புதன், 21 பிப்ரவரி, 2024

பிரபலங்களின் பிரச்சனைகள் ..

 

நெல்லைத்தமிழன் : 

1 சமீபத்தில் விராட் கோஹ்லி, தான் சாதாரண வாழ்க்கை இந்தியாவில் வாழமுடியாது. எங்கு போனாலும் செல்ஃபி, ரசிகர்கள் துரத்தல் என்று சாதாரணமாக இருக்கவே முடியவில்லை. 200 பேர் செல்ஃபி எடுக்கிறேன் என்று வந்தால், என்னுடைய 200 நிமிடங்கள் போய்விடுகிறது. மறுப்பதும் கடினமாகிறது என்று சொல்லியிருக்கிறார்.  நாம் ஏன் பிரபலமானவர்களை, அவர்கள் வேலையைப் பார்க்க அனுமதிப்பதில்லை?   

2.  சில மாதங்களுக்கு முன்பு என் மகள் ஒரு ரிசார்டில் இந்திய கிரிக்கெட் ப்ளேயர்கள், கோஹ்லி உட்பட சிலரைப் பார்த்ததாகவும், அவர்களுக்கு தனி ரெஸ்டார்ண்ட் என்றும், அந்தப் பகுதியிலேயே யாரும் செல்ல முடியாது, தூரத்தில் இருந்துதான் பார்க்க முடிந்தது என்றும் சொன்னாள். நான்கூட, ராஜ வாழ்க்கை இவங்களுக்கு, யாரும் இல்லாமல், தனியா ஒரு தொந்தரவும் இல்லாமல் ராஜா போல போய் ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச்லாம் சாப்பிட்டுட்டு வருவாங்க என்றெல்லாம் நினைத்தேன். நம்மைப்போல சட் என்று சாதாரண ஆனால் நல்ல outletல் இவங்களால் சாப்பிடவே முடியாது. இப்படி இருப்பது புகழுக்குக் கிடைக்கும் பரிசா இல்லை விலையா?

# பெயரும் புகழும் செல்வமும் இருப்பதை எப்படி ரசித்து அனுபவிக் கிறார்களோ அதுபோல் அதற்கென்று ஒரு விலை கொடுக்க வேண்டும் என்கிற உண்மையையும் இந்தப் பிரபலஸ்தர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அல்லது வேண்டாம் போ என்று ஒதுங்கிப் போய் விட்டால் நம் புகழ் மங்கி விடுமே என்கிற அச்சம் இல்லாதவர்களாக  இருக்க வேண்டும். 

Celebrity stalking மனிதர்களுக்கு இயல்பு அது விரும்பத்தக்கதா இல்லையா என்பது வேறு விஷயம். ஒரு சமயம் நான் கூட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை நேரில் பார்க்க நேரிட்ட போது அவரோடு கொஞ்சமாக பேசினேன். அதை அவர் அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிந்ததும் அவரை விட்டு விலகி வந்து விட்டேன். 

ரசிகர்கள் தொந்தரவு என்பது நிச்சயம் பரிசு அல்ல அது ஒரு விலை அல்லது தொல்லை. சில சமயம் தவிர்க்க இயலாத சங்கடம்.

& நானும் சில பிரபலஸ்தர்களின் அருகில் சென்று, பேச முயற்சி செய்தபோது அவர்களின் எதிர்வினை பார்த்து விலகி வந்தது உண்டு. 

டிசம்பர் சீசனில், நாரத கான சபாவில் ஒருநாள் மாலை ஸ்ரீரஞ்சனி சந்தானகோபலன் கச்சேரி கேட்க சற்று முன்னதாகவே நானும் என்னுடைய ஒ வி சகோதரனும் சென்றிருந்தோம். கச்சேரிக்கு முன்பு நாரத கான சபா வாசல் பக்க கேண்டீனில் காபி சாப்பிட்டுவிட்டு  பிறகு செல்லலாம் என்ற யோசனையுடன் போயிருந்தோம். சபா வாசலில் ஸ்ரீரஞ்சனியின் அப்பா - சந்தான கோபாலன் தனியாக யாருக்காகவோ காத்திருந்தார். நானும் என்  சகோதரனும் அவரைப் பார்த்து நடந்தோம். நாங்கள் அவர் அருகில் சென்றவுடன், அவர் திடீரென்று அவருடைய கைப்பேசியை எடுத்து காதில் வைத்துக்கொண்டு, யாரிடமோ பேசுபவர் போல முகத்தைத் திருப்பிக்கொண்டார். நாங்களும் அவரை லட்சியம் செய்யாமல் கடந்து வந்துவிட்டோம். 

கிரிகெட்ல ஜெயிச்சா விக்கெட்டை எடுத்துக்கறாங்களே எதுக்கு? கால்பந்து விளையாட்டுல ஜெயிச்சா கோல் போஸ்ட்டை தூக்கிட்டு ஓடுவாங்களோ?

# இந்த மாதிரி விசித்திர வழக்கங்கள் பல ஆட்டங்களிலும் உண்டு என்று எனக்கு நினைவு. உதாரணமாக ஸ்பெயினில் மாட்டுச் சண்டையில் காளையை அடக்கும் ( ?)  வீரர் அந்த மாட்டின் ஒரு காதை வெட்டி எடுத்துக் கொண்டு செல்வார் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். கால்பந்து போட்டியில் கூட அந்தப் பந்தை ஜெயித்த அணியினர் எடுத்துக் கொண்டு செல்வார்களோ என்ற ஒரு ஐயம் எனக்கு உண்டு.

& ஹி ஹி - அதும் பேரு விக்கெட் இல்லீங்கோ ஸ்டம்ப் ! இப்போதெல்லாம் ஸ்டம்புகளில் ஏதோ லைட் சென்சர் எல்லாம் இருப்பதால் - நடுவர்கள் அந்த ஸ்டம்பு களவாடல்களை அனுமதிப்பதில்லை! 

நிற்க. 

அந்தக் காலத்தில் தெருவில் கோலி விளையாடும் சிறுவர்கள், தோற்றுப் போனவர்களின் கோலிகளை பறிமுதல் செய்து சென்றுவிடுவார்கள். சில சிறுவர்கள் அத்தகைய ஆட்டங்களில் கலந்துகொள்ளும்போது உடம்பெல்லாம் அடிபட்டு, பழுவேட்டரையர் போன்ற கோலிகளை எடுத்துக்கொண்டு வந்து ஆட்டத்தில் கலந்துகொள்வார்கள். பறிமுதல் ஆனாலும் கவலைப்படமாட்டார்கள்! 

பானுமதி வெங்கடேஸ்வரன்: 

அந்த காலத்தில் பிரபலமானவர்களிடம் வாங்கிய ஆட்டோகிராஃப், இந்த காலத்தில் பிரபலமானவர்களோடு எடுத்துக் கொள்ளும் செல்ஃபி.. என்ன வித்தியாசம்?

# இரண்டிலும் எனக்கு அனுபவம் இல்லை.  இரண்டும் காலக்கிரமத்தில் குப்பைக்குப் போகும்.

& அந்தக்கால ஆட்டோகிராப் எல்லாம் வீடு மாறும்போது - அல்லது பழைய பேப்பர்காரர் வந்தால் காணாமல் போய்விடும். 

இந்தக்கால செல்ஃபி எல்லாம் - அநேகமாக செல் ஃபோன் மெமரி நிறைந்தால் அல்லது ஃபோன் மாற்றினால் காணாமல் அடிக்கப்படும் அல்லது காணாமல் போய்விடும். 

= = = = = = = = =

எங்கள் கேள்விகள் : 

1) உங்கள் ஆசிரியர்களில், இன்றும் உங்கள் நினைவில் நிற்பவர் யார்? ஏன்?

2) பள்ளிக்கூட நாட்களில் உங்கள் பக்கத்தில் உட்காரந்திருந்த மாணவன் / மாணவியை ஞாபகம் உள்ளதா? அவரைப் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஏதேனும் நினைவில் இருக்கிறதா? 

KGG பக்கம் : 

ஆசிரியர்கள் பற்றிய நினைவுகள் தொடர்கின்றன. 

மூன்றாம் வருட படிப்பின்போது சோசியல் ஸ்டடீஸ் பாடத்தை போதித்த மற்றுமொரு ஆசிரியர், Paul xavier - வகுப்பில் அவர் சமூக பாடம் நடத்துவது ஒருமணி நேரத்தில் இருபது நிமிடங்கள் இருந்தால் அதிகம். மற்ற நேரம் எல்லாம் கதை சொல்லுவார்! 

வகுப்பில் அவர் கோபப்பட்டதே கிடையாது. பாடம் நடத்தும்போது மட்டும் அல்ல - எப்போதுமே முகத்தில் ஒரு புன்னகையுடன்தான் இருப்பார். 

அவர் படித்த மர்ம நாவல்கள் எல்லாவற்றின் சுருக்கமும் நாங்கள் அவர் மூலமாக கேட்டோம். நன்றாக சொல்லுவார். நாங்கள் எல்லோரும் மிகவும் சுவாரசியமாக அவர் சொல்லும் கதைகளைக் கேட்போம். 

அவரிடம் நான் சில மேஜிக் வித்தைகள் தெரிந்துகொண்டேன். முழங்கையினுள் சிறு கல் மறைந்துபோக வைக்கும் மேஜிக் அதில் ஒன்று. அந்த மேஜிக்கை  - பிற்காலத்தில் என் பையன், பெண் எல்லோருக்கும் செய்து காட்டி, பிறகு என்னுடைய பேரன்களுக்கும் செய்து காட்டினேன்! 

JTS ஆசிரியர்களில் நான் சென்றது, Paul Xavier தங்கி இருந்த வீட்டுக்கு மட்டும்தான்! அவர் ஒரு லீவு நாளில், தான் தங்கி இருந்த வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். பேச்சுலர் ஆசிரியர். அவருடைய வீட்டில் அவர் கையால் செய்த பல கலைப் பொருட்கள் வைத்திருந்தார். மிகவும் அன்போடு, ஒரு நண்பனைப் போல பழகினார். மறக்கமுடியாத ஆசிரியர். 

= = = = = = = =


50 கருத்துகள்:

  1. சமூகமும் பிரபலங்களும் என்ற தலைப்பை வாசிக்கும் பொழுது எனக்கு சர்வர் சுந்தரம் படத்தில் வரும் ஒரு காட்சியும் நாகேஷின் நடிப்பும் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படத்தின் கிட்டத்தட்ட இறுதிக் காட்சி. சர்வர் நாகேஷ் பிரபல நடிகராகி அவரிடம் ஆட்டோகிராப் வாங்க ஜனங்கள் முண்டியடிக்கும் நெரிசலில் மாட்டிக் கொண்ட அவர் தாய்....

      நீக்கு
  2. பெரும்பாலும் அந்த நாட்களின் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள், கவிஞர்களிடம் ஆட்டோகிராப் வாங்கும் பழக்கம் எனக்கிருந்தது.
    எந்த விழாவிற்குப் போனாலும் ஆட்டோகிராப்பும் பேனாவும் கைவசம் இருக்கும். அவற்றில் பலவற்றை சுவாரஸ்ய நினைவாக்கி
    பெற்ற ஆட்டோகிராப் கையெழுத்தையும் இணைத்து குமுதத்தில் பகிர்ந்து விடுவது வழக்கம்.
    ரா.கி.ரங்கராஜன் அவர்கள் கையெழுத்திட்ட ஸ்லிப்பும் ரூ.15/-க்கு ஒரு செக்கும் தபாலில் வரும்.. ஸ்லிப்பில் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டதற்கு சான்றாக அனுப்ப வேண்டும்.
    பொங்கல் வந்து விட்டால் போதும். எல்லோரும் நடிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்ப நானோ பிடித்த எழுத்தாளர்களுக்கு அனுப்புவேன். அவர்கள் எனக்கு நன்றி கடிதமும் அனுப்புவார்கள். இதெல்லாம் எனது 30 வயது வரை கடைபிடித்த பழக்கங்கள். அந்த ஆட்டோகிராப் புத்தகம் இன்றும் என் சேமிப்பு ஃபைலில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. /// பள்ளிக்கூட நாட்களில் உங்கள் பக்கத்தில் உட்காரந்திருந்த மாணவன் / மாணவி ///

    அனைவரது பெயரும் நினைவில் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் வழக்கம் போல் அருமை.

    ஒருவர் இந்த உலகில் பிரபலமானவுடன் பிரச்சனைகளும் பிரியத்துடன் வந்து கலந்து விடும் போலும்.. பெரும்பாலும் பிரச்சனைகளுக்கு பயந்துதான் பிரபலமானவர்கள் மற்றவர்களை விட்டும் ஒதுங்குகிறார்கள்.

    பிரபலங்களோடு ஒருகால் நமக்கு ஏற்படும் அதிசய சந்திப்பின் விளைவாக நிகழும் நம் பிரச்சனைகளின் தீர்வு சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் கேள்விக்கு அளித்த பதில்களில் முடிந்து விடுகிறதை புரிந்து கொண்டேன். :))
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. பிரபலங்க்ளாக இருப்பது அத்தனை எளிதல்ல. அவர்கள் கொடுக்க வேண்டிய விலை மிக மிகப் பெரிது. ஏனென்றால் private space மிகவும் குறைவு அலல்து இல்லை எனலாம். அவர்கள் தும்மினால் கூட செய்திகளில் வந்துவிடும். தும்மினார் என்றால் கூடப் பரவாயில்லை, அவருக்கு கொரோனாவின் தாக்கம்....அருகில் இருந்த அவரது பெண் நண்பிக்கும் (அவங்க சும்மா தான் இருந்திருப்பாங்க ஆனாலும் மற்ற அர்த்தத்தில் எழுதுவாங்க) தொற்றிக்கொண்டு விட்டதுனு இலலதது பொல்லாதது எல்லாம் வரும்.

    சிலவற்றை அவர்கள் கண்டு கொள்ளாமல்செல்லலாம் ஆனால் சிலதுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    அவங்க தனிப்பட்ட வாழ்க்கை வெளியில் பேசப்படும், தேவையில்லாமல் வம்புகள் வளர்க்கப்படும்...

    பாருங்க நம்மை...எம்புட்டு ஜாலியா ரோட்டுல நடக்க முடியுது. எவ்வளவு சுதந்திரம் இல்லையா..யாரும் நம்மைக்கவனிக்க மாட்டாங்க...அதுவே பெரிய சுதந்திரம் இல்லையா

    சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லாமல் அலைய வேண்டிய நிலை இவங்களுக்கு. புகழை அனுபவிக்கும் ஆசை இருந்தால் இதெல்லாம் பறிக்கப்படும் என்ற மனப்பக்குவத்தை அவங்க வளர்த்துக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆனா சில பிரபலங்கள் பொது வெளியில் ஏதேனும் ஒரு காஃபி ஷாப்பில் அல்லது புகழ் பெற்ற உணவகத்தில் ரொம்பக் கூட்டம் இல்லாத ஒன்றில் அவங்க வந்தாங்கனா தன்னை யாராவது நோட் பண்றாங்களான்னு ஒரு curiosity அல்லது ஒரு பெருமையில் நோட்டம் விடுவதைப் பார்த்திருக்கிறேன். யாருமே நெருங்கிப் பேசாத போது. பெயர் வேண்டாம் இங்கு.

    நான் கேரளத்தில் இருந்தவரை யாரும் அருகில் சென்று பேசுவதையோ, ஃபொட்டோ எடுத்துக்கொள்வதையோ பார்த்ததில்லை முன்பு இப்ப மொபைல் ஃபோன் கையில் இருப்பதால் ஒரு வேளை அங்கும் மொய்ப்பார்களாக இருக்கலாம்.

    அவங்களுக்கும் private space வேண்டும்தானே....

    கீதா

    பதிலளிநீக்கு
  9. நான் சொல்வது 24 வருடங்களுக்கு முன்.....அப்பதான் டைரக்டர் சரண் கொஞ்சம் அறிமுகமான சமயம். அவர் வடபழனி ஹோட்டல் சரவணபவனில் கூட யாருடனோ டிஃபன் காஃபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் நாங்கள் அங்கு சென்றிருந்த போது. ஆனால் அருகில் சென்று பேசவில்லை நான். ஏன்னா டைரக்டர் சரண் என்று தெரிந்ததே தவிர அவர் எடுத்த படங்கள் எதுவும் பார்த்ததில்லை அப்ப.

    எழுத்தாளர் சுஜாதாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் வீட்டு செல்லத்திற்கு என் நெருங்கிய உறவினர் கால்நடைமருத்த்வர் தான் அதற்கும் மருத்துவர். அவர் என்னை கேட்டார் வரியா என் கூட சுஜாதாவ பார்க்க என்று ஆசை இருந்தது ஆனால் நான் செல்லவில்லை. வாசிப்பு அனுபவம் எனக்கு அப்போது இல்லை. எனவே கூச்சம். செல்லவில்லை.

    என் மகன் வீணை கற்றுக் கொண்டிருந்த சமயம். ராஜேஷ் வைத்தியாவிடம் கற்றுக் கொள்ள ரொம்ப ஆசைப்பட்டான். ஆனால் அவரது முகவரி கிடைக்கவில்லை. அப்போது அடையார் கஸ்தூரிபா நகரில் இருந்தோம். குரங்கார்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்த் கொண்டிருந்த சமயம். அதில் செங்குரங்கார் எங்கள் வீட்டின் பின் பக்கம் பெரும்பாலும் இருப்பார். நாங்கள் வனத்துறையை அழைத்து சொன்னதில் இன்னும் மற்றும் பலரும் கொடுத்த கம்ப்ளெயின்டில் எங்கள் வீட்டுப் பின்பக்கம் கூண்டு வைத்தாங்க. ஆனால் குரங்கார் செம கில்லாடி. அவர் இடத்தை மாற்றிவிட்டார். வனத்துறையினர் நம்ம வீட்டுக்கு வந்த் இங்கு இப்ப இல்லை....இன்னொரு தெரு பெயர் சொல்லி அங்கருந்து புகார் வந்திருக்கு அங்க கொண்டு வைக்கணும்னு என் மகன் மற்றும் இன்னொரு பையனுடன் அந்தக் கூண்டை சைக்கிள் மீது வைத்துக் கொண்டு அவர்கள் சென்று அந்த வீட்டைத் தட்டியதும் திறந்தவர் ராஜேஷ் வைத்தியா!

    என் மகன் அசந்துவிட்டான். ரா வை எல்லாருக்கும் தண்ணீர் கொடுத்து என் மகன் அதிகம் பேசாமல் வந்துவிட்டான்.
    ஏண்டா சொல்லிக் கேட்டிருக்கலாமே பாரு ஹனுமார் நமக்கு அழகா இடத்தைக் காட்டியிருக்கார் நீ கேக்காம வந்திருக்கியேடா...என்றதும் அவன் சொன்னான்
    இல்லைமா அவர் இன்னும் கொஞ்ச நாள் ல வீடு வெக்கேட் பண்றாராம். என்றதும். எந்த ஏரியான்னு கேட்டிருக்கலாமே கத்துக்கறதுக்குதான்னு சொல்லி....ச்சே நான் போயிருந்திருக்கணும் என்று தோன்றியது

    அந்த மாபெரும் சக்தி, ஏதோ ஒரு வகையில் நம் மனதில் தீவிரமாக இருக்கும் நல்ல விஷயங்களுக்கு வழி காட்டும். நம் குறிக்கோள்கள் அல்லது விழைவதை தீவிரமாக ஒரு முனைப்போடு இருக்க வேண்டும் நாம் விழைவதை நிறைவேற்றிக் கொள்ள...அபப்டி இருந்தால் கண்டிப்பாக அது வழிநடத்தும்....ஆனா நாம அதைக் கோட்டை விட்டுவிடுகிறோம் என்று எனக்குப் பல முறை தோன்றியுள்ளது. இதைப் பதிவாகவும் எழுதிய நினைவு...என் மகனின் வீணை ஆசை பற்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  10. என்னைப் பொருத்தவரை, பிரபலங்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தான். அவர்கள் திறமை வெளியில் வந்து அவர்கள் அந்த இடத்தில் இருக்கிறார்கள். நமக்கும் திறமைகள் இருந்தாலும் அலல்து இருக்கலாம் ஆனால் அவை வெளியில் தெரியாததால் நாம் சாதாரணமானவர்கள் என்று கருதப்படுகிறோம் அல்லது நினைத்துக் கொள்கிறோம். அவர்களுக்கு இத்தனை நட்சத்திர அந்தஸ்து கொடுக்க வேண்டுமா என்றும் தோன்றும். சமீபத்தில் ஒரு காணொளி வந்தது சுரேஷ் கோபியின் மகள் திருமணம். அதில் மம்முக்கா, லால் எல்லாம் இருந்தாங்க. சாதாரணமாக மக்களோடு மக்களாக நின்று கொண்டிருந்தாங்க. சாதாரண உடையில்...அவர்களின் முகங்களைத் திரையில் பார்த்ததால் நமக்குப் பரிச்சய முகங்கள் இல்லைனா மக்களோடு மக்களாகத்தான் பார்த்திருப்போம்....அவர்கள் அப்படித்தான் சாதாரணமாக இருந்தாங்க.

    பிரதமர் எல்லார் அருகிலும் வந்தார் சுரேஷ் கோபி அறிமுகப்படுத்திக் கொண்டு வருகையில். லாலும் சரி மம்முக்காவும் சரி பிரதமரோடு மரியாதை நிமித்தம் கை கூப்பிய உடல் மொழி இருந்ததே அல்லாமல் கூடுதலாக குழைவோ சிரிப்போ எதுவும் இல்லை.....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      பதிவு குறித்த தங்களது கருத்து அலசல்களை மிக ரசித்தேன். சில பிரபலங்கள் தங்களை இன்னார் என பெருமை ததும்ப பொது வெளியில் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பது ஆச்சரியகரமான விஷயந்தான். அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்ட அந்த பழம் பெரும் நடிகர்கள் குணம் சிறப்பானவை.

      இதைப்படிக்கும் போது நடிகர் மேஜர் சுந்தரராஜன் அவர்களை நாங்கள் சென்னையில் இருக்கும் போது, வீட்டருகே இருக்கும் ஒரு கோவிலில் இரு தடவைகள் பார்த்தும். அவர் சுவாமிக்கு அர்ச்சனை வழிபாடு செய்து அவர் பேசாமல் தெய்வ சிந்தனையில் இருந்தார். நாங்களும் அவரை அடையாளம் கண்டும் எங்களின் கூச்ச சுபாவத்தினால் ஒதுங்கியே இருந்தோம் . உங்கள் கருத்துக்களை படிக்கும் போது இந்த நினைவு வந்தது. அதனால் கூறினேன். நீங்கள் கூறுவது போல் அப்போதெல்லாம் ஒரு கையெழுத்துதான் (ஆட்டோகிராப்) வாங்க முடியும். அதற்கு கூட ஒரு பேனா, நோட் வசதி கூட அப்போது கையோடு வைத்திருக்கவில்லை. (இந்தளவுக்கு கைப்பேசி வசதிகளே அப்போது வரவில்லையே..) ஆனாலும் அப்படி ஏதும் ஏதும் தோன்றவில்லை. நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. நன்றி கமலாக்கா. அவர் பிரார்த்தனையில் இருக்கும் போது அவரை நீங்கள் தொந்தரவு செய்யாமல் இருந்ததே நல்ல விஷயம் அக்கா. அவருக்கும் personal space வேனும் இல்லியா.

      ஆமா ஆனா அப்பல்லாம் நாம நோட்டும் பேனாவுமா கொண்டு அலைஞ்சுட்டுருப்போம்!! தோன்றாதது நல்ல விஷயம் கமலாக்கா என்னைப் பொருத்தவரை.

      கீதா

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. பானுக்காவின் கேள்வி - அனுபவம் இல்லை என்பதை விட அதில் விருப்பமும் இல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சிறுவயது ஆசிரியர்களிலிருந்து பள்ளி இறுதிவரை பல ஆசியர்கள் நினைவில் உள்ளார்கள். இருந்தும் மிகுந்த அன்புடன் பழகும் தமிழ் ஆசிரியை ,வீணை, சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர்.பிராமண வகுப்பை சேர்ந்தவர் .மாணவர்களை கோபித்தே அறியாதவர்.அவரை இன்றும் மறப்பதற்கு இல்லை.சிறந்தநண்பிபோலவே என்னுடன் பழகினார்.

    அருகே அமர்ந்திருந்த மாணவிகள் பலரையும் நினைவில் உண்டு.

    ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எனது அக்கா மணிகள் வைத்து புதுச்சட்டை தைத்து அணிவித்து இருந்தார்.அழகிய சட்டை ஒரு மாணவி அந்த மணிகளை பிடுங்கப் தொடங்கினார். தொடாதே என்றால் நுள்ளுவார் ஆசிரியை யிடம் சொன்னாலும் ஆசிரியை போனபின் தொட விடாதுவிட்டால் நுள்ளுவார் பயத்தில் இருந்து விட்டேன்.

    அப்பா அம்மா சிறறுவயதில் இருந்தே ஒருவருக்கும் அடிக்கக் கூடாது என நற்பண்புகள் பலவும் பழக்கி இருந்ததில் திருப்பி அடிக்கத் தெரியாது. வருடம் தோறும் வகுப்புக்களில் நல் ஒழுக்கப் பரிசும் எனக்குத்தான் கிடைத்துவந்தது. இந்த நிலையில் அமைதியாக இருந்ததுவிட்டேன்.வீட்டுக்குப் போனபோது சட்டையில் இருந்து பல மணிகளும் காணாமல் போய் விட்டது.அக்கா மீண்டும் தைக்கும்படி ஆனது :) இந்த மாணவியை இப்போதும்மறப்பதற்கில்லை.:)மீண்டும் கண்டால் வாங்கிய நுள்ளைக் கொடுக்க வேண்டும் அல்லவா: ))

    பதிலளிநீக்கு
  13. என் நினைவில் இருக்கும் ஆசிரியர்களில் முதலில் 5 ஆம் வகுப்பு திரவியம் சார், மூர்த்தி சார். ஆங்கிலம் கணக்கு படிப்பித்தவர்கள். என்னிடம் மிகவும் அன்புடன் இருந்தவர்கள். அரசுப்பள்ளி.

    அடுத்து லீலா டீச்சர். ஆங்கிலம் எடுத்தவர். வள்ளியூரில் பாத்திமா கான்வென்டில் 6 ஆம் வகுப்பு படித்த போது ஆங்கில இலக்கணத்தை மிக அழகாகக் கற்பித்தவர். தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ரைம்ஸ் சொல்லிக் கொடுக்க என்னையும் மற்றொரு பெண்ணையும் அந்த ரைம்ஸில் வரும் கதாபாத்திரங்களாக எங்களைச் செய்யச் சொல்லி அவர்களுக்கு விளங்க வைப்பார். விலங்குகள் பாத்திரங்கள் உட்பட!!!! எனது நடிப்புத் திறமை அப்போது வெளி வந்தது. ரைம்ஸை நம் ராகங்களில் பாடச் சொல்லுவார். கட்டுரைகள், கதைகள், பேச்சுத் திறமை நாடகம் என்று என் திறமைகளை வெளிக் கொணர உதவியவர். அதன் பின் என் வாழ்வின் மிகப் பெரிய ட்விஸ்ட்... நாகர்கோவில் வாழ்க்கை. என் திறமைகள் அத்தனையும் ஆமை ஓட்டுக்குள் முடங்குவது போல முடங்கின. அவ்வளவுதான்....

    நாகர்கோவில் கான்வென்டில் எனக்கு வழிகாட்டிகளாக மேரி லீலா டீச்சர், ஸ்டெல்லா மேரி டீச்சர். கல்லூரியில் உஷா தாமஸ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பல வருடங்களுக்கு முன், குடும்பமாகக் குடகு மலைக்கு யாத்திரை மேற் கொண்ட போது , மடிக்கேரி பகுதியில் பழசிராஜா பட ஷூட்டிங்க் நடந்து கொண்டிருந்தது. மம்மூட்டி நடித்த படம். மம்மூட்டியைப் பார்த்தோம். ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டோம். அன்று மம்மூட்டி நல்ல மூடில் இருந்தார் போலும். ஃபோட்டோ எடுத்துக்கொள்ள சம்மதித்தார். எடுத்துக்கொண்டோ இப்போதும் ஃபோட்டோ இருக்கிறது.

    ஆனால் இப்படிச் செய்வது அவர்களுக்குத் தொந்தரவாகத்தான் இருக்கும். அவர்கள் சீன், ஷாட் பற்றி யோசித்துக் கொண்டு அதில் எப்படி எக்ஸ்ப்ரஷன் கொடுக்க வேண்டும் வசனம் பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள் அப்போது நாம் இப்படிச் செய்வது அவர்களுக்கு இடையூறாகத்தான் இருக்கும் என்றும் தோன்றியது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. zkm high school, போடிநாயக்கனூர். (வேறு யாரேனும் நினைவுக்கு வருகிறார்களா? அந்த நபர் இல்லை நான் சொல்லும் நபர்!) ஆங்கிலம் கற்பித்த வீரய்யா சார். ஆங்கிலத்திற்கு ஒரு அடிப்படை நல்ல ஃபௌண்டேஷன் போட்டுக் கொடுத்தவர். மறக்க முடியாத ஆசிரியர்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  16. கௌ அண்ணா உங்கள் அனுபவம் சூப்பர். அந்த மேஜிக் வித்தையை எங்களுக்கும் காட்டலாமே வீடியோ எடுத்து.

    சமீபத்தில் ரொம்ப ஆச்சரியப்படுத்தும் வித்தைகள் வீடியோக்களில் வருகின்றன.

    கதை சொல்லும் ஆசிரியர்கள் நம்மை எளிதில் கவர்வார்கள். பாடங்களை மிக சுவாரசியமாகச் சொல்லித் தரும் ஆசிரியர்களும் கவர்வார்கள்.

    Paul ஆசிரியருடனான உங்கள் அனுபவங்கள் நல்ல நினைவுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வலையொலியில் ஒருமுறை எஸ்.வி.சேகர் பேசியதை கேட்டேன் மிகச்சிறப்பாக பேசினார்.
    இறுதியில் தொடர்பு எண் கொடுத்தார்.

    பாராட்ட வேண்டும் என்று தோன்றியது உடன் அழைத்தேன் வேண்டா வெறுப்பாக பேசினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ் வி சேகரிடம் நான் சில பல முறை பேசியிருக்கிறேன். தன்மையாகத்தான் பேசினார். இருந்தாலும் அவர்களுடைய அப்போதைய மூட், அவசரம் நமக்குத் தெரியாது.

      அதே எஸ் வி சேகர் (அவர் சொன்னதனால் தெரிந்துகொண்டு அவர் நாடகத்திற்கு நாங்கள் 8 பேர் டிக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம்), அவருடன் நான் போட்டோ எடுத்துக்கொள்ளும்போது ரொம்பவே அவசரப்பட்டார். போட்டோ செஷன் என்பதே தவறானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும். அந்த அவசரம் தெரியாமல் நாம் எப்படி அவங்க நேரத்தைக் களவாடலாம்?

      நீக்கு
    2. ஆனால் எஸ்.வி.சேகர் அரசியல் கருத்துகள், அண்ணாமலை பற்றி அவர் வயிற்றெரிச்சலில் பேசுவது எல்லாம் அபத்தங்கள், எஸ்விசேகரின் பெயரை அவரே முயன்று கெடுத்துக்கொள்கிறார்.

      நீக்கு
  18. / சமீபத்தில் விராட் கோஹ்லி, தான் சாதாரண வாழ்க்கை இந்தியாவில் வாழமுடியாது. எங்கு போனாலும் செல்ஃபி, ரசிகர்கள் துரத்தல் என்று சாதாரணமாக இருக்கவே முடியவில்லை. 200 பேர் செல்ஃபி எடுக்கிறேன் என்று வந்தால், என்னுடைய 200 நிமிடங்கள் போய்விடுகிறது. மறுப்பதும் கடினமாகிறது/
    1986 என்று நினைக்கிறேன். சென்னையிலிருந்து டெல்லி சென்று கொண்டிருந்தேன். ஹைதெராபாதில் இண்டியன் கிரிக்கெட் டீம் ஃப்ளைட்டில் ஏறியது. கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த், etc. எல்லோரும் எகானமி க்ளஸில்தான் வந்தனர். அரை மணி கழித்து ஒரு பயணி கிரிக்கெட் வீரர்களிடம் ஆட்டோக்ராஃப் வாங்க ஆரம்பித்தார். அடியேன் உட்பட அனைத்துப் பயணிகளும் அதையே செய்தனர் (இன்றும் என்னிடம் அந்த டைரியில் அனைவரது கையெழுத்துகளும் இருக்கிறது). கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல், பிகு செய்யாமல் பொறுமையுடன் அத்தனை பேருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர். 90 சதவீத ஃப்ளைட் டைம் இதிலேயே அவர்களுக்கு முடிந்தது. யோசித்துப் பார்த்தால் பிரபலமானவர்களுக்கு இந்த அன்புத்தொல்லை எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கும் என்பது புரிகிறது. நடிகர் சிவகுமார் சில காலம் முன் செல்ஃபி எடுத்தவரிடம் கடுமையாக நடந்து கொண்டார் என்று ஒரு புகார் புறப்பட்டது. அவர் பக்கமும் நியாயம் இருக்கிறதுதானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வதும் நியாயம்தான்.

      நீக்கு
    2. /பிரபலமானவர்களுக்கு இந்த அன்புத்தொல்லை எவ்வளவு கஷ்டத்தைக் கொடுக்கும்// - இதைவிட மோசம், கவாஸ்கரிடம் கையெழுத்து வாங்கிவிட்டு, மற்றவர்களைக் கண்டுகொள்ளாமல் போவது... உதாரணமா இப்போ உள்ள டீமில், சர்ஃப்ராஸ், ஜெஸ்வால் போன்றவர்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டு ரஜ்ஜத் போன்றோரைக் கண்டுகொள்ளாமல் போவது.

      நீக்கு
  19. ஆட்டோகிராஃப் இடத்தினை செல்ஃபி பிடித்துக் கொண்டுவிட்டது என்பது ஒப்புக்கொள்ள வேண்டியது - ஆனாலும் இன்னமும் சிலர் ஆட்டோகிராஃப் வாங்குவதையே விரும்புகிறார்கள். பிரபலங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் - தவிர்க்க முடியாதவை தான்.

    நினைவில் இருக்கும் ஆசிரியர் - முதலாம் வகுப்பு ஆசிரியை - நாமகிரி டீச்சர், எஸ்தர் டீச்சர், BYS என்று அழைக்கப்பட்ட ஆங்கில ஆசிரியர் என இப்படி சிலர் உண்டு.

    பதிலளிநீக்கு
  20. ரசிகர்கள் தொந்தரவு என்பது நிச்சயம் பரிசு அல்ல அது ஒரு விலை அல்லது தொல்லை. சில சமயம் தவிர்க்க இயலாத சங்கடம்//

    ஆமாம் உண்மை.

    பிரபலமானவர்கள் ரசிகர்களால் முன்னுக்கு வருகிறார்கள். அவர்களை தவிர்க்க இயலாது. 11ம் தேதி ஒரு திருமணத்திற்கு சென்று இருந்தோம், அதற்கு நடிகர் சிவ கார்த்தி, வந்து இருந்தார் . முதல் நாள் வரவேற்பு நாளில் சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அவருடன் படம் எடுத்து கொண்டார்கள். மாலை சிற்றுண்டியை அவர் இரவு எட்டுமணிக்கு எடுத்து கொண்டார். மறுநாள் திருமணத்திற்கு வந்து இருந்தார் அன்றும் அவரை விடவில்லை ரசிகர்கள்.

    மறு நாள் திருமணத்திற்கு சூரி, நடிகர் பிரேம் வந்து இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  21. இந்தக்கால செல்ஃபி எல்லாம் - அநேகமாக செல் ஃபோன் மெமரி நிறைந்தால் அல்லது ஃபோன் மாற்றினால் காணாமல் அடிக்கப்படும் அல்லது காணாமல் போய்விடும். //

    உண்மை.

    பதிலளிநீக்கு
  22. நினைவில் நின்ற ஆசிரியர்கள் நிறைய ஊர் ஊராக மாற்றல் ஆகி போவேன் எல்லா ஆசிரியர்களும் விருப்பபடு மானவியாக இருந்தேன், பாடத்தில் நல்ல மார்க் வாங்கி இல்லை, எல்லோருடனும் அன்பாய் பேசி மகிழ்பவள் என்று. சுற்றுலா போகும் போது நடந்து கொள்ளும் விதம், பள்ளி ஆடல் , பாடல்களில் கலந்து ஆசிரியர் சொல்லி தருவதை நன்றாக செய்வது என்று.

    சிறு வயது முதல் கல்லூரி காலம் வரை கிடைத்த நட்புகள் மறக்க முடியாதவர்கள். இன்னும் சிலருடன் நட்பாய் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. //பிரபலஸ்தர்களின் அருகில் சென்று, பேச முயற்சி செய்தபோது அவர்களின் எதிர்வினை பார்த்து// எனக்கும் பாடகி சித்ராவிடம் அப்படி ஒரு அனுபவம். தொலைக்காட்சியில் ஒரு முகம், வெளியில் ஒரு முகம் என்று பல முகங்கள் இவர்களுக்கு உண்டு போலும்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!