்றியது (இரு முறை தரிசித்தும்). இன்னொரு முறை அழைக்கிறான் கோலும் என நினைத்துக்கொண்டளன்.

   நீக்கு
  2. /// அங்கிருப்பவனும் இங்கிருப்பவனும் எங்கிருப்பவனும் அவனே அல்லவா?.. ///

   மாமணிக் கோயில்களே
   திரு அரங்கம்..
   திரு வேங்கடம்!..

   நீக்கு
  3. இதைத்தான் பிரபந்தமும், இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் என்று, நாமிருக்கும் இடமே (அங்கிருக்கும் கோவிலே) பெருமையுடையது எனக் குறிப்பிடுகிறது

   நீக்கு
 5. இந்த வாரம் மூலத் துவாரகை துவாரகா தீஷ்
  தரிசன விவரம். மூலவர் சன்னதி படம் இருந்ததினால் தரிசனம் கிடைததது.

  விஷாவாடா விசேஷமான இடம் தான். விஷ்ணு கோயில்,, சிவன் சன்னிதி, கிருஷ்ணர் பாதம் என்று ஒரே இடத்தில் ஒருசேர
  தரிசன பாக்யம்.

  வண்ண விளக்குகளால் ஜொலித்த கோயில், கோபரம்,ல் என்று வழக்கம் போல படங்கள்
  அழகு.

  நன்றி, நெல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு கோயிலின் மூலவர் படத்தையும் பதிவில் சேர்த்துவிடுகிறேன் ஜீவி சார். அப்போதுதான் கோவில் தரிசனத்தின் நோக்கம் நிறைவேறும்.

   நீக்கு
 6. குசேலருக்கு அருள்புரிந்த கோவிந்த வரதன்

  இந்த குணக் கேடனுக்கும் அருள் புரிய மாட்டானோ!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குசேலர் பலப் பல வருடங்கள் கஷ்டத்தை அனுபவித்த பிறகு, நல்ல வேளை வரும் சமயம் தன் நண்பனான கிருஷ்ணரைச் சந்தித்துத் தன் வறுமை நீங்கப் பெற்றார். நம் எல்லோருக்கும், வேளை வரும், அது வரும் வரை விதிப்பயன் நம்மைச் சுழன்றடிக்கும்.

   நீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. கோமதி துவாரகையில் தங்கலின் போது விரும்புவர்கள் கோமதி அம்மன் கோயிலுக்கு ஆட்டோவில் சென்று திரும்பி விடுங்கள் என்று
  பிரயாண ஏற்பாட்டாளர்கள் சொன்னார்கள். இந்த மாதிரி விஷயங்கள் தான் வடக்குப் பக்கம் யாத்திரை என்றால் என்னைப் போன்றோருக்கு சிக்கல்
  .மொழி தெரியா அவஸ்தையில் முன்பு ஒரு தடவை லஷ்மண ஜூலா தலத்தில் தொங்கு பாலம்
  நடுவில் இங்கேயும் அங்கேயும் என்று அலைந்து அல்லாடி ஒரு வழியாக அங்கிருந்த ஒரு ஆட்டோ ஓட்டுனர் தயவில் யாத்திரை பஸ்ஸைப் பிடித்தது நினைவுக்கு வந்தது. நல்லவேளை அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் யாத்திரை நடத்திய டெல்லி டூர் ஏற்பாட்டாளர்கள் நாங்கள் வந்தால் மெயின் பஸ் நிறுத்தத்தில் எங்களை கொண்டு வந்து சேர்த்து விடும் படிச் சொல்லிச் சென்றிருந்தபடியால் அதுவும் முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கவலை சரியானதுதான் ஜீவி சார். எந்த இடத்தில் ஆட்டோ எடுக்கிறோம், திரும்ப எங்கு வரவேண்டும் என்பது தெரியாவிட்டால் செல்லக்கூடாது. சிறு சிறு குழுவாகத்தான் பயணிக்கும்படிச் சொல்லுவார். பலர் இந்தப் பிரச்சனைக்காகவே இரண்டாவது முறை இரவில் வரவில்லை. கோவில் நடை சாத்திய பதினைந்து நிமிடங்களில் கடைகளையும் மூட ஆரம்பித்துவிடுவார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். யாராவது மிஸ் ஆனால் குழுத் தலைவர் ஆளனுப்பி கண்டுபிடித்துவிடுவார். இதுபோலப் பலமுறை நடந்திருக்கிறது, தாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. (துவாரகாதீஷ் கிருஷ்ணர் கோவில். அம்மன் கோவில் என்ற பொருளில் என் எழுத்து வந்துவிட்டதோ எனத் தோன்றியது)

   நீக்கு
  2. கோமதி துவாரகை கோயிலில் அம்மன் தரிசனம் இருந்திருக்கும் என்று நினைத்தேன்.

   நீக்கு
  3. கோமதீ நதி கடலில் சங்கமமாகும் முகத்துவாரத்தில் அமைந்த கோவில் கோமத் த்வாரகை என அழைக்கப்படுகிறது. அதை கோமதி துவாரகைன்னு எழுதிக் குழப்பிவிட்டேன் போலிருக்கு. மன்னிக்கவும்

   நீக்கு
 9. நெல்லை முதல் படம் பார்க்கவே அழகு. ஆமாம் படகுகள் வரிசையா நிற்கறத பார்க்க அழகா இருக்கும். ஒற்றைப் படகு இருந்தாலுமே கடலுக்குக் கூடுதலாக ஒரு அழகு சேர்ப்பது போல இருக்கும். எடுக்கும் கோணத்தைப் பொருத்தும்.

  ஆஹா கீழ வரும் போது அப்படியான படமும் வந்துவிட்டதே!!! நடுவில் படகு.

  சீகல் எல்லாம் உட்கார்ந்திருப்பது பார்க்கவே ரம்மியமா இருக்கு நெல்லை.

  படங்கள் ரொம்ப அழகா வந்திருக்கு. சூப்பரா எடுத்திருக்கீங்க. பாராட்டுகள்! அள்ளிக்கோங்க!! எல்லாத்தையும்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரங்கன்(க்கா). நிறைய படங்கள் எடுத்தாலும் சில மிக நன்றாக வந்துவிடும். அவ்ளோதான்

   நீக்கு
 10. படத்துக்கான உங்கள் வரிகளும் செம....
  முதல் படத்தின் அந்தி வானம் அந்த நிறம் ஷாட் எல்லாம் செம, நெல்லை.

  அதுக்கு அடுத்த படமும் ஆஹா தூரத்தில் பாறைகள் நிலம் குன்று போல....இங்கு படகுகள்...

  நெல்லை, கோயில், இயற்கை படங்கள் இவ்வளவு அழகா போட்டு விவரங்கள் சொல்லிட்டு....அதுல அரசியல் கருத்து வந்தால் பதிவின் சாராம்சம் திசை திரும்புமே...ப்ளீஸ்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா ரங்கன், அரசியல் அக்கப்போர் பற்றி உங்கள் கருத்து சரிதான். இனி கவனம் கொள்கிறேன். ஓபனாக கர்நாடக காங்கிரஸ் அரசு செய்தது மனதில் ஓடிக்கொண்டிருந்தது

   நீக்கு
 11. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

  இன்றைய ஞாயிறு யாத்திரைப் பதிவும் அருமை. சூரிய அஸ்தமனத்தின் வெளிச்சத்தோடு படகுகளின் நிறுத்தும் இடங்கள் கண்கவர் காட்சிகளாக அமைந்து விட்டது.

  இரவு கலர்கலராக ஒளி விடும் அலங்கார வெளிச்சத்தில் கோபுரங்களின் படங்களும், சிவ பெருமானின் தரிசனமும் கண்களுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் பக்தியோடு கூடிய நிறைவை தரும்படியாக இருக்கிறது.

  சீகல் பறவைகளின் படங்கள் அருமை. சீகல் பறவைகளின் நெருக்கம் பிரமிக்க வைக்கிறது. என்னதான் அவை நெருக்கம் காட்டினாலும், நமக்குள் ஒரு பயம் வருவது உறுதிதான்.

  மூல துவாராதீஷ் தரிசனம் பெற்றுக் கொண்டேன்.கோவில் பிராகாரத்திலிருக்கும் சின்ன சின்ன கோவில்களின் விஷ்ணு, சிவபெருமான் என தரிசனமும் கிடைத்தது.

  3.45க்குள் ரெடியாகி காப்பி குடித்து என்பது கொஞ்சம் சிரமம்தான். விரைவில் எழுந்து விடும் இதே நினைப்பில் இரவு சரியாக உறங்க இயலாது. ஆனால், யாத்திரை என்று வரும் போது, மற்ற அனைவரையும் ஒரு சுறுசுறுப்புடன் பார்க்கும் போது இதுவெல்லாம் பழகி விடுமென நினைக்கிறேன்.

  பால போகத்தைப்பற்றி தெரிந்து கொண்டேன். காலை 11க்கு முழு போஜனத்துக்கு முன்பாக கொஞ்சமாக ( ஸ்ரீ கிருஷ்ணர் குசேலரிடமிருந்து பெற்று இரண்டு பிடி அவல் சாப்பிட்ட மாதிரி) ஏதோவொரு அன்னம் நம் பசித்தீயின் தாகத்தை அணைப்பது நல்ல விஷயந்தான். அதுவே நிறைய சாப்பிட்டு விட்டால், 11மணி முழு உணவை சாப்பிட முடியாமல், பின் தரும் இரவு உணவுக்காகவே நீண்ட அவகாசத்தில் காத்திருக்கும் சங்கடங்களும் உண்டாகி விடும். நல்ல ஏற்பாடு பால போஜனம்.

  குசேலர் பிறந்த இடம், ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த, வாழ்ந்த சம்பந்தபட்ட இடங்கள், பீமன் ஜராசந்தரை கொன்ற கதைகள் என பதிவு மஹாபாரதத்தை மனதில் கொண்டு வந்தது ஞாயிறு காலை.

  இப்படி ஞாயிறு காலைதோறும், எங்களனைவருக்கும், தெய்வீக உணர்வை தரும்படிக்கு தெய்வீக பதிவை நல்லபடியாக தந்து வரும் தங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே. தொடர்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... யாத்திரையின்போது பெரும்பாலும் 10:30-11:30க்குள் காலை உணவு, இரவு உணவு 8 மணி, காலை 6 மணி காபி, மாலை 4 மணி, காபி மற்றும் இனிப்பு காரம் என்று தந்துவிடுவார்கள். பல இடங்களைச் சுற்றிவிட்டு மதிய உணவு 12 மணிக்கு அப்புறம்தான் என்றால், பாலபோகம்.

   இது தவிர, தற்போதைய காலகட்டத்தில் ஷுகர்..போன்றவை இருப்பவர்களை பிஸ்கெட், சாக்லேட் வைத்துக்கொள்ளும்படி சொல்லிவிடுவார்கள்.

   யாத்திரையின் போது நிம்மதியான தூக்கம் கஷ்டம்தான். எனக்கு இப்போதெல்லாம் தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கணும் என்று வைத்துக்கொண்டுள்ளதால் இன்னமுமே சிரமம்.

   நீக்கு
 12. சீகல் பறவைகள் இங்கு இப்படிப் பழக்கப்பட்டுவிட்டதால் எதிர்பார்க்கின்றன. சொல்லப் போனா இவை கட்ல் காக்கைகள். சுத்தம் பண்ணுபவை கடற்கரை ஓரங்களில். நட்புடன் இருப்பவை போலதான் இருக்கும். ஆனா அதுக்கு கொடுக்கற உணவை எடுக்கப் போனா கோபம் வந்துடும்.

  ஒரு காக்கைக்கு உணவு வைச்சா எப்படி எல்லாம் வந்துடுமோஒ அப்படித்தான் இந்தக் கடல் காக்கைகளும்....

  ரொம்ப புத்திசாலிங்க. நாம அதுக்குப் பக்கத்துல இருந்து சாப்பிட்டா தட்டுல வந்து எடுத்துக்கும்....கைல இருந்துகூடப் பறித்துக் கொண்டுவிடும்!!! நாம கைல சாப்பாடு வைச்சிருக்கோமான்னு பார்த்துட்டே இருக்கும்!!!!

  கலிஃபோர்னியாவுல கடற்கரை ஓரம் நிறைய உண்டு. ஆனா அங்கு அவற்றுக்கு சாப்பாடு போட மாட்டாங்க அனுமதி கிடையாது. மக்களும் யாரும் போடமாட்டாங்க.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் அனுமதி கிடையாதுனா, இதுங்க சாப்பாட்டையே பார்த்துட்டுருக்கும்..சுற்றுப்புறத்துல வண்டிகள் இருந்தா அதுங்க கவனத்துக்கு வராதாம்.....அப்ப வண்டிகளால் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டுன்னு.

   கீதா

   நீக்கு
  2. //இவை கட்ல் காக்கைகள்// உள்ளூர் காக்கைகள்லாம் ச்ராத்தத்திற்குப் பிறகு அன்னம் எடுத்துக்கொள்ள வருவதில்லை. இனி சீகலை இந்த வேலைக்குப் பழக்கிவிட வேண்டியதுதான். வாட்சப்பில், 350 ரூ கொடுத்தால், காக்காயைக் கூட்டிவந்து பிண்டத்தைச் சாப்பிட வைப்பார்களாம். இது எப்படி இருக்கு?

   நீக்கு
  3. பொதுவா டொமெஸ்டிக் விலங்குகள்/பறவைகள் தவிர மற்றவற்றிர்க்கு உணவு வைப்பது சரியான முறை அல்ல. அதுகளே அதுகளின் உணவைத் தேடிக்கொள்ளவேண்டும். இல்லைனா உணவுப் பழக்கம் மாறிப்போய் வேறு பல பிரச்சனைகள் வந்துவிடும்.

   நீக்கு
  4. ஹாஹாஹா மெய்யாலுமா காக்கைய இட்டாந்து சாப்பிட வைக்கறாங்களா!!!!

   ஆமாம் நெல்லை வீட்டு விலங்குகள் பறவைகளுக்குமே கூட அதற்கான உணவை வைப்பதுதான் நல்லது. பசுவுக்கு எருமைக்கு எல்லாம் கண்டதை கொடுக்கறாங்க.

   அதேதான் நெல்லை, மற்றவை வனவிலங்குகள் அவங்களுக்கானதை அவங்களேதான் பாத்துக்கணும் இல்லைனா பிரச்சனைகள் வரும். பாருங்க அதனாலதான் யானைக்கு மதம் பிடிக்குது சும்மா டம் டம்னு கொட்ட டிச்சா அதுக்கான டெசிபல்? நமக்கு பக்கத்து வீட்டுல ட்ரில் பண்ணும் சத்தம் எவ்வளவு கஷ்டமா இருக்கு....பல சமயங்கள்ல...அப்படி இருக்கறப்ப அதுங்கள நினைச்சுப் பாத்தா பாவம்.

   கீதா

   நீக்கு
  5. Domestic animals வளர்ப்பதை நான் விரும்புவதில்லை. நாம் கஷ்டப்படுத்துகிறோம், பாவம் என்று நான் நம்புகிறேன். இன்று காலை நடைப்பயிற்சியின்போது ஒரு பெரிய நாயை (அழகாக இருக்கும்) கூட்டிக்கொண்டு சென்றார். இன்னொரு பெண், நாயுடன் நடந்து திரும்பிக்கொண்டிருந்தார் மிகச் சிறிய அழகிய நாயுடன். இந்த இரண்டு நாயும் வாலை ஆட்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சின, ஆனால் forcefully அவங்க அவங்க வெவ்வேறு திசைல நாயைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். தனிமை, சிறைத்தண்டனை, வேளா வேளைக்கு உணவு, காலம் முழுதும் பிரம்மச்சாரி... இதுவா நாய்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு?

   நீக்கு
  6. இதன் இன்னொரு பார்வை... உணவில்லாமல், தெருவில் அலைந்து, மழை வெயில் ஒதுங்க இடமின்மை போன்றவற்றால் கஷ்டப்படும் விலங்கை, வீட்டில் நன்றாக வளர்ப்பது, குளிர் தாக்காமல் ஸ்வெட்டர் போடுவது, நடைப்பயிற்சிக்குக் கூட்டிச் செல்வது, அதன் உடல் நிலையை, நம் இன்னொரு குழந்தையைப் போலப் பார்த்துக்கொள்வது என்ற நல்ல பக்கமும், நல்ல கோணமும் வீட்டு விலங்குகளை வளர்ப்பவர்கள் பற்றி இருக்கிறது.

   நீக்கு
 13. கோமதி துவாரகை படங்கள் செமையா இருக்கு நெல்லை. இரவில் எடுத்த படங்களும் சூப்பரா வந்திருக்கு.

  மூலத்துவாரகை பற்றிய புராணம் சுவாரசியம். படங்களும் மிக அழகு. உள்ள போக கூட்டமா? உள்ள போய்ட்டு வர நேரம் கம்மியாகிடுச்சா?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல படங்கள் எடுத்தால் சில நன்றாக வரும். அவ்ளோதான் விஷயம்

   நீக்கு
  2. மூல் துவாரகாவில் நிறையவே நேரம் இருந்தது. நிம்மதியான தரிசனம்.

   நீக்கு
  3. ஓ நான் தப்பா சொல்லிட்டேன்...கோமதி துவாரகை அங்கு உள்ளே போக முடியலைன்னு சொல்லிருந்தீங்களே அதைக் குறிப்பிட நினைத்து மூலத்துவாரகைய சொல்லிட்டேன்..புரிந்துவிட்டது அதான் கிருஷ் படம் போட்டிருக்கீங்களே...

   கீதா

   நீக்கு
 14. மூலத் துவாரகை படம் மிக அழகு.

  வண்ண விளக்குகளில் ஒளிர்ந்த சிவன் சன்னதி படங்கள் ரொம்ப அழகா இருக்கு நெல்லை. என் கேமராவில் இரவில் எடுக்கும் படங்கள் அதுவும் இப்படி விளக்குகள் இருக்கும் இடங்களில் படங்கள் சரியா வருவதில்லை. இனி மொபைலில் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

  மூலத் துவாரகை துவாரகாதீஷ் செம அழகு, நெல்லை. தனியா படம் கொஞ்சம் க்ளோசப்பில் கொடுத்திருக்கும் படம்...நீங்க நிற்கும் படங்கள் உட்பட!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா ரங்கன் அக்கா. இப்போல்லாம் எல்லாமொபைலும் நல்லாவே படமெடுக்குது. நீங்களும் நல்லாவே படங்கள் எடுக்கறீங்க

   நீக்கு
  2. நன்றி, நெல்லை. ஏதேதோ அப்பப்ப சில முயற்சிகளும் செய்வேன் உள்ளே நோண்டி என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்குனு பார்த்து!!

   இரவுக்காட்சிகள் எடுத்துப் பார்க்க வேண்டும்

   கீதா

   நீக்கு
 15. யாத்திரை விவரங்களும் சாப்பாடு எப்படிக் கொடுப்பாங்க என்பதான விவரங்களும் நன்று.

  கீதா

  பதிலளிநீக்கு
 16. /// நன்றாக இருந்த காங்கிரஸ், தன்னைத் தானே இந்து மத மற்றும் தேசீயத்தின் எதிரியாகப் பிரகடனப்படுத்திக்கொண்டு.. ///

  காண்டியும்
  கான் கிராசும் இந்துக்களுக்கு ஆதரவாக எப்போது இருந்தனர்???

  பதிலளிநீக்கு
 17. நீங்க எந்த நேரத்தில் பேட் துவாரகா பற்றி எழுதினீங்களோ அது பற்றி செய்தி. ஒக்கா வில் இருந்து பேட் துவாரகா விற்கு தொங்கு பாலம் சுதர்சன் சேதுவை பிரதமர் திறந்து வைத்து அதில் நடக்கும் காட்சி டீவி யில்.
  பாவம் படகு ஓட்டியவர்.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பேருக்கு படகு, அதன் டிமான்ட், கஷ்டப்பட்டு ஏறி இறங்குவது, அது தொடர்பான ரிஸ்குகள் இருக்கும். பாலத்திலும் அவ்வளவு தூரம் நடப்பதும் கஷ்டம்

   நீக்கு
  2. நீங்கள் இதைப்பார்க்க வில்லையா?

   https://www.newindianexpress.com/nation/2024/Feb/25/gujarat-pm-modi-inaugurates-sudarshan-setu-indias-longest-cable-stayed-bridge

   Jayakumar

   நீக்கு
  3. காணொளியில் பார்த்தேன் ஜெயகுமார் சார்... என் அபிப்ராயத்துல, இந்தப் பாலத்துக்கு 10 ரூ நுழைவு வரி இரண்டு பகுதியிலும் வைக்கவேண்டும். அப்படி வைக்கவில்லை என்றால் பாலத்தில் கடைவிரிப்பது, விற்பது, சோம்பேறிகள் படுப்பது என்று பாலத்தின் காரணம் அடிபட்டுப் போய்விடும். நான் ராம் ஜூலா, லக்ஷ்மன் ஜூலா என்று இரண்டை கங்கையின் மீது, ரிஷிகேஷில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் நீளம் குறைவு. இங்கு கடலின் மீதான பாலம், 3 கிமீ க்கும் அதிகம்.

   நீக்கு
 18. மூலத் துவாரகை துவாரகாஷ்தீஸ் தரிசனம் கிடைத்து வணங்கினோம்.

  படகுகளும் ,சீகல் பறவைகளும் என இயற்கை காட்சிகளும், சிறிய கோவில்களூம் என படங்கள் நன்றாக இருக்கின்றன.

  உங்கள் யாத்திரையில் நாங்களும் கண்டு களிக்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 19. மூலத் துவாரகை துவாரகாஷ்தீஸ் தரிசனம் கிடைத்து வணங்கினோம்.

  படகுகளும் ,சீகல் பறவைகளும் என இயற்கை காட்சிகளும், சிறிய கோவில்களூம் என படங்கள் நன்றாக இருக்கின்றன.

  உங்கள் யாத்திரையில் நாங்களும் கண்டு களிக்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு

 21. பதிவில் உள்ள அனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.

  சீகல் பறவைகள் படம் மனம் கவர்ந்தது.

  மூலத் துவாரகை துவாரகாதீஷ் படத்தைப்பார்த்து வணங்கி கொண்டேன். நீங்கள் நிற்கும் படத்திலும் மூலவர் நன்றாக தெரிகிறார்.
  வண்ண விளக்குகளால் ஒளிர்ந்த சிவன் சன்னிதி அருமை, நிறமாறி கொண்டு இருக்கும் வண்ண ஒளி அமைப்பு போல.

  வண்ண விளக்குகளால் ஜொலித்த கோவில் கோபுர படங்கள், புராண கதைகள், கோயில் வரலாறு எல்லாம் அருமை.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கோமதி அரசு மேடம். அந்தக் கோவிலில் படங்கள் எடுக்கத் தடை சொல்லவில்லை

   நீக்கு
 22. சுவாரஸ்யமான பயண விபரங்கள் நன்று.

  பதிலளிநீக்கு
 23. துவாரகை யாத்திரை விரிவான விளக்கங்களுடனும், அருமையான படங்களுடனும் தந்திருக்கிறீர்கள், நெல்லைத்தமிழன். அங்கெல்லாம் நான் ஏதோ நேரில் போய்வந்தது போன்ற உணர்வு. seagulls படங்களும் அருமை. தூரம், நேரம், சாப்பாடு, இடையில் அருகில் உள்ள கோயில்களுக்கு நாமாகச் செல்ல வேண்டும் என்றால் எப்படிச் செல்லலாம் போன்ற விவரங்கள் உட்பட எல்லாம் மிக விளக்கமாகக் கொடுத்திருக்கிறீர்கள். அருமை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளசிதரன் சார்... எப்போதுமே, நாம் போகும்போது, சௌகரியம் கூடுதல், ஆனால் பல கோவில்களை விட்டுவிடுவோம். நமக்கு எப்போ கோவில் திறந்திருக்கும், எந்த routeல் சென்றால் எளிது என்றெல்லாம் தெளிவா தெரியாது. இப்போ கூட, பூரி யாத்திரை 8 நாட்கள் சென்றுவந்தேன், முழுவதும் பஸ் பயணம். தொடர்ந்து பல கோவில்கள், தூக்கம் தொலைத்த இரவுகள், பேருந்தில் தூக்கம் என்று இருந்தது. இப்படி கஷ்டப்பட்டால்தான் எல்லாக் கோவில்களையும் தரிசிக்க இயலும். உதாரணமா, சிம்ஹாசலம், பிறகு மாதவதாரா போன்ற மலைப் பகுதி கோவிலுக்குச் செல்லும்போது, நமக்கு உணவுப் பிரச்சனைகள் இருக்கக்கூடாது. வெளியில் சாப்பிடும் உணவு சரிப்பட்டு வராது. இதனால்தான் யாத்திரைக் குழுவுடன், சிறிது சிரமங்கள் இருந்தாலும் சென்றுவருகிறேன்.

   நீக்கு
 24. உங்கள் புண்ணியத்தில்
  நாங்களும்
  தலங்களைக் கண்டு மகிழ்கின்றோம்.

  நெல்லை அவர்களுக்கு
  நன்றி.. மகிழ்ச்சி..

  பதிலளிநீக்கு
 25. மூல் த்வாரகா குறித்த தகவல்களும் படங்களும் நன்று. தொடரட்டும் பக்தி உலா.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!